பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 29, 2009

பச்சை பெல்ட்டும் குள்ள(ம்) மாமாவும்! (உரையாடல் சிறுகதை போட்டிக்கு)


நான் எப்போதுமே விடுமுறைக்கு இந்தியா போனா ஒரு சுற்று சொந்தபந்தங்களை பார்க்க அடுத்த நாளே கிளம்பி விடுவேன். அன்றைக்கும் அந்த முறையும் அப்படித்தான் எங்க ஊரில் இருந்து அருகாமை கிராமம் என் மாமா வீட்டுக்கு போய் கிட்டு இருக்கேன். அந்த ஊருக்கு எப்பவாவது ஒரு தடவை போகும் எட்டாம் நம்பரை நம்பாமல் சுந்தரபஞ்சாவடியிலே இறங்கி ஒரு கி.மீ நடந்துடலாம் என நினைத்து பஸ் ஏறிவிட்டேன். கொஞ்சம் அயற்சியாகவும் இருந்தது நடக்க வேண்டுமே என்று. எதாவது பேச்சு துணை கிடத்தால் நல்லா இருக்கும் என நினைத்து கொண்டேன்.


பஸ்ஸில் இருந்து இறங்கியதுமே குள்ள(ம்) மாமா கண்ணில் பட்டார். ஒரு துரு பிடித்த சைக்கிளை வாய்க்கால் பாலத்தில் சாத்திவிட்டு உட்காந்து சுருட்டு பிடிச்சு கிட்டு இருந்தார். மாமாவா அது, சின்ன வயசு மாமா அப்பவே சிக்ஸ் பேக் அதிபதி. அவர் சட்டை போட்டு நான் பார்த்தது கிடையாது. அது போல வேஷ்டியோ, இந்தோனேஷியா கைலியோ கட்டியிருந்தா கூட அதை மடித்து தான் கட்டியிருப்பார். இடுப்பில் பச்சை கலர் பாம்பே டையிங் மொத்த துணியால் மாரிமுத்து கிட்டே கொடுத்து பை எல்லாம் வைத்து ஜிப் எல்லாம் வைத்து ஒரு பெல்ட் கட்டியிருப்பார். எப்பவாவது டயர் செருப்பு போடுவார். தலையில் காசிதுண்டால் ஒரு முண்டாசு கண்டிப்பா இருக்கும். மபொசி மீசை தான் அவருக்கு தனி அழகு. முரட்டு தனமான குரல்.


ஆனால் இதோ நான் பார்க்கும் மாமா சிக்ஸ் பேக் எல்லாம் தொங்கி சுருங்கி போய், தலை வழுக்கை எல்லாம் விழுந்து பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு. அது கட்டை வண்டி ஓட்டும் அழகும், கோவணம், முண்டாசு என டூபீஸில் ஏர் பிடித்து உழுவதும், "எலேய் தட்டுவாணி மொவனே ஆட்டை அந்தண்ட ஓட்டிகிட்டு போடா" என்று தன் மகனையே திட்டுவதும் எனக்கு நியாபகம் வந்தது.


கிட்ட போய் "மாமா என்னை தெரியலையா"ன்னு கேட்டேன்.
கையை கண்ணுக்கு மேல வைத்து உற்று பார்த்து "அடடே மாப்ள எப்படா வந்த"ன்னு கேட்டு என்னை கட்டி பிடிச்சுகிட்டது. பைய கொண்டா சைக்கிள்ல மாட்டுவோம். ஜம்முன்னு பின்னால குந்து வூட்டுக்கு போவும்" என்றது.


"மாமா இது என்ன சைக்கிளா ரெண்டு பேரையும் தாங்குமா? ஏதோ மீன்காரன் சைக்கிள மாதிரி துருபுடிச்சு கிடக்கே"


"ஆமாடா மாப்ள, சின்னங்குடி பட்டணத்துகாரன் சம்முகம் பழரச கடேல அடவு வச்சிட்டு மூக்கு முட்ட குடிச்சிட்டு போனான். திரும்பி வரவேல்ல. நான் தான் எடுத்துகிட்டு சுத்துறண்டா சரி வா தள்ளி கிட்டே போவும், ஆமா பையிலே என்ன எனக்கு பாரின் சரக்கு கொண்டாந்தியா, எங்க நான் ஆசை ஆசையா கேட்டதே நீ இதுவர வாங்கியார்ல,சரக்கா கொண்டார போற, உன் மாமா மாமிக்கு எதுனா வாங்கியாந்திருப்ப, நான் பண்ண காரன் தான"


"நீ என்ன கேட்ட மாமா மறந்து போச்சுது"


" நீயும் சின்னசாமி அண்ணன் வூட்டு ஆடு புழுக்க போடுறது மாதிரி போயிட்டு போயிட்டு வர! நானும் சாவரத்துக்குள்ள சிங்கபூரு மொதல மார்க்கு பச்சை பெல்டு தானே கேக்குறேன் ஒவ்வோறு தாட்டியும், ஆமா நீ சிங்கபூர்ல தான இருக்க"


"இல்ல மாமா துபாய்"


"எல்லாம் பக்கம் பக்கமா"


சிரித்து கொண்டேன். "அடுத்தவாட்டி வாங்கியாறேன் மாமா ஆமா என்னாது மஞ்சு கொட்டா மூடியாச்சா"


"ஆமா செட்டிக்கு நஷ்டமா போச்சு, வூட்டா வூடுக்கு டிவி வந்துடுச்சு. எவன் வருவான், அதுக்குள்ள தான் சம்முகம் பழரசம் ஓட்டுறான். ஒரையும் கெடக்கும். ஒரைக்கி எல்லாம் எனக்கு ஏது காசு, ரசம் தான் நாலு ரூவாய்க்கு தருவான், ஒரு நாலு ரூவா தாயேன்"


"குடிக்க போறியா மாமா இந்த காலைலயே, இந்தா பத்து ரூவா"


"சரி சைக்கிள புடிச்சுக்க பத்து எண்ணங்காட்டிலும் வரேன்"


மாமா சந்தோஷமா ஓடிச்சு மஞ்சு கொட்டாய்க்குள். சொன்ன மாதிரியே சுருக்கா வந்துடுச்சு.


"எலே மாப்ளா இன்னும் ஒரு பத்து ரூவா தாயேன்"


"ஏன் மாமா இன்னும் குடிக்க போறியா வேண்டாம் விடு"


"இப்படா தோ பட்டணத்தி வந்துட்டா ஒனக்கு தான் மீனு கொழம்பு புடிக்குமே அவ கிட்ட ஒரு பத்து ரூவாய்க்கு பொருவா பொடி வாங்கிட்டு வாரேன். போம்போதே வாங்கிட்டு போயிட்டா உன் மாமி சீக்கிரமா சமச்சுடும்"
சரி என்று கொடுத்தேன்.


"எலே முண்டச்சி ஒரு பத்து ரூவாய்க்கு பொருவா போடு"


"ந்தா முண்டச்சின்னா மூஞ்சில குத்துவேன். இந்தா இந்த பேப்பரை புடி"
மாமா தினந்தந்தியின் கிழிந்த பேப்பர் துண்டை பிரிச்சு புடிச்சு அவ கிட்ட மீனை வாங்கி பிசிறு எல்லாம் வாங்கி சண்டை போட்டு அவ கிட்ட திட்டு வாங்கிகிட்டே வந்தது.


கர்ணம் பிள்ளை வீடு தாண்டும் போது "மாப்ள புள்ள போய் சேந்தாச்சு தெரியுமா" என சொல்லிவிட்டு ஊர்ல யார் யார் பாலிடாயர் காதிலே ஊத்திகிட்டு செத்தாங்க, தூக்கு லிஸ்ட் ஆளுங்க எல்லாம் யார், ஊரை விட்டு ஓடி போன பொண்ணுங்க எல்லாம் சொல்லிகிட்டே வந்துச்சு. கடைசியா "மாப்ள என் மொவ கூட ஓடிட்டா. ராமூர்த்தி மொவனை இழுத்துகிட்டு. இப்ப கோமல்ல குடியிருக்கா"


"என்ன மாமா இப்படி சொல்ற" கொஞ்சம் அதிர்ச்சியா கேட்டேன்.
"ஆமா என்னாத்த செய்ய, அதுக்காக நான் நாண்டுகிட்டா சாவ முடியும், விடு மாப்ள, தோ வூடு வந்துடுச்சு, போனா பண்ணிட்டு வந்த உன் மாமி வாசல்லயே நிக்குது பாரு"


மாமியை பார்த்து குசலம் எல்லாம் விசாரிச்சு முடிச்சு உள்ளே போனோம்.
மாமாவும் உள்ளே வர "ந்தா பாரு உள்ள வந்தா காலை வெட்டிபுடுவேன். குடிச்சா இந்த பக்கம் வர கூடாதுன்னு உன் தம்பி (என் தாய்மாமா) கராரா சொல்லிபுட்டாங்க ஓடிடு"


"இரு தங்கச்சி மாப்ள பேக்குல என்னவாது வச்சிருப்பான் திங்க வாங்கி தின்னுட்டு ஓடுறேன்"


நான் மாமிகிட்ட "இருங்க மாமி ஒரு விஷயம் இருக்கு மாமா நீ உள்ள வா"
மாமா முற்றத்து கட்டையிலே உட்காந்துகிச்சு. பேக்கை மெதுவா திறந்து மாமா, மாமி, பசங்க எல்லோருக்கும் அவங்க அவங்களுக்கு வாங்கி வந்ததை கொடுத்துட்டு இருக்கும் போதே மாமா " மாப்ள அடுத்த வாட்டி கண்டிப்பா பச்ச பெல்ட்டு வாங்கி வாடா" என சொன்னது.


உடனே என் மாமி கையிலே ஒரு பொட்டலத்தை கொடுத்து "மாமி இதை சாமி வீட்டுல வச்சி எடுத்து வாங்க" என்றேன். மாமிக்கு அது என்னான்னு புரிஞ்சுடுச்சு.


மாமி சாமிரூம் பிள்ளையார் கிட்ட வத்து அதிலே ஒரு ரூபாய் காசு வைத்து எடுத்து கொண்டு வந்து கொடுத்தாங்க குள்ள(ம்)மாமா கையிலே.
அப்போது அவர் முகம் பார்க்கனுமே. இப்பவும் என் மனசிலே இருக்கு. வாங்கி கிட்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டார்.


"இதை கட்டாமலே செத்துடுவனோன்னு நெனைச்சேன் மாப்ள" அப்ப்டீன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார்.
"தங்கச்சி தம்பியோட வேஷ்டி எதுனா இருந்தா குடு. புது பெல்டுக்கு கொஞ்சம் தொவச்ச வேட்டியா கட்டிகிட்டா நல்லா இருக்கும் தங்கச்சி"
மாமி உள்ளே போய் மாமாவின் சலவை வேஷ்டி ஒன்றை எடுத்து வந்து கொடுத்தாங்க.


"வேஷ்டியயும், பெல்ட்டையும் எடுத்து கிட்டு கொல்லை புறம் போய் தட தடன்னு கிணற்றில் இருந்து தண்ணிய எடுத்து தலையிலே ஊத்தி கிட்டு தன் பழைய வேஷ்டியால் துடைத்து கொண்டு அதே ஈர கோவணத்தோட அதன் மேலேயே இந்த புது பெல்ட்டை கட்டிகிட்டு வேஷ்டிய மடிச்சு கட்டிகிட்டு பசுமாட்டு நெற்றியிலே இருந்த குங்குமத்தை எடுத்து வச்சிகிட்டு தன் தலை முண்டாசு கட்டிகிட்டு உள்ளே வந்து "தங்கச்சி கொஞ்சம் துண்ணூறு குடு"ன்னு கேட்டு வாங்கிகிட்டு பக்தி பழமா ஆகிட்டாரு.


அதுக்குள்ள மாமி மீன் குழம்பு வைத்து சூடா சாதம் எடுத்து வந்துட்டாங்க. "அண்ணே போய் உனக்கு மாத்திரம் ஒரு இலை அறுத்துகிட்டு வா, தம்பி என் கூட சாப்பிடும்" அப்படின்னு சொல்ல ஓடி போய் அறுத்து வந்தார். அழகா சாப்பிட்டார்.


"மாப்ள உன் கிட்ட தனியா ஒரு சேதி பேசனும்டா"ன்னு சொல்ல நானும் அவர் கூட கொல்லைக்கு போனேன்.
"ஒரு அம்பது ரூவா கொடேன்"
சிரித்து கொண்டே கொடுத்தேன். "தங்கச்சிகிட்ட இதை சொல்லாதடா" என்றது.
தெருவின் உள்ளே சவுண்டு விட்டுகிட்டே போச்சு.


பின்ன மாமா ஆபீஸ்ல இருந்து வரும் வரை இருந்து பேசிகிட்டே இருந்த போது கடைசி பஸ் போயிடுச்சு. சரி காலை போகலாம் என படுத்து விட்டேன்.


மாமி காலை என்னை அவசர அவசரமா எழுப்பினாங்க. "தம்பி இங்க வந்து இந்த கூத்தை பாரு"


"என்ன மாமி?"


"குள்ளண்ணன் பழரச கடையிலே நேத்து மதியம் வரை குடிச்சுட்டு ராத்திரி அங்கயே விழுந்து கிடந்திருக்கு. எவனோ புது வேட்டிய உருவிகிட்டு போயிட்டான். பெல்ட்டை மாத்திரம் கெட்டியா புடிச்சு கிட்டு தூங்கி இருக்கு. ராத்திரி வரலையேன்னு சாந்தி தேடிகிட்டு போயிருக்கா. இப்ப இழுத்து கிட்டு வரா வெளியே வந்து பாரேன்"


வெளியே வந்து பார்த்தேன். சிரிப்பும் வேதனையுமா போச்சு.


தலையில் முண்டாசு. கீழே கோவணம். ஆனா பெல்ட்டு.
"ஏன் சாந்திக்கா அது தான் குடிச்சு இருக்கு. ஒனக்கு அறிவு எங்க போச்சு புத்தி. அந்த துண்டை எடுத்து இடுப்பிலே கட்டி கூட்டி வந்திருக்க கூடாதா அதுக்கு தான் அறிவு இல்லை மானத்தை விட பெல்ட்டு முக்கியமா போச்சு, உனக்குமா?"ன்னு கேட்டுட்டு உள்ளே வந்துட்டேன்.
பின்னே ஊருக்கு வந்துட்டேன்.


ஒரு நாலு மாசம் கழிச்சு ஒரு தடவை என் மாமிக்கு போன் செஞ்சு சாதாரணமா பேசினாங்க மாமி!
எல்லா விஷயத்தையும் பேசிட்டு "குள்ள(ம்)மாமா எப்படி இருக்கார்?
"நீ வாங்கி கொடுத்த பெல்ட்டோட இருக்கார்"
அத்தோட அதை விட்டுட்டேன்.


அதன் பின்னே நாலு மாசம் கழிச்சு போனப்ப மாமிகிட்ட கேட்டேன்.


"மாமி எங்க குள்ள(ம்)மாமாவை காணுமே"


"அதுவா தம்பி" மாமி சொல்ல ஆரம்பிச்சாங்க!


நான் போன தடவை போன பின்ன கிரமத்திலே ஜாதி கலவரம் வந்துச்சாம்!
அய்யப்பன் தான் பேசினாராம்!
"இனி ஜாதி இந்துக்கள் பொணத்தை எங்க ஜாதி காரங்க எரிக்கவோ புதைக்கவோ மாட்டாங்க"


பஞ்சாயத்தே பயந்து போச்சாம்!


குள்ள(ம்) மாமா தான் "சரிடா நீங்க சொல்றதிலயும் நாயம் இருக்கு, நானும் உங்களோட ஒன்னடி மண்னடியா இருந்துட்டேன். அதுக்காக பொணத்தை அழுக விட முடியுமா? நானே வெட்டியான் வேலையும் பார்க்கிறேன். பின்ன சண்டை எல்லாம் முடிஞ்ச பின்ன பார்த்துக்கலாம்" அப்படின்னு திடீர் அறிவிப்பு கொடுத்துட்டார்.


அதிலிருந்து நாலு மாசமா அவருதான் பிணம் எரிப்பது புதைப்பதுன்னு பார்த்து கிட்டு இருந்திருக்கார்.


திடீர்ன்னு ஒரு மழை நாளில் பழனியப்பன் ஆத்தா கண்ணாம்பா அக்கா (அதுக்கு ஆச்சு 80) செத்து போச்சு. உடனே ஊரை கூட்டி குள்ள மாமாவை கூட்டியார மாமா தன் பொண்டாட்டி வச்சிருந்த காஞ்ச ராட்டி எல்லாம் எடுத்துகிட்டு வீர சோழன் ஆத்து கரைக்கு போயிடுச்சு!


இத்தனை மழையிலே பொணம் வேகுமோ வேகாம காக்காய் கழுகு கொத்தி திங்குமோன்னு கவலையிலே இருந்த பழனியப்பனுக்கு நிம்மதியா போச்சு. ஆத்தாவை கொண்டு வச்சுட்டு ரெண்டு கிலோ ஜீனியும் (பிணம் நல்லா வேகணும் என்பதால் செவ்வா புள்ளயாருக்கு வச்சிருந்த ரெண்டு ரெண்டு விறகையும் எல்லா தெரு பொம்பளையும் கொடுக்க குள்ள மாமா நல்ல பழரசம் குடிச்சிட்டு ஒரே அழுகை!


"டேய் பார்த்து குளிங்கடா வீரசோழன் ஆத்துல நான் காணாத வெள்ளம் இன்னிக்கு" இது மாமா!


"மாமா இது வெள்ளம் இல்ல கடக்கம் சட்ரஸ் போட்டிருக்காங்க, அதனால தேக்க தண்ணி" இது பழனியப்பன் மொவன்!


மாமா ஜீனியெல்லாம் போட்டு ஆத்தாவை நல்லா வேக வச்சுட்டு பழனியப்பன் கிட்ட காசும் வாங்கிட்டு அந்த ஆத்து ஓர 'ஒரை" சரக்குக்கு போயிட்ட பின்ன ஊர் பெரிய மனுசன் எல்லாம் "குள்ளம் பய நமக்கு ஒரு கையிதான்" அப்படீன்னு பீத்திகிட்டு போயிட்டாங்க.


அடுத்த நாள் மாமி வீட்டுக்கு ராட்டி தட்ட வந்த சாந்தியக்கா" யக்கா மாமா நேத்து முதலே காணும்க்கா பசி தாங்காது, நீ எதுனா சோறு போட்டியா, வந்துச்சா என்ன இங்க?"


"இல்லடி சாந்தி நம்ம பனியடியிலே அண்டை வெட்டனும் குள்ளண்ண வந்தா மூணு மம்புட்டியும் அது கூட சுந்தரேசன்ன, கோவிந்து கூட்டி கிட்டு போவ சொன்னாங்க, கூடவே இது கையிலே காசு கொடுக்காத சாந்தி கையில டீக்கு இனிப்பு போண்டாக்கு குடுன்னு அத்தான் சொன்னங்க! குள்ளண்ணனை அன்னினிக்கே எல்லாரும் விட்டுட்டு வந்தாச்சு நல்ல மழை அப்படீன்னு"


"போக்கா பழனி அண்ணே நல்ல காசு கொடுத்து இருக்கும் போல இருக்கு அதான் பழரசம் குடிச்சுகிட்டே இருக்கோ என்னவோ"


"நீ போய் பார்த்து மொத்தி இழுத்துட்டுவா, நான் சமைச்சு வைக்கிறேன், அது சூடா இருந்தா பிரியமா கொட்டிக்கும்"


"சரிக்கா"


போச்சு சாந்தி வரவேயில்லை. ரெண்டு நாள் ஆச்சு!


"யக்கா யக்கா யக்கா ஊரெல்லாம் என்னவோ பேசிகிறாங்கக்கா"


"என்னடி சாந்தி என்ன சொல்றே"


"கடக்கம் சட்ரஸ்ல ஒரு பொணம் கெடக்காம் அது என் மாமாவாம்"


"இருடீ, ஒரு போன் பண்ணிக்குறேன்"


"என்னங்க ஒரு பொணம் கிடக்காம் கடக்கம் சட்ரஸ்ல! இன்னிக்கு சட்ரஸ் திறந்து விடும் நேரம் இது! நீங்க உடனே தாசில்தார் சம்முகசுந்தரம் கிட்ட சொல்லி அதை திறக்க வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு பெரம்பூர் போலீஸ் கிட்ட ஒரு வார்த்தையும் சொல்லிட்டு ஓடியாங்க அனேகமா குள்ளண்ணனா இருக்கும், நான் அங்க போறேன் நீங்க நம்ம ஊர் வர வேண்டாம் கடக்கத்துக்கு வந்துடுங்க"


எல்லாம் முடிஞ்சுது!


ஊரே திரண்டு அங்க போயாச்சு!
குள்ளம்மாமாவின் உடல் போல இல்லை அது! ரெண்டு நாள் உப்பின உருவம். கண் எல்லாம் மீன் தின்னுடுச்சு. ஒரு பச்சை பெல்டுக்கு அந்த புறமும் இந்த புறமும் வீங்கி போயிருக்க அந்த இறுக்கி கட்டிய பெல்ட் தான் எல்லாருக்கும் அடையாளமா போகிடுச்சு!


ஒரு அலக்கை கொண்டு வந்து பிணத்தை இழுக்க ஒரே நாத்தம். கரையிலேயே கிடக்கு பிணம். மாமாதான் அதுன்னு ஊர் மக்கள் சொல்லியாச்சு!கரையிலே கூட இல்லை கரை தண்ணியில் கிடக்கு.
ஊர் நாட்டாமை எல்லாம் பிணத்தின் நாத்தம் தாங்காம "சரி சரி தாசில்தார் வருவாரு சட்ரஸ் திறக்க போறாங்க, நம்ம கூட ஒன்னடி மண்ணடியா வாழ்ந்த குள்ளன் இப்ப கங்கையிலே போன மாதிரி புண்ணியமா போகட்டும்"
இதை கேட்டு கிட்டு இருந்த எல்லா தலித் மக்களும் ஓடிவந்து "போய்யா போய்யா நீயும் உன் சாதியும்! நாங்க அடக்கம் பண்றோம் குள்ளன் அண்ணனை! என் கூட உழவு செஞ்சான், என் கூட அறுப்பு அறுத்தான், என் கூட ரசம் சாப்பிட்டான். எங்க பிரச்சனைக்காக உங்க கூட சேர்ந்து வெட்டியான் வேலை பார்த்தான். நாங்க தூக்கி வந்து புதைச்சிகிறோம்" அப்படின்னு ஓடி வந்தாங்க!


தூக்கி வந்து குழி தோண்டி புதைக்கும் போது "எலேய் எது எது எப்படி எப்படி இருக்குதோ அப்படியே புதைங்க, முக்கியமா அந்த பச்சை பெல்ட்டு! இது ஏதோ ஒரு சாதீய பெருசு! காறி துப்பிட்டு அவங்க புதைசாங்க குள்ள(ம்)மாமாவை!


மாமி எல்லாம் சொல்லி முடித்த போது நான் அழுது முடித்திருந்தேன்!

50 comments:

 1. கதையாய் நினைத்து படிக்க இயலாதவாறு இடங்களோடு இணைந்த பேச்சு வழக்கும் சம்பவங்களும்...!

  என்னை அழவைத்துவிட்டது :(

  ReplyDelete
 2. புனைவு என்று சொல்ல முடியாதபடி மிக அழகாக எழுதியிருக்கின்றீர்கள். அதிலும் அந்த வட்டார வழக்கு, சிம்ப்ளி சூப்பர்.

  // "எலேய் தட்டுவாணி மொவனே ஆட்டை அந்தண்ட ஓட்டிகிட்டு போடா" //

  //"எலே முண்டச்சி ஒரு பத்து ரூவாய்க்கு பொருவா போடு"//

  டிபிக்கல் தஞ்சை மாவட்டத்திற்குரிய திட்டுக்கள்.

  ReplyDelete
 3. யதார்த்த நடையில் அமைந்துள்ளது.
  சாதியக் கொடுமைகள் என்றுதான் தீருமோ??

  ReplyDelete
 4. ஆரம்பத்துல மத்த பதிவுகள் மாதிரி நகைச்சுவையா ஆரம்பிச்சு, குள்ள மாமா மஞ்சு கொட்டாயுள்ள போய் வந்த பின் யதார்த்தமாக நகர்ந்து கடக்கம் சட்ட்ரசில் மனதை வருடி முடிந்தது. எதோ பாட்டி வீட்டுக்கு போய் ஆறுமுகம் அண்ணனை பார்த்து போன்ற உணர்ச்சி.
  போட்டிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. கதையாக கருத இயலாத ஒரு எழுத்து.
  உண்மை கதையா? உருக்கமான எழுத்து.

  ReplyDelete
 6. தல,

  ரொம்ப நல்லா வந்திருக்கு. நேத்திக்கு தான் நர்சிம் மதுர வட்டார நடையில் ஒரு அருமையான கதை எழுதினார். இன்னிக்கு நீங்க தஞ்சை மொழியில்.

  குள்ள மாமாவ நேர பாத்த பீலிங் இப்ப. வாழ்த்துகள்.

  அனுஜன்யா

  ReplyDelete
 7. குள்ளம் மாமா மனசில் நிறைஞ்சிட்டார் அபி அப்பா!

  ReplyDelete
 8. அருமையான கதை, அருமையான நடை.. பாராட்டுகள் அபி அப்பா..

  ReplyDelete
 9. இப்படியும் எழுத முடியுமா?
  Thanks for giving this link.

  ReplyDelete
 10. வட்டார வழக்கில், வெகு அழகாகப் பின்னப்பட்ட சம்பவங்களுடன் உருக்கமான முடிவுடன் பெரிய உயரத்தைத் தொட்டு விட்டது கதை.

  மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

  ReplyDelete
 11. வேணாம்....நான் அழுதுருவேன்....

  ReplyDelete
 12. குள்ள(ம் )மாமா மனசில் நிறைஞ்சிட்டார்..!


  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. நல்ல நடை
  சோகமான முடிவு

  போட்டியில் பரிசு பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. தமிழ்மணத்தில் ஓட்டு போடமுடியலை கவனிக்கவும்..!


  :)

  ReplyDelete
 15. ரொம்ப இயல்பா இருந்தது கதையோட்டம்.மிக நன்றாக உள்ளது

  ReplyDelete
 16. \\ ஆயில்யன் said...
  கதையாய் நினைத்து படிக்க இயலாதவாறு இடங்களோடு இணைந்த பேச்சு வழக்கும் சம்பவங்களும்...!

  என்னை அழவைத்துவிட்டது :(

  \\\

  நன்றி ஆயில்யா!

  ReplyDelete
 17. \\ இராகவன் நைஜிரியா said...
  புனைவு என்று சொல்ல முடியாதபடி மிக அழகாக எழுதியிருக்கின்றீர்கள். அதிலும் அந்த வட்டார வழக்கு, சிம்ப்ளி சூப்பர்.

  // "எலேய் தட்டுவாணி மொவனே ஆட்டை அந்தண்ட ஓட்டிகிட்டு போடா" //

  //"எலே முண்டச்சி ஒரு பத்து ரூவாய்க்கு பொருவா போடு"//

  டிபிக்கல் தஞ்சை மாவட்டத்திற்குரிய திட்டுக்கள்.

  \\

  நன்றி அண்ணா! எல்லாமே டிபிகல் தஞ்சை மாவட்ட மொழிதான்!

  ReplyDelete
 18. \\ புகழன் said...
  யதார்த்த நடையில் அமைந்துள்ளது.
  சாதியக் கொடுமைகள் என்றுதான் தீருமோ??

  \\

  நன்றி புகழன்!

  ReplyDelete
 19. போங்க சித்தப்பூ,. ஒரே பீலிங்கஸ் ஆக்கிபுட்டீங்களே..

  ReplyDelete
 20. அபி அப்பா

  ரொம்ப நல்லா வந்திருக்கு....உணர்வு பூர்வமா எழுதினனால ஒவ்வொரு சம்பவமும் ரொம்ப அழகா விவரிச்சு இருக்கீங்க....

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 21. குள்ளம் மாமா... அருமையான நடை.
  ஊர் சென்றுவந்த உணர்வு.

  சோகமான முடிவு, ஆனால் அதுதான் கதையின் வெற்றியோ??

  ReplyDelete
 22. கதை போக்கு யதார்த்தத்துடன் உள்ளது. வட்டார வழக்கு அழகு சேர்க்கிறது.

  ReplyDelete
 23. கதை போக்கு யதார்த்தத்துடன் உள்ளது. வட்டார வழக்கு அழகு சேர்க்கிறது.

  ReplyDelete
 24. இன்னும் எத்தனை குள்ளம் மாமா இருக்கங்களோ.
  அருமையான வழக்கோடு கூடின விவரிப்பு. அபி அப்பா. ரொம்ப யதார்த்தமா அதும்பாட்டில கதை போயி முடிஞ்சுடுச்சே.
  நல்லா இருக்கு. உங்க கைகள் , இது போல இன்னும் நிறைய எழுதணும்.

  ReplyDelete
 25. நல்லாயிருக்கு தல..

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

  ReplyDelete
 26. ரொம்ப நல்லா இருக்கு. கடைசில மனசு கஷ்டமாயிடுச்சு அபி அப்பா. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. அருமையான கதை அண்ணா
  போட்டியில் பரிசு பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. nijamave azhudhuten after reading this story..

  very nice yaar...

  ReplyDelete
 29. Dear Abiappa,

  Naanum Azuthu mudithen.

  Cheers
  Christo

  ReplyDelete
 30. தஞ்சாவூரா நீங்க. இவ்வளவு அழகா பாஷை வருதே. நன்றாய் இருக்கு.

  ReplyDelete
 31. அபிஅப்பா, உங்க குள்ளமாமாவைப் படிக்கும்போது நாகூர் ரூமியின் குட்டியாப்பா நினைவுக்கு வர்றார்.

  கதையின் கடைசி வரிகள் டச்சிங். வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 32. \\வாழவந்தான் said...

  ஆரம்பத்துல மத்த பதிவுகள் மாதிரி நகைச்சுவையா ஆரம்பிச்சு, குள்ள மாமா மஞ்சு கொட்டாயுள்ள போய் வந்த பின் யதார்த்தமாக நகர்ந்து கடக்கம் சட்ட்ரசில் மனதை வருடி முடிந்தது. எதோ பாட்டி வீட்டுக்கு போய் ஆறுமுகம் அண்ணனை பார்த்து போன்ற உணர்ச்சி.
  போட்டிக்கு வாழ்த்துக்கள்!
  \\

  நன்றி வாழவந்தான். அப்படின்னா நீங்களும் தஞ்சை மாவட்டமா?

  ReplyDelete
 33. \\ஜோசப் பால்ராஜ் said...

  கதையாக கருத இயலாத ஒரு எழுத்து.
  உண்மை கதையா? உருக்கமான எழுத்து.

  \\

  நன்றி அண்ணன் மொவனே சோசப்பூ! சில சமயம் கதையும் உண்மையா இருக்கும். சில சமயம் உண்மையும் கதைவிடுவது போல இருக்கும். டக்குன்னு நோட் பண்ணிக்கோ. எப்பவாவதுதான் எனக்கு பொங்கும்:-)

  ReplyDelete
 34. \அனுஜன்யா said...

  தல,

  ரொம்ப நல்லா வந்திருக்கு. நேத்திக்கு தான் நர்சிம் மதுர வட்டார நடையில் ஒரு அருமையான கதை எழுதினார். இன்னிக்கு நீங்க தஞ்சை மொழியில்.

  குள்ள மாமாவ நேர பாத்த பீலிங் இப்ப. வாழ்த்துகள்.

  அனுஜன்யா

  \\

  நன்றி அனுஜன்யா! நர்சிம் கதை நானும் படிச்ச்சேன். அதிலே தீபாவின் கமெண்ட் பாருங்க. அதே கருத்து தான் எனக்கும். சூப்பர் கதை!

  ReplyDelete
 35. \\நாமக்கல் சிபி said...

  குள்ளம் மாமா மனசில் நிறைஞ்சிட்டார் அபி அப்பா!

  May 29, 2009 2:48 PM
  வெண்பூ said...

  அருமையான கதை, அருமையான நடை.. பாராட்டுகள் அபி அப்பா..

  \\

  நன்றி மாநக்கலாரே!

  நன்றி வம்பூ சாரி வெண்பூ( அய்யோ கதை ஜாம்பவான் எல்லாம் பாராட்டுராங்களே! அப்ப இன்னிக்கு வீட்டிலே ஆப்பிள் ஜூஸ் உண்டு)

  ReplyDelete
 36. \\ப்ரியா said...

  இப்படியும் எழுத முடியுமா?
  Thanks for giving this link.

  \\

  பிரியா என்ன சொல்ல வரீங்க! இப்படி மேசமாகவும் எழுத முடியுமான்னா:-))

  நன்றி பிரியா!

  ReplyDelete
 37. \\ராமலக்ஷ்மி said...

  வட்டார வழக்கில், வெகு அழகாகப் பின்னப்பட்ட சம்பவங்களுடன் உருக்கமான முடிவுடன் பெரிய உயரத்தைத் தொட்டு விட்டது கதை.

  மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

  \\

  மிக்க நன்றி பிரண்ட்! நீங்க முன்னாடி நெல்லை தமிழ்ல எழுதின கதைஇயைஇ விடவா? அது சூப்பர்லா!

  நன்றி பிரண்ட்!

  ReplyDelete
 38. \\goma said...

  வேணாம்....நான் அழுதுருவேன்....

  May 29, 2009 3:49 PM
  நமிதா..! said...

  குள்ள(ம் )மாமா மனசில் நிறைஞ்சிட்டார்..!


  வாழ்த்துக்கள்\\

  கோமதி வாங்க மிக்க நன்றி! அழுகாதீங்க்க கதை தானே!

  நன்னி நமீதா!(இது ஆரு???)

  ReplyDelete
 39. \\அமிர்தவர்ஷினி அம்மா said...

  நல்ல நடை
  சோகமான முடிவு

  போட்டியில் பரிசு பெற வாழ்த்துக்கள்

  \\

  நன்றி அமித் அம்மா! எங்க உங்க கதையை இன்னும் காணும்? சீக்கிரம் எழுதுங்க!

  ReplyDelete
 40. \\மின்னுது மின்னல் said...

  தமிழ்மணத்தில் ஓட்டு போடமுடியலை கவனிக்கவும்..!
  May 29, 2009 5:29 PM
  Rajeswari said...

  ரொம்ப இயல்பா இருந்தது கதையோட்டம்.மிக நன்றாக உள்ளது
  \\

  மின்னல் எனக்கு தான் தமிழ்மணத்திலே ஓட்டு போட முடியாதே!

  வாங்க ரசனைக்காரி! ரசிச்சு படிச்சீங்களோ!நன்றி!

  உங்க கதையும் அருமை. பாவம் அந்த அபிபாப்பா!

  ReplyDelete
 41. \\ILA said...

  போங்க சித்தப்பூ,. ஒரே பீலிங்கஸ் ஆக்கிபுட்டீங்களே..

  \\

  கவலை படாதீங்க விவசாயி!! அடுத்து நல்ல காமடி பதிவா போட்டு சிரிக்க வச்சிடலாம்! நன்றி!

  ReplyDelete
 42. \\மங்கை said...

  அபி அப்பா

  ரொம்ப நல்லா வந்திருக்கு....உணர்வு பூர்வமா எழுதினனால ஒவ்வொரு சம்பவமும் ரொம்ப அழகா விவரிச்சு இருக்கீங்க....

  வாழ்த்துக்கள்...

  \\

  அப்பாடா ஆணிகளுக்கு இடையிலும் வந்து நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க மங்கை!

  ReplyDelete
 43. கடைசில ரொம்ப வருத்தமாயிடிச்சி.

  ReplyDelete
 44. எங்களையும் கொஞ்சம் எட்டிப்பாருங்கள்!

  புனைவு என்று சொல்ல முடியாதபடி மிக அழகாக எழுதியிருக்கின்றீர்கள்

  ReplyDelete
 45. //
  நன்றி வாழவந்தான். அப்படின்னா நீங்களும் தஞ்சை மாவட்டமா?
  //
  நல்லா கேட்டீங்க.
  நிம்மல்கி நம்மள் பத்தி தெரியாதா?. இதில் கொஞ்சம் இருக்கும்.

  மேலும்...
  தஞ்சை மாவட்டம் கோவில் நகரம். சித்தியை பெண் கொடுத்தது, அண்ணனுக்கு பெண் எடுத்ததுன்னு மயூரம் தொடர்பும் -காளியாகுடி,, ரத்னா, சீமாட்டி, ARC, tajdeen, தேரழுந்தூர் வரை அந்த மண்ணின் தொடர்புகள் எதோ கொஞ்சம் உண்டு.

  ReplyDelete
 46. நல்ல நடை..படித்து முடித்தவுடன் இதயம் கனத்துபோவதை தவிர்க்க இயலவில்லை ...

  ReplyDelete
 47. நல்ல நடை..படித்து முடித்தவுடன் இதயம் கனத்துபோவதை தவிர்க்க இயலவில்லை ...

  ReplyDelete
 48. அருமையான நடை..முடிவில் இதயம்கனப்பதை தவிர்க்க இயலவில்லை...

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))