ஜே பி சி இறுதி அறிக்கையும், காங்கிரஸ் 29.10.2013 முதல் அரசியலில் மீண்டும் "உத்தம பத்தினி" ஆன கதையும்!
2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை விசாரிக்கிறேன் பேர்வழி என ஆளும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒன்றை அமைத்து அதற்கு தலைவராக கேரள எம் பி யான பி.சி சாக்கோ அவர்களை நியமித்து விசாரித்து இன்று அந்த குழு தன் இறுதி அறிக்கையை பாராளுமன்ற சபாநாயகர் திருமதி மீரா குமார் அவர்களிடம் சமர்பித்தது. அதில் "பிரதமரை ஆ.ராசா அவர்கள் தவறாக வழி நடத்தி விட்டார்" எனவும் "இந்த பிரச்சனைக்கும் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை" என சொல்லிவிட்டார்.
எனக்கு திரு.ஜெயகாந்தன் கதை தான் நியாபகம் வந்து தொலைக்கின்றது. கற்பிழந்து போனவளை ஒரு குடம் ஜலம் தலையில் ஊற்றி "ச் சூ... ஓடிப்போ"ன்னு சாத்தானை விரட்டி "இன்று முதல் நீ மீண்டும் கற்புக்கரசி" என செய்வது போல நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அவசர அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங், நிதி ப.சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பி.சி சாக்கோவால் "ஜே பி சி விசாரனை இறுதி அறிக்கை" என்னும் ஒரு குடம் ஜலம் கொண்டு அவர்கள் தலையில் ஊற்றி இன்று முதல் "மீண்டும் கற்புக்கரசி" பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது!
2010ல் இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்சனை ஆரம்பித்த போது என்ன செய்திருக்க வேண்டும் காங்கிரஸ்? உடனே பிரதமர் அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். என்னவென்று? "ஒன்னே முக்கால் லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என சி ஏ ஜி சொன்னது உண்மை அல்லது பொய் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஏனனில் அரசு என்பது கார்பரேட் கம்பனி இல்லை. இது மக்களுக்காக நடத்தப்படும் ஒரு அரசாங்கம். தவிர தொலை தொடர்பு என்பதே ஒரு "சேவை" நிறுவனம் தான். அரசுக்கு இழப்பு என்பது எங்களுக்கும் தெரியும். இது அரசு கொள்கை. சி ஏ ஜி சொல்வது போல அரசுக்கு இழப்பு ஏற்படாமல் இந்த தொலை தொடர்பு சேவை நிறுவனத்தை லாபகரமாக ஆக்கி காட்டவும் அரசுக்கு முடியும். ஆனால் அப்படி செய்யப்படின் எப்படி பத்து பைசாவுக்கு போன் செய்ய முடியும்? ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 950 ரூபாய் என இருக்கும் போது அரசு ஒரு சிலிண்டருக்கு 500 ரூபாய் வரை மானியம் கொடுக்கின்றதே... அது கூட அரசுக்கு இழப்பு தான். அது போல பொது வினியோக அரிசி விலைக்கும் அரிசியின் அடக்க விலைக்கும் கூடத்தான் ஒரு கிலோவுக்கு பத்து ரூபாய் வரை இழப்பு அரசுக்கு. அதனால் சி ஏ ஜி தன் வேலை... கணக்கு பார்த்து சொல்வது. அத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அது போல அது ஒன்னே முக்கால் லட்சம் கோடி இழப்பா என்பதை எல்லாம் நாங்கள் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரித்துக்கொள்வோம்" என கூறிவிட்டு அப்போதே அனைத்து கட்சிகள் உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து இதை விசாரித்து இருந்தால் காங்கிரஸ் ஒரு உத்தம கட்சி. அதன் பிரதமர் யோக்கிய சிகாமனி என நம்பி இருக்கலாம்.
ஆனால் நடந்தது என்ன? அப்போது இந்த பிரச்சனை பூதாகரம் ஆன போது அதிலே எதிர்கட்சிகள் பூச்சாண்டி காட்ட எவ்வித முகாந்திரமும் இல்லை என காங்கிரசுக்கு நன்கு தெரிந்தும் கூட்டணி கட்சியாக இருக்கும் திமுகவை தன் கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்க இதுவே சரியான சந்தர்ப்பம் என ஏதோ கத்துக்குட்டி காங்கிரஸ் தலைவர்கள் செய்த துர்போதனையின் காரணமாக காங்கிரஸ் தலைமையும் திமுகவிடம் "ஆ.ராசாவை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்" என கேட்டு அதன் பின்னர் ஒட்டுமொத்த பழியையும் திமுக மீதும், ராசா மீதும் மட்டும் சுமத்தி விட்டால் அவர்கள் வழிக்கு வந்து தன் கட்சியை காங்கிரசிடம் அடமானம் வைத்து விடுவர் என தப்பு கணக்கு போட்டது காங்கிரஸ்.
ஆனால் திமுக தலைமையோ ஆ.ராசா அவர்களையும் கைவிடவில்லை. அது போல காங்கிரசுக்கும் பணிந்து போகவில்லை. அதிக பட்சமாக காங்கிரஸ் சாதித்துக்கொண்டது 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் 63 சீட்டுகள் பெற்றது தான். அதிலே ஐந்து மட்டுமே வெற்றி கண்டது என்பது தனிக்கதை. இந்த 63 சீட்டு தானம் என்பதை தவிர திமுகவும் எதற்கும் பணியவில்லை. காரணம் அதற்கு முன்னரே விஷயம் உச்சநீதிமன்றத்துக்கு பொதுநல புலிகள் வழியாக போய் சேர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளே ஒன்னேமுக்கால் லட்சம் கோடி என்றதும் வாயடைத்துப்போய் சி பி ஐ கிட்டே "உடனே என்ன ஏதுன்னு விசாரிக்கவும். விசாரித்து கைது நடவடிக்கை எனில் அதையும் செய்து முதல் தகவல் அறிக்கையின் படி வழக்கை தொடுக்கவும். இதற்காக தனி சிறப்பு நீதிமன்றம் கூட அமைத்து தருகிறோம். தினம் தினம் வழக்கு நடக்க வேண்டும்" என்றெல்லாம் பொங்கி வெடிக்க அதுவே திமுகவுக்கு சாதகமாகவும் காங்கிரசுக்கு பாதகமாகவும் ஆகித்தொலைந்தது. ஏனனில் இந்த ட்விஸ்டை காங்கிரஸ் கூட எதிர்பார்க்கவில்லை. திமுகவை மிரட்டுவோம். ராசாவை ராஜினாமா செய்ய வைப்போம். வரும் 2011 தமிழக சட்ட மன்ற தேர்தலில் 117 சீட் சரிக்கு சமமா இந்திரா காலத்தில் செய்தது போல செய்வோம். அதன் பின்னே வெற்றி பெற்றால் கூட்டனி மந்திரி சபை, அல்லது ஒருவேளை காங்கிரஸ் அதிக சீட் வாங்கினால் காங்கிரஸ் முதல்வர் என கனவு கண்டது காங்கிரஸ். அறிஞர் அண்ணா கருவறுத்த காங்கிரசை மீண்டும் தமிழகத்தில் முதல்வர் நாற்காலியில் பக்தவத்சலத்துக்கு பின்னர் அதாவது 1966க்கு பின்னர் 45 வருடங்களுக்கு பின்னர் அமர்த்திப்பார்த்து அழகு பார்க்கலாம் என நினைத்தது காங்கிரஸ்.
அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் ராசாவின் ராஜினாமா கடிதம் வாங்கப்பட்ட உடனேயே பொதுநல புலிகள் பிரஷாந்த் பூஷன், சுனாசுவாமி ஆகியோர் உச்சநீதிமன்றம் சென்று அங்கே களேபரம் ஆகி ராசா தனக்கு தானே வாதிடவும், ஜாமீன் கூட கேட்காமல் சி பி ஐ யே திணறும் அளவுக்கு வாதங்கள் முன் வைத்த நிலையில் .... இது என்ன கூத்து என இதை படிக்கும் நீங்கள் கேட்கலாம்... சொல்கிறேன்... ஒன்னே முக்கால் லட்சம் கோடி இழப்பு என சொன்ன போது "ஆஆஆஆ... அப்படியா?" என வாய்பிளந்த உச்சநீதிமன்றம் சி பி ஐ வழக்கு தொடுக்கும் போது ஆரம்பமே சறுக்கல்.. சி பி ஐ வழக்கு தொடுத்ததே சுமார் 40000 கோடி இழப்பு ஆகிவிட்டது ராசாவால் என சொன்ன போதே முதல் சறுக்கல். பின்னர் அந்த தொகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பின்னர் காணாமல் போய்விட்டது. ஒரு கட்டத்தில் ராசாவின் மனைவிக்கு மொரீஷியஸ் நாட்டில் பல்லாயிரம் கோடி இருக்கின்றது என்றது. அதை டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல பத்திரிக்கைகள் அப்போது தலைப்பு செய்தியாக வெளியிட்டன. ராசா அப்போது நீதிமன்றத்தில் நீதிபதி ஓ பி சைனியிடம் எதுவும் பேசவில்லை. "அப்படியா? அப்படி எனில் அதை கைப்பற்றி இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள்" என்றார். சி பி ஐ கூட நாங்கள் ஒரு குழுவை அங்கே அனுப்பி விசாரிக்க சொல்கிறோம் என்றது. பின்னர் பல மாதங்கள் கடந்த நிலையில் ராசா அதே நீதிபதி ஓ பி ஷைனியிடம் "அந்த மொரீஷியஸ் பணம் வந்து விட்டதா?" என கேட்க சி பி ஐ அதிகாரிகள் வெலவெலத்துப்போனது இங்கே எத்தனை பேருக்கு தெரியும். ஓ பி ஷைனி சி பி ஐ வசம் "என்ன ஆனது அந்த விசாரணை" என கேட்ட போது பதில் எதும் இல்லை சி பி ஐ வசம் இருந்து. அது போல மாத்தூர் என்னும் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி அடித்த பல்டி, இப்போது அட்டர்னி ஜெனரல் ஆக இருக்கும் வாகன்வது வியர்த்து விறுவிறுத்து போனது எல்லாம் அங்கே தினம் தினம் சி பி ஐ க்கு பெரிய இடியாக இருக்கின்றது . இப்டியாக அங்கே வழக்கு அருமையான கோணத்தில் போய் கொண்டு இருந்த போது அப்போதும் காங்கிரசுக்கு எரிச்சல் திமுக மீது.
உடனே கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கடனாக கைமாறியது என காரணம் காட்டி கனிமொழியை சிறை வைத்தனர் தன் கைவசம் இருந்த தலையாட்டி பொம்மைகளான சி பி ஐ கொண்டு. ஆனது... அதற்கும் திமுக சட்டப்படி அந்த சவாலையும் சமாளித்து இன்று கனிமொழி ஜாமீனில் வெளிவந்து அந்த வழக்கில் இருந்தே தன்னை விடுவிக்க வேண்டும் என கனிமொழி அவர்கள் தனியே ஒரு ரிட் மனு தாக்கல் செய்யும் அளவு அந்த சி பி ஐ தொடுத்த வழக்கில் ஓசோன் படலம் போல பெரிய பெரிய ஓட்டைகள்.
இந்த நேரத்தில் தான் ராசா அவர்கள் தன் அடுத்த அடுத்த அஸ்திரம் பாய்ச்சத் தொடங்கினார் நீதிமன்றத்தில். தான் செய்த எல்லாமே அமைச்சரவை ஒப்புதல் பேரில் தான், அமைச்சரவை ஒப்புதலில் பேரில் தான் என்று. (அதிலே பிரதமர் மன்மோகன் சிங் கையெழுத்து இட்டதும், அதற்கு முன்பாக பிரதமர் அலுவலகம் முழுக்க முழுக்க அதிலே "நோட்" எழுதியதையும் அப்பட்டமாக பின்னி பினைந்து கிடப்பதையும் சமீபத்தில் மிக சமீபத்தில் "The Hindu" கூட வெளியிட்டது.)
இதற்கு முன்னரே வழக்கை சந்திக்க திமுகவும் ஆ.ராசாவும் தயாராகிவிட்டனர் என்ற நிலையில் காங்கிரஸ் உடனே அவசர அவசரமாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கும் என்றது. இதே கட்டுரையில் நான் ஆரம்பத்தில் சொன்னது போல சி ஏ ஜி அறிக்கை வந்தவுடனேயே இதை செய்திருக்க வேண்டும். ஆனால் கத்துக்குட்டி தலைவர்களின் துர்போதனை... மீண்டும் நான் பகிரங்கமாக சொல்கிறேன்.... திமுகவை அடக்கி அடமானமாக அந்த கட்சியை வாங்க வேண்டும் என்ற நினைப்பில் அந்த கத்துக்குட்டி தலைவர் செய்த காரணத்தால் எல்லாம் சொதப்பலாகிப்போனது காங்கிரசுக்கு.
நீதிமன்றத்தில் வழக்கு நல்ல படி நடந்து கொண்டு இருப்பதும்,இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்சனை காரணமாக திமுக கொஞ்சம் சுனக்கமாக இருந்த நிலை மாறி சிலிர்ப்பி கொண்டு எழுந்து நின்றதையும் கண்ட காங்கிரஸ்... இனியும் நீதிமன்ற போக்கில் விட்டால் 2014 பாராளுமன்ற தேர்தலில் பல் இளிக்க வேண்டிய நிலை வந்து விடும் என நினைத்து உலக உத்தமர் பி.சி சாக்கோ என்னும் தலையாட்டி பொம்மையை தேர்ந்தெடுத்து அவரை தலைவராக்கி ஒரு அனைத்து கட்சி குழுவை அமைத்து அதிலே மிக ஜாக்கிரதையாக மெஜாரிட்டி உறுப்பினர்கள் காங்கிரஸ் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் பார்த்து பார்த்து உறுப்பினர் ஆக்கியது. குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அவர்களுக்கு சாதகமாக இருக்கும் படி பார்த்துக்கொண்டது.
பி.சி சாக்கோ விசாரித்த லட்சனம் நாடே அறிந்தது. ஒரு மனிதன் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. இப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக இருக்கும் வாகன்வதி இதே ஜே பி சி க்கு முன்னர் வந்து ஆ.ராசா மீது பொய்யான ஒரு குற்றச்சாட்டை சொல்கிறார். (இதே வாகன்வதி தான் அப்படி பொய் தகவல் சொல்லும் ஒரு சில நாட்கள் முன்பாக சி பி ஐ சிறப்பு நீதி மன்றத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசி ராசா அவர்களால் குறுக்கு விசாரணையின் போது பேந்த பேந்த விழித்தார்.) உடனே ராசா அவர்கள் ஜே பி சி தன்னையும் இது விஷயமாக நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரை விசாரிக்க மாட்டார்களாம். இது உலக வரலாற்றில் எங்காவது பார்த்தது உண்டா? இந்த அநீதியை எங்காவது கேள்விப்பட்டது உண்டா? சட்ட விரோதமாக நடக்கும் கட்டப்பஞ்சாயத்தில் கூட இரு தரப்பையும் அழைத்து தான் ஒரு பக்கமாக நீதி சொல்லி பார்த்தும் கேட்டும் இருக்கின்றோம். ஆனால் இதிலே உலகமே உற்று நோக்கும் ஒரு விஷயத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர் விசாரிக்கப்படவில்லை. அதை விட கொடுமை... அந்த குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா அவர்களே தானே வலிய வந்து "என்னை விசாரிக்கவும்" என யார் அந்த விசாரிப்பு குழுவை அமைத்தாரோ அந்த நாடாளுமன்ற சபாநாயகருக்கு 3 பக்க கடிதம் எழுதுகிறார். ஆதன் காப்பியை ஜே பி சி தலைவர் பி சி சாக்கோவுக்கும் அனுப்புகிறார். அதன் பிரதிகள் எப்படியோ பத்திரிக்கையில் வெளியாகின்றது.அந்த விசாரனை குழுவில் இருக்கும் ஒரு உறுப்பினர் திமுகவின் டி ஆர் பாலு, இன்னும் ஒரு உறுப்பினர் திருச்சி சிவா. இருவரும் பி சி சாக்கோவிடம் மன்றாடி பார்த்தும் அந்த கடிதங்களை குப்பையில் தூக்கி போட்டு விட்டு "ராசாவின் கடிதம் நிராகரிக்கப்பட்டது" என மார்தட்டுகின்றார் இந்த உலக உத்தமர் பி சி சாக்கோ. அப்போதே தெரியும் நீதி எப்படி வரும் என்று.
இதன் நடுவே பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் "ராசாவை விசாரணைக்கு அழைக்க வேண்டும் " என குரல் கொடுக்க வேறு வழி இல்லாமல் "ராசா எழுத்து மூலமாக பதில் அளிக்கலாம்" என சொல்லப்படுகின்றது. ராசாவும் சளைக்காமல் 17 பக்கத்துக்கு விளக்கம் அனுப்புகின்றார்.அதில் தொலை தொடர்பு துறை எடுத்த முடிவுகள் இந்த ராசா எடுத்த தனிப்பட்ட முடிவு இல்லை. பிரதமரும், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும். அப்போதைய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு குழு தலைவராக இருந்த அப்போதைய வெளிவிவகார துறை அமைச்சர் பிரணாப்பும் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என தெரிவித்து இருந்தார்.
அந்த விளக்கத்தின் படி மன்மோகன்சிங், ப.சிதம்பரம் இருவரும் பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு முன்னர் தன்னை விசாரனைக்கு உட்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் அவர்கள் உத்தமர்களாக இருக்கும் பட்சத்தில். இல்லை. அது நடக்கவில்லை. அது போல பி சி சாக்கோ அவர்கள் திட்டவட்டமாக "பிரதமரும் , ப.சிதம்பரமும் விசாரணைக்கு வர தேவை இல்லை" என சொல்கிறார். இது தான் நாடாளுமன்ற கூட்டு விசாரனை கமிஷன் செயல்படும் விதமா? இது தான் நியாயமா?
பின்னர் ராசா அவர்களை விசாரிக்காமலேயே ஏப்ரல் 22ம் தேதி,2013 என நினைக்கிறேன். ஜே பி சி தலைவர் பி சி சாக்கோ ஒரு வரைவு அறிக்கை தயாரிக்கின்றார். சாக்கோ தன் வரைவு அறிக்கையை தன் தலைமையில் இயக்கும் விசாரணை குழுவினருக்கு கூட கொடுக்கும் முன்னரே பத்திரிக்கைக்கு கொடுத்து நாடாளுமன்ற உரிமை மீறல் செய்து தன் ராகுல் விசுவாசத்தை காட்டிக்கொண்டார்.ஆனாலும் ஜே பி சி வரைவு தீர்ப்பில் இதல்லாம் மன்மோகனுக்கு தெரியாது, ப.சிதம்பரத்துக்கு தெரியாது. பிரணாப்க்கு தெரியது ...ராசாவுக்கு மட்டுமே தெரியும். ராசா எடுத்த முடிவு தான் எல்லாம் என்னும் பாணியில் சொல்லப்பட உடனே அதாவது வரைவு அறிக்கை வெளியான 24 மணி நேரத்திற்குள் ஆ.ராசா அவர்களின் தன்னிலை விளக்கம் ஜே பி சி க்கு அனுப்பப்பட்டது.
இதோ இந்த பதிவில் இணைக்கட்ட "லிங்"ல் சென்று ஆ.ராசா அவர்களின் 112 பக்க தன்னிலை விளக்க கடித்தம் படித்து பாருங்கள். அதிலும் குறிப்பாக 72ம் பக்கம் எல்லாம் கொஞ்சம் ஆழ்ந்து படியுங்கள். பிரதமரை எத்தனை முறை ராசா அவர்கள் இந்த விஷயத்துக்கக நேரிடையாக அவரது அலுவலகத்திலும், அவரது வீட்டிலும், அவர் கூட்டிய அமைச்சரவை கூட்டத்திலும் சந்தித்தார், எத்தனை முறை கடிதம் மூலமாக தொடர்பு கொண்டு ஆலோசித்தார், அதில் எத்தனை முறை பிரதமர் அலுவலக அதிகாரிகள் குறிப்புகள் எழுதி பிரதமருக்கு அனுப்பி அதை முழுவதும் படித்து விட்டு பிரதமரும் குறிப்பு எழுதி இருக்கின்றர் என்றெல்லாம் விளக்கி எழுதியுள்ளார் ஆ.ராசா அவர்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக ஊதி பெரிதாக்கப்பட்ட பின்னர் ஒரு வாரம் கழித்து கூட பிரதமரிடம் தான் ஆலோசித்ததை சொல்லி இருக்கின்றார்.
இந்த 112 பக்க கடிதம் ஒரு புத்தகம் போல முதல் பக்கத்தில் "INDEX CONTENT" எல்லாம் போட்டு எந்த பக்கத்தில் என்ன தலைப்பில் விஷயம் இருக்கின்றது என ஒரு வரலாற்று சிறப்பு மிக்க புத்தகம் போல அமைந்துள்ளது. இதையும் ஆனால் சாக்கோ அவர்கள் அதை தன் நாற்காலிக்கு முட்டு கொடுத்து விட்டு இப்போது இந்த இறுதி அறிக்கையில் "ஒரு கேவலமான தீர்ப்பை" எழுதி முடித்துள்ளார். படித்து உண்மை அறியுங்கள். இதோ இந்த சுட்டியில் சென்று அந்த 112 பக்க ராசாவின் விளக்கத்தை ஆழ்ந்து படியுங்கள் நடுநிலையாளர்களே! படித்து பாருங்கள்!
http://www.scribd.com/doc/137506637/JPC-Written-Statement-of-A-Raja-Date-22-04-2013
அதை வாங்கி புட்டத்துக்கு முட்டுக்கொடுத்து விட்டு தன் முதலாளிகள் மன்மோகன் சிங்கையும், சோனியா அம்மையாரையும், காங்கிரசை வரும் காலத்தில் கைதாங்கலாக இமயமலை உச்சிக்கு அழைத்து செல்ல இருக்கும் தேவதூதன் பிரபல "லெக்தாதா" ராகுல்ஜி அவர்களையும் இவர்களுக்கு சற்றும் சளைக்காத குணங்கள் கொண்ட கோமான், சிவகங்கை பெற்றெடுத்த சின்ன பையன், பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்யாசத்தில் "வெற்றி" (????) பெற்ற சிங்கம் ப.சி அவர்களையும் காப்பாற்ற வேண்டியும் வரிந்து கட்டிக்கொண்டு "வரைவு அறிக்கை" யை "விரைவு அறிக்கையாக" கொல்லைப்புற வழியாக ஊடகங்களுக்கு கொடுத்து விட்டு நீதியை நிலைநாட்டி விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டு விட்டார் பி.சி சாக்கோ அவர்கள். இதற்கு "மூச்சை விட்டிருந்தால்" கூட நீதி தேவன் மன்னித்திருப்பான்.
வரைவு அறிகையை தாக்கல் செய்த அன்று பாராளுமன்றம் தொடங்கியதும் உ.புத்திரன் பி.சி சாக்கோ மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தது திமுக. "இது எப்படி ஜே பி சி யில் இருக்கும் எனக்கே அந்த "வ(வி)ரைவு அறிக்கை" வந்து சேராத போது இந்தியாவின் கடைக்கோடி கன்யாகுமரி டீக்கடை காரருக்கு கூட விரைவா போச்சுதுன்னு திருச்சி சிவாஅவர்கள் கொசின் கேட்க அன்றைக்கு பாராளுமன்றமே ரசாபாசமாகிடுச்சு. அப்டி என்னத்தான் அந்த "வ(வி)ரைவு அறிக்கை"ல இருக்குன்னு திருச்சி சிவா கேட்டாரு.
அதுக்கு முன்ன காங்கிரஸ் கைக்கூலி பி.சி சாக்கோ அந்த விரைவு அறிக்கைல என்னா சொல்லியிருக்காருன்னு ஒரு தபா நாமும் பார்த்துடனும்ல. இதாங்க அந்த அறிக்கை. "அதாவாது மன்மோகன் நல்லவரு, வல்லவரு, நாலும் தெரியாதவரு, வாயிலே விரலை வைத்தால் கூட ஒரு தபா சப்பிட்டு 'எச்சிவுட்டேன்'ன்னு சொல்லும் நல்ல பிள்ளை, அவரை ராசா என்னும் பெரம்பலூர் பூச்சாண்டி மயக்க சாக்லெட் கொடுத்து கூட்டிட்டு போய் "நான் கடவுள்" படத்தில் வருவது போல கண்ணை நோண்டி பிச்சை எடுக்க விட்டாரு. திருட்டு மாங்காய் அடிக்க சொல்லி அதிலே உப்பு தொட்டு துன்னுட்டு சப்பு கொட்டி கித்தாப்பா சிரிச்சாரு. மத்தபடி மன்மோகன் சிங்கு நெம்ப நல்லவரு. அதுமாரியே தான் சிதம்பரம் பையனும். குஞ்சி பிடிச்சு உச்சா போவக்கூட தெரியாம படுக்கைல உச்சா போவாருன்னு தர்காவுல மந்திரிச்சு கயித்த கட்டிகிட்டவரு, முனியசாமி கோயில்ல குனிய வச்சு நேத்திகடன் செஞ்ச பின்னாலக்க தான் வாயில ஒழுவுன வாணி கூட நின்னுச்சு, அத்தினி பச்ச மண்ணு ரெண்டும். ராசா பையன் தான் ரெண்டு பேரையும் கெடுக்க பாத்தான்" - இதான் நம்ம உத்தம புத்திரன் பி சி சாக்கோவின் "விரைவு அறிக்கை". கலைஞர் கூட "எங்கூட்டு பையன் ராசா, ஒசரத்திலும் அண்ணா தான் ..வெவரத்திலும் அண்ணாதான். எப்பத்திக்கும் பஷ்ட் மார்க்கு தான். அந்த ரெண்டும் தான் தத்தாரிங்க. அதுங்களை எங்கூட்டு பையன் கெடுத்தான்னு சொன்னா எந்த மடப்பயமொவன் நம்புவான். கேப்பைல கெரசின் வடியுதுன்னா கேக்குறவன் சைதை நுரைசாமியா தான் இருப்பான்"ன்னு ஒரே போடா போட்டாரு.
மக்களவை, மாநிலங்களவை ரெண்டிலும் 22,ஏப்ரல் 2013 வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அன்று திமுக எம் பிக்கள் இந்த பிரச்சனை எழுப்பி அந்த சாக்கோ ஒரு சைக்கோ, அந்த ஆளை டவுசர் கழட்டாம உட மாட்டோம்னு தாண்டி தோண்டில குதிக்க ...கூடவே பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்தும் சேர்ந்து குதிக்க மீராகுமார் சிரிச்சுகிட்டே கழுத்தை அறுத்துட்டாங்க. "சபை ஒத்தி வைக்கப்பட்டது"ன்னு. அது போல மாநிலங்களவை அமீத் அன்சாரியும் "அ யம் சாரி"ன்னு சொல்லிட்டு ஒத்தி வச்சுட்டாரு. அன்னிக்கு இதான்ப்பா நடந்துச்சு பாராளுமன்றத்திலே.
பின்னர் அந்த கூட்டுக்குழு உறுப்பினரில் ஒருவரான திருச்சி சிவா அவர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அவருக்கு பதிலாக வேறு ஒரு திமுக உறுப்பினர் அங்கே நியமிக்கப்பட வேண்டும். அந்த சின்ன இடையூறு கூட வேண்டாம் என நினைத்த காங்கிரஸ் அந்த ஒரு உறுப்பினர் பதவியை கூட திமுகவுக்கு கொடுக்கவில்லை. அப்படி கொடுப்பின் எங்கே அந்த குழுவில் தனது மெஜாரிட்டி பறிபோய்விடுமோ என்கிற பயம்.
இந்த நிலையில் தான் இன்று விசாரனை அறிக்கை - இறுதி அறிக்கை வெளியானது. அதே வரைவு அறிக்கையே "இறுதி அறிக்கையாக"!அது உத்தமபுத்திரன் பி.சி சாக்கோவால் இன்று(29.10.2013) பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாரிடம் இன்று வழங்கப்பட்டது. "பிரதமரை ஆ.ராசா தவறாக வழி நடத்தினார்". இது தான் சாராம்சம் அந்த இறுதி அறிக்கையில். மேலும் "பிரதமரும், நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இதில் எவ்வித சம்மந்தமும் இல்லாதவர்கள்" . பிரமாதம். நான் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல இதோ எதிர்வரும் டிசம்பர் 4 தேதி நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் வரும் மே மாதம் 2014 ல் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல் இரண்டுக்கும் முன்பாக மன்மோகன், சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலையில் புனித நீர் ஊற்றியாகிவிட்டது. இனி அவர்கள் "அரசியல் உத்தமர்கள்". இதை உலகம் நம்பும்? இந்திய மக்கள் நம்புவார்கள்? ஹூம்... கேவலமாக ஆனது காங்கிரஸ் அந்த கத்துகுட்டி தலைவரால் என்பது மட்டுமே உண்மை. இந்த கத்துகுட்டியின் கையில் இனி இந்தியா கிடைத்தால் இந்தியா வெளங்கிடும்!
ஆனால் இந்த ஜே சி பி இறுதி அறிக்கை ஒன்றும் இங்கே முக்கியமானது இல்லை. நீதிமன்றம் இருக்கின்றது. அதிலே வழக்கு நடந்து கொண்டு இருக்கின்றது. இதிலே இனிமேல் உச்சநீதிமன்றம் பெரிதா? நாடாளுமன்றம் பெரிதா? என்னும் கூக்குரல்கள் ஒலித்து முடிக்க வேண்டும். எது பெரியது என முடிவுக்கு வரவேண்டும். இதல்லாம் நடக்கட்டும். பின்னர் அதை எல்லாம் பார்த்து கொள்வோம்.
இன்னும் நடக்க வேண்டியது எவ்வளவோ இருக்கின்றது. காங்கிரசுக்கு சாவுமணி அடிக்கும் பிரச்சனை இனி இதான். எப்படியும் பாராளுமன்றத்தில் அறிக்கையை சாக்கோ தாக்கல் செய்யனும். அதுக்கு முன்ன ஜே பி சி கூட்டத்தில் அதை தாக்கல் செஞ்சு ஒப்புதல் வாங்கனும்.அதை செஞ்சாங்கலான்னு தெரியவில்லை. பாராளுமன்றத்துக்கு அந்த அறிக்கை வந்தா அங்க விவாதம் இருக்கு. அதிலே ஆ.ராசா அவர்களே தனது வாதத்தை எடுத்து வைப்பாரு. அது ஒன்னும் தமிழக சட்ட சபை இல்லை. எல்லாம் லைவ் ரிலே. மக்கள் கவனிப்பாங்க. காங்கிரஸ் அரசே ,காங்கிரஸ் அரசே இதிலே இருந்து நீங்க தப்பிக்க ஒரே வழி தான் இருக்கு. கொஞ்ச நாள் ரெண்டல் பேசிஸ்ல தனபாலை அங்க கொண்டு போங்க. லைவ் டெலிகாஸ்ட் செய்ய செயா டி விக்கு மட்டும் உரிமை கொடுங்க. மேசை தட்ட த கு செமிழரசன், கொரத்து சமாரு, அணிசரசு, ரைக்கேல் மாயப்பன்ன்னு மேசை தட்டும் கூட்டத்தையும் கொண்டு போங்க. எவன் பேச்சும் எவன் காதிலும் விழாம பார்த்துப்பானுங்க. போங்கடா போக்கத்த பயலுவலா....
இனி பி சி சாக்கோ அய்யா அவர்கள் வெட்டியாய் பொழுதை கழிப்பார். விடாதீங்க காங்கிரஸார்களே, உடனே நாளை முதல் "நிலக்கரி சுரங்க ஊழல் ரெண்டு லட்சம் கோடியாம். அதை ஒரு பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து அய்யாவை தலைவராக்கி டிசம்பர் 4ம் தேதிக்கு முன்னதாக ஒரு நல்ல தீர்ப்பை சொல்லும் படி பணிக்கவும். அது முடிந்ததும் .... உங்களுக்கு என்ன குறைச்சல். அதான் ஏகப்பட்ட ஊழல்கள் உங்கள் அக்கவுண்டில் இருக்குதே. இனி சாக்கோவை பிஸியாகவே வைத்திருக்கலாம். ஓடுற ஓட்டம் மே மாதம் 2014 வந்துடும். பின்னே உங்களுக்கு இந்த கவலை எதும் இருக்காது.
இதில் இன்னும் ஒரு விஷயம்... ஆ.ராசா என்னும் தன் சக கேபினட் அமைச்சரின் வழிகாட்டுதலால் பிரதமர் நடக்கின்றார் எனில் இவர் என்ன மண்ணா? களிமண்ணா? பி சி சாக்கோ இதை பிரதமருக்கு செய்யும் விசுவாசமாக நினைத்துக்கொண்டு இபப்டி ஒரு அறிக்கை கொடுத்து அசிங்கம் செய்த நிலையில் இனியும் சொல்வார் பேச்சை கேட்கும் கேடு கெட்ட பிரதமர் இந்தியாவுக்கு தேவையா என்பதையும் அந்த பிரதமர் சார்ந்து இருக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு தேவையா என்பதையும் மக்கள் உணர வேண்டும். அதற்காக மோடி என்னும் கொலைகார கும்பலும் வேண்டாம். மூன்றாவது உருப்படியான அணி அமையட்டும். அது என்ன செய்கிறது இந்தியாவை எனவும் முயன்று பார்ப்போம்! மீண்டும் சொல்கிறேன். அந்த மூன்றாவது அணியும் உருப்படியான அணியாக இருக்கும் பட்சத்தில் இருந்தால் மட்டுமே இந்தியா உருப்பரும். இனி மக்கள் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும்!
Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts
October 30, 2013
March 15, 2013
காங்கிரசை "கை"கழுவ திமுகவுக்கு சரியான தருணம் இது!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் Vs பி ஜே பி என்பது சர்வநிச்சயம். இதிலே மூன்றாவது அணி அமைந்தால் அதிலே யார் யார் கூட்டு என்பது பற்றி எல்லாம் நாம் அதிகமாக யோசிக்க வேண்டியதில்லை.அது நம் வேலையும் இல்லை இப்போதைக்கு.
இப்போதைக்கு என் பிரச்சனை.. நாம் காங்கிரசுடன் கூட்டணி தொடர்கிறோம் என்றால் நம் கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என யோசித்து பார்ப்பின் பலம் என்பது பூஜ்ஜியம். பலவீனம் என்பது 200 சதம் என்பதே உண்மை. காங்கிரசை எதிர்த்து மேடையில் முழங்க இந்திய அளவில் அதாவது அரசியல் கட்சிகள் நிலையில் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் விஷயம் , நிலக்கரி சுரங்க ஊழல், சமீபத்திய ஹெலிகாப்டர் ஊழல் என பெரிய பெரிய விஷயங்கள் , மற்றும் இலங்கை மீதான வெளியுறவு கொள்கையில் இருக்கும் வழவழா கொழகொழா நிலை என பேச பெரியதாக இருக்கும் நிலையில், பொதுமக்களை பொறுத்தவரை ரயில் கட்டணம் உயர்வு,கேஸ் மானியம் நிறுத்தம், குறைந்த அளவினால கேஸ் சிலிண்டர் ஒதுக்கீடு ஆகியவையும் இப்போது மேலும் ரயில் கட்டண உயர்வு வரப்போகின்றது என்பதும், அடுத்து மிகப்பெரிய பாதிப்பாக டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வும், அதனால் பொது மக்கள் நேரிடை பாதிப்புக்கு உள்ளாவதும் காங்கிரசை ஒரு "கை" பார்த்து விட துடிக்கின்றன.
சரி அதே காங்கிரசுக்கு மாநிலத்துக்கு மாநிலம் என்ன பிரச்சனைகள் என பார்த்தோமானால் ... இப்போதைக்கு நாம் இக்கட்டுரையில் தமிழகத்தை பற்றி மட்டுமே பார்ப்போம். தமிழகத்தை பொறுத்த மட்டில் இப்போது மிக முக்கியமாக ராகுல் மீது எந்த திராவிட கட்சிகளுக்கும் ஒரு ஈர்ப்பும் இல்லை. முதல் காரணம் அவர் எடுக்கும் முடிவுகள் எல்லாமே சிறுபிள்ளை தனமாகவே இருந்து தொலைக்கின்றன துரதிஷ்டவசமாக. தவிர தமிழகத்தை பொறுத்த மட்டில் கொஞ்சம் மரியாதை எதிர்பார்க்கும் ஒரு வித கலாச்சாரம் விரவிக்கிடக்கும் மாநிலம். இதுவரை கலைஞரை வந்து ஒரு மூத்த கூட்டணி கட்சி தலைவர் என்னும் முறையில் கூட மரியாதை நிமித்தம் சந்திக்காமை போன்ற நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அடுத்து மிக மிக முக்கியமாக இலங்கை பிரச்சனை.
இது ஒட்டு மொத்த தமிழக தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடிய பெரிய சக்தியாக திகழும் என்னும் நிலை தான். ஏனனில் மாணவர்கள் அதாவது கல்லூரி மாணவர்கள் ஓட்டுகள் என்பது ஈழ விஷயத்தில் நிச்சயம் காங்கிரசுக்கு எதிராக மட்டுமே அமையும். 2009 தேர்தல் நேரத்தில் ஈழத்தில் உச்சகட்ட போர் நிகழ்ந்தது. மே 13 தேர்தல் எனில் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் பிரபாகரன் படுகொலை... இதற்கே தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு சில பல தொகுதிகள் இழக்க வேண்டியும் சிதம்பரம் போன்றவர்கள் நொண்டி அடிக்கும் நிலையிலும் மணிசங்கர் எல்லாம் மண் கவ்வும் நிலைக்கும் ஆளானது. இதனாலேயே அதிமுகவுக்கு கனிசமாக தொகுதிகள் கிடைத்தன. இது தான் உண்மை. இத்தனைக்கும் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டு இருந்தது. ஆனால் மக்கள் அப்போதைக்கு எது உக்கிரமான பிரச்சனையோ அதை தான் வைத்து தேர்தல் ஓட்டு போடுகின்றனர். போதாத குறைக்கு சீமான், வைக்கோ, நெடுமாறன் ஆகிய ஓட்டு வங்கி இல்லாதவர்களும் கூட அதிமுகவுக்கு ஆதரவாக அதாவது திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என சொன்னால் தானாக அடுத்த கூட்டணி என பார்த்தால் அதிமுக கூட்டணி தானே? அங்கே போய்விட்டனர் நடுநிலையாளர்கள்.
அதன் பின்னர் இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் மிகப்பெரிய நலத்திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டன. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், நவீன சாலைகள், மிகப்பெரிய பெரிய பாலங்கள், தேர்தல் வாக்குறுதிப்படி கோடி குடும்பங்களுக்கு வண்ண தொலைக்காட்சி, ஒரு ரூபாய் அரிசி திட்டம், மகளிர் திட்டங்கள், சுய உதவிக்குழு, விவசாயிகளுக்கு முடிந்த வரை இருந்த வரைசீர் செய்யப்பட்ட விளை நிலம் வழங்குதல், கடைசி கட்டமாக தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நூறு சதம் முடிந்து விட்ட நிலையில் புதியதாக தமிழகம் முழுமையாக குடிசை வீடுகளே இல்லை எனும் நிலையாக 25 லட்சம் கான்கிரீட் வீடுகள் என ஒரு திட்டம் தீட்டி அதில் ஒன்னரை லட்சம் பயனாளிகளுக்கு வழங்கியும் மீதமுள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்ட சான்றிதழும் வழங்கி தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதை செய்வோம் என சொல்லியும் ...இப்படியாக என ஒரு நல்லாட்சி நடைபெற்றும் சட்டசபையில் பிராதன எதிர்கட்சி கூட இல்லை என்னும் நிலை வந்தது.
அதற்கு காரணம் தமிழக மக்கள் மனதில் உள்ளே "கடலுக்கு அடியில் சுனாமி" என்பது போல மேலே அமைதி உள்ளே சுனாமி என ஈழமக்கள் நிலை அவர்களை அழ வைத்த பெரும்பங்கு அப்போது செய்யப்பட்ட பிரச்சாரமேயாகும். அதை திமுக தவிர்த்திருக்க நல்ல வாய்ப்பும் அமைந்தது. திமுகவினர் தங்கள் மரியாதைக்குரிய ராஜமாதாவாக நினைக்கும் தயாளு அம்மையாரை அறிவாலய முதல் தளத்தில் சி பி ஐ விசாரிக்க அந்த சி பி ஐ ன் உச்சகட்ட தலைவர் என சொல்லப்படும் மத்திய உள்துறை அமைச்சர் கீழ் தளத்தில் "சீட்டு பேரம்" செய்தமையை எந்த திமுகவினரும் ரசிக்கவில்லை. மேலும் திமுகவின் அவசர உயர்நிலை செயல்திட்ட கூட்டம் கூடி காங்கிரசுடன் இனி உறவு இல்லை என அறிவித்த போது திமுகவினர் அதிகபட்சமாக தங்கள் மகிழ்வை நாடெங்கும் வெளிப்படுத்தியமை யாரும் மறுக்க இயலாது. (அப்போது அன்றைய தினத்தில் எழுதப்பட்ட "பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத்தூளை காறித்துப்பினோம்" என எழுதப்பட்ட கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்)
அப்போது திமுகவினருக்கு எழுந்த ஒரு உணர்சி வெள்ளத்தை அப்படியே தேர்தல் வேலைக்கு பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு காங்கிரசால் ஏற்பட்ட களங்கத்தை போக்கியிருக்கலாம். ஆனால் உயர்நிலை செயல்திட்டத்தின் படி ராஜினாமா செய்ய டெல்லி சென்ற மத்திய அமைச்சர் பெருமக்கள் காங்கிரசுக்கு 63 தொகுதிகள் என கட்சியை அடமானம் வைத்து விட்டதாக அப்போது சோலை போன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் அழுது எழுதினர். திமுகவினர் சோர்ந்து போயினர். அப்போது வெற்றி பெற்ற 24 திமுக உறுப்பினர்கள் காங்கிரஸ் உறவு இல்லாவிட்டாலும் வெற்றியடைந்து இருப்பர் என்பது நிச்சயம். தவிர மாவட்டத்துக்கு ஒரு மூன்று தொகுதிகள் இன்னும் அதிகமாக கிடைத்து இருக்கும். ஆக ஆளும்கட்சி என்னும் நிலை இல்லாவிடினும் கூட கண்டிப்பாக வலுவான எதிர்கட்சியாக இருந்திருக்கும். அதே நேரம் அதிமுகவோ மைனாரிட்டி அதிமுக அரசாக ஆகியிருக்கும். அந்த பொன்னான வாய்ப்பை கூட திமுக நழுவ விட்டது காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே என்பது உண்மை. ஆக ஈழப்பிரச்சனை அத்தோடு முடிந்ததா இந்த இரு வருடங்களில் அதாவது இன்னும் சொல்லப்போனால் 2009 மே 17 க்கு பின்னர் கூட காங்கிரசுக்கு ஈழத்தின் மீதான வெறி தணிந்ததா எனில் இல்லை இல்லை இல்லவே இல்லை என்பதை சமீபத்தில் சுஷீல்குமார் ஷிண்டே "இலங்கை நட்பு நாடு" என சிலாகித்து சொன்னது கொம்பேரி மூக்கன் பாம்பின் நிலையில் தான் காங்கிரஸ் இன்னமும் ஈழமக்கள் மீது கொண்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!
சரி! காங்கிரஸ் இப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தோல்வி அடைய இந்த ஈழம் மட்டுமே காரணமா என நினைத்து பார்ப்பின் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மீது நடுநிலையாளர்கள் கொண்டிருந்த வெறுப்பு இப்போது வழக்கு நடைந்து கொண்டு இருக்கும் போது பலவித பரிணாம வளர்சியுடன் காங்கிரஸ் பக்கம் முழுவதுமாக திரும்பி விட்டது. திமுகவை பொறுத்த மட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் இருந்து முழுமையாக அல்ல 90 சதம் விலகி வந்து விட்டது . அதனால் இதில் இனிமேல் திமுகவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஜே பி சி க்கு பகிரங்கமாக கேட்டாகிவிட்டது..."என்னை விசாரிக்கவும்" என திமுக தரப்பில் இருந்து. இப்போது ஒட்டு மொத்த இந்திய மனநிலை "ராசாவே தன்னை விசாரிக்க சொல்லி கெஞ்சிகிட்டு இருக்காரு, அவங்க ஒத்துக்கலைன்னா என்னா அர்த்தம்? மன்மோகன் சிங், சிதம்பரம் இவங்களை காப்பாத்த காங்கிரஸ் நினைக்குது'' இதான் இப்போதைய நடுநிலயளர்கள் மனநிலை. தவிர வழக்கு விரைவாக முடிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா அவர்கள் தனது முழு ஒத்துழைப்பும் நீதிமன்றத்துக்கு தருவதோடு மட்டுமல்லாமல் தினம் தினம் வழக்கு நடைபெற்று ராசாவே தனக்காக வாதாடுவதும், சாட்சிகள் பொய்சாட்சிகள் என நிரூபிக்கப்பட்டு கொண்டு இருப்பதும் அப்போது ஊடகங்களால் பரப்பப்பட்ட ஒன்னேமுக்கால் லட்சம் கோடி என்பது ஒரு கற்பனை எண் என்றும், ராசா ஏலம் விடாமை இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிட்டது, ஏலம் விட்டால் இந்தியாவில் பாலாறும் தேனாரும் ஓடும் என சொல்லி பொய்பரப்புரை எல்லாம் இப்போது ஏலம் விட்டதால் என்ன ஆனது என்பதை நடுநிலைவாதிகள் புரிந்து கொண்டு விட்டனர்.
தவிர ராசா அவர்கள் தமிழகத்துக்கு நீதிமன்ற வார விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தனது கட்சியின் கொள்கை பரப்பு பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் போது மக்களிடை ஏற்படும் ஆரவாரம், தவிர அவரது தொகுதிக்கு போகும் போது கிடைக்கும் வரவேற்புகள் எல்லாம் 2ஜி ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் 90 சதம் திமுக விலகி வந்து விட்டதையே உணர்த்துகின்றன. அது என்ன மீதி பத்து சதம் எனில் அது காங்கிரஸ் கூட்டு தான். அதையும் விட்டு விலகி விட்டால் முழுமையாக 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனை என்பது காங்கிரஸ் பிரச்சனையாகிப்போகும். திமுக தன் தரப்பு நியாயத்தை நீதிமன்றம் மூலம் வெகுசுலபமாக பெற்றுவிடும். ஆகையால் காங்கிரசுக்கும் இப்போது தமிழகத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு தலைமேல் தொங்கும் கத்தி தான்.
அடுத்து காங்கிரசுக்கு தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேறு என்ன பிரச்சனை? காவிரி... ஆமாம்.. தமிழக வாழ்வாதாரம் காவிரி நீர். இன்று காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியாகி அது அரசிதழில் வந்தமைக்காக அதிமுக அதில் சொந்தம் கொண்டாடி பாராட்டு விழா நடத்தி "பொன்னியின் செல்வி"யாகிவிட்டது. இதில் திமுக வரிந்து கட்டிக்கொண்டு சொந்தம் கொண்டாட முழு உரிமையும் உள்ளது. நீங்கள் கடைசியாக நடந்த கிரிக்கெட் உலக கோப்பை போட்டி பார்த்தது உண்டா. அதில் ஸ்ரீசாந்த் என்னும் ஒரு பந்து வீச்சாளர் வெற்றிக்கோப்பையை தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவார். அவருக்கு பின்னால் அமைதியாக டோணி வருவார். அஃப்கோர்ஸ் ஸ்ரீ சாந்த் ஓரிரு விக்கெட் கூட எடுத்தார். ஆனால் அவரால் அந்த தொடரில் பல சோதனைகள் இந்திய அணிக்கு. ஆனாலும் கடைசி போட்டியில் அணி வெற்றி பெற்ற போது அவரும் ஒரு அணி உறுப்பினர் தானே அதனால் கோப்பையை தலையில் வைத்து கொண்டு ஆட உரிமை உள்ளது தானே என்னும் நினைப்பில் கேப்டன் டோணி அவர்கள் அமைதியாக பின்னால் வருவார். ஆனால் மக்களுக்கு தெரியும் . இந்த வெற்றி டோணியால் என்று. ஆனால் அந்த வெற்றி ஊர்வலத்தில் ஆஸ்திரேலிய பவுலர் ஒருவர் ஆனந்த கூத்தாட முடியுமா? "நான் தான் ரன்கள் வாரி வழங்கினேன். நான் தான் சரியாக பந்து வீசவில்லை. அதனால் தான் இந்தியா வெற்றி பெற்றது. ஆக இந்தியா வெற்றிக்கு நான் தான் காரணம்" என கூவினால் எந்த அளவு அபத்தமோ அப்படித்தான் காங்கிரஸ் தமிழக காவிரி வெற்றிக்கு எவ்வித சொந்தமும் கொண்டாட இயலாது. ஏனனில் அந்த காவிரி நடுவர் மன்றம் அமைத்தது திமுக ஆட்சியில் 1989ல் மத்தியில் வி.பி சிங் ஆட்சி. அரசிதழில் வெளியிட்டது இப்போது காங்கிரஸ் ஆட்சியில் தான் எனினும் உச்சநீதிமன்ற குட்டுக்கு பின்னர் அது பிப்ரவரி 20குள் வெளியிட்டே ஆக வேண்டும் என பெரிய குட்டாக காங்கிரஸ் அரசின் தலையில் போட்ட பின்னர் தான் அது நடந்தது... நடுவே வாஜ்பாய் பிரதமராக இருந்த போது சில நன்மைகள் நடந்தன. ஆனால் காங்கிரஸ் எங்கும் தலைகாட்டவில்லை. காரணம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வந்து போகும் வாய்ப்பு இருந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பதால் காவிரி பிரச்சனை பற்றி காங்கிரசுக்கு எப்போதும் கவலை இருந்தது இல்லை. எனவே காவிரி பிரச்சனையிலும் காங்கிரஸ் அவுட்.
அடுத்து தமிழகத்தில் இருந்து சமீபமாக ஐ ஏ எஸ் போன்ற சிவில் தேர்வுகளில் தேர்வாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழக கிராமப்புற மாணவர்கள். வழக்கம் போல காங்கிரஸ் அரசு இதிலும் மண் அள்ளி போட்டது இரு நாட்கள் முன்பாக. இனி தமிழ் வழி எழுத முடியாது. அப்படி எழுத வேண்டும் எனில்... என்று சொல்லி சில குளறுபடி சட்டங்களை போட்டு அத்தோடு விடாமல் அதாவது குதிரை கீழே தள்ளியது மட்டும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்னும் கதையாக இந்திக்கு வாடா, தமிழுக்கு தடா என சொல்லாமல் சொல்லி இந்தி திணிப்புக்கு மீண்டும் அச்சாரம் போட்டுவிட்டது. இங்கே ஏற்கனவே இரு நாட்கள் முன்னதாக தமிழக அரசு தேர்வானைய தேர்வுகளுக்கு கூட தமிழ் இனி கிடையாது என அறிவித்த மாநில அதிமுக அரசுக்கு நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என சொல்லும் படியாக காங்கிரஸ் மத்திய அரசு நடந்து கொண்டுள்ளது.
அடுத்து தமிழக மீனவர்கள் இதுவரை 500 பேர் வரை சுட்டு கொல்லப்பட்ட போது வாய்மூடி நிலைமையை மத்திய அரசு உற்று நோக்குகின்றது என்ற புளித்து போன வசனத்தையே பேசிக்கொண்டு இருந்த காங்கிரசின் மத்திய அரசு இன்றைக்கு இரு கேரள மீனவர்கள் மன்னிக்கவும் இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்ட போது சுட்டுக்கொன்ற இத்தாலிய மாலுமிகளை சிறை வைத்து ஜாமீனில் நாட்டுக்கு அனுப்பி இப்போது அவர்கள் அங்கே உட்காந்து கொண்டு இந்தியாவுக்கு பெப்பே காட்டிய பின்னர் விழித்துக்கொண்டு பதிலடியாக இத்தாலிய தூதரை நாட்டுக்கு அனுப்ப மாட்டோம் என சொல்கின்றதே, இதையே 500 தமிழக மீனவர்கள் செத்து போனபோது ஏன் இலங்கை தூதரை நாட்டுக்கு அனுப்ப மாட்டோம் என சொல்லவில்லை என நாம் கேட்கவில்லை. நடுநிலையாளர்கள் கேட்கின்றனர்.
ஆக காங்கிரசுக்கு தமிழகத்தில் ஈழம், தமிழக மீனவர்கள், காவிரி, இந்தி ,ஸ்பெக்ட்ரம் ஆகிய பெரிய பிரச்சனைகள் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் விழுங்க காத்து கிடக்கின்றன. அதை தவிர அதற்கு கொசுறாக ரயில்வே கட்டணம், கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு, மானியம் நிறுத்தம், பெட்ரோல் , டீசல் என ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன.
ஆகவே திமுக இனியும் காங்கிரசை தூக்கி சுமக்க வேண்டுமா? அதும் தேர்தல் சீட்டு பேரத்தின் போது அவர்கள் அடிக்கும் கூத்துகள், தவிர கூட்டணி கட்சிக்கு மானசீகமாக உழைக்காமை போன்ற இன்ன பிற காரணங்களால் திமுக இனியும் தாமதிக்காமல் காங்கிரசை கை கழுவ வேண்டிய நேரம் இது என நடுநிலையாளர்கள் மட்டுமல்ல திமுகவினரும் விரும்புகின்றனர்.
இதனிடையே எப்போதும் போல ஒரு கோஷமும் இப்போது கிளம்பி உள்ளது அல்லது கிளப்பி விடப்பட்டுள்ளது. திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இது போன்ற கோரிக்கைகள் 2009 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் கூட எழுந்தது. 2009ல் திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? இங்கே தமிழகத்தில் சட்டமன்றத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வாங்கி இருக்கும். அதிமுக தன்னிடம் இருந்த சில்லரை எம் பிக்களை வைத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு முட்டு கொடுத்து விட்டு இங்கே காங்கிரஸ் தயவுடன் மைனாரிட்டி ஆட்சி அமைத்து இருப்பார்.
திமுக ஆரம்பித்த நலட்திட்டங்கள் எல்லாம் அப்போது 25 முதல் 40 சதம் வரை மட்டுமே முடிவடைந்த நிலை. என்ன ஆகியிருக்கும்? 2011ல் திமுக ஆட்சியில் விட்டு போன போது 95 சதம் முதல் 99 சதம் வரை முடிந்த நலத்திட்டங்கள் கூட அதிமுக ஆட்சி வந்த பின்னர் கிடப்பில் போடப்பட்டு அதில் நெம்மேலி கடல்நீரை குடிநீராக ஆக்கும் திட்டம் மட்டும் இப்போது தென்சென்னை வாசிகள் முழுமையாக பயன்படுத்தும் அளவுக்கு இப்போது இரண்டரை ஆண்டுக்கு பின்னர் தான் வேறு வழி இல்லாமல் கொண்டு வரப்பட்டது. மற்ற திட்டங்கள் எல்லாம் என்ன ஆயிற்று? மின் திட்டங்கள் எல்லாம் 80 சதம் பணி முடிந்த திட்டங்கள் கூட அதிமுக அரசு செயல்படுத்தாமல் விட்டு விட்டு தமிழகம் இருளில் மூழ்கிவிட்டது. இந்த நிலை 2011 முதல் தானே. இந்த குபீர் தமிழுணர்வாளர்கள் சொன்னதை கேட்டு அப்போதே 2009ல் நாம் ஆட்சியை இழந்திருந்தால் தமிழகம் இன்னும் ஒரு இரண்டரை ஆண்டுக்கு முன்பே சுடுகாடு ஆகும் பணி ஆரம்பித்து இருக்கும் அத்தனையே! ஆனால் அப்போது 2009ல் ஆட்சி இழந்திருந்தால் ஜெயா டிவி "மைனாரிட்டி திமுக ஆட்சி" என சொல்வது நின்று போயிருக்கும். ஆனால் கலைஞர் டி வியோ "அதிமுக மைனாரிட்டி அரசு" என சொல்லியிருக்காது நாகரீகம் கருதி. இது மட்டுமே நடந்திருக்கும்.
இந்த குபீர்கள் பற்றி ஒரு சில வரிகள் சொல்லியாக வேண்டும். சீமான், நெடுமாறன் போன்ற சிறு கும்பல் குபீர்கள் 2009 முதலே திமுகவுக்கு எதிராக மிக பயங்கரமாக விமர்சித்து வந்தனர். இவர்கள் சொன்ன வாதம், திமுக மத்திய அரசில் இருந்து வாபஸ் வாங்க வேண்டும் அப்படி வாங்கினால் நாங்கள் திமுகவை கொண்டு போய் உச்சாணிக்கொம்பில் வைத்து விடுவோம். அட! என்னே ஒரு சக்தி அவர்களுக்கு! 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட போது சந்திரசேகர் பிரதமர், கலைத்தவர் ஆர்.வெங்கட்ராமன். என்ன காரணம்? விடுதலைப்புலிகள் நடமாட்டம் தமிழகத்தில். சரி போகட்டும் அதன் பின்னர் வந்த தேர்தலில் இந்த குபீர் பெருமக்கள் திமுகவை உச்சாணிகொம்பில் கொண்டு வந்து வைத்தனரா? இல்லையே. அவர்கள் அப்போது பிறக்கவே இல்லையா? அல்லது ஓட்டு போடும் வயதுக்கு வரவில்லையா? சரி அதல்லாம் போகட்டும். 2011 திமுக ஆட்சி போகும் வரை இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என திருவாய் மலர்ந்த அதிமுக தலைமைக்கு ஆதரவாக பேசி வந்த சீமான், நெடுமாறன் கோஷ்டியினர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களிடம் போய் "என்ன ஆயிற்று உங்கள் கோஷம் இலை - ஈழம் என கேட்டார்களா எனில் இல்லை.
அவர்கள் தங்கள் போராட்ட வியூகத்தை (??) மாற்றிக்கொண்டனர். ஆமாம் மாபெரும் கோலப்போட்டி போராட்டம். என்ன கொடும இதல்லாம்? மக்கள் இப்போது அவர்களை புரிந்து கொண்டுவிட்டனர். ஆகா இவர்கள் பி.டி உஷா போல வேகம் காட்டுபவர்கள் இல்லை. பிடி கத்தரிக்காய் போல "இனப்பெருக்கத்துக்கு" உதவாத பிண்டங்கள் என்று! அம்மையார் ஆட்சியில் வாய்மூடி மௌனசாமியாராய் இருந்த அவர்கள் இன்று கலைஞர் தலைமையில் "டெஸோ" மீண்டும் புத்துயிர் பெற்றவுடன் மீண்டும் தலையை தூக்கி எட்டிப்பார்த்து திமுக எம் பிக்கள் வாபஸ் வாங்க வேண்டும் என கோஷம் கிளப்பி விட்டுள்ளனர். ஆனால் மறந்தும் கூட அந்த குபீர்கள் அதிமுக எம்பிக்கள் பற்றி வாயை மட்டுமல்ல எதையுமே திறப்பது இல்லை. திறந்தால் என்ன ஆகும் என அவர்களுக்கு தெரியும். இப்போது கூட மாணவர்கள் ஈழப்பிரச்சனை காரணமாக உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி உண்ணாவிரத பந்தலை இழுத்து மூடிய அதிமுக அரசை கண்டிக்காமல் அப்படி செய்த "ஏட்டய்யா" மீது தனது கண்டனத்தை பதியவைத்து தங்கள் வீரத்தை நிலைநாட்டிக்கொண்டுள்ளனர். இதே குபீர்கள் தான் முத்துமுகார் தீக்குளித்த போது கல்லூரிக்கு விடுமுறை விட்டு ஈழப்புரட்சியை மழுங்கடிக்க செய்தார் கலைஞர் என வாயும் ,ஆசனவாயும் கிழிய கிழிய பேசினர். இதே 1964-65ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது மாணவர்கள் 5 மாதம் விடுமுறையில் தான் இன்னும் நல்ல முறையில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர் என அப்போராட்டத்தின் போது மாணவராக இருந்து கொண்டு கலந்து கொண்ட வைக்கோவுக்கு ஏன் மறந்து போனது. லீவ் விட்டால் சினிமாவுக்கு அல்லது வீட்டுக்கு ஓடிவிட வேண்டும் போராட்டம் புஸ் ஆகிவிடும் என சொல்லி மாணவர்களை கொச்சை படுத்தும் இந்த குபீர்களை என்ன சொல்வது?
சரி! 2009ல் இருந்த நிலை இப்போது இல்லை திமுகவுக்கு. காங்கிரசை கை கழுவி விட்டால் இங்கே உடனே அதிமுக ஆட்சி கவிழாது. திமுக ஆட்சிக்கு உடனடியாக வர இயலாது. திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது அதிமுக ஆட்சியில் நின்று போன மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த இயலாது உடனடியாக. சரி மத்தியில் திமுக ஆட்சியில் பங்கெடுப்பதால் மீதி இருக்கும் ஒரு வருடத்தில் புதிதாய் எதும் கிழித்து விட இயலாது. இதுவரை ரயில்வே நிலைக்குழு தலைவர் பதவி மட்டுமே வகித்து வந்த டி.ஆர் பாலு அவர்கள் சமீபத்திய ரயில்வே பட்ஜெட்டில் கூட கிட்டத்தட்ட 15 புதிய ரயில் திட்டம் இன்னும் பல பல திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார். பொது பட்ஜெட்ம் போட்டாகி விட்டது. இனி அடுத்த மத்திய பட்ஜட் புதிதாய் பதவி ஏற்கும் மத்திய அரசு மட்டுமே போட இயலும். ஆக மத்தியில் பதவியில் இருந்தால் தமிழகத்துக்கு நன்மை செய்ய இயலும் என சொல்ல இனி எதுவும் இல்லை. 2ஜிஸ்பெக்ட்ரம் போன்ற திமுகவுக்கு அவப்பெயர் கொடுத்த வழக்குகளில் கூட திமுகவை பலி கொடுத்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே காங்கிரஸ் இந்தநிமிடம் வரை நினைத்துக்கொண்டு காய் நகர்த்திக்கொண்டு உள்ளது. அதே ஸ்பெக்ட்ரம் வழக்கை விட பெரிய மாஜிக் நம்பர் கொண்ட நிலக்கரி ஊழல் என்ன ஆனது என தெரியவில்லை. அதே ஸ்பெக்ட்ரம் ராணுவத்துக்கு ஒதுக்கியதில் ஐ எஸ் ஆர் ஓ வுக்கு ஒதுக்கியதில் மன்மோகன் நேரடி சம்மந்தம் உள்ள நிலையில் அந்த பிரச்சனை என்ன ஆனது என தெரியவில்லை. ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் பி ஜே பியிடம் "பாராளுமன்ற விவாதம் மட்டுமே, அதற்கு மேல ஜே பி சி விசாரணை மட்டுமே" என கண்டித்து கூறிவிட்டது போல 2ஜி வழக்கில் ஏன் சொல்லவில்லை?
ஆக காங்கிரசை நம்பி இனியும் திமுகவுக்கு பலன் இல்லை. மேலும் அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். உடனே இப்போது சிலர் "காங்கிரசை விட்டு திமுக வெளி வராது. ஏனனில் மத்திய அமைச்சராக அழகிரி இருக்கும் வரை மட்டுமே அந்த அம்மா கைது செய்யாது. ராஜினாமா செய்தால் உடனே பிடித்து உள்ளே போட்டுவிடும்" என புதிதாக சொல்லிவருகின்றனர். இதல்லாம் சும்மா கதை. அந்த அம்மையாருக்கு ஒருவரை கைது செய்ய வேண்டும் எனில் அது சசிகலா வீட்டு ராவணன் ஆக இருந்தாலும் சரி கைது செய்யும். ஆளானப்பட்ட இந்தியாவின் மூத்த தலைவராக இருந்தவரையே நடு இரவில் கொடூரமாக கைது செய்த அந்த அம்மையாருக்கு அழகிரி கைது என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை. தவிர கலைஞர் ரத்த அழகிரி கைதுக்கு பயந்தவரும் இல்லை என்பதை நிரூபிக்கவாவது திமுக தனது எம் பிக்களை ராஜினாமா செய்து விட்டு தன் மீது இருக்கும் காங்கிரஸ் கரையை நீக்கிக்கொள்ள வேண்டும். வீரபாண்டி ஆறுமுகம், கே என் நேரு, பொன்முடி, சுரேஷ்ராஜன் என அதிமுக அரசு வழக்கு போட்டு கைது செய்யாத ஆட்களே திமுகவில் இல்லை. சிறைவாசம், அலைக்கழித்தல் என செய்யவில்லையா? இதே வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை கிடைத்து விட்டதே. லைவ் ரிலே அனால் கொஞ்சம் டிலே என்பது போல அவரது லைஃப் முடிந்த பின் விடுதலை என்பது மட்டும் வருத்தமான நிகழ்வு. மற்றபடி எந்த திமுகவினரும் சிறைக்கு அஞ்சுபவர்கள் கிடையாது. அப்படி அஞ்சினால் அவர்கள் திமுகவினர் கிடையாது. இது தான் திமுக வரலாறு. இன்றைக்கும் பார்க்கலாமே மு.க.ஸ்டாலின் வீட்டில் இல்லாத போது கூட ஏதோ வழக்குக்காக போலீஸ் தேடி வந்தால் அடுத்த நாள் இவர் போலீஸ் வீட்டுக்கு போய் என்ன விஷயம் என கேட்கும் அளவு நெஞ்சுரம் கொண்டவர்கள் தானே திமுகவினர். இதில் அழகிரி அவர்களின் பெயரை கெடுக்கும் விதத்தில் ஏன் ஊடகங்கள் செயல்படுகின்றனர் என்பது புரியவில்லை.
இப்படி வைத்துக்கொள்வோம். ஒரு வேளை அதிமுக தனது ஒன்பது மக்களவை உறுப்பினர்களை இன்றே ராஜினாமா செய்ய சொல்லிவிட்டால் என்ன ஆகும். அதிமுகவுக்கு இழக்க எதும் இல்லை அதனால். இங்கே ஆட்சி கலையாது. ஆனால் அந்த 9 எம் பிக்களால் தமிழகத்துக்கும் பெரிதாக எதும் நன்மையும் மத்திய அரசால் கிடைக்கவும் இல்லை. இவர்களும் கேட்டதும் இல்லை எனும் போது இன்னும் ஒரு வருஷம் தானே இருக்கு என நினைத்து ராஜினாமா செய்ய சொல்லிவிட்டால் சரித்திரம் என்ன ஆகும்? உடனே இந்த குபீர்கள் சும்மா விடுவார்களா? அதன் பின்னர் வரும் பாராளுமன்ற தேர்தலில் என்ன ஆகும்? இதை திமுக சிந்தித்து பார்க்க வேண்டுமல்லவா?
ஆக உடனடி முடிவாக திமுக காங்கிரசை "கை" கழுவினால் மட்டுமே இந்த குபீர்களால் திமுகமீது பூசப்பட்ட கறை நீங்கும். இது எல்லாம் ஒரு சாதரண திமுக தொண்டனுக்கே தெரியும் என்கிறதெனில் திமுக தலைமைக்கும் நன்றாக புரியும். ஆனால் இதை எல்லாம் மீறியும் "கறை" நல்லது என திமுக நினைக்குமானால் அந்த "கறை"யை நீக்க எந்த சர்ஃப் போட்டாலும் முடியாது.திமுகவின் கறை போக்க சிறந்த சர்ஃப் என்பதே தொண்டர்கள் தாம். அந்த தொண்டர்களை சோர்வடைய செய்து விட்டு அதாவது எக்ஸ்பயரி டேட் கொண்ட சஃர்ப் போட்டு எந்த கறையையும் எடுக்க இயலாது.
திமுக தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு அதன் படி நடக்கும் ஒரு சாதாரண திமுக தொண்டனின் குரல் இது.
March 5, 2011
பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத்தூளை காறித்துப்பினோம்!!!
கடந்த பிப்ரவரி முதல் தேதி எங்கள் தலைவர் டெல்லி சென்ற போது ஆரம்பித்த தேர்தல் திருவிழா இன்று ஒரு மிக முக்கியமான ஒரு கட்டத்தை திருப்பத்தை சந்தித்து இருக்கின்றது. பிப்ரவரி முதல் தேதி அன்று எங்கள் தலைவர் சோனியாவை சந்தித்த போது காங்கிரஸ் ஒரு குழு அமைக்கும் அந்த குழு தான் முடிவெடுக்கும் என சொல்லப்பட்டது. அப்போது திமுக தொண்டர்களிடம் ஒரு விதமான சோர்வு. ராகுல் பார்முலா கடைபிடிக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆக அப்போதே திமுக தொண்டர்களுக்கு ஒரு மாதிரியாக புரிந்து விட்டது. ராகுல் என்கிற பையன் எடுத்த முடிவுகள் இது வரை இந்திய அரசியலிலோ, காங்கிரஸ் கட்சி விவகாரத்திலோ அல்லது சமூகத்திலோ எந்த வித "பாஸிட்டிவ்" முடிவையும் கொடுத்ததில்லை. கொடுக்க போவதும் இல்லை என்பது அரசியல் நோக்கர்களுக்கு தெரியும். பறந்து பறந்து வந்து ஹைதராபாத் பிரியாணி சாப்பிடவும், கோவா, குமரகம் போன்ற பகுதிகளுக்கு சென்று உல்லாச வாழ்க்கை வாழ்வதற்குமான ஒரு விடலைப்பையன் (இனி பையன் என்று கூட சொல்ல கூடாது. ஒரு நடுத்தர வயது மனிதர்) என்றே மக்களின் புரிதலில் இருக்கும் நபர் அவர். அதை நம்பி அவர் காங்கிரஸ் தமிழ்நாட்டில் அபார வளர்ச்சி அடைந்து விட்டது என சொன்னதை நம்பி மூழ்கிய காங்கிரஸ் கப்பலை தூக்கி நிப்பாட்டிய சோனியாவும் தலையாட்டி வைத்தது தான் ஆச்சர்யம். பீகார் போன்ற நிலை தமிழகத்திலும் வர வேண்டும் என விதி இருக்கும் போது யார் என்ன செய்ய முடியும்.
இதனிடையில் இங்கு இருந்த அரசியல் அனாதை ஆனந்தன்களான இளங்கோவன், மற்றும் யுவராஜா போன்ற சிறுவர்களின் பேச்சுக்களும் திமுக தொண்டார்களை கொதிப்படைய செய்தது. முதல் கட்ட பேச்சுவார்த்தை இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை அனைத்திலும் காங்கிரஸ் தன் தகுதிக்கு மீறிய ஆசைகளை அள்ளித்தெளிக்க ஆரம்பித்தது. ஆனால் அந்த ஐவர் குழுவில் இருந்த ஐவருக்கும் நன்கு தெரியும். இதே திமுக தவிர்த்து அதிமுக விடம் இப்படி எல்லாம் பேசிவிட்டு சிதம்பரம் திருச்சி விமானநிலையம் பக்கம் வந்து இறங்க முடியுமா என்று. அவர் ஏற்கனவே அதிமுக விட அடிவாங்கியவர். அது நடந்து நாள் ஆகிவிட்டதால் மறந்து விட்டார் என்றே நினைக்கிறேன். விஷயத்துக்கு வருவோம். இப்படியாக ராகுல் பார்முலா என்னும் சனி பிடித்து ஆட்டத்தொடங்கியது காங்கிரசை. திமுக தொண்டர்களுக்கோ இந்த சுமை தன் முதுகில் இருந்து இறங்கி தொலைத்தால் போதும் என்கிற மனோநிலை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது.
இதன் நடுவில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் துரைமுருகன் நக்கலடித்தார் என ஜூவி எழுதியது. விஷயம் அறிந்த வட்டாரங்கள் இன்னும் மோசமாக கூட சொல்கின்றனர். அது நமக்கு தேவையில்லாத விஷயம். ஒட்டு மொத்த திமுக தொண்டர்களின் கருத்தை தானே துரைமுருகன் சொல்லியிருப்பார்.(இந்த வார்த்தை எங்கோ கேட்ட மாதிரி இருக்கின்றதா?)
உடனே குலாம்நபி ஆசாத வந்தார். பேசி எல்லாம் முடிவாகிடும்னு நினைச்சாங்க. அப்பவும் திமுக தொண்டர்களிடம் சோர்வுதான். அய்யோ கூட்டனி நீடிக்க கூடாதேன்னு. சும்மாவா பின்னே. அவன்வன் கஷ்ட்டப்படு உழைப்பான். இவனுங்க நோகாம நுக்கு தின்று விட்டு போவதோடு இல்லாமல் நம்மையே திட்டுவார்கள் என்கிற அதீத எரிச்சல். எங்கள் தலைவருக்கு பலமே தொண்டர்கள் தான். தொண்டர்கள் மனநிலையை நன்கு புரிந்து வைத்து இருப்பவர். 60 சீட் வரை ஒதுக்குவதாக அப்போது சொன்னாலும் அவர் மனநிலை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பது மாத்திரம் நன்கு புரிந்தது.
இதற்கிடையில் விசயகாந்து திமுக தென்மண்டல அமைப்பு செயலர் அஞ்சாநெஞ்சன் வழிகாட்டுதலில் திரிசங்கு நிலைக்கு வந்து விட அதுவும் ஒரு முட்டுகட்டையாக இருந்தது. காங்கிரசை கழுத்தறுக்க வேண்டும். அதிமுக பக்கமும் போக கூடாது. நம் கூட்டனியிலும் இருக்க கூடவே கூடாது. இத்தோடு அது அழிந்து போகவேண்டும் என திமுக தலைமை முடிவெடுத்துவிட்டது என்றே நினைக்கிறேன். உடனே அழகிரி அண்ணன் விசயகாந்தை பற்றி பேட்டி கொடுத்தார். ஒன்று தனியே நில். அல்லது அதிமுக பக்கம் ஓடிவிடு. காங்கிரசுக்கு நாங்கள் கழுத்தறுக்க வேண்டிட காலம் கனிந்து வர நீ ஒரு நிலைப்பாடு எடு என சொல்லாமல் சொல்வது போல நேற்று ஒரு பேட்டி கொடுத்தார். "அவர் ரோசம் உள்ளவர். மானம் உள்ளவர்" என்கிற ரீதியில். அதல்லாம் என்ன விலை என்று கேட்டுகொண்டே விசயகாந்து அதிமுக குட்டையில் போய் குதித்தார். முடிந்தது எல்லாம் முடிந்தது. நேற்று இரவு இதல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே விடியல்காலை தலைவர் அறிக்கை வந்துவிடுகின்றது. காங்கிரஸ் பற்றி பேச்சுவார்த்தையில் நடந்த விஷயம் எல்லாம் வருகின்றது. தொண்டர்கள் உற்சாகம் தாங்க முடியவில்லை.
அறிவாலயத்தில் கூட்டம் அலைமோதுகின்றது. 15000 பேர் விருப்ப மனு கொடுக்கின்றனர். இன்று மாலை 5 மணிக்கு திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் கூடுகின்றது என்கிற செய்தி எல்லா திமுக தொண்டனுக்கும் பரவுகின்ரது. அத்தனை வேலையும் விட்டுவிட்டு சன் செய்திகள், கலைஞர் செய்திகள் பார்க்க தொடங்குகின்றான். வெடிகள் வாங்கி குவிக்கின்றான். சென்னைக்கு தெரிந்தவர்களுக்கு போன் செய்கின்றான். இவனுக்கு தெரிந்த அதே செய்திகள் தான் எல்லோரும் சொல்கின்றனர். மாலை 5 மணிக்கு கூட்டம் தொடங்கியாகிவிட்டது. நகம் கடிக்கின்றான். எல்லா சேனலும் மாற்றி மாற்றி பார்க்கின்றான். ஆறு ஆகியது. 6.30 ஆகியது. இவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. பொதிகை கூட மாற்றி பார்க்கின்றான். இதனிடையே சில சில போன்கள். "தான் அவசர வேலையாக பஸ்ஸில் பயணம் செய்வதாகவும் எந்த செய்தியாக இருந்தாலும் போன் செய்யுமாறும் போன் செய்கின்றனர். இவன் நகம் கடித்தே விரலை சின்னதாக்கி கொள்கின்றான்.
பொதிகையில் ஜாஜிருசேனும், அரித்வாரமங்களமும் தனிஆவர்தனத்தில் பின்னி பெடலடுப்பது கூட இவனுக்கு பிடிக்கவில்லை. ஒரு வழியாக சன் செய்திகள் மெயின் செய்திகளில் தற்போது வந்த செய்தி என்று அந்த இனிப்பான செய்தி வருகின்றது. காங்கிரசுடன் கூட்டனி இல்லை. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி விடுவது. துள்ளி குதிக்கின்றான். வெடி வெடிக்கின்றான். ஊரெங்கும் வெடி சத்தம். ஆட்டோவில் மைக் கட்டி "உங்கள் ஒட்டு உதயசூரியனுக்கே" என்னும் சத்தம் காதை கிழிக்கின்றது.
தலைவா!!!!! உனக்கு எங்கள் நன்றிகள். ஒரு தொண்டனின் ஆசையை பூர்த்தி செய்தாயே அது போதும். உடனே திமுக விருப்பமனு தாக்கல் செய்யும் தேதி இன்னும் இரண்டு நாட்களுக்கு தள்ளி வைக்கப்படுகின்றது.
இனி காங்கிரசில் இருந்து யாராவது சிவகங்கை சின்னபையன்கள் பேச்சு வார்த்தைக்கு வரலாம். எதுவும் நடக்கலாம்.முள்ளும் மலரும் கிளைமாக்ஸ் போல கூட இருக்கலாம். ஆனால் தலைவரே எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தாயே அது போதும் தலைவா. உனக்கு 150 சீட்டுகள் கொண்டு வந்து காலடியில் கொட்டுகின்றோம். நாங்கள் இருக்கின்றோம் தலைவா. நீ தைரியமா இரு. நாங்கள் இனி எப்படி தேர்தல் வேலை செய்ய போகின்றோம் என்பதை மட்டும் உட்காந்து பார் தலைவா!
இதிலே இன்னும் ஒன்றும் சொல்லிக்கொண்டாக வேண்டும். இந்த குபீர் ஈழ ஆதரவாளிகள் எல்லாம் ரொம்ப சந்தோஷம் அடைய எதும் இல்லை இதிலே. ராஜீவ்காந்தியை ஒரு இந்திய பிரஜையை இந்திய நாட்டில் அதும் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் வந்து கொன்றது, அதனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது எதையும் நாங்கள் மறக்க போவதில்லை. அதனால் உடனே நீங்கள் ரொம்ப ஆடாதீங்க. அறுந்து போன வாலை ஒட்டுகிட்டு ஆட்டிகாமிக்க வேண்டாம்.
காங்கிரஸ் எங்களை கழுத்தறுக்க நினைத்தாலே நாங்கள் அறுத்து விடுவோம் என்பதை உணருங்கள். அதையே தாங்க உங்களுக்கும் சொல்கின்றோம்!
Subscribe to:
Posts (Atom)
