பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 16, 2014

அவள் பெயர் "முருகேசி" !!!

அவள் பெயர் "முருகேசி".அவளுக்கு  அந்த பெயர் வைக்க"கவுண்டரை" தவிர  எவ்வித சிறப்பு காரணமும் இல்லை. அவர் ஒரு படத்தில் ஒரு குழந்தைக்கு "இந்த உலகில் யாருக்கும் வைக்காத பெயர் வைக்கிறேன்" என சொல்லி விட்டு முருகேசன் என வைத்து விட்டு அது முருகேசியான காரணம் தான் அந்த பெயர் எனக்கு பிடித்தமைக்கான நிகழ்வு. ஆமாம்!!!! என் மடிக்கணினியின் பெயர் "முருகேசி"! அவள் எனக்கு வாழ்க்கைப்பட்டு வந்த போது நான் வைத்த பெயர் அவளுக்கு அதுதான். 

சில நாட்கள் எனக்கு இணைய மற்றும் கணினி தொடர்பு  இல்லை. என் மனைவி உட்பட பலருக்கு சந்தோஷம். சிலருக்கு ஆச்சர்யம். வெகு சிலருக்கு கேள்விக்குறி! ஆனால் யாருக்கும் வருத்தம் இருப்பதாக உண்மை விளம்பி நடுநிலை ஊடகங்களான தந்தி டிவி போன்றவை உலகுக்கு செப்பவில்லை. அதை விடுங்கள். காரணம் "முருகேசி"யின் மரணம்! அகால மரணம் எனில் வருந்தலாம். இது அப்படி இல்லை. வாழ்த்து செத்த புண்ணியவதி இந்த முருகேசி. கல்யாண சாவு என்பார்களே அப்படியான ஒரு சாவு!

நல்ல வேளை! தேர்தல் முடிந்தும் ஒரு நாள் வரை கூட முருகேசி  உயிருடன் இருந்தாள். என் தேர்தல்  கடமையை நிறைவேற்றிய பின்னர் தான் மரித்தாள்.மூளைச்சாவு. அதாவது "Hard disk crack" .  இன்னும் சில உறுப்புகள் உயிருடன் இருப்பதாக சொல்லப்பட்டதால் அவள் சிகிச்சைக்கு போன மடிக்கணினி ரிப்பேர் இடத்தில்  ஐ சி யூவில் இருக்கின்றாள். அதை எடுத்த பின்னர் எனக்கு மீண்டும் வந்ததும் அவள்  மீது ஒரு கட்டி சூடம் வைத்து  எரித்து  ஈமக்கிரியை  செய்து விடலாம் என இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம். முருகேசி உருவான இடமான HP ஒரு நல்ல குடும்பம் என்பதை உணர்க!நல்ல குடும்பத்து பெண்.  எனனில் இந்த கடந்த 8 வருடங்கள் 24 மணி நேரமும் அது என்னிடம் உழைத்த உழைப்பு வேறு எந்த குடும்ப மடிக்கணினியும்  செய்ய இயலாதது. 

அவள் என்னிடம் இருந்த வரை அவள் எனக்கு சம்பாதித்து கொடுத்தது என பார்ப்பின் .......1.ஏகப்பட்ட நண்பர்கள். 2. அதை விட அதிகமாக எதிரிகள். எதிரிகளை விடுங்கள். இல்லாவிடில் உலகமே வெறுமை சூழ்ந்திருக்கும். நண்பர்கள்???.. அடடே அபாரம்... 

இந்த முருகேசி என்னிடம் வந்து சேர்ந்த  போது என் மகன்  நட்ராஜ் பிறக்கவில்லை. அபி தான் அப்போது குழந்தை. அபியை வலது இடுப்பிலும், முருகேசியை இடது கையிலும் பிடித்துகொண்டு   அண்ணாமலை பல்கலைகழக வளாகத்தில் மாலை நேரத்தில்  பேராசிரியர்கள் குடியிருப்பை தாண்டி மைதானத்துக்கு வருவேன். அபியை விளையாட விட்டு விட்டு அங்கே மருத்துவ கல்லூரி போகும் சாலையில் இருக்கும் பல்கலைகழக ஊழியர் நூலகத்தில் இந்த முருகேசியுடன் நுழையும் போது அங்கே வேதியியல்  பேராசிரியரும், பின்னர் நெல்லை சுந்தரனார் பல்கலை கழக துனை வேந்தரும், இப்போது அதை எல்லாம் விட பெரிய பதவியான "திமுக இளைஞர் அணி"க்கு திராவிட பாடம் எடுக்கும் ஆசானுமாக இருக்கும் அண்ணன் முனைவர் சபாபதி மோகன் வருவார்கள். அந்தி மயங்கும் மாலையில் ஆரம்பித்து இரவு ஆகி பின்னர் விரல் சூப்பும் அபியை சில மருத்துவ மாணவிகள் தூக்கி க்கொண்டு வந்து "அபிஅப்பா, இவளுக்கு பசி வந்துடுச்சு, போங்க போய் சாப்பாடுக்கு உங்க வீட்டிலே குழந்தையை கொடுங்க" என சொல்லி கொடுக்கும் போது பேராசிரியரிடம் " அண்ணே, நாளை தொடருவோம்" என மனசே இல்லாமல் பேச்சை முடித்து கொண்டு மீண்டும் அபியை வலது இடுப்பு,முருகேசியை  இடது கை பிடிப்பு என வீட்டுக்கு போவேன். 

துபாயில் நான் இருக்கும் போது என் அறையில் இரண்டு பேர். அந்த திருச்சி கார்த்திக்கு இரவு முழுக்க முழு வீச்சில் குளிர்சாதனம் வேலை செய்ய வேண்டும். எனக்கோ அது அலர்ஜி. அப்போது எனக்கு இந்த முருகேசி தான் முழுத்துணை. இனைப்பை கொடுத்து விட்டு காலில் தலையனை போல வைத்து கொண்டால் கதகதவென இருக்கும். இப்படி எல்லாம் அதை பயன்படுத்தியதை அவள் பிறந்த  HP குடும்பம்   அறிந்தால் என் மீது மான நஷ்ட வழக்கு போட முழு முகாந்திரம் உண்டு. 

அது போல என் மகன் நட்ராஜ் பிறந்த பின்னர் நான் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் அவன் சிறுநீர் கழிக்க தவழ்ந்து வந்து உபயோகப்படுத்தும் சின்னம்மா இவள் தான். கிட்டத்தட்ட மூன்று முறை நான் அவளை  அடித்து உதைத்துள்ளேன். ஏதோ கோபத்தில். அவள்  ஜராசந்தன் போல வரம் வாங்கி வந்தமையால் எத்தனை கிழித்து போட்டாலும் மீண்டும் ஒட்டிக்கொண்டு தன் கடமையை செய்து விட தயாராகிவிடுவாள். 

அவள் என்னிடம் வந்தபோது எனக்கு ஒரு பெரிய மரியாதையை சமூகத்திடம் வாங்கி கொடுத்தது. அடடே ''இவன் கிட்டே மடிக்கணினி எல்லாம் இருக்கின்றதே'' என ஒரு மரியாதையை வாங்கி கொடுத்தது என்பது உண்மை. அது முதல் நிலை. அதே போல "இவன் கிட்டயும் மடிக்கணினி இருக்கு" என அதே சமூகம் கொஞ்சம் இயல்பாய் பார்த்தது.அது இரண்டாம் நிலை. பின்னர் ஒரு கட்டத்தில் நான் முக நூலில் தீவிரமாய் இயக்கும் நிலையில் அப்போது பலர் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் இயங்கும் நிலை வந்த பின்னர் "அய்யய்யே இவனிடம் எல்லாம் மடிக்கணினி வந்து மாட்டிக்கொண்டதே" என உதட்டை பிதுக்கியது சமூகம். அது மூன்றாம் நிலை. இப்படி இந்த முருகேசி இந்த மூன்று நிலைகளையும் கடந்து வந்து விட்டாள்  என் வாழ்வில்.  

சிகிச்சைக்காக கொடுத்த இடத்தில் இன்று போய் பார்த்த போது என்னை வாஞ்சையுடன் பார்த்தாள். "என்னங்க.... எத்தனையோ உழைத்து விட்டேன் உங்க கிட்டே, என்ன ஒரு கவலை... 2006 தேர்தலில் நீங்க வெற்றி பெறும் போது கூட இருந்தேன். சந்தோஷமா இருந்துச்சு. 2009 தேர்தலில் மிக கடுமையா நீங்க சொன்னபடி எல்லாம் ஆடினேன். தட்டுத்தடுமாறி  வெற்றி பெற்றீங்க. சரின்னு மீண்டும் உழைச்சேன். 2011ல் கடுமையா போராடியும் தோத்து போயிட்டோம். மீண்டும் கடுமையா உழைச்சோம். இதோ 2014ல் என்னால முடிஞ்ச வரை உழைச்சுட்டேன். என்ன ஒரு வருத்தம். நீங்க ஜெயிக்கும் நாளின் போது நான் இருக்க மாட்டேன். அதனால வருத்தப்படாதீங்க. உங்களுக்கு நான் இல்லாட்டி இன்னும் ஒருத்தி வருவா. என்னை விட நல்லா உழைப்பா. கவலைப்படாதீங்க" என சொல்லி என்னை வருடிக் கொடுத்தாள். 

கண்களில் கொஞ்சம் கண்ணீர் வந்தது. நான் கண்ணீர் விடின் முருகேசிக்கு பிடிக்காது. எத்தனையோ கஷ்டங்கள் என் வாழ்வில். உடனே அவளை எடுத்து மடியில் வைத்து கொண்டுவிடின்  போதும். என் கோவத்துக்கு அவள் வடிகாலாய் இருந்தாள். என் சந்தோஷத்துக்கு கட்டிக்கொண்டு சிரித்தாள். என் அவமானங்களுக்கு ஆறுதலாய் இருந்தாள். என் இயலாமைக்கு புத்திமதி சொன்னாள். அவளை தூக்கு கன்னத்தில் ஒத்திக் கொள்ளும் ஸ்பரிசம் எனக்கு ஜில் உணர்வை தரும். அத்தனை குளிர்வானவள். சாகும் முன் சில காலம் சூடாக இருந்தாள். அத்தனையே. அந்த சூடு கூட சுகமே எனக்கு. 

சந்தோஷமாய் இருக்கிறேன். முருகேசி மீண்டும் பிறப்பாள். என்னுடன் அவளின் அடுத்த ஜென்மத்தில் மீண்டும் இணைவாள். எனக்கு வருத்தம் எதுவும் இல்லை. நாளை மே 16ம் தேதி 2014 அன்று என் வெற்றியை அவள் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்கிற ஒரு கவலை தவிர வேறு எதுவும் இல்லை. 
தயவு செய்து யாரும் "முருகேசிக்கு அஞ்சலிகள்" என பின்னூட்டத்தில் சொல்லி விடாதீர்கள். உடைந்து விடுவேன். அவள் என்னுடன் சாதித்தவைகள் அதிகம்! அந்த நினைவுகளுடன் வாழ்வேன்! இவளும் என் வாழ்வில் ஒரு பகுதியாய் வந்தாள். சென்றாள்! முருகேசியின் நினைவுகள் என் வாழ்நாள் வரை இருக்கும்!

குறிப்பு: என்னடா இது, ஒரு லேப்டாப் மரணித்ததை இத்தனை எழுதுகிறான் என நினைக்க வேண்டாம். என் வீட்டில் ஒரு கரண்டி இருக்கு. அதுக்கு பெயர் "நச்சினார்கினியவள்" :-)

 

1 comment:

  1. முருகேசி.... நல்ல பெயர் உங்கள் மடிக்கணினிக்கு.....

    உங்கள் கணினியிடம் உங்களுக்கு இருக்கும் பிடிப்பு பிடித்திருக்கிறது!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))