Showing posts with label அஞ்சலிகள். Show all posts
Showing posts with label அஞ்சலிகள். Show all posts
June 24, 2013
இயக்குனர் மணிவண்ணன் நிஜமான போராளி என்றால்....
நல்ல இயக்குனர், நல்ல பெரியாரியவாதி, நல்ல தமிழ் உணர்வாளர் திரு. மணிவண்ணன் இறந்து போனது வருத்தமே. அவர் இறந்த பின்னர் என் மனம் அமைதி இழந்தது, மனம் கனத்து போனது, இதயம் அழுதது எல்லாம் உண்மையே.
ஆனால் அதற்கு அடுத்து அடுத்து நடந்த சம்பவங்கள் தான் கொடுமையே! பாரதிராஜா என்னும் தன் குரு திட்டியதால் தன் மணிவண்ணன் மன உளைச்சல் காரணமாக இறந்தார் என நாம் தமிழர் என்னும் டம்ளர் பாய்ஸ் சொல்வது சிரிப்பை உண்டாக்குது.
ஒரு மன உளைச்சலால் சாகக்கூடிய பூஞ்சை மனசு மணிவண்ணனிடம் இருந்தால் பாரதிராஜா இவர் அவரிடம் மாணவராக இருக்கும் போது திட்டிய போதே (திட்டுவாராம்) செத்து போயிருக்கனும். சரி அப்போ அவர் மனதும் உடலும் திடம் என வைத்து கொண்டாலும் கூட உச்சகட்டமாக பிரபாகரனை தன் மானசீக மாவீரன் என மனதளவில் கொண்டாடிய மாவீரன் மரித்த போதே மன உளைச்சள் காரணமாக இறந்து போயிருக்க கூடும்.
அப்படி என்ன மணிவண்ணன் இலவம் பஞ்சின் மனது கொண்டவரா எனில் அதும் இல்லை. அவர் மேடைகளில் தன் எதிரிகளை வசை பாடியது இல்லியா? கழுவி கழுவி ஊத்தினது இல்லியா? அது என்ன வசைபாடும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு, மற்றவர்களுக்கு அது கிடையாது என்னும் மனோபாவம் அவருக்கு என நீங்கள் நினைக்கலாம். அப்படி இல்லை. மணிவண்ணனுக்கு தெரியும். நாம் மேடையில் யாரையாவது வசைபாடினால் தனக்கும் அது போல திரும்பி வரும் என தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை அவர். அதை எல்லாம் தெரிந்து தான் மேடை ஏறியிருப்பார். அதனால் பாரதிராஜா இவரை திட்டினார், அதனால் இவர் செத்தார் என டம்ளர் பாய்ஸ் கூறுவதை ஒரு சிரிப்புடன் தான் நாம் கடந்து போக வேண்டும்.
இதே பாரதிராஜா நெய்வேலி போராட்டத்தின் போது "ஊ ஆர் யூ" என கலைஞரை வினவியதையும் எல்லோரும் அறிவோம். அப்போது இதோ இன்று "அம்மா" புகழும் பாடிக்கொண்டு, சன் டிவியில் கூட தொடர்பில் இருக்கும் மிஸ்டர் ராதிகா சரத்குமார் எல்லாம் அப்போது இதே பாரதிராஜாவை என்ன என்ன பேசினாங்க என கூட எல்லருக்கும் தெரியும். அதே ராதிகா குரூப் இப்போது கலைஞருக்கு எதிரிகள். ஆனால் பாரதிராஜா இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் சீரியல் இயக்குனர். இது தான் நிதர்சனம். உணர்சிவசப்படுதலால் நிரம்பி வழிவது தான் சினிமா உலகம். இந்த நாடியை கலைஞர் நன்கு உணர்ந்தவர். ஆனால் 400 படங்களில் நடித்தும், 50 படங்கள் இயக்கியும் இருந்த மணிவண்ணனுக்கு இதல்லாம் தெரியாது என நினைப்பது டம்ளர் பாய்ஸ்ன் முட்டாள்தனம்.
எம் ஜி ஆர் இறந்த அன்று கலையில் வந்த முரசொலியில் எம் ஜி ஆரை கிண்டலடித்து கார்டூன் வந்தது, செய்தி வந்தது என சொல்லும் முட்டாள்கள் இருக்கும் நாடு தான் இது. எம் ஜி ஆர் இறந்தது விடிகால 4 மணிக்கு. தினசரிகள் அச்சேறும் நேரம் இரவு 10 மணிக்கு. எம் ஜி ஆர் விடிகாலை இறந்து போவார் என அச்சேற்றும் கடைநிலை ஊழியருக்கு அங்கே தெரிந்தால் கூட அதை அச்சேற்ற மாட்டார்கள். அதே நிலை தான் இப்போதும். ஆனந்த விகடன் குழுமத்துக்கு மணிவண்ணன் இறந்து போவார் என தெரிந்து இருந்தால் பாரதிராஜாவின் பேட்டியை வெளியிட்டு இருப்பார்களா என சிந்தித்து பார்க்கும் அளவு புத்தியும் இல்லை, நேரமும் இல்லை போலிருக்கு.
பாரதிராஜா இப்படித்தான் பேசுவார் என நான் சப்பைக்கட்டு கட்டவில்லை. அவர் பேசிய பேச்சுகள் தவறாகவே இருக்கட்டும். அதனால் "கொலைப்பழி" அளவுக்கு எல்லாம் பாரதிராஜா ஒர்த் இல்லை. பின் ஏன் பாரதிராஜா அந்த சாவு வீட்டுக்கு வரவில்லை என கேட்கும் நபர்களே, எளிதில் உணர்சி வசப்படும் ஒரு கூட்டம் அங்கே புலிக்கொடி போர்த்த சொன்னால் கூட டம்ளர் கொடி போர்த்தி வைத்திருக்கும் ஒரு கூட்டத்தில் அங்கே பாரதிராஜா உள்ளே வருவது, கலைஞரை நடு இரவில் கைது செய்து கொடுமை செய்த கூட்டத்தினை சேர்ந்த 151 பேர் நடுவே சட்டமன்றத்துக்கு சக்கர நாற்காலியில் போவது எப்படி "தற்கொலை"க்கு சமமோ அதைப்போல தான் என்பதை உணருங்கள்.
சாகும் முன்னர் சில நாட்கள் முன்பாக கூட கலைஞரை இதே மணிவண்ணன் எதேற்சையாக சந்தித்த போது ...
"என்ன மணி எப்படி இருக்கே?" - இது கலைஞர்!
"அண்ணே, முதுகு பிரச்சனை இருக்குண்ணே, ஆபரேஷன் நடந்து இருக்கு. நடக்க கூட முடியவில்லைண்ணே"
"ஆக நீயும் என்னைப்போலத்தான். எனக்கும் அந்த பிரச்சனை தானே"
"ஆமாம் அண்ணே, ஆனா ஒன்னு உங்க கிட்டே பேங் பேலன்ஸ் இருக்கு. என் கிட்டே அது இல்லை அண்ணே"
உடனே கலைஞர் சிரித்து கொண்டே... "இவரு நம்மாளுய்யா" என பக்கத்தில் இருந்தவர்களிடம் சொல்கிறார்.
உடனே திமுகவின் நண்பர்கள் கோவித்து கொள்கின்றனர். யார் மீது? கலைஞர் மீது! "கலைஞர் இந்த சினிமாகாரனுக்கு ஏன் இத்தனை கரிசனம் காட்டுறார். இதே இந்தம்மா ஜெயா இப்படி செய்யுமா? கிட்டத்திலே நின்னு பேச அனுமதிக்குமா. கலைஞர் ஜெயா போல நடந்துக்கனும். கலைஞர் இன்னும் கத்துக்க வேண்டும்" என தனக்கு தெரிந்த "அறிவுரை"களை அள்ளி வீசுகின்றனர்.
அப்படி சொல்பவர்களை நான் பார்த்து ஒரே கேள்வி கேட்கிறேன். இதே ஜெயாவைப்பார்த்து "கலைஞர் மாதிரி நடந்து கொள்ளுங்கள்" என சொல்ல தைரியம் இருக்குதா உங்களிடம். ஏன்னா கலைஞர் என்றல் இலவசமா இழுத்து வைத்து இஸ்திரி போடலாம் என்னும் நினைப்பு தானே உங்களுக்கு? அந்த நினைப்பு திமுக உறுப்பினர்களுக்கே இருக்கும் போது எதிர் முகாமில் இருக்கும் மணிவண்ணனுக்கு இருக்காதா?
நான் இதை எதற்கு இங்கே சொல்கிறேன் எனில் தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை இருந்தவரிடம் எப்படி நாசூக்காக பேச வேண்டும் என்கிற சாதாரண அடிமட்ட அறிவு கூட இல்லாத மணிவண்ணன், இதே பாரதிராஜா இப்படி தன் சீடனை பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் எனில் எந்த அளவு இந்த மறைந்த மணிவண்ணன் அவரை பேசியிருப்பார் என நினைத்துப்பாருங்கள் தோழர்களே!
ஒருவர் திட்டியதுக்கே செத்து போகிறார் ஒருவர் எனில் அவரை போராளி என்றோ அவருக்கு அஞ்சலி செலுத்த "வீர வணக்கம்" என வாசகங்கள் அச்சடிப்பதோ மகா அசிங்கம். மீண்டும் மீண்டும் பாரதிராஜா திட்டியதால் மணிவண்ணன் இறந்தார் என சொல்லி அந்த நிஜமான போராளியை அசிங்கம் செய்யப்போகின்றீர்களா டம்ளர் பாய்ஸ்???
மனதார சொல்கிறேன் ... மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்! அவரை "போராளி"யாகவே இருக்கவிடுங்கள் அட்லீஸ்ட் இறந்த பின்னராவது! அவர் சாவில் அரசியல் செய்யாதீர்கள்!
Labels:
அஞ்சலிகள்,
கலைஞர்,
சீமான்,
நாம் தமிழர்,
மணிவண்ணன்
May 27, 2013
எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய கலக்டர் சொக்கலிங்கம்!
| இடமிருந்து வலமாக வெள்ளை உடையில் திரு. சொக்கலிங்கம் |
இவருடைய பெயர் சொக்கலிங்கம். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வழுவூர் மெயின் ரோட்டை அடுத்து சுந்தரப்பன்சாவடி என்னும் கிராமம்(அதே மெயின் ரோட்டிலேயே) இவருடையது. உடையார் சமூகத்தை சேர்ந்தவர். பக்கத்து கிராமங்கள் எல்லாம் அதாவது பண்டரவாடை, மங்கைநல்லூர், நெய்க்குப்பை, வழுவூர் இங்கெல்லாம் இவருடை சமூகத்தினர் அதிகம். அவர்கள் பெரிய நிலக்கிழார்களாக இருப்பினும் இவர் ஏழை. தன் தாய் தந்தையர்களுக்கு ஒரே மகன்.இவரது தந்தையார் இவருடைய சிறு வயதிலேயே காலமாகிவிட்டார். அம்மாவும் மகனும் மட்டும் தான் வீட்டில். இவரோ வயல் வேலைக்கு சென்று தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையெனினும் இவர் அங்கிருந்து தினமும் எட்டு கிலோ மீட்டர் நடந்தே வந்து மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.
தன் குடும்ப ஏழ்மை நிலையிலும் அண்ணாமலை பல்கலைகழகத்துக்கு சென்று பட்டப் படிப்பும் படித்தார். பின்னர் I.A.S தேர்வு எழுதி தேர்வாகி (தமிழ்நாடு கேடர்) தமிழக அரசின் முதலமைச்சராக 1967ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரை அவர்களுக்கு நேர்முக உதவியாளர் ஆக பணியமர்த்தப்பட்டார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் தமிழகத்தின் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியராக இருந்து பணியாற்றினார். தன் வருமானத்தில் தன் தந்தையாருக்கு (அதே சுந்தரப்பன் சாவடி மெயின் ரோட்டில்) தன் வீட்டுக்குள் (மெயில் ரோட்டை பார்த்து இருக்கும் கொல்லையில்) சிலை வைத்து கோவில் கட்டினார். அவர் எங்கு பணியாற்றினாலும் இங்கே தன் சொந்த கிராமத்துக்கு வந்து தான் விடுமுறையை கழிப்பார்.
அண்ணாவின் மீது அதீத பற்று கொண்டவர். ஒரு முறை அண்ணா முதல்வராக இருக்கும் போது மயிலாடுதுறை வழியாக திருவாரூர் செல்லும் வழியில் தன் வீட்டில் மதிய உணவு உண்ண வேண்டும் என அண்ணாவை இவர் கேட்டுக்கொள்ள அண்ணாவும் சம்மதித்தார். ஆனால் இவரது தாயார் சிறிது மனநலம் குன்றி விட்ட நிலை அது. அண்ணாவுக்காக வித விதமாக சமைத்து வைக்க சொல்லி இவர் தன் தாயாருக்கு கடிதம் எழுதியும் அவர் அதை செய்யவில்லை. புளிக்குழம்பும், சுட்ட அப்பளமும் மட்டுமே வைத்து இருந்ததைக்கண்டு சொக்கலிங்கம் அதிர்ந்தார். ஆனால் அண்ணாவோ (முதல்வர்) இனிய முகத்தோடு "நான் நீண்ட நாளாக புளிக்குழம்பும், சுட்ட அப்பளமும் சாப்பிட வேண்டும் என நினைத்து இருந்தேன். என் தொத்தா( அண்ணாவின் வளர்ப்பு தாய்) அவர்களுக்கு மட்டுமே எனக்கு இது பிடிக்கும் என தெரியும். மிஸ்டர் சொக்கலிங்கம் உங்கள் அம்மாவின் உருவில் என் தொத்தாவை காண்கிறேன்" என அண்ணா இவரை தேற்றினார். ஆனாலும் அன்று தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் அன்று முதல் திரு. சொக்கலிங்கம் மதிய உணவை சாப்பிடும் பழக்கத்தையே விட்டு விட்டார். அத்தனை பக்தி அண்ணா மீது இவருக்கு.
தன் பணிக்காலத்தில் மிகவும் கண்டிப்பானவர் என்னும் பெயரைப்பெற்றார். எம் ஜி ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழக அரசின் தலைமை செயலர் என்னும் உயரிய அந்தஸ்து பெற்றார். எம் ஜி ஆர் அவர்களின் கடைசி காலத்தில் உடல் நலம் குன்றிய போது அமரிக்க புரூக்ளின் மருத்துவமனை சென்ற போது அவருடன் சென்ற சிலரில் தலைமைச்செயலர் திரு. சொக்கலிங்கம் அவர்களும் உண்டு. அப்போதைய முதல்வர் எம் ஜி ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் திரு.சொக்கலிங்கம் அவர்கள்.
பின்னர் பணி ஓய்வு பெற்ற பின்னர் தன் சொந்த கிராமத்துக்கு வந்து தன் வீட்டு கொல்லைப்பக்கம் இன்றைய நாகரீகத்துக்கு ஏற்றது போல கான்கிரீட் வீடு ஒன்றை சிறியதாக கட்டிக்கொண்டு தன் வீட்டை சுற்றிலும் தோட்டங்கள், தென்னை மரங்கள் சூழ அமைதியான வாழ்க்கை நடத்தினார் தன் தாயாருடன். (அது வரை அவரது தாயாரும் இருந்தார்) அனால் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உயர் கல்வி கற்று அமரிக்க நாட்டிற்கு சென்று விட்டனர். இவரும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அமேரிக்கா சென்று சில நாட்கள் தன் குடும்பத்துடன் வசித்து விட்டு மீண்டும் தன் கிராமத்துக்கு வந்து விடுவார். பின்னர் தன் தாயார் இறந்த பின்னர் தன் தந்தையாருக்கு கட்டிய கோவிலுக்கு பக்கத்தில் தாயாருக்கும் சிலை வைத்து தனிக்கோவில் கட்டினார்.
தான் சுந்தரப்பன் சாவடியில் வாழ்ந்த கடைசி காலத்தில் தனக்கு வரும் ஓய்வூதியப்பணம் மற்றும் தன் கொல்லையில் காய்க்கும் தேங்காய்களை விற்று வரும் வருமானம் இவைகளை கொண்டு நிம்மதியான வாழ்வு வாழ்ந்தார். ஒரு ரூபாய் கூட விரய செலவு செய்ய மாட்டார். அவரால் மயிலாடுதுறைக்கு பெருமை. அவரால் அவர் படித்த நகராட்சி மேல் நிலைப்பள்ளிக்கு பெருமை. அவரால் அவர் கிராமத்துக்கு பெருமை. சுற்றி இருந்த கிராமங்களுக்கு பெருமை.
இரு தினங்கள் முன்பாக அமரிக்கா சென்றிருந்த போது உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது ஆசைப்படி அவரது உடல் சொந்த ஊருக்கு வருகின்றதாம். அமேரிக்கா சென்று இறந்தாலும் தான் நேசித்த மண்ணில் வந்து அமைதியாக உறங்கட்டும் திரு. சொக்கலிங்கம் அய்யா அவர்கள்!
"பத்திரிக்கா உலக" நியதிப்படி செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் சூதாட்டம் மற்றும் கூட்டிக்கொடுக்கும் தொழிலதிபர் குருநாத் மெய்யப்பன் இடம் பெற,திரு.சொக்கலிங்கம் அவர்கள் எட்டாம் பக்கத்தில் இரண்டு இன்ச் ஆக சுருங்கி போயிருந்தார்.
திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கு மயிலாடுதுறை மக்கள் சார்பாக அஞ்சலிகள் :-(
Labels:
அஞ்சலிகள்,
அனுபவம்,
கலக்டர் சொக்கலிங்கம்,
சுந்தரப்பன்சாவடி,
மயிலாடுதுறை
Subscribe to:
Posts (Atom)