அபி அப்பா
ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்
March 27, 2020
மயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு!
1991 வரை நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் தான். தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம் அது. சுமார் 20 சட்டமன்ற தொகுதிகள். மேற்கே பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு என்றும் கிழக்கே மயிலாடுதுறை, நாகை, பூம்புகார், வேதாரண்யம் என்றும் வடக்கே சீர்காழி என்றும் தெற்கே திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி என்றும் மிகப்பெரிய மாவட்டம் தஞ்சாவூர். அதன் தலைநகரம் தஞ்சாவூர் தான். கொள்ளிடத்தில் இருந்தோ, கோடியக்கரையில் இருந்தோ தலைநகருக்கு வர வேண்டும் எனில் ஒரு 5 முதல் 6 மணி நேர பஸ் பயணம். மாவட்ட மருத்துவமனை கூட தஞ்சையில் தான். ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் என எல்லாமே தஞ்சாவூரில் தான்.
பத்தாவது படித்து முடித்து கையில் சான்றிதழ் வாங்கிய அன்று எங்கள் பகுதியில் இருக்கும் மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர் சகிதமாக பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக வருவார்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியவைக்க வேண்டி! அங்கு பதிந்தால் உடனே வேலை கிடைத்து விடும் என ஒரு நம்பிக்கை. தவிர போட்டி தேர்வுகள் எழுதினால் கூட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்திருந்தால் மட்டும் தான் வேலை என்பதால் கூட்டம் அலைமோதும். கிழக்கு பக்கம் இருந்து நாங்கள் செல்வதைப்போலவே மாவட்டத்தின் 20 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் கூட்டம் வரும். பதிய வைத்து முடியும் போது உயிர் போய் உயிர் வரும். அதுவும் அங்கே நடக்கும் கூத்துகள்... சொல்லி மாளாது. அந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒரு மாற்று திறனாளி அலுவலக உதவியாளர். மிகக்கொடூரமானவன். 1980ல் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியப்போகும் எல்லோரையும் அவன் ட்ரீட் செய்யும் விதம் அகங்காரத்தின் உச்சமாக இருக்கும். அழுகையே வந்து விடும். அப்போதெல்லாம் நாங்கள் எங்களை கீழத்தஞ்சை என சொல்லிக்கொள்வோம்.
மாவட்டம் பெரியது என்பதால் அந்த தஞ்சை மாவட்டத்துக்கு மட்டும் இரண்டு எஸ்.பிக்கள் உண்டு. அதை நிர்வாக ரீதியாக பிரிக்காவிட்டாலும் மறைமுகமாக தஞ்சை மாவட்டம் என்பது கீழத்தஞ்சை மாவட்டம், மேலத்தஞ்சை மாவட்டம் என்றே இரண்டு எஸ்.பிக்கள் ஆளுமையில் ஆனால் ஒரே ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருந்தது. போலீஸ் வாகனங்களில் கூட “கீழத்தஞ்சை”, “மேலத்தஞ்சை” என்றே எழுதியிருக்கும். நாகை, வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை, குத்தாலம், பூம்புகார், சீர்காழி, ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கீழ தஞ்சை மாவட்டத்தில் வரும். அதற்கெல்லாம் நடுநாயகமாக மயிலாடுதுறை தான் இருந்தது.
வேலை வாய்ப்பு அலுகவலகம் செல்லும் போதெல்லாம் கீழத்தஞ்சையை பிரித்தால் மயிலாடுதுறை மாவட்ட தலைநகராகிவிடும். இனி பதிவது மிகச்சுலபம் என மனதில் நினைத்துக் கொள்வோம். நான் சொல்வது 1980 காலகட்டம்... அப்போதெல்லாம் மயிலாடுதுறைக்கு “மாயூரம்” என்ற வடமொழிப்பெயர் தான். எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது. நாங்கள் “தஞ்சாவூர்க்காரர்கள்” என்னும் பெருமிதம் இருந்தாலும் அந்த பெருமிதம் என்பது நிர்வாக நீதியில் கீழத்தஞ்சை மாவட்டத்துக்கு கிஞ்சித்தும் உதவவில்லை என்பதே உண்மை. மெல்ல மெல்ல கீழத்தஞ்சை மாவட்ட மக்கள் முனுமுனுக்க தொடங்கினர். அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தஞ்சை மாவட்டத்தை பிரிப்பதற்கான காரணம் இரண்டு இருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை திமுகவே தன் வசமாக்கி வந்தது. மன்னார்குடி அம்பிகாபதி, பட்டுக்கோட்டையில் எஸ்.டி.எஸ் ஆகியோர் மட்டும் அதிமுக. மீதியை பிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் தான் கீழத்தஞ்சையில் மக்கள் முனுமுனுப்பு அதிகமாகியது. ஒரு வேளை தஞ்சை மாவட்டத்தை பிரித்து விட்டால் அந்த கீழத்தஞ்சையை தன் வசமாக்கலாம் என்பதால் பிரிக்க முடிவு செய்தார். ஆனால் அப்படி பிரிக்கும் போது பூகோள ரீதியில் மாயூரத்தை தான் தலைநகராக ஆக்க வேண்டும். ஆனால் மாயூரத்தை திரு.கிட்டப்பா (திமுக சட்டமன்ற உறுப்பினர்) தன் கோட்டையாக வைத்திருந்தார். சரி... அப்படியெனில் மாயூரத்தை முதலில் பிடிக்க வேண்டும். அந்த மக்களை தன் வசமாக்க என்ன செய்யலாம் என யோசித்தார் எம்.ஜி.ஆர். அப்போது மாயூரம் எம்.எல்.ஏ வாக சிங்கம் போல கர்ஜித்த திரு கிட்டப்பா (திமுக சட்டமன்ற கொறடா) அவர்கள் மாயூரம் என்னும் வடமொழி பெயரை மயிலாடுதுறை என சட்டபூர்வமாக மாற்ற வேண்டும் என சட்டமன்றத்தில் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தார். அதே நேரம் தஞ்சையை பிரித்து மயிலாடுதுறையை தலைநகரமாக்கி மாவட்டம் ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் வலியுறுத்தினார். அதற்கான அரசியல் காரணங்கள் சில உண்டு.
திமுக என்பது கட்டுக்கோப்பான கட்சி தான் எனினும் கட்சியின் தொடக்க காலம் தொட்டே கட்சியின் சீனியர் உறுப்பினர் ஆன திரு.கிட்டப்பா அவர்களுக்கு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலாளர் ஆவதில் ஒரு விருப்பம் நீண்ட நாளாக இருந்து வந்தது. திரு மன்னை நாராயணசாமி, திரு. தாழை.மு.கருணாநிதி, திரு.கோசி.மணி போன்ற ஜாம்பவார்கள் வரிசையில் திரு கிட்டப்பா அவர்களும் தஞ்சை தரணியில் இருந்து வந்தார். ஒரு வேளை தஞ்சாவூர் பிரிக்கப்பட்டால் மேலத்தஞ்சை மாவட்டம் பகுதிக்கு திரு.கோசி.மணி என்றும் மயிலாடுதுறையை தலைநகரமாக கொண்ட கீழத்தஞ்சை மாவட்டத்துக்கு தாமும் மாவட்ட செயலாளர்கள் ஆகலாம் என்னும் அரசியல் கணக்கை போட்டார் திரு.கிட்டப்பா அவர்கள். அப்போது அவர் தஞ்சை மாவட்ட திமுக அவைத்தலைவர் ஆக இருந்தார் என்பது என் நினைவு.
ஆக மயிலாடுதுறை என தமிழ்ப்பெயர் சூட்டவும், மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவும் முதலில் போராடியவர், குரல் கொடுத்தவர் திரு. என்.கிட்டப்பா அவர்கள் தான்.
இந்த நிலையில் தான் எம்.ஜி.ஆர் அவர்கள் மயிலாடுதுறை மக்களை கவர பரிட்சாத்த முறையில் ஒரு திட்டம் தீட்டினார். அதன் படி “மாயூரம்” என்னும் வடமொழிப்பெயரை “மயிலாடுதுறை” என மாற்ற முன்வந்தார். அப்போதே கோடியக்கரையை திருமறைக்காடு எனவும், மெட்ராஸ் என்பதை சென்னை எனவும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இருப்பினும் எம்.ஜி.ஆர் அரசியல் காரணங்களுக்காக முதலில் “மாயூரத்தை” மட்டும் “மயிலாடுதுறை” என பெயர் மாற்றி 08.06.1982 ல் (அரசாணை # 974) ஒரு உத்தரவிட்டார். அப்போது நெடுஞ்செழியன் அவர்கள் நிதி அமைச்சர். எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் வருவாய்த்துறை அமைச்சர். எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் தான் அப்போதைக்கு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்கு அமைச்சர் பிரதிநிதி என்பதால் அவருக்கு எம்.ஜி.ஆரிடம் நல்ல பெயர் மற்றும் நட்பு இருந்தமையால் மாவட்டத்தை பிரித்தால் தன் பவர் குறைந்து விடும் என்பதால் மாவட்டத்தை பிரிக்க தடை போட்டார் என்றும் அப்போது பேச்சுகள் இருந்தன. அதனால் எம்.ஜி.ஆர் அவர்கள் மாவட்டத்தை பிரிக்காமல் மாயூரம் என்னும் பெயரை மட்டும் மாற்றி மயிலாடுதுறை ஆக்கினார். அதன் காரணமாக 27.06.1982 அன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வடக்கே ஒரு மேடை போடப்பட்டு (தெற்கு பார்த்த மேடை) அதிலே தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் திரு நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் திரு.எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் பெயர் மாற்று பெரு விழா நடந்தது. அன்று மாலை அதே கச்சேரி சாலையில் இருக்கும் மலைக்கோவில் வளாகத்தில் இந்துமுன்னனி மற்றும் பாஜக ஆகியவை இணைந்து “மயிலாடுதுறை என பெயர் வைக்கக்கூடாது. மாயூரம் என்னும் வட மொழி பெயரே நீடிக்க வேண்டும்” என கூறி மக்கள் மனதை அறிய வாக்குப்பெட்டி வைத்து வாக்கு கேட்டது. அது அதிமுக அரசு விழாவெனினும் திமுகவினர் பெருவாரியாக கலந்து கொண்ட்னர். காரணம் ஒரு வடமொழி பெயர் ஒழிந்து தூய தமிழ்ப்பெயர் வருகின்றதே என்னும் ஆசை மற்றும் தமிழக அரசின் அந்த முடிவை தலைவர் கலைஞர் மனதார வரவேற்றிருந்தார். எனவே திமுகவினர் மிக்க மகிழ்வுடன் அதில் கலந்து கொண்டனர். அப்போது நாவலர் பேசிய பேச்சுகள் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதை இப்போது இங்கே பதிந்தால் சிலர் மனது புண்படும் என்பதால் அதை தவிர்க்கிறேன்.
ஆக அப்போதே மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு கீழத்தஞ்சை மாவட்டம் பிரிந்திருக்க வேண்டும். எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களால் அது முடியாமல் போனது. ஆனாலும் எம்.ஜி.ஆருக்கு கீழத்தஞ்சை மீது வைத்த கண் அகலவேயில்லை. எப்படியாவது கீழத்தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஒரு திமுக எம்.எல்.ஏ வாவது இருக்க வேண்டும் என நினைத்தார். பின்னர் எப்படியோ அண்ணன் திரு.கிட்டப்பா அவர்களை அதிமுகவுக்கு இழுந்து விட்டார். அந்த காலகட்டத்தில் தான் ஜெயாவை முதன் முதலாக 1983ல் அதிமுகவுக்கு உள்ளே கொண்டு வந்து கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கினார். அப்படி ஆக்கிய பின்னர் முதல் கூட்டத்தை அண்ணன் கிட்டப்பா அவர்களை விட்டு மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் (எம்.ஜி.,ஆர் வந்தால் பேசும் இடம் அது தான்) கூட்டம் போட்டார். பிரம்மாண்ட கூட்டம். அதே நேரம் திரு கிட்டப்பா அவர்களும் மயிலாடுதுறை மாவட்டம் ஆவதை எம்.ஜி.ஆர் அவர்களிடம் வலியுறுத்தி வந்தார். அந்த நேரத்தில் தான் எதிர்பாரா விதமாக அண்ணன் கிட்டப்பா அவர்கள் இயற்கை எய்தினார். இது திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் பேரிடியாக அமைந்தது. திரு கிட்டப்பா அவர்கள் மறைவுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் நேரிடையாக கலந்து கொண்டார்.
ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களோ , ஜெயாவோ வரவில்லை. அதன் பின்னர் 20.05.1984 அன்று மயிலாடுதுறை சட்டமன்றத்துக்கு இடைத்தேர்தல் வந்தது. அண்ணாநகர், உப்பிலியாபுரம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல். எம்.ஜி.ஆருக்கு அப்போதெல்லாம் சென்னை மற்றும் தஞ்சை மாவட்டங்கள் தான் பெரிய தலைவலி. முழுவதும் திமுக வின் ஆக்கிரமிப்பில் இருந்தது. அப்போது எம்.ஜி.ஆர் சென்னை அண்ணாநகரைக்கூட கண்டு கொள்ளவில்லை. ஆனால் மயிலாடுதுறையில் தன் முழு கவனத்தையும் செலுத்தி தன் கட்சி பாலவேலாயுதத்துக்கு ஓட்டு சேகரித்தார். திமுக சார்பில் சத்தியசீலன் அவர்கள் வேட்பாளர். தான் தான் இங்கே வேட்பாளர். இது தனக்கும் கலைஞருக்குமான நேரடி போட்டி என அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஆனாலும் மயிலாடுதுறை மற்றும் அண்ணாநகரில் திமுக வென்றது. இது எம்.ஜி.ஆருக்கு மயிலாடுதுறை மீது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. அதிமுகவில் எப்படி ஜெயாவை கட்சிக்குள் எம்.ஜி.ஆர் நுழைத்தாரோ அதே போல திமுகவில் டி.ராஜேந்தர் நுழைந்த நேரம். ஆக எப்போதும் தோல்வியே காணாத எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்வில் முதல் தோல்வியை எழுதியது மயிலாடுதுறை.
உடனே மாவட்ட பிரிப்பை தள்ளிப்போட்டார் எம்.ஜி.ஆர். மயிலாடுதுறையை மாவட்ட தலைநகராக ஆக்க அவர் விரும்பவில்லை போல! ஆனால் அடுத்த 18 மாதத்தில் எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் அமரிக்காவில் அவர் இருந்த போது சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. மயிலாடுதுறையில் முதன் முறையாக அதிமுகவின் தங்கமணி எம்.எல்.ஏ ஆனார். ஆனால் அவர் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்க குரல் கொடுக்கவில்லை. அதன் பின்னர் இந்திரா மறைந்தார். ராஜீவ் ஆட்சி வந்தது. கட்சித்தாவல் தடை சட்டம் எல்லாம் வந்தது. பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்தது. அதன் பின்னர் நீண்ட நாட்கள் கழித்து தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தது. மாநகராட்சிகளை தவிர்த்து நகராட்சி, ஒன்றியம், பேரூருக்கு தேர்தல். தமிழகம் முழுமையும் மிக மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றது. எம்.ஜி.ஆருக்கு அது பெரிய இடியாக விழுந்தது. இதனிடையே கீழத்தஞ்சை மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்கிற குraல் அதிகமாகியது.
உடனே எம்.ஜி.ஆர் ஒரு வேளை செய்தார். மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு வர இருக்கும் புதிய மாவட்டத்தை கிடப்பில் போட்டு தில்லையாடி வள்ளியம்மை மாவட்டம் என்கிற பெயரில் திருவாரூரை தலைநகராக ஆக்கி ஒரு மாவட்டம் அமைக்கப்படும் என்றார். ஆனால் பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட எல்லையில் வராது அந்த தில்லையாடி என்பது. அது பொறையார் - தரங்கம்பாடி அருகே இருக்கும் கிராமம். மயிலாடுதுறை மக்களை பழிவாங்கியது போலவும் ஆயிற்று எம்.ஜி.ஆருக்கு. அதே நேரம் திருவாரூர் ... கலைஞர் பிறந்த ஊரை தான் தான் தலைநகர் ஆக்கினோம் என சொல்லியும் அந்த பக்கம் இருக்கும் மக்களை இழுக்கலாம் என்னும் அரசியல் கணக்கை போட்டார் எம்.ஜி.ஆர். ஆனால் துரதிஷ்டவசமாக எம்.ஜி.ஆர் இயற்கை எய்தினார். அத்தோடு மாவட்ட பிரிப்பு என்னும் பேச்சு நின்று போனது. காரணம். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு பின்னர் ஜானகி ஆட்சி, பின்னர் ஆளுனர் அலக்ஸாண்டர் ஆட்சி, பின்னர் 1989ல் திமுக ஆட்சி, அதிலே மயிலாடுதுறை எம்.எல்.ஏ வாக திமுகவை சார்ந்த அ.செங்குட்டுவன் அவர்கள் வந்தார். அவர் அப்போது எம்.எல்.ஏ, நகராட்சி தலைவர் உள்ளிட்ட 7 பதவிகளை கையில் வைத்திருந்தார். அவர் தான் மயிலாடுதுறை தலைநகராக ஆக வேண்டும் என கிட்டப்பா அவர்களுக்கு அடுத்ததாக இரண்டாவதாக குரல் கொடுத்தவர். அதுவும் இரண்டு ஆண்டுகளில் கலைப்பு என ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தது தமிழ்நாடு. அதனால் அந்த அறிவிப்பு அப்படியே முடங்கிப்போனது. அதன் பின்னர் 1991ல் ராஜீவ் மரணம், பின்னர் ஜெயா ஆட்சி என வரிசை கட்டி வந்தது. 1991 முதல் 2001 வரை அதிராம்பட்டினம் சார்ந்த எம்.எம். அபுல்ஹாசன் அவர்கள் (91ல் காங்கிரஸ் எம்.எல்.ஏ, 1996ல் த.மா.கா எம்.எல்.ஏ) பத்தாண்டுகள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ வாக இருந்தார். அந்த கால கட்டத்தில் மயிலாடுதுறைக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க நாதி இல்லாமல் போனது. அபுல்ஹாசன் அவர்கள் நல்லவர் தானேயொழிய வல்லவரோ அல்லது சட்டமன்றத்தில் தொகுதிக்காக குரல் கொடுக்கக்கூடியவரோ அல்லர்.
1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவர்கள் மயிலாடுதுறை மக்களின் கோரிக்கையையும் காதில் வாங்காமல், எம்.ஜி.ஆர் அறிவித்த தில்லையாடி வள்ளியம்மை பெயரில் அமைக்க அறிவிப்பு செய்த திருவாரூர் மாவட்டத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு நாகப்பட்டினத்தை தலைநகராக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவித்து 18.09.1991 முதல் செயல்படுத்தினார். அதற்கு பெயர் நாகை காயிதே மில்லத் மாவட்டம்.
போச்சுதா... மயிலாடுதுறை மாவட்டம் என்பது மக்களின் கனவாகவே போய்விட்டது. மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டிணம் செல்ல வேண்டுமாகின் பாண்டிச்சேரியின் காரைக்கால் (வேறு யூனியன் பிரதேச மாநிலம்) கடந்து போக வேண்டும். அல்லது திருவாரூர் மாவட்டத்தை கடந்து செல்ல வேண்டும். அதன் பாதகங்களை பின்னர் விரிவாக பார்க்கலாம்.
மீண்டும் 1996ல் ஆட்சிக்கு வந்தது. அப்போதும் மயிலாடுதுறை மக்கள் மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க பல முறை தங்கள் தொகுதி எம்.எல்.ஏ விடம் (அப்போது அதே எம்.எம்.எஸ் அபுல்ஹாசன் அவர்கள் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில் நின்று வென்றிருந்தார்) கேட்க அவர் அது பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் 1997 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் திருவாரூரை தலைநகராக கொண்டு (திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் தொகுதிகள்) ஒரு மாவட்டம் அமையும் என அமைத்து விட்டார். அப்போதும் மயிலாடுதுறை மக்களின் கனவு தகர்ந்து விட்டது.
மீண்டும் மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு மாவட்டம் வருமா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. 2001 முதல் 2006 வரை மீண்டும் அதிமுக ஆட்சி. அப்போது மயிலாடுதுறை எம்.எல்.ஏவாக இருந்தவர் அப்போது பாஜக கட்சி (திமுகவுடன் கூட்டணி அமைத்து)யை சார்ந்த ஜெக.வீர.பாண்டியன் அவர்கள் 23-4-2002 அன்று சட்டமன்ற மானியக்கோரிக்கை மீதான முதல் கன்னிப்பேச்சியிலேயே அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முன்னிலையில், வாக்களித்த தொகுதி மக்களுக்கும் வாய்ப்புஅளித்த இந்திய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கும், கூட்டணிக்கட்சி தலைவர் கலைஞர் அவர்களுக்கும் சோழமண்டல தளபதி கோசி. மணி அவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து பேசிய முதல்கூட்டத்திலேயே மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அமைத்திட வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார்கள். ஜெயா ஆட்சியில் அது நடக்குமா என்ன? முடியவில்லை.
மீண்டும் 2006ல் திமுக ஆட்சி அமைந்தது. அப்போது மயிலாடுதுறையில் காங்கிரஸ் (திமுகவுடன் கூட்டணி அமைத்து வென்றது) எஸ்.ராஜ்குமார் அவர்கள். திமுக ஆட்சியில் லட்டு போல மயிலாடுதுறையை மாவட்டம் ஆக்கியிருக்கலாம். கையில் வெண்ணை இருந்தும் அதை நெய்யாய் ஆக்காமல் அழகாய் தவற விட்ட பெருமை இவருக்கே சேரும். ஆனால் அதிஷ்ட வசமாக பக்கத்து தொகுதியான குத்தாலம் தொகுதியில் குத்தாலம் க. அன்பழகன் அவர்கள் எம்.எல்.ஏ வாக இருந்தார். மேலும் ஒரு வரப்பிரசாதமாக அப்போது அவர் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவராகவும் அமர்த்தப்பட்டார். அவரைப்பயன் படுத்தி மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ்குமார் எத்தனையோ செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை என்பதே கசப்பான உண்மை. இதையெல்லாம் இப்போது பேசி பயனில்லை என்பினும் வரலாறு என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதால் எழுதுகிறேன்.
இதே குத்தாலம் க. அன்பழகன் அவர்கள் குத்தாலம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மதிப்பீட்டுக்குழு தலைவராக இருந்த காலத்தில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி (20.01.2010) காலை 9.00 மணிக்கு மயிலாடுதுறை காவிரி இல்லத்தில் கூடியது. அதன் தலைவர் குத்தாலம் க.அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சதன் திருமலைக்குமார், விடியல் சேகர், நன்மாறன், லெட்சுமனன்,ஹசன் அலி போன்றவர்களும் தலைமை செயலக அதிகாரி சார்பு செயலாளர் சக்திவேலு மற்றும் நாகை மாவட்ட ஆட்சித்தலைவர், மயிலாடுதுறை கோட்டாட்சியர், வட்டாட்சியர், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பல பரிந்துரைகளை சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு அளித்தது. அதில் மிகக்குறிப்பாக பரிந்துரை எண் 42 மற்றும் 43 ஆகியவைகள் மயிலாடுதுறையை ஏன் நாகையில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. (படத்தை பார்க்கவும்) அந்த மதிப்பீட்டுக்குழு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சுற்றி வந்து தன் முழு அறிக்கையை 06.05.2010 அன்று பேரவைக்கு அளித்தது. அந்த அறிக்கை தாக்கல் செய்த பின் திமுக ஆட்சி முழுமையாக ஒரு வருடம் இருந்தது. 2011 மே மாதம் வரை திமுக ஆட்சி இருந்தது. மயிலாடுதுறை எம்.எல்.ஏ அந்த ஒரு வருடத்தில் மதிப்பீட்டுக்குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த ஒரு வருடத்தில் தரையில் புரண்டு போராடி அமல் படுத்தியிருக்க வேண்டுமா இல்லையா? நடக்கவில்லை.
ஒரு நல்ல வாய்ப்பு பறிபோனது. அதன் பின்னர் 2011 மே மாதம் முதல் மீண்டும் அதிமுக ஆட்சி வந்தது. தேமுதிகவில் இருந்து தேர்வான தற்போதைய திமுக மாநில விவசாய அணி இணைச்செயலாளர் ஆர். அருள்செல்வன் அவர்கள் எம்.எல்.ஏ வாக தேர்வாகியிருந்தார். முதல் ஆறு மாதங்கள் தேமுதிகவுக்கும் அதிமுகவுக்கும் நல்ல உறவு இருந்தது. அப்போது தான் மயிலாடுதுறை தீபாய்ந்தாள் அம்மன் கோவில் காவிரி பாலம், வரதம்பட்டு பாலம் எல்லாம் வந்தது மயிலாடுதுறைக்கு. பின்னர் விஜயகாந்துக்கும் ஜெயாவுக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ அருள்செல்வன் அவர்கள் 6 மாதம் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது எம்.எல்.ஏ அலுவலகம் கூட மூடப்பட்ட அவலம் ஜெயா ஆட்சியில் நடந்தது. பின்னர் அரசின் ஒத்துழைப்பு இல்லாமலே அவரால் இயன்ற பணிகளை மயிலாடுதுறைக்கு செயல்படுத்த அவர் தவறவில்லை. மயிலாடுதுறை மணல் மேட்டில் புதிய அரசு கலைக்கல்லூரி பெற்றுக் கொடுத்தார். மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் அமைக்க 13 ஏக்கர் நிலத்தை தருமை ஆதீனத்திடம் பேசி பூம்புகார் சாலையில் வாங்கி கொடுத்தார் ஆர். அருள்செல்வன் அவர்கள். இதோ அதன் பின்னர் ஐந்து முழு ஆண்டுகள் ஆகிவிட்டது அதன் பின்னர் அதிமுகவில் இருந்து ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏவாக தேர்வாகி! இன்னமும் பேருந்து நிலையம் வந்தபாடில்லை. தமிழக அரசு, தருமை ஆதீனத்திடம் இருந்து வாங்கிய நிலம் அப்படியே வேலி போடப்பட்டு அமைதி காக்கின்றது. இதனிடையே அரசு தன் சட்டமன்ற பணிகளுக்கு ஒத்துழைக்கவில்லை , இடம் வாங்கி கொடுத்தும் பேருந்து நிலையம் அமைக்க முன்வரவில்லை, மேலும் மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். தன் சக்திக்கு மேல் போராடினார். ஆனாலும் ஜெயா அரசு ஒத்துழைக்கவில்லை. இதோ 2016 முதல் இன்று தேதி 27.03.2020 ஆகிவிட்டது. மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கும் போராட்டங்கள் வலுவடைந்த பின்னரும் கூட வக்கீல் சங்கம் எல்லாம் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம், வர்த்தகர் சங்கம் போராட்டம், தமிழ்ச்சங்கம் போராட்டம், பேராசிரியர் முரளி தலைமையில் போராட்டம் இப்படி பல போராட்டங்கள் நடந்த போதும் அதிமுக எம்.எல்.ஏ காதில் விழவில்லை.
எத்தனை போராட்டம் எத்தனை போராட்டம்? வக்கீல் சேயோன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து பல போராட்டங்கள், வர்த்தகர் சங்கம் திரு செந்தில்வேல் தலைமையில் பல போராட்டங்கள், அனைத்து கட்சிகள் சேர்ந்து கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்.கே.சங்கர், வக்கீல் சிவதாஸ், வக்கீல் அருள்தாஸ், வக்கீல் புகழ், வக்கீல் சங்கரநாராயணன், கோமல் அன்பரசன் தலைமையில் காவிரி கதிர் குழுமங்களின், மயூரயுத்தம் குழுவினரின் பல போராட்டங்கள், கடைசியாக ஒடிசா பாலு வரை, மயிலாடுதுறை தமிழ்சங்கங்கள், ஜெனீபர் ஓனர் வரை எத்தனை எத்தனை போராட்டங்கள்....
இந்த நேரத்தில் தான் மத்திய அரசு நாகை மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கும் முடிவை எடுத்த போது அந்த மருத்துவக்கல்லூரி மயிலாடுதுறைக்கு வேண்டும் என போராட்டம் உச்சம் அடைந்தது. ஆனால் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நின்று வென்று பாராளுமன்றம் சென்ற ஓ.எஸ் மணியன் அவர்கள் தான் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் ஆகினும் நம்மை வெற்றி பெறச்செய்தார்களே மயிலாடுதுறை மக்கள் என்னும் நன்றி கூட இல்லாமல் “மயிலாடுதுதுறைக்கு மருத்துவக்கல்லூரி கிடையாது. நாகைக்கு தான் அந்த கல்லூரி” என பேட்டி கொடுத்த போது தான் மயிலாடுதுறை மக்களின் கோபம் அதிகமாகியது. இத்தனைக்கும் நாகைக்கும் காரைகாலுக்கும் இடையே 15 கிமீ தூரம் தான். காரைக்காலில் வினாயகா மிஷன் மருத்துவக்கல்லூரி இருக்கின்றது. அதே போல நாகைக்கும் திருவாரூருக்கும் வெறும் 20 கிமீ தான். அங்கே திருவாரூரில் மருத்துவக்கல்லூரி இருக்கின்றது. நாகை மக்களுக்கு ஒரு ஆபத்து எனில் வெறும் பத்து நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் மயிலாடுதுறை மக்கள்???? சிதம்பரத்துக்கு 43 கிமீ தூரம் போக வேண்டும், அல்லது திருவாரூருக்கு 40 கிமீ தூரம் போக வேண்டும். (இந்த கணக்கு மயிலாடுதுறை டவுனில் இருந்து மட்டும்) மயிலாடுதுறையில் உயிர்காக்கும் மருத்துவமனைகள் என்பது கிடையாது. அதுவும் ஞாயிறு அன்று மயிலாடுதுறையில் வசிப்பதே நரகத்தில் வசிப்பதற்கு சமம். ஒரு சாதாரண காய்ச்சலுக்கு கூட எந்த டாக்டர்களும் இருக்க மாட்டார்கள். இது தான் மயிலாடுதுறையின் நிலை. இப்படி இருக்கும் போது அந்த மருத்துவக்கல்லூரியை மயிலாடுதுறைக்கு கொண்டு வர வேண்டும் என மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணனோ அல்லது சீர்காழி எம்.எல்.ஏ பாரதியோ கேட்டார்களா எனில் இல்லை என்பதே உண்மை. ஆனால் நான் இந்த விஷயத்தில் பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் அவர்களை பாராட்டித்தான் ஆக வேண்டும். புவுன்ராஜ் எம்.எல்.ஏ அவர்கள் இது விஷயமாக முதல்வரை சந்திக்க போகலாம் என ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதியை கேட்ட போது அவர்கள் வர மறுத்து விட்டதாக இங்கே அனைத்து நாளிதழும் செய்தி வெளியிட்டதே! பேராசிரியர் முரளி கூட தன் முகநூல் பக்கத்தில் எழுதி இருந்தாரே? போனதெல்லாம் போகட்டும். இனி மயிலாடுதுறை மாவட்டம் அமைய பாடுபடுங்கள். நாங்கள் எப்போதும் நன்றியோடு இருப்போம்.
மயிலாடுதுறை பேருந்து நிலையம் என்ன ஆனது இந்த 4 ஆண்டுகளில்? மாப்படுகை மேம்பாலம் உறுதி அளித்தது என்ன ஆனது இந்த 4 ஆண்டுகளில்? மயிலாடுதுறை சுற்று வட்ட சாலை நிலம் ஆக்க்கிரமிப்பு எல்லாம் முடிந்தும் 4 ஆண்டுகள் ஆகின்றதே? எங்கே அந்த சுற்று வட்ட சாலை? ஆக இப்போது மயிலாடுதுறை மாவட்டம் என்பது மக்கள் போராட்டத்தால் வந்தது என்பதை உணர்க! முதலில் குரல் கொடுத்தது என்.கிட்டப்பா திமுக எம்.எல்.ஏ, அடுத்து அ.செங்குட்டுவன் திமுக எம்.எல்.ஏ, குத்தாலம் பி.கல்யாணம் (குத்தாலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ) (மயிலாடுதுறை எம்.எல்.ஏ அபுல்ஹாசன் பேசாமல் இருந்த போது மயிலாடுதுறை தொகுதிக்காகவும் பேசியவர் குத்தாலம் கல்யாணம் அவர்கள்) , ஜெகவீரபாண்டியன் எம்.எல்.ஏ ( திமுக)ஆர்.அருள்செல்வன் எம்.எல்.ஏ (திமுக மாநில விவசாய அணி இணை செயலாளர்), பவுன்ராஜ் (பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ), அதிமுக நகர செயலாளர் வி.ஜி.கே செந்தில் அவர்கள் மற்றும் வர்த்தகர் சங்கம், மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம், அறம் அமைப்பினர், பேராசிரியர் முரளி, மயூரயுத்தம் கோமல் அன்பரசனின் காவிரி குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் சாதித்து காட்டிவிட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் உண்டானது. மிக முக்கியமாக தருமை ஆதீனம் அவர்கள். கேட்டதும் 60 ஏக்கர் நிலத்தை அள்ளிக்கொடுத்து மயிலாடுதுறையில் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியவைகள் கட்ட இடம் கொடுத்த தருமை ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் ஸ்வாமிகள் அவர்களுக்கு நன்றிகள்! மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், சீர்காழி எம்.எல்.ஏ பாரதி, பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் மற்றும் இந்த இனிய அறிவிப்பை மயிலாடுதுறை மக்கள் மனம் மகிழும் அறிவிப்பை செய்து செயல்படுத்த தயாராக இருக்கும் தமிழக முதல்வர் திரு எடப்பாடியார் அவர்களுக்கும் துணை முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்களுக்கும் மயிலாடுதுறை மக்கள் சார்பாக என் நன்றிகள்!
அதே போல பல முறை மயிலாடுதுறை மாவட்டம் ஆக வேண்டும் என புலம்பும் போதெல்லாம் செவிமடுத்து மயிலாடுதுறை மாவட்ட தலைநகர் ஆன உடனேயே தன் உணர்வுகளை தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவாக வெளியிட்ட எங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு தங்கம் சாருக்கு என் நன்றிகள். இதோ அவரது பதிவு...
// “ ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது!”
மயிலாடுதுறை மாயூரமாகி , பின்னர் மாயவரமாகி, மீண்டும் மயிலாடுதுறையாகவே மாறி இன்று தனி மாவட்டமாகவே ஆகியிருக்கின்றது.
பெருமகிழ்ச்சி!😊👏🏻
வறண்ட இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்திற்கும் தொட்டுத் தொடரும் தொடர்புகள் பன்னெடுங்காலமாக உண்டு. திருத்தல யாத்திரையாக பாஸ்கர சேதுபதி மன்னர் தஞ்சை மாவட்டத்திற்குத் தன் பரிவாரங்களோடு போனது மட்டுமல்ல; வானம் பார்த்த எங்கள் பகுதியில் இருந்து விவசாயத் தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சைத் தரணிக்குப் புலம் பெயர்வதும், விவசாயப் பணிகள் முடிந்த பின் மீண்டும் திரும்புவதும் எளிய மக்களுக்கான வரலாறேயாகும்.
சோழ வளநாட்டில் மனங்கவர்ந்த பகுதிகள் பல இருந்தாலும், மயிலாடுதுறை மீதான ஒரு தனி மையல் இருக்கத்தான் செய்கின்றது.❤️எண்பதுகளின் துவக்கத்தில் அந்த நகரத்தில்தான் எனது விடுமுறை நாட்கள் அனைத்தும் செலவழிந்திருக்கின்றன. ராஜன் தோட்டமும், மணிக்கூண்டும், மகாதான-பட்டமங்கலத் தெருக்களும், அவயாம்பிகை கோவிலும், தருமையாதீனமும், காவிரிப் பாலமும், ரயில் நிலையமும், இன்னும் நெஞ்சத்துக்கு நெருக்கமானவையாகவே உணர வைக்கின்றன. சிதம்பரத்தில் இருந்து வந்து இறங்கி குடந்தைக்கு மாறும் அந்தப் பேருந்து நிலையம் இன்றைக்கும் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொண்டு; ஆனால், எனக்கு மட்டும் சில இன்பக்கதைகளை ரகசியமாகச் சொல்லிக்கொண்டு இருக்கத்தான் செய்கின்றது.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்; எத்தனை மாற்றங்கள் வந்தாலும்; மயிலாடுதுறை என் உணர்வில் கலந்த ஒரு பெயர்!
இன்று நான் போற்றும் பல நல்ல நண்பர்களை எனக்குத் தந்து, தனி மாவட்டமாக மிளிரக் காத்திருக்கின்றது. அதற்கான முன்னெடுப்பு மேற்கொண்டோர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
“வாள்நிலா மயிலாடுதுறைதனைக்
காணில், ஆர்க்கும் கடுந் துயர் இல்லையே.!”
- திருநாவுக்கரசர்.//
மீண்டும் என் நன்றிகள் எங்கள் தங்கம் சாருக்கு!
சரி.... மயிலாடுதுறைக்கு மாவட்ட தலைநகர் என்னும் அந்தஸ்து வந்தாகிவிட்டது. அடுத்து என்ன வளம் இருக்கின்றது எங்கள் மாவட்டத்தில் என்போர்களுக்காக....
மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை முழுமையாக கொண்டது எங்கள் மாவட்டம். அதே போல மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகள் மயிலாடுதுறை மாவட்டம் சார்ந்தது. கொள்ளிடத்தில் இருந்து ஆறுகள் எத்தனை தெரியுமா? கொள்ளிடம், ராஜா வாய்க்கால், காவிரி, மஞ்சளாறு, கடலாழி, வீரசோழன் ஆறு, நண்டலாறு ஆகிய பெரிய ஆறுகள் பாய்கின்றன. கூழையார் முதல் தரங்கம்பாடி வரை கடல் பகுதிகள். மீன் வளம் குறைவில்லை. முழுக்க முழுக்க டெல்டாவின் கடைமடை பகுதி, காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் எங்கள் மாவட்டம். டச்சு கோட்டை அமைந்திருக்கும் கோட்டை அமைந்திருக்கும் தரங்கம்பாடி, மாயூரநாதர், பரிமள ரங்கநாதர் போன்ற சிவ, வைஷ்ணவ தளங்கள், குதம்பை சித்தர்,திருமூலர் ஆகியோர் ஜீவசமாதிகள், சித்தர்காட்டில் 63 சித்தர்கள் சிவ அடக்கம் ஆன ஸ்தலம், உலகப்புகழ் பெற்ற தருமை ஆதீனம், மயிலாடுதுறை இரயில்வே சந்திப்பு 1867 முதல் மயிலாடுதுறையில் புகை வண்டி செல்லும் வழித்தடம். மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் மார்க்கம், திருச்சி மார்க்கம், திருவாரூர் மார்க்கம் என மூன்றாக பிரியும் பெரிய இரயில்வே சந்திப்பு. ஏற்கனவே நின்று போன தரங்கம்பாடி சந்திப்பை இனி வரும் எம்.எல்.ஏக்கள் மாநில தலைமைக்கு அழுத்தம் கொடுத்து அவைகள் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தால் மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில்வே பாதை மீண்டும் துளிர்க்கும். தரங்கம்பாடியில் இருந்து புதிய வழித்தடம் காரைக்காலுக்கு இணைத்தால் காரைக்கால் துறைமுகத்தில் வரும் பொருட்கள் சென்னை வரை அழகாய் சென்று விடும். லாரி வழியே சாலை போக்குவரத்தை தவிர்கலாம். அதே போல மயிலாடுதுறையில் இருந்து திருவையாறு, அரியலூர் வரை புதிய ரயில் வழித்தடம் அமைத்தால் அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு தேவையான சுண்ணாம்புக்கல் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நேரிடையாக செல்லும், அதே நேரம் பழையார்( கூழையார்), பூம்புகார் பகுதிகளில் மீன் பிடி துறைமுகங்களை விரிவு செய்தால் மிகப்பெரிய வர்த்தகம் உண்டாகும். தரங்கம்பாடியில் காரைக்கால் போல ஒரு செயற்கை துறைமுகம் அமைத்தால் மிகச்சிறப்பு. விவசாயம், மீன்பிடி ஆகியவைகள் போதுமானது எங்கள் வாழ்வாதாரத்துக்கு! இன்னும் எத்தனையோ சொல்லலாம். நான் மேலே சொன்னவைகளை செய்ய நல்ல எம்.எல்.ஏக்கள், மற்றும் எம்.பி இருந்தால் போதும் இன்னும் 15 ஆண்டுகளில் மயிலாடுதுறை மாவட்டம் ஒரு முதன்மையான மாவட்டமாக திகழும் தமிழகத்தில்!
மயிலாடுதுறையை மாவட்டமாக்க போராடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், முதல்வர் எடப்பாடி அவர்களுக்கும் என் நன்றிகள்!
- அபி அப்பா என்கிற தொல்காப்பியன்
மயிலாடுதுறை மாவட்டம்
December 30, 2019
சிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்!
ஒரு சினிமா பார்க்க போனது குத்தமாய்யா என நினைக்கும் அளவு ஆனது சிவகார்த்திகேயனின் “ஹீரோ” பட அனுபவம். அதுவும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க நினைத்தது தான் என் மாகுற்றம். காலையில் தியேட்டரில் நுழையும் போதே அத்தனை கூட்டம். கியூவில் நின்று டிக்கெட் எடுக்கவும் வெட்கம். “சபரிமலைக்கு மாலை போட்டவர்களுக்கு ஆச்சாரமான தனி கியூ”வெல்லாம் கொடுக்காத தியேட்டரின் அராஜகம்... அதை விடுங்கள். தனிப்பதிவாக போடும் அளவு பக்தாள்ஸ்க்கு கொடுமை நடக்கின்றது இந்த பெரியார் பூமியில்!
யாராவது சிரித்த மூஞ்சியான் வருவான், டிக்கெட் எடுத்து தருவான் அல்லது தியேட்டர் ஓனரோ, அவ்வளவு ஏன் சிவகார்த்திகேயனோ கூட வந்து “அடடே அபிஅப்பாவா இது? நீங்கல்லாம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா தியேட்டரை பசு மாதிரி கயித்தை கட்டி உங்க வீட்டுக்கு ஓட்டி வந்து படத்தை போட்டு காமிக்க மாட்டேனா? சரி சரி உள்ளே வாங்க” என அழைத்துப்போவார்கள் என்றெல்லாம் அதீத கற்பனை செய்து கொண்டே அங்கிருந்த ஒரு பூச்செடி நிழலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது தான் இந்த பதிவின் “ஹீரோ” வந்தான். கவனித்து படிக்கவும். படத்தின் ஹீரோ அல்ல! பதிவின் ஹீரோ!
பார்க்க ரொம்ப சுமாராக செம்பட்டை தலையுடன், கசங்கிய பேண்ட், அதற்கு சம்பந்தமில்லா ஒரு முழுக்கை சட்டை அதில் ஒரு கை மட்டும் மடித்து விட்டு வாயில் பான்பராக் குதப்பலோடு அருகே வந்தான். “சார்... நிங்க தானே தொல்காப்பியன்?”
ரொம்ப அசிரத்தையாக “ஆமாம்” என்றேன்!
“சித்தப்பா உங்களை எனக்கு தெரியும். என்னை தான் உங்களுக்கு தெரியாது” என்றான்.
எனக்கு குழப்பம். இந்த மாதிரி எனக்கு யாரையும் தெரியாதே என நினைத்துக் கொண்டு... “நீங்க?” என எழுத்தேன். சித்தப்பா என்று உரிமையாக வேற சொல்றான்!
“சித்தப்பா, சுத்தரமூர்த்தி ஃப்ரண்டு நான்”
“எந்த சுந்தரமூர்த்தி?” என்றேன்.
“கொரநாடு... ஆட்டோ கூட ஓட்டுவானே. அதான் அடிக்கடி ஜெயிலுக்கு எல்லாம் போவானே அந்த சுந்தரமூர்த்தி தான்”
எனக்கு ஞாபகம் வந்து விட்டது. பதிமூன்று ஆண்டுகள் முன்பாக ஒரு மண்டலத்துக்கு நான் ஒரு நாய் வளர்த்தேன். என்னை ஆறுமாதத்துக்கு ஒரு தபா என நாய் கடித்து வைப்பதை ஏற்கனவே பக்கம் பக்கமாக நான் எழுதி தொலைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். அந்த நாய்கடி சாபத்தை போக்க ஒருத்தன் குடுத்த ஐடியா அது. “டேய் மச்சி, நீயே ஏன் ஒரு நாய் வளர்க்க கூடாது? நீ ஒரு நாய்க்கு ஓனரா ஆகிட்டா மத்த நாயெல்லாம் “ஒரு நாயோனரை நாம கடிக்கக்கூடாது” என அதுங்க சங்கத்திலே முடிவெடுத்து உனக்கு போட்ட “ரெட்கார்டை” வாபஸ் வாங்கிடலாம்ல. அதனால நீ இன்ன்னிக்கே ஒரு நாய் வாங்குற. நாயோனர் ஆகுற” என அருள்வாக்கு கொடுத்து விட்டு மறைந்து விட்டான். நானும் நாய்படாத பாடு பட்டு ஒரு கருப்பு கலர் பொமரேனியன் 1000 ரூபாய் கொடுத்து வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்தேன். வந்ததுமே சண்டை வீட்டிலே.
“நம்ம வீட்டிலே இதல்லாம் பழக்கமில்லை. தவிர அதை என்னால மெயிண்டெய்ன் பண்ணல்லாம் முடியாது. வேண்டுமானா உங்களுக்கு சோறு வைக்கும் போது அதுக்கும் ஒரு தட்டு வைக்கிறேன். ஆனா அது கக்கா போவதை எல்லாம் என்னால சுத்தம் பண்ண முடியாது. எங்கப்பா என்னை ராணி மாதிரி வளர்த்தாங்க” என பிலுபிலுவென பிடித்துக் கொண்டார் என் சகதர்மினி. ராணியே நாய் வளர்க்கும் போது ராணி மாதிரி வளர்க்கப்பட்டவங்க நாய் ஆய் போனா சகிச்சுக்க மாட்டாங்களா என நினைத்துக் கொண்டு நாய் மெய்ண்டெய்னர் ஒருத்தனை தேடி மீண்டும் நாய் போல அலைந்த போது தான் இந்த சுத்தரமூர்த்தி ஆபத்பாந்தவனாக வந்தான். தூரத்து உறவு தான். படிக்க போகலையாம். தினமும் ரெண்டு வேளை வந்து நாயை கக்கா அழைத்துப்போய் வந்து குளிக்க வைத்து விட்டு போகனும் என்னும் ஒப்பந்த அடிப்படையில் வந்தவன். சுத்தி வளைத்து நான் அவனுக்கு சித்தப்பா முறை என்பதை என் அம்மா அரைமணி நேரம் விளக்கியதால் அவன் அன்று முதல் சித்தப்பா என அழைக்க தொடங்கினான்.
ஒரு நாள் அவன் ட்யூட்டியில் இல்லாத நேரம் என் நாய்க்கு அவசரம்... கக்கா போய்விட்டது. என் வீட்டம்மணி வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து “இனி இந்த வீட்டில் நாய் இருக்கனும் இல்லாட்டி நீங்க இருக்கனும். நீங்களே முடிவெடுத்துக்குங்க” என கறாராக சொல்லிவிட வீட்டுக்கு ஒரு நாய் போதுமென்கிற மனோநிலையில் 48 நாள் நாயோனராக இருந்த நான் அதை விற்க முடிவெடுத்து விட்டேன். நாயின் ஆரம்பவிலை.... நமக்கு லாபம் எதுவும் வேண்டாம் என முடிவெடுத்து அதே 1000 என நிர்ணயித்து விலை பேசி, அதை யாரும் வாங்க முன்வராததால் அதை 800 ஆக குறைத்து பின்னர் நான் தான் விலையை ”குரைத்து குரைத்து” 100 ரூபாய்க்கு ”இங்கே அழகிய பமரேனியன் கிடைக்கும்” என என் கழுத்தில் போர்டு மாட்டிக்காத குறை தான். அப்பவும் யாரும் முன்வராத காரணத்தால் “இங்கே கருப்பு பமரேனியன் குட்டியும் கூடவே அசோசரீஸ் (கட்டும் சங்கிலி, சாப்பிடும் தட்டு) இலவசம் என சொல்லியும் .... பின்னர் நாயும், அசோசரீஸ் மற்றும் 200 ரூவாய் தரப்படும் என்னும் நிலைக்கு நான் வந்தேன். போணியாகவில்லை. நாயும் நானும் அலையாத தெரு இல்லை. “சார்... நாய் வாங்கலையோ நாய்” என்று கூவாத குறை தான். சில உறவினர்கள் என்னை பார்த்ததும் கதவை மூடும் நிலைக்கு வந்து விட்டார்கள் என்பதை உணர்ந்தேன். அப்போது தான் சுந்தரமூர்த்தி மீண்டும் வந்தான். நானோ லீவ் முடிந்து துபாய் திரும்பும் நாளும் வந்தது. குடும்பத்துடன் சினிமா, கோவில் என அலைய வேண்டிய நான் நாயோடு அலைந்தேன்.
“சித்தப்பா, சூப்பர் பார்ட்டி கொண்டு வந்திருக்கேன். நீங்க படும் கஷ்டத்தை சொன்னேன். அவனுக்கு அழுகையே வந்துடுச்சு. நாயையும் கொடுத்து மேலே 1000 ரூபாயும் கொடுத்தா அவன் போனா போவுதுன்ன்னு அதை வாங்கிப்பதாக சொல்றான்” என்றான். எல்லாம் என் நேரம். ஒரு வழியாக டீலை முடித்து விட்டு துபாய்க்கு போய் விட்டேன். பின்னர் சின்னவனாக இருந்த சுந்தரமூர்த்தி வளர்ந்து சாராய வியாபாரம், அடிதடி, ஜெயிலுக்கு போதல் என அபரிமிதமான வளர்ச்சியாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.
இப்போ வாங்க விஷயத்துக்கு!
“ஓ...ஞாபகம் வருதுப்பா. சுந்தரமூர்த்தி ஃப்ரண்டா நீனு? என்ன பண்ணிகிட்டு இருக்கே. அவனை எப்படி தெரியும்?”
“சித்தப்பா, நான் திருடரா இருக்கேன். அவனை நம்ம மாயவரம் சப்ஜெயில்ல தான் வச்சி பார்த்தேன். அதிலிருந்து நல்ல பழக்கம். உங்களைப்பத்தி சொல்லியிருக்கான். அதான் பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டேன். உங்க வீடு கூட எனக்கு தெரியும் ” ....(திருடர்ர்ர்ர்ர் மரியாதையா சொல்லிக்கிறானாமாம்... தொழில் பக்தி?!)
எனக்கு பகீரென்றது. “என்னது திருடரா? என்னப்பா சொல்ற. நீ எந்த ஏரியா?” கொஞ்சம் நகர்ந்து கொண்டே கேட்டேன்.
”எல்லா ஏரியாவும் நம்ம ஏரியா தான். எங்க கிடைக்குதோ அங்க திருடுவேன்” என்றான்.
“அட அதை கேட்கலை. எந்த ஏரியா பையன் நீனு?”
“எல்லாம் என் ஊர் தான்னு வள்ளுவரே சொல்லியிருக்காருல்ல”
“எந்த வள்ளுவர்? சமீபத்திலே பி.ஜே.பி ல சேர்ந்தாரே அவரா?’
“பி.ஜே.பி ந்னா? என்றான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு அயோக்கியனா இருந்து கொண்டு பி.ஜே.பியை தெரியலையே இவனுக்கு. பின்ன எப்படி தாமரை தமிழ்நாட்டில் மலரும் என நினைத்துக் கொண்டேன். பின்னர் அவனே
“ஆமா, ஒரு சுருட்டை தலை அக்கா தாமரை மலரும் தாமரை மலரும்னு சொல்லுமே. அதைக்கூட கட்சில இருந்து நீக்கிட்டாங்களே அந்த கட்சியா?” என்றான்.
“டேய் அதை நீக்கலை. அதை பாட்டில்ல அடைச்சி 5 வருஷத்துக்கு ஆந்திராவிலே ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்காங்க. 5 வருஷம் ஆனதும் திறந்து விட்ட பின்ன நீ இப்படி பாஜகவை தெரியாதுன்னு சொன்னது தெரிஞ்சா உன் காதை கடிச்சு வச்சிடும். ஆமா வள்ளுவர் எப்ப எல்லாம் என் ஊர் தான்னு சொன்னாரு” எனகேட்டேன்.
“அவரு தான் நிறைய சொல்லியிருக்காரே பக்கம் பக்கமா. இந்த சப்ஜக்டும் சொல்லியிருப்பாருதானே” என்றான்.
தியேட்டரில் கூட்டம் மேலும் மேலும் அதிகமாகிகொண்டே வந்தது. ஒரு ப்ரவுன் கலர் ஷூ போட்ட மப்டி போலீஸ் மீசையை நீவிக்கொண்டே என்னை பார்த்துக்கொண்டே போனார். நான் கொஞ்சம் அவனிடமிருந்து பூச்செடி நிழலில் இருந்து நகர்ந்து வெயிலில் நின்றேன்.
“அட என்ன சித்தப்பா... எதுக்கு என்னை பார்த்து ஒதுங்குறீங்க. ஒரு திருடர் கூட நிக்கிறது அசிங்கமா இருக்குதா? இதுக்கெல்லாம் அசிங்கம் பார்த்தா முடியுமா? இதோ நீங்க கூடத்தான் காவி வேட்டி கட்டிகிட்டு மீசையும் தாடியுமா அசிங்கமா இருக்கீங்க. நான் வெட்கப்படாம பக்கத்தில் நிக்கலையா?”
ஆஹா.... இவன் நம்மை அசிங்கப்படுத்தாம விட மாட்டான் போலிருக்கு. நமக்கே எப்பவாவது தான் சினிமா பார்க்க மூட் வரும். இப்போ சுத்தமா போச்சுது இவனால. இவன் கூட பேசிகிட்டு இருப்பதை ஏற்கனவே ஒரு போலீஸ்கார் பார்த்துட்டார். சரி இன்னிக்கு சந்திராஷ்டமம் வேலையை ஆரம்பிச்சிடுச்சு என நினைத்துக் கொண்டு வண்டி வச்சிருந்த இடத்துக்கு நகர்ந்தேன். வண்டிசாவியை சட்டைப்பையில் இருந்து எடுக்கும் போது டிக்கெட் எடுக்க வைத்திருந்த 200 ரூபாய் நோட்டும் உடன்பிறவா சகோதரி போல கூடவே வந்தது.
“அட என்ன சித்தப்பா... டிக்கெட் வாங்கனுமா? இருங்க... நான் ஒரு நிமிஷத்துல வாங்கி வரேன்” என சொல்லிக்கொண்டே சடக்கென அந்த 200 ரூபாய் நோட்டை பிடுங்கிக்கொண்டு கூட்டத்தில் புகுந்து விட்டான். எனக்கு பதக் பதக் ஆனது இதயம். சரி வந்துடுவான் என நினைத்துக் கொண்டேன். கூட்டம் எல்லாம் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போகப்போக நான் நிற்கும் இடம் காலியாகிக்கொண்டே வந்தது. எனக்கு பயம் வந்தது லைட்டா. 200 ரூவா இன்னிக்கு எள்ளு தான் போல என மனசு சொன்னது. ஆளைக்காணும். அவன் பேர் கூட எனக்கு தெரியாதே...
இனி அவன் வரமாட்டான் என்னும் முடிவுக்கு வந்தேன்.சுந்தரமூர்த்திக்கு நெருக்கமான வேறு ஒரு சொந்தக்காரருக்கு போன் செய்து சுந்தரமூர்த்தி நம்பர் வாங்கி சுந்தரமூர்த்திக்கு போன் செய்தேன். யாரோ பெண் குரல் கேட்டது.
“சொல்லுங்க மாமா?”
“என்னது மாமாவா?”
அது என் பெயரை சொல்லி நீங்க தானே பேசுறது என்றது. ஆமாம் என்றேன். “உங்க பெயரை தான் அவங்க போன்ல போட்டு வச்சிருக்காங்கலே... அவங்க பொண்டாட்டி தான் நான் என்றது.
“சரிம்மா... அவன் எங்கே?” என்றேன்.
“அவங்க திருச்சிக்கு போயிருக்காங்க மாமா ஒரு வேலையா. வர இன்னும் 15 நாளாவது ஆகும்”
“சரி, அவன் போன் நம்பர் கொடு”
“இருங்க. அவங்களே உங்ககிட்ட பேச சொல்றேன். உங்க நம்பரை அனுப்பறேன் அவங்களுக்கு” என சொல்லி வைத்து விட்டது.
அந்த மீசைநீவி மீண்டும் என்னை உற்றுப்பார்த்துக் கொண்டு நடையை கட்டினார். நான் அந்த அளவு ஒர்த் இல்லை என போய் அவரிடம் சொல்லலாமா என அபத்தமாக நினைத்துக் கொண்டேன். வீட்டில் என் மனைவி பர்சில் இருந்து 150 ரூபாய் எடுத்தால் கூட வியர்த்து விடும். அவங்க தேடும் முன்னமே “அதுல எதுனா 150 குறைஞ்சா நான் தான் எடுத்தேன்னு நீ தப்பா சந்தேகப்படக்கூடாது” என உளறியே மாட்டிக்குவேன். அத்தனை ஒரு பூஞ்சை நான். எனக்கெல்லாம் மீசை நீவுதல் ரொம்ப அதிகம். இந்த திருடன் கூட எனக்கு பத்து நிமிஷ சகவாசம் தான். அய்யோ புலம்ப வச்சுட்டானே....
போன் ரிங் டோன் ஒலித்தது... “மாட்டிக்கிச்சு...மாட்டிக்கிச்சு... மாட்டிக்கிச்சு” ஹிப்பாப் ஆதி நேரம் காலம் தெரியாமல் ரிங் டோனில்...
“அல்லோ நான் தான் சுந்தரமூர்த்தி பேசுறேன் சித்தப்பா. திருச்சி ஜெயில்ல இருக்கேன்”
அப்பாடா... என் 200 எப்படியும் கிடைச்சிடும்...
“நல்லா இருக்கியாடா? அங்க வசதியெல்லாம் எப்படி? சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குதா?”
அய்யோ... என்னவோ அவன் துபாய்ல இருந்து போன் பேசுவது போல “அங்க ரோடு நல்லா இருக்கா? அரிசி சோறு கிடைக்குதா? மழை பெய்யுதா?”ன்னு குசலம் விசாரிச்சு கிட்டு இருக்கேன். “சரி நீ ஜெயில்ல இருந்து எப்படி போன் பண்ற?” என்றேன்.
“இப்பதான் வீட்டுல இருந்து எனக்கு போன் பண்ணி உங்க நம்பர் கொடுத்து பேச சொன்னுச்சு. இங்க ஒரு நம்பர் இருக்கு. அவசர ஆத்திரத்துக்கு கொடுத்து வச்சிருக்கேன் அதுகிட்ட. சரி விஷயத்தை சொல்லுங்க” என்றான்.
அங்க ரொம்ப பிசி போலிருக்கு அவன். நாலு வரியில் ப்ளாஷ்பேக்கினேன்.
“சரி அவன் பேர் என்ன?’
“தெரியாது”
“பேர் கூட தெரிஞ்சுக்காம 200 ரூவா குடுத்தீங்களே.. நீங்க....”
“இருடா இருடா... கெட்ட வார்த்தை எல்லாம் பேசக்கூடாது. அசிங்கமா இருக்குல்ல”
“சரி அங்க அடையாளம் சொல்லுங்க”
நான் என்ன ஜெயில் வார்டனா? அங்க அடையாளம் பார்த்து வைக்க. அவனுங்க தொழில் ரீதியாவே என்கிட்ட பேசினா நான் என்ன செய்யட்டும்? ஆங்... அந்த முழுக்கை சட்டையில் ஒரு கை மடிச்சு விட்டிருந்தான்னு சொன்னேன்ல... அதிலே முழங்கைக்கு கீழே ஒரு பெரிய வெட்டு தழும்பு. அதை சொன்னேன்.... உடனே சுதாரித்துக் கொண்டான்.
“வேற எதாவது? வலது தொடைக்கு மேலே இடுப்புக்கு கீழே மச்சம் இருந்துச்சா?”
“டேய் அந்த அளவுக்கு எல்லாம் அவன் தூக்கி காமிக்கலை. அவன் சுன்னத் பண்ணியிருப்பானா இல்லியான்னு எல்லாம் எனக்கு எப்படி தெரியும்?”
‘அட அவன் பாவாடை சித்தப்பா” என்றான்.
“கிருஸ்டியனா?” என்றேன்..
“இல்லை... இந்து தான். அவன் பேரு பாவாடைசாமி. நல்ல பயலாச்சே... ஆனா சரியான திருட்டுப்பய. அவன் கிட்ட போய் யாராவது பணம் குடுப்பாங்கலா? சரி வீட்டுக்கு போங்க. நான் 15 நாளில் வந்துடுவேன். வந்து ரெக்கவர் பண்ணிடலாம். ஆனா அதுக்குள்ள அவன் உள்ள வராம இருக்கனும். எதுக்கும் சாமிய வேண்டிகிட்டு போங்க வீட்டுக்கு” என்றான்.
“என்னடா திருட்டுப்பயல் கிட்டே போனது எப்படி திரும்பி வரும்?” என்றேன்.
“அட சும்மா இருங்க. திருடன்னா எப்போதுமா திருடிகிட்டே இருப்பான். அவனுக்கும் ஆஃப் ட்யூட்டி டைம்னு இருக்கும்ல. அவன் திருடன் தான். ஆனா ரொம்ப நல்லவன்”
எனக்கு குழப்பம். ஒரு திருடன் எப்படி நல்லவனா இருக்க முடியும்?
வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
வீட்டம்மணி “ஏங்க...தியேட்டருக்கு போய் ஒருத்தன் கிட்டே காசு கொடுத்து டிக்கெட் வாங்க சொன்னா ஒரு இடத்திலே நிக்க மாட்டீங்கலா? ஒரு பையன் வந்து ஒரு டிக்கெட்டும் மீதி 50 ரூவாயும் கொடுத்துட்டு போனான். அவன் நிக்க சொன்ன இடத்திலே நிக்க மாட்டீங்கலா?” என்றார்.
அப்பாடா.... கும்பிட்ட தெய்வம் நம்ம காசை காப்பாதிடுச்சு...
“சரி... சரி அவனை உள்ளே விடலையே?”
“அதப்படி? அவன் தான் வெயில்ல வந்திருக்கான். உபகாரம் செஞ்சவனுக்கு ஒரு வாய் மோர் குடுக்க கூடாதா. அவனை உட்கார சொல்லி மோர் குடுத்தேன். டிக்கெட்டும் மீதி காசும் குடுத்துட்டு கால்ல வென்னீர் ஊத்தினது போல கெளம்பிட்டான்”
“சரி டிக்கெட்டை குடு” என சொல்லி வாங்கிக்கொண்டு தியேட்டர் வந்து விட்டேன்.
படம் பார்த்து முடித்தேன். படம் எனக்கு பிடித்து இருந்தது. (அப்பாடா சினிமா விமர்சனம் செஞ்சாச்சு)
படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்த திருப்தியில் வீடு வந்து சேர்ந்த போது என் மனைவி ரொம்ப பிசியாக இருந்தாங்க.
“பசிக்குது. சாப்பாடு எடுத்து வை” என்றேன்.
“இருங்க. டேபிள் மேலே டிவி பக்கத்தில் தான் என் வாட்ச் வச்சிருந்தேன். காணும். கொஞ்சம் தேடிப்பாருங்க. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”
எனக்கு பகீர் என ஆனது. வீட்டு மாடிக்கு ஓடி சுந்தரமூர்த்தியிடம் இருந்து வந்த நம்பருக்கு கால் செய்தேன். யாரோ எடுத்தார்கள். “சுந்தரமூர்த்தி கிட்டே பேசனும்” என்றேன். “உங்க பேர் சொல்லுங்க” என்றார். சொன்னேன். சுந்தரமூர்த்தி லைனுக்கு வந்தான்.
“டேய் வீட்டுக்கு வந்து அவன் டிக்கெட் குடுத்துட்டு வாட்சை திருடிகிட்டு போயிட்டாண்டா?” என்றேன். உடனே அவன் ..
“அவன் தான் திருட்டுப்பயல் என சொன்னேனே?” என்றான்.
“அவன் நல்லவன்னும் சொன்னியே?”
“ஒரு திருடன் எப்படி நல்லவனா இருக்க முடியும் சித்தப்பா? நீங்க என்ன லூசா?”
கீழே வந்தேன். என் மனைவியிடம்.....
“சரி... இன்னிக்கு எத்தனை மணி வரைக்கும் எனக்கு சந்திராஷ்டமம் இருக்கு?”
“நாளை வரை இருக்கு உங்களுக்கு. நான் வாட்சை தானே தேட சொன்னேன். அதுக்குள்ள எதுக்கு மாடிக்கு ஓடினீங்க? இறங்கி வந்து சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுறீங்க? நீங்க என்ன லூசா?”
“ஆமாம்! நான் லூசு தான்” என்றேன்!
December 15, 2019
“தோழர் சோழன்” மீதான என் பார்வை! - அபி அப்பா என்கிற தொல்காப்பியன்.
அது ஒரு அழகிய மழைக்காலம். ஆண்டு 2011, நவம்பர் 5ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகம் “அன்பகத்தில்” அந்த கூடுகை நிகழ்வு. அய்யா சுப.வீரபாண்டியன், டி.கே.எஸ். இளங்கோவன், அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.எஸ், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு, மன்னார்குடியின் புதிய எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா, அசன் முகமது ஜின்னா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இணையத்தில் செயல்படுபவர்களின் கூட்டம் அது. பார்வையாளர்களும் பேசலாம். தங்கள் கருத்துகளை பரிமாற்றம் செய்து கொள்ள ஒரு வாய்ப்பு அது. அப்போது ஞானமணி என்னும் பையன். பெரம்பலூர் மாவட்டம் சார்ந்த பையன். முதுகலை படிப்பு முடித்து விட்டு அப்போது சென்னையில் முனைவர் பட்டத்துக்கு படித்துக் கொண்டிருக்கின்றார் ஒரு பல்கலைகழகத்தில். பேச ஆரம்பிக்கின்றார்.
சிறிது நேரத்தில் மேடையில் அழ ஆரம்பிக்கின்றார். அழுகையினூடே விஷயத்தை சொல்கின்றார். “சார், நான் பெரம்பலூர் மாவட்டம் சார்ந்தவன். இங்கு நான் படிக்கும் பல்கலைகழக விடுதியில் பெரம்பலூர் காரனா நீ? 2ஜி பணம் எல்லாம் எங்க வச்சிருக்கே? ஒன்னே முக்கால் லட்சம் கோடியை அப்படி எங்கடா பதுக்கி வச்சிருக்கீங்க?” என கேட்கிறாங்க சார். பெரம்பலூர்காரன் என்பதால் ஏன் சார் அவமானம் செய்றாங்க? எங்க ராசா அண்ணன் ஊருக்கே நல்லது செஞ்சவரு சார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பெரம்பலூர்ல நல்லது தான் சார் செஞ்சாரு. எங்களுக்கு ஏன் சார் இந்த கஷ்டம்?” பேசிவிட்டு மீண்டும் அழுகை. கூட்டம் நிசப்தம் ஆனது. அடுத்தடுத்து பலரும் பேசினார்கள். அரியலூர் மாவட்ட செயலாளர் திரு. எஸ். எஸ்.சிவசங்கர் அவர்கள் எழுந்தார். பேசினார். “நான் இங்கே இணையத்தில் நீங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நேரிடையாக சொல்லப்போவது கிடையாது. ஆனால் நீங்கள் எப்படி செயல்பட்டால் வெற்றி என்பதை சொல்கிறேன். இதோ இங்கே பேசிய தம்பி ஞானமணி அவர்கள் 2 ஜி விஷயம் பற்றி பேசி அதனால் அவரை அவமானம் செய்வதாக வருத்தமாக பேசினார். இது 2011ம் ஆண்டு நவம்பர் மாதம். நான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து 6 மாதங்கள் தான் ஆகின்றது. பலருடைய பேச்சுகளும் அத்தனை ஏன்? திமுகவினர் கூட சிலர் “நாம் 2 ஜி விவகாரத்தால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம்” என வெளிப்படையாகவே பேசுவதையும் நாம் காண்கின்றோம். இல்லை. இதே அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் அண்ணன் ஆ.ராசாவின் பாராளுமன்ற தொகுதி இருக்கும் நீலகிரி ஆகிய இந்த மூன்று மாவட்டங்களிலும் நம் திமுக பெற்ற வெற்றி என்பது மூன்றில் இரண்டு பங்கு வெற்றியாகும். இந்த மூன்று மாவட்டங்களில் நாங்கள் வெளிப்படையாக 2 ஜி விஷயத்தையே பரப்புரையாக கொண்டு செயல்பட்டோம். மற்றவர்கள் பேச தயங்கிய போது நாங்கள் பேசினோம். தைரியமாக மக்களை அதே 2 ஜி விஷயத்தை சொல்லி எங்கள் மீது எந்த தவறும் இல்லை என பரப்புரை செய்தோம். தமிழ்நாடு முழுவதும் இதோ மேடையில் இருக்கும் அய்யா சுபவீரபாண்டியன், ஆசிரியர் வீரமணி, அண்ணன் திருச்சி சிவா ஆகியோர் 2 ஜி பற்றிய பரப்புரை செய்தனர். ஆனால் இணையம் வழியாக அப்போது மிகக்கடுமையான பொய்ப்பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்தன. அங்கே இணையத்தில் அப்போது இதோ எதிரே அமர்ந்துள்ள அபிஅப்பா என்கிற தொல்காப்பியன், யுவகிருஷ்னா போன்ற வெகுசிலரே 2 ஜி பற்றி பெரிய பெரிய கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களால் இணையத்தில் அத்தனை பெரிய ஆரிய கூட்டத்தின் பொய்ப்பிரச்சாரத்தை சமாளிக்க இயலவில்லை. இதோ இப்போது எதிரே சுமார் 150 பேர் இருக்கின்றீர்கள். அதில் பாதி அளவு அவர்களுக்கு அப்போது கிடைத்திருந்தாலும் பெரிய மாற்றமே நடந்திருக்கும். நான் இதை குறிப்பாக தம்பி ஞானமணிக்கு தான் சொல்கிறேன். நம் மடியில் கனம் இல்லை எனும் போது வழியில் பயம் எதற்கு? அண்ணன் ஆ.ராசா அவர்கள் சிவசங்கரிடம் 500 கோடி கொடுத்து வைத்துள்ளார் என்று கூடத்தான் நான் போட்டியிட்ட அதே குன்னம் தொகுதியில் பொய்ப்பிரச்சாரம் செய்தனர். நான் அங்கு விளக்கம் சொன்னேன். வென்றேன். பயந்து போய் முடங்கினால் மேலும் மேலும் அடி விழும். திமிறி எழு தம்பி ஞானமணி. ஆமாம். நான் ஸ்பெக்ட்ரம் புரட்சியாளர் அண்ணன் ஆ.ராசாவின் மண்ணுக்கு சொந்தக்காரன் தான் என சொல். யாராவது உன்னை கேலி செய்யும் முன்னர் உன்னை அறிமுகம் செய்து கொள்ளும் போதே நான் “ஸ்பெக்ட்ரம் புரட்சி மண் சார்ந்தவன்” என சொல். கேட்பவர்களுக்கு அது ஆச்சர்யம் கொடுக்கும். அப்போது தான் விளக்கம் கேட்பார்கள். அவர்களுக்கு புரியவை. இதோ குன்னம் தொகுதியில் புரிந்து கொண்ட மக்கள் போட்ட ஓட்டுகளால் நான் இன்று எம்.எல்.ஏ ஆனதுபோல நீயும் அவர்களை வெல்வது சுலபம்”
இது தான் அன்று திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களின் பேச்சு. இதோ “தோழர் சோழன்” நாவலின் கதாசிரியர் அதே எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் தான். என்னடா இது! இது ஒரு நூல் விமர்சனம் என நினைத்து கச்சேரி பத்து நிமிடத்தில் முடிந்து கார பஜ்ஜி சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என நினைத்து ஏமாந்து போன வாசகர்களே... இது ஒரு ஃபுல் மீல்ஸ் மாநாடு. வந்தது வந்து விட்டீர்கள். தயவு செய்து வாருங்கள் அந்த சோழனோடு பயணிப்போம்.
இதோ அந்த நாவலின் கதாநாயகன் இராஜேந்திர சோழன் என்னும் “சோழன்” . கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன். இசை ஆர்வம் கொண்டவன். இளையராஜா எனில் சுவாசம் அவனுக்கு. பகுதி நேரமாக மேடைகளில் பாடுவான். அன்றும் அப்படித்தான் குருவாலப்பர் கோவிலிலிருந்து கும்பகோணம் போக வேண்டும். மாலையில் குடந்தையில் ஒரு கச்சேரி. அது முடிந்து அடுத்த நாள் காலையில் அங்கேயே கல்லூரிக்கு போக வேண்டும். பேருந்துகள் வரவில்லை. ஏதாவது ஸ்ட்ரைக் ஆக இருக்குமோ என நினைக்கும் போது அரியலூர் அருகே மருதையாறு பாலம் வெடித்து பலர் இறந்து விட்ட செய்தி தெரிகின்றது. குறுக்கு சாலை வழியே போய் சிதம்பரம் - கும்பகோணம் பேருந்தை பிடித்து கச்சேரி போகின்றான். ”வாய்யா குண்டு வச்ச ஊர்க்காரரே” என வரவேற்பு. அவமானமாக இருந்தது சோழனுக்கு. அடுத்த நாள் கல்லூரி செல்லும் போது சக மாணவர்கள் மத்தியில் அதே போன்ற பரிகாசங்கள். நொந்து போகின்றான். அதே கல்லூரியில் ஜெயம்கொண்டான் பகுதியில் இருந்து ஒரு விரிவுரையாளர் இருக்கின்றார். அவரிடம் செல்கின்றான். “வாங்க தோழர்” என அழைக்கின்றார். வாங்க தோழர் எனும் அந்த வார்த்தை பிரயோகமே அவனை கொல்கின்றது. ”என்ன சார், நீங்களுமா?” என்கிறான் சோழன். பின்னர் அந்த விரிவுரையாளர் ஒரு அழகான சமாதானம் சொல்கின்றார் அந்த மாணவன் சோழனுக்கு.
இதோ பசுமாட்டை கொண்டு வந்து தென்னை மரத்தில் கட்டி விட்டேன் வாசகர்களே! ஞானமணி தான் அந்த சோழன். ஜெயம்கொண்டான் விரிவுரையாளர் தான் எஸ்.எஸ் சிவசங்கர். 2 ஜி விவகாரம் தான் மருதையாறு பாலம் குண்டு வெடிப்பு. கச்சேரி தோழர்களும், கல்லூரி மாணவர்களும் தான் சமூகம். இன்னும் சொல்லப்போகின் சிவசங்கர் சாரின் சொந்த ஊர் ஜெயம்கொண்டான் தான் மற்றும் ஞானமணியின் சொந்த ஊர் தான் பெரம்பலூர் மாவட்டம். என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். ஆக பத்து பொருத்தம் பக்காவாக இருக்கும் போது நான் ஏன் அந்த பசுவை தென்னை மரத்தில் கட்டக்கூடாதுங்குறேன்.
விஷயத்துக்கு வருவோம். கதையின் களம் என்பது பெரம்பலூர், அரியலூர் மாவட்ட கிராமங்கள் மற்றும் அந்த முந்திரிக்காடு பகுதிகள். கதையின் களம் என்பது தான் மிக முக்கியம். நான் சில காலம் முன்பாக ஒரு கதை படித்தேன். என் நண்பர் ஒருவர் எழுதி அனுப்பியிருந்தார். கிருஷ்ணகிரி சார்ந்தவர். தான் கதை நன்றாக எழுதுவதாக அவரே பலமுறை சொல்லியிருக்கின்றார். அவர் ஒரு கதை எழுதி எனக்கு அனுப்பி பல ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எப்போதாவது போன் செய்யும் போது “ஏங்க, நான் அனுப்பிய கதையை பத்தி இன்னனும் ஒன்னும் சொல்லலையே?” என வருந்துவார். நான் அதை இன்னமும் படித்து முடித்தபாடில்லை. காரணம் கதையின் ஆரம்பம் தான். ஆரம்பத்திலேயே கதை கந்தல் ஆகிவிட்டது. அவர் காவிரி டெல்டா பகுதி பற்றிய கதை எழுத ஆரம்பித்துள்ளார். அதாவது கதாநாயகன் மயிலாடுதுறை பக்கமாக செம்பனார்கோவில். நாயகன் தன் ஆட்டை மேய்க்க செல்கின்றான். “நம் குப்புசாமி செம்பனார்கோவிலில் இருந்து கிழக்காக 25 கிமீ தொலைவில் இருக்கும் மலையில் தன் ஆடுகளை மேய்த்து விட்டு வீடு திரும்பினான். திரும்பும் போது இருட்டி விட்டது. அவன் கண்கள் சுழண்டு மயக்க நிலைக்கு வந்து விட்டான்” இப்படியாக ஆரம்பிக்கின்றது கதை. அத்தோடு என் கண்கள் சுழன்று விட்டது. அப்போது மூடி வைத்தது தான் அந்த கதையை. ஆக ஒரு கதைக்கு களம் என்பது அத்தனை முக்கியம். அது போல கதையின் காலம் அதை விட முக்கியம்.இங்கே கதையின் காலம் என்பது 1985 முதல் சுமார் 1989 வரையிலான காலங்கள். கதை நடக்கும் காலங்களில் எம்ஜிஆர் உயிருடன் இருந்தார். மரித்தும் போகப்போகின்றார். இந்திரா அம்மையார் இறந்து விட்ட காலத்தின் அருகேயான காலம். ராஜீவ் பிரதமர். அண்ணா அறிவாலயம் திறக்கும் நேரம். வன்னியர் சங்கம் உச்சகட்டமாக மரங்களை வெட்டி இட ஒதுக்கீட்டு போராட்டம் நடத்திய காலம். இன்னும் சொல்லப்போனால் பாமக என்னும் கட்சி தோன்றவே இல்லாத காலம்.
ஆக நாவலாசிரியருக்கு கதையின் களமும், காலமும் அழகாய் கைகூடி வந்து விட்டது. இனி கதை என்பது அவருக்கு சுலபமான விஷயமாகிவிட்டது. தன் பதின்ம வயதுகளில் பார்த்த, கேட்ட கதைகளை ஒரு பார்வையாளராக தூர நின்றும், அந்த கதையின் போக்கில் சென்று பார்த்தும் எழுத ஆரம்பிக்க வேண்டிய வேலை மட்டுமே அவருக்கு மீதமிருந்தது. அவதானித்ததை அழகிய விறுவிறுப்பான எழுத்து நடையில் கொண்டு வருவது ஒரு சவால். ஆனால் நூலாசிரியருக்கு அது பெரிய விஷயமில்லை. ஏனனில் எழுத்து அவருக்கு வசியப்பட்ட விஷயம். சரி கதை என்பது உண்மை கதையா? புனைவா? அல்லது கற்பனையா (புனைவு வேறு கற்பனை வேறா என்ன?) ... இது அக்மார்க் உண்மை கதை தான். கதாபாத்திரங்கள் சிலரது பெயர் மாற்றப்பட்டிருக்கலாம். சில கதாபாத்திரங்கள் கற்பனையாக உள்ளே வந்திருக்கலாம். அது போல ஒரு +2 படிக்கும் அல்லது கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு இளைஞனின் பார்வையாகத்தான் கதை இருக்கின்றது என்றே அவதானிக்கின்றேன். இன்னும் சொல்லப்போனால் தன்னை தான் சார்ந்த பூமிப்பகுதியை 1000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட இராஜேந்திர சோழனாக கற்பிதம் செய்து கொண்டும், அது போல இளையராஜாவை தன் மூச்சாய் சுவாசிக்கும், மேலும் தன்னை ஒரு பாடகனாக நினைத்துக் கொண்டு இசையை இரண்டற காதலிக்கும் ஒரு பையனின் பார்வை, அந்த வயதுக்கே உரிய புரட்சிகளின் மீதான ஈர்ப்பு கொண்ட, ஒரு சிறுவனுக்கும் இளைஞனுக்கும் இடைப்பட்ட பருவம் கொண்ட ஒரு பார்வையாளன் “சோழன்” தான் நூலாசிரியர் என்றே கடுமையாக அவதானிக்கின்றேன். என் அவதானிப்பு தவறாகக்கூட இருக்கலாம். வெட்டுப்புலி நாவல் போன்றோ அல்லது இருவர் திரைப்படம் போன்றோ பம்மாத்துகள் செய்யாமல் எம்.ஜி.ஆர், ஈழத்தின் கேனல் குணேந்திரன், பிரபாகரன், தழித்தமிழ்நாடு கோரும் விடுதலைப்படை இயக்கத்தின் தலைவர் தமிழரசன், டி ஜி பி ஸ்ரீபால், வன்னியர் சங்கம், மருதையாறு பாலம் குண்டு வெடிப்பு, வெடிப்பு நடந்த தேதி, பொன்பரப்பி ஸ்டேட் வங்கி கொள்ளை என அப்பட்டமாக உண்மை கதையாக எழுதப்பட்டுள்ளது.
விஷயம் இது தான். “சோழன்” அந்த முத்திரிக்காட்டு பகுதியில் வாழும் ஒரு கல்லூரி மாணவன். விவசாயக்குடும்பம் சார்ந்தவன். கிராமிய மேடை நாடகம், இசைக்கச்சேரி (ஆர்கெஸ்ட்ரா) போன்றவைகளில் ஆர்வம் கொண்டவன். ஒரு நாள்பாடும் போது ஒரு பெரியவர் ..பெயர் பிச்சைபிள்ளை என்பவர் விருப்பப்பாடலாக எழுதிக்கொடுத்த துண்டு சீட்டில் இருக்கும் கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தின் புரட்சிகர பாடலை பாடுகின்றான். பின்னர் அந்த பெரியவர் அழைப்பின் பேரில் புரட்சிகர அமைப்புக்காக பாடுகின்றான்.அமைப்பின் மீது ஏதோ ஒரு நியாயம் இருப்பதாக உனர்கின்றான். அதை செயல்படுத்தவும் ஆசைப்படுகின்றான். எப்படி? டியூஷனுக்கு மாணவர்களை கட்டாயமாக வரச்சொன்ன ஒரு வாத்தியாரை தலையில் துண்டு போட்டு மூடி அடித்து திருத்தும் அளவுக்கு அந்த இயக்கத்தின் மீது அவனை அறியாமல் ஒரு ஈர்ப்பு வருகின்றது. மீன்சுருட்டிக்கு உரம் வாங்க போகும் போது ஒரு செங்கொடி போராட்டத்தை பார்க்கின்றான். ஒரு ஆதிதிராவிட சமூக பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர்களை கைது செய்ய சொல்லி நடக்கும் போராட்டம். அங்கே காவல்துறையின் தடியடி. அடிக்கும் கம்பு ஒன்று தான். அடிவாங்கும் சதையும் ஒன்று தான். ஆனால் அதை காவலர்கள் செய்தால் அது தடியடி. மற்றவர்கள் செய்தால் அடிதடி. ஆஹா தமிழ் எப்படி பிரித்து மேய்கின்றது பாருங்கள். ஆக அந்த தடியடி நம் சோழனை வெகுவாக பாதிக்கின்றது.
சோழனை பாட அழைத்த பிச்சைபிள்ளை வாயிலாக பெரியவர் என்னும் இயக்க தலைவர் தமிழரசன் பற்றி அறிகின்றான். மேலும் ஈர்ப்பு வருகின்றது. இயக்கம் செய்வது எல்லாம் மக்கள் நலனுக்கே என்னும் கருத்து விதை அவனுள் ஆழமாக பதியம் ஆகின்றது.
இயக்கம் ஈழத்தில் இருக்கும் பிரபாகரனுக்கு ஆதரவாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் அமரிக்கா போன பின்னர் ஆதரவு இழந்த நிலையில், இந்திராவும் மறைந்து விட்ட நிலையில், ராஜீவ் அத்தனை ஆதரவாக புலிகளுக்கு இல்லாத காலத்தில் தமிழக மக்கள் ஆதரவை நாடுகின்றனர். அதற்கு தமிழரசன் போன்றவர்கள் உதவுகின்றார்கள். இப்படியான நிலையில் தான் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி மருதையாறு பாலத்தை தகர்க திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் நோக்கம் மக்கள் இழப்பு அல்ல. பாலத்தை மட்டும் தகர்க்க வேண்டுமென்பதே என நாவல் சொல்கின்றது. நம்புவதும் நம்பாததும் வாசகர்கள் முடிவு. ஆனால் திட்டம் திசைமாறி சுமார் 30 பேர் உயிரிழப்பு ஆகின்றது. சோழன் அப்போது தான் குடந்தை கல்லூரியில் “குண்டு வைத்த ஊர்க்காரன்” என அவமானப்படுத்தப்படுகின்றான். இதோ இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோமே அந்த நிகழ்வு தான் அது!
ஒரு கட்டத்தில் இயக்கம் நடத்த பணம் தேவைப்படும் போது பொதுமக்களிடம் இருந்து பணம் பெறுவது அவர்கள் இயக்க கொள்கைக்கு விரோதமானது என்பதால் எந்த அரசாங்கத்தை எதிர்த்து போராடுகின்றார்களோ அதே அரசாங்கத்திடம் இருந்து பணத்தை அடிக்கும் விதமாக பொன்பரப்பி ஸ்டேட் வங்கியை கொள்ளை அடிக்க இயக்கம் முடிவெடுக்கின்றது. எல்லோரும் மறந்து விட்ட அந்த செப்டம்பர் முதல் தேதி 1987 பொன்பரப்பி ஸ்டேப் வங்கி கொள்ளை சம்பவம் நடக்கின்றது. ஒரு மிகத்தேர்ந்த எழுத்தாளர்கள் மட்டுமே இப்படி ஒரு நிகழ்வை இயக்கம் திட்டம் தீட்டியது முதல் அப்போது யார் யார் எந்த பகுதிகளில் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதும், பயன்படுத்தப்போகும் வாகனம் எது? எந்த வழியே தப்பிப்பது? என்ன விதமான ஆயுதங்கள் என்பதையும், அதே போல போலீஸ் தரப்பில் டி.எஸ்.பி முதல் ஆர்ம்டு போர்ஸ் வரை எங்கே எங்கே எப்படி நிற்க போகின்றார்கள் என்பதையும், கடைசி நேரத்தில் வந்து இணைந்து கொண்ட எஸ்.பி ஒரு வாடிக்கையாளர் போல ஒரு கைத்தறி சொசைட்டியில் போய் அமர்ந்து கொள்வதும் என மிக நேர்த்தியாக எழுதியுள்ளார் நூலாசிரியர். சீட் முனைக்கு ... சீட் முனைக்கு என்பார்களே.... இந்த அத்தியாயங்கள் எல்லாம் அது போல அதிரிபுதிரி வகை எழுத்துக்கள்.
இந்த பதிவை எழுதும் நான் பொன்பரப்பி சம்பவம் நடந்த போது டிகிரி முடித்துவிட்டு சென்னையில் வேலையில் இருந்த நேரம். அப்போது ஒரு நாள் மாலை முரசில் “பொன்பரப்பி வங்கி கொலையில் தீவிரவாதி தமிழரசனை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்” என தலைப்பிட்டு வந்த போது “நல்லா வேணும் ராஸ்கல்ஸ்” என என் மனது குதூகலித்தது. ஆனால் காலம் பல கடந்து இந்த நாவல் வழியே தான் தெரிகின்றது அதனுல் இருந்த அரசியல் புதிர்கள்! இதோ இன்று கூட பொன்பரப்பியில் ஸ்டேட் பேங் அதே இடத்தில் இருக்கின்றது. அருகில் “பொதுமக்கள் செய்த வீர தீர செயலுக்காக” ஒரு சமுதாயக்கூடத்தை கட்சி அன்பளிப்பாக ஸ்டேட் வங்கி கொடுத்துள்ளதையும் பார்க்கலாம். சரித்திரம் எப்படியெல்லாம் மாற்றி எழுதப்படுகின்றது என்பதை இந்த நாவல் படித்து முடித்த பின்னர் நீங்கள் அறிவீர்கள். யார் கண்டது... நாளையே வீரப்பன் உயிரை குடித்த ரிவால்வர் இது தான் என ஒரு துப்பாக்கி அருங்காட்சியகத்தில் “மோர் குவளை”க்கு பதிலாக வைக்கப்படக்கூடும்...
இந்த அத்தியாயத்தின் போதே சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலைய கதை ஒன்றை உள்ளே நுழைக்கின்றார் நூலாசிரியர். கதையின் ஆரம்பத்திலிருந்து கதாநாயகனாக இருந்த நம் சோழன் இயக்கத்தின் தலைவர் கதையின் உள்ளே நேரிடையாக உள்ளே நுழைந்ததும் “பெரியவர்” தான் நாயகன் என ஆகும் அளவு ஆகிவிட்டது. அது அப்படித்தான் ஆகும் என நினைத்து நூலாசிரியர் கனகத்தின் கதையை உள்ளே கொண்டு வந்து மீண்டும் “சோழனுக்கு” பட்டாபிஷேகம் செய்து வைக்கின்றாரோ என சந்தேகம் எழுகின்றது. ஆனால் “முந்திரிக்காட்டின் புரட்சி” என்னும் கதையும் “கனகத்தின் கண்ணீர் காவியம்” என்னும் நாவலும் “சோழன்” என்னும் கயிறு கொண்டு அழுத்தமாய் கட்டி “இந்த காரணத்துக்காகத்தான் கனகத்தை உள்ளே கொண்டு வந்தேன் என அழகாய் நூலாசிரியர் வாசகர்களை நம்ப வைப்பது அபாரம். வில்லனை துரத்திக் கொண்டு பாலக்கோடு செல்வதும், மலையுச்சி, மலையூர், புலிரசம் என அசத்தலாகப்போகின்றது. இந்த கதையில் போலீசாரே வில்லன்கள். நல்ல போலீஸ்களான கணபதி ஏட்டு, அப்துல்லா எஸ்.ஐ, மற்றும் மந்திரி அழுத்தத்தால் மாற்றலாகிப்போகும் எஸ்.பி என ஒரு நல்ல போலீஸ் குழுவும் இருக்கின்றது. அவர்களோடு சேர்ந்து சோழனும் ஓடுகின்றான். கடைசியில் வில்லன் போலீஸ் ராமசுந்தரமும், குத்தாலம் சம்பந்தம் பி.சியும் என்ன ஆனார்கள்? சோழன் சம்ஹாரம் செய்தானா? அல்லது பாதிக்கப்பட்ட வேறு யாராவது சம்பவம் செய்தார்கலா? அல்லது இதையெல்லாம் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையின் எஸ்.ஐ அப்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தினாரா? எல்லாமே அருமையாக கோர்வையாக தந்துள்ளர் நூலாசிரியர்.
சின்ன வயதில் 45 காசு டிக்கெட் எடுத்து விட்டு மணலை குவித்து சாய்மானத்துக்கு பெண்கள் பகுதியையும் ஆண்கள் பகுதியையும் பிரிக்கும் சின்ன கட்டை சுவற்றில் சாய்ந்து கொண்டு ரீல் எத்தனை என பார்க்கும் போது 24 ரீல்கள் என காட்டினால் ஒருவித சந்தோஷம் வருமே... அது போல 49 ரூபாய்க்கு இரண்டு நாவல்கள் படித்த திருப்தி... அதே நேரம் இரண்டுமே விறு விறு ரகம்... அருமை சிவசங்கர் சார்.
நாவலின் பல பகுதிகள் குறிப்பாக அந்த முந்திரிக்காட்டின் முழு வரைபடத்தையும் எழுத்தால் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அழகு, மருதையாறு பாலம் குண்டு வைக்கும் முன்பாக போராளிகள் போடும் ஸ்கெட்ச், அது போல பொன்பரப்பி வங்கி கொள்ளைக்கு போகும் போது போடும் திட்டம், அதே நேரம் போலீசார் போடும் திட்டம், மலையூர் கிராமம், பாலக்கோடு பகுதிகள், இயக்க பாடல் பாடிவிட்டு கு.வல்லம் கிராமத்தில் ஒரு ஆதிதிராவிடர் வீட்டில் சாப்பிடும் முந்திரிக்காய் சாம்பார், கனகத்தின் கண்ணீர் கதை, நதியா என்னும் பிஞ்சு கருகி சாவது, கணபதி ஏட்டின் இரக்க சுபாவம், எஸ்.பியின் நேர்மை... இப்படியாக பல கதாபாத்திரங்களும் நம்மோடு வாழ்கின்றன.
குறிப்பாக செயராஜ் மற்றும் அப்துல்லா பாத்திரங்கள். நாவலைப்படித்தவர்கள் அடடே அது என்ன செயராஜ் கூட அப்துல்லாவை ஒப்பிடலாம் என கேட்கலாம். இந்த நாவலில் இந்த இருவர் மட்டும் தான் தென்னை மரத்துக்கு ஒரு குத்து, பனை மரத்துக்கு ஒரு குத்து என இரண்டு குத்து குத்தும் ஆசாமிகள். செயராஜ் என்பவன் இயக்கத்தின் பெரியவர் கூடவே இருந்து தொன்னை மரத்துக்கு ஒரு குத்தும் பின்னர் தனியாக டி எஸ் பி வீட்டுக்கு சென்று பனை மரத்துக்கு ஒரு குத்தும் போடும் துரோகி. கிட்டத்தட்ச அந்த இயக்கம் வேரோடு சாய்ந்தமைக்கு அவனும் ஒரு காரணம். 87களில் அவன் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு இயக்கத்தை காட்டிக்கொடுத்து தமிழரசன் மரணத்துக்கு காரணமாகின்றான். அனேகமாக இன்று அவன் ஒரு அரசு அதிகாரியாக இருக்கலாம். தமிழரசனை கொல்ல உதவியதுக்காக அவனுக்கு வேலை கிடைத்து இன்றைக்கு 34 ஆண்டு சர்வீசில் சுத்து வட்டாரத்தில் எங்காவது தாசில்தாராக இருந்து பாக்கெட் நிரப்பிக் கொண்டிருக்கலாம். கிட்டத்தட்ட அப்துல்லா பாத்திரமும் அப்படித்தானே. என்ன ஒன்று அப்துல்லா இருப்பது அரசாங்க உத்யோகம். ஆனால் மலையூர் மலையில் அப்துல்லா “சோழனை” வழிகாட்டும் விதம் பேச்சளவில் நன்றாக இருக்குமே தவிர “குச்சி இருக்குதா (ஜெலட்டின்) கையிலே... அவனுங்க மூஞ்சில போடு” என சொல்வது, தான் இருக்கும் அரசாங்க உத்யோகத்துக்கு ஏற்ற செயலாக எனக்கு தெரியவில்லை. அதனால் தான் செயபால் கூட ஒப்பிடுகின்றேன். படிக்கும் போது மேலும் அதை உணர்வீர்கள்!
இந்த நாவல் வந்ததும் உளவுத்துறை எல்லாம் அமேசான் கிண்டில் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து 49 ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கி கசக்கி கசக்கி கண்களை கூர்தீட்டியது என தினசரிகளில் வந்த செய்தியை படித்தேன். சாராயம் காய்ச்சுவது எப்படி என விலாவாரியாக நம் தோழன் கிழுமாத்தூர் மகி ஒரு பதிவு போட்டால் அது சட்டப்படி குற்றம் தான். ஆனால் முடிவில் இரண்டு வரிகள் “இப்படிப்பட்ட சாராயம் உடலுக்கு தீங்கு. ஆகவே இப்படியெல்லாம் காய்ச்சி குடிக்காதீர்கள்” என எழுதிவிட்டால் அது நீதிபோதனை பதிவாகிவிடும். பல வன்முறை சினிமாக்கள் அதைத்தான் செய்கின்றன. ஆனால் இந்த நாவல் அது போன்ற பூசிமெழுகும் வேலை எல்லாம் செய்யவில்லை. தீவிரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை. அதை வளர்க்கும் விதத்தில் மூளைச்சலவை செய்யவும் இல்லை. நடந்த சம்பவத்தை ஒரு கதைசொல்லியின் பார்வையிலிருந்து சொல்கின்றது. அப்படியும் நாவலாசிரியர் ஒரு கட்டத்தில் அப்துல்லாவை வைத்து கால் பக்கம் நீதிபோதனையும் செய்வார் நம் சோழனுக்கு. ஆகவே உளவுத்துறை அந்த கால் பக்கத்தை கிழித்து கக்கத்தில் வைத்துக் கொண்டு மேலிடத்தில் சென்று “நத்தின் சார் நத்திங்... எவ்வரிதிங் ஓக்கே சார்” என போகவேண்டியது தான்.
இந்த நாவலில் குறைகள் இல்லையா எனில்... உண்டு... ஒரு சில இருக்கத்தான் செய்கின்றது. அதல்லாம் நெக்லிஜிபிள். எழுத்தாளர் சுஜாதா சொல்வார்... ஒரு அறையின் உள்ளே நுழையும் போது சுவற்றில் ஒரு கடிகாரம் மாட்டியுள்ளதை எழுதினால் பிற்பாடு கதை நகரும் போது அந்த கடிகாரம் ஏதாவது வேலை செய்ய வேண்டும். ஏன் அதை எழுதினோம் என்பதற்காக அது மணி காட்ட வேண்டும். அல்லது கீழே விழுந்து உடையவாவது செய்யனும் என்பார். அது போல மருதையாறு பாலத்தகர்ப்பு விபத்தில் மாட்டப்போகும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் சென்னை எக்மோரில் கிளம்ப தயாராக இருக்கின்றது. திருச்சி சங்கம் ஓட்டல் உரிமையாளர் சின்னபாபு ஏ.சி கோச்சில் ஏறுகின்றார். காங்கிரஸ் மாநில தலைவர் பழனியாண்டி மற்றும் அப்போது புதிதாக ராஜீவ் அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்த ப.சிதம்ப்ரம் ஆகியோர் பெயர்கள் ஏ.சி கோச் பட்டியலில் இருக்கு, ஆனால் அவர்கள் ஏறவில்லை. பின்னர் விபத்து நடந்து முடிந்ததும் திருச்சிக்கு விமானத்தில் வந்து இறங்கிய விமானத்தில் இருந்து சிதம்பரம் அதன் பின்னர் மாதவராவ் சிந்தியா ஆகியோர் வருகின்றார்கள். ஆக சிதம்பரம் அந்த ரயிலை தவற விட்டு விட்டார் என கொள்வோம் போகட்டும். ஆனால் சங்கம் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் வைர வியாபாரி அசோக் கோபால் ஆகியோர் பற்றி ரயில் ஏறும் போது சிரத்தையாய் எழுதிய நூலாசிரியர் விபத்து நடந்ததை விளக்கி எழுதும் போது அவர்கள் மாண்டார்களா அல்லது மீண்டார்களா என்பது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்பது சின்ன குறை.
இரண்டு விஷயங்கள்....
1. கலைஞர் அடிக்கடி சொல்வார்... அய்யா பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவை பார்த்திராவிட்டால் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று. நல்லது தலைவர் கலைஞர் அவர்கள் பெரியார், அண்ணாவை பார்த்தது பல நன்மைகளை தமிழகத்துக்கு கொடுத்தது. பார்த்திராவிடில் கலைஞரும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகி யாருக்கும் பயன்படாமல் போயிருப்பார்.
2. இந்த நாவலில் சோழனின் வாக்குமூலம் ... “நான் மட்டும் பெரியவரை (அதாவது தமிழரசனை) பார்த்து இருந்தால் இந்த வர்க்கப்போராட்டத்தின் வழியே “நியாயங்களை” வழங்கியிருப்பேன்” என்பான். அதாவது நம் “சோழன்” தீவிரவாத நக்சல் இயக்கத்தின் வழி சென்றிருப்பான். ஆனால் வென்றிருப்பானா என்பது விடை தெரியா விஷயம். ஆனால் நல்லவேளை தமிழரசனை பார்க்கவில்லை. அனேகமாக அதன் காரணமாக இப்போது அதே பகுதியில் ஜனநாயக வழிப்படி மக்களை சந்தித்து வாக்குகள் பெற்று ... யார் கண்டது அந்த பகுதி எம்.எல்.ஏ கூட ஆகியிருக்கலாம்!
நூலின் ஆரம்பத்தில் மறைந்த பெரியவர் எஸ்.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு நூலாசிரியர் நன்றி தெரிவித்து ஒரு பக்கம் இருக்கின்றது. அய்யா அவர்கள் ஆண்டிமடம் ஒன்றிய பெருந்தலைவர் பின்னர் ஆண்டிமடம் சட்டமன்ர உறுப்பினர் ஆக இருந்த காலத்தில் இயக்க தோழர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் அரசியல் பொதுநீரோட்டத்தில் இணைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு பெரம்பலூர், அரியலூர் பகுதிகள் அமைதியாக இருக்க இதுவும் ஒரு காரணம் என்றே கருதுகின்றேன். அவர்கள் திமுகவோ, அதிமுகவோ, அவ்வளவு ஏன் பாமக மற்றும் விசி போன்ற சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளில் கூட இருக்கட்டும். ஆனால் அவர்கள் வீடுகளில் நிம்மதியான உறக்கம் இப்போது இருக்கின்றதே... அந்த முயற்சியை எடுத்த அய்யா எஸ். சிவசுப்ரமணியன் அவர்களுக்கு நூலை சமர்ப்பணம் செய்தமையே அருமையான செயல்!
மொத்தத்தில் ”தோழர் சோழன்” அவசியம் படிக்க வேண்டிய நாவல்! கரும்புரவியில் சோழன் ராஜபாட்டையில் வாயுவேகம், மனோவேகத்தில் பறக்கின்றான்!
- அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்
February 11, 2019
2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது? - ஒரு விரிவான பார்வை!
ஒவ்வொறு தேர்தலின் போதும் “அலை வீசுகின்றது, அலை வீசுகின்றது” என பேசுவதை பார்த்திருக்கின்றோம்! அது என்ன அலை?
ஆதரவு அலை! ஒரு குறிப்பிட்ட கட்சியின் மீது திடீரென ஒரு நல்ல அபிப்ராயம் வரும். அல்லது அந்த கட்சி வெற்றி பெற்றால் “இன்னார் தான் முதல்வர் என்றோ அல்லது இன்னார் தான் பிரதமர்”என்றோ மக்களுக்கு ஒரு எண்ணம் தானாகவே தோன்றிவிடும். அப்படி தோன்றும் போது மக்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்து விடுவார்கள். அதே நேரம் ஊடகங்கள் அதை ஹேஷ்யங்களாக மக்கள் மனதில் விதைத்து விடுவார்கள். அப்படி விதைக்கும் போது அது ஆரம்பத்தில் கொஞ்சமாக ஆரம்பித்து தேர்தல் நெருங்க நெருங்க பூதாகரமாகி அது வாக்கு போடும் போது பிரதிபலித்து விடும்.
சென்ற நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அப்படித்தான் மோடி அலை மிகச்சிறப்பாக ஊடகங்கள், பாஜகவின் சமூகவலைத்தள பொய்ப்பிரச்சாரங்கள் வழியாக அருமையாக பரவத்தொடங்கியது. அதன் பின்னர் பேசியவர்கள் எல்லோரும் கத்திப்பாரா பாலத்தின் மீது தினம் தினம் கடந்து போகின்றவர்கள் கூட அந்த பாலத்தின் கழுகுப்பார்வை வடிவம் தெரியாத காரணத்தால் அதைக்கூட குஜராத் பாலம் என்றே சிலாகித்து அந்த பொய்யை வசதியாக பரப்பினர். அதே போல ஸ்பெயின் நாட்டு சாலைகள் கூட குஜராத் சாலைகள் ஆகின. குஜராத்தில் தேனாறும், பாலாறும் ஓடுவதாகவும் மோடி பிரதமர் ஆகிவிட்டால் அந்த பாலாறு, தேனாறு எல்லாம் மடை மாற்றம் ஆகி நாட்டின் எல்லா மாநிலத்துக்கும் வந்து விடும் என நம்பினர். தவிர இந்தியாவில் எப்போதுமில்லா முறையாக “பிரதமர் வேட்பாளர்” என பகிரங்கமாக பாஜகவால் மோடி அறிவிக்கப்பட்டார். அது இந்தியாவில் அதுவரை இல்லாத புதிய பிரச்சார யுக்தியாக இருந்தது. நேரு காலம் முதல் மொரார்ஜி, இந்திரா என எல்லோரும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாமல் தேர்தலுக்கு பின்னர் தான் அந்த கட்சியின் தேர்வான எம்.பிக்கள் வழியாக பலத்த பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் பிரதமர்கள் ஆனார்கள். நேருவுக்கே அப்போது பட்டேல் போட்டியாக இருந்தார். இந்திராவுக்கு மொரார்ஜி போட்டியாக இருந்து பின்னர் காமராஜரால் இந்திரா பிரதமர் ஆனார். வி.பி சிங், குஜ்ரால், தேவகௌடா, சந்திரசேகர் என எல்லோருமே “பிரதமர் வேட்பாளராக” இல்லாமல் தேர்தலுக்கு பின்னர் தான் பலத்த பஞ்சாயத்துகளுக்கு பின்னர் தான் பிரதமர் ஆனார்கள். 2004ல் சோனியா தான் பிரதமர் வேட்பாளர் என சூசகமாக ஹேஷ்யங்கள் பரப்பப்பட்டு ஆனால் தேர்தல் முடிந்ததும் திடீரென எந்த காரணத்தினாலோ மன்மோகன் சிங் பிரதமர் ஆனார். 1991ல்நரசிம்மராவ் கூட ராஜீவ் மரணத்துக்கு பின்னர் பல பஞ்சாயத்துகளுக்கு பின்னர் தான் பிரதமர் ஆனார். ஆனால் இந்திய சரித்திரத்தில் மோடி தான் பகிரங்கமாக “பிரதமர் வேட்பாளர்” என அறிவிக்கப்பட்ட “சம்பவம்” இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக நடந்தது. காரணம் இந்திய அரசிலமைப்பில் மக்கள் நேரிடையாக பிரதமரை தேஎர்வு செய்யும் முறையே கிடையாத போது “பிரதமர் வேட்பாளர்” என்பது எங்கிருந்து வரும். தேர்வாகிய எம்.பிக்கள் தான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்கிற நிலையில் “பிரதமர் வேட்பாளர்” என சொல்வதே நகைமுரண் தான்.
அத்தனை ஏன்? தமிழகத்தில் கூட அண்ணா மறைவுக்கு பின்னர் கூட நாவலர் தான் முதலில் “தற்காலிக முதல்வராக” இருந்து பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து தான் கலைஞரை முதல்வராக்கினர். எம்.ஜி.ஆருக்கு அந்த பிரச்சனை இல்லை. ஏனனில் அதிமுக என்பது அவரது தனிப்பட்ட கம்பனியாக இருந்ததால் வென்றால் அவர் தான் முதல்வர் என மக்களுக்கு தெரிந்தது. ஆனாலும் அவர் முதல்வர் வேட்பாளர் ஆக அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்கு பின்னர் தான் அவர் முதல்வராக ஆனார். அவர் மறைவுக்கு பின்னர் ஜானகி முதல்வரானதும் அப்படித்தான். ஆனால் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக முதன் முதலாக பாஜக மோடியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது. காரணம் பாஜக மீது மக்களுக்கு அத்தனை பெரிய கரிஷ்மா கிடையாது. பாஜக என்னும் கட்சியை அவர்கள் முன்னிருந்தி மட்டும் தேர்தலை சந்தித்து இருந்தால் இந்த அளவு க்ளீன் ஸ்வீப் அடித்திருக்காது. ஏனனில் பாஜக என்பது மக்களைப் பொருத்தவரை “மதவாதக்கட்சி” என்னும் பயம் இருந்தது. அதன் காரணமாகத்தான் ஒரு பொம்மையை அவர்கள் செய்தார்கள். அந்த பொம்மைக்கு கரிஷ்மாவை பொய்யாக கட்டமைத்தார்கள். அதன் காரணமாகத்தான் கத்திப்பாரா பாலம் குஜராத் பாலமாகியது. ஸ்பெயின் சாலை குஜராத் சாலை ஆகியது. மோடி என்னும் பொம்மை “தேவதூதன்” ஆகிப்போனார். மக்களும் இந்த புதிய முறை “பிரதமர் வேட்பாளர்” என்பது இந்திய அரசிலமைப்புகு எதிரான சொல் என்பதை புரிந்து கொள்ள அவர்களுக்கு தேவையான அவகாசம் இல்லாமல் போனது.
ஆனால் மோடிக்கு கூட குஜராத் கலவரம் என்னும் மைனஸ் பாயிண்ட் இருந்தது. ஆனால் அந்த மைனஸ் பாயிண்ட் என்னும் கோட்டை அழிக்காமல் அழிக்கவும் முடியாது என்பது தெரிந்ததால் அதை விட கொஞ்சம் பெரிய கோடு போட்டார்கள். அங்கும் அவர்கள் பயன்படுத்தியது பொய்ப்பரப்புரை தான். ஸ்பெக்ட்ரம் என்னும் பெரிய கோட்டை போட்டு குஜராத் கலவரம் என்னும் கோட்டை சிறியதாக்கினர். காங்கிரஸ் அந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டது என்பதே உண்மை. காங்கிரஸ் நினைத்து இருப்பின் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரனை போதும் உச்சநீதிமன்ற நேரிடை கண்காணிப்பில் சி பி ஐ ஸ்பெஷல் கோர்ட் தேவையில்லை என விஷயத்தை முடித்து இருந்திருக்கலாம். ஆனால் சிதம்பரம் போன்றவர்களின் துர்போதனை காங்கிரஸ் தலைமையை குழப்பி விட்டது தான் காங்கிரஸ் ஒரு எதிர்கட்சியாகக்கூட வராமல் போனதுக்கு காரணம். வினை விதைத்த சிதம்பரம் கூட வெற்றி பெற முடியாமல் போனமைக்கு அது தான் காரணம். நிற்க.... ஆக பாஜக மோடி என்னும் பொம்மைக்கு சீவி சிங்காரித்து ஒரு போலி கரிஷ்மா உண்டாக்கி வெற்றியை சாதகமாக்கிக்கொண்டது.
2014 மே மாதம் நடந்த தேர்தலுக்கு 6 மாதம் முன்பாகவே அதாவது 2013 நவம்பர், டிசம்பரிலேயே பாஜக மோடியை தயாரிக்க ஆரம்பித்து விட்டது. தேர்தல் சூசகங்கள் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என ஊடகங்களை பேசவைத்து விட்டது. 2014 ஜனவரி, பிப்ரவரியில் அத்வானியை எல்லாம் சமாளித்து அவரை போட்டியில் இருந்து விலக்கி விட்டது. ஆர்.எஸ்.எஸ் நேரிடையாக பஞ்சாயத்தில் இறங்கியது. பாபர் மசூதி இடிப்பு வழக்கை காட்டி மிரட்டியது ஆர்.எஸ்.எஸ். கண்டிப்பாக பாஜக தான் வெல்லும். மோடி பிரதமர் ஆகட்டும். வந்ததும் பாபர் மசூதி வழக்கை முடித்து விட்டு அடுத்த 2 ஆண்டில் வரும் ஜனாதிபதி தேர்வில் அத்வானியை ஜனாதிபதி ஆக்கிடலாம் என டீலிங் போட்டது. ஆனால் அடுத்த 2 ஆண்டில் அத்வானியை அந்த வழக்கில் இருந்து காப்பாற்றவில்லை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. இழுத்தடித்து ஜனாதிபதி ஆக்காமல் விட்டது. காரணம் ஆர்.எஸ்.எஸை பொருத்தவரை அவர்களுக்கு தனிமனித கரிஷ்மாவெல்லாம் முக்கியமில்லை. ஆட்சித்தலைமை என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலையாட்டி பொம்மையாக மட்டும் இருந்து விட்டால் போதும் என நினைக்கும் சித்தாந்தம் கொண்ட அமைப்பு. ஆகவே அத்வானி இப்போதும் கூட திரிசங்கு நிலையில் இருகின்றார்.
ஆக 2014 மே மாத தேர்தலுக்கு 6 மாதம் முன்பாகவே ஆர்.எஸ்.எஸ் அழகாய் காய்களை நகர்த்தி 2014 மார்ச் மாதத்தில் ”மோடியை” முறைப்படி அறிவித்து ஆட்சியை பிடித்து விட்டது. இந்த கட்டுரையின் இரண்டாம் பத்தியின் ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா “ஆதரவு அலை”. அதைத்தான் விரிவாகப்பார்த்தோம்.
இதே போல இன்னும் ஒரு அலை இருக்கின்றது. அது .....
“எதிர்ப்பு அலை”.... எமர்ஜென்சி முடிந்த பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திராவுக்கு எதிராக அகில இந்திய கட்சிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு இந்திராவை எதிர்த்ததே .... அது எதிர்கட்சிகள் மீதான ஆதரவு அலை அல்ல... இந்திரா மீதான எதிர்ப்பு அலை. அதே போல 1996ல் ஜெயாவுக்கு எதிராக தமிழகத்தில் நடந்ததே அது ஜெயா மீதான எதிர்ப்பு அலை தான். வளர்ப்பு மகன் திருமணத்தில் ஆரம்பித்து இமாலய ஊழல், சர்வாதிகாரத்தனம், ஊடகங்கள் மீதான அடக்குமுறை என ஜெயாவுக்கு எதிராக எழுந்த “எதிர்ப்பு அலை” அவரை வீழ்த்தியது. இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன “எதிர்ப்பு அலை”க்கு. மொரார்ஜியின் ஆட்சிக்கு பின்னர் மீண்டும் இந்திரா வெற்றி பெற்றதும் எதிர்கட்சிகள் மீதான “ஒற்றுமையின்மை” என்னும் எதிர்ப்பும் “நிலையான ஆட்சி கொடுக்க அவர்களால் இயலவில்லை” என்னும் எதிர்ப்பு அலையும் தான் மீண்டும் இந்திரா வெற்றிபெற காரணம்.
ஆதரவு அலையும் பார்த்து விட்டோம், எதிர்ப்பு அலையும் பார்த்து விட்டோம். அடுத்த அலை என்பது....
“அனுதாப அலை” - இது கொஞ்சம் மோசமான ரகம்! இந்திராகாந்தியின் கொடூர கொலைக்கு பின்னர் மக்கள் ஓவென அழுது முடித்திருந்த நேரம். ஆனால் உடனே ராஜீவ் பிரதமர் ஆகிவிட்டாரெனினும் உடனே அந்த அனுதாப அலையை பயன்படுத்திக்கொள்ள நினைத்து ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்தார். அவர் நினைத்தது வீண்போகவில்லை. காங்கிரஸ் வரலாற்றில் இதுவரை இல்லா அளவுக்கு 400க்கும் அதிகமான இடங்களில் ராஜீவ் வெற்றி பெற்றார். அதே நேரம் மாநிலங்களவையிலும் பலம் இருந்தது. தான் நினைத்த எல்லாம் செய்தார் ராஜீவ். கட்சித்தாவல் தடை சட்டம் முதல் பஞ்சாயத்து ராஜ் வரை அவருக்கு சுலபமாக கைகூடியது.
அதே போல எம்.ஜி.ஆர் நோயில் படுத்த போதும் அதே அனுதாப அலை என்பது மீண்டும் அதிமுகவை 3 வது முறையாக ஆட்சியில் அமர்த்தியது. ஆனால் அந்த தேர்தலில் எம் ஜி ஆர் உடல் நலமுடன் இருந்திருந்தால் நிலை வேறாக இருந்திருக்கும். ஆனால் அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1987ல் நடந்த தமிழக உள்ளாட்சித்தேர்தலில் எம்.ஜி.ஆர் இருக்கும் போதே திமுக அபரிமிதமான வெற்றி பெற்றது. ஏனனில் அப்போது எம் ஜி ஆர் மீதான அனுதாபம் முடிந்து விட்ட நேரம் அது.
அதே போல ராஜீவ் மரணத்தின் பின்னர் ஜெயா தமிழகத்தில் வெற்றி பெற்றதும் அதே அனுதாப அலை தான். நரசிம்மராவ் பிரதமர் ஆனதும் அதே ராஜீவ் மரணத்தால் ஏற்ப்பட்ட அனுதாப அலை தான்! ஆக இந்த அனுதாப அலை தான் கொஞ்சம் ஆபத்தான விஷயம். நல்ல கட்சியைகூட ஆட்சியில் அமரவிடாமல் செய்து விடும். கேடுகெட்ட ஆட்சியாளர்களைக்கூட மீண்டும் ஆட்சியில் அமர்த்தி விடும். எனவே இது தான் ஆபத்தான அலை.
அடுத்து ஒரு அலை இருக்கின்றது. “பண அலை” அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அந்த “பண அலை” எனும் அலையை பெத்த அம்மாவே புரட்சித்தலைவி அம்மா தான்! 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுமைக்கும் வீசிய மோடி அலை என்பது தமிழகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டமைக்கு பாஜக தமிழகத்தில் இல்லை என்பது ஒரு காரணம். அடுத்து மிக அழகாக ஜெயா அரசு சரியான திட்டமிடலுடன் 39 தொகுதிகளுக்கும் தேர்தலுக்கு முதல் நாள் அரசு இயந்திரத்தை கையில் வைத்துக் கொண்டு ஓட்டுக்கு 200 ரூபாய் என கொடுத்தது. 37 இடத்தில் வெற்றது. இது ஜெயாவுக்கு சரியான யுக்தியாகப்பட்டதால் 2016 சட்டமன்ற தேர்தலில் கூட அதே “பண அலையை”கொண்டு வென்றார். இந்த அலையை வெல்வது சுலபம். ஆனால் ஆட்சி கிடைக்கும். தேர்தல் ஜனநாயகம் என்பது செத்துப்போய்விடும். ஜெயா 200 ரூபாய் கொடுக்கின்றாரா? அதை விட நான் அதிகமாக கொடுக்கின்றேன் என ஜெயாவுக்கு சமமான பலமுடைய கட்சி கொடுத்தால் அது அவர்களுக்கு சாதகமாக முடியும். ஆனால் அதற்காக பாஜக அந்த பணத்தை தருகின்றேன் என வந்தால் அது நடக்காது. அதிமுகவுக்கு சமபலமான ஒரு கட்சி அந்த ஆயுதத்தை எடுத்தால் தான் சாத்தியம் ஆகும். ஆனால் இந்த பண அலை என்பது நாட்டை அழிவுப்பாதைக்கு வெகுசீக்கிரம் அழைத்து சென்றுவிடும். சென்ற தேர்தலில் பணம் கொடுத்து பல்லாயிரம் கோடிகள் செலவழித்த ஜெயா அம்மையார் ஆட்சி நடத்துவரை விட போட்ட முதலீட்டை அறுவடை செய்வதில் தான் முனைப்பாக இருந்தார். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என நாடு நாசமாகப்போனது தான் மிச்சம்.
இப்போது ஆதரவு அலை, எதிர்ப்பு அலை, அனுதாப அலை, பண அலை என நான்கையும் பார்த்து விட்டோமா? இப்போது இந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன அலை வீசப்போகின்றது அல்லது வீச ஆரம்பித்துள்ளது?
சர்வ நிச்சயமாக “மோடி மீதான எதிர்ப்பு அலை” மட்டுமே வீசத்தொடங்கி விட்டது. அதை எப்படி கண்டு பிடிப்பது? மிகவும் சுலபம்! கடந்த நான்கரை ஆண்டுகளாக மோடி அவர்கள் உடுத்திய கோமாளி உடைகள், பத்து லட்சம் கோட்டுகள், தாய்லாந்து காலான்கள் உணவு , உலகம் முழுவதும் சுற்றி சுற்றி சில ஆயிரம் கோடிகள் ஊதாரித்தனமாக செலவழித்தமைகள், மோடி ஒரு பொய்யர் ஆக இருத்தல், இவைகள் மக்களை கடுமையாக எரிச்சல் அடைய வைத்துள்ளன. நீட் தேர்வு, பணமதிப்பிழப்பு, உதய் மின் திட்டம், மீத்தேன் போன்ற விஷயங்கள் சரியாக தங்கள் வாக்கை செலுத்தும் மிக அடித்தட்டு மக்களை சென்றடைந்ததை விட “நாம் ஏழ்மையில் இருக்கும் போது பகட்டான உடை, உணவு, சிகை அலங்காரம், கோமாளி தொப்பிகள், உலகம் முழுமையும் சுற்றியவை ஆகியவைகள் ஏழைகளை பொறாமைப்பட வைக்கும் என்பது தான் உண்மை! இது அதீத “மோடி எதிர்ப்பு அலை”க்கான முதல் காரணமாக இருக்கும். அடுத்து தான் ஆட்சி நிர்வாகமின்மை, நீட், மீத்தேன், பணமதிப்பிழப்பு, வெற்று அறிவிப்புகள் ஆகியவை தாக்கும். அதற்கடுத்ததாக ரஃபேல் ஊழல் போன்ற ஊழல்கள் அடுத்த இடத்தை பிடிக்கும். ஆனால் காங்கிரஸ், திமுக, மம்தா, நாயுடு, லாலூ, மாயாவதி, அகிலேஷ் எல்லோரும் செய்ய வேண்டிய முக்கிய பிரச்சாரங்கள் பணமதிப்பிழப்பு, ரஃபேல் ஊழல், ஆட்சி செய்யத்தெரியாதமை, மதக்கலவரங்கள் எல்லாவற்றையும் மிகக்கடுமையாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இப்போது மோடி எதிர்ப்பு அலை வீசத்தொடங்கியதை இவர்கள் ஊதிப்பெரிதாக்க வேண்டிய முக்கிய பணி இப்போது எதிர்கட்சிகள் முன்பாக நிற்கின்றது. சரி, மோடி எதிர்ப்பு அலை வீசத்தொடங்கி விட்டதா என நீங்கள் கேட்கலாம்... ஆம் என்றே சொல்வேன்.
GoBackModi, GoBackSadistModi போன்ற சமூக ஊடக எதிர்ப்புகள் முதலில் தமிழகத்தில் ஆரம்பித்து இப்போது இன்று இந்த மூன்றாம் முறை மோடியின் தமிழக விஜயத்தின் போது உலகலாவிய அளவில் தெரிந்து விட்டது. தமிழகத்தில் பற்ற வைக்கப்பட்ட அந்த மோடி எதிர்ப்பு என்னும் தீ ... இங்கிருந்து கொல்கத்தா சென்றது. அங்கே பற்றி பின்னர் அஸ்ஸாமில் தொடர்ந்து, கேரளாவில் அதிர்ந்து, ஆந்திரா குண்டூரில் நாறி விட்டது. இனி இது தொடரும் என்றே நினைக்கின்றேன். உ.பிக்கும், பீகாருக்கும் போகும் போதும் இதே நிலை வரும் போது அது அகில இந்திய அளவில் மோடிக்கு பெரிய பின்னடைவை ஏற்ப்படுத்தும்.
அதே போல தமிழகத்தின் புகழ்வாய்ந்த தலைவராக விளங்கும் ஸ்டாலின் போன்றவ்ர்கள் “மோடி ஒரு பொய்யர், மோடி ஒரு சேடிஸ்ட்” என மிகக்கடுமையாக தாக்கி பேசுவது அடிமட்ட வாக்காளனை அழகாக சென்று அடைந்து விட்டன. அதே போல ராகுல் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சுகள், மோடி ஒரு ரஃபேல் திருடன் என விமர்சித்தது என்பது 2014 ஆரம்பத்தில் வைத்திருந்த மோடி ஒரு தேவதூதன் என்னும் பிம்பத்தை அடித்து நொறுக்கி விட்டன.
சென்ற 2014 தேர்தலில் மோடி தான் பிரதமர் என பாஜக பேசும் போது எதிர்கட்சிகள் “இல்லை அவர் கிடையாது” என அழுத்தமாக முழங்கவில்லை. தவிர எதிர்கட்சிகளிடம் இப்போது இருக்கும் ஒற்றுமை அப்போது கண்டிப்பாக இல்லை. காங்கிரசும், திமுகவும் கூட இணைந்து தேர்தலை சந்திக்கவில்லை. காரணம் அப்போது பாஜக முன்வைத்த ஸ்பெக்ட்ரம் விஷயம் பற்றி காங்கிரஸ், திமுக ஆகியவை கடுமையாக எதிர்த்து வாதாடவும் இல்லை. ஏனனில் யாருக்கும் அந்த விஷயத்தில் என்ன நடக்கின்றது என்பதே புரியவில்லை. ஆனால் இப்போது கதையே மாறிவிட்டது. ஓ.பி ஷைனியின் அருமையான தீர்ப்பும், அதன் பின்னர் ஆ.ராசா அவர்கள் எழுதிய புத்தகமும் (அதற்கு யாரும் இன்னும் எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை) நிலைமையை அடியோடு மாற்றிவிட்டது.
மேலும், இப்போது பாஜகவில் கூட மோடி தான் பிரதமர் என சொல்வதை விட அமீத்ஷா போன்றவர்களே கூட கொல்கத்தாவில் பேசும் போது “அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ராகுல் திங்கள் பிரதமர், நாயுடு செவ்வாய் பிரதமர், மம்தா புதன் பிரதமர், மாயாவதி வியாழன், அகிலேஷ் வெள்ளி, ஸ்டாலின் சனிக்கிழமை பிரதமராக இருப்பார்கள்” என சொன்னதை நன்கு கவனிக்க வேண்டும். ஆக அமீத்ஷாவே எதிர்கட்சிகள் வெற்றி பெற்றால்..... என்ற நிலைக்கு வந்து விட்டார் என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜகவில் அத்வானி மோடிக்கு முதல் எதிரியாக இருந்து வரும் நிலை என்பது நன்கு வளர்ந்து நிதின்கட்கரி, அருண்ஜேட்லி, யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா என அபாரமாக எதிரிகள் எண்ணிக்கை கூடி வருகின்றது மோடிக்கு என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
அதே போல அமீத்ஷா பேசுவது போலவே தமிழக பாஜக தலைவர்களும் ராகுலுக்கு ஆளத்தெரியாது என்று தான் பேசி வருகின்றனர். மோடி பிரதமர் என்னும் பேச்சு அவர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இப்போது ராகுல் ஆளத்தெரியாது, ஸ்டாலின் பிரதமர் ஆவாரா? அகிலேஷ் ஆவாரா, நாயுடு ஆவாரா என்னும் நிலைக்கு அவர்கள் மனோநிலை வந்து விட்டது. இதல்லாம் ஏன்? மோடி எதிர்ப்பு அலை வீச ஆரம்பித்த அறிகுறிகள் தான் இவைகள்!
இனி எதிர்கட்சிகள் செய்ய வேண்டியவைகள், அந்த அலையை கடுமையாக்க வேண்டும். ஊடகங்களை மோடியின் பிடியில் இருந்து விடுவித்து வெளியே கொண்டு வர வேண்டும். கூட்டணி பங்கீடுகளை உரசல் இல்லாமல் முடிக்க வேண்டும். மிக முக்கியமாக வேட்பாளர் தேர்வுகள் அருமையாக செய்ய வேண்டும். அதிகாரிகளிடம் லாபி செய்ய வேண்டும். முதலில் அரசு அதிகாரிகளிடம் “நாங்கள் தான் ஆட்சிக்கு வரப்போகின்றோம். பாஜக ஆட்சிக்கு வ்ர இயலாது” என்பதை லாபி செய்து அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டும். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் மோடி எதிர்ப்பு அலை இன்னும் வேகமாக வீச ஆரம்பித்ததும் அதை விசிறி விட வேண்டும்.
இதல்லாம் நடந்தால் நிச்சயம் மோடி வீட்டுக்கு போவார். பாஜக ஆட்சி இழக்கும்!
ஆக நான் சொன்ன நான்கு அலைகளில் இப்போதைக்கு இருக்கும் ஒரு அலை “மோடி எதிர்ப்பு அலை” தான். பண அலை வீசுமா வீசாதா என்பதை இப்போதைக்கு சொல்ல இயலாது. அதை தேர்தல் முதல் நாள் தான் சொல்ல முடியும். அடுத்த அலையான அனுதாப அலை இப்போதைக்கு யாருக்கும் இல்லை. ஆனால் மோடி அதிகமாக பிரச்சாரம் செய்யாமல் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இதே போல வித வித குல்லாய்கள் அணிந்து கொண்டு முன்னாள் பிரதமர் டெல்லி வீதிகளில் சுதந்திர தின விழா, குடியரசு விழா என்றும் வெளிநாட்டு தலைவர்கள் டெல்லி வரும் போது முன்னாள் பிரதமர் என்னும் நிலையில் இவரையும் வந்து பார்ப்பார்கள் என்னும் அந்தஸ்துடன் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழலாம். காந்தியை கொன்ற நாடு இது! ஜாக்கிரதை! இது ஒரு எச்சரிக்கை மணி மட்டுமே!
தேர்தல் ஜுரம் ஆரம்பித்து விட்டது. அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்கின்றது என்பதை அந்தந்த சூழலை கவனித்து பகிர்ந்து கொள்வோம்! ஆனால் இப்போதைக்கு இது தான் நிலைமை! அருமையான ஆட்சி அமையட்டும் இந்தியாவுக்கு! இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
- நன்றி! வணக்கம்!
அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்
April 25, 2018
“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு!
“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு!
துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நேர்காணல் என்னும் விதமாக தமிழகத்தின் நம் முன்னாள் பள்ளிக்கல்வி, நூலக மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த திரு. தங்கம் தென்னரசு அவர்களிடம் துக்ளர் வாசகர்கள் 5 பேரைக்கொண்டு ஒரு நேர்காணல் நடத்தி கடந்த இரண்டு இதழ்களாக வெளியிட்டது. அந்த இரண்டு இதழ்களின் ஒட்டு மொத்த தொகுப்பே இந்த பதிவு! கேட்கப்பட்ட அருமையான, சிக்கலான(துக்ளக் வாசகர்கள் அல்லவா... அதனால் சிக்கல்) கேள்விகளுக்கு கூட நம் முன்னாள் அமைச்சரும் இப்போதைய திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான திரு தங்கம் தென்னரசு B.E., M.L.A அவர்கள் அனாயசமாக கேள்விகளை எதிர்கொண்ட விதமும், பதில் சொன்ன விதமும் எக்ஸலண்ட்! இதோ அதை படியுங்கள்! - இப்படிக்கு அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்.
******************** இனி துக்ளக் இதழை படிப்போம்! (நன்றி: துக்ளக்)
வி.வி.ஐ.பி மீட் 14: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர், தற்போது திருச்சுழி தொகுதியின் எம்.எல்.ஏ ஆகவும் கட்சியில் மாவட்ட கழக செயலாளர் ஆகவும் இருந்து வருகின்றார். அவரை துக்ளக் வாசகர்கள் 5 பேர் சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் முக்கிய பகுதிகள் இங்கே! (இந்த வார வாசகர்கள் : டி. கீதா கிருஷ்ணன், தனியார் துறை, சென்னை, பத்மாரவி, இல்லத்தரசி, சென்னை, ரமேஷ் சீனிவாசன், மனித வள ஆலோசகர், சென்னை, பா.சுதா, பேராசிரியை, சேலம், பி. சுவாமிநாதன், தனியார் துறை, சென்னை)
சுவாமிநாதன்: அரசியலுக்கு நீங்கள் வந்தது எப்படி?
தங்கம் தென்னரசு: நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. நான் எந்த அரசியல் ஆர்வமும் இல்லாமல் மெக்கானிக்கல் இஞினியரிங் படித்து விட்டு ஸ்பிக் உர நிறுவனத்தில் ஏறத்தாழ பத்து வருடங்கள் பொறியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் 1996ல் தலைவர் கலைஞர் அவர்கள் அமைச்சரவையில் என்னுடைய தந்தை தங்கபாண்டியன் அமைச்சராக இருந்தார். தென் மாவட்டங்களில் ஏற்ப்பட்ட ஜாதிக்கலவரத்தை தீர்க்க என் தந்தை சென்றார். அந்த கலவரத்தின் போது ஏற்ப்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்ப்பட்டு ராஜபாளையத்தில் இறந்து விட்டார். அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தலைவர் கலைஞர் என்னை வேட்பாளராக அறிவித்தார். 1998ம் ஆண்டு அருப்புக்கோட்டையில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதன் முதலாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். 1977ல் இந்த தொகுதியில் தான் எம்.ஜி ஆர் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வர் ஆனார். அருப்புக்கோட்டைக்கு அருகில் இருக்கும் ஊர் திருச்சுழி. ரமண மகரிஷி பிறந்த ஊர் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அருப்புக்கோட்டை தொகுதியை பிரித்து திருச்சுழி என்னும் தொகுதி உருவாக்கப்பட்டது. 2001 தேர்தலில் அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். 2006ல் மீண்டும் வெற்றி பெற்றேன். அப்போது கலைஞரின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்பொருள் துறை அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றேன்.
பத்மாரவி: தற்போதைய ஆட்சி முறையில் நீட் தேர்வு கொண்டு வந்ததை பற்றி உங்கள் கருத்து என்ன?
தங்கம் தென்னரசு: நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. மேலெழுந்த வாரியாக எல்லோருக்கும் ஒரே தேர்வு, இதில் என்ன தவறு என்று கேட்கின்றார்கள். ஆனால் நம்முடைய அரசு பள்ளியில் படித்து விட்டு வரும் மாணவர்களின் கல்வி முறையும், ஐ பி எஸ் ஈ கல்வி முறையும் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். இப்படி இரு வேறு பாடத்திட்டத்தின் கீழ் படிக்க்கும் மாணவர்களை திடீரென்று ஒரே தேர்வின் கீழ் கொண்டு வருவது முறையாகவும் சரியாகவும் இருக்காது.
பத்மாரவி: மற்ற துறைகளுக்கும் இப்படிப்பட்ட நுழைவு தேர்வு முறை இருக்கின்றதே. மருத்துவம் என்பது மக்களின் உடல் மற்றும் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தேர்வு முறை கடினமாக இருப்பது சரிதானே?
தங்கம்தென்னரசு : நீங்களே உடல்நிலை சார்ந்த விஷயம் என்று கூறுகின்றீர்கள். இந்த நீட் தேர்வு முறையால் ஆரம்பத்தில் இருந்தே சி பி எஸ் ஈ கல்வி முறையில் படித்த 15 சதவிகித வெளி மாநில மாணவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெறுகின்றார்கள். வரும் காலங்களில் இந்த மாநிலத்திலேயே அரசு மருத்துவ மணையிலேயே வேலையும் செய்வார்கள். எதிர்காலத்தில் இவர்களிடம் மருத்துவம் பார்க்கும் கிராமப்புற நோயாளிகள் மொழி தெரியாமல் எப்படி அவதிப்படுவார்கள் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மருத்துவராலும் நோயாளியின் உடல்நிலை பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ள முடியாது. இப்படி அடிப்படையில் மொழிப்பிரச்சனை என்பதே பெரிதாக இருக்கும். மீதி 85 சதவிகித தமிழக மாணவர்களில் எவ்வளவு கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
நீட் தேர்வில் வெற்றி பெற தனியார் கோச்சிங் வகுப்புகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளுக்கு குறைந்த பட்சம் 2 முதல் 3 லட்சம் வரை கேட்கின்றார்கள். இதில் பணம் செலுத்தி படிக்கக்கூடிய பொருளாதார நிலையில் இருப்பவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. நம்முடைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசே நீட் பயிற்சி கொடுக்கும் என சொல்லி வருகின்றார். ஆனால் இன்று வரையிலும் எதுவுமே சரியாக இயங்கவில்லை. இப்போது +2 பொதுத்தேர்வும் நடந்து வருகின்றது. இதற்கு பிறகு பயிற்சி வகுப்புகள் தொடங்கினாலும் ஏப்ரல் மாதம் மட்டுமே அந்த மாணவர்கள் வகுப்புகளுக்கு வர முடியும். ஒரே மாத பயிற்சி எப்படி நீட் தேர்வை எதிர்கொள்ள போதுமானதாக இருக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பயிற்சி கொடுப்பதற்கு ஆசிரியர்கள் உரிய வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றார்களா? இந்த கேள்விகள் எதற்குமே இன்று வரை பதில் இல்லை. வெறும் அறிவிப்புகள் மட்டுமே போதுமா? பொதுவாக சம அளவு பலம் உள்ளவர்களை போட்டியில் மோதவிடுவது தானே நியாயம்? + 2 கேள்விகளை ஆறாம் வகுப்பு மாணவனிடம கேட்டு அவனை முன்னேற்றுகிறேன் என சொன்னால் அது எப்படி சரியாக இருக்கும்?
ரமேஷ்: சமச்சீர் கல்வி முறை வந்த பிறகு நிறைய மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுகின்றார்கள். ஆனால் நீட் தேர்வு எழுதும் போது கடினமாக இருக்கின்றது என்று சொல்லும் போது நமது கல்வித்திட்டத்தின் தரம் குறைந்து இருப்பதை காட்டுகின்றதா?
தங்கம் தென்னரசு: உச்சநீதிமன்றமே சமச்சீர் கல்வித்திட்டத்தில் எந்த இடத்திலும் தரம் குறையவில்லை என்று என்.சி.ஆர்.டி குழுவினால் ஆய்வு செய்து தீர்ப்பளித்துள்ளது. முன்பு பாடத்திட்டத்தில் இருக்கும் பதிலை மனப்பாடம் செய்து ஒப்பித்தால் மதிப்பெண் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் சமச்சீர் கல்வி முறையில் கேட்கப்படும் கேள்விகள் இருக்கும் பாடத்திட்டத்தில் அந்த மாணவன் என்ன புரிந்து கொண்டான் என்பதை மதிப்பீடு செய்வதாய் இருக்கின்றது. பாடங்களை முழுவ்துமாக சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே மாணவனால் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும். இது தான் சமச்சீர் கல்வி முறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய மாற்றம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டம் தவறானது என்று கருத்து பரப்பப்பட்டதோடு அதன் உண்மையான நோக்கம் நிறைவேற விடாமல் தடுக்கப்பட்டது என்பதே உண்மை.
சுதா: கிராமப்புரங்களில் பெரும்பாலும் அரசு பள்ளிகள் மட்டுமே இருக்கும். அந்த பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை அணைவரும் தேர்ச்சி அடைகின்றார்கள். இப்படி 8ம் வகுப்பு வரை அந்த மாணவனின் உண்மையான தகுதியை மதிப்பீடு செய்யாமல் இருந்தால் அந்த மாணவனால் +2 முடிந்தவுடன் எப்படி மற்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்?
தங்கம் தென்னரசு: இந்த பிரச்சனையை தீர்க்கத்தான், தொடக்கக்கல்வியில் செயல்வழி கல்வி முறை (Activity based learning) என்ர ஒன்றை கொண்டு வந்தோம். இந்த செயல்வழி கல்வி முறையில் அந்தந்த வயதிற்கான திறனை மாணவன் பெற்றிருந்தால் மட்டுமே மாணவன் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும். மேலும் குறைந்த மாணவர்களை அந்த வகுப்பு ஆசிரியர்கள் கண்டுபிடித்து அவர்களுடைய திறனை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்காக பிரதமர் விருதே நம் மாநிலத்துக்கு கிடைத்தது. இதனுடையை தொடர்ச்சியாக 6லிருந்து 8ம் வகுப்பு வரை (Active learning methodology) என்ற அந்த மாணவனின் திறனை கண்டறிந்து ஆசிரியர்கள் அவனை தயார் படுத்த வேண்டும் என்று கொண்டு வந்தோம். இந்த கல்வி முறையில் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது. வெறும் தேர்வுகள் வைத்து மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதை விட இது போன்ற நடைமுறை செயல் தேர்வுகள் மூலம் அவர்களின் திறனை எடைபோட வேண்டும். 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் மட்டுமே ஒரு மாணவன் திறமையானவன் என்றும் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தால் அந்த மாணவனுக்கு திறன் இல்லை என்று சொல்ல வேண்டுமா? மூன்றில் ஒரு பங்காவது மதிப்பெண் பெற்றால் சிறிதளவுக்கு புரிதல் இருக்கின்றது என்ற எண்ணத்தில் தான் 35 மதிப்பெண் பெற்றால் வெற்றி என்று வைத்துள்ளோம். இந்த புதிய கல்வித்திட்டத்தில் ஆசிரியர்கள், கொஞ்சம் சிரமப்படுவதாக இருந்தால் கூட மக்களின் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அமல் படுத்தினோம். நிறைய அரசுப்பள்ளிகள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட ஆர்வத்தினால் நல்ல முறையில் சாதனை புரிந்து வருகின்றனர்.
ரமேஷ்: சென்னையை பொறுத்தவரை அண்ணா நூற்றாண்டு நூலகம் மிகப்பெரிய அடையாளமாக மாறிவிட்டது. இந்த நூலகம் அமைந்ததில் உங்கள் பங்கு மிகப்பெரியது. இந்த நூலகம் அமைந்தது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் ஏதாவது இருக்கின்றதா?
தங்கம் தென்னரசு: மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த நூலகத்தை கழக ஆட்சிக்காலத்தில் அமைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். இன்றும் 1000 நபர்களுக்கு குறையாமல் அங்கு வருகின்றார்கள். பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், குழந்தைகள் என்று அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் இடமாக இந்த நூலகம் அமைந்தது எனக்கும் மகிழ்ச்சி தான். நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ராஜேந்திர சோழன் குறித்து ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்றேன். அந்த விழா சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்ததால் அந்த நூலகத்தை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதைப்பார்த்து அசந்து போனேன். அது போல உலகத்தரத்தில் ஒரு நூலகம் சென்னையில் அமைந்திட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் கலைஞரிடத்தில் தெரிவித்து இருந்தார். இதனை கருத்தில் கொண்ட தலைவர் கலைஞரின் எண்ணத்தில் உருப்பெற்றதே அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். பொதுவாகவே நம்முடைய நூலகத்தில் நம் நாட்டை பற்றிய நூல்களும் பெரும்பாலும் தமிழ் நூல்கள் மட்டும் இருக்கும் என்ற கருத்து பரவலாக எல்லோரிடத்திலும் இருந்தது. இதை மாற்றி உலகத்தில் இருக்கும் அனைத்து நூல்களையும் புத்தகமாகவோ, இனையத்தில் மூலமோ பெற முடியும் என்ற நிலையை இந்த நூலகத்தில் உருவாக்க விரும்பினோம். சிறு குழந்தைகள், ஆராய்ச்சி மாணவர்கள், ஐ.ஏ.எஸ், எம்.பி.ஏ, சட்டப்படிப்பு என எல்லா வகையான மாணவர்களும் இதைப்பயன் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பலதரப்பட்ட புத்தகங்கள் வாங்கினோம். கிட்டத்தட்ட 5 லட்சம் புத்தகங்கள் வரை இந்த நூலகத்துக்காக வாங்கினோம். எல்லா மாநில மக்களுக்கான புத்தகங்களும் இங்கு இருக்கும். இணையத்தின் மூலமாக உலகத்தில் உள்ள அனைத்து நூலகத்தின் நூல்களையும் இங்கிருந்தே படிக்க முடியும். கால மாற்றத்திற்கு ஏற்ப அச்சு புத்தகங்களும் இருக்கும். கணினியில் படிக்கக்கூடிய புத்தகங்களும் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தைகளுக்கு நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தினையும், புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தையும் கொண்டு வர வேண்டும் என்று குழந்தைகளுக்கென்றே தனியான பகுதியும் உருவாக்கினோம். குழந்தைகளை ஈர்த்து விட்டால் அவர்களது பெற்றோரும் இந்த நூலகத்தை பயன் படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பது எதார்த்தமான உண்மை. பொதுவாக நம்முடைய வீடுகளில் படிப்பதற்கென்று தனியான இடம் இருக்காது. தனிமையில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அவர்களுடைய புத்தகத்தை இங்கு கொண்டு வந்தும் படிக்க முடியும். பார்வையற்றோர் படிப்பதற்கு தகுந்த ப்ரெய்லி புத்தகங்களும் இங்கு இருக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்தும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் புத்தகங்களை படித்துக்கொள்ளலாம் என்ற நவீன தொழில்நுட்பம் இங்கு இருந்தாலும் நம்முடைய பழமையை போற்றும் விதத்தில் பழங்கால சுவடிகள், அரிய தமிழ் நூல்கள், பாரம்பரிய மூலிகை குறித்த நூல்களும் இங்கு கிடைக்கின்றன. இப்படி பழமையும், புதுமையும் கலந்த நூலகமாக இதை உருவாக்கினோம். நூலகம் என்பது தினமும் மக்கள் பயன்படுத்தும் இடமாகவும் இருக்க வேண்டும். எனவே நூல் வெளியீட்டு விழா போன்றவற்றை நடத்திக் கொள்ள பெரிய அரங்கம் ஒன்றையும் உருவாக்கினோம். இதனால் நூலகத்துக்கு வரும் வழக்கம் இல்லாதவர்கள்கூட, இந்த விழாக்களுக்கு வரும் சமயங்களில் நூலகத்தை பார்க்கும் வாய்ப்பை பெறுவார்கள். புத்தகங்கள், மற்றும் அறிவார்ந்த விழாக்கள் நடப்பதற்காக மட்டுமே இந்த அரங்கங்கள் உருவாக்கப்பட்டன.
பிற்காலத்தில் அரசியல் காரணங்களால், இங்கு திருமண வரவேற்பு போன்றவையும் நடந்தது வேதனையானது. இப்படி உயர்ந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலகம், அர்சியல் காரணங்களால் மேம்படுத்தப்படாமல் இருந்தது. நீதிமன்றத்தின் தலையீட்டால் மட்டுமே இந்த நூலகம் மருத்துவமனையாக மாறாமல் இருக்கின்றது. அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் (Oriental Manuscripts Library) என்ற சுவடிகளுக்கான தனி நூலகம், சென்னை பல்கலை கழக வளாகத்தில் இருந்தது. இந்த நூலகத்தில் திருக்குறள், புறநாநூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றின் பழங்கால ஓலைச்சுவடிகள் இருக்கும். நான் அங்கு சென்று பார்த்த போது மோசமான நிலையில் இந்த அரியவகைச் சுவடிகளைப் பராமரித்து வைக்க சரியான இட வசதியில்லை. இவற்றையெல்லாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினோம். அதற்கான அரசாணையும் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் பிறப்பித்தோம். ஆனால் நான் ஏற்கனவே கூறியது போல அரசியல் காரணங்களால் அந்த சுவடிகள் பல ஆண்டுகள் அங்கேயே இருந்து விட்டு இப்போது தான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு இடம் பெயர்ந்துள்ளன.
கீதாகிருஷ்ணன்: 1998ல் முதன் முதலில் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். உங்களுடைய முதல் சட்டமன்ற பேச்சு எதைப்பற்றி இருந்தது?
தங்கம் தென்னரசு: முதன் முதலில் சட்டமன்றத்தில் பேசும் எல்லோருக்கும் இருக்கும் பயமும், தயக்கமும் எனக்கும் இருந்தது. எனினும் தலைவர் கலைஞர் அவர்களும், செயல்தலைவர் தளபதி அவர்களும் அழைத்து பாராட்டும் வகையில் என்னுடைய கன்னிப்பேச்சு இயற்கையாக அமைந்தது. அன்றைய பேச்சில் முக்கியமாக நான் வைத்த கோரிக்கை, என்னுடைய தொகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட காரியாபட்டி பகுதிக்கு தனி தாலுக்கா வேண்டும் என்பது தான். அது நிறைவேற்றப்பட்டது. அந்த மூன்றாண்டு காலத்தில் பள்ளிகள், சாலைகள், குடிநீர் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளைச் சட்டமன்ர உறுப்பினராக நிறைவேற்றினேன்.
சுவாமிநாதன்: கடந்த தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்தே நின்று ஜெயலலிதா வெற்றி பெற்றார். இன்றைய நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை, திமுகவை தவிர வேறெந்த கட்சியும் பலத்துடன் இல்லை. எனவே யாருடைய கூட்டணியும் இல்லாமல் திமுக தனித்தே வெற்றி பெரும் என்பது என் கணிப்பு. நிலைமை இவ்வாறு இருக்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, போன்ற உதிரிக்கட்சிகளுடன் திமுகவுக்கு கூட்டணி தேவையா? கடந்த தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தமைக்கு கூட கூட்டணிக்கட்சிகளே காரணம் என்பதை திமுக இன்னும் உணரவில்லையா?
தங்கம் தென்னரசு: தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சி என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து 89 இடங்களில் வெற்றி பெற்றோம். 2000 ஓட்டிற்கும் குறைவான வித்யாசத்தில் தோற்ற தொகுதிகள் 30க்கும் மேலாக இருக்கும். எனவே திமுகவின் வலிமை என்பது குறையவில்லை. ஆனால் ஒரு போர்க்களத்துக்கு போகும் அரசன் தன் வழி, தன் எதிரி வழி, தன் துணை வழி, என்று எல்லாவற்றையும் பார்த்து தான் போர் வியூகம் வகுக்க வேண்டும். இதையேதான் அரசியலிலும் செய்ய வேண்டும். 1967ல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை இருந்தது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டன. தமிழ்நாடு மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டது. தமிழ் மொழிக்கான அங்கீகாரம் இல்லாமல் பிற மொழி ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது. இந்த காரணங்களினால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.
1967ல் தனித்து நின்று தேர்தலை சந்தித்தாலே வெற்றி பெறும் நிலையில் திமுக இருந்தது. ஆனாலும் அண்ணா தனக்கு நேரெதிரான ராஜாஜியை கூட்டணியில் வைத்துக் கொண்டார். பல்வேறு கட்சிகளை ஓரணியில் திரட்டி , ஒரு வலுவான கூட்டணி அமைத்து வாக்குகள் சிதறாமல் பார்த்துக் கொண்டார். எனவே கூட்டணி என்பது தேர்தல் களத்தில் அவசியமான ஒன்று. ஜெயலலிதா கூட்டணி இல்லாமல் கடந்த தேர்தலை சந்தித்தார் என்று கூறுகின்றீர்கள். அவரும் கூட முதலில் கூட்டணிக்கு முயற்சி செய்தார். மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் சில கட்சிகள் சேர்ந்து தேர்தலை சந்திக்க முடிவெடுத்த நிலையில் தான், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறும் என்பதை கணித்து கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தார். மக்கள் நலக்கூட்டணியால் திமுகவுக்கு விழ வேண்டிய வாக்குகள் அந்த கூட்டணிக்கு சென்று, கடந்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்தது. எனவே கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவதும், கூட்டணி அமைத்தும் வெற்றி பெறாமல் போவதும் அன்றைய அரசியல் சூழ்நிலையை பொறுத்த விஷயம். அத்தகைய ராஜதந்திரமான நடவடிக்கைகளை மிகச்சரியான வகையில் எங்கள் செயல் தலைவர் தளபதி அவர்கள் முன்னெடுப்பார்.
சுவாமிநாதன் : திமுக என்பது எம்.ஜி.ஆர் போன்ற பெரிய தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்த கட்சி. ரஜினி, கமல் போன்றவர்கள் வருகையால் உங்களுக்கு பாதிப்பு இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
தங்கம் தென்னரசு: நீங்களே சொன்னது போல் திமுக 1949ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கம். இந்த எழுபது வருட காலத்தில் திமுக சந்தித்த வெற்றிகள், தோல்விகள், சோதனைகள் ஏராளம். எமர்ஜென்சி போன்ற அடக்குமுறைகளையும் பார்த்த கட்சி. எம்.ஜி.ஆரை எதிர்த்து 13 வருடங்கள் ஆட்சி பொறுப்பில் இல்லாமல் இருந்து, மீண்டும் ஆட்சியை பிடித்த கட்சி. கலைஞருடைய அரசியல் நேரு காலத்தில் தொடங்கியது. இன்றைய தலைவர்களும் அவரை சந்திக்கும் அளவில் செல்வாக்கான தலைவராக இன்றும் கலைஞர் இருக்கின்றார். பாஜக, காங்கிரஸ், என்று இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான கட்சிகள் ஒரு காலத்தில் திமுகவை எதிர்த்தும், ஆதரித்தும் அரசியல் செய்தவை தான். ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து விடலாம். புதிதாக கட்சி ஆரம்பிக்கும் எல்லோருடைய இலக்கும் திமுகவாகக்கூட இருக்கலாம். “மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம்” என்பது போல மிகப்பெரிய கட்சியான திமுகவை எதிர்ப்பது புதிய கட்சிகளுக்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். இதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
பத்மாரவி: தமிழகத்தில் இருப்பதிலேயே பலமான கட்சியாக திமுக இருக்கின்றது. ஆனாலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் இடைத்தேர்தலில் உங்களை எதிர்த்து வெற்றிபெற முடிகின்றது. கமல் கட்சி, ரஜினி கட்சி என்று புதுப்புது கட்சிகள் வருகின்றன. அதிமுக பிளவு பட்டுள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலில் உங்கள் பிரதான எதிரி யார்?
தங்கம் தென்னரசு: கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதாவே சவால் விட்டல் நிலையில் தான் இதுவ்ரை இல்லாத வகையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களாக 89 பேர் அவருக்கு எதிரில் வந்து அமர்ந்தோம். அது தளபதியாரின் சாதனை. தமிழக சட்டமன்ற வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையில் எதிர்க்கட்சி அமைந்த வரலாறு இல்லை. எங்களைப் பொறுத்த வரை ஆளும் கட்சி தான் எங்களுடைய அரசியல் எதிரி. எதிர்கட்சியாக இருந்து, ஆளும் கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்வோம். ஆளும் கட்சி தான் தமிழகத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பானவர்கள். அவர்களின் நிர்வாகத்தில் தவறு இருந்தால் அதை சுட்டிக்காட்டி அதை கண்டிக்கும் இடத்தில் நாங்கள் இருக்கின்றோம். சட்டமன்றத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து மட்டுமே பேசமுடியும்.அங்கு சென்று கமல், ரஜினி குறித்து பேசுவது சரியாக இருக்காது. அரசியலுக்கு பலர் வரலாம். தேர்தல் காலத்தில் யாருடைய கூட்டணியில் யார் இருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்து, எங்களுடைய எதிர்ப்பு நிலை இருக்கும். எனவே இன்றைய நிலையில் எங்களுடைய எதிர்ப்பு என்பது சட்டமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் ஆளும் கட்சியை எதிர்ப்பது மட்டுமே பிரதானமாக இருக்கும்.
சுதா: புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் உங்கள் தலைவர் கலைஞரை வந்து பார்த்து ஆசி பெற்று செல்வது, உங்களுக்கு பெருமையாக இருக்கின்றதா? எரிச்சலாக இருக்கின்றதா?
தங்கம் தென்னரசு: புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் என்று மட்டும் இல்லை. கடந்த காலங்களில் சித்தாந்த ரீதியாக நேரெதிரான கருத்து கொண்ட ராமகோபாலன் கூட, கலைஞரை சந்தித்து விட்டுச் சென்றிருக்கின்றார். சமீபத்தில் பிரதமர் மோடி கலைஞரை சந்தித்ததும், அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதை காரணமாகத்தான். இன்றைக்கும் பாஜகவின் கொள்கைகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனாலும் தலைவர் கலைஞர் அவர்களை தன்னுடன் வந்து பிரதமர் இல்லத்தில் தங்குமாறு ஒரு பிரதமர் அழைக்கின்றார் என்றால், இது அரசியலை தாண்டிய மரியாதை, பாசம் அல்லவா? இது போன்ற மரியாதை மற்றும் நட்புணர்வு, புதிதாக கட்சி ஆரம்பித்த நண்பர்களுக்கும் கலைஞருடன் இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. எனவே மரியாதை நிமித்தமான இந்த சந்திப்புகளினால் நாங்கள் பெருமைதான் அடைவோமே தவிர, இதில் எரிச்சல் அடைய எதுவுமே இல்லை. அரசியல் களத்தில் யாரையும் சந்திக்கும் திறன் திமுகவுக்கு உண்டு.
பத்மாரவி: சமீபத்தில் போக்குவரத்து கழகங்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் திமுகவின் தூண்டுதல் இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
தங்கம் தென்னரசு: இதில் தூண்டுதல் எல்லாம் இல்லை. அவர்களுடைய உரிமையை அவர்கள் கேட்டார்கள். திமுகவின் தூண்டுதல் என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் போராட வேண்டும்? மக்கள் மத்தியில் தவறான கருத்தை உருவாக்கச் சொல்லப்படும் குற்றச்சாட்டு இது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் பணி ஓய்வுக்கு பின்னர் கொடுக்க வேண்டிய ஓய்வூதிய நிதியைப் பல ஆண்டுகளாக கொடுக்கவில்லை. இதனால் எத்தனை குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது? திருமணம், மேல்படிப்பு போன்ற விஷயங்களை செய்ய முடியாமல் தவித்த குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனை? இவற்றை எல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு ஒரு எதிர்கட்சிக்கு உள்ளது. இதற்காக ஜனநாயக முறைப்படி ஒரு போராட்டத்தை திமுக முன்னெடுத்தால் அரசுக்கு எதிராக தூண்டி விடுகின்றோம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் ஆளும் கட்சியைத்தவிர அனைத்து கட்சிகளுமே பங்கெடுத்தன. என்றுமே மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திமுக முன் நிற்கும்.
சுதா: குலத்தொழில் கல்வியை கொண்டு வந்தால் என்ன தவறு? இன்று விவசாயம் செய்வதற்கு ஆட்கள் இல்லை. நவீன தொழில்நுட்ப வழிகளைக் கொண்டு எல்லா குலத்தொழிலையும் முன்னேற்றி, குலத்தொழில் கல்வியின் மூலம் எல்லாத் தொழில்களையும் நலிவுறாமல் காப்பாற்ற முடியுமே?
தங்கம் தென்னரசு: குலக்கல்வித்திட்டம் என்பது ஆபத்தானது. இந்தக் குலத்தொழில் வேறுபாட்டை களையவே பல தலைவர்கள், பலகாலம் போராடினார்கள். திரும்பவும் அது போன்ற நிலைக்குச்செல்ல வேண்டும் என்ற நினைப்பே தவறானது. முடி திருத்தும் குலத்தில் பிறந்த மாணவன் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வருவதை, இந்த குலக்கல்வித்திட்டம் தடுக்கும். பல்வேறு தொழில்கள் அழியாமல் பாது காப்பதற்காக என்று காரணம் சொன்னாலும் கூட, குலக்கல்வி திட்டம் என்பது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. கிட்டத்தட்ட இந்த கொள்கையின் வெளிப்பாடாகவே மத்திய அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கை இருக்கிறது. படிக்கும் மாணவர்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு தொழில் கல்வியைப் பயில வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இந்த ஆபத்து எங்கு வரும் என்றால், எட்டாவது வரை ஒன்றாக படித்த மாணவர்கள், அதற்கு பிறகு குலக்கல்வி என்ற வகையில் பிரிக்கப்படுவார்கள். ஒரு மாணவனுக்கு தொழில் கல்வி தேவை என்பதில் எங்களுக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. அதை ஏன் எட்டாம் வகுப்பிலேயே கொண்டு வந்து, இந்த மாணவனுக்கு இது தான் வரும் என்று முத்திரை குத்துவது போல செய்ய வேண்டும்? எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு சென்று படிக்கட்டும். அதன் பின்னர் அவர்களுக்கு தொழிற்கல்வியை கொடுக்கலாமே? குலக்கல்வி திட்டத்தினால் மாணவனுடைய மேற்படிப்பு கனவு நிறைவேறாமல் போவதைத்தவிர, வேறு நன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த காரணத்தினால் தான் அன்றும், இன்றும், என்றும் நாங்கள் குலக்கல்வி என்ற முடிவை நாங்கள் எதிர்த்து வருகின்றோம்.
அந்த காலத்தில் மாணவர்களின் பாடப்புத்தகத்திலேயே “ன்” விகுதி போட்டுச் சில தொழில் செய்பவர்களை குறிப்பிட்டார்கள். அவர்கள் நிலை கீழானது என்ற எண்ணம் வரும் வகையில் பாடப்புத்தகங்கள் இருந்தன. காமராஜ் ஆட்சிக்காலத்தில் இதைச் சட்டமன்றத்திலேயே தலைவர் கலைஞர் சுட்டிக்காட்டி பாடப்புத்தகத்தில் இருந்தே அதை நீக்கும் படி செய்தார். நம்முடைய தலைவர்களுக்கு இது ஆபத்தானது என்பது தெரிந்ததால் தான் அதை நீக்கினார்கள். குலக்கல்விக்கு ஆதரவளிக்கும் கல்விக்கொள்கையை நான் சட்டமன்றத்தில் கடுமையாக எதிர்த்துப் பேசினேன். அந்த சமயத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.
சுதா: சில மாணவர்களுக்கு எல்லா பாடங்களையும் படித்து வெற்றி பெறுவது கடினமாக இருக்கின்றது. அவர்களுக்கு எந்த துறையில் செல்ல ஆர்வம் இருக்கின்றதோ அதற்கான பாடத்தை மட்டும் படிப்பது சரியாகத்தானே இருக்கும்?
தங்கம் தென்னரசு: இவர்களுக்கு 11ம் வகுப்பில் தேவையான படிப்பை தேர்வு செய்து கொள்ளும் வசதி இருக்கிறதே? அடிப்படையான சில பாடங்களை, மாணவர்கள் படிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஒரு மாணவனுக்கு கணிதம் வரவில்லை என்று அந்த பாடத்தை படிக்காமல் இருந்தால் நடைமுறை வாழ்க்கையில் பண வரவு - செலவுகளை அவனால் எப்படி பார்க்க முடியும்?
சுதா: கிராமப்புரங்களில் இருந்து படித்து வரும் மாணவர்களுக்குக் கல்லூரியில் சேர்ந்த பிறகும் தங்களுடைய பெயர்ரைக்கூட ஆங்கிலத்தில் எழுதத்தெரியவில்லை. இது நம்முடைய கல்வி முறையின் தோல்வியா? அல்லது ஆசிரியர்களின் தோல்வியா?
தங்கம் தென்னரசு:ஆங்கிலத்தில் மாணவனுக்கு பெயரைக்கூட எழுதத்தெரியவில்லை என்பதற்கு கல்வி முறையை குறை சொல்லுவதை விட, சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் ஆசிரியர்களின் கவ்னக்குறைவே காரணம் என்று சொல்ல வேண்டும். இதற்கு ஆசிரியர்களின் தரத்தை மட்டும் பார்க்காமல், அந்த மாணவனின் குடும்பம் மற்றும் சமுதாய சூழலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். படிக்காத பெற்றோர் என்றால் அந்த மாணவனின் நிலை கடினமாகத்தான் இருக்கும். நான் என்னுடைய அடிப்படை கல்வியை அரசு பள்ளிகளில் தான் படித்தேன். என்னுடைய இந்த நிலைக்கு என் ஆசிரியர்கள் தான் காரணம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். அரசாங்கம் எந்தத்திட்டம் கொண்டு வந்தாலும் கடைசியில் அந்த ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு எப்படி சொல்லித்தருகின்றார் என்பதில் தான் அத்திட்டத்தின் வெற்றி - தோல்வி அமையும். சிறு வயதில் பெரும்பாலான நேரத்தை மாணவர்கள் ஆசிரியர்களுடன் தான் கழிக்கிறார்கள். எனவே அவர்களை சரியாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு தான் அதிகம்.
ரமேஷ்: திமுகவின் வளர்ச்சிக்கு அந்த காலத்தில் நாத்திகம், ஹிந்தி எதிர்ப்பு எல்லாம் உதவின. இன்றைக்கும் அவற்றை வைத்துக் கொண்டு கட்சியை வளர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
தங்கம் தென்னரசு: திமுகவின் கொள்கை “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது தான். தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி கொண்டு பிளப்பது எந்நாளோ என்று எங்களுடைய தலைவர்கள் சொன்னதாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். எந்த காலத்தில் எந்த இடத்தில் அண்ணா இப்படி சொன்னார்? எந்நாளும் ஒருவருடைய தனிப்பட்ட இறை நம்பிக்கையில் நாங்கள் தலையிட்டதில்லை.
ரமேஷ்: ராமர் எந்த கல்லூரியில் இஞ்ஜினியரிங் படித்தார் என்று கேட்டது, தனிப்பட்ட மத நம்பிக்கையில் தலையிட்டது போல் ஆகாதா?
தங்கம் தென்னரசு: இதை உங்களுடைய இறை நம்பிக்கையை இழிவு செய்வதற்காக கேட்கவில்லை. சேது சமுத்திர கால்வாய்த்திட்டப் பிரச்சனையின் போது, பிரச்சனையின் அடிப்படையில் கேட்கப்பட்டது. உண்மையில் திமுக ஆட்சியில் இருக்கும் போது தான் பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்குகள் நடைபெற்றன. திருவாரூரில் ஓடாத கோவில் தேரைச்செப்பனிட்டு ஓட வைத்தது எங்கள் ஆட்சியில் தான். தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை அரசாங்க விழாவாக கொண்டாடியதும் நாங்கள் தான்.
ரமேஷ்: அரசியலில் நாத்திகம் பேசினாலும், திமுக தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோவிலுக்கு செல்வதைத் தடுக்க முடியவில்லையே? அது போல் ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டே குடும்ப உறுப்பினர்கள் ஹிந்தி படிப்பதைத் தடுக்க முடியவில்லையே?
தங்கம் தென்னரசு: மீண்டும் கூறுகின்றேன். யாருடைய இறை நம்பிக்கைகளிலும் நாங்கள் இதுவரை தலையிட்டதில்லை. அதுபோல் எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் தெய்வங்களை வழிபடும் விஷயத்திலும் நாங்கள் தலையிடுவதில்லை. என்றைக்கும் ஹிந்தி என்ற மொழிக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. கட்டாய ஹிந்தி திணிப்பை மட்டுமே எதிர்த்தோம். எதிர்க்கிறோம், எதிர்ப்போம்.
சுவாமிநாதன்: ஒரு காலத்தில் மாவட்டம் தோறும் கட்சிப் பொதுக்கூட்டங்களை நடத்தி, சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு மக்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்த கட்சி திமுக. இப்போதெல்லாம் தொலைக்காட்சி விவாத மேடைகளில் யார் யாரோ வந்து பேசுகிறார்கள். இது திமுகவுக்கு பின்னடைவு இல்லையா?
தங்கம் தென்னரசு: காலத்திற்கேற்ற மாற்றங்களை திமுக உள்வாங்கி வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் திமுகவின் மாலை நேரப் பொதுக்கூட்டங்கள் மாலை நேரப் பல்கலைகழகம் என்று அழைக்கப்பட்டன. அன்றைக்கு பொதுக்கூட்டங்கள் மூலமாக மட்டுமே நம்முடைய கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலை இருந்தது. இன்றைக்கு தகவல் தொடர்பு வளர்ந்து விட்ட காரணத்தால் பொதுக்கூட்டங்களின் தேவை குறைந்து விட்டது. பொதுக்கூட்டங்களில் பேசுவதைப்போல் சட்டமன்றத்திலோ, தொலைக்காட்சி விவாதங்களிலோ பேச முடியாது. எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து வைத்துத்தான் விவாதங்களில் பேசுகின்றார்கள்.
கீதாகிருஷ்ணன்: நீங்கள் அமைச்சராக இருந்த காலத்தில் உலக செம்மொழி தமிழ் மாநாடு நடத்தினீர்கள். அதில் சமய இலக்கியங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. சீறாப்புராணம், இரட்சண்ய யாத்ரிகம், தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் இல்லாத சங்கத்தமிழை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாத பின்னனி என்ன?
தங்கம் தென்னரசு: உலகத்தமிழ் மாநாடு நடத்தும் போதுசமய இலக்கியங்களை விட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் இவை தவிர்க்கப்படவில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களும், நாயன்மார்களின் தேவாரமும், தமிழுக்கு கிடைத்த அருட்கொடை என்பதில் சந்தேகம் இல்லை. அது போலவே சீறாப்புராணமும், இரட்சண்ய யாத்ரீகமும். தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினால் தமிழ் பக்தி இலக்கியத்தை விட்டு விட்டு யாராலும் எழுத முடியாது. நாலாயிர திவ்ய பிரபந்தம், திராவிட வேதம் என்று அழைக்கப்பட்ட ஒன்று. கம்பராமாயணம் முழுவதும் ராமாவதாரத்தைப் பற்றியது. ஆனால் அது மிகப்பெரிய தமிழ் இலக்கியம் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆய்வு மையங்களில் ஆய்வாளர்கள் எதைத்தேர்வு செய்கிறார்கள் என்பது அவர்களை பொறுத்த விஷயம். அதில் அரசின் தலையீடோ, அரசியலோ கிடையாது. மேலும் இந்த ஆய்வு, ஒட்டு மொத்தமாக தமிழ் மொழி அடைந்த வளர்ச்சியையும், கடந்து வந்த பாதையையும் பற்றியது. தமிழ் பிராமி எழுத்து முறையில் ஆரம்பித்து, இலக்கியம் சோழர்காலம் என்று இன்றைய பின்நவீனத்துவ இலக்கியங்கள் வரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. எனவே மற்ற இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதல்ல எங்கள் எண்ணம்.
கீதாகிருஷ்ணன்: ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ன?
தங்கம் தென்னரசு: ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார். ஜனநாயக நாட்டில் அவருக்கு அந்த உரிமை உள்ளது. அவர் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தால் , திமுகவும் அதை அரசியல் ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறது.
பத்மாரவி: கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒரே ஒரு சதவிகித வாக்கு வித்யாசத்தில் தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உங்கள் கட்சி இழந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு தோல்வியடைந்ததை எப்படிப் பார்க்கின்றீர்கள்? திமுகவின் தேய்மானமாக இதைப் பார்க்கலாமா?
தங்கம்தென்னரசு: இடைத்தேர்தல் முடிவிலும், பொதுத்தேர்தல் முடிவிலும், வீக்கத்துக்கும், வளர்ச்சிக்குமான வித்யாசம் உள்ளது. அந்த இடைத்தேர்தல் முடிவு என்பது ஒரு வீக்கம். அதை வளர்ச்சியாக பார்க்க முடியாது. இடைத்தேர்தல் முடிவுகள் எந்த நாளும் பொதுத்தேர்தல் முடிவுகளை பாதிக்காது. இடைத்தேர்தலுக்கு என்றே சில கூறுகளும், பண்பாடுகளும் இருக்கின்றன. உதாரணத்துக்கு பென்னாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து 3 வது இடத்துக்கு போன அதிமுக அடுத்து வந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த எல்லா இடைத் தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தோம். குறிப்பாக சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தோம். ஆனால் கடந்த 2016 பொதுத்தேர்தலில் 89 இடங்களில் வெற்றி பெற்று வெறும் 1 சதவிகித வாக்கி வித்யாசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தோம். இந்த 1 சதம் வாக்கு வித்யாசம் கூட ஆளும் கட்சிக்கு எதிராக உருவான மற்றொறு கூட்டணியால் ஏற்ப்பட்ட வாக்கு சிதறல்கள் காரணமாக அமைந்தது. எனவே இடைத்தேர்தல் தோல்வியை ஒரு அளவுகோலாக வைத்துப் பார்க்க முடியாது. அடுத்து வரும் பொதுத்தேர்தலில் திமுக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்!
****************** நன்றி: துக்ளக்
Subscribe to:
Posts (Atom)