பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

May 16, 2014

அவள் பெயர் "முருகேசி" !!!

அவள் பெயர் "முருகேசி".அவளுக்கு  அந்த பெயர் வைக்க"கவுண்டரை" தவிர  எவ்வித சிறப்பு காரணமும் இல்லை. அவர் ஒரு படத்தில் ஒரு குழந்தைக்கு "இந்த உலகில் யாருக்கும் வைக்காத பெயர் வைக்கிறேன்" என சொல்லி விட்டு முருகேசன் என வைத்து விட்டு அது முருகேசியான காரணம் தான் அந்த பெயர் எனக்கு பிடித்தமைக்கான நிகழ்வு. ஆமாம்!!!! என் மடிக்கணினியின் பெயர் "முருகேசி"! அவள் எனக்கு வாழ்க்கைப்பட்டு வந்த போது நான் வைத்த பெயர் அவளுக்கு அதுதான். 

சில நாட்கள் எனக்கு இணைய மற்றும் கணினி தொடர்பு  இல்லை. என் மனைவி உட்பட பலருக்கு சந்தோஷம். சிலருக்கு ஆச்சர்யம். வெகு சிலருக்கு கேள்விக்குறி! ஆனால் யாருக்கும் வருத்தம் இருப்பதாக உண்மை விளம்பி நடுநிலை ஊடகங்களான தந்தி டிவி போன்றவை உலகுக்கு செப்பவில்லை. அதை விடுங்கள். காரணம் "முருகேசி"யின் மரணம்! அகால மரணம் எனில் வருந்தலாம். இது அப்படி இல்லை. வாழ்த்து செத்த புண்ணியவதி இந்த முருகேசி. கல்யாண சாவு என்பார்களே அப்படியான ஒரு சாவு!

நல்ல வேளை! தேர்தல் முடிந்தும் ஒரு நாள் வரை கூட முருகேசி  உயிருடன் இருந்தாள். என் தேர்தல்  கடமையை நிறைவேற்றிய பின்னர் தான் மரித்தாள்.மூளைச்சாவு. அதாவது "Hard disk crack" .  இன்னும் சில உறுப்புகள் உயிருடன் இருப்பதாக சொல்லப்பட்டதால் அவள் சிகிச்சைக்கு போன மடிக்கணினி ரிப்பேர் இடத்தில்  ஐ சி யூவில் இருக்கின்றாள். அதை எடுத்த பின்னர் எனக்கு மீண்டும் வந்ததும் அவள்  மீது ஒரு கட்டி சூடம் வைத்து  எரித்து  ஈமக்கிரியை  செய்து விடலாம் என இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம். முருகேசி உருவான இடமான HP ஒரு நல்ல குடும்பம் என்பதை உணர்க!நல்ல குடும்பத்து பெண்.  எனனில் இந்த கடந்த 8 வருடங்கள் 24 மணி நேரமும் அது என்னிடம் உழைத்த உழைப்பு வேறு எந்த குடும்ப மடிக்கணினியும்  செய்ய இயலாதது. 

அவள் என்னிடம் இருந்த வரை அவள் எனக்கு சம்பாதித்து கொடுத்தது என பார்ப்பின் .......1.ஏகப்பட்ட நண்பர்கள். 2. அதை விட அதிகமாக எதிரிகள். எதிரிகளை விடுங்கள். இல்லாவிடில் உலகமே வெறுமை சூழ்ந்திருக்கும். நண்பர்கள்???.. அடடே அபாரம்... 

இந்த முருகேசி என்னிடம் வந்து சேர்ந்த  போது என் மகன்  நட்ராஜ் பிறக்கவில்லை. அபி தான் அப்போது குழந்தை. அபியை வலது இடுப்பிலும், முருகேசியை இடது கையிலும் பிடித்துகொண்டு   அண்ணாமலை பல்கலைகழக வளாகத்தில் மாலை நேரத்தில்  பேராசிரியர்கள் குடியிருப்பை தாண்டி மைதானத்துக்கு வருவேன். அபியை விளையாட விட்டு விட்டு அங்கே மருத்துவ கல்லூரி போகும் சாலையில் இருக்கும் பல்கலைகழக ஊழியர் நூலகத்தில் இந்த முருகேசியுடன் நுழையும் போது அங்கே வேதியியல்  பேராசிரியரும், பின்னர் நெல்லை சுந்தரனார் பல்கலை கழக துனை வேந்தரும், இப்போது அதை எல்லாம் விட பெரிய பதவியான "திமுக இளைஞர் அணி"க்கு திராவிட பாடம் எடுக்கும் ஆசானுமாக இருக்கும் அண்ணன் முனைவர் சபாபதி மோகன் வருவார்கள். அந்தி மயங்கும் மாலையில் ஆரம்பித்து இரவு ஆகி பின்னர் விரல் சூப்பும் அபியை சில மருத்துவ மாணவிகள் தூக்கி க்கொண்டு வந்து "அபிஅப்பா, இவளுக்கு பசி வந்துடுச்சு, போங்க போய் சாப்பாடுக்கு உங்க வீட்டிலே குழந்தையை கொடுங்க" என சொல்லி கொடுக்கும் போது பேராசிரியரிடம் " அண்ணே, நாளை தொடருவோம்" என மனசே இல்லாமல் பேச்சை முடித்து கொண்டு மீண்டும் அபியை வலது இடுப்பு,முருகேசியை  இடது கை பிடிப்பு என வீட்டுக்கு போவேன். 

துபாயில் நான் இருக்கும் போது என் அறையில் இரண்டு பேர். அந்த திருச்சி கார்த்திக்கு இரவு முழுக்க முழு வீச்சில் குளிர்சாதனம் வேலை செய்ய வேண்டும். எனக்கோ அது அலர்ஜி. அப்போது எனக்கு இந்த முருகேசி தான் முழுத்துணை. இனைப்பை கொடுத்து விட்டு காலில் தலையனை போல வைத்து கொண்டால் கதகதவென இருக்கும். இப்படி எல்லாம் அதை பயன்படுத்தியதை அவள் பிறந்த  HP குடும்பம்   அறிந்தால் என் மீது மான நஷ்ட வழக்கு போட முழு முகாந்திரம் உண்டு. 

அது போல என் மகன் நட்ராஜ் பிறந்த பின்னர் நான் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் அவன் சிறுநீர் கழிக்க தவழ்ந்து வந்து உபயோகப்படுத்தும் சின்னம்மா இவள் தான். கிட்டத்தட்ட மூன்று முறை நான் அவளை  அடித்து உதைத்துள்ளேன். ஏதோ கோபத்தில். அவள்  ஜராசந்தன் போல வரம் வாங்கி வந்தமையால் எத்தனை கிழித்து போட்டாலும் மீண்டும் ஒட்டிக்கொண்டு தன் கடமையை செய்து விட தயாராகிவிடுவாள். 

அவள் என்னிடம் வந்தபோது எனக்கு ஒரு பெரிய மரியாதையை சமூகத்திடம் வாங்கி கொடுத்தது. அடடே ''இவன் கிட்டே மடிக்கணினி எல்லாம் இருக்கின்றதே'' என ஒரு மரியாதையை வாங்கி கொடுத்தது என்பது உண்மை. அது முதல் நிலை. அதே போல "இவன் கிட்டயும் மடிக்கணினி இருக்கு" என அதே சமூகம் கொஞ்சம் இயல்பாய் பார்த்தது.அது இரண்டாம் நிலை. பின்னர் ஒரு கட்டத்தில் நான் முக நூலில் தீவிரமாய் இயக்கும் நிலையில் அப்போது பலர் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் இயங்கும் நிலை வந்த பின்னர் "அய்யய்யே இவனிடம் எல்லாம் மடிக்கணினி வந்து மாட்டிக்கொண்டதே" என உதட்டை பிதுக்கியது சமூகம். அது மூன்றாம் நிலை. இப்படி இந்த முருகேசி இந்த மூன்று நிலைகளையும் கடந்து வந்து விட்டாள்  என் வாழ்வில்.  

சிகிச்சைக்காக கொடுத்த இடத்தில் இன்று போய் பார்த்த போது என்னை வாஞ்சையுடன் பார்த்தாள். "என்னங்க.... எத்தனையோ உழைத்து விட்டேன் உங்க கிட்டே, என்ன ஒரு கவலை... 2006 தேர்தலில் நீங்க வெற்றி பெறும் போது கூட இருந்தேன். சந்தோஷமா இருந்துச்சு. 2009 தேர்தலில் மிக கடுமையா நீங்க சொன்னபடி எல்லாம் ஆடினேன். தட்டுத்தடுமாறி  வெற்றி பெற்றீங்க. சரின்னு மீண்டும் உழைச்சேன். 2011ல் கடுமையா போராடியும் தோத்து போயிட்டோம். மீண்டும் கடுமையா உழைச்சோம். இதோ 2014ல் என்னால முடிஞ்ச வரை உழைச்சுட்டேன். என்ன ஒரு வருத்தம். நீங்க ஜெயிக்கும் நாளின் போது நான் இருக்க மாட்டேன். அதனால வருத்தப்படாதீங்க. உங்களுக்கு நான் இல்லாட்டி இன்னும் ஒருத்தி வருவா. என்னை விட நல்லா உழைப்பா. கவலைப்படாதீங்க" என சொல்லி என்னை வருடிக் கொடுத்தாள். 

கண்களில் கொஞ்சம் கண்ணீர் வந்தது. நான் கண்ணீர் விடின் முருகேசிக்கு பிடிக்காது. எத்தனையோ கஷ்டங்கள் என் வாழ்வில். உடனே அவளை எடுத்து மடியில் வைத்து கொண்டுவிடின்  போதும். என் கோவத்துக்கு அவள் வடிகாலாய் இருந்தாள். என் சந்தோஷத்துக்கு கட்டிக்கொண்டு சிரித்தாள். என் அவமானங்களுக்கு ஆறுதலாய் இருந்தாள். என் இயலாமைக்கு புத்திமதி சொன்னாள். அவளை தூக்கு கன்னத்தில் ஒத்திக் கொள்ளும் ஸ்பரிசம் எனக்கு ஜில் உணர்வை தரும். அத்தனை குளிர்வானவள். சாகும் முன் சில காலம் சூடாக இருந்தாள். அத்தனையே. அந்த சூடு கூட சுகமே எனக்கு. 

சந்தோஷமாய் இருக்கிறேன். முருகேசி மீண்டும் பிறப்பாள். என்னுடன் அவளின் அடுத்த ஜென்மத்தில் மீண்டும் இணைவாள். எனக்கு வருத்தம் எதுவும் இல்லை. நாளை மே 16ம் தேதி 2014 அன்று என் வெற்றியை அவள் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்கிற ஒரு கவலை தவிர வேறு எதுவும் இல்லை. 
தயவு செய்து யாரும் "முருகேசிக்கு அஞ்சலிகள்" என பின்னூட்டத்தில் சொல்லி விடாதீர்கள். உடைந்து விடுவேன். அவள் என்னுடன் சாதித்தவைகள் அதிகம்! அந்த நினைவுகளுடன் வாழ்வேன்! இவளும் என் வாழ்வில் ஒரு பகுதியாய் வந்தாள். சென்றாள்! முருகேசியின் நினைவுகள் என் வாழ்நாள் வரை இருக்கும்!

குறிப்பு: என்னடா இது, ஒரு லேப்டாப் மரணித்ததை இத்தனை எழுதுகிறான் என நினைக்க வேண்டாம். என் வீட்டில் ஒரு கரண்டி இருக்கு. அதுக்கு பெயர் "நச்சினார்கினியவள்" :-)

 

December 12, 2013

செயலாளர் 3 ரூபாய்! பொருளாளர் 2 ரூபாய்!! வாழ்க ரஜினி!!!



அவன் பெயர் மோகன் தாஸ். அதை காயவைத்து சின்னதாக "மோக்கு" என கூப்பிடுவோம். அவனுக்கு ரஜினி என்றால் அத்தனை ஒரு வெறி! முள்ளும் மலரும் நேரத்தில் இல்லாத மீசையை நீவிக்கொள்வான். ஆறு புஷ்பங்கள் படம் வந்த போது 70 MM பிரேம் போட்ட கண்ணாடி போட ஆசைப்பட்டு பிரேம் மட்டும் மாட்டிக்கொண்டான். ஆறிலிருந்து அறுபது வரை நேரத்தில் விட்டத்தை அடிக்கடி வெறித்துப்பார்த்து கொண்டிருந்தான். ப்ரியா வந்த போது கணேஷ் ஆகி வீட்டில் ஹார்லிக்ஸ் பாட்டில் அவன் அம்மா எங்கே வைக்கிறார்கள் என 'துப்பறிய" ஆரம்பித்துவிட்டான். ரஜினிக்கு நெற்றி முடிகள் குறைந்து ஏர் நெற்றி ஆனதும் ஓடிப்போய் "மாரிமுத்து, எனக்கும் இந்த முன்பக்கம் ரெண்டு சைடும் சரைச்சு விடு" என கேட்டு பார்பரை மயக்கமடைய வைத்தான். சோகமாய் இருக்கும் போது வீட்டு எரவானத்தில் தொங்கும் அரிகேன் லைட்டை ஆட்டியபடி 'ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை எனக்கு"ன்னு பாடினான். சந்தோஷமாக இருக்கும் போது 'பொதுவாக என் மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்' என கர்ஜித்தான். தெய்வம் எனில் அவனுக்கு ரஜினியும், ராகவேந்திரரும் மட்டுமே.


இப்படியாக நாளுரு ரஜினியும் பொழுதொறு சினிமாவுமாக அவன் இருந்த போது தான் ரஜினியின் 100 வது படம் வந்தது. அப்போது நாங்கள் சிறு வயதில் இருந்து  டீன் ஏஜ் பருவம் வந்தாகிவிட்டது. அப்போது தான் அவனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் ஆசை வந்தது. அவனுக்கு நான் தான் எப்போதுமே ஆஸ்தான ஆலோசகர் இது போன்ற விஷயங்களுக்கு.


"மொதல்ல நாம "ரஜினியின் ராகவேந்திரா ரசிகர் மன்றம்" ஆரம்பிக்கனும். போஸ்டர் அடிக்கனும். முதல் நாள் பியர்லெஸ் தியேட்டரில் எல்லோருக்கும் சாக்லெட் தரனும்...." என நீண்ட பட்ஜட்க்கு சொல்லி கொண்டே போனான். நான் சொன்னேன்..."மன்றம் ஆரம்பிச்சா பலபேரை சேர்த்துகிட்டு போஸ்டரில் பெயர் போட்டுகிட்டு அவங்க கிட்டயும் காசு வாங்கிகிட்டா பட்ஜட் ஒத்து வரும்" என சொல்ல மோக்கு உடனே அதை செயல்படுத்த தொடங்கிவிட்டான். "இங்கு தலைவர் பதவி தவிர எல்லா பதவியும் தரப்படும்"ன்னு போர்டு போடாத குறை தான். செயலாளர் 3 ரூபாய், பொருளாளர் 2 ரூபாய், பொது ஆலோசகர், சட்ட ஆலோசகர், ஆடிட்டர், மக்கள் தொடர்பு அதிகாரி என (ஒரு கார்பரேட் கம்பனிக்கு இருக்கும் எல்லா அம்சங்களுடன்) பதவிகள் அமோக விற்பனை ஆனது. உறுப்பினர் பதவிக்கு 25 பைசா மட்டுமே என டிஸ்கவுண்ட் கொடுத்தும் அதை வாங்க ஆள் இல்லை. அதனால் செயலாளர் 5 பேர், பொருளாளர் 8 பேர் (இது உலகத்தில் அடுக்குமா?), சட்ட ஆலோசகர் மட்டுமே கிட்ட தட்ட 13 பேர். இப்படியாக மன்றத்தில் பலர் இருந்தும் போஸ்டர் அடிக்க காசு தேறவில்லை. போஸ்டர் என்பது கொஞ்சம் கொஞ்சமாக சைஸ் சுறுங்கி உள்ளங்கை அளவு போஸ்டர் ஆகிவிட்டது. (அதற்கு பெயர் நோட்டீஸ் என சொல்ல மனசு வரலை).


இன்னும் சொல்லப்போனால் அந்த சின்ன சைஸ் போஸ்டரை(?) வாங்கக்கூட காசு போதவில்லை. அப்பவும் மோக்கு சளைக்கவில்லை. அதுக்கும் ஒரு ஆளைப்பிடித்து விட்டான். ஆனால் அந்த ஆள் போட்ட கண்டிஷன் தான் ரொம்ப பெரிசு. மோக்கு தனக்காக வைத்திருந்த அந்த "விற்பனை" செய்யாத தலைவர் பதவியை கேட்டாரு. மோக்கு அடித்து பிடித்து என்னிடம் ஆலோசனைக்கு வந்த போது நான் கோவமாக அவனிடம் "பொது ஆலோசகர், சட்ட ஆலோசகர்"ன்னு ஏகப்பட்ட பேரை போட்டிருக்கியே அங்க போய் கேளு" என்றேன். அப்போது அவன் சொன்ன பதில் ....ஊஃப் இப்போது நினைத்து பார்த்தாலும் என்னால் சிரிப்பை அடக்க முடியலை.


"டேய் அவ்ங்களுக்கெல்லாம் பேச வராதுடா" என்றான். நான் பதறிப்போனேன். "என்னடா? அவங்கள்ளாம் ஊமையா? வாய் பேச வராதா?" என பாவமாக கேட்ட போது அவன் அவசரமாக குறுக்கிட்டு "வாயை கழுவுடா, இன்னும் பேச்சு வரலை. எல்லாரும் 2 நாள், 3 நாள் குழந்தைகள் தான்" என சொன்ன போது எனக்கு மூச்சே நின்றுவிட்டது.


விஷயம் இது தான். எங்கள் வீட்டுக்கு எதிரே முனிசிபாலிட்டியின் பிரசவ ஆஸ்பத்திரி. நாங்கள் எப்போதுமே அதன் வாசலில் இருக்கும் மாமரத்தில் தான் வாசம். அங்கே அப்போது ஒரு நாளைக்கு 3 பிரசவமாவது நடக்கும். எல்லாரும் கிட்ட தட்ட தெரிஞ்சவங்க தான். இவன் அங்கே குழந்தை பெத்து சாக்லெட் கொடுக்கும் அப்பன் காரன்க கிட்டே "உங்க பிள்ளைக்கு பதவி தரேன்"ன்னு சொல்லி வித்திருக்கான். இருப்பதிலேயே "சட்ட ஆலோசகர்" பதவி தான் ஒரு ரூபாய் என்பதாலும், பிறந்த உடனே தன் குழந்தைக்கு பதவி தேடி வருதேன்னு ஆசையிலும் ஒரு ரூபாய் கொடுத்து பதவி வாங்கி இருக்காங்க அந்த பெற்றோர்கள். அட தேவுடா....


ஒரு வழியாக "கௌரவ தலைவர்" என்னும் பதவியை அந்த ஆளுக்கு கொடுத்து போஸ்டர் அடிக்க கிளம்பினோம். "ட்ராப்ட்" செஞ்சது எல்லாம் நான் தான். அவன் கொடுத்த லிஸ்டில் இருக்கும் பெயர்களில் ஏகப்பட்ட பெண்கள் பெயர்கள் இருந்தன. கேட்ட போது மகளிர் அணி என்றான். ஒரு ஒரு பதவிக்கும் ஒரு ஒரு கேப்ஷன் இருக்க வேண்டும் என்று வேறு எனக்கு கண்டிஷன் போட்டான். அப்படியே எழுதியும் கொடுத்தேன்.


நோட்டீஸ் அடித்தும் வந்து விட்டது. முதல் நாள் பியர்லெஸ் சென்று சூடம் காண்பித்து தேங்காய் உடைத்து எல்லாம் முடிந்து படமும் பார்த்து விட்டு வந்தோம். தவிர அந்த நோட்டீஸ்ல் ஒரு சாக்லெட் பின் அடித்து காசு கொடுத்து பதவி வாங்கின எல்லாருக்கும் அவன் கொடுத்து வந்தான். அப்போதெல்லாம் நான் இல்லை.

அடுத்த நாள் அரக்க பரக்க ஓடிவந்தான் மோக்கு என்னிடம்.

"டேய் நீ அந்த மகளிர் அணிக்கு எழுதின கேப்ஷன்ல ஏதோ தப்பு இருக்குதாம். எல்லாரும் திட்டிகிட்டே காசை திருப்பி கேக்குறாங்கடா. நீ தான் எழுதினேன்னு சொன்னேன். உன் மேல செம கொல வெறில இருக்காங்கடா. உன்னை அழைச்சுட்டு வர சொன்னாங்க" என்றான்.


எதுனா எழுத்துப்பிழையா இருக்கும் என நினைத்து அந்த நோட்டீஸ் வாங்கி பார்த்தேன். பகீர் என ஆகிப்போச்சு எனக்கு. அதிலே "உடல் ரஜினிக்கு - உயிர் மண்ணுக்கு" என போட்டு அதன் கீழ் மகளிர் அணியினர் பெயர் இருந்தது. நான் போய் உதை வாங்க இளிச்சவாயனா என்ன?


இன்று அதல்லாம் நினைத்து பார்த்து கொண்டேன். ஏனனில் இன்று ரஜினிக்கு பிறந்த நாள்! மோக்குவிற்கு போன் செய்து வாழ்த்தினேன். டி வி டி யில் ஐந்து ரஜினி படம் பார்த்தானாம். இப்போது சென்னையில் இருக்கிறான்.



நாங்கள் சிறுவராக இருந்த போது ரஜினி ரசிகராக இருந்தோம். பின்னர் வாலிப வயசில், பின்னர் இப்போது நடுத்தர வயதில்.... அது போலவே இன்றும் ரஜினிக்கு குழந்தைகள் கூட ரசிகர்களாக ...... அவர்கள் நடுத்தர வயது ஆகும் போதும் ரசிகராக இருப்பார்கள். தலைமுறை தாண்டிய ரசிகர் கூட்டம். இது ரஜினிக்கு மட்டுமே சாத்தியம்! என் அன்பான வாழ்த்துக்கள் ரஜினிசார்!

November 4, 2013

காலச்சக்கரம் - ஷேவிங் ஆசை!



சின்ன வயதில் எப்போது பார்பர் ஷாப் போனாலும் யாராவது சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு ஷேவ் செய்து கொள்ளும் போது அந்த பார்பர் "ரவுண்ட் ஷேவிங் சோப்"ல்லில் ஷேவிங் பிரஷை தண்ணீரில் நனைத்து விட்டு இரு விரல்களால் அழுத்தி தண்ணீர் அதிகம் இல்லாமல் அந்த ஷேவிங் ரவுண்ட் சோப்பில் ஒரு சுழட்டு சுழட்டி விட்டு சாய்ந்து கிடப்பவன் கன்னத்தில் விளையாடும் அந்த அழகை ரசிப்பேன். நொடியில் அவன் முகம் முழுக்க நுரை மூடும். பின்னர் அதை கத்தியால் லாவகமாக வழித்து எழுத்து தன் புறங்கையில் அதை தடவி சேகரித்து ஓரளவுக்கு மேல் ஆனதும் அதை ஒரு சிந்து பாத் அல்லது ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார் பிட்டு பேப்பரில் வழித்து அதை மடக்கி குப்பையில் போடுவதை பார்த்து கொண்டு இருப்பேன். அந்த ஷேவிங் ரவுண்ட் பார்த்தால் ஏதோ தேங்காய் மூடியில் தாய்மார்கள் பாதி திருகிவிட்டு மீதி வச்சமாதிரி இருக்கும்.

வீட்டில் அப்பா செல்ஃப் ஷேவிங் செய்துக்கும் போது இந்த வித சடங்குகள் எதும் இல்லாமல் "டேய் ஓடிப்போய் ஒரு 'அஷோக்' பிளேடு வாங்கியா" என நாலணா நீட்டும் போது அடுத்த கேள்வி "அது இல்லைன்னா?" என்பேன் .... அதுக்கு அப்பா "எடுத்ததும் ஏன் நெகடிவா பேசுற? இல்லைன்னா 'பனாமா' வாங்கிட்டு வா" என அனுப்புவாங்க. வாங்கி வந்ததும் அதை பிரித்து ஒரு ரேசரில் போட்டு தண்ணி தொட்டு அவாசரமாய் இரு கன்னத்திலும் தடவி விட்டு  ஏதோ குளிக்கும் சோப் கொஞ்சம் கையில் பிடித்து தாவங்கட்டையில் சர சரவென கடமைக்கு தடவிகிட்டு... அது நுரையே வராது... இருப்பினும் ரேசரை எடுத்து வரட்டு வரட்டுன்னு இழுக்க ஆரம்பிச்சு மீசை கிட்டே மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி, அதும் கூட ஒரு நிமிஷத்தில் முடிஞ்சிடும்...  முடிக்கும் முன்பே "வென்னீர் ரெடியா?"ன்னு  குரல் கொடுத்து கொண்டே குளிக்க போய்விடுவாங்க. ஷேவ் செய்த தடயங்கள் எதும் இருக்காது அந்த இடத்தில்.

ச்சே... என்ன அப்பா இப்படி இருக்காங்க... நானென்லம் பெரியவனாகி மூஞ்சி முழுக்க தாடி இருக்கும் போது ஒரு நல்ல "ஷேவிங் ரவுண்ட் சோப்" வாங்கி, பிரஷ் எல்லாம் வாங்கி சூப்பரா செஞ்சுக்கனும் என நினைத்துக்கொள்வேன். பின்னர் பதின்ம வயதுகளில் அரும்பு மீசை எட்டி பார்த்த காலத்தில் தாவாங்கட்டையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாலு முடி நீட்டி நிற்கும் போதே மெனக்கெட்டு சைக்கிள் எடுத்து கிட்டு நண்பன் வீட்டில் சென்று "இன்னிக்கு எனக்கு ஷேவிங் செஞ்சுக்கனும். நான் கடைத்தெருவுக்கு வர மாட்டேன். என்னை வந்து டிஸ்டர்ப் பண்ணாதே"ன்னு பந்தால்லாம் விட்டு விட்டு வருவேன். அன்று எந்த வேலை வீட்டில் சொன்னாலும் ... "நோ நோ... நான் ஷேவிங் செஞ்சுக்கனும்... ச்சேச்சே இந்த மீசை, தாடி வேற வளர்ந்து தொங்குது... ஆம்பிளையா பொறந்தாலே எத்தனை தொல்லை, எத்தனை தொல்லை..." என போலியாக அலுத்துக்கொள்வேன். தவிர இன்னும் ஒரு பயம்... இன்றைக்கு ஷேவ் செய்து கொண்டால் அந்த நாலு முடி மீண்டும் எட்டிப்பார்க்க இன்னும் எத்தனை நாள் ஆகுமோ??? மீண்டும் இந்த பந்தா காட்ட ஊஃப்ப்ப்...

வீட்டு முற்றத்தில் வாகாய் மனைக்கட்டை எடுத்து எனக்கு ஆசனமாய் போட்டுக்கொண்டு முற்றத்தின் மேல் தாழ்வாரத்தில் இருக்கும் தூணில் பெரிய கண்ணடி எடுத்து வைத்துக்கொண்டு ஒரு சின்ன கிண்ணத்தில் உப்பு போட்ட வென்னீர் ( காயம் பட்டால் செப்டிக் ஆகக்கூடாதாம்... கல்கண்டில் படித்த டிப்ஸ்), ஷேவிங் ரவுண்டு சோப், படிகாரக்கல், டெட்டால், ஷேவிங் ப்ரஷ், ரேஸர், வில்கின்ஸ் ப்ளேடு (அது தான் அப்போதிக்கு ஒஸ்தி) எல்லாம் ஒரு அட்டகாசமான செட்டப்பில் வைத்து கொண்டு சோப்பில் சுழட்டிய பிரஷ் எடுத்து நெற்றி, கண் தவிர்த்து எல்லா இடத்திலும் அப்பிக்கொண்டு (ஹூம் அந்த நீட்டிக்கொண்டு இருக்கும் நாலு முடியை கண்ணை மூடிக்கொண்டு கையால் பிடிங்கினால் கூட மொத்தமே 8 வினாடி போதுமானது) வீட்டு கதவை யாரும் தட்டாத போதே "யாரது வீட்டு கதவை திட்டுவதுப்பா இந்த நேரத்திலே... நிம்மதியா ஷேவ் பண்ணிக்க கூட முடியல..." என அலுத்துக்கொண்டே துண்டை பெரிய மனுஷனாட்டம் போர்த்தி கொண்டு வாசலில் நுரை முகத்துடன் வந்து சாலையை பார்த்து "யாருப்பா கதவை தட்டுனது..."ன்னு ....ஆகா என்ன ஒரு அமர்களம்....

அப்பன்னு சாலையில் போகும் யாராவது தெரிஞ்சவங்க "என்னப்பா என்ன பார்க்கிறே"ன்னு கேட்டுட்டா போதும்... சொர்கமே அது தான்... "அடடே நாகராஜ் அண்ணனா... ஒண்ணும் இல்லைன்னே... ஷேவ் பண்ணிக்க உட்காந்தேன். யாரோ வந்து கதவை தட்டினாங்க. அதான் யாருன்னு  பார்க்க வந்தேன்" என சொல்லிட்டு வருவேன். மெதுவாக வழித்து எடுத்து எடுத்து பார்ப்பின் அந்த சோப் நுரைக்குள் அந்த நாலு முடி மாட்டாமல் நுரை எல்லாம் வந்த பின்னும் நட்டுகிட்டு நிக்கும்... பின்னே சுத்தி சுத்தி பார்த்து விட்டு கையால் அதை பிடுங்கி எரிந்து விட்டு காயம்படாத கன்னத்தில் படிகாரம் போட்டு எரிச்சல் ஆகிக்கிட்டு "அய்யோ... எரியுதே"ன்னு புலம்பிகிட்டு பின்னே அதுக்கு மேலே டெட்டால் வேறு போட்டுப்பேன்.

இப்படியாக பதின்ம வயது எல்லாம் முடிந்து, பின்னே படிப்பு எல்லாம் முடிந்து வேலைக்கு போகும் காலத்தில் தினமும் ஆபீஸ்க்கு ஷேவிங் செஞ்சு கிட்டு தான் போக வேண்டும் என்ற நிலையில் நிஜமாகவே ஷேவ் செஞ்சுக்க அலுப்பாய் தெரிந்தது. எதற்காக ஆசைப்பட்டனோ அது மிக மிக ஒரு எரிச்சலான விஷயமாக மாறிப்போனது எனக்கு.
இரண்டு நாள்  ஷேவ் செய்யாமல் விட்டால் "என்னாச்சி உடம்புக்கு? ஜுரமா?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தனர். ஆக இந்த பாழாய்ப்போன சமூகத்துக்காகவே ஷேவ் செய்து தொலைக்க வேண்டியதாய் போனது.

எப்போது எனக்கு ஷேவிங் என்பது எரிச்சலான சமாச்சாரமாக ஆனதோ அப்போதிலிருந்தே இந்த ஷேவிங் சோப்... ஆஃப்டர் ஷேவிங் லோஷன் இதல்லாம் தூக்கி கடாசிட்டேன். இந்த பதிவின் ஆரம்பத்தில் சொன்னேனே என் அப்பா ஷேவிங் செய்து கொள்ளும் லட்சனம்... அது போலத்தான் இப்போதெல்லாம் வரட்டு வரட்டுன்னு இழுத்து விட்டு  ஐந்து நிமிடத்தில் குளிக்க போய்விடுகிறேன்.

இரு நாட்கள் முன்பாக என் மகனை அழைத்து கொண்டு தீபாவளிக்காக கடைத்தெரு சுற்றிக்காட்ட போன போது மணிக்கூண்டு அருகே ஒரு சின்ன பாட்டிலில் ஏதோ சோப் நுரை வைத்து கொண்டு அதில் ஒரு சின்ன வளையம் முக்கி எடுத்து பப்பிள்ள் விட்டு கொண்டு இருந்தான் ஒரு ஆசாமி. ரோட்டோர வியாபாரி. அது வேண்டும் என என் மகன் கேட்க வாங்கி கொடுத்தேன். "இந்தநுரை தீர்த்து பேச்சுதுன்னா இவன் அழுவானேப்பா, இந்த நுரை எது வச்சிப்பா செய்வே?" என நான் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக கேட்க அந்த வியாபாரி "அது ஷேவிங் கிரீம் இருக்குல்ல சார், அதை கொஞ்சம் தண்ணில கரைச்சு இந்த பாட்டில்ல ஊத்திகுங்க. சோப்பை விட அதிலே நிறைய பப்பிள்ஸ் வரும்" என சொன்னான்.

மீண்டும் நடந்து வரும் போது என் மகன் என்னிடம் கேட்டான் "அப்பா, நீ மட்டும் ஏன்ப்பா மூஞ்சில நிறைய நுரை வச்சிகிட்டு ஷேவ் பண்ணிக்க மாட்டேங்குற. அந்த க்ரீம் வாங்கிட்டு போவுமா? நம்ம வீட்டிலே தான் அது இல்லியே. நீ சோப்பு தானே போட்டு ஷேவ் பண்ணிக்கிற. நான் ஹேர் கட் பன்ணிக்க போகும் போது அந்த கடைல பார்ப்பேன்.. எவ்ளோவ் நுரை தெரியுமா அவரு வரவழைப்பாரு... நான் பெரியவனா ஆனதும் நிறைய நுரை எல்லாம் போட்டு பெரிய மீசைல்லாம் வச்சு ஷேவ் பண்ணிக்குவேன்"


காலச்சக்கரம் என்ன வேகமாய் சுழலுகின்றது!

August 18, 2013

ஆசீப்மீரான் அண்ணாச்சியும் அமர்களமான பிரியாணி விருந்தும்!

கீழை ராசா, ஆசீப்மீரான், தங்கமச்சான் ரியாஸ் மற்றும் பிளக்ஸ்போர்டு


விடிகாலை கனவு பலிக்கும் என்பார்கள். அத்தனை ஒரு ருசியான பிரியாணியை விடிகாலை 5 மணிக்கே கனவில் சாப்பிட்டேன். அண்ணாச்சி என  துபாய்வாசிகளால் அன்போடு அழைக்கப்பட்டு பின்னர் அது ஷார்ஜா, அபிதாபி, பக்ரின் என பரவலாக்கப்பட்டு இன்று இண்டர்நேஷனல் அண்ணாச்சியாகி இருக்கும் என் அன்பு தோழர் ஆசீப்மீரான் ஒரு வாரம் முன்பே தன் குத்தாலம் (மயிலாடுதுறையில் இருந்து எட்டு கிமீ) விஜயத்தை பற்றி என்னிடம் ரகசிய அறிக்கை அளித்திருந்தாலும் நேற்று காலை முதல் லைட்டா பரபரப்பு தொத்திகிச்சு.

நேற்று காலை ஒரு கடமையுள்ள கணவனாக கக்கூஸ் எல்லாம் கழுவ ஆரம்பித்தேன். "அபீ அபீ... ஏன் சேர்ல எல்லாம் புக்ஸ் போட்டு வச்சிருக்கே" என கத்த அவள் சர்வசாதாரணமாக "கிட்ட தட்ட எட்டு பரம்பரையா நாம அப்படித்தானேப்பா.. தவிர அதிலே கிடக்கும் புத்தகம் எல்லாம் உங்களோடது" என சொல்ல அமைதியாக எல்லாம் சுத்தம் செய்தேன்.

நெட் பக்கம் போய் பார்த்தா அண்ணாச்சி மதுரையில் இருந்து பஸ்ல் கிளம்பி சட்டை பட்டன் தெரிக்க தெரிக்க பிதுங்கி போய் பதிவா போட்டு கிட்டு இருக்காரு. அந்த பதிவை படிச்சதும் "ஆகா அவரு மாயவரம் வரதுக்கு எப்படியும் ரெட்டாம் ஆட்டம் சினிமா வுட்டுடுவான் போலிருக்கே" என நினைத்து கொண்டேன். நடுநடுவே என் மனைவி "என்ன மெனு செய்யட்டும்" என கேட்டு கேட்டு அலுத்துப்போய் தூங்கிப்போன பின்னே அண்ணாச்சியிடம் இருந்து போன். "நான் கும்பகோணம் வரை மெதுவா வந்துட்டேன். கைதாங்கலா என்னை காப்பாத்தி இறக்கிவிட குத்தாலத்தில் 11 பேர் கொண்ட குழு நிக்குது. அதனால நான் அங்கயே சிரமபரிகாரம் செஞ்சுகிட்டு காலை கல்யாணத்திலே கலந்துக்குறேன்" என அரசு பஸ் கொடுத்த அசதியில் பேச "அடடா அவசரப்பட்டுடியடா அபிஅப்பா, வீட்டை சுத்தம் செஞ்சிருக்க வேண்டாமோன்னு மனசில் நினைச்சுகிட்டு அதுக்கு மேல அவரை கஷ்டப்படுத்த மனமில்லாமல் "அப்ப சரி, நான் ஒரு பத்து மணிக்கு குத்தாலத்தில் பிரியாணியை சந்திக்க வரும் போது உங்களை பார்த்துக்குறேன்" என சொல்லி விட்டு அதே நியாபகமாய் தூங்கியதால் இன்று விடிகாலை அந்த பிரியாணி கனவு.

"என்னங்க, சீக்கிரம் எந்திரிங்க. இன்னிக்கு பிரதோஷம், ஞாயித்து கெழமையானாலும் கவுச்சி கெடயாது. சீக்கிரம் எந்திரிச்சு வீட்டை சுத்தம் செய்யுங்க" என சொன்னபோது... நான் "அந்த ரூல்ஸ் எல்லாம் என்னை கட்டுப்படுத்தாது. குத்தாலத்திலே பிரியாணி என்னை வா வான்னு கூப்பிடுது" என சொல்லிவிட்டு ஒருவழியாக நட்ராஜையும் கூட்டிகிட்டு குத்தாலம் சென்றேன்.

"கல்யாணம் செஞ்சுக்க போகும் மணமக்களேஏஏஏஏ"ன்னு உச்சஸ்தாயில் பாடியவரின் எதிரே ஒரு ப்ளக்ஸ் போர்டுக்கு கீழே அண்ணாச்சி, கீழை ராசா அவர்கள் மற்றும் பதிவர் குசும்பன் அவர்களின் தந்தையார்,  ரியாஸ்பாய் என்னும் தங்கமச்சான் (பதிவர் ஜஸீலாவின் தங்கமச்சான்) , ஜஸீலாவின் குட்டி பையன் எல்லோரும் இருக்க, குத்தாலம் அன்பு, குத்தாலம் கல்யாணம் அண்ணன் ஆகியோர் "இதோ மினிஸ்டர் கிளம்பியாச்சு வீட்டில் இருந்து...." என வரவேற்கும் முஸ்தீபுகளில் இருக்க நாங்கள் ஒரு நான்கு நாற்காலி போட்டு ரவுண்டு கட்டினோம். ரம்மி சீட்டு கட்டு இல்லாமை மட்டுமே ஒரு குறை. நடு நடுவே எனக்குள் தூங்கிகொண்டு இருந்த கவுண்டமணி "அண்ணே கடா எப்ப வெட்டுவாங்க" என கேட்டுக்கொண்டே இருந்தார். அடக்கினேன்.

எங்க மினிஸ்டரும் எம் எல் சியுமான கோசிமணி அண்ணன் கும்பகோணம் அன்பு அண்ணன் கூட வர குத்தாலம் அன்பு எங்களுக்கு முன்பாக நாற்காலி எடுத்து போட்டு அவரை அமர வைத்து பவ்யம் காட்டி பின்னால் நின்று கொண்டார். ஆசீப் அவரிடம் "உட்காருங்க நீங்களும்" என சொன்னதுக்கும் "அய்யய்யோ எங்க எம் எல் சி க்கு முன்னால உட்காரமாட்டேன்" என்பது போல தலையாட்டினார்.

பின்னர் ... வேற என்ன பிரியாணி தான். இது போன்ற விருந்துக்கு நட்ராஜை அழைத்து போவதில் ஒரு சௌகர்யம் என்னான்னா அவனுக்கு கிடைக்கும் பீஸ் எல்லாம் நமக்கு தான்:-) அருமையான மட்டன் பிரியாணி, கோழி வறுவல், தக்காளி இனிப்பு, பாயசம், வெங்காயம் தயிர் என அப்பட்டமான எங்கள் மாவட்ட பாய்மார் வீட்டு கல்யாண பிரியாணி. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை 1000 ரூபாய்க்கு பிரியாணி வாங்கி துன்னாலும் அந்த பாய்மார் வீட்டு கல்யாணத்திலே சாப்பிடும் அந்த டேஸ்ட் ஏன் மத்ததுக்கு எல்லாம் வரமேட்டேன்குதுனு தெரியலை.

வழக்கம் போல நட்ராஜ் பீஸ்ம் நானே போட்டு மொக்கினேன். குசும்பன் அப்பா "இன்னும் ஒரு பிஸ் வச்சுகுங்க தம்பி" என சொன்ன போது வயிற்றில் இடம் இல்லாமையால் "அய்யோ முடியலை"என கையெடுத்து கும்பிட்டேன். ஊஃப்ப்ப்ப்ப்... செம செம....

பின்னர் வெளியே வந்ததும் "சரி ஆசீப் கிளம்புங்க நம்ம வீட்டுக்கு" என சொன்னபோது "இல்லை... ஜஸீலா பேமிலி சென்னைக்கு கார்ல போறாங்க. நான் அவங்க கூட போனா ஈசியா இருக்கும். பஸ்ல போறது மாதிரி கஷ்டம் வேற எதும் இல்லை. அடுத்த தடவை ஒரு பெரிய டூரா போட்டு கிட்டு எல்லோரும் வருகிறோம்" என சொன்னார்.

பின்னர் வெளியே வந்ததும் ஜஸீலாவை சந்தித்தேன். ஜஸீலாவின் குட்டி பெண் இப்போது சுட்டி பெண்ணாக "அங்கிள் உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு, ஆனா ஞாபகம் தான் சரியா வரலை" என சொன்னாள். எப்போது அந்த குட்டி பாப்பாவை கடைசியாக பார்த்தேன் என நியாபகப்படுத்தி பார்த்தேன். எஸ்... பண்புடன் குழுமம் ஆரம்பிக்கும் அன்று துபாய் கராமா சிவ்ஸ்டார் பவனில் பார்த்தது. ஆச்சு பல வருஷம். அதன் பின் இப்போது தான் பார்க்கிறேன். பாப்பா நட்ராஜுடன் நன்றான ஒட்டிக்கொண்டாள்.ஜஸீலா நட்ராஜிடம் "தம்பி உன் அப்பாவை எல்லாரும் அபிஅப்பான்னு சொல்றாங்க. இனிமே நட்ராஜ் அப்பான்னு சொல்லனும் சரியான்னு போட்டு கொடுக்க ஏற்கனவே அந்த விஷயத்தில் என் மேல ரொம்ப காண்டா இருந்த நட்ராஜ் இன்னும் சூடாகினான்.:-) பின்னர் சென்னை செல்ல பைபாஸ் சாலைகள் வழி எல்லாம் சொல்லிவிட்டு மாயவரம் வரும் வரை நான் என் வண்டியில் முன்னே செல்ல அவர்கள் கார் பின் தொடர்ந்தது.

இந்த பதிவு அடித்து முடிக்கும் போது அவர்கள் சிதம்பரம் தாண்டி விட்டதாக ஆசீப் கிட்டே இருந்து போன் வந்தது. அடடே என்ன ஒரு அழகான நட்புகள். எத்தனை மலரும் நினைவுகள். காலம் தான் எத்தனை வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. நண்பர்களுடன் இதை இந்த பதிவின் மூலமாக பகிர்ந்து கொள்வதில் தான் எத்தனை ஒரு சந்தோஷம்!

கடைசி வரை ஆசீப் கிட்டே யாருக்கு கல்யாணம், மணமகன் பெயர் என்ன, மணமகள் பெயர் என்ன என்ற கேள்விகளை கேட்க மறந்தே போனேன். நான் நன்றி சொல்லாவிடினும் சாப்பிட்ட வயிறு அந்த மணமக்களுக்கு நன்றி சொல்ல ஆசைப்படுது. வாழ்க மணமக்கள்!

June 20, 2013

புலிமார்க் வாசனை சீயக்காய் தூளும், ஐடி கம்பனியும்!


புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் அறியாதவர்கள் அனேகமாக அமேரிக்காவில் +2 கோட்டடிச்சுட்டு அண்ணா யுனிவர்சிட்டில இருக்கும் முப்பாத்தம்மன் என்ஜினியரிங் காலேஜ்ல எதுனா என் ஆர் ஐ காசிலே சீட்டு கேட்டு வந்தவங்கலா இருக்கலாம். மத்தவங்களுக்கு அது அத்தனை ஒரு பிரபல்யம். அது சென்னை ஆபீஸ் என்றாலும் "மயில் மார்க் நிலையம் - மாயவரம்" என்றால் தான் அந்த "பாயும் புலி"க்கே ஒரு திருப்தி வரும். அத்தனை பேமஸ்.


"பிலாஸ்டிக் ஒழிக" என்னும் கோஷம் எல்லாம் அப்போது இல்லை. ஏனனில் பிலாஸ்டிக் அத்தனை இலகு இல்லை. எல்லாம் காகித பொட்டலம் தான். அதிலும் இந்த புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் இருக்குதே.. தன் பாக்கெட் அபாரம். கிட்ட தட்ட இப்போ இருக்கும் "
இன்லேண்ட்" கவரின் பார்முலா தான் அந்த பொட்டலம்.



அந்த கம்பனி மாயவரத்தின் அவுட்டர் அப்போது. இப்போது மயிலாடுதுறையின் மத்தியபிரதேசம் அது. ஆனால் அந்த கம்பனி தான் அங்கு இல்லை. அதை விடுங்க. மாயூரம் கலக்டர் வீடு இருக்கு தெரியுமா கலக்டர் வீடு! அதன் பக்கம் தான் இந்த மயில் மார்க் நிலையம். கலக்டர் தான் மாயூரத்துக்கு இல்லை எப்போதும் எனினும் கலக்டர் பங்களா உண்டு. ஒரு காலத்தில் "மயிலாடுதுறை முனுசிபாலிட்டி" அதாவது ஆங்கிலத்தில் சொல்லப்போனா "மாயவரம் நகராட்சி" என்பது இப்போது புதிது புதிதாக மாநகரட்சியா ஆக்கப்பட்டதே சிலதுகள்... அதை எல்லாம் விட பழமை வாய்ந்தது. எல்லாம் ஆங்கிலேயர் கட்டிடம். அதை நிர்வகிக்க அப்போ கலக்டர் தேவைப்பட்டது. அந்த கலக்டர் தங்க உங்க ஒரு இடம்.. அதுவே கலக்டர் பங்களா. கொத்த தெரு முடிவில் இருக்கும். அதிலே ஒரு கலக்டர் அப்போ அக்ரி படிச்சுட்டு அப்போ லண்டன்ல டி என் பி எஸ் சி பாஸ் பண்ணியிருப்பார் போலிருக்கு. வந்தாரு. ஒரு தென்னங்கன்னு வச்சாரு. அது அஞ்சு கிளை விட்டது. "தென்னை மரத்துக்கு கிளை இல்லை" என நாங்க ஒன்னாப்பு படிக்கும் போது மெதுவா டீச்சர் சொல்லுவாங்க "இதல்லாம் பாடத்துக்கு மட்டும் தான். நாம மாயவரம்... தென்னை மரத்துக்கு கூட கிளை உண்டு"ன்னு. பள்ளியில் டூர் கூட்டிட்டு போவது போல அழைத்து போய் அந்த மரத்தை காண்பிப்பாங்க.

அதல்லாம் இப்ப வேண்டாம். அந்த மரத்துக்கு பக்கத்தில் தான் இருக்கு நம்ம "மயில் மார்க் நிலையம்". அடர்ந்த தென்னை தோப்பு. அதனிடையில் ஒரு காட்டு பங்களா. சிகைக்காய் அரைக்கும் மிஷின் எல்லாம் அதில் உள்ளே இருக்குதாம்.பர்த்தது இல்லை. அத்தனை அடர்த்தி அந்த இடம்.  அரைச்சா வாசனை பிச்சிகிட்டு போகும் மெயின் ரோடு முழுக்க. அத்தனை ஒரு வாசம்.

அந்த அரைத்த மாவை அதாவது சீயக்காய் பவுடரை எதில் அடைக்கனும்? பொட்டலம் போடனும். அது தான் அந்த "இண்லேண்ட் லெட்டர் கவர் " மாதிரியான கவர். அதிலே பாயும் புலி படம் மற்றும் விலாசம் எல்லாம் அச்சடித்து இருக்கும். அது 2500 பேப்பர் ஒரு கட்டா இருக்கும். அதை அந்த சுத்து வட்டார மக்கள் எல்லாம் காலை ஆறு மணிக்கு போய் வரிசையில் நின்னு ஆளுக்கு ஒரு கட்டு வாங்கனும். கூடவே ஒரு கட்டுக்கான புளியங்கொட்டை பசை ஒரு தாளில் ஒரு கத்தியால் வழித்து தருவாங்க. பச்சை கலரில் இருக்கும். அந்த 2500 பீஸ் இருக்கும் கட்டை தூக்கி வந்து அவங்க சொல்லும் பாணியில் பசை தடவி வாயை மட்டும் விட்டு விட்டு ஒட்டி, உலர்த்தி அதை 50, 50 எண்ணிக்கையில் கட்டி அவங்க கிட்ட எடுத்து கிட்டு போனா கையில் ஒன்னேகால் ரூபாய் கொடுத்து விட்டு அடுத்த கட்டு கொடுப்பங்க.

அந்த ஒன்னேகால் ரூபாயில் அப்போது ஒரு படி அரிசி வாங்கிடலாம். நல்ல பொன்னி அரிசி. சில குடும்பங்கள் இரண்டு கட்டு வாங்கி போய் ஒட்டும். சில குடும்பங்கள் இதை நம்பியே பிழைப்பும் நடத்தும். அவங்க நாலு கட்டு வாங்கி போய் ஒட்டுவாங்க. குடும்பம் முழுக்க ஒட்டும். வீடு முழுக்க ஒட்டிய புலிமார்க் பாக்கெட் விரவி கிடக்கும்.

புதிதாய் யாராவது ஒட்ட ஆசைப்பட்டால் ஏற்கனவே ஒட்டின ஆள் " அய்யா சாமீ, இந்த குடும்பம் கஷ்டப்படுது. கொஞ்சம் உபகாரம் பண்ணுங்க. மொதோல்ல ஒரு கட்டு கொடுங்க. அதுக்கு நான் ஜவாப்தாரி"ன்னு சொல்லி ஈசியா சேர்த்து விடலாம். பின்ன அவங்க முதலில் ஒரு கட்டு கொடுப்பாங்க. சிலர் அதை ஒட்ட முடியாமல் சிபாரிசு செஞ்சவங்க கிட்டே அதை கொடுத்து ஜகா வாங்கிடுவாங்க. சிலர் அதை பிடிமானமா பிடிச்சுகிட்டு அடுத்த கட்டு அடுத்த கட்டுன்னு போய் தினத்துக்கு 5 கட்டு அளவு வளர்ந்திடுவாங்க.

இதானய்யா புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் மாயவரத்தில் வளர்ந்த கதையும், அதனால் பலர் மாயவரத்தில் வயித்தை கழுவின கதையும்.

இதோ இன்றைக்கு பிலாஸ்டிக்கும் ஷாம்புவும்  வந்த பின்னே... எல்லாம் போச்சுது. அந்த தென்னை மரமும் செத்து போச்சுது. அங்கே ஆர். பி. என்  நகர் என்னும் நகர் வந்தாச்சு. கலக்டர் பங்களாவும் "இந்த ஊரு மத்தில இவருக்கு ஒரு பங்களா ஒரு கேடு"ன்னு மக்கள் ஏசும் அளவு கிட்ட தட்ட மாயவரம் வளர்ந்து விட்டது.

ஆக ஒரு பழமையான தொழில் செத்து போச்சுதுன்னு கவலை இல்லை மாயவரம் மக்களுக்கு.

'எலேய், சுகந்தா, இப்பாலிக்கா வா, எம் எஸ் சி இண்டகிரேடட்  படிச்சுட்டு சொம்மா தான கெடக்கே, அந்த கொல்லுமாங்குடில ஒரு ஐ டி கம்பனி இருக்குதாம். ஒரு பைலு அடிச்சு கொடுத்தா சொளையா முன்னூறு ரூவா தராங்களாம். என்னாடி சொல்ற"

'அட போக்கா, முன்னூறு ஓவா, இங்கிட்டு கெழக்கால ஒரு கம்பேனி இருக்கு எடிட்டிங் சேத்து 700 தரேங்குறான். அனா என்னா ஒன்னு அது மெடிகல் ட்ரான்ஸ்கிரிப்ஷன், கொஞ்சம் கரடு மொரடு வேளை தான். இருந்தாங்காட்டியும் சொலவா 700 வரும்ல...."

"அட போடீ போக்கத்தவளே, இது நெகுரா இருக்குதாம். கைல காசு வாயில பரோட்டா, நான் இன்னிக்கு போறேன். போவ வர ஆறாம் நம்பருக்கு 14 ரூவா. அங்கிட்டே ஒக்காந்து அடிச்சா ஒருக்க அடிக்கலாம். ஆனா உம் போக்கத்த  மாமன் மொவன், எம்புருசன்  என்னை கட்டிகிட்ட மாபாவி 'எவன் கிட்டடீ  போயிட்டு வரே'ன்னு கூசாம கேப்பான். அவங்கிட்ட 'நா  ஐ ஐ டி  புரபசர் கிட்ட போயிட்டு வரேன்'னு பவுசாவா சொல்லமுடியும்...'

"அட அத வுடுக்கா, காயாம்பூ அத்தாச்சி ஒரு பைலு குடுத்துச்சு. இந்த இங்கிலீசுகாரன் பேசுறது சொலவா   பத்தாம்பு கேம்லின் ஜாமிட்ரி பாக்ஸ் தொறக்குற மாரி வெண்ணையாட்டம்  இருக்குது. ஆனா இந்த மலையாளிங்க செலபேரு இருக்கானுவ, twenty ன்னு சொல்ல சொன்னா dondy ன்னு சொல்றான். அத விட கொடும இந்த பிலிப்பைன் காரன் எல்லாம்.... அவனுக்கு வாய்ல வசம்ப தான் வச்சு தேக்கினும். F வரவே மாட்டேங்குது. பசங்கள fuck you ன்னு திட்டுடான்னு சொன்னா கூட pak you ன்னு சொல்றான் வீடியோல. பசங்க கெக்கேபிக்கேங்குது. ஒரு தபா இப்டி தான் காயாம்பூ அக்கா "i am going for fishing"ன்னு அவஞ்சொல்ல இது "i am going for pissing"ன்னு அடிக்க இந்த தருமகொளம் ஐடிகாரன் கடுப்பாயிட்டானாம். நீ ஒன்னுக்கு போ, ரெண்டுக்கு போ... அதுக்கு என் தாலிய ஏன் அறுக்குற"ன்னு வஞ்சிபுட்டானாம். அத்துல இருந்து அது பிலிப்பைன் காரன் பேசும் வீடியோ பைல் வந்துச்சுன்னா இது கல்விட்டு வந்து குந்திகிட்டு அடிக்குது:-))))"

"சரிடீ, ஊரா கத ஒனக்கேதுக்குது. நான்  உன் மாமென் பாட்டு கேக்க நோட்டு கேக்கன்னு ஒரு எட்டு ஜி பி பெண்டிரைவு வாங்கி வச்சிருக்கன். நான் வெரசா போயிட்டு அதுல ரெண்டு பைல் புடிச்சாரேன். நீ ஒன்னு அடி. நான் ஒன்னு அடிக்கிறேன். யாரு சுருக்குன்னு அடிக்கிறான்னு பாப்போம்"

"அட போவியா பி பி ஓவுக்கு வாக்கப்பட்டவளே, எனக்கு இன்னிக்கு  பெங்களூர்ல இருந்து ஐடி மாப்ள வராகன்னு அப்பத்தா மெயில் அனுப்பிருக்கு. நான் வாரேன்..."

:
:
:
:
"மாப்ள என்ன பண்றீங்க?"

"கெமோ கேர் சொல்யூஷன் - பேங்ளூர்"

"யப்பா, நேச்சர் ஆப் தி ஜாப் என்னான்னு கேளுங்கப்பா"  திரை மறைவில் இருந்து சுகந்தா...

"வெல்! ஹவ் ஐ ஹேவ் டு எக்ஸ்ப்ளைன்... ஒர்கிங் அஸ் ய ட்ரான்ஸ்கிரிப்டர் ன்னு தமிழ்ல சொல்லலாம்...."

;
;
;
"ஏஏஏஏ........ புனிதாக்காவ்வ்வ், வரும்போ எனக்கும் சேத்து ஒரு பைல் புடிச்சுகிட்டு வாக்கோவ்வ்வ்வ்வ்".  ஆறாம் நம்பரில் ஏறிக்கொண்டு இருந்த  புனிதா காதில் இது விழுந்தது.

பழையன கழிந்தால் என்ன புதியதுக்குள் புகுந்துப்போம்ல... மாயவரமா கொக்கா?

குறிப்பு: கதைகளில் வரும் சம்பவங்களும் பெயர்களும் ..............
;
;
;
;
;
உண்மையே. சத்தியமான உண்மையே... சந்தேகம் இருப்பின் கொல்லுமாங்குடி,பூம்புகார் தருமகுளம் ஐடி கம்பனிகள் அட்ரஸ் தரப்படும். பைல் அடிச்சு கொடுங்க. காசு பாருங்க!

May 27, 2013

எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய கலக்டர் சொக்கலிங்கம்!


இடமிருந்து வலமாக வெள்ளை உடையில் திரு. சொக்கலிங்கம்


இவருடைய பெயர் சொக்கலிங்கம். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வழுவூர் மெயின் ரோட்டை அடுத்து சுந்தரப்பன்சாவடி என்னும் கிராமம்(அதே மெயின் ரோட்டிலேயே) இவருடையது. உடையார் சமூகத்தை சேர்ந்தவர். பக்கத்து கிராமங்கள் எல்லாம் அதாவது பண்டரவாடை, மங்கைநல்லூர், நெய்க்குப்பை, வழுவூர் இங்கெல்லாம் இவருடை சமூகத்தினர் அதிகம். அவர்கள் பெரிய நிலக்கிழார்களாக இருப்பினும் இவர் ஏழை. தன் தாய் தந்தையர்களுக்கு ஒரே மகன்.இவரது தந்தையார் இவருடைய சிறு வயதிலேயே காலமாகிவிட்டார். அம்மாவும் மகனும் மட்டும் தான் வீட்டில். இவரோ வயல் வேலைக்கு சென்று தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையெனினும் இவர் அங்கிருந்து தினமும் எட்டு கிலோ மீட்டர் நடந்தே வந்து மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.


தன் குடும்ப ஏழ்மை நிலையிலும் அண்ணாமலை பல்கலைகழகத்துக்கு சென்று பட்டப் படிப்பும் படித்தார். பின்னர் I.A.S தேர்வு எழுதி தேர்வாகி (தமிழ்நாடு கேடர்) தமிழக அரசின்  முதலமைச்சராக 1967ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரை அவர்களுக்கு நேர்முக உதவியாளர் ஆக பணியமர்த்தப்பட்டார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் தமிழகத்தின் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியராக இருந்து பணியாற்றினார். தன் வருமானத்தில் தன் தந்தையாருக்கு (அதே சுந்தரப்பன் சாவடி மெயின் ரோட்டில்) தன் வீட்டுக்குள் (மெயில் ரோட்டை பார்த்து இருக்கும் கொல்லையில்) சிலை வைத்து கோவில் கட்டினார். அவர் எங்கு பணியாற்றினாலும் இங்கே தன் சொந்த கிராமத்துக்கு வந்து தான் விடுமுறையை கழிப்பார்.


அண்ணாவின் மீது அதீத  பற்று கொண்டவர். ஒரு முறை அண்ணா முதல்வராக இருக்கும் போது மயிலாடுதுறை வழியாக திருவாரூர் செல்லும் வழியில் தன் வீட்டில் மதிய உணவு உண்ண வேண்டும் என அண்ணாவை இவர் கேட்டுக்கொள்ள அண்ணாவும் சம்மதித்தார். ஆனால் இவரது தாயார் சிறிது மனநலம் குன்றி விட்ட நிலை அது. அண்ணாவுக்காக வித விதமாக சமைத்து வைக்க சொல்லி இவர் தன் தாயாருக்கு கடிதம் எழுதியும் அவர் அதை செய்யவில்லை. புளிக்குழம்பும், சுட்ட அப்பளமும் மட்டுமே வைத்து இருந்ததைக்கண்டு சொக்கலிங்கம் அதிர்ந்தார். ஆனால் அண்ணாவோ (முதல்வர்) இனிய முகத்தோடு "நான் நீண்ட நாளாக புளிக்குழம்பும், சுட்ட அப்பளமும் சாப்பிட வேண்டும் என நினைத்து இருந்தேன். என் தொத்தா( அண்ணாவின் வளர்ப்பு தாய்) அவர்களுக்கு மட்டுமே எனக்கு இது பிடிக்கும் என தெரியும். மிஸ்டர் சொக்கலிங்கம் உங்கள் அம்மாவின் உருவில் என் தொத்தாவை காண்கிறேன்" என அண்ணா இவரை தேற்றினார். ஆனாலும் அன்று தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் அன்று முதல் திரு. சொக்கலிங்கம் மதிய உணவை சாப்பிடும் பழக்கத்தையே விட்டு விட்டார். அத்தனை பக்தி அண்ணா மீது இவருக்கு.



தன் பணிக்காலத்தில் மிகவும் கண்டிப்பானவர் என்னும் பெயரைப்பெற்றார். எம் ஜி ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழக அரசின் தலைமை செயலர் என்னும் உயரிய அந்தஸ்து பெற்றார். எம் ஜி ஆர் அவர்களின் கடைசி காலத்தில் உடல் நலம் குன்றிய போது  அமரிக்க புரூக்ளின்  மருத்துவமனை சென்ற போது அவருடன் சென்ற சிலரில் தலைமைச்செயலர் திரு. சொக்கலிங்கம் அவர்களும் உண்டு. அப்போதைய முதல்வர் எம் ஜி ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் திரு.சொக்கலிங்கம் அவர்கள்.


பின்னர் பணி ஓய்வு பெற்ற பின்னர் தன் சொந்த கிராமத்துக்கு வந்து தன் வீட்டு கொல்லைப்பக்கம்  இன்றைய நாகரீகத்துக்கு ஏற்றது போல கான்கிரீட் வீடு ஒன்றை சிறியதாக கட்டிக்கொண்டு தன் வீட்டை சுற்றிலும் தோட்டங்கள், தென்னை மரங்கள் சூழ அமைதியான வாழ்க்கை நடத்தினார் தன் தாயாருடன். (அது வரை அவரது தாயாரும் இருந்தார்) அனால் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உயர் கல்வி கற்று அமரிக்க நாட்டிற்கு சென்று விட்டனர். இவரும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அமேரிக்கா சென்று சில நாட்கள் தன் குடும்பத்துடன் வசித்து விட்டு மீண்டும் தன் கிராமத்துக்கு வந்து விடுவார். பின்னர் தன் தாயார் இறந்த பின்னர் தன் தந்தையாருக்கு கட்டிய கோவிலுக்கு பக்கத்தில் தாயாருக்கும் சிலை வைத்து தனிக்கோவில் கட்டினார்.


தான் சுந்தரப்பன் சாவடியில் வாழ்ந்த கடைசி காலத்தில் தனக்கு வரும் ஓய்வூதியப்பணம் மற்றும் தன் கொல்லையில் காய்க்கும் தேங்காய்களை விற்று வரும் வருமானம் இவைகளை கொண்டு நிம்மதியான வாழ்வு வாழ்ந்தார். ஒரு ரூபாய் கூட விரய செலவு செய்ய மாட்டார். அவரால் மயிலாடுதுறைக்கு பெருமை. அவரால் அவர் படித்த நகராட்சி மேல் நிலைப்பள்ளிக்கு பெருமை. அவரால் அவர் கிராமத்துக்கு பெருமை. சுற்றி இருந்த கிராமங்களுக்கு பெருமை.

இரு தினங்கள் முன்பாக அமரிக்கா சென்றிருந்த போது உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது ஆசைப்படி அவரது உடல் சொந்த ஊருக்கு வருகின்றதாம். அமேரிக்கா சென்று இறந்தாலும் தான் நேசித்த மண்ணில் வந்து அமைதியாக உறங்கட்டும் திரு. சொக்கலிங்கம் அய்யா அவர்கள்!


"பத்திரிக்கா உலக" நியதிப்படி செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் சூதாட்டம் மற்றும்  கூட்டிக்கொடுக்கும் தொழிலதிபர்  குருநாத் மெய்யப்பன் இடம் பெற,திரு.சொக்கலிங்கம் அவர்கள் எட்டாம் பக்கத்தில் இரண்டு இன்ச் ஆக சுருங்கி போயிருந்தார்.



திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கு மயிலாடுதுறை மக்கள் சார்பாக அஞ்சலிகள் :-(

May 17, 2013

சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம் பின்னே சமதர்மம் !!!

சமீபத்தில் வெளிவந்துள்ள சிவகார்த்தி நடித்த 'எதிர்நீச்சல்' படத்தில் 'குஞ்சிதபாதம்' என்னும் பெயரினால் வரும் அவமானங்கள் தான் கதையே என ஒட்டுமொத்தமாக எல்லோரும் தங்கள் 'சினிமா விமர்சனத்தில்' குறிப்பிட்டு வருகின்றனர். அதிலே என்ன அசிங்கம்?? எனக்கு புரியவில்லை. சிதம்பரம் நடராஜர் சிலைக்கு அலங்காரம் செய்யும் போது அவரது உடல் முழுக்க நகைகள் அலங்காரம் மட்டுமே இருக்கும். அவரது திருவாச்சியில் மட்டுமே பூ அலங்காரம் இருக்கும். மத்தபடி அவரது உடலில் பூ மாலை சூட்டும் இடமே அவரது தூக்கி நிறுத்திய இடது கால் பாதங்களில் அதாவது கனுக்காலில் சின்னதாய் நம் உள்ளங்கை அளவிலான குஞ்சம் வைத்த பூ மாலை சாற்றியிருப்பர். அதற்கு தான் குஞ்சித' பாதம் என்னும் பெயர். அது போகட்டும். இந்த பெயரை விடுங்கள். என் பெயர் "தொல்காப்பியன்" என்ன பாடு பட்டிருக்கு தெரியுமா என் பள்ளி பருவத்தில்???


நானே எலும்பும் தோலுமாய் இருப்பேன் அப்போது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை, தோலும் எலும்புமாய் இருக்கிறேன். அதை குறிக்கும் விதமாய் தோலு' காப்பியன், காப்பி, என பலவாறு கிண்டலடிக்கப்பட்டுள்ளேன். பள்ளிக்கு தடுப்பூசி போட வரும் போது பசங்க ஊசிக்கு அழுதுகிட்டு இருக்காங்களோ இல்லியோ வரும் ஊசிக்காரர் ஊசியை போட்டு விட்டு என் பெயரை தோல் காப்பியன் என மிகச்சரியாக தப்பாய் எழுத போவதை நினைத்து அழுவேன். ஊசி வலியை விட அது அதிகம். அது என்ன எழவோ தெரியலை... இப்போதும் கூட என் வாக்காளர் அடையாள அட்டையில் தோல் காப்பியனாகவே இருந்து தொலைக்கிறேன். அப்படி என் பெயரால் நான் ரொம்ப மனமொடிந்து போன நேரத்தில் அபி பிறந்து அபிஅப்பாவாக ஆன பின்னே தான் ஓரளவு நிம்மதி. அதையும் கூட சிலர் அபிஅப்பா என்பதை சில சமயம் அபிபாப்பா என எழுதி விடுகின்றனர்.


இப்படியாக என் பெயர் எனக்கு பல தொல்லைகளை கொடுத்த காலத்தில் அதாவது நான் ஏழாம் வகுப்பு படித்த காலத்தில் (ஏழாம் வகுப்பெல்லாம் படிச்சிருக்கேன் மை லார்ட்) ஒரு நான்கு மாதம் மயிலாடுதுறையில் இருந்து மேல்படிப்புக்காக மங்கைநல்லூர் கிராமத்துக்கு கொண்டு சேர்த்தார்கள். அங்கே பெயர் எல்லாம் வித்யாசமாய் இருக்கும். அதிலே ஒருத்தன் பெயர் "சமாதானம்". நம்புங்க. அவன் பெயரே சமாதானம் தான். அவன் அண்ணன் பெயர் "சமரசம்" தம்பி பெயர் "சமதர்மம்" .. இப்படியாக அந்த பள்ளியில் சமாதானம், சமரசம், சமதர்மம் ஆகிய சகோதர்கள் வந்து சேர்ந்தனர் அந்த பள்ளிக்கு. அவனுங்க பெயரை மற்ற மாணவர்கள் கிண்டலடிக்கும் போது நானும் சேர்ந்துப்பேன். பின்ன என்ன ... ஒரே அடிதடி, சண்டை, சச்சரவு தான். ஹய்... நல்லா இருக்குல்ல... சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம் பின்ன சமதர்மம் ஆகா ... இந்த குழப்பத்தில் என் தொல்காப்பியன் பெயர் கிண்டலில் இருந்து தப்பித்து கொண்டது. பின்னர் நான் அந்த பள்ளியில் முதல் ரேங் வாக்கியமையால் அப்பாவுக்கு அந்த பள்ளி மீது இருந்த நம்பிக்கை போயே போயுந்தி. நம்ம பையனே பஷ்ட் ரேங் வந்தா அதல்லாம் ஒரு பள்ளிக்கூடமான்னு பள்ளி மீது கோவிச்சுகிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்து பழைய பள்ளியிலேயே சேர்த்துட்டாங்க. மீண்டும் தொல்காப்பியன் என்பது தோலாய் ஆனது... அவ்வ்வ்


பின்னர் விபரம் தெரிந்த காலத்தில் தான் அந்த பெயர் எத்தனை தொன்மையான அழகிய தமிழ் பெயர் என்பது புரிந்தது. அது போலவே சமாதானம், சமரசம், சமதர்மம் என உயரிய நோக்கில் தன் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டிய அந்த அப்பனை நினைத்து மானசீகமாய் வணங்கினேன்.


பின்னர் என் இருபத்தி எட்டாம் வயதிலெல்லாம் நான் ஃபாரின் ரிட்டர்ன் ஆகி கண்ணாலம் காட்சின்னு ஆன பின்னர் ஒரு நாள் நான் லீவுக்கு வந்திருந்த போது ஒரு பத்திரிக்கை வந்திருந்தது. ஆமாம்! என் பால்ய காலத்தில் பழகிய அந்த சமாதானத்துக்கு திருமணம். எடுத்து பிரித்து பார்த்தேன். மணமகள் பெயரை பார்த்தததும் குபீர் என சிரித்து விட்டேன். நான் ஏற்கனவே என் மனவியிடம் இந்த "சமாதானம்" என்னும் பெயரை கேலி செய்த கதையை சொல்லி இனி அந்த பெயரை கேட்டால் சிரிக்க மாட்டேன் என சொல்லி இருந்தேன். ஆனாலும் சிரித்து விட்டேன். என் மனைவி அந்த அழைப்பிதழை வாங்கி பார்த்து விட்டு என்னை முறைத்த போது நான் அந்த "சமாதானம்" பெயருக்காக சிரிக்கவில்லை என சொல்லவில்லை. 


இரு நாட்கள் பின்னர் அந்த திருமணத்துக்கு போனேன். எல்லோரும் வாழ்த்திய பின்னர் நான் மேடைக்கு சென்று "சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்" என வாழ்த்தினேன். அவனுக்கு ரொம்ப கோவம் வந்து விட்டது. "போடா தோலு" என்றான். சிரித்து கொண்டே வந்து விட்டேன்.

அந்த மணமகள் பெயர்  "சாந்தி":-))

April 5, 2013

என்றும் இந்த ஆனந்தம் நிலைக்கட்டும்!!!


நேற்று மாலை கடைத்தெருவுக்கு போய்விட்டு மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பும் போது எங்கள் தி.ப.தி.அர தேசிய மேல்நிலைப்பள்ளி வாசலில் எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. கே.ராஜேந்திரன் சாரும், கூடவே குலசேகரன் சாரும் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களை பார்த்ததும் நானும் வண்டியை ஓரம்கட்டிவிட்டு அவர்களோடு பேச்சில் நுழைந்து கொண்டேன். அப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு சுமார் 65 வயதுடைய  அம்மையார் நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் பள்ளி அருகே வரும் போது தன் செருப்பை கழட்டி விட்டு பள்ளியை நோக்கி ஆத்மார்த்தமாக கும்பிட நான் "சார் அங்க பாருங்க. நம்ம ஸ்கூலை கும்பிட்டு கிட்டு இருக்காங்க. அவங்களை பார்த்தா நம்ம ஸ்கூல் கஸ்தூரி டீச்சருக்கு வயசான மாதிரியே இருக்குல்ல சார்" என்றேன். அதைப்பார்த்த கே ஆர் சார் "அடப்பாவி, அவங்க நம்ம கஸ்தூரி டீச்சரே தான், கூப்பிடு கூப்பிடு அவங்கலை" என சொன்னதும் நான் ஓடிப்போய் கூப்பிட்டேன்.

என்னைப்பொருத்த வரை கஸ்தூரி டீச்சர் என்பவர் முகத்தில் மனோரமா மாதிரி ஒரு கருப்பு பருவுடன், கையில் பிரம்புடன், கருத்த தலை முடியுடன், கண்டிப்பான முகத்துடன் இருக்கும் பி.ஈ.டி டீச்சர். மாணவிகளுக்கான ரிங் பால், கோகோ எல்லாம் சொல்லிகொடுக்கும் டீச்சர். என் மனதில் அது மட்டுமே பதிந்து இருந்தது. இப்போது இத்தனை வயதானவங்கலா அவங்களை நினைத்து பார்க்க கூட இல்லை. காலம் எத்தனை வேகமாக ஓடுது!

நான் அழைத்ததும் கிட்டே வந்தாங்க. அங்கே கே ஆர் சாரையும் பார்த்ததில் அவங்களுக்கு இன்னும் மகிழ்வு. சென்னையில் பொண்ணு வீட்டில் செட்டில் ஆகிட்டாங்க. அவங்க கணவர் (அவரும் ஆசிரியர் தான் ..ஆனால் முனிசிபல் பள்ளியில்) 3 வருடங்கள் முன்பாக இறந்து விட்டார்கள் என்பதால் சென்னையில் தன் மகளுடன் போய் தங்கிவிட்டாங்க கஸ்தூரி டீச்சர்.
கே ஆர் சாரும் நானும் அவங்க கிட்ட ஷேமலாபங்கள் எல்லாம் விசாரித்து பின்னர் "எங்க டீச்சர் நடந்து போறீங்க" என கேட்க "வடக்கு மடவிளாகத்திலே ராமூர்த்தி சார் வீட்டுக்கு போறேன். வருஷம் ஒரு தபா ட்ரஷரிக்கு வந்து எங்கள் 'இருப்பை' உறுதி செஞ்சா தானே பென்ஷன் வரும். அதனால வந்தேன். ஆனந்த வல்லி டீச்சரும் இன்னிக்கு வந்திருக்காங்க. அவங்களும் நானும் இன்னிக்கு ராமூர்த்தி சார் வீட்டிலே தங்கிட்டு நாளை ட்ரஷரி போய்விட்டு சென்னைக்கு போகனும்" என்றார்கள். தனக்கு அரை மணி முன்பாக ஆனந்த வல்லி டீச்சர் மாயவரம் வந்து விட்டதாகவும், அனேகமா ராமூர்த்தி சார் வீட்டுக்கு நடந்து போய் கொண்டு இருக்கலாம் எனவும் சொன்னாங்க.

இங்கே ஆனந்த வல்லி டீச்சர் பத்தி சொல்லனும். அந்த காலத்து "அன்பேவா" சரோஜாதேவி மாதிரி இருப்பாங்க. சின்னதா கோஸ் மூக்குத்தி, பன் கொண்டை, பட்டுப்புடவை நீண்ட கை வைத்த புடவைக்கு மேட்சிங் ஜாக்கெட், அதே சரோஜாதேவி பாணியிலே "ஷெர்ஷா ஆப்கானிஸ்தால ஆரம்பிச்சு ஆண்டிப்பட்டி வரை ரோடு போட்டான் தெரியுமோ" என சொல்லி அந்த கதையை சொல்லும் போது நமக்கே காலில் தார் ஒட்டின மாதிரி ஒரு ஃபீலிங் வரும். வரலாற்று பாடத்தின் உள்ளே அழைத்து போய்விடுவார்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்டும் பள்ளி வாசலுக்கே  வந்து, பின்னர் நான் கஸ்தூரி டீச்சரிடம் "வாங்க டீச்சர் என் வண்டில போகலாம், நானும் சார் வீட்டு வழியாத்தான் போறேன்" என சொல்லி டீச்சரை அழைத்து கொண்டு கே ஆர் சாரிடம் விடைபெற்று வந்தோம்.

வண்டியில் வரும் போது "கொழந்தே எப்படி இருக்காய்?" என் கேட்டாங்க மீண்டும். ஒரு 45 வயசு தடிமாட்டை கொழந்தே என கூப்பிடும் நபர்கள் அம்மா அப்பா வாக இருக்கலாம். அல்லது ஆசிரியர்கள் மட்டுமே. என்ன ஒரு கொடுப்பினை! "சார் தவறின பின்னே நேக்கு மாயவரம் அத்தனை பிடித்தமா இல்லை. அதான் பொண்ணு ஆத்துல போய் ஐக்கியமாகிட்டேன். அங்க போனா மாயவரம் ரங்கநாதரும், அவயாம்பாவும் 'இங்க வா இங்க வா"ன்னு கூப்பிடுற மாரியே இருக்கு. என்னால சதர்ன் ரயில்வேகாரன் தான் செழிக்கறான்" என பேசிக்கொண்டே வந்தார்கள்.

ராமூர்த்தி சார் வீட்டுக்கு சற்று முன்னரே ஆனந்தவல்லி டீச்சர் நடந்து போய்க்கொண்டு இருந்ததை பார்த்து விட்டு வண்டியை நிறுத்தினேன். நான் அவங்களை பார்த்து எத்தனை வருடம் இருக்கும் என கணக்கு மனதில் ஓடியது. என் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு வரலாறு புவியியல் தேர்வு எழுதிவிட்டு வெளியே முதல் ஆளாக வந்த என்னை ஓடிவந்து "கொஸ்டின் பேப்பரை கொடுடா, ஏன் முன்னக்கவே வந்துட்ட, ரொம்ப கஷ்டமோ, நல்லா எழுதினாயோ, எத்தினி வரும், பாலிடெக்னிக் கிடைச்சுடுமோ" என ஏகப்பட்ட கேள்விகளோடு பார்த்தது தான் கடைசியாக அவர்களை பார்த்தது. அந்த சம்பவம் நடந்தது 1980. அதவது 33 வருடம் முன்பாக!

டீச்சர் இப்போதும் அதே மாதிரி ஆனாக்க  வயசானவங்கலா இருந்தாங்க. என்னை பார்த்ததும் "அடடே கஸ்தூரி... படீர்ன்னு நான் தொல்காப்பியனின் அப்பா தான் உன்னை அழைச்சிண்டு வராரோன்னு நினைச்சுட்டேன். நான் பார்த்த இக்கினூண்டு வாண்டு  இப்ப இத்தன வளர்த்தி. என்னடா கொழந்த காதோரம் எல்லாம் நரை விழுந்துடுச்சு. ஆகா என்னா குறும்பு அப்போ. இப்போவும் அப்படித்தானா? ஆம்படையாள் உன் குறும்பை எல்லாம் சகிச்சுக்கறாளா? ஆமா கல்யாணம் ஆகிடுத்தோல்யோ? குழந்தைகள் எத்தனை? என்ன பண்றா அவா? ....ஆனந்த வல்லி டீச்சரின் குணமே அதான். அவங்க தான் தொடர்ந்து கேள்வி கேட்பாங்க.. நம்ம பதிலை எப்போதும் எதிர்பார்ப்பதே இல்லை. "நேரு மாமா ஒரு அஞ்சு கொள்கை கொண்டு வந்தாரே அது பேர் என்னான்னு சொல்லுங்கோ... தொல்காப்பியா நீ சொல்லு...(நான் எழுந்திருக்கும் போதே ..பதில் சொல்ல அல்ல...தெரியாதுன்னு சொல்ல) அதாவது அதுக்கு பஞ்சசீல கொள்கைன்னு பேர். இத நீங்க எப்படி ஈசியா மனசிலே வச்சுப்பேள்??? நம்ம க்ளஸ் பதஞ்சலி தியாகராஜன் இருக்கானோனோ அவன் பேரை ஓர்ம வச்சுண்டா போறும்... பஞ்சசீலக்கொள்கை மனசிலே வந்துடும். இது முக்கிய கொஸ்டின், எழுதி வச்சுகோங்கோ வர்லைன்னா "ஏண்டி ஆனந்த வல்லி வர்லைன்னு முச்சந்தில வச்சு கேளுங்கோ என்னை, ஒக்காருடா கொழந்தே... அடுத்த கேள்வி ஆஸ்ட்ரியா நாடு இருக்கோல்யோ அது செர்பியா மேல போர் தொடுத்தா...தொடுக்கலை அதுக்கும் முன்ன போர்பிரகடனம் செஞ்சா, அது எந்த வருஷம் நடந்துச்சு, அதுக்கு பதில் நீ சொல்லுடா கொழந்தே என ராதாவை எழுப்பி நிக்க வச்சுட்டு டீச்சரே "அது ஜுன் 28  ம் தேதி 1914ம் ஆண்டு நடந்துச்சு. இதை எப்படி ஞாபகம் வச்சுப்பேள்??? அதாவது நம்ம க்ளஸ்ல எல்லாரும் என்ன டேட் ஆஃப் பர்த்... ஜூன் 27 தானே. அதுக்கும் அடுத்த நாள் தான் இது நடந்துச்சு. ராமன் எத்தனை வருஷம் காட்டுக்கு போனான் 14 வருஷம்... அதையும் இதையும் முடிச்சு போட்டுகோங்கோ, உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி உங்க கொழந்தேல்லாம் பப்ளிக் எழுதும் காலம் வரைக்கும் மறக்காது கேட்டேளா" . இதான் ஆனந்தவல்லி டீச்சர். அவங்க மட்டுமே கேள்வி கேட்பாங்க. பதிலும் அவங்களே சொல்லிடுவாங்க.

நான் டீச்சரிடம் "ஆமா டீச்சர், வயசாயிடுச்சுல்ல... நான் கடைசியா உங்களை என் வரலாறு புவியியல் பப்ளிக் எக்சாம் அன்னிக்கு பார்த்தது தான். இப்போ என் பொண்ணுக்கு அதே பப்ளிக் எக்சாம் நடக்குது. ஆனந்தவல்லி டீச்சர்  உடனே  "ஓ மை காட்! ஒன் பொண்ணு டென்த்தா? இங்லீஷ் மீடியம் தானே. அப்படின்னா ஒரு கேள்வி... ரொம்ப முக்கியம். வர்லைன்னா ஏண்டி வர்லை ஆனந்தவல்லின்னு என்னை முச்சந்தில வச்சு கேளு" என சொன்னாங்க.  டீச்சர் கொஞ்சம்  மாறலை. இந்த கேள்வி வந்துச்சா வரலையான்னு என் பொண்ணை முதலில் கேட்கவே பயமாய் இருக்கும் எனக்கு. ஒரு வேளை அது வரலைன்னா நான் ஆனந்த வல்லி டீச்சரை எங்க தேடிகிட்டு போய் பின்ன முச்சந்தி தேடி அழைச்சுட்டு வந்து நிக்க வச்சு கேட்கனும்.. இதல்லாம் நடக்கும் காரியமா?
அடுத்து டீச்சர் "during the great revolt of 1857 the governor general of india was ... " என கேட்டுவிட்டு என்னைப்பார்த்து "who??? சொல்லு நீனு " என சொல்ல நான் "டீச்சர் இது ஹிஸ்ட்ரியா, ஜியாகரபியா?" என்றேன்....அதுக்கு டீச்சர் "ஓ மை மாயூரநாதா, ஒனக்கு பேசிக்ல இருந்து ஆரம்பிக்கனும் போலிருக்கே... ஓக்கே நான் ஒன் பொண்ணு கிட்டே இந்த கேள்வியை சொன்னேன், முக்கிய கொஸ்டின்னு சொன்னேன்னு சொல்லு என சொல்ல நான் அதற்கு "டீச்சர், அப்படியே அந்த கேள்விக்கான பதிலையும் சொல்லிடுங்க டீச்சர்" என்றேன். உடனே டீச்சர் " lord canning" ன்னு சொன்னாங்க. நான் உடனே "அதில்லை டீச்சர். வரலாறு புவியியல் எல்லாம் பெயர் மாறி சோசியல் சயின்ஸ்னு ஆகிப்போச்சு... அதான் எனக்கு டக்குன்னு பதில் தெரியலை.எல்லாம் மாறிப்போச்சுல்ல " என வழிந்தேன் வழக்கம் போல!

உடனே டீச்சர் "ஆ மா எல்லாம் மாறிப்போச்சுது. எல்லாருக்கும் வயசாகிப்போச்சுது. இராமபத்ரன் சாரை அரங்கன் கூட்டிண்டான், எம் கே சார் போயாச்சு, இத்தோ ஒரு வாரம் முன்ன எல் கே கணேசன் சார் போயாச்சு, ஒரே குடும்பமா ஒரே பள்ளிக்கூடத்திலே எத்தினி வருஷம் எத்தினி வருஷம் இருந்தோம்... அந்த காலம் வருமா? எங்க கிட்டே படிச்ச குழந்தைகளை எப்பவாவது நல்ல நிலையிலே பார்க்கும் போது ... வாங்கின காசுக்கு நல்லா வளர்த்தோமடா மயூரநாதான்னு கன்னத்திலே போட்டுக்க தோணும். நல்லா இருக்கனும் கொழந்தேகளா நீங்கல்லாம்" என சொல்லி தன் முந்தானையால் கண்ணை துடைக்க நான் நிலமையின் இறுக்கம் தவிர்க்க "டீச்சர் நான் முன்ன சொல்லுவனே உங்களை சரோஜாதேவி மாதிரின்னு இப்பவும் நீங்க சரோஜாதேவி மாதிரி தான் இருக்கீங்க. ஆனா என்னா ஒன்னு ஆதவன் படத்திலே வரும் சரோஜாதேவி மாதிரி இருக்கீங்க" என சொல்ல அந்த இடமே நடுரோடு என்று கூட பார்க்காம சிரித்தோம் மூவரும்.

அடடே! இந்த சிரிப்பு, ஆனந்தம் என் ஆசிரியர்களுக்கு என்றைக்கும் நிலைக்க வேண்டும் என்ற நினைப்புடன் வீட்டுக்கு வந்தேன்.

March 10, 2013

அபிஅப்பாவும், ஆரூர் மூனா செந்திலும்! கொஞ்சம் டோண்டு சாரும் உண்டு!

ஆகா! எனக்கு இந்த தமிழ்மணம் அதிலே ஓட்டு, சூடான இடுகை, வாசகர் பரிந்துரை எதிலும் நம்பிக்கை போயே போச்சு. எப்போ டாட்காமா இருந்த என்னை டாட் இன்னா "பேண்ட்" போடவிட்டாங்களோ அன்னிக்கு நளதமயந்தி மாதவன் மாதிரி விசுக்கு விசுக்குன்னு வலது காலை தூக்கி இல்லாத வேட்டியை அனிச்சையா மடக்கி கட்டினவன் தான். நேத்து வரை கட்டி கிட்டு கிடந்தவனை ஆரூர் மூனா செந்தில்தான் கூட்டிட்டு போய் உனக்கு பேண்டு சட்டை வாங்கியாறேன்னு சொல்லி அழகு பார்த்தாரு. சரி ஒரு நன்றி சொல்லுவோமேன்னு ஒரு ட்ராஃப்ட் அடிச்சு அதை "சேவ்" செய்கிறேன் பேர்வழின்னு  சேவ் செய்ய போனா "ஆரூர் மூனா செந்தில் already exists''...சரின்னு செந்தில் திருவாரூர், செந்தில்,எல்லாம் அடிச்சு பார்த்தா அதே போல வருது. சரின்னு ஒரு முடிவோட அதை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு ஆரூர் மூனா பூனா செந்தில்னு கூட அடிச்சு பார்த்தேன்... அட தக்காளி ... அதும் அல்ரெடி எக்சிஸ்ட்... ஆக இந்த செந்திலை நான் இரவு முழுக்க கடிச்சு கடிச்சு தின்னுருக்கேன்.அந்த மகாபாவிக்கு தான் இப்ப நன்றி சொல்லனும். என் சைஸ்க்கு இருந்தா சாதா  பாவி. கொஞ்சம் நார்மலா இருந்தா கூட ஸ்பெஷல் சாதா பாவின்னு வச்சுக்கலாம். ஆனா இவரு என் தம்பிக்கு போட்டியா இருப்பாரே... அதனால மகாபாவி... (அய்யோ ..முடியல..என்னால சப்ப கட்டு கட்ட முடியல...)

அந்த மகாபாவி என்னான்னா என்னை ஆகாஓகோங்குது.என்னை இதுவரை எழுத்துக்காக புகழ்ந்தது ரெண்டு பேர் தான். ஒரு நாள் காலைல ஆரூர் மூனா செந்தில். அவர் தான் இரவும் புகழ்ந்தார். ஆக ரெண்டு பேர். சமீபமா நான்  மதுவும் அருந்துவதில்லையா... உடனே ஓடிப்போய் அந்த ட்ராஃப்டை எல்லாம் படிச்சு செத்துட்டேன். அட, என்ன ஒரு கேவலமான விஷயத்துக்கு எல்லாம் ஆரூர் மூனா செந்திலை திட்டி இருக்கேன்...  அப்படின்னு நினைச்சு கிட்டு இருக்கும் போதே திடீர்ன்னு செந்தில் கிட்ட இருந்து ஒரு பின்னூட்டம் வருது. நீங்க உங்க பதிவை டாட் காம்ல மாத்தினா நீங்க தான் மகுடம்... இப்படியாக... மேலும்  ஒரு கோப்பையில் காசி ஆறுமுகம்,பில்கேட்ஸ், குழலி, பொன்ஸ்,  மயிலாடுதுறை சிவா, பெயரிலி எல்லாரையும் சம அளவில் போட்டு கலக்கவும் என செய்முறை வேறு....

செஞ்சேன்... அட ஆமாம் டபார்ன்னு டெஸ்ட் ட்யுப்ல அடில இருந்து ஒரு இண்ச் மேல கரு வளையம். சுரேகா ,ஷ்ரேயா ன்னு கத்திகிட்டேன் .நானும் நளதமயந்தி கிளைமாக்ஸ் மாதவன் மாதிரி கோட்டு சூட்டு ஆளாகிட்டேன். இன்னிக்கு நானும் மகுடமாம். இதல்லாம் எனக்கு அதிகம் கேட்டோ.....

ஆனா ஒன்னு என் அன்பான செல்ல எதிரி என் அன்பான ஆரூர் மூனா செந்திலுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

இதையே சொல்லிகிட்டு இருந்தா... அனேகமா செந்திலே கடுப்பாகிடலாம்...  நெக்ஸ்ட்....

இந்த செந்தில் இருக்காரே செந்தில்... (அய்யோ... இன்னிக்கு செந்தில் ப்ராணமாவே ஆகிடுச்சு. (அட தேவுடா ..அந்த ஆளு ஒரு 'ஆம்பளை ஆளு பிரா போட்ட' படத்தின் விளைவு...புராணம் 'ப்ரா'னம் ஆகிடுச்சு)..இந்த ஆள் குடிச்சா நல்லா எழுதுவாரு. ஆனா சிலர் குடிச்சா குழப்பம் ஆகிடுவாங்க.

இப்படித்தான்... ஒரு நாள் டோண்டு சார் இறந்துட்டாரு. உடனே ஒரு பதிவு போட்டேன் பேஸ்புக்ல. இதான் என்னால் செய்ய முடிஞ்ச அஞ்சலி. அதை விடுங்க. பகல்ல பதிவு போட்டாச்சு. சும்மா இருக்குமா மனசு, அதும் ராத்திரில.... போனை போட்டேன் டோண்டு சாருக்கு.

"சார்"
"நான் சார் இல்லை சாரி"

"அதன்ன சார் செத்து போனா பெண்பாலா ஆகிடுவாங்கலா. சாரின்னு சொல்றீங்க"

"அந்த சாரி இல்லை, இது இங்கிலீஷ் சாரி அதாவது sorry"

"மன்னிக்கனும்... ஐ நீட் டு ஸ்பீக் வித் டோண்டு சார்"


அடுத்து ஆம்பளை குரல்.... டோண்டுவே தான்...

சித்தப்பா என்னா எப்டி இருக்கீங்க?

"அட போங்க டோண்டு சார்... மொதல்ல பொம்பளை கொரல் இப்ப ஆம்பளை கொரலா"

"சரி சித்தப்பா, உங்களுக்கு ஓவர் ஆகிடுச்சு"

"யோவ் அது இல்லய்யா. நீர் செத்ததுக்கு அஞ்சலி சொல்ல வந்தேன்"

"ரைட்டோ... நடத்துங்க"

"யோவ் நான் என்ன உன் வூட்டு வாத்தியாரா? உம்ம காரியம் நடத்துவதுக்கு?... நான் ஒரு ஓரமா ஒக்காந்துட்டு போய்டுவேன்"

"சரி போங்க"

"ஆனா ஒன்னுய்யா ... செத்த பின்னயும் பேசுற பாரு... நீர் மனுசன்"

"ஆமாம்... "

"என்ன ஓமாம்"

"நான் இன்னும் சாகலை'

"இந்த உம்ம ...பீக் .....தன்னம்பிக்கை...பீக்... தான்யா ...பீக் பீக்...எனக்கு புடிச்சது.....க்"

"ங்கொய்யால வச்சுட்டியா... ஆனா காலைல திரும்பவும் பேசுவேன்"

குப்புற அடிச்சு படுத்துட்டேன்.

காலைல என் மனைவி எழுப்பினாங்க. பார்த்தா பத்ரகாளி மாதிரி நிக்கிறாங்க.

"என்னாங்க"

"சொல்லுங்க"

"ஏன் தண்டபாணிக்கு போன் செஞ்சீங்க? என்ன பேசுனீங்க? அவன் எங்க அக்காவுக்கு ஒத்தை பையன். அவன் செத்துட்டதா அவனையே கேட்டிருக்கீங்க... இதல்லாம் நல்லா இருக்கா? "

"இல்லையே, என் போன் காணாம போச்சு நேத்திக்கு கடைத்தெரு போகும் போது" என சொல்லிக்கொண்டே எடுத்து அடியில் வச்சுகிட்டேன். அந்த நேரம் எவனோ போன் செய்ய அது கிர்ர்ர்ர்ர் என நான் உடம்பை தூக்கி தூக்கி போட்டேன்.

பின்ன தான் தெரிஞ்சுது அந்த தண்டபாணியை "dandu" எனவும் நம்ம டோண்டு சாரை "dondu" எனவும் வச்சி தொலைஞ்சி இருக்கேன்.. நல்ல வேளை தண்டபாணி வீட்டுக்கு எழவு கேட்க போகலை!

இந்த குடியால் வரும் குழப்பங்கள் பத்தி இன்னும் ஒரு நாள் விலாவாரியா பேசுவோம்! இன்னும் ஒரு நாள் ......என்ன நாளையே கூட பேசலாம்! நீங்க எல்லாம் விரும்பினாக்க....

குறிப்பு: இது டோண்டு சாரை அவமதிக்கும் பதிவு இல்லை. இறந்தாலும் நம்ம கூட இருக்கார் என சொல்லும் ஒரு சின்ன நினைவூட்டல். அத்தனையே!

March 8, 2013

இது ஒரு பொடி விஷயம்!



உடனே நீங்க இது ஒரு சின்ன விஷயம்னு நினைச்சா நான் அதுக்கு ஜவாப்தாரி இல்லை. நிஜமாகவே "பொடி" விஷயம். இந்த பொடி இருக்க்கே பொடி... அதுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு கால நட்பு. என்னவோ கலைஞரும் எம் ஜி  ஆரும் நட்பு மாதிரி நினைச்சுக்காதீங்க. நிஜமாகவே நாற்பது ஆண்டு கால நட்பு.

எங்க வீட்டிலே பொடி போடும் ஆட்கள் என பார்த்தா நான் சின்னதா இருக்கும் போது.. அதாவது ஒரு ஆறு அல்லது ஏழு வயசு... என் சித்தப்பா... ராமசாமி ...சித்தப்பா அப்போ இளைஞர்..தீவிர திமுக... அல்லது திமுக தீவிரவாதி எப்படி வேண்டுமானா வச்சுக்கலாம். அவரு கடந்த கி.மு காலத்தில் இருந்தே  இருந்தே அண்ணா பக்தர்.

இப்போ சமீபமா டாக்டர் அன்புமணி சொல்றாரே, ஒரு தலைவனை பார்த்து தான் தொண்டன் கெட்டு போறான்னு அது மாதிரி அண்ணாவை பார்த்து பொடி போடும் பழக்கத்துக்கு ஆளானவர்  சித்தப்பா. அஃப்கோர்ஸ் என் அப்பாவும் தான். காலையில் முறைவாசல் செய்ய வரும் அம்மா முதலில் திண்ணையில் தூங்கும் சித்தப்பா தலையணிக்கு அடில கை விட்டு பொடி டப்பா வை எடுத்து சாக்கடைல போட்டுட்டு தான் அன்றைய சண்டையை ஆரம்பிபாங்க. (என் அம்மா அப்பா கல்யாணத்தின் போது சித்தப்பாவுக்கு பத்து வயது தான்)



அண்ணா மாயவரத்துக்கு பொதுக்கூட்டம் வரும் போது வலது பக்கம் கிட்டப்பாவும் இடது பக்கம் தம்பி தேவேந்திரனும் இருப்பாங்களாம். அண்ணா ரொம்ப வீரியமா பேசிகிட்டு இருக்கும் போது வலப்பக்கம் கை நீட்டி "இதோ இருக்கிறாரே தம்பி கிட்டப்பா" என சொல்லும் அந்த கேப்ல கிட்டப்பா ஒரு சிட்டிகை பொடியை அண்ணாவின் வலது கையில் மணிக்கட்டும் முழங்கை மூட்டுக்கும்  இடையே வைப்பாராம், அடுத்த நொடி...இதோ இருக்கும் தம்பி தேவேந்திரன் என சொல்லி இடக்கை காட்டும் போது அந்த இடைப்பட்ட 2 நொடிகளில் அண்ணா தன் வலக்கையை மூக்கின் அருகில் கொண்டு போய் சர்ர்ர்ர்ரிடுவாராம். இப்படியாக சிலாகிக்கப்பட்ட காலம் அது!

அதல்லாம் சின்ன வயசு. பின்ன எனக்கும் பொடிக்கும் ஆன பழக்கம்னு பார்த்தா நான் 8ம் வகுப்பு படிக்கும் போது தான். எம்.பி ராதாபாய் அம்மாள்.... அதாவது உங்களுக்கு புரியனும்னா இப்ப சினிமாவிலே பாடுறாரே மாணிக்க வினாயகம் அவரோட சொந்த அப்பாவின் சொந்த தங்கை இவங்க. இவங்களும் எம் கே ராதாவும் சேர்ந்து நடிச்ச "மாயா மச்சீந்திரா" விலே எம் ஜி ஆர் ஒரு துணை நடிகர். அப்படின்னா பார்த்துகுங்க. அடுத்து குழந்தையம்மா. இது யாருன்னா நம்ம டி ராஜேந்தரின் பாட்டி. அதாவது டி ஆரின் அம்மா பேபி அம்மாளிம் அம்மா!

இவங்களுக்கு நான் தான் "வெப்பன் சப்ளையர்" . பொடிக்கு நாலணா எனக்கு நாலணா என அக்ரிமெண்ட். ஏன்னா அப்போ ராஜேந்தர் எல்லாம் சினிமாவுக்கு போய்விட்டபடியாலும் என்னை விட்டா அந்த பாட்டிகளுக்கு வேற பார்ட்டி எதும் கடைக்கு போக இல்லை என்பதாலும்...நான் தான் போய் பொடிக்கடைல பொடி வாங்கி வரனும்!

பொடிக்கடைன்னா மாயவரத்திலே  ஏ. வெங்கட்ராமன் அய்யர் கடைக்கு அடுத்த கடை. மணிக்கூண்டு பக்கத்தில்!

ஒரு நிமிஷம்..மொதல்ல ஏ. வெங்கட்ராமன் அய்யர் கடை பத்தி சொல்லிடுறேன். அவருக்கு இது நூற்றாண்டு ஆண்டு. அது ஒரு பக்கம் இருக்கட்டும். மக்கள் கொடுத்த காசுக்கு வஞ்சகம் இல்லாம தொழில் செய்யனும்னு நினைக்கும் ஒரு ஆத்மார்த்தமான கடை. அவங்க கடையை ஏ. வெங்கட்ராமன் அய்யர் கடைன்னா பழைய ஆளுகளுக்கு தெரியாது. "மர்ஃபி வெங்கட்ராமன் அய்யர் கடை"ன்னு சொன்னா தான் தெரியும். அது என்ன மர்பி? அது ஒரு பேமஸ் ரேடியோங்க. அதுக்கு சிம்பல்ன்னா ஒரு அழகிய குழந்தைதான். அவங்க கடை ஷட்டர்ல அந்த குழந்தை படம் இருக்கும். 1 சி - திருச்சிற்றம்பலம் பஸ்ல இருந்து வரும் பெண்கள் "யாத்தீ கேட்டியா இந்த கூத்தை... இந்த குழந்தை டெல்லி பட்டணமாம். எல்லாரும் கண்ணு வச்சி கண்ணு வச்சி செத்தே போய்டுச்சாம்..பாவம்டீ"ன்னு பேசுவதை நானே பலமுறை கேட்டுள்ளேன். இவங்க இப்ப சோனி டீலர்.. காலம் மாறிகிட்டே வருதுல்ல...நிற்க...

அதுக்கு அடுத்த கடை தான் இந்த டி. ஏ எஸ் ரத்தினம் பட்டிணம் கடை. அதுக்கு அடுத்த கடைன்னா அது கல்கத்தா விஸ்வநாத்ன்னு ஒரு சேட்டு கடை. ஸ்வீட் கடை. தாடி வச்ச சேட்டு விஸ்வநாத் இருப்பரு. கொசிறு கொடுப்பாரு. நல்லவரு. அதை எல்லாம் விடுங்க. நாம பொடிக்கடைக்கு பொடி நடையா போவும்!

அங்க என்ன விஷேஷம்னா காவிரில முழுக்குன்னா இங்க களை கட்டும். ஒரு ஆள் (லைஃப் சைஸ்) பொம்மை... ஒரு தொட்டி வச்சுகிட்டு ஒரு உலக்கை வச்சு கிட்டு பொடி இடிப்பாரு. என் அப்பால்லா "டெக்னாலஜி ஈஸ் இம்ப்ரூவ்டு டூ மச்"ன்னு சொல்லி கிட்டு போவாங்க. நாங்க அதை எல்லாம் வேடிக்கை பார்க்க போவோம்.

இப்படியான ஒரு பேமஸ் கடை.... அதிலே போய் "அய்யா நாலணாவுக்கு பொடி கொடுங்க"ன்னு கேட்டா ஏற இறங்க பார்த்துட்டு "ச்சே போடா"ன்னு திட்டுவாங்க. புரியலைல்ல உங்களுக்கு? இருங்க புரியும் படி சொல்றேன்... டாஸ்மாக்ல போய் புதுசா குடிக்க வந்தவன் "சார் ஒரு பெக் பீர் குடுங்க"ன்னு கேட்டா அந்த பணியாளருக்கு எத்தினி கோவம் வரும்? அதான்.. ஓக்கே கேரியான்... மேல போவும்..

"அண்ணே, ராதாம்மாக்கு பொடி வேணும், நெய்ப்பொடி, இன்னிக்கு நெய் கம்மியா ஆனா வேதாரண்யம் கொஞ்சம் ஜாதாவா, லைட்டா "அது" தூக்கலா"

இதான் இன்னிக்கு எனக்கு ராதாம்மா சொன்னது. ராதாம்மாவுக்கு ஒரு ஒரு நாளும் வித வித காம்பினேஷன்ல தேவைப்படும். அது எல்லாம் அவங்க சொன்ன மாதிரி அங்க சொன்னா அவங்களுக்கு புரியும். பொடின்னா நீங்க ஊதித்தள்ளிடலாம்னு நினைக்கும் பொடி இல்லை. ராதாம்மாவுக்கு கொடுப்பது ஒரு நாள் ஊதி தள்ளுவது மாதிரி இருக்கும், ஒரு நாள் பிசின் போல இருக்கும்...இப்படி பல வகை!

ஒரு நாள் கடைக்காரன் என்ன கடுப்பில் இருந்தானோ, அல்லது நான் என்ன கடுப்பில் இருந்தனோ ராதாம்மா சொன்ன காம்பினேஷன் நான் சரியா சொல்லலை போலிருக்கு... போய் பொடியை கொடுத்ததும் 'எலேய் போய் தங்கப்பனை குதிரை வண்டி கட்ட சொல்லுடா"ன்னு சொன்னாங்க. மீண்டும் சைக்கிள்ல வந்து பொடி கடை பக்கத்தில் வந்து தங்கப்பனை "ராதாம்மா வர சொன்னாங்க" என சொன்னதும் "அம்மா கோவமா சொன்னுச்சா சாந்தமா சொன்னுச்சா"ன்னு அவன் வியாக்யானம் பேசுறான்.

ஆச்சு! ராதாம்மா வந்தாச்சு. உடம்பு முழுக்க நகை! வந்து டி ஏ எஸ் ரத்தினம் பட்டிணம் பொடிக்கடை வாசல்ல இறங்குச்சு. ராதாம்மா வந்ததும் ஏ. வெங்கட்ராமன் அய்யர் , கண்ணப்பன் அய்யர், மிட்டாய் கடை சேட்டு, வாதாமரத்து செட்டியார் என எல்லாரும் வந்தாச்சு. பொடியை தூக்கி போட்டு "தங்ங்கப்பா கட்டுடா வண்டிய, எலேய் ... ஒனக்கும் எனக்கும் இனி செத்தா வாழ்ந்தா இல்ல. ஒரு யாவாரம்...அதுல நாயம் இல்லை..என்ன கடை நடத்துற... தோ இங்க சுத்தி இருக்கும் அய்யாங்க எல்லாம் அய்யருமாருங்க எல்லாம் யாவாரம் பார்கலையா... ந்தா.. அந்த வந்தேறி சேட் கம்னாட்டி என்னவா நடத்துறான்"ன்னு சொல்லி கெளம்பிட்டாங்க. சேட்டுக்கு ஏண்டா இங்க வந்தோம்னு ஆகிடுச்சு.

எனக்கு கை கால் எல்லாம் நடுங்குது. ஆக இதுதான் எனக்கும் பொடிக்கும் உள்ள பந்தம்!

இதை எல்லாம் எதுக்கு சொல்றேன்னா,... கமான்.. கதைக்கு வாங்க.. அப்படியான எனக்கு ஒரு நாள் கண்ணாலம் ஆச்சுது. முதல் நாள் என் மனைவி கேக்குறாங்க. "ஏங்க பொதுவா மனுசன்னு பொறந்தா சில பல கெட்ட பழக்கம் எல்லாம் இருக்கும். நான் ஒரு லிஸ்ட் எழுதி வச்சிருக்கேன். அதிலே உங்களுக்கு என்ன பழக்கம் இருக்குன்னு சொன்னா நான் அதுக்கு தக்க மாதிரி வாழ பழகிக்குவேன்"

அட! இது ஒரு புது டெக்னிக்கா இருக்குதேன்னு லிஸ்டை வாக்கி பார்த்தா... அடிங்கொக்க மக்கா,,,,,, எல்லாமே எனக்கு பழக்கம் தான்! பொடி மட்டும் தான் பாக்கி இந்த பக்கிக்கு! சரி எல்லாத்தையும்  டிக் அடிச்சா முதல் ராத்திரி கடேசி ராத்திரியா ஆகிடுமேன்னு.... பொடியை மட்டும் டிக் அடிச்சேன்...

ஒரு வழியா 30 நாள் லீவ் முடிஞ்சு துபாய் போகும் போது கையிலே ஒரு பொட்டலம் திணிச்சாங்க. நானும் எதுனா லெட்டரா இருக்கும்னு நினைச்சு பாக்கெட்ல வச்சுகிட்டு சென்னை வந்துட்டேன். ஏர்போர்டிலே என்னை எல்லா இம்சைகளும் செஞ்சு முடிச்சு பின்ன ஒரு வெள்ளை பேண்ட் சட்டை காரர் "சார் ஹீ ஈஸ் ஹேவிங் சம் பவுடர்... மே பீ தி நெக்ஸ்ட் வர்சன் ஆஃப் ஹெராயின்" என அவன் மேலதிகாரிகிட்ட போட்டு கொடுக்க நான் சர்வ மரியாதையுடன் அழைத்து போகப்பட்டு... நடு நாயகமாக அமர வைக்கப்பட்டு ஆராயப்பட்டு... அந்த வஸ்து அதாங்க "பொடி" மேசை மீது வைக்கப்பட்டு அது என்னைப்பார்த்து சிரித்தது!

அட ஆண்டவா, பொண்டாட்டி ரூவத்திலா கஷ்டம் வரனும்னு நினைச்சு கிட்டு இருந்த போது தான் அந்த ஜிம்மி வந்துச்சு. அது பேர் ஜிம்மியான்னு தெரியாது. ஆனா பொதுவா நாய்ன்னா ஜிம்மி தானே! பேரை விடுங்க. நம்ம ஆராய்ச்சி அதுல வேண்டாம். நானே இக்கட்டிலே இருக்கேன். சரி... அது வந்துச்சு.

மோந்து பார்த்துச்சு. மோந்து பார்த்தா பரவாயில்லை... அது ராதாம்மா மாதிரி உறிஞ்சுச்சு. அவ்ளோவ் தான் "பிஸ்க்...பிஸ்க்...பிஸ்க்"ன்னு தும்மிகிட்டே கயித்தை புடுங்கிகிட்டு ஓடுது. அத்தனை ஆளுங்களும் பின்னாடியே ஓட... எனக்கு படம் வுட்டு போச்சு. மீதி இருந்த அந்த ஒத்தை ஆபீசர் கிட்டே சொல்றேன் " நாயா இருந்தாலும் மனுசனா இருந்தாலும் பொடின்னா தும்மல் வரத்தான் சார் செய்யும். என்னய கேட்டா சொல்லியிருப்பனே"

என் அறைக்கு வெளியே ஒரே பூட்ஸ் கால் சத்தம். ஓடிப்போய் உயரதிகாரிய கூட்டிட்டு வராங்கலாம்..... வந்தாரு ரங்காச்சாரின்னு ஒருத்தரு....

"ஹேய் மேன்.. மாயவரத்திலே எங்க"

"மாயவரம் சார்"

"உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அங்க எங்க?"

"சார் என்ன வேணும் உங்களுக்கு"

"பூண்டு பொடி இருக்கா? புதுசா கல்யாணம் ஆனவன். அனேகமா பொண்டாட்டி செஞ்சு கொடுத்துருப்பாளே"

"சார் நீங்களும் நம்ம பொடி சாதியா?"

"எஸ் மேன் எஸ்.... உனக்கு டைம் ஆகிடுச்சு ஃப்ளைட்டுக்கு.. ஓடு... வைத்தியநாதன்னு உன் அப்பா பேரை சொல்லி கதறிகிட்டு இருக்கானுங்க ... பை தி பை.... பூண்டு பொடியும், பன்னீர் புகையிலை, கும்மோணம் வெத்தலை மூணும் எடுத்து மேசைல வச்சுட்டு ஓடு.. நான் டூட்டின்னு வந்துட்டா ரொம்ப ஸ்ட்ரிக்ட்"

நான் சிரித்து கொண்டே பிளைட்க்கு ஓடினேன்!

October 13, 2012

நிஜமாகவே போலீசார் மக்களின் நண்பர்கள் தான்! வாழ்க காவல்துறை! மிக்க நன்றி!


என் செல்போன் இப்போது என்னிடம் இல்லை :

அது ஒரு பெரிய சுவாரஸ்யாமான கதை. நேற்று நான் சென்னையில் இருந்து மயிலாடுதுறை வர வேண்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தேன். அடுத்த ரயில் மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தான் என சொன்னதால் எனக்கு பேருந்து பயணம் ஒத்து வராமையால் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து விட்டேன். அப்போது நண்பர்கள் போனில் பேசிக்கொண்டு இருந்தமையால் போனில் பேட்டரி தீர்ந்து விட்டது. உடனே அங்கே இருந்த  பாயிண்டில் ஏற்கனவே மூன்று போன்கள் இருந்தன. அதிலே ஒன்றில் மாட்டி விட்டு பக்கத்தில் அமர்ந்து பேப்பர் படிக்க தெடங்கினேன்.

ஒரு இரண்டு நிமிடம் தான் அதிகபட்சமாக ஆகியிருக்கும். என் செல்போனை காணவில்லை. சார்ஜரும் இல்லை. அங்கே சார்ஜ் போட்டுக்கொண்டு இருந்த இரு கல்லூரி பெண்களிடம் "அய்யோ என் செல்போனை காணவில்லை. யாராவது எடுத்து போனதை பார்த்தீர்களா, கொஞ்சம் உங்க போனில் இருந்து என் போனுக்கு போன் செய்யுங்க" என சொன்னதுக்கு அவங்க பயந்து கொண்டு மாட்டேன் என சொல்ல நான் ஓடிப்போய் ரயில்வே பாதுகாப்பு ஸ்டேஷனுக்கு விஷயத்தை சொன்னேன்.

அந்த ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கொஞ்சம் பீதியை கிளப்பியது. ஒருவனை ஜட்டியோடு கைவிலங்கு இட்டு அதை ஒரு நாற்காலியில் பினைத்து இருந்தனர். எல்லாருமே ஒரு வித பரபரபுடன் வேலை செய்து கொண்டு இருக்க என்னை ஒரு இன்ஸ்பெக்டர் விசாரித்து விட்டு "ஆமா காலைல இருந்து பத்து பேர் வந்து புகார் சொல்லிட்டாங்க, ஆனா புகார் எழுதி கொடுங்கன்னு சொன்னா யாரும் முன்வரவில்லை" என சொல்ல அதற்கு நான் "சார் நான் புகார் எழுதி தர்ரேன் சார்" என சொன்னேன். அவர் ரைட்டரை நோக்கி கைகாண்பிக்க அவர்களே பேப்பர் பேனா எல்லாம் கொடுக்க நான் விளக்கமாக புகார் எழுதி கொடுத்தேன். இன்ஸ்பெக்டர் அவரது போனில் இருந்து என் நம்பருக்கு அழைக்க அது ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது.

புகாரை பதிவு செய்யலாமா என அவர் மீண்டும் கேட்க நான் "தாராளமா செய்யுங்க சார்" என சொன்னேன். அப்போது மதியம் 2.30 ஆகி இருந்தது. நான்கு மணிக்கு கிளம்ப வேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் வந்து நிற்க நான் போய் ஏறிவிட்டேன்.மனசே சரியில்லாமல் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் செல்போன் வாங்கி என் நம்பருக்கு போன் செய்ய அதிஷ்டவசமாய் ரிங் போனது. யாரோ எடுத்தாங்க. உடனே நான் "சார் அது என் செல்போன் தான். நான் எக்மோர்ல இருக்கேன். அதை கொடுத்தா நான் அதிலே இருக்கும் நம்பர் எல்லாம் எடுத்து கிட்டு போனையும் உங்க கிட்டே தர்ரேன்" என சொல்லி கொண்டே இருக்கும் போது அவன் போனை கட் பண்ணிட்டான்.

நான் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் ஓடிவந்து "சாமி" என்கிற வேறு ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தார். அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் என்னை "பதட்டப்படாதீங்க. உங்க நம்பரை சொல்லுங்க" என சொல்லி விட்டு என் நம்பருக்கு போன் செய்தார். ரிங் போனது. அவன் எடுத்தார். உடனே அந்த கிரைம் இன்ஸ்பெக்டர் " அய்யா வணக்கமுங்க. நான் ஒரு பிஸ்கட் கம்பனில கூலி வேலை பார்க்குறனுங்க. நான் சென்னைக்கு வந்தேனுங்க. நான் சென்னைக்கு போக வேண்டிய ஆள் நம்பர் அதுல இருக்குதுங்க. கொஞ்சம் நீங்க எங்க இருக்கீங்கன்னு சொன்னா நான் வந்து நம்பர் வாங்கிப்பேனுங்க. என் கைல முன்னூத்து சொச்சம் பணம் இருக்குதுங்க. அதையும் தர்ரேங்க. அந்த போனும் நீங்களே வச்சுகுங்கய்யா. புண்ணியமா போவுமுங்க" என சொல்ல அந்த மனமிளகிய திருடன் "அய்யய்யோ நான் பாண்டிபசார்ல பக்கத்துல சத்யா பசார்ல இருக்கேனே. சரி காசோட வாங்க"ன்னு சொல்ல அதற்கு அந்த இன்ஸ்பெக்டர் "அடடே பாண்டிபசாருங்களா, அங்க என் நண்பர் இருக்காருங்கய்யா, கொஞ்சம் இருங்க அவரு நம்பரை கான்பரன்ஸ்ல போடுறேன். அவரு ஒரு குடை யாவாரிங்க, அவரு கிட்ட கொடுத்துங்கய்யா" என சொல்ல அந்த திருடனும் சரி என்றான்.

உடனே நம்ம இன்ஸ்பெக்டர் கொஞ்சம் இருங்கன்னு சொல்லி அவனை ஹோல்டுல போட்டுட்டு வேற நம்பருக்கு போன் செஞ்சாரு " பாண்டிபஜார் கிரைம் இன்ஸ்பெக்டர் அய்யாங்குளா. நான் எக்மோர் ஆர் பி எஃப் கிரைம் இன்ஸ்பெக்டர் சாமி பேசுறேங்க.வணக்கமுங்க அய்யா. இப்ப லைன்ல ஒரு அக்யூஸ்டு ஹோல்டுல இருக்கான். இப்ப உங்க பேரு தொரைசாமிங்கய்யா, குடையாவாரி. அவன் அங்க பக்கத்திலே சத்யா பசார்ல இருக்கான், செல்போன் தீஃப்ய்யா அவன். அனேகமா ஒரு பத்து செல்போன் அவன் கைல இருக்கும். இருங்க அவனை கான்பரன்ஸ்ல போடுறேன். அவன் அடையாளம் கேட்டுட்டு போய் அள்ளுங்கய்யா, நானும் அங்க வர்ரேன்" என சொல்லிவிட்டு அவருடன் லைன் கொடுத்தார்.

பின்னர் அந்த பாண்டி பஜார் இன்ஸ்பெக்டர் " அய்யா வணக்கமுங்க. நான் தொரசாமிங்கய்யா. கொடை யாவாரிங்க. அய்யா அடையாளம் சொன்னா வந்து வாங்கிபனுங்கய்யா" என சொல்ல அவன் அடையாளம் சொல்ல .... பின்னர் அந்த இன்ஸ்பெக்டரிடம் இருந்து நம்ம இன்ஸ்பெக்டர் கிட்டே போன் வந்துச்சு. இவர் எல்லாத்துக்கும் "உம் உம் சரிங்கய்யா சரிங்கய்யா" என சொல்லி விட்டு என்னிடம் ஒரு பேப்பரில் ஒரு அட்ரஸ் எழுதி கொடுத்து விட்டு இங்க இருக்கும் உங்க போன் அங்க போய் வாங்கிகுங்க" என சொன்னார். அப்போது மணி மாலை 3 மணி. ஒரு மணி நேரத்தில் நான் அங்கே போய் இடம் தேடி வாங்கிட்டு ரயிலை பிடிக்க முடியாது என்பதால் ரயில் ஏறிவிட்டேன். மயிலாடுதுறை போனதும் சென்னையில் இருக்கும் யாரிடமாவது பேசி வாங்கலாம் என அரை மனதுடன் ஏறிவிட்டேன்.

இதிலே என்ன ஒரு கூத்துன்னா பாண்டிபசார் இன்ஸ்பெக்டர் ஜீப்ல அங்க ரெண்டே நிமிஷத்திலே போயிட்டாரு. இவன் சொன்ன அடையாளத்திலே அவனை நோக்கி போகும் போதே செல்போன்கள் இருந்த பையை விற்க வந்த கடையிலேயே போட்டு விட்டு ஓடிட்டான். அவனை பிடிக்க வந்த இஸ்மாயில் என்னும் கடைக்காரரை கீழே தள்ளிவிட்டு ஓடிட்டான். கிட்ட தட்ட இருபது செல்போன்கள்.

அந்த இஸ்மாயில் கிட்டே பாண்டிபசார் இன்ஸ்பெக்டர் கிடைத்த எல்லா செல்போன்கள் மாடல் மற்றும் பெயர்கள் எல்லாம் எழுதி வாங்கிட்டு எல்லா போனுக்கும் அதிலே இருக்கும் எதுனா நம்பருக்கு போன் செஞ்சு செல்போன் ஓனர் யார்ன்னு கேட்டு ஒப்படைத்து அவங்க கிட்டே கையெழுத்து வாங்கிட்டு அதை என் கிட்டே கொண்டு வந்து கொடுக்கனும் என சொல்லிட்டு போயிட்டார்.

அந்த இஸ்மாயில் என் போன்ல இருந்த முதல் நம்பராக இருந்த "அப்துல்லா" நம்பருக்கு போன் செய்ய அது ஸ்விட் ஆஃப் ஆகி இருந்தைமையால் அவர் வேறு நம்பரை தேட அதிலே நம் நண்பர் பதிவர் காரைக்கால் இஸ்மாயில் பெயரை வைத்து இருக்க "அடடே நம்ம பெயரா இருக்குதே" என நினைத்த இஸ்மாயில் அந்த பதிவர் இஸ்மாயில்க்கு போனை போட்டு "இது யார் போனுங்க" என கேட்க இது "அபிஅப்பா" போன் என சொல்ல அதற்கு அந்த இஸ்மாயில் "அப்படியாங்க. இது திருட்டு போய் கிடைச்சுது. அவரு கிட்ட சொல்லி என் கிட்ட வந்து வாங்கிக்க சொல்லுங்க" என சொன்னதும் நம்ம பதிவர் இஸ்மாயில் என் நண்பர் என்பதால் என் மனைவி நம்பருக்கு மயிலாடுதுறைக்கு போன் செய்து "அண்ணி, அபிஅப்பா செல்போன் ரயில்வே ஸ்டேஷனில் திருட்டு போச்சுது. அது பாண்டி பசார்ல இன்ன அட்ரஸ்ல இருக்குது. போய் வாங்கிக்க சொல்லுங்க" என சொல்ல உடனே என் மனைவி  சென்னையில் இருக்கும் என் அண்ணன் சம்மந்தம் என்பவருக்கு போன் செய்து விஷயம் சொல்ல நான் இரவு பத்து மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும் முன்ன என் போன் கிடைத்து விட்டது. ஆனால் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை. இன்னும் இரண்டு நாளில் நான் மீண்டும் சென்னைக்கு போனதும் தான் என் கைக்கு வரும்.

நான் சாமி என்னும் ஆர் பி எஃப் கிரைம் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து நன்றி சொன்னேன். அதற்கு அவரு "சார், காலை முதல் செல்போனை குறிவச்சு ஒருத்தன் அடிச்சிருக்கான். ஆனா வந்து யாரும் தைரியமா ஒரு புகார் எழுதி தரலை. ஏன்னா பயம். கோர்ட் கேஸ்ன்னு ஆகுமேன்னு பயம். பின்ன எப்படி நாங்க எங்க போய் தேடுவது. பாருங்க இப்ப பாதிக்கப்பட்டவங்க எல்லாரும் புகார் கொடுத்தா நாங்க இன்னிக்கு பிடிச்ச 20 செல்போனையும் அந்த புகார் செஞ்சவங்களுக்கு திருப்பி கொடுத்திருக்கலாம். போலீசார் உங்கள் நண்பன்னு ஏன் இன்னனும் நினைக்காம இருக்காங்க மக்கள்? நன்றில்லாம் வேண்டாம். இனிமே இது போல அலட்சியமா இருக்காதீங்க." என சொன்னார்.

நிஜமாகவே போலீசார் மக்களின் நண்பர்கள் தான்! வாழ்க காவல்துறை! மிக்க நன்றி! மிக்க நன்றி!

January 23, 2012

இதை எல்லாம் "ஜொள்ளி"த்தான் புரிய வைக்கனும்!!!

முன்குறிப்பு:


எனக்கு இன்னிக்கு என்னவோ ரவாதோசையை தேடித்தேடி வருது மனசு. ஏற்கனவே நான் ரவாதோசைக்காக நாத்திகனா ஆக இருந்த கதை கூட சொல்லியிருக்கேன். அதை படிக்க இங்க அமுக்குங்க. சமீபத்திலே மாயவரத்தான் ஒரு பதிவு போட அதிலே நான் போட்ட ஒரு பின்னூட்டமே இந்த பதிவு. பின்ன பத்து நாள் முன்ன கூட நண்பர் பெனாத்தலார் ரவாதோசையை ரொம்பவும் சிலாகிக்க இந்த பதிவை வார்ப்பதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்:-))


*************


இந்த ரவா தோசை இருக்கே ரவா தோசை, இதை பொதுவா வீட்டில் வார்ப்பது மிகவும் அரிது. ஹோட்டலில் தான் கிடைக்கும். இப்போது எல்லாம் ரவாதோசை மிக்ஸ் கிடைக்கின்றது எனினும் அப்போதெல்லாம் 80 களில் அதல்லாம் கிடையாது. ரவா தோசை கிடைக்கும் கடைகளில் சிலது மாத்திரம் ஸ்பெஷல். அதில் ஒன்று தான் மாயவரத்தில் இருக்கும் மயூராலாட்ஜ் ஹோட்டல். இரண்டு கடைகள். அதிலே ஒன்று ரயில்வே ஜங்ஷனில் இருந்து வெளியே வந்தவுடன் இருக்கும் மற்றும் ஒன்று மாயவரம் கடைத்தெருவில் ஏ ஆர் சி ஜுவல்லரிகள் எதிரே ராமூர்த்தி அய்யர் இரும்பு கடைக்கு பக்கத்தில் இருக்கும். இரண்டுமே பிரமாதம் தான் ரவாதோசைக்கு. செங்கோட்டை பாசஞ்சரோ, போட்மெயிலோ மாயவரத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமா நிற்குதே என்ன காரணம் என கேட்டா மயூரா ரவா தான் காரணம். ரயிலை நிப்பாட்டி விட்டு ஓடி வந்து பார்சல் வாங்கி போகும் இஞ்சின் டிரைவர்களும் டி டிக்களும் அனேகம் பேர். அத்தனை ஒரு பேர் அந்த ரவாதோசைக்கு.

ரவாதேசைக்கு உலகிலேயே ஒரு சிறப்பு என்னான்னா, மாவு தோசை மாதிரி ஒரே நேரத்தில் கரைத்து பக்குவமா வைக்க முடியாது. மாவு தோசை முதல் தோசை நல்லா இருந்துச்சுன்னா கடைசி தோசை வரை நல்லா இருக்கும். முதல் தோசை என்ன ருசியோ அதே தான் கடைசி தோசை வரைக்கும். ஆனால் இந்த ரவா தோசை இருக்கே அது ஒரு ஒரு நான்கு அல்லது ஐந்து பேருக்கும் அதாவது அப்போது டேபிளில் இருக்கும் ஆர்டர் எத்தனையோ அத்தனைக்கு உண்டான மாவு மாத்திரம் அவ்வப்போது கரைக்கப்படும். அதனால் சாதா மாவு தோசை போல முதலில் கரைக்கும் போது மட்டும் கேர்புல்லா இருந்துட்டு பின்னே மாஸ்டர் பார்துப்பாருன்னு விட முடியாது. ஒரே நேரத்தில் முதல் டேபிளில் சாப்பிடும் ரவாதோசைக்கும் கடைசி டேபிளில் சாப்பிட்டு கொண்டிருக்கும் தோசைக்குமே சுவை மாறித்தொலையும் அபாயம் உண்டு.

ஆனால் மயூரா ரவா தோசை அப்படி இல்லை. ஒரே டேஸ்ட் அன்றைக்கு முழுவதும் இருக்கும். இது மயூரா ரவாதோசையின் சிறப்பு. ரவா தோசை சிலருக்கு முறுகலா பிடிக்கும், சிலருக்கு பதமா பிடிக்கும். ஆனால் என்னைப்போல வித்யாசமான சிலருக்கு ரெண்டு விதமாகவும் பிடித்து தொலைக்கும். அதனால் மயூராவில் எனைப்போல கிறுக்கன்களுக்கு என பிரத்யோக பார்முலா உண்டு. தோசையை வார்த்த பின்னே தனியே கொஞ்சம் மாவெடுத்து நட்ட நடுவே அதன் மேல் ஊற்ற வேண்டும். அந்த இடம் பதமாகவும் ஓரத்தில் முறுகலாகவும் இருக்கும்.

அதிலேயும் ஒரு குழப்பம். ரவா தோசையை ரவுண்டாக வார்க்க முடியாது. இந்தியா மேப் போல வரும். இலங்கை போல வரும், அவ்வளவு ஏன், எண்பதுகளில் அமரிக்க விசாவுக்கு அப்ளை செஞ்சுட்டு கால் கடுக்க நின்று அது ரிஜக்ட் ஆன விரக்தியில் செங்கோட்டை பாசஞ்சரில் வரும் நபர்களுக்கு அமரிக்கா மேப் போலவும் வரும். எம்பசியில் கிடைக்காத அமரிக்கா எங்கூர்ல கிடைக்கும். அதிலே எங்கே "நடு செண்டர்" பார்த்து மொத்தமாக்குவது? அதையும் செய்வாரு அந்த மாஸ்டர்:-))

அதிலே சிலருக்கு நெய் ஊற்றினால் பிடிக்கும். ஆனால் மிதமிஞ்சி இருக்கவும் கூடாது. திகட்டி விடும் அபாயம் உண்டு. அதையும் பதமா ஊற்ற வேண்டும். வார்த்து முடித்து அதற்குண்டான நேரத்தில் அதை புரட்டி போட்டு தோசை திருப்பியால் அதை பாசமுடன் வருடிக்கொடுத்து தோசைக்கல் மேலேயே அதை குடும்பக்கட்டுப்பாடு சின்னமாக்கி அதை வாழையிலையில் வைத்து அந்த வாழையிலையை ஒரு எவர்சில்வர் தட்டில் வைத்து நம் டேபிள்க்கு கொண்டு வந்து ஒரு சுத்து சுத்திவிட்டு சர்வர் நம்மை பெருமையாக பார்க்கும் போது நமக்கு எச்சில் ஊறி தாவங்கட்டை வலிக்கும்.

அதன் ஜோடியாக சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் வாளியை தூக்கி வந்து டேபிளில் வைக்கும் போது அந்த இந்தியாவுக்கோ, அமரிக்காவுக்கோ எல்லைப்பிரச்சனை எதும் இல்லாதபடி முறுகல் எல்லாம் பிய்த்து விழுங்கி இருப்போம்.

"அது என்ன அந்த சாம்பாரில் சின்ன வெங்காயத்தை முதலில் வேக வைத்து போட்டீங்களா சார், பார்க்கும் போது முழுசா இருக்கு தொட்டால் கரைந்து போகுது" என சர்வரை கேட்கும் போது அவர் முகம் வெட்கத்தால் சிவக்கும். ரவாதோசையின் சீரகமும், கருவேப்பில்லையும் என்னவோ ஒத்துமையான புருஷன் பொண்டாட்டி மாதிரி அத்தனை ஒரு ஒட்டுதல். கூடவே சின்ன வெங்காய சாம்பாரும் பக்குவமா இருந்திட்டா ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் தான்.

கூட வரும் கெட்டி சட்னி (தேங்காய் சட்னி)யும் , தக்காளி கார சட்னியும் சரியான பக்கவாத்தியம்... இல்லை இல்லை பக்கா வாத்தியம் போங்க... சார் சிலதை சொல்லி புரியவைக்கலாம். ஆனால் மயூரா ரவாவை "ஜொள்ளி"த் தான் புரிய வைக்க வேண்டும்!

January 14, 2012

இட்லி, நெய் ஜீனி - போகி ஸ்பெஷல்... 14.01.2012


" தம்பி என்னடா பண்ணிகிட்டு இருக்க?"


"அப்பா, வெயிட்டிங் ஃபார் குளிச்சிங்"


@ " ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகன் இங்கிலிபிஸ்
பேசுறான் எனக்கேட்ட டேடி"


=================================================


படம் ஆரம்பிச்ச உடனே ஒரு ஜெயிலை காட்டுறாங்க. அதிலே தாடிவச்ச ஒரு கெட்டத்தனமான குற்றவாளி. அவன் நல்லா மொழு மொழுன்னு பச்சையா ஷேவ் செஞ்ச நம்ம ஹீரோ பரத் என்னும் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு அனியாயமாக ஜெயிலில் இருக்கும்(அப்படித்தானே?) அப்பாவி கிட்டே வீணா வம்பு செஞ்சு அடிக்கிறான். நம்ம ஹீரோ எவ்வளவோ அமைதியா இருந்தும் நாம் எல்லாம் சீட்டு முனைக்கு வந்து "திருப்பி அடி திருப்பி அடி"ன்னு கத்துவதை காதில் வாங்கி திருப்பி அடிக்கிறார். செம அடி. கெட்டவன் ஒரு கம்பி பந்தை எடுத்து பரத் மேல அடிக்க அந்த கம்பி பந்து பரத் கண்கிட்டே வரும் போது நாம எல்லாம் பயந்து போய் அழ ஆரம்பிக்க அதை ஒரே உதையா உதைச்சு அது ஒரு தென்ன மரம் உயரத்துக்கு பறந்து போய் எலக்ட்ரிக் கம்பத்திலே பட்டு ஜெயில்ல ஒரே தீப்பொறி பறக்குது. கெட்டவன் தோத்துட்டான்.

உடனே பாட்டு பாடுறாங்க. ஹீரோவை சுத்தி சுத்தி எல்லா நல்ல குற்றவாளிகளும் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். ஒரு கட்டத்திலே ஜெயிலர் கூட தன்னை மறந்து ஆடிகிட்டு இருக்காரு. பிறகு அவர் "தான் ஒரு ஜெயிலர்" என்பதை நினைவு கொண்டு நாக்கை கடித்து கொண்டு ஆட்டத்தை நிப்பாட்டிகிறார். இங்க தான் டைரக்டர் நிக்கிராரு.

@ ஆண்டவா, சன் டிவியிலே இப்பதான் அந்த படம் ஓடிகிட்டு இருக்கு. இன்னிக்கு பொழுது ரொம்ப பிரமாதமா இருக்கும் போலிருக்கே எனக்கு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

=========================================================

மார்கழி ஆரம்பிச்ச முதல் நாள் முதலே வாசலில் இருக்கும் புல் எல்லாம் செதுக்கி தர சொல்லி அபிஅம்மா அழாத குறை தான். எனக்கு தான் இணைய சண்டை போடவே நேரம் சரியா இருக்கு. இதிலே எங்க புல் எல்லாம் வெட்டுவது? அப்படியே புல் செதுக்கி கொடுத்தாலும் காபிபொடியை காயவைத்து அதான் பிரவுன் கலர், செங்கல் நுனுக்கி அதான் செங்காமட்டை கலர், அப்பா வேட்டிக்கு போடும் நீலத்தை எடுத்து கோலமாவுடன் கலந்து அதான் நீலகலர் என என் அக்காக்கள் சின்ன வயசிலே கோலம் போடுவது போல போடவா போறாங்க. போன வருஷம் ஒரு கோலம் போட்டாங்க. அதன் கீழே வெல்கம் என எழுதியும் வச்சிருந்தாங்க. "அடடே வாத்து நல்லா வருதே உனக்கு" என பாராட்டியது தப்பா? அதிலிருந்து படம் கோலம் எல்லாம் இல்லை, ஒன்லி புள்ளி கோலம் தான் என தீவிர முடிவுக்கு வந்துட்டாங்க. மயிலை பார்த்து வாத்து என சொன்ன என் தவறான புரிதலுக்காக என்னை பார்த்து பதிலுக்கு "வாத்து" என திட்டுவதை என்னால் சகிச்சுக்க முடியலை. அதனால் தான் இந்த வருஷம் புல் செதுக்கி தரவில்லை.

======================================================

இருந்தாலும் மனசு வரலை. போனால் போகுதுன்னு இன்று காலை மண்வெட்டி எல்லாம் எடுத்து புல் செதுக்க ஆரம்பித்தேன். வியர்த்து போனது. பின்னர் ஒரு டீ போட சொல்லி குடித்து விட்டு செதுக்க ஆரம்பித்தேன். அப்பவும் வியர்த்தது. கை எல்லாம் குடைந்தது. பின்னர் ஒரு காம்பிளான் போட சொல்லி குடித்தேன். திரும்பவும் செதுக்கிய போது நெஞ்சு எல்லாம் லைட்டா வலிப்பது போன்ற பிரம்மை. என் சிக்ஸ் பேக்குடன் நிமிர்ந்து என் நெற்றி வியர்வையை வழித்து நிலத்தில் போட்டேன். ஹாலில் ஏதோ லோக்கல் சேனலில் படையப்பா ஓடியது. "வயசானாலும் உன் ஸ்டைலும் இளமையும் இன்னும் அப்படியே தான் இருக்கு" என அப்பாஸ் சொல்லிகிட்டு இருந்தார். ஊக்கும்.... "நீ புடுங்கினது போதும்" என மண்வெட்டியை தூக்கி போட்டு விட்டு எங்கயாவது இணைய சண்டை இருக்கான்னு பார்க்க வந்துட்டேன்.

==================================================

கிரிக்கெட் பார்க்கலாம் என நினைத்து ஸ்டாருக்கு போனேன். எப்போதும் போல இந்தியா அருமையாக போராடிக்கொண்டு இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் டெண்டுல்கர் வந்து 100 வது சதம் அடிக்க போகின்றார் என எப்போதும் போல 100 கோடி பேரும் எதிர்பார்க்க போறாங்க. மதியம் எல்லா டி வியிலும் நாளை எல்லா பேப்பரிலும் "டெண்டுல்கர் ரசிகர்களை ஏமாற்றினார்" என்றே வரும். எனக்கு அதிலே புரியாத விஷயம் இதான். ஏன் ஒருவருமே "டெண்டுல்கர் ஏமாந்தார்"ன்னு மட்டும் எழுத மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்கன்னு தான் தெரியலை. என்னவோ அவருக்கு மட்டும் ஏமாற்றம் இல்லை என்பது போலவும் என்னவோ ரசிகர்களை அவர் வேண்டுமென்றே ஏமாற்றி கொண்டு இருப்பது போலவும் ......

========================================

முதல்வர் அம்மா இலவச வேட்டிசேலை எல்லாம் பொங்கல் முதல் கொடுக்க ஆரம்பித்து தமிழ் புத்தாண்டுக்குள் கொடுத்து முடிக்கப்படும் என அறிவித்து இருக்காங்க. ஆக நாளை காலை முதல் மாலைக்குள் ஒரே நாளில் கொடுத்து முடிப்பாங்க போலிருக்கு. செம சுறு சுறு தான். இதே சசிகலா கூட இருந்த போது இத்தனை ஒரு சுறுசுறுப்பு அம்மாவிடம் இல்லை. சோ வந்தவுடன் தான் ஆட்சி களைகட்டுது. வாழ்க "சோ" வளர்க அவர் புகழ். இன்னிக்கு துக்ளக் ஆண்டு விழா நடக்க போகுதாம். வழக்கம் போல "டோண்டு"சார் முதல் ஆளா போய் உட்காந்து வந்து பதிவு போடுவார். அவருடைய பதிவுக்கு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில் "காண்டு"கஜேந்திரன் பதிவுக்கு அதிபயங்கர எதிர்பார்ப்பும் இணைய உலகில் இருக்கு. இருவரும் மனசு வச்சு நல்ல பதிவா தரனும். பார்ப்போம்...

=========================================

எல்லோரும் வீட்டை போகியின் காரணமாக சுத்தம் செஞ்சுகிட்டு இருக்கும் போது நட்ராஜ் மட்டும் கருமமே கண்ணாயினாராக தன் சைக்கிள், தன் விளையாட்டு பொருட்கள் எல்லாம் சுத்தம் செய்தது பார்க்க சந்தோஷமாக இருந்தது. அவன் அம்மா "உன்னுது மட்டும் தான் சுத்தம் செய்வியா மத்த பொருட்கள் எல்லாம் சுத்தம் செய்ய மாட்டியா" என கேட்டு தொலையாமல் இருந்திருக்கலாமோ. அபிஅம்மாவின் செல் போனையும் கழுவி காயவைத்து விட்டான். தேவையா இது? ஆனால் நான் சூப்பர். அதிகமாக தொல்லை கொடுக்காமல் தரையை துடைக்கும் போது காலை தூக்கி நாற்காலி மேல் வைத்துப்பதும், ஃபேனை துடைக்கும் போது ஸ்விட்ச் எல்லாம் போடாமலும், வெற்றிலை போட்டு சீவலை தரையில் கொட்டாமலும் ரொம்ப சமத்தா இருந்தேன். ஏன் என்னை போல இருக்க தெரியலை நட்ராஜுக்கு? இன்னும் சின்ன குழந்தையாவே இருந்தா என்ன அர்த்தம்? என்னை பார்த்து திருந்துடா மொவனே!

=============================================

இந்த பொங்கலுக்கு "நண்பன்" பார்த்துடலாம்னு இருந்தேன். ஆனா இணையம் முழுக்க "படம் நல்லா இருக்கு"ன்னு படம் காட்டுவதை பார்த்தா பயந்து வருது. இவங்க எல்லாம் படம் நல்லா இருக்குன்னு சொன்னா அந்த படம் "பப்படம்" ஆவதும் "உவ்வே"ன்னு சொன்னா படம் நல்லா இருந்து தொலைப்பதும் இஸ்ட்ரியாகிப்போச்சு. என்ன செய்வது இவங்க ராசி அப்படி. இப்படித்தான் ஓரிருவர் தவிர மௌனகுருவை அதிலும் கதாநாயகன் நடிப்பை சொதப்பல் என எழுதியதை பார்த்து மிரண்டு போய் இருந்தேன். ஆனால் படம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அந்த கேரக்டர் அதுக்கு போல என்ன மௌனராகம் கார்திக் மாதிரியா நடிக்க முடியும். நல்ல அழுத்தமான நடிப்பு. அவர் மு க தமிழரசு பையன் என்பதல் சத்தியமாக இப்படி சொல்லலை. நிஜமாவே நல்லா இருந்துச்சு படமும், பையன் நடிப்பும். அதனால் தான் நண்பன் பார்க்க பயந்து வருது. விதி வலியது... பார்க்கத்தான் போகிறேன்.

=================================================


"அப்பா மாட்டுப்பொங்கலுக்கு மாடு வாங்கனும்ப்பா" - இது நட்ராஜ்

"அப்பா பொங்கல் அன்னிக்கு 'நண்பன்" படம் போலாம்ப்பா - இது அபி

"பொங்கல் வேட்டி சேலை எப்போ தருவாங்கன்னு தெரியலையே... இட்லி பானைக்கு துணி மாத்தனும், தலகாணிக்கு கவர் போடனும், ஜன்னல் ஸ்க்ரீன் போடனும் - அஃப்கோர்ஸ் அபிஅம்மா

"மாட்டு பொங்கலுக்கு வீட்டு தெய்வத்துக்கு படைக்கனும்" - இது நான் நானே தான். ஏன்னா அதிலே ஒரு விஷயம் இருக்கே:-))

அவரவர் கவலை அவரவர்களுக்கு!

அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு, பொங்கல், உழவர் தின ,திருவள்ளுவர் தின மற்றும் "விடுமுறை தின" வாழ்த்துக்கள்.

January 2, 2012

அடடே இந்த பதிவை இப்படி கூட எழுதலாம்! ஈரோடு பதிவர் சங்கமம் - சில சங்கடங்கள்....

!

நான் ஈரோடு சங்கமம் சென்று வந்தேன். எனக்கு அங்கே பிடித்தது மிக்க மகிழ்வான உணவு. நான் ஈரோடு வந்தது முதல் விடைபெறும் வரை அருமையான உபசரிப்பு.

இப்படியாக கூட எழுதலாம். ஆனால் நான் போன வருடம் கடைசியில் எழுதிய பதிவு... ம் ம் ம் கொஞ்சம் காரம் தான் போலிருக்கு. சரி வேற மாதிரி கூட எழுத முயற்சிக்கிறேனே!

ஈரோடு பதிவர் சங்கமம்! சில சங்கடங்கள் பார்ட் 2

நாங்கள் போய் வந்தோம். மிகவும் அருமையான ஒரு நிகழ்வு. நானும் கூட அது பற்றி ஒரு பதிவு எழுதினேன். நீண்ட நாட்கள் பின்னர் நான் பதிவு எழுதுவதாலோ அல்லது இந்த சங்கமம் பற்றிய பல நிகழ்வுகள் எழுதியதாலோ நிறைய பின்னூட்டம் வந்தது. மிக்க மனம் மகிழ்வு. "இது போல எழுதி தொலைச்சால் என்ன? " என்று மும்பை அனுஜன்யா குறைபட்டுக்கொள்ளும் அளவு கூட இருந்து தொலைச்சுது.

அதன் பிறகு என்னிடம் நான் அங்கு வந்தமைக்காக சில ஈரோடு குழும பதிவர்கள் நன்றி சொல்லி பேசிய போது கிட்டதட்ட கொல்லிமலை செந்தில்குமார் பதிவு வந்திருந்தது. அதில் நான் படித்த போது கூட எனக்கு எதும் "ரைட்டா" தெரியவில்லை எனும் போதிலும் "தப்பா"வும் எதும் தெரியலை. ஏன்னா நான் பதிவுலகில் மிகவும் கருத்து வேறுபாடு கொண்ட ஜோதிடர் ஆர் கே சதீஷ்குமார் அது தவிர வக்கீல் நாண்டு நொரண்டு ஆகியோர் வரவில்லை என தெரிந்த போது கூட நான் " அட ஒரு வீட்டு கல்யாணம்னா சில சித்தப்பா பெரியப்பா 'எனக்கு நேரில் வந்து சொல்லலை"ன்னு கோவிப்பாங்களே அது போல இருக்கும்" என கூட கருத்து சொன்னேன் தொலைபேசியில்.

பின்னர் அங்கே விருது வாங்கின உண்மை தமிழன் பதிவை படிக்கும் போது எங்கோ என் மனசில் ஓடிய ஒரு நெருடல் என்னை இடிக்க ஆரம்பித்தது. உண்மைதமிழன் சரவணன் " நீ ஏன் வரவில்லை?" என சஞ்சய் கிட்டே கேட்க " எனக்கு ஏன் தரவில்லை" என்ற சஞ்சய் கேள்வி மிக்க சரி தான் என எனக்கு பட்டது. ஆமாம் அப்போது தான் நான் எனக்கே கேட்டுக்கொண்டேன். " எனக்கு ஏன் தரவில்லை?"

தமிழ்மணம் விருது கொடுக்குறாங்கன்னா அது ஓட்டு போடுதல், பின்ன மீண்டும் ஓட்டு போடுதல், பின்ன பதிவர்கள் சிலரை வச்சு நடுவர்... அதன் பின்னே அபிஅப்பாவை நிராகரித்தல் என இந்த 3 வருஷமா போய்கிட்டே இருக்கும் போது... இங்கயுமா அந்த மாதிரி என்னும் எரிச்சல்...

மீண்டும் மீண்டும் நான் பேசிய போதெல்லாம் இது ஒரு குழு எடுத்த முடிவல்ல. ஒரு தனி நபர் எடுத்த ஒரு முடிவு என்றும் புரிந்தது. இதே இதற்கு முன்னர் எழுதிய பதிவில் பரிசல் பெயரை கூட தவறாக குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும். அதற்கும் பரிசலுக்கும் சம்மந்தம் இல்லை. அது வெண்பூ பின்னூட்டம் பார்த்த பின்னர் தான் தெரிந்தது.

நான் நான்கு நாட்கள் முன்னர் இந்த பதிவு போட்ட பின்னர் கதிர் கிட்டே சொல்லிட்டு அவர் இட்ட பின்னூட்டம் இட்டு விட்டு தான் வெளியூர் போனேன். இன்று மதியம் வரும் போது பார்த்தேன். எல்லா கூத்துகளும். நான் பதிவு போட்டவுடன் அத்திவெட்டி ஜோதிபாரதி எப்போதும் போல வம்புக்காக அலைந்து கொண்டிருந்தார்:-)) ( சிரிப்பான் போட்டிருக்கேன் அவெஜோபா)

அதனால் அவருக்கு அந்த லிங் கொடுத்து விட்டு நகர்ந்தேன். அதே போல கதிர்க்கு கூட "இதை தமிழ்மணத்திலே சேர்க்க முடியலை சேர்க்க முடியுமா?" என கேட்ட போது அவர் கோவமாக சொன்ன பதில் எனக்கு சிரிப்பை தான் கொடுத்தது. ஏன்னா நான் அப்படித்தான்.

நான் மீண்டும் சொல்கிறேன். ஈரோடு சங்கமம் முதல் வருடம் அங்கே போய் வந்தவர்களால் பாராட்டப்பட்டது. எப்படி? "அங்கே உணவு நன்றாக இருந்தது" என. இரண்டாவது வருடம் "பரிசல் போன்றவர்கள் அருமையாக நிகழ்சி நடத்தினர், அத்தோடு உணவும் அருமை" ஆனால் மூன்றாவது வருடம்... விருது 15 பேருக்கு சிறந்த வலையுலக ஜாம்பவான்களுக்கு கொடுக்க போகின்றோம் என அறிவிக்கப்படவில்லை. கலந்துரையாடல் என சொன்னாலும் அது பிரதானப்படுத்தப்படவில்லை. உணவு எப்போதும் போல பிரதானப்படுத்தப்பட்டது. அப்படிபட்ட சூழலில் வருபவன் அதுக்கு தகுந்த "பிரிப்பரேஷன்"ல தான் வந்து தொலைவான் என்பது எல்லாருக்கும் பிரிந்ததே. இதை நீங்க பிரமாதப்படுத்த எதும் இல்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இங்கே இணையத்தில் இருப்பவன் எவனுமே அன்னாடம்காய்ச்சி இல்லை. அவன் மற்றவர்களை தொடர்புகொள்ளவே கூட மாதம் 500 முதல் 1000 வரை செலவு செய்யும் ஆள் தான்.(நெட் செலவை சொல்கிறேன்) அவனுக்கு கறி சோறு ஒரு பொருட்டு இல்லை. இல்லவே இல்லை. அவனவன் வந்த தூரத்தை கணக்கிட்டு பாருங்கள். அவன் போக்குவரத்துக்கு செய்த செலவிலே இதை விட அருமையாக அதே கறி சோறு சாப்பிட முடியும். ஆனால் அங்க வந்த ஒரே காரணம்.. அங்கே கிடைக்கும் அன்பு, மரியாதை, அரவணைப்பு, பதிவர்களை ஒரு சேர பார்க்கும் பாக்கியம்.... இங்கே இவனுக்கு என்ன தேவை? ஒரு கலந்துரையாடல். அவன் என்ன கருத்து எழுதினாலும் அவன் ஒரு படைப்பாளி என்னும் அங்கீகாரம் கொடுத்த தன்மை. ஆனால்.... 3ம் வருட சங்கமத்தில் அது மிஸ்ஸிங்.......

எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர் கே சதீஷ்குமார் பிடிக்காது. ஆனால் அவருடைய பதிவுகள் படிக்கும். என்னை எரிச்சல் அடைய செய்யும் அளவு ஒரு படைப்பாளி படைக்கும் அந்த எழுத்துக்கு நான் அடிமை. கிட்ட தட்ட நான் அந்த விஷயத்தில் ஒரு மாசோகிஸ்ட் போல. அதை தேடி தேடி படிப்பேன். எரிச்சல் அடைவேன். அங்கேதான் அந்த எழுத்தாளனின் திறமை இருக்கு. அந்த எழுத்தாளன் அதே ஊரை சேர்ந்தவரை கூப்பிடலை என நினைக்கும் போது.... என்னவா இருக்கும் அதன் உள்ளே இருக்கும் அரசியல் என நினைத்து பார்க்க தோன்றியது. தட்ஸ் ஆல்....

அதே தருமி சார், நான் உமாசங்கர் என்னும் ஐ ஏ எஸ் ஆபீசர் பற்றி ஒரு அரசாங்கம் எடுத்த ஒரு அஃபீசியல் முடிவு பற்றி பொங்கி எழுந்த போது நான் மட்டும் சொன்னேன்.... "சார் இது ஒரு அரசாங்கம் எடுக்கும் ஒரு சாதாரண முடிவு. இதுகெல்லாம் உணர்சி வசப்பட்டு முடிவெடுக்க கூடாது"ன்னு. அவர் சொன்ன வார்த்தைக்காக ஒரு 40 பதிவர்கள் ஒரே நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக பதிவிட நான் மட்டுமே அதற்கு எதிராக பதிவிட்டவன். அதன் காரணமாக முதன் முதலாக 40 மைனஸ் ஓட்டுகள் கூட பெற்றவன்.

இன்றைக்கு நானே என் முந்தைய பதிவில் தருமி சாருக்கு விருது கொடுக்கலாம் என சொன்னேன். ஏன்? அவருடைய திறமை! ஒரு சேர 40 பதிவர்களை திரட்டி அரசாங்கத்தை எதிர்க்கும் திறமை யாருக்கு வரும்? அதனால் அவருக்கு விருது கொடுக்க வேண்டும் என நினைத்தேன். இது தவறா? அதே நேரம் ஒரு பதிவு போட்டு அந்த 40 பேரையும் நான் எதிர்த்தேன். தகுந்த காரணங்கள் கொண்டு. அதனால் எனக்கு விருது கொடுத்து இருக்க வேண்டும். நான் கேட்பதில் என்ன தவறு? இதோ அந்த நான் போட்ட பதிவின் லிங் http://www.abiappa.blogspot.com/2010/08/ias.html

இது காமடிபீஸ் மொக்கைன்னா இப்படிப்பட்ட காமடிபீஸ் மொக்கை பதிவு போட நான் எப்போதும் தயார். இதோ... சென்ஷி... என் மீது எப்போதும் விழுந்து பிறாண்டும்.. (அதே கதிர் வார்த்தைகள்.... சென்ஷி... இதே போல ஒரு காமடிபீஸ் மொக்கை இது வரை போட்டதுண்டா? சொன்னால் நான் மொட்டை போட்டு கிட்டு வீதியூர்வளம் வரத்தயார். இல்லை எனில் நான் இது வரை போட்ட 350 பதிவிலே ஒரு 100 பதிவாவது சென்ஷி பின்னூட்டம் போட்ட பதிவை எடுத்து இங்க லிங் கொடுக்கவா? நான் மரண மொக்கை போட்டா அதுக்கு எதுக்கு பாராட்டி பாராட்டி பின்னூட்டம் போடனும்.

இதே 2007ல் இளைய நக்கீரன் என்னும் பெரியரில் ஒரு பதிவர் என்னை திட்டி ஒரு பதிவு போடும் போது திட்டின்னா பயங்கரமா இல்லை ரொம்ப சாதாரணமா " அபிஅப்பா போன்ற பதிவர்கள் எடுக்கும் வாந்திகள் இணையத்தை நாறடிக்குது" என சொன்ன ஒரே வார்த்தைக்காக இதே சென்ஷி பொங்கி பொங்கி அவரை திட்டி எழுதிய பதிவும் எல்லோருக்கும் தெரியும். அந்த லிங் வேண்டுமா? அதே சென்ஷி தான் இதே சென்ஷியா? ஆக அவரது மனோநிலை மாறிவிட்டது அல்லது இரட்டை நிலை என்பதற்கெல்லாம் நான் பதில் சொல்லதான் ஆகவேண்டுமா?

ஆக சென்ஷி என்னை தனிமனித தாக்குதல் செய்வதால் தான் பெரிய ஆளாக நினைக்கும் பட்சத்தில் நான் அதற்கு மனப்பூர்வ அனுமதி அளிக்கின்றேன். தவறே இல்லை. எப்படியாவது "கவனிக்கப்படவேண்டும்" என்னும் உன் ஆர்வம் எனக்கு புரிகின்றது என்றே பொருள் கொள்கின்றேன்.

ஆக "இணையம் முழுக்க என எடுத்து கொண்டால் அந்த 20 பேரில் நீங்க கொடுத்த சிலர் தகுதி குறைவானவர்கள். தவிர என்னை தேர்ந்தெடுக்காதது தப்பு. அல்லது நீங்க அந்த 15 பேரை முன்னமே அறிவிக்காதது தவறு! இதான் என் முந்தைய பதிவின் சாரம்சம்.

இப்ப வாங்க! நான் இதற்கு முன்ன போட்ட பதிவுக்கு கூகிள் பஸ்ல லிங் கொடுத்தவங்க... அதுக்கு சென்ஷி போன்றவர்கள் கொடுத்த பதில்கள் அதுக்கு லைக் போட்டவங்க... அதுக்கு சரியான பதிலடி கொடுத்த மணிஜி போன்றவர்கள் எல்லாரும் வாங்க.... நான் இனி 3 நாட்கள் ஆன்லைன்ல இருப்பேன்... தொடர்ந்து 24 மணி நேரமும் இருப்பேன்....
குறிப்பு: நான் இன்னும் அந்த + எல்லாம் படிக்கலை. கேள்விப்பட்டது மாத்திரமே!






October 19, 2011

மயிலாடுதுறை தீவிபத்து!!!

இன்று மாலை ஒரு 6.30 இருக்கும். மயிலாடுதுறை கொத்ததெரு தம்பிக்குநல்லான் பட்டிணம் வாக்குசாவடியில் வாக்குப்பதிவு எல்லாம் முடிந்து வாக்கு இயந்திரம் சீல் எல்லாம் வைத்து விட்டு அதை சேகரித்து போகும் லாரி வருகைக்காக எல்லா கட்சியினரும் காத்து கொண்டு இருந்தோம். எப்போது வண்டி வரும் என யாருக்கும் தெரியாது. ஒரு முறை இரவு 3 மணிக்கு கூட வந்து சேகரித்து சென்றது. அது வரை எல்லா கட்சியினரும் கட்சி பேதம் இன்றி ஒன்றாக டீ சாப்பிடுவதும், எத்தனை சதவீதம் பதிவு ஆனது என்கிற இன்ன பிற விஷயங்கள் பேசிக்கொள்வதுமாக இருப்பர். அதுவும் அந்த எங்கள் வார்டு கொஞ்சம் பதட்டம் வாய்ந்த வார்டு. . திமுக நகரசெயலர் குண்டாமணி என்கிற செல்வராஜும் அதே வார்டு வேட்பாளர். அதே போல அதிமுக நகர செயலர் செந்தமிழனும் அதே வார்டு . செந்தமிழனின் சகோதரி தான் நகர்மன்ற தலைவர் வேட்பாளர் அதிமுகவுக்கு. அதனால் எல்லோருமே அங்கே நின்று கொண்டு இருந்தனர். அப்போது தான் என் தம்பி செல்லிடபேசியில் ஒரு அழைப்பு வந்தது. கம்பனி ஆள் தான் பேசினான். "சார், நான் பெரியகடை தெருவில் தான் இருக்கேன். இங்கே ஜனதா ஃபுட்வேர் கடையில் தீ பிடித்து விட்டது, இப்ப தான் அதில் உள்ளே இருப்பவர்கள் வெளியே ஓடி வந்து கொண்டு இருக்கிறார்கள்" என சொன்ன போது அங்கிருந்த எல்லோருக்கும் கிட்ட தட்ட அதே நேரத்தில் அதே போல அழைப்பு.

மற்ற ஊர்களை போல அல்ல மயிலாடுதுறை. மிகப்பெரிய ஊர் எல்லாம் இல்லை. ஆனால் சுற்று வட்டார டெல்டா விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே டவுன் இது தான். கடைதெரு என பார்த்தால் இரண்டே தெரு தான். ஒட்டு மொத்த நெரிசலும் அங்கே தான் இருக்கும். அதே தெருவில் தான் மாயவரத்து மகா பெரிய ஜவுளி கடைகளும், உலகப்புகழ் பெற்ற ஏ.ஆர். சி நிறுவன நகைக்கடைகளும், பெரிய மளிகை கடைகளும் , ஹோட்டல்களும், இரும்பு கடைகளும், வெடிக்கடைகளும் என கலந்து கட்டி இருக்கும். சுற்று வட்டார எல்லா மக்களும் அங்கே தான் தீபாவளி வியாபாரம் செய்ய வந்திருப்பர். அதும் இன்று நகரத்தில் தேர்தல் நாளாகியதால் காலையில் ஓட்டு போட்டு விட்டு அரசாங்க விடுமுறையை குடும்பத்துடன் உல்லாசமாக கழித்து தீபாவளி "பர்சேஸ்" முடித்து கொண்டு போகலாம் என கடைத்தெருவே ஒரே கூட்ட நெரிசல்.

எள் போட்டால் எள் எடுக்க முடியாது என்பார்களே அப்படி ஒரு கூட்டம். நான் மதியம் அந்த பக்கம் போன போதே அப்படி ஒரு கூட்டம். அதும் தீப்பிடித்ததாக சொல்லப்படும் இந்த கட்டிடம் ஜனதா செருப்புகடை ஒரு மூன்று மாடி கட்டிடம். கேரளாவில் இருந்து பிழைப்புக்காக மாயவரம் வந்த இஸ்லாமிய சமூகத்து மக்கள். ஒரு சின்ன டீக்கடை ஆரம்பித்து இன்று இந்த அளவு முன்னேறி வருபவர்கள். நல்ல உழைப்பாளிகள். அதிலே தீப்பிடித்தால் என்ன ஆகும்? வரிசையாக கடைகள். அதும் பக்கத்து பக்கத்து கடைகள் எல்லாம்... நாகோடா ஜூவல்லரி, கல்யாணி கவரிங் என கடைகள், தவிர பெரியநாயகி மளிகை என்னும் பெரிய கடை, வாசன் காபி தூள் போன்ற கடைகள். அதன் இடது பக்கமோ மிகப்பெரிய "கறார் ஜவுளி கடை" . எதிர் வரிசையில் ஏ ஆர் சி கடைகள் என வரிசையாக கடைகள்.

கடைகள் போகட்டும், அதில் உள்ளே இருக்கும் மக்கள் கதி என்ன என்ற பதட்டம் இங்கே பூத்தில் இருக்கும் ஒட்டு மொத்த அரசியவாதிகளையும் ஆட்டிவிட, ஓட்டு பெட்டியாவது ஒன்றாவது என போட்டு விட்டு எல்லோரும் அங்கே ஓடினர். நான் வீட்டுக்கு வந்து பின்னே அங்கே போகலாம் என நினைக்கும் போதே அமரிக்காவில் இருந்து மயிலாடுதுறை சிவாவின் தொலைபேசி. அடுத்து சீமாச்சு அண்ணன், அண்ணி என வரிசையாக தொலைபேசிகள். இவர்களுக்கு எப்படி அதற்குள் தெரியும் என நான் நினைத்து கொண்டிருக்கும் போதே பதிவர் மயில்ராவணனிடம் இருந்து தொலைபேசி. சரியென நினைத்து கலைஞர் செய்திகள் வைத்தால் அதில் பிளாஷ் நியூஸ் என ஓடுகின்றது. அதற்குள் குடந்தையில் இருந்து என் அக்கா விடம் இருந்து தொலைபேசி. கலைஞர் செய்திகளில் "மயிலாடுதுறை பெரிய கடை வீதியில் மூன்றடுக்கு வணிக வளாகத்தில் தீ... உள்ளிருக்கும் மக்களின் ஓலம். ஒரு தீயணைப்பு வண்டி மட்டுமே இருப்பதால் தீயை அணைக்க சிரமம்...." இப்படியாக செய்தி ஓடுகின்றது. ஆன்லைனில் முகநூலில் இருந்த தோழர் அன்சாரி "அண்ணே எத்தனை சதம் ஓட்டு பதிவு ஆகியது, என கேட்க நான் இந்த விஷயத்தை சொன்னேன், அதற்கு அவர் "அப்படியா முதலில் அங்கே போங்க. உங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்யுங்க" என சொன்னார்.

நான் உடனே அங்கே போன போது பெரியகடை தெரு குஜ்னி பேப்பர் மார்ட் முன்பாகவே வண்டிகள் செல்ல முடியாத அளவு கூட்டம். கடைத்தெருவில் முழுக்க முழுக்க இருட்டு. கிட்ட தட்ட ஒரு பத்தாயிரம் மக்கள் கூட்டம். தீயணைப்பு வண்டிகள் ஒரு பத்து இருக்கும். இத்தனைக்கும் காவிரி ஒரு 200 மீட்டர் தூரம் தான். காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதனால் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. வந்த எல்லா தீயணைப்பு வாகனத்திலும் போதுமான அளவு தண்ணீர் குழாய்கள் இருக்கின்றன. ஆனால் எந்த வண்டியும் உள்ளே செல்ல முடியா வண்ணம் பாழாய்ப்போன பார்வையாளர்கள். க்யூரியாசிட்டியின் உச்சம். எப்படி எரிகின்றது என பார்க்கும் ஆர்வமும், அதை தன் செல்போனில் படம் பிடித்து அதை நண்பர்களிடம் காட்டி மகிழ அல்லது ஏதோ ஒன்று.. பகிர்ந்துக்கனும் என்கிற ஆர்வம் தான் அதிகமாக தெரிந்தது. அந்த ஜனதா செருப்பு கடை முழுக்க எரிந்து போயிருந்தது. அதன் மேல் மாடி தகதகவென எரிந்து கொண்டிருக்க அதன் மேல்மாடியில் பற்றிய தீ வடக்கே (காவிரி இருக்கும் திசையில்) பரவி அதே தெருவின் முனையில் பெரியகடைதெரு அர்ச்சனா ஹோட்டல் மேல் மாடி வரை வந்து விட்டது. அந்த அர்சனா வில் இருந்து நான்காவது கடையில் இருந்து வரிசையாக வெடிக்கடைகள்.

மக்கள் கூட்டம் அதிகம். தீபாவளி பர்சேஸ்க்காக வந்த மக்கள் அலறி ஓடிவிட, வேடிக்கை பார்க்க வந்த மக்கள் தான் மிக அதிக தொல்லை கொடுத்து கொண்டு இருந்தனர். "மேன் லிஃப்டர்" வாகனம் எதும் உள்ளே நுழைய முடியவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக மயிலாடுதுறை நகராட்சி தெருவிளக்கு போட பயன்படுத்தும் "மேன்லிஃப்டர்" வாகனம் அந்த எரியும் கடை முன்னே முதலிலேயே வந்தது கூட்டத்தின் உள்ளே மாட்டிக்கொண்டு நிற்க வந்த தீயணைப்பு வீரர்கள் அதிலே ஏறி அந்த கட்டிடத்தினை நெருங்கும் போது கூட்டம் விசில் அடித்தும் ஆரவாரித்தும் செய்த கூத்துகள் மகா அசிங்கம்.

ஒரு கட்டத்தில் திமுகவின் நகரசெயலர் குண்டாமணி, அதிமுக செந்தமிழன் ஆகியோர் கூட்டத்தினரை வேட்டியை மடித்து கட்டி கொண்டு ஒரு பெரிய கம்பை எடுத்து கொண்டு தள்ளி வழி ஏற்படுத்தி கொடுக்க ஒரு நான்கு தீயணைப்பு வாகனம் உள்ளே வந்தது. இத்தனைக்கும் எரியும் கடையின் லெதர் பொருட்கள் ஒருவித துர்நாற்ற புகையை கக்க சிலருக்கு மூச்சு முட்டி மயக்கம் வந்தது. பீய்ச்சி அடித்த தண்ணீரால் சாலைகள் ஒரு சாண் அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆனாலும் அதை எல்லாம் யாரும் பொருட்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதில் மட்டுமெ குறியாக இருந்து தொலைத்தனர்.

அப்போது ஓ.எஸ் மணியன் அதிமுக எம் பி வர அவர் பின்னால் ஒரு ஐம்பது பேர் வர ஒரு பாழாய் போனவன் வாழ்க கோஷம் போட அவர் அவனை "புட்ரா அவனை புட்ரா" என திட்ட அவன் ஓடிப்போக அவர் தன் கூட வந்தவர்களை வர வேண்டாம் என சொல்லிவிட்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டு செந்தமிழன், குண்டாமணி ஆகியோர் இருந்த இடத்துக்கு போய்கொண்டே தன் செல்லிட பேசியால் யாருக்கோ பேசிக்கொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் அங்கே ஒரு சுழல் விளக்கு காரில் டவாலி வர கூடவே நாகை ஆட்சியரும் வந்தார். அதற்குள் தேமுதிக எம் எல் ஏ பால அருள்செல்வன், பாஜகவின் நாஞ்சில்பாலு, திமுகவின் எஸ்கொயர் சாதிக், வர்தகர் சங்க பாண்டு, சீமாட்டி பாய் எல்லோரும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக கூட்டத்தை ஒழுங்கு செய்ய அதற்குள் அர்ச்சனா ஹோட்டல் மேல் மாடி பெரும் சத்தத்துடன் கொழுத்து விட்டு எரிய தொடங்கியது. அதற்குள் ஒரு நான்கு தீ வண்டிகள், எரிந்து கொண்டிருக்கும் கடைகளை விடுத்து எரியாத கடைகள் மேல் சுத்தமாக தண்ணீர் ஊற்றி நனைத்து விட்டது. அதனால் தீ பரவுவது முதலில் தடுக்கப்பட்டது.

பின்னர் தன் உயிரை பணயம் வைத்து இரு வீரர்கள் ஒரு வழியாக அந்த ஜனதா செருப்புகடை மாடிக்கு தாவி ஏறி (அதற்கு முன்னதாக தன்னை தானே தண்ணீரால் நனைத்து கொண்டனர்) நெருப்பை அணைக்க, அது வரை தீயின் வெளிச்சத்தில் எரியும் இடமாவது தெரிந்து கொண்டிருந்தது போய் கும்மிருட்டில் ஒரே புகை மண்டலம் ஆகியது.

அதற்குள், ஓ எஸ் மணியன் போனில் பக்கத்து பக்கத்து ஊர்களில் இருந்து தீ வண்டி வரவழைத்து விட , ஆட்சியர் வந்தவுடன் முதல் வேலையாக அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை எல்லாம் மூட சொன்னார். (நான்கு நாட்கள் பின்னர் மாலை 5 மணிக்கு தான் டாஸ்மாக் திறக்கப்பட்டது) பின்னர் காவிரியில் இருந்து எரியும் இடம் வரை அந்த தீ வண்டிகள் சகஜமாக போய் வரும் அளவு வசதியாக "பார்வையாளர்கள்" எவனும் இருக்காதபடி வழி ஏற்படுத்தி கொடுக்க திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக, காங்கிரஸ் எல்லாம் கை கோர்த்து யாரையும் விடாமல் நிற்க, பின்னர் தான் தீயணைப்பு வீரர்கள் அங்கே பம்பரமாக சுழண்டு சுழண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நான் மெல்ல வெளியேறி வீட்டுக்கு வந்தேன். மணி இப்போது பத்து. ஆனால் இன்னனும் தீ நின்ற பாடில்லை. ஆனால் உயிரிழப்பு இல்லை என்பது கொஞ்சம் மனதுக்கு நிம்மதி. (திமுக குண்டாமணிக்கு சட்டையே காணும், அது போல எப்போதும் ஜவுளிக்கடை பொம்மை போல அசங்காமல் மொட மொட வெள்ளையில் உலாவரும் செந்தமிழன் மடித்து கட்டிய வேட்டியும் கசங்கிய கரிபிடித்த சட்டையுமாகவும், தேமுதிக அருள்செல்வம் எம் எல் ஏ அலங்கோலமாகவும், நாஞ்சில் பாலு கரிபடிந்த முகத்தோடும், கைகோர்த்து நிற்க....ஒரு இயற்கை பேரிடர் வந்தால் தான் நாங்கள் ஒற்றுமையாக இருந்து தொலைவோம் என நீங்கள் சொன்னால் எத்தனை பேரிடர்களையும் நாங்கள் தாங்குவோம் என நினைத்து கொண்டே வந்து சேர்ந்தேன். என்னைப்போலவே எல்லா மயிலாடுதுறையானும் நினைத்திருப்பான் அதை காணும் போது என்றே நினைக்கிறேன்!


September 17, 2011

Ms./ M.S.ராமூர்த்தி அய்யர் இரும்பு கடை!!!


மன்னிக்கவும்! திரு. நேசமித்ரன் ஒரு எழுத்துப்பிழை சுட்டிகாட்டி இருந்தார். அதை சரி செய்யும் போது தவறுதலாக இந்த பதிவை அழித்து விட்டேன். அதிலே 22 பின்னூட்டங்களும் சேர்ந்து போய்விட்டது. அதனால் மீண்டும் பதிகின்றேன். மன்னிகவும்!

***********************************




என் நான்கு வயதில் என் குறும்புக்கார மாமா ஒருவர் "உனக்கு பனந்தோப்பில் ஒரு அடக்கமான பெண் பார்திருக்கேன். அவங்க உனக்கு ராமூர்த்தி அய்யர் ஜூவல்லரியிலே மொத்தமான சங்கிலி போடுவதா சொல்லியிருக்காங்க. வரும் அமாவாசையிலே திம்மநாயக்கன் படித்துறை மண்டபத்திலே கல்யாணம்" என சொல்லுவது வழக்கம். நானும் ஏதோ எனக்கு பெரிய அளவில் கல்யாணம் நடக்க போவதாக நினைத்து சந்தோஷப்படுவேன்.

பின்னர் காலம் போகப்போகத்தான் தெரிந்தது. பனந்தோப்பு பகுதி என்பது சுடுகாடு என்பதும் அவர் சொன்னது "அடக்கமான" பெண் என்பதும், திம்மநாயகன் படித்துறை மண்டபம் என்பது இறந்தபின்னர் காரியம் செய்யும் இடம் என்றும். ராமூர்த்தி அய்யர் ஜுவல்லரி என்பது ராமூர்த்தி அய்யர் இரும்புகடை என்றும் அங்கே இரும்பு சங்கிலி தான் கிடைக்கும் என்பதும் தெரிந்து சிரித்து கொண்டேன். அப்படித்தான் ராமூர்த்தி அய்யர் இரும்புகடை எனக்கு அறிமுகம் ஆனது. ஆமாம் இந்த பதிவின் கதாநாயன் அந்த "M.S.ராமூர்த்தி அய்யர் ஹார்டுவேர்ஸ்" தான். மயிலாடுதுறையின் மைந்தர்கள் என்றால் அந்த கடைக்கு சம்மந்தம் இல்லாமல் இருக்க முடியவே முடியாது. கடை என்று சொன்னா ஏதோ அப்படி இப்படி கடை இல்லை. அது ஆச்சு அதை தொடங்கி ஒரு எண்பது வருடங்கள். அந்த ராமூர்த்தி அய்யர், அதன் பின்னே அவரது மகன் M.R. கண்ணப்பன், பின்னர் அவரது இரு மகன்கள் அதிலே தற்போது உரிமையாளராக இருக்கும் அவரது இளைய மகன் M.R.K.கீர்த்திவாசன் அண்ணன். எனக்கு நினைவு தெரிந்து நான் ராமூர்த்தி அய்யரை பார்த்தது இல்லை. ஆனால் M.R. கண்ணப்பன் அவர்கள் தான் அதன் முதலாளி நான் சிறு வயதாக இருக்கும் முதலே. தவிர அவர் எங்கள் பள்ளி தி.ப.தி.அர.தேசிய மேல்நிலைப்பள்ளியின் ஆட்சிமன்ற குழுவின் முக்கிய உறுப்பினரும் கூட.

அந்த கடையில் கட்டுமான பொருட்கள் சிமெண்ட், கம்பிகள்,பெயிண்ட் வகையறாக்கள் உட்பட எல்லாமே கிடைக்கும். இப்போதும் அந்த நிறுவனத்தை நான் கடை கடை என்று சொல்வதால் அதன் விஸ்தீரனம் என்ன என்பது உங்களுக்கு புரியவில்லை தானே? இருங்கள். அந்த கடையில் ஒரு நாளைக்கு விற்பனை ஆகும் சிமெண்ட் மூட்டை மட்டும் சுமார் 5000 முதல் 8000 வரை. கம்பிகள் நூற்றுக்கணக்கான டன்கள். இருக்கும் இடமோ மயிலாடுதுறையின் மைய பகுதியான மணிக்கூண்டு க்கு பக்கத்தில். அகலம் ஒரு என்பது அடியும் நீளம் ஒரு 250 அடியும் இருக்கும் சுமாராக. குடோன் என்பது காவிரி கரையில் இருக்கின்றது. அந்த கடையின் உள்ளே ஒரு லாரி போய் வருவது பெரியகோவில் உள்ளே ஒருவன் சைக்கிளில் போய் வரும் போது எப்படி இருக்கும், அது போல லாரி அந்த கடையின் உள்ளெ போய் ஒரு ரவுண்டு அடித்து திரும்பும் என்றால் மயிலாடுதுறையின் இதய பகுதி கடைத்தெருவில் அந்த இடம் எவ்வளவு பெரியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இத்தனைக்கும் குடோன் தனி இடம்.

சரி அப்படி என்ன அந்த கடையின் விஷேஷம்? ஏன் அப்படி அங்கே மட்டும் அத்தனை பரந்துபட்ட வியாபாரம்? விலை அங்கே குறைவா? என அடுக்கடுக்காக கேள்வி கேட்டால் அதல்லாம் எதும் இல்லை. ஒன்றே ஒன்று தான். நேர்மை. அவர்களின் நேர்மை. பில் இல்லாத வியாபாரம் கிடையாது. நிங்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக அரசு விதிக்கும் வரிகள் கண்டிப்பாக நம்மிடம் வசூல் செய்யப்படும். அது மிகச்சரியாக அரசுக்கு செலுத்தப்படும். தரமான பொருட்கள் மட்டுமே வியாபாரம் செய்யப்படும். எடை சரியாக இருக்கும். அங்கு இருக்கும் விற்பனையாளர்களுக்கு நான் டிப்ஸ் எதும் கொடுக்க தேவையும் இல்லை கொடுத்தாலும் அதை மறுதளிக்கும் அளவுக்கான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதே போல நாம் சிமெண்ட் வாங்கினாலும் சரி கம்பிகள் வாங்கினாலும் சரி கொத்தனார், இஞினியர் ஆகியோருக்கு எந்த கமிஷனும் அவர்களுக்கு அந்த நிறுவனத்தில் இருந்து கொடுக்கவும் மாட்டார்கள். அது போல கடன் கிடையாது. கையிலே காசு வாயிலே சிமெண்ட் பாலிசி தான்.

ஒரு வீடு கட்ட ஆரம்பித்ததும் மேஸ்திரியோ இஞினியரோ "ராமூர்த்தி அய்யர் கடை வேண்டாம். அதை விட சூப்பரா ஒரு மூட்டைக்கு 20 ரூபா கம்மியா நான் வேற கடையிலே வாங்கி தருகின்றேன் என்பது தான் முதல் டீலிங் ஆக இருக்கும். அதை எல்லாம் மீறி மக்கள் ராமூர்த்தி அய்யர் கடைக்கு தான் படையெடுப்பார்கள். அந்த கண்ணப்பன் அய்யரோ, கீர்த்திவாசன் அண்ணனோ மிகப்பெரிய ஆன்மீக பற்றாளர்கள் என்றேல்லாம் சொல்ல இயலாது. கடையில் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாமி படங்களுக்கு பைனான்ஸ் கம்பனியில் போடுவது போல சரம் சரமாக மல்லிகைப்பூவும், வாசனை பத்திகளும் படைக்கப்பெறாது. அவர்களுக்கு செய்யும் தொழிலே முதல் தெய்வம்.

எனக்கு தெரிந்து அந்த கடை ஒரு மிகப்பெரிய ஓட்டு வீடு போன்ற கட்டிடம் தான். அந்த கடைத்தெருவின் அனைத்து கடைகளும் (எதிரே இருக்கும் ஏ ஆர் சி ஜுவல்லரிகள்) கண்ணாடி மாளிகையாக ஆன பின்னரும் இது ஒரு ஓடு வேய்ந்த கடை தான். முதலாளிக்கும், அவரது மகன்கள் இருவர், பின்னே ஒரு கணக்கர் ஆகியோருக்கு வரிசையாக நான்கு குழி அதாவது பள்ளம் இருக்கும் அதன் முன்பக்கம் ஒரு பெரிய மர டெஸ்க், இவர்கள் சென்று அந்த குழியில் காலை தொங்கவிட்டு அமர்ந்து டெஸ்கில் பெரிய பெரிய தோல் பைண்டிங் செய்த லெட்ஜர் பிரித்து வைத்து கொண்டு தலைக்கு மேலே ஒரு அந்த கால ஜி ஈ சி மண்டை சீலிங் ஃபேன் போட்டுக்கொண்டு உட்காந்து கொண்டு முதலாளிக்கு மாத்திரம் எக்ஸ்ட்ரா காற்றுக்காக ஒரு இங்கிலாந்து ராலி பேன் சத்தமில்லாமல் ஓடும் அதை வைத்து கொண்டு கருமமே கண்ணாய்இருப்பர். கண்ணப்பன் அய்யர் கடைக்கு வந்ததும் சட்டையை கழட்டி பின்னால் இருக்கும் ஆணியில் மாட்டிவிட்டு மல் துணியில் தைக்கப்பட்ட ஒரு கை வைத்த பனியனோடு பில் போடுவார். ஒரு கருப்பு கலர் அந்த கால கிரகாம்பெல் காலத்து விரல் வைத்து நம்பர் சுற்றும் போன் ஒரு கொலாப்ஸ் ஸ்டாண்ட் ல் இருக்கும். முதலாளி, அவரது மகன்கள், கணக்கர் இதிலே யார் பேச வேண்டுமோ அவர்களுக்கு அந்த போன் நகர்த்தி வைக்கப்படும்.

இப்படியாக பழமை மாறாமல் இருந்த அந்த வணிக வளாகம் இன்னும் சொல்ல போனால் இந்த ஊரில் இருந்த மாட மாளிகை எல்லாம் அவர்கள் விற்ற சிமெண்ட், கம்பிகளால் உயர்ந்து நிற்க அந்த கடை மட்டும் அப்படியே இருந்தது. அவர்களின் சிமெண்ட் குடோனில் ஒரு நாளைக்கு கீழே சிந்தி கிடக்கும் சிமெண்டை ஒரு வாரத்துக்கு திரட்டினால் கூட இவர்கள் மாயவரத்தில் மணிக்கூண்டுக்கு நிகரான உயரத்தில் ஒரு கட்டிடம் எழுப்ப முடியும் என கேலி பேசியவர்கள் உண்டு. அதே போல கண்ணப்பன் அய்யர் சைக்கிளில் தன் வீடு முதல் கடைக்கு வந்து போவதை கூட கேலியும் கிண்டலும் செய்தவர்களை நான் பார்த்தது உண்டு. ஆனால் அதல்லாம் அவர்கள் கவனத்துக்கே போகாது. ஏனனில் அவர்களது கவனம் வியாபாரம். அது நல்ல விதமா நடந்தா சரி என்கிற போக்கில் தான் இருந்தார்கள்.

ஒருமுறை திரு. கண்ணப்பன் அவர்கள் எங்கள் பள்ளி விழாவில் பேசிய போது " பெருசா நான் எதும் செஞ்சுடலை. நான் ஒரு போஸ்ட்மேன். போஸ்ட்மேன் வியாபாரி. நான் ஒரு பொருளை வாங்கி அவா "நீ இத்தன தான் லாபம் வச்சு விக்கலாம்"ன்னு சொல்லும் அதே லாபத்தை தான் வச்சி விக்கிறேன். அதுல கவர்மெண்ட் "நீ இத்தன சம்பாரிச்ச, அதுக்கு நேக்கு இத்தன பர்சண்டேஜ் டேக்ஸ் பே பண்ணிடு"ன்னு சொல்றா, அதை டான்னு கொடுத்துடுறேன். அதே போல அந்த கமாடிட்டீஸ்க்கு இத்தன டேக்ஸ் உன்னாண்ட அதாவது வாங்குறவா கிட்டேர்ந்து வசூலிச்சு கட்டிடு"ன்னும் சொல்றா. அதையும் உங்களான்ட இருந்து வாங்கி டான்னு கட்டிடுறேன். தான் சூட்சுமம். நாம வரி கொடுக்கலைன்னா அரசாங்கம் எப்படி நடத்துவா? என் தோப்பனார் இங்லீஷ் காரன் காலத்திலே இருந்து அவா சொன்ன வரியை கட்டிண்டு வந்தா. நேக்கு அந்த மன உறுத்தல் இல்லை. நம்ம நாட்டுக்கு கட்டிண்டு வர்ரேன். அவா ரோடு போடுறா, பெரிய ஆஸ்பத்திரிலே ஏழகளுக்கு ஃப்ரீயா மருந்து கொடுக்கறா, குடிதண்ணீர் தர்ரா,எல்லாமே எல்லாமே செய்யறா, நான் போய் இதல்லாம் செஞ்சுண்டு இருக்க முடியுமா? நீங்க போய் தனித்தனியா இதல்லாம் செஞ்சுண்டு இருக்க முடியுமா? முடியாதோன்னோ, நாம வரி கொடுக்கலைன்னா அவ பணத்துக்கு எங்க போவா? அவா கிட்டே தான் நாசிக்ல பிரஸ் இருக்குன்னு பிரிண்ட் பண்ணிக்க முடியுமா? டபார்ன்னு அதல்லாம் செஞ்சுட முடியாது. நாம கொடுக்கும் வரியை வச்சுண்டு தான் செய்ய முடியும். நாம ஒழுங்கா கொடுத்தா அவா செய்வா. "நேக்கு பத்தலை. நீ இன்னும் கொஞ்சம் வசதி செஞ்சு கொடு"ன்னு கேளுங்கோ அதுக்கு எல்லா உரிமையும் உங்களுக்கு எந்தளவுக்கு இருக்கோ அந்த அளவு அவாளுக்கு நாம செலுத்த வேண்டிய வரியையும் செலுத்திடனும் கேட்டேளா" என கலோக்கியலா பேசியது அன்றைக்கு எல்லார் மனதிலும் பட்டது.

இரவு கடையில் கணக்கு எல்லாம் முடிந்து கண்ணப்பன் சார் ஒரு தோல் பையில் தான் எல்லா பணத்தையும் எடுத்து கொண்டு தன் வீட்டுக்கு சைக்கிளில் போவார். பட்டமங்கல தெருவில் இருந்து அரசாங்க மகளிர் பள்ளிகூடம் தாண்டி இருக்கும் சந்து வழியே நூர்காலனி வழியே (கோ ஆபரேடிவ் பேங் வழியே) எங்கள் பள்ளிக்கூடம் பக்கத்தில் இருக்கும் அவர் வீட்டுக்கு போவார். இதை கவனித்து கொண்டு இருந்த ஒரு திருடன் ஒரு நாள் அந்த பேங் சந்தில் வைத்து இவரை கத்தியால் குத்தி பணத்தை பிடுங்கிட்டான். அடுத்த நாள் காலை செய்தி தெரிந்ததும் நான் வழக்கம் போல என் நண்பன் ராதாவிடம் விஷயத்தை சொல்ல "அய்யோ என்ன ஆச்சு .... அந்த திருடனுக்கு?" என கேட்டான். அவன் அப்படி கேட்டதற்கு காரணம் உண்டு. ஏனனில் திரு.கண்ணப்பன் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். கெட்ட பழக்கம் எதும் கிடையாது. உடல் திடகாத்திரமானது. பாவம் திருடன். இவரை கத்தியால் குத்தினாலும் இவர் விடாப்பிடியாக அவனை பிடித்து அவன் யாரிடமோ திருடி வச்சிருந்த ஆயிரம் ரூபாய் சொச்சத்தையும் சேர்த்து பிடுங்கி விட்டார். அவனை போலீசிலும் பிடித்து கொடுத்துவிட்டார். பாவம் திருடனுக்கு ஆயிரத்து சொச்சம் நஷ்டம்:-)) அப்படி எதற்கும் அசையாத திட மனது கண்ணப்பன் சாரைக்கூட விதி விட்டு வைக்கவில்லை. அவரது பெரிய மகன் ஆன்மீக சுற்றுப்பயணம் வடநாட்டுக்கு போன போது ஹரித்வாரில் மரணம் அடைந்து விட அந் நிகழ்சி இவரை ரொம்ப ஆட்டிவிட்டது.

பின்னர் அவரது இளைய மகன் கீர்த்திவாசன் அண்ணன் அவர்கள் கடையின் எல்லா பொறுப்புகளையும் பார்த்து கொண்டார். கடை ஓட்டு கட்டடத்தில் இருந்து மிகப்பெரிய கட்டிடமாக மாறியது. குழியில் டெஸ்க் போட்டு உட்காந்த நிலை மாற்றப்பட்டு அதிநவீன பர்னிச்சர்கள், கம்பியூட்டர் என சமகாலத்துக்கு மாறிவிட்டது. பெரிய மகனின் மனைவி, குழந்தைகள் எல்லாரும் சென்னையில் செட்டில் ஆகிவிட சின்னவர் கீர்த்திவாசன் அண்ணனின் குழந்தைகளுக்கு மாயவாம் புழுதிகளும், வெய்யிலும், அழுக்கான காவிரியும் ஏனோ ஒரு ஒட்டுதல் இல்லாமல் சென்னை வாழ்க்கை பிடித்து போக பெரிய பையன் மரணத்தில் இருந்து மனது வெளியே வராமல் கண்ணப்பன் சாரும் போய் சேர்ந்துவிட்டார். ஆனாலும் சின்னவர் கீர்த்தி அண்ணன் அதே தாத்தா, தந்தையார், அண்ணன் காட்டிய அதே வழியில் கடையை திறம்பட நடத்தி வந்தார்.

நான் ஒரு பத்து நாட்கள் முன்னதாக அவர் கடைக்கு போன போது ஒருவர் சிமெண்ட் வாங்க வந்தார்.

கஸ்டமர்: சார் நான் பெரிய அளவிலே ஒரு கட்டிடம் கட்டனும்.கவலையே படாதீங்க. உங்க கடையிலே தான் எல்லாம் எடுக்க போகிறேன்.

கீர்த்தி அண்ணன்: சரி கவலைப்படலை. சொல்லுங்க.

கஸ்டமர்: அல்ட்ராடெக் ஒரு மூட்டை என்ன விலை?

கீர்த்தி அண்ணன்: 315

கஸ்டமர்: சரி, எனக்கு ஒரு ஆயிரம் மூட்டை வேண்டும். அடுத்து அடுத்து வரிசையா கட்ட போறேன். இன்னும் அதிக லெவல்ல தேவைப்படும். எனக்கு பில்லு கில்லு எல்லாம் வேண்டாம். உடனே கை மேலே கேஷ் சுடச்சுட தருவேன். என்கிட்டே லாரி இருக்கு. டோர் டெலிவரில்லாம் வேண்டாம். திரும்பவும் சொல்றேன். பில்லு கில்லு எல்லாம் வேண்டாம். இப்ப சொல்லுங்க என்ன விலை ஒரு மூட்டை?

கீர்த்தி அண்ணன்: 315
வந்தவர் பேயறைந்து போன மாதிரி ஆனார். எனக்கு விவேக் மற்றும் டாக்டர் மாத்ருபூதம் காமடி தான் ஞாபகம் வந்தது. "சார் ஊசி போட போறீங்களா? நான் வேண்டுமானா பேண்டை கழட்டிடட்டுமா? என விவேக் கேட்க அதற்கு டாக்டர் "அது உன் இஷ்டம், ஆனா நான் கையிலே தான் போடப்போறேன்" என்பார். நீ பில்லை வாங்கு வாங்காம போ, அல்லது வாங்கி கிழிச்சு போடு. அது பத்தி எனக்கென்ன கவலை என்கிற அதே கண்ணப்பன் சாரின் குணம். மயிலாடுதுறையில் அதிகபட்சம் விற்பனை வரி கட்டும் நிறுவனம் அது. இப்பவும் தான்.

சரி நான் ஏன் இத்தனை நீட்டி முழங்குகிறேன் அந்த ராமூர்த்தி அய்யர் இரும்புகடை பற்றி.

அந்த கடை விற்பனை ஆகிவிட்டது. ஆமாம், கீர்த்தி அண்ணனால் கவனிக்க முடியவில்லை. பசங்க சென்னையிலே செட்டில் ஆக விருப்பம். இவருக்கு வாரம் ஒரு முறை சென்னை சென்று வர முடியவில்லை. வீடும் மிகப்பெரிய பங்களா. தனி ஆளாக இவர் மாத்திரம் இருக்க வேண்டும். சொத்துபத்துக்கு எதும் குறைவில்லை. சென்னையில் அண்ணாசாலையில் கால்வாசி கிடக்கு, ஊட்டி கொடைக்கானலில் இருக்கு. இன்னும் சிமெண்ட் கம்பனிகளில் அதிக விற்பனைக்காக கொடுக்கப்படும் ஊக்கத்தொகை கூட இவங்க நிறுவனம் பல ஆண்டுகளாக வாங்காமல் இருப்பதே பல கோடிகள் தாண்டும். ஆனால் இவரால் கடையை சரியாக கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி திடீரென விற்றுவிட்டார். கடையில் இருந்த இடம் முதல் உள்ளே இருந்த சரக்குகள், லாரிகள், வேலையாட்கள் உட்பட. ஒரு ஆணி கூட தன் கூட எடுத்துக்கொள்ளவில்லை. விரைவில நூற்றாண்டு காணப்போகும் ஒரு நிறுவனம். விற்பப்பட்டுவிட்டது. இன்னும் மயிலாடுதுறையில் பலருக்கு இவ்விஷயம் சென்றடையவில்லை.

வாங்கியவர் திரு. ஏ.டி. தமிழ்செல்வன். அவரும் ஒரு சிறந்த தொழிலதிபர். உழைப்பால் முன்னுக்கு வந்தவர். அவரைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் உடனே "எனக்கு தெரிஞ்சு அவரு தாஜ்மகால் பீடியை கடைக்கு கடை கொண்டு சைக்கிளில் போட்டு வியாபாரம் செஞ்சவர் தானே" என வயிறு எரியும் வியாபாரிகள் பேசுவர். கருனாநிதி மஞ்சள் பையுடன் திருவாரூரில் இருந்து சென்னைக்கு வந்தார் என கண்ணதாசன் வனவாசம் புத்தகத்தில் சொன்ன மாதிரியான வயிறு புகைச்சல் தான். ஆனால் ஏ.டி எஸ் ஒரு சிறந்த உழைப்பாளி என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். அவர் இந்த நிறுவனத்துக்க்கு இத்தனை கோடி கொடுத்தார் என யூகங்களாக அடுத்த அடுத்த நாட்களில் பேசும் யாருமே 'அவரு ஒயிட்ல இத்தனை கோடி கொடுத்தார், பிளாக்ல இத்தனை கோடி கொடுத்தார்" என பல்லுமேல நாக்கு போட்டு பேச மாட்டார்கள். ஏனனில் எம். எஸ் ராமூர்த்தி அய்யர் நிறுவனம் என்பது கருப்பு பணத்துக்கு அப்பாற்பட்டது என்பது ஊருக்கே தெரியும். நேர்மைன்னா இப்படி தான் இருக்கனும்.

ஏ.டி. எஸ் கூட கடையின் பெயரை மாற்ற போவது இல்லியாம். ஆனாம் அந்த சிமெண்ட்ம், கம்பியும் அல்ல அதன் மதிப்பு. அவர் கொடுக்கும் பணம் எல்லாமே 'ராமூர்த்தி அய்யர் இரும்புகடை" என்னும் பிராண்ட்க்கு கொடுக்கும் பணம் தான் என்பதை ஒரு நல்ல வியாபாரியான திரு. ஏ டி எஸ். தமிழ்செல்வனும் நன்கு உணர்ந்தவர் தான்.

வாழ்க ராமூர்த்தி அய்யர் நிறுவனம், வாழ்க கீர்த்திவாசன் அண்ணன், வாழ்த்துக்கள் ஏ.டி.எஸ். தமிழ்செல்வன் சார்! கீர்த்தி அண்ணன், உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் நம் பள்ளியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர். நம் பள்ளி உங்கள் பள்ளி. எப்போதும் நீங்களும் உங்க பரம்பரையும் அதே பழைய நினைப்புடன் அதே பதவிகளை பள்ளியில் தொடர்ந்து இருந்து பள்ளியை மென் மேலும் வளரவைக்க வேண்டும்.