பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 29, 2009

உடன்பிறப்புகளுக்கு தேர்தல் களம் காண உற்சாக பாடம்!!!பாகம் #1

என் அன்பு உடன்பிறப்புகளே!

இதோ நம் தேர்தல் போரின் உச்ச கட்டத்தில் நிற்கின்றோம். நமது திராவிட முன்னேற்ற கழகம் 17.09.1949 அன்று சென்னை ராபின்சன் பூங்காவில் தோற்றுவித்த நாளில் பிறந்தவர்களுக்கு இன்று வயது 59 வயது 7 மாதம் 12 நாட்கள் ஆகின்றது. அந்த 17.09.1949 குறைந்த பட்சம் 16 வயது ஆனவர்களுக்கு இப்போது 76 வயதாகின்றது. நம் தலைவருக்கோ இப்போது 86 ஆகின்றது. பேராசிரியருக்கோ 87 ஆகின்றது. சிங்கங்கள் இப்போதும் தேர்தல் களத்திலே கர்ஜித்து கொண்டிருக்கின்றன.

என் இளம் தம்பிமார்களே நான் இப்போது உங்களுக்கு சொல்லப்போவது நம் திமுக வின் ஆரம்பகால வரலாறு. அதிலும் குறிப்பாக நாம் தேர்தலில் முதன் முதலாக ஈடுபட்டது முதலான வரலாறு. நம் திமுகவை தோற்றுவித்த தலைவர்கள் பட்ட சிரமங்கள், சிறை வாழ்க்கை எல்லாம் சொல்ல போகின்றேன். இது இந்த தேர்தல் போரின் உச்ச கட்டத்தில் இருக்கும் உனக்கு நான் கொடுக்கும் ஒரு ஊக்க மருந்தாகவே இருக்கும்.

இதோ 17.09.1949 ல் குடந்தை கே.கே. நீலமேகம் அய்யா தலைமையில் காலை கூடிய கூட்டத்தில் அறிஞர் அண்ணா பேசவில்லை. மேடையில் உட்காந்து இருக்கின்றார். அவரின் அறிக்கை மாத்திரம் படிக்கப்படுகின்றது. அதாவது திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம் என ஏன் ஆரம்பிக்க வேண்டும் என அண்ணாவின் நீண்ட விளக்கம்.கழகத்தின் அமைப்பு கழக உறுப்பினர்கள் கே கே நீலமேகம் அய்யா, கே வி சாமி, எஸ். முத்து, ஜி. பராங்குசம், கே. கோவிந்தசாமி, ஏ. சித்தையன், என்.வி.நடராசன் (மத்திய அமைச்சராக இருந்த போது மறைந்த என் வி என் சோமு அவர்களின் தந்தை) ஆகியோர்.

அன்று மாலையே சென்னை ராபின்சன் பூங்காவில் பொது கூட்டம். அங்கு தான் அந்த மாபெரும் வரலாற்று சிறப்பு மிக்க துவக்கம் பெத்தாம்பாலையம் பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் முழங்கியவர்கள் நாவலர், கலைஞர், ஈ.வெ.கி சம்பத், என்.வி.நடராசன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, கே கே நீலமேகம் அய்யா ஆகியோர். பின்னர் அண்ணா பேசும் போது மழை. மழை என்றால் கனமழை. கூட்டம் எந்த பக்கமும் சிதறவில்லை. அப்போது ஆரம்பித்தது திமுகவின் கட்டுகோப்பு. அண்ணா பொது செயலர். நாவலர், கலைஞர், சம்பத், என்.வி என், கே.ஏ.மதியழகன், காஞ்சி மணிமொழியார் ஆசைத்தம்பி உட்பட 110 பேர் பொதுக்குழு உறுப்பினர். அந்த பொதுக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளேயே இருந்து நிதிக்குழு, பிரச்சாரகுழு எல்லாம் ஏற்படுத்தப்பட்டது. இது தான் திமுக வின் துவக்கம்.49ல் ஆரம்பிக்கப்பட்ட நம் இயக்கம் தனக்கென ஒரு அலுவலகம் அமைத்து கொண்டது 2.12. 1951ல். இராயபுரம் சூரியநாராயண செட்டி தெருவில் 30000 ரூபாய்க்கு வாக்கப்பட்டு அண்ணா தலைமையில் திறக்கப்பட்டது.

இப்படிப்பட்ட வளுமையான அடிக்கட்டமைப்பு கொண்ட நம் இயக்கம் ஆரம்பித்தவுடன் சந்தித்த முதல் தேர்தல் 1952 மார்ச் மாதம். ஆனால் கழகம் நேரிடையாக இதில் பங்கு பெறவில்லை. தன் பலம் என்ன என்று தனக்கு தெரிய வேண்டுமே. அதனால் தன் கொள்கைகளுக்கு ஒத்து கொண்ட 45 வேட்பாளர்களை ஆதரித்தது. அதில் 40 பேர் அப்போது காங்கிரசை எதிர்த்து வெற்றி கண்டனர். அதன் காரணமாக காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. சும்மா இருப்பாரா ராஜாஜி? 40 பேரையும் நல்ல விலைக்கு வாங்கி அவரே மேல்சபை உறுப்பினராகி முதல்வரானார். இந்த வெற்றி பெற்ற 40 பேரில் ஒருவர் பக்தவத்சலத்தை தோற்கடித்தார். அதனால் அவரால் அமைச்சராக முடியவில்லை. அதன் காரணமாகவே அவர் சாகும் வரை திமுக எதிர்ப்பாளராகவே வாழந்து மறைந்தார். அப்போதே திமுகழகம் முடிவெடுத்துவிட்டது எனலாம் தான் அடுத்த தேர்தலில் நேரிடையாக போட்டியிடுவது என. ஏனனில் அந்த நாற்பது பேரின் நயவஞ்சகத்தால்.

பின்னர் இடைப்பட்ட காலத்தில் தான் எத்தனை எத்தனை போராட்டங்கள் போராட்டங்கள். நேரு தமிழர்களை முட்டாள்கள் என திட்டியதை எதிர்த்து, ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் எதிர்த்து, டால்மியாபுரம் என்னும் பெயரை கல்லக்குடி என மாற்றக்கோரி என ஏராளமான போராட்டங்கள். சிறைகள்.

நடுநடுவே நடந்த போராட்டங்கள் பற்றி விரிவாக தனி பதிவு பின்னர் எழுதுகின்றேன். அது போல திமுகவின் மாநிலமாநாடுகள் பற்றியும் தனியாக எழுதுகின்றேன். உடன்பிறப்பே நீ இப்போது இருப்பது தேர்தல் களம். அதனால் கழகம் சந்தித்த தேர்தல்கள் பற்றி இப்போது பார்ப்போம்.

1957 நம் வெற்றி கணக்கை துவக்கிய வருடம். மறக்க முடியுமா? இரண்டாவது மாநில மாநாட்டில் திமுக தேர்தலில் நிற்க வேண்டுமா வேண்டாமா என அண்ணா தன்னிச்சையாக முடிவெடுக்காமல் கருப்பு பெட்டி ஒன்றும் சிவப்பு பெட்டி ஒன்றும் வைத்து ஓட்டு எடுப்பு நடத்தப்பட்டது. மிகுந்த மழையிலும் 60000 ஓட்டுகள் பதிவாகின. அதில் 57000 பேர் கலந்து கொள்ள வேண்டும் என வாக்களித்தனர். ஆக முடிவாகியது தேர்தலில் நிற்பது என!

மாநாடு முடித்து ஊருக்கு திரும்பிய நம் தோழர்கள் உடனடியாக களப்பணியில் ஈடுபட்டனர். அது கண்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு வியப்பு. சிரிப்பு. ஏனனில் அப்போது தேர்தல் தேதிகூட அறிவிக்கப்படவில்லை. சுவர் விளம்பரம் எல்லாம் செய்யப்பட்டது சின்னத்தின் இடமும் வேட்பாளர் பெயரும் மட்டுமே மீதி இருந்தன. அதற்குள் பூத் கமிட்டி கூட அமைக்கப்பட்டது. அதற்கு முன்பாக பூத் கமிட்டி என்பதே காங்கிரஸ் அமைத்தது கிடையாது. கலைஞர் தலைமையில் அதற்கான விரிவான பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது மாநாட்டில். தேதி அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சட்டமன்றத்துக்கு 205 தொகுதிகளில், பாராளுமன்றத்துக்கு 41 தொகுதியிலும் போட்டியிட்டது.

அதே நேரம் திமுக 124 சட்டமன்ற தொகுதியிலும் 11 பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டது. மற்ற சில தொகுதியில் மற்ற சில கட்சிகளுக்கு ஆதரவு. அண்ணா காஞ்சியில், கலைஞர் குளித்தலை, பேராசிரியர் எழும்பூர், நாவலர் சேலத்தில், இப்படியாக நின்றனர். காமராஜரின் பிரச்சாரம் பெரும் சூராவளியாக இருந்தது. பணபலம் காங்கிரஸ் வசம் அதிகம் இருந்தது. ஆனாலும் நன் உடன்பிறப்புகள் அண்ணாவின் அடுக்கு மொழி வசனங்கள், கலைஞரின் ஆர்பரிக்கும் மேடை முழக்கம்(அப்போது கலைஞர் பேச்சில் அனல் தெரிக்கும் என என் அப்பா பலமுறை சொல்லி கேட்டிருக்கின்றேன்.)

வீட்டுக்கு வீடு சென்று வாக்காளர்களிடம் நேரிடையாக வாக்கு கேட்கப்பட்டது. அதற்கு முன்பாக அப்படி இல்லை. பண்ணை ஆள் வந்து "அய்யாவுக்கு வந்து ஓட்டு போட்டுட்டு அப்படியே பண்ணைக்கு வந்து சாப்பிட்டு போ" என்றே வாக்கு கேட்கப்பட்ட மக்கள் தன்னை மதித்து வந்து வாக்கு கேட்கும் வேட்பாளரை ஆச்சர்யமாக பார்த்தனர்.

பெரியாரோ அப்போதும் திமுக மீது பெரும் கோபம் கொண்டிருந்தார். காமராஜருக்கு கடுமையாக பிரச்சாரம் செய்தார். கலைஞரோ குளித்தலையில் வாக்கு கேட்பதை விட மற்ற தொகுதிகளுக்கு சென்று பொதுக்கூட்டம் நடத்தி கொண்டிருந்தார். நாவலர் தன் சேலம் தொகுதியை மறந்து விட்டு மற்ற தொகுதிகளுக்கு உழைத்து கொண்டிருந்தார். அண்ணாவோ 124 தொகுதியிலும் தானே நிற்பதாக நினைத்து உழைத்தார்.

தேர்தல் வந்தது. நம் கழக கண்மணிகள் ஓடி ஓடி ஒவ்வொறு வாக்காளர்களையும் சாவடிக்கு கொண்டு வந்து ஓட்டு போட வைத்தனர்.

தேர்தல் முடிந்தது. இந்தியாவே எதிர்பார்த்த முடிவு அறிவிக்கப்பட்டது. நம் கழக வீரர்கள் முதன் முதலாக சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்தனர். எத்தனை பேர் 15 பேர். காஞ்சியில் அண்ணா, குளித்தலையில் இதுவரை தோல்வியே காணா சிங்கம் கலைஞர், பேராசிரியர், ப.உ.சண்முகம் திருவண்ணாமலை, ஏ.வி.பி.ஆசைதம்பி, சத்தியவாணி முத்து, களம்பூர் அண்ணாமலை, எஸ்.சந்தானம், சி.நடராசன், இருசப்பன், ஆனந்தன், ஏ.கோவிந்தசாமி, சாரதி, எம்.பி.சுப்ரமணியம், செல்வராஜ் ஆகியோர் அந்த கழக வீரர்கள்.நாவலர் தன் முதல் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார். பதிவான வாக்குகளில் காங்கிரஸ் 42 சதம் வாக்குகள் பெற்றிருந்தது. ஆனால் மற்ற கட்சிகள் பெற்ற வாக்குகள் 58 சதம்.

அப்போதே அண்ணாவின் மனக்கணக்கு வேறு விதமாக சிந்திக்க தொடங்கியது. அப்போது அவர் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் "இன்னும் 10 வருடத்தில் 1967ல் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடிக்கும்"

காங்கிரஸ் 151 இடம் பெற்று முரட்டு தனமாக சட்ட சபையில் நுழைந்தது. அதை தவிர முதன் முதலாக பாராளுமன்றத்துக்கு ஈ வெ கி சம்பத் அவர்களும், தருமலிங்கம் என்பவரும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

காமராஜர் முதல்வர். இந்த முறை பக்தவத்சலம் தத்தி குத்தி வெற்றி பெற்றிருந்தார். அதனால் அவரும் அமைச்சரவையில். சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன், மாணிக்கவேல் நாயக்கர், கக்கன், ராமையா, லூர்து அம்மாள் கடையம் மஜீத் ஆகியோர் அமைச்சர்கள். கிருஷ்ணாராவ் சபாநாயகர்,

உடன்பிறப்பே இப்படியாக நம் பங்கெடுத்த முதல் பொது தேர்தல் நம்மை வெற்றி கணக்கை தொடங்க வைத்தது. நாளை அடுத்து நடந்த சென்னை மாநகராட்சி வெற்றியையும் அடுத்து 1962ம் ஆண்டின் பொது தேர்தலையும் பற்றி சொல்கிறேன். ஒரு போருக்கு போகும் முன் மன்னனை உற்சாகப்படுத்தும் விதமாக அவன் முன்பு பெற்ற வெற்றிபரணி பாடும் புலவர்களை போல உனக்கு நான் நாம் பெற்ற வெற்றிகளை பாடிக்கொண்டு இருக்கின்றேன்.

உடன்பிறப்பே! நாளை முதல் இன்னும் இருப்பது 14 நாட்கள். நம் பாரத போர் நடைபெற்றது போல. உனக்கு நான் இப்போது சொல்லி கொண்டிருப்பது உனக்கான உபதேசம் இல்ல. உனக்கான உற்சாகம்! நம்மை சுற்றியும் சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருக்கின்றது.கிழித்து விட்டு வெளியே வா! உன் கவனத்தை திசை திருப்பும் முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது. உன் கவனம் 40க்கு 40 என்பதில் இருக்கட்டும்.

அன்பு உடன்பிறப்பு

அபிஅப்பா

April 27, 2009

கிழசிங்கத்தின் போராட்ட கர்ஜனையும் ஆடிப்போன இலங்கையும்!!!

காலை 5.30க்கு எழுந்தவுடனே (இந்திய நேரம் காலை ஏழு மணி) முதலில் வழக்கம் போல டிவியை போட்ட உடனே பிளாஷ் செய்தியை பார்த்த உடனே வேர்த்து விட்டது. கலைஞர் செய்திகளுக்கு மாற்றி பார்த்தேன். அதிர்ந்து விட்டேன். ஆபீஸ் உடனே ஓட வேண்டிய அவசரம். ஆன்லைனில் இருந்த உண்மை தமிழனுக்கு விஷயத்தை சொன்ன போது அவரிடம் இருந்து விட்டேத்தியான ஒரு பதில். சரின்னு ஊருக்கு போன் செஞ்சு கேட்டப்ப மயிலாடுதுறை கொஞ்சம் ஆடிப்போய் இருந்தது. எங்கள் பகுதியில் அவசரமா உண்ணாவிரத பந்தல் போட்டு கொண்டிருந்தார்கள். யார் பேச்சிலும் ஒரு சுரத்து இல்லை. காரணம் கலைஞர் இப்போது இருக்கும் உடல் நிலையில் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தாலே மிகப்பெரிய விபரீதம் நடந்து விடும்.

மனசே நிலைகொள்ளாமல் ஆபீஸ் வந்தேன். ஆபீஸ்ல தான் இப்ப நெட் இல்லியா. உடனே திரும்பவும் போன் செய்த போது அவர் உட்கார முடியாமல் கட்டிலில் படுத்து விட்டதாக சொல்லப்பட்டது. நிச்சயமாக ஒரு விடிவு கிடைத்து விடும் ஈழ தமிழருக்கு என்கிற விஷயம் மட்டும் சர்வ நிச்சயமாக மனதுக்கு பட்டது.

திரும்பவும் மனசு அலையவே குசும்பனுக்கு போன் செய்து விசாரித்தேன். காலை உண்மை தமிழன் சொன்னது போலவே இதல்லாம் ஒரு நாடகம் என குசும்பன் சொன்ன போது மனசு வேதனையாக இருந்தது.

திரும்பவும் ஊருக்கு போன் செய்து செய்து அங்கே இருந்த நிலமையை கேட்டு கொண்டே இருந்தேன். அவரின் 5.40க்கு ஆரம்பித்த உண்ணாவிரதம் அடுத்த ஒரு மணி நேரத்தில் உலகையே ஆட்டி விட்டது. உலகம் முழுக்க போன்கள். பிரதமர் பேசுகிறார் கலைஞர் அவர்களிடம். சோனியா பேசுகிறார். உள்துறை அமைச்சர் ப.சி பேசுகிறார். எல்லாரிடமும் ஒரு பதட்டம்.

இவரின் பிடிவாதம் தான் தெரிந்த விஷயமாச்சே. மாத்திரை கூட வேண்டாம் என சொல்லிவிட்டார் எனதெரிந்த போது கிட்ட தட்ட தமிழகம் முழுக்க எல்லோரும் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டனர். யாரும் பிரசாரத்துக்கு போகவில்லை.

திரும்பவும் பிரதமர் பேசுகிறார். இலங்கையில் பாதுகாப்பு கவுன்சில் கூடிவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிவு தெரியும் என பிரதமர் சொல்கிறார் கலைஞரிடம். பிறகு உள்துறை அமைச்சரிடமிருந்து ஒரு நல்ல சேதி வருகின்றது. தலைவர் பேச ஆரம்பிக்கிறார். எங்கள் வயிற்றில் பால் வார்த்தார்.

பிறகு தான் எனக்கு பய பந்து வயிற்றில் அதிகமாக புரள ஆரம்பிச்சுது. இலங்கை ராணுவத்தை பற்றிய பயம் இல்லை. நம்ம குபீர் ஈழ ஆதரவு பதிவர்கள் பற்றிய பயம் தான். நம்ம குபீர் பார்ட்டிகள் யார் என அழகா அடையாளம் கண்டு பிடிக்க எளிய வழிகள் சில(டிப்ஸ்)
1. கலைஞரை திட்டுவது எப்போதும் பிரதானமா இருக்கும் அவர்கள் நோக்கம். ஆனா நொடிக்கு நொடி "நானும் எங்க குடும்பமும் 16ம் நூற்றாண்டு தொடக்கம் முதலே திமுக தான். கடந்த1732ம் வருடம் நடந்த பொது தேர்தலில் என் தாத்தாதான் திமுக வேட்பாளர். ஆனா இப்ப நான் என்கையால திமுகவுக்கு ஓட்டு போட மாட்டேன்"ன்னு சொல்லிகிட்டு இருப்பங்க. நாம அவங்க கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்.

2. ஜெயலலிதா எதிரி. கலைஞர் துரோகி. எதிரிக்கு 36 மார்க் போட்டு பாஸ் பண்ண வைக்கலாம். ஆனா துரோகிக்கு மைனஸ் 35 மார்க் போட்டு பெயில் பண்ணனும்னு என்ன என்னவோ பேசுவாங்க. இந்த எதிரி\துரோகி டயலாக்கை கண்டு பிடிச்சவனை தலைகீழா கட்டி தொங்க விட்டு மூக்கிலே மிளகாய் பொடி போடனுங்க.

3. நேரம் கிடைக்கும் போதல்லாம் நைசா ஜெயலலிதாவின் புகழ் பரப்புவாங்க. அப்படி பரப்பும் போதல்லாம் தன் தோளில் கருப்புசிவப்பு துண்டு தான் போட்டுப்பாங்க. நல்லா உத்து நோக்குங்க அப்ப புரியும்.

4. அழகிரி, தயாநிதி, சன் டிவி, கலைஞர் டிவின்னு எல்லார் மேலயும் நெம்ப பாசமா இருப்பாங்க. ஓரு நாளைக்கு குறைந்த பட்சம் 300 வரியும் அதிக பட்சம் 3000 வரியும் அவர்களை திட்டியே எதுனா எழுதி தள்ளுவாங்க.

வீட்டுக்கு வந்து பயந்துகிட்டே தமிழ்மணத்தை எட்டி பார்த்தேன். சில நல்ல பதிவுகள் இருந்துச்சு. சில வஞ்ச புகழ்சி பதிவு, சில நடுநிலை பதிவு, ஆனா பல பதிவுகள் நான் எதிர் பார்த்த மாதிரியே குபீர் பார்ட்டிகள் போட்டிருந்தனர். நான் கூட இப்ப இந்த பதிவை போடும் காரணம் அவர்கள் நையாண்டிக்கு பதில் சொல்ல அல்ல.

அந்த வீர கிழசிங்கத்துக்கு என் நன்றியை சொல்லத்தான். ஒரு உண்மை போராளிக்கு நன்றி சொல்ல மட்டுமே.

April 16, 2009

சூடான இட்லியும் நெய்யும் ஜீனியும் 16.04.2009!!!

குசும்பனுக்கு காலையிலே போன் பண்ணி திருமண வாழ்த்துகள் சொன்னேன். அதுக்கு அவன் " அந்த கொடுமையை ஏன் கேட்குறீங்க அபிஅப்பான்னு சொன்னதும் பகீர்ன்னு ஆகி போச்சு. என்னடா தம்பி நல்லாத்தான போய் கிட்டு இருந்துச்சுன்னு கேட்டதுக்கு "அட நீங்க வேற, ஆபீஸ்ல இருந்து உடனே கிளம்பி வா"ன்னு சொல்லிடாங்க, அதான் மூட் அவுட் ஆகிடுச்சு"ன்னு சொன்னான். சரிதான் அப்படின்னு நெனச்சு கிட்டு அய்யனாருக்கு போன் பண்ணினா அவனும் அதே டயலாக். "ஏன் உனக்கும் லீவ் தரலையா?"ன்னு கேட்டதுக்கு "இப்ப ஆபீஸ் போன என்னை மேனேஜர் கூப்பிட்டு லீவ் போட்டுட்டு வீட்டுக்கு போய் சந்தோஷமா இரு"ன்னு அனுப்பிட்டாருன்னு சொன்னான். என்னடா இது கூத்து சந்தோஷமான சேதி தானேன்னு கேட்டதுக்கு "என்னத்த போங்க அபிஅப்பா, அதான் ஊர்லயே விட்டுட்டு வந்துட்டனே தங்கமணியை"ன்னு ஒரே புலம்பல். வீட்டுக்கு வீடு வேற வேற வாசப்படி!

திடீர்ன்னு கொஞ்ச நாளா கையிலே புது ரத்தம் ஊறுவது போல் ஒரு அரிப்பு.மண்டையிலே மரை கழண்டது போல ஒரு நினைப்பு. ஏன் இப்படி எல்லாம் எனக்கு மட்டும் ஆகுதுன்னு ஒரு நண்பன் கிட்ட கேட்ட போது "ஆஹா உனக்கு கவிதை எழுதும் ஆசை வந்துடுச்சு, இனி உன் பிளாக் படிப்பவர்களை காப்பாத்த அந்த ஆண்டவனால் கூட முடியாது"ன்னு ரஜினி ரேஞ்சுல சொல்லிட்டு போயிட்டான். விடுவனா நான்! சும்மா ஒரு ஹூ லேஸ் அவிழ்ந்து போனதுக்கும், உளுத்தம்பருப்பு கீழே கொட்டியதுக்கும், சோப்பு நுரை கண்ணில் பட்டு எரிந்ததுக்கும், மேனேஜர் டை கோணலா கட்டியதுக்கும், நாயை பார்த்ததுக்கும், பூனை கத்தியதுக்கும், ராதா நினைப்பு வந்ததுக்கும் எல்லாம் கூட கவிதை எழுதினேன். ஆச்சு இப்படியா ஒரு 243 கவிதை. எல்லாத்தையும் நேத்து உட்காந்து படித்து உடனே ஓடிப்போய் கிடேசன் பார்க்கிலே அகல உழுவதை விட ஆழ உழுவதே சிறந்தது என நினைத்து ஆழ குழி தோண்டி அதிலே அதை புதைத்து அதன் மேலே ஒரு வேப்பங்கன்று நட்டு தண்ணீர் ஊற்றி வருகின்றேன். இன்னும் 2 வருஷத்திலே என் கவிதை பூத்து குலுங்கும் என நினைத்து கொண்டேன். அதனால் வாசகர்கள் வசவர்கள் ஆமும் பெரிய விபத்து தடுக்கப்பட்டது.

கவிதை என்றவுடன் என் தங்கமணி கவிதைகள் நியாபகம் வருகின்றது. அபிகூட என் கிட்ட அம்மா கவிதைகள் எங்கப்பா இருக்குன்னு கேட்டதுல அவசரத்துல ஒரு குத்து மதிப்பா நியாபகத்தில் இருந்த சில வரிகளை எழுதி அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் போன் அபிஅம்மாவிடம் இருந்து " உங்களுக்கு ஏகப்பட்ட திறமை இருக்கு. சம்மந்தமே இல்லாம 3 கவிதைகளை ஒரே கவிதையாக்கி "கன்றாவியா" ஒரு கவிதையாக்க உங்களை தட்டிக்க இந்த லோகத்திலே ஆள் கிடையாது"ன்னு. விடுடா விடுடா கைப்புள்ள... உன் அருமை எப்ப புரிய போவுதோ!

தேவையே இல்லாம இப்ப ராதா நியாபகத்துக்கு வரான் பாருங்க மனசிலே! அதான் குரங்கு மனசு என்பதோ. ஒரு நாள் ராமூர்த்தி சார் "ஐன்ஸ்டீன் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். வெறும் பிரட்டும் பாலாடைகட்டியும் தான் அப்போது அவருக்கு உணவு"ன்னு பாடம் நடத்தி கொண்டு போனார். ராதா மெதுவா "டேய் பாலாடைகட்டின்னா தமிழ்ல என்னடான்னு கேட்க நான் "ச்சீஸ்" டான்னு சொன்னேன். அதுக்கு அவன் "பார்ரா பார்ரா பிரட்டும் ச்சீசும் தின்னா ஏழையா? எங்க பாம்பே அத்தை வீட்டிலே அவா எல்லாருமே கார்த்தால பிரட், ச்சீஸ் தான் தின்றாடா. கொழுத்த பணம் தெரிமோ அவாளுக்கு, ஆத்துல லாம்ப்ரடான்னு குதிரை கணக்கா ஒரு ஸ்கூட்டர் நிப்பாட்டி வச்சிருக்கான்னா பார்த்துகோயேன்" அப்படின்னு சொன்னான். அவன் சொன்னது நியாயமா பட்டுச்சு எனக்கும் அப்போது.

இதை சொன்ன வுடனே நம்ம பாகிஸ்தானிய ஓட்டுனர் தான் நியாபத்துக்கு வர்ரான். நல்ல பையன் அப்புராணி. ஒரு தடவை ஆண்டிமெர்சான்னு ஒரு ஆங்கிலேய லொஜிஸ்டிக் மேனேஜர் தன் 6 வயது பையனையும் 3 வயது பெண்குழந்தையையும் கூட்டி வந்திருந்தார். பசங்க தன் அப்பாகிட்ட பேசிகிட்டு இருந்ததை பார்த்துட்டு நம்ம ஓட்டுனர் ஓடி வந்து "ஸாப் அந்த குழந்தைகள் என்னமா இங்கிலீஷ் பேசுது பாருங்க, இன்னும் சொல்ல போனா அவங்க அப்பனை விட நல்லா பேசுதுங்க"ன்னு சொன்னான். நான் சொன்னேன் "இங்கிலீஷ் கான்வெண்ட்ல படிக்க வச்சிருப்பார்"ன்னு. அதுக்கு நம்ம டிரைவர் "இருந்தாலும் இருக்கும் அவனுக்கு என்ன பெரிய சம்பளகாரன்"

ஒரு வழியா எனக்கு தனி ரேஷன் கார்டு வந்துவிட்டது நம்ம ராதா புண்ணியத்துல!(நான் ஒரு குடும்பத்துக்கு தலைவனாகிவிட்டேன்) ராதா தன் செல்வாக்கை(?) வச்சு வாங்கி கொடுத்துட்டான். போன் பண்ணி சொன்னான். "டேய் கார்டு வந்துடுத்து. கொண்டு கொடுத்துட்டேன். அபி "அங்கிள் அவசரமா பத்து நாள்குள்ள மதுரை அட்ரசுக்கு கார்டை மாத்தி தர முடியுமா?"ன்னு கேட்டா, ஏன் உனக்கு மதுரைக்கு போக உத்தேசமா என்ன?"ன்னு கேட்டான். போடா போக்கத்தவனே நீ அரசியல்ல ஜெயித்து கிழிச்ச மாதிரி தான்னு சொல்லி திட்டிட்டு போனை வச்சுட்டேன்.


பல்விளக்கி கிட்டு இருக்கும் போது பக்கத்து ரூம் பரதேசி பல்லை தேச்சுகிட்டே கேட்டான். அவசரமா ஒரு ஜோக் சொல்லு நான் டாய்லெட் போகனும்ன்னு. செம கடுப்பாகிடுச்சு. என் காமடி இந்த அளவு போயிடுச்சேன்னு. கடுப்பாகி இவனுக்கு எல்லாம் அரசியல் தான் சொல்லி வெறுப்பேத்தனும். ஜோக் எல்லாம் சொல்ல கூடாதுன்னு நினைச்சுகிட்டு "வைக்கோ விருதுநகர்ல நிக்கிறார்"ன்னு சொன்னேன். இடி இடின்னு சிரிச்சு கிட்டு வயித்தை கையால பிடிச்சுகிட்டு "இன்னும் ஒரு ஜோக்கு சொல்லு இன்னும் ஒரு பெரிய ஜோக் சொல்லுன்னு சொல்ல என் கோவம் இன்னும் அதிகமாகி "ம் கார்த்திக் அவரை எதிர்த்து நிக்கிறார்"ன்னு கடுப்பா சொன்னேன். அவன் இன்னும் அதிகமா சிரிச்சு கிட்டே தேங்க்யூ தேங்கியூன்னு டாய்லெட்க்கு ஓடினான். என்ன கொடுமை இது!

April 13, 2009

நானும் ராதாவும் ஸ்கூல் டூர் போன கதை!!! பாகம் # 2

இந்த இரண்டாம் பாகம் புரிய வேண்டுமானால் வ வா சங்கத்திலே நான் எழுதிய முதல் பாகம் இந்த லிங் ல படிச்சுட்டு இங்க வாங்க. அங்கயே 2ம் பாகமும் போட இருந்தேன். ஆனா மார்ச் மாசம் என்னை கேட்காம முடிஞ்சு போச்சு. அதனாலத்தான் மக்கா!

*************************************************

எப்படியும் நாம நம்ம ஸ்கூல் பஸ்சை பாண்டி ஹார்பர்ல பிடிச்சிடனும்னு நினைச்சுகிட்டு பாண்டிக்கு போக அந்த இரவு 3 மணிக்கு பஸ்டாண்டு வந்து பஸ் ஏறிட்டோம். காலை 6.30 க்கு பாண்டி வந்து ஒரு வழியா ஹார்பர் சேரும் போது காலை ஒன்பது ஆச்சு.

அதே நேரம் இங்க நம்ம ஸ்கூல்ல என்ன ஆச்சுன்னா அப்பதான் பிரபாகன் பஸ் சர்வீஸ் ரிப்பேர் எல்லாம் முடிஞ்சு வந்து எல்லாரும் பஸ் ஏறிகிட்டு இருக்காங்க. ராத்திரியே சார் எல்லாருக்கும் ரோல் நம்பர் சொல்லியிருந்தார். நாங்க பஸ்ல ஏறி உட்காந்ததும் அந்த நம்பரை சொல்லனும் சத்தமா. எவனாவது மிஸ் ஆச்சுன்னா தெரியும்ல. அதனல அப்படி செஞ்சிருந்தாங்க. அதை தவிர எல்லார் கையிலயும் மேப் , எந்தெந்த ஊர்க்கு எத்தனை மணிக்கு போய் சேருவோம், எங்க எங்க சாப்பிடுவோம் இரவு எந்த பள்ளி கூடத்திலே படுக்கை( ஹோட்டல் எல்லாம் கிடையாது ஒரு 15 பைசா தபால் கார்டு போட்டு ஸ்கூல் புக் செஞ்சிருந்தார் சார்) எல்லா விபரத்தையும் ரகு சார் பசை தடவிய ஏதோ ஒரு மிஷினில் அழுத்தி அழுத்தி காப்பி எடுத்து எல்லார் கையிலயும் கொடுத்து இருந்தார்.

எப்போதும் போல நாங்க ரெண்டு பேரும் (ரோல் நம்பர்27. 28) மிஸ்ஸிங். யாருன்னு சார் தன் கையில இருந்த பேரை பார்த்தா தொல்ஸ், ராதா மிஸ்ஸிங். பின்ன என்ன, வேற யாராவது வரலைன்னா கூட சைக்கிள் விட்டு தேடி வீட்டுக்கு ஆள் அனுப்பி கூப்பிட சொல்லியிருப்பார். நாங்க ரெண்டு பேரும் இல்லைன்னு சொன்னதும் சந்தோஷமா வண்டி கிளம்பிடுச்சு. ஆக, டூர் மிக சரியா 5 மணி நேர வித்யாசத்தில் பின் தங்கி வண்டி கிளம்ப நாங்களோ சரியான நேரத்துக்கு அந்த அஜண்டாவில் உள்ள படி போய் கிட்டு இருந்தோம்.

நேரா ஹார்பர்ல இருந்த செக்யூரிட்டி கிட்ட " சார் எங்க பள்ளி கூடத்திலே இருந்து டூர் வந்தவங்க உள்ள இருக்காங்களா"ன்னு கேட்டதுக்கு அவரு " ஆமா காலை ஆறு மணிக்கு வந்தாங்க. இப்ப தான் போனாங்க" ன்னு சொன்னாரு.(எந்த ஸ்கூலோ) அடப்பாவமே மிஸ் பண்ணிட்டோமே என்னடா பண்றதுன்னு ராதா கிட்ட கேட்டதுக்கு " விடுடா, எங்க போயிட போறாங்க மரக்காணம் ரோடு எல்லாம் பார்த்துட்டு அவங்க போய் கழுகு லஞ்ச்க்கு போகும் முன்ன நாம கழுகு மாதிரி பறந்து போயிடுவோம் வேற ஒரு ரூட் இருக்குன்னு மேப் எல்லாம் பிரிச்சு பார்த்து பெரிய ராணுவ திட்டம் மாதிரி சொன்னான். சரின்னு அடுத்த பஸ் பிடிச்சுட்டோம். அப்ப தான் மெதுவா கேட்டேன். " டேய் நாம போய் திருபரங்குன்றத்துல அவங்களோட சேரும் போது எங்கடா போயிட்டீங்கன்னு சார் கேட்டா என்னடா சொல்றது"ன்னு கேட்டேன். அதுக்கு அவன் "பஸ்ஸிலே தான் இருந்தோம்னு சொல்லிடுவோம் கேட்டா ஹார்பர்ல கப்பல்லாம் சூப்பரா இருந்துச்சுன்னு எதுனா சொல்லிடுவோம்" என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு. "ஏண்டா நாம தான் கப்பலையே பார்கலையே சார் கப்பல் என்ன கலர்ல இருந்துச்சுன்னு கேட்டா என்னடா சொல்றது?"ன்னு கேட்டதுக்கு அவன் " என்ன பிரமாதம் கப்பல் எல்லாம் கருப்பு கலர்தாண்டா, நீ ரத்ததிலகம் படம் பார்த்தியோ? நான் பார்த்தேன் பக்கத்து ஆத்து ரமா அம்மா அழச்சுண்டு போனா நான் சின்னதா இருக்கச்சே. அதில வரும் கப்பல் நல்ல கரு கருன்னு கருப்பு தாண்டா"ன்னு சொன்னான். எனக்கு அப்ப அதை ஒத்துகிட்டாலும் இதை டைப்பும் போது தான் அந்த படம் கருப்பு வெள்ளை படம் என்பது நியாபகம் வருது. அடப்பாவி கருப்பு வெள்ளை படத்துல வரும் கப்பல் சிகப்பாவா இருக்கும். என்னை இத்தனை நாள் மடையனா ஆக்கிட்டியே ராதா! நல்லா இருடா!

நாங்க ஒரு வழியா திருகழுகுன்றத்துல போய் மதியம் 1 மணிக்கு மலை மேலேயும் ஏறி வந்துட்டோம். வந்து பார்த்தா அங்க அங்க திட்டு திட்டா எல்லாம் மெரினா பீச்சுல நெருப்பு வச்ச மாதிரி மனித தலை. எல்லாம் கழுகு வந்து அந்த ரெண்டு உருண்டைய கொத்தி திங்கிறதை பார்க்க கூட்டம். கூட்டம் அத்தனை நெருக்கமா இல்லாம அலசலா அங்க அங்க உட்காந்து இருக்க நானும் ராதாவும் ஒரு இடத்திலே நிக்காம அந்த கழுகு மாதிரி வட்டம் அடிச்சுகிட்டே இருந்தோம் எங்க பள்ளிகூட கூட்டத்தை எதிர் பார்த்து.
அதே நேரம் ஹார்பர்ல சுத்தி பார்த்துட்டு எல்லாரும் பஸ்ஸில் ஏறி வரிசையா நம்பர் சொல்ல 27, 28 மிஸ்ஸிங். வழக்கம் போல சார் பேப்பரை பார்த்துட்டு "அவனுங்க தான்"ன்னு முனு முனுத்துகிட்டே "போலாம் ரைடேய்ய்ய்ய் அடுத்து நேரா திருகழுகுன்றம் தான். ஆனா இந்நேரம் கழுகு சாப்பிட்டு இருக்கும் நம்ம ஸ்கூலுக்கு தான் குடுப்பினை இல்லை"ன்னு சொல்லிகிட்டு இருந்தார்.

எப்படி குடுப்பினை இல்லாம போகும். அந்த புண்ணியத்தை எங்க ஸ்கூலுக்கு சேர்க்கத்தான் நாங்க ரெண்டு பேரும் தேவுடு காத்துகிட்டு உட்காந்து இருந்தோமே! எங்க பக்கத்திலே இருந்த பிராமண பாட்டி தன் பேத்திகிட்ட (பேத்தி கிட்ட தட்ட எங்க வயசு இருக்கும், நாங்க இடம் பார்த்து தான் உட்காந்தோமாக்கும்) அந்த 'தல" புராணத்தை சொல்லிகிட்டே வந்தாங்க.
"தோ பாருடீ பெருமாளுக்கு நைவேத்தியம் பண்ணிட்டு பட்டாச்சாரியார் வராரு பாரு, நேரா அந்த இடத்துல வந்து வைப்பாரு. டாண்னு ஒரு மணிக்கு கருடன் வருவார். சாப்பிடுவார்"ன்னு சொல்ல நான் ராதா கிட்ட "ஆமாடா ராதா எங்கம்மாவும் வெள்ளிகிழமை மதியம் விரதம் பண்ணிட்டு அப்பா மதியம் 12 மணிக்கு சாப்பிட வரும் முன்ன ஓட்டிலே சாதம் வைப்பாங்க "காக்கா" பாட்டு கூட பாட வேண்டாம். தானா வந்து சாப்பிடும்" ன்னு சொல்ல அந்த பாட்டி என்னை முறைக்க ராதா என்னிடம் இருந்து கொஞ்சம் அந்த பாட்டி பக்கமா நகர்ந்து உட்காந்து கிட்டு என்னை நீ யாரோ நான் யாரோ என்பது போல பார்க்க அந்த பெண் அவனை சினேகமா பார்த்துச்சு. திரும்ப வரும் போது ராதா முனுமுனுத்துகிட்டே வந்தான் "பெருமாளே அவா பாரத்வாஜ் கோத்திரமா இருக்க கூடாது"ன்னு என்னவோ. எனக்கு ஒன்னும் புரியலை. சரின்னு அடுத்த திட்டம் என்னடான்னு அவன் என்னை கேட்க நான் " டேய் மரக்காணம் ரோட்டிலே பஸ் பஞ்சர் ஆகியிருக்கும் அதை சரி செய்யங்காட்டிலும் கழுகு மதிய சாப்பாடு சாப்பிட்டு இருக்கும்னு நெனைச்சு நேரா செஞ்சி கோட்டைக்கு விட்டிருப்பாங்க. வா நேரா அங்க போய் பிடிச்சிடலாம். செஞ்சி ஸ்கூல்ல தான் நைட்டு தங்கனும். அதனால ரெடி ஜூட் செஞ்சி"ன்னு செஞ்சி பஸ் ஏறியாச்சு.

அங்கயோ சார் " கழுகு சாப்பிட்டு முடிச்சா என்ன நாம பெருமாளை சேவிச்சுட்டு லேட்டா போறோம் செஞ்சிக்கு. பின்ன ஒரு சேதி ஒரு சின்ன மாற்றம். செஞ்சி ஸ்கூல்ல என் கூட பி எட் முடிச்ச சார் கிட்ட தான லெட்டர் போட்டு இடம் கேட்டேன் தங்குவதற்கு அந்த ஸ்கூல்ல. அவர் கிட்ட பாண்டியிலே இருந்து போன் போட்டு பேசினேன். அவர் வீட்டுக்கு பக்கத்துல தான் போஸ்ட் ஆபீஸ். அந்த நம்பர் ஒரு அவசரத்துக்கு கொடுத்து இருந்தார். செஞ்சி ஸ்கூல்ல டாய்லட் வசதி அத்தன நல்லா இருக்காதாம். அவர் மேல்மலையனூர்ல தான் ஜாகை. அங்க ஒரு ஆரம்ப பள்ளி இருக்குதாம். பக்கத்துல காடு குளம் எல்லாம் இருக்கு தாம். அதனால நாம அங்க தான் ராத்திரி தங்குறோம்"ன்னு சொல்லிகிட்டு இருக்கார்.

செஞ்சி வந்து இறங்கியாச்சு நாங்க. நண்பனே எனது உயிர் நண்பனேன்னு தோள் மேல கைய போட்டுகிட்டு பாடிகிட்டே கோட்டைக்கு வந்தாச்சு. சுற்றியும் என்னவோ கூழாங்கல்லை கொட்டி குவிச்ச மாதிரி மலை. மெதுவா மலையும் ஏறியாச்சு. ஏகப்பட்ட ஸ்கூல் பஸ், பசங்க எல்லாம் வந்திருந்தாங்க டெங்கினிகோட்டை அரசினர் மகளிர் மேல் நிலை பள்ளி கூட ஒட்டிகிட்டு சுத்தி பார்ப்போமா இல்லாட்டி கோட்டயம் ஜான்குரியகோஸ் ப்ரீ டிகிரி லேடீஸ் காலேஜ் கூட போவாமா என நானும் ராதாவும் குழம்பாமல் ஒத்துமையா முடிவெடுத்து அந்த குரியகோஸ் குரூப்புல கோந்து மாதிரி ஒட்டிகிட்டோம். "கேட்டா என்னடா சொல்றது"ன்னு கேட்டேன். அதுக்கு அவன் "சுத்தி பார்க்க வந்த கைடு"ன்னு சொல்லிடுவோம்டான்னு சொன்னான். "லூசாடா நீ கைடு எங்கயாவது சுத்தி பார்ப்பானா? அவன் சுத்தித்தான் காமிப்பான்"ன்னு சொல்லிட்டு அப்படியே அந்த குரூப்போட மலை ஏற ஆரம்பிச்சோம். அந்த கூட்டத்துல எல்லாம் ஒரே பீட்டர். ராதாவுக்கு கொள்ளை ஆசை அது போல பீட்டர் விட. என் கிட்ட சொன்னான் " மிஸ்டர் தொல்ஸ் மிஸ்டர் தேசிங் ராஜ்ஸ் எ பிக் மன்னன் கட்டிபைஃயிங் ஹிஸ் குதிரை திஸ் பிளேஸ்"ன்னு ஒரு மரத்தை என் கிட்ட காமிக்க அந்த மொத்த கூட்டமும் எங்களை பார்த்தது!!

எங்களை பார்த்தாதான் நல்லா தெரியுமா அதும் +2 படிக்கும் போது பால்வடியும் முகமாச்சா(?) கைடுன்னு சொன்னா எல்லாம் கதகளி ஆடிடும்னு தெரியும். அப்படியே நைசா முன்னோக்கி நடந்து போய் டிங்கினிகோட்டை அரசினர் மகளிர் பள்ளியோடு ஐக்கியமானோம். ஒரு குதிரை மாத்திரம் இருந்தா சிட்டா ராஜா தேசிங்கு மாதிரி பறக்கலாம்டான்னு ராதா சொன்னப்ப கூட எனக்கு வந்தியதேவன் தான் நியாபகத்துக்கு வந்தான்.

அப்படியே அந்த கூட்டத்தை விட்டு வெளியே வந்து " நீ பார்த்த பெண்னை நான் பார்த்ததில்லை நான் பார்த்த பெண்னை நீ பார்த்ததில்லை, துள்ளி வரும் வெள்ளி நிலா"ன்னு மாத்தி மாத்தி பாடிகிட்டே இரவு அந்த ஸ்கூல்க்கு போனோம். வாட்ச்மேன் கிட்ட "ஏங்க மாயவரத்தில ஒரு ஸ்கூல்ல இருந்து டூர் வர்ரதா சொன்னாங்களே"ன்னு முடிப்பதுக்கு முன்னமே "ஆமா தம்பி ஜமுக்காளம் எல்லாம் அந்த ரூம்ல இருக்கு மத்தவங்க எல்லாம் வரலியான்னு கேட்க ராதா " வருவாங்க சுத்தி பார்த்துகிட்டு இருக்காங்க எங்களுக்கு தலை வலி அதான் முன்னால வந்துட்டோம் நான் ஸ்கூல் பீப்பிள் லீடர், இவன் அஸிஸ்டண்ட் ஸ்கூல் பீப்பிள் லீடர்"ன்னு பீலா விட்டான். சரின்னு அந்த பாட்டனி லேப்ல போய் படுத்தோம் எப்படியும் நம்ம பசங்க வந்துடுவாங்கன்னு நம்பிக்கையிலே. படுத்தது தான் தெரியும் மலை எல்லாம் ஏறின அலுப்பிலே அப்படியே தூங்கிட்டோம். காலை வாட்ச்மேன் வந்து எழுப்பின பின்ன தான் யாருமே வரலைன்னு தெரிஞ்சுது.

அதுக்காக கலங்கிடுவோமா என்ன? எழுந்து குளிச்சு முடிச்சு அந்த லேப்ல ஒரு பந்து இருந்துச்சு அதை விளையாடிகிட்டு அப்பவும் நம்ம பசங்க வந்துடுவாங்கன்னு நம்பிக்கையிலே இருந்தோம். ஒரு ஆர்வகோளாறுல அதை எட்டி உதைக்க அங்க இருந்த ரவீந்திரநாத் தாகூர் பொல பொலன்னு அழுதுட்டார். தூரத்திலே இருந்து வாட்ச்மேன் சத்தம் கேட்டு ஓடிவர அடுத்த நிமிடம் சாத்தனூர் டேம் போகும் பஸ்ஸில் இருந்தோம்.

சாத்தனூர் முதலை பண்ணையில் இருந்த செக்யூரிட்டிகிட்ட "சார் எங்க ஸ்கூல் பசங்க டூர் வந்தாங்களா,ஏன்னா நாங்க அவங்களை மிஸ் பண்ணிட்டோம்"ன்னு சொன்னதுக்கு அவர் "இப்படி மொட்டையா சொன்னா எப்படி தம்பி உங்க ஸ்கூல்க்கு எதுனா அடையாளம் சொல்லுங்கப்பா"ன்னு சொன்னதுக்கு ராதா " சார் ஒரு பத்து வருஷம் முன்ன கணபதிராமன்னு எங்க சீனியர் 464 மார்க் வாங்கி ஸ்டேட் பஸ்ட் வந்தாரு"ன்னு சொன்னான். நல்லா சொன்னான் அடையாளம். அவர் முறைத்ததை கண்டுக்காம உள்ளே போனோம்.

எங்க பள்ளி டூர் அப்ப தான் காலை மேல்மலையனூர்ல எழுந்து கிளம்பி செஞ்சிகோட்டை வந்தாங்க. நாங்க சாத்தனூர் போயிட்டு முதலை பண்ணை, டேம் எல்லாம் மிகச்சரியா எங்க கையில இருந்த அஜண்டா படி முடிச்சுகிட்டே மகாபலிபுரம் வந்தோம்.

அங்க எல்லாம் சுத்தி பார்த்துட்டு (ஒரு முழுநாள் மகாபலிபுரம்ன்னு டூர் புரொக்ராம்) மதியம் வெண்ணை உருட்டும் பாறைகிட்ட வந்து பார்த்தா அட எங்க ஸ்கூல் பஸ் வந்து நிக்குது. தப தபன்னு பசங்க இறங்கிகிட்டு இருக்காங்க. நாங்க கொஞ்சம் வெயிட் பண்ணி கடைசியா இறங்கின வினாயகத்தை பஸ் பின்னால இருந்து டொக் அடிச்சு கூப்பிட்டு அவன் எங்களை பார்த்துட்டு வந்து விஷயம் எல்லாம் சொல்லி பின்ன அவன் கிட்ட நாங்க 27, 28 சீட்டுல குந்திக்கிறோம். நீ போய் நம்ம பசங்களை கூட்டிகிட்டு வான்னு சொல்ல அடுத்த 10 நிமிஷத்துல எல்லாரும் ஆஜர்.

பின்ன நடந்தது எல்லாம் இரண்டு பக்கமும் பரிமாறிக்கப்பட்டது. அப்படியே ஒரு முடிவெடுத்தோம். பின்ன டூர் எல்லாம் முடிஞ்சு எல்லாம் பஸ்ஸில் ஏறி சார் ரோல் கால் ஆரம்பிச்சப்ப 25, 26, 27, 28 ,29 .... சார் "நிறுத்துங்கடா"ன்னு ஒரு கத்தல். நாங்க ரெண்டு பேரும் எதுவுமே நடக்காதது போல அப்படியே அவரை பாவமா பார்த்தோம்.

"டேய் எந்திரிங்கடா, எங்க போயிருந்தீங்க?ன்னு கேட்டதுக்கு கொஞ்சமும் முகம் மாறாம ராதா ரெண்டு கையும் கட்டிகிட்டு வெண்ணை உருட்டும் பாறைக்கு சார்"ன்னு சொல்ல நான் " நான் அதை பார்க்கலை சார் கால் வலிச்சுது அதனல நான் முன்னமே வந்துட்டேன் சார்"ன்னு சொன்னேன். செம டென்ஷன் ஆகிடுச்சு சாருக்கு. பின்னே மத்த பசங்களும் அப்படியே எங்களுக்கு சப்போர்டா " சார் இவன் ஹார்பர்ல என் காலை தடுக்கி விட்டான் சார்" "சார் இவன் சாத்தனூர்ல அந்த குஞ்சி முதலையை பிடிச்சு மேல விட்டுடுவேன்ன்னு சொன்னான் சார்" அப்படின்னு சொல்லிகிட்டே போக ராதா " நீ மட்டும் என்னவாம் திருகழுகுகுன்றத்துல கழுகு எப்படி இருக்கும்ன்னு கேட்டதுக்கு முட்டிகையை கொக்கு மாதிரி வச்சி காமிச்சியே அதை சொல்லவா சாருக்கு" அப்படின்னு சொல்ல சொல்ல சொல்ல சாருக்கு குருதிஅழுத்தம் அதிகமாச்சு.

சரி இவனுங்க கிட்ட பேசினா சரியா வராதுன்னு தெரிஞ்சு போச்சு. அப்படியே ஊர் வந்து சேர்ந்தோம். அப்பப்ப சார் எங்களை திரும்பி பார்க்கும் போதல்லாம் நாங்க "சத்தியமா நாங்க உங்க கூட ஆரம்பம் முதலே வரோம் சார் என்பது மாதிரியா பார்ப்பதும் பின்னே அவர் தன் நெஞ்சை பிடிச்சுகிட்டே திரும்பிப்பதும் நடந்து கொண்டிருந்தது.

ஆச்சு ஒரு இரண்டு நாள் ஒரு நாள் பிரேயர் முடிஞ்சு எல்லாம் வகுப்புக்கு போகும் போது எங்களை நிறுத்தி கேட்டார். "கேக்குறனேன்னு தப்பா நினைக்காதீங்கடா? என்ன தான் நடந்துச்சு, நான் கோவிச்சுக்க மாட்டேன் சொல்லுங்கடா"ன்னு சொல்ல ரெண்டு பேரும் கோரஸா "சார் நாங்க ஆரம்பம் முதலே உங்க கூடத்தான் வந்தோம் நீங்க தான் நாங்க ஆப்சண்ட் அப்படின்னு தப்பாவே சொல்லிகிட்டு இருக்கீங்க வேணும்ணா "டேய் சங்கர் சொல்லுடா நாங்க உங்க கூட தான வந்தோம்" அப்படின்னு சொல்ல பியூன் வைத்தா வந்து "சார் உங்களுக்கு ஒரு லெட்டர்ன்னு கொடுத்தாரு.
பிரிச்சு படிச்சார். மெதுவா நடு நடுவே லெட்டரில் இருந்து தலை தூக்கி எங்களை பார்த்தார். லெட்டரை மடிச்சு பாக்கெட்ல வச்சிட்டு "ம் இப்ப சொல்லுங்க என்ன நடந்துதுன்னு கேட்டார்.

திரும்பவும் கேரஸாக "சார் நாங்க ஆரம்பம் முதலே....." கையால் எங்களை பேசுவதை நிப்பாட்ட சொல்லி சமிக்கை செஞ்சுட்டு அந்த லெட்டரை எடுத்து கொடுத்துட்டு போனார். ஒன்னும் பேசலை.
மெதுவா வாங்கி அதை படிச்சோம்.

அதிலே ரவீந்திரநாத் தாகூர் உடைச்சு போன கதையை அந்த சார் விலாவாடியா பத்து மார்க் கட்டுரை மாதிரி அடித்தல் திருத்தல் இல்லாமல் பத்தி விட்டு பத்தி விட்டு பிழை இல்லாமல் எழுதியிருந்தார். நான் மட்டும் அவருக்கு தமிழ் வாத்தியாரா இருந்திருந்தா பத்துக்கு நூறு மார்க் போட்டிருப்பேன்.

April 11, 2009

அழகிரியும் ஸ்டாலினும் குடும்ப அரசியலும்!!!



தலைப்பை பார்த்து விட்டு அரசியல் பதிவுன்னு ஆசையா வந்து ஏமாந்து போன கனவான்களே, அதே போல "அய்யய்யோ அரசியல் பதிவு போலயிருக்கு" என எட்டி பார்க்காமல் தான் ஏமாந்து போனதே தெரியாம ஏமாந்து போன என் விசிறி(?????) களே! இது ச்சும்மா ஒரு சுயபுலம்பல் பதிவு தான்.

அவன் எனக்கு இரண்டு வயது இளையவன். வயது வித்யாசம் குறைவாக இருந்த போதும் நெம்ப மரியாதையா இருப்பான் என் மீது:-)) "எலே அண்ணன் இங்க பாரண்டா" என ஏகப்பட்ட டா டா டட்டடா டால்பா டப்பா எல்லாம் போட்டு கூப்பிட்டாலும் அண்ணன் பெயரை சொல்லி எல்லாம் மரியாதை குறைவா நடந்துக்க மாட்டான். நாங்க பிறந்தது முதல் லக்கிலுக் வலைப்பூவுக்கு ஆன ஆனா ஹிட் எண்ணிக்கையை விட பத்தோ இருபதோ எண்ணிக்கை குறைவாகத்தான் சண்டை போட்டிருப்போம்.

ஆனால் பேசாமல் இருப்பது ஈசல் ஆயுள் நேரமே அதிக பட்சமாக. உடனே "உனக்கும் எனக்கும் செத்தா வாழ்ந்தா கிடையாது" அப்படீன்னு இரு பக்கமும் இருந்து சவால்களும் சாபங்களும் பறக்கும். எப்போ அதல்லாம் ஒரு ஏழு, எட்டு வயசிலேயே.

பின்ன சமாதான உடன்படிக்கை எல்லாம் போட்டுப்போம். சில சமயம் அதிக சேதாரம் ஆனவங்களுக்கு ஜெயிச்சவங்க உண்டியல் காசு எல்லாம் நிவாரண நிதியாகக்கூட போகும். சில சமயம் நானும் அவன் என்னை வாடா போடான்னு கூப்பிட கூடாது ஒரு வருஷத்துக்குன்னு நான் சொல்ல அந்த ஒரு வருசம் என்பது எங்க சமாதான உடன்படிக்கை முடியும் போது ஒரு மணி நேரமா ஆகியிருக்கும்.உடன்படிக்கையின் அந்த சிறப்பு தீர்மானத்திலே உட்பிரிவா "அந்த ஒரு மணி நேரம் எது என்பதை அவனே முடிவு செய்வது" என சொல்லி சேர்த்துடுவான். பின்னே அதன் படி அவன் இரவு தூங்கும் போது அந்த ஒரு மணிநேரத்தைன்னு சொல்லிடுவான்.

இப்படியாக நாளொரு சமாதானமாகவும் பொழுதொரு சண்டையுமாக வளர்ந்தோம்.தூங்கும் போதும், சாப்பிடும் போதும், அத்தனை ஏன் தென்னந்தோப்புக்கு காலைகடன் கழிக்க போனா கூட ஒன்னாதான் இருப்போம். சாப்பிட ஆரம்பிக்கும் போது இரண்டு பேர் தட்டையும் அவன் கழுவிட்டு வந்து "டேய் உனக்காக நானே தட்டு கழுவிட்டேன்"ன்னு சொல்லும் போது ஆஹா இப்படி ஒரு தம்பி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும்ன்னு அப்படியா ஜிவாஜி ரேஞ்சுக்கு அவன் உச்சி முகர்ந்து பீலிங்ஸ் விடுவேன். அதுக்கு அவன் "வுடுடா வுடுடா உனக்கு நான் தட்டு கழுவாம யாருக்கு கழுவ போறேன் நோ பீலிங்ஸ் ஆஃப் இந்தியா"ன்னு சொல்லும் போது எங்க பாசத்தை பார்த்து அம்மாவும் படக்குன்னு தாலிய எடுத்து கண்ணு ஒத்திப்பாங்க( எது எதுக்கு தாலிய கண்ணுல ஒத்திகிறதுன்னு இல்லியா)

சாப்பிட்டு முடியும் போது மெதுவா சொல்லுவான் "டேய் நான் சாப்பிடும் முன்ன கழுவினேன்ல அதனால நீ இப்ப என் தட்டை கழுவிடு"ன்னு சொல்லிட்டு ஓடிடுவான். ஆகா கழுவின தட்டை சும்மா அலசிட்டு இப்ப கொத்ஸு எண்ணெய் பிசுக்கு தட்டை நான் கழுவும் படி ஆகிடுச்சென்னு சண்டை ஆரம்பமாகும். அம்மா அநியாயமா அவசரப்பட்டு ஒரு தாலி ஒத்தல் வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு வருத்தப்பட்டு பாரபட்சமே இல்லாம ரெண்டு பேருக்குமே வெளக்குமாறு மந்திரித்தல் வைத்தியம் பண்ணுவாங்க.

அதிக சேதாரம் இரு தரப்புக்கும் ஆகிவிடும் சிலசமயம். அப்போதே முடிவு செஞ்சிடுவோம். 'வாடா இன்னிக்கு கச்சேரி பிள்ளையாருக்கு போய் சத்தியம் செஞ்சிடுவோம் இனி சண்டையா போடாம ஒத்துமையா இருந்துடுவோம்"ன்னு சொல்லிட்டு சூடம் வாங்கிட்டு கிளம்பி போய் சூடத்தை கொளுத்தும் போது சொல்லுவான் "டேய் அண்ணா உன் கையால அடிச்சு சத்தியம் செய்வதா வேண்டிகிட்டேன் அதனால கையால அந்த சூடத்தை அடி"ன்னு சொல்லுவான். நான் எப்படா வேண்டிக்கிட்டன்னு கேட்டா "ஜஸ்ட் நவ்"ன்னு கூலா சொல்லுவான். பின்ன என்ன ஒத்துமையா இருப்போம்ன்னு சத்தியம் பண்ண போன இடத்திலே கட்டி புரண்டு சண்டை தான். இப்படி அடிக்கடி கச்சேரி பிள்ளையாரை டார்ச்சர் கொடுக்க டார்ச்சர் கொடுக்க எங்க ரெண்டு பேரையும் ஒன்னா பார்த்டுட்டாளே அவருக்கு குலை நடுங்கி போய் திரும்பி உட்காந்துப்பார்.

இப்ப அதுக்கு என்னன்னு கேட்குறீங்களா? இப்படி அழகா போய்கிட்டு இருந்த எங்க சண்டை வளர வளர அதும் பெரிசா வளர்ந்துச்சு. ஈசல் ஆயுளா இருந்த "அந்த பேசா" நேரமும் அதிகமா ஆகிடுச்சு. சமீபத்துல ஒரு ரெண்டு வருஷமா சுத்தமா பேச்சுவார்த்தை இல்லாம போயிடுச்சு:-((

நல்லா எழுதுவான். அரசியல் அருமையா பேசுவான். நல்ல உக்கிரமா எழுதுவான். அவனும் ஒரு மூனு வருஷமா தொழிலில் பிசியாகிவிட்ட காரணத்தால் எழுதுவது கிடையாது. ஆனா நேத்து சீமாச்சு அண்ணா, முத்துகுமார் இருவரும் ஒரு லிங் கொடுத்து இருந்தாங்க. ஓப்பன் பண்ணி பார்த்தா ஆச்சர்யம். அவன் தட்ஸ் தமிழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கான். இதோ அந்த லிங்.தான் ஆடாட்டியும் தன் எலும்பு ஆடும்ன்னு சொல்வாங்களே அது போல ஆகிடுச்சு எனக்கு.

மேலே போட்டோ பார்தீங்களே அது நானும் அவனும். பார்த்தா அழகிரி ஸ்டாலின் மாதிரி இருக்கீங்க. அவங்களே ஒன்னு சேர்ந்தாச்சு. நீங்க அது போல ஒன்னு சேர்ந்தா என்ன? அப்படின்னு என் பிரண்ட் ஒருத்தாங்க கேட்டாங்க! அதுக்கு நான் "அழகிரி ஸ்டாலின் எல்லாம் சரிதான் பிரண்ட், நாங்க ஒத்துமையா ஆகனும்ன்னா எங்க மாமா பையன் எவனாவது எங்க ரெண்டு பேர்ல யார் உசத்தின்னு கருத்து கணிப்பு நடத்தனும். நாங்க அவங்க வீட்டுல போய் அட்லீஸ்ட் மூனு பேரை போட்டு எரிக்கனும் பின்ன ஒத்துமையாகனும்....ஹும் "அப்படீன்னு பெருமூச்சு விட்டுகிட்டேன்.

April 7, 2009

தலைவா! செருப்பு விழுவதை விட குண்டு விழுவது கொடுமை என் தலைவா!!!




என் அன்பு தலைவா!
ஒரு உள்துறை அமைச்சர் மீது செருப்பு வந்து விழுந்தமைக்கே பதறி போய் ஒரு நாட்டின் முதல்வனாகவும் கூட்டனி கட்சியின் தலைவனாகவும் போன் போட்டு பேசினாயே என் தலைவா! மேலே உள்ள படங்களை பார் தலைவா. உனக்கு கண்ணீர் வரவில்லையா.
அடிபட்ட குழந்தையை மடியில் வைத்து கொண்டு அழும் தந்தையை பார். கால் துண்டிக்கப்பட்ட பெண் குழந்தையை பார். செத்து போன பிச்சுவை பார்.
என்னால முடியலை தலைவா! உன்னால் கண்டிப்பாக முடியாது ஏனனில் நீயும் மக்களை பெற்ற மகராசன் தான்.

அவர்களின் தலைவருக்கு தான் ஈகோ பிரச்சனை. உனக்கு என்ன ஆயிரம் பிறை கண்டவன் நீ! மற்றவர் பிழை மன்னித்து உன் கருணையை காட்டு. அந்த பிஞ்சுகள் நிலையை நினை.

உன்னால் முடியாதது ஏதும் இல்லை. நீ நினைத்தால் மட்டுமே இப்போது எதுவும் சாத்தியம். அது தான் இப்போதைய சத்தியம். உனக்கு இப்போ தேவை இல்லை தேர்தல். ஏனனில் எம் இனத்தவருக்கு உடனடி தேவை ஆறுதல் தான்.

வரும் செய்திகள் அத்தனை சரியாக படவில்லை மனதுக்கு. நீ 15 நாள் தேர்தல் சுற்று செய்வதை விட 15 நிமிடம் இந்த விஷயத்துக்கு செலவிட்டால் போதும் நாற்பதும் நமக்கே அந்த தமிழீழம் என்னும் நாடும் நமக்கே!
கண்ணீர் துளிகளுடன்
அபிஅப்பா
புலம் பெயர்ந்து நம் இனத்து சொந்தபந்தங்கள் நினைத்து அழுது கொண்டிருக்கும் என் தங்கை தூயா போன்றவர்களுக்கு என் ஆறுதல் இந்த பதிவு மாத்திரமே! என்ன செய்வது:-((
படங்கள் விடுதலை வீரபத்திரன் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி!

April 5, 2009

வாந்திய' தேவன் அபிஅப்பா!!

நான் ஏற்கனவே குதிரை பந்தயம் பத்தி ஒரு பதிவு எழுதி இருந்தேன். எனக்கு எப்பவுமே வந்தியதேவன் மாதிரி எனக்கும் எப்பவுமே குதிரையின் மேல் ஒரு அலாத காதல். அன்றைக்கு அந்த போட்டியின் போதே 2 மாதத்துக்கு 1800 திர்காம் கட்டி குதிரை ரைட் டிரைவிங்க்கு பணம் கட்டியாச்சு.

மேலும் அப்போ 900 திர்காம் கட்டி 1மாதத்துக்குன்னு சொல்லிட்டு 7.8 மெகா பிக்சில் காமிராவும் வாங்கிட்டேன்.எனக்கு என்ன 200 வருஷம் பின்ன ஒரு கல்கியா எழுத போறார்! ம செ மாதிரி என்னை படம் வரையா போறாங்களா? இல்லியே அதனாலத்தான் அந்த கேமிராவும் வாங்கியாச்சு! சரித்திரம் முக்கியம் சாரே!

முதல் நாள் கிளாசுக்கு போன பின்னே குதிரை கிட்ட என்னை கூட்டி போய் "இதான் லைன் பிளட்"ன்னு அந்த ஆஸ்திரேலியாகார வாத்தி சொன்னப்ப குசும்பன் தான் நியாபகம் வந்தான். ஒரு முறை என் ஆபீஸ்க்கு குசும்பன் வரும் போது பெருமையா சொன்னேன் "இந்த பிராஜட் 5.5 பில்லியன் திர்காம்டா தம்பி"ன்னு. அதுக்கு தம்பி கேட்டான் "என்ன பிராஜட்?"ன்னு. நான் பெருமையா சொன்னேன் "உலகின் மிக பெரிய குதிரை பந்தய மைதானம் இது"ன்னு. நல்லா நாக்கை புடுங்குவது போல கேட்டான் "இது அந்த குதிரைக்கு தெரியுமா??"" லைன் பிளட்டாம் லைன்பிளட் அந்த பேரை சொல்லி கூப்பிட்டா அது திரும்பி பார்க்குமா??

கிரிக்கெட் மாதிரி இது "கீழ்" தரமால்லாம் "காட்" கட்ட வேண்டாம். முதுகிலே கட்டிகிட்டா போதும். ஆனா இதிலே சம்புரதாய்ம் எல்லாம் அதிகம். அதாவது நம் வலது காலை அந்த குதிரையில் வலப்பக்கம் தொங்கும் பட்டியில் (இதானா தமிழ் பேரு??) வைத்து ஒரு உந்து உந்தினா 3 அடிதான் உயர முடியும். ஆனா குதிரையோ 7 அடி உஅயரம். அப்ப நம்ம கோச்சின் அஸிஸ்டண்ட் நம் இடது உள்ளங்கால் பிடிச்சு ஒரு தூக்கு தூக்கி விடுவார். அப்ப தம் இருந்தா நாம் எகிறி குதிரையின் மேல உட்காந்துடலாம்.
என் வெயிட் கம்மி என்பதால் முதன் முறையே எம்பி உட்காந்தாச்சு. ஆனால் கடிவாளத்தை என் கோச் இன்னும் ஒரு குதிரை மேல உட்காந்து பிடிச்சுகிட்டு போக "அய்யோடா நான் பீச்& ஊட்டி குதிரை ரசிகனாயிட்டேனே"ன்னு ஒரு ஆதங்கம் வந்துடுச்சு.

ஒரு பர்லாங்க் போன பின்ன அவர் என் கிட்ட கடிவாளத்தை விட்டுட்டு "சொடுக்கு"ன்னு சொன்னார். பின்ன என்ன நான் வந்திய தேவனா ஆகியாச்சு. அது பறக்குது மின்னல் மாதிரி! ஆஹா ஆஹா என்ன ஒரு சந்தோஷம்! அப்படியே குந்தவை பக்கத்தில் வந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சுகிட்டு குந்தினா குந்த வைக்கும் இடத்தில் இருந்த அந்த சீட் நழுகி போயிருந்துச்சு. பின்ன என்ன குந்த வைக்கும் இடத்துக்கு "டீப் ஹீட்" போட வேண்டியதா போச்சு. அப்படியே முதல் 1 வாரம் போன பின்னே அடுத்து "சரி நம்ம போட்டோ செஷன் எடுத்து பிளாக்ல போட்டு வந்திய தேவனுக்கு முற்றும் போட்டுடலாம்"ன்னு நெனைச்சு கேமிராவை எடுத்து கிட்டு போனேன் 1 வாரம் முன்ன!

"சார் நான் இப்ப ஒரு கைதேர்ந்த குதிரை வீரனா ஆகியாச்சுன்னு நினைக்கிறேன். அதனால நீங்க இந்த கேமிராவை பிடிங்க படத்தை புடிங்க. ஆனா இனி எனக்கு இந்த சொங்கி குதிரை எல்லாம் வேண்டாம். அதனால லக்கிலூக் பதிவு மாதிரி இருக்கும் இந்த நமீதா தான் வேண்டும்ன்னு சொல்ல அவரோ "நோ நோ உனக்கு இன்னும் குதிரையிலே நல்ல எக்ஸ்பீரியன்ஸ் வரும் வரை இதை கொடுக்க வேண்டாம்ன்னு பார்க்கிறேன்"ன்னு சொல்ல "சார் நாளை அடுத்த மாச பீஸ் எடுத்து வரேன்"ன்னு சொல்ல அவரும் சரி எதுல வேணா போன்னு சொல்ல நானும் ஏறிட்டேன்.

நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு. இதிலே ஒரு வேடிக்கை என்னான்னா நம்ம குதிரையிலே ஏறின பின்னே வாயிலே 15 அல்லது 20 உளுந்து மாதிரி ஒரு உருண்டை போடுவாங்க

நாம் வேகமா ஓட்டனும்ன்னு நினைச்சா அப்படியே குனிஞ்சு அதிலே ஒரு 2 அல்லது 3 உருண்டையை அதன் காதில் வேகமா படும் படி ஊதனும். அப்படியே சிட்டா பறக்கும். எனக்கு என்ன ஒரு கெட்ட பழக்கம்ன்னா அது 1 பர்லாங் போன பின்னயே அந்த உருண்டை எல்லாம் அது குதிக்கும் குதியிலே என் வயித்து உள்ளே போயிடும். விட்டா நான் குதிரையை விட வேகமா ஓடி வந்து டாய்லெட்டுக்கு ஓடிடலாம்ன்னு தோணும்!

வாத்தி அப்பவே சொன்னாரு! எலேய் காதுல அந்த உருண்டை விழுந்தாலே பிச்சுகிட்டு போகும். ஆனா தவறி போய் கூட உன் கால அதன் காதிலே படாம பார்த்துக்கோ" அப்படின்னு.

ஒரு கட்டத்துல என் கால் எங்க இருக்கு அது எங்க இருக்குன்னு எல்லாம் தெரியலை! அந்த வேகத்திலே என் கால் அதன் காதிலே உரசிச்சு. அவ்வளவுதான்!

கால் விரல் மாத்திரம் அப்ப உணர்ந்துச்சு ஆகா சார் சொன்னதுக்கு ஆப்போ சிட்டா செய்றியேடா அபிஅப்பா அப்ப உனக்கு ஆப்பு சிட்டா வந்துடும் பாருன்னு ! அது போலவே அதுவரை மணல் தரையிலே சிட்டா பறந்துகிட்டு இருந்த என் நமீதா ட்ராக் மாடி புல் தரைக்கு மாறின பின்ன எனக்குள் இருந்த வந்தியதேவன் வயித்தை பிசைய ஆரம்பிச்சுட்டான்
.
பின்னவே செம ஸ்பீடுல வந்த என் கோச் (அது ஒரு ட்ரைனி குதிரை நம்ம நமீதா மாதிரி இல்லை) என் ஸ்பீடுக்கு பக்கத்தில் கூட வர முடியாம போக எனக்கு வயித்தை மாத்திரம் இல்லை எல்லா பாகமும் கலங்கி போச்சு!
ஒரு வழியா கடிவாளம் பிடிச்சு இழுத்து நிறுத்தலாம்ன்னு நான் நினைக்கும் போது தான் அது என் கையில் இல்லாமல் கீழே தவழ்ந்து வந்துகிட்டு இருப்பது தெரிஞ்சுது.அந்த கெரகத்தாலத்தான் நான் இப்படி கஷ்டப்படுவதும் அப்போதான் தெரிஞ்சுது.
நமீதாவோ "ஒரு நல்ல வடிவேலு கிடைச்சாண்டா நமக்கு"ன்னு கும்மு கும்முன்னு கும்மிகிட்டு இருக்கு! அது ஏன் அப்படி வெறி பிடிச்ச மாதிரி ஓடுதுன்னு யோசிப்பதான் தெரியுது நான் ஒரு லூசு கடிவாளத்தை விட்ட காரணத்தால் அதன் காதை பிடிச்சுகிட்டு இருக்கேன்:-))

இதிலே வேற என் நினைப்பு எல்லாம் வாத்தி போட்டோ எடுத்தாரா இல்லியான்னு மட்டும் தான் இருந்துச்சு. (அடங்கொப்புறானே)
அப்படியே என் கோச் துரத்தி வர நான் ஒரு அழகான புல் மெத்தை பக்கம் ஒதுக்கப்பட்டேன். அவர் என்னை "குதி குதி" என கத்த நான் பதிலுக்கு "சார் உங்க குதிரை மேல இருக்கும் பாசம் என் மேல இல்லியா நான் நாளைக்கு அடுத்த மாசம் ஃபீஸ் தருவதா சொன்னேன்ல" அப்படி நினைச்சுகிட்டேன்.
"எலேய் மேன் அந்த புல் மேலே விழுந்துடு"ன்னு சொன்ன போது தான் புரிஞ்சுது அவர் என்னை தான் குதி குதின்னு கத்தியிருக்கார்ன்னு. ஆமாம் குதிரையா என் மேல உட்காந்து இருக்கு நான் தானே அதன் மேல உட்காந்து இருக்கேன், அப்படியே கலக்கிய வயித்தோட கீழே விழுந்தேன் கூடவே குடம் குடமா வாந்தி!!!! அட அப்ப நான் தான் லூசா????

ஆக ஒரு வந்தியதேவனை வாந்திய தேவனா ஆக்கிய நமீதாவுக்கு என் கண்டனங்கள்!!