பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 7, 2008

வீக் என்ட் அசைவம்!!! கோவிக்காதீங்க, இப்படிக்கு அபிஅப்பா!!!

வீக் என்ட் ஆனா போதுமே ஆளாளுக்கு “வீக் என்ட் ஜொல்லு” வீக் என்ட் அசைவம்” என தூள் கிளப்பிகிட்டு இருக்க இந்த அபிஅப்பா மட்டும் இளிச்ச வாயனா! வேற வழியே இல்லை. அசைவம் பிடிக்காதவர்கள் கொஞ்சம் அப்பால போயிடுங்க. பின்ன என்னை குத்தம் சொல்லக்கூடாது.

முதல்ல கதையின் களம் பத்தி சொல்லிடனும். அதாவதுங்க “தட்டி மெஸ்” . மயிலாடுதுறையின் கூறைநாடு பகுதியிலே அங்கிருந்து காவிரி போகும் ஒரு சின்ன ரோட்டிலே நாலாவது கடையா இருக்கும். அதை கடைன்னு கூட சொல்ல முடியாது. அது ஒரு ஓட்டு வீட்டின் ஒரு பகுதிதான். 12 அடிக்கு 8 அடி அகலத்துல இருக்கும். வாசலில் 200 லிட்டர் மண்ணெண்னை டின் முக்கால் பாகம் மண் கொட்டி விறகு அடுப்பாக மாற்றப்பட்டு சும்மா தக தகன்னு இருக்கும். உள்ளே இரண்டு பக்கமும் அகலம் குறைவான சின்ன மரபெஞ்சும், சாப்பிட மேசையும் இருக்கும். ஒரு பக்கத்துக்கு குறைந்தது 8 பேர் உட்காரலாம். ஆனா 6 பேர் தான் உட்கார முடியும். காரணம் வந்து சாப்பிடும் கனவான்கள் எல்லாருமே கணபாடிகள் தான். இரண்டு பக்கமும் தேதி கிழிக்கும் காலண்டர் குறைந்தது 20 தேறும். அதிலே வைகோ படம் போட்ட காலண்டர் குறைந்தது 4 இருக்கும். வேலை நேரம் என பார்த்தால் மதியம் 12.00 மணி முதல் 3.00 வரை மட்டுமே.


சுப்ரமணியன் என்கிற மணி பத்தி இப்ப சொல்லியாகனும். எனக்கும் நண்பன் தான். அதனால் ஒருமையிலேயே சொன்னாதான் கொஞ்சம் இலகுவா இருக்கும் எனக்கு. ஜிம்முக்கு போய் வளர்த்த பாடி அவனுக்கு. வாகனம் என்பீல்டு மோட்டார் பைக். கழுத்திலே அவன் பாடிக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் முறுக்கு செயின் சின்னதா உட்கழுத்தோட இருக்கும். முண்டா பனியன், வேஷ்டி தான் காஸ்ட்டியூம். கடையின் மெனு என்று பார்த்தால் வகை வகையா இருக்கும் என நினைக்க கூடாது. சிம்பிள். ஜஸ்ட் மீன் குழம்பும், மீன் வருவலும்… இவ்வளவே! கடையில் பில், பில்குத்தும் கம்பி என எதுவும் கிடையாது.


மதியும் 12 மணி ஆச்சுன்னா மயிலாடுதுறையின் ஒட்டு மொத்த தொழிலதிபர்களுக்கும் ஒரு மாதிரி எச்சில் ஊற ஆரம்பிச்சுடும். நல்லா ருசியான சாப்பாடுன்னா அங்கே முதல் ஆளா நிப்பாங்க. சும்மா தனியா போய் சாப்பிடுவது என்பதெல்லாம் கிடையாது. ஒருத்தருக்கு ஒருத்தர் போன்ல “மாப்ள தட்டிக்கு போவுமா” என்பது போன்ற சம்பாஷனைகளால் டெலிபோன் எக்சேஞ்சே திணறும்.


காலை 11 மணிக்கு தான் மணி கிளம்புவார் மயிலாடுதுறையின் பெரிய மீன் மார்கெட்டுக்கு. அவருக்கு தனியாக வரும் திருமுல்லைவாசல் கடலில் இருந்தோ சின்னங்குடி கடலில் இருந்தோ. ஒன் அண்ட் ஒன்லி “வஞ்சிரம்” மீன் மட்டுமே. நல்ல பெரிய சைஸ் மீனாக வரும். துண்டு போட்டா நம்ம சத்தியராஜ் உள்ளங்கை சைஸ்க்கு இருக்கும் ஒரு பிசுக்கு. என் சுண்டு விரல் மொத்தம் தான் ஒரு துண்டு போடுவார் தல. அவருக்கு தனியா ஒரு இடம் மார்க்கெட்டிலே! அவர் சிஷ்ய கோடி பசங்க அவர் வரும் முன்னமே அந்த இடத்தை சுத்தம் செஞ்சு தொட்டியிலே தண்ணி எல்லாம் பிடிச்சு, மீனை கழுவி, செதில் எடுத்து தலையை மட்டும் வெட்டி தட்டி மெஸ்ஸுக்கு அனுப்பிடுவாங்க. அது தவிர மிக சின்ன மீன்கள் “பொருவா” “செங்காலா” போன்றவையும் சுத்தம் செய்யப்பட்டு அனுப்ப பட்டுவிடும். இந்த வஞ்சிரம் தலையும், சின்ன மீன்களும் தான் குழம்புக்கு.

மணி வந்த பின்ன துண்டு போட்டு மசாலா போட்டு, அடடா அந்த மசாலா பக்குவம் இருக்கே அது அலாதி. மசாலா எல்லாம் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு பைக்கின் பெட்டியிலே இருக்கும். மார்கெட்டுக்கு வந்த பின்ன எதிரே இருக்கும் பாய் கடையில் ஒரு எண்ணை பாட்டில் வாங்கி அதை ஒரு பெரிய அலுமினிய தட்டிலே ஊற்றி, அதிலே அந்த மசாலா பொடியை கொட்டி தேவையான அளவு கல் உப்பு(கல் உப்புதான் போடுவார்) போட்டு அதிலே ஒவ்வொறு துண்டா நல்லா குளிப்பாட்டி அந்த தட்டிலேலே வரிசையா அடுக்கிகிட்டே வரும் அழகு சூப்பரோ சூப்பர். பின்பு அந்த பெரிய்ய அலுமினிய தட்டை மெல்லிய வேஷ்டி துணியால மூடி கட்டி மார்கெட்டிலேயே வச்சுட்டு காவலுக்கு ஒரு பையனை போட்டு விட்டு “தட்டிமெஸ்ஸுக்கு பைக் படபடக்கும்.

அப்போ மணி 11.45 ஆகியிருக்கும். கடைக்கு வந்த உடனே அவர் வரும் முன்னமே அவரின் மத்த சிஷ்யகோடிகள் பொன்னி அரிசி களைந்து பெரிய அலுமினிய சட்டியில் வேக வச்சிருப்பாங்க. புளி கரைச்சு ஒரு பாத்திரத்திலே இருக்கும். வெந்தயம் போன்றவை எடுத்து வைக்கப்பட்டிருக்கும். மணி அங்க போன பின்ன குழம்பு வைக்கும் சட்டி அடுப்பில் ஏற்றப்பட்டு அது கொஞ்சம் காய்ந்த பின்ன வெறும் சட்டியில் வெந்தயம் போட்டு லைட்டா சூடு காமிக்கும் போது அன்றைய மீன் குழம்பின் ஆரம்ப வாசனை அந்த தெருவையே அள்ளிகிட்டு போகும்.


அடுத்து என்ன! சர சரன்னு குழம்புக்கான வேலை நடக்கும் எல்லாம் முடிஞ்சு புளி ஊத்தி உப்பு பார்த்த பின்ன விறகு அடுப்பை “சிம்”ல வச்சுட்டு திரும்பவும் மார்க்கெட்டுக்கு வண்டி கிளம்பிடும். அதுவரை குழம்பிலே மீன் போடப்பட மாட்டாது. அப்போ மணி 12.15 ஆயிருக்கும். அதுக்குள்ள நம்ம தொழிலதிபர் கூட்டம் எல்லாம் “ஸ்கார்ப்பியோ” “ஹூந்தாய் அக்செந்த்” அது இதுன்னு அந்த தெருவே நெறஞ்சு போயிடும். முன்னமே வந்தவங்களுக்கு முன்ன இடம்.


சரியாக 12.30க்கு குழம்பில் அந்த மீன் துண்டுகள் போடப்படும். அப்போது எல்லாம் உள்ளே வந்து உக்காந்திருக்கும் நாராயணன் ஜூவல்லரிகளும், ARC களும், பாண்டியன் மரவாடிகளும், ரமணாஸ்களும், இலை கழுவி இலவு காத்த கிளி போல மணியின் வருகைக்காக காத்திருக்கும். 12.45க்கு பைக் சத்தம் வந்தவுடன் ஒரு மாதிரி பரபரப்பு வந்திடும் அந்த ஏரியாவுக்கே. வாசலில் வெளியே டாக்டர்கள், வக்கீல்கள் வீட்டு வேலையாட்களும், கிளியனூர், எலந்தகுடி, வடகரையிலிருந்து வந்திருக்கும் செண்ட் போட்ட பாய்களும், சுந்தரம் தியேட்டரில் அவசரம் அவசரமாக டிக்கெட் வாங்கிகிட்டு, பாபு ஒயின்ஸில் 90 விட்டுகிட்டு வரும் பார்ட்டிகளும் ஏதோ “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” ரேஞ்சில் காத்துகிடக்கும்.


மணி பைக் ஓட்ட பின்னால் ஒரு பையன் “அந்த” பிரசாத தட்டை தலையில் வச்சிக்கிட்டு வருவான். பைக்கில இருந்து இறங்கின மணி நேரா கடைக்கு வந்து “வாங்க அண்ணே! எல்லாரும் வாங்க, ரொம்ப லேட் பண்ணிபுட்டேன், தோ இப்ப ஆயிடும்…டே அந்த பேனை போடுடா”ன்னு சொல்லிகிட்டே அந்த 20 காலண்டரிலும் தேதி கிழிப்பார் தல!(ரொம்ப முக்கியம்)


அடுத்து இலை போடப்படும், ஆனா சோறு போடப்பட மாட்டாது. அடுத்த 7 நிமிஷத்திலே மீன் துண்டுகள் வருக்கப்பட்டு பொன் கலரில் முறுகலாக இல்லாமல் பதமாக வறுக்கப்பட்டு 12 இலைகளிளும் ஒரு ஒரு துண்டு வைக்கப்படும். அதன் பின்னரே சோறு போடப்படும். அந்த வாழை இலையில் பொன்னி அரிசி சோறு எப்படி இருக்கும்ன்னு கேட்டா, சின்ன கவுண்டர் படத்திலே ஜெயிலுக்கு போய் வந்த பின்ன விசயகாந்து குளிச்சு முடிச்சு வக்கனையா உக்காந்து இலை போட்டு சுட சுட சோறு போட்டு சாப்பிடுவாரே அப்படி இருக்கும். அப்போதான் குழம்பு திறக்கப்படும். என்னவோ “சொர்க்கவாசல்” திறப்பு மாதிரி அதுக்கு ஏகப்பட்ட பில்டப்பு நடக்கும். அவ்வளவு தான். சின்ன குழம்பு மீன் ஒண்ணும் நிறைய குழம்பும் பரிமாறப்படும். அதுக்குள்ள 3 ரவுண்டு வறுவல் மீன் உள்ளே போயிருக்கும். வேர்த்து வேர்த்து ஒழுகும் வியர்வையை பற்றி யாருக்கும் கவலை இருக்காது. வெளியே காத்து இருக்கும் மத்தவங்களை விட நாம் கொடுத்து வச்சவங்க என்னும் ஈகோ கிட்டதட்ட உள்ளே சாப்பிடும் எல்லோருக்கும் இருக்கும்.

"அண்ணே வைக்கோ அண்ணே குடவாசல் வரை வந்திருக்காரு! அதான் லேட்டு! ராத்திரி 12க்கு மீன் குழம்பு கேட்டாரு! ஒத்துபனா நானு....முடியாதுன்னு சொல்லிட்டன்ல" இது மணி!!! இதையெல்லாம் கேட்டுக்கனும். இல்லாட்டி "சூப்பர்டா மணி! நீ ரொம்ப கெடுத்து வச்சிட்ட வைக்கோவை"ன்னு என்னய மாதிரி உசுப்பேத்தினா அடுத்து அடுத்து ரெண்டு பிசுக்கு மீன் வரும்!

இப்படியாக சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது வீட்டிலிருந்து போன் வந்தா "எனக்கு காலையில சாப்பிட்ட பொங்கல் நெஞ்சை கரிக்குது சாப்பிட வரலை"ன்னு அதே சேம் பதிலை சொன்னா அழகா புரிஞ்சுப்பாங்க! சில தங்கமணிகள்"எனக்கும் ரெண்டு பிசுக்கு பார்சேல்ல்ல்ல்'ன்னு கத்துவங்க!!

பில்ன்னு பார்த்தா, ரொம்ப சிம்பிள்! மணிக்கு ரொம்ப அனுபவம் இதிலே! 500 ரூபாய் கொடுத்தாலும் மீதி வராது, 1000 ரூபாய் கொடுத்தாலும் மீதி வராது! பதிலுக்கு "ரொம்ப நன்றிண்ணே" தான் வரும்.

ஆனா சரியான சூப்பரான அசைவ சாப்பாடு சாப்பிட்ட திருப்தி இருக்கும்!!!

IT மக்கா ரொம்ப காலரர தூக்கி விட்டுக்காதீங்க! ஜஸ்ட் ஒரு வேளை சாப்பாடுக்கு எங்க பசங்க 500 ரூபாய் சர்வ சாதாரணமா செலவழிக்கிறாங்கப்பூ!!!

30 comments:

 1. எனக்கு இந்த வீக் என்ட் பதிவு போட மிகவும் உதவிய ஜாவா பாவலர் கப்பி தம்பிக்கு மிக்க நன்றி!!!!! இதனால் நான் சொல்வதெல்லாம் பதிவு நல்லா இல்லைன்னா நீங்க திட்ட வேண்டியது கப்பிசாரைத்தானுங்கோ!!!!!!!

  ReplyDelete
 2. டவுட்டு தங்கப்பன்February 7, 2008 at 11:14 PM

  //அபி அப்பா said...

  எனக்கு இந்த வீக் என்ட் பதிவு போட மிகவும் உதவிய ஜாவா பாவலர் கப்பி தம்பிக்கு மிக்க நன்றி!!!!! இதனால் நான் சொல்வதெல்லாம் பதிவு நல்லா இல்லைன்னா நீங்க திட்ட வேண்டியது கப்பிசாரைத்தானுங்கோ!!!!!!!//

  ஒரு வேல நல்லா இருந்துட்டுடா என்ன பன்றது.

  ReplyDelete
 3. ப்டிக்கிறப்போவே நாக்கு ஊற ஆரம்பிச்சிருச்சு...... :)

  ReplyDelete
 4. என்ன மயங்க வச்ச தட்டி மெஸ்ஸ பத்தி ரெண்டு வரில கமெண்ட் போட்டா அது நான் சாப்ட்ட சாப்பாட்டுக்கும் சுப்ரமனிக்கும் அது அசிங்கம்.

  காலைல தெளிவா ஒரு பதிவு ரேஞ்க்கு ஒரு கமெண்ட் போடரேன் அபிஅப்பா.

  ஆனா ஒண்ணு சொல்ரேன் பதிவுன்னா இது பதிவு. தட்டி மெஸ்ஸுல தின்னவனுக்கு மட்டும்தான் இது புரியும்

  ReplyDelete
 5. You write so well. After reading this post I have to have fish tonight. I wish I have fish now though.

  Rumya

  ReplyDelete
 6. ச்ச்ச்சூப்பர் - இப்படி அனுபவிச்சு ஒவ்வொரு நிகழ்வையும் சிந்திச்சி, நகைச்சுவையோட எழுதுறது தனித் திறமை தான். பாராட்டுகள்

  ReplyDelete
 7. //காலைல தெளிவா ஒரு பதிவு ரேஞ்க்கு ஒரு கமெண்ட் போடரேன் அபிஅப்பா//

  என்னாது தெளிவாவா ?? ராத்ரி மப்பு இன்னும் இறங்கலெயா ? நிலா - அப்பாவெ என்னான்னு கேளு

  ReplyDelete
 8. // IT மக்கா ரொம்ப காலரர தூக்கி விட்டுக்காதீங்க! ஜஸ்ட் ஒரு வேளை சாப்பாடுக்கு எங்க பசங்க 500 ரூபாய் சர்வ சாதாரணமா செலவழிக்கிறாங்கப்பூ!!! //

  அதுக்கு அப்புறம் ஒரு மாசத்துக்கு அவங்க சாப்பிட மாட்டாங்கனு நினைக்கிறேன்

  ReplyDelete
 9. \\நந்து f/o நிலா said...

  ஆனா ஒண்ணு சொல்ரேன் பதிவுன்னா இது பதிவு. தட்டி மெஸ்ஸுல தின்னவனுக்கு மட்டும்தான் இது புரியும்.\\

  அப்புறம் எதுக்குங்க பதிவு எல்லாம் போட்டு எங்க நாக்கை ஊற வைக்குறிங்க...;))

  ReplyDelete
 10. நந்து f/o நிலா said...
  என்ன மயங்க வச்ச தட்டி மெஸ்ஸ பத்தி ரெண்டு வரில கமெண்ட் போட்டா அது நான் சாப்ட்ட சாப்பாட்டுக்கும் சுப்ரமனிக்கும் அது அசிங்கம்.

  காலைல தெளிவா ஒரு பதிவு ரேஞ்க்கு ஒரு கமெண்ட் போடரேன் அபிஅப்பா.

  ஆனா ஒண்ணு சொல்ரேன் பதிவுன்னா இது பதிவு. தட்டி மெஸ்ஸுல தின்னவனுக்கு மட்டும்தான் இது புரியும்

  அடங்கொய்யால எல்லாரும் ஒரே குருப்பாத்தான் இருந்திருக்கோம்.... வேற வேற ஊர்ல... எங்க ஊர்ல காலேஜ் படிக்கும் போது நைட்டுக்கு இப்படி ஒரு தட்டி ஹோட்டல்ல புல் கட்டு கட்டுவோம்...ஆகா பழசு எல்லாம் ஞாபகம் வருதே...

  ReplyDelete
 11. சீசன் டைம்ல விரால் மீன் போடுவாங்களே. 5 கிலோசைஸ் விரால் மீனோட தலையை குழம்பில் இருந்து எடுத்து அதை மட்டும் தனியா என்னைச்சட்டியில் கருவேப்பிலை வெங்காயத்தோடு உடச்சுப்போட்டு வணக்கி இலை முழுசும்மா வைப்பாரு மணி.

  ஒரு கையால ரீஜெண்டால்லாம் சாப்பிட முடியாது. சாப்பிட்டு முடிக்கும் போது வயிறு மனசோடு இலையும் மீன் தலையின் மிச்சத்தால நிறைஞ்சு போயிருக்கும்.

  கொஞ்சம் கூட இப்படி திங்கறோமே பக்கத்துல இருக்கவன் என்ன நினைப்பானோன்னு தோனவே தோனாது.

  அப்புறம் ஒரு சட்னி வெப்பாங்களே. சரியா மீன் குழம்பு சாப்ட்டுட்டு அடுத்து சிக்கன் குழம்புக்கு போறதுக்கு முன்னாடி அந்த சட்னிய வழிச்சு சாப்ப்ட்டுட்டா மீன் குழம்பு ருசி நாக்குல மாறி நாக்கு அடுத்த சிக்கன் குழம்புக்கு ப்ரெஷ் ஆகிடும்

  அப்புறம் அந்த உபசரிப்பு. ரசம் சூப்பரா இருக்கும் கொஞ்சூண்டு சாப்பாடு வெச்சு ரசம் சாப்ட்டே ஆகனும்னு சொல்லி பக்கத்துலயே நின்னு சாப்பிட வைப்பார் மணி.

  முன்னாடி மட்டன் போடாம இருந்தாரு. இப்போ மட்டனும் போடறார். அதுவும் ருசி பட்டைய கிளப்புது.

  லன்ச்சுக்கு தட்டி மெஸ்ஸுல சாப்ப்டன்னே 35 கிலோமீட்டர் குண்டும் குழியுமான ரோட்டுல தினமும் வந்த ஆளுங்க நாங்க.

  சாப்பிட்டு முடிச்ச பின்னாடி வருமே ஒரு கிறக்கம். ஹையோடா அது ஜானிவாக்கர் அடிச்சா கூட வராது

  ReplyDelete
 12. தலைப்பைப் பார்த்ததுமே பின்னூட்டம் போட்டாச்சு, வர்ட்டா???? :P

  ReplyDelete
 13. நல்ல சுவை. மணம் மூக்கை துளைக்குது.
  வேர்வை வடிய வடிய சாப்பிடும் அழகு - கண் முன்னே தட்டி கடை தெரியுதய்யா.
  திருச்சில படிக்கும்போது அந்த கடைய - கையேந்தி பவன் அல்லது கையேந்தி விலாஸ் என்று சொல்வோம்.

  ReplyDelete
 14. ஏன் இங்க வந்து இப்படி காய்ஞ்ச ஊருல தானே பொங்கி சாப்பிடறீங்கன்னு இப்பத்தான் தெரியுதே.. தின்னே தீத்துருப்பீங்க போலயே .. :)
  ருசித்து ரசித்து எழுதி இருக்கீங்க வர்ணனைகள் அருமை.
  (என்னமோ ருசி ருசிங்கறீங்க..எனக்கென்ன தெரியும் அசைவம் பத்தி..) ]

  ReplyDelete
 15. //தலைப்பைப் பார்த்ததுமே பின்னூட்டம் போட்டாச்சு, வர்ட்டா????//

  அதான். படிக்கவே வாணாம் (முடியல...)அப்பிடியே பின்னூட்டம் போடுவேன்!
  :->)

  ReplyDelete
 16. தலைப்பை பாத்து ,நம்ம மங்களூர் மாமுவோட சேந்து அபி அப்பா இப்டி ஆகிட்டாரேன்னு மிரண்டு போயிட்டோம்ல்ல..:P

  ReplyDelete
 17. இனியவன்February 9, 2008 at 7:24 PM

  கும்மியில வந்த ---உச்ச நீதிமன்ற தடை நீங்கியது! ஏப்ரல் 16 ம் தேதி மஞ்சு விரட்டு!!! : அபி அப்பா -- எங்கேயப்பா?

  எனிவே மஞ்சு விரட்டு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. டவுட்டு தங்கப்பா! உன் டவுட்டுக்கு எல்லையே இல்லியா!!!!

  ReplyDelete
 19. ராம்! எங்கப்பா போயிட்ட இத்தன நாள்! என்னய போல வேலை அதிகமோ!!!

  ReplyDelete
 20. சரி நந்து! காலையிலே தெழிவா போழுங்க பின்னூழ்ட்டம்!!!!

  ReplyDelete
 21. நன்றி சீனா சார்! வருகைக்கும் ஊக்குவைத்தலுக்கும்! சாரி ஊக்குவித்தலுக்கும்!!!:-)))

  ReplyDelete
 22. ரம்யா கேள்விபட்டிருக்கேன்! அது என்ன ரும்யா! புரியலப்பா! திடீர் திடீர்ன்னு வர்ரீங்க!!! நன்றிப்பா!!!

  ReplyDelete
 23. இரவு ராம் சார்! மாயவரம் பசங்க காசை காசுன்னு பார்க்க மாட்டாங்க, ஒரு நாள் தின்னுட்டு 29 நாள் பட்டினி கிடக்க அவங்க என்ன சிங்கள பசங்கலா!!!

  ReplyDelete
 24. வாடி கோபி வா!!! எச்சில் ஊறுதா!! குட்! அப்ப பதிவு வேலை செய்யுது!!!

  ReplyDelete
 25. வாப்பா இம்சை!! எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைதான்!:-)))

  ReplyDelete
 26. /ரம்யா கேள்விபட்டிருக்கேன்! அது என்ன ரும்யா! புரியலப்பா! திடீர் திடீர்ன்னு வர்ரீங்க!!! நன்றிப்பா!!!/

  Appa spelled my name like that for numerology purpose. I always enjoy your sense of humor. I look forward to reading your post. Keep posting.

  Ramya.

  ReplyDelete
 27. அபி அப்பா,ஆயில்யன் பதிவிலிருந்து வரேன்.

  இப்படி ஒருகடையா. அதில காய்கறி போட்டு குழம்பு வைக்க மாட்டாங்களா:((((((

  ReplyDelete
 28. Hi abiyin appa... dis s Arun... i am reading ur blog for d first time.. simply superb.. amazing... aana... naa idha padikum podhu time nite 1.02 ( mrng :-))
  indha time la fish ku engae povaen ;-(

  really its amazing appa... :-)

  ReplyDelete
 29. வஞ்சீரத்தில் எங்கய்யா செதில்?ஒங்க ஊர் வஞ்சீரத்தில் இருக்குமோ என்ன்வோ!

  ReplyDelete
 30. கலக்கல் அபி அப்பா:-)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))