பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 17, 2013

சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம் பின்னே சமதர்மம் !!!

சமீபத்தில் வெளிவந்துள்ள சிவகார்த்தி நடித்த 'எதிர்நீச்சல்' படத்தில் 'குஞ்சிதபாதம்' என்னும் பெயரினால் வரும் அவமானங்கள் தான் கதையே என ஒட்டுமொத்தமாக எல்லோரும் தங்கள் 'சினிமா விமர்சனத்தில்' குறிப்பிட்டு வருகின்றனர். அதிலே என்ன அசிங்கம்?? எனக்கு புரியவில்லை. சிதம்பரம் நடராஜர் சிலைக்கு அலங்காரம் செய்யும் போது அவரது உடல் முழுக்க நகைகள் அலங்காரம் மட்டுமே இருக்கும். அவரது திருவாச்சியில் மட்டுமே பூ அலங்காரம் இருக்கும். மத்தபடி அவரது உடலில் பூ மாலை சூட்டும் இடமே அவரது தூக்கி நிறுத்திய இடது கால் பாதங்களில் அதாவது கனுக்காலில் சின்னதாய் நம் உள்ளங்கை அளவிலான குஞ்சம் வைத்த பூ மாலை சாற்றியிருப்பர். அதற்கு தான் குஞ்சித' பாதம் என்னும் பெயர். அது போகட்டும். இந்த பெயரை விடுங்கள். என் பெயர் "தொல்காப்பியன்" என்ன பாடு பட்டிருக்கு தெரியுமா என் பள்ளி பருவத்தில்???


நானே எலும்பும் தோலுமாய் இருப்பேன் அப்போது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை, தோலும் எலும்புமாய் இருக்கிறேன். அதை குறிக்கும் விதமாய் தோலு' காப்பியன், காப்பி, என பலவாறு கிண்டலடிக்கப்பட்டுள்ளேன். பள்ளிக்கு தடுப்பூசி போட வரும் போது பசங்க ஊசிக்கு அழுதுகிட்டு இருக்காங்களோ இல்லியோ வரும் ஊசிக்காரர் ஊசியை போட்டு விட்டு என் பெயரை தோல் காப்பியன் என மிகச்சரியாக தப்பாய் எழுத போவதை நினைத்து அழுவேன். ஊசி வலியை விட அது அதிகம். அது என்ன எழவோ தெரியலை... இப்போதும் கூட என் வாக்காளர் அடையாள அட்டையில் தோல் காப்பியனாகவே இருந்து தொலைக்கிறேன். அப்படி என் பெயரால் நான் ரொம்ப மனமொடிந்து போன நேரத்தில் அபி பிறந்து அபிஅப்பாவாக ஆன பின்னே தான் ஓரளவு நிம்மதி. அதையும் கூட சிலர் அபிஅப்பா என்பதை சில சமயம் அபிபாப்பா என எழுதி விடுகின்றனர்.


இப்படியாக என் பெயர் எனக்கு பல தொல்லைகளை கொடுத்த காலத்தில் அதாவது நான் ஏழாம் வகுப்பு படித்த காலத்தில் (ஏழாம் வகுப்பெல்லாம் படிச்சிருக்கேன் மை லார்ட்) ஒரு நான்கு மாதம் மயிலாடுதுறையில் இருந்து மேல்படிப்புக்காக மங்கைநல்லூர் கிராமத்துக்கு கொண்டு சேர்த்தார்கள். அங்கே பெயர் எல்லாம் வித்யாசமாய் இருக்கும். அதிலே ஒருத்தன் பெயர் "சமாதானம்". நம்புங்க. அவன் பெயரே சமாதானம் தான். அவன் அண்ணன் பெயர் "சமரசம்" தம்பி பெயர் "சமதர்மம்" .. இப்படியாக அந்த பள்ளியில் சமாதானம், சமரசம், சமதர்மம் ஆகிய சகோதர்கள் வந்து சேர்ந்தனர் அந்த பள்ளிக்கு. அவனுங்க பெயரை மற்ற மாணவர்கள் கிண்டலடிக்கும் போது நானும் சேர்ந்துப்பேன். பின்ன என்ன ... ஒரே அடிதடி, சண்டை, சச்சரவு தான். ஹய்... நல்லா இருக்குல்ல... சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம் பின்ன சமதர்மம் ஆகா ... இந்த குழப்பத்தில் என் தொல்காப்பியன் பெயர் கிண்டலில் இருந்து தப்பித்து கொண்டது. பின்னர் நான் அந்த பள்ளியில் முதல் ரேங் வாக்கியமையால் அப்பாவுக்கு அந்த பள்ளி மீது இருந்த நம்பிக்கை போயே போயுந்தி. நம்ம பையனே பஷ்ட் ரேங் வந்தா அதல்லாம் ஒரு பள்ளிக்கூடமான்னு பள்ளி மீது கோவிச்சுகிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்து பழைய பள்ளியிலேயே சேர்த்துட்டாங்க. மீண்டும் தொல்காப்பியன் என்பது தோலாய் ஆனது... அவ்வ்வ்


பின்னர் விபரம் தெரிந்த காலத்தில் தான் அந்த பெயர் எத்தனை தொன்மையான அழகிய தமிழ் பெயர் என்பது புரிந்தது. அது போலவே சமாதானம், சமரசம், சமதர்மம் என உயரிய நோக்கில் தன் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டிய அந்த அப்பனை நினைத்து மானசீகமாய் வணங்கினேன்.


பின்னர் என் இருபத்தி எட்டாம் வயதிலெல்லாம் நான் ஃபாரின் ரிட்டர்ன் ஆகி கண்ணாலம் காட்சின்னு ஆன பின்னர் ஒரு நாள் நான் லீவுக்கு வந்திருந்த போது ஒரு பத்திரிக்கை வந்திருந்தது. ஆமாம்! என் பால்ய காலத்தில் பழகிய அந்த சமாதானத்துக்கு திருமணம். எடுத்து பிரித்து பார்த்தேன். மணமகள் பெயரை பார்த்தததும் குபீர் என சிரித்து விட்டேன். நான் ஏற்கனவே என் மனவியிடம் இந்த "சமாதானம்" என்னும் பெயரை கேலி செய்த கதையை சொல்லி இனி அந்த பெயரை கேட்டால் சிரிக்க மாட்டேன் என சொல்லி இருந்தேன். ஆனாலும் சிரித்து விட்டேன். என் மனைவி அந்த அழைப்பிதழை வாங்கி பார்த்து விட்டு என்னை முறைத்த போது நான் அந்த "சமாதானம்" பெயருக்காக சிரிக்கவில்லை என சொல்லவில்லை. 


இரு நாட்கள் பின்னர் அந்த திருமணத்துக்கு போனேன். எல்லோரும் வாழ்த்திய பின்னர் நான் மேடைக்கு சென்று "சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்" என வாழ்த்தினேன். அவனுக்கு ரொம்ப கோவம் வந்து விட்டது. "போடா தோலு" என்றான். சிரித்து கொண்டே வந்து விட்டேன்.

அந்த மணமகள் பெயர்  "சாந்தி":-))

7 comments:

 1. ஆகா அசிங்கமா போச்சுதே.... அபிஅப்பாவின் பதிவு என்ன எலிப்புழுக்கையாட்டம் இத்தினி சின்னதா இருக்கு? முகநூலில் போட வேண்டியதை இங்க போட்டுட்டனோ??? சரி போகட்டும். பார்த்து எதுனா செய்யுங்க மக்கா....

  ReplyDelete
 2. //"சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்" என வாழ்த்தினேன். அவனுக்கு ரொம்ப கோவம் வந்து விட்டது//
  அவரால முடியாதத சொன்னா கோவம் வராதா.

  ReplyDelete
 3. என்னையா வாழ்த்துறாய் கலியாணவீட்டிற்கு போய்
  "சமாதானம் சாந்தி உண்டாகட்டும்" தான் சரி

  ReplyDelete
 4. என்னுடைய வகுப்பில் தாயன்பன் என்று மாணவனின் பெயர். ரோம கேலி பண்ணுவாங்க. என்ன ஆனாலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொஞ்சும் எண்ணிப்பார்த்து பெயர் வைக்கவேண்டும்.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))