பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 10, 2010

"ஓவர் ஓவர் - ஆன் தி வே" - வனதுர்க்கை கோவில் போகலாம் வாங்க!!!

இந்த வித்யாசமான தலைப்பை பற்றி பின்னர் பார்ப்போம். இப்போ நவராத்திரி சிறப்பு கோவில் மயிலாடுதுறை தருமபுரம் தருமை ஆதீனத்துக்கு சொந்தமான வனதுர்க்கை கோவிலுக்கு போவோமா.

எனக்கு எப்போதுமே மயிலாடுதுறையில் பிடித்த இடம் இந்த தருமபுரம். நடுவே மடம். சுற்றிலும் வீதிகள்.
வீதிகளில் கோவில் ஊழியர்கள், மடத்தின் ஊழியர்களின் புராதன ஓட்டு வீடுகள், சைவ சித்தாந்த பள்ளி, வேதபாடசாலை, தமிழ் கல்லூரி, தமிழ் வழி ஆரம்ப பள்ளி, மடத்தின் உள்ளே சிவன் கோவில், மிகப்பெரிய குளங்கள், எங்கும் பசுமை, எங்கும் சுத்தம் என அந்த இடமே நகர இரைச்சலில் இருந்து கொஞ்சம் விலகி நாங்க இன்னும் உஜாலாவுக்கு மாறவில்லை என சொல்லும் மக்கள், பெரிய மனிதர்களை சுமந்து வந்து சர்வ சாதாரணமாக ஓரமாக பவ்யம் காட்டி நிற்கும் படகு கார்கள்,
அந்த காலத்தில் கட்டப்பட்ட அழகிய தருமையாதீனத்துக்கு சொந்தமான அரண்மனை, எப்போதும் அமைதி என அந்த இடம் ஒரு சொர்கபுரி தான் எனக்கு.

அந்த சின்ன ஊரின் வடமேற்கில் ஒரு பெரிய வளைவு, மிகப்பெரிய இருப்பு கதவுடன் கூடிய வளைவு,
அதனை திறந்தால் பரந்து விரிந்த ஒரு காடு. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், மா மரங்கள் இன்ன பிற மரங்கள் ஒற்றையடி மண் பாதை,
ஆனால் அதிலும் ஒரு ஒழுங்கு இருக்கும். மரங்கள் கூட வரிசை கட்டி நிற்கும். எங்கும் பசுமை. கண்ணுக்கு எட்டிய தூரம் பசுமை. அங்கிருந்து காவிரிக்கு செல்லலாம். காவிரியில் இருந்து பாசன வாய்க்கால் காட்டில் நடுவே வளைந்து நெளிந்து செல்லும். வெய்யில் என்பது காட்டின் உள்ளே எட்டிக்கூட பார்க்காது. பகலில் கூட இருள் சூழ்ந்து ஆனா ரம்மியமாக இருக்கும். காற்று நம்மை அள்ளிக்கொண்டு போகும்.

உள்ளே நுழைந்தால் ஒரு அமானுஷ்ய பயம் வயிற்றை கலக்கும். காட்டின் நடுநாயகமாக ஒரு கோவில். காட்டின் உள்ளே அரை கிலோமீட்டர் நடந்தால் மட்டுமே கண்ணுக்கு தெரியும் அந்த கோவில். ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்து இருக்கும் துர்க்கை அம்மனின் சுதை வேலைப்பாடு ஒரு மிரட்டல் கொடுக்கும்.
அருகே ஒரு குளம். பின்னே போர்செட். அங்கங்கே அந்த போர்செட்டுக்கும் கோவிலுக்கும் மின்சாரம் செல்ல மின்கம்பங்கள், அதன் மீது அமர்ந்து நம்மை பார்த்து கூவும் குயில்கள், ஆந்தைகள், மாமரத்தின் மேலே குருவி கூடு தொங்குவது போல தலைகீழாய் தொங்கும் பழம்தின்னும் வவ்வால் கூட்டம், ஒரு மனுஷப்பயல் வர்ரான் என அலறி "அலர்ட்' கொடுக்கும் ஏதோ பெயர் தெரியா பறவைகள், நம்மை பார்த்து முறைக்கும் காட்டு பூனை கூட்டம், ஓநாய்கள் ....மனதில் கொஞ்சம் தைரியம் வர வழைத்து கொண்டு கோவில் அருகே போய் விட்டால் நகர மனிதனை விட இவை ஒன்றும் அத்தனை அபாயம் இல்லை என்கிற உணர்வே மேலேங்கும்.

காலையில் ஒரு குருக்கள் வருவார். காவிரி தண்ணீர் எடுத்து வருவார். அபிஷேகம் செய்வார். கொண்டு வ்ரும் நைவேத்தியம் அங்கு இருக்கும் வனக்காவலரிடம் கொடுக்கப்படும். பின்னர் போய் விடுவார். பின்னர் மாலை வருவார். அதே கடமை நிறைவேற்றப்படும். இரவு 12 மணி வாக்கில் பலசமயம் ஆதினம் வருவாராம். கார் தடங்கள் இருக்கின்ரன.

அபிஅம்மாவுக்கு இங்கே வந்து பொங்கல் வைத்து நவராத்திரி நாங்கள் மாத்திரம் கொண்டாடி வர வேண்டும் என நீண்ட நாள் ஆசை. இன்று காலை ஏழு மணிக்கு அங்கே கிளம்பி விட்டோம். புது மண்பானை, சட்டி, சமையல் பொருட்கள், வாழையிலை சகிதம் கிளம்பும் போதே காட்டுக்கு போகின்றோம் என்று சொன்னவுடன் நட்ராஜ் தன் வில், அம்பு எடுத்து கொண்டான். இவனுக்கு லவ குசா ஞாயிறு டிவியில் பார்க்கும் அதே நினைப்பு. பின்னர் அதை எல்லாம் பிடுங்கி போட்டு வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த வனதுர்கை நோக்கி பயணித்தோம்.

அபிஅம்மா சில செங்கள் வைத்து அடுப்பு மூட்டியவுடன்
நட்ராஜை பார்த்துக்கும் பெரும் கடமை என்னை சேர அவனை அழைத்து கொண்டு காவிரி பக்கம் நடையை கட்டினேன். கேமிரா சகிதம் அபியும் கூட வர நாங்கள் அங்கு குதியாட்டம் போட்டு விட்டு வரும் போது(படத்தில் இருப்பது நானும் நட்ராஜும் அங்கே குளித்து கொண்டிருந்த ஒரு சிறுமியும்)

பொங்கல் ரெடியாகி கொண்டிருந்தது. அங்கே மாடு மேய்க்கும் சில சிறுமிகள் கூட தைரியமாக தண்ணீரில் நீச்சல் அடித்து கொண்டிருக்க எனக்கு அபிஅம்மாவை தனியே விட்டு வந்த பயம் அதிகரித்து கொண்டே வந்ததால் சீக்கிரம் வந்து விட்டோம் 45 நிமிடத்தில்.

அங்கு நவக்கிரகம் கூட மரங்கள் தான். எல்லா கிரகங்களும் இருக்கும் அதே ஒழுங்கில் தென்னை மரங்கள்.
அதை சுற்றி வர மண் பாதை. மரங்களில் கிரகங்களின் பெயர் எழுதி வைத்திருந்தனர்.

நட்ராஜ் ஒரு தென்னை மட்டையை எடுத்து கிரிக்கெட் ஆட ஆரம்பிக்க கொஞ்ச நேரம் கிரிக்கெட் ஆடினோம்.
அப்போது சென்னையில் இருந்து வந்த அபிஅம்மாவின் அக்கா பையன் எங்கள் வீட்டு வாசலில் இருந்து போன் செய்ய அவனையும் வர சொன்னோம். பயந்து பயந்து வந்து சேர்ந்தான். எங்கள் நேரம் குருக்கள் வரவில்லை.

பின்னர் செய்த பொங்கல் பானையுடன் அம்மனுக்கு படைத்து விட்டு சுண்டல் படைத்து நாங்களே ஸ்ருதி சேராமல் தாளம் கட்டுப்பாடுக்குள் வராமல் பாடி முடித்து நாங்களே எல்லாம் நாங்களே என இருந்தோம். அம்மனுக்கு படைக்கும் நேரத்தில் தான் அபிஅம்மாவுக்கு நட்ராஜ் நியாபகம் வந்தது. சத்தம் போட்டு கூப்பிடும் போது தான் நம்பினால் நம்புங்கள் ஒரு மரத்தின் மீது இருந்து

"ஓவர் ஓவர்... ஆன் தி வே" என என் "வம்சம்" குரல் கொடுத்தது.ஓடிப்போய் பார்த்து ஒரு தடவை கிளிக்கிக் கொண்டேன்.(தலைப்பு காரணம் வந்துடுச்சா)

செய்த பொங்கல் எல்லாம் யாருக்காவது கொடுக்க வேண்டுமே. கொண்டு வந்த இலை எல்லாம் பந்தி போட்டோம். எங்கிருந்தோ மாடு மேய்க்கும் சிறுவர்கள், சிறுமிகள் வந்தனர். எல்லோரையும் கூப்பிட்டு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். எல்லோருக்கும் கிருஷ்ணா காசு கொடுத்தது. அவர்கள் கொண்டு வந்த தூக்கு வாளி பழைய சாதம் எடுத்து அவர்கள் அதே இலையில் வைத்து சாப்பிட்டனர். எல்லோரும் தருமை ஆதீன பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமியர்கள். சந்தோஷமாக சாப்பிட்டு விட்டு பறந்தனர்.

எனக்கு பாரதி பாடல் தான் நியாபகம் வந்தது.

காணிநிலம் வேண்டும் பராசக்தி
காணிநிலம் வேண்டும் அங்குத்
தூணில் அழகியதாய் நன் மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் அந்த
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித்தரவேண்டும் அங்கு கேணியருகினிலே
தென்னைமரம் கீற்று இளநீரும்

பத்து பனிரெண்டு தென்னைமரம்
பக்கத்திலே வேணும் நல்ல
முத்து சுடர் போலே நிலவொளி
முன்பு வர வேணுமங்கு
கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதில் படவேண்டும் என்றன்
சிந்தை மகிழந்திடவே நன்றாய்
இளம் தென்றல் வர வேணும்

பாட்டு கலந்திடவே அங்கே ஒரு
பத்தினிப்பெண் வேண்டும் எங்கள்
கூட்டு களியினிலே - பதிவுகள்
கொண்டு வரவேணும் அந்த
காட்டுவெளியினிலே அம்மா நின்றன்
காவலுற வேணும் என்றன் பதிவு
திறத்தாலே - தமிழ்மணத்தை
பாலித்திட வேண்டும்....

ரொம்ப கொழுப்பு தான்... எது எதுக்கு பராசக்திய செக்யூரிட்டி வேலை பார்க்க சொல்வதுன்னு இல்லியா:-))))

மனநிறைவான ஒரு ஆன்மீக பயணம். அடுத்த முறை எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்கள் இந்த கோவிலை பார்க்க தவற வேண்டாம்.