பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label நட்ராஜ். Show all posts
Showing posts with label நட்ராஜ். Show all posts

December 29, 2014

மெடிகல்சீட் வாங்கலியோ மெடிகல் சீட்!!!



இந்த டெலிமார்கெடிங் ஆசாமிகளுக்கு எப்படித்தான் டேட்டாஸ் கிடைக்கிறதோ தெரியவில்லை. சமீபமாக ஒரு கம்பனியில் இருந்து போன்.


"சார் நீங்க தான் அபிராமி அப்பாவா?"

"ஆமாம்"

"உங்க பொண்ணை மெடிகல் சேர்கனுமா?"

"ஆமாங்க ஆமாம்"

"ரொம்ப சிம்பிள். அப்ராட்ல படிக்க வையுங்க. ஜஸ்ட் 25 லட்சம் தான். பிலிப்பைன்ஸ்ல... போக்குவரத்து செலவு, கட்டுசோறு செலவு உட்பட மெடிகல் முடிஞ்சு அதிலே பி ஜியும் முடிச்சு அதன் பின்னே இங்க இந்தியாவிலே ஒரு டெஸ்ட் இருக்கு, அதையும் பாஸ் பண்ண வச்சு உங்க கிட்ட டாக்டரா ஒப்படைக்கும் வரை  ஜஸ்ட் 25 லட்சம் தான்"

"ஜஸ்ட்(!?) 25 லட்சம் தானா, இருக்கட்டும்க, அவ மார்க் என்னான்னு பார்த்துகிட்டு பின்ன பேசுவோம்"

"சார் இப்ப அட்மிஷன் நடக்குது வெறும் ஒன்னரை லட்சம் கட்டி சீட் வாங்கிடுங்க. மத்ததை பின்ன பார்த்துப்போம். பாஸ்போர்ட் கூட நாங்க அப்ளை பண்ணி வாங்கி, விசா ப்ராசஸ் பண்ண ஆரம்பிச்சிடுவோம்"

"பிசாத்து காசு ஒன்னரை லட்சம் தானே. குடுத்தா போச்சு. (அவ்வ்வ்வ்) பின்ன பேசிப்போம்"

ஒரு வழியா போனை கட் பண்ணும் வரை போதும் போதும் என்றாகிவிடும். பேசுவது ஆண்களா இருந்தா கூட கொஞ்சம் கடுமையா சொல்லி வைக்கலாம். எல்லாம் பொம்பள பசங்க. கடுமையா பேசி நோகடிக்க மனசும் வரலை. பாவம் அவங்க பொழப்பு அது.

இப்படியாக நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போன் கூட அல்லாடிக்கொண்டு இருந்தேன்.

இப்படித்தான் இரண்டு நாள் முன்பாக இரவு வெகுநேரம் கழித்து வந்தேன் வெளியூரில் இருந்து. காலையில் அசந்து தூங்கி கொண்டு இருந்த போது போன் வந்தது. எடுக்கலாம் என நினைக்கும் போது அசதியில் முடியவில்லை.  என் மகன் நட்ராஜ் தான் எடுத்தான். தூக்க கலக்கத்தில் அந்த சம்பாஷனைகளை மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தேன்.

"ஹலோ சார், எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன்" - நட்ராஜ்

(நட்ராஜ்க்கு எப்போதும் போனை ஸ்பீக்கர்ல போட்டு பேசுவது தான் வழக்கம். காது வலிக்கும் என டேபிள் மேலே வச்சுட்டு நடந்து நடந்து எல்லாம் பேசுவான்)

"யாரு தம்பி இது. வீட்டிலே அப்பா இல்லியா? அப்பா கிட்டே கொடுங்க நல்ல பிள்ளை தானே நீங்க?"

"நான் நல்ல பிள்ளை தான். அப்பா தூங்குறாங்க. எழுப்பினா கத்துவாங்க"

"சரி அம்மா கிட்ட கொடுங்க"

"அம்மா கோவிலுக்கு போயாச்சு. அக்கா ட்யூஷனுக்கு போயாச்சு. இன்னிக்கு ஃபுல் டெஸ்ட் இருக்கு பிசிக்ஸ்ல"

"சரி வீட்டிலே பெரியவங்க இருந்தா கொடுங்க"

"நானே பெரியவங்க தான். என் பிரண்ட் கோகுலோட தம்பி நகுல் எல் கே ஜி தான் படிக்கிறான். அவனே என்னை "அண்ணா"ன்னு தான் சொல்லுவான். அதனால நானே பெரியவங்க தான். அதனால என் கிட்ட சொல்லுங்க"

"அது வந்துப்பா... அபிராமிக்கு மெடிகல் சீட் பிலிப்பைன்ஸ்ல படிக்கிறது விஷயமா பேசனும்"

"பிலிப்பைன்ஸ் எங்க இருக்கு?"

"தூரமா இருக்கு. அப்பாவை எழுப்புங்க"

"மேக்னா  மெட்ரிகுலேஷன் ஸ்கூலை விட தூரமா?"

"என்னது? ...இது ரொம்ப தூரம், பிளைட்ல போகனும், அப்பாவை எழுப்புங்க"

"ஆட்டோவுல தான் நான் போவேன். அதுக்கு மாசம் 600 ரூப்பீஸ். பிளைட்ல தினம் போகனும்னா எவ்ளோவ் பீஸ்"

"தம்பி நல்ல பிள்ளை தானே நீங்க. அப்பாவை எழுப்புங்க"

"நான் பிலிப்பைன்ஸ்ல படிக்க எவ்ளோவ் ஆகும்"

கொஞ்சம் சலிப்புடன் "25 லட்சம் ஆகும்"

"நான் ஃபோர்த் ஸ்டேண்டர்ட் போனதும் நானும் பிலிப்பைன்ஸ்ல வந்து படிக்கட்டா"

"தம்பி வீட்டிலே பெரியவங்க வேற யாரும் இருந்தா கொடுங்க"

"நானே பெரியவங்க தான். வேணுமின்னா நகுல் கிட்டே கேளுங்க. அவன் அம்மா நம்பர் தரவா"

"தம்பி நீங்க +2 முடிச்சதும் இங்க வந்து படிக்கலாம். இப்ப அப்பாவை எழுப்புங்க"

"அதான் சொன்னனே அப்பாவை எழுப்பினா கத்துவாங்க. 25 லட்சம்னா ட்வண்டி ஃபைவ் போட்டு எத்தினி சைபர்"

அவங்க மனசுகுள்ள கணக்கு போட்டு பார்த்திருப்பாங்க போலிருக்கு..... கொஞ்சம் இடைவெளி விட்டு "அது நிறைய சைபர் இருக்கு"

"அய்யோ, மேக்னா ஸ்கூல்ல 14 போட்டு மூணு சைபர் தான். அம்மா அதுக்கே கத்துறாங்க. நெறய சைபர்க்கு  நெறய கத்துவாங்க"

"அது வேற ...இது வேறப்பா. அப்பாவை எழுப்பு"

"ப்ளைட் பெருசா இருக்குமா? கோகுல், வித்யா எல்லாம் என் ஆட்டோவிலே வருவாங்க, அவங்களும் அங்க சேர்ந்தா எல்லாரும் பிளைட்ல போலாம்ல"

"ஆமாம், அம்மா வந்தாச்சா கோவில்ல இருந்து"

"இன்னும் வரலை. வந்தாலும் தரமாட்டேன். எனக்கு சொல்லுங்க பிளைட் பெரிசா இருக்குமா?"

"ம் இருக்கும்" ரொம்ப டயர்டா ஆகிட்டாங்க போலிருக்கு.

"நீங்களும் பிலிப்பைன்ஸ்ல தான் படிச்சீங்கலா"

"இல்ல. அங்க படிச்சா நான் ஏன் டெலிமார்கெடிங்ல இருக்கேன்"

"டெலிமார்கெடிங்னா என்னா?"

போன் டக்கென வைக்கப்பட்டது.

சரியான "மூடர் கூடத்தில்" வந்து மாட்டிகிட்டோம்னு நினைச்சிருப்பாங்க அந்த பெண்.

அதன் பின்னர் இதுவரை அவங்க கிட்ட இருந்து போன் வரலை. அவங்க பட்ட கஷ்டம் அவங்களுக்கு தானே தெரியும்!

July 6, 2010

நட்ராஜ் டான்ஸ் களேபரம்!! சிம்பு கலவரம்!!!



நட்ராஜுக்கு சிம்பு டான்ஸ் மேல அத்தனை ஒரு கிரேசி. வேற வழியே இல்லாம நாங்களும் பார்த்தே ஆகவேண்டிய நிலை. நல்ல நேரம் எங்க டி.ஆர் டான்ஸ் போட்டு காமிக்கலை இன்னும்.

@@@@@@@@@@@@@@

இப்ப தான் ஸ்கூல் சேர்த்த மாதிரி இருக்கு அதுக்குள்ள டெஸ்ட் வருதாம். அவங்க மிஸ் சிலபஸ் கொடுத்துட்டாங்க. அ முதல் ஃ வரை ஓரல், அ முதல் ஈ வரை எழுதனும், 1 முதல் 10 வரை ஓரல், 1 முதல் 5 வரை எழுதனும், ஆங்கிலத்தில் ஜானி ஜானி எஸ் பாபா, தமிழில் பள்ளி செல்ல விரும்பு ரைம்ஸ்...இப்படியாக.

அவன் அம்மாவுக்கும், அக்காவுக்கும் இது ரொம்ப ஹெவியாக இருக்கின்றதாம். எனக்கும் நட்ராஜுக்கும் அப்படி தோன்றவில்லை.ஏனனில் நட்ராஜ் இதை எல்லாம் படிக்க போவதில்லை என நினைக்கின்றேன். என்னை விட்டா ஜஸ்ட் லைக் தட் ஊதி தள்ளி விடுவேன். இதே சிலபஸ் நான் காலேஜ் படிக்கும் போது இருந்திருந்தா நான் யுனிவர்சிட்டி பர்ஸ்ட் வாங்கியிருப்பேன் என்பது வலையுலகம் அறிந்ததே.

எதுக்கும் இருக்கட்டும் என நினைத்து அ முதல் ஃ வரை எழுதி பார்த்தேன். "ஔ" மட்டும் கடைசி வரை வரவில்லை. அதுக்கு பதில் "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"ன்னு டெம்பிளேட் பின்னூட்ட அவ்வ்வ்வ்வ்வ்வ் தான் வருகின்றது. அமைதியாக, எழுதி பார்த்த சிலேட்டை எச்சில் துப்பி அழித்து விட்டேன்.

@@@@@@@@@@@@@@@

சமீபமாக நட்ராஜ் கையை தொங்க போட்டு கொண்டு தோள் இரண்டையும் குலுக்குகினான். அதாவது "எனக்கு தெரியாது", "யார் எக்கேடு கெட்டா எனக்கு என்ன", "நான் அவனில்லை", "வேற வேலை இருந்தா போய் பாரு, என்னை டிஸ்டர்ப் செய்யாதே" என்பன போன்ற அர்த்தமாம். எல்லாம் சீமாச்சு அண்ணாவின் ரெண்டாவது பெண் சூர்யாவின் பாதிப்பாம். சூர்யா பரவாயில்லை. பெரியவள் ஷண்முகா கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். டென்னிஸ் விளையாட கிளப்க்கு போன போது ஷண்முகா ஃப்ரம் அமரிக்கா என தெரிந்த ஒரு நண்பர் தொண்டையை எல்லாம் நல்லா கனைத்து கொண்டு 'வாட் ஈஸ் யுவர் நேம்?" என கேட்ட போது அது ஷண்முகாவுக்கு புரியாமல் போக பின்னே நாள் விம் போட்டு விளக்க அவரிடம் "இன்னும் வைக்கலை"ன்னு கூலாக சொன்ன போது நான் அதிர்ந்தேன்(லைட்டா) ஆனா கேட்ட நண்பருக்கு சரியாக அந்த ஆங்கிலம் மட்டுபடாமையால் விட்டு விட்டார்.

@@@@@@@@@@@@@@@@

நட்ராஜ் பள்ளிக்கு அழைக்க போன போது ரொம்ப ஆர்வமாக அவன் அம்மா 'பையன் எப்படி?' என கேட்க அதற்கு அவங்க மிஸ் "ரொம்ப கோவம் வருது. எல்லார் கையிலயும் பேப்பர் கொடுத்து உங்களுக்கு என்ன தெரியுமோ அதை வரைந்து கொடுங்க என சொல்லி கொடுத்த போது இவன் வாங்கிய உடனேயே ரொம்ப கோவமா கிறுக்கி குடுத்தான். இப்படி செய்யலாமா நான் படம் தானே போட்டு குடுக்க சொன்னேன் என சொன்னதுக்கு 'மிஸ் இது நூடுல்ஸ் படம் மிஸ்'ன்னு சொல்றான்.

முதல் நாள் மிஸ் எல்லாரிடமும் "அ" எப்படி போடுவது தெரியுமா?ன்னு கேட்க இவன் தெரியும் என சொல்லியிருக்கான். சொல்லு என சொன்ன போது இவன் சொன்ன பதில் "ஆல்ட் 2 அடிச்சு A அடிக்கனும் மிஸ்"

என் மனைவி கிட்டே சொன்னேன். "இனி பையன் எப்படின்னு கேப்பியா கேப்பியா கேப்பியா?"


@@@@@@@@@@@@@@@

நம்ம இயற்கை மகள் ராஜி பொண்ணுக்கு(அதாவது ராஜி பொண்ணு அப்படின்னா ராஜின்னு தான் அர்த்தம், எங்க பக்கத்துல எல்லாம் அபிபொண்ணு, சங்கி பொண்ணு இப்படித்தான் கூப்பிடுவோமாக்கும்) இன்றைக்கு பிறந்தநாள். எத்தனையாவது என கேட்கும் அன்பர்கள் ஒரு நல்ல பரிசாக எனக்கு பார்சல் செய்து விட்டு தனி மடலிட்டால் சொல்லப்படும். இரவு 12 மணிக்கு பதிவு போட்டு தாக்கலாம் என நினைத்தேன். நேற்று மட்டும் முப்பது தடவை மின்சாரம் போனது.அதில் ராத்திரி 12 மணிக்கு போனதும் அடக்கம். காலை எழுந்து பார்த்தா ஜோசப் குழுமத்துல கும்மி ஆரம்பிச்சு வச்சுட்டாரு. அதனால என்ன இங்கிட்டும் ஒரு வாழ்த்து சொன்னீங்கன்னா சந்தோஷப்படுவேன்.வாழ்க ராஜி பொண்ணு.

@@@@@@@@@@@@@@@@@



100 சதம் நம்புகிறேன். வீடியோ வேலை செய்யாது என்று. பார்ப்போம் செய்யுதா இல்லியான்னு:-)

April 12, 2010

வேர் ஈஸ் த பார்ட்டி! அட எங்கூட்டுல பார்ட்டி!!!

இது முழுக்க முழுக்க நட்ராஜ் அப்டேட்ஸ் தான்



சிம்பு பாட்டுன்னா ரொம்ப ஆசை. உடனே டான்ஸ் தான். அதிலும் வேர் ஈஸ் த பார்ட்டி, நலந்தானா எல்லாம் டி வியிலே போட்டா செம டான்ஸ் தான். அபிக்கு பத்தாம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பித்த அன்று வேர் ஈஸ் த பார்ட்டிக்கு அதே காஸ்ட்டியூம்ல கலக்கினான்.
****************


"அப்பா ஒரு கதை சொல்லு"

அவன் வழக்கம் போல என்னை கதை சொல்ல சொல்லி பின்னே அவன் சொல்லி அதிலேயே நான் தூங்கி போவதும் அவன் ஓடி போய் பாத்டப்பில் தண்ணீர் பிடித்து தொம் தொம்ன்னு விழுந்து அவன் அம்மாவிடம் தொம் தொம்ன்னு அடி வாங்கி தூங்குவதும் வழக்கம் தான்.

"அப்பா ஒரு கதை சொல்லு"

"ஒரு ஊர்ல நட்ராஜ்ன்னு ஒரு பையனாம்"

"மாயவரமா?"

"ஆமாம். அவன் யூனிபாஃர்ம் எல்லாம் போட்டு கிட்டு ஸ்கூல் போனானாம்"

"அய்யே ஆய் கதை. அது வேனாம்.நல்ல கதை சொல்லு"

"சரி ஒரு ஊர்ல ஒரு ஸ்கூலாம்"

"அப்பா அசிங்க அசிங்கமா பேசாதே. உனக்கு கதையே தெரியலை. நான் சொல்லட்டுமா?"

"சொல்லு"

"ஒரு ஊர்ல அவயாம்பான்னு ஒரு யானையாம்"

"மாயவரமா?"

"ஆமா. நம்ம அவயாம்பா யானை தான். அது நேத்து வீட்டுக்கு வந்துச்சுப்பா. நம்ம அப்பா எங்கன்னு கேட்டுச்சு"

அதுக்கும் நான் தான் அப்பாவா? அடராமா!

"நீ என்ன சொன்ன?"

"அப்பா தூங்குறாங்க அப்புறமா வான்னு சொன்னேன். அது கேக்கலை. கேட்டை திறந்து கிட்டு வந்துச்சு. நான் அது வாலை பிடிச்சு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி மாடிக்கு தூக்கிகிட்டு வந்து மாடில இருந்து கிரவுண்டுல தூக்கி போட்டேன். அது தொபக்கடீன்னு விழுந்துச்சு. அப்புறமா நின்னு அழுதுகிட்டே இருந்துச்சு. நான் போய் ஒரு உதை டமால்ன்னு. அது குடுத்தேன். அது அழுதுகிட்டே ஓடிடுச்சு"

அபிஅம்மாவுக்கு சரியான கோவம். "என்ன ஒரு கற்பனை. பிளாக் ஆரம்பிச்சு குடுங்க. அபிதம்பின்னு பேர்ல எழுதட்டும். தமிழ்மணம் தழைச்சு வளரும்"ன்னு கடுப்படிச்சுட்டு தூங்கினாங்க. பொறாமை!

*************

எல்லா அப்பா அம்மாவும் எல்லா பிள்ளைகளிடமும் கேட்கும் அந்த கேள்வியை நான் ஏண்டா நட்ராஜிடம் கேட்டோம் என ஆகிவிட்டது.

"தம்பி பின்னால எனக்கு சோறு போடுவியா?"

"மாட்டேன்"

"ஏண்டா?"

"வாயில தான் போடுவேன்"

எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

****************



என் வீட்டுக்கு எதிரே கிரவுண்ட். எல்லா பள்ளியும் கோடை விடுமுறை விட்டாச்சு. கிரவுண்டு முழுக்க வானரம் ஆயிரம். அதிலே நட்ராஜ் ஆயிரத்தில் ஒருவன். ஐந்து நிமிடம் கூட வெய்யிலை வேஸ்ட் பண்ணுவதில்லை. கிரிக்கெட் பிட்ச் மூணு போட்டுட்டானுங்க. காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் விளையாட்டு இரவு ஏழு வரை தொடர்ந்து ஆட்டம் தான்.

நேற்று மாலை 5 மணிக்கு ஒரே சத்தம். பசங்க அடிச்சிகிறாங்க போலருக்குன்னு ஓடி பார்த்தேன். திக்குன்னு ஆச்சு. ஒரு 5 அடி நீள பாம்பு. நல்ல பாம்பு. அதல்லாம் எப்போதும் அந்த கிரவுண்டுக்கு பின்புறம் உள்ள வயலிலிருந்து கிரவுண்டு வழியா வந்து என் வீட்டுக்கு பின் பக்கம் உள்ள அதன் அத்தை மாமா வீட்டுக்கு வந்து குசலம் விசாரிப்பதும், நம்ம பக்கம் உள்ள பாம்புகள் "பையா" படம் பார்த்தியா? தமண்ணா எப்படின்னு கேட்க அந்த பக்கம் போய் வருவதும் சகஜம் தான். ஆனா பசங்க விளையாடும் போதெல்லாம் வரமாட்டாங்க. இது ஏதோ விருந்தாளி பாம்பு போல இருக்கு. பழக்க வழக்கம் பத்தலை. பசங்க விளையாடும் போது தைரியமா பிட்ச் வழியா வர இந்த பசங்க அதை அடித்தும் கொல்லாமல் விரட்டியும் விடாம அதை பப்பூன் ரேஞ்சுக்கு வாலை பிடித்து சுழட்ட அது குவாட்டர் அடிச்ச கோயிந்தன் மாதிரி ஆகிடுச்சு.


அதல்லாம் எனக்கு பிரச்சனையே இல்லை. அந்த வானர கூட்டத்தில் நட்டு பண்ணின அடம் தான் எனக்கு வயித்தில் புளி கரைத்தது. அவனும் தூக்கி தட்டாமாலை சுத்தனும்ன்னு அடம். பாம்பு போடும் முன்னே அபிஅம்மா அவனை முதுகில் ரெண்டு போட்டு தூக்கி வந்தாங்க. எனக்கு தான் கால் நடுக்கம் நிற்க அரை மணி ஆகியது.


********************

வீட்டில் மர வேலை செய்யும் போது தம்பியை மிரட்ட ஒரு அழகான தேக்கு மர குச்சி நல்ல இழைத்து வாங்கி வைத்து கொண்டேன். அதை காட்டி மிரட்டலாமென நினைத்து. ஏண்டா அப்படி ஒரு குச்சி செய்தோம் என ஆகிவிட்டது எனக்கு.


அவன் எதுக்காவது அழுது அடம்பிடித்தால் "என்னங்க அந்த குச்சியை எடுத்து மிரட்டுங்க அப்ப தான் சிரிப்பான்" என அபிஅம்மா சொல்லும்போது எனக்கு தான் அழுகை வருகின்றது. "நீங்க அதை எடுத்து மிரட்டும் போது எனக்கே சிரிப்பு சிரிப்பா வருது"ன்னு அவங்க சொல்லும் போது எனக்கு பத்திகிட்டு வருது. நான் அந்த குச்சியை எடுத்தாலே ஒட்டுமொத்த குடும்பமும் கெக்கெபிக்கேங்குது. என்னை பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்குதாம். அடுத்த ஜென்மத்திலாவது விருமாண்டி மீசையோட பிறக்கனும்.

*********************

இப்போதெல்லாம் தமிழ் வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் தனி தனியாக ஸ்பெல்லிங் (தப்பாகத்தான்) சொல்லி தானே பழக்குகிறான். அம்மா என்றால் அ, மா அம்மா, அப்பா என்றால் அ, பா அப்பா, சாப்பாடு என்றால் சா, பா, டு என்று தானே சொல்லி பார்த்துப்பான். அதிலும் லேட்டஸ்ட் ட்ரண்ட் word jumping தான்.

உண்மை தமிழன்ன்னு சொல்லுன்னு சொன்னா தன்மை உமிழன்னு சொல்றான். குசும்பன் சரவணன்ன்னு சொல்ல சொன்னா சசும்பன் குரவணன் என்கிறான். தொல்காப்பியன் என சொல்ல சொன்னால் கால் தொப்பியன் என்கிறான். நல்ல வேளை இன்னும் ஆத்தி சூடி சொல்லி கொடுக்கவில்லை.
****************