June 24, 2008
அரை நாள் கழிந்தது "மொக்கை"யாக!!!!
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அப்பா வாங்கி வந்த ஒரு மர்ஃபி ரேடியோவை நான் தொடக்கூடாது என கூறியதால் மிகுந்த சிரமத்துக்குப் பின் இருபத்தி ஐந்து ரூபாய் சேர்த்து டெல்லி சரோஜினி நகருக்கு பதினைந்து பைசா தபால் கார்டில் "அய்யா, நான் மிகுந்த சிரமப்பட்டு சேர்த்து வைத்திருக்கும் இருபத்தி ஐந்து ரூபாய்க்கு அப்பாவின் மர்ஃபியை விட சத்தமாக பாடக்கூடிய ரேடியோவை V.P.P பார்சலில் அனுப்பி வைத்தால் நான் காமராஜ் அப்பாவிடம் (போஸ்ட் மேன்) பணத்தை கொடுத்துவிட்டு ரேடியோவை வாங்கி கொள்கிறேன்" என கடிதம் போட்டுவிட்டு ஒரு மாதம் கழித்து காமராஜ் அப்பா கையிலே நக்கி நக்கி எண்ணி இருபத்தி ஐந்து செலுத்தி ஒரு அருமையான செங்கல்லை வாங்கியவன் இந்த ஆபீஸர் என்பது அந்த கென்யாகாரனுக்கு தெரிந்திருக்குமோ என சந்தேகப்பட்டுக் கொண்டே தலை துவட்டி கொண்டு ஆபீஸ் வந்துவிட்டேன்.
ஆனாலும் அந்த கென்யாகாரனை விட மனசில்லை. அதே நம்பருக்கு விளித்தேன். போனை எடுத்த பெண்ணிடம் "ரொம்ப சந்தோஷம்ங்க அம்மணி, என்னால இப்ப இருக்கும் சூழ்நிலையிலே அவ்விட வரமுடியாது போல இருக்கு. காரை போஸ்டல்ல அனுப்பிடுங்க" என்று சொன்னதுக்கு "பரவாயில்லங்க அபிஅப்பா, ஒரு 1000 டாலர் சர்வீஸ் சார்ஜ் அனுப்பி வையுங்க நாங்க உங்க வண்டிய நல்லா நாய் தோல் போட்டு துடைச்சு பள பளன்னு அனுப்பி வைக்கிறோம்"ன்னு சொன்னதும் எனக்கு பத்திகிச்சு. சுதாகரன், திவாகரன் மாதிரி பின் சீட்டிலே உக்காந்து போகலாமா இல்லாட்டி முன் சீட்டிலே உக்காந்து வடகரை பாய் மாதிரி போகலாமா என எல்லாவிதத்திலும் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தவனாய் திரும்ப அந்த அம்மனிக்கு போன் செய்து அந்த 1000 டாலரை கழித்து கொண்டு மீதி 79000 டாலரை மணிஆர்டரில் அனுப்ப முடியுமா என கேட்க அந்த பிடிவாதகார அம்மணி "அபிஅப்பா நீங்க 1000 டாலர் அனுப்பினா நாங்க 81000 டாலரா வேண்டுமானா அனுப்பறோம். ஆனா நீங்க தான் முதல்ல 1000 அனுப்ப வேண்டும்" என சொல்லிவிட்டது.
நானும் விடாபிடியாக பேரம் பேசிகொண்டு இருக்கிறேன் SMS வழியாக. ஒரு வழியாக " ஒரு பத்து டாலராவது அனுப்புங்க ப்ளீஸ்"ன்னு அழ ஆரம்பித்துவிட்டது அந்த அம்மணி. நான் ஒரு பெப்சிக்கு பேரம் படியுமா என யோசித்து வருகிறேன். கென்யாவிலே ஏதாவது பதிவர் இருந்தா சொல்லுங்கப்பா. நான் அவங்களுக்கு பரிசா அந்த டொயோட்டோவை தந்துவிடுகிறேன்.
கொஞ்ச நேரம் முன்னே ஒரே ஃபயர் அலாரம் சைட் முழுக்க அலறியது. சேஃப்டி ஆளுங்க அங்கயும் இங்கயும் பயர் பயர்ன்னு ஓட ஒருத்தனும் அசம்பிளி பாயிண்டுக்கு வரலை. அவனவன் அவனவன் வேலையை பார்த்துகொண்டு இருக்கான். search team ஆளுங்க சாண்ட்விச் சாப்பிடுறானுங்க. ரிஸ்க் டீம் ஆளுங்க ரிலாக்ஸா இருக்கானுவ. இது சாதாரண சேஃப்டி டிரில் தான் என எல்லோருக்கும் தெரிந்து விட்டிருந்ததே காரணம். ஆக சேஃப்டி டிரில் பெயிலியர் ஆகிப்போச்சு. காரணம் சேப்டி டிரில் 11 மணிக்கு என்கிற பரம ரகசியம் எப்படியோ கசிந்து விட்டிருக்கிறது. அது பெரிய விஷயமில்லை தான். ஒரு 100 பேருக்கு ரகசியம் கசிந்தால் பரவாயில்லை. ஒட்டுமொத்த 5000 பேருக்கும் எப்படி கசிந்தது என எல்லோரும் ஆச்சர்யமாக காரணத்தை யோசித்து கொண்டிருக்கிறார்கள். இப்படியாக மணி இப்போது மதியம் ஒன்று ஆகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு பொட்டி தட்டி கொண்டிருக்கிறேன் இப்போது!
நேற்று இரவு நான் தூங்க போகும் போது மணி விடியற்காலை இரண்டு. அதுவரை தமிழ்மணத்திலே மேய்ந்து கொண்டிருந்ததில் சில விஷயங்கள்....1. திண்டுக்கல் சர்த்தாரும் உண்மை தமிழனும் ஒரே ஆள் தானா என்கிற சந்தேகம். 2. மனைவிக்கும் துணைவிக்கும் உள்ள ஆறு வித்யாசங்களை கோவியார் கண்டுகொண்டாரா. 3. பொடியன் சஞ்சய்க்கும் லக்கியாருக்கும் இருக்கும் பனிப்போர் கைகலப்பு வரை போகுமா?புஸ்ஸா போகுமா? 4. யானை பற்றிய பதிவு போட்ட நானானியக்கா அடுத்து பூனை பற்றிய பதிவு போடுவார்களா. 5. ராமலெஷ்மி கவிதையில் நான் போட்ட பின்னூட்டத்துக்கு என்ன பதில் வர போகிறது? 6. சினிமா நிருபர் போட்ட நயந்தாரா படத்தை நான் பார்க்கவில்லை என நான் எந்த கோவிலில் போய் சத்தியம் செய்தால் மக்கள் நம்புவாங்க? 7. ரஷ்ய மருத்துவர்அய்யா ராமனாதன் போட்ட லேட்டஸ்ட் பதிவு பதிவுலகத்தை எந்த மட்டிலும் பாதிக்கும்? (அய்யனார் உனக்கு கோவில் கட்டி கும்பிடலாமய்யா) 8. ஆயில்யனின் 500 பதிவு இன்னும் எத்தனை நாளில் அரங்கேறும்.9. வெட்டி பாலாஜியின் கவுண்டர் பதிவு பாலாஜி பழைய ஃபார்ம்க்கு வந்துவிட்டதை காட்டுகிறது.10. மங்களூர் சிவா ஏன் கவிதைக்கு கண்வர்ட் ஆகிவிட்டார்.
மிக அதிகமாக தூக்கம் வந்ததால் கீழே வந்து ஒரு டீ சாப்பிட்டு போய் படுக்க நினைத்த போது என் கூட டீ சாப்பிட வந்த ஆள் ஒரு சேஃப்டி இன்ஜினியர். விடிந்தால் சைட்டில் காலை 11 மணிக்கு சேஃப்டி டிரில் இருப்பதால் அதற்கான வேலை எல்லாம் செய்து கொண்டு இருப்பதாகவும் தூக்கம் கலைக்க ஒரு டீ சாப்பிட வந்ததாகவும் சொன்னான்." போப்பா எனக்கு தூக்கம் வரவேண்டி நான் டீ சாப்பிட வந்தேன்" என சொல்லிவிட்டு வந்து படுத்துவிட்டேன். காலை ஐந்து மணிக்கு எல்லாம் ஒரு SMS என் கைபேசியில். எனக்கு 80000 அமரிக்க டாலர் மதிப்புள்ள டொயோட்டோ லெக்சஸ் கார் பரிசு விழுந்திருப்பதாகவும் அதை நான் கென்யாவில் வந்து பெற்றுக்கொள்ள வர வேண்டுமாய் கேட்டுக்கொண்டது அந்த் SMS. எழுந்து குளிக்க போய்விட்டேன்................
June 17, 2008
கலைஞருக்கு வயசாகி போச்சுங்கோவ்வ்வ்வ்வ்!!!
போனது போகட்டும்! மானம் ஒண்றே பெரிது என இப்போதாவது தன் கட்சிகாரர்கள் மனசு கோணாமல் நடந்தாயே இது போதும். உனக்கு வயசாகி போச்சுங்கோவ்வ்வ்வ்ன்னு ஊளையிட்ட ஞானிகளுக்கு இது ஒரு சவுக்கடி!
நீ சீறினால் உன் கோவம் எந்தமட்டும் பாயும் என அவர்கள் புரிந்து கொள்ளட்டும். காடுவெட்டியோ, மரம் வெட்டியோ, ஆகமட்டும் தமிழகத்தின் பசுமை வெட்டிகளை வெட்டி விட்டாயே அது போதும்.
உனக்கு, உன் கட்சிக்கு சரித்திரம் இருக்கிறது. நீ மிசாவிலே வளர்த்தாய். காங்கிரஸ் கூட சுதந்திரம் வாங்கியதாய் சொல்லி கொள்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் உன் கூட மிசாவில் செத்தார்கள். பாஜக வுக்கு கூட வரலாறு இருக்கின்றது. அத்தனை ஏன் அதிமுகவுக்கு கூட தங்கள் தலைவரின் இதயக்கனி படத்தின் முதல் காட்சியை நடத்த விடாமல் விஷமிகள் கார் டயரை கொளுத்தி கியூவிலே போட்டு நான்கு மணி நேரம் படத்தை தாமதப்படுத்திய வரலாறு(????) இருக்கின்றது.
ஆனால் வரலாறு எந்த சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும் என விசயகாந்திடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவுக்கான அறிவு படைத்த மேதைகளிடம் இத்தனை நாள் நீ மௌனம் காத்தது ஞானி சொன்னது போல் உனக்கு வயதானதையே காட்டுவதாக கட்சிக்காரன் புலம்புவது என காதில் கேட்கிறது.... என்னத்த செய்ய!!!
இனி நாங்கள் என்ன சொல்வது உனக்கு, உனக்கு தெரியாததா, மதிமுக என்ன ஒரு கட்சியை சல்லி சல்லியாக வெட்டினாயே உரு தெரியாமல் ஆக்கினாயே, அந்த கட்சியை பொருட்காட்சியில் போய் பார்க்க வைத்தாயே, அந்த அஸ்திரத்தை எடு! ஜெயித்துவிட்டு வா! உன் நூற்றாண்டு விழா கொண்டாட்ட வேலை எங்களுக்கு அதிகமாக இருக்கின்றது! புதுப்பொலிவோடு கலந்து கொள் அதிலே!!!
June 16, 2008
லாகே ரகோ அபிஅப்பா!!!
ஆஸ்பத்திரின்னா அப்படி இப்படி இருக்காது. சும்மா பத்து கிரவுண்டு நிலத்திலே பிரம்மாண்டமாய் இருக்கும். இரண்டு மகா பெரிய நுழை வாயில். அதன் வழியா மாயூரநாதர் தேரே உள்ளே போய் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வெளியே வரலாம். அப்படி ஒரு நுழை வாயில். உள்ளே நுழைந்தவுடன் ஒரு மாந்தோப்பு. மாந்தோப்பின் நடுவே ஒரு மிகப்பெரிய தாமரை வடிவிலான பூச்செண்டு வடிவத்தில் ஒரு செயற்கை நீரூற்று. அதன் பின் 60 அடி அகலத்தில் 18 படியுடன் கூடிய அரண்மனை மாதிரியான ஆஸ்பத்திரி. அதனை சுற்றியும் மிகப்பெரிய வேப்ப மரங்கள்.படியில் ஏறி உள்ளே போனால் இடப்பக்கம் டாக்டரின் ரூம். டாக்டர் ஜன்னலை திறந்தால் வேப்பம் பூ வாசமும் வேப்பம் காற்றும் அப்படி ஒரு அருமையாக இருக்கும். உள்ளே பிரசவ அறை நடு நாயகமாக, பின்னே நல்ல காற்று வரும்படியான நல்ல படுக்கை வசதிகள். அப்படியாக தருமை ஆதீனம் கட்டி கொடுத்த தோடு ஒரு நல்ல ஆங்கிலோ இந்திய பெண் டாக்டரையும் வேலைக்கு அமர்த்தி அது தவிர அத்தனை மருந்து மாத்திரைகளும், பழம், பால், நல்ல ஆரோக்கியமான பிரட் மற்றய அனைத்து வசதிகளோடும் அந்த ஆஸ்பத்திரி ஒரு ஆஸ்பத்திரியின் வாசமின்றி அப்படி ஒரு ரம்மியமாக இருந்தது. எங்க ஊர் மக்கள் "வெளியே" என்று போட்டிருக்கும் வழியாக உள்ளே போய் குழந்தை பெற்று கொண்டு "உள்ளே" வாசல் வழியாக வெளியே வந்து கொண்டு சந்தோஷமாக இன விருத்தி செய்து கொண்டிருந்தனர். ஆனால் அந்த டாக்டர் மட்டும் தன் பியட் காரிலே "உள்ளே" வழியாக உள்ளே போய் "வெளியே" வழியாக வெளியே வந்து ஊழியம் செய்து கொண்டிருந்தர்.
இப்படி ஒரு நல்ல ஆஸ்பத்திரியை ஆதீனம் தங்கள் வீட்டுக்கு எதிரேயே கட்டி கொடுத்ததால் எங்கள் பாட்டிகள் ஆளுக்கு ஒரு பிள்ளை பெற்று கொண்டு முதல் போணி செய்து தங்கள் நன்றியை தெரிவித்தார்கள். இப்போது அந்த டாக்டரை பற்றி சொல்ல வேண்டும். பெயர் "ரோட்ரிஸ்". கவுன் போட்டு கிட்டு புது புது அர்த்தங்கள் சவுகார்ஜானகி மாதிரி டுக் டுக்ன்னு நடந்து வருவாங்க. எங்க ஊரிலே பியட் கார் வச்சிருந்த இரண்டு பேரில் அவங்க ஒருத்தவங்க. அவங்க வீட்டு காரர் பெயர் "சுருட்டு தொரை" அது தான் பெயரான்னு தெரியாது நாங்கள் அப்படித்தான் கூப்பிடுவோம். அவர் ஆங்கிலேயர் என்பதால் கோட் சூட் போட்டுகிட்டு H.வசந்தகுமார் மாதிரி இருப்பார்ன்னு நீங்க நெனச்சா அது தப்பு. ஒரு காக்கி கலர்ல தொள தொள டவுசர் போட்டுகிட்டு சிக்கன் பிராங் மாதிரியான சுருட்டை வாயிலே கவ்விகிட்டு 24 மணி நேரமும் அவர் வீட்டு தோட்டத்தில் ஏதாவது ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றி கொண்டே இருப்பார். சுருக்கமாக சொல்ல போனால் ரயில்வேயில் கரி இஞ்ஜினில் கரி அள்ளி கொட்டுபவர் போல இருப்பார். அவர் இந்திய ரயில்வேயில் இஞினியராக வேலை பார்த்து ரிட்டையர்டு ஆகிவிட்டதாக சொல்வார்கள். அந்த தம்பதிக்கு குழந்தைகள் உண்டா இல்லியான்னு எல்லாம் தெரியாது. லண்டனில் இருப்பதாக சொல்லுவார்கள். அவர்களுக்கு தருமை ஆதீனம் சார்பிலே டவுன்ஸ்டேஷன் (ரயில்வே ஸ்டேஷன்) எதிரே அமைதியான வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது.
அப்போதெல்லாம் யாரும் ஆஸ்பத்திரி போய் குழந்தை பெற்று கொள்ள பயந்த காலம். ஆனால் என் குடும்பம் மட்டும் எங்க ஊர் மக்களுக்கு ஒரு அவேர்னஸ் உண்டாக்கும் பொருட்டு அந்த ஆஸ்பத்திரியை எங்கேஜ்டாகவே வைத்திருந்தது.சும்மா மாலை 7 மணி வரை சாதாரணமாக பேசி கொண்டு இருக்கும் ஏதாவது ஒரு பெரியம்மா " இருங்க ஒரு எட்டு எதிர்க்க ஆஸ்பத்திரி வரை போய் விட்டு வாரேன்"ன்னு போய் அடுத்த நாள் ஒரு தம்பிய கூட்டிகிட்டு வீட்டுக்கு வருவாங்க. கூட துணைக்கு போன ஏதாவது ஒரு சின்ன பாட்டியும் வரும் போது ஒரு குட்டி சித்தப்பாவை கூட்டிகிட்டு வருவாங்க. ஏதோ கடைமுழுக்கு கடைக்கு போய் காதோல கருகமணி வாங்கி வரும் மாதிரி அத்தனை ஒரு சுலபமாக இருந்தது அப்போது. இப்படி யாராவது குழந்தை பெத்துக்க போனா நாங்களும் பட்டாளமாக போய்விடுவோம். அந்த ராஜாஜி ஹால் மாதிரியான படிகளுக்கு மேலே இருக்கும் திண்னையில் படுத்தால் அப்படி ஒரு வழுவழுப்பு, ஒரு சுகந்தமான காத்து வரும். அண்ணன் தம்பிகள் அத்தனை பேரும் அடுத்த புது வரவான குட்டி சித்தப்பாவுக்கோ, குட்டி தம்பிக்கோ ரொம்ப ஆர்வமா காத்து கிடப்பதாக மற்றவர்கள் நினைத்தாலும் உண்மை அதுவல்ல. அங்கே கிடைக்கும் பிரட் வகையறாக்களுக்காகவே எங்கள் வம்சம் விருத்தியாக நாங்கள் ஆண்டவனை வேண்டிக்கொண்டது கொஞ்சம் அதிகப்படி.
அப்படியாக ஒரு நாள் வார் வச்ச டவுசர் போட்ட நான் உக்காந்து 'பன்'னை பாலில் முக்கி முக்கி கபளீகரம் பண்ணிகிட்டு இருந்த போது நம்ம சவுகார் ஜானகி டாக்டர் ரவுண்ட்ஸ் வந்துட்டாங்க. குழந்தை பெத்த புண்ணியவதி பெரியம்மா மாத்திரம் படுத்திருக்க, சுத்தி உக்காந்து சவாலே சமாளி ஜெயலலிதா என்ன இருந்தாலும் அப்படி அடமண்டா இருக்க கூடாதுன்னு வருத்தபட்டுகிட்டு இருந்த மத்த பெரியம்மாக்களும், சித்திகளும், சில பாட்டிகளும் ( அதான் எல்லோருக்குமே வீடு எதிர் வரிசை தானே, ஆஸ்பத்திரியே கிட்ட தட்ட எங்க சொந்த ஆஸ்பத்திரி மாதிரிதானே... எல்லோருமே பொழுது போக்க வந்திருந்தாங்க) எழுந்து நிற்க ரோட்ரிஸ் டாக்டர் என்னை பார்த்து என்னவோ கேட்டாங்க ஆங்கிலத்தில். நானா சும்மா இருப்பேன். எழுந்து நின்னு " மை நேம் ஈஸ் தொல்காப்பியன், ஐ யம் ஸ்டடியிங் இன் நேஷனல் பிரைமரி ஸ்கூல் ஃபோர்த் ஸ்டேண்டர்டு ஏ செக்ஷன், மை சார் நேம் ஈஸ் துண்டு முறுக்கி சார்" ன்னு சொல்ல டாக்டர் முகம் கொஞ்சம் கடுகடுப்பானது. அவங்க வேற "நீ ஏண்டா நாதாறி இங்க உக்காந்து இருக்கே"ன்னு ஏதோ கேட்டிருப்பாங்க போல இருக்கு. அவங்க இந்த தடவை 37 செண்டி மீட்டருக்கு கொஞ்சம் நீட்டா ஏதோ கேட்கவே நானும் 38 செண்டிக்கு ஹம்புலி ரெக்குவஸ்ட் யூ ன்னு லீவ் வெட்டரை ஒப்பிக்க சுத்தி இருந்த தாய்குலங்கள் அத்தனையும் படக்கு படக்குன்னு தாலிய எடுத்து கண்ணுல ஒத்திகாத குறை தான். அத்தன ஒரு பெருமிதம். கடைசியா "காளைமாட்டு சாணி"ன்னு சந்தோஷமா சொல்லிட்டு போயிட்டாங்க.
அன்றைக்கு முதலே எனக்கும் அவங்களுக்கும் ஒரு பனிப்போர் தொடங்கிடுச்சு. எப்பவும் அங்கே மாங்காய் அடிச்சுகிட்டு ஜாலியா இருக்கும் என்னை பார்த்தாலே அவங்களுக்கு கோவம் கோவமா வந்துச்சு. அவங்க டிரைவர் பேர் பாரூக்ன்னு பேர். மீசை வச்சுகிட்டு இருப்பார். அவர்கிட்டே சொல்லி என்னை இனிமே இந்த ஆஸ்பத்திரி பக்கம் பார்க்க கூடாதுன்னு சொல்லி விட்டாங்க. விடுவனா நான். ஆஸ்பத்திரி எல்லைக்கோட்டுக்கு அப்பால் நின்று மாங்காய் அடிக்க ஆரம்பித்தேன். அது தவிர அவங்க டூட்டிக்கு வரும் போதல்லாம் போய் நின்னு "குட்மார்னிங்" சொல்லி அவங்க குருதி அழுத்தத்தை அதிகரிக்க செய்தேன். இது போதாதுன்னு எங்க தெருவிலே வாங்கின காத்து பத்தாதுன்னு ரயில்வே ஸ்டேஷனுக்கு காத்து வாங்க போவோம். அப்ப அவங்க வீடு எதிரே தானே இருக்கு அங்கயும் போய் என் ஆங்கில புலமை எல்லாம் காட்ட ஆரம்பிச்சேன். அப்பதான் அவங்க ஒரு நாள் என்னை கூப்பிட்டு "உனக்கு என்னத்தான் பிரச்சனை"ன்னு கேக்க நான் "எனக்கு இங்கிலீஷ் சொல்லி தாங்க டாக்டர்"ன்னு கேட்டேன். சரி இவன் கிட்டே சமாதானமா போயிடலாம்ன்னு நெனச்சு ஒத்து கிட்டாங்க. கொஞ்ச நாள் போச்சு. நல்ல இம்புரூவ்மெண்ட் தெரிஞ்சுது. "போடா கம்மனாட்டி"ன்னு என்னை திட்டும் அளவு தமிழ் கத்துகிட்டங்க டாக்டர். எனக்கு ஆங்கிலம் சொல்லி கொடுக்கும் போதேல்லாம் "நான் என்ன பாவம் செஞ்சேன்" ன்னு சில சமயம் தலையிலே அடிச்சு பாங்க. சில சமயம் ஜீசஸை திட்டுவாங்க தன்னை படைத்தமைக்கு.
ஒரு நாள் child க்கு பண்மை என்னன்னு கேட்டதுக்கு நான் childs ன்னு பட்டுன்னு சொன்ன போது தான் அவங்க அந்த முடிவை எடுத்தாங்க. வடிவேலு மாதிரி "முடியல என்னால முடியல... லண்டன் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து 100 கிமீ தூரத்திலே ''நாட்ராம்பள்ளி"ன்னு எங்க சொந்த கிராமம் இருக்கு நான் அங்க போய் விறகு சுள்ளி பொறுக்கி வரட்டி தட்டி பொழச்சுக்கறேன். என் ஹஸ்பெண்ட் எதுனா கருப்பன் கோவில்ல குறி சொல்லி எனக்கு கஞ்சி ஊத்துவார்"ன்னு லண்டனுக்கே கிளம்பிட்டாங்க.
காந்திஜி மாதிரி பல்லாயிரக்கணக்கான ஆங்கிலேயனை விரட்ட முடியாட்டியும் என்னால முடிஞ்ச அளவு ஒரு ஆங்கிலேய குடும்பத்தை கத்தி இன்றி ரத்தமின்றி அகிம்சா முறையிலே நாட்டை விட்டு வெளியேற்றினேன். ஏதோ என்னால முடிஞ்சது இந்த நாட்டுக்காக இவ்வளவு தான்.
திஸ்கி: இன்று டெல்லியே மிரளும் அளவு பிறந்த நாள் கொண்டாடும் "குட்டி இளவரசி" மாதினி பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
June 13, 2008
"தசாவதாரம்" விமர்சனம்!!!! by அபிஅப்பா!
"அடியேன் ராமானுஜதாசன்" என்கிற அதிரடியில் ஆரம்பிக்கும் படம் படமுடிவில் கே.எஸ்.ரவிக்குமார் "உலகநாயகனே" என பாட தொடங்கும் வரை நீடிக்கிறது. நடு நடுவே அஸினோடு பிசின் போல ஒரு டூயட் பாடியிருந்தால் கூடவோ, அல்லது கமலின் கூட்டாளிகள் வையாபுரி,சந்தானபாரதி,ரமேஷ்கண்ணா,சிட்டிபாபு,பாஸ்கர் ஆகியோர் கொஞ்சம் நீட்டி வாசிச்சு இருந்தாலோ படம் பப்படமாகியிருக்கலாம். பண்ணிரண்டாம் நூற்றாண்டில் நடந்த அல்லது நடந்ததாக நம்பப்படும் ஒரு நிகழ்வோடு அதற்கான கமலின் விளக்க பின்னனி குரலோடு ஆரம்பிக்கிறது படம்.
அடுத்த காட்சி நேராக வாஷிங்டன் தாவிவிடுகிறது நிகழ்காலத்திக்கு. அதாவது சமீபத்து நான்காம் தேதி, டிசம்பர் மாதம் 2004 அன்று ஆரம்பமாகும் கதை டிசம்பர் 26ம் தேதி வேளாங்கண்னி சுனாமியில் முடிவடைகிறது. இந்த இருபத்தி இரண்டு நாட்கள் ஓட்டம் தான் படத்தின் கதை.
அமரிக்க விஞ்ஞானியான கமல் கண்டிபிடிக்கும் ஒரு வஸ்து ஒரு நாட்டையே அழிக்க கூடிய அளவிலான சக்தி கொண்டதாக இருக்கிறது என்பதை அந்த லாபரட்ரியின் 'அனு' குரங்கின் மூலமாக சின்னதாய் ஆனால் பிரம்மாண்டமாய் நமக்கு புரிய வைத்த கோவிந் என்கிற விஞ்ஞானி கமல் சென்னையில் கொல்டி பாலாஜிக்கு ஸாரி பல்ராம்நாயுடுவுக்கு புரிய வைக்க "சார் உங்களை விட கொஞ்சம் சீனியர் யார்கிட்டயாவது நான் பேசனும்"ன்னு மாட்டிகிட்டு விழிப்பது அருமையோ அருமை.
லைட்டர் மாதிரியான டப்பாவில் இருக்கும் அந்த வஸ்து அமரிக்காவிலிருந்து ஒரு "பேக்கு" நண்பனின் சொதப்பலால் சிதம்பரம் கீழசன்னதிக்கு கூரியர் அனுப்பப்படுகிறது. ஆங்கிலேய வில்லன்(அதுவும் கமல் தான்) தன் குபீர் மனைவி மல்லிகாஷெராவத்துடன் அதை துரத்தி சென்னை செங்கல்பட்டு, பாண்டி வழியாக சிதம்பரம் வர, விஞ்ஞானி கோவிந்தும் வர கீழ சன்னதியில் தான் அய்யங்கார் ஆத்து பொண் அசின், அவரின் 94 வயது பாட்டி கிருஷ்னவேணி (அதுவும் கமல்) இருவரும் கதையில் பிசின் போல ஒட்டுகிறார்கள். அந்த டப்பா கோவிந்தராஜரின் உற்ச்சவமூர்த்தியின் உள்ளே போய் விடுகிறழ்து பாட்டியின் லீலையால். அதற்கு மேல் மல்லிகாவின் கால்ஷீட் கிடைக்காதமையால் கீழசன்னதியிலேயே அவர் கதை முடிகிறது.
பின்னெ என்ன கோவிந், அசின்கூட கோவிந்தராஜரும் பயணிக்கிறார். அப்படியே வேளாங்கண்ணிக்கு போயிடறாங்க. நடுவே ஏழு அடி உயர கலிபுல்லாகான் கமல் அவங்க அப்பா நாகேஷ், அம்மா விஜயா எல்லாம் எதுக்கு வந்தாங்கன்னு சொல்ல முடியலை.
அதே போல பஞ்சாபி அவ்தார்சிங்(கமல் தான்) மனைவி ஜெயப்ரதா அண்ட் கோ வர்ராங்க. அதை எல்லாம் விடுங்க. இப்படியே போய் அந்த வில்லனையும் அந்த வஸ்துவையும் சுனாமி வந்து அழிச்சிடுது. 12ம் நூற்றாண்டில் கடலின் உள்ளே போன கோவிந்தராஜ பெருமாள் வந்து கரை ஒதுங்கி இருக்கார். இந்த காட்சிகளின் போது சுனாமி பிணங்கள் மீது நம் கவனம் போய் விடுவதால் கமல் அசினிடம் பேசும் வசன விளக்கம் எதுவும் நம் காதில் விழாமல் போய் விடுகிறது.
இதன் நடுவே வின்செண்ட் பூவராகவன் என்கிற நாகர்கோவில் தமிழ் பேசும் பாத்திர கமல். என்ன திடீர்ன்னு கருப்பு எம்ஜிஆர்ன்னு பார்த்தா அவரும் கமல். அருமையான நடிப்பு.
இதன் நடுவே ஜப்பான் கமல். பத்து வேஷம் போடனும் என முடிவு செஞ்சாச்சு. அதனால அவரும் படத்தில் உண்டு.
இதுதாங்க படம்.
இப்போ என் கருத்து. படம் நல்லா இருக்கு. அருமையான உழைப்பு இருக்கு. அர்பணிப்பு அப்பட்டமா தெரிகின்றது. இந்த படத்துக்கு விமர்சனம் எழுதி "இன்ஷா அல்லா"ன்னா இன்னா அர்த்தம் என டைரக்டருக்கு தெரியல, சிதம்பரம்-வேளாங்கண்ணி ரூட் சரியா இல்ல. அது நொட்டை இது சொத்தை என்று சொல்வதெல்லாம் மகா பாவம். அது அந்த உலக கலைஞனை உற்சாகம் இழக்க செய்யும். படம் பாருங்க. ஆனால் அதுக்கு முன்னால செய்ய வேண்டிய விஷயத்தை சொல்கிறேன்.
1. தயவு செய்து விமர்சனங்களை படிக்காதீர்கள். குறிப்பாக தமிழ்மண விமர்சனங்களை படிக்காதீர்கள்.
2. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை பக்கத்தில் உள்ளவர்கள் பேசுவதை கேட்க வேண்டாம்.(என் பக்கத்தில் ஒரு பொண்ணு அநியாயம் பண்ணிடுச்சு. ராமானுஜதாசரின் மகனாக ஒரு 5 வயசு பையன் வருவான். அவனையும் கமல் தான் என சத்தியம் செய்கிறது. அதன் கூற்று படி 547 வேஷத்திலே கமல் வர்ரார் படத்திலே.
3. ஆளவந்தான், அன்பேசிவம் மாதிரி ஆயிடுமோன்னு பயந்துகிட்டே போகாதீங்க!
4. சின்ன சின்ன லாஜிக் உதைத்தால் தள்ளி உக்காந்துக்கவும்.
5. படத்தில் எனக்கு பிடிச்ச ஒரு நகைச்சுவை வசனம், ஒரு அய்யங்கார் கேட்ப்பார் சிபிஐ பல்ராம் நாயுடுவிடம் "அழகிய சிங்கர்" தெரியுமான்னு, அதுக்கு பல்ராம் நாயுடு சொல்வார் "மடோனா வான்னு"
6. மல்லிகாவை சிதம்பரம் கீழசன்னதியில் தூக்கி சொருகாமல் வேளாங்கண்ணி வரை தள்ளிகிட்டு போயிருக்களாம். அதுவும் மயிலாடுதுரை வழியா போயிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.
7. தமிழ் எந்த அளவு தெரியும் என்பதற்கு தனக்கு பெரிய அளவில் தமிழ் தெரியும் என மல்லிகா சொல்வது கமலின் உத்தியா ரவிகுமாரின் புத்தியா என எல்லாம் ஆராயாமல் அனுபவிக்கனும்.
8. படத்தில் காமடி வசனம் என் பார்த்தால் கலிபுல்லாகான் வசனம் தான். ஆனாலும் அந்த உச்சரிப்பால் புரியாமல் போய்விடுகிறது.
9. அந்த ஜப்பான் பொண்ணு பேசும் தமிழ் அப்படியே டிபிக்கல். சூப்பர்ப்..
10. பாட்டி கமல் கலக்கல். கருப்பு கமலை மடியில் போட்டு பேசும் வசனம் "அவனுக்கு உள்ளே வெள்ளை மனசு. அய்யோ கொழதே வைகுண்டம் போயிட்டியா" ன்னு கலங்க வைக்கிறார்.
11. ஜெயப்ரதா, சிங் கமல் அருமை.
12. ஒளிப்பதிவும் சூப்பர், ஒலிப்பதிவும் சூப்பர்( என்னத்துக்கு வம்பு ளி,லி ன்னு குழம்பிகிட்டு)
13. கமலின் வசனம் அருமை. ஆனா குழப்பம் அதிகமா இருக்கு. கடவுள் இல்லைன்னு சொல்ரீங்களான்னு கேட்டா ஆம் இல்லைன்னு பதில் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். இருந்திருந்தா நல்லா இருக்கும்ன்னு சொன்னா அது வழக்கம் போல கமல்தனமாவே இருக்கு.
14. முகுந்தா முகுந்தா பாட்டும், கல்லை மட்டும் கண்டால் பாட்டும் கேட்டுகிட்டே இருக்கலாம்.
அபிஅப்பா பதிவு படிக்காமலே விமர்சனம் போட்டார் என யாரும் சொல்ல முடியாத அளவு ஒரு சேதி சொல்கிறேன். என் கூட லொடுக்கு, பாஸ்ட் பவுலர் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்தார்கள். இது என் முதல் விமர்சனம். எப்படி இருக்குன்னு சொல்லுங்க மக்கா!!
June 12, 2008
திண்ணை பதிவின் இரண்டாம் பாகம் என்று இதை சொல்ல முடியாது!!! (அல்லது) மிசா!!!
அடுத்த நாள் முதல் வீட்டில் அப்பா, சித்தப்பா முதல் எல்லோருமே தலைமறைவு, என் வீட்டு கதவு பூட்டப்பட்டது பூட்டப்படது தான்.எந்த நேரத்தில் எது நடக்கும் என யாருக்கும் தெரியாது. மிசா மிசா என ஊரே போர்க்களம் மாதிரி இருந்தது. சிலர் மிசாவை சிலாகித்து பேசினாலும் அதாவது அரசு அலுவலர்கள் சரியான நேரத்துக்கு வரவேண்டும், லஞ்சம் கூடாது இதல்லாம் . ஆனால் அரசை விமர்சித்தால் 'இம்'என்றால் சிறை வாசம் 'ஏன்' என்றால் வனவாசம், இந்திய பெருந்தலைகள் ஜேப்பி உட்பட அனைவரும் சிறையில், கலைஞர் மட்டுமே வெளியே அய்யோ கொடுமையோ கொடுமை. அதை அந்த கொடுமையை அனுபவித்தால் மட்டுமே புரியும். சித்தப்பா எந்த சிறை என தெரியாது. இனும் சொல்லப்போனால் சிறையிலா அல்லது வெளியிலா அல்லது காவலர்கள் அடித்து கொன்று புதைத்து விட்டனரா என எதுவும் தெரியாது. அப்பாவிடம் இருந்து ஒரு துண்டு சீட்டில் எழுதி செய்தி மட்டும் வரும். சில சமயம் ஐந்து ரூபாய் பத்து ரூவாய் என வரும்.ஊர் ஊருக்கு சிலரை மட்டும் கலைஞர் அவரின் கருத்துகளை செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல சிறை செல்ல வேண்டாம் என பணித்திருந்த காரணத்தால் அப்பா அலுவலகத்தின் உள்ளேயே இருந்து அங்கேயே குளித்து அங்கேயே தூங்கி வேலைக்கு சென்றுகொண்டும் தொ.மு.ச வை இயக்கி கொண்டும் ஒரு மாதம் இருந்தது தெரிந்தது. உண்மையிலேயே மிசா கொடுமையை உணர வேண்டுமானால் பத்து நாள் சொல்லாமல் கொள்ளாமல் உங்கள் வீட்டை விட்டு வெளியே போய் பாருங்கள். பத்து நாள் வேண்டாம் இருபத்து நாலு மணி நேரம் போது அதை உணர.
(மன்னிக்கவும்.....திண்ணை பற்றி எழுத ஆரம்பித்து வேறு எங்கோ சென்று விட்டது பதிவு.இந்த ஓட்டத்தை நிறுத்த மனமில்லை. அதனால் திண்ணையை படிக்க ஆர்வமாக இருப்பவர்களுக்காக ஒண்றே ஒண்று சொல்லி கொள்கிறேன் "இன்று போய் நாளை வாருங்கள்")
அது போல் சித்தப்பாவுக்கு ஊர் ஊராக சென்று சிறையில் இருப்பவர்கள் வீட்டுக்கு உதவி நிதியாக நூறு ரூபாய் கொடுக்க வேண்டியது. அதிலும் சில சிக்கல்கள் இருந்தன. அனேகமாக எல்லோருக்குமே இரண்டு மனைவிகள் இருந்தனர். (நன்னிலம் நடராசன் கலைஞரிடம் சண்டை போட்டு இரு வீட்டுக்கும் தலா நூறு வாங்கியதாக பின்னால் பொதுகூட்டாங்களில் பேசினார். )
என் வீடோ என் பாட்டி அடிக்கடி சொல்வது போல் "ஒரு குருவி இறை தேடி ஒன்பது குருவி வாய் திறக்கனும்". காலையில் ரவை வாங்கி கஞ்சி வைத்து உப்பு போட்டு குடித்துவிட்டு பள்ளிக்கு போக வேண்டும். போனோம். ஆனால் கொஞ்சமும் கலங்கவில்லை. அம்மா ஒரு தைரியலெட்சுமி. பாட்டி ஒரு வீரலெட்சுமி. போராடும் குணம் எனக்கும் என் தம்பிக்கும் அப்போதே விதைக்கப்பட்டது. கூட படித்த பல சக மாணவர்களின் தந்தையர் மிசாவில் அடைக்கப்பட்டதால் திமுக வின் குலத்தொழிலான சைக்கிள் கம்பனிக்கு துரத்தப்பட்டனர். அந்த விதத்தில் நான் கொடுத்து வைத்தவன். இப்போது இருக்கும் பதிவர்களில் எத்தனை பேர் மிசா காலத்தை நேரில் பார்த்தவர்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதன் கொடுமைகளை எத்தனை பதிவர் அனுபவித்து இருப்பர் என பின்னூட்டத்தில் எழுதுங்கள்.
ஓரிரு மாதங்கள் கழித்து நிலமை கொஞ்சம் கட்டுக்கு வந்தது என சொல்வதை விட அது எங்களுக்கு பழகிவிட்டது என சொல்லலாம். அப்பா முரசொலியை ஏதோ கொக்கேக புத்தகங்கள் மாதிரி முதுகில் சொருகி கொண்டு வந்து பத்து இருவது பேராக என் வீட்டு மாட்டு கொட்டகைக்கு இரவு சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு வர சொல்லி நல்ல ஏற்ற இறக்கத்தோடு (கலைஞர் எந்த இடத்தில் தொண்டையை உயர்த்துவார் எந்த இடத்தில் கனைத்து கொள்வார் என அத்தனை திமுகவினருக்கும் அத்துப்படி) படித்து காட்டுவார். ஆனால் அப்பா படிப்பது நான்குநாட்கள் முந்தின முரசொலியாக இருக்கும்.
அப்படித்தான் ஒரு நாள் தளபதி ஸ்டாலினை உதைக்க வந்த காவலரின் உதையை தாங்கி கொண்ட மேயர் சிட்டிபாபு தன் மூத்திர பையில் வாங்கி கொண்டு சரிந்த செய்தியை படித்த அப்பா கலங்க அந்த ஒட்டு மொத்த மாட்டு கொட்டகையும் அழுதது. அப்பாவை கலைஞரே நேரில் பேசுவது போல பார்த்து பார்த்து எங்கள் மனதில் அப்பா அந்த செய்தியை படிக்கும் போது விம்மியது எங்கள் அத்தனை பேரையும் அழவைத்தது. அப்பா கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு சொன்னார். "அய்யோ இது நான்கு நாட்கள் முந்தின பேப்பராச்சே. இந்நேரம் என் சிட்டிபாபுவுக்கு என்ன ஆச்சோ"ன்னு சொல்லி அழ...... அப்போது உண்மையிலேயே சிட்டிபாபு இறந்துவிட்டிருந்தார்.
கோசி மணி, கிட்டப்பா, வரத கோபாலகிருஷ்ணன், செங்குட்டுவன், நன்னிலம் நடராசன், திருச்சி சிவா எல்லாரும் திருச்சி மத்திய சிறையில். அனேகமாக யார் யார் எந்தந்த சிறையில் இருக்கின்றனர் என அப்போது தெரிந்து விட்டது. ஆனாலும் தெரியாத ஒரு மர்மம் எப்போது விடுதலை என்பது. குங்கும சிமிழ் என்கிற படத்தில் ஒரு வசனம் வரும். நாளைக்கு சோறு கிடைக்கும் என தெரிந்தால் பசியோடு காத்து இருப்பதில் ஒரு அர்த்தம் இருக்கும். இல்லை உனக்கு ஒரு வாரம் கழித்து தான் சோறு அல்லது உனக்கு ஒரு மாதம் கழித்து தான் சோறு என்பதில் கூட காத்திருப்பதில் ஒரு அர்த்தம் இருக்கும். இல்லாவிடில் உனக்கு இனி வாழ்நாள் முழுக்க சோறு இல்லை என்றாவது கூறிவிட்டால் அதற்கு தக்கவாறு மனதை பக்குவ படுத்தி கொள்ளலாம். ஆனால் அந்த மிசா சிறை வாசம் எந்த வகை தொகைக்கும் அப்பாற்ப்பட்டதாக இருந்தது. அந்த சிறை காவலர்கள் திடீரென ஒரு நாள் எல்லோரிடமும் "உங்களுக்கு நாளை விடுதலை" என சொல்லுவாராம். எல்லோரும் புதிய மனைவியையும் தான் சிறைக்கு வந்த் பின் பிறந்த குழந்தையையும், சாக கிடக்கும் பெற்றோரையும் (இப்படி சொல்லி கொண்டே போகலாம் ஏனனில் எல்லா கேட்டகரியிலும் ஆள் இருந்தது) பார்க்க ஆசையாய் இருக்க அடுத்த நாள் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து எப்படி மன உளைச்சளுக்கு ஆளாவார்கள் என அனுபவித்தால் மட்டுமே புரியும்.
ஒரு ஆறு மாதம் ஆனபின் ஒரு மாதிரியாக எல்லோரும் ஸ்திரமாக நன்றாக மிசா மிருகத்தை எதிர்க்க தொடங்கி விட்டோம். அப்போது கலைஞர் மாத்திரம் ஆயிரகணக்கில் திருமணம் நடத்தி வைத்தார். காரணம் அது தான் அப்போது அவருக்கான பிரச்சார மேடையாக இருந்தது. ஒலிபெறுக்கி கிடையாது. வைத்து கொள்ள அனுமதி இல்லை. கூம்பு வடிவ மெகா போன் ஒருவர் பிடித்து கொள்வார். இவர் தொண்டை கிழிய பேச வேண்டும். எதிரே ஆயிரகணக்கில் கூட்டம் இருக்கும். கடைசி வரிசைகாரனுக்கும் அவர் குரல் போய் சேர்ந்தது. தமிழகத்தின் கடைசி எல்லை வரை அவர் பிரச்சாரம் போய் சேர்ந்தது. அவரால் மிசா வரலாறு எழுதப்பட்டது. அந்த கூட்ட முடிவினிலே அவர் எடுத்த ரத்த வாந்திகள் வரலாற்றில் மறைந்து போயின.
மெதுவாக மாட்டு கொட்டகை கூட்டம் திண்ணைக்கு வர தொடங்கியது. கோவை மு.கண்ணப்பன் கலைஞருக்கு காரோட்டி கண்ணப்பனாக மாறியிருந்த முரசொலியை அப்பா படித்து சொல்லிவிட்டு "நான் இன்றைக்கு சொல்கிறேன். இந்த திண்ணையில் சத்தியம் அடித்து சொல்கிறேன், தலைவர் ஆட்சிக்கு வந்தது கண்ணப்பன் தான் போக்கு வரத்து அமைச்சர்". அடித்து சொன்னது என் திண்ணை ஆயிற்றே...பொய்க்குமா என்ன?
சிறையில் மேடைப்பேச்சு கற்று கொடுக்கப்படுவதாகவும், திருச்சி சிவா எல்லோருக்கும் ஆங்கில பாடம் எடுப்பதாகவும், பிரச்சார நாடகங்கள் நடத்தபடுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.அந்த நாள் வந்தது ஆமாம் விடுதலை நாள். அதை பற்றி எழுத வேண்டுமானால் பதிவு போய் கொண்டே இருக்கும்.
இந்த கூத்து அத்தனைக்கும் கலைஞர் மாத்திரம் கைது செய்யப்படவில்லை. அண்ணா சாலையில் போய் துண்டு பிரசுரம் வினியோகம் செய்கிறார். அவரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்கள் கைது செய்யபடுகின்றனர்.சமீபத்தில் வடிவேலு சொன்னது போல் (லக்கி கூட அதை எடுத்து காட்டியிருந்தார் அவரது ஒரு பின்னூட்டத்தில்) "அமைச்சரே வரலாறு மிக முக்கியம்" . கலைஞர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் இந்தியாவின் அந்த ஒரு வருட கருப்பு வரலாறு இருட்டடிக்கப்பட்டு இருந்திருக்கும்.
June 10, 2008
நானும் கொஞ்சம் திண்ணையை தேய்ச்சுக்கறேன்!!! பாகம் # 1
எனக்கு எப்போது திண்ணை பரிட்சயமானது என சரியாக சொல்லவேண்டுமெனில்... நல்ல மார்கழி குளிரில் தான். கலாச்சாரம்,சாமிகுத்தம் என்கிற பெயரில் கழிவிரக்கம் இல்லாமல் அந்த நாட்களில் 'பச்ச உடம்புக்காரி' என்றெல்லாம் கூட பார்க்காமல் திண்ணையில் படுக்கவைத்த மாமியார்த்தனம் நடந்து கொண்டிருந்த காலம் அது.அம்மாவை ஒண்றும் நிராயுதபாணியாக அவர்கள் அனுப்பிவிடவில்லை. கொஞ்சம் ஈரமனதோடு உலக்கை, துடைப்பம் போன்ற ஆயுதங்களோடுத்தான் அனுப்பி வைத்தனர்.ஆனந்தவிகடனையும், என்னையும் முந்தானையில் சுற்றி ஏதோ போருக்கு போவது போல அம்மா திண்ணைக்கு போனது தான் என் முதல் விஜயம். தார்ச்சாலை தெரியாமல் திண்ணையில் எரவானத்தில் சுருட்டியிருந்த பிரம்ப தட்டி மறைப்பாக ஆக ஒரு தற்காலிக அறை உருவாக்கப்பட்டு பல்லு போன பாட்டிகள் இரண்டு பேர், பல் முளைக்காத நான் ஆகியோர் காவல் இருக்க அம்மா சின்ன பெட்ரூமாக்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் ஆ.வி படிக்க ஆரம்பித்த அடுத்த நிமிடமே எட்டாய் மடிக்கப்பட்ட என் மெத்தையான சுங்கடிச்சேலையை மார்கழியின் குளிரால் நனைத்து விடுவேன். ஆனாலும் அப்போதிருந்தே எனக்கு என்னவோ திண்ணையை பிடித்து போய் விட்டதாக அம்மா பலமுறை சொன்னதுண்டு.
வீட்டுக்குள் காரணமே இல்லாமல் அழுது கொண்டிருக்கும் நான் திண்ணை வாசத்தின் போது மட்டும் எப்படி நிம்மதியாய் தூங்கினேன் என்பதற்கு அம்மா சொன்ன காரணம் ஏற்புடையதாகவே இருந்தது. என் வீடு நகரின் முக்கிய சாலையில் என்பதால் இரவு பகல் என வித்யாசமின்றி பேருந்து,மகிழுந்து(ச்சே சும்மா கிடைக்கிறதே என தமிழோசை படிக்காதீங்கப்பா)என போய் வந்து கொண்டிருக்கும் போதேல்லாம் திண்ணையில் ஒரு வித அதிர்வு வரும். அது தான் எனக்கு கிடைத்த இலவச தாலாட்டு. அன்னைக்கு கூட கை அசந்து போகும் என்னை திண்ணை தூளியில் தாலாட்ட, ஆனால் என் திண்ணைக்கு அசந்து போனதே கிடையாது.அந்த அதிர்வு தாலாட்டை(vibration) இன்றைக்கு நினைத்தாலும் ஒரு சின்ன மின்சாரம் பாயத்தான் செய்கிறது. மாதா மாதம் திண்ணைக்கு போய் வந்த நாள் வளர வளர திண்ணையை என் தாய் மாதிரியே பாவிக்க தொடங்கிவிட்டேன். நடக்க ஆரம்பித்த பின் போன முதல் இடமே திண்ணைக்குத்தான். என்னை நான் அங்கே பத்திரமாக உணர்ந்தேன். எங்கள் வீட்டு திண்ணை வலப்பக்கம் ஒரு ஆள் படுக்கும் அளவுக்கும், இடப்பக்கம் பத்து பேர் வரை படுத்து உறங்கும் விஸ்தாரமுடையதாவும் இருந்தது. ஆனால் சின்ன திண்ணையை மட்டும் என் சித்தப்பாவுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டார்கள். சின்ன திண்ணையின் எரவானத்தில் சொருகப்பட்ட இரண்டு மூங்கில் பிலாச்சின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் ஒரு கோரைப்பாயும்,சுருட்டிய அதன் உள்ளே மம்பட்டியான் வகை சிகப்பு எல்லை கருப்பு வண்ண மொச மொச போர்வையும், எச்சில் ஒழுகிய தலையனையும், ஈயம் பூசிய பித்தளை செம்பும், ஒரு சாப்பாடு தட்டுமே அப்போதைக்கு சித்தப்பாவின் சொத்தாக இருந்தது. பிற்காலத்தில் எனக்கு அந்த சொத்துகள் வரப்போவது அப்போது எனக்கு தெரியாது. நான் வளர வளர அந்த பெரிய திண்ணை தான் எனக்கான சொத்து என பாகப்பிரிவினை தானாகவே நடந்துவிட்டது. நான் தவழ ஆரம்பித்ததுமே பெரிய திண்ணையின் எல்லை கோட்டை மண்டியிட்டு போன போதே டென்சிங் மாதிரி குதூகலித்ததாக அம்மா சொல்வதுண்டு. அந்த எல்லை கோட்டுக்கு யாரும் அடிக்கடி செல்வதில்லையானதால் எனக்கு கொடுக்கப்படும் பொரி உருண்டைகளுக்கும், வறுத்த அரிசிகளுக்குமான கிடங்காகவே நான் அதை பயன்படுத்தி கொண்டேன்.அந்த இடம் தான் கொள்ளையர்கள் கூட நுழைய முடியாத அளவிற்க்கான எனக்கு மட்டுமேயான பாதுகாப்பான இடமாக உணர்ந்தேன்.
யாரோ கட்டிபிடித்து கட்டிபிடித்து வழவழப்பான அந்த மத்தளம் மாதிரியான பர்மா தேக்கு தூண்களை என் கால்களுக்கு இடையே கட்டி கொண்டும், கைகளால் இருக்கிகொண்டும் என் கண்ணத்தை தூணில் ஒட்டி கொண்டு விரல் சூப்பி கொண்டும் கடைசி படியில் நின்று உருமி மேளம் வாசிக்கும் பூம்பூம் மாட்டுகாரனையும், "நாராயணா கோபாலா,வெங்கட்ராமா கோவிந்தா ...கோவிந்தா கோவிந்தா" என அரிசி கேட்கும் சிறுவர் சிறுமிகளையும், சார் போஸ்ட் என கத்தும் தபால்காரரையும், அமாவாசைக்கு அமாவாசைக்கு வடக்குவீதியை கடந்து போகும் உலக்கை சாமியையும், அதற்காகவே ஸ்பெஷல் நாதஸ்வரமாக திடு திடுவென ஓடிகொண்டே வாசிக்கும் சின்னசாமியையும், என் அன்பான பேருந்துகளையும், நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
நன்றாக நடக்க தெரிந்து பின்னே நன்றாக ஓட தெரிந்த பிறகு என் சுட்டித்தனங்களால் அம்மாவிடமிருந்து தப்பித்து ஓடி அந்து அவசர அவசமாக திண்ணையில் ஏறி எல்லை கோட்டுக்கு ஓடின பின் அம்மா துரத்துவதை நிறுத்திவிட்டு திண்ணையின் கீழேயே நின்று கொண்டு அத்தனை தூரம் துரத்தி வந்தமைக்காவேணும் வந்து ஒரு அடி வாங்கி போக சொல்லி கெஞ்சும் போது தான் என் பாதுகாப்பு பிரதேசத்தின் பெருமையை முழுவதுமாக உணர்ந்தேன்.
இன்னும் கொஞ்சம் வளர்ந்து பள்ளி போக ஆரம்பித்தபின் ஒரு ஒரு ஆசிரியரை வைத்து மாலையில் எனக்கும் என் சகோதரிகளுக்கும் பாடம் சொல்லி கொடுக்க ஏற்பாடு நடந்தது. இப்படி எங்கள் மூவருக்குமான அந்த பாட வகுப்பு அக்கம் பக்க சக மாணவர்களுக்குமாக பல்கி பெருகி என் திண்ணை, திண்ணை பள்ளியாகியது. ஒருநாள் மாயூரநாதர் கோவிலின் அலுவலக திண்ணையில் (கோவிலின் கணக்கடி வினாயகர் அருகே உள்ளது) சாய்வு மேசையிட்டு ஐந்து பேர் ஏதோ எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பது மனதில் ஒரு சின்ன கிளர்ச்சியை தரவே நானும் அது போல நம் வீட்டு திண்ணையில் சாய்வு மேசை போட்டு படித்தால் என்ன என ஆசை வரவே நான் உயர்நிலைப்பள்ளி சென்ற பிறகே பரணில் இருந்து தாத்தா உபயோகப்படுத்திய மேசை எடுத்து தரப்படும் என சொல்லப்பட்டது. அப்போது அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லாமல் இருந்தது ஒரு சிறிய நிம்மதியையும் கொடுத்தது.
ஆறாம் வகுப்பு சென்ற பின்னே அந்த மேசையை இறக்கி, முற்றத்தில் வைத்து கழுவி துடைத்து அதற்கு பொட்டெல்லாம் வைத்து அழகாய் தூக்கி கொண்டு போய் என் திண்ணையின் மீது வைத்த போது என் திண்ணைக்கே ஒரு அழகு வந்தது.முதல் வேலையாக ஸ்வேன் மார்க் ஜியாமெண்ரி பெட்டியிலிருந்து காம்பஸ் எடுத்து என் பெயரை பொறித்தேன்.அடுத்த வேலையாக "அனுமதி பெறாமல் உள்ளே வராதீர்கள்" என என் திண்ணையின் சுவற்றில் பொறித்தேன். அது என் இடம் என்பதை உறுதி செய்யும் விதமாக. உடனே அடுத்த ஆசையும் வந்தது. சித்தப்பா மட்டும் திண்ணையில் படுத்துறங்கும் போது நான் மட்டும் என் திண்ணையை விட்டு உள்ளே படுக்க வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றி அம்மாவிடம் கேட்க மிகுந்த போராட்டத்துக்கிடையே எனக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. எனக்கும் ஒரு கோரைப்பாயும், மம்பட்டியான் போர்வையும், தலையனையும், தண்ணீருக்கான சொம்பும் கொடுத்து 'ஞானஸ்த்தானம்' செய்து வைத்து வெளியே அனுப்பினர். அதுவும் அப்பா வெளியூர் போயிருந்த காரணத்தால் 'ஒரு நாள் மட்டும்' என்ற நிபந்தனையோடு.
முதன் முதலாக சுதந்திரம் கிடைத்துவிட்ட மாதிரி ஒரு சந்தோஷத்தில் இரவு நீண்ட நேரம் எங்கள் சாலையின் போகுவரத்துகள், கடை முடிந்த்து வீட்டுக்கு போகும் முதலாளிகள் என பார்த்து கொண்டே என் பெரிய திண்ணையில் உறங்க எத்தனித்த போது என் சித்தப்பா சைக்கிளில் வேக வேகமாக கொஞ்சம் படபடப்போடு வந்தார். பத்து வயசிலேயே திண்ணை படுக்கை கேட்குதா என கேட்ட அவரின் தொணி எனக்கு கொஞ்சமும் பிடிக்க வில்லை. நான் பிறந்தது முதல் எனக்கு தாலாட்டிய தாய் போலவும், என் பாதுகாப்பு அரணகவும், பள்ளிகூடமாகவும், என் கேளிக்கை விடுதியாகவும், நல்ல தோழியாகவும், நான் நினைத்த என் பெரிய திண்ணையை அவரின் அந்த அப்படி கேட்ட தொணி முகம் சுளிக்கவே செய்தது. சிறிது நேரத்தில் அவரே என்னிடம் தனக்கு சிறிது வேலை இருப்பதாகவும் அதனால் வெளியே போக போவதாகவும் அதனால் தன் சின்ன திண்ணையில் உறங்கும்படியும் பின் ஒரு நல்ல நாள் பார்த்து பெரிய திண்ணையில் படுக்கலாம் எனவும் சொன்ன போது ஒரு வித மன சஞ்சலத்தோடு சரியென தலையாட்டினேன். நான் சின்ன திண்னையில் படுத்து கொண்டே என் திண்ணையை பார்த்து கொண்டிருந்த போது என் பெரிய திண்ணை என்னை முதன் முதலாக திட்டியது போல உணர்ந்தேன். அது ஏதோ விபரீதம் நடக்க இருப்பது போல எனக்கு சொல்வதாகவே உணர்ந்தேன். போர்வையை ஒதுக்கிவிட்டு போய் என் திண்ணைக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு "கவலைப்படாதே நாளை முதல் உன் கூடத்தான் என் படுக்கை" என சொல்லிவிட்டு வந்து படுத்தேன்.
அப்படியே அசந்து தூங்கின எனக்கு கனவுகளும் அத்தனை சுகமானதாக இல்லை. யாரோ சாட்டையால் என்னை அடிப்பது போலவும் நான் பகத்சிங் மாதிரி வீர வசனம் பேசுவது போலவும் கனவுகள். நமக்கு இந்த படுக்கை சரி வராது. நம் திண்ணைக்கு போகலாம் என நினைத்த போது ஏதோ விபரீதமாக சப்தங்கள். தட தடவென பூட்ஸ் கால் ஓட்டங்கள்... நான்கு காவலர்கள் என் போர்வையை விலக்கி விட்டு என்னை தூக்க வாசலில் ஒரு போலீஸ் வண்டியில் நிறைய ஆட்கள். கோஷங்கள், வாழ்க, ஒழிக கோஷங்கள், எனக்கு கண் இருட்டி கொண்டு வந்தது!
தொடரும்..........................
June 2, 2008
உன்னை கரம் பிடித்தேன்... வாழ்க்கை ஒளிமயமானதடீ!!!!
அன்புள்ள உனக்கு!
எந்த பதிவு எழுதுவதாக இருந்தாலும் எனக்கு அதிக பட்சம் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். ஆனால் இந்த கடிதம் எழுத ஆன நேரம் என சொல்வதை விட சில நாட்கள் என சொல்வது பொருத்தமாக இருக்கும். பதிமூன்று வருடங்கள் முன்பாக பார்த்தேன் உன்னை. அப்போது முதல் இப்போது வரை நான் உனக்காக செய்தது என்ன என நினைத்து நினைத்து பார்த்து அதை நினைவு கூர்ந்து எழுதலாமெனத்தான் கடந்த இரண்டு நாட்களாக சிந்தித்து கொண்டிருக்கிறேன். நினைவுக்கெட்டிய தூரம் வரை எதுவுமே இல்லை.
என் சந்தோஷமே உன் சந்தோஷமாய் மட்டுமே இருந்து விட்டாயா? அல்லது நான் தான் ஆணீயத்தனமாக இருந்து விட்டேனா எனவும் தெரிய வில்லை. எந்த தொலைகாட்சியிலும் ஒரு தம்பதிகளின் நேர்காணல் எனில் முதல் வினாவே "தாங்கள் திருமணத்துக்கு பின் பார்த்த முதல் திரைப்படம் எது" என்னும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி தான். என் அம்மா கூட தொலைக்காட்சியில் அந்த வினா எழும் போதெல்லாம் ஏதோ தன்னைதான் கேட்பதாக நினைத்து "பாலும் பழமும்" என சொல்லிக்கொள்வது வழக்கம். நமக்கு திருமணம் ஆகி நான்கு வருடம் ஆகியிருக்கும் அப்போது. நான் திரும்பி பார்த்து உன்னை கேட்டேன் "நாம் பார்த்த முதல் திரைப்படம் எது" என்று. பின்புதான் உணர்ந்தேன் நாம் அது வரை அப்படி ஒரு நிகழ்வையே நிகழ்த்திகொள்ளவில்லை என்று. எனக்குள் கொஞ்சம் வெட்கமும், குற்ற உணர்வும் எட்டி பார்த்தது. ஆனால் இன்றைய தேதி வரை அதை நான் சரி செய்யவோ இல்லை இனிமேலாவது சரி செய்ய வேண்டும் என்று நினைக்கவோ கூட இல்லை.
உன்னை நான் கோபப்படுத்திய தருணங்கள் ஏராளம். உன் கோபமே உலக நியதியில் இருந்து வித்யாசப்பட்டது. மௌனம் மௌனம் நீண்ட மௌனம். அந்த மௌனத்தின் உள்ளே எத்தனை அர்த்தங்கள் என நான் புரிந்து கொள்ளாதது மாதிரியே நடிப்பது இன்னும் இன்னும் உன்னை எந்த அளவு காயப்படுத்தி இருக்கும். அதே போல் உன் சந்தோஷத்தையும் கூட ஆர்ப்பரித்து கொண்டாட தெரியாத பிறவி நீ! ஒரு சிறு புன்னகையிலேயே அத்தனை சந்தோஷத்தையும் அடைக்க தெரிந்த வித்தை உனக்கு கை வந்த கலை.
நான் எதிலுமே உணர்ச்சிபூர்வ முடிவெடுப்பவன். நீயோ அறிவு பூர்வமாய் முடிவெடுப்பாய். ஆனால் என்னிடம் தர்க்கம் செய்தது எப்போதுமே கிடையாது. என் முடிவு எல்லாவற்றையும் முதலில் சந்தோஷமாக ஆமோதிப்பாய். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் உள்ள தவறை சுட்டி காட்டி நான் அதிலிருந்து பின்வாங்கும் படி செய்துவிடுவாய். நீ முதலிலேயே அதை எதிர்த்து இருந்தாலோ என் முடிவு அதன் மேல் மிக உறுதியாகத்தானிருக்கும் என என்னை நன்கு உனக்கு தெரியும்.
எனக்காக புலால் சமைக்க தொடங்கினாய். உனக்காக நான் ஏன் அதை விடக்கூடாது என நான் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம். எனக்கு சம்பாதிக்க தெரிந்த அளவு செலவு செய்ய தெரியாது. உனக்கோ வீணாய் செலவு செய்ய கொஞ்சமும் தெரியாது. திட்டமிடுதலும், அதை செயல் படுத்துதலும் உனக்கான வரம். நம் வீடு புதுமனை புகுவிழாவுக்கு வரும் போதே கண்டேன். வீட்டை கட்டி முடிந்த பின் மீந்து போனது எட்டு தட்டு ஓடுகளும், நான்கு செங்கல்லும் தான். அத்தனை துல்லியமான ஒரு திட்டமிடல்.நம் வீடு உருவானது முழுவதுமே உன் எண்ணமும், இயக்கமும் தான் எனினும் என் பிரத்தியோக அறை கூலிக்கு ஆள் இல்லாமல் உன் ஒருத்தியால் மட்டுமே கட்டப்பட்டது பற்றி இப்பவும் சொல்லி சொல்லி மாய்ந்து போவார் கட்டிடத்தின் மேற்பார்வையாளர்.
ஆண்டவனிடம் எனக்கான மென்மையான வேண்டுதல்கள் மட்டுமே நான் தானாக நிறைவேற்றி வருகிறேன். அதாவது கையெடுத்து கும்பிடுவது போன்ற. கொஞ்சம் வன்மையானது எல்லாமே என் சார்பாக நீதானே இந்நாள் வரை நிறைவேற்றி வருகிறாய். இதற்காகவாவது நான் எதாவது ஒரு தருணத்தில் "உனக்கு என்ன பிடிக்கும்" எனவாவது கேட்டிருக்கலாம். வாங்கி கொடுப்பது அடுத்த நிகழ்வு. ஒப்புக்காகவேனும் கேட்டிருக்கலாம்.
உனக்கு பிடித்த ஒரு வகை உணவை கூட நான் சமீபத்தில் தானே அறிந்தேன். வாங்கி கொடுத்தேனா என்பது பற்றி நான் சொல்லி என்னை மேலும் மேலும் தரம் தாழ்த்தி கொள்வது உனக்கு பிடிக்காதென்பதால் அதை தவிர்க்கிறேன்.
ஆயிற்று பதிமூன்று வருடங்கள். ஆரம்பித்து விட்டது பதினான்காம் வருடம். நீ நீயாகத்தான் இருப்பாய். உன்னை மாற்ற முடியாது. நான் நானாகத்தான் இருப்பேன் என சொல்ல விரும்பாமல் திருந்த பார்க்கிறேன். கொஞ்சம் இரு "ஆணீயம் ஒழிக" என கோஷம் போட்டுவிட்டு வருகிறேன். தயாராய் இரு வியர்வை துடைக்க!
அன்புடன்
உன் நான்