
காலை நட்ராஜை பள்ளியில் விட்டு விட்டு என் மனைவியை கோவிலில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து ஹாயாக வீட்டின் கேட் உடபட வாசல் கதவு எல்லாம் பப்பரக்கான்னு திறந்து வச்சுகிட்டு நாற்காலியில் லேப்டாப் ஓப்பன் செஞ்சுட்டு அதன் மேலே பேப்பர் வச்சு படிச்சுகிட்டு இருக்கும் போது தான் சம்பவம் நடந்தது. இல்லை ஊர்ந்ததுன்னு சொல்லலாம்.
நல்ல இம்மாம் பெரிய பாம்பு. (ரெண்டு கையையும் விரிச்சு வச்சிருக்கேன்) பொதுவா பாம்பை பார்த்தவன் எல்லாரும் "சும்மா இத்தா மொத்தம்ன்னு தன் முழங்கையை காட்டுவான். ஒரு ஆள் உசரத்துக்குன்னு சொல்லுவான். எவனுமே குட்டி பாம்பை பார்த்ததா சொல்லவே மாட்டான். அப்படி சொன்னா அவனுக்கு இழுக்கு என்பது போல் நினைத்து கொள்வான். நீங்க தயவு செய்து நம்புங்க. அது அத்தாதண்டி பாம்பு. இத்தனைக்கும் வாசலில் நந்தி மாதிரி என் வண்டி சாய்ஞ்சுகிட்டு நிக்குது. எப்படி வந்ததுன்னு தெரியலை. நிலைப்படி தாண்டி முக்கால்வாசி உள்ளே வந்துடுச்சு. மீதி வால் மாத்திரம் நிலைப்படிக்கு வெளியே இருக்கு. ஏதோ பெரியதாய் ஊர்வதை போல உள்ளுணர்வு சொன்னதால் திரும்பி பார்த்தேன்.
அது பாம்பு தான் என என் மூளைக்கு செய்தி போவதற்கு முன்பாக மீதியும் உள்ளே வந்துவிட்டது. அடுத்து என் கால் தான். கிட்ட தட்ட அதன் வாய்ப்பக்கம் என் கால் இருக்கு. அது இடது பக்கம் திரும்பினால் பூஜை ரூம். ஒரு வேளை சாமிகும்பிட வந்திருக்குமோ? இல்லை இன்றைக்கு என்ன கிழமை? அய்யோ அவசரத்துல கிழமை எல்லாம் மறந்து போச்சு. எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.
பாம்புகடித்தால் வாயில் நுரை வருமே. அடடா வாயில் வெற்றிலை வேற போட்டிருக்கேன். நுரை வர அது இடைஞ்சலா இருக்குமே...ச்சே மனசு என்னவெல்லாம் நினைத்து தொலைக்கிறது. பூஜை அறையில் ஓம் நமச்சிவாய ஓடிகிட்டு இருக்கு. பேசாம எதுனா எல் ஆர் ஈஸ்வரியின் பாம்பு பாட்டு ஓடினா கூட அது கேட்டுகிட்டு சமத்தா கொத்தாம போயிடும் என நினைத்து கொண்டேன்.
அடுத்து அடுத்து என்ன நடந்தது என்பதெல்லாம் சரியா நியாபகம் வரவில்லை இப்போது. ஆனா கத்தினேன். டீசண்ட்டா கத்தலை என்பது மாத்திரம் நல்லா தெரியுது. பக்கத்துல கட்டுமான பணியில் இருக்கும் கொத்தனார், மேஸ்திரி எல்லாம் வந்தாச்சு. அப்ப தான் கிட்ட தட்ட என் சுயநினைவுக்கு வர்ரேன். லேப்டாப் கீழே கிடக்கு. நான் சோபா மேலே நிற்கிறேன். வந்தவங்க எல்லாம் கையில் கம்பு, செங்கல் சகிதம் நிற்க அது "ஆகா தப்பான இடத்துக்கு வந்துட்டமோ"ன்னு திரும்பி படியிறங்கி சாவகாசமா ஜல்லிமேல் ஊர்ந்து காம்பவுண்ட் சுவர் ஏறுது.
பயந்துடுச்சு. ஆமாம் நான் அத்தனை ஒரு கத்தல். முன்னமே சொன்ன மாதிரி டீசண்டா கத்தலை. அதிலே ஒரு சித்தாள் சொன்னான் "யாரோ ஆடு அறுக்குறாங்கன்னு நினைச்சு வந்தேன்" ங்கொய்யால என் சத்தம் அப்படியா இருந்துச்சு. எங்க போச்சு அதுன்னு பாருங்கன்னு சொன்னதுக்கு ஒருத்தன் "அது சந்து வழியா கொல்லை பக்கம் போயிடுச்சுங்க"ன்னு சொன்னதும் எனக்கு இன்னும் பயம்.
"யோவ் யாராவது வந்து கொல்லை கதவு திறந்து பாருங்கய்யா"ன்னு கத்த ஒரு மாவீரன் போய் திறந்தான். 'அய்யய்யோ'ன்னு அலறி கதவை சாத்தினான். "மேஸ்திரி மேஸ்திரி இங்க வாசல்ல கெடக்கு மேஸ்திரி"ன்னு கத்த எனக்கு வெள்ளிகிழமை விரதம் சிவகுமாரெல்லாம் நியாபகம் வந்து போனாங்க. ஆகா பாம்பே, நான் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை. சும்மா பகுத்தறிவுன்னு பீலா தான் வுடுவேன். நீ இப்ப சொல்லு இப்பவே வேண்டிக்கறேன். அலகு குத்தி தீமிதிக்கனுமா செய்ய சொல்றேன். இதுக்காகவே தான் என் அப்பா அம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க என வேண்டிகிட்டேன்.
பின்னே ஒரு வழியா அதை விரட்டிட்டு எல்லாரும் தன் வேலையை பார்க்க போயாச்சு. மெதுவா லேப்டாப்பை எடுத்து வச்சுட்டு என் மனைவிக்கு போன் செஞ்சா என் மாமனார் தான் எடுத்தாங்க. "மாமா பாம்பு பாம்பு"ன்னு சொல்ல ஆரம்பிக்கும் போதே "சரி மாப்ள அனுப்பி வைக்கிறேன்"ன்னு சொல்லி வச்சுட்டாங்க. அட தேவுடா திரும்பவும் பாம்பை அனுப்பி வைக்க போறாங்களான்னு நினைச்சு கிட்டே என் பெரிய அக்காவுக்கு போன் செய்தேன்.
"டேய் நீ ராத்திரி ஒழுங்கா தூங்காம கம்பியூட்டரை கட்டிகிட்டு அழற. அதான் தூக்க கலக்கம். நல்லா படுத்து தூங்கு"
"அக்கா இல்லைக்கா எல்லாரும் பார்த்தாங்க"
"எல்லாரும் நின்னு பார்க்கும் போது உனக்கு மட்டும் என்ன பயம் வேண்டி கிடக்கு"
"அய்யோ எல்லாரும் அது போன பின்னேதான் பார்த்தாங்க"
"போன பின்னே என்னாத்தை பார்த்தாங்க?"
"அய்யோ அக்கா இதுக்கு பாம்பே தேவலை. நீ போனை வச்சிடு. எனக்கு போன்ல ஆஃப் பட்டன் எங்க இருக்குன்னு கூட தெரியலை. கை நடுங்குது"
"சரி நீ எதுக்கும் 2 முட்டை வாங்கி மாரியம்மன் கோவில்ல வச்சுடு சாயந்திரம்"
"நாட்டுகோழி முட்டையா ஒயிட்லகானா"
"பாம்புக்கு என்னடா தெரிய போவுது. அது போய் செட்டியார் கடையிலே கேட்கபோவுதா அவன் நாட்டுகோழிமுட்டை வாங்கினானா, சத்துணவு திருட்டு முட்டை வாங்கினானான்னு"
அதுவும் சரிதான். எனக்கு தான் பயத்திலே ஒன்னும் புரியமாட்டேங்குது.பெரிய அக்கா எப்பவும் இப்படித்தான். சின்ன அக்கா தான் சரின்னு அதுக்கு போன் பண்ணினேன். விஷயத்தை சொன்னேன்.
"டேய் நீ இந்த கதை சொன்னதும் நம்ம சின்ன வயசுல மங்களத்தக்கா நியாபகம் தான் வருது. அது நுரை தள்ளி செத்து போச்சு தெரியுமா? உனக்கு நியாபகம் இருக்கோ"
"யக்கா, உனக்கு வெவஸ்தையே கிடையாது. நானே பாம்பை பார்த்துட்டு பயந்து கிடக்கேன். நீ வேற இதல்லாம் நியாபகபடுத்திகிட்டு"
"ஓக்கேடா. நான் ஒன்னு சொல்றேன் கோவிக்காத கேளு"
"சீக்கிரம் சொல்லு. நானே கதவை எல்லாம் பூட்டிகிட்டு இருக்கேன்"
"அடப்போடா பயந்தாகுளி பயலே. இப்படித்தான் ராஜா ஒருத்தர் பாம்புக்கு பயந்துகிட்டு பூட்டிகிட்டாராம். கடைசியா எலுமிச்சம் பழத்திலே இருந்து புடுங்குச்சாம்"
"அய்யோ அக்கா அது புடுங்குனது இருக்கட்டும். நீ என்னவோ பரிகாரம் சொல்ல போறதா நினச்சு கேட்டுகிட்டு இருக்கேன்"
"ஆமாடா பரிகாரம் தான். உனக்கு இல்லை. கிருஷ்ணாவுக்கும் குழந்தைகளுக்கும் தான். நீ இன்னிக்கே நல்ல நாள். அத்தானுக்கு சொந்தம் ஒருத்தர் L.I.C ல ஏஜண்ட். நல்ல கைராசிக்காரர். கையோட பணம் வாங்கி கொடுத்துடுவாரு குடும்பத்துக்கு. பாலிசி போட்டோமா, அத்தோட அதை மறந்தோமான்னு இருக்க மாட்டாரு"
"ஆமா இருக்கியா செத்துட்டியான்னு தினம் தினம் வந்து பார்ப்பாரா?"ன்னு கத்திகிட்டே போனை வைக்கவும் கத்வு தட்டும் சத்தம் கேட்டது. ஒரு பயத்துக்காக டிவி வேற சத்தமா வச்சிருந்தேன். என் நேரம் ஸ்ரீபிரியாவும் கமலும் "ஓரிடத்தில் இல்லாது நான் தவிக்க"ன்னு நீயா பாட்டை பாடிகிட்டு இருந்தாங்க.
ஆகா வந்துட்டான்யா வந்துட்டான்யா...சுத்தி சுத்தி வருதே இப்படி. ஆமா பாம்பு கதவை எல்லாம் தட்டிகிட்டு மே ஐ கம் இன்னு சொல்லிகிட்டா வரும். அய்யோ என் நேரம் அப்படி டெவலப் ஆனாலும் ஆகியிருக்கும் பாம்பெல்லாம் என நினைத்து கொண்டே மெதுவா பீப்பிங் ஹோல் வழியா பாம்பை பார்த்தேன். யாரோ வந்திருந்தாங்க. எதுக்கும் கண்ணாடி வழியா பார்த்தா அதன் பிம்பம் பாம்பு மாதிரி தெரியுதான்னு பார்த்தேன். (அந்த பாட்டில் கமல் அப்படித்தான் கண்டுபுடிச்சாரு) மனுசன் தான். கதவை திறந்து "யாருய்யா" என கேட்டேன்.
"பம்பு பிட்டருங்க, உங்க மாமா தான் அனுப்பினாங்க"
"ஓ நான் பாம்புன்னு சொன்னேன் அவங்க கிட்ட"
கதவை சாத்தினேன். வியர்த்து விட்டிருந்தது. அடுத்து ஒரேஜீவன் ஒன்றே தெய்வம் வாராய் கண்ணான்னு ஏதோ பாடிகிட்டு இருந்தது. ஒரு படப்பாடலாம். டிவியை நிறுத்தினேன். திரும்பவும் கதவு தட்டும் சத்தம். திறந்தேன். என் சகதர்மினி.
தாலி நிலைக்க கோவிலுக்கு போயிட்டு வந்திருக்காங்க.
"என்னங்க பேய் அடிச்ச மாதிரி இருக்கீங்க?"
விஷயத்தை எல்லாம் சொன்னேன்.
"இதுக்கு தான் சொன்னேன். காலையிலே சப்பாத்தி வச்சா சண்டை போடாம சாப்பிடனும். இப்படில்லாம் சண்டை போட்டா இப்படித்தான்"
அட ராமா சப்பாத்தி சண்டைக்கு எல்லாமா பாம்பு வரும்? என்ன லாஜிக் இல்லாம ஒரு பேச்சு. என் பாம்பு பிரச்சனை எல்லாருக்கும் காமடியா போச்சு. சரி நமக்கு வலையுலகம் தான் பிரச்சனையை கொட்டி தீர்க்க ஒரே வழின்னு நடந்ததை எழுத ஆரம்பிச்சேன். ஒரு நல்ல படமா பாம்பு படம் போட்டா நல்லா இருக்குமேன்னு நினைச்சு ஜீவ்ஸ் கிட்டே "ஒரு நல்ல பாம்பு படமா குடுப்பா"ன்னு கேட்டேன். அதுக்கு அவரு "நல்லபாம்பு படம் வேண்டுமா அல்லது நல்ல பாம்புபடமா வேண்டுமா?"ன்னு கேட்க எதுனா ஒரு பாம்புன்னு சொல்ல அவரு என்ன கலர் வேண்டும் என புடவைக்கு ஜாக்கெட் மேட்சிங் கேட்பது போல கேட்டாரு.
"அய்யோ ஜீவ்ஸ் நான் அவசரத்திலே சரியா கவனிக்கலை. கருப்பு...இல்லை இல்லை பிரவுன் கலர்தான். ஆனா கார்த்தால குளிக்காம வந்துடுச்சு போலிருக்கு வந்து போன இடம் கோடா இருக்கு"ன்னு சொல்லி வைக்க அவர்கிட்ட இருந்ததிலே கொஞ்சம் எடுத்து போட்டு எந்த டிசைன் பிடிக்குதோ அதை எடுத்துகுங்கன்னு சொன்னாரு. அதான் மேலே இருக்கும் பாம்பு.
சரின்னு நட்ராஜை அழைக்க ஸ்கூல் போனேன். நட்ராஜிடம் சொன்னேன். ஒரே அழுகை அவனுக்கு காட்டலைன்னு. ஹும் என்னையே நொந்துகிட்டேன். அபி வந்தா. அவளிடம் பள்ளியில் சொன்னேன். அவளுக்கு ஒரு சந்தேகம்.
"அப்பா பாம்புக்கு மாடி ஏற தெரியுமா?"
அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு!!!!