பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

December 29, 2014

மெடிகல்சீட் வாங்கலியோ மெடிகல் சீட்!!!



இந்த டெலிமார்கெடிங் ஆசாமிகளுக்கு எப்படித்தான் டேட்டாஸ் கிடைக்கிறதோ தெரியவில்லை. சமீபமாக ஒரு கம்பனியில் இருந்து போன்.


"சார் நீங்க தான் அபிராமி அப்பாவா?"

"ஆமாம்"

"உங்க பொண்ணை மெடிகல் சேர்கனுமா?"

"ஆமாங்க ஆமாம்"

"ரொம்ப சிம்பிள். அப்ராட்ல படிக்க வையுங்க. ஜஸ்ட் 25 லட்சம் தான். பிலிப்பைன்ஸ்ல... போக்குவரத்து செலவு, கட்டுசோறு செலவு உட்பட மெடிகல் முடிஞ்சு அதிலே பி ஜியும் முடிச்சு அதன் பின்னே இங்க இந்தியாவிலே ஒரு டெஸ்ட் இருக்கு, அதையும் பாஸ் பண்ண வச்சு உங்க கிட்ட டாக்டரா ஒப்படைக்கும் வரை  ஜஸ்ட் 25 லட்சம் தான்"

"ஜஸ்ட்(!?) 25 லட்சம் தானா, இருக்கட்டும்க, அவ மார்க் என்னான்னு பார்த்துகிட்டு பின்ன பேசுவோம்"

"சார் இப்ப அட்மிஷன் நடக்குது வெறும் ஒன்னரை லட்சம் கட்டி சீட் வாங்கிடுங்க. மத்ததை பின்ன பார்த்துப்போம். பாஸ்போர்ட் கூட நாங்க அப்ளை பண்ணி வாங்கி, விசா ப்ராசஸ் பண்ண ஆரம்பிச்சிடுவோம்"

"பிசாத்து காசு ஒன்னரை லட்சம் தானே. குடுத்தா போச்சு. (அவ்வ்வ்வ்) பின்ன பேசிப்போம்"

ஒரு வழியா போனை கட் பண்ணும் வரை போதும் போதும் என்றாகிவிடும். பேசுவது ஆண்களா இருந்தா கூட கொஞ்சம் கடுமையா சொல்லி வைக்கலாம். எல்லாம் பொம்பள பசங்க. கடுமையா பேசி நோகடிக்க மனசும் வரலை. பாவம் அவங்க பொழப்பு அது.

இப்படியாக நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போன் கூட அல்லாடிக்கொண்டு இருந்தேன்.

இப்படித்தான் இரண்டு நாள் முன்பாக இரவு வெகுநேரம் கழித்து வந்தேன் வெளியூரில் இருந்து. காலையில் அசந்து தூங்கி கொண்டு இருந்த போது போன் வந்தது. எடுக்கலாம் என நினைக்கும் போது அசதியில் முடியவில்லை.  என் மகன் நட்ராஜ் தான் எடுத்தான். தூக்க கலக்கத்தில் அந்த சம்பாஷனைகளை மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தேன்.

"ஹலோ சார், எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன்" - நட்ராஜ்

(நட்ராஜ்க்கு எப்போதும் போனை ஸ்பீக்கர்ல போட்டு பேசுவது தான் வழக்கம். காது வலிக்கும் என டேபிள் மேலே வச்சுட்டு நடந்து நடந்து எல்லாம் பேசுவான்)

"யாரு தம்பி இது. வீட்டிலே அப்பா இல்லியா? அப்பா கிட்டே கொடுங்க நல்ல பிள்ளை தானே நீங்க?"

"நான் நல்ல பிள்ளை தான். அப்பா தூங்குறாங்க. எழுப்பினா கத்துவாங்க"

"சரி அம்மா கிட்ட கொடுங்க"

"அம்மா கோவிலுக்கு போயாச்சு. அக்கா ட்யூஷனுக்கு போயாச்சு. இன்னிக்கு ஃபுல் டெஸ்ட் இருக்கு பிசிக்ஸ்ல"

"சரி வீட்டிலே பெரியவங்க இருந்தா கொடுங்க"

"நானே பெரியவங்க தான். என் பிரண்ட் கோகுலோட தம்பி நகுல் எல் கே ஜி தான் படிக்கிறான். அவனே என்னை "அண்ணா"ன்னு தான் சொல்லுவான். அதனால நானே பெரியவங்க தான். அதனால என் கிட்ட சொல்லுங்க"

"அது வந்துப்பா... அபிராமிக்கு மெடிகல் சீட் பிலிப்பைன்ஸ்ல படிக்கிறது விஷயமா பேசனும்"

"பிலிப்பைன்ஸ் எங்க இருக்கு?"

"தூரமா இருக்கு. அப்பாவை எழுப்புங்க"

"மேக்னா  மெட்ரிகுலேஷன் ஸ்கூலை விட தூரமா?"

"என்னது? ...இது ரொம்ப தூரம், பிளைட்ல போகனும், அப்பாவை எழுப்புங்க"

"ஆட்டோவுல தான் நான் போவேன். அதுக்கு மாசம் 600 ரூப்பீஸ். பிளைட்ல தினம் போகனும்னா எவ்ளோவ் பீஸ்"

"தம்பி நல்ல பிள்ளை தானே நீங்க. அப்பாவை எழுப்புங்க"

"நான் பிலிப்பைன்ஸ்ல படிக்க எவ்ளோவ் ஆகும்"

கொஞ்சம் சலிப்புடன் "25 லட்சம் ஆகும்"

"நான் ஃபோர்த் ஸ்டேண்டர்ட் போனதும் நானும் பிலிப்பைன்ஸ்ல வந்து படிக்கட்டா"

"தம்பி வீட்டிலே பெரியவங்க வேற யாரும் இருந்தா கொடுங்க"

"நானே பெரியவங்க தான். வேணுமின்னா நகுல் கிட்டே கேளுங்க. அவன் அம்மா நம்பர் தரவா"

"தம்பி நீங்க +2 முடிச்சதும் இங்க வந்து படிக்கலாம். இப்ப அப்பாவை எழுப்புங்க"

"அதான் சொன்னனே அப்பாவை எழுப்பினா கத்துவாங்க. 25 லட்சம்னா ட்வண்டி ஃபைவ் போட்டு எத்தினி சைபர்"

அவங்க மனசுகுள்ள கணக்கு போட்டு பார்த்திருப்பாங்க போலிருக்கு..... கொஞ்சம் இடைவெளி விட்டு "அது நிறைய சைபர் இருக்கு"

"அய்யோ, மேக்னா ஸ்கூல்ல 14 போட்டு மூணு சைபர் தான். அம்மா அதுக்கே கத்துறாங்க. நெறய சைபர்க்கு  நெறய கத்துவாங்க"

"அது வேற ...இது வேறப்பா. அப்பாவை எழுப்பு"

"ப்ளைட் பெருசா இருக்குமா? கோகுல், வித்யா எல்லாம் என் ஆட்டோவிலே வருவாங்க, அவங்களும் அங்க சேர்ந்தா எல்லாரும் பிளைட்ல போலாம்ல"

"ஆமாம், அம்மா வந்தாச்சா கோவில்ல இருந்து"

"இன்னும் வரலை. வந்தாலும் தரமாட்டேன். எனக்கு சொல்லுங்க பிளைட் பெரிசா இருக்குமா?"

"ம் இருக்கும்" ரொம்ப டயர்டா ஆகிட்டாங்க போலிருக்கு.

"நீங்களும் பிலிப்பைன்ஸ்ல தான் படிச்சீங்கலா"

"இல்ல. அங்க படிச்சா நான் ஏன் டெலிமார்கெடிங்ல இருக்கேன்"

"டெலிமார்கெடிங்னா என்னா?"

போன் டக்கென வைக்கப்பட்டது.

சரியான "மூடர் கூடத்தில்" வந்து மாட்டிகிட்டோம்னு நினைச்சிருப்பாங்க அந்த பெண்.

அதன் பின்னர் இதுவரை அவங்க கிட்ட இருந்து போன் வரலை. அவங்க பட்ட கஷ்டம் அவங்களுக்கு தானே தெரியும்!

May 17, 2013

சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம் பின்னே சமதர்மம் !!!

சமீபத்தில் வெளிவந்துள்ள சிவகார்த்தி நடித்த 'எதிர்நீச்சல்' படத்தில் 'குஞ்சிதபாதம்' என்னும் பெயரினால் வரும் அவமானங்கள் தான் கதையே என ஒட்டுமொத்தமாக எல்லோரும் தங்கள் 'சினிமா விமர்சனத்தில்' குறிப்பிட்டு வருகின்றனர். அதிலே என்ன அசிங்கம்?? எனக்கு புரியவில்லை. சிதம்பரம் நடராஜர் சிலைக்கு அலங்காரம் செய்யும் போது அவரது உடல் முழுக்க நகைகள் அலங்காரம் மட்டுமே இருக்கும். அவரது திருவாச்சியில் மட்டுமே பூ அலங்காரம் இருக்கும். மத்தபடி அவரது உடலில் பூ மாலை சூட்டும் இடமே அவரது தூக்கி நிறுத்திய இடது கால் பாதங்களில் அதாவது கனுக்காலில் சின்னதாய் நம் உள்ளங்கை அளவிலான குஞ்சம் வைத்த பூ மாலை சாற்றியிருப்பர். அதற்கு தான் குஞ்சித' பாதம் என்னும் பெயர். அது போகட்டும். இந்த பெயரை விடுங்கள். என் பெயர் "தொல்காப்பியன்" என்ன பாடு பட்டிருக்கு தெரியுமா என் பள்ளி பருவத்தில்???


நானே எலும்பும் தோலுமாய் இருப்பேன் அப்போது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை, தோலும் எலும்புமாய் இருக்கிறேன். அதை குறிக்கும் விதமாய் தோலு' காப்பியன், காப்பி, என பலவாறு கிண்டலடிக்கப்பட்டுள்ளேன். பள்ளிக்கு தடுப்பூசி போட வரும் போது பசங்க ஊசிக்கு அழுதுகிட்டு இருக்காங்களோ இல்லியோ வரும் ஊசிக்காரர் ஊசியை போட்டு விட்டு என் பெயரை தோல் காப்பியன் என மிகச்சரியாக தப்பாய் எழுத போவதை நினைத்து அழுவேன். ஊசி வலியை விட அது அதிகம். அது என்ன எழவோ தெரியலை... இப்போதும் கூட என் வாக்காளர் அடையாள அட்டையில் தோல் காப்பியனாகவே இருந்து தொலைக்கிறேன். அப்படி என் பெயரால் நான் ரொம்ப மனமொடிந்து போன நேரத்தில் அபி பிறந்து அபிஅப்பாவாக ஆன பின்னே தான் ஓரளவு நிம்மதி. அதையும் கூட சிலர் அபிஅப்பா என்பதை சில சமயம் அபிபாப்பா என எழுதி விடுகின்றனர்.


இப்படியாக என் பெயர் எனக்கு பல தொல்லைகளை கொடுத்த காலத்தில் அதாவது நான் ஏழாம் வகுப்பு படித்த காலத்தில் (ஏழாம் வகுப்பெல்லாம் படிச்சிருக்கேன் மை லார்ட்) ஒரு நான்கு மாதம் மயிலாடுதுறையில் இருந்து மேல்படிப்புக்காக மங்கைநல்லூர் கிராமத்துக்கு கொண்டு சேர்த்தார்கள். அங்கே பெயர் எல்லாம் வித்யாசமாய் இருக்கும். அதிலே ஒருத்தன் பெயர் "சமாதானம்". நம்புங்க. அவன் பெயரே சமாதானம் தான். அவன் அண்ணன் பெயர் "சமரசம்" தம்பி பெயர் "சமதர்மம்" .. இப்படியாக அந்த பள்ளியில் சமாதானம், சமரசம், சமதர்மம் ஆகிய சகோதர்கள் வந்து சேர்ந்தனர் அந்த பள்ளிக்கு. அவனுங்க பெயரை மற்ற மாணவர்கள் கிண்டலடிக்கும் போது நானும் சேர்ந்துப்பேன். பின்ன என்ன ... ஒரே அடிதடி, சண்டை, சச்சரவு தான். ஹய்... நல்லா இருக்குல்ல... சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம் பின்ன சமதர்மம் ஆகா ... இந்த குழப்பத்தில் என் தொல்காப்பியன் பெயர் கிண்டலில் இருந்து தப்பித்து கொண்டது. பின்னர் நான் அந்த பள்ளியில் முதல் ரேங் வாக்கியமையால் அப்பாவுக்கு அந்த பள்ளி மீது இருந்த நம்பிக்கை போயே போயுந்தி. நம்ம பையனே பஷ்ட் ரேங் வந்தா அதல்லாம் ஒரு பள்ளிக்கூடமான்னு பள்ளி மீது கோவிச்சுகிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்து பழைய பள்ளியிலேயே சேர்த்துட்டாங்க. மீண்டும் தொல்காப்பியன் என்பது தோலாய் ஆனது... அவ்வ்வ்


பின்னர் விபரம் தெரிந்த காலத்தில் தான் அந்த பெயர் எத்தனை தொன்மையான அழகிய தமிழ் பெயர் என்பது புரிந்தது. அது போலவே சமாதானம், சமரசம், சமதர்மம் என உயரிய நோக்கில் தன் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டிய அந்த அப்பனை நினைத்து மானசீகமாய் வணங்கினேன்.


பின்னர் என் இருபத்தி எட்டாம் வயதிலெல்லாம் நான் ஃபாரின் ரிட்டர்ன் ஆகி கண்ணாலம் காட்சின்னு ஆன பின்னர் ஒரு நாள் நான் லீவுக்கு வந்திருந்த போது ஒரு பத்திரிக்கை வந்திருந்தது. ஆமாம்! என் பால்ய காலத்தில் பழகிய அந்த சமாதானத்துக்கு திருமணம். எடுத்து பிரித்து பார்த்தேன். மணமகள் பெயரை பார்த்தததும் குபீர் என சிரித்து விட்டேன். நான் ஏற்கனவே என் மனவியிடம் இந்த "சமாதானம்" என்னும் பெயரை கேலி செய்த கதையை சொல்லி இனி அந்த பெயரை கேட்டால் சிரிக்க மாட்டேன் என சொல்லி இருந்தேன். ஆனாலும் சிரித்து விட்டேன். என் மனைவி அந்த அழைப்பிதழை வாங்கி பார்த்து விட்டு என்னை முறைத்த போது நான் அந்த "சமாதானம்" பெயருக்காக சிரிக்கவில்லை என சொல்லவில்லை. 


இரு நாட்கள் பின்னர் அந்த திருமணத்துக்கு போனேன். எல்லோரும் வாழ்த்திய பின்னர் நான் மேடைக்கு சென்று "சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்" என வாழ்த்தினேன். அவனுக்கு ரொம்ப கோவம் வந்து விட்டது. "போடா தோலு" என்றான். சிரித்து கொண்டே வந்து விட்டேன்.

அந்த மணமகள் பெயர்  "சாந்தி":-))

July 13, 2012

ஸ்டீவ்ஜாப்ஸ்ம் தட்டி மெஸ் மீனும் மற்றும் டைட்டானிக் படமும்!!!


ஒர் நாள் நான் வசிக்கும்  நகர் பையன் ஒருத்தன் ஓடி வந்து "அண்ணே அவரு செத்து போய்ட்டாரு" தெரியுமா? என கேட்க எனக்கு தூக்கி வாரிப்போட்டது. யாராய் இருக்கும் என நான் என் குருவி மூளையை கசக்கும் முன்னமே அவனே "ஸ்டீவ்ஜாப்ஸ்"  என சொல்ல எனக்கு அப்பவும் அது யாருன்னு தெரியலை.


இந்த இருபது வருஷத்தில் நான் வேலை பார்த்த இத்தாலிய, ஆங்கிலேய மற்றும் அரேபிய கம்பனிகளில் அது போன்ற பெயரில் யாரும் இருந்ததாக எனக்கு ஞாபகம் வரவில்லை. இன்னும் சொல்ல போனா எனக்கு "அ வாந்தி" "கார்லோ வெளிக்கி" என  அசிங்கமான பெயர் கொண்ட இத்தாலிய சக ஒர்க்கர் பெயர்கள் மட்டுமே ஞாபகத்தில் இருந்து தொலைத்தன. கிரீஸ் நாட்டுல இருந்து வேலைக்கு வந்த எவன்ம் கூட  ஸ்டீவ் ஜாப்ஸ்ன்னு பெயர் வச்சுக்கலை. ஒரு "பெரு" நாட்டு காரன் மட்டும் ஸ்டீவன்சன்னு இருந்தான். ஆனா எங்க நகர் பையன் சொல்வது அதுக்கு கிட்டதட்ட பொருந்தி வரும் பெயர் தான் எனினும் பத்து பொருத்தமும் இல்லையே என மீண்டும் குழம்பி அவனிடமே "அது யாரு ஸ்டீவ் ஜாப்ஸ்" என கேட்க அவன் "ஆப்பிள் தெரியுமா? அவரு தான்ணே" என சொல்ல எனக்கு தெரிஞ்சு  ஆப்பிள் விற்கும் 'காமாட்சி பழக்கடை' காரருக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் என்றெல்லாம் பெயர் வைத்திருக்க வாய்ப்பில்லை. ஏன்னா அவர் பெயர் அவருக்கே தெரியாது. அவர் கடையில் இருக்கும் போது போன் வந்து அவர் எடுத்தா கூட அந்த "கருப்பு மண்டை" போனில் "அல்லோஓஓஓஓஒ நான் புள்ள பேசுறேன்" என்று ஜாதி பெயரை சொன்னாலும் சொல்லுவாரே தவிர அவர் பெயரை சொல்ல மாட்டார். ஆக அவருக்கு ஸ்டீவ்ஜாப்ஸ் பெயரெல்லாம் ரொம்ப அதிகம் என நினைத்துக்கொண்டேன்.


ஒரு வழியாக அவனிடம் வெட்கம் விட்டு "நான் பார்க்கத்தான் லூயிபிலிப் எல்லாம் போட்டு இருப்பேன். எல்லாம் பில்டப்பு. மொத்தத்தில் நான் ஒரு காமடி பீசு. தயவு செஞ்சு யாருன்னு சொல்லு" என கேட்டேன். ஒரு வேளை அந்த ஸ்டீவ்ஜாப்ஸ் எனக்கு வேண்டப்பட்டவரா இருந்தா எப்படி பேஸ்புக்ல பதிவு போடுவது என்பது பற்றியே தான் என் சிந்தனை இருந்தது. "இந்த ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கானே ஸ்டீவ் ஜாப்ஸ்... நானும் அவனும் முள்ளும் மலரும் படம் பார்க்க போனப்ப கியூவிலே நிக்கும் போது போலீஸ்காரர் புட்டத்தில் போட்ட போடுல என் புட்டத்துக்கு பதிலே என்னை தள்ளி விட்டு அவன் வாங்கினான். இப்பவும் அவனை பின்பக்கம் தடவிப் பார்த்தா ராமர் அணிலுக்கு கோடு போட்ட மாதிரி அந்த தழும்பு இருக்கும். அப்படிப்பட்ட அவன் இன்னிக்கு போய் சேர்ந்துட்டான்" என பதிவு போட்டா சும்மா  லைக்கு அள்ளிகிட்டு போவும் என அல்ப்பமாக நினைத்துக்கொண்டேன்.


பின்ன அவன் சொன்ன பின்னர் தான் ஆப்பிள் என்பது போன், கம்பியூட்டர் பெயர் என்று. என்ன மாதிரி உலகமடா சாமி இது? இஞினியரிங் காலேஜ்க்கு முப்பாத்தம்மன் இஞினியரிங் காலேஜ் என வைக்கிறாய்ங்க. "கேரிஃபோர் புண்ணாக்கு மொத்த வியாபாரம்"ன்னும் வைக்கிறாங்க. "புண்ணியமூர்த்தி பிள்ளை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்"ன்னும் வைக்கிறாங்க. அது போல "ஆப்பிள்", "பேரிக்காய்", "நேந்திரம் பழம்"ன்னு எல்லாம்  கம்பியூட்டர் கம்பனிக்கு பெயர் எல்லாம் வைச்சு தொலைஞ்சா நான் எப்படி கண்டு பிடிக்க முடியும்.


அந்த பையன் கேட்டான். "அண்ணே எப்போதும் லேப்டாப் எல்லாம் வச்சிகிட்டு என்னவோ அடிச்சு கிட்டு இருக்கீங்கலே. அதான் ஆப்பிள் ஓனரை எல்லாம் தெரியுமோன்னு நினைச்சேன்" என சொன்னான். என்ன எழவுடா இது. லேப்டாப் எல்லாம் வச்சிருந்தா பெரிய மனுசனா? நான் ஒரு லோக்கலுடா லோக்கலு. எனக்கு அதிகபட்சமா தொழிலதிபர்னா மீனாட்சி சுந்தரம் மளிகை கடை தான், பெரிய எஜுகேஷன் இண்ஸ்டிட்யூட்னா ஔவையார் ஆரம்ப பள்ளி தான், பெரிய கம்பியூட்டர் நிறுவனம்னா பிரியா கம்பியூட்டர் ஜெராக்ஸ் கடை தான், அதிகபட்சமாக என் சுற்றுலா தளம் மாயவரம் பஸ்டாண்டு தான் என மனதில் நினைத்துக்கொண்டேன்.


அவன் போனதும் வந்து மெதுவாக டைப் அடிக்க தொடங்கினேன். "இந்த ஸ்டீவ்ஜாப்ஸ் இருக்காரே ஸ்டீவ்ஜாப்ஸ் ஒரு முறை தட்டி மெஸ் பத்தி நான் எழுதின பதிவை படிச்சுட்டு மாயவரம் வந்து அங்க மீன் குழம்பை பெனஞ்சு அடிச்சுட்டு " என  ஆரம்பித்தேன். அவரு ரேஞ்சுக்கு முள்ளும் மலரும் சரிபட்டு வராது என்பதால் "ஸ்டீவ்ஜாப்ஸ்ம்  தட்டி மெஸ் மீனும் மற்றும் டைட்டானிக்  படமும் " என தலைப்பிட்டு விறு விறுவென டைப்ப ஆரம்பித்தேன்....

                                                                   ==============

குறிப்பு: "வர வர உங்க பதிவு எல்லாம் பெருசா இருக்கு. படிக்க அலுப்பா இருக்கு. முன்ன மாதிரி சின்னதா எழுதுங்களேன். அரசியல் வேண்டாமே ப்ளீஸ்" என கேட்ட கோடானு கோடி(?) வாசக பெருமக்களுக்காக பழைய அபிஅப்பாவை தூசி தட்டி எழுப்பும் சின்ன முயற்சி மட்டுமே இந்த பதிவு:-))

February 28, 2007

ஒரு முக்கிய அறிவிப்பு!!!

மக்களே! இது ஒரு முக்கிய அறிவிப்பு. தமிழ்மணத்திலே என்னை காணவில்லை. காரணம் என் சமீபத்திய பதிவுகள் 30 மார்க் தாண்டி போயிடுச்சு.

தமிழ்மணத்திலே ஏதாவது பெயர் தெரிஞ்சாதான் 4 பேர் வந்து துப்பிட்டு போவாங்க. கொத்ஸ், வெட்டிதம்பி,தேவ் பொன்ஸக்கா எல்லாரும் வந்து ஒரு ஒரு ஐடியா குடுத்துகிட்டு இருக்காங்க.

நான் என்ன சொல்றன்னா... இது ஒரு பதிவுன்னு நெனச்சுகாதீங்க. தலைப்ப பாத்துட்டு வந்ததுதான் வந்தீங்க நம்ம பிளாக்குக்கு.. அப்டீயே சிரமத்த பாக்காம என் மத்த பதிவுக்கு போய் பாத்துட்டு பின்னூட்ட பிச்சை போடுறதா இருந்தா அங்க போடுங்க.

இந்த பதிவுக்கு ஸாரி...அறிவுப்புக்கு பின்னூட்டாதீங்க. அதை நானே பாத்துக்கறேன். அடிக்கடி வந்து ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன். இது மத்த பதிவுக்கான அழைப்பு மட்டுமே!

அடுத்த பதிவு ரெடியானா இந்த அறிவிப்பை நானே தூக்கிடறேன்.

மக்களே இந்த ஐடியா பரவாயில்லயான்னு கருத்து சொல்லுங்க...

பி.கு: இதுவரை பின்னூட்ட கயமை செஞ்சிகிட்டு இருந்தானுங்க. இப்ப பதிவு கயமை ஸ்டாட் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்களேன்னு தமிழ்மண நிர்வாகிகள் நினைப்பது புரிகிறது. இது சும்மா ஒரு ஜாலி பதிவு.