நான் ஹனிமூன் போனதிலே இரண்டு வேடிக்கையான விஷயம் இருக்கு. ஒன்னு ஹனிமூன் போன ஊர் "பழனி" இரண்டாவது அபிபாப்பா ஆறு மாத குழந்தையா இருக்கும் போது போனது. உலகத்திலே யாரும் செய்யாத புரட்சி இது. குழந்தையை ஹனிமூன் தூக்கிகிட்டு போனது. ஆக்சுவலி அந்த பயணத்தை ஹனிமூன்ன்னு சொல்றதை விட ஷேத்திராடனம்ன்னு தான் சொல்லனும். கல்யாணம் ஆகி ஹனிமூன் அழைச்சுட்டு போகாத பாவின்னு நாளை இந்த உலகம் சொல்லிடக்கூடாது இல்லியா அதனால அந்த பயணத்துக்கு ஹனிமூன்ன்னு பெயர் வச்சுட்டேன். சரி வாங்க அந்த கதையை பார்ப்போம்.
ஹனிமூன் போறதுன்னு முடிவான பின்ன தங்கமணி ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க "என்னங்க நீங்க தான குடும்ப தலைவர், அதனால நீங்க சொல்ற ஊருக்குதான் போகனும். எனக்கு கணவனே கண்கண்ட தெய்வம், "கல்" ஆனாலும் கணவன், "ஃபுல்" ஆனாலும் புருஷன் அதனால நீங்க சொல்ற ஊருக்குதான் போகணும், வேணும்னா நான் பத்து ஊர் பேர் எழுதி தாரேன், அதில ஒரு ஊர் நீங்க முடிவு பண்ணுங்க, உங்க கைய பிடிச்சுகிட்டு பேசாம வர்றேன்"ன்னு சொன்னாங்க. (பெண்ணீயவாதிகளே இப்போ கொஞ்சம் கோவப்பட்டுக்கோங்க, மேலும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் தம்பி மோகன் தாஸ்க்கு வாழ்த்துக்கள்) அவங்க இப்படி சொன்ன பிறகு என் கண்ணில தண்ணி வந்துடுச்சு. என்னா ஒரு பதி பக்தின்னு நெனச்சு.
கொஞ்ச நேரத்திலே பத்து ஊர் பேர் எழுதி எடுத்து வந்தாங்க, நானும் அக்ரிமெண்ட் படி ஒரு ஊரை செலக்ட் பண்ணிட்டேன். அது "பழனி". பத்து ஊர் பெயருமே பழனின்னு இருந்த விஷயத்தை இங்க சொன்னா ஆணீயவாதிகளுக்கு குருதி அழுத்தம்(வார்த்தை உபயம் அண்ணாச்சி) அதிகமாக வாய்ப்பு இருப்பதால் சொல்லாமல் தவிர்க்கிறேன்.(இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாலராஜன் கீதா சாருக்கு வாழ்த்துக்கள்)
பாப்பா, பால்புட்டி, இன்னபிற பாப்பாவின் பேக் எல்லாம் நான் தூக்கிக்க நகை, நட்டு போன்ற காஸ்ட்லி விஷயங்களை தங்கமணி சுமக்க ஜெகஜோதியா கிளம்பிட்டோம்.(நட்டு அப்பவே பிறந்துட்டானான்னு கேக்கப்பிடாது) நான் இதற்கு முன்பாக இரண்டாம் வகுப்பு படிக்கும் போது பார்த்ததுதான் பழனியை. பழனி எனக்கு புதுசு. அதையெல்லாம் தங்கமணிகிட்ட காமிச்சுக்க முடியுமா? என்னவோ பழனியே நான் தான் வடிவமைச்சு உண்டாக்கினது போல பஸ்ஸிலே ரொம்ப பீலா விட்டு கிட்டே வந்தேன். "அங்க பாரு அந்த ஊர்ல மலை ஒண்ணு இருக்கும் பாரு, இப்பவும் பார்த்துகிட்டே இருக்கலாம். அதுல பஸ் போற ரூட் எல்லாம் அப்படியே என்னமா இருக்கும் தெரியுமா. அங்க ரோடு போட்டதை பார்த்துதான் திருப்பதியிலயே போட்டாங்க தெரியுமா, மலை மேல ஏறினா பஸ்ஸை விட்டு இறங்கின உடனே முருகன் கோவில் வந்துடும் சட்டுன்னு" இப்படியாக பஸ்ஸிலே மொக்கை போட்டுகிட்டு வந்தேன். "என்னங்க மெதுவா பேசுங்க நாலு பேர் காதில விஷப்போகுது மெதுவா பேசுங்க"ன்னு திட்டு வேற. "அந்த முருகன் வலப்பக்கம் வள்ளியும் இடப்பக்கம் தெய்வானையும் காண ஆயிரம் கண் வேண்டும்ன்னு நான் சொன்னப்ப கொஞ்சம் அதிர்ந்துதான் போயிட்டாங்க தங்கமணி. பின்ன தான் தெரிஞ்சுது, என் அபத்த பீலா எல்லாம். நம்ம சாருக்கு அங்க சிங்கிள் பீஸ் காஸ்ட்டியூம்ன்னு. அட ஆண்டவா!!
பழனி பஸ்ட்டாண்டில் இறங்கியதுமே கச கசன்னு கூட்டம். நான் தங்கமணியை பார்த்து "தோ பார், பேசாம என் கூடவே வா, கூட்டத்துல காணாம போயிடாதே" ன்னு சொல்லிட்டு கட கடன்னு நடக்க ஆரம்பிச்சுட்டேன். கோவில் எந்த பக்கம் இருக்குன்னு கேட்டா தங்கமணிக்கு முன்னால அசிங்கமா போயிடுமேன்னு யார்கிட்டயும் கேக்கலை. "என்னங்க இந்த பக்கமா போறீங்களே"ன்னு கேட்டதுக்கு "பேசாம வா எனக்கு பழனில தெரியாத இடமா இது தான் ஷார்ட்கட்"ன்னு சொல்லி கிட்ட தட்ட ஒரு மணி நேரம் நடந்தாச்சு கோவில் வந்தபாடில்லை. எனக்கு அதுக்கு மேல நடக்க சக்தி இல்லாததை காமிச்சுக்காம "தோ பார் இன்னும் ரொம்பதூரம் நடக்கணும் நீயோ டயர்டா இருக்க பாப்பாவும் வெயில்ல கசங்குது பேசாம ஆட்டோவிலே போயிடுவோமா"ன்னு கேட்டதுக்கு "உங்களை நம்பி ஒரு மணி நேரம் நடந்தாச்சு இன்னும் 2 நிமிஷத்திலே மலையடிவாரம் வந்திடும் ஆட்டோ வேணாம்"ன்னு சொன்னாங்க. "பார்ர்ரா பார்ரா ஆட்டோகாரனுக்கு பத்து ரூவா குடுக்க விடமாட்டியே சரியான கஞ்சூஸ்"ன்னு சொல்லிகிட்டே ஆட்டோவை கூப்பிட்டேன்.
மலையடிவாரம் போகணும் எவ்வளவுப்பான்னு கேட்டதுக்கு அவன் என்னை பார்த்த பார்வை இருக்கே இப்பவும் மறக்க முடியாது. "நீங்க எவ்வளவு கொடுத்தாலும் சரிதான்"ன்னு சொன்னான். உடனே நான் "பத்தியா என்கிட்ட எவனும் பேரமே பேச மாட்டான், மாயவரத்துகாரனா இருப்பான் போல இருக்கு, என்னை தெரிஞ்சு இருக்கும் ஆனா பாரு அவனை எனக்கு தெரியல, பாசக்கார பசங்க நம்ம ஊர் பசங்க"ன்னு சொல்லிகிட்டே ஆட்டோவிலே உக்காந்தா அவன் ஓட்டாம தள்ளிகிட்டே போறான். "என்ன் ஸ்டார்டிங் டிரபிலா"ன்னு கேட்டதுக்கு "எதுக்கு சார் பெட்ரோல் வேஸ்ட் பண்ணனும், இறங்குங்க மலையடிவாரம் வந்துடுச்சு"ன்னு சொன்ன பின்ன தான் தெரிஞ்சுது மலையடிவாரத்திலேயே நின்னு கிட்டு மலையடிவாரத்துக்கு ஆட்டோவிலே போயிருக்கேன்ன்னு.
தங்கமணிய பார்த்து "என்ன எதுக்கெடுத்தாலும் கெக்கே பிக்கேன்னு எனக்கு தெரியாதா இதுதான் மலையடிவாரம்ன்னு, உழைக்காம பிச்சை எடுக்கிறவனுக்கு பத்து ரூவா பிச்சை போடுறதை காட்டிலும் இந்த உழைப்பாளிக்கு கொடுக்கலாம்ன்னு தோணுச்சு சும்மா குடுத்தா வாங்க மாட்டான் எங்க ஊர்க்காரனாச்சே அதான் சும்மா ஆட்டோவிலே ஏறி இறங்கி கொடுத்தேன்"ன்னு ஒரு வழியா சமாளிச்சேன். பாவி ஆட்டோக்காரன் அதுக்கு தான் அப்பவே சொன்னானா கொடுக்கிறத கொடுன்னு. அநியாயமா பத்து ரூவா போச்சே!
மலையடிவாரத்தில இருந்து மேலே போக பஸ் எங்க ஏறணும்ன்னு தெரியலையா எனக்கு அது தங்கமணிக்கு தெரிஞ்சா அசிங்கமா போயிடுமேன்னு அவங்ககிட்ட "அந்த கடைக்காரன் ரொம்ப தெரிஞ்சவன் பழனி வர வந்துட்டு பேசாம போனா தொலைச்சுடுவான் இரு பேசிட்டு வாரேன்"ன்னு சொல்லிட்டு போனேன். போய் "என்னங்க மலையடிவாரத்துக்கு பஸ் ஏற பஸ்ஸ்டாண்ட் எங்க இருக்கு"ன்னு சிரிச்சுகிட்டே கேட்டேன். தூரத்தில இருந்து தங்கமணி பார்த்துகிட்டு இருக்காங்களா, அதனால சிரிச்சுகிட்டே கேட்டேன்...........................
பின்ன திரும்பி வந்தேன். "என்னங்க பஸ் எங்க ஏறணுமாம்"ன்னு கேட்டாங்க. அதுக்கு நான் "ஹய்யோ ஹய்யோ நீ நான் சொன்னத எல்லாம் நம்பிட்டியா ஹய்யோ ஹய்யோ பஸ் எல்லாம் மேல போகாது நாம தான் நடந்து போகனும்"ன்னு சொன்னேன். "சரிங்க அந்த கடைக்காரன் கிட்ட நீங்க சிரிச்சு சிரிச்சு பேசினீங்க அவன் கோவமா கைநீட்டி நீட்டி பேசினானே"ன்னு கேட்டதுக்கு நான் "அதான் சொன்னேனே எப்ப பழனி வந்தாலும் அவனை பார்ப்பேன். போன தடவை பார்க்கலை அதான் அவனுக்கு கோவம். தொண தொணன்னு கேள்வி கேக்காத வா"(எவ்வளவு தான் ஒரு மனுஷன் சமாளிப்பான்)
மலை ஏற ஆரம்பிச்சதுமே ஒரு கோவில் சிப்பந்தி டவாளி வெள்ளை யூனிஃபார்ம் குறுக்கே சிகப்பு பட்டை போட்டு கிட்டு இருந்தார். அவர் எங்க கிட்ட வந்து "அடடா பார்த்து எத்தன நாளாச்சு, வணக்கம்ய்யா, அம்மா வணக்கம் இது தான் பாப்பாங்களா, நீங்க வர்றத முன்னாடியே சொல்லிட்டியலா"ன்னு குசலம் விசாரிச்சுட்டு போனார். எனக்கு அவரை எங்கயுமே பார்த்த ஞாபகம் இல்லை. உடனே நான் தங்கமணி கிட்ட " அவரு நம்ம ஊர்க்காரர் தான். அப்பாதான் வேலை பண்ணி வச்சாங்க, இப்பவும் ரொம்ப விசுவாசமா இருக்கார் பாரு. எங்க வந்தாலும் நம்ம ஊர் ஆளுங்கதாம்ப்பா, பாரேன் என்னால உனக்கும் ஒரு ஃப்ரீ வணக்கம் கிடைச்சுது" ன்னு சொல்லி மேலே நடக்க ஆரம்பிச்சோம்.
"ஏங்க யானை பாதையிலே போவோமா"ன்னு கேட்ட போது கூட எனக்கு அப்படி ஒரு பாதை இருப்பது தெரியாது. இருந்தாலும் சமாளிச்சுகிட்டு " தோ பார் மனுஷனுக்கு சின்ன கால் அதனால சின்ன படி, யானைக்கு பெரிய கால் அதனால பெரிய பெரிய படியா இருக்கும் கஷ்டம்"ன்னு சொன்னேன். "இல்லீங்க எனக்கு யானை பாதை பார்க்கணும் போல இருக்கு அதுவும் பெரிய பெரிய படியா இருக்கும்ன்னு வேற சொல்லிட்டீங்க பார்த்தே ஆகணும்"ன்னு சொல்லிட்டாங்க. " விதி யாரை விட்டுச்சு அந்த பெரிய படில ஏறி இறங்கினாத்தான் உனக்கு தெரியும் ஆசை பட்டுட்டே அனுபவி"ன்னு சொல்லிட்டு "யானை பாதை"போர்டு பார்த்து அதிலே நுழைஞ்சா அடங்கொக்கமக்கா படியே இல்லாம மொழுக்கட்டீன்னு இருக்கு. "என்னங்க பெரிய படியா இருக்கும்ன்னு சொன்னீங்க படியே இல்லியே"ன்னு கேட்டதுக்கு " படில ஏறி கஷ்டப்பட்டு போனாதான் புண்ணியம்ன்னு நெனச்சு உன்னை பயம் காட்ட யானை பாதையிலே பெரிய படியா இருக்கும்ன்னு சொன்னேன், இப்ப புண்ணியத்து பர்சண்டேஜ் குறைஞ்சு போச்சு உன்னால"ன்னு சொன்னதுக்கு அவங்க "அதனால என்ன 'தர்ம தரிசன'த்திலே போனா இந்த புண்ணியத்தை சரி கட்டிடலாம்"ன்னு சொல்லி 200 ரூபாயை மிச்சம் பிடிச்சுட்டாங்க.
ஒரு வழியா மேலே போய் சேர்ந்தாச்சு. "தர்ம தரிசன" கியூவை பார்த்ததுமே எனக்கு கண்ணை கட்டிடுச்சு. பாப்பா திணறி கசங்கி போயிடுச்சு. பாப்பாவை தலைக்கு மேல தூக்கிகிட்டேன். அப்ப வரிசையை ஒழுங்கு செய்யும் கோவில் சிப்பந்தி " அடடா எப்ப வந்தீங்க நல்லா இருக்கீங்களா அய்யா வணக்கம் அம்மா எப்படி இருக்கீங்க சரி எதுக்கு தர்ம தரிசனத்துல வர்ரீங்க, நேரா வர வேண்டியது தானே, இது என்ன புது பழக்கம்" அப்புடி இப்புடீன்னு சொல்ல எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. சரி நல்ல வாய்ப்புன்னு "அது ஒண்ணுமில்லீங்க வீட்டுல தர்ம தரிசனத்துல வர்ரேன்னு வேண்டிகிட்டாங்க அதான் ஆனா நமக்கு இதல்லாம் புதுசு, இதான் நம்ம வீட்டுல" அப்படின்னு அறிமுக படுத்தி வச்சேன். நம்ம ஊர்க் காரர் போல இருக்கு என்னை தெரியும் போல இருக்குன்னு நெனச்சுகிட்டு. அதுக்கு அவரு "என்னங்கய்யா எங்க அம்மாவ எங்களுக்கே அறிமுக படுத்தறீங்களே"ன்னு கேட்டாரு. ஒரு வேளை கல்யாணத்துக்கு வந்திருப்பார் போல இருக்குன்னு நெனச்சுகிட்டு நம்ம ஊர் பாசமே பாசம் என்னமா "எங்க அம்மா"ன்னு சொந்தம் கொண்டாடுறார் பாருங்க அதாங்க மாயவரம்.
உடனே நான் தங்கமணிகிட்ட சொன்னேன் "பத்தியா நம்ம ஊர் பாசத்தை,இவரும் மாயவரம் தான். நான் தான் சொன்னனில்ல தர்ம தரிசனம் வேண்டாம்ன்னு, அய்யா வந்தா ஸ்ட்ரெயிட்டா சாமிகிட்ட கூட்டிகிட்டு போயிடுவாங்க டிக்கெட் எதுவும் கிடையாது. என்னால உனக்கு வேற மரியாதை அனுபவி அனுபவி".
"என்ன வேண்டுதலோ போங்க உங்க வேண்டுதலுக்கு பாப்பாவை ஏன் கசக்குறீங்க இங்க குடுங்க நான் கொண்டு போய் தண்டபாணி சன்னதில போடுறேன் நீங்க பின்னால வாங்க"ன்னு பிடுங்கிகிட்டு போயிட்டார். எனக்கு பயமா போச்சு அவர் கோவில் ஆளுதானா இல்லியா, அய்யோ கழுத்திலே எல்லாம் நகை எல்லாம் இருக்கேன்னு பயந்து போய் "என்னங்க என்னங்க வேண்டாம் வேண்டாம்"ன்னு கத்த கத்த எல்லார் தலைக்கு மேலயும் பாப்பா மட்டும் தூரக்க போவது மட்டும் தெரிஞ்சுது. நான் இத்தன கத்தியும் தங்கமணி கல்லுளிமங்கியாட்டம் இருக்கவே எனக்கு சரியான கோவம்.
"ந்தா பாப்பாவை ஒருத்தன் தூக்கிட்டு போறான் பார்த்துகிட்டு கத்தாம இருக்கியே"ன்னு கேட்டதுக்கு "உங்க ஊர் ஆளுதானேன்னு பேசாம இருந்துட்டேன்"ன்னு சொன்னாங்க. ஒரு வழியா நாங்க நொந்து நூலாகி முருகன் கிட்ட வரும் போது பாப்பா ஜாலியா குருக்கள் எல்லாம் உட்காந்து இருக்கும் இடத்திலே வாயிலே விரலை வச்சுகிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கு. எங்களை பார்த்ததுமே கேட் திறக்கப்பட்டு நாங்களும் அந்த இடத்துக்கு கூப்பிடப்பட்டோம்.
எனக்கு ஒன்னுமே புரியலை. அப்ப கூட நான் தங்கமணி கிட்ட "அய்யர் நம்ம ஆளு, நம்ம பார்வதி குருக்களோட சொந்தம். அவருக்கு நான்னா உசுரு"ன்னு பீலாவை தொடர்ந்தேன். அப்ப தங்கமணி "ஏங்க வள்ளி தெய்வானை காணுமே"ன்னு கேட்ட போது தான் பார்த்தேன். திக்குன்னு ஆகிடுச்சு.
"தோ பார் சும்மா பேசாம சாமி கும்பிடு"ன்னு சொல்லிகிட்டே பாப்பா செயின் எல்லாம் இருக்கான்னு பார்க்க ஆரம்பிச்சேன். எங்களுக்கு ஜமக்காளம் போடப்பட்டது. எல்லா குருக்கள், ஓதுவார்கள், நாதஸ்வரகாரங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா வந்து "எப்படிம்மா இருக்கிங்க"ன்னு குசலம் விசாரிக்க, பாப்பாவை தூக்கி கொஞ்ச, நான் சீந்துவார் இல்லாம இருந்தேன். ஒரு ஃபார்மாலிட்டிக்கு என்னிடம் ஒரு வார்த்தை மட்டும் பேசினாங்க. என் இந்த நிலமையை பார்த்து ஒருத்தர் மட்டும் என்கிட்ட பேசினார். "அம்மா தேவஸ்தானத்திலே ஜேயீயா இருக்கும் போது தான் எங்க குவார்ட்டர்ஸ் கட்ட ஆரம்பிச்சாங்க. சும்மா பம்பரமா வேலை பார்ப்பாங்க, அது முடிஞ்ச பின்னவும் குவார்ட்டர்ஸ் மெயின்டணன்ஸ் பார்த்தாங்க. எங்க எல்லார் மேலயும் பாசமா இருப்பாங்க, தினமும் காலையில 6 மணிக்கு கோவிலுக்கு வந்து தண்டபாணிய பார்க்காம இருக்க மாட்டாங்க. அவங்களுக்கு ராஜ அலங்காரம்ன்னா ரொம்ப பிடிக்கும்"ன்னு ஏதோதோ சொல்லிகிட்டே போனாரு. எனக்கு கிர்ன்னு மயக்கமா வந்துச்சு. இதல்லாம் யோசிக்காம நான் ரொம்ப பீலா விட்டுட்டனோ!!
தரிசனம் எல்லாம் முடிஞ்சு பஸ் ஏற வரும் போது வரை நான் பேசவே இல்லை. "ஏங்க அந்த கடைகாரர் கிட்ட சொல்லிட்டு வந்திடுங்க இல்லாட்டி அடுத்த தடவை வரும் போதும் காலையில கோவிச்சுகிட்ட மாதிரி கோவிச்சுக்க போறாரு"ன்னு சொன்னாங்க. எனக்கு அப்படியே பத்திகிட்டு வந்துச்சு.
இப்பவும் நான் பேசும் போது பீலா விட்டன்னா "என்னங்க நாம பழனி போனோமே"ன்னு ஆரம்பிச்சா நான் எஸ்கேப் ஆகிடுவேன்!