பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 26, 2008

கூட படிச்ச குறத்திகள்!!!

நேத்து நட்டு பண்ணின அக்கிரமம் சொல்லி மாளாது. இரவு 10.30 வரை நியூஸ் பார்த்துட்டு கொஞ்ச நேரம் காமடி பார்த்துவிட்டு சமத்தா தூங்க போகும் அவனுக்கு நேத்து என்ன மூடோ தெரியலை. என் கூடவே முழிச்சுகிட்டு இருந்தான் ராத்திரி 12 வரை. தூங்கிடுவானான்னு நான் அப்பப்ப அவன் முகத்தை பார்க்கும் போதல்லாம் ரிலையன்ஸ் ஃபிரஷ் மாதிரி இருக்கு அவன் முகம். இந்த கூத்திலே அவன் தூளியிலே குப்புற படுத்துகிட்டு டிவி பார்க்க நான் தூளியை ஆட்டிகிட்டே சேட்டிகிட்டு இருந்தேன். நடு நடுவே சிபி,ஆயில்யன் எல்லாம் வந்து இன்னுமா தூங்கலைன்னு என்னை வெறுப்பேத்த நட்டுவோ மிட்நைட் மசாலா பார்த்துகிட்டே நான் தூளி ஆட்டுவதை மட்டும் நிறுத்த கூடாது என்பதில் கவனமா இருந்தான். சில காட்சிகளில் டிசிபிடி மாதிரி "புரியல்ல தயவு செய்து விளக்கவும்" என்பது மாதிரி என்னை திரும்ப திரும்ப பார்த்து கொண்டான். தன்னை மறந்து தூக்கம் என்பார்களே அது போல நான் தூங்கி விட்டேன்.அது 1982 , அப்போ நான் +2 படித்த நேரம்(என்னை விட வயதில் மூத்த திரிஷா அப்போ காலேஜ் முதல் வருடமாக இருந்திருக்கலாம்)நாங்க எல்லாம் அப்போ "இண்டராக்ட்"கிளப்பில் இருந்த நேரம். எங்கள் பள்ளி மாத்திரம் இல்லை. மத்த புள்ளய்ங்க படிக்கும் பள்ளிகளிலும் அந்த கிளப் இருந்தது. அதன் காரணமாகவே நாங்கள் அதில் சேர்ந்தோம்ன்னு நெனச்சா என் மேல தப்பான அபிப்ராயம் வச்சிருக்கீங்கன்னு அர்த்தம். அப்போதான் அந்த விழா வந்துச்சு. மண்டலாம் 4ன் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதும் மண்டல மாநாடும். கிட்டதட்ட 75 பள்ளிகள் கலந்துகிட்டாங்க. மயிலாடுதுறை AVC கல்யாண மண்டபத்திலே நிகழ்ச்சி. எங்க ஊர்ல நடந்ததால் எங்க பள்ளி கிளப் தான் முக்கியமாக எல்லா வேலையும் இழுத்து போட்டுகிட்டு செஞ்சோம். அதிலே எல்லா பள்ளிகளும் கலை நிகழ்ச்சிகளும் உண்டுன்னு சொன்ன பிறகு சும்மா இருப்போமா?? அதுவும் சென்னை பொண்ணுங்க எல்லாம் முதல் நாளே சும்மா நமீதா ரேஞ்சுக்கு வந்து அசத்த அந்த ஊர் பசங்க பீட்டர் விட்டுகிட்டு இருக்க நாங்க ஏதோ வேலைக்காரன் ரேஞ்சுக்கு எங்களை பார்க்க எங்களுக்கே பாவமா இருந்துச்சு. இதிலே எங்க ஊர் பொண்ணுங்க கிட்டதட்ட அப்பதான் சுடி போட்ட பொண்ணுகளையும், டவுசர் போட்ட தடியன்களையும் பார்க்கிறாங்க. நாங்க கூட அப்படித்தான். நாங்க கைலிய மடிச்சு கட்டி எலக்ட்ரிக் போஸ்ட்டிலே ஏறி பேனர் கட்டுவதையும் கீழே இருந்து டவுசர் பாண்டிகள் கையிலே தம் வச்சுகிட்டு "ஷேம் ஷேம் பப்பி ஷேம்" சொல்வதையும் அதை பார்த்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கும் சுடிதார்களை கண்டு எங்களுக்கு எரிச்சல் வந்தாலும் வேற வழி இல்லாததால் சகிச்சு கிட்டோம்.

அடுத்த நாள் எங்க தாவணி தேவதைகள் எங்களிடம் வந்து "டேய் நாம கல்ச்சுரல்ல அசத்திடனும்டா, இந்த தொல்ஸ், ராதா போல இல்லாம கொஞ்சம் பார்க்க பர்ச்சனாலிட்டியான பசங்க, பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து அசத்தி பரிசை தட்டிகிட்டு வந்து இந்த டவுசர் பசங்களை மானத்த வாங்கிடனும். அதிலும் அந்த மஞ்சள் சுடிதார் மூஞ்சிய பார்த்தாலே எனக்கு குமட்டுது"ன்னு தன் பங்கு பொறாமையை கக்க எனக்கு பொச பொசன்னு பத்திகிட்டு வந்துச்சு. நானே அப்பதான் அந்த மஞ்சள் மகிமைக்கு "My friend, can i get one hamam sample soap'ன்னு கேட்டதுக்காக ஓடிப்போய் அம்மா பீரோவின் புது துணிகளுக்கு அடியில் வைத்து இருந்த யார்ட்லி சோப்பை கொண்டு போய் கொடுத்து "My house full this soap, hamam no soapன்னு லைட் பீட்டரா விட்டு சரி பண்ணிகிட்டு இருக்கேன். பசங்க கிட்ட வேற "டேய் இது செட்டாகிடும் போல இருக்குடா, அனேகமா நான் வாக்க பட போறது சென்னையாத்தான் இருக்கும் போல இருக்கு"ன்னு கலக்கிகிட்டு இருக்கேன். இதிலே அந்த மாலா இப்படி சொன்னதும் எனக்கு எப்படி இருக்கும். இதிலே சில டவுசர் பாண்டிகள் கையில் வீணை வச்சுகிட்டு(அய்யோ அது கிதார்டா மடையா) அலப்பரை தாங்கலை. இதல்லாம் முன்கூட்டியே தெரிஞ்சு இருந்தா இஞ்சிகுடியார் வீட்டிலே இரவல் வாங்கி வந்திருப்பேன். என்ன அங்க வயலின் தான் கிடைக்கும்.

அடுத்த நாள் ஆபீஸ் பேரர்ஸ் மீட்டிங். அங்க தான் எந்த எந்த பள்ளிக்கு எத்தனை மணி நேரம் ஸ்லாட் நிகழ்ச்சிக்குன்னு முடிவு பண்றாங்க. எங்க பகுதியின் 4 ஸ்கூல் சார்பாகவும் எங்க பள்ளியின் நாங்க 4 பேர் மட்டும் கலந்துகிட்டோம். உள்ளே போகும் போதே எங்க கிளப்பின் கன்வீனர் கேயார் சார்(இப்போ ஹெச்செம்) "ஏய் பசங்களா நமக்கு கண்டிப்பா ஒரு நிகழ்ச்சிக்கு ஸ்லாட் வாங்கி வந்துடுங்க பின்னதான் நாம ஸ்க்ரிப்ட் தயார் பண்ணி ராத்திரியோட ராத்திரியா ரிகர்சல் பார்த்து காலையிலே கலந்துக்கனும் சரியா"ன்னு உசுப்பி விட தெம்பா மீட்டிங் போயாச்சு.

பாவி பசங்க எல்லாம் இங்கிலீபிஸ்ல பேச பேச கடைசியா எங்களை பார்த்து "உங்க 4 ஸ்கூல்க்கும் சேர்த்து 15 நிமிஷம், கடைசி நிகழ்ச்சி"ன்னு சொல்ல மீட்டிங் முடிஞ்சுது. வெளியே போனா மத்த கேர்ல்ஸ் ஸ்கூல்லயும் எங்களை கொன்னுடுவாங்க. பத்தாததுக்கு கேயார் சார் வேற. என்ன செய்யறதுன்னு ஒரு சதுர மேசை மாநாடு போட்டு, இதை சமாளிக்கும் பொறுப்பு நான் ஏத்து கிட்டேன்.

வெளியே வந்து பார்த்த பின்ன தான் தெரிஞ்சுது எங்களை விட எங்க தாவணிகள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க நிகழ்ச்சி நடத்த. மாலாவுக்கு இதை விட்டா வேற வாய்ப்பு கிடையாது "மாடி மேய்க்கும் கண்ணா" பாட.

கேயார் சார் கிட்ட வந்து என்னான்னு கேக்க நான் "சார் நமக்கு மட்டும் இல்ல நம்ம சுத்து வட்டார ஸ்கூலுக்கே ஸ்லாட் இல்ல, பின்ன நான் செமத்தையா இங்கிலீஷ்ல வெளுத்து வாங்கிட்டேன்"ன்னு பீலா விட அதுக்கு அவர் "சரி ரிசல்ட் என்னாச்சு அதை சொல்லு"ன்னு கேக்க நான் "சார் நமக்கு 15 நிமிஷம் கொடுத்துட்டாங்க, அதுவும் நான் கடைசி 15 நிமிஷம் தான் வேணும்ன்னு ஒத்தை காலில் நின்னு வாங்கிட்டேன் சார்"ன்னேன். அவர் 'என்னடா பாவம் கேர்ல்ஸ், அந்த கன்வீனர் மேடம் வேற நீங்க எப்படியும் ஸ்லாட் வாங்கிடுவீங்கன்னு ரொம்ப ஆர்வமா இருந்தாங்க"ன்னு சொல்ல நான் அதுக்கு "சார் நான் அதை பார்த்துகறேன்"ன்னு சொல்லிட்டேன்.

அதுக்குள்ள மாலா அண்ட் குரூப் ஓடி வந்து என்னாச்சுன்னு கேக்க நான் "கங்கிராஜுலேஷன், உங்களுக்கும் ஸ்லாட் வாங்கியாச்சு. கஷ்டப்பட்டு கடைசி 15 நிமிஷம் ஸ்லாட் டைம். ஆனா ஒரு கண்டிஷன், இது நான் போட்ட கண்டிஷன் இல்ல மீட்டிங்க எடுத்த முடிவு, அதாவது எல்லார் ஸ்க்ரிப்டையும் கேட்டாங்க ஆனா குறத்தி டான்ஸ் மட்டும் மிஸ்ஸிங், ஸோ நீங்க அத தான் பண்ண போறீங்க, ரமா, பொன்னம்மா, பூவிழி, பொம்மி எல்லாம் குறத்தி மேக்கப்போட நாளை வந்துடுங்க, மாலா நீ மேக்கப் போடாம வந்துடு'ன்னு சொல்லிகிட்டே போக அதுக்கு மாலா "ஏன் நான் டேன்ஸ்ல இல்லியா"ன்னு கேக்க "அய்யய்யோ நீ தான் மெயின் டான்ஸர்"ன்னு சொல்லிட்டு எங்க ரிகர்சலுக்கு ஓடிட்டேன்!!!

இன்னும் மீதி கலாட்டா இருக்கு, ஆனா பாருங்க அதுக்குள்ள நட்டு தூங்கிட்டான். அதனால கேப்ல நானும் தூங்கிட்டு வந்து அடுத்த பாகத்தை தொடர்கிறேன்!!

April 20, 2008

தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!

நான் ஏற்கனவே "துபாய்ல வெள்ளின்னா ரெண்டு"ன்னு ஒரு பதிவு போட்டேன். ஆனா அது வ.வா.ச போட்டிக்கு எடுத்துக்க மாட்டாங்களாம். எனக்கோ ரொம்ப வறட்சி இப்போ. நகைச்சுவையே கண்ணிலே தென்பட மாட்டங்குது. ஆனா "ரெண்டு" போட்டிக்கு "ரெண்டு" பதிவாவது போடலைன்னா அது நமக்கு அசிங்கமா போயிடும். மதியம் ஒரு பதிவு போட்டாச்சு. ஆக இது "ரெண்டாவது" பதிவு இன்னிக்கு.

பதிவு புடிக்க போகலாம்ன்னு எல்லா இடத்திலும் இன்னிக்கு சுத்தின போது தான் இது கன்ணிலே பட்டுச்சு. நான் சத்தியமா இதை "நகைச்சுவை\நையாண்டி"ல தான் வகைப்படுத்த போறேன். சிரிப்பு வந்தா ஒரு பின்னூட்டம் போடுங்க.

நம்ம ஊர் பாசக்கார பயபுள்ளைங்க சிரிக்காம அடிப்பானுங்க சோக்கு. கிட்ட தட்ட இதுவும் அந்த வகையிலே சேர்த்து கோங்க! நான் பார்த்த ஒரு பஸ்ட்டாண்டு விளம்பரம் இது! மேலே படிங்க.

********************************************************************************

___________________ சித்த வைத்திய சாலை.
___________________தெரு

மயிலாடுதுறை.

குறிப்புகள்: 1. எங்களிடம் கீழ்கண்ட வியாதிகளை மட்டுமே குணப்படுத்த முடியும்.

2. மொத்தமாகவே "இரண்டு" வேளை மட்டுமே மருந்து கொடுக்கப்படும்.

3. கண்டிப்பாக "இரண்டு" நாட்களில் குணமாகிவிடும்

4. முற்றிய நிலையில் உள்ள கேன்சர், மற்றும் HIV என்கிற எய்ட்ஸ் ஆகிய "இரண்டு" நோய்க்கு மட்டும் "இரண்டு" வேளை பத்தியம் இருக்க வேண்டும். அதுவும் "இரண்டு" மணி நேரம் மட்டும் இருந்தால் போதுமானது.

5. வேலை நேரம் மதியம் "இரண்டு" முதல் இரவு "இரண்டு" வரை. (ஆனால் அவசரம் என நீங்கள் கருதினால் காலை "இரண்டு" முதல் மதியம் 'இரண்டு" வரை பார்க்கப்படும்.

6. வார்த்தின் "இரண்டாம்" கிழமையான செவ்வாய் விடுமுறை. ஆனால் அதுவும் அவசரம் எனில் கடைபிடிக்க மாட்டாது. ஏனனில் நாங்க "இரண்டாம்" தர மருத்துவர்கள் இல்லை.

7. எங்களுக்கு இதே ஊரில் "இரண்டு' கிளைகள் மட்டுமே உள்ளது. மற்றவை போலிகள்.

8. மீண்டும் சொல்கிறோம். கீழ் கண்ட வியாதிகள் தவிர எங்களுக்கு வேறு வியாதிகளுக்கான வைத்தியம் தெரியாது என்பதை பணிவன்புடன் கூறிகொள்கிறோம்!

அனைத்துவகை முற்றிய புற்று நோய்கள், உள்மூலம், வெளிமூலம், பௌத்திரம், வெண்குஷ்டம், வென்புள்ளி,முகத்தில் அரிப்பு,அதனால் ஏற்படும் கருப்பு, முகத்தில் உள்ள சுருக்கம், உதட்டில் வெள்ளை, உதட்டில் வெடிப்பு, உதட்டில் கருப்பு,வாய்ப்புண், கடைவாய் வேக்காளம், தலையில் பூச்சு வெட்டு, தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல், பித்த நரை,இள நரை,பேன்கள், மண்டை கரப்பான்,முடிவளர்தல், முகப்பரு, தேமல்,தலைவலி,பல்வலி,சளி ஆகியவைகளும்,

படை,கக்கூஸ்படை, கவுட்டியில் உள்ள அரிப்பு,பெண்கள் இடுப்புகடி,ஆண்\பெண் சம்மந்தப்பட்ட வியாதிகள்,உடல் பூராவும் பொத்து வடிதல், உடல் முழுதும் தோல் உரிதல்,செதில் நோய், சொறியாஸ்,மற்றும் கை கால் அரிப்பு,வெடிப்பு,வியர்வை அதிகம் ஏற்பட்டு கை,காலில் நீர் வடிதல், காலில் ஆணிகள்,முள் ஆணிகள்,நீர் ஆணிகள், நெஞ்சு வலி,வயிற்று வலி,இருமல்,ஆஸ்துமா,டி.பி,சர்கரை வியாதி,இரத்த கொதிப்பு,காக்காய் வலிப்பு,நரம்பு தளர்ச்சி, கை, கால் குடைச்சல், கழுத்துவலி, புரடி வலி,முதுகுவலி, இடுப்பு வலி, வெட்டைசூடு, வெள்ளை படுதல்,கனைச்சூடு,பசியின்மை, பக்கவாதம், நரிதலை வாய்வு,மூட்டுவலி,உடலில் உஷ்ணம், உடலில் எரிச்சல், குடல் புண். தீப்புண், செப்டிக் ஆன புண், மர்மமான இடத்தில் உள்ள எரிச்சல்\அரிப்பு, காதில் அரிப்பு,காதில் சீழ் வடிதல், கருமேகம், செவ்வட்டைகடி,இரத்த சோகை,மேக நீர்,நகத்தில் உள்ள சொத்தை மற்றும் முக பொலிவு பெற, இவைகள் தவிர

பருமனான உடல் இளைப்பதற்க்கும், மெலிந்த உடல் பருமனாவதற்க்கும், இரவில் விந்து வெளியாவதற்கும்,ஒற்றை தலைவலி,அறிவு வளர்ச்சி,ஞாபக சக்தி,கால்வீக்கம், நீர் அடைப்பு, விரைவீக்கம்,சிறுநீரகம் சம்மந்தமான அனைத்து டைப்புகளும், மஞ்சள் காமாலை,குழந்தையின்மை,பூச்சிகடி,கொழுப்புகட்டி,நரம்புகட்டி,கால்வீக்கம் ஆகியவையும் இரண்டே நாளில் சரி செய்யப்படும்.

அது தவிர நாங்க முற்றிய நிலை கேன்சர்,HIV எனப்படும் எய்ட்ஸ் ஆகியவற்றை "இரண்டு' நாளில் சரி செய்திடுவோம்.

கீழ்குறிப்பு: மேற் கண்ட வியாதிகள் தவிர வேறு எதற்கும் இங்கு வைத்தியம் செய்ய இயலாது என்பதை மிகுந்த தன்னடக்கத்துடன் சொல்லி கொள்கிறோம்!!

****************************************************************

சங்கத்து சிங்கங்களா போதுமா "ரெண்டு" இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா!5.

விஜய் டிவியில் அபிஅப்பா குடும்பம்!!!

ஞாயிறோட ஞாயிறு இன்னிக்கோட எட்டு நாள் ஆச்சு, அந்த அமளி துமளி எல்லாம் நடந்து. நடுவே குசும்பன் கல்யாணம், நண்பர்கள் வருகை எல்லாம் இருந்ததால் என்னால் பகிர்ந்துக்க முடியலை அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை. இன்னமும் காலம் தள்ளி போடுவது வரலாற்றுக்கு நான் இழைக்கும் அநீதி என கருதியே இப்போது பதிகிறேன்.

போன ஞாயிறு விடியகாலை ஏழரை மணிக்கே அராஜகமாக எழுப்பப்பட்டேன். "ஏழரை ஆச்சு எழுந்திருங்க"ன்னு சொன்ன போது எனக்கு தெரியாது ஏழரை என்பது மணி அல்ல சனி என்று. காலை குளித்து முடித்து வந்த பின்ன சாமி ரூமில் பார்த்தபோது ஒரு பித்தளை தட்டினிலே மூன்று தேங்காய்கள் மஞ்சள் குளிச்சு உக்காந்து இருந்துச்சு. சாதாரணமா மழையை தற்காலிகமாக நிறுத்த என் வீட்டில் செய்யும் கூத்து இது. இன்னிக்கு தான் நல்லா வெயில் அடிக்குதே பின் எதற்கு இந்த பில்டப்புன்னு நெனச்சுகிட்டே ஒரு வித மிரட்சியோட வந்தேன் சாப்பிட.

"பின்ன சாப்பிட்டுக்கலாம் முதல்ல போய் டிவி ரிப்பேர்காரனையும், கேபிள் காரனையும் கூட்டிகிட்டு வந்துடுங்க"ன்னு சொன்னப்பதான் பார்த்தேன், என்னிக்கும் இல்லாத அளவு பளிச்சுன்னு தெரிஞ்சுது டிவி. 'மகர ராசி நேயர்களே, விருச்சிக ராசி நேயருக்கு குறித்த நேரத்தில் சோறு போட்டா வாலை ஆட்டிகிட்டு சொன்ன வேலை செய்வார்"ன்னு தெளிவாத்தான் சொன்னார். பின்ன எதுக்கு டிவிகாரன், கேபிள்காரன் எல்லாம் என நினைத்து கொண்டே போய் கூப்பிட போயிட்டேன். ஏழரைக்கே எழுந்து நாலரையை எக்ஸ்ட்ராவாக இரண்டரை லிட்டர் வாங்கிகிட்டு 200 பீபரியையும் வாங்கிகிட்டு கேபிள்காரன், டிவி ரிப்பேர்காரனுடன் வீட்டுக்கு திரும்பும் போதே வீட்டில் அமளி ஆரம்பமாகிடுச்சு.

"ம் ...ம்..ஆமாம் ராத்திரி சரியா ராத்திரி ஏழரைக்கு தான் நிகழ்ச்சி, மறக்காம பார்த்துட்டு எனக்கு உங்க கருத்தை சொல்லனும். இல்லாட்டி நம்ம வீட்டுக்கு வந்துட்டா மிளகு அடையும், ஜவ்வரிசி கொழுக்கட்டயும் சாப்பிட்டுகிட்டே பார்க்கலாம், வச்சிடவா"ன்னு யார்கிட்டயோ தங்கமணி பேசிகிட்டு இருந்தாங்க. எனக்கு ஓரளவு புரிஞ்சாலும் சரி கேட்டுடுவோமேன்னு"என்ன ஏதாவது நிகழ்ச்சியா முக்கியமா"ன்னு கேட்டு வச்சேன்.

"தோ பாருங்க ஒரு தடவை தான் சொல்லுவேன். இன்னிக்கு ராத்திரி ஏழரைக்கு விஜய் டிவியிலே EQ2 ன்னு ஒரு நிகழ்ச்சி.அதை தான் ரொம்ப ஆர்வமா பார்க்க இந்த டிவிரிப்பேர்காரன், கேபிள் காரன் எல்லாம் கூட்டிகிட்டு வர சொன்னேன். இனிமே தொண தொணன்னு கேள்வி கேக்காம சொன்ன வேலை மட்டும் செய்யுங்க"ன்னு சொல்லிட்டு அடுத்த யாருக்கோ போன் போட்டு முன்ன பேசின அதே டயலாக்கை பேசினாங்க. டிவி தான் புதுசாச்சேன்னு கேட்டதுக்கு "இது சும்மா ஒரு ஜெனரல் செக்கப் தான், அந்த நேரத்துல சொதப்பிடகூடாதுல்ல அதான். அது போல கேபிள்காரனுக்கும் சொல்லிட்டேன். சாயந்திரம் நம்ம நகர்லயே தான் சுத்திகிட்டு இருக்கனும்ன்னு. தவிர மழை பெஞ்சா நம்ம டிவிக்குதான் வேர்த்து கொட்டுமே அதுக்காக பிள்ளையாருக்கு மஞ்சள் தேங்காய் வச்சாச்சு, தவிர மினி ஜென்செட் கூட அரேஞ்ச் பண்ணியாச்சு அக்காவீட்டிலிருந்து"ன்னு மின்னெச்சரிக்கை மினிம்மா பேசிகிட்டே போக எனக்கு ஆகா காலை ஏழரைக்கு ஆரம்பிச்ச ஏழரை இரவு ஏழரை வரை தொடர போகுதுன்னு மட்டும் தெளிவா புரிஞ்சுது.

இத்தனைக்கு பாப்பா கொஞ்சமும் அசராம மாடியிலே போய் போகோ டிவியில் கண்ணும் கருத்தமாவுமாக இருக்கவே நான் போய் "பாப்பா அப்படி என்ன நிகழ்ச்சி"ன்னு ஆர்வ மிகுதியிலே கேக்க அதுக்கு பாப்பா "அட சிம்பிள்ப்பா, நம்ம AVC Eng. College பசங்க EQ2 ன்னு ஒரு நிகழ்ச்சியிலே இன்னிக்கு கலந்துகறாங்க, நம்ம பிரியா அக்கா கூட அதிலே டேன்ஸ் ஆடுறாங்க, அதுக்கு தான் அம்மா இத்தனை அலப்பரை கொடுக்குறாங்க"ன்னு சொன்னா. நான் அதுக்கு "சரி அதிலே அம்மாவுக்கு என்ன ரோல், எல்லாம் காலேஜ் பசங்களாச்சே"ன்னு கேட்டதுக்கு பாப்பா "என்னப்பா அம்மா ரோல் தான் முக்கியமான ரோல், அம்மா இல்லாட்டி அவங்களுக்கு மானமே போயிருக்கும்"ன்னு சொல்ல நான் அப்படியே ஆகாசத்தில் பறந்தேன். நம்ம தங்கமணி மாத்திரம் டிவி நிகழ்ச்சி இயக்குனராயிட்டா அதை வச்சே பல பதிவு போடலாம். அவங்களை பேட்டி எடுத்து பத்து பாகமா போடலாம்ன்னு எல்லாம் நெனச்சுகிட்டு நானும் கூட மாட ஜவ்வரிசி அரைப்பதில் இருந்து மிளகு இடிச்சு தர்ர வரை எல்லாம் செஞ்சு ஏகப்பட்ட சபாஷ் வாங்கினேன்.

நேரம் ஆக ஆக தங்கமணி முகத்திலே ஒரு படபடப்பு. எனக்கோ பாவமா போயிடுச்சு. "தோ பார், உன் கடமைய செஞ்சுட்ட, பதட்டபடாம இரு. என்ன ரிசல்ட் வந்தாலும் நாம தைரியமா ஏத்துக்கனும். ஒரு பழைய படைப்பாளிங்கிற முறையிலே (அடங்கொய்யால...)ஒரு புது படைப்பாளிக்கு நான் சொல்லும் அட்வைஸ் என்னன்னா" என்கிற ரேஞ்சில் நான் பொங்க பொங்க அபிபாப்பா அலட்சியமா பார்த்துகிட்டு மைல்டா சிரிச்சுகிட்டு போகுது அடையை தட்டில் எடுத்துகிட்டு.

ஆச்சு மணி ஏழரை. அடைக்கு ஆசைப்பட்ட அக்கம் பக்கமும், கொழுக்கட்டைக்கு ஆசைப்பட்ட கொழுப்பெடுத்ததுகளும் வீட்டில் ஹாலில் நிறைந்து இருக்க நடுவே நம்ம படைப்பாளி தங்கமணியும். எனக்கு நட்டுவை பார்த்துக்கும் பெரும் பொருப்பு தரப்பட்டது. முதல் செஷன்ல தங்கமணியின் ரோல் ஏதும் வரலை. அடை தீர்ந்து போன கடுப்பில் இருந்த மாமிகள் வீட்டுக்கு கிளம்ப "தோ இப்ப இந்த தடவை வந்துடும், கொஞ்சம் இருங்க"ன்னு கெஞ்ச நான் போய் சமாதானமாக "தோ பார் இப்படித்தான் இருக்கும். நான் பதிவ போட்டுட்டு இப்படித்தான் பரபரப்பா இருப்பேன்"ன்னு ஏதேதோ சொல்ல "அய்யோ அய்யோ அதோ ஆடுது அதோ ஆடுது"ன்னு கூச்சல். நான் உத்து உத்து பார்க்க "எங்க பார்க்கறீங்க, அதோ வலமிருந்து இடமா இரண்டாவதா ஆடுது பாருங்க"ன்னு சொன்னப்ப நான் "அட நம்ம பிரியா"ன்னு சொல்ல "அட அத விடுங்க அந்த புடவை நம்ம வீட்டு புடவைங்க என்னமா ஆடுது. அதுக்குள்ள தான் பிரியா இருக்கா"ன்னு சொல்ல எனக்கு தலை சுத்திகிட்டு கிர்ர்ர்ர்ன்னு வந்துச்சு. பக்கத்து வீட்டு மாமி எல்லாம் "ஏண்டீ நன்னா இருக்கே, இது அந்த பார்த்த முதல் நாளேல கமலி கட்டிண்டு வர்ர அதே டிசைன் தானே, சூப்பரா இருக்குடீ, அதிலயும் அந்த கருப்பு கலர் சேரிக்கு சிகப்பு பார்டரும் அட்டாச்சுடு பிளவுசும் சும்மா அசத்திட்டே போ..."ன்னு சிலாகித்து பேச பேச "கொஞ்சம் இருங்க மாமி, அடை மொருகலா எடுத்துட்டு வர்ரேன்"ன்னு கிச்சன் உள்ளே போக அப்போ பார்த்து மாடியிலே சுட்டி டிவி பார்த்து முடிச்ச பிரேக் டைம்ல வந்த பாப்பா "மாமீஸ் அடுத்த வாரம் சேம் டைம்க்கு வந்துடுங்கோ, என் நிகழ்ச்சி இருக்கு"ன்னு குண்டை தூக்கி போட நான் மெதுவா பாப்பாகிட்டே கேட்டேன் என்ன நிகழ்ச்சின்னு. அதுக்கு அவ 'வர வர நமீதா கவுன் பெருசா இருக்குதாம். அதான் என் ஃபஸ்ட் பர்த் டே கவுனை கூரியர் பன்ணியிருக்கேன் வர்ர வாரம் மானாட மயிலாட நம்ம நிகழ்ச்சி தான்"ன்னு நக்கலா சொல்லிட்டு போனா!!

என்ன கொடுமை சாரே!!

April 10, 2008

வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!


வ.வா.சங்க போட்டியை துவக்கி வைக்கிறேன். வெற்றி பெற வாழ்த்துங்கள்!

என்னோட "ரெண்டு"ங்க இவர்!

முதல் ஆளா வந்து வாழ்த்து சொல்றாங்க இவங்க! என்ன ஒரு ஆர்வம்!!!April 4, 2008

சில அழகிய நாட்குறிப்புகள்!!! பாகம் # 1

காலையில் எழுந்ததும் ஆட்டுக்கால் சூப், இரவினில் ஆப்பில் ஜூஸ் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். ஆனாலும் பாப்பாவின் குமட்டில் குத்தி குத்தி ஊட்டிவிட்டதின் மீதி இட்லிகள் அருமையாக இருக்கின்றது.

மயிலாடுதுறை புது பேருந்து நிலையத்தை மாயூரநாதர் அருகே அமைக்கலாமா அல்லது ரங்கநாதர் அருகே அமைக்கலாமா என்னும் சிவ வைஷ்ணவ சண்டை ஒரு மாமாங்கமா இப்பவும் தொடர்கிறது. அனேகமாக மாயூரநாதர் ஜெயிக்கலாம் போல இருக்கு இந்த தடவை. ஆனா தோற்க போவது என்னவோ மயிலாடுதுறை மக்களே! குரளி வித்தைகார அரசியல்வியாதிகள் கடைசிவரை பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப்போவதில்லை.

எண்ணிப்பார்க்கையில் அப்படி என்ன குறை பழைய பேருந்து நிலையத்துக்கு! நீர் அடைப்பு வியாதி உள்ளவனைக்கூட நேர்ந்துகிட்டு அழைச்சிட்டு வாங்க எங்க பேருந்து நிலையத்துக்கு, சும்மா பன்னீர் மாதிரி போகும். அப்படி ஒரு ராசி. நான் கூட வீட்டில் நாலு தடவை போயிட்டு வெளியூர் போக பஸ்ஸ்டாண்டு வந்தா ஆசை தீர ஒரு தரத்துக்கு போயிட்டு தான் போவேன். துபாய் ரிட்டர்னா இருந்தா என்ன எல்லே ராம் சார் மாதிரி அமரிக்கா ரிட்டர்னா இருந்தா என்ன அவரும் சென்னையிலிருந்து அடக்கிகிட்டே வந்து பஸ்ஸ்டாண்டில் பப்ளிக்கா போனாத்தான் நல்லத்துகுடிக்கே போக மனசு வரும்.

"லாஸ்ட்டே ஈஸ் அ ஹேப்பி டே" ன்னு சொல்லிகிட்டு சட்டையில் இங் அடிச்சிக்கும் எங்க மூதாதையரின் பழக்கத்தை பள்ளிகூடங்களில் எங்கள் வாரிசுகள் இன்னும் கட்டி பேணி காப்பாற்றி வருகிறார்கள் என்பது மனதுக்கு சந்தோஷமாக இருக்கின்றது.

இப்பவும் AVC பசங்களும் ஞானாம்பிகை புள்ளைங்களும் இறுதியாண்டுக்கு பாடம் படிக்கிறாங்களோ இல்லியோ “பாடித்திரிந்த பறவைகளே” சாதகம் பண்றாங்க.

கல்லூரியின் கடைசி நாளுக்கு இப்பவும் எங்கள் தாவணி ஸாரி சுடிதார் தேவதைகள் தங்கள் அம்மாவின் பட்டு புடவையை கடனாக வாங்கி போர்த்தி கொண்டு போகிறார்கள்.

குவாலிஸ்\ஸ்கார்ப்பியோக்களிள் ப.சிதம்பரம் காஸ்ட்டியூமில் இரு புருவத்துக்கு நடுவில் கரும் சிவப்பு குங்குமம் வைத்து கொண்டு இடது முழங்கையை கார் கதவில் வைத்து கொண்டு சென்னை ரவுடி மாதிரி இல்லாம ஜெண்டிலா ஒத்தை லாங் செயின் போட்டுகிட்டு குட்டி குட்டி தாதாக்கள் மயிலாடுதுறையை வலம் வருவது கண் கொள்ளா காட்சி. எங்க ஊர் பக்கம் வர்ரவங்க தவற விடாமல் பார்க்க கூடிய காட்சிகளில் இது முக்கியமானது. காரில் முன்னும் பின்னும் அவர்களின் பெயர் கண்டிப்பாக தசன் ஸ்டிக்கர்சில் அடித்து ஒட்டப்பட்டிருக்கும்.(மதுரை மீனாட்சி, மருவத்தூர் அல்லது மயிலாடுதுறை அவயாம்பிகை குங்குமம் மட்டுமே அப்படி ஒரு கரும் சிவப்பாக இருக்கும் என்பது உபரி செய்தி)

அவர்கள் காரில் உள்ளே அமர்ந்து கும்பிடு போடும் அழகே தனி. ஆக்ஷன்கிங் அர்ஜூன் மாதிரி தோள்களை விரித்தே வைத்திருப்பர். மருவத்தூர் “அம்மா” மாதிரி தொப்பை விழுந்த வயிற்றின் மேலே இரு கைகளையும் கொண்டு வந்து இரண்டு நடு விரல்கள் மாத்திரம் தொட்டு கொள்ளும் படியாக ஒரு கும்பிடு போடுவது மயிலாடுதுறையின் சிறப்பம்சங்களில் ஒன்று.ஆனால் இவர்கள் எல்லாம் நான் திண்ணையை பிடித்து நடக்கும் போது என் சுண்டுவிரலை பிடித்து நடந்தவர்கள். என்னை பார்த்து ரோட்டில் ஒரு தாதா கேட்டுச்சு “அண்ணே துபாய்ல ஆட்சி எல்லாம் எப்படி நடக்குது, நீங்க அங்கே என்ன பண்றீங்க?” எனக்கு வந்த பீறிட்டு கிளம்பிய ஆனந்தத்தை அடக்கிகிட்டே “நான் அல்கூஸ் வார்டு மாவட்ட பிரதிநிதியா இருக்கேன், கவுன்சிலர் கூட நம்ம பயதான்”ன்னு சொல்லி வச்சேன். அட பாழாப்போன கம்மனாட்டிங்களா!

இலவச வண்ண தொலைக்காட்சிக்காக ஒரு நாள் மதியம் நான் தூங்கிகிட்டு இருக்கும் போது வந்து பெயர் எழுதிகிட்டு போனாங்க. பாப்பா தான் அந்த அரசு ஊழியர்களிடம் பேசினாள்.

ஊழியர்: பாப்பா உங்க வீட்டிலே டி.வி இருக்கா?

பாப்பா: இருங்க நீக்க என்ன கேக்கறிங்கன்னு காதிலே விழலை. டி.வியை ஆஃப் பண்ணிட்டு வர்றேன்.

(அதற்குள் அந்த ஊழியர்கள்”பாருங்க இந்த பாப்பா வந்து டி வி இல்லைன்னு சொல்லும்”ன்னு பேசிகிட்டாங்க)

பாப்பா: இப்ப கேளுங்க என்ன வேணும்?

ஊழியர்கள்: பாப்பா உங்க வீட்டிலே டி வி இருக்கா”

பாப்பா: ம் இருக்கே, ஹால்ல 29’’ இருக்கு, மாடில 14’’ இருக்கு ஆனா டி வி இல்லன்னு எழுதிட்டு போங்க ஏன்னா கீழ் ரூம்ல எதுவும் இல்ல!

திஸ்கி: இன்னும் தொடரும். இந்த பதிவிலே எனக்கே தெரியாமல் அரசியல் புகுந்துடுச்சு! ஆனா அடுத்த பதிவிலே இன்னும் சுவாரஸ்யமான நாட்குறிப்புகள் சென்னை வலைப்பதிவர் சந்திப்புகள் உள்ளடக்கிய செய்திகளோடு!!!!