பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 29, 2008

லாஜிக் இல்லா மேஜிக்!!!

இந்த கலையை முழு நேர தொழிலாக கொண்ட கலைஞர்களும் உண்டு. அவ்வப்போது சுத்தி இருப்பவர்கள் கொஞ்சம் சீரியசாக இருக்கும் போது நடத்தி காட்டி அசத்தும் கலைஞர்களும் உண்டு. எனக்கும் கொஞ்சம் தெரியும் என்பதால் நம்ம குட்டீஸ்களுக்கு ஒரு நிகழ்ச்சி மாதிரி நடத்திக் காட்டி கற்று கொடுக்கலாம் என்பதற்காகவே இந்த பதிவு.

நிகழ்ச்சியில் பங்கு பெறும் குட்டீஸ் நிலாகுட்டி, பேபி பவன், பொடியன், மாதினி, அபிபாப்பா, அவந்திகா கூடவே நட்ராஜ் என்கிற நட்டு பாப்பா இவர்களோடு நானும். ஒரு நிகழ்ச்சின்னா தான் நான் அந்த பாத்திரமாவே ஆகிறேனோ இல்லியோ அட்லீஸ்ட் காஸ்ட்டியூமாவது அப்படி இருக்க வேண்டாமா. "ரெண்டு" படத்திலே நம்ம கைப்புள்ள போட்ட காஸ்ட்யூம் எல்லாம் போட்டுகிட்டு ஆஜராகியாச்சு.

பசங்க எல்லாம் ஒவ்வொருத்தரா வர நம்ம நட்டுவும் ரிவர்ஸ் கீரிலேயே வந்து சேர்ந்துட்டான்.

அபிஅப்பா: பசங்களா, வந்தாச்சா! நான் இப்போ செய்ய போவதை நல்லா கவனிச்சுகோங்க! இதோ இந்த சீட்டு கட்டிலே எத்தனை சீட்டு இருக்குதோ அத்தனையும் நான் நல்லா கலைச்சுடுவேன். பின்ன உங்க கிட்ட ஆளுக்கு ஒரு சீட்டு தருவேன். அதிலே என்ன படம் இருக்குன்னு எனக்கு நீங்க காமிக்க கூடாது. இருங்க நான் இப்ப நல்லா கலைக்கிறேன்.(நன்றாக கலைக்கப்பட்டது)

அவந்தி: அண்ணா, எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லை. குடுங்க நானும் ஒரு தடவை நல்லா கலைக்கிறேன்.

நிலா: அக்கா அப்புடி போடு அருவாள, இன்னிக்கு அபிஅப்பாவுக்கு டின்னுதான்.

அபி: வெல் செட் நிலா குட்டி, அவந்தி அக்கா நல்லா கலைச்சு குடுங்க

நான் மனதுக்குள்: அகராதி புடிச்சதுக்களா இருக்குதுங்களே!

நான்: சரி நல்லா கலைச்சுடுங்க, பின்னால கவர்னரா ஆகிடலாம். (கலைத்து என் கைக்கு கட்டு வருகிறது)

நான்: சரி நான் இப்ப அந்த சீட்டு கட்டை நான் உங்க கிட்ட காட்டும் போது ஆளுக்கு ஒரு சீட்டு கையில எடுத்துக்கணும். அதிலே என்ன படம் இருக்குன்னு என் கிட்ட காமிக்க கூடாது. சரியா?

எல்லாரும் ஆளுக்கு ஒரு சீட்டை எடுத்துகறாங்க.

நான்: சரி இப்ப எல்லாரும் அவங்க அவங்க சீட்டில் என்ன படம் இருக்குன்னு பார்த்துகோங்க, எனக்கு சீட்டின் பின் பக்கத்தை காட்டுங்க. என்ன படம் இருக்கு அதிலேன்னு மனசுல வச்சுகோங்க.

எல்லோரும் சீட்டின் பின் பக்கம் காட்ட நட்டு மட்டும் முன் பக்கத்தை காட்ட அதிலே டைமன் ராணி இருக்கு. உடனே பொடியன் அவசர அவசரமாக நட்ராஜ் சீட்டை வாங்கி திருப்பி சொருகி விடுறான் தம்பி கையிலே.

நான்: இப்போ எல்லோரும் உங்க சீட்டிலே என்ன படம் இருக்குன்னு பார்த்தாச்சா, அதை மனசிலே வச்சு கிட்டு சீட்டை கிழிச்...

பேபி பவன்: அங்கிள் நான் கிழிச்சுட்டேன் 234 தொகுதியா ஸாரி பகுதியா

நான்: அடங்கொய்யால! நான் சொல்லியே முடிக்கலை அதுக்குள்ள 234 தொகுதியா ச்சீ பகுதியா கிழிச்சுட்டியா ..சரி அபி பாப்பாவுக்கு 22 பகுதி குறையுதாம் அவளுக்கு குடு.

அவந்தி: அண்ணா ரெக்டாங்கிலா கிழிக்கனுமா, ஸ்கொயரா கிழிக்கனுமா, ட்ரையாங்கிலா கிழிக்கனுமா?

நான்: அவந்தி, நேரா மேத்ஸ் டியூஷன்ல இருந்து வந்தா இப்படில்லாம் சந்தேகம் வரும். உன்னை டார்ச்சர் பண்ணும் உன் கிளாஸ் டீச்சரை மனசிலே வச்சிகிட்டு கிழி

மாதினி: அங்கிள்! நான் என்ன மனசுல நினைச்சுகிட்டு கிழிக்கனும்!

நான்: உஸ் அப்பாடா இப்பவே கண்னை கட்டுதே,! மாதினி, "மானாட மயிலாட"ன்னு முருகன் ஸ்லோகம் நெனச்சு கிட்டு கிழி. அப்பதான் கிழி கிழி கிழின்னு கிழியும்

நிலா: அங்கிள அந்த ஸ்லோகம் "மானாட மயிலாட" இல்ல "வேலாட மயிலாட" ஹய்யோ ஹய்யோ!

அபி: அப்பா! நட்டு உங்களுக்கு முன்னமே நட்டு மாஜிக் பண்ணிட்டான்.

நான்: என்னது மாஜிக்கா, என்னா மாஜிக்

அபி: நீங்க கொடுத்த சீட்டிலே படம் இருந்துச்சா அது இப்போ மறைஞ்சிடுச்சு.

நான்: அய்யோ, மிஸ்டர் நட்ராஜ் எங்க உங்க சீட்டை காமிங்க!

நட்டு பாதி சீட்டை வாயில் விட்டுகிட்டு ஜொள் ஒழுகிகிட்டு இருக்கு. சீட்டை காமிக்க சொன்னா "மூஞ்சி" காமிக்குது!

நான்: நட்டு சாரே, தனி மனித தாக்குதல் இங்க வேண்டாம், இப்ப எதுக்கு "துர்கா" மூஞ்சிய காமிக்கிறீங்க, உங்க சீட்டை காமிங்க

அதுக்குள்ளே மாதினி நட்ராஜ் வாயிலிருந்து சீட்டை பிடுங்க அதுல இருந்த டைமன் ராணி ஜொள்ளிலே கரைச்சு போய் பிளாங்க்கா இருக்கு!

நான்: பசங்களா, அது மாஜிக் இல்ல நட்ராஜ் ராணிய ஜொள்ளுவிட்டு கரைச்சுட்டார். இப்ப என்னா பண்ணனும் ஒருத்தர் தலையில இன்னொருத்தர் கிழிச்ச சீட்டை போட்டுக்கனும்!

எல்லோரும் போட்டுக்கறாங்க!

கோரஸ்: அடுத்து என்னா செய்யணும்????

நான்: சமத்தா எல்லாரும் வீட்டுக்கு போய் படிச்சுட்டு சாப்பிட்டுட்டு தூங்கனும்!

அவந்தி: அப்ப மாஜிக்?

நான்: என்னது மாஜிக்கா?????

அபி: எனக்கு அப்பவே மைல்டா ஒரு டவுட் இருந்துச்சுப்பா உங்க மேல!

பொடியன்: இங்க என்னா நடக்குது?

மாதினி: அதானே, ஏதோ அங்கிள் மாஜிக் கத்து கொடுக்க போறார்ன்னு நம்பி வந்தேன்!

நிலாகுட்டி: மொவனே, நட்டுக்காக பார்க்கிறேன். காதை எப்படி கடிச்சு துப்பணும்ன்னு அபிஅக்கா சொல்லி குடுத்திருக்காங்க, ஈரோடு பக்கம் வந்து தான ஆகணும்!

பேபிபவன்: அதானே! வாங்க வச்சிக்கறோம்!

நான்: ஸ்டாப் ஸ்டாப்... நான் மாஜிக் சொல்லித்தரேன் வாங்கன்னு எப்பவாச்சும் சொன்னனா?

அவந்தி: அப்ப முதல் பாராவிலே பெரிய பில்டப்பு கொடுத்தீங்களே! "இந்த கலையை முழு நேர தொழிலாக கொண்ட கலைஞர்களும் உண்டு. அவ்வப்போது சுத்தி இருப்பவர்கள் கொஞ்சம் சீரியசாக இருக்கும் போது நடத்தி காட்டி அசத்தும் கலைஞர்களும் உண்டு. எனக்கும் கொஞ்சம் தெரியும் என்பதால் நம்ம குட்டீஸ்களுக்கு ஒரு நிகழ்ச்சி மாதிரி நடத்திக்காட்டி கற்று கொடுக்கலாம் என்பதற்காகவே இந்த பதிவு." இப்படி பில்டப்பு கொடுத்தீங்களே!

நான்: ஓ அதுவா, மொக்கை போடுவது எப்படின்னு சொல்லி கொடுக்கலாம்ன்னு வலைஞர்களுக்கு அதுவும் உங்களை போல வளரும் வலைஞர்களுக்கு சொல்லி கொடுக்கலாம்ன்னு அப்படி சொன்னேன். வழக்கம் போல ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் ஆகி கலைஞர்ன்னு ஆகிடுச்சு. அதை வச்சு நீங்களே மாஜிக்குன்னு நெனச்சுகிட்டா நானா பொறுப்பு!

நட்டு: நற நற நற.....

நான்: சார், உங்களுக்கு பேர் வச்சது வேணா கீதாபாட்டியா இருக்கலாம், அதுக்காக "நற நற" சொல்றதா, அதுக்கு காப்பிரைட் இப்பவும் அவங்க கிட்டதான் இருக்கு தெரியுமா?

அபி: இன்னும் சொல்ல போனா இன்னும் பல்லே முளைக்கலை, வேணும்னா "நழ நழ"ன்னு ஜொல்லு தம்பி!


*****************************



திஸ்கி: யார் கூப்பிட்டாங்கன்னு தெரியாது நானும் என் பங்குக்கு மொக்கை போட்டாச்சு








January 19, 2008

கண்மணி டீச்சருக்காகவும், பாஸ்டன் பாலா அவர்களுக்கும் - நான் எழுதியதில் பிடித்தது!!!

கண்மணி டீச்சரும், பாஸ்டன் பாலாவும் அழைத்ததின் பேரில் இந்த எழுதியதில் பிடித்த பதிவு. சென்ற வருடம் இந்த நேரத்தில் தான் நான் எழுத வந்தேன். "சாமிதான் காப்பாத்தணும்" என எழுத ஆரம்பித்து, நான்கைந்து பேர் வந்து எட்டிபார்த்து பின்னூட்டம் போட்டவுடன் ஜில்லுன்னு மனசு குதிக்க ஆரம்பித்து விட்டது. மேலும் நான் எந்த வித கனமான விஷயங்களையும் எழுதாமல் "சும்மா லூசா விடு மாமே" என்கிற பாணியில் எழுதியதால் கணிசமாக நிரம்பியது பின்னூட்ட பெட்டி.

அபிபாப்பாவுக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வு அதிகம் தான். இப்போது கூட போனில் "தம்பி மண்டி போட்டு நகர்கிறானா?" என கேட்டதற்கு "ம்.. ஆனா தம்பிக்கு ரிவர்ஸ் கீர் தாம்ப்பா விழுது, இன்னும் ஃபிரண்ட் கீர் சரியா விழலை"என்று தம்பி பின்பக்கமாக நகர்வதை கேஷுவலாக சொல்கிறாள். அதனால் தானோ என்னவோ அவள் பற்றின என் பதிவுகள் சூப்பர் ஹிட் ஆகியது. "பாரதிக்கும் பாரத மாதாவுக்கும் என்ன பிரச்சனை" பதிவு எண் 13 வது பதிவு. 134 பின்னூட்டங்களை வாங்கி கொடுத்த பதிவு. பலமுறை "வலைச்சரத்தில் பரிந்துரைக்கப்பட்ட பதிவு. பல பதிவர்களை என் பக்கம் திருப்பி விட்ட பதிவு. அந்த பதிவில் "பழம் எனக்குத்தான் என்னும் டயலாக் 17 பக்கங்களிலும் எழுதப்பட்டிருந்தது" என்ற வசனம் எனக்கே பிடித்து இருந்தது. அது போல கிளைமாக்ஸும், அதில் பாப்பா என்னிடம் பேசும் டயலாக்கும் "அப்ப நான் தான் லூசா" என்ற என் டயலாக்கும் எல்லோருக்கும் பிடித்து இருந்தது.
அது போல "அபிபாப்பாவும் அஞ்சு ஜார்ஜும்" பதிவு. இந்த பதிவும் பலமுறை வலைச்சரத்தில் வந்து எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. வ.வா.சங்க போட்டியிலும் இந்த பதிவு வெற்றி பெற்றது. அந்த பதிவில் பாப்பா பெரிய குழிகரண்டியில் நெல்லிக்காய் அளவினால எலுமிச்சம் பழம் வைத்து போட்டிக்கு போனதும் வீட்டுக்கு வந்து என் அம்மாவிடம் கடையில் வாங்கிய பரிசுகளை சொல்வதும் எனக்கு பிடித்த நிகழ்வுகள்.

அபிபாப்பாவின் "பசுவுக்கு சவாலா" பதிவும் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்ததோடு இல்லாமல் நான் சிறந்த காமடி பதிவராக நினைக்கும் டுபுக்கு அவர்களால் "தேசி பண்டிட்டில்" இணைக்கும் அளவு இருந்தது அந்த பதிவு. மீன் விற்க வந்த மீன்காரியிடம் பாப்பா 100 முறை குருவணக்கம் வைத்து மீன் காய்ந்து கருவாடு ஆகி, போகும் போது "கருவாடு வாங்கலையோ கருவாடு" என கூவிக்கொண்டு போகும் காட்சி எனக்கு பிடித்தது.

அது போல என் நண்பன் குரங்கு ராதாவை வைத்து எழுதப்பட்ட பதிவுகளும் எனக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. " மன்னார்குடி குரூப்பும்" மீண்டும் டுபுக்கு அவர்களால் தேசிபண்டிட்டில் இணைக்கப்பட்டது. இது அரசியல் சம்பந்த பட்ட பதிவு என நினைத்து சிலர் எட்டி பார்க்காமல் போனது துரதிஷ்டம்.

"குரங்கு ராதாவுக்கு ஒரு கடிதம்" பதிவும் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. கீதாம்மா அதற்கு போட்ட ஒரு பின்னூட்டம் "கோப்பெரும் சோழனுக்கும் பிசிராந்தையாரின் நட்பு போல அல்லவா இருக்கின்றது உங்கள் நட்பு" என பின்னூட்டம் போட்டிருந்தார்கள். அதற்கு லொடுக்கு அவர்கள் "ஏன் அவர்களும் டாய்லெட்டில் சாந்தி ஐ லவ் யூ என எழுதினார்களா?" என பின்னூட்டம் போட்டிருந்தார். நான் நீண்ட நாள் அதை நினைத்து சிரித்ததுண்டு.

"ராதா குரங்கு ராதாவாக மாறிய கதை" பதிவில் நாகை சிவா பின்னூட்டத்தில் "ராதா குரங்கு ராதாவாக ஆக்கப்பட்ட கதை" என தலைப்பிட்டு இருக்கணும் என பின்னூட்டம் போட்டதை நான் வெகுவாக ரசித்தேன்.

இப்படியாக எழுதி கொண்டிருந்த நேரத்தில் "டாக்டர் ராமமூர்த்தி M.B.B.S" பதிவு என் மயிலாடுதுறை சக பதிவர்கள் அத்தனை பேரையும் என் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. அதில் எனக்கு கிடைத்த்த லாபாம் டாக்டர் டெல்பின் அம்மா அவர்களின் நட்பு.

அது போல என் நட்சத்திர வாரத்தில் "கல்யாண வீட்டுக்கு சமைக்க போன கதை" எனக்கு மிகவும் பிடித்த என் பதிவுகளில் ஒன்று. அதே நட்சத்திர வாரத்தில் சக பதிவர்களை சரளமாக கலாய்க்கும் நண்பர் நாமக்கல் சிபியின் "மாதங்களில் அவள் மார்கழி-விமர்சனம்" எனக்கு பிடித்து இருந்தது.

நான் கவிதை எழுதுகிறேன் என கையை சுட்டு கொண்டதும் உண்டு. சமையல்குறிப்பை ரொமான்சாக சொல்கிறேன் என அடி வாங்கியதும் உண்டு.

நட்சத்திர வாரத்தில் எழுதிய "திருநங்கை கண்ணகி" பதிவும் எனக்கு மனதுக்கு திருப்தி தந்த பதிவு. பதிவு எழுதி நீண்ட நாட்கள் கழித்து லிவிங் ஸ்மைல் வித்யாவிடம் இருந்து "பதிவு நல்லா இருக்கு" என்று ஒரு பின்னூட்டம் வந்தது. மிக்க நன்றி வித்யா!

நான் சமீபத்தில் எழுதிய "பொங்கல் சாப்பிடுவது எப்படி?" பதிவும் "காபி சாப்பிடுவது எப்படி" பதிவும் என்க்கு பிடித்தமான பதிவுகள்.

"ஆனந்த விகடனில் அபிஅப்பா" மற்றும் கும்மி பதிவில் எழுதிய "பூங்காவில் அபிஅப்பா" மற்றும் "துபாயில் என் புதிய தோழன்" போன்ற என் மொக்கை பதிவுகளில் "அது மொக்கை தான்" என சான்று அளிக்கும் விதமாக பெனாத்தலார் ஆஜராகி பின்னூட்டம் இட்டிருப்பார். வாழ்க உப்புமா தலைவர் பெனாத்தலார்.

"இவர் ஒரு மல்டி நேஷனல் கம்பனியின் முதலாளி" என நான் எழுதிய பதிவு எனக்கு மிக பெரிய பாராட்டை வாங்கி தந்தது.

கிளைமாக்ஸ்க்கு வருகிறேன். நான் எழுதியதில் ரன்னரப் பதிவு என பார்த்தால் "அஞ்சு ஜார்ஜும் அபிபாப்பாவும்". நானும் தங்கமணியும் சாக்கு ரேஸில் அபிபாப்பாவை தூக்கி கொண்டு ஓடும் போது "அப்பா டைகர் பாவம்ப்பா அதையும் தூக்கி சாக்கிலே போடுப்பா" என சொல்வதும் தான் புது ஷூ வாங்கியதை காலை தூக்கி கூட ஓடிவரும் பையனிடம் காட்டி சாக்கின் உள்ளே விழுவதும், பிரின்சிபால் எங்களை பார்த்து " குழந்தைகளுக்கு பேரண்ட்ஸ் ஹெல்ப் பண்ணலாம்ன்னு சொன்னதுக்காக நீங்களே தூக்கிகிட்டு ஓடுவது கொஞ்சமும் நல்லா இல்லை" என திட்டுவதும் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள். ஆக இதுவே என் ரன்னரப் பதிவு.

அப்படி என்றால் வின்னரப் பதிவு எது என கேட்கிறீர்களா?

"ஒரு கிராமத்து நினைவுகள்"

நான் மிகவும் ரசித்து எழுதியது இந்த பதிவு. பத்து நிமிடத்தில் எழுதிவிட்டேன். தஞ்சை மாவட்ட கிராமத்து ஸ்லேங், எனக்கு அந்த பதிவிலே மிகுந்த மனசு திருப்தி கிடைத்தது. சொல்ல வந்ததை சரியாக சொன்ன திருப்தி கிடைத்தது. ஒரு 30 வருஷம் பின்னே போய் வந்த மாதிரி ஒரு சந்தோஷம் கிடைத்த்தது. நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இன்னும் படிக்க வில்லை எனில் இப்போ படியுங்க.

பாஸ்டன் பாலா அவர்களும் கண்மணி டீச்சரும் எனக்கு கொடுத்த இந்த வாய்ப்பினை மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டேன் என நினைக்கிறேன். உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி!!!

January 13, 2008

வைர நெஞ்சம்!!! - ஒரு குறுந்தொடர்

பத்துபைசா சம்பாதிச்சு என்கிட்ட வந்து காமிச்சுடு நான் உன்னை ஆம்பிளைன்னு ஒத்துகறேன் என அப்பாவால் என் ஆண்மைக்கு சவால் விடப்பட்டு, அதை பத்தியெல்லாம் கவலைப்படாமல் நான் உண்டு என் தூக்கம் உண்டு என நான் சந்தோஷமாக இருந்த நாட்கள் அவை. காலை பத்து மணி என்பதே விடியல் காலை. அம்மாவால் அவ்வளவு சுலபமாக என்னை எழுப்பி விட முடியாத காரணத்தால் அரை சொம்பு தண்ணிக்கு அந்த பொறுப்பை அம்மா தந்துவிட்டாங்க.

அப்படித்தான் நான் அன்றைக்கும் தூங்கி கொண்டிருந்த போது அருமையான என் அம்மாவின் ஸ்பரிசம் உணர்ந்தேன். எனக்கு நினைவு தெரிஞ்சு இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது இல்லை. என் நெற்றி முடியை ஒதுக்கி தள்ளிவிட்டு சொன்னாங்க,

"தம்பி! எழுந்திருடா, இந்தா காப்பி குடி கொஞ்சம் தெம்பா இருக்கும்"

எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. அம்மாவை பார்த்தேன்.

"என்ன ரேஷன் போகனுமா, போயிட்டு வந்துட்டா எனக்கு குடுத்த "தண்ட சோறு" பட்டத்தை திரும்பி வாங்கிடவா போறீங்க, என்னால முடியாது"

"என்னடா வெடுக்கு வெடுக்குன்னு பேசற, இந்தா முதல்ல இந்த காப்பி குடி நாம வெளியே போகனும். கொஞ்ச நேரத்திலே அப்பாவும் வந்திடுவாங்க"

என்னது அப்பாவா, தன் பொண்ணுங்க கல்யாணத்துக்கே ஒரே ஒரு நாள் தான் லீவ் எடுத்தாங்க. சின்சியர் சிகாமணியாச்சே, என்ன விஷயம் ஆபீஸ்ல இருந்து லீவ் போட்டுட்டு அப்படி என்ன அவசரமா எந்த ஊருக்கு போகனும். நான் தானே வீட்டிலே ஷெரீஃப் வேலை பார்க்கிறேன். எந்த எழவானாலும் நான் மட்டுமே தானே வீட்டின் சார்பாக கலந்துக்கறேன்.

அதுக்குள்ள அப்பா வந்து "தம்பிக்கு விஷயம் தெரியுமா"ன்னு அம்மாவை பார்த்து கேட்க அதுக்கு அம்மா என்னை பார்த்து "தம்பி, கிளம்புடா வைரத்து வீட்டுக்கு போகனும்"ன்னு சொன்னாங்க.

எனக்கு கொஞ்சம் ஷாக், ஆறு மாசம் முன்ன வைரத்தின் அப்பா செத்து போயிட்டாங்க. அப்பவும் இப்படித்தான் நடந்தது. அப்பத்தில இருந்தே அவங்க அம்மாவுக்கும் உடம்பு சரியில்ல. ஆகா ஆண்டவா வைரத்துக்கு மாத்திரம் என்ன சோதனை மேல் சோதனை!

"இரும்மா நான் கிளம்பிடுறேன். நீங்க முன்னால போங்க பஸ்ஸிலே, நான் சைக்கிள்ல வந்திடுறறேன். கார்த்திக்கு சொல்லியாச்சா, ஆமா உங்களுக்கு யார் சேதி சொன்னது?''

"இல்லடா தம்பி, வா அப்பா,கூடவே நாமளும் போயிடலாம், கார்த்தி, சங்கர், ஆனந்து எல்லாம் போயாச்சு அங்க, அவங்க வந்த போது நீ தூங்கிகிட்டு இருந்தியா நான் தான் எழுப்ப வேண்டாம்ன்னு அனுப்பிட்டேன் அவங்களை"

"நல்லா ஆளும்மா நீ, எதுக்கு எழுப்பனுமோ அதுக்கு எழுப்பாத, எத்தன தடவ வைரத்து அம்மா கையால சோறு தின்னுருப்பேன். சரி இரு வந்துட்டேன்"

ஆற அமர கொல்லை பக்கம் போனேன். அப்பாவை திரும்பி பார்த்த போது ஏதோ அவங்க முகத்திலே ஒரு படபடப்பு.

அப்பாவுக்கு எப்பவும் இப்படித்தான். எந்த வேலையாக இருந்தாலும் பறப்பாங்க. இப்ப அவசர அவசரமா வந்து தலை காமிச்சுட்டு "நானும் வந்தேன் கச்சேரிக்கு"ன்னு வைரத்துகிட்ட அட்டெண்டென்ஸ் குடுத்துட்டு ஆபீஸ்க்கு ஓடி வந்திடனும். ச்சே நான் கார்த்தி வீட்டிலே பிறந்திருக்கலாம்.

"அப்பா வைரம் வந்துட்டானாமா, எப்போ நடந்துச்சு, அவனுக்கு சேதி போயி கார்ல அவன் பறந்து அடிச்சுகிட்டு வந்தாலே கோயமுத்தூரில் இருந்து வர ஆறு மணி நேரம் ஆகும்!"

அப்பா வாயையே திறக்கவில்லை. அம்மாவை பார்த்தாங்க. சரி, அம்மா முகம் என்ன இத்தன வீங்கி இருக்கு. எதுனா பூச்சி பட்டு கடிச்சிருக்கும். சே ஒரு நாள் அம்மாவும் வைரம் அம்மா மாதிரி செத்து போய்டும்ல்ல, நாம இனிமே அது சொன்னா ரேஷன் கடைக்கு போகனும்!

முகத்தை துடைத்து கொண்டே அம்மா கிட்டே வந்தேன்.

"என்னம்மா, சாவுன்னா பயமா, விடும்மா பயப்படாதே, அவங்க விதி, உனக்கு என்ன கல்லுகுண்டு கணக்காதான் இருக்க, அதை நெனச்சு பயப்படுறியா, சரி விடு, வைரம் அப்பாவை எடுத்த மாதிரி நாலு மணிக்கே எடுத்துடுவாங்க அனேகமா, வந்து நான் ரேஷன் கடைக்கு போறேன் சரியா"

அய்யோ அம்மா எதுக்கு அழுவுது... நான் பேசாம வாயை மூடிகிட்டு இருந்திருக்கலாமோ!

வைரத்தின் வீடு என் வீட்டிலிருந்து நேர் கோடாக ஆறு கிலோமீட்டர். என் வீட்டின் வாசலில் பஸ் ஏறினால் ஆறுபாதியில் அவன் வீட்டு வாசலில் இறங்கி விடலாம்.

வாசலுக்கு வந்து சியாமளா கோவிலில் பஸ்ஸுக்கு நின்ன போது அம்மா முகத்தை பார்க்க முடியலை எனக்கு. அத்தனை வெளிரி போய் இருந்தது.

"தம்பி, பத்தாவது பண்ணென்டாவது பரிட்சை அப்பல்லாம் நம்ம வீட்டிலே தானே தங்குவான் வைரம்"

"ஆமாம்மா, பாவம்மா அவன்"

நாலாம் நம்பர் பஸ் வந்ததும், ஏறிக்கொண்டோம்! அம்மா ஜன்னல் ஓரம் போய் உட்கார்ந்ததும் அம்மா உட்க்காரட்டும் என நான் வேறு சீட் பார்த்து உட்க்கார போனேன். அப்போ அப்பா என்ன நினைத்தாங்களோ தெரியவில்லை!

"தம்பி வாடா அம்மா பக்கத்திலே உக்காந்துக்கோ"

எனக்கு நிரம்ப ஆச்சர்யமாகவும் கொஞ்சம் வெட்கமாகவும் கூட இருந்தது. நான் உட்கார்ந்த பின்னே எனக்கு அடுத்து அப்பா உட்கார பஸ்ஸில் எல்லோரும் என்னையே பார்ப்பது போல உணர்வு. வெட்கத்தின் காரணமாக கொஞ்சம் வேர்த்தும் போயிருந்தது.அப்பா என் பக்கத்தில் உட்கார்ந்த உடன் அவங்க பேஃவரிட் வசனம் தான் ஞாபகத்துக்கு வந்தது. "பத்து பைசா" வசனம். அப்பா பத்து பைசாவை வச்சிகிட்டு என்ன பண்ண போறாங்க, அதிகபட்சமா சைக்கிளுக்கு காத்து அடிக்கலாம், அதுவும் ஒரு வீலுக்கு தான் முடியும்! எனக்கு சிரிப்பு வந்தது. அப்பாவுக்கு வேற நல்ல டயலாக் எழுதி தரனும் என்று நினைத்து கொண்டேன்!

என் மேல கொஞ்சமும் ஆசையில்லை உங்களுக்கு என பாண்டியராஜன் ஒரு படத்தில் அவங்க அப்பா சிவாஜியிடம் சொல்லுவார். அப்போ சிவாஜி "தினமும் ஒரு தடவை தூக்கி கொஞ்சி முத்தம் கொடுக்கனுமா?" என கேட்பார். அதற்க்கு பாண்டியராஜன் "தினமும் கூட வேண்டாம் அட்லீஸ்ட் வாரம் ஒரு தடவையாவது கொடுக்கலாமில்லையா" என சொல்லுவார். தேவையில்லாமல் அந்த படகாட்சிகள் என் மனதில் வந்து போயின. என்னையே நொந்து கொண்டேன். எந்த நேரத்தில் எந்த நினைப்பு. பாவம் வைரம் கோவையிலிருந்து இந்நேரம் போடு போடுன்னு போட்டுகிட்டு வந்துகிட்டு இருப்பான்.

எனக்கு ஒரு கெட்ட பழக்கம்! பஸ்ஸில் ஏறி உட்காந்த உடனேயே தூக்கம் வந்து விடும். கஷ்டப்பட்டு கண்ணை கசக்கி கொண்டேன்.

வைரம் எனக்கு அறிமுகமானது நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான். நான் அட்மிஷன் முடிந்து வகுப்புக்கு வந்தபோது அனேகமாக எல்லா இருக்கைகளும் நிரம்பி போயிருந்தன. கடைசி பெஞ்சில் ஜன்னல் ஓர சீட்டில் வைரம் உட்கார்ந்திருந்தான். அவன் பக்கத்தில் ஒரு இடம்.

மனசே இல்லாமல் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அப்போதே அவனை விட்டு விலகியிருந்தால் இத்தனை மனசு கஷ்டங்களும் வந்திருக்க வாய்ப்பில்லை!

இப்போதைய நிலை "அவன் என்னை விட்டு விலகுவதும் இல்லை!! பிரிவதும் இல்லை!!!"

தொடரும்......



January 9, 2008

105 பதிவே உனக்கு அதிகம்டா அபிஅப்பா!!! பை!! பை!!!!

உண்மைதான் நான் புத்தாண்டு அன்று சில மன கஷ்டங்களோடு இருந்தேன்.அதை நண்பர் வினியூக்கியோடுகூட பகிர்ந்து கொண்டு அவரின் மேலும் சுமை ஏற்றினேன்! உண்மை!

ஆனாலும் அதுக்கு அடுத்து நான் போட்ட ஒரு பதிவை தூக்கி விட்டேன்! காரணம் நான் எப்பவும் சாக்கடையில் கல் எறிய மாட்டேன் என்பது எல்லாருக்கும் தெரியும் என்பதால்!

அதற்கு பின்ன நான் போட்ட பதிவுக்கு நான் இது வரை கானாத அளவு கண்டணம் வர காரனம் தெரியவில்லை!

நான் குசும்பனுக்கு போட்டியாக பதிவு போட்டேன் என ஒரு அனானி நண்பர்\நண்பி சொல்லியிருந்தாங்க!

மன்னிக்கனும்! நான் தான் முதலில் வாழ்த்து சொன்னவன் குசும்பனுக்கு! மேலும் "மும்பையில் பெண்கள் மானபங்க படுத்துத்தப்பட்டபோது எடுத்த போட்டோ இது தான்" என நம் சாந்தோம் சர்ச்சில் எடுத்த போட்டோ போடலாம்" என சொல்லியவனும் நான் தான். அதாவது நம் சென்னை நல்லா இருக்கு! மும்பை தான் திருந்தனும் என உள் அர்த்தத்தோடு சொல்ல நினைச்சு சில கருத்துகள் சொல்ல வரும் போது save என்பதற்க்கு பதில் publish கொடுத்து அவசர அவசரமாக டெலேட் செய்யும் முன் ஒரு அவசரகுடுக்கை அனானி வந்து நான் குசும்பனுக்கு போட்டி என்றும் நான் மாயூரநாதரை கும்பிட்டு வந்தாள் சரியாகும் எனவும் பின்னூட்டம் போட்டிருக்கங்க!

நான் குசும்பனுக்கோ யாருக்கோ போட்டி போட்டவனில்லை! ஏனனில் அவன் என் தம்பி!

அது தவிர மாயூரநாதருக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு! மாயூரத்தின் தாதாக்களை அழிக்கும் வேலை!!! சரியா! அவர் பிலாக் பார்க்க மாட்டார் என நிணைக்கிறேன்

ஆனால் என் நகைச்சுவை உணர்வு குறைந்து போனதாக என் நண்பர்கள் \நண்பிகள் உணர்வதால் இத்துடன் என் நகைச்சுவை மாதிரி என்னும் என் பதிவுகளை நிறுத்திகொள்கிறேன்! கிட்ட தட்ட என் பதிவுகளை "எல்லாம்" கூட நிறுத்தி கொள்கிறேன்! ஆதரவுக்கு நன்றி! வணக்கம்!!!

January 6, 2008

குப்பனும், சுப்பனும் என் புத்தாண்டு பிறப்பும்!!!!

புத்தாண்டு 2008 பிறந்ததே எனக்கு ஒரு மாதிரியா கல கலன்னு காமடியாமே பிறந்துச்சு. நான் வேலை முடிந்து வந்ததே 10.30க்கு தான். சரி இந்த வருடம் நல்ல பிள்ளையா இருப்போம்ன்னு எங்கயும் போகாம பேசாம சேட்டிங்ல உக்காந்துட்டேன். 12.00 ஆகும் போது நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லிட்டு படுக்கலாம்ன்னு நெனச்ச போது தான் ஒரு குடிகார குப்பன் வந்து "அண்ணே நம்ம ரூம்க்கு வந்து சிறப்பிங்க அண்ணே, புது வருஷம் எங்களுக்கு நல்லா ஆரம்பிக்கட்டும் அண்ணே"ன்னு கூப்பிட்டான். ரொம்ப நல்லவனா இருக்கானே, நம்மையும் மதிச்சு கூப்பிடுறானேன்னு போனேன்.

அந்த பையன் எனக்கு உபசரித்த போது "இல்லப்பா எனக்கு லாகிரி வஸ்துகள் ஒத்துக்காது"ன்னு சொல்லிட்டு முந்திரி பருப்பை மாத்திரம் மேஞ்சேன். சரி ன்னு கலைஞர் டிவி போட்டா ஒரே குடிகார பாட்டா போட்டாங்க. எம்ஜியாரை கூட விட்டு வைல்ல வில்ல. "ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து"ன்னு மஞ்சுளா கூட அவர் லந்து பண்ணும் பாட்டு ஓடுது. ஆஹா ஏழரையை கூட்டுறானேன்னு நெனச்சு கிட்டு இருக்கும் போது தான் இன்னும் ஒரு குடிகார சுப்பன் வந்தான்.

இந்த குப்பனும் சுப்பனும் தான் என் புத்தாண்டு தினத்தை கலகலன்னு ஆக்கினாங்க. அவங்க பேச்சை கேட்டுகிட்டே நான் சேட்டிங்க இருந்தேன். என்ன பேசறோம்ன்னு தெரியாம ரொம்ப சூப்பரா மொக்கை போட்டு கிட்டு இருந்தாங்க. திடீர்ன்னு குப்பன் சுப்பனை பார்த்து " ஆமா நாம இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்கோமே, உங்க ஊர் என்னன்னு சொல்லவே இல்லியே" ன்னு கேக்க அந்த உரையாடலை பாருங்க!

குப்பன்:ஆமா நாம இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்கோமே, உங்க ஊர் என்னன்னு சொல்லவே இல்லியே!

சுப்பன்: அட ஆமால்ல, நான் திருச்சி நீங்க

குப்பன்: திருச்சில எங்க?

// அவன் தான் அவன் ஊரை சொல்லிட்டான்ல, பதிலுக்கு உன் ஊரை சொல்ல வேண்டியது தானே//

சுப்பன்: பாலக்கரை தெரியுமா?

குப்பன்: தெரியுமாவா? பாலக்கரையில எங்க?

சுப்பன்: ம்ம்ம் சத்திரம் பஸ்ட்டாண்டு

குப்பன்: பஸ்ட்டாண்டுல?

சுப்பன்: யோவ் நல்லா வருது வாயில பஸ்ட்டாண்டுல பிச்சையா எடுக்கறேன். பஸ்ட்டாண்டுன்னா பக்கத்துல தான்!

குப்பன்: அப்படின்னா நம்பிய தெரியுமா?

சுப்பன்: தெரியுமாவா, என்னய பார்த்துட்டார்ன்னா விட மாட்டாரு, எலேய் குப்பா எப்படி இருக்கன்னு கேக்காம இருக்க மாட்டாரு. அவருக்காக நான் ஒரு பிராஜக்ட்டு கூட பண்ணினேன். அதுல ரொன்ப சந்தோஷம் அவருக்கு!

குப்பன்: நான் கூட வெள்ளை ரவி அண்ணன் கிட்ட பிராஜக்ட் பண்ணினேன், இப்ப இங்க வந்ததுக்கு பின்ன எல்லாத்தையும் விட்டுட்டேன்!

//எனக்கு அவனுங்க என்ன பேசிக்கிறாங்கன்னு புரிஞ்சு போச்சு. ஏதோ பெரிய பெரிய கம்பெனிகளுக்கு புரொகிராம் எழுதி குடுத்த ரேஞ்சுக்கு பேசிகிட்டு இருந்தானுக//

சுப்பன்: வெள்ளை ரவி அண்ணனை போட்ட போது நான் ஸ்பாட்டில தான் இருந்தேன்....

குப்பன்: அப்படியா முட்டை ரவி முட்டை போட்ட போது நான் இருந்தேன்!

இப்படியாக சுத்தி வளைச்சு தமிழ் நாட்டின் அத்தனை தாதாக்களும் அவங்களுக்கு ரொம்ப பரிச்சயம் என்பது போலவும் அதிலே ரொம்ப பெருமையாகவும் பேசிகிட்டே இருந்தானுங்க. அவனுங்க ஆள் எப்படி இருப்பானுங்கன்னு இந்த இடத்திலே சொல்லியாகனும். தனுஷ்க்கு 10 நாள் சோறு போடாம பட்டினி போட்ட மாதிரி இருப்பானுங்க. எனக்கு இதல்லாம் கேக்க கேக்க ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. இப்படியே அவங்க காமடி பண்ணிகிட்டு இருக்கும் போது என் பக்கமா திரும்பிட்டானுங்க.

குப்பன்: அண்ணே நீங்க எந்த ஊரு?

நான்: நான் மாயவரம்ங்க

சுப்பன்: அட மாயவரமேவா பக்கமா?

நான்: அக் மார்க் மாயவரமே தான்

குப்பன்: எந்த தெரு?

எங்க ஊர்க்காரங்க இது போல தாதா பத்தின பேச்சா இருந்தா எதுக்கும் இருக்கட்டும்ன்னு ஒரு ஸேஃபா கொத்த தெருன்னு சொல்லிக்கிறது வழக்கம்.

நான்: கொத்த தெருவுங்க

குப்பன்: அட கொத்த தெருவுல யாரை தெரியும்

நான்: என்னைய தெரியும், என் அப்பா தம்பி எல்லாரையும் தெரியும்ங்க

சுப்பன்: அட அத கேக்கல, அங்க எந்த தாதாவை தெரியும்?

ஆஹா இவனுங்க தேரை இழுத்து தெருவுல உட பார்க்கிறாயங்களேன்னு நெனச்சு கிட்டு இருந்தப்ப தான் நம்ம கொத்ஸ் ஆன்லைன்ல இருப்பது தெரிஞ்சுது. உடனே நான் அவங்க கிட்ட " கொத்த தெருவிலே கொத்தனாரை தெரியும்"ன்னு சொல்ல குப்பனும் சுப்பனும் ஒரே நேரத்துல "எந்த கொத்தனார்"ன்னு கேக்க "இலவச கொத்தனார்"ன்னு சொல்லி வச்சேன்.

குப்பனும் சுப்பனும் தான் தங்களுக்கு எல்லா தாதாவையும் தெரிஞ்ச மாதிரி பீலா விட்டு கிட்டு இருக்காங்களே, இலவச கொத்தனாரை தெரியாதுன்னு சொன்னா அசிங்கமா போயிடுமேன்னு திரு திருன்னு முழிச்சுட்டு பின்ன ஒரு வழியா சமாளிச்சாரு குப்பன்.

குப்பன்: அட நம்ம இலவச கொத்தனாரா, ஆஹா அவரு அருவாளை முதுகுல வச்சிருக்கும் அழகே தனி பாணிப்பா, வெட்டி முடிஞ்ச பின்ன கைலிய தூக்கி கடாசிட்டு அசால்ட்டா பாடி மேல பிளட்ட தடவும் அழகே தனிப்பா

எனக்கு தூக்கி வாரி போட்டுடுச்சு. அப்படியே நெனச்சு பார்த்தேன் நம்ம கொத்ஸ்ஸை. ரொம்ப அலாதியா இருந்துச்சு. அவனுங்க என்னை விடுற மாதிரி இல்ல "வேற யாரை தெரியும்"ன்னு கேட்டாங்க. சரின்னு "வெட்டி பாலாஜி"ன்னு சொன்னேன். அதுக்கு சுப்பன் "அடடே அந்த அண்ணனா, பல பேரை வெட்டினதால குத்தாலல் போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்த பட்டம் தான் அந்த "வெட்டி"ன்னு சொன்னான்.

எனக்கு ரொம்ப இண்ட்டஸ்ட்டா போச்சு. சரி பசங்க பதிவு போட மேட்டர் தர்ராங்கன்னு நெனச்சு கிட்டு "எனக்கு இன்னும் சில பேர் எல்லாம் தெரியுங்க அவங்களை பத்தி தெரியுமான்னு சொல்லுங்கன்னு சொல்லிட்டு லக்கிலூக், சென்ஷி, தம்பி கதிர், அய்யனார், அண்ணாச்சி, குசும்பன் இவங்களை எல்லாம் தெரியுமான்னு கேட்டேன்.

குப்பன்: லக்கிலூக் அண்ணே இருக்காரே ஆறு அடி உயரத்துல 100 கிலோ மாமிச மலை, கிட்டதட்ட சினிமா பொன்னம்பலம் மாதிரி இருப்பார்.

சுப்பன்: சென்ஷி இவரு சைனாகார் மாதிரி மூக்கு சப்பையா, வழுக்கை விழுந்து இருப்பாரு! அதனால தான் அவருக்கு பேரு சென்ஷி

குப்பன்: தம்பி கதிர் அண்ணே குள்ளமா கிட்ட தட்ட எங்களை மாதிரி ஒடிஞ்சு விழற மாதிரி இருப்பார். அதனாலதான் எல்லாரும் செல்லமா தம்பின்னு கூப்பிடுவாங்க

சுப்பன்: அய்யனார் பேருக்கு ஏத்த மாதிரி ஜெய்ஜாண்டிக்கா எப்பவும் அருவாள் இல்லாம இருக்க மாட்டார், அதனால தான் அய்யனார்ன்னு பேரு

குப்பன்: அண்ணாச்சி இருக்காரே படு பயங்கரம். மாயவரமே அண்ணாச்சின்னு தான் கூப்பிடும், அவ்வளவு ஏன் அவங்க அப்பாவே அண்ணாச்சின்னு தான் கூப்பிடுவாருன்னா பார்த்து கோங்க!

இப்படியா சொல்லிகிட்டே போனாங்க. எல்லாரையும் தெரியும்ன்னு சொன்னா நான் சந்தேகப்படுவேனேன்னு ரெண்டு பேரும் கோரஸா "எங்களுக்கு இந்த குசும்பன் அண்ணனை மட்டும் தெரியலீங்க"ன்னு சொல்லிட்டாங்க. ஏன்னா தாதாவுக்கு எங்கயாவது குசும்பன்ன்னு பேர் இருக்குமான்னு அவங்களுக்கு கதை இட்டு கட்ட முடியலை. சரின்னு நானே கதை இட்டு கட்ட வேண்டியதா போச்சு.

"அதாவதுங்க இந்த குசும்பன் அண்ணே இருக்காரே வெட்டி சாய்ச்ச பின்ன பாடில கிச்சு கிச்சு மூட்டுவாரு. உயிர் இருக்கா இல்லியான்னு டெஸ்ட் பண்ண அத்தன ஒரு குசும்பு அதனாலத்தான் குசும்பன்ன்னு பேரு"ன்னு சொல்லி வச்சேன்.

உடனே ரெண்டு பேரும் " ஏன் அண்ணே, இத்தன தாதாவை தெரியுதே உங்களுக்கு நேங்க ஏதாவது கொலை கிலை பண்ணியிருக்கீங்களா?"ன்னு கேட்டு என்னை அதிர வச்சுட்டாய்ங்க! நானும் சுதாரிச்சுகிட்டு "ம் சொந்த வீட்டில் 104 கொலையும் சொந்த காரங்க வீட்டுல ஒரு ஏழெட்டு கொலையும் பண்ணியிருக்கேன்"ன்னு சொல்லிட்டு அமைதியா ரூம் வந்து சேர்ந்துட்டேன்.