March 15, 2013
காங்கிரசை "கை"கழுவ திமுகவுக்கு சரியான தருணம் இது!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் Vs பி ஜே பி என்பது சர்வநிச்சயம். இதிலே மூன்றாவது அணி அமைந்தால் அதிலே யார் யார் கூட்டு என்பது பற்றி எல்லாம் நாம் அதிகமாக யோசிக்க வேண்டியதில்லை.அது நம் வேலையும் இல்லை இப்போதைக்கு.
இப்போதைக்கு என் பிரச்சனை.. நாம் காங்கிரசுடன் கூட்டணி தொடர்கிறோம் என்றால் நம் கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என யோசித்து பார்ப்பின் பலம் என்பது பூஜ்ஜியம். பலவீனம் என்பது 200 சதம் என்பதே உண்மை. காங்கிரசை எதிர்த்து மேடையில் முழங்க இந்திய அளவில் அதாவது அரசியல் கட்சிகள் நிலையில் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் விஷயம் , நிலக்கரி சுரங்க ஊழல், சமீபத்திய ஹெலிகாப்டர் ஊழல் என பெரிய பெரிய விஷயங்கள் , மற்றும் இலங்கை மீதான வெளியுறவு கொள்கையில் இருக்கும் வழவழா கொழகொழா நிலை என பேச பெரியதாக இருக்கும் நிலையில், பொதுமக்களை பொறுத்தவரை ரயில் கட்டணம் உயர்வு,கேஸ் மானியம் நிறுத்தம், குறைந்த அளவினால கேஸ் சிலிண்டர் ஒதுக்கீடு ஆகியவையும் இப்போது மேலும் ரயில் கட்டண உயர்வு வரப்போகின்றது என்பதும், அடுத்து மிகப்பெரிய பாதிப்பாக டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வும், அதனால் பொது மக்கள் நேரிடை பாதிப்புக்கு உள்ளாவதும் காங்கிரசை ஒரு "கை" பார்த்து விட துடிக்கின்றன.
சரி அதே காங்கிரசுக்கு மாநிலத்துக்கு மாநிலம் என்ன பிரச்சனைகள் என பார்த்தோமானால் ... இப்போதைக்கு நாம் இக்கட்டுரையில் தமிழகத்தை பற்றி மட்டுமே பார்ப்போம். தமிழகத்தை பொறுத்த மட்டில் இப்போது மிக முக்கியமாக ராகுல் மீது எந்த திராவிட கட்சிகளுக்கும் ஒரு ஈர்ப்பும் இல்லை. முதல் காரணம் அவர் எடுக்கும் முடிவுகள் எல்லாமே சிறுபிள்ளை தனமாகவே இருந்து தொலைக்கின்றன துரதிஷ்டவசமாக. தவிர தமிழகத்தை பொறுத்த மட்டில் கொஞ்சம் மரியாதை எதிர்பார்க்கும் ஒரு வித கலாச்சாரம் விரவிக்கிடக்கும் மாநிலம். இதுவரை கலைஞரை வந்து ஒரு மூத்த கூட்டணி கட்சி தலைவர் என்னும் முறையில் கூட மரியாதை நிமித்தம் சந்திக்காமை போன்ற நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அடுத்து மிக மிக முக்கியமாக இலங்கை பிரச்சனை.
இது ஒட்டு மொத்த தமிழக தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடிய பெரிய சக்தியாக திகழும் என்னும் நிலை தான். ஏனனில் மாணவர்கள் அதாவது கல்லூரி மாணவர்கள் ஓட்டுகள் என்பது ஈழ விஷயத்தில் நிச்சயம் காங்கிரசுக்கு எதிராக மட்டுமே அமையும். 2009 தேர்தல் நேரத்தில் ஈழத்தில் உச்சகட்ட போர் நிகழ்ந்தது. மே 13 தேர்தல் எனில் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் பிரபாகரன் படுகொலை... இதற்கே தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு சில பல தொகுதிகள் இழக்க வேண்டியும் சிதம்பரம் போன்றவர்கள் நொண்டி அடிக்கும் நிலையிலும் மணிசங்கர் எல்லாம் மண் கவ்வும் நிலைக்கும் ஆளானது. இதனாலேயே அதிமுகவுக்கு கனிசமாக தொகுதிகள் கிடைத்தன. இது தான் உண்மை. இத்தனைக்கும் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டு இருந்தது. ஆனால் மக்கள் அப்போதைக்கு எது உக்கிரமான பிரச்சனையோ அதை தான் வைத்து தேர்தல் ஓட்டு போடுகின்றனர். போதாத குறைக்கு சீமான், வைக்கோ, நெடுமாறன் ஆகிய ஓட்டு வங்கி இல்லாதவர்களும் கூட அதிமுகவுக்கு ஆதரவாக அதாவது திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என சொன்னால் தானாக அடுத்த கூட்டணி என பார்த்தால் அதிமுக கூட்டணி தானே? அங்கே போய்விட்டனர் நடுநிலையாளர்கள்.
அதன் பின்னர் இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் மிகப்பெரிய நலத்திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டன. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், நவீன சாலைகள், மிகப்பெரிய பெரிய பாலங்கள், தேர்தல் வாக்குறுதிப்படி கோடி குடும்பங்களுக்கு வண்ண தொலைக்காட்சி, ஒரு ரூபாய் அரிசி திட்டம், மகளிர் திட்டங்கள், சுய உதவிக்குழு, விவசாயிகளுக்கு முடிந்த வரை இருந்த வரைசீர் செய்யப்பட்ட விளை நிலம் வழங்குதல், கடைசி கட்டமாக தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நூறு சதம் முடிந்து விட்ட நிலையில் புதியதாக தமிழகம் முழுமையாக குடிசை வீடுகளே இல்லை எனும் நிலையாக 25 லட்சம் கான்கிரீட் வீடுகள் என ஒரு திட்டம் தீட்டி அதில் ஒன்னரை லட்சம் பயனாளிகளுக்கு வழங்கியும் மீதமுள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்ட சான்றிதழும் வழங்கி தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதை செய்வோம் என சொல்லியும் ...இப்படியாக என ஒரு நல்லாட்சி நடைபெற்றும் சட்டசபையில் பிராதன எதிர்கட்சி கூட இல்லை என்னும் நிலை வந்தது.
அதற்கு காரணம் தமிழக மக்கள் மனதில் உள்ளே "கடலுக்கு அடியில் சுனாமி" என்பது போல மேலே அமைதி உள்ளே சுனாமி என ஈழமக்கள் நிலை அவர்களை அழ வைத்த பெரும்பங்கு அப்போது செய்யப்பட்ட பிரச்சாரமேயாகும். அதை திமுக தவிர்த்திருக்க நல்ல வாய்ப்பும் அமைந்தது. திமுகவினர் தங்கள் மரியாதைக்குரிய ராஜமாதாவாக நினைக்கும் தயாளு அம்மையாரை அறிவாலய முதல் தளத்தில் சி பி ஐ விசாரிக்க அந்த சி பி ஐ ன் உச்சகட்ட தலைவர் என சொல்லப்படும் மத்திய உள்துறை அமைச்சர் கீழ் தளத்தில் "சீட்டு பேரம்" செய்தமையை எந்த திமுகவினரும் ரசிக்கவில்லை. மேலும் திமுகவின் அவசர உயர்நிலை செயல்திட்ட கூட்டம் கூடி காங்கிரசுடன் இனி உறவு இல்லை என அறிவித்த போது திமுகவினர் அதிகபட்சமாக தங்கள் மகிழ்வை நாடெங்கும் வெளிப்படுத்தியமை யாரும் மறுக்க இயலாது. (அப்போது அன்றைய தினத்தில் எழுதப்பட்ட "பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத்தூளை காறித்துப்பினோம்" என எழுதப்பட்ட கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்)
அப்போது திமுகவினருக்கு எழுந்த ஒரு உணர்சி வெள்ளத்தை அப்படியே தேர்தல் வேலைக்கு பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு காங்கிரசால் ஏற்பட்ட களங்கத்தை போக்கியிருக்கலாம். ஆனால் உயர்நிலை செயல்திட்டத்தின் படி ராஜினாமா செய்ய டெல்லி சென்ற மத்திய அமைச்சர் பெருமக்கள் காங்கிரசுக்கு 63 தொகுதிகள் என கட்சியை அடமானம் வைத்து விட்டதாக அப்போது சோலை போன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் அழுது எழுதினர். திமுகவினர் சோர்ந்து போயினர். அப்போது வெற்றி பெற்ற 24 திமுக உறுப்பினர்கள் காங்கிரஸ் உறவு இல்லாவிட்டாலும் வெற்றியடைந்து இருப்பர் என்பது நிச்சயம். தவிர மாவட்டத்துக்கு ஒரு மூன்று தொகுதிகள் இன்னும் அதிகமாக கிடைத்து இருக்கும். ஆக ஆளும்கட்சி என்னும் நிலை இல்லாவிடினும் கூட கண்டிப்பாக வலுவான எதிர்கட்சியாக இருந்திருக்கும். அதே நேரம் அதிமுகவோ மைனாரிட்டி அதிமுக அரசாக ஆகியிருக்கும். அந்த பொன்னான வாய்ப்பை கூட திமுக நழுவ விட்டது காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே என்பது உண்மை. ஆக ஈழப்பிரச்சனை அத்தோடு முடிந்ததா இந்த இரு வருடங்களில் அதாவது இன்னும் சொல்லப்போனால் 2009 மே 17 க்கு பின்னர் கூட காங்கிரசுக்கு ஈழத்தின் மீதான வெறி தணிந்ததா எனில் இல்லை இல்லை இல்லவே இல்லை என்பதை சமீபத்தில் சுஷீல்குமார் ஷிண்டே "இலங்கை நட்பு நாடு" என சிலாகித்து சொன்னது கொம்பேரி மூக்கன் பாம்பின் நிலையில் தான் காங்கிரஸ் இன்னமும் ஈழமக்கள் மீது கொண்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!
சரி! காங்கிரஸ் இப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தோல்வி அடைய இந்த ஈழம் மட்டுமே காரணமா என நினைத்து பார்ப்பின் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மீது நடுநிலையாளர்கள் கொண்டிருந்த வெறுப்பு இப்போது வழக்கு நடைந்து கொண்டு இருக்கும் போது பலவித பரிணாம வளர்சியுடன் காங்கிரஸ் பக்கம் முழுவதுமாக திரும்பி விட்டது. திமுகவை பொறுத்த மட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் இருந்து முழுமையாக அல்ல 90 சதம் விலகி வந்து விட்டது . அதனால் இதில் இனிமேல் திமுகவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஜே பி சி க்கு பகிரங்கமாக கேட்டாகிவிட்டது..."என்னை விசாரிக்கவும்" என திமுக தரப்பில் இருந்து. இப்போது ஒட்டு மொத்த இந்திய மனநிலை "ராசாவே தன்னை விசாரிக்க சொல்லி கெஞ்சிகிட்டு இருக்காரு, அவங்க ஒத்துக்கலைன்னா என்னா அர்த்தம்? மன்மோகன் சிங், சிதம்பரம் இவங்களை காப்பாத்த காங்கிரஸ் நினைக்குது'' இதான் இப்போதைய நடுநிலயளர்கள் மனநிலை. தவிர வழக்கு விரைவாக முடிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா அவர்கள் தனது முழு ஒத்துழைப்பும் நீதிமன்றத்துக்கு தருவதோடு மட்டுமல்லாமல் தினம் தினம் வழக்கு நடைபெற்று ராசாவே தனக்காக வாதாடுவதும், சாட்சிகள் பொய்சாட்சிகள் என நிரூபிக்கப்பட்டு கொண்டு இருப்பதும் அப்போது ஊடகங்களால் பரப்பப்பட்ட ஒன்னேமுக்கால் லட்சம் கோடி என்பது ஒரு கற்பனை எண் என்றும், ராசா ஏலம் விடாமை இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிட்டது, ஏலம் விட்டால் இந்தியாவில் பாலாறும் தேனாரும் ஓடும் என சொல்லி பொய்பரப்புரை எல்லாம் இப்போது ஏலம் விட்டதால் என்ன ஆனது என்பதை நடுநிலைவாதிகள் புரிந்து கொண்டு விட்டனர்.
தவிர ராசா அவர்கள் தமிழகத்துக்கு நீதிமன்ற வார விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தனது கட்சியின் கொள்கை பரப்பு பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் போது மக்களிடை ஏற்படும் ஆரவாரம், தவிர அவரது தொகுதிக்கு போகும் போது கிடைக்கும் வரவேற்புகள் எல்லாம் 2ஜி ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் 90 சதம் திமுக விலகி வந்து விட்டதையே உணர்த்துகின்றன. அது என்ன மீதி பத்து சதம் எனில் அது காங்கிரஸ் கூட்டு தான். அதையும் விட்டு விலகி விட்டால் முழுமையாக 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனை என்பது காங்கிரஸ் பிரச்சனையாகிப்போகும். திமுக தன் தரப்பு நியாயத்தை நீதிமன்றம் மூலம் வெகுசுலபமாக பெற்றுவிடும். ஆகையால் காங்கிரசுக்கும் இப்போது தமிழகத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு தலைமேல் தொங்கும் கத்தி தான்.
அடுத்து காங்கிரசுக்கு தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேறு என்ன பிரச்சனை? காவிரி... ஆமாம்.. தமிழக வாழ்வாதாரம் காவிரி நீர். இன்று காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியாகி அது அரசிதழில் வந்தமைக்காக அதிமுக அதில் சொந்தம் கொண்டாடி பாராட்டு விழா நடத்தி "பொன்னியின் செல்வி"யாகிவிட்டது. இதில் திமுக வரிந்து கட்டிக்கொண்டு சொந்தம் கொண்டாட முழு உரிமையும் உள்ளது. நீங்கள் கடைசியாக நடந்த கிரிக்கெட் உலக கோப்பை போட்டி பார்த்தது உண்டா. அதில் ஸ்ரீசாந்த் என்னும் ஒரு பந்து வீச்சாளர் வெற்றிக்கோப்பையை தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவார். அவருக்கு பின்னால் அமைதியாக டோணி வருவார். அஃப்கோர்ஸ் ஸ்ரீ சாந்த் ஓரிரு விக்கெட் கூட எடுத்தார். ஆனால் அவரால் அந்த தொடரில் பல சோதனைகள் இந்திய அணிக்கு. ஆனாலும் கடைசி போட்டியில் அணி வெற்றி பெற்ற போது அவரும் ஒரு அணி உறுப்பினர் தானே அதனால் கோப்பையை தலையில் வைத்து கொண்டு ஆட உரிமை உள்ளது தானே என்னும் நினைப்பில் கேப்டன் டோணி அவர்கள் அமைதியாக பின்னால் வருவார். ஆனால் மக்களுக்கு தெரியும் . இந்த வெற்றி டோணியால் என்று. ஆனால் அந்த வெற்றி ஊர்வலத்தில் ஆஸ்திரேலிய பவுலர் ஒருவர் ஆனந்த கூத்தாட முடியுமா? "நான் தான் ரன்கள் வாரி வழங்கினேன். நான் தான் சரியாக பந்து வீசவில்லை. அதனால் தான் இந்தியா வெற்றி பெற்றது. ஆக இந்தியா வெற்றிக்கு நான் தான் காரணம்" என கூவினால் எந்த அளவு அபத்தமோ அப்படித்தான் காங்கிரஸ் தமிழக காவிரி வெற்றிக்கு எவ்வித சொந்தமும் கொண்டாட இயலாது. ஏனனில் அந்த காவிரி நடுவர் மன்றம் அமைத்தது திமுக ஆட்சியில் 1989ல் மத்தியில் வி.பி சிங் ஆட்சி. அரசிதழில் வெளியிட்டது இப்போது காங்கிரஸ் ஆட்சியில் தான் எனினும் உச்சநீதிமன்ற குட்டுக்கு பின்னர் அது பிப்ரவரி 20குள் வெளியிட்டே ஆக வேண்டும் என பெரிய குட்டாக காங்கிரஸ் அரசின் தலையில் போட்ட பின்னர் தான் அது நடந்தது... நடுவே வாஜ்பாய் பிரதமராக இருந்த போது சில நன்மைகள் நடந்தன. ஆனால் காங்கிரஸ் எங்கும் தலைகாட்டவில்லை. காரணம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வந்து போகும் வாய்ப்பு இருந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பதால் காவிரி பிரச்சனை பற்றி காங்கிரசுக்கு எப்போதும் கவலை இருந்தது இல்லை. எனவே காவிரி பிரச்சனையிலும் காங்கிரஸ் அவுட்.
அடுத்து தமிழகத்தில் இருந்து சமீபமாக ஐ ஏ எஸ் போன்ற சிவில் தேர்வுகளில் தேர்வாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழக கிராமப்புற மாணவர்கள். வழக்கம் போல காங்கிரஸ் அரசு இதிலும் மண் அள்ளி போட்டது இரு நாட்கள் முன்பாக. இனி தமிழ் வழி எழுத முடியாது. அப்படி எழுத வேண்டும் எனில்... என்று சொல்லி சில குளறுபடி சட்டங்களை போட்டு அத்தோடு விடாமல் அதாவது குதிரை கீழே தள்ளியது மட்டும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்னும் கதையாக இந்திக்கு வாடா, தமிழுக்கு தடா என சொல்லாமல் சொல்லி இந்தி திணிப்புக்கு மீண்டும் அச்சாரம் போட்டுவிட்டது. இங்கே ஏற்கனவே இரு நாட்கள் முன்னதாக தமிழக அரசு தேர்வானைய தேர்வுகளுக்கு கூட தமிழ் இனி கிடையாது என அறிவித்த மாநில அதிமுக அரசுக்கு நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என சொல்லும் படியாக காங்கிரஸ் மத்திய அரசு நடந்து கொண்டுள்ளது.
அடுத்து தமிழக மீனவர்கள் இதுவரை 500 பேர் வரை சுட்டு கொல்லப்பட்ட போது வாய்மூடி நிலைமையை மத்திய அரசு உற்று நோக்குகின்றது என்ற புளித்து போன வசனத்தையே பேசிக்கொண்டு இருந்த காங்கிரசின் மத்திய அரசு இன்றைக்கு இரு கேரள மீனவர்கள் மன்னிக்கவும் இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்ட போது சுட்டுக்கொன்ற இத்தாலிய மாலுமிகளை சிறை வைத்து ஜாமீனில் நாட்டுக்கு அனுப்பி இப்போது அவர்கள் அங்கே உட்காந்து கொண்டு இந்தியாவுக்கு பெப்பே காட்டிய பின்னர் விழித்துக்கொண்டு பதிலடியாக இத்தாலிய தூதரை நாட்டுக்கு அனுப்ப மாட்டோம் என சொல்கின்றதே, இதையே 500 தமிழக மீனவர்கள் செத்து போனபோது ஏன் இலங்கை தூதரை நாட்டுக்கு அனுப்ப மாட்டோம் என சொல்லவில்லை என நாம் கேட்கவில்லை. நடுநிலையாளர்கள் கேட்கின்றனர்.
ஆக காங்கிரசுக்கு தமிழகத்தில் ஈழம், தமிழக மீனவர்கள், காவிரி, இந்தி ,ஸ்பெக்ட்ரம் ஆகிய பெரிய பிரச்சனைகள் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் விழுங்க காத்து கிடக்கின்றன. அதை தவிர அதற்கு கொசுறாக ரயில்வே கட்டணம், கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு, மானியம் நிறுத்தம், பெட்ரோல் , டீசல் என ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன.
ஆகவே திமுக இனியும் காங்கிரசை தூக்கி சுமக்க வேண்டுமா? அதும் தேர்தல் சீட்டு பேரத்தின் போது அவர்கள் அடிக்கும் கூத்துகள், தவிர கூட்டணி கட்சிக்கு மானசீகமாக உழைக்காமை போன்ற இன்ன பிற காரணங்களால் திமுக இனியும் தாமதிக்காமல் காங்கிரசை கை கழுவ வேண்டிய நேரம் இது என நடுநிலையாளர்கள் மட்டுமல்ல திமுகவினரும் விரும்புகின்றனர்.
இதனிடையே எப்போதும் போல ஒரு கோஷமும் இப்போது கிளம்பி உள்ளது அல்லது கிளப்பி விடப்பட்டுள்ளது. திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இது போன்ற கோரிக்கைகள் 2009 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் கூட எழுந்தது. 2009ல் திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? இங்கே தமிழகத்தில் சட்டமன்றத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வாங்கி இருக்கும். அதிமுக தன்னிடம் இருந்த சில்லரை எம் பிக்களை வைத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு முட்டு கொடுத்து விட்டு இங்கே காங்கிரஸ் தயவுடன் மைனாரிட்டி ஆட்சி அமைத்து இருப்பார்.
திமுக ஆரம்பித்த நலட்திட்டங்கள் எல்லாம் அப்போது 25 முதல் 40 சதம் வரை மட்டுமே முடிவடைந்த நிலை. என்ன ஆகியிருக்கும்? 2011ல் திமுக ஆட்சியில் விட்டு போன போது 95 சதம் முதல் 99 சதம் வரை முடிந்த நலத்திட்டங்கள் கூட அதிமுக ஆட்சி வந்த பின்னர் கிடப்பில் போடப்பட்டு அதில் நெம்மேலி கடல்நீரை குடிநீராக ஆக்கும் திட்டம் மட்டும் இப்போது தென்சென்னை வாசிகள் முழுமையாக பயன்படுத்தும் அளவுக்கு இப்போது இரண்டரை ஆண்டுக்கு பின்னர் தான் வேறு வழி இல்லாமல் கொண்டு வரப்பட்டது. மற்ற திட்டங்கள் எல்லாம் என்ன ஆயிற்று? மின் திட்டங்கள் எல்லாம் 80 சதம் பணி முடிந்த திட்டங்கள் கூட அதிமுக அரசு செயல்படுத்தாமல் விட்டு விட்டு தமிழகம் இருளில் மூழ்கிவிட்டது. இந்த நிலை 2011 முதல் தானே. இந்த குபீர் தமிழுணர்வாளர்கள் சொன்னதை கேட்டு அப்போதே 2009ல் நாம் ஆட்சியை இழந்திருந்தால் தமிழகம் இன்னும் ஒரு இரண்டரை ஆண்டுக்கு முன்பே சுடுகாடு ஆகும் பணி ஆரம்பித்து இருக்கும் அத்தனையே! ஆனால் அப்போது 2009ல் ஆட்சி இழந்திருந்தால் ஜெயா டிவி "மைனாரிட்டி திமுக ஆட்சி" என சொல்வது நின்று போயிருக்கும். ஆனால் கலைஞர் டி வியோ "அதிமுக மைனாரிட்டி அரசு" என சொல்லியிருக்காது நாகரீகம் கருதி. இது மட்டுமே நடந்திருக்கும்.
இந்த குபீர்கள் பற்றி ஒரு சில வரிகள் சொல்லியாக வேண்டும். சீமான், நெடுமாறன் போன்ற சிறு கும்பல் குபீர்கள் 2009 முதலே திமுகவுக்கு எதிராக மிக பயங்கரமாக விமர்சித்து வந்தனர். இவர்கள் சொன்ன வாதம், திமுக மத்திய அரசில் இருந்து வாபஸ் வாங்க வேண்டும் அப்படி வாங்கினால் நாங்கள் திமுகவை கொண்டு போய் உச்சாணிக்கொம்பில் வைத்து விடுவோம். அட! என்னே ஒரு சக்தி அவர்களுக்கு! 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட போது சந்திரசேகர் பிரதமர், கலைத்தவர் ஆர்.வெங்கட்ராமன். என்ன காரணம்? விடுதலைப்புலிகள் நடமாட்டம் தமிழகத்தில். சரி போகட்டும் அதன் பின்னர் வந்த தேர்தலில் இந்த குபீர் பெருமக்கள் திமுகவை உச்சாணிகொம்பில் கொண்டு வந்து வைத்தனரா? இல்லையே. அவர்கள் அப்போது பிறக்கவே இல்லையா? அல்லது ஓட்டு போடும் வயதுக்கு வரவில்லையா? சரி அதல்லாம் போகட்டும். 2011 திமுக ஆட்சி போகும் வரை இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என திருவாய் மலர்ந்த அதிமுக தலைமைக்கு ஆதரவாக பேசி வந்த சீமான், நெடுமாறன் கோஷ்டியினர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களிடம் போய் "என்ன ஆயிற்று உங்கள் கோஷம் இலை - ஈழம் என கேட்டார்களா எனில் இல்லை.
அவர்கள் தங்கள் போராட்ட வியூகத்தை (??) மாற்றிக்கொண்டனர். ஆமாம் மாபெரும் கோலப்போட்டி போராட்டம். என்ன கொடும இதல்லாம்? மக்கள் இப்போது அவர்களை புரிந்து கொண்டுவிட்டனர். ஆகா இவர்கள் பி.டி உஷா போல வேகம் காட்டுபவர்கள் இல்லை. பிடி கத்தரிக்காய் போல "இனப்பெருக்கத்துக்கு" உதவாத பிண்டங்கள் என்று! அம்மையார் ஆட்சியில் வாய்மூடி மௌனசாமியாராய் இருந்த அவர்கள் இன்று கலைஞர் தலைமையில் "டெஸோ" மீண்டும் புத்துயிர் பெற்றவுடன் மீண்டும் தலையை தூக்கி எட்டிப்பார்த்து திமுக எம் பிக்கள் வாபஸ் வாங்க வேண்டும் என கோஷம் கிளப்பி விட்டுள்ளனர். ஆனால் மறந்தும் கூட அந்த குபீர்கள் அதிமுக எம்பிக்கள் பற்றி வாயை மட்டுமல்ல எதையுமே திறப்பது இல்லை. திறந்தால் என்ன ஆகும் என அவர்களுக்கு தெரியும். இப்போது கூட மாணவர்கள் ஈழப்பிரச்சனை காரணமாக உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி உண்ணாவிரத பந்தலை இழுத்து மூடிய அதிமுக அரசை கண்டிக்காமல் அப்படி செய்த "ஏட்டய்யா" மீது தனது கண்டனத்தை பதியவைத்து தங்கள் வீரத்தை நிலைநாட்டிக்கொண்டுள்ளனர். இதே குபீர்கள் தான் முத்துமுகார் தீக்குளித்த போது கல்லூரிக்கு விடுமுறை விட்டு ஈழப்புரட்சியை மழுங்கடிக்க செய்தார் கலைஞர் என வாயும் ,ஆசனவாயும் கிழிய கிழிய பேசினர். இதே 1964-65ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது மாணவர்கள் 5 மாதம் விடுமுறையில் தான் இன்னும் நல்ல முறையில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர் என அப்போராட்டத்தின் போது மாணவராக இருந்து கொண்டு கலந்து கொண்ட வைக்கோவுக்கு ஏன் மறந்து போனது. லீவ் விட்டால் சினிமாவுக்கு அல்லது வீட்டுக்கு ஓடிவிட வேண்டும் போராட்டம் புஸ் ஆகிவிடும் என சொல்லி மாணவர்களை கொச்சை படுத்தும் இந்த குபீர்களை என்ன சொல்வது?
சரி! 2009ல் இருந்த நிலை இப்போது இல்லை திமுகவுக்கு. காங்கிரசை கை கழுவி விட்டால் இங்கே உடனே அதிமுக ஆட்சி கவிழாது. திமுக ஆட்சிக்கு உடனடியாக வர இயலாது. திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது அதிமுக ஆட்சியில் நின்று போன மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த இயலாது உடனடியாக. சரி மத்தியில் திமுக ஆட்சியில் பங்கெடுப்பதால் மீதி இருக்கும் ஒரு வருடத்தில் புதிதாய் எதும் கிழித்து விட இயலாது. இதுவரை ரயில்வே நிலைக்குழு தலைவர் பதவி மட்டுமே வகித்து வந்த டி.ஆர் பாலு அவர்கள் சமீபத்திய ரயில்வே பட்ஜெட்டில் கூட கிட்டத்தட்ட 15 புதிய ரயில் திட்டம் இன்னும் பல பல திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார். பொது பட்ஜெட்ம் போட்டாகி விட்டது. இனி அடுத்த மத்திய பட்ஜட் புதிதாய் பதவி ஏற்கும் மத்திய அரசு மட்டுமே போட இயலும். ஆக மத்தியில் பதவியில் இருந்தால் தமிழகத்துக்கு நன்மை செய்ய இயலும் என சொல்ல இனி எதுவும் இல்லை. 2ஜிஸ்பெக்ட்ரம் போன்ற திமுகவுக்கு அவப்பெயர் கொடுத்த வழக்குகளில் கூட திமுகவை பலி கொடுத்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே காங்கிரஸ் இந்தநிமிடம் வரை நினைத்துக்கொண்டு காய் நகர்த்திக்கொண்டு உள்ளது. அதே ஸ்பெக்ட்ரம் வழக்கை விட பெரிய மாஜிக் நம்பர் கொண்ட நிலக்கரி ஊழல் என்ன ஆனது என தெரியவில்லை. அதே ஸ்பெக்ட்ரம் ராணுவத்துக்கு ஒதுக்கியதில் ஐ எஸ் ஆர் ஓ வுக்கு ஒதுக்கியதில் மன்மோகன் நேரடி சம்மந்தம் உள்ள நிலையில் அந்த பிரச்சனை என்ன ஆனது என தெரியவில்லை. ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் பி ஜே பியிடம் "பாராளுமன்ற விவாதம் மட்டுமே, அதற்கு மேல ஜே பி சி விசாரணை மட்டுமே" என கண்டித்து கூறிவிட்டது போல 2ஜி வழக்கில் ஏன் சொல்லவில்லை?
ஆக காங்கிரசை நம்பி இனியும் திமுகவுக்கு பலன் இல்லை. மேலும் அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். உடனே இப்போது சிலர் "காங்கிரசை விட்டு திமுக வெளி வராது. ஏனனில் மத்திய அமைச்சராக அழகிரி இருக்கும் வரை மட்டுமே அந்த அம்மா கைது செய்யாது. ராஜினாமா செய்தால் உடனே பிடித்து உள்ளே போட்டுவிடும்" என புதிதாக சொல்லிவருகின்றனர். இதல்லாம் சும்மா கதை. அந்த அம்மையாருக்கு ஒருவரை கைது செய்ய வேண்டும் எனில் அது சசிகலா வீட்டு ராவணன் ஆக இருந்தாலும் சரி கைது செய்யும். ஆளானப்பட்ட இந்தியாவின் மூத்த தலைவராக இருந்தவரையே நடு இரவில் கொடூரமாக கைது செய்த அந்த அம்மையாருக்கு அழகிரி கைது என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை. தவிர கலைஞர் ரத்த அழகிரி கைதுக்கு பயந்தவரும் இல்லை என்பதை நிரூபிக்கவாவது திமுக தனது எம் பிக்களை ராஜினாமா செய்து விட்டு தன் மீது இருக்கும் காங்கிரஸ் கரையை நீக்கிக்கொள்ள வேண்டும். வீரபாண்டி ஆறுமுகம், கே என் நேரு, பொன்முடி, சுரேஷ்ராஜன் என அதிமுக அரசு வழக்கு போட்டு கைது செய்யாத ஆட்களே திமுகவில் இல்லை. சிறைவாசம், அலைக்கழித்தல் என செய்யவில்லையா? இதே வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை கிடைத்து விட்டதே. லைவ் ரிலே அனால் கொஞ்சம் டிலே என்பது போல அவரது லைஃப் முடிந்த பின் விடுதலை என்பது மட்டும் வருத்தமான நிகழ்வு. மற்றபடி எந்த திமுகவினரும் சிறைக்கு அஞ்சுபவர்கள் கிடையாது. அப்படி அஞ்சினால் அவர்கள் திமுகவினர் கிடையாது. இது தான் திமுக வரலாறு. இன்றைக்கும் பார்க்கலாமே மு.க.ஸ்டாலின் வீட்டில் இல்லாத போது கூட ஏதோ வழக்குக்காக போலீஸ் தேடி வந்தால் அடுத்த நாள் இவர் போலீஸ் வீட்டுக்கு போய் என்ன விஷயம் என கேட்கும் அளவு நெஞ்சுரம் கொண்டவர்கள் தானே திமுகவினர். இதில் அழகிரி அவர்களின் பெயரை கெடுக்கும் விதத்தில் ஏன் ஊடகங்கள் செயல்படுகின்றனர் என்பது புரியவில்லை.
இப்படி வைத்துக்கொள்வோம். ஒரு வேளை அதிமுக தனது ஒன்பது மக்களவை உறுப்பினர்களை இன்றே ராஜினாமா செய்ய சொல்லிவிட்டால் என்ன ஆகும். அதிமுகவுக்கு இழக்க எதும் இல்லை அதனால். இங்கே ஆட்சி கலையாது. ஆனால் அந்த 9 எம் பிக்களால் தமிழகத்துக்கும் பெரிதாக எதும் நன்மையும் மத்திய அரசால் கிடைக்கவும் இல்லை. இவர்களும் கேட்டதும் இல்லை எனும் போது இன்னும் ஒரு வருஷம் தானே இருக்கு என நினைத்து ராஜினாமா செய்ய சொல்லிவிட்டால் சரித்திரம் என்ன ஆகும்? உடனே இந்த குபீர்கள் சும்மா விடுவார்களா? அதன் பின்னர் வரும் பாராளுமன்ற தேர்தலில் என்ன ஆகும்? இதை திமுக சிந்தித்து பார்க்க வேண்டுமல்லவா?
ஆக உடனடி முடிவாக திமுக காங்கிரசை "கை" கழுவினால் மட்டுமே இந்த குபீர்களால் திமுகமீது பூசப்பட்ட கறை நீங்கும். இது எல்லாம் ஒரு சாதரண திமுக தொண்டனுக்கே தெரியும் என்கிறதெனில் திமுக தலைமைக்கும் நன்றாக புரியும். ஆனால் இதை எல்லாம் மீறியும் "கறை" நல்லது என திமுக நினைக்குமானால் அந்த "கறை"யை நீக்க எந்த சர்ஃப் போட்டாலும் முடியாது.திமுகவின் கறை போக்க சிறந்த சர்ஃப் என்பதே தொண்டர்கள் தாம். அந்த தொண்டர்களை சோர்வடைய செய்து விட்டு அதாவது எக்ஸ்பயரி டேட் கொண்ட சஃர்ப் போட்டு எந்த கறையையும் எடுக்க இயலாது.
திமுக தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு அதன் படி நடக்கும் ஒரு சாதாரண திமுக தொண்டனின் குரல் இது.
Subscribe to:
Post Comments (Atom)
எல்லா திமுக தொண்டனின் மனதில் இருக்கும் குமுறலை தங்கள் பதிவு வெளிபடுத்துகிறது தலைமை உத்தரவிட்டால் கிணற்றிலும் விழ தயாராக இருக்கும் லட்சோப லட்சம் தொண்டர்களில் ஒருவனாக உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்
ReplyDeleteஅருமையான அலசல்
ReplyDelete//திமுக தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு அதன் படி நடக்கும் ஒரு சாதாரண திமுக தொண்டனின் குரல் இது.//
ReplyDeleteமுழுக்க முழுக்க குடும்ப நலனுக்காக கட்சியை நடத்தும் கருணாநிதியின் அரசியலை புரிந்துகொள்ளாத தி.மு.க தொண்டனைப் போல் ஒரு முட்டாளை உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்காது. தி.மு.க தொண்டனை நினைத்து பரிதாபப்பட மட்டும்தான் முடியும். தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல . தனது தொண்டனுக்கு கூட எந்த பலனையும் தராத தலைவர்தான் கருணாநிதி!. தி.மு.க தொண்டர்கள் என்றைக்கோ கருணாநிதியின் சுயரூபத்தை புரிந்துகொண்டுவிட்டார்கள். இன்று கருணாநிதியின் உடன் இருப்பவர்கள் அனைவரும் என்றைக்கோ எலும்புத்துண்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள்தான். ஆனால் அந்த எலும்பு கூட அவரின் குடும்பத்தாருக்கு மட்டும்தான் என்பதை விரைவில் புரிந்துகொள்வார்கள். பதிவரின் எழுத்தில் கூட தி.மு.க மீதான நம்பிக்கையின்மைதான் வெளிப்படுகிறது.
இதெல்லாம் கலைஞருக்கு தெரியாதென்றா நினைத்தீர்கள். கொள்கை ஒரு புறம் அவர் மனதை குத்துகிறது. குடும்பம் மறுபுறம் அவரைக் குதறுகிறது.....என்ன செய்வார் பாவம். பொறியில் சிக்கிய எலியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்.
ReplyDeletedogtalks மற்றும் மு .சரவணகுமார், நீங்கள் இருவரும் அனானியா வராம சொந்த பெயரில் வந்து அசிங்கமான வார்த்தை பிரயோகம் இல்லாமல் ஆனால் வழக்கம் போல கலைஞரை திட்டுவதை செய்து விட்டு போயிருக்கின்றீகள். அனனியாக வராமையால் இதை பிரசுரிக்கிறேன். ஆனால் நீங்கள் நினைப்பது போல கலைஞர் இல்லை. அவருக்கு இரு அக்கா, நான்கு மருமகன், 3 பொண்டாட்டி, 4 ஆண் பசங்க, 2 பெண் பசங்க...அவங்கவங்க தனித்தனியா இருந்தாலும் கிட்ட தட்ட 200 பேர் குடும்ப உறுப்பினர் என்பது ஊரரிந்த ரகசியம். நாம பத்து பேரு இருக்கும் சாதாரண குடும்பத்திலேயே இத்தனை குழப்பம் வருதுன்னா ... அவாரு ஒன்னரை கோடி உறுப்பினர் கொண்ட கட்சி தலைவர், தவிர 5 முறை முதல்வர் என பெரிய ப்ரொஃபைல் கொண்டவர். அவருக்கு வயசு 90. ஆனா நீங்க சொல்லும் எல்லாத்தையும் சமாளிச்சு இந்த நிமிடம் வரை அசராம இயங்குகின்றாரே அதே பெரிய வெற்றியும் சாதனையும் ஆகும். தவிர திமுகவில் இருந்தா பதவி கிடைக்கனும்னா ஒன்னரை கோடி பேருக்கு பதவி கொடுக்கனும். இதல்லாம் சாத்தியம் இல்லை என உங்களுக்கு ஏன் புரியவில்லை. ஆனாலும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கானே தொண்டன் அவன் தான் திமுககாரன். நாங்கள் திமுக என சொல்லிப்பதே பெருமை என நினைக்கும் கோடியில் ஒருத்தன் தான் நானும் கூட! இதல்லாம் உங்களுக்கு புரியாது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் கலைஞரை திட்டலாம். அவரு தாங்குவாரு. ஆனா இதே போல ஜெயாவை திட்டி பாருங்க. அப்ப புரியும் கலைஞரை பத்தி!
ReplyDeleteநல்ல அலசல். ஒரு சந்தேகம் . 'கரை'யா அல்லது 'கறை 'யா ? எது சரி ?
ReplyDeleteஇலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில் அர்த்தமில்லை....
ReplyDelete- திமுக தலைவர் கருணாநிதி
# ஸ்வீட் எடுங்க, கொண்டாடுங்க :)
அது கறை-தான், அபிஅப்பா தான் கொண்ட திமுக அக்-கரை அவர் எழுத்தினால் கூட கழகத்திற்கு கறை படக்கூடாது என நினைக்கிறார்.
ReplyDeleteதமிழ் நாட்டு மக்கள் தெளிவான முடிவு எடுப்பவர்கள்.இலங்கை பிரச்ச்னையை இந்திய விலைவாசியுடன் போட்டு குழப்புவதில்லை.இந்திய அரசியல் வேறு இலங்கை தமிழர் பிரச்சனை வேறு.தமிழ்னாட்டு அரசியல் கட்சிகளை பற்றி எடை போட்டு வைத்திருக்கிரார்கள்.காட்சி மாறும்போது க்ட்சி மாறுவ்து அணிமாறுவது எல்லாம் தெரியும்.உண்ர்ச்சியை தூண்டிவிட்டு அரசியல் செய்ய இனியும் முடியாது.முன்பு போல் ஆட்டுமந்தையாட்ட்ம் செல்லப்போவதில்லை.காங்கிரஸ் கூட்டணியை நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்
ReplyDelete