பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 23, 2010

காவிரி அம்மா வந்தா மயிலாடுதுறைக்கு!!!!

சின்ன சின்ன படித்துரைகள். தண்ணீரில் காலை ஆட்டிகிட்டே சூடா பஜ்ஜி சாப்பிடலாம்.



(ஒரே ஜம்ப் பண்ணி சாதாரண காவிரியை ஆடுதாண்டும் காவிரியா ஆக்கிடலாமா...ஒரு வெள்ளை ஆடு பாலத்தில் இருக்கு பாருங்க)


தெளிந்த நீரும் உடைந்த படித்துரையும்.


நந்தி இன்னும் மூழ்கலை. அதனால பாதுகாப்பான ஆழம் தான்.



இன்று 23ம் தேதி ஆகஸ்ட் 2010. ஆவணி 7ம் தேதி. எங்க காவிரி வருவாளா இல்லியா என ஆடி 18ல் நாங்க நினைத்து நினைத்து ஏங்கிய காவிரி வரண்டு போய் கிடந்தது. காலை தம்பி நட்ராஜை அந்த பாலம் வழி அழைத்து போன போது பாலத்தில் நின்னு கொஞ்சம் கண்ணீர் வர ஏங்கியது நியாபகம் வந்தது.

பின்னர் காலை 11 மணிக்கு அபியிடம் இருந்து பள்ளி தொலைபேசியில் இருந்து போன்.

"அப்பா! காவிரியில் தண்ணீர் வந்துடுச்சாம். அனேகமா எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குமாம்"

"ஹேய் எனக்கு தெரியும். நீ காவிரில இறங்க கூடாது. இன்னிக்கு சுழல் ஜாஸ்தியா இருக்கும் அம்மா கிட்டே. நாம ஞாயிறு போகலாம்"

"ஒ நோ அப்பா எனக்கு நெசமாவே ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு"

"ப்ளீஸ் அபி இன்னிக்கு அம்மா ரொம்ப கோவமா வரும். ஆக்ரோஷமா இருக்கும். புது சுழல் கண்டுபிடிக்கும். எதுடா சாக்குன்னு எல்லாத்தையும் இழுத்து போட்டுகிட்டு போகும். அது ஒரு லூசு. அப்பத்திலே இருந்து அப்படித்தான். எப்ப கோவம் வரும்ன்னு எங்களுக்கே தெரியாது. இப்படித்தான் என் பிரண்ட்..."

"நோ அப்பா , நான் காவிரிக்கு போகலை போதுமா?"

எனக்கும் ஒரு ஆர்வ மின்சாரம் தொத்தி கொண்டது.பண்ணிரண்டுக்கு ஓடிப்போனேன்.

அம்மா வந்தாள். அதே அம்மாவை நான் ஆடி ஆடி ஒய்யாரமாக வந்ததையும் பார்த்திருக்கேன். கொஞ்சம் கோவமாக வந்ததையும் பார்த்திருக்கேன். பெரிய அகங்காரியாக "ஹேய் என்னை விட எவள் இங்க அழகு" என்கிற மாதிரியும் பார்த்திருக்கேன்.

"அய்யோ அய்யோ வீட்டுக்கு ஒரு மண் மூட்டை கட்டியாங்க கரையிலே போடுவோம். பச்ச குழந்தை வச்சிருக்குறவங்க ஓடிப்போய் பெரியகோவில்ல உட்காந்துகுங்க. வூட்டுக்கு ஒருத்தங்க ஓடியாங்க" என்னும் நடு இரவு பறை சத்தம் கேட்டு வாரி சுருட்டி எழுந்த அப்பாவை பார்த்திருக்கேன்.

அதை கேட்டு "போங்கடா போக்கத்த பயலுக! அவளுக்கு கோவம் வருது. பதிலுக்கு இவனுக பயந்து கெடக்கானுக, அவ திங்க வேண்டிய தின்னுட்டு உங்க வேண்டியத உண்டுட்டு போப்போறா" என ராமேச்வரம் மாயவரம் கலந்து என் பாட்டி பேசினதும் காதில் இருக்கு. அப்போ வார் வச்ச டவுசரோடு கூட்டத்தோடு கூட்டமாக போய் பார்த்த போது பத்ரகாளி உருவத்தில் தலையில் குடிசை கிரீடமாக அதன் மேல் கோழி இறகுக்கு பதிலாக கோழியையே வைத்திருந்த காளி ரூபத்திலும் அந்த காவிரியை பார்த்திருக்கிறேன்.

இதோ இப்போது இந்த வருஷம் பார்க்க போகும் காவிரி "இது என் வீடு நான் வருவேன். எவனும் கேட்க கூடாது. நான் வர மாட்டேன், ஆனா எல்லாரும் கேட்கனும்"என்கிற பன்ச் டயலாக் பேசி வருவது போல அப்படி ஒரு நுரை ததும்பும் காவிரி. என்னை பார்த்து சிரித்தது."என்னடி நீ சின்ன வயசுக்கு வராத பிள்ளைக்கு தாவணி போட்ட மாதிரி காலோடு காலாக போகிறாய்" என நினைத்து கொண்டேன். கொஞ்சமாக கரை பக்கம் தண்ணிர் வந்து வந்து மோதி போவது அந்த கால தாவணிப்பெண் மாராக்கை இழுத்து விட்டு இழுத்துவிட்டு நழுவுவதை போல இருந்தது.

எனக்கே நான் நினைத்தது தவறு என்பது தெரியும். என் அவயாம்பிகை தாய் ஒரு நேரத்தில் தாய், ஒரு நேரத்தில் பருவ மங்கை, ஒரு நேரத்தில் வயதான அம்மா என மாறி மாறி எங்களுக்கு காட்சி தருவது போல நொடிக்கு ஒரு தடவை வித்தை காட்டுவாள் என் அம்மா என தெரியும்.

ஓடிப்போய் நட்ராஜை அழைத்து வரும் போது சொன்னான். " அப்பா காவிரில தண்ணி வந்துடுச்சாம். இன்னிக்கு பாடம் எதும் இல்லை" ... எனக்கும் தான் தெரியுமே. அம்மா வந்தா அதான் பேச்சு மாயவரத்துக்கு. அது தவிர என்ன பாடம் உனக்கு?

காவிரியை தாண்டவில்லை. "அப்பா குளிப்போமா?"

இரண்டு நாட்களாக ஜுரம் தம்பிக்கு. அம்மா நீயா இவனை கஷ்ட்டப்படுத்த போகிறாய். கரையில் அவனை இறக்கி படியில் உட்கார வைத்து அவன் கையை வைத்தேன். "அப்பா நம்ம லேப்டாப் மௌஸ் மாதிரி இருக்கு"

வாவ்! என் அம்மாவின் மின்சாரம் அவனுக்கும் அடித்தது. இது உனக்கும் அம்மா, உனக்கும் அக்கா, உனக்கும் தங்கச்சி, உனக்கும் பாட்டி உனக்கும் அவயாம்பிகா அம்மா......

இடுப்பில் கட்டிக்கொண்டு பாலத்தில் இருந்து குதிக்கும் முன்னே இராகவன் நைஜீரியா அண்ணன் மனதில் வந்தார். சீமாச்சு அண்ணன் மனதில் வந்தார்.

"தம்பி இது நம்ம அம்மா! இப்ப போயிட்டு நாளை வந்து ஆட்டம் போடுவோம்"

"ஊகூம் மாட்டேன்"

அம்மா! நாங்க உன் குழந்தைகள். வருஷா வருஷம் வருவியே ஆடி 18 இப்போ ஆவணி வந்தாச்சு. என்னாச்சு உனக்கு?

சில பெண் குழந்தைகள் சில ஆண் குழந்தைகள் யூனிஃபார்ம் சகிதமாக வந்து அம்மா மடியில் ஆடின. "இந்த பாருங்க பசங்களா. ஓடி போயிடுங்க. இல்லாட்டி வீட்டிலே வந்து சொல்லுவேன்" என் பேச்சை யாரும் கேட்கவில்லை.

அதோ ஒரு வயோதிகர் அய்யர் மாதிரி இருக்கு... வந்து குளித்து ஏதோ கரையில் மந்திரம் சொல்கிரார். அதோ ஒரு உழவர் கிழவர் கோவண கிழவர் முங்கி முங்கி எழுகிறார்.

இதோ ஒரு கிழவியின் பிணம் மிதந்து போகுது. யார் பெத்த பிள்ளையோ அல்ல. யாரை பிள்ளையா பெத்த கிழவியோ என் அம்மா காவிரி எடுத்து போகிறாள். அவளுக்கு தீட்டு இல்லை.

இரவு நட்ராஜை நெஞ்சில் காசிதுண்டு போட்டு கட்டி கொண்டு .... "டேய் ... நான் கெட்ட தனமா திட்டுவேன். இனி பிள்ளையை கட்டிகிட்டு பாலத்தில் இருந்து குதிப்பதை விட்டுடு" ....தூரத்தில் நைஜீரியாவில் இருந்து குரல் கேட்க கேட்க நான் "தம்பி ராத்திரி வந்து நாம் குதிப்போம்" என சொல்லி கிட்டே நடந்தேன்!


குறிப்பு: போட்டோ இப்ப போய் எடுத்தேன். ஆனா அப்லோட் ஆகலை! பின்னே போடுவேன்!

28 comments:

  1. நல்ல அனுபவம் எங்களுக்கெல்லாம் குடுத்துவைக்கலையே காவிரித்தாயை பாக்க!!! ம்ஹ்ம்

    ReplyDelete
  2. ஹைய்ய்ய்ய் காவிரி கம்மியாச்சா சூப்பரூ ! பாலத்தில நின்னு காவிரியை சைட்டகிறது எம்புட்டு சுகம் ஹம்ம்ம் !

    போட்டோ!? - நினைச்சேன் அதுவும் உங்கள் ப்ளாக்ல காவிரி மாதிரிதான் அப்லோடி வரும் ஆனா வராது!

    ReplyDelete
  3. //இது என் வீடு நான் வருவேன். எவனும் கேட்க கூடாது. நான் வர மாட்டேன், ஆனா எல்லாரும் கேட்கனும்//


    எப்பவோ வர்ற வேண்டிய காவேரி இப்ப வருது!

    ஒ இதுதான் சவுண்ட் வுடாம சைலண்டா இருக்க காரணமா???

    :))

    ReplyDelete
  4. வாம்மா சிட்டுகுருவி! எங்களுக்கே எப்பவாவது தான் எங்களுக்கே குடுத்து வைக்கும்:-)

    ReplyDelete
  5. \\ஹைய்ய்ய்ய் காவிரி கம்மியாச்சா சூப்பரூ ! \\

    ஆயில்ஸ்! காவிரி கம்மியாச்சுன்னா சூப்பர் இல்லை. வீப்பர்(விவசாயிங்க) அதிகமானாதான் சூப்பர்:-))

    ReplyDelete
  6. \\எப்பவோ வர்ற வேண்டிய காவேரி இப்ப வருது!

    ஒ இதுதான் சவுண்ட் வுடாம சைலண்டா இருக்க காரணமா???
    \\

    எப்பவோ வரவேண்டிய காவிரி இல்லை ஆயில்யா. ஜூவ் 12 திறந்து வர வேண்டியது ஒரு மாதம் அரசாங்கம் தாமதம். ஆனா கும்பகோணம் வரை வந்தது மத்தை 10 கிளை நதியிலும் திறந்து விட்ட பின்னும் மாயவரம் வராத காரணம் மாயவரம் பெரிய பாலம் இரண்டு மற்றும் துணை கால்வாய் பாலம் 20 ஆகியவை தான் தாமதத்துக்கு காரணம். எல்லாம் சரியாகி இன்றைக்கு வந்தாச்சு. கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்பட்டா எப்படி?

    அதான் ஆடிப்பெருக்கு பதிவிலே எல்லாம் சவுண்ட் விட்டனேப்பா:-)) என்ன உரத்த மௌனம் தான்:-))

    ReplyDelete
  7. //அப்பா காவிரில தண்ணி வந்துடுச்சாம். இன்னிக்கு பாடம் எதும் இல்லை//

    :)!

    படங்களை சீக்கிரம் போடுங்கள்.

    ReplyDelete
  8. காவிரி வந்த சேதி; மகிழ்வான சேதி!!
    படம் இன்னும் போடலை; வருத்தமான
    விஷயம்!

    ReplyDelete
  9. Nattuvoda Rathiri poyi kuthiratheenka...
    nattu ungala thannikulla mukkida poran..

    ReplyDelete
  10. பதிவு ரொம்ப நல்லா இருக்கு அபிஅப்பா. அவயாம்பிகை & காவேரி தாய் ஒப்பீடு சூப்பர் . அவயாம்பிகையோ, காவேரியோ, கிருஷ்ணாவோ (நதியும்தான்) ஏன் எல்லா தாய்மார்களும் கோவம் வந்தா பொங்கிடராங்கன்னு இப்போ புரியுதா? :)
    ஷோபா

    ReplyDelete
  11. Idhukagavey oru thaba ooruku vandhutu ponum....

    ReplyDelete
  12. ’அகண்ட காவிரி’ன்னு படிச்சிருக்கேன்; இது ரொம்ப சின்னதா இருக்கே?

    ReplyDelete
  13. \\ராமலக்ஷ்மி said...

    //அப்பா காவிரில தண்ணி வந்துடுச்சாம். இன்னிக்கு பாடம் எதும் இல்லை//

    :)!

    படங்களை சீக்கிரம் போடுங்கள்.
    \\

    போட்டாச்சு போட்டாச்சு:-)) (வடிவேலு பாணியில் படிக்கவும்:_))

    ReplyDelete
  14. \\NIZAMUDEEN said...

    காவிரி வந்த சேதி; மகிழ்வான சேதி!!
    படம் இன்னும் போடலை; வருத்தமான
    விஷயம்!
    \\
    வருத்தம் போக்கியாச்சு நிஜாம்:-))

    ReplyDelete
  15. \\வழிப்போக்கன் - யோகேஷ் said...

    Nattuvoda Rathiri poyi kuthiratheenka...
    nattu ungala thannikulla mukkida poran..
    \\ வாப்பா யோகேஷ்! நாங்க உஷாருல்ல, ஜாக்கிரதையா இருந்துப்போம்ல;-)

    ReplyDelete
  16. \\Shobha said...

    பதிவு ரொம்ப நல்லா இருக்கு அபிஅப்பா. அவயாம்பிகை & காவேரி தாய் ஒப்பீடு சூப்பர் . அவயாம்பிகையோ, காவேரியோ, கிருஷ்ணாவோ (நதியும்தான்) ஏன் எல்லா தாய்மார்களும் கோவம் வந்தா பொங்கிடராங்கன்னு இப்போ புரியுதா? :)
    ஷோபா
    \\ஷோபாக்கா!பதிவு நல்லா இருக்கா இல்லியா? ஏகப்பட்ட உள்குத்தோட இருக்கு பதில் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....கோவம் வந்தா நல்லா பொங்குராங்க போங்க:-)))

    ReplyDelete
  17. Vengadavasan S said...

    Idhukagavey oru thaba ooruku vandhutu ponum....
    \\

    வா மச்சி வா! கண்டிப்பா வா!

    ReplyDelete
  18. \\ஹுஸைனம்மா said...

    ’அகண்ட காவிரி’ன்னு படிச்சிருக்கேன்; இது ரொம்ப சின்னதா இருக்கே?
    \\
    ஹுசைனம்மா! அதல்லாம் வாஸ்தவம் தான். காவிரி ஆடுதாண்டு காவிரியாகுடகு மலையிலே ஆரம்பிச்சு (ஒரு ஆடு ஈசியா தாண்டிடும் அளவே 3 அடி அகல காவிரி) திருச்சிக்கு முன்னர் முக்கொம்பு என்னும் இடத்தில் தன் அதிகபட்ச அகலமாக இருந்து பின்னர் அதுவே அங்கு இரண்டாக பிரிந்து காவிரியாகவும் கொள்ளிடமாகவும் பிரியுது. ஆனாலும் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்திலே கூட அகண்ட காவிரி தான். பின்னர் கல்லணைக்கு பிறகு காவிரி குறுகி சின்னதாகி தஞ்சையில் ஒரு நார்மல் ஆறு அளவு வந்து கும்பகோணத்தில் இன்னும் சின்னதாகி மாயவரத்தில் இப்போ படத்தில் இருப்பது போல ஆகி பின்னர் அங்கிருந்து 23 கிமியில் பூம்புகாரில் கடலில் கலக்கும் போது ஆரம்பித்த மாதிரியே ஆடுதாண்டும் காவிரியாகி கலக்கும்.

    இதான் எங்க் காவிரியின் கதை!

    ReplyDelete
  19. கரை தொட்டு ஓடுகிறாள் காவேரி அன்னை. அருமையான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  20. \\ராமலக்ஷ்மி said...

    கரை தொட்டு ஓடுகிறாள் காவேரி அன்னை. அருமையான பகிர்வுக்கு நன்றி.
    August 24, 2010 6:04 PM \\

    ஆமாம் பிரண்ட்! எங்க ஊர் தான் கிட்ட தட்ட காவிரியின் கடைமடை. ஒன்லி விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் மட்டுமே. கும்பகோணத்தை எடுத்து கொண்டால் கூட பட்டு நசவு,(திருபுவனம் பட்டு, எவர் சில்வர் பாத்திர உற்பத்தி, பித்தளை குத்துவிளகு உற்பத்தி, காய்கறி மொத்த விற்பனை சந்தை, புகையிலை, சீவல், வெற்றிலை கொடிக்கால் என அனைத்து சந்தைகள் என எத்தனையோ தொழில் சார்ந்த ஒரு நகரமாகி போனது. தஞ்சையும் அப்படியே.

    காவிரி காவிரி அவளை மட்டுமே நம்பி உயிர் வாழும் நகரம் நாங்க மட்டுமே. விவசாயம் தவிர தெரிந்த விஷயம் அரசியல் மட்டுமே.

    இன்றைக்கு காவிரியில் தண்ணீர் வந்தாச்சு. இன்றைக்கு கடைத்தெருவில் குடை விற்பவன் முதல், கையை நீட்டு பச்சை குத்திவிடுகிறேன் என கூறும் குறத்தி வரை காவிரி வந்ததை தான் சிலாகித்து பேசுவர். ஏன்னா அதை பேஸ் பண்ணி தான் எல்லாமே. நானே இதை பத்தி இன்னும் நல்லா கூட எழுதியிருக்கலாம். வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  21. அழகா இருக்கு உங்க காவிரி... வர்ணனையும் நல்லா இருக்கு

    ReplyDelete
  22. அந்த ஆடு பயபுள்ள எங்கே போய் ஒளிஞ்சுருக்கு பாருங்களேன்! கொஞ்சம் தூரம் நடந்துபோனா எம்மாம் பெரிய மண்டபம் இருக்கு ஹாயா கால் நீட்டி படுத்துகிடலாம் ஹம்ம்ம் நான் சொன்ன எது கேக்குது ! :)))

    ReplyDelete
  23. காவிரியாற்றில் இப்போவாவது தண்ணீர் வந்ததே. ஆகஸ்ட் 15 அன்று என் மகள் 'இன்னும் காவேரியில் தண்ணியே வரலப்பா' என்று சொல்லி வருத்தப்பட்டால், உங்கள் படத்தை காண்பிக்கிறேன்.

    ReplyDelete
  24. இப்பதான் போட்டோ பார்த்தேன்...

    பாபுலர் டிஜிடல் ப்ரெஸ் வாசல்லெருந்து எடுத்த படம் நல்லா இருக்கு...

    ReplyDelete
  25. காவிரின்னதும் நான் ஓடி வந்துட்டேன் அபி அப்பா ! படிச்சிட்டுவரேன் இருங்க

    ReplyDelete
  26. ஸ்ரீரங்கம்ல வாழ்ந்த நாட்களின் அகண்ட காவிரி நினைவுகள் வருகின்றன !

    ReplyDelete
  27. நடந்தாய் வாழி காவேரி என்று பிரபல எழுத்தாளர்கள் காவிரிகூடவே பயணித்து எழுதின கட்டுரை படித்திருக்கிறீர்களா? அருமையாய் இருக்கும் காவிரி என்றாலே ஏதோ ஒரு இனிமை மனசில் சூழ்கிறது இந்தப்பதிவைப்படிக்கும்போதும் அபி அப்பா அப்படி ஒரு உணர்வு! படங்கள் இயல்பாய் உள்ளன.

    ReplyDelete
  28. 3 வது படம் அம்மா மண்டபம் படித்துறையா..?

    ஒரு முறை அங்கு கால் வழுக்கி விழுந்ததுண்டு (இது போன்ற நினைவுகள் ஏன் ஞாபகத்தில் தங்குகின்றன!).

    திருமண நாளன்று அங்கு மட்பாண்டத்திலிருந்த முளைப்பயிர்களை விட போக,துளியும் தண்ணீர் இல்லாததால் அருகிலிருந்த குளமொன்றில் பயிர்களைக் கொட்டினோம்!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))