பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 29, 2009

உடன்பிறப்புகளுக்கு தேர்தல் களம் காண உற்சாக பாடம்!!!பாகம் #1

என் அன்பு உடன்பிறப்புகளே!

இதோ நம் தேர்தல் போரின் உச்ச கட்டத்தில் நிற்கின்றோம். நமது திராவிட முன்னேற்ற கழகம் 17.09.1949 அன்று சென்னை ராபின்சன் பூங்காவில் தோற்றுவித்த நாளில் பிறந்தவர்களுக்கு இன்று வயது 59 வயது 7 மாதம் 12 நாட்கள் ஆகின்றது. அந்த 17.09.1949 குறைந்த பட்சம் 16 வயது ஆனவர்களுக்கு இப்போது 76 வயதாகின்றது. நம் தலைவருக்கோ இப்போது 86 ஆகின்றது. பேராசிரியருக்கோ 87 ஆகின்றது. சிங்கங்கள் இப்போதும் தேர்தல் களத்திலே கர்ஜித்து கொண்டிருக்கின்றன.

என் இளம் தம்பிமார்களே நான் இப்போது உங்களுக்கு சொல்லப்போவது நம் திமுக வின் ஆரம்பகால வரலாறு. அதிலும் குறிப்பாக நாம் தேர்தலில் முதன் முதலாக ஈடுபட்டது முதலான வரலாறு. நம் திமுகவை தோற்றுவித்த தலைவர்கள் பட்ட சிரமங்கள், சிறை வாழ்க்கை எல்லாம் சொல்ல போகின்றேன். இது இந்த தேர்தல் போரின் உச்ச கட்டத்தில் இருக்கும் உனக்கு நான் கொடுக்கும் ஒரு ஊக்க மருந்தாகவே இருக்கும்.

இதோ 17.09.1949 ல் குடந்தை கே.கே. நீலமேகம் அய்யா தலைமையில் காலை கூடிய கூட்டத்தில் அறிஞர் அண்ணா பேசவில்லை. மேடையில் உட்காந்து இருக்கின்றார். அவரின் அறிக்கை மாத்திரம் படிக்கப்படுகின்றது. அதாவது திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம் என ஏன் ஆரம்பிக்க வேண்டும் என அண்ணாவின் நீண்ட விளக்கம்.கழகத்தின் அமைப்பு கழக உறுப்பினர்கள் கே கே நீலமேகம் அய்யா, கே வி சாமி, எஸ். முத்து, ஜி. பராங்குசம், கே. கோவிந்தசாமி, ஏ. சித்தையன், என்.வி.நடராசன் (மத்திய அமைச்சராக இருந்த போது மறைந்த என் வி என் சோமு அவர்களின் தந்தை) ஆகியோர்.

அன்று மாலையே சென்னை ராபின்சன் பூங்காவில் பொது கூட்டம். அங்கு தான் அந்த மாபெரும் வரலாற்று சிறப்பு மிக்க துவக்கம் பெத்தாம்பாலையம் பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் முழங்கியவர்கள் நாவலர், கலைஞர், ஈ.வெ.கி சம்பத், என்.வி.நடராசன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, கே கே நீலமேகம் அய்யா ஆகியோர். பின்னர் அண்ணா பேசும் போது மழை. மழை என்றால் கனமழை. கூட்டம் எந்த பக்கமும் சிதறவில்லை. அப்போது ஆரம்பித்தது திமுகவின் கட்டுகோப்பு. அண்ணா பொது செயலர். நாவலர், கலைஞர், சம்பத், என்.வி என், கே.ஏ.மதியழகன், காஞ்சி மணிமொழியார் ஆசைத்தம்பி உட்பட 110 பேர் பொதுக்குழு உறுப்பினர். அந்த பொதுக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளேயே இருந்து நிதிக்குழு, பிரச்சாரகுழு எல்லாம் ஏற்படுத்தப்பட்டது. இது தான் திமுக வின் துவக்கம்.49ல் ஆரம்பிக்கப்பட்ட நம் இயக்கம் தனக்கென ஒரு அலுவலகம் அமைத்து கொண்டது 2.12. 1951ல். இராயபுரம் சூரியநாராயண செட்டி தெருவில் 30000 ரூபாய்க்கு வாக்கப்பட்டு அண்ணா தலைமையில் திறக்கப்பட்டது.

இப்படிப்பட்ட வளுமையான அடிக்கட்டமைப்பு கொண்ட நம் இயக்கம் ஆரம்பித்தவுடன் சந்தித்த முதல் தேர்தல் 1952 மார்ச் மாதம். ஆனால் கழகம் நேரிடையாக இதில் பங்கு பெறவில்லை. தன் பலம் என்ன என்று தனக்கு தெரிய வேண்டுமே. அதனால் தன் கொள்கைகளுக்கு ஒத்து கொண்ட 45 வேட்பாளர்களை ஆதரித்தது. அதில் 40 பேர் அப்போது காங்கிரசை எதிர்த்து வெற்றி கண்டனர். அதன் காரணமாக காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. சும்மா இருப்பாரா ராஜாஜி? 40 பேரையும் நல்ல விலைக்கு வாங்கி அவரே மேல்சபை உறுப்பினராகி முதல்வரானார். இந்த வெற்றி பெற்ற 40 பேரில் ஒருவர் பக்தவத்சலத்தை தோற்கடித்தார். அதனால் அவரால் அமைச்சராக முடியவில்லை. அதன் காரணமாகவே அவர் சாகும் வரை திமுக எதிர்ப்பாளராகவே வாழந்து மறைந்தார். அப்போதே திமுகழகம் முடிவெடுத்துவிட்டது எனலாம் தான் அடுத்த தேர்தலில் நேரிடையாக போட்டியிடுவது என. ஏனனில் அந்த நாற்பது பேரின் நயவஞ்சகத்தால்.

பின்னர் இடைப்பட்ட காலத்தில் தான் எத்தனை எத்தனை போராட்டங்கள் போராட்டங்கள். நேரு தமிழர்களை முட்டாள்கள் என திட்டியதை எதிர்த்து, ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் எதிர்த்து, டால்மியாபுரம் என்னும் பெயரை கல்லக்குடி என மாற்றக்கோரி என ஏராளமான போராட்டங்கள். சிறைகள்.

நடுநடுவே நடந்த போராட்டங்கள் பற்றி விரிவாக தனி பதிவு பின்னர் எழுதுகின்றேன். அது போல திமுகவின் மாநிலமாநாடுகள் பற்றியும் தனியாக எழுதுகின்றேன். உடன்பிறப்பே நீ இப்போது இருப்பது தேர்தல் களம். அதனால் கழகம் சந்தித்த தேர்தல்கள் பற்றி இப்போது பார்ப்போம்.

1957 நம் வெற்றி கணக்கை துவக்கிய வருடம். மறக்க முடியுமா? இரண்டாவது மாநில மாநாட்டில் திமுக தேர்தலில் நிற்க வேண்டுமா வேண்டாமா என அண்ணா தன்னிச்சையாக முடிவெடுக்காமல் கருப்பு பெட்டி ஒன்றும் சிவப்பு பெட்டி ஒன்றும் வைத்து ஓட்டு எடுப்பு நடத்தப்பட்டது. மிகுந்த மழையிலும் 60000 ஓட்டுகள் பதிவாகின. அதில் 57000 பேர் கலந்து கொள்ள வேண்டும் என வாக்களித்தனர். ஆக முடிவாகியது தேர்தலில் நிற்பது என!

மாநாடு முடித்து ஊருக்கு திரும்பிய நம் தோழர்கள் உடனடியாக களப்பணியில் ஈடுபட்டனர். அது கண்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு வியப்பு. சிரிப்பு. ஏனனில் அப்போது தேர்தல் தேதிகூட அறிவிக்கப்படவில்லை. சுவர் விளம்பரம் எல்லாம் செய்யப்பட்டது சின்னத்தின் இடமும் வேட்பாளர் பெயரும் மட்டுமே மீதி இருந்தன. அதற்குள் பூத் கமிட்டி கூட அமைக்கப்பட்டது. அதற்கு முன்பாக பூத் கமிட்டி என்பதே காங்கிரஸ் அமைத்தது கிடையாது. கலைஞர் தலைமையில் அதற்கான விரிவான பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது மாநாட்டில். தேதி அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சட்டமன்றத்துக்கு 205 தொகுதிகளில், பாராளுமன்றத்துக்கு 41 தொகுதியிலும் போட்டியிட்டது.

அதே நேரம் திமுக 124 சட்டமன்ற தொகுதியிலும் 11 பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டது. மற்ற சில தொகுதியில் மற்ற சில கட்சிகளுக்கு ஆதரவு. அண்ணா காஞ்சியில், கலைஞர் குளித்தலை, பேராசிரியர் எழும்பூர், நாவலர் சேலத்தில், இப்படியாக நின்றனர். காமராஜரின் பிரச்சாரம் பெரும் சூராவளியாக இருந்தது. பணபலம் காங்கிரஸ் வசம் அதிகம் இருந்தது. ஆனாலும் நன் உடன்பிறப்புகள் அண்ணாவின் அடுக்கு மொழி வசனங்கள், கலைஞரின் ஆர்பரிக்கும் மேடை முழக்கம்(அப்போது கலைஞர் பேச்சில் அனல் தெரிக்கும் என என் அப்பா பலமுறை சொல்லி கேட்டிருக்கின்றேன்.)

வீட்டுக்கு வீடு சென்று வாக்காளர்களிடம் நேரிடையாக வாக்கு கேட்கப்பட்டது. அதற்கு முன்பாக அப்படி இல்லை. பண்ணை ஆள் வந்து "அய்யாவுக்கு வந்து ஓட்டு போட்டுட்டு அப்படியே பண்ணைக்கு வந்து சாப்பிட்டு போ" என்றே வாக்கு கேட்கப்பட்ட மக்கள் தன்னை மதித்து வந்து வாக்கு கேட்கும் வேட்பாளரை ஆச்சர்யமாக பார்த்தனர்.

பெரியாரோ அப்போதும் திமுக மீது பெரும் கோபம் கொண்டிருந்தார். காமராஜருக்கு கடுமையாக பிரச்சாரம் செய்தார். கலைஞரோ குளித்தலையில் வாக்கு கேட்பதை விட மற்ற தொகுதிகளுக்கு சென்று பொதுக்கூட்டம் நடத்தி கொண்டிருந்தார். நாவலர் தன் சேலம் தொகுதியை மறந்து விட்டு மற்ற தொகுதிகளுக்கு உழைத்து கொண்டிருந்தார். அண்ணாவோ 124 தொகுதியிலும் தானே நிற்பதாக நினைத்து உழைத்தார்.

தேர்தல் வந்தது. நம் கழக கண்மணிகள் ஓடி ஓடி ஒவ்வொறு வாக்காளர்களையும் சாவடிக்கு கொண்டு வந்து ஓட்டு போட வைத்தனர்.

தேர்தல் முடிந்தது. இந்தியாவே எதிர்பார்த்த முடிவு அறிவிக்கப்பட்டது. நம் கழக வீரர்கள் முதன் முதலாக சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்தனர். எத்தனை பேர் 15 பேர். காஞ்சியில் அண்ணா, குளித்தலையில் இதுவரை தோல்வியே காணா சிங்கம் கலைஞர், பேராசிரியர், ப.உ.சண்முகம் திருவண்ணாமலை, ஏ.வி.பி.ஆசைதம்பி, சத்தியவாணி முத்து, களம்பூர் அண்ணாமலை, எஸ்.சந்தானம், சி.நடராசன், இருசப்பன், ஆனந்தன், ஏ.கோவிந்தசாமி, சாரதி, எம்.பி.சுப்ரமணியம், செல்வராஜ் ஆகியோர் அந்த கழக வீரர்கள்.நாவலர் தன் முதல் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார். பதிவான வாக்குகளில் காங்கிரஸ் 42 சதம் வாக்குகள் பெற்றிருந்தது. ஆனால் மற்ற கட்சிகள் பெற்ற வாக்குகள் 58 சதம்.

அப்போதே அண்ணாவின் மனக்கணக்கு வேறு விதமாக சிந்திக்க தொடங்கியது. அப்போது அவர் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் "இன்னும் 10 வருடத்தில் 1967ல் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடிக்கும்"

காங்கிரஸ் 151 இடம் பெற்று முரட்டு தனமாக சட்ட சபையில் நுழைந்தது. அதை தவிர முதன் முதலாக பாராளுமன்றத்துக்கு ஈ வெ கி சம்பத் அவர்களும், தருமலிங்கம் என்பவரும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

காமராஜர் முதல்வர். இந்த முறை பக்தவத்சலம் தத்தி குத்தி வெற்றி பெற்றிருந்தார். அதனால் அவரும் அமைச்சரவையில். சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன், மாணிக்கவேல் நாயக்கர், கக்கன், ராமையா, லூர்து அம்மாள் கடையம் மஜீத் ஆகியோர் அமைச்சர்கள். கிருஷ்ணாராவ் சபாநாயகர்,

உடன்பிறப்பே இப்படியாக நம் பங்கெடுத்த முதல் பொது தேர்தல் நம்மை வெற்றி கணக்கை தொடங்க வைத்தது. நாளை அடுத்து நடந்த சென்னை மாநகராட்சி வெற்றியையும் அடுத்து 1962ம் ஆண்டின் பொது தேர்தலையும் பற்றி சொல்கிறேன். ஒரு போருக்கு போகும் முன் மன்னனை உற்சாகப்படுத்தும் விதமாக அவன் முன்பு பெற்ற வெற்றிபரணி பாடும் புலவர்களை போல உனக்கு நான் நாம் பெற்ற வெற்றிகளை பாடிக்கொண்டு இருக்கின்றேன்.

உடன்பிறப்பே! நாளை முதல் இன்னும் இருப்பது 14 நாட்கள். நம் பாரத போர் நடைபெற்றது போல. உனக்கு நான் இப்போது சொல்லி கொண்டிருப்பது உனக்கான உபதேசம் இல்ல. உனக்கான உற்சாகம்! நம்மை சுற்றியும் சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருக்கின்றது.கிழித்து விட்டு வெளியே வா! உன் கவனத்தை திசை திருப்பும் முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது. உன் கவனம் 40க்கு 40 என்பதில் இருக்கட்டும்.

அன்பு உடன்பிறப்பு

அபிஅப்பா

17 comments:

  1. புதிய தகவல்கள்..
    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..

    ReplyDelete
  2. //அமைச்சரவையில். சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன், மாணிக்கவேல் நாயக்கர், கக்கன், ராமையா, லூர்து அம்மாள் ஆகியோர் அமைச்சர்கள். கிருஷ்ணாராவ் சபாநாயகர்,
    //

    கடையநல்லூர்.மஜீத் பெயர் விடுபட்டுள்ளதென நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. வாங்க லோகு! வருகைக்கு நன்றி!

    வாங்க அப்து!

    மன்னிக்கவும். எனக்கு பலமுறை யோசிச்சும் கடையம் மஜீத் பெயர் நியாபகம் வரலை. எல்லாம் நியாபகத்தில் இருந்து எழுதியது தான். சில தேதிகள் மாத்திரம் ஊருக்கு போன் செஞ்சு கேட்டுகிட்டேன். வேற தவறு இருந்தாலும் சுட்டி காட்டவும்!

    ReplyDelete
  4. கிளாஸுக்கெல்லாம் வரமுடியாது போங்க....!

    எம்புட்டுதான் படிக்கிறதாம்...!

    ReplyDelete
  5. கே.ஏ.மதியழகனையும் விட்டுட்டியள், அவர் தம்பியை(கே.ஏ.கே) மட்டும் சேர்த்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. ஆயில்யா! நாம் எல்லோரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் இதல்லாம். கண்டிப்பா படிங்கப்பா!

    ReplyDelete
  7. \\ ஜோதிபாரதி said...
    கே.ஏ.மதியழகனையும் விட்டுட்டியள், அவர் தம்பியை(கே.ஏ.கே) மட்டும் சேர்த்திருக்கிறீர்கள்
    \\

    மன்னிக்கவும் ஜோதி! நான் அதை டைப் செய்யும் போது அவர் எங்க தளபதியை முதன் முதலாக தளபதி ஆயிரம்விளக்கில் நின்ற போது அவருடைய வெற்றி வாய்ப்பை தட்டி சென்றது நியாபகம் வந்தது. அந்த நியாபகத்திலேயே அண்ணாத்த பெயருக்கு பதிலா தம்பி பேரை டைப் செஞ்சுட்டேன். இப்ப சரி பண்ணிட்டேன்.

    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  8. //எல்லாம் நியாபகத்தில் இருந்து எழுதியது தான்

    //

    அட என்னண்ணே இதுக்கெல்லாம் போய் மன்னிப்பு கேட்டுக்கிட்டு.வயசானா ஞாபக மறதி வரத்தானே செய்யும்! நீங்க என்ன தலைவரா...வயதானாலும் ஞாபக சக்தி குறையாம இருக்க??

    ReplyDelete
  9. நல்ல முயற்சி அபி அப்பா...தொடர்ந்து எழுதுங்கள்..;)

    ReplyDelete
  10. கலைஞருக்கு இப்ப வயசு 84 நாலுதான் (ஜூன் 3, 1924ல் பிறந்தாருன்னு ஞாபகம்). கொஞ்சம் சரி பாருங்க அபி அப்பா.

    ReplyDelete
  11. I have lot of chances to speak with all sector peoples of all 40 constituencies. But I dont find even a single percent of impact about Sri Lankan issues. The peoples of all the parties are more concern about their personal issues or the local area issues which they belonging to. Especially the lower sector peoples are just against the Lankan issues. They are asking why Karunanidhi make this issue a big one by the way of fasting? So the peoples actually come for booths are not atall interested in Sri Lankan issues.

    ReplyDelete
  12. அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  13. நல்ல தகவல் தொகுப்பு. தொடர்ந்து எழுதவும். ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  14. இன்னொரு உடன்பிறப்பும் இருப்பதால் என் பெயரை எப்படி மாற்றலாம் என்று நண்பர் உடன்பிறப்பும் , மற்ற உடன்பிறப்புக்களும் ஆலோசனை சொல்லவும்.

    நன்றி.

    ReplyDelete
  15. //அட என்னண்ணே இதுக்கெல்லாம் போய் மன்னிப்பு கேட்டுக்கிட்டு.வயசானா ஞாபக மறதி வரத்தானே செய்யும்! நீங்க என்ன தலைவரா...வயதானாலும் ஞாபக சக்தி குறையாம இருக்க??//

    //அபி அப்பா...தொடர்ந்து எழுதுங்கள்..;)//

    //நல்ல தகவல் தொகுப்பு. தொடர்ந்து எழுதவும். ஆவலாக உள்ளேன்.//


    ;-)

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))