நேற்று நடந்த இந்தியா-பர்மூடா போட்டியை முழுவதும் பார்த்து ஒரு நல்ல விமர்சனம் போட முடிவெடுத்தேன். அப்படி ஒரு பதிவு போடும்போது நம்ம பக்கத்துல ஒரு தேர்ந்த கிரிக்கெட்டர் இருந்தா நல்லா இருக்குமேன்னு நம்ம 'பாஃஸ்ட் பவுலர்' க்கு போன் செய்தேன்.
"என்ன பாஃஸ்ட் பவுலர் இன்னிக்கு மேட்ச் இருக்கே வர்ரீங்களா நம்ம கூட பார்க்கலாம்"ன்னு கேட்டேன். அதற்கு அவரும் "நானே உங்களுக்கு போன் செய்யலாம்ன்னு இருந்தேன். போன மேட்சுக்கே தங்கமணி கிண்டல் தாங்கலை. அதனால உங்க கூட பாக்கலாம்ன்னு நெனச்சேன். கண்டிப்பா வர்ரேன்" அப்டீன்னாரு.
"சரி நீங்க என் வீட்டுக்கு வர்ரத்துகுள்ளே மேட்ச் முடிஞ்சுடும். அதனால கராமாவிலே என் ஃபிரண்ட் ஒருத்தர் ஊருக்கு போய்ட்டார், அவர் பிளாட் கீ என்கிட்ட தான் இருக்கு அங்க போயிடலாம்"ன்னு சொன்னேன். அவரும் "சரி என்கூட 2 பேர் வருவாங்க"ன்னு சொல்லிட்டு வச்சுட்டார்.
நானும் ஆஃபீஸில் இருந்து கிளம்பி அங்கே போய் சேரவும் பாஃஸ்ட் பவுலரும் வந்து சேரவும் சரியா இருந்துச்சு. அப்போ மணி 5.00 . துபாய் டைம் 5.30க்கு மேட்ச் ஆரம்பம்.
அப்போதான் அந்த போன் வந்தது. "மாப்ள முதல்லயே சொல்லிகிறேன் நா ராதா அதான்டா குரங்கு ராதா பேசுறேன். சன் டி.வி காமடி டைம் இல்ல"ன்னான் நம்ம ராதா. ஏற்கனவே அவன் பட்டது இன்னும் ஞாபகம் இருக்கும் போல. "சரி சொல்லுடா" ன்னேன். அதுக்கு அவன் "இன்னிக்கு மேட்ச் இருக்கு தெரியும்ல? நா உங்கூட பாக்கலாம்ன்னு வந்துகிட்டு இருக்கேன்"ன்னான். ஆஹா ஏழரைய கூட்டுரானேன்னு "மாப்ள நா என் இடத்துல இல்ல. என் பிஃரன்ட் வீட்டுல கராமாவுல இருக்கேன்" அப்டீன்னேன். அதுக்கு அவன் "கராமாவுல எங்க?"ன்னான். "உன்னால வரமுடியாது மாப்ள, இது வழி சொல்லவே முடியாத சந்துடா"ன்னேன்.
"பரவாயில்ல சொல்லு"ன்னான். சரி இன்னிக்கு நம்ம மண்டை காயபோவது நிச்சயம்ன்னு நெனச்சுகிட்டு வழியை சொன்னேன். சொல்ல சொல்ல "இதுக்கு பக்கத்துலயா, அதுக்கு பக்கத்துலயா, பில்டிங் பேர் என்ன, எத்தனையாவது மாடி, பிளாட் நம்பர் என்ன"ன்னு கேட்டுகிடே இருந்தான். அதுக்கு நான் "பிளாட் நம்பர்லாம் நீ கராமா வந்து சேந்தபிறகு சொல்றேன், போன வைடா, மேட்ச் ஆரம்பமாவ போவுது"ன்னு சொல்லிட்டு போனை கட்பண்ணீட்டேன். கொஞ்சம் இருங்க காலிங் பெல் சத்தம் கேக்குது. யாருன்னு பாத்துட்டு வந்து மீதிய சொல்றேன்.
போய் கதவை திறந்து பாத்தா நம்ம ராதா நிக்கிறான். "அடப்பாவி பறந்து வந்தியா"ன்னு கேட்டதுக்கு "நான் உனக்கு போன் பண்ணும் போதே பில்டிங் கீழதான் இருந்தேன்"ன்னான்.
"இவரு தான் "ஃபாஸ்ட்ப்வலர்" இவங்க ரெண்டு பேரும் அவர் பிரண்ட்ஸ் இப்போ நம்ம பிரண்ட்ஸ்" என அறிமுகமெல்லாம் முடிஞ்சுது. நம்ம பாஸ்ட்பவுலரோ செம டென்ஷன்ல இருந்தார். இன்னும் 15 நிமிஷத்துல மேட்ச் ஆரம்பம்.
சரின்னு எல்லாரும் அவங்க அவங்க சிலிப், கலிப்பாயிண்ட் அப்டீ இப்டீன்னு உக்காந்தாச்சு. அதுக்குள்ள டாஸ் போட்டாங்க. அவிங்க ஜெயிச்சாங்க! ராதா ஆரம்பிச்சுட்டான் கச்சேரிய. "இவுனுங்க எங்கடா ஜெயிக்க போறாங்க, டாஸையே ஜெயிக்கமுடியலை, நிக்க வச்சு சுடனும்டா, நீங்க என்ன சொல்றீங்க பாஸ்ட்பவுலர்"ன்னு கேட்டான். அவருக்கு 2 காதிலும் குபு குபுன்னு புகை. சரியா வந்து மாட்டிகிட்டோமேன்னு எரிச்சல்.
"என்னடா மாப்ள கழுத்தில கருப்பு கருப்பா கட்டியிருக்காணுங்க"ன்னு அடுத்த பந்தை போட்டான். யாரும் பதில் சொல்லலை. நிசப்தம். ஏன்னா கங்குலியும், உத்தப்பாவும் இறங்கிட்டாங்க!
"பேர பாரு உத்தப்பா, ஊத்தப்பான்னு ஊத்திக்க போறான்" இது அவன். மெதுவா பாஸ்ட்பவுலர் எங்கிட்ட வந்து "யோவ் அபி அப்பா இவன நீரு போன்ல கலாய்ச்சதால இவன் உன்னய பழிவாங்குறான். அதுக்கு நாங்க என்னய்யா பாவம் செஞ்சோம்" அப்டீன்னார். நானு பேசாம இருந்தேன்.
முதல் ஓவரில் உத்தப்பா 3 அடிச்சார். நான் பேசாம இருந்திருக்கலாம். "இப்ப என்னடா சொல்ற"ன்னு அவனை பாத்து கேட்டேன். அதுக்கு அவன்" நான்னா சொல்றேன், இப்ப பாருடா அவந்தான் பேஸ் பண்ன போறான். மொதோ பால்ல சிலிப்புல அந்த குண்டன் கிட்ட கேட்ச் குடுக்கல என் பேர மாத்திக்கோ"
பாஸ்ட்பவுல்ர்க்கு செம கடுப்பு. "அபிஅப்பா கொஞ்சம் வாய மூடுறீங்களா?"ன்னு கத்தல். பால் போட்டாச்சு. குண்டன் லீவராக் புடுச்சிட்டான். நம்ம பாஸ்ட்பவுலர் எந்திரிச்சுட்டார். கோவத்தோட உச்சகட்டம். என்னய தனியா கூப்பிட்டார். சரி ரூம்குள்ள வச்சி சாத்தபோறார்ன்னு பயந்துகிட்டே போனேன்.
"இந்த ஷர்ட் மாட்டும் சட்டத்த எடுத்து ராதா தலையில ஒரே போடா போடவா"ன் னு கேட்டார். அதுக்கு நான் "சட்டத்த நாம கையில எடுத்துக்க கூடாது"ன்னு சொல்லி அதை பிடுங்கி கீழே போட்டுட்டு"எதுனா செய்வோம்"ன்னு சொல்லிட்டு பாத்ரூம் போயிட்டேன். அதுக்குள்ள ராதா சிக்சரும் ஃபோரும் போட்டு நம்ம ஃபாஸ்ட்பவுலரை தாளிச்சு கொதிக்க வச்சுட்டான்.
"இங்க பாருங்க பாஸ்ட்பவுலர் எனக்கு ஒரு ராசி. நான் டி.வி ல மேட்ச் பாத்தா சர சரன்னு விக்கெட் விழும். இப்ப பாத்தீங்களா, நா சொன்ன மாதிரியே குண்டன் புடுச்சிட்டான்" அப்டீன்னு தற்பெருமை வேற.
நம்ம பாஸ்ட்பவுலர் டக்குன்னு கிளம்பி பாத்ரூம் போயிட்டார். ஒரு வேளை விஜய் மாதிரி பாத்ரூம் உள்ளே போய் மூஞ்ச மூடிகிட்டு அழ போறார்ன்னு நெனச்சுகிட்டேன். அவர் திரும்பி வந்ததும் ராதா போனான்.
அவன் போய் கதவை சாத்தியதும் நான் ஓடிப்போய் சத்தமில்லாம வெளிப்பக்கம் தாழ் போட்டேன். நம்ம பசங்க சேவாக் பிச்சு பினாட்ட ஆரம்பிச்சுட்டன். அந்த குண்டு மாமா பவுலிங் போட்டுட்டு அது 6க்கும் 4க்கும் போகும்போது சிரிக்குது. இங்க பாத்தா பாஸ்ட்பவுலர் முகத்துல 100 வாட் பல்பு எரியுது. மனசுக்குள்ளேயே நெனச்சு பாத்தேன் நம்ம மணிகண்டன், பெவிலியன் எல்லாரையும். கடந்து குதிக்கிறாங்க.
இந்த சந்தோஷத்தை கெடுக்க மனசில்லாம பாத்ரூம் கதவை ஒருமுறை நல்ல சோதிச்சு பாத்தேன். வெரிகுட். அவனால வெளியே வரமுடியாதுன்னு உருதி செஞ்சுகிட்டு நிம்மதியா வந்து உக்காந்தேன்.
கொஞ்ச நேரம் கழித்து "டேய் மாப்ள, கதவு திறக்க மாட்டங்குதுடா"ன்னான்.
"கொஞ்சம் நல்லா டிரை பண்ணுடா"
"போடா நா ரொம்ப நேரம் டிரை பண்ணிட்டுதாண்டா உன்னை கூப்புடுறேன்"
பாஸ்ட் பவுலர் போய் கதவுகிட்ட நின்னு கிட்டு "ஐயோ ராதா, லாக் சிக்கிகிச்சு. அடிக்கடி இப்டி ஆகும் இந்த பாத்ரூம்ல. இனிமே கார்பெண்டர் வந்துதான் சரி செய்யனும். அது வரை கொஞ்ஜம் வெயிட் பண்ணுங்க ராதா. நீங்க கவல படாதீங்க, நாங்க இருக்கோம்" அப்டீன்னு சொன்னார்.
"சரி, கொஞ்சம் சீக்கிரமா அழைச்சுட்டு வாங்க, இப்போ ஸ்கோர் என்ன?" ன்னு கேட்டான். அதுக்கு நான் "டேய் நாங்களே நீ உள்ள மாட்டிகிட்டேன்னு கவலையிலே இருக்கோம். உனக்கு ஸ்கோர் கேக்குதா?"ன்னு ஒரு அதட்டல் போட்டேன். திரும்பி பாத்தா பாஸ்ட்பவுலர் சன் டிவி சிட்டிபாபு மாதிரி ஆடிகிட்டு இருக்கார்.
சும்மா பூந்து புயல் மாதிரி அடிக்கிறாங்க நம்ம ஷேவாக்கும், கங்குலியும். ரன் 195 ஆச்சு. அப்போ பாத்ரூம்ல இருந்து ராதா "மாப்ள, கார்பெந்தர் வந்துட்டாரா?"ன்னு கேட்டான். "இல்லடா பாஸ்ட் பவுலர்தான் கூட்டிட்டு வர போயிருக்கார்"ன்னு சொன்னேன்.
"சரி இது என்னடா ஒரு ஆயின்மென்ட் இருக்கு இங்க"
"தெரியல. அதல்லாம் ஏன்டா எடுக்கற பேசாம உக்கார்"
"எவ்ளோவ் நேரம்தான் ஆகும். போரடிக்குது. அதான் சும்மா இந்த ஆயின்மென் ட்ட எடுத்து பாத்துகிட்டு இருக்கேன். சரியான லூசுடா ஒன் பிரன்ட் மெடிசின்ன கொண்டு வந்து எங்க வச்சிருக்கார் பாரு. சரி இதென்னடா அதோட கேப் மூக்கு மாதிரி நீட்டா இருக்கு. "
"சரி எடுத்ததுதான் எடுத்த ஆனா மோந்து கீந்து பாக்காத"
"பாத்துட்டேன்...உவ்வேவ்..உவ்வேவ்...உவ்வேவ்.."
அதுக்குள்ள பாஸ்ட்பவுலர்" அபிஅப்பா ராதாகிட்ட பேச்சு குடுக்காதீங்க, ஷேவாக் அவுட் , நல்ல பவர் உங்க பிரன்ட்க்கு" அப்டீன்னார்.
"டேய் என்னடா பாஸ்ட்பவுலர் குரல் கேக்குது. அவரு கார்பெந்தர் கூட்டிகிட்டு வரபோகலையா? இங்க நா வாந்தி எடுத்துகிட்டு இருக்கேன். கொஞ்சம் சீக்கிரம்டா"ன்னான்.
இந்தியா ஜெயிக்க என்ன பாடு படவேண்டியிருக்குன்னு நெனச்சுகிட்டு "மாப்ள பாஸ்ட்பவுலர் carpenter கூப்பிட போயிடார். இப்போ பேசினது "லொடுக்கு"டா.
பிறகு அடி அடின்னு நம்ம பசங்க அடிச்சு 413 வந்து ஓவர் முடிஞ்சதும், கதவை திறந்தா ராதா பேயடிச்ச மாதிரி நிக்கிறான். கை தாங்கலா அழைச்சிட்டு வந்து உக்கார வச்சா " மாப்ள அந்த ஆயின்மெந்த் ரொம்ப நாத்தம்டா எனக்கு வாந்தியே வந்துடுச்சு, டயர்டா இருக்கு நா தூங்க போறேன்"ன்னு சொன்னான்.
பாஸ்ட்பவுலர் பதறி போய்ட்டார். "அய்யோ இனிமேதான் உங்க உதவி வேணும் ராதா, ப்ளீஸ் தூங்காம கொஞ்சம் பாருங்க"ன்னு கெஞ்சுறார்.
அவன் டி.வி பாத்தாதான் டக்கு டக்குன்னு விக்கெட் விழுமே, அதான் அந்த கரிசனம்.
அவன் தூங்கி தூங்கி விழ நாங்க அவனை தூக்கி தூக்கி நிறுத்தி ஒரு விக்கெட் ஒரு விக்கெட்ன்னு 4,5 விக்கெட்ட காலி பண்ணிட்டோம். அவங்க 63 ரன் எடுத்திருந்தாங்க.
நாங்க பட்ட கஷ்டம் எங்களுக்குதான் தெரியும். அதன் பிறகு அவனை எழுப்பவே முடியலை. அவனை தூக்கி உக்காரவச்சு நானும் பாஸ்ட் பவுலரும் அவன் கண் இமைகளை புட்டு சிரமப்பட்டு டி.விக்கு முன்ன காட்டினோம். மினோர்ஸ் அவுட். இன்னும் 4 விக்கெட்தான்.
ஐயோ எனக்கு ரன்ரேட் வேணும், ரன்ரேட் வேணும் அப்டீன்னு பாஸ்ட் புலம்புது. சரின்னு ராதாவை உலுக்கினா அவன் பருத்திவீரன் முத்தழகு மாதிரி "உட்டுடுங்கடா முடியலைடா"ன்னு அழுவறான். இன்னும் 1 இன்னும் 1 அப்டீன்னு ஜோன்ஸ் அவுட் ஆகும் வரை நாங்க விடலை. 156 ல் ஆலவுட்.
கஷ்டபட்டு நாங்க ஜெயிச்ச சந்தோஷத்தில பாஸ்ட்பவுலர் "அப்பாடா இந்தியா ஜெயிக்க நாம என்னமா போராடிட்டோம், இன்னும் 1 மாசத்துக்கு ராதாவை புக் பண்ணுங்க அபிஅப்பா, நான் வீட்டுக்கு போகிறேன்"ன்னு கிளம்பிட்டார்.