பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 13, 2009

வீர சேகர விலாஸ் - பாகம் # 7

தயவு செஞ்சு இந்த பாகம் # 6 படிச்சுடுங்க!
அப்போது காலை மூன்று முப்பது ஆகியது. சத்திரமே அமைதியாக இருக்க மணமேடை அமைக்கும் சியாமளா கோவில் சவுந்தரமும் சவுந்தரத்தின் ஓடும்பிள்ளைகள் நான்கு பேரும் மணபந்தலில் "வருக வருக" என ஏதோ மணியை வைத்து தைத்து கொண்டிருந்தனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மணபந்தலில் உட்கார போவது பொண்ணும், மாப்பிள்ளையும் தான். அவங்க அந்த இடத்தில் உட்காந்து வருக வருகன்னு கூப்பிட்டா வந்தவங்க அவங்க மடியிலயா குந்திக்க முடியும் என நினைத்து கொண்டேன்.

மணிஅய்யர் ஆட்கள் ஒரு காடா துணையிலே இட்லியை வார்த்து மலை மாதிரி கொட்டி கொண்டிருந்தனர். அது காலை எட்டு மணிக்கு ஆறிப்போய்விடுமே என்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லை. கொடுத்த மெனுவை சமைச்சு கொட்டனும்,அத்தனையே.

அப்போது நாலு கிமீ தள்ளி இருக்கும் ஜங்சனில் அன்றைக்கு லேட்டாக வந்த கம்பன் "பாங்ங்ங்"ன்னு சத்தம் எழுப்பி கொண்டே போக அந்த சத்தம் சத்திரம் வரை கேட்டது. சீட்டு கச்சேரியில் உட்காந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மணி அய்யர் உள்ளே போய் பந்தல் சவுந்தரத்திடம் பத்து ரூபாய் வாங்கி வந்து அதையும் பறி கொடுத்து விட்டு 'ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் ' என துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு இட்லி வார்க்கும் இடத்துக்கு வந்து ஆறு பெரிய செப்பு தேக்சாவை வைத்து தண்ணீர் கொதிக்க விட சொல்லி விட்டு உக்கிரான அறைக்கு சென்று கொஞ்சம் கண்ணு அசந்தார்.

அவர் படுத்ததும் மணி அண்ணன் எழுந்து "என்ன தவசுபுள்ள சுடு தண்ணி போட்டாசா, அத்தை தான் முதலில் குளிக்கனும் அய்யரே! சொற்தெர்தா, ந்தா நா ராஜன் தோட்டம் போயிட்டு வர்ரேன், ஆமா திருவமழ தம்பி இருக்கா” என கேட்டுகிட்டே “தந்நானாஆஆஆ”ன்னு தனக்கு வராத அந்த ரகத்தை முயற்சி பண்ணிகிட்டே போக, மாமா & குரூப் தன் தனது பணத்தை சுருட்டி கொண்டே எழ அப்போது மணி காலை 4.30


என் அருமை பெண்டிர் எல்லாம் வாயில் தன் ஆட்காட்டி விரலை வைத்து தேய்த்து கொண்டிருந்தனர், சிலர் கோபால் பல்பொடியால் சிகப்பு வாயாகவும், சிலர் காலிகட் பல்பொடியால் வெந்தவாய் வெள்ளை வாயாகவும் இருக்க அந்த பெங்களூர் ரமணியம்மா மாத்திரம் பிரஷ் கொண்டு ஏதோ கோல்கேட்டாம் அந்த பிசினால் தானும் தன் நைட்டி (கன்றாவின்னு சபிக்கப்ப்ட்ட) குழந்தைகளும், பல் விளக்க மணி அய்யர் குஞ்சுகள் அவங்களுக்கு மட்டும் வென்னீர் முதலில் தர, எங்க வீட்டு பெண்டிரால் மணி அய்யர் எழுப்பப்பட்டு அவர் வந்து “விடுங்கம்மா அது எல்லாம் கோல்கேட் பார்ட்டி, என் மச்சினன் கூட அவா மாதிரி பாம்பே தான், அங்கல்லாம் லெஷ்மி தாண்டமாடுறாளாம்! விடுங்கோ, அவா மொதால்ல குளிக்கட்டும், நா உங்களுக்கு பேஷா கொதிக்க கொதிக்க போட்டு தாறேன்:ன்னு சமாளிக்க ஒரு வழியா வசந்தி சித்தி தன்னிடமும் பிரஷ் இருப்பதை காமிக்க 27 முறை தன் பல்லை நல்லா தேய்க்க எல்லா பெரியம்மாவும் சித்திக்கு நெட்டி முறித்தார்கள்.

காலை 6.30,

யடீ, நான் இன்னிக்கு மூனாவது நாளு, உன்ன போல இல்ல தெரியுமா, நாட்டு முட்டையும், உளுத்தம் களியும் உவ்வே உவ்வேன்னு வாயில திணிச்சுது அந்த கெழவி”

“ஆகா, நான் ஆயிட்டேண்டி யார்டயும் சொல்லாத”

“எந்த சிறுக்கிடீ என் மஞ்சல எடுத்தது”

“அய்யோ அக்கா அந்த ரெக்சோனா என்னோடது!”

“அய்யோ பாருடீ இவ லிரில் மாதிரி குளிச்சா, ஏதுடீ அது” (கெக்கே பிக்கே சிரிப்பு)

“பாத்தியா அவன் பேரு பாலாசியாம் பிகாம் படிச்சுட்டானாம் அத்த அவன விக்க ரெடியா இருக்குடீ, டீ நீ பாப்பாத்தி மாதிரி இருக்க செக்க செவேல்ன்னு, அது கன்ணுல படாத”
\
“அய்யோ அக்கா நா மக்குட்டு கட்டிகிட்டு வரப்போ அத்த தான “வாடி வாழதண்டு யார் கண்ணுலயும் படாத:ன்னு கூட்டிகிட்டு போச்சு”

“ஆகா மீனாச்சி மருமவளே! நீ பட போறடீ”

,அதுக்குள்ள அத்தனை பேரும் சூப்பரா பட்டு புடவைல ஜெகஜோதியாய் இருக்க அத்தை புது பட்டு புடவையிலே வந்து “எலேய் பசங்களா (அத்தை அப்படித்தான் பொண்ணுங்களை பசங்கன்னு சொல்லுவங்க) வாங்க பொண்ணுக்கு வந்து மஞ்ச தேய்க்கனும்”ன்னு சொல்ல அந்த பொண்ணு எங்க வீட்டு வசம் வந்தாச்சு!

பாவம் அந்த பொண்ணு!

“டேய் நீ ஊட்டி வரை உற்வு” பாத்தியா”

“இல்லீங்கக்கா”

“டேய் நா என்ன உனக்கு அக்காவா?”

“இலீங்க அத்தாச்சி”

“நா உனக்கு அத்தாச்சியா, போவுட்டும், ஆமா நீ நாட்டு பாடியா, இல்ல அதுவா?”

“புரியல அத்தாச்சி”

"டேய் யாருடீ! அவள ஒழுங்கா இருக்க வுடுங்கடீ! ஒங்கல மாரி காலேசு படிச்சவ இல்ல அவ" என சொல்ல்லிகிட்டே அந்தை வந்தாங்க அங்க!

அத்தைக்கு ஆயிரம் வேலை! போயாச்சு!

“டேய்! கேட்டனே ! நீ சொல்லவேயில்ல!

"என் மனக்கதவ தட்டி நா தொட்டதெல்லாம் வெற்றி"ன்னு ஒரு சித்தி ஆட பாவம் பொண்ணுக்கு உடம்பே சிவந்து போச்சு!

அதுக்குள்ள அந்த பெங்களூர் ரமணியம்மா வர

“ஆமா நீங்க எல்லாம் காலேஜ் படிக்கிறவங்க போலருக்கு”

“ஆமாம்” கோர்ஸ்

“அப்ப சொல்லுங்க, என்ன குரூப்பு”
\
“ந்தா பாருங்க நீங்களெ ஒங்க பொண்ணுக்கு பாடிய மாட்டுங்க! அத்த கூப்பிடுறாங்க நாங்க வாரோம்”

இப்ப்டியாக எல்லாரும் ஒதுங்கிகொள்ள கல்யாணம் தொடர்ந்தது!

குறிப்பு!

எனக்கே இது பிடிக்கலைங்க! பெருசா எழுதாதீங்கன்னு சொன்னா நான் என்ன பண்ண முடியும்.
நான் சொல்ல வந்ததை முழுசா சொல்ல முடியலை! அடுத்த பாகம் பார்ப்போம்!

3 comments:

  1. ஒன்லி லேடீஸ் பேச்சு! பின்னே பதிவு பெருசா போகாம என்னவாம்!

    இதுவே ரொம்ப குறைச்சன்னு நான் ஃபீல் ப்ண்றேன்! :)))))

    ReplyDelete
  2. "“நா உனக்கு அத்தாச்சியா, போவுட்டும், ஆமா நீ நாட்டு பாடியா, இல்ல அதுவா?”

    “புரியல அத்தாச்சி”

    "டேய் யாருடீ! அவள ஒழுங்கா இருக்க வுடுங்கடீ! ஒங்கல மாரி காலேசு படிச்சவ இல்ல அவ" என சொல்ல்லிகிட்டே அந்தை வந்தாங்க அங்க!"

    appadinnaa ennaanka artham

    ReplyDelete
  3. ஆயில்யா வருக!

    அனானி அண்ணே! இது ஒரு கதைன்னு சொல்லிக்கலாம், புனைவுன்னு சொல்லிக்கலாம்,அனுபவம்ன்னு சொல்லிக்கலாம்!

    உங்க சந்தேகம் இது தானே!

    அதாவது பெண்கள் தங்கள் மார்பை கட்டி இறுக்க ஒரு நாயுடு ஹாலை தேர்ந்தெடுப்பதை விட உள்ளூர் தையல்காரரை நம்பி போட்டு கொள்வதே "நாட்டு பாடி"ன்னு அவங்களாகவே சொல்லும் வழக்கு மொழி!

    மத்தபடி அவங்க் ரெடிமேட் பிரேசியர் எல்லாம் நடிகைகள் மட்டுமே போடுவதாக அப்போது நினைத்து கொண்டது ஒரு வகை அறிவீனம்! அவ்வளவே! இப்போது புரிந்ததா!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))