அப்படித்தான் நான் அன்றைக்கும் தூங்கி கொண்டிருந்த போது அருமையான என் அம்மாவின் ஸ்பரிசம் உணர்ந்தேன். எனக்கு நினைவு தெரிஞ்சு இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது இல்லை. என் நெற்றி முடியை ஒதுக்கி தள்ளிவிட்டு சொன்னாங்க,
"தம்பி! எழுந்திருடா, இந்தா காப்பி குடி கொஞ்சம் தெம்பா இருக்கும்"
எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. அம்மாவை பார்த்தேன்.
"என்ன ரேஷன் போகனுமா, போயிட்டு வந்துட்டா எனக்கு குடுத்த "தண்ட சோறு" பட்டத்தை திரும்பி வாங்கிடவா போறீங்க, என்னால முடியாது"
"என்னடா வெடுக்கு வெடுக்குன்னு பேசற, இந்தா முதல்ல இந்த காப்பி குடி நாம வெளியே போகனும். கொஞ்ச நேரத்திலே அப்பாவும் வந்திடுவாங்க"
என்னது அப்பாவா, தன் பொண்ணுங்க கல்யாணத்துக்கே ஒரே ஒரு நாள் தான் லீவ் எடுத்தாங்க. சின்சியர் சிகாமணியாச்சே, என்ன விஷயம் ஆபீஸ்ல இருந்து லீவ் போட்டுட்டு அப்படி என்ன அவசரமா எந்த ஊருக்கு போகனும். நான் தானே வீட்டிலே ஷெரீஃப் வேலை பார்க்கிறேன். எந்த எழவானாலும் நான் மட்டுமே தானே வீட்டின் சார்பாக கலந்துக்கறேன்.
அதுக்குள்ள அப்பா வந்து "தம்பிக்கு விஷயம் தெரியுமா"ன்னு அம்மாவை பார்த்து கேட்க அதுக்கு அம்மா என்னை பார்த்து "தம்பி, கிளம்புடா வைரத்து வீட்டுக்கு போகனும்"ன்னு சொன்னாங்க.
எனக்கு கொஞ்சம் ஷாக், ஆறு மாசம் முன்ன வைரத்தின் அப்பா செத்து போயிட்டாங்க. அப்பவும் இப்படித்தான் நடந்தது. அப்பத்தில இருந்தே அவங்க அம்மாவுக்கும் உடம்பு சரியில்ல. ஆகா ஆண்டவா வைரத்துக்கு மாத்திரம் என்ன சோதனை மேல் சோதனை!
"இரும்மா நான் கிளம்பிடுறேன். நீங்க முன்னால போங்க பஸ்ஸிலே, நான் சைக்கிள்ல வந்திடுறறேன். கார்த்திக்கு சொல்லியாச்சா, ஆமா உங்களுக்கு யார் சேதி சொன்னது?''
"இல்லடா தம்பி, வா அப்பா,கூடவே நாமளும் போயிடலாம், கார்த்தி, சங்கர், ஆனந்து எல்லாம் போயாச்சு அங்க, அவங்க வந்த போது நீ தூங்கிகிட்டு இருந்தியா நான் தான் எழுப்ப வேண்டாம்ன்னு அனுப்பிட்டேன் அவங்களை"
"நல்லா ஆளும்மா நீ, எதுக்கு எழுப்பனுமோ அதுக்கு எழுப்பாத, எத்தன தடவ வைரத்து அம்மா கையால சோறு தின்னுருப்பேன். சரி இரு வந்துட்டேன்"
ஆற அமர கொல்லை பக்கம் போனேன். அப்பாவை திரும்பி பார்த்த போது ஏதோ அவங்க முகத்திலே ஒரு படபடப்பு.
அப்பாவுக்கு எப்பவும் இப்படித்தான். எந்த வேலையாக இருந்தாலும் பறப்பாங்க. இப்ப அவசர அவசரமா வந்து தலை காமிச்சுட்டு "நானும் வந்தேன் கச்சேரிக்கு"ன்னு வைரத்துகிட்ட அட்டெண்டென்ஸ் குடுத்துட்டு ஆபீஸ்க்கு ஓடி வந்திடனும். ச்சே நான் கார்த்தி வீட்டிலே பிறந்திருக்கலாம்.
"அப்பா வைரம் வந்துட்டானாமா, எப்போ நடந்துச்சு, அவனுக்கு சேதி போயி கார்ல அவன் பறந்து அடிச்சுகிட்டு வந்தாலே கோயமுத்தூரில் இருந்து வர ஆறு மணி நேரம் ஆகும்!"
அப்பா வாயையே திறக்கவில்லை. அம்மாவை பார்த்தாங்க. சரி, அம்மா முகம் என்ன இத்தன வீங்கி இருக்கு. எதுனா பூச்சி பட்டு கடிச்சிருக்கும். சே ஒரு நாள் அம்மாவும் வைரம் அம்மா மாதிரி செத்து போய்டும்ல்ல, நாம இனிமே அது சொன்னா ரேஷன் கடைக்கு போகனும்!
முகத்தை துடைத்து கொண்டே அம்மா கிட்டே வந்தேன்.
"என்னம்மா, சாவுன்னா பயமா, விடும்மா பயப்படாதே, அவங்க விதி, உனக்கு என்ன கல்லுகுண்டு கணக்காதான் இருக்க, அதை நெனச்சு பயப்படுறியா, சரி விடு, வைரம் அப்பாவை எடுத்த மாதிரி நாலு மணிக்கே எடுத்துடுவாங்க அனேகமா, வந்து நான் ரேஷன் கடைக்கு போறேன் சரியா"
அய்யோ அம்மா எதுக்கு அழுவுது... நான் பேசாம வாயை மூடிகிட்டு இருந்திருக்கலாமோ!
வைரத்தின் வீடு என் வீட்டிலிருந்து நேர் கோடாக ஆறு கிலோமீட்டர். என் வீட்டின் வாசலில் பஸ் ஏறினால் ஆறுபாதியில் அவன் வீட்டு வாசலில் இறங்கி விடலாம்.
வாசலுக்கு வந்து சியாமளா கோவிலில் பஸ்ஸுக்கு நின்ன போது அம்மா முகத்தை பார்க்க முடியலை எனக்கு. அத்தனை வெளிரி போய் இருந்தது.
"தம்பி, பத்தாவது பண்ணென்டாவது பரிட்சை அப்பல்லாம் நம்ம வீட்டிலே தானே தங்குவான் வைரம்"
"ஆமாம்மா, பாவம்மா அவன்"
நாலாம் நம்பர் பஸ் வந்ததும், ஏறிக்கொண்டோம்! அம்மா ஜன்னல் ஓரம் போய் உட்கார்ந்ததும் அம்மா உட்க்காரட்டும் என நான் வேறு சீட் பார்த்து உட்க்கார போனேன். அப்போ அப்பா என்ன நினைத்தாங்களோ தெரியவில்லை!
"தம்பி வாடா அம்மா பக்கத்திலே உக்காந்துக்கோ"
எனக்கு நிரம்ப ஆச்சர்யமாகவும் கொஞ்சம் வெட்கமாகவும் கூட இருந்தது. நான் உட்கார்ந்த பின்னே எனக்கு அடுத்து அப்பா உட்கார பஸ்ஸில் எல்லோரும் என்னையே பார்ப்பது போல உணர்வு. வெட்கத்தின் காரணமாக கொஞ்சம் வேர்த்தும் போயிருந்தது.அப்பா என் பக்கத்தில் உட்கார்ந்த உடன் அவங்க பேஃவரிட் வசனம் தான் ஞாபகத்துக்கு வந்தது. "பத்து பைசா" வசனம். அப்பா பத்து பைசாவை வச்சிகிட்டு என்ன பண்ண போறாங்க, அதிகபட்சமா சைக்கிளுக்கு காத்து அடிக்கலாம், அதுவும் ஒரு வீலுக்கு தான் முடியும்! எனக்கு சிரிப்பு வந்தது. அப்பாவுக்கு வேற நல்ல டயலாக் எழுதி தரனும் என்று நினைத்து கொண்டேன்!
என் மேல கொஞ்சமும் ஆசையில்லை உங்களுக்கு என பாண்டியராஜன் ஒரு படத்தில் அவங்க அப்பா சிவாஜியிடம் சொல்லுவார். அப்போ சிவாஜி "தினமும் ஒரு தடவை தூக்கி கொஞ்சி முத்தம் கொடுக்கனுமா?" என கேட்பார். அதற்க்கு பாண்டியராஜன் "தினமும் கூட வேண்டாம் அட்லீஸ்ட் வாரம் ஒரு தடவையாவது கொடுக்கலாமில்லையா" என சொல்லுவார். தேவையில்லாமல் அந்த படகாட்சிகள் என் மனதில் வந்து போயின. என்னையே நொந்து கொண்டேன். எந்த நேரத்தில் எந்த நினைப்பு. பாவம் வைரம் கோவையிலிருந்து இந்நேரம் போடு போடுன்னு போட்டுகிட்டு வந்துகிட்டு இருப்பான்.
எனக்கு ஒரு கெட்ட பழக்கம்! பஸ்ஸில் ஏறி உட்காந்த உடனேயே தூக்கம் வந்து விடும். கஷ்டப்பட்டு கண்ணை கசக்கி கொண்டேன்.
வைரம் எனக்கு அறிமுகமானது நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான். நான் அட்மிஷன் முடிந்து வகுப்புக்கு வந்தபோது அனேகமாக எல்லா இருக்கைகளும் நிரம்பி போயிருந்தன. கடைசி பெஞ்சில் ஜன்னல் ஓர சீட்டில் வைரம் உட்கார்ந்திருந்தான். அவன் பக்கத்தில் ஒரு இடம்.
மனசே இல்லாமல் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அப்போதே அவனை விட்டு விலகியிருந்தால் இத்தனை மனசு கஷ்டங்களும் வந்திருக்க வாய்ப்பில்லை!
இப்போதைய நிலை "அவன் என்னை விட்டு விலகுவதும் இல்லை!! பிரிவதும் இல்லை!!!"
தொடரும்......