நான் என் வயசுக்கும் இத்தன ஒரு விஷமத்தை பார்த்ததில்லை. அய்யோ என்னா விஷமம் என்னா விஷமம். அவனை பார்த்துகறத்துக்கே நாலு ஆளு வேணும்.
காலையிலே அவங்க அம்மா எழுந்திருக்கும் போதே எழுந்துடுவான். ஆனா பாருங்க அப்பத்திலே இருந்து என் கிட்டத்தான் விளையாடிகிட்டு இருப்பான். நான்னா அவனுக்கு உசிரு.
ராத்திரி தூக்கத்திலே எங்கே புரண்டு படுத்திருந்தாலும் முழிப்பு வந்துச்சுன்னா ஓடி வந்து என் நெஞ்சு மேலே ஏறித்தான் படுத்துப்பான். எத்தன வியர்வைன்னாலும் கவலைப்பட மாட்டான். நான் கை வலிக்க விசிறி விட்டா சுகமா தூங்குவான். சரி தூங்கிட்டானேன்னு கீழே போட்டா அடுத்த செகண்டு என் மேலே ஏறி படுத்துப்பான்.
நான் காலையிலே குளிக்கும் போது வரை பேசாம வெளையாடிகிட்டு இருப்பான். குளித்து முடிஞ்ச பின்னே சட்டை மாட்டினா போதும் நேரா வண்டிகிட்டே போயிடுவான். அவனை நகர்ல ஒரு ரவுண்டு அடிக்காம நாம வெளியே எங்கயும் போக முடியாது.
வெளியே போயிட்டு நான் தெரு முனைக்கு வருவது எப்படித்தான் அவனுக்கு தெரியுமோ டக்குன்னு வந்துடுவான் கேட்டுக்கு. என்ன திரும்பவும் அவனை வச்சு ஒரு ரவுண்டு அடிச்சாத்தான் நான் உள்ளே போக முடியும்.
தெருவிலே பசங்க விளையாட முடியாது இவனை சேர்த்துக்கலைன்னா. கத்தி தீர்த்துடுவான். வேற வழி பௌலிங் போடுறவனும், பேட்டிங் புடிக்கிறவனும்,கீப்பிங் பண்றவனும் அத்தன ஏன் பிட்ச் இஞ்சினியர் கூட அவன் தான்.
அது தவிர விளையாடி முடிச்ச பசங்க கொஞ்சம் ஜாலியா பேசிகிட்டு இருக்கும் போதும் இவன் தன்னை சேர்த்துகலைன்னா செம கடுப்பாகிடுவான். வேற வழி சேர்த்துகிட்டுதான் ஆகனும். இல்லாட்டி அவங்க அக்காகிட்டே சொல்லி அடுத்த நாள் தண்ணி குடிக்க விட மாட்டான் வீட்டு வாசலில்
அட்ரார்டா நாக்க மூக்க நாக்க மூக்க, மொழ மொழன்னு யம்மா யம்மா,கத்தாழ கண்ணால, போன்ற கருத்தாழமிக்க பாட்டுன்னா தூங்கிகிட்டு இருந்தாலும் டான்ஸ் ஆடுவான்.
சீரியல் பார்த்து அழுவதை விட சீரியலை நிறுத்த சொல்லி அழுவான். அதுக்கு பதிலா டேனி&டேடி அனிமேஷன் பார்த்து சப்புகொட்டி சிரிப்பான்.
கலைஞர் டிவியில் அவனுக்கு பிடிச்ச நிகழ்ச்சி கலைஞரை கடலில் தூக்கி போடுவது தான். (இதுவே அதிமுக வீட்டு பிள்ளைக்கு ஜெ டிவியில் “மைனாரிட்டி அரசு”ன்னு சொல்லும் போது பசங்க சிரிப்பதாக மாத்திக்கலாம். தவிர அப்படி சொல்லும் போது அந்த செய்தி வாசிப்பாளரே சில சமயம் சிரித்து விடுவதாக கேள்வி)
அக்கா ஸ்கூல் பேக்ன்னா அவனுக்கு அல்வா மாதிரி. எடுத்து கை பரபரன்னு பத்து பேஜ் கிழிச்சாத்தான் நிம்மதியா தூங்குவான். அது போல லேப்டாப்பிலே உச்சா போறதுன்னா ரொம்ப இஷ்டம்.
குக்கர் கத்தினா கொஞ்ச நாள் கத்திகிட்டு இருந்தான். ஆனா இப்ப அவனும் எசப்பாட்டு பாட ஆரம்பிச்சுட்டான். அதுக்கு நாம வேற கைத்தட்டனும்ன்னு எதிர்பார்ப்பான்.
அட இத்தினி ஏங்க! அவன் பிறந்து 2 நாள் ஆச்சு. அப்போ தங்கமணி என் கிட்டே 100 ரூவா கொடுத்து மருந்து மாத்திரை வாங்கிட்டு வர சொன்னாங்க. நானும் 99 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்துட்டேன். மீதி எத்தனைன்னு நாங்க கணக்கு பார்த்துகிட்டு இருக்கும் போது இவன் ரெண்டு கையையும் மூடிகிட்டு தூங்கினவன் திடீர்ன்னு ஒரு விரலை பிரிச்சு காமிச்சான் பாருங்க அப்படியே அசந்துட்டேன் போங்க!!!