பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 29, 2013

இன்று "அம்மா" திறந்து வைக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் ஒரு சின்ன கதையும்!

அவ்வப்போது வந்து பணிகளை பார்வையிடும் மு.க.ஸ்டாலின்


பழைய தமிழ் படங்களில் ஒரு வசனம் வரும். "உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றிவிடுவேன்". எல்லா அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கும் இந்த வசனம் சனி கிரகம் மாதிரி ஒரு முறையாவது கடந்து போகும். அந்த தண்ணி இல்லா காடுதான் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இத்தனைக்கும் காவிரி அதன் அருகே தான். இந்த அவப்பெயரை நீக்கத்தான் திமுக அரசு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்தது.


இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய நகராட்சிப்பகுதிகள், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 17 பேரூராட்சி பகுதிகள், 18 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகள், ஆக மொத்தம் 6,755 குடும்பங்களை சேர்ந்த 30 லட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரை பெறலாம். அந்த திட்டம் கடந்து வந்த பாதையை பார்ப்போம்!



* 1997ல் பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் இதற்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டது. 576 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டமாக தொடங்கப்பட்டு  பின்னர் புளோரைடு வியாதிகளை தடுக்கும் அல்லது குறைக்கும் சுகாதார திட்டமும்  அத்துடன் இணைந்து இதற்கு ஜப்பானிய நாட்டு நிதி நிறுவனம் வழியே அந்த திட்ட மதிப்பீடு தொகை 576 கோடி இந்திய ரூபாய்களை பெற அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு திட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது மத்தியில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி. வாஜ்பாய் பிரதமர்.





*1998 மார்ச் - திட்டத்துக்கான கள ஆய்வுப்பணி திமுக அரசால் ஆரம்பிக்கப்பட்டது. காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டி அதற்கான தடையில்லா சான்றிதழ் கோரி  மத்திய பாஜக அரசுக்கு திட்ட நகல் அனுப்பி வைக்கப்பட்டது.


*இதற்கிடையே தமிழகத்தின் திமுக ஆட்சி, ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் அந்த 576 கோடி ரூபாய் கடனாக கொடுக்க ஒப்புதல் அளித்தனர்.


* 1998  மே மாதம் வாஜ்பாய் அரசு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதன் விளைவாக ஜப்பான் கடன் தர மறுத்து விட்டது.


*1998 செப்டம்பர் மாதம் பாஜகவின் மத்திய அரசு தனது மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் மூலமாக காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி கொடுத்து தடையில்லா சான்றிதழ் வழங்கியது.


*அதன் பின்னர் திமுக ஆட்சி காலத்தில் இரண்டாண்டுகள் வேறு எந்த வகையில் பணம் கிடைக்கும் என பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.  ஒன்னரை ஆண்டுகள் கழித்து நிலமை சீரானது. ஆனால் அதற்குள் 2001 தேர்தல் வந்ததது.


*2001 தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்து அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக திட்டம் என்பதால் அது கைவிடப்பட்டது. அதிமுகவுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி,ஓசூர் மக்கள் நலனை விட திமுகவின் திட்டத்தை நாம் செயல் படுத்துவதா என்னும் ஈகோவே ஜெயாவுக்கு பெரிதாய் இருந்தது. அதனால் 2001 முதல் 2006 வரை ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒரு இருண்ட காலம் எனலாம். திட்டத்துக்கு மூடுவிழா நடந்தது அதிமுக ஆட்சியால்.


*2006 மே மாதம் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது.இந்த திட்டத்தை செயல்படுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சகத்துக்கு தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் ஆனார்கள்.


*11.8.2006ல் சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது காவிரி நீரைக்கொண்டு மீண்டும் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி அவர்கள் அறிவித்தார். அதாவது 110 தலைவிதியின்படி  அல்ல. விவாதத்துக்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவு அது.


*27.1.2007 அன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும் போது கலைஞர் அவர்கள் "ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு (அப்போது காங்கிரஸ் அரசு) மிகுந்த முன்னுரிமை அதாவது தமிழ்ல சொல்லப்போனா ஃபர்ஷ்ட் ப்ரியாரிட்டி பேசிஸ் ல (இப்ப புரியுதா) இந்த திட்டத்துக்கு காசு கொடுக்கனும்னு ஜப்பான் காரன் கிட்டே சொல்லுச்சு. அப்புடியே ஜப்பான் காரன் காசு கொடுக்காட்டியும் தமிழக அரசு அண்டா  குண்டானை அடகு வச்சாவது வேற எப்படியாவது காசு புரட்டி இதை நாங்க செஞ்சுடுவோம்" என கலைஞர் அறிவித்தார்.


*23.3.2007 அன்று தமிழக பட்ஜெட்ல இதுக்கான வேலைக்கான ஆரம்ப கட்ட காசு ஒதுக்கியது திமுக அரசு. ஆரம்ப கட்ட வேலை எல்லாம் தொடங்கியது.


* 6.2.2008 அன்று தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு நிபுனர் குழுவோடு ஜப்பான் போனாரு. போகும் போதே காசு கேக்குறது கேக்குறோம் அப்படியே சென்னை மெட்ரோ வாட்டர் திட்டத்துக்கும் சேர்த்து கேட்போம் என கேட்டார். அங்க ஜப்பான் கூட்டுறவு வங்கியின் இயக்குனர் திரு. டிசியோகுசின்னு ஒருத்தரை பார்த்து 9,700 கோடி சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் அது போல அப்போதைய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மதிப்பான 1330 கோடி ரூபாய் திட்டத்துக்கும் சேர்த்தே காசு கொடுங்கன்னு தளபதி கேட்டாரு.


* ஜப்பான் நிபுனர் குழு தமிழகம் வந்து ஆய்வு செய்தது. காசு கொடுக்கலாமா, கொடுத்தா சரியா திரும்பி வருமா என 2007ம் ஆண்டு அதே பிப்ரவரி, மாசம் வந்து ஆய்வு செஞ்சுது. உடனே ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி மெட்ரோ ரயில் திட்டம் 9,700 கோடி மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 1,330 கோடி ரூபாய் இரண்டுக்கும் ஒப்புதல் கொடுத்து காசு கொடுத்தது. (படிப்படியாக வேலை முடிய முடிய காசு கொடுத்து கொண்டு வந்தது)
அதாவது திமுகவின் முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டதை 2001-2006ல ஜெயாவின் அதிமுக அரசு கைவிடாம தொடர்ந்து செயல் படுத்தி இருந்தா இதே திட்டம் 576 கோடி ரூபாய்ல முடிஞ்சு போயிருக்கும். மக்களுக்கும் அப்போதே தண்ணி கிடைச்சு இருக்கும். ஆனா அந்த 5 வருஷம் சும்மா கிடப்பிலே போட்டதால தமிழக மக்கள் பணம் 750 கோடி ரூபாய் எள்ளு. (ச்சீ தூ... ஜெயாவெல்லாம் ஒரு நல்ல அட்மினிஸ்ட்ரேட்டர்ன்னு சொல்லும் ஊடகங்கள் ஆரத்தி கரைச்சு வையுங்க, அம்மாவுக்கு ஆரத்தி கரைச்சு வையுங்கன்னு பாடுவதுக்கு பதிலா சாணிய கரைச்சு ஊத்துங்க, ஓயா மேல சாணிய கரைச்சு ஊத்துங்க"ன்னு பாடலாம்...ச்சீ தூ)


* 26.2.2008ல் தர்மபுரியில் நடந்த ஆரம்ப விழாவில் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் ஆரம்பம் ஆகியது.


* திட்ட செலவு விலைவாசி உயர்வினால் அதிகரித்தமையால் திருத்திய நிர்வாக ஒப்புதலின் படி திட்ட மதிப்பு தொகை 1928 கோடியே 80 லட்சம் ஆக உயர்ந்ததப்பட்டது.


*ஐந்து செக்டர்களாக வேலைகள் பிரிக்கப்பட்டது. முதல் செக்டர் வேலைகளுக்கு டெண்டர் விடப்பட்டது. மொத்தம் பத்து கம்பனிகள் அவங்கவங்க கம்பனி ஜாதகத்துடன் டெண்டர் அப்ளை செய்தனர். அப்படியே அதை மூட்டை கட்டி தமிழக அரசு ஜப்பன்ல கடன் கொடுக்கும் பேங்குக்கு அனுப்பியது. அவங்க ஜாதக பொருத்தம் எல்லாம் பார்த்து "இன்ன கம்பனிக்கு கொடுத்தா தான் ஒழுங்கா வேலை நடக்கும். அது ஒழுங்கா முடிஞ்சா தான் என் கடன் வசூலாகும்" என சொல்ல அதன் படி வேலை கொடுக்கப்பட்டது.


*அதே போல இரண்டாவது, மூன்றாவது ஐந்தாவது கட்ட வேலைகளுக்கும் டெண்டர் விடப்பட்டு  மேலே சொன்னது போல செய்யப்பட்டு வேலைகள் துரித கதியில் நடந்தன. உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாதம் ஒரு முறை கண்டிப்பாக போய் பார்த்து ஊக்குவித்துவிட்டு வந்தார்.



*ஜப்பான் பேங்கு சொன்னது போல அதாவது 2009 ஜூலையில் டெண்டர் எல்லாம் விடப்பட வேண்டும், 2009 டிசம்பரில் களப்பணிகள் ஆரம்பிக்க வேண்டும், 2012 டிசம்பரில் வேலை எல்லாம் முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர வேண்டும்.


* 2011 மே மாதத்தில் கிட்ட தட்ட 90 சத பணிகள் முடிந்து விட்டன. இன்னும் ஆறு மாத காலம் இதே நிலையில் வேலைகள் துரிதமாக நடந்தால் 2012 பிப்ரவரியில் திட்டம் அதாவது பத்து மாதம் முன்பாகவே முடிந்து இருக்கும்.


* ஆனால் தமிழக மக்களின் துரதிஷ்டம் காரணமாக 2011 மே மாதம் ஆட்சி மாறியது. திட்டம் சுனங்கிப்போனது. இன்னும் 10 சதம் வேலை மீதி இருக்கும் நிலையில்.... அதிமுக ஆட்சி இது திமுக திட்டம் என்கிற காரணத்தால் திட்டத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களின் தண்ணீர் தேவையை விட அதிமுக அரசுக்கு ஈகோ பிரச்சனை தான் முன்னே நின்றது.




* பணம் கொடுத்த ஜப்பான்காரன் தன் பணம் மீண்டும் கிடைக்க வேண்டுமே என நினைத்து தானே தன் ஆட்களை கொண்டு வந்து தமிழக அரசு ஒத்துழைப்பு அத்தனை சிறப்பாக இல்லாவிடினும் வேலை செய்தனர்.இன்று முழுமை பெறாமலேயே நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இன்று 29.5.2013 அன்று மிக தாமதமாக மிக மிக மிக தாமதமாக தமிழக அரசால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது.


இது தான் ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கடந்த கால வரலாறு.


எனக்கு தெரிந்து ஒரு உண்மைக்கதை. ஒரு ஊர்ல ஒரு புருஷன், பொண்டாட்டி இருந்தாங்க. அவங்களுக்கு ஒரே பெண் குழந்தை. அம்மாக்காரி அத்தனை ஒரு நல்லவ இல்லை. பெண்ணுக்கு திருமண வயது வந்தது. அப்பாகாரர் அங்க இங்க கடனை வாங்கி திருமணம்  பண்ணி வைக்க போராடினார். கடன் வாங்க போன இடத்திலே பிர்ச்சனை. திருமணம் ஒத்திப்போனது. பின்னர் பிரச்சனை தீர்ந்த பின்னர் அப்பா மீண்டும் திருமண  ஏற்பாடுகள் செஞ்சாரு. ஒரு பைனன்சியர் அப்பாகாரரின் நாணயத்தை வந்து பார்த்து விட்டு மாப்பிள்ளையும் பெரிய இடம்.


கல்யாணம் முடிந்த பின்னர் மாப்பிள்ளை கூட தனது கடனை அடைத்து விடக்கூடிய அளவு பெரிய இடம் தான். எனவே பைனான்ஸ் செய்தால் பணம் கண்டிப்பா திரும்பிடும் என நினைத்து பைனான்ஸ் செய்தார். கல்யாண வேலை எல்லாம் ஜரூராக நடந்தது. நிச்சயம் கூட பெரிய விழாவாய் நடந்தது. பின்னர் எல்லா கல்யாண வேலையும் 90 சதம் முடிந்து தாலி கட்டும் நாளுக்கு முதல் நாள் அப்பா ஒரு வேலை கிடைத்து  வெளியூர் போய்விட்டார் வேறு வழி இல்லாமல். போனவர் எக்கு தப்பாய் ஒரு அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டுவிட ஐந்து வருடம் கழித்து தான் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டிய நிலை. கல்யாணம் கிடப்பில் போடப்பட்டது. தாலி கட்டும் நாள் "தேதி குறிப்பிடப்படமல்" ஒத்திப்போடப்பட்டது. பெண்ணின் அம்மா தான் கொஞ்சம் "அப்படி இப்படி"யாகிற்றே. பெண்ணின் கல்யாணம் பற்றி கவலைப்படவில்லை.தன் நல்ல புருஷன் பார்த்த மாப்பிள்ளைக்கு கட்டி வைப்பதா என ஈகோ காரணமாய் திருமணத்தை கண்டுக்காமல் விட பணம் கொடுத்த பைனான்சியர் தன் பணம் வர வேண்டுமே என்கிற நோக்கில் தானே திருமண வேலையை முன்னின்று நடத்த  ஒரு வழியாக மிக தாமதமாக திருமண  தேதி முடிவானது.


பெண்ணின் அம்மாவுக்கு வேறு வழி இல்லை. பத்திரிக்கை அடித்தாள். என்னவென்று. அப்பன் பெயரை போடாமல் ஏதோ தான் மட்டுமே பெத்த பெண் என்பது போலவும், தனே அந்த திருமணத்தை சிரமப்பட்டு பணம் புரட்டி ஏற்பாடு செய்தது போலவும் ஒரு பத்திரிக்கை. கல்யாணம் நல்லபடி முடிந்தது. ஆனாலும் அப்பன்காரன் சொன்னது போல முழு சீரும் செய்யாமல் ஏதோ அரைகுறையாக நடந்தது. பெண்ணை பெற்ற அப்பன் காரன் காதில் செய்தி விழுந்தது. ஏதோ இந்த மட்டிலும் செய்தாளே அந்த மகாபாவி என வாழ்த்தினார். எப்படியோ பெண்ணின் திருமணம் நடந்தால் சரி. மீதி சீர் வரிசை எல்லாம் தான் நாட்டுக்கு வந்த பின் முழுமையாக செய்வதாக பெண்ணிடம் சேதி அனுப்பினார்.


கல்யாணத்துக்கு வந்தவர்கள், அந்த தெருவில் இருந்தவர்கள் எல்லோருக்கும் அந்த பெண்ணின் அப்பனைப்பற்றியும் தெரியும். ஆத்தாளை பற்றியும் தெரியும். அம்மாகாரியை காறித்துப்பி விட்டு அந்த பெண்ணை வாழ்த்தி விட்டு போனார்கள். அந்த அம்மாகாரிக்கு என சில அல்லக்கைகள் இருக்குமே அதுகள் "அம்மா" வாழ்க என வாழ்த்துப்பா பாடுகின்றன. ஏற்கனவே நெம்மேலி கடல் நீரை சுவைநீராக ஆக்கி பெருமை கதையும் இப்படித்தான். வெட்கம் கெட்ட ஜென்மங்கள்!



இந்த மேற்கண்ட உண்மைக்கதைக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட வரலாறுக்கும் ஒரு வித்யாசமும் இல்லை.


இன்னும் ஒரு விஷயம்... 98 சதம் வேலை முடிந்த பின்னர் தலைமை செயலகம் திமுக அரசால் திறந்து வைக்கப்பட்ட போது "செட்டிங்ஸ்" போட்டு ஒரு திறப்பு விழாவா? என கூப்பாடு போட்ட நடுநிலை நாயகம் எல்லாம் இன்றைக்கு சினிமா நடிகைகள் கிசுகிசுக்கள் எழுதிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருக்கின்றன. நடக்கட்டும் நடக்கட்டும். எல்லாவற்றையும் நாட்டு மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர்!!

May 27, 2013

எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய கலக்டர் சொக்கலிங்கம்!


இடமிருந்து வலமாக வெள்ளை உடையில் திரு. சொக்கலிங்கம்


இவருடைய பெயர் சொக்கலிங்கம். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வழுவூர் மெயின் ரோட்டை அடுத்து சுந்தரப்பன்சாவடி என்னும் கிராமம்(அதே மெயின் ரோட்டிலேயே) இவருடையது. உடையார் சமூகத்தை சேர்ந்தவர். பக்கத்து கிராமங்கள் எல்லாம் அதாவது பண்டரவாடை, மங்கைநல்லூர், நெய்க்குப்பை, வழுவூர் இங்கெல்லாம் இவருடை சமூகத்தினர் அதிகம். அவர்கள் பெரிய நிலக்கிழார்களாக இருப்பினும் இவர் ஏழை. தன் தாய் தந்தையர்களுக்கு ஒரே மகன்.இவரது தந்தையார் இவருடைய சிறு வயதிலேயே காலமாகிவிட்டார். அம்மாவும் மகனும் மட்டும் தான் வீட்டில். இவரோ வயல் வேலைக்கு சென்று தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையெனினும் இவர் அங்கிருந்து தினமும் எட்டு கிலோ மீட்டர் நடந்தே வந்து மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.


தன் குடும்ப ஏழ்மை நிலையிலும் அண்ணாமலை பல்கலைகழகத்துக்கு சென்று பட்டப் படிப்பும் படித்தார். பின்னர் I.A.S தேர்வு எழுதி தேர்வாகி (தமிழ்நாடு கேடர்) தமிழக அரசின்  முதலமைச்சராக 1967ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரை அவர்களுக்கு நேர்முக உதவியாளர் ஆக பணியமர்த்தப்பட்டார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் தமிழகத்தின் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியராக இருந்து பணியாற்றினார். தன் வருமானத்தில் தன் தந்தையாருக்கு (அதே சுந்தரப்பன் சாவடி மெயின் ரோட்டில்) தன் வீட்டுக்குள் (மெயில் ரோட்டை பார்த்து இருக்கும் கொல்லையில்) சிலை வைத்து கோவில் கட்டினார். அவர் எங்கு பணியாற்றினாலும் இங்கே தன் சொந்த கிராமத்துக்கு வந்து தான் விடுமுறையை கழிப்பார்.


அண்ணாவின் மீது அதீத  பற்று கொண்டவர். ஒரு முறை அண்ணா முதல்வராக இருக்கும் போது மயிலாடுதுறை வழியாக திருவாரூர் செல்லும் வழியில் தன் வீட்டில் மதிய உணவு உண்ண வேண்டும் என அண்ணாவை இவர் கேட்டுக்கொள்ள அண்ணாவும் சம்மதித்தார். ஆனால் இவரது தாயார் சிறிது மனநலம் குன்றி விட்ட நிலை அது. அண்ணாவுக்காக வித விதமாக சமைத்து வைக்க சொல்லி இவர் தன் தாயாருக்கு கடிதம் எழுதியும் அவர் அதை செய்யவில்லை. புளிக்குழம்பும், சுட்ட அப்பளமும் மட்டுமே வைத்து இருந்ததைக்கண்டு சொக்கலிங்கம் அதிர்ந்தார். ஆனால் அண்ணாவோ (முதல்வர்) இனிய முகத்தோடு "நான் நீண்ட நாளாக புளிக்குழம்பும், சுட்ட அப்பளமும் சாப்பிட வேண்டும் என நினைத்து இருந்தேன். என் தொத்தா( அண்ணாவின் வளர்ப்பு தாய்) அவர்களுக்கு மட்டுமே எனக்கு இது பிடிக்கும் என தெரியும். மிஸ்டர் சொக்கலிங்கம் உங்கள் அம்மாவின் உருவில் என் தொத்தாவை காண்கிறேன்" என அண்ணா இவரை தேற்றினார். ஆனாலும் அன்று தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் அன்று முதல் திரு. சொக்கலிங்கம் மதிய உணவை சாப்பிடும் பழக்கத்தையே விட்டு விட்டார். அத்தனை பக்தி அண்ணா மீது இவருக்கு.



தன் பணிக்காலத்தில் மிகவும் கண்டிப்பானவர் என்னும் பெயரைப்பெற்றார். எம் ஜி ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழக அரசின் தலைமை செயலர் என்னும் உயரிய அந்தஸ்து பெற்றார். எம் ஜி ஆர் அவர்களின் கடைசி காலத்தில் உடல் நலம் குன்றிய போது  அமரிக்க புரூக்ளின்  மருத்துவமனை சென்ற போது அவருடன் சென்ற சிலரில் தலைமைச்செயலர் திரு. சொக்கலிங்கம் அவர்களும் உண்டு. அப்போதைய முதல்வர் எம் ஜி ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் திரு.சொக்கலிங்கம் அவர்கள்.


பின்னர் பணி ஓய்வு பெற்ற பின்னர் தன் சொந்த கிராமத்துக்கு வந்து தன் வீட்டு கொல்லைப்பக்கம்  இன்றைய நாகரீகத்துக்கு ஏற்றது போல கான்கிரீட் வீடு ஒன்றை சிறியதாக கட்டிக்கொண்டு தன் வீட்டை சுற்றிலும் தோட்டங்கள், தென்னை மரங்கள் சூழ அமைதியான வாழ்க்கை நடத்தினார் தன் தாயாருடன். (அது வரை அவரது தாயாரும் இருந்தார்) அனால் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உயர் கல்வி கற்று அமரிக்க நாட்டிற்கு சென்று விட்டனர். இவரும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அமேரிக்கா சென்று சில நாட்கள் தன் குடும்பத்துடன் வசித்து விட்டு மீண்டும் தன் கிராமத்துக்கு வந்து விடுவார். பின்னர் தன் தாயார் இறந்த பின்னர் தன் தந்தையாருக்கு கட்டிய கோவிலுக்கு பக்கத்தில் தாயாருக்கும் சிலை வைத்து தனிக்கோவில் கட்டினார்.


தான் சுந்தரப்பன் சாவடியில் வாழ்ந்த கடைசி காலத்தில் தனக்கு வரும் ஓய்வூதியப்பணம் மற்றும் தன் கொல்லையில் காய்க்கும் தேங்காய்களை விற்று வரும் வருமானம் இவைகளை கொண்டு நிம்மதியான வாழ்வு வாழ்ந்தார். ஒரு ரூபாய் கூட விரய செலவு செய்ய மாட்டார். அவரால் மயிலாடுதுறைக்கு பெருமை. அவரால் அவர் படித்த நகராட்சி மேல் நிலைப்பள்ளிக்கு பெருமை. அவரால் அவர் கிராமத்துக்கு பெருமை. சுற்றி இருந்த கிராமங்களுக்கு பெருமை.

இரு தினங்கள் முன்பாக அமரிக்கா சென்றிருந்த போது உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது ஆசைப்படி அவரது உடல் சொந்த ஊருக்கு வருகின்றதாம். அமேரிக்கா சென்று இறந்தாலும் தான் நேசித்த மண்ணில் வந்து அமைதியாக உறங்கட்டும் திரு. சொக்கலிங்கம் அய்யா அவர்கள்!


"பத்திரிக்கா உலக" நியதிப்படி செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் சூதாட்டம் மற்றும்  கூட்டிக்கொடுக்கும் தொழிலதிபர்  குருநாத் மெய்யப்பன் இடம் பெற,திரு.சொக்கலிங்கம் அவர்கள் எட்டாம் பக்கத்தில் இரண்டு இன்ச் ஆக சுருங்கி போயிருந்தார்.



திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கு மயிலாடுதுறை மக்கள் சார்பாக அஞ்சலிகள் :-(

May 22, 2013

என் அருமை புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்காக இந்த பதிவு! உண்மையை உணருங்கள்!



சீமார், நெடுமரம், வைக்கோ கூட்டம் எல்லாம் ஒன்னு கவனிக்கனும். பிள்ளை பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைத்தது எப்பத்தில இருந்துன்னு கவனிக்கனும். திமுக, காங்கிரஸ் கூட்டனி புட்டுகிட்ட பின்ன தான். போன தேர்தல் இல்லை... 2009 தேர்தல்ல ஆரம்பிச்சு உங்க கூட்டம் காங்கிரசையும், திமுகவையும் பேசாத பேச்சில்லை. போன தேர்தல் வரை பிரபாகரன் படம் வச்சுகிட்டு நீங்க தமிழ்நாட்டிலே பண்ணாத ரவுசு இல்லை. (அதுக்கு முன்ன நீங்க பிறக்கவேயில்லையா?) கலைஞர் முதல்வராக இருந்த போது நீங்கள் பிரபாகரன் படம் வைத்து கொண்டு கூட்டம் நடத்திய போது இப்போது மாதிரி அத்தனை கெடுபிடி இல்லை. காங்கிரசும் வாயை திறக்கவில்லை. காங்கிரஸ் நினைத்து இருந்தால் உங்க வகையறாக்களை தேசிய பாதுகாப்பு சட்டப்படி (மத்திய அரசே நேரிடையாக) உள்ள தூக்கி போட்டு நொங்கு பிதுக்கி இருக்கலாம். ஆனால் கூட்டணி கட்சியாக திமுக இருந்ததால் வாயை மூடிகிட்டு இருந்துச்சு. நீங்களும் கலைஞரை கழுவி கழுவி ஊத்துனீங்க. கலைஞரும் காங்கிரசின் சிலுவையை தூக்கி சுமந்தார். இப்போது சிலுவையை காங்கிரசின் முதுகு மேலே தூக்கி வைத்து விட்டார்.

சிலுவை சுமக்கும் காங்கிரஸ் பாரம் தாங்காமல் இதோ நாராயணசாமி மூலமாக முதல் பிள்ளையார் சுழி போட்டுவிட்டது . இதுவரை தமிழகத்தில் இருந்து சுப்ரமணிய சாமி, சோ.ராமசாமி போன்ற சாமிகள் மட்டுமே நேரிடையாக பிரபாகரனை தாக்கி பேசியும் எழுதியும் வந்தனர். அதை மக்கள் அத்தனை ஒரு சிரத்தை எடுத்து கவனிக்கவும் இல்லை. கவனித்தாலும் அவங்க  ரெண்டு பேரும் அரசியல்வாதியா இருந்தாலும் அடிப்படையில் ஒரு நகைச்சுவைவாதிகளாக இருந்தமையால் மக்கள் சிரித்து விட்டு போய்விட்டனர். தவிர அந்த ரெண்டு சாமியும் ஒண்டிக்கட்டை சாமிகள். இந்த நாராயணசாமி ஒண்டிக்கட்டை சாமி இல்லை. ஒரு தேசிய கட்சியின் , நாட்டை ஆளும் பிரதமர் அலுவலக தலைமை பியூன். நிலக்கரி சுரங்க ஊழலில் பிரதமரை காப்பாத்த சட்ட அமைச்சரை (கேபினட் அந்தஸ்த்து ) பலிகடா ஆக்கிவிட்டு சி பி ஐ அறிக்கையை திருத்திய இந்த நாராயணசாமி கழுவிய மீனில் நழுவிய மீன் என்பதை உணரவும். இதோ அந்த நாராயணசாமி பிரபாகரனை பற்றி பேசியதை பாருங்கள்.....

\\ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரன் என்கின்றனர். அவர் ஒரு கோழை. பெண்கள், சிறுவர்கள் மற்றும் அப்பாவி மக்களை போரில் கேடயமாக பயன்படுத்தியவர் ஒரு வீரனா? ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்றபோது ராணுவ வீரரால் தாக்கப்பட்டார். அந்த தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பினார்.
வெற்றியோ, தோல்வியோ போரை முன் நின்று நடத்துபவர் தான் வீரன், பதுங்கிக் கொண்டவர்கள் அல்ல. சீமான் தன்னுடைய கூட்டத்தில் காஷ்மீர் தீவிரவாதி யாசின் மாலிக்கை அழைத்து வந்து பேச வைத்துள்ளார். தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவற்றை தூண்டிவிடுபவர்கள் தேச துரோகிகள். பலமுறை சிறைக்கு சென்ற சீமான் மீண்டும் சிறைக்கு செல்ல விரும்புகிறார். தமிழக அரசின் வழக்குக்கு பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் வைக்க வேண்டும். நக்சலைட்டுகளின் தீவிரவாதத்தையும், அசாம் தீவிரவாதத்தையும் ஒடுக்கியுள்ளோம்.
எங்களை பொறுத்த வரை சீமான் போன்றோர் சுண்டைக் காய்கள். இந்தியாவில் இருந்து கொண்டு நம் நாட்டுக்கே எதிராக செயல்படுபவர்களை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றார்.http://tamil.oneindia.in/news/2013/05/20/india-narayanasamy-wants-tn-govt-arrest-seeman-175644.html \\

நான் கூட எழுதினேன். ...."கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே"  என்னும் தலைப்பில். அவர் டெஸோ மீண்டும் உயிர்பித்தவுடன். ஆனால் எனக்கு கிடைத்தது வசவுகள் தான். எங்கிருந்து? புலம்பெயர் புண்ணாக்குகளிடமிருந்து!

இந்த அளவுக்கு தைரியமாக எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுவரை தமிழகத்தில் பேசியது இல்லை. ஜெயலலிதா கூட பிரபாகரனை பிடித்து வந்து இந்தியாவில் வைத்து தூக்கில் போட வேண்டும் என்றும், போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றும் சொன்னதற்கே இன்று வரை திமுக உள்ளிட்ட கட்சிகள் காய்ச்சி எடுத்து வருகின்றன. சரி இந்த மாதிரி இனி சொன்னல் தமிழகத்தில் எடுபடாது என நினைத்த ஜெயா கூட இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என டுபாக்கூர் விட்டுத்தான் ஆட்சியை பிடிக்க முடிந்தது. ஆனால் காங்கிரஸ் அது போல எந்த காலத்திலும் சொல்லாது. ஏனனில் காங்கிரஸ் என்பது ஒரு கழுத்தறுக்கும் சாத்தான். திமுகவும் இங்கே காங்கிரசால் கைகழுவி விடப்பட்டு இனி தமிழகத்தில் இழக்க எதுவும் இல்லை என்னும் நிலையில் எது வேண்டுமானாலும் செய்யும்.

அண்ணாவால் கருவறுக்கப்பட்ட காங்கிரஸை சமாளிக்க ஆளானப்பட்ட திமுகவே தன் முழு பலத்தையும் காட்ட வேண்டியுள்ளது. சீமான், வைக்கோ, நெடுமரம் குரூப் எல்லாம் நாராயணசாமி சொன்னது போல சுண்டைக்காய் தான் அவர்களுக்கு என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை.

@ புலம் பெயார்ந்த புண்ணாக்குகளுக்கு!

இனியாவது சீமான் குரூப்க்கு பணம் அனுப்பி உங்கள் தலைவர் மேதகு பிரபாகரன் (??)மானத்தை காற்றில் பறக்க விட வேண்டாம் புலம் பெயர்ந்த புண்ணாக்குகளே! ஒழுங்கு மாரியாதையா இருங்க. இல்லாட்டி இருக்கும் இடத்தில் கூட ஆப்பு வரலாம்.இதே தமிழகத்தில் இருந்து கொண்டு அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞரை நீங்கள் திட்டி தீர்த்து விட்டு இப்போது அம்மையார் ஆட்சி வந்ததும் கனடா, ரஒராண்ரோ எல்லாம் போய் ஒளிந்து கொண்டு அங்கேயும் இருந்து கொண்டு கலைஞரை திட்டுவதும் எங்களுக்கு தெரியும். இனியும் திமுக தொண்டர்கள் சும்மா விட மாட்டோம். மீண்டும் கலைஞர் ஆட்சி வந்ததும் இங்கே வந்து அவரை நொட்டலாம் என நினைச்சா நாங்க சும்மா விட மாட்டோம். 

எல்லோரும் கலைஞர் இல்லை. திட்டினா கூட "பாவம் போ..."ன்னு சொல்ல. நாராயணசாமி போன்ற நச்சு பாம்புகளும் உண்டு. நீங்க செத்த பாம்பு. உங்களை அடிக்க நாராயணசாமிகள்  போன்ற மண்புழுக்கள் மட்டுமே போதும். இனியும் கலைஞரை தான் திட்டுவேன் என சொன்னா உங்க மேல அனுதாபப்பட மட்டுமே முடியும்!

நான் "கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே" என போட்ட பதிவுக்கு வந்ததை விட அதிக வசவுகள் இதற்கு வரும் என தெரியும். போடா புண்ணாக்குகளா, நாங்கள் ஈழத்தில் வாழும் உண்மையான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக டெசோ அமைப்பை வைத்து இருக்கின்றோம். அதற்காக உழைக்கின்றோம். ஆனால் நீங்கள் கனடா, அவுஸ்த்ரேலியா, றொரண்றோ, நோர்வே என சொகுசு வாழ்வு வாழ்ந்து கொண்டு "ஈழம் கிடைத்தால் எங்கே நாட்டுக்கு திரும்பி போக நேரிடுமோ" என்னும் மனநிலையில் இருக்கும் புண்ணாக்குகள். உங்களுக்கு நாடு முக்கியம் இல்லை. காசு தான் முக்கியம். ஆனால் நாங்கள் போரிடுவது தமிழீழத்தில் இருக்கும் நிஜமான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக!

இனிமேலாவது புலம் பெயர்ந்து குந்திகிட்டு என்னை திட்டுவதை விடுத்து யதார்த்தத்தை கவனியுங்க. உங்க சொந்த பந்தம் எல்லாம் ஈழத்தில் இருக்காங்களே மிச்ச மீதி... அவங்க நலனுக்காக வாயையும் அதையும் பொத்திகிட்டு இருங்க. எத்தனை நாள் சீமானுக்கு பணம் கொடுப்பீங்க??? உங்க வாழ்நாள் முடியும் வரைக்குமா? நிப்பாட்டுங்க ஒரு மாசம். பின்ன இங்க சத்தம் குறையும். அப்பவே நீங்க தெரிஞ்சுக்கலாம். இவன் காசு கொடுத்தா கூவும் கிளி தான். புலி இல்லை என!

May 20, 2013

மிஸ்டர் காக்கையார்!!!


வரும் புதன் அன்று கடைகளில் கிடைக்கும் 'பாவியர் வடகன்' இதழில் வரும் "மிஸ்டர் காக்கையார் " பகுதியில் சில வரிகள்:

வியர்வையில் குளித்து வந்த காக்கையார் " முதல்ல ஏ சி யை போடுங்கப்பா" என சொல்லி டேபிளில் வந்து அமர்ந்ததும் சோற்றுக்கற்றாழை ஜூசை கொடுத்தோம். அலகால் உறிஞ்சியவறே "யப்பா கடலூரில் வெயில் ரொம்ப அதிகம்" என சொன்னதும் காதை தீட்டிக்கொண்டு கேட்டோம். "என்ன காக்கையாரே, சீமானின் மாநாடு  கடலூரில் வெப்பம் தகிக்க செய்து விட்டதா?" என கொக்கியை போட்டோம். "ஆமாம், அது சீமானால் என்று சொல்வதை விட முதல்வர் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதால் வந்த வெப்பம் என்றும் சொல்லலாம். பேரணிக்கு தடை, மாநாட்டுக்கு தடை இதையெல்லாம் மீறி சீமான் ஒரு பூட்டிய வீட்டுக்குள் மாநாட்டை(?) நடத்தியது பின்னர் போலீஸ் கைது செய்ய போனதும் சீமான் பாபாராம்தேவ் போல  ஓடியது எல்லாம் தமாஷ் காட்சிகள். முதலில் சீமான் சுடிதார் போட்டு கொண்டு தான் தப்பிப்பதாக இருந்ததாம். பின்னர் அந்த 'கோலத்தை' பார்த்து யாராவது "மண்டையை" போட்டுட்டா கொலை கேசாக மாறிவிடும் அபாயம் இருப்பதை அவரது தம்பிமார்கள் அறிவுறுத்தியதால் அந்த திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாம்"

"ஒ... அந்த அளவு ஆகிவிட்டாதா? சரி காஷ்மீர் விடுதலை முன்னனி தலைவர் யாசின்மாலிக் வருகை பற்றி சொல்லுங்கள் காக்கையாரே" என நாம் கேட்டதும் "ஏன் அவசரக்குடுக்கையாய் இருக்கிறீர்கள்" என சலித்துக்கொண்டே சொல்ல ஆராம்பித்தார்.

"யாசின்மாலிக் வருகை பற்றி ஒரு வாரம் முன்பாகவே சீமான் 'ஒரு முக்கிய தலைவர் வருகிறார். ஆனால் இப்போது அது யார் என சொல்ல மட்டேன்.கூட்டம் முடிந்ததும் கூட சொல்ல மட்டேன். வேண்டுமானா நீங்களே கண்டுபிடித்து கொள்ளுங்கள்' என சவால் விட்டதுமே  முதல்வர் தன் அந்தரங்க உளவுப்பிரிவை வைத்து அது யாசின்மாலிக் என மோப்பம் பிடித்து விட்டாராம். சென்னைக்குள் யாசின் காலடி வைத்ததுமே திருப்பி அனுப்ப முதல்வரிடம் அனுமதி கேட்டது உளவுப்பிரிவு . ஆனால் முதல்வர் "அப்படி வேண்டாம். வரட்டும் வந்து பேசட்டும். பேசிவிட்டு காஷ்மீருக்கும் திரும்பட்டும். பின்னர் வழக்கு பதிவு செய்து காஷ்மீருக்கு தமிழக போலீசை அனுப்பி கைது செய்து அழைத்து வந்து திருச்சி சிறையில் அடைக்கலாம் என சொல்லிவிட்டாராம்"

"ஏன் இப்படி முதல்வர் காதை சுத்தி மூக்கை தொட வேண்டும்?" என கேட்டோம். அதற்கு காக்கையார் "சரியான மங்குனி அமைச்சராக இருக்கின்றீரே" என நம்மை கலாய்த்து விட்டு " யாசின் மாலிக்கை உடனே திருப்பி அனுப்பி விடுவதை விட வந்து பேசி விட்டு காஷ்மீர் சென்ற பின்னர் வழக்கு பதிவு செய்து தமிழக போலீசாரை அனுப்பி கைது செய்து அழைத்து வந்தால் இந்தியாவே திரும்பி பார்க்குமே தமிழகத்தை. மேலும் ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி என்னும் இமேஜும் இந்தியா முழுக்க பேச்சாகுமே. இந்த பேச்சுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அம்மையார் நினைக்கிறார். பிரதமர் வேட்பாளர் மோடிக்கு இவரது இந்த மூவ் கிலி கொடுக்கபோவது என்னவோ உண்மை. ஜெயலலிதா பிரதமர் ஆனல் பாகிஸ்தான் மேல் எச்சில் துப்பி வம்புக்கு இழுத்து போரிட்டு ஜெயித்து வல்லரசாக மாற்றுவார் என மக்கள் நினைக்க செய்யும் அளவுக்கான மாஸ்டர் பிளான் இது என அரசியல் நோக்கர்களே வியந்து போவார்கள் பாருங்கள்.

"ஒ... கதை இப்படி போகின்றதா?"

"ஆமாம்... பரவலாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அங்கு இருக்கும் பிராந்திய கட்சிகளுடன் அல்லது சில தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஒவ்வொறு வேட்பாளரை நிறுத்தும் பலே ஐடியாவும் அம்மாவிடம் இருக்கிறதாம். அனேகமாக டெல்லியில் ராமராஜன் நிறுத்தப்படலாம். அது போல காஷ்மீரில் நடிகர் தியாகு நிறுத்தப்படலாம், ஜார்கண்டில் நடிகர் செந்தில் நிற்பது உறுதியாகிவிட்டதாம். எம் ஜி ஆர் கூட பெயரில் மட்டும் தான் அனைத்திந்திய என்ற வார்த்தை சேர்த்தார். ஆனால் அம்மா நிஜமாகவே அதிமுகவை  அனைத்திந்திய அதிமுக வாக மாற்ற போட்ட மாஸ்டர் பிளானாம் இது.

"அடடே, எம் ஜி ஆரை விட அம்மாதான் கட்சி நடத்துவதிலும் ஆட்சி நடத்துவதிலும் டாப் என நிரூபித்து வருகின்றார். ஆமாம்... கேட்க மறந்து விட்டோம்... சீமான் கைது செய்யப்படுவாரா?"

"சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்படுமாம். ஆனால் கைது இருக்காதாம். விஜயலெஷ்மி வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருக்கின்றது. அதன் கூடவே இந்த வழக்கும் ஜோடி போட்டு உட்காந்து கொள்ளும். தேர்தல் நேரத்தில் கருணநிதியை வசை பாட இந்த வழக்குகள் பயன்படுமாம்.

"அம்மாவின் ஈராண்டு சாதனை மற்றும் அம்மா மெஸ் பற்றி மக்கள் வரவேற்பு எப்படியாம்" என அடுத்த கேள்வியை வீசினோம்.

"ஒ அதுவா, மிகப்பிரமாதமான வரவேற்பு. இந்தியா முழுக்க மூன்று முழுப்பக்கத்தில் அம்மாவின் சாதனை மின்சாரத்தில் இயங்கும் ஆயிரம் வாட்ஸ் பல்பாக பளிச்சிட்டது. அம்மா மெஸ் ஏழை எளிய மக்கள் வயிறார உண்டு வருகின்றனர். முகேஷ் அம்பானி கூட சென்ற வாரம் மும்பையில் இருந்து பறந்து வந்து தாலையில் துண்டு போட்டுக்கொண்டு ''அம்மா மெஸ்"ல் இட்லி வாங்கி சாப்பிட்டு தன் மனைவி நீதா அம்பானிக்கு ஒரு பார்சல் வேண்டும் என கேட்டாதாகவும் அதனால் மாநகராட்சியினருக்கும்  இவருக்கும் வாங்குவதம் வந்து பின்னர் மேயர் தலையிட்டு சமாதானம் செய்து தன் சொந்த அதிகாரத்தில் ஒரு பார்சல் கொடுத்ததாகவும் ஒரு செய்தியும் காக்கையார் காதுக்கு எட்டியது. அனேகமாக அம்மா  ஒரு அவசரக்கூட்டம் கூட்டி 110 விதி  அறிக்கை வாசித்து இனி நீதா அம்பானி போன்ற மகா ஏழைகளுக்கு பார்சல் கொடுக்கவும் ஏற்பாடுகள் ஆகிவருகின்றது.

வரும் தேர்தலில் பள்ளிகளில் வாக்குசாவடி வைப்பதற்கு பதிலாக அம்மா மெஸ்க்கு பக்கத்தில் ஒரு பந்தல் போட்டு அதிலே வைத்து விடலாம் என தேர்தலுக்கு பொறுப்பான சம்பத்தானவர் ஒரு ஆலோசனை சொல்லி இருக்கிறாராம் அம்மாவிடம். அம்மாவும் "ஏதோ பார்த்து செய்யுங்க" என சிரித்து கொண்டே பச்சை கொடி காட்டிவிட்டாராம்."

"பிரமாதம். பாவம் சகோதரர்கள் பத்திரிக்கைகளுக்கு மூன்று பக்க விளம்பரம் கொடுக்கவில்லையே. அது ஏனாம்? என்றோம்.

"இல்லை, சகோதரர்கள் அம்மாவிடம் ஒரு தூதுவரை அனுப்பி 'எங்களுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டாம், மற்ற பத்திரிக்கைகள் விளம்பரம் கொடுத்தால் தான் புகழ்ந்து எழுதுவார்கள். நாங்கள் என்ன அப்படியா? விளம்பரம் கொடுக்காவிட்டாலும் புகழ்வோம்" என செல்லமாக கோபித்துக்கொண்டனராம். அதனால் தான் அம்மா விளம்பரம் கொடுக்கவில்லை. மேலும் சகோதர்கள் அம்மாவிடம் அனுப்பிய தூதரிடம் "அம்மா மெஸ் பற்றி ஒரு தொலைக்காட்சி விளம்பரம் எடுத்து இப்போதிருந்தே ஒளிபரப்பினால் இன்னும் ரீச் அதிகமாக இருக்கும். அந்த விளம்பரம் கூட தாங்கள் நடத்தும் தொலைக்காட்சிக்கு கொடுக்க வேண்டாம்' என ஆலோசனையும் சொல்லி அனுப்பினார்களாம். அம்மாவும் தீவிரமாக "அம்மா இட்லி" விளம்பரம் எடுத்து வருகிறராம்.

"சரி, திமுக செய்திகள் எதும் இல்லியா?" என்றதற்கு காக்கையார் "ஒ உண்டே, பருப்பு இல்லாத சாம்பாரா? திமுக பேச்சாளர்கள் கூட்டம் நடந்தது. மேடையில் கருணாநிதி, ஆற்காடு, சற்குணபாண்டியன்  போன்றவர்கள் இருந்தனர். ஆனால் பேச்சாளர்கள் என்பவர்கள்  "கொள்கை பரப்பு செயலர்" பதவி வகிக்கும் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் கீழ் தான் வருகின்றனர். ஆனால் அவர்கள் மேடையில் இல்லை. குஷ்பூ தலையை விரித்து போட்டு வந்திருந்தார் போன்ற அதி முக்கிய இன்னும் பல செய்திகள் உள்ளன. பின்னர் விரிவாக மெயில் அனுப்புகிறேன். இப்போது ஒரு முக்கிய வேலை இருக்கு" என சொல்லியவாரே கத்தாழை ஜூசுக்கு நன்றி சொல்லி விர்ர்ர்ர்ரினார்.

May 17, 2013

சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம் பின்னே சமதர்மம் !!!

சமீபத்தில் வெளிவந்துள்ள சிவகார்த்தி நடித்த 'எதிர்நீச்சல்' படத்தில் 'குஞ்சிதபாதம்' என்னும் பெயரினால் வரும் அவமானங்கள் தான் கதையே என ஒட்டுமொத்தமாக எல்லோரும் தங்கள் 'சினிமா விமர்சனத்தில்' குறிப்பிட்டு வருகின்றனர். அதிலே என்ன அசிங்கம்?? எனக்கு புரியவில்லை. சிதம்பரம் நடராஜர் சிலைக்கு அலங்காரம் செய்யும் போது அவரது உடல் முழுக்க நகைகள் அலங்காரம் மட்டுமே இருக்கும். அவரது திருவாச்சியில் மட்டுமே பூ அலங்காரம் இருக்கும். மத்தபடி அவரது உடலில் பூ மாலை சூட்டும் இடமே அவரது தூக்கி நிறுத்திய இடது கால் பாதங்களில் அதாவது கனுக்காலில் சின்னதாய் நம் உள்ளங்கை அளவிலான குஞ்சம் வைத்த பூ மாலை சாற்றியிருப்பர். அதற்கு தான் குஞ்சித' பாதம் என்னும் பெயர். அது போகட்டும். இந்த பெயரை விடுங்கள். என் பெயர் "தொல்காப்பியன்" என்ன பாடு பட்டிருக்கு தெரியுமா என் பள்ளி பருவத்தில்???


நானே எலும்பும் தோலுமாய் இருப்பேன் அப்போது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை, தோலும் எலும்புமாய் இருக்கிறேன். அதை குறிக்கும் விதமாய் தோலு' காப்பியன், காப்பி, என பலவாறு கிண்டலடிக்கப்பட்டுள்ளேன். பள்ளிக்கு தடுப்பூசி போட வரும் போது பசங்க ஊசிக்கு அழுதுகிட்டு இருக்காங்களோ இல்லியோ வரும் ஊசிக்காரர் ஊசியை போட்டு விட்டு என் பெயரை தோல் காப்பியன் என மிகச்சரியாக தப்பாய் எழுத போவதை நினைத்து அழுவேன். ஊசி வலியை விட அது அதிகம். அது என்ன எழவோ தெரியலை... இப்போதும் கூட என் வாக்காளர் அடையாள அட்டையில் தோல் காப்பியனாகவே இருந்து தொலைக்கிறேன். அப்படி என் பெயரால் நான் ரொம்ப மனமொடிந்து போன நேரத்தில் அபி பிறந்து அபிஅப்பாவாக ஆன பின்னே தான் ஓரளவு நிம்மதி. அதையும் கூட சிலர் அபிஅப்பா என்பதை சில சமயம் அபிபாப்பா என எழுதி விடுகின்றனர்.


இப்படியாக என் பெயர் எனக்கு பல தொல்லைகளை கொடுத்த காலத்தில் அதாவது நான் ஏழாம் வகுப்பு படித்த காலத்தில் (ஏழாம் வகுப்பெல்லாம் படிச்சிருக்கேன் மை லார்ட்) ஒரு நான்கு மாதம் மயிலாடுதுறையில் இருந்து மேல்படிப்புக்காக மங்கைநல்லூர் கிராமத்துக்கு கொண்டு சேர்த்தார்கள். அங்கே பெயர் எல்லாம் வித்யாசமாய் இருக்கும். அதிலே ஒருத்தன் பெயர் "சமாதானம்". நம்புங்க. அவன் பெயரே சமாதானம் தான். அவன் அண்ணன் பெயர் "சமரசம்" தம்பி பெயர் "சமதர்மம்" .. இப்படியாக அந்த பள்ளியில் சமாதானம், சமரசம், சமதர்மம் ஆகிய சகோதர்கள் வந்து சேர்ந்தனர் அந்த பள்ளிக்கு. அவனுங்க பெயரை மற்ற மாணவர்கள் கிண்டலடிக்கும் போது நானும் சேர்ந்துப்பேன். பின்ன என்ன ... ஒரே அடிதடி, சண்டை, சச்சரவு தான். ஹய்... நல்லா இருக்குல்ல... சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம் பின்ன சமதர்மம் ஆகா ... இந்த குழப்பத்தில் என் தொல்காப்பியன் பெயர் கிண்டலில் இருந்து தப்பித்து கொண்டது. பின்னர் நான் அந்த பள்ளியில் முதல் ரேங் வாக்கியமையால் அப்பாவுக்கு அந்த பள்ளி மீது இருந்த நம்பிக்கை போயே போயுந்தி. நம்ம பையனே பஷ்ட் ரேங் வந்தா அதல்லாம் ஒரு பள்ளிக்கூடமான்னு பள்ளி மீது கோவிச்சுகிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்து பழைய பள்ளியிலேயே சேர்த்துட்டாங்க. மீண்டும் தொல்காப்பியன் என்பது தோலாய் ஆனது... அவ்வ்வ்


பின்னர் விபரம் தெரிந்த காலத்தில் தான் அந்த பெயர் எத்தனை தொன்மையான அழகிய தமிழ் பெயர் என்பது புரிந்தது. அது போலவே சமாதானம், சமரசம், சமதர்மம் என உயரிய நோக்கில் தன் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டிய அந்த அப்பனை நினைத்து மானசீகமாய் வணங்கினேன்.


பின்னர் என் இருபத்தி எட்டாம் வயதிலெல்லாம் நான் ஃபாரின் ரிட்டர்ன் ஆகி கண்ணாலம் காட்சின்னு ஆன பின்னர் ஒரு நாள் நான் லீவுக்கு வந்திருந்த போது ஒரு பத்திரிக்கை வந்திருந்தது. ஆமாம்! என் பால்ய காலத்தில் பழகிய அந்த சமாதானத்துக்கு திருமணம். எடுத்து பிரித்து பார்த்தேன். மணமகள் பெயரை பார்த்தததும் குபீர் என சிரித்து விட்டேன். நான் ஏற்கனவே என் மனவியிடம் இந்த "சமாதானம்" என்னும் பெயரை கேலி செய்த கதையை சொல்லி இனி அந்த பெயரை கேட்டால் சிரிக்க மாட்டேன் என சொல்லி இருந்தேன். ஆனாலும் சிரித்து விட்டேன். என் மனைவி அந்த அழைப்பிதழை வாங்கி பார்த்து விட்டு என்னை முறைத்த போது நான் அந்த "சமாதானம்" பெயருக்காக சிரிக்கவில்லை என சொல்லவில்லை. 


இரு நாட்கள் பின்னர் அந்த திருமணத்துக்கு போனேன். எல்லோரும் வாழ்த்திய பின்னர் நான் மேடைக்கு சென்று "சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்" என வாழ்த்தினேன். அவனுக்கு ரொம்ப கோவம் வந்து விட்டது. "போடா தோலு" என்றான். சிரித்து கொண்டே வந்து விட்டேன்.

அந்த மணமகள் பெயர்  "சாந்தி":-))

May 8, 2013

"முதல் மரியாதை! " - கொஞ்சம் தாமதமான விமர்சனம்!



தமிழகத்தின் தென்மாவட்டத்தில்   இருக்கும் ஒரு ஊர்ல ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருத்தர் இருந்தாரு. அவரு பெரும் பணக்காரரு. அவருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு பொண்ணு. பேரு பொன்னத்தா.  அந்த பொண்ணு தன் பருவ வயசை அடைஞ்சதும் ஒரு ஜீன்ஸ், கூலிங் கிளாஸ், தொப்புள் அளவுக்கான  டைட் சட்டைல்லாம் போட்டுக்காத அந்த காலத்தில் இருந்த மாடர்ன் டிரஸ்ஸான பட்டாப்பட்டி டவுசர், நலுமுழம் வேட்டி, பெரிய மீசை சகிதம் இருந்த ஒரு வேத்து சாதி பையனை லவ்ஸ் பண்ணுது. ஒரு கட்டத்திலே தப்பு தண்டா நடந்து வவுத்துல புள்ளய வாங்கிடுச்சு. இது தெரிஞ்ச அந்த லவ்பாய் அதை கூட்டிகிட்டு பக்கத்து ஊர்ல இருக்கும் ஒரு வைத்தியர் வூட்டுக்கு அழைச்சுகிட்டு போறாரு. அந்த வைத்தியனோ அந்த பொன்னாத்தாவின் அப்பனுக்கு வத்தி வச்சுடறார். இது தெரிஞ்ச அந்த லவ்ஸ்பாய் பக்கத்தில் கிடந்த ஒரு அருவாளை எடுத்து வைத்தியரை  ஒரே போடா போட்டுட்டு ஜெயிலுக்கு போய்டுறான்.


"வேத்து சாதிலயா லவ்ஸ் அடிச்சு வவுத்துல புள்ளய வாங்கிட்டு வந்துட்ட சிறுக்கி மொவளே, இப்ப ஒன்னய என்ன பண்றேன் பாரு"ன்னு அந்த ஆதிக்க சாதி அய்யா குதி குதின்னு குதிச்சுட்டு தன் சாதில மாப்ள பார்க்குறாரு. இந்த லெவல்ல வயித்து புள்ள வளர ஆரம்பிச்சு வயிறு காட்டி கொடுக்குது பொன்னாத்தாவுக்கு. அந்த ஆதிக்க சாதில வயித்த தள்ளிகிட்டு போனா மாப்ள புடிக்க முடியுமா? யோசிச்சாரு அந்த அய்யா. ஒடனே தன் அக்கா மொவன் ஒருத்தன் வெட்டியா ஒரு துறுபிடிச்ச தொரட்டு குச்சி வச்சுகிட்டு 20 வெள்ளாடு மேய்ச்சிகிட்டு இருந்தான். அவனை கூட்டி வந்து "மாப்ள மாப்ள, எனக்கு பொன்னாத்தாவோட காதலை விட என் சாதி மேல இருக்கும் காதல் தான் அதிகம். அவளை வேத்து சாதில கட்டி கொடுத்தா என் மானம் மருவாதி எல்லாம் புட்டுகிட்டு போய்டும். நாள பின்னக்கி நான் மந்தைல ஒக்காந்து சொம்பிலே தண்ணி குடிச்சு கிட்டு ஜட்ஜ்மெண்ட் எல்லாம் சொல்ல முடியாம போய்டும். நீ என் பொன்னாத்தாவ கட்டிக்க. அதுக்கு பர்த்தியா நான் என் சொத்து பத்து எல்லாம் ஒன் பேருக்கு எழுதி வச்சிடுறேன். அவ வயித்துல வளர்ர புள்ளய ஒம் புள்ளன்னு இனிசியல் வச்சிக்க மாப்ள, அத்தோட என் ஜட்ஜ் போஸ்டை எனக்கு பொறவு நீயே வச்சிக்க. ஆக மொத்தம் ஒரு 'மிச்சர்' மாப்ளயா இரு மாப்ள"ன்னு சொல்ல அந்த டீலிங் பிடிச்சு இருந்துச்சு அந்த மாப்ளக்கி. இந்த டீலிங் பேசுனப்ப செங்கோடன்னு ஒரு செருப்பு தைக்கும் ஆளு பார்த்துடறான். இந்த மிச்சர் மாப்ள தன்னோட மாமன் தன் கால்ல மேல போட்டிருந்த செருப்பு படும் படி கால்ல விழுந்து கேட்டதால இனி இந்த மானம்கெட்ட செருப்பை போட மேட்டேண்டா போ"ன்னு வீரசபதம் எடுக்க செருப்பு தைக்கும் செங்கோடனுக்கு ஒரு கஸ்டமர் போயிட்டாரேன்னு கெதக்குன்னு ஆகிப்போச்சுது. அப்பப்ப அதனால செங்கோடன் வந்து "அய்யா ஒங்க காலுக்கு நான் ஒரு செருப்பு தைச்சு போடனும்" ன்னு சொல்லும் போது அந்த மிச்சர் மாப்ளக்கி பயத்துல ஒன்னுக்கு வந்துடும். "இந்த ஆளுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுதே"ன்னு பயந்து வரும்.


இப்படியா அந்த மிச்சர் மாப்ள தன் மாமா கிட்டே "நான் ஒன் சொத்து பத்தும், ஒன் பொண்ணு பொன்னாத்தாவையும் வச்சுக்கறேன். நீ ஜட்சு போஸ்ட்டை வச்சுக்கோ" ன்னு மானத்தோட வாழ்ந்து கிட்டு இருக்கும்போது அந்த மாமாவும் மண்டைய போட அந்த ஜட்ஜ் போஸ்டும் மிச்சர் மாப்ளக்கி வந்துடுச்சு. இது நடுவே அந்த மிச்சருக்கு ஒரு ஒன்னுவிட்ட அக்கா மொவன் ...அவன் ஒரு ரெண்டுங்கெட்டான். ஆடு மேய்க்கத்தான் லாயக்கு. அவனையும் தன் கூடவே வளர்த்து வராரு மிச்சர் மாப்ள.


ஆனா பொன்னாத்தா இருக்காளே பொன்னாத்தா... அவளுக்கு சம காண்டு இந்த மிச்சர் மாப்ள மேல. தன்னோட காதலே இந்த ஆளால கெட்டுப்போச்சுதேன்னு நினைச்சாளோ, இல்லாட்டி ஒருத்தன் கூட படுத்துட்டு இன்னுமொருத்தன் கூட வாழனுமான்னு நினைச்சாளான்னு தெர்ல. ஆனா மிச்சர் மாப்ள கூட படுக்குறதில்லை. மனுசனா கூட மதிக்கிறது இல்லை. தான் காதலிச்ச மவராசனை மனசிலே வச்சிகிட்டு ஒரு துறவி மேரி வாழ்ந்து கிட்டு கிடக்கா.


மிச்சர் மாப்ள, தான் இனிசியல் கொடுத்த பொன்னாத்தாவுக்கு பொறந்த அந்த பொண்ணுக்கு ஏனோ தானோன்னு ஒரு கேடுகெட்டவனுக்கு தன் சாதிலயே பார்த்து கட்டி கொடுக்குறாரு. தனக்கு பொறந்த பொண்ணா இருந்தா இப்படி நடந்துப்பாரா மிச்சர் மாப்ள. இதையும் நாம கவனிக்கனும். கட்டிக்கொடுத்தவன் ஒரு களவாணிப்பயபுள்ள. இந்த நிலமையிலே அந்த ஊருக்கு வேற சாதிய சேந்த ஒரு நாடோடி பொண்ணு தன் அப்பனோட பரிசல் ஓட்ட வருது. இந்த மிச்சர் மாப்ளக்கு 50+ வயசு ஆனாலும் கன்னிகழியாம கெடக்குல்ல... இதும் அந்த பொண்ணை... அதுக்கு பேர் குயிலு... அதை லைட்டா சீண்டி கிட்டு இருக்காரு. ஊர்ல சும்மா இருப்பானுங்கலா??? கண்ணு மூக்கு வச்சு பேச ஆரம்பிச்சானுங்க.


அங்க விட்டுட்டு இங்க வாங்க... அந்த மிச்சர் மாப்ளக்கி ஒரு மருமொவன் தெண்டம் இருந்தானே ஆடு மேய்க்கும் அறிவாளி...அவனுக்கு லவ்ஸ் வருது. யார் கூட வேத்து சாதி செருப்பு தைக்கும் செங்கோடன் மொவ கூட. மிச்சர் மாப்ளக்கி என்னா செய்றதுன்னு தெரியலை. கட்டி கொடுக்காட்டா செங்கோடன் சொம்மா இருக்க மாட்டான். மாப்ள எப்படி மிச்சர் மாப்ள ஆனாரு என்பதை ஊருக்குள்ள சொல்லிடுவான்னு பயந்து போன மிச்சர் ... ஆடு மேய்ச்ச மாரியும் ஆச்சுது, அண்ணனுக்கு பொண்ணு பார்த்தது மாரியும் ஆச்சுது"ன்னு கணக்கா "எனக்கு, வேத்து சாதில என் மருமொவனுக்கு கண்ணாலம் கட்ட இஷ்டம் தான். நான் அந்த சாதிக்கு பாதுகாவலன்" ரேஞ்சில டயலாக்கை வுட்டுட்டு கண்ணாலம் கட்டி வைக்கிறரு. இது பொன்னாத்தாவுக்கு புடிக்குமா? "அட நாறப்பயலே,இதைத்தானடா நானும் அந்த காலத்திலே சொன்னேன்,  நானு அந்த காலத்திலேவேத்து சாதி  ஒருத்தன் கிட்ட லவ்ஸ்ம் பண்ணி, படுத்தும் எந்திரிச்சு ஒரு புள்ளய வவுத்துல வாங்கிட்டு வந்த பொறவும் கூட சாதி..கூ ன்னு பேசிட்டு இப்ப ஒன் மருமொவனுக்கு மட்டும் டயலாக்கவுட்டுட்டு திரியிறயே ன்னு பொன்னாத்தாவுக்கு செம கடுப்பாகிடுச்சு.


பொன்னத்தாவின் மருமகப்பய தான் ஒரு களவாணிப்பயன்னு ஏற்கனவே சொன்னோமில்ல. அவன் அந்த செங்கோடன் மொவளை கொண்டு போட்டு காதுல மூக்குல இருந்ததை களவாண்டு போலீஸ்ல மாட்டிகிறான். அது கெடக்கட்டும்... அது இப்போ முக்கியமில்லே...


இந்த நெலமையிலே தான் மிச்சர் மாப்ள, பரிசல்கார பொண்ணு கூட கும்மாளம் அடிக்கும் சேதி வந்து பொன்னாத்தாவோட தண்டட்டி போட்ட காதிலே விழுந்துச்சு. வுடுமா பொன்னாத்தா? தன் சாதி சனம் எல்லாத்தையும் கூட்டி கெடா வெட்டி சாராயம் குடுத்து மிச்சர் மாப்ளயோட அட்டகாசத்தை கேக்க சொல்லுது. அவனுங்களும் அந்த பரிசல்கார குயிலு குடிசைய கொளுத்துறேன்னு போக அதுக்கு மின்னாடியே மிச்சர் மாப்ள அந்த பொண்ணை நான் வச்சிருக்கேன் ன்னு பானையை போட்டு ஒடைக்கிறமாரி சொல்லிட்டு குடிசைக்கு காவலுக்கு போவசொல்ல... அங்கிட்டு அந்த குயிலு ஊரை விட்டே போலாம் போ.. இந்த மிச்சரை நம்பி என்ன பிரயோசனம்னு கெளம்புது. பரிசலை ஓட்ட ரெடியா இருக்கும் போது தான் பொன்னாத்தாவின் பழைய லவ்வர் செயில் வாழ்க்கை முடிஞ்சு பொன்னாத்தாவையும் தனக்கு பொறந்த பொண்ணையும் பார்க்க வரான்.


வர்ரவன் பரிசல்ல வரும் போது குயிலு கிட்டே நடந்த பழைய கதை எல்லாம் சொல்றான். இந்த குயிலுக்கு தேவையில்லாத வேலையை பார்த்துபுடுது அந்த புள்ள. அந்த அப்பாவி காதலனை ஒரே போடா போட்டு தள்ளிட்டு செயிலுக்கு போவுது. பின்ன என்ன ஆச்சுது? மிச்சர் மாப்ள என்ன ஆனாரு? என்பதுல்லாம் வெள்ளி திரையிலே பார்த்துகுங்க.


 கதாநாயகனாக "காதலன்" வேடத்தில் சத்தியராஜும், கதாநாயகி பொன்னாத்தாவாக "வடிவுக்கரசி"யும், மிச்சர் மாப்ளயாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், பரிசல் கார குயிலாக ராதாவும் நடிச்சு இருக்காங்க.


கதாநாயகனாக சத்தியராஜ் இருப்பினும் அவரை விட மிச்சர் மாப்ள கேரக்டரில் நடிச்ச நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு தான் எல்லார் நடிப்பை விட தூள். அது போல பரிசல்கார குயிலும் தன் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கின்றார். பொன்னாத்தாவாக வரும் வடிவுக்கரசி அய்யா சிவாஜி கணேசனுக்கு போட்டி போட்டு பிய்த்து உதறி இருக்கார். ஆக மொத்தம் சாதி வெறி ஏத்தும் சூப்பர் படம் இது. கண்டிப்பாக தென் மாவட்டங்களில் சூப்பராக ஓடும். அனால் ஒட்டப்பிடாரம் போன்ற ஊர்களில் படத்தை வெளியிடாமல் இருந்தால் முதல்வர் சட்டம் ஒழுங்கை காப்பத்தலாம். இந்த படத்தை ஒரு சில வசனங்கள் மாற்றி ஆதிக்க சாதி பெயர்களை கொஞ்சம் லைட்டா பட்டி டிங்கரிங் பார்த்து வட மாவட்டங்களில் வெளியிடலாம். ஒரே தமிழ் படத்தை தமிழகத்தின் வேறு வேறு பகுதிகளில் ரீமேக் செய்த முதல் படம் என்னும் பெருமையை பெறலாம். அப்படி வெளியிடும் போது மரக்காணம் போன்ற ஊர்களில் மறக்காம தடை செஞ்சுடனும்.


ஆக மொத்தம் படம் இப்போதைய சூழலில் வெளிவந்தா அது பல அப்பாவிகளுக்கு "இறுதி மரியாதை" ஆகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது!


குறிப்பு 1: இது சத்தியமாக ஒரு காமடிப்பதிவு மட்டுமே. நானும் ஒரு தீவிர சிவாஜி ரசிகர் என்பதை கூறிக்கொள்கிறேன். அதில் பெருமையும் கொள்கிறேன். கோவம் வந்தால் தனி மடலில் திட்டவும். பொதுவெளியில் வேண்டாம். அஜக்........ ஒஜக்...........நஜக்.......... அஜக்....ஒஜக்.... நஜக்..... அஜக். ஒஜக்.நஜக். அஜக் ஒஜக் நஜக் அஜகொசநஜக்....... போதும்... நெக்ஸ்ட் ரெஸ்ட்....


குறிப்பு 2: இப்படி கேணைத்தனமாக மாத்தி யோசிப்பதுக்கு... ஒண்ணுமில்லை... வேண்டம் வுட்டுடுங்க..