பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 23, 2012

இதை எல்லாம் "ஜொள்ளி"த்தான் புரிய வைக்கனும்!!!

முன்குறிப்பு:


எனக்கு இன்னிக்கு என்னவோ ரவாதோசையை தேடித்தேடி வருது மனசு. ஏற்கனவே நான் ரவாதோசைக்காக நாத்திகனா ஆக இருந்த கதை கூட சொல்லியிருக்கேன். அதை படிக்க இங்க அமுக்குங்க. சமீபத்திலே மாயவரத்தான் ஒரு பதிவு போட அதிலே நான் போட்ட ஒரு பின்னூட்டமே இந்த பதிவு. பின்ன பத்து நாள் முன்ன கூட நண்பர் பெனாத்தலார் ரவாதோசையை ரொம்பவும் சிலாகிக்க இந்த பதிவை வார்ப்பதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்:-))


*************


இந்த ரவா தோசை இருக்கே ரவா தோசை, இதை பொதுவா வீட்டில் வார்ப்பது மிகவும் அரிது. ஹோட்டலில் தான் கிடைக்கும். இப்போது எல்லாம் ரவாதோசை மிக்ஸ் கிடைக்கின்றது எனினும் அப்போதெல்லாம் 80 களில் அதல்லாம் கிடையாது. ரவா தோசை கிடைக்கும் கடைகளில் சிலது மாத்திரம் ஸ்பெஷல். அதில் ஒன்று தான் மாயவரத்தில் இருக்கும் மயூராலாட்ஜ் ஹோட்டல். இரண்டு கடைகள். அதிலே ஒன்று ரயில்வே ஜங்ஷனில் இருந்து வெளியே வந்தவுடன் இருக்கும் மற்றும் ஒன்று மாயவரம் கடைத்தெருவில் ஏ ஆர் சி ஜுவல்லரிகள் எதிரே ராமூர்த்தி அய்யர் இரும்பு கடைக்கு பக்கத்தில் இருக்கும். இரண்டுமே பிரமாதம் தான் ரவாதோசைக்கு. செங்கோட்டை பாசஞ்சரோ, போட்மெயிலோ மாயவரத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமா நிற்குதே என்ன காரணம் என கேட்டா மயூரா ரவா தான் காரணம். ரயிலை நிப்பாட்டி விட்டு ஓடி வந்து பார்சல் வாங்கி போகும் இஞ்சின் டிரைவர்களும் டி டிக்களும் அனேகம் பேர். அத்தனை ஒரு பேர் அந்த ரவாதோசைக்கு.

ரவாதேசைக்கு உலகிலேயே ஒரு சிறப்பு என்னான்னா, மாவு தோசை மாதிரி ஒரே நேரத்தில் கரைத்து பக்குவமா வைக்க முடியாது. மாவு தோசை முதல் தோசை நல்லா இருந்துச்சுன்னா கடைசி தோசை வரை நல்லா இருக்கும். முதல் தோசை என்ன ருசியோ அதே தான் கடைசி தோசை வரைக்கும். ஆனால் இந்த ரவா தோசை இருக்கே அது ஒரு ஒரு நான்கு அல்லது ஐந்து பேருக்கும் அதாவது அப்போது டேபிளில் இருக்கும் ஆர்டர் எத்தனையோ அத்தனைக்கு உண்டான மாவு மாத்திரம் அவ்வப்போது கரைக்கப்படும். அதனால் சாதா மாவு தோசை போல முதலில் கரைக்கும் போது மட்டும் கேர்புல்லா இருந்துட்டு பின்னே மாஸ்டர் பார்துப்பாருன்னு விட முடியாது. ஒரே நேரத்தில் முதல் டேபிளில் சாப்பிடும் ரவாதோசைக்கும் கடைசி டேபிளில் சாப்பிட்டு கொண்டிருக்கும் தோசைக்குமே சுவை மாறித்தொலையும் அபாயம் உண்டு.

ஆனால் மயூரா ரவா தோசை அப்படி இல்லை. ஒரே டேஸ்ட் அன்றைக்கு முழுவதும் இருக்கும். இது மயூரா ரவாதோசையின் சிறப்பு. ரவா தோசை சிலருக்கு முறுகலா பிடிக்கும், சிலருக்கு பதமா பிடிக்கும். ஆனால் என்னைப்போல வித்யாசமான சிலருக்கு ரெண்டு விதமாகவும் பிடித்து தொலைக்கும். அதனால் மயூராவில் எனைப்போல கிறுக்கன்களுக்கு என பிரத்யோக பார்முலா உண்டு. தோசையை வார்த்த பின்னே தனியே கொஞ்சம் மாவெடுத்து நட்ட நடுவே அதன் மேல் ஊற்ற வேண்டும். அந்த இடம் பதமாகவும் ஓரத்தில் முறுகலாகவும் இருக்கும்.

அதிலேயும் ஒரு குழப்பம். ரவா தோசையை ரவுண்டாக வார்க்க முடியாது. இந்தியா மேப் போல வரும். இலங்கை போல வரும், அவ்வளவு ஏன், எண்பதுகளில் அமரிக்க விசாவுக்கு அப்ளை செஞ்சுட்டு கால் கடுக்க நின்று அது ரிஜக்ட் ஆன விரக்தியில் செங்கோட்டை பாசஞ்சரில் வரும் நபர்களுக்கு அமரிக்கா மேப் போலவும் வரும். எம்பசியில் கிடைக்காத அமரிக்கா எங்கூர்ல கிடைக்கும். அதிலே எங்கே "நடு செண்டர்" பார்த்து மொத்தமாக்குவது? அதையும் செய்வாரு அந்த மாஸ்டர்:-))

அதிலே சிலருக்கு நெய் ஊற்றினால் பிடிக்கும். ஆனால் மிதமிஞ்சி இருக்கவும் கூடாது. திகட்டி விடும் அபாயம் உண்டு. அதையும் பதமா ஊற்ற வேண்டும். வார்த்து முடித்து அதற்குண்டான நேரத்தில் அதை புரட்டி போட்டு தோசை திருப்பியால் அதை பாசமுடன் வருடிக்கொடுத்து தோசைக்கல் மேலேயே அதை குடும்பக்கட்டுப்பாடு சின்னமாக்கி அதை வாழையிலையில் வைத்து அந்த வாழையிலையை ஒரு எவர்சில்வர் தட்டில் வைத்து நம் டேபிள்க்கு கொண்டு வந்து ஒரு சுத்து சுத்திவிட்டு சர்வர் நம்மை பெருமையாக பார்க்கும் போது நமக்கு எச்சில் ஊறி தாவங்கட்டை வலிக்கும்.

அதன் ஜோடியாக சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் வாளியை தூக்கி வந்து டேபிளில் வைக்கும் போது அந்த இந்தியாவுக்கோ, அமரிக்காவுக்கோ எல்லைப்பிரச்சனை எதும் இல்லாதபடி முறுகல் எல்லாம் பிய்த்து விழுங்கி இருப்போம்.

"அது என்ன அந்த சாம்பாரில் சின்ன வெங்காயத்தை முதலில் வேக வைத்து போட்டீங்களா சார், பார்க்கும் போது முழுசா இருக்கு தொட்டால் கரைந்து போகுது" என சர்வரை கேட்கும் போது அவர் முகம் வெட்கத்தால் சிவக்கும். ரவாதோசையின் சீரகமும், கருவேப்பில்லையும் என்னவோ ஒத்துமையான புருஷன் பொண்டாட்டி மாதிரி அத்தனை ஒரு ஒட்டுதல். கூடவே சின்ன வெங்காய சாம்பாரும் பக்குவமா இருந்திட்டா ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் தான்.

கூட வரும் கெட்டி சட்னி (தேங்காய் சட்னி)யும் , தக்காளி கார சட்னியும் சரியான பக்கவாத்தியம்... இல்லை இல்லை பக்கா வாத்தியம் போங்க... சார் சிலதை சொல்லி புரியவைக்கலாம். ஆனால் மயூரா ரவாவை "ஜொள்ளி"த் தான் புரிய வைக்க வேண்டும்!

13 comments:

  1. ஆஹா,ஒஹோ,பேஷ்,பேஷ் சாப்பிட்ட திருப்தி கெடச்சாச்சு.

    ReplyDelete
  2. நல்லா ஜொ(ள்)ன்னிங்கண்ணே..!! :)

    ReplyDelete
  3. ennakkum rompa pidikkum. trichyil ulla trichy caffe ..supera irukkum

    ReplyDelete
  4. ஒரு தோசை பார்ஸேல்:))

    ReplyDelete
  5. Namma pogave Illai, Mayurakku Ravadosai saapida, Shatapthi la Mayiladuthuraikku oru Ticketttt

    ReplyDelete
  6. Yov keyboard nanayuthu.

    ReplyDelete
  7. Ore Jolluthan sir padichitu(Mika Ruchyana Pathivu).....Me the first....
    Sundar..sharjah

    ReplyDelete
  8. எனக்குப் பிடித்த ரவா ஆனியன் தோசை பற்றி சொல்லப்படாததால் இந்த இடுகை குறையுடையதாகி விட்டது.

    ReplyDelete
  9. ருசித்த்த்த்த்துப் படித்தேன், மறுபடியும்.

    ReplyDelete
    Replies
    1. மாயவரம் பட்டமங்கள கடைத்தெருவில் உள்ள மயூராலாட்ஜ் கிருஸன மூர்த்தி அய்யர் கடையில் நான் சாப்பிட்ட ரவா தோசைகள் அதிகம் .அது எங்கள் கடைக்கு(SEASONS) அருகில் உள்ளது. இப்பொழுது காளியாகுடி ஹோட்டலையும் ஜங்ஷன் மயூராலாட்ஜ் ஹோட்டல் உரிமையாளர் எடுத்து நடத்துகின்றார்
      மறக்க முடியாத இளைய கால வாழ்கையை நினைவுக்கு கொண்டுவந்த ரவாதோசை பற்றி எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துகள் . சந்திக்கும்போது காளியாகுடி ஹல்வாவும் மயூராலாட்ஜ் ஹோட்டல் ரவா தோசையும் வாங்கி கொடுக்க ஆசை!

      Delete
  10. இம்ம்ம் பசிய கலப்பிடிங்க... ரவ தோசைக்கு நன் எங்கே போறது.. அமெரிக்காவிலே எல்லா கடையிலேயும் சாப்ட்டச்சு, ஒன்னு சரி இல்லை.

    பெங்களூர் வில்சன் கார்டன் ஜனதா ஹோட்டெல சூப்பரா இறுக்கும், அப்போரும் கோவைலே அன்னபுர்ணா.

    சரி அடுத்து இந்திய வரவைக்கும் நாக்கே கட்டுபடுத்த வேண்டியதுதான்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்! (வலையோசையில் அபி அப்பா.)

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))