பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 23, 2008

நாங்க திருடனை பிடித்த கதை!!!




நான் +2 முடித்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த நேரம் அது. அப்போது எங்க ஏரியாவிலே அங்கங்க தொடர்ச்சியா திருட்டு போய்கிட்டு இருந்துச்சு. பெரிய கோவில் வீதிகள், தைக்கால் தெரு பக்கம் எல்லாம் தொடர் திருட்டு நடக்கவே தெரு பெருசுங்க எல்லாம் போய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க இன்ஸ்பெக்டரும் தெருவுக்கு வந்துட்டார். தெருவே பரபரப்பா ஆகிடுச்சு. ராதாவுக்கு தெருவிலே திருட்டு போவது பத்தி எல்லாம் அக்கறை இல்லை. ஒரு ஜாலியான என்டர்டெயின்மெண்ட் நடக்கப்போவது பத்தி ரொம்ப சந்தோஷம். எனக்கும் தான். நாங்க எல்லாரும் சுத்தி நிக்க இன்ஸ் கேள்வியெல்லாம் கேட்க கடைசியா சொன்னார். "உங்க ஒத்துழைப்பு இருந்தா சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம். அதான் இத்தன பசங்க இருக்காங்களே அவங்க எல்லாம் ஒரு டீமா ஃபார்ம் பண்ணிகிட்டு ஸ்டேஷனுக்கு வாங்க. ராத்திரி பூரா பசங்க காவல் இருக்கட்டும் ஒரு மாசம். அதுக்குள்ள கண்டுபிடிச்சிடலாம்"ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்.


உடனே நாங்க ஒரு 25 பசங்க ரொம்ப ஜாலியா ஸ்டேஷனுக்கு போக அங்கே அவர் மீட்டிங் ரூமிலே நடுநாயகமாக உக்காந்து கொண்டு எங்களுக்கு கிளாஸ் எடுத்தார். எனக்கு மனசு பூரா பட்டாம்பூச்சி பறக்குது. அவர் என்னவே வெள்ளை தலை கோபால கிருஷ்ணன் போலவும் நாங்க எல்லாம் விசயகாந்து, சத்தியராசு, நிகழ்கள் ரவி மாதிரியும் ஒரு பெரிய நம்பியார் கும்பலை பிடிக்க போவது போலவும் கற்பனை செய்து கொண்டேன். ராதா ரொம்ப சீரியஸா இன்ச் பை இன்ச்சா அவர் பேசுவதை நோட்ஸ் எல்லாம் எடுத்து ஓவர் பில்டப்பு கொடுத்துகிட்டு இருந்தான். இதிலே அவர் போர்டிலே எல்லாம் தெருவை வரைந்து திருடன் தப்பி போக வாய்ப்பு உள்ள இடத்தை எல்லாம் சிவப்பு சாக்பீஸால் குறித்து வைத்து அந்த இடத்தில் எல்லாம் கொஞ்சம் தடி தடி பசங்களை பாரா போட சொன்னார். அப்படியாக எல்லோருக்கும் ஸ்பாட் கொடுக்க ரொம்ப பூஞ்சையா இருந்த எனக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை. பின்னே அவரே மனசு இறங்கி திருடனை பிடித்த பிறகு அவன் கையை எல்லாம் நல்லா கட்டி போட்ட பிறகு கூட்டத்தை விலக்கி கொண்டு போய் ரெண்டு தர்ம அடி கொடுக்கும் மிகப்பெரிய வேலையை கொடுத்தார்.


பின்னே என்ன நினைச்சாரோ "சரி நீங்க திருடனை பிடிக்க எல்லாம் வேண்டாம். அவனை பார்த்ததும் நேரா சைக்கிளை எடுத்துகிட்டு ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க போதும். அவன் கிட்ட என்ன மாதிரியான வெப்பன்ஸ் இருக்குன்னு தெரியல" அப்படீனு சொல்லிட்டார். "வெப்பன்ஸ்" அது இதுன்னு சொன்ன போதேலாம் ராதா ஏதோ பெரிய தீவிரவாதிய பிடிக்கும் முக்கிய போலீஸ் அதிகாரியா தன்னை நெனச்சிகிட்டான். அப்பதான் நான் மெதுவா என் திருவாயை திறந்தேன். "சார் அவனை நாங்க பிடிக்காம தூரக்க இருந்து அவன் சட்டையிலே இங் பேனாவை வச்சி இங் அடிச்சிட்டா அடுத்த நாள் நீங்க இங் சட்டை காரனை ஈசியா பிடிச்சிடலாம்" ன்னு சொன்னேன். அநேகமாக அவருக்கு இரத்த அழுத்தம் ஏறியிருக்கனும். ராதா என் காதிலே மெதுவா சொன்னான்."ஆமாண்டா அவன் சட்டையிலே இங் அடிச்சிட்டு 'லாஸ்ட் டே ஈஸ் எ ஹேப்பிடே' ன்னு கத்துடா. இது என்ன நம்ம ஸ்கூலா. நானே அந்த டெரரிஸ்ட்ட எப்படி பிடிக்கிறதுன்னு மண்டைய பிச்சிகிட்டு இருக்கேன். வந்துட்டான் ஐடியா சொல்ல"ன்னு சொல்ல எனக்கு வெக்கமா போயிடுச்சு.அவனோட டெரரிஸ்ட் என்கிற வார்த்தை எல்லாம் அந்த கொடியில் காய போட்டிருக்கும் புடவையை திருடும் திருடனுக்கு கொஞ்சம் அதிகம் என நினைத்து கொண்டேன்.


ராத்திரி ஆச்சு. ராதா சூட்கேஸ் உறையில் தைத்த ராணுவ ஜீன்ஸ் எல்லாம் போட்டுகிட்டு தேவாரம் மாதிரி ஒரு கேப் எல்லாம் வச்சிகிட்டு படுபந்தாவா வந்துட்டான். என்கிட்ட வந்து "ஸ்டேஷன்ல எனக்கு மட்டும் ஒரு ஏகே 47 கொடுத்தா அவன பிச்சி புடுவேன் பிச்சி"ன்னு சொன்னப்ப எனக்கு பத்திகிட்டு வந்துச்சு. முதல்ல எல்லோரும் போய் வைத்தா கடையிலே டீகுடித்தோம். ராதா கையிலே மேப் மாதிரி வச்சிகிட்டு(பெரிய டார்ச் கூட வச்சிருந்தான்) டீ கடையிலேயே அதை பிரித்து வைத்து டார்ச்சை ஆட்டி ஆட்டிகிட்டு எங்களுக்கு விளக்க டீ குடிக்க வந்தவங்க எல்லாம் ஒரு மாதிரியா பாக்க எனக்கு அவமானமா இருந்துச்சு. நானாவது காளியாகுடி பொங்களுக்காக என்.சி.சி யிலே இருந்தேன். அவன் அதுல கூட சேரலை. என்னமா பந்தா விட்டான் தெரியுமா. இப்படியாக ஒரு பத்து நாள் இரவு முழுவதும் நல்லா பொழுது போச்சு. தனி தனி ஸ்பாட் கொடுக்கப்பட்ட பசங்க எல்லாம் கும்பல் கும்பலா சேர்ந்துகிட்டு இரவில் 4 முறை டீ குடிப்பதும், விடிகாலை பதனீர் குடிப்பதும் பின்னே பகல் முழுக்க தூங்குவதும் நல்லா தான் பொழுது போச்சு.


அதுக்குள்ளே ஊர் முழுக்க ஒரே பேச்சு. ராதா ஒரு நாள் தான் அந்த திருடனை பார்த்து விட்டதாகவும் அவன் ஸ்பிரிங் வைத்த ஷூ போட்டு இருப்பதாகவும் கீழே ஒரே அமுக்காக அமுக்கி டக்ன்னு மாடிக்கு தாவி விட்டதாகவும் அப்படியே ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி கண்மூடி திறப்பதுக்குள்ளாக ஓடி விட்டதாகவும் சொல்ல அந்த விஷயம் கடைசி கட்ட பொது மக்களுக்கு போய் சேரும் போது "அந்த திருடனுக்கு ரெண்டு காலும் இல்லியாம் சும்மா வேட்டி மட்டும் தொங்குதாம் காலே இல்லியாம்" என்கிற மாதியாக போய் சேர்ந்தது. ஆக மக்கள் அந்த திருடனை ஒரு பேய் ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டாங்க. திருடனை பார்த்ததாக சொன்ன ராதாவுக்கு ஏக கிராக்கி. எனக்கு அதிலே எல்லாம் ரொம்ப கடுப்பு.


ஆக அந்த பத்து நாட்களில் எனக்கு எந்த ஸ்பாட்டும் கொடுக்க படாததால் நான் மட்டும் எல்லா இடத்துக்கும் சைக்கிளில் போய் போய் எல்லா பசங்க கிட்டயும் பேசிகிட்டு வருவேன். ராதா டார்ச் லைட்டை தலைமாட்டில் வைத்து கொண்டு தேர்முட்டியில் தூக்கியபோது எவனோ டார்ச் லைட்டை லவட்டிகிட்டு போயிட்டான். அந்த பழியையும் ராதா அந்த திருடன் தலையிலேதான் போட்டான்.ஒரு அப்படியாக நான் ஒரு நாள் சின்ன மாரியம்மன் கோவில் பக்கம் ரோந்துக்கு போன போது.... இந்த இடத்தில் ஒன்னு சொல்லிகிறேன். எனக்கும் தெரு நாய்க்கும் அப்படி ஒரு ராசி. என்னை பார்த்தா சும்மா சாக கிடக்கும் நாய்க்கு கூட வீரம் வந்துடும். துரத்த ஆரம்பிச்சிடும். தனிகறியை விட எலும்பு ஜாஸ்தியா இருப்பதாலோ என்னவோ. சின்ன மாரியம்மன் கோவில் பக்கம் அப்போ இலுப்பை தோப்பு இருந்தது. எனக்கு உண்மையிலேயே திருடனுக்கு கால் இருக்காதோ அது பேயோ என்கிற பயம் லைட்டா வந்துச்சு. கும்மிருட்டு. தோப்பை தாண்டி வரும் போது பயம் அதிகமாக நான் பேமிலி பாட்டான காக்கா பாட்டை உரக்க பாடினேன். நானே சிதம்பரம் ஜெயராமன் மாதிரி என்னை நினைத்து கொண்டு கா...கா ன்னு பாட அது அங்கே ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்த நாயை அதிக பட்சமாக கஷ்ட்டப்படுத்தி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். குரைத்து கொண்டே துரத்த ஆரம்பிக்க நானும் என் பலம் கொண்ட மட்டும் சைக்கிளை மிதிக்க அதுவும் துரத்த நான் கழுத்தில் மாட்டியிர்ந்த விசிலை வேகமாக ஊதிக்கொண்டே ( இன்ஸ் சொல்லியிருந்தார். திருடனை பார்த்தவுடன் அடுத்த ஆளுக்கு சமிக்கை கொடுக்கும் விதமாக விசில் ஊத வேண்டும் என்று) சைக்கிளை மிதிக்க நாய் என் காலை கவ்வும் அளவு வந்துவிட நான் ரெண்டு காலையும் தூக்கி பாரில் வைத்து கொள்ள சைக்கிள் வேகம் குறைய தொடங்கியது. அப்போது நான் கிட்ட தட்ட தைக்கால் தெரு தாண்டி மெயின் ரோடு வந்துவிட்டேன். நாயும் நம்ம போலீஸ் ஸ்டேஷன் ஏட்டய்யா மாதிரி "இது என் ஏரியா இல்லை போடா போயிட்டு வா" என சொல்லி திரும்பி போய்விட்டது. எனக்கு முகம் முழுக்க வேர்வை. நான் அப்பவும் விசில் ஊதுவதை நிப்பாட்டவில்லை.

அதுக்குள்ளே விசில் சத்தம் கேட்டு கிட்ட தட்ட எல்லா ஸ்பாட் ஆளுங்களும் பிரசவ ஆஸ்பத்திரி எதிரே கூடி விட்டனர். நான் அங்கே போய் சேரும் போது நம்ம ராதா "டேய் நம்ம தொல்ஸ் திருடனை பார்த்துட்டாண்டா" என கூவ நான் "ஆம்"ன்னு சொல்வதா "இல்லை"ன்னு சொல்வதா என திண்டாடிய போது ராதா "டேய் அவன் ஸ்பிரிங் ஷூ போட்டு கிட்டு ஆறு அடி உயரமா தானே இருந்தான். நான் பார்த்ததும் அவன் தான். அவன் கையிலே என் டார்ச் லைட் வச்சிருந்தானா" என வரிசையாக கேட்டு கொண்டே அவனோட கற்பனை திருடனை என் கற்பனை திருடனுக்கு மேட்ச் பண்ணிட்டான். நானும் சரின்னு ஒத்துகிட்டேன்.


உடனே அத்தனை சைக்கிளும் சின்ன மாரியம்மன் கோவில் பக்கம் வேகமாக இல்லாத திருடனை நோக்கி போக நானும் கூடவே போனேன். ராதாவுக்கு இத்தனை நாள் இருந்த ஹீரோ பதவி டபார்ன்னு என்கிட்ட வந்துடுச்சு. உடனே நானும் திருடனின் அங்க அடையாளம் எல்லாம் மனசுகுள்ளே சொல்லி பார்த்துகிட்டேன். முகத்திலே ஒரு கருப்பு பரு. கழுத்திலே கைகுட்டையை சுத்தி இருக்கனும். வரி வரியா போட்ட டிஷர்ட் இப்படியாக டிபிகல் சினிமா திருடன் தான் மனசிலே வருது. நாங்க அங்க போய் சேரும் போது என்னை துரத்திய நாயும் அங்கே இருந்தது. "ஆகா இவன் பொல்லாத பயலா இருக்கானே, நாம துரத்தியதால இந்த அர்த்த ராத்திரியிலே நம்மை அடிக்க ஆட்களை அழைச்சுட்டு வந்துட்டானே"ன்னு நாய்க்கு பயம். நானும் இது தான் சந்தர்ப்பம் என நினைத்து கொண்டு "டேய் இந்த நாய் அனேகமா அந்த திருடன் நாயாத்தான் இருக்கனும்டா, நான் திருடனோடு சண்டை போடும் போது (அதுக்குள்ள நான் திருடனோடு பயங்கரமா சண்டை எல்லாம் போட்டதா பீலா விட்டு முடிச்சு இருந்தேன்) இந்த நாயும் இருந்துச்சுடா"ன்னு சொல்ல வேற என்ன நாய்க்கு தர்ம அடிதான்.. இந்த கலேபரத்திலே என் மோதிரம் எங்க போச்சுன்னே தெரியல. சரி எதுக்கு கவலை. அதை திருடன் போகும் போது உருவிகிட்டு போயிட்டதா சொல்லிக்கலாம்ன்னு விட்டுட்டேன். நம்ம திருடன் தான் பெரிய தியாகியாச்சே. பின்னே எல்லோரும் சேர்ந்து ஸ்டேஷனுக்கு போய் அந்த இல்லாத திருடனை பத்தி அங்க அடையாளம் சொல்லிட்டு வந்தோம்.


வீட்டுக்கு வந்த பின்னே என் வீர தீர பிரதாபங்களை கண், மூக்கு, காது(ஜிமிக்கி போட்ட காது), எல்லாம் வச்சு சொல்லிகிட்டு இருக்கும் போது என் சின்ன அக்கா "ஊக்கும் இவன் எங்க திருடனை பிடிக்க...எதுனா நாய் துரத்தி இருக்கும். ஓடி வந்திருப்பான்"ன்னு சொன்னாங்க. எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ!! எனக்கு பெண் பார்க்க போகும் போது கூட தங்கமணிகிட்ட போய் என் சின்ன அக்கா "இவன் திருடனை எல்லாம் பிடிச்சவன் தெரியுமா" என கேட்க எனக்கு மானமே போச்சு.


ஆனால் அந்த ஒரிஜினல் திருடனுக்கு அவனை வச்சு இப்படியெல்லாம் காமடி பண்ணியதால் பயங்கர கோவம். "இந்த நாதாறி பசங்க இருக்கும் இந்த ஏரியாவே வேண்டாம்டா சாமீ, ஒருத்தன் என்னடான்னா எனக்கு ஸ்பிரிங் ஷூ போட்டு விடறான். இன்னொருத்தன் வரிபனியன் போட்டு கருப்பு மச்சம் வைக்கிறான். எடுக்காத மோதிரம், டார்ச்லைட் எல்லாம் என் தலையிலேயே பழி விழுது. நான் வேற எங்கிட்டாவது போய் பொழச்சிகறேன்" என போய் விட்டான் போலயிருக்கு.

15 comments:

  1. ஆஹா ஆஹா!

    இதுதான் அவ்ளோ பிரச்சனைக்கும் மூலக்காரணமா????

    அண்ணன் அயலகம் வரும்போதாவது டேய் அதெல்லாம் பொய்ன்ன்னு போய் வேலையை பாருங்கடான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கலாம்ல!
    இப்ப எங்க காலம் வரைக்கும் இன்னும் நாங்க அந்த திருடனை பெரியகோவிலுக்கும் தைக்கால் தெருவுக்கும் இடைப்பட்ட பகுதியில தேடிக்கிட்டேஏஏஏஏஏஏ இருக்கோமே :(((

    ReplyDelete
  2. //நான் +2 முடித்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த நேரம் அது.//

    இந்த கதை மட்டும்தானா????????

    இன்னும் நிறைய கதைக்ள் இருக்குமே inbetween இந்த காத்திருந்த காலத்தில் :))))))

    ReplyDelete
  3. ஹ்ம்ம். கடைசீல திருடனைத் தப்ப விட்டுட்டீங்க.
    இப்ப உங்க மேல தான் சந்தேகம் வருது. மாமூல் வாங்கிட்டு தப்ப விட்டுட்டீங்களோன்னு

    ReplyDelete
  4. // payday advance said...

    Ive read this somewhere else.


    payday advance//


    தொல்ஸண்ணே.. நீங்க ரொம்ப நல்லவரு

    ReplyDelete
  5. "வழக்கம் போல" கதை சூப்பர்




    வெடிகுண்டு முருகேசன்

    ReplyDelete
  6. அந்த திருடன மாதிரி இன்னும் நாட்ல எக்கச்சக்க தியாகிங்க இருக்கறாங்க அபி அப்பா.ஆனா எங்க ஊர் திருடன் அதி பயங்கர வீரன். ஓர் மே மாசம் இதே மாதிரி திருட்ட தடுக்க போன டீம்ல இருந்த ஒருத்தர் வீட்டுக்குள்ளே பூந்து எல்லாத்தையும் (அதுவும் லைட்ட போட்டு வெச்சுக்கிட்டு) அழகா பொறுமையா திருடிக்கிட்டு(அவங்க வீட்டு ஆன்ட்டி,பசங்கல்லாம் ஊருக்கு போயிருந்தாங்க), அங்க இருந்த சாப்பாட்டையும் சாப்டுட்டு, வெளியில வரும்போது, ரெண்டாவது டீம் ஆட்கள் அங்க வர, இவரு ஜாலியா அவங்களுக்கு டாட்டா காட்டிட்டு போயிட்டார். அவங்களும் இவரு அப்போத்தான் நைட் ரௌண்ட்சுக்கு போறாருன்னுட்டு டாட்டா காமிச்சிட்டாங்க. அப்புறம் விஷயத்தை கேள்விப்பட்டு எங்க ஊர் சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் அதி பயங்கரமா அசடு வழிஞ்சத இப்போ நெனைச்சாலும் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கும்

    ReplyDelete
  7. YES BROTHER, THE SAME WAS HAPPEN IN OUR VILLAGE BEFORE 5 YEARS AGO.

    R U REMEMBER ME?

    HOW IS ABI?

    I WANT TO MEET U, BUT NOT HERE. I WANT TO MEET U IN OUR GREAT CITY"MAYAVARAM"....

    ReplyDelete
  8. நல்ல காமெடியாவும், சுவாரஸ்யமாவும் இருந்தது நீங்க திருடனை பிடிச்ச்(!!!!) கதை :))

    ReplyDelete
  9. \\எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ!!// அதெல்லாம் நாங்க சரியா கண்டுபிடிச்சிடுவோம்.. உங்க க்கா சொன்னதுமே தங்கமணியும் கண்டுபிடிச்சிருபாங்க..அதனாலேயே ஓகே சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  10. அபிஅப்பா, மலரும் நினைவுகளைக் கிளப்பி விட்டுட்டீங்க.. நாங்களும் இரட்டைத்தெருவில் டார்ச் கழுத்தில் மப்ளர் கையில் டார்ச் சகிதம் சுத்திய நினைவுகள் வருது..

    அது ஒரு ஜாலிதான் இல்ல..

    மகாதானத் தெருவில் இந்த மாதிரி தான் ஒருதடவை தென்னை மரத்தில் தேங்காய் திருடற் திருடனைப் பிடிக்கிறேன் பேர்வழின்னு.. நிஜமாவே பிடிச்சிட்டாங்க..

    அவன் தென்னை மரத்துல உச்சியில இருக்க.. கீழே ஒரே கூட்டம்.. மக்கள் கூட்டம் கன்னா பின்னான்னு கத்த.. அவன் பாவம் ரொம்ப பயந்து போயிட்டான்... ரொம்ப நேரம் மரத்துல இருக்க முடியாம .. கை நழுவ.. அப்படியே தென்னை மரத்துலேருந்து கீழே விழுந்துட்டான்..

    விழுந்தவன் விழுந்த இடம் செப்டிக் டாங்க். சிமிண்டு ப்ளாக்கில் அடிபட்டு.. தண்டுவடம் பாதித்து.. ஆளு ஸ்பாட் காலி..

    அப்புறம் இவங்க எல்லாம்.. திருடன் குடும்பத்துக்கு நிதி வசூலித்துக் கொடுத்து அந்த பாவத்தைக் கழுவினாங்க..

    என்னாத்த சொல்ல

    ReplyDelete
  11. //பின்னே அவரே மனசு இறங்கி திருடனை பிடித்த பிறகு அவன் கையை எல்லாம் நல்லா கட்டி போட்ட பிறகு கூட்டத்தை விலக்கி கொண்டு போய் ரெண்டு தர்ம அடி கொடுக்கும் மிகப்பெரிய வேலையை கொடுத்தார்.//

    ரொம்பக் கஷ்டமான வேலைதான், போங்க!! :P

    //நானாவது காளியாகுடி பொங்களுக்காக என்.சி.சி யிலே இருந்தேன்.//

    "பொங்களுக்காக"????? அபி அப்பா, எப்போ ஒழுங்கா தமிழ் எழுதுவீங்க?? என்னவோ போங்க, இன்னும் நிறைய இருக்கா? கைவலிக்குதுனு எடுத்துப் போடமுடியலை! அபி பாப்பா கிட்டேயாவது கொடுத்து எழுதச் சொல்லி இருக்கலாமோ??? :P :P :P

    //எனக்கு பெண் பார்க்க போகும் போது கூட தங்கமணிகிட்ட போய் என் சின்ன அக்கா "இவன் திருடனை எல்லாம் பிடிச்சவன் தெரியுமா" என கேட்க எனக்கு மானமே போச்சு.//

    ம்ம்ம்ம்??? அவங்க அதை நிஜம்னு நம்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களோ?????? :)))))))))

    ReplyDelete
  12. அது சரி, என்ன இன்னும் பதில் சொல்ல ஆரம்பிக்கலை, கரெக்டா என்னோட பின்னூட்டத்திற்கு முன்னால் வரைக்கும் சொல்லிட்டு, அப்புறமா அதுக்கு அடுத்தாப்பலே இருந்து ஆரம்பிங்க, பார்க்கலாம்! :P

    ReplyDelete
  13. ஆஹா..!திருடனைத் துரத்த இது நல்ல வழியாயிருக்கே!!!

    ReplyDelete
  14. //ஆயில்யன் said...

    //நான் +2 முடித்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த நேரம் அது.//

    இந்த கதை மட்டும்தானா????????

    இன்னும் நிறைய கதைக்ள் இருக்குமே inbetween இந்த காத்திருந்த காலத்தில் ))))//


    ரிப்பீட்டேய்...

    ReplyDelete
  15. thirudana pidikkadhavungulukku kalyaanam aagadha , enna kodumai saar idhu

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))