உ
28/05/07
கிடேசன் பார்க்
துபாய்
.
அன்பு குரங்கு ராதா,
.
இங்கு நான் மிக்க நலம். நீ எப்படி இருக்கிறாய். என்னதான் போன் ,நெட்டுன்னு எது வந்தாலும் கடிதம் எழுதும் பழக்கம் தனி சுகம் என நீதானே சொல்வாய்! இப்போ உனக்கு என்ன ஆச்சு? கடிதம் போடுவதை ஏன் நிறுத்தி விட்டாய். போனில் ஒருமுறை கலாய்ச்சதால நீ போனும் செய்வதில்லை!
.
உன் நினைவுகள் எனக்கு எப்பவுமே உண்டு ராதா! நாம் 8ம் வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் பாய்ஸ் டாய்லெட்டில் "சாந்தி ஐ லவ் யூ"ன்னு நான் எழுதியபோது என்னை நீ கையும் சாக்பீசாகவும் பிடித்து நருக்குன்னு ஒரு கேள்வி கேட்டு என் அறிவு கண்ணை திறந்தது மறந்து போகுமா?(நாதாறி, பாய்ஸ் டாய்லெட்டுல எழுதினா சாந்தி வந்து படிப்பாளா?), பின் உன் அறிவுரை படி நான் மிகுந்த சிரமத்துக்கு பின் ஒரு ஞாயிறு சென்று கேர்ல்ஸ் டாய்லெட்டில் எழுத முற்படும் போது அங்கு ஏற்கனவே "சாந்தி ஐ லவ் யூ - இப்படிக்கு ராதாகிஸ்ணா"ன்னு எழுதி இருந்ததை பார்த்து கூட இருந்தே குழி பறிச்சுட்டயே ராதான்னுகொஞ்சம் கூட உன் மேல் கோபம் வச்சிக்காம அந்த ராதாகிஸ்ணாவை மாத்திரம் அழிச்சுட்டு என் பேரை எழுதினேனே அப்படிப்பட்ட நட்பல்லவா நம் நட்பு. ஆனால் உனக்கு இப்போ எனக்கு ஒரு லெட்டர் எழுத வலிக்குது. ஹூம்.
.
அதே எட்டாம் கிளாஸில் உன்னை தினமும் பென்ச் மேல நிக்க வச்ச சரித்திர சாரை மறக்க முடியுமா. நீயும் கொஞ்சம் கூட சொரனையே இல்லாம ஏதோ அவர் பிரமோஷன் குடுத்த மாதிரி ராஜராஜ சோழன் பட போஸ்டர்ல சிவாஜி குடுக்கும் போஸ் மாதிரி நின்னு சந்தோஷபட்டியே அப்போ கூட நான் தான் அது அசிங்கம்டான்னு உனக்கு புரிய வச்சேன். பின்ன அவரை பழி வாங்க கூட ஐடியா குடுத்தனே அதை மறந்து போயிட்டியா?
.
பின்ன ஒரு நாள் பரிட்சையில் அவர் சூப்பர்வைசராக வந்து உன் மேல் அவர் சந்தேகப்பட்டு உன்கிட்டயே நிற்கும் போது உன் சிகப்புஇங்க் பேனாவின் நிப் முனையை அவர் வேட்டியில் படும் மாதிரி வச்சு அது உள்ளங்கை அளவு பெரிதாகி அன்னிக்கு முழுக்க அவரை பைல்ஸ் பேஷண்ட் மாதிரி அலைய வச்சியே.....ஹும் வெளியே வந்து கட்டி பிடுச்சுகிட்டயே என்னை "மாப்ள உன் ஐடியா சூப்பர், என்ன கைமாறு செய்வேன்"ன்னு சொல்லி கண்ணுல தண்ணி வச்சுகிட்டியே ராதா, அது மறந்து போகுமா உனக்கு, அதே போல அன்னிக்கே அவர்கிட்ட உன்னய போட்டு குடுத்து அடுத்த நாள் உன் முதுகை பழுக்க வச்ச உண்மையை அப்பவே உன்னிடம் சொன்னா நம் நட்புக்கு பங்கம் வந்துவிடுமேன்னு இந்த நிமிஷம் வரை மறைத்து நம் நட்பை காப்பாத்தி வர்ரனே ஆனா உனக்கு எனக்கு லெட்டர் போட நேரமில்லை அப்படிதானே!
.
அதெல்லாம் போகட்டும், காலேஜ் படிக்கும் போது செலவுக்கு காசு இல்லாம கஷ்டப்பட்டோமே, அப்போ நீ குடுத்த ஐடியா மாதிரி இந்த உலகத்துல ஒரு பய குடுக்க முடியுமா? "மாப்ள கழுத்துல போட்டிருக்கும் செயினை அடகு வச்சுட்டா வீட்ல தெரியும். அதனால அதே மாதிரி கல்யாணி கவரிங் வாங்கி போட்டுகிட்டு இதை அடகு வைக்கலாம்"ன்னு நான் சொன்னப்போ "போடா போக்கத்தவனே வச்சி அழுவறதை விட வித்து அழுவலாம்டா"ன்னு சொலவடை சொன்னியே ராதா அது உனக்கு மறந்து விடுமோ?
அப்பகூட நான் "வித்தா அம்மா கேப்பாங்களே அப்ப என்ன செய்வது"ன்னு கேட்டப்ப நீ "ரெண்டி ரெண்டு கரனையா வெட்டி பத்தர் பாலுகிட்ட வித்து செலவு செய்யலாம்"ன்னு சூப்பர் ஐடியா குடுத்தியே என்னால் மறக்க முடியாதுடா.(இப்போ கூட கண்ணுல தண்ணி எனக்கு). பின்ன மூணே மாதத்துல நெஞ்சு வரை இருந்த சங்கிலி உட்கழுத்து சங்கிலியான பின்ன அம்மா கூப்பிட்டு "இது எப்படிடா"ன்னு கேட்டப்ப "நம்ம ராதா ஐடியாதாம்மா இது"ன்னு பெருமையா சொன்னனே அப்ப அம்மா என்னய பெத்த நிமிஷத்த விட பல மடங்கு சந்தோஷப்பட்டாங்களே அதை நீ மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். (அம்மா வெளக்குமாத்தாள சாத்துபடி குடுத்ததை இங்கே சொல்ல பிடாது ஏன்னா இது பப்ளிக் பிளேஸ்)
.
அவ்வளவு ஏன் மேத்ஸ் படிச்ச நானும், லிட்ரேச்சர் படிச்ச நீனும்தாண்டா இந்த உலகத்திலேயே லேப்ஃபீஸ் கட்ட வீட்டில பணம் வாங்கியவங்க. அது தவிர சாதாரண ராதாவா இருந்த உன்னை "குரங்கு ராதா"வா ஆக்கியது நான் தானேடா. அப்படிப்பட்ட எனக்கு ஒரு லெட்டர் போட்டா குறைஞ்சு போயிடுவியா?
.
ஹும்...நீ என்ன பண்ணுவ, இங்கிட்டு துபாய்ல போஸ்டல் டிபார்ட்மெண்ட் நெம்ப மோசம். ரெண்டு மாதம் முன்ன"அவசரமா 10000 தேவை, இந்த லெட்டரை தந்தி போல் பாவித்து உடன் அனுப்பவும்"ன்னு நீ போட்ட கடிதம் கூட என் கைக்கு வந்து சேரலைன்னா பாத்துகோயேன் போஸ்டல் டிபார்ட்மெண்ட் லெட்சனத்தை.
.
மத்தபடி வேற சேதியில்லை. இனிமேலாவது அடிக்கடி கடிதம் போடு!
.
இப்படிக்கு
உன் கடிதத்துக்கு ஏங்கும்
.
அபிஅப்பா