பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 21, 2017

திமுகவின் பொருளாளராக அமர திருமதி. கனிமொழி அவர்களுக்கு காலம் “கனி”ந்து விட்டது!



 “ஸ்பெக்ட்ரம்” வழக்கில் “திமுக” விடுதலை!  ஆமாம்! இது தனிப்பட்ட நபரான அண்ணன் ஆ.ராசா அவர்கள் விடுதலையோ அல்லது தனிப்பட்ட அம்மா திருமதி தயாளு அம்மையார் அவர்கள் விடுதலையோ அல்லது தனிப்பட்ட திருமதி கனிமொழி அவர்கள் விடுதலையோ என கருத முடியாது! இது திமுகவின் விடுதலை! மேற்சொன்ன தயாளு அம்மையார் அனுபவித்த மன உளைச்சல்,  ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் அடைந்த  மன உளைச்சல், சிறைவாசம், அவமானங்கள் ஆகியவைகளை குறைத்தும் மதிப்பிட முடியாது! அதே நேரம் திமுக என்னும் இயக்கம் பட்ட இன்னல்கள் என்பதை ஒரு பட்டியலில் அடைத்தும் விட முடியாது. திமுக என்பது சுமார் ஒரு கோடி உறுப்பினர்களால் கட்டமைக்கப்பட்ட கோட்டை. அதில் ஒரு செங்கல் பழுதானாலும் அந்த கோடி தொண்டனுக்கும் மன உளைச்சல் தான்! ஆனால் அண்ணா கண்ட அந்த இயக்கத்தை 50 ஆண்டுகளாக எவ்வித சேதாரமுமின்றி காத்து வரும் தலைவர் கலைஞர் அவர்கள் இந்த “ஸ்பெக்ட்ரம்” பழியால் பட்ட வேதனை சொல்லி மாளாது! ஆகவே இது கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பு!


எப்படி கொண்டாடலாம் என்பதில் தான் இப்போதைக்கு திமுகவின் கவனம் இருக்க வேண்டும்! அந்த கொண்டாட்டங்கள் தமிழகத்தின் கடைக்கோடி ஆட்களை சென்றடைய வேண்டும்! என்ன செய்யலாம் அதற்கு? ஒரு மாநில மாநாடு நடத்தி “ஸ்பெக்ட்ரம்” விழா எடுக்கலாம்! திமுகவின் 11 வது மாநில மாநாடு “ஸ்பெக்ட்ரம் சிறப்பு மாநாடு” என பெயரிட்டு அதை கொண்டாடலாம். அதற்கு முன்பாக அந்த மாநாட்டு விளக்க கூட்டம் தமிழகம் முழுமையும் நடத்தி பொதுமக்களிடம் நம் அப்பழுக்கின்மையை கொண்டு சேர்க்கலாம்! ஸ்பெக்ட்ரம் வழக்கு என்பதே தனிப்பட்ட நபர்களை அழிக்க நடத்தப்பட்ட வியூகம் அல்ல! 1949ல் ஆரம்பிக்கப்பட்டு அண்ணா அவர்களையும் சேர்த்து ஆறு முறை முதல்வர் பதவியையும் பிடித்த இயக்கம்! சமூக நீதியை காத்த இயக்கம்! அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டமியற்றிய இயக்கம்! அப்படிப்பட்ட இயக்கத்தை அழிக்க நடந்த யுத்தத்தில் திமுக இப்போது வென்றுள்ளது. ஆகவே இதன் “வெற்றிக்கொண்டாட்டம்” என்பது விண் முட்ட நடத்தப்பட வேண்டியது அவசியம். 



இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு என்பது திமுக என்னும் இயக்கத்தின் மீது மத்திய ஆட்சியாளர்கள் மற்றும் ஆதிக்க சக்திகளை ஒருங்கே தன்னகத்தே கொண்ட  ஒரு விஷப்பாம்பு புற்றான மத்திய தணிக்கைக்குழு, அதற்கு மகுடி ஊதும் பிடாரன்களான ஆதிக்க ஊடகங்கள் ஆகியவைகள் சேர்ந்து தொடுக்கப்பட்ட யுத்தம்! யுத்தகளத்தில் அந்த எதிரணியினர் பிணையாக பிடித்து வைத்து போரை ஆரம்பித்தது யாரைத்தெரியுமா.... தயாளு அம்மையார், ஆ.ராசா, கனிமொழி ஆகியவர்களைத்தான்! இந்த போரில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது! ஆம்! பிணையில் பிடிபட்டவர்களே யுத்தமும் செய்தார்கள். திமுகவின் ஒட்டு மொத்த படையணியும் ஊக்கம் கொடுத்தது! இயக்க தலைமையோ தன் முழு ஆதரவையும் கொடுத்து அழகு பார்த்தது! பிணையில் பிடிபட்டவர்கள் போராடினார்கள். ஒரு வருடம்,இரு வருடம் அல்ல... ஏழு ஆண்டுகள் நடந்த தொடர் போராட்டம் அது! போர் தொடுத்தவர்கள் தான் அடிக்கடி நிராயுதபாணியாகினர். பிடிபட்ட ஆ.ராசா அவர்களோ “இன்று போய் நாளை வா” என அனுப்பிய அதிசயம் அடிக்கடி நிகழ்ந்தது. போரின் முடிவில் கூட வெற்றி தோல்வியை அறிவிக்க கூட அவர்கள் நேற்று போய் இன்று தான் வந்தனர் என்பது தான் ஆச்சர்யமே! இன்றோ திமுக என்னும் இயக்கத்தை அழிக்க நடந்த போரில் நம்மவர்கள் திமுக தலைமைக்கோ, அல்லது தொண்டர்கள் என்னும் படையணிக்கோ அல்லது தங்களுக்கோ எவ்வித சேதாரமும் இல்லாமல் வெற்றிக்கனியை பறித்துக்கொண்டு வந்து நம் செயல்தலைவர் காலடியில் சமர்பித்து விட்டனர். அதை நம் செயல்தலைவரோ தலைவரிடமுமும், பொதுச்செயலாளரிடமும் பகிர்ந்து கொண்டார்.

பொதுவாக ஒரு போருக்கு பின்னால் அதன் வெற்றிக்கு பின்னாள் போர் செய்த அந்த வெற்றி வீரருக்கு மன்னர் பரிசளிப்பது வழக்கம் தானே? அதைத்தான் நம் செயல்தலைவர் அவர்களும் செய்வார் என நம்புகின்றோம் படையணியின் கடைக்கோடி வீரர்கள்!

திமுக என்னும் ஆலமரத்தின் விதை போட்டு அதை செடியாக்கி, மரமாக்கியவர் நம் அண்ணா அவர்கள்! 1949ல் நம் இயக்கத்தை தோற்றுவித்த போது அதற்கு தலைமை பொறுப்பான தலைவர் கிடையாது, பொதுச்செயலாளர் கிடையாது, பொருளாளர் கிடையாது. ஒரு கூட்டுக்குழு தான் அனைத்து பொறுப்புகளையும் கவனித்து வந்தது. அதன் பின்னர் இயக்கம் வளர்ந்து வளர்ந்து வரும் போது அதாவது மூன்றாண்டுகளில் 1952ல் அந்த கூட்டுக்குழு மட்டுமே சமாளித்து விட முடியாது என்னும் நிலை வந்தது. அப்போது தான் அண்ணா அவர்கள் பொதுச்செயலாளர் ஆனார். அப்போது நெடுஞ்செழியன், ஈ.வி.கே சம்பத் ஆகியோர் தலைமை நிலைய செயலர்கள் ஆனார்கள். கவனிக்க... அப்போது துணைப்பொது செயலாளர் என்னும் பதவி திமுகவில் இல்லை. தலைவர் பதவி என்பதை அண்ணா அவர்கள் “பெரியாருக்காக” காலியாக வைத்திருந்தார். அந்த 1952ல் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அந்த மாபெரும் இயக்கத்துக்கு கும்பகோணத்தை சேர்ந்த திரு. குடந்தை கே.கே.நீலமேகம் அவர்கள் முதன் முதலாக பொருளாளர் ஆனார்கள். அப்போது திமுகவுக்கென்று சொத்துகள் கிடையாது. “பொருள்” அவ்வளவாக கிடையாது. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் காலணா தான் கட்சியின் பொருள். அதற்கு கூட அப்போதிருந்தே திமுக தன் வரவு செலவுகளை துல்லியமாக வைத்திருந்தது. ஆக அப்படி முதல் பொருளாளர் ஆனவர் தான் குடந்தை கே.கே.நீலமேகம் அவர்கள். அப்போது அவருக்கு அண்ணா அவர்களுக்கு சமமான வயது தான் இருக்கும்!  அதாவது 40 பிளஸ் தான்! ஆக நம் இயக்கத்தில் ஒரு பொறுப்புக்கு வர வேண்டும் எனில் வயது என்பது ஒரு பொருட்டல்ல. உழைப்பும் தியாகமும் தான் பொறுப்புக்கு தகுதி என்னும் நிலை தான் அப்போது முதலே!

அதன் பின்னர் வருடம் ஆக ஆக, இயக்க பொறுப்புகள் பலருக்கு வருகின்றது. அது போலவே அண்ணா அவர்கள் காலத்திலேயே நம் தலைவர் அவர்களுக்கும் “பொருளாளர்” பொறுப்பும் வருகின்றது. தலைவர் அவர்கள் பெயரிலேயே “நிதி” வைத்திருப்பவர் அல்லவா? அதனால் திமுக என்னும் இயக்கத்துக்கு ஆங்காங்கே கட்சி அலுவலகங்கள் இயக்கத்தின் பெயரால் தொண்டர்களிடம் துண்டேந்தி வாங்கப்படுகின்றது. அது போல தேர்தல் நேரத்தில் நிதி திரட்ட வேண்டுமா? அஞ்சியதே இல்லை இந்த கருணா “நிதி” அவர்கள்! தேர்தல் நேரத்தில் தேர்தல் நிதி வசூல் செய்யும் பொறுப்பு அப்போது பொருளாளர் ஆக இருக்கும் இப்போதைய தலைவர் கலைஞர் அவர்களிடம் இருந்தது. அண்ணா அவர்கள் பத்து லட்சம் இலக்கு என சொன்ன போது அதை 11 லட்சமாக கொண்டு வந்து கொட்டியவர் கலைஞர். அது போல தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படுகின்றது அண்ணாவால்! அந்த மாபெரும் கூட்டத்தில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் பெயரை அறிவித்துக்கொண்டே வந்த அண்ணா அவர்கள் கடைசியாக “சைதாப்பேட்டை தொகுதி....” என சொல்லிவிட்டு அமைதி காக்க... கூட்டம் ஸ்தம்பித்து போய் நிற்கின்றது. இது வரை கலைஞர் பெயரை சொல்லவில்லை அண்ணா எனும் போது தொண்டர்களுக்கோ குழப்பம். ஏனனில் அப்போதே கலைஞர் அவர்கள் சட்ட மன்றத்துக்கு பத்து வருட சீனியர். ஆமாம் 1957ல் குளித்தலை, 1962ல் தஞ்சை என வெற்றி பெற்றவர். அண்ணா கூட்டத்தினரின் ஆரவாரத்தை அதிகப்படுத்தி “சைதாப்பேட்டை தொகுதியில் நிற்பவர் மிஸ்டர் 11 லட்சம்” என அறிவித்தார்! இது தான் ஒரு பொருளாளர் அவர்களுக்கு அழகு!  பொருளாளராக தலைவர் கலைஞர் அவர்கள் சிறப்பாக செயல்பட்டமைக்காக அண்ணாவால் கொடுக்கப்பட்ட பரிசு தான் அந்த “மிஸ்டர் 11 லட்சம்” என்னும் பட்டம்!

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அந்த பொருளாளர் பதவி என்பதை அண்ணாவின் மறைவுக்கு பின்னர் இயக்கத்துக்கு புதிய பொறுப்புகள் அமைக்கப்பட்டு கலைஞர் அவர்கள் தலைவர் பதவிக்கு வருகின்றார். அப்போது பொருளாளர் ஆனவர் தான் எம் ஜி ஆர். எம் ஜி ஆரை பொருளாளர் ஆக்கியவர் தலைவர் கலைஞர். 1969ல். பொருளாளர் பதவி என்பது நம் இயக்கத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய பதவியாகும். பின்னாளில் அதே எம் ஜி ஆர் “கணக்கு கேட்டு”  இயக்கத்தை உடைத்து துரோகம் செய்து விட்டு போனவர் என்பதை நாடே அறியும். “கணக்கு சொல்ல வேண்டிய இடத்தில்” இருந்த எம் ஜி ஆர் அவர்களே “கணக்கு கேட்ட” விந்தை எல்லாம் ஏன் நடந்தது எனில் எம் ஜி ஆர் போன்ற நம்பிக்கையில்லா ஆட்கள் அந்த பதவிக்கு வந்தமைதான் காரணம்!

அதன் பின்னர் சில பல மாற்றங்கள் ஆன பின்னர்  பிற்காலத்தில் அண்ணன் சாதிக்பாட்சா பொருளாளர் ஆனார். அவர் மறைவுக்கு பின்னர் அண்ணன் ஆற்காடு வீராசாமி அவர்கள் பொருளாளர் ஆனார். அவரது வயோதிகத்தின் காரணமாக பின்னர்  அப்போது துணைப்பொதுச்செயலாளர் ஆக பொறுப்பு வகித்த நம் செயல்தலைவர் அவர்கள் பொருளாளர் பொறுப்புக்கு வந்தார்! அதன் பின்னர் பொருளாளர் பொறுப்பில் இருக்கும் போதே நம் தலைவர் அவர்களின் வயோதிகத்தின் காரணமாக நம் இயக்க தொண்டர்கள் விருப்பத்தாலும், அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் நீண்ட நாள் வற்புறுத்தல் காரணமாகவும், மிக மிக முக்கியமாக தன் 14 வயது முதல் கழக கொடி பிடித்து மிசாவில் அடிபட்டு ரத்தம் சிந்தி, இளைஞர் அணியை தொடங்கி இயக்கத்தில் புதுரத்தம் பாய்ச்சி, வைக்கோ போன்றவர்கள் பிரிந்த பின்னரும் இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்தி வந்த தகுதியின் அடிப்படையில் நம் செயல்தலைவருக்கு அந்த பொறுப்பை வழங்கி மகிழ்ந்தார் தலைவர். அன்றைக்கே பொருளாளர் பொறுப்பை மற்ற யாருக்காவது தலைவர் ஒதுக்கி தந்திருக்கலாம். ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் காலம் கனியட்டும் என காத்திருந்தார்.

இன்றைக்கு தான் அந்த காலம்  “கனி”ந்துள்ளது என நம் செயல்தலைவர் அவர்களும் உணர்ந்திருப்பார்கள். கடந்த பத்து நாட்களாகவே இந்த 2 ஜி வழக்கின் தீர்ப்பு தேதி குறித்த பின்னரே திருமதி கனிமொழி அவர்களுக்கு பெரிய வரலாறு கொண்ட திமுகவின் பொருளாளர் பொறுப்பை கொடுக்கலாமா என்பது பற்றிய ஹேஷ்யங்கள் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தன. பேராசிரியரும், செயல்தலைவரும் சாதாரணமாக சந்தித்தால் கூட இது பற்றிய பேச்சுகள் தான் நடந்தன என புலனாய்வு பத்திரிக்கைகள் எழுதின. சமூக வலைத்தளங்களில் இயக்கத்தினர் உள்ளேயே ஒரு சிலர் இது பற்றி எழுதுவதும், அதற்கு பதில் சொல்லும் விதமாக சண்டை நடப்பதும் நடந்து கொண்டுள்ளதை பார்க்க முடிகின்றது. நல்ல விபரமான ஒரு  முகநூல் கட்டுரையாள நண்பர் ஒருவர்  கூட “கனிமொழிக்கு பொருளாளர் பதவிக்கான தகுதி இருக்கின்றதா எனில் கண்டிப்பாக ஆம் என்பேன். ஆனால் தவிர்க்க வேண்டும் என்பேன். காலம் கனியட்டும் என்பேன்” என முத்தாய்ப்பு வைத்தார்.

ஆக கனிமொழி அவர்களுக்கு பொருளாளர் பதவி கொடுத்து அவரது தியாகத்துக்கும்,  உழைப்புக்கும் மரியாதை செய்வது என்பது குறித்து கிட்டத்தட்ட எல்லோருக்குமே ஆர்வம் உள்ளது என்பது புலனாகின்றது. ஆக கனிமொழி அவர்களுக்கான வயது தான் அவர்களுக்கு ஒரு காரணமாக இருக்கின்றது எனில் முதல் பொருளாளர் திரு. கே.கே.நீலமேகம் அவர்கள் அந்த பதவிக்கு வந்த போது அவருக்கு ஆன வயதை விட திருமதி கனிமொழி அவர்களுக்கு சற்று கூடுதலாகத்தான் ஆகின்றது. 1969ல் பிறந்த அவர் இதோ இன்னும் 15 நாட்களில் ஜனவரி 5ம் தேதி 2018 அன்று தன் 49 வயதை எட்டுகின்றார். தியாகத்துக்கும் எவ்வித குறைவும் வைக்கவில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியிலும் திமுக என்னும் இயக்கத்துக்கு மிகுந்த பெயரை பெற்றுத்தந்துள்ளார். இயக்க  தேர்தல் பரப்புரைகள், தனக்கு இயக்கத்தில் கொடுக்கப்பட்ட மகளிர் அணி பொறுப்பு என எதிலும் அவர் தன் திறமையை காட்ட தவறியது இல்லை. தொண்டர்களிடம் பாசமாக பழகும் இயல்பு கொண்டவர்.இந்திய தலைவர்கள் எல்லோரிடமும் அறிமுக பழக்கம் ஆனவர்.  எல்லாவற்றுக்கும் மேலாக நம் செயல்தலைவர் அவர்கள் ஒரு கோடிட்டால் அந்த கோட்டின் மீது மட்டுமே நடக்கும் குணம் கொண்டவர். தலைமைக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர். இவர் மீது இதுவரை சொல்லப்பட்ட சொத்தை வாதம் 2 ஜி வழக்கு என்பதும் இப்போது தீயிலிட்ட சருகாகிவிட்டது. ஆகவே திருமதி கனிமொழி அவர்களுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் “பொருளாளர்” பொறுப்பை கொடுப்பதற்கு இதுவே சரியான தருணம்! அப்படி கொடுக்கும் பட்சத்தில் அந்த இனிய செய்தி தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நிலையில் கூட யாரும் எதிர்பாராத அதீத முன்னேற்றத்தை கொடுக்கும் என்பதில் ஐயமேதுமில்லை! 

திமுகவை அழிக்க நினைத்து ஆதிக்க சக்திகளை எதிர்த்து போரிட்டு வென்றமைக்கான பரிசாக நம் செயல்தலைவர் இதை அறிவிக்கலாமே!

இது  ஒரு சாதாரண கடைக்கோடி தொண்டன் செயல்தலைவர் தளபதி அவர்களுக்கு வைக்கும்  கோரிக்கை மட்டுமே என்பதையும் மற்றவர்கள் உணர்க!