பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 28, 2008

இரு விளம்பரம் + ஒரு கேள்வி + ஒரு விளக்கம் = மொக்கை!!!


விளம்பரம் # 1

அண்ணாச்சி அறிவிப்பு செய்துவிட்டார். மாபெரும் அமீரக வலைப்பதிவர் மாநாடு குறித்து. அதில் முக்கியமாக தமிழை தள்ளிகிட்டு போவது பற்றி முக்கிய முடிவுகளை எடுப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சந்தோஷம் . மகிழ்ச்சி. இது போன்ற விஷயங்களிள் அதீத ஆர்வம் காட்டும் தம்பி உமாகதிர் அவர்கள் இப்போதே அபுதாபியில் இருந்து பொடி நடையாக கிளம்பிவிட்டதாக தெரிகின்றது. இந்த விஷயத்தில் என் திரைமறைவு உதவிகளும், நேரடி பங்களிப்பும் கண்டிப்பாய் இருக்கும் என ஜொள்ளிக்கிறேன்.

ஷார்ஜாவாசிகளான பெனாத்தலார், கோபி,சென்ஷி, குசும்பன்,அஜ்மான்வாசியான லியோசுரேஷ் ஆகியோர் கண்டிப்பாக வந்துவிடுவார்கள் என நம்பப்படுகின்றது. துபாய்வாசிகளான நானும், அய்யனாரும், ஜுஃபைரும்,சுல்தான்பாயும், ஜஸீலாக்காவும், முத்துகுமரன், நண்பன் ஷாஜி,லொடுக்கு,பாஸ்ட்பவுலர் கூட வந்துவிடுவோம். அலய்ன்வாசி மின்னல் இன்னும் இந்தியாவிலே இருந்து வரவில்லை. மகி எங்கே என்றே தெரியவில்லை. போனில் பிடிக்க முயற்சி நடக்கின்றது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் வலைப்பதிவர்களுக்கு டி.வி.எஸ் 50, எவர்சில்வர் குடம், அட்லாஸ் சைக்கிள், மூக்குத்தி, சிக்கிம்/பூட்டான் லாட்டரி சீட்டுகள்,பித்தளை அண்டா ஆகியவை பரிசாக வழங்கப்படும்(அண்ணாச்சி பணத்தில்) என அண்ணாச்சி சார்பாக நான் அறிவிப்பதில் பெருமை படுகிறேன். மாநாட்டு நேரம், காலம், இடம் எல்லாவற்றையும் இங்கே போய் பார்த்துகோங்கப்பா.

விளம்பரம் # 2

என் உடன்பிறப்பு,ரத்தத்தின் ரத்தம்,"அபிசித்தப்பா", என் தம்பி முத்து நம்ம ஜோதியிலே வந்து ஐக்கியமாகிட்டான்.இத்தனை நாள் கல்கி,ரிப்போர்ட்டர் இங்கெல்லாம் பல அரசியல் கட்டுரைகள் எழுதி வந்தான்.இப்போது கட்டட்ற சுதந்திரம் வேண்டி "பிளாக்க" வந்துவிட்டான். அவன் எழுத்துகளை பார்க்கும் போது "தம்பிசார்"ன்னு சொல்லனும் போல இருக்கு. நல்லா எழுதறான். இங்கே போய் பாருங்க அவன் எழுத்துகளை.

ஒரு கேள்வி:(சுப்பையா சாருக்கு)

சூப்பரா கேது தசை. அதிலே ராகு புத்தி ஓடிகிட்டு இருக்கு. கோவம் அதிகமா வருது. எல்லார்கிட்டயும் சண்டை போடுகிறேன். பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வருது. யானை மாதிரி மனசிலே வச்சுகிட்டு திடீர்ன்னு கோவப்பட்டு விடுகிறேன்."நுனிப்புல்"மேய்வது மாதிரி மேய்ந்து கொண்டு போகும் நான் இப்போது ஆழ்ந்து படித்து(இல்லாத) குத்தம் எல்லாம் கண்டிபிடிக்கிறேன். சாதாரணமாக என் குணம் அப்படியில்லை. எல்லாம் கேதுவும்,ராகுவும் சேர்ந்து அடிக்கும் கூத்து தான் என நினைக்கிறேன். பரிகாரமாக நான் இப்போது கும்பிடும் அம்மனையே கும்பிடலாமா அல்லது லேட்டஸ்ட் அம்மனுக்கு மாறிடலாமா?

ஒரு விளக்கம்:

நம்ம அமீரக வலைப்பதிவு செல்லகுஞ்சுகள் 1 வாரமாகவே என்னை நோண்டி நொங்கு எடுக்குதுகள். "என்ன அபிஅப்பா என்ன திடீர்ன்னு இப்படி மாறிட்டீங்க" "என்ன அபிஅப்பா தீபாவெங்கட்டை விட்டுட்டு பிரியாமணிக்கு மாறிட்டீங்க" என்பன போன்ற மொக்கை கேள்விகளால் துளைத்து எடுக்கின்றனர். "யாருப்பா அந்த பிரியாமணி?"ன்னு கேட்டா "பருத்திவீரன் முத்தழகு"ன்னு பதில் வருது. "நான் எப்போ மாறினேன்" என கேட்டால் "அதான் பதிவெல்லாம் போட்டு இருந்தீங்களே"ன்னு சொல்றாய்ங்க. ஆஹா நம்ம பிளாக்கை கடத்திட்டாங்களோன்னு பயந்து ஓடிப்போய் பார்த்தேன் என் சமீபத்து பதிவுகளை. அடங்கொய்யால............."பிரியாணியும் நானும்"ன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதைத்தான் "பிரியா மணியும் நானும்"ன்னு படிச்சுட்டு என்னை சத்தெடுத்துட்டாங்கன்னு தெரிஞ்சுது. நானாவது பதிவை தான் சரியா படிக்க மாட்டேன். நீங்க தலைப்பையே சரியா படிக்க மாட்டீங்களாப்ப்பா...நல்லா இருங்கடே!!!!!!!!!

July 23, 2008

நாங்க திருடனை பிடித்த கதை!!!
நான் +2 முடித்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த நேரம் அது. அப்போது எங்க ஏரியாவிலே அங்கங்க தொடர்ச்சியா திருட்டு போய்கிட்டு இருந்துச்சு. பெரிய கோவில் வீதிகள், தைக்கால் தெரு பக்கம் எல்லாம் தொடர் திருட்டு நடக்கவே தெரு பெருசுங்க எல்லாம் போய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க இன்ஸ்பெக்டரும் தெருவுக்கு வந்துட்டார். தெருவே பரபரப்பா ஆகிடுச்சு. ராதாவுக்கு தெருவிலே திருட்டு போவது பத்தி எல்லாம் அக்கறை இல்லை. ஒரு ஜாலியான என்டர்டெயின்மெண்ட் நடக்கப்போவது பத்தி ரொம்ப சந்தோஷம். எனக்கும் தான். நாங்க எல்லாரும் சுத்தி நிக்க இன்ஸ் கேள்வியெல்லாம் கேட்க கடைசியா சொன்னார். "உங்க ஒத்துழைப்பு இருந்தா சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம். அதான் இத்தன பசங்க இருக்காங்களே அவங்க எல்லாம் ஒரு டீமா ஃபார்ம் பண்ணிகிட்டு ஸ்டேஷனுக்கு வாங்க. ராத்திரி பூரா பசங்க காவல் இருக்கட்டும் ஒரு மாசம். அதுக்குள்ள கண்டுபிடிச்சிடலாம்"ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்.


உடனே நாங்க ஒரு 25 பசங்க ரொம்ப ஜாலியா ஸ்டேஷனுக்கு போக அங்கே அவர் மீட்டிங் ரூமிலே நடுநாயகமாக உக்காந்து கொண்டு எங்களுக்கு கிளாஸ் எடுத்தார். எனக்கு மனசு பூரா பட்டாம்பூச்சி பறக்குது. அவர் என்னவே வெள்ளை தலை கோபால கிருஷ்ணன் போலவும் நாங்க எல்லாம் விசயகாந்து, சத்தியராசு, நிகழ்கள் ரவி மாதிரியும் ஒரு பெரிய நம்பியார் கும்பலை பிடிக்க போவது போலவும் கற்பனை செய்து கொண்டேன். ராதா ரொம்ப சீரியஸா இன்ச் பை இன்ச்சா அவர் பேசுவதை நோட்ஸ் எல்லாம் எடுத்து ஓவர் பில்டப்பு கொடுத்துகிட்டு இருந்தான். இதிலே அவர் போர்டிலே எல்லாம் தெருவை வரைந்து திருடன் தப்பி போக வாய்ப்பு உள்ள இடத்தை எல்லாம் சிவப்பு சாக்பீஸால் குறித்து வைத்து அந்த இடத்தில் எல்லாம் கொஞ்சம் தடி தடி பசங்களை பாரா போட சொன்னார். அப்படியாக எல்லோருக்கும் ஸ்பாட் கொடுக்க ரொம்ப பூஞ்சையா இருந்த எனக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை. பின்னே அவரே மனசு இறங்கி திருடனை பிடித்த பிறகு அவன் கையை எல்லாம் நல்லா கட்டி போட்ட பிறகு கூட்டத்தை விலக்கி கொண்டு போய் ரெண்டு தர்ம அடி கொடுக்கும் மிகப்பெரிய வேலையை கொடுத்தார்.


பின்னே என்ன நினைச்சாரோ "சரி நீங்க திருடனை பிடிக்க எல்லாம் வேண்டாம். அவனை பார்த்ததும் நேரா சைக்கிளை எடுத்துகிட்டு ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க போதும். அவன் கிட்ட என்ன மாதிரியான வெப்பன்ஸ் இருக்குன்னு தெரியல" அப்படீனு சொல்லிட்டார். "வெப்பன்ஸ்" அது இதுன்னு சொன்ன போதேலாம் ராதா ஏதோ பெரிய தீவிரவாதிய பிடிக்கும் முக்கிய போலீஸ் அதிகாரியா தன்னை நெனச்சிகிட்டான். அப்பதான் நான் மெதுவா என் திருவாயை திறந்தேன். "சார் அவனை நாங்க பிடிக்காம தூரக்க இருந்து அவன் சட்டையிலே இங் பேனாவை வச்சி இங் அடிச்சிட்டா அடுத்த நாள் நீங்க இங் சட்டை காரனை ஈசியா பிடிச்சிடலாம்" ன்னு சொன்னேன். அநேகமாக அவருக்கு இரத்த அழுத்தம் ஏறியிருக்கனும். ராதா என் காதிலே மெதுவா சொன்னான்."ஆமாண்டா அவன் சட்டையிலே இங் அடிச்சிட்டு 'லாஸ்ட் டே ஈஸ் எ ஹேப்பிடே' ன்னு கத்துடா. இது என்ன நம்ம ஸ்கூலா. நானே அந்த டெரரிஸ்ட்ட எப்படி பிடிக்கிறதுன்னு மண்டைய பிச்சிகிட்டு இருக்கேன். வந்துட்டான் ஐடியா சொல்ல"ன்னு சொல்ல எனக்கு வெக்கமா போயிடுச்சு.அவனோட டெரரிஸ்ட் என்கிற வார்த்தை எல்லாம் அந்த கொடியில் காய போட்டிருக்கும் புடவையை திருடும் திருடனுக்கு கொஞ்சம் அதிகம் என நினைத்து கொண்டேன்.


ராத்திரி ஆச்சு. ராதா சூட்கேஸ் உறையில் தைத்த ராணுவ ஜீன்ஸ் எல்லாம் போட்டுகிட்டு தேவாரம் மாதிரி ஒரு கேப் எல்லாம் வச்சிகிட்டு படுபந்தாவா வந்துட்டான். என்கிட்ட வந்து "ஸ்டேஷன்ல எனக்கு மட்டும் ஒரு ஏகே 47 கொடுத்தா அவன பிச்சி புடுவேன் பிச்சி"ன்னு சொன்னப்ப எனக்கு பத்திகிட்டு வந்துச்சு. முதல்ல எல்லோரும் போய் வைத்தா கடையிலே டீகுடித்தோம். ராதா கையிலே மேப் மாதிரி வச்சிகிட்டு(பெரிய டார்ச் கூட வச்சிருந்தான்) டீ கடையிலேயே அதை பிரித்து வைத்து டார்ச்சை ஆட்டி ஆட்டிகிட்டு எங்களுக்கு விளக்க டீ குடிக்க வந்தவங்க எல்லாம் ஒரு மாதிரியா பாக்க எனக்கு அவமானமா இருந்துச்சு. நானாவது காளியாகுடி பொங்களுக்காக என்.சி.சி யிலே இருந்தேன். அவன் அதுல கூட சேரலை. என்னமா பந்தா விட்டான் தெரியுமா. இப்படியாக ஒரு பத்து நாள் இரவு முழுவதும் நல்லா பொழுது போச்சு. தனி தனி ஸ்பாட் கொடுக்கப்பட்ட பசங்க எல்லாம் கும்பல் கும்பலா சேர்ந்துகிட்டு இரவில் 4 முறை டீ குடிப்பதும், விடிகாலை பதனீர் குடிப்பதும் பின்னே பகல் முழுக்க தூங்குவதும் நல்லா தான் பொழுது போச்சு.


அதுக்குள்ளே ஊர் முழுக்க ஒரே பேச்சு. ராதா ஒரு நாள் தான் அந்த திருடனை பார்த்து விட்டதாகவும் அவன் ஸ்பிரிங் வைத்த ஷூ போட்டு இருப்பதாகவும் கீழே ஒரே அமுக்காக அமுக்கி டக்ன்னு மாடிக்கு தாவி விட்டதாகவும் அப்படியே ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி கண்மூடி திறப்பதுக்குள்ளாக ஓடி விட்டதாகவும் சொல்ல அந்த விஷயம் கடைசி கட்ட பொது மக்களுக்கு போய் சேரும் போது "அந்த திருடனுக்கு ரெண்டு காலும் இல்லியாம் சும்மா வேட்டி மட்டும் தொங்குதாம் காலே இல்லியாம்" என்கிற மாதியாக போய் சேர்ந்தது. ஆக மக்கள் அந்த திருடனை ஒரு பேய் ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டாங்க. திருடனை பார்த்ததாக சொன்ன ராதாவுக்கு ஏக கிராக்கி. எனக்கு அதிலே எல்லாம் ரொம்ப கடுப்பு.


ஆக அந்த பத்து நாட்களில் எனக்கு எந்த ஸ்பாட்டும் கொடுக்க படாததால் நான் மட்டும் எல்லா இடத்துக்கும் சைக்கிளில் போய் போய் எல்லா பசங்க கிட்டயும் பேசிகிட்டு வருவேன். ராதா டார்ச் லைட்டை தலைமாட்டில் வைத்து கொண்டு தேர்முட்டியில் தூக்கியபோது எவனோ டார்ச் லைட்டை லவட்டிகிட்டு போயிட்டான். அந்த பழியையும் ராதா அந்த திருடன் தலையிலேதான் போட்டான்.ஒரு அப்படியாக நான் ஒரு நாள் சின்ன மாரியம்மன் கோவில் பக்கம் ரோந்துக்கு போன போது.... இந்த இடத்தில் ஒன்னு சொல்லிகிறேன். எனக்கும் தெரு நாய்க்கும் அப்படி ஒரு ராசி. என்னை பார்த்தா சும்மா சாக கிடக்கும் நாய்க்கு கூட வீரம் வந்துடும். துரத்த ஆரம்பிச்சிடும். தனிகறியை விட எலும்பு ஜாஸ்தியா இருப்பதாலோ என்னவோ. சின்ன மாரியம்மன் கோவில் பக்கம் அப்போ இலுப்பை தோப்பு இருந்தது. எனக்கு உண்மையிலேயே திருடனுக்கு கால் இருக்காதோ அது பேயோ என்கிற பயம் லைட்டா வந்துச்சு. கும்மிருட்டு. தோப்பை தாண்டி வரும் போது பயம் அதிகமாக நான் பேமிலி பாட்டான காக்கா பாட்டை உரக்க பாடினேன். நானே சிதம்பரம் ஜெயராமன் மாதிரி என்னை நினைத்து கொண்டு கா...கா ன்னு பாட அது அங்கே ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்த நாயை அதிக பட்சமாக கஷ்ட்டப்படுத்தி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். குரைத்து கொண்டே துரத்த ஆரம்பிக்க நானும் என் பலம் கொண்ட மட்டும் சைக்கிளை மிதிக்க அதுவும் துரத்த நான் கழுத்தில் மாட்டியிர்ந்த விசிலை வேகமாக ஊதிக்கொண்டே ( இன்ஸ் சொல்லியிருந்தார். திருடனை பார்த்தவுடன் அடுத்த ஆளுக்கு சமிக்கை கொடுக்கும் விதமாக விசில் ஊத வேண்டும் என்று) சைக்கிளை மிதிக்க நாய் என் காலை கவ்வும் அளவு வந்துவிட நான் ரெண்டு காலையும் தூக்கி பாரில் வைத்து கொள்ள சைக்கிள் வேகம் குறைய தொடங்கியது. அப்போது நான் கிட்ட தட்ட தைக்கால் தெரு தாண்டி மெயின் ரோடு வந்துவிட்டேன். நாயும் நம்ம போலீஸ் ஸ்டேஷன் ஏட்டய்யா மாதிரி "இது என் ஏரியா இல்லை போடா போயிட்டு வா" என சொல்லி திரும்பி போய்விட்டது. எனக்கு முகம் முழுக்க வேர்வை. நான் அப்பவும் விசில் ஊதுவதை நிப்பாட்டவில்லை.

அதுக்குள்ளே விசில் சத்தம் கேட்டு கிட்ட தட்ட எல்லா ஸ்பாட் ஆளுங்களும் பிரசவ ஆஸ்பத்திரி எதிரே கூடி விட்டனர். நான் அங்கே போய் சேரும் போது நம்ம ராதா "டேய் நம்ம தொல்ஸ் திருடனை பார்த்துட்டாண்டா" என கூவ நான் "ஆம்"ன்னு சொல்வதா "இல்லை"ன்னு சொல்வதா என திண்டாடிய போது ராதா "டேய் அவன் ஸ்பிரிங் ஷூ போட்டு கிட்டு ஆறு அடி உயரமா தானே இருந்தான். நான் பார்த்ததும் அவன் தான். அவன் கையிலே என் டார்ச் லைட் வச்சிருந்தானா" என வரிசையாக கேட்டு கொண்டே அவனோட கற்பனை திருடனை என் கற்பனை திருடனுக்கு மேட்ச் பண்ணிட்டான். நானும் சரின்னு ஒத்துகிட்டேன்.


உடனே அத்தனை சைக்கிளும் சின்ன மாரியம்மன் கோவில் பக்கம் வேகமாக இல்லாத திருடனை நோக்கி போக நானும் கூடவே போனேன். ராதாவுக்கு இத்தனை நாள் இருந்த ஹீரோ பதவி டபார்ன்னு என்கிட்ட வந்துடுச்சு. உடனே நானும் திருடனின் அங்க அடையாளம் எல்லாம் மனசுகுள்ளே சொல்லி பார்த்துகிட்டேன். முகத்திலே ஒரு கருப்பு பரு. கழுத்திலே கைகுட்டையை சுத்தி இருக்கனும். வரி வரியா போட்ட டிஷர்ட் இப்படியாக டிபிகல் சினிமா திருடன் தான் மனசிலே வருது. நாங்க அங்க போய் சேரும் போது என்னை துரத்திய நாயும் அங்கே இருந்தது. "ஆகா இவன் பொல்லாத பயலா இருக்கானே, நாம துரத்தியதால இந்த அர்த்த ராத்திரியிலே நம்மை அடிக்க ஆட்களை அழைச்சுட்டு வந்துட்டானே"ன்னு நாய்க்கு பயம். நானும் இது தான் சந்தர்ப்பம் என நினைத்து கொண்டு "டேய் இந்த நாய் அனேகமா அந்த திருடன் நாயாத்தான் இருக்கனும்டா, நான் திருடனோடு சண்டை போடும் போது (அதுக்குள்ள நான் திருடனோடு பயங்கரமா சண்டை எல்லாம் போட்டதா பீலா விட்டு முடிச்சு இருந்தேன்) இந்த நாயும் இருந்துச்சுடா"ன்னு சொல்ல வேற என்ன நாய்க்கு தர்ம அடிதான்.. இந்த கலேபரத்திலே என் மோதிரம் எங்க போச்சுன்னே தெரியல. சரி எதுக்கு கவலை. அதை திருடன் போகும் போது உருவிகிட்டு போயிட்டதா சொல்லிக்கலாம்ன்னு விட்டுட்டேன். நம்ம திருடன் தான் பெரிய தியாகியாச்சே. பின்னே எல்லோரும் சேர்ந்து ஸ்டேஷனுக்கு போய் அந்த இல்லாத திருடனை பத்தி அங்க அடையாளம் சொல்லிட்டு வந்தோம்.


வீட்டுக்கு வந்த பின்னே என் வீர தீர பிரதாபங்களை கண், மூக்கு, காது(ஜிமிக்கி போட்ட காது), எல்லாம் வச்சு சொல்லிகிட்டு இருக்கும் போது என் சின்ன அக்கா "ஊக்கும் இவன் எங்க திருடனை பிடிக்க...எதுனா நாய் துரத்தி இருக்கும். ஓடி வந்திருப்பான்"ன்னு சொன்னாங்க. எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ!! எனக்கு பெண் பார்க்க போகும் போது கூட தங்கமணிகிட்ட போய் என் சின்ன அக்கா "இவன் திருடனை எல்லாம் பிடிச்சவன் தெரியுமா" என கேட்க எனக்கு மானமே போச்சு.


ஆனால் அந்த ஒரிஜினல் திருடனுக்கு அவனை வச்சு இப்படியெல்லாம் காமடி பண்ணியதால் பயங்கர கோவம். "இந்த நாதாறி பசங்க இருக்கும் இந்த ஏரியாவே வேண்டாம்டா சாமீ, ஒருத்தன் என்னடான்னா எனக்கு ஸ்பிரிங் ஷூ போட்டு விடறான். இன்னொருத்தன் வரிபனியன் போட்டு கருப்பு மச்சம் வைக்கிறான். எடுக்காத மோதிரம், டார்ச்லைட் எல்லாம் என் தலையிலேயே பழி விழுது. நான் வேற எங்கிட்டாவது போய் பொழச்சிகறேன்" என போய் விட்டான் போலயிருக்கு.

July 21, 2008

"அனு" ஒப்பந்தம் வெற்றி!!! மலேஷியாவுக்கும் இந்தியாவுக்கும்!!!!!!!!

காலை முதலே அமளி திமளி பட்டுகொண்டிருக்கும் நம் பார்லிமெண்ட் ஒரு விஷயத்தை கவனிக்க தவறிவிட்டது. சிபுசோரன் சோரம் போவாரா, மாயாவதி காலாவதியாவாரா என எல்லாம் தூசு தட்டி ரிங் போட்ட நம்ம பிரதமரும், சோனியா அம்மையாரும் கவனிக்காத ஒரு விஷயம் என்னால் கண்டுபிடிக்கப்பட்டது!!

வேற என்ன நம்ம "அனு" ஒப்பந்தம் தான். நாம் வலை உலகின் செல்ல குட்டி, என் தங்கச்சி, எல்லோருக்கும் நல்லவள் இப்படியாக பல பேர் கொண்ட நம் மைபிரண்ட் "அனு"வுக்கு இன்னிக்கு பிறந்த நாள்.

இன்றைக்கு அதனால் செய்து கொண்ட ஒப்பந்தமே இந்த பதிவு!!

"இன்று மட்டுமல்ல! இனி வாழ்நாள் முழுக்கவும் நீ மலேஷியாவாக இருந்தாலும், எங்கள் இந்திய அண்ணன்மார்களுக்கு தங்கை தான்! உன் அம்மாக்களுக்கு பெண் தான், உன் சுக துக்கங்களில் நாங்களும் எங்கள் சுக துக்கங்களில் நீயும் இருக்க வேண்டும், நாங்களும் உன் கூடவே இருப்போம்"

என்கிற ஒப்பந்தத்தில் நாம் விரும்பி கையெழுத்திடுகிறோம்!!!

இப்படியாக நாங்கள் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றுகிறோம். கண்டிப்பாக நீயும் கையெழுத்து போட வேண்டும் என ஆயில்யன்\குசும்பன் தலைமையில் உன் கழுத்தில் அன்பாக கத்தி வைத்து(அடங்கொய்யால கேக்ல கத்தி வைய்யுங்கன்னா கேக்கு மாதிரி இருக்கும் என் தங்கச்சி கழுத்திலே வச்சிட்டீங்களே) ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறோம்!!!

July 18, 2008

பிரியாணியும் நானும்!!!

எனக்கும் பிரியாணிக்கும் அத்தனை ஒன்றும் தொப்புள் கொடி உறவெல்லாம் இல்லை. ஆனாலும் அது என் கூட நிழல் போல தொடர்ந்து வருவது ஒரு வேடிக்கை தான். எனக்கு அது முதலில் பரிட்சயமான போது எனக்கு வயது பத்து இருக்கலாம். அப்போதெல்லாம் அது எனக்கு ஒரு எட்டாக்கனி வஸ்து தான். அவ்வப்போது அப்பா, சித்தப்பா எல்லாம் பஸ்ட்டாண்டுக்கு நேர் எதிரில் இருக்கும் இம்பாலா ஹோட்டலின் பிரியாணி பற்றி பேசிகொண்டிருக்கும் போதே எனக்கு நாக்கில் எச்சில் ஊற தொடங்கியது. அப்போதெல்லாம் பிரியாணி கால் பிளேட். அரை பிளேட்,புல் பிளேட் என்கிற வகையிலே தான் விற்பனை ஆகும்.(குவாட்டர் கோயிந்தனுக்கு கால் பிளேட்டும், ஆஃப் ஆறுமுகத்துக்கு அரை பிளேட் பிரியாணியும் என்பது போன்ற கணக்கு போல இருக்கு) ஒரு தீபாவளி போனஸ் போது அப்பாவும் மனசு வந்து ஒரு அரை பிளேட் வாங்கி வர ராதாகூட கோலி விளையாடிவிட்டு வந்த எனக்கு மிஞ்சியது என்னவோ அந்த தயிர் வெங்காயம் மட்டுமே. நிற்க!

இப்படியாக பிரியாணியிம் மீதான என் காதல் அதிகமாகி கொண்டே போக ஒரு ரம்ஜானுக்கு கண்டக்டர் காதர் பாய் வீட்டில் இருந்து பிரியாணி வர முதல் ஆளாய் நான் அந்த பிரியாணியில் சிக்ஸரும் ஃபோருமாக அடிக்க அதன் பிறகு நான்கு நாட்களுக்கு அந்த சுவை நாக்கிலேயே இருந்தது. அதன் பிறகு தீபாவளியை எதிர்பார்ப்பதை விட ரம்ஜானை எதிர்பார்க்க தொடங்கி விட்டேன். வயது ஆக ஆக ஒரு ஏழாம் வகுப்பு படிக்கும் போது தான் கூடப்படிச்ச கிளியனூர் முபாரக் அக்காவுக்கு நிக்கா வந்துச்சு. பக்காவா பிரியாணியை அடித்து ஏற்றினேன். அப்பாவுக்கு ஏகப்பட்ட இஸ்லாமிய நண்பர்கள். எல்லோருமே குடும்ப நண்பர்கள். நான் +1, +2 படிக்கும் கால கட்டத்திலேயே எனக்கு வீட்டில் காதுகுத்தி, வலைகாப்பு போன்ற இரண்டாம் நிலை நிகழ்ச்சிகளுக்கு "விசாரிக்கும்" பதவி தரப்பட்டது. ஆனாலும் கல்யாணம், பெரிய எழவுகள் "விசாரிப்பு" பதவிகள் அப்பவும் சித்தப்பா வசமே இருந்தன. அதனால் அப்பாவின் இஸ்லாமிய நண்பர்கள் திருமணங்களுக்கு சித்தப்பாவே போய் பிரியாணி வெட்டி கொண்டிருந்தார். அதன் காரணமாகவே எனக்கு பிரியாணியின் மீதான காதல் ரெக்கை கட்டி பறக்க தொடங்கி விட்டிருந்தது.

அதன் பிறகு படித்துவிட்டு தண்டச்சோறாக இருந்த கால கட்டத்தில் தான் எனக்கு சித்தப்பாவுன் பதவி என் கைக்கு கிடைத்தது. செத்த வீட்டுக்கு போனால் காசிதுண்டை லாவகமாக பல்லில் கடித்து கொள்வது முதல் கல்யாண வீட்டுக்கு போனால் பன்னீருக்கு எப்படி தலை குனியவேண்டும், பாய் வீட்டுக்கு கல்யாணம் விசாரிக்க போனால் வெள்ளை கைலி உடுத்தி, மார்ட்டின் வெள்ளை முழுக்கை சட்டை போட்டு எப்படி போக வேண்டும் என்கிற பாலபாடம் எல்லாம் நடத்தி சித்தப்பா எனக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க சித்தப்பா சொல்லித்தராத சில விஷயங்களையும் நானாகவே கற்று கொண்டு அசத்தினேன். அதாங்க அப்பா கவரில் போட்டு கொடுக்கும் 100 ரூபாய் நோட்டில் இருந்து 50 ரூபாயை கழட்டி விட வேண்டும் என்கிறது மாதிரியான விஷயங்கள். பிற்காலத்தில் சின்ன அக்காவின் கல்யாண மொய் டாப்பில் அதன் பிரதிபலிப்பு இருந்தது தனிக்கதை. சரி விஷயத்துக்கு வருகிறேன்.

அப்படியாக தண்டச்சோறு கால கட்டத்தில் பிரியாணியை பற்றிய ஒரு ஆய்வு நடத்தினேன். முதலில் "இம்பாலா" ஹோட்டலுக்கு போய் ஒரு கால் பிளேட் வாங்கி சுவைத்ததில் அது பாய் வீட்டு கல்யாண பிரியாணியின் கால் தூசுக்கு சமானம் என்கிற முடிவுக்கு வந்து பின்னர் விசாரிக்க விசாரிக்க அப்போதுதான் தெரிந்தது மாயவரத்தில் இம்பாலா விட்டால் வேற எங்கயுமே பிரியாணி கிடையாது என்று. அப்போது இம்பாலாவை தவிற வேறு எந்த அசைவ ஹோட்டலும் பிரசித்தமாக இல்லை. ஆனால் மயிலாடுதுறையில் இருந்து திருக்களாச்சேரி வழியாக பொறையாறு போகும் வழியில் "ஆலமரத்தடி" ஸ்டாப்பிங் பிரியாணி பிரசித்தம் என கேள்விப்பட்டு (அதுவும் வெள்ளிகிழமை தொழுகைக்கு பின்பு அந்த ஆலமரத்தடியில் தான் கிடைக்கும். நல்ல கூட்டம் இருக்கும். ஒரு ஆளுக்கு ஒரு பொட்டலம் மட்டுமே என பியர்லெஸ் தியேட்டரின் விதிமுறைகளோடு நடத்தப்பட்ட அந்த பிரியாணி சும்மா சொல்ல கூடாது நல்லாவே இருந்தது.

பின்பு மயிலாடுதுறை - குடந்தை சாலையில் கோமல் ரோடு ஸ்டாபிங்ல இறங்கி அங்கயே ஒரு வாடகை சைக்கிள் எடுத்து கொண்டு கோமல் நோக்கி போகும் வழியில் தேரிழந்தூர் பஸ்ட்டாப்பில் ஒரு கீத்து கொட்டகை டீக்கடை. அதன் அடுப்பு பகுதியில் ஒரே கரி. அதன் மேல் திரிசூலம் போஸ்ட்டர் ஒட்டியிருக்கும். சிவாஜியும் ஸ்ரீபிரியாவும் தினமும் சூட்டில் கட்டிபிடித்து வெந்து கொண்டிருந்தனர். அந்த கடை பிரியாணியும் நல்லா இருந்துச்சு. ஆனாலும் அந்த கல்யாண வீட்டு பிரியாணிக்கு ஈடாக எதுவுமே இல்லை.

பின்பு கூத்தாநல்லூர் - பொதகுடியில் ஒரு கடை. இதே ஸ்டைல் கடை தான் அதுவும் நல்லா இருந்தது. இப்படியாக நான் ஆய்வு நடத்தியதில் இருந்து ஒன்று புலப்பட்டது. பாய் வீட்டு கல்யாண பிரியாணிக்கு சமமாக எதுவும் இல்லை. பாய் வீட்டு கல்யாணம் எப்படி என பார்ப்போம். மயிலாடுதுறையை சுற்றியும் நீடூர், தேரிழந்தூர், எலந்தங்குடி, வரகரை, சங்கரன் பந்தல், கிளியனூர் என 25க்கு மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர்கள் தான். யாருமே ஒரு மண்டபத்தில் வைத்து திருமணம் நடத்துவது இல்லை. பள்ளியில் திருமண ஒப்பந்தம். பின்னே அந்த சின்ன மண்ரோடு தெருவை அடைத்து அலங்கரிக்கப்பட்ட பந்தலில் போடப்பட்டிருக்கும் வாடகை நாற்காலியில் இளைப்பாறல். பின்பு ஏதாவது ஒரு வீட்டிலே சாப்பாடு. சும்மா சைவ சாப்பாடு மாதிரி நச நசன்னு கூட்டு, பொறியல் என்றெல்லாம் கிடையாது. ஒரு ஆளுக்கு 250 கிராம் எடையுள்ள ஆட்டுக்கறி துண்டு, பிரியாணி சாதம் வைத்த தட்டு சர சரன்னு பறந்து பறந்து பந்திக்கு வரும். ஒரு பாத்திரத்தில் கை கழுவ தண்ணியும் வரும். தொட்டுக்க வெங்காயம் தயிர் சில இடங்களில் மட்டுமே கிடைக்கும். ஆனால் தக்காளியை வைத்து தித்திப்பாக ஒரு பிசின் போன்று ஒன்று வரும். பின் கோதுமை கஞ்சி வரும்(அதை பாயசம் என்பார்கள்) அப்போது "மெடிக்கலா"என தட்டை சுமந்து வருபவன் கேட்டால் "இல்லை இல்லை சத்தியமா இல்லை" என்று சொல்லிடனும். ஆமாம் என சொல்லிவிட்டால் கோழிகறி பிரியாணியை தலையில் கட்டிவிடுவார்கள்.

ஆனா எல்லா கல்யாணத்திலும் பார்த்துவிட்டேன். அழகா வெள்ளை தொப்பி(கூத்தாநல்லூரில் மட்டும் எம்ஜியார் தொப்பி மாடலில் ஆனால் கருப்பாக ஒரு டிசைன் தொப்பி), வெள்ளை கைலி, முழுக்கை பட்டன் போடப்பட்ட மார்ட்டின் சட்டை போட்டு கொண்டு இருக்கும் எல்லா ஆண்களுமே சாப்பாடு ரெடியான பின்னே அந்த சின்ன நிலைப்படி வழியாக உள்ளே போனதும் கலவரத்துக்கு பின்பான அமைதியில் புரண்டு கிடக்கும் ஒற்றை காலணிகள் கிடக்குமே அது போல ஒரு 50 சட்டை பொத்தானாவது தரையில் கிடைக்கும் அந்த இடத்திலே.

இப்படியான என் ஆராய்ச்சி எல்லாம் முடிந்து நான் 90களில் அபுதாபி வந்த அன்றே நண்பர் பல்தியா என சொல்லப்படும் நகராட்சி தமிழ் ஊழியர்கள் நடத்திய மீளாது விழாவுக்கு கூட்டி செல்ல நல்ல பிரியாணி கிடைக்கும் வாங்க என்று கூட்டி சென்றார் நண்பர்) நான் கூட "அப்பாடா சட்டை பட்டன் பிய்த்துக்காம பிரியாணி சாப்பிடலாம் என நினைத்த எனக்கு மிஞ்சியது ஒரே ஒரு பட்டன் தான். ஆனால் மட்டன் பிரியாணி அசத்தல்.

ஆனாலும் என் பிரியாணி வேட்டை தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் காயல்பட்டினம் ஆளுங்க துபாயில் கூட்டம் போட அதற்கு போய் வந்த என் நண்பர் ஒருவர் ஒரு பொட்டலம் பிரியாணியை கட்டி கொண்டு வர ஆஹா நான் தேடியது இது தான் இது தான் என மனசு குதிக்க ஒரு வழியா என் பிரியாணியை கண்டுபிடிச்சுட்டேன். அது எங்கே வாங்கப்பட்டது என கேட்ட போது "Chef Al Khaleej" பிரியாணி என்றும் வாணியம்பாடி- ஆம்பூர் காரர்கள் நடத்தும் மெஸ் என்பதும் சுருக்கமாக நம்ம ஆடகள் காலீத்து பிரியாணி என அழைப்பதும் தெரிந்தது. பின்பு என்ன அபுதாப்யில் இருந்தாலும் பெரிய சட்டி அனுப்பி வாங்கி வந்து மகிழ்ந்தோம்.

துபாய் வந்த பின்பும் தொடர்கிறது. நான் எந்த பார்ட்டி கொடுப்பதாக இருந்தாலும் அது தான். தொட்டுக்க ஏதும் தர மாட்டர்கள். சராசரியாக ஒரு தடவையாவது அதை வாங்கிவிடுவது என்கிற கொள்கையில் உறுதியாக இருக்கின்றேன். ஒரு மன்னு இப்போது 275 திர்காம். நான் எக்ஸ்ட்ரா கறி போட்டுதான் எப்போதும் வாங்குவேன். நாக்கில் எச்சில் ஊறுபவர்கள் நாளை கிடேசன் பார்க்குக்கு வந்தால் கிடைக்கும். துபாயில் உள்ளவர்கள் வசதிக்காக அந்த பிரியாணி கடையின் போன் நம்பர் தருகிறேன் 04 2694603.

அந்த பிரியாணி சாப்பிட்டு சாப்பிட்டு இந்த தடவை மாயவரம் போன போது "இம்பாலா" போனேன். "பாய் உங்க கடையிலே எனக்கு பிடிச்ச ஐட்டம் என்ன தெரியுமா?" என கேட்டேன். பாய் "என்ன தம்பி"ன்னு கேட்டார். கல்லாவின் மேலே இருந்த விபூதி/குங்கும/சோம்பு தட்டை காட்டி "இந்த விபூதி தான் என்னமா நைசா இருக்கு"ன்னு சொல்லிட்டு ஓடிவந்துட்டேன்!

!!!

July 16, 2008

"பிசிறு" - ஒரு போலி இல்லாத மனிதன்!!

பிசிறு! அவன் பெயரே அது தான். யார் வைத்த பெயர் என்றெல்லாம் தெரியாது. அவன் பிறந்து ரொம்ப காலம் புதிய பாதை பார்த்திபன் போல பெயர் இல்லாமல் தான் இருந்திருக்கிறான். "டேய் இங்க வா" "ந்தா இத தின்னு" அப்படியாக டேய், ந்தா, எலேய் இப்படி பல பெயர்கள் தனக்கு இருந்ததாகத்தான் அவனுக்கு நினைப்பு.இது அவனுக்கு சுலபமாக இருந்தாலும் அவனை பயன் படுத்தும் மற்றவர்களுக்கு கொஞ்சம் சிரமமாக இருந்ததால் "பிசிறு" என நாமகரணம் சூட்டப்பெற்றான். பட்டு தூளியிலே போட்டு வாயிலே தாய் மாமன் சர்க்கரை தண்ணீர் ஊற்றி மூன்று முறை "பிசிறு" "பிசுறு" 'பிசிறு" என்றெல்லாம் பெயர் சூட்டப்படும் வயதிலோ அல்லது வசதியிலோ அல்லது அம்மா அப்பாவோடோ இல்லை. பத்து வயது பிராயத்தில் தான் அவனுக்கு அந்த பெயர் ஏறிக்கொண்டதாக பலரும் சொல்வர். அவன் யார்???

அவன் இவன் என்று சொல்வதால் என்னைவிட சின்ன பையன் என நினைக்க வேண்டாம். இப்போது வயது 50க்கு மேல் இருக்கும். எனக்கு மனதில் இருக்கும் பிசிறு எப்படி இருப்பான் எனில் அப்போது வந்த இளமை ஊஞ்சலாடுகிறது கமல் ரஜினி கூட டென்னிஸ் விளையாடுவாரே அப்படித்தான் இருக்கிறான் இப்போதும். அவன் இவன் என கூப்பிடுவதே அவனுக்கும் பிடிக்கும், அதை தவிற அப்படியே எங்கள் எல்லோருக்கும் பழகிவிட்டது. அதனால் அப்படியே தொடர்கிறேன். மன்னிக்கவும்.

எங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானமே பிசிறுவுக்கு தாய்வீடு. பிறந்ததே அந்த மைதானத்தில்தான் என கதைவிடுபவர்களும் உண்டு. ராதா பிசிறை பற்றி கதை விடும் அழகே தனி. "அவங்க அம்மாவுக்கு காவிரிக்கு அந்த பக்கம் வீடு. ஒருத்தன் அவங்களை ஏமாத்திட்டு ஓடிட்டான். அவங்க பிரசவ நேரத்திலே ச்சோன்னு மழை பெய்யுது. தள்ளாடி தள்ளாடி நடந்து வர்ராங்க. அப்ப ஒரு மரம் குறுக்கே விழுது. அதையும் தாண்டி வர்ராங்க. நம்ம கிரவுண்டு வழியா வந்தா சுருக்க வந்திடலாம்ன்னு வந்தா தோ கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஆஸ்பத்திரி தெரியுது. வலி அதிகமா ஆகிடுச்சு. அப்படியே சேத்துல விழுந்துட்டாங்க. உடனே பிசிறு பிறந்திட்டான். அவனை அப்படியே பார்க்கிறாங்க. அப்ப ரெண்டாம் ஆட்டம் முடிஞ்சு போன நம்ம கிரவுண்டு மார்க்கர் சேப்பு சுப்பையா கையிலே அவனை தூக்கி கொடுத்துட்டு செத்து போயிட்டாங்க" ( அடங்கொய்யால பிதாமகன் டைட்டில் சாங் தவிர அவன் அப்பவே அந்த கதையை எழுத்திட்டானே!!!) எங்கள் பள்ளி எல்லா விளையாட்டிலும் மாவட்ட அளவில் நல்ல இடத்தை பிடித்தமைக்கு பிசிறுவும் ஒரு காரணம் என்பது உண்மை. அவன் பிறப்பை பற்றி கேலியாகவும், ஜாலியாகவும், பரிதாபப்பட்டும் பேசும் யாரை பற்றியும் பிசிறு கவலைப்பட்டதே இல்லை.

அவனைப்பற்றி எங்க விளையாட்டு மைதான மார்க்கர் சேப்பு சுப்பையா சொல்லுவார். "அவனுக்கு நடக்க தெரிந்த போதே இங்க கிரவுண்டுக்கு வந்துட்டான். என் கூடவே ஒத்தாசையா மார்க்பண்ற வேலை எல்லாம் செய்வான். டீ வாங்கி குடுத்தா குடிப்பான். பந்து எடுத்து போடுவான். பேட் எல்லாம் துடச்சி வைப்பான். இப்படியா எல்லாரும் வெளயாடும் போது பாத்து பாத்து எல்லா வெளையாட்டையும் கத்துகிட்டான். நம்ம பிடி சிவனேசன் சார் தான் இவன் கிட்ட இருக்கும் தெறமைய மதிச்சு எல்லா வெளையாட்டும் சொல்லி குடுத்தாரு. பின்ன இந்த பய புள்ள இந்த கிரவுண்ட விட்டு வெளியே போறதே இல்ல. எஸ்.வி.கே சார் ரிட்டையர்டு ஆகும் வருஷத்திலே மாட்டாஸ்பத்திரி ஓரமா பிரசவ ஆஸ்பத்திரி பக்கமா ஒவ்வையார் ஸ்கூல் பின்பக்கமா ஒரு காடுமாதிரி பொதரு கிடந்துச்சு. அதிலே ஒரு பேஸ்கட்பால் கிரவுண்டு கட்ட ஆசைப்பட்டாரு. இரும்புகடை கண்ணப்பன் சாரும் இன்னும் சில பேரும் பணம் கொடுத்தாங்க. அப்ப கட்டின அந்த பேஸ்கட்பால் கிரவுண்டு சிமெண்ட் தரை தான் அவனுக்கு மெத்தை. ராத்திரி அங்க தான் கெடப்பான். அவனுக்கு அப்பன் யாருன்னு அவனுக்கும் தெரியாது. அம்மா அவனை இந்த பிரசவ ஆஸ்பத்திரியிலே பெத்து போட்டுட்டு ஓடி போயிடுச்சு. அப்ப சட்டகாரச்சி ரோட்ரிஸ் டாக்டரம்மா "சரி இவன் இங்கயே இருக்கட்டும்"ன்னு சொல்லி அவன் அந்த பாலு பன்னுலயே வளந்துட்டான். இது தானப்பா அவங்கதை"

என் வீட்டு திண்ணையில் நான் படுத்து இருக்கும் போது காலை 4.30க்கு பேஸ்கட்பால் கிரவுண்டிலே மாட்டு ஆஸ்பத்திரி வெளிச்சத்திலே அவன் பிராக்டிஸ் பண்ணுவது என் தலையில் சம்மட்டி அடிப்பதுபோல டொங் டொங்ன்னு கேக்கும். அப்படி ஒரு வெறி விளையாட்டின்மீது அவனுக்கு. அவனுக்கு என்னதான் வேலை என்றால் சின்னகடை தெருவின் ஆரம்பம் முதலாக எங்கள் சியாமளாதேவி கோவில் வரையிலான எல்லா கடையிலும் குறிப்பாக எல்லா டீக்கடையிலும் கிளாஸ்,பாத்திரம் கழுவுவது முதல் டேபிள் துடைப்பதுவரை செய்வான். கூலியாக சாப்பாடு சாப்பிடுவான். அதுபோல எங்கள் கோவிலிலும், பெரிய கோவிலிலும் சாமி தூக்குவது முதல் பந்தம் பிடிப்பதுவரை செய்வான். கூலியாக உண்டகட்டி போதும். வயிறு பசிக்க கூடாது அவ்வளவே. அதுக்கு என்ன வேலை செய்வது என்றாலும் செய்வான். பள்ளி பக்கம் ஒதுங்கியது கிடையாது. பிசிறு என கையெழுத்து போட கூட தெரியாது. ஆனால் "ஃபைன் லெக்க்கிலே அட்ரா மயிறு"...."அப்டமன் அப்படியே ஷிங் ஆகனும் அப்படி எழுந்திரு, நான் உன் ஷோல்டரை பிடிச்சுக்கறேன்"....." நாயி நாயி நாயி இப்ப அதே பால் போடறேன்...அப்படியே ஸ்கொயர் கட் பண்ணு, ஃபோர்க்கு போகலைன்னா மொட்டை அடிச்சுக்கறேன்"..... "போல்வால்ட்ன்னா அந்த கம்பு மேல ஒரு லவ் வரணும்டா.....அதை தூக்கி கிட்டு ஓடி வரும் போதே மனசு தாவியிருக்கனும்டா"...இப்படியா விளையாட்டின் அத்தனை ஆங்கில வார்த்தையும் அத்துப்படி.

தனக்கு ஒரு நிலையான டீக்கடையில் வேலை தேடிகொள்ளாமைக்கும், சின்ன கடை தெருவை விட்டு வேறு எங்கும் போகாமைக்கும் காரணம் ஒன்றே ஒன்று தான். மதியும் மணி 3.00 ஆனால் எங்கள் பள்ளி மைதானத்துக்கு ஓடி வந்துவிட வேண்டும்.மதியம் 3.00 மணிக்கு வந்தா சிவநேசன் சார், பிடி பாலு சார் எல்லாருமே ஆர்வமா காத்துகிட்டு இருப்பாங்க பிசிறுக்காக. அப்போது முதல் எங்க எல்லாரையும் எங்க சார்களோடு சேர்ந்து டிரில் வாங்கிடுவான்.

அவ்வப்போது சில போலீகாரங்க வருவாங்க. "எலேய் பிசிறு, நாளைக்கு போலீஸ் கிரவுண்டுக்கு வந்துடு. உன் நம்பர் 247, பேரு தங்கவேலு. நம்ம சரகத்துக்கும் திருச்சி சரகத்துக்கும் கபடி இருக்கு. வரும் போது மயித்த ஒட்ட சரச்சிகிட்டு வா. ஹிப்பியோட வராத. இந்த 10 ரூவா புடி. ராத்திரி ஸ்டேஷனுக்கு வா, முட்ட பிரியாணி சாப்பிடலாம்" என்று சொல்லிவிட்டு போவார்கள். அதுக்கு அவன் " சார் திருச்சியா, அந்த செபாஸ்டின் பிசி நகத்த வெட்ட சொல்லுங்க சார் இந்த தடவயாவது. இங்க பத்திங்களா தழும்ப போன தடவ ஃபைனல்ல போட்டது" என சொல்லி தொடையை காட்டுவான். அந்த 1 வாரத்துக்கு அவனுக்கு சோத்துக்கும் முட்டைக்கும் கவலை இல்லை. ஆனால் எப்போதுமே ஜெயிச்ச கப்புக்கு பின்னாலேதான் முகத்தை மறைத்து கொண்டு பிசிறு போஸ் கொடுக்க வேண்டும்.

இப்படியாக மின்சாரவாரியம், போக்குவரத்து கழகம், என எல்லா கழகத்துக்கும் போய் எல்லா விளையாட்டிலும் தழும்பும் பிரியாணி, முட்டையும் வாங்கி வருவான். சில சமயம் சில பள்ளிகூடத்துக்கு போய் கோச்சிங் குடுத்துவிட்டு அந்த 2 நாள் சாப்பாட்டை சம்பளமாக வாங்கி வருவான். அவனிடம் பயிற்சி எடுத்த எல்லோருமே இன்று நல்ல நிலையில் ஆனால் அவன் நிலை???

நான் இந்த முறை சென்ற போது எங்க கோவில்ல கரகம் எடுத்த யாரோ போட்ட சாப்பாடு பந்தி முடிந்து பின் இவன் பெரிய அண்டாவை பிள்ளையார் கோவில் வாசல் பைப்பில் கழுவிகொண்டு இருந்தான். என்னை பார்த்ததும் "எப்படா வந்த, எப்புடி இருக்க இதான் ஒம் மவளா" என கேட்ட போது அபி முதற் கொண்டு அங்கே நின்று கொண்டிருந்த எல்லோருமே என்னை ஒரு மாதிரி பார்க்க எனக்கு மட்டும் ஒரு நல்ல போலியில்லாத மனிதனை பார்த்த சந்தோஷம். ஏனனில் என்னை சின்ன வயதில் வாடா போடா என கூப்பிட்டவர்கள் இன்று "வாங்க தம்பி, போங்க தம்பி" என விளித்து "துபாய்ல இருந்து அடுத்த தபா வரும் போது மொதல மார்க் பச்சை பெல்ட் வாங்கி வாங்க தம்பி" என பேசுபவர்கள் மத்தியில் பிசிறு அப்படி கூப்பிட்டு "அங்க நீ நல்லா இருக்கியாடா" என என் நலம் விசாரித்தது மிக்க சந்தோஷமாக இருந்தது.

நான் கிட்ட போய் "எப்படிடா இருக்க" என கேட்க "நல்லா இருக்கேண்டா, நம்ம ஸ்கூல் பசங்க இப்ப தூள் கிளப்பறாங்க தெரியுமாடா, இந்த வருஷமும் வீரப்பாபிள்ளை கப்பு நமக்குதாண்டா எழுதி வச்சிக்க" என்றான். அண்டா கழுவும் போதும் இதே நினைப்புதானா?? சரியென்று நான் பையில் கைவிட்டு ஒரு 200 ரூபாய் எடுத்து கொடுத்து "வச்சிக்கடா" என சொன்னதுக்கு "எனக்கு எதுக்கு பணம்?, வேணும்ன்னா சாமிகடையிலே எனக்கு 1 மாசத்துக்கு காலையில காலையில 2 முட்டை கொடுக்க சொல்லிட்டு போ அடுத்த மாசம் ஒரு தோர்ணமெண்ட் இருக்கு" என சொல்லிவிட்டு பர பரன்னு அண்டாவை தேய்க்க ஆரம்பித்துவிட்டான். அட பைத்தியகாரா 200 ரூவாய் வாங்கிகிட்டா 45 நாட்களுக்கு முட்டை சாப்பிடலாமேன்னு நெனச்சுகிட்டேன்.இப்படியும் சில விந்தை மனிதர்கள்.

July 2, 2008

பறக்க தெரியும் என்பதற்காக சூரியனில் பாயக்கூடாது!!! பாகம் # 2

இதன் முந்தைய பாகத்தை இங்கே போய் பாருங்கப்பூ!!

////த‌மிழ்நாட்டில் த‌மிழில் தான் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு பெய‌ர் வைக்க‌ வேண்டும் என்று திரை குடும்ப‌த்தின் மூத்த‌ பிள்ளையாகிய‌ நீங்க‌ள் சொன்னால் உங்க‌ள் சினிமாக்கார‌ர்க‌ள் கேட்க‌ மாட்டார்களா ? அத‌ற்காக‌ த‌மிழில் பெய‌ர் வைத்தால் வ‌ரிவில‌க்கு என்று அர‌சாங்க‌த்திற்கு வ‌ரும் வ‌ருமான‌த்தை விட்டுக் கொடுக்க‌த்தான் வேண்டுமா? //

ஒரு சின்ன விளக்கம். 100 பேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தின் முதலாளி ஒரு அவசர வேலை காரணமாக எல்லா பணியாளர்களையும் அழைத்து " தயவு செய்து இன்னும் 1 வாரத்துக்கு தினமும் 2 மணி நேரம் அதிகமாக உழைத்து எனக்கு உற்பத்தியை முடித்து கொடுங்கள், நான் உங்கள் குடும்பத்தின் மூத்த பிள்ளை மாதிரி இல்லியா?" என கேட்பதாக வைத்து கொள்வோம். யாருக்கு ஆர்வம் இருக்கும்? அப்படியே சிலபேர் அவர் பேச்சை கேட்டால் கூட பகுதிக்கும் அதிகமானவர்கள் ஒரு வித சலிப்போடுத்தான் வேலை செய்வர். சிலர் அவர் பேச்சை கேட்க கூடாமல் போகவும் வாய்ப்பு உண்டு. ஒருவேளை இப்படி வைத்து கொள்ளுங்கள், அதாவது அந்த முதலாளி தன் அதிகாரத்தை பயன்படுத்தி தினப்படி வேலை நேரத்தை 2 மணி நேரம் கூட்டினார் என்றால் அந்த தொழிலாளிக்கு அவர் மீது வெறுப்புதான் மிஞ்சும். அது உற்பத்தியை பாதிக்கும். ஆனால் அதே முதலாளி " அதிகம் வேலை பார்க்கும் ஒவ்வொறு மணிக்கும் இரட்டை சம்பளம், விருப்பம் இருந்தால் செய்யவும்" என சொன்னால் போட்டி போட்டுகொண்டு வேலை செய்வர். இந்த இரட்டை சம்பள விஷயத்தால் முதலாளிக்கு லாபத்தில் கொஞ்சம் குறையுமே தவிர அவரின் நோக்கம் கண்டிப்பாக நிறைவேறும் இல்லியா? அதுதான் இந்த விஷயத்திலும் நடந்துள்ளது நண்பரே. அரசாங்கம் ஒரு சின்ன விஷயம் இல்லை. திரைப்பட கேளிக்கை வரியில் கஞ்சி காய்ச்சி குடித்து பசியாறி துவையலை தொட்டு நக்கி கொண்டிருக்க! அது ஒரு மலை!

மேலும் திரைப்படதுறை என்பது ஒரு கணிசமான சதவீத வேலை வாய்ப்பை தமிழக மக்களுக்கு தந்து கொண்டிருக்கும் ஒரு மாபெரும் சக்தி. அது நசிந்து போய் விட்டால் பல்லாயிரக்கணக்கானோர் நடுத்தெரு நாராயணன் ஆகிவிடுவர். அது அரசுக்கு தான் நெருக்கடியை கொடுக்கும். அதை எல்லாம் தவிர்க்கவே இந்த மாதிரி சலுகைகள் தரப்படுகின்றன!

////2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.//

துபாயில் கடந்த 2 மாதங்களாக விஷம் போல விலைவாசிகள் ஏறி வந்துவிட்டன. 2 மாதம் முன்னதாக ஒரு கிலோ அரிசி 27 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 102 ரூபாய். நம்புங்கள் உண்மை. ஆனால் உலகத்திலேயே 2 ரூபாய்க்கு அரிசி தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றது. துபாய் காசு 20 காசுக்கு 1 கிலோ அரிசி. இது சாதனையா இல்லை வேதனையா? முன்னே போனா கடிக்கிறீங்க பின்னே போனா உதைக்கிறீங்கப்பா. இப்படி ஒரு கேள்வி கேட்டு உங்கள் பதிவை நகைச்சுவை என வகைப்படுத்தி இருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

//இல‌ங்கை நாட்டின் க‌ட‌ற்ப‌டை ந‌ம் மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொல்லும் போது, உட‌னே பிர‌த‌ம‌ருக்கு ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதுவீர்க‌ள்.//

கலைஞருக்கும் கடலோர காவல் படைக்கும் என்ன சம்மந்தம். கலைஞருக்கும் கடலுக்கும் உள்ள ஒரே தொடர்பு அவரை கடலில் தூக்கி போட்டால் கட்டுமரமாக மிதப்பார். நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் அவ்வளவே!! தமிழ் நாட்டின் புலிமலைப்பட்டியில் ஊர்காவல் படையில் வேலை பார்த்து கொண்டு ராவல்பிண்டி ரகீம்கானை பிடித்து வந்து லாக்கப்புல வச்சி எட்டு பக்க "தமில்" வசனத்தை பேசி பேசி அவன் டவுசரை உருவும் விசயகாந்து இல்லைப்பா கலைஞர்!!

////2004ல் மத்திய அமைச்சரவையில் திமுகா விற்கு கேட்ட‌ இலாக்காக்க‌ளை ஒதுக்க‌வில்லை என‌ போராடி பெற்ற‌ நீங்க‌ள், அது போன்ற‌ ஒரு போராட்ட‌த்தை ம‌க்க‌ளுக்காக‌ ஒரு போதும் செய்த‌தில்லையே ஏன்? //

அடப்பாவமே அதுவும் மக்களுக்காகத்தான்! தமிழகத்தின் 150 ஆண்டுகால கனவு சேதுராம் திட்டம் நிறைவேற வேண்டுமெனில் அந்த துறை நமக்கு வேண்டும். அதற்காக போராட வேண்டும் தானே. அது தமிழக நலனுக்காகத்தானே. நோக்கியா முதல் பாக்கியா வரை வரிசை கட்டி நிக்கனும் திருபெரும்புதூர் சாலையிலே, நாங்குநேரி முதல் நல்லத்துகுடி வரை ஐடி நிறுவனமா இருக்கனும். தமிழ் நாட்டிலே எந்த சின்ன பையனை கேட்டாலும் 35000, 40000 என காலர் தூக்கிவிட்டுக்கனும். டி.என்.பி.எஸ்.சி எழுதிகிட்டு பிள்ளையார் கோவில்ல தேங்காய் உடைத்து வேண்டுதால் நடத்திகிட்டு இருந்த நம்ம பசங்க இன்றைக்கு இத்தன தருவியா வருவேன், இல்லாட்டி போய்கிட்டே இருப்பேன் என்று எல்லாம் இருக்கனும். இதற்காகத்தானே அய்யா ஐடி துறையை கேட்டு வாங்கினோம். இதல்லாம் மக்களுக்கு தானே!

(ஒரு இயக்கம் என்றால் நெருப்பா இருக்கனும். 1989ல் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. கலைஞர் அப்போது முதல்வர். விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன், நடிகை ராதா, மதுரை பொன்னுதாய் இவர்கள் எல்லாம் விருது பெறுகின்றனர். பின்னர் பேசிய கலைஞர் " இந்த விழா முடியும் போது நான் முதல்வரா இல்லையா என எனக்கு தெரியாது. இப்போது வந்துள்ள செய்தி பிரதமர் சந்திரசேகர் அவர்கள் சொல்லியிருப்பதாக வந்த செய்தி 'திமுக ஆட்சியை கலைக்கும் முன் 100 முறை யோசிப்போம்' . பிரதமர் சந்திரசேகர் கொஞ்சம் பொருமையாக யோசிப்பவராக இருந்தாலும் உள்துறை இணை அமைச்சராக இருக்கும் சுபோத்கான் சகாய் அவர்கள் நான் பேசி முடிக்கும் முன்னமே 100 முறை யோசிக்கும் ஆற்றல் பெற்றவர் என எனக்கு தெரியும்"... ஆட்சி போகப்போவது தெரிந்தும் என்ன ஒரு நக்கல் அவருக்கு. ஆக உள்துறை இணை அமைச்சர் என்கிற அந்த அதிகாரமுள்ள அதே பதவியை அதே காங்கிரசிடமிருந்து நாங்கள் கேட்டு வாங்கியதில் என்ன தவறு.)

மத்தபடி நீங்க சொல்வதை நான் ஒத்துகொள்கிறேன். கலைஞர் சிறைக்கு போனதெல்லாம் செயலலிதா வீட்டு கோழியை திருடியமைக்காகத்தான்.

////பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த முடியாது என்றீர்கள். ஆனால் இப்போது மட்டும் கள்ள சாராயம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதா என்ன? அவ்வப்போது கள்ளச் சாராய சாவுகளும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன ? //

பெரியம்மையை முற்றிலுமாக ஒழிக்கலாம். போலியோவை 100 சதவீதம் ஒழிக்கலாம். ஆனால் கள்ள சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம். அவ்வளவு தான் செய்ய முடியும். காரணம் பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும் எல்லாவற்றுக்கும். பெரியம்மை ஒழிவதால் அல்லது போலியோ ஒழிவதால் யாருக்கும் இழப்பு இல்லை. ஆனால் கள்ள சாராயம் ஒழிவதால் அதை வைத்து பணம் கொழிக்கும் சில கும்பலுக்கும் இழப்பு. தவிர குறைந்த விலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கு இழப்பு. அதனால் அரசு கண்ணில் இருந்து தப்பி தொழில் நடத்துகின்றனர். ஆனால் நிலமை கட்டுபாட்டில் உள்ளது.

//த‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா? //

இதற்கு என்ன பதில் சொல்வது, விதண்டாவதமாக இருக்கின்றதே!

//ஒட்டுமொத்த தமிழர்களையும் உடன்பிறப்பே என்று அழைக்கும் நீங்கள் மொத்த தமிழகத்தையும் உங்கள் குடும்பமாக நினைத்தீர்கள் என்று அக மகிழ்ந்த எங்களுக்கு,//

திமுகவில் இருக்கும் 2 கோடி உருப்பினர்களின் வீட்டு திருமணத்துக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் கலைஞர் போய் வந்தது போல தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகத்திலும் ஏதாவது ஒரு தலைவனை காட்டமுடியுமா தங்களால்??? அவர் நடத்தி வைத்த திருமணங்கள் எத்தனை? போய் வந்த துக்க நிகழ்ச்சிகள் எத்தனை? இண்டர்காம் தலைவரா அவர். கொஞ்சமாவது மனசாட்சியோடு கேள்வி கேட்க வேண்டாமா? தமிழகமே அவருக்கு உடன்பிறப்பு தான்! சந்தேகமே இல்லை!

திரும்பவும் சொல்லி கொள்கிறேன்! இனி இலவச தொலைகாட்சி பற்றி ரொம்ப சிந்திக்க வேண்டாம். அழகா ஒரு வீடு கட்டினா வீட்டுக்கு முன்பாக வாசனையான மல்லிகையும் கவர்ச்சியான ரோஜாவையும் வைப்பது போல த்தான் இலவச தொலைகாட்சி பெட்டி! ஆனால் அதே வீட்டின் கொல்லையில் வைக்கும் புளிய விதை போன்றவை தான் சேதுராம் திட்டம் போன்றவை. அவைகள் நம் சந்ததிக்கு பலன் தரும். மல்லிகையும் ரோஜாவும் நமக்கு சந்தோஷம் கொடுக்கும். அவ்வளவே! அதிகம் குழப்பிக்காதீங்க யாரும்!!!

பறக்கத்தெரியும் என்பதற்காக சூரியனுக்குள் பாயக்கூடாது!!! (பாகம் # 1)நான் நண்பர் திரு. ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கு சொல்லப்போகும் பதிலுக்கும் இந்த தலைப்புக்கும் சம்மந்தம் இல்லை. ஆனால் கலைஞரின் "காலத்தால் அழியாத" இந்த வசனத்தை பயன் படுத்தி கொள்ளவே இந்த தலைப்பு. முதலில் மிக்க நன்றி திரு. ஜோஸப் பால்ராஜ் அவர்களுக்கு. காரணம் "அபிஅப்பா மூலமாக கலைஞருக்கு சில கேள்விகள்" என தலைப்பு கொடுத்து என்னை கௌரவப்படுத்தியமைக்கு. (இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்). அடுத்து தம்பி திரு. லக்கிலூக் அவர்களுக்கு, தம்பி வெளியிட்ட உடனடி பதில் பதிவுக்காக. நான் மதியம் தான் பார்த்தேன் உங்கள் பதிவையும் பின்னூட்டத்தையும். அதனால் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து இந்த பதிவினை இடுகின்றேன்.

//இலவச டிவி என்பது, பசியால் அழும் குழந்தைக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து சமாளிப்பது போன்றது. மிட்டாய் பசிக்கு உணவாகாது அல்லவா, அழும் குழந்தை மிட்டாயை பார்த்து சற்றே அழுகையை நிறுத்தி சிரிக்கலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. பசி தீரும் வரை அது அழத்தானே செய்யும். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இலவசங்களின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியும்? //

மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாதுங்க. 2000 ரூபாய் மதிப்பில் ஒரு பொழுது போக்கு சாதனத்தை மக்களுக்கு வழங்க முடியுமா? அது சாத்தியமா? சுமாராக எத்தனை பேருக்கு வழங்க இயலும். அதற்கான நிதி எத்தனை தேவைப்படும். எத்தனை கால கட்டத்துக்குள் அதை தர முடியும். அப்படி வழங்கினால் அதன் காரணமாக மற்ற வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுமா? என எல்லா விதத்திலும் ஆராய்ந்து தேர்தல் அறிக்கையிலே விளக்கமாக சொல்லப்பட்டு பின்பு தகுந்த ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு படிப்படியாக அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவது எல்லோருக்குமே தெரிந்த வெளிப்படையான விஷயம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அந்த இலவச திட்டத்தால் எந்த வளர்ச்சி பணி பாதிக்கப்பட்டது என தங்களால் விளக்க முடியுமா? இந்த திட்டத்தால் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை நண்பரே. அரசு வருவாயை வேறு விதத்தில் பெருக்கி இது போன்ற திட்டத்தை தாராளமாக செய்யலாம். தற்போது கடலூர் மகளிர் மாநாட்டில் கூட மத்திய அரசினால் வேறு வழியில்லாமல் ஏற்றப்ப்ட்ட கேஸ் விலையில் 30 ரூபாயை தமிழக அரசு ஏற்று கொண்டதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்??

////1996 - 2001 ஆட்சியில் செய்த அளவுக்கு கூட இந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லையே? //

இல்லை! நீங்கள் இந்த கேள்வியை இப்போது கேட்டதே தவறு! 1996-2001 கால கட்டத்தில் எத்தனையோ குறிப்பிட்ட நல்ல திட்டங்கள் வந்தது. குறிப்பாக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த திரு. கோ.சி.மணி அவர்களின் பல நல்ல திட்டங்கள் தமிழ்நாட்டை ஜொலிக்க வைத்தது. சிமெண்ட் ரோடுகள், பாலங்கள், 200 அடிக்கு ஒரு குடிதண்ணீர் குழாய் போன்ற உள்ளாட்சி அமைப்பும் சரி, நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளும் செம்மையாக நடந்தது என எல்லோருக்குமே தெரியும். அது போல இப்போது இந்த அரசு அமைக்கபட்டு இரண்டரை ஆண்டுகள் மட்டுமே கழிந்துள்ளது. இன்னும் இரண்டரை ஆண்டுகள் கழித்து இந்த கேள்வியை கேட்டிருந்தால் மிக்க பொருத்தமாக இருந்திருக்கும். ஆனாலும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவைகளிள் 65 சதவீதம் முடிக்கப்பட்டு விட்டன என்பது மறுக்கபடாத உண்மை. இந்த இரண்டரை ஆண்டுகளிள் என்ன என்ன திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன என்பதை சொல்ல தனி பதிவு தேவைப்படும். முடிந்தால் "உடன்பிறப்பு" வலைப்பூவை சென்று பார்க்கவும். மீதி விடை கிடைக்கும் உங்களுக்கு.

////பா.ம.க வின் நிர்பந்தத்தால் தானே துணை நகரத்திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை அறிவித்துவிட்டு நிறுத்தினீர்கள்? அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே? சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பல வருடங்களுக்கு பிறகு பன்னாட்டு விமான நிலையங்கள் அமையப் பெற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்று புதிய நவீன விமான நிலையங்கள் அமைந்துவிட்டன. ஆனால் சென்னை இன்னும் தூங்கி வழிகின்றது.//

சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்பது மட்டுமல்ல தமிழகத்தின் "கட்டிட கலை" சம்மந்தப்பட்ட எல்லா விஷயங்களிளுமே தி.மு.க அரசு மட்டும் தான் முனைப்புடன் 1967 முதலே செயல்பட்டு வருகின்றது என்பது வெட்ட வெளிச்சம்.நீங்கள் சொல்வது போல் பா.ம.க வும் ஒரு காரணம். நாங்கள் பெரிய இரும்பு குண்டை சங்கிலியால் காலில் கட்டி கொண்டு இந்த இரண்டரை ஆண்டுகள் செயல் பட்டு வந்தோம். ஆனாலும் அந்த இரும்பு குண்டு இருந்தாலும் சென்ற ஆட்சியை விட பல மடங்கு அதிக வேகத்துடனேயே ஓடி வந்தோம். இப்போது அந்த சங்கிலியை ஒரே நாளில் அறுத்து எறிந்து விட்டார் தலைவர். இனி எங்கள் வேகத்தை பாருங்கள். அதி விரைவில் ஸ்ரீபெரும்புதூர் அருகே முதல் நன்றாக கவனிக்கவும் முதல் துணை நகர திட்டம் வர போகின்றது. இந்தியாவிலே சாய்பாபாவின் விமான நிலையத்தை விட அதி நவீன விமான நிலையம் சென்னைக்கு வரத்தான் போகிறது. அதற்கான நில ஆர்ஜித பணிகள் தொடங்கி விட்ட தாக செய்திகள் தெரிவிக்கின்றன்.

////இலவச தொலைகாட்சியிலும், அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திலும், முல்லைப் பெரியார் அணை, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலும் ஏன் இல்லை ?//

இலவச தொலைகாட்சி என்பதை விட எத்தனையோ மிக சிறந்த திட்டங்களை நாங்கள் கொண்டுவந்து செயல் பாட்டிலும் சில திட்டங்கள் வர தொடங்கி விட்டன. எத்தனையோ தொலை நோக்கு திட்டங்கள் இந்த "இலவச தொலைகாட்சி" திட்டங்களை விட நாங்கள் செயல் படுத்தி கொண்டு இருக்கிறோம். இது ஒரு கவர்ச்சியான திட்டம் என மக்கள் கருதுவதால் அது முக்கியமாக பட்டு மீடியாக்களால் மிகைப்படுத்த படிகின்றது என்பதே உண்மை. உங்களுக்கு சரியாக உதாரணம் சொல்ல வேண்டுமெனில் இதோ தமிழ்மணத்தில் கூட எடுத்து கொள்ளுங்கள். சில மொக்கை பதிவுகள் ஒரு அறிவார்ந்த பதிவுகளை தூக்கி சாப்பிட்டு விட்டு "ஜூடான" இடுகையில் வந்துவிடுமே அப்படித்தான். "இலவச தொலைக்காட்சி" என்கிற திட்டத்தையே இனி தொங்கி கொண்டிருக்காமல் தொலைநோக்கு திட்டமான "ராமர் சேது திட்டம்" போன்ற திட்டங்களை பற்றி சிந்தியுங்கள்.
அது போல ஒக்கேனக்கல் திட்டத்திற்காக தளபதி ஜப்பான் சென்று வெற்றிகரமாக நிதியதவி பெற்று வேலையும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றது. கார்னாடக தேர்தல் முடிந்த அன்று இரவே கலைஞர் வெளியிட்ட அறிக்கையில் "Project Completion Date" சொல்லிவிட்டார். அதில் எந்த சுனக்கமோ மாற்றமோ இல்லை. முல்லை பெரியார், பாலாறு திட்டங்களுக்கு தம்பி லக்கி சொன்ன பதில் தான் நானும் சொல்கிறேன். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி என்கிற இரட்டை குதிரையில் திறமையாக பயணிக்கும் கலைஞர் இடியாப்ப சிக்கலை என்றைக்குமே தரவிறக்கம் செய்து கொள்வதில்லை. இப்போது பாருங்கள் ஜூன் 12 ம் தேதி மிக அழகாக மேட்டூர் தண்ணீர் திறந்து விடப்பட்டு எங்கள் காவிரி டெல்டா கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் வழிந்து பச்சை பசேல் என காட்சியளிக்கின்றது. முறை வைத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முறைப்படி எல்லாம் நடக்கிறது. கலைஞர் 50 சதவீதம் அரசியல் நடத்தினால் மீதி 50 சதவீதம் அரசை நடத்துவார். இரட்டை குதிரை சவாரி தலைவருக்கு அத்துப்படி ஸ்வாமீ!!

ஆக உங்களுக்கு இன்னும் பதில் பாக்கி இருக்குதுங்கோவ்!!!

எனக்கு நேரமின்மையாலும் உங்களுக்கு நேரம் நல்லா இருப்பதாலும் இப்போது விட்டு போகிறேன்!! நாளை வருவேன்!!! திரும்ப 2 ம் பாகத்தோட!!! (சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்)

நன்றி!! மேலே உள்ள படம் தம்பி ஆயில்யன் உபயம்!!!