பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 21, 2011

"அடடே! நீங்க தானே அபிஅப்பா!!!" - ஈரோடு சங்கமம் தொகுப்புகள்!

ஈரோடு சங்கமம் நிகழ்சிக்கு போய் வந்ததை பற்றி அழகாக எழுத வேண்டும் என நினைத்தேன். எது எழுதுவதென்றாலும் எனக்கு எப்போதும் தயக்கம் இருந்ததில்லை. ஆனால் சங்கமம் நிகழ்வு ..... கொஞ்சம் யோசித்து தான் எழுத வேண்டும் எதை எழுதினாலும். ஏனனில் அங்கே கலந்து கொண்டது ஒரு 200 எழுத்தாளர்களுக்கும் மேலான ஒரு சங்கமம். மிகச்சமீபத்தில் ஒரே இடத்தில் இத்தனை எழுத்தாளர்கள் (அஃப்கோர்ஸ் இணையத்தில் எழுதினாலும் எழுத்தாளர்கள் என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுத்தாளர்கள் என எழுதிவிட்டேன் நண்பர்களே) ஒருசேர கூடிய ஒரு மாபெரும் கூட்டம் அது. திரும்பிய பக்கம் எல்லாம் ஜாம்பவான்கள். எப்போதுமே என்னுடன் கூட இருக்கும் கூச்சத்துடன் கடைசி வரிசையில் இடம் தேட கிட்ட தட்ட எல்லோருமே துணைக்கு கூச்சத்தை கொண்டு வந்திருந்தனர். அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி அருகே போய் அமர்ந்து அமைதியாக விழாவினை கவனிக்க ஆரம்பித்தேன்.

என் அருகே லக்கி, அதிஷா (அது என்னப்பா லக்கின்னு எழுதினா அதிஷாவும் தானா டைப் ஆகுது) ஜாக்கி, மணிஜி, கே ஆர் பி செந்தில், உனாதானா, ஜீவ்ஸ், பிலாசபி பிரபாகரன், என எல்லோரும் அமர அழகாய் விழா தொடங்கியது. நாம இப்ப இங்க கட் பண்றோம். மாயவரத்தை காட்டுறோம்.
=================================================================
ஊகூம் இதல்லாம் சரிபட்டு வராதுடா அபிஅப்பா... ஒரே இழுவையா இருக்கு. எல்லாரும் பதிவு போட்டு முடிஞ்சாச்சு. நடையை மாத்து......
=================================================================
விந்தைமனிதன் ராஜாராம், அவரது தம்பி ஆகியோர் வெள்ளுடை வேந்தராகவும், அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி பட்டுவேட்டி மைனராகவும் (வார்த்தை உபயம் மணிஜி) வந்திருந்தனர்.

மலர்வனம் லெஷ்மி அவர்கள் தல பாலபாரதியையும் இண்டக்ஷன் ஸ்டவ்வையும் அழைத்துக்கொண்டும் கூடவே கனிவமுதனை தூக்கிக்கொண்டும் வந்திருந்தாங்க.

கனிவமுதனை ஐந்து நிமிடம் ஒரே இடத்தில் ஐந்து நிமிடம் சமாளிச்சு உட்கார வச்சா ஆயிரம் ரூபாய் பரிசு என தல அறிவிப்பு செய்தும் உயிரை கொடுத்து ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஆசை யாருக்கும் இல்லாமையால் நைசாக கழண்டு கொண்டனர்.

அரவிந்தன், தருமி சார்,ஜீவ்ஸ், வானம்பாடிகள் வாசு அண்ணன், சி பி செந்தில்குமார், பிலாசபி போன்றவர்களை முதல் முதலாக நான் பார்த்தேன் எனினும் என்னவோ பலகாலமாக பழகியது போல கூகிள் பஸ், +ல் விட்ட இடத்தில் இருந்தே பேச்சை தொடங்கிக்கொண்டோம்.

எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்து அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது எனினும் வானம்பாடிகள் வாசு அண்ணன் போன்றவர்களை பின் பக்கத்தில் இருந்தே பார்த்து பலரும் அடையாளம் கண்டு கொண்டது கூகிள் பஸ்ஸின் தாக்கம் பரவலாக இந்திருப்பதை உணரச்செய்தது.

விருது கொடுக்கும் முன்னம் விருது வாங்குபவர்கள் பற்றிய தொகுப்பை மேடையில் சொல்லிகொண்டு இருக்கும் போது "... இவர் +2 பொதுத்தேர்வில் தோல்வி கண்டவராயினும்.." என சொன்ன போது ஒட்டு மொத்த கூட்டமும் "லக்கி லக்கி என ஆர்பரித்ததை அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் பார்த்திருப்பாரேயானால் "கிரேஸ் மார்க் போட்டாவது பாஸ் பண்ணி தொலைச்சி இருக்கலாம்" என நொந்து போயிருப்பார்.

"உங்களைப்பற்றிய பெருமைகளை எழுதித்தாருங்கள்" என விருது குழுவினர் லக்கியிடம் கேட்ட போது "+2 பெயில் என்பதை தவிர வேறு என்ன பெருமை என நான் தான் எழுதி கொடுத்தேன்" என சொன்ன போது "ங்கொயால"ன்னு யாரோ திட்டினாங்க.

"இவர் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா..." என மேடையில் சொன்ன போதே கே ஆர் பி செந்திலை மேடைக்கு தள்ளி விட்டோம்.

அடுத்த பிட்டு பட போட்டிக்காக ,ஜீவ்ஸ் தன்னைப்போலவே முழ நீட்டு கேமிராவை வைத்துக்கொண்டு இருந்த இன்னும் ஏழெட்டு பேரிடம்முழு நிலவை எப்படி படம் எடுப்பது என பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். வானம்பாடிகள் வாசு அண்ணன் "இதோ வந்துட்டேன்" என யாரிடமோ சொல்லிவிட்டு முன்பக்கம் வேகமாக சென்ற பின் அந்த பாடம் பாதியிலேயே நின்றுவிட்டது.

அதிஷா மதுஒழிப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கண்டு திருந்தவும்.

கூட்ட அரங்கினில் உள்ளே நுழையும் முன்னே ஆளுக்கு ஒரு "பேட்ச்" கொடுத்து அதிலே அவங்க அவங்க புனைப்பெயரை எழுதி மாட்டிக்க சொன்னாங்க. மணிஜி "எனக்கு ஒரு ஐந்து பேட்ச் கொடுங்க" என கேட்க "ஒன்னு போதும் மணிஜி வாங்க" என விந்தைமனிதன் அவசரமாக இழுத்துக்கொண்டு உள்ளே போனார்.

என் கூட வந்த ஒரு புது பதிவர் தன் பேட்ஜில் "மயிலாடுதுறை புலி" என தன் புனைப்பெயரை எழுதி வைத்திருக்க அதை பார்த்த எல்லோரும் டீஃபால்டாக கேட்ட ஒரு கேள்வி அந்த புதுபதிவரை "இனியும் வலைப்பூ எழுதவேண்டுமா?" என யோசிக்க வைத்தது.:-)

கோவைப்பதிவர் விஜியும், கோபியும் இலக்கியம் பேசியே ஆகவேண்டும் என ஒரே அடம். பாவம் சித்தூர் தமிழரசி தான். அனேகமாக 19ம் தேதி இலக்கியத்துக்கு பால் முடிந்திருக்கும்.

டாக்டர் ரோகினி: பல் பற்றிய ஒரு அவேர்னஸ் பஸ்ஸில் "நீங்கள் கடைசியாக பிரஷ் மாற்றியது எப்போது?" என கேட்க நான் "மூன்று நாட்களுக்கு முன்பாக. என் மனைவி பிரஷ் கலரும் என் பிரஷ் கலரும் ஒரே கலர் என்பதால் அந்த தப்பு நடந்து போச்சு" என பின்னூட்டமிட்டேன். அப்போது "உங்க கிட்டே இனி பல் பத்தி பேசவே மாட்டேன்" என சொல்லிட்டாங்க. என்னை ஈரோடு சங்கமம் நிகழ்வில் பார்த்ததும் அது நியாபகம் வந்து தொலைத்திருக்கும் போலிருக்கு அவங்களுக்கு. அதனால் பல் பற்றி எதும் பேசக்கூடாது என இருந்து விட்டார்கள். ஆனாலும் பாருங்க விதி வலியது. மேடையில் ஒரு பெண் பொதிகையிலே செய்தி வாசிக்கும் பெண் பேசிக்கொண்டு இருந்தது. நான் டாக்டர் ரோகினியிடம் கொஞ்சம் ஜாலியாக சொன்னேன். "சரியான வாயாடி போல" என. அதற்கு டாக்டர் "வாயாடலாம் தப்பில்லை. பல்லாடக்கூடாது" என சொல்லி என் கிட்டே மாட்டிகிட்டாங்க.# தொழில் பக்தி!

காலையில் மண்டபம் உள்ளே நுழைந்ததும் காலை உணவை சாப்பிட்டு கொண்டு இருந்தாங்க தேனம்மை அவர்களும் லெஷ்மனன் அவர்களும். நான் "நீங்க தானே தேனம்மை" என கேட்டேன். பதிலுக்கு அவங்க "ஆமாம். நீங்க அபிஅப்பா தானே, நான் உங்க பதிவை எல்லாம் படிச்சுருக்கேன். நாம் மட்டும் அல்ல. எங்க வீட்டிலே எல்லாரும் படிச்சு இருக்காங்க. ஒரு ஆட்டோகிராப் போடுங்களேன்" என சொல்வாங்கன்னு இதை படிக்கும் நீங்க யாராவது நினைச்சா.... சாரி ... நீங்க இன்னும் வளரனும். அவங்க "ஆமா நான் தான் தேனம்மை. நீங்க யாரு?"ன்னு கேட்டாங்க.

தோனி முடியை தடவிப்பார்த்த முஷரப்பு போல கிட்டத்தட்ட பிரபா ஒயின் ஷாப் ஓனர் பிலாசபி பிரபாகரன் முடியை தடவிப்பார்த்தனர். பையன் ஒரு 22 அல்லது 23 வயசு இருக்கும். ஆனால் என்றும் பதினாறு மார்தான்டேயன் மாதிரி இருந்தான் பையன். ஆனா அவனுக்குள் பல பதிவர்கள் ஒழிஞ்சு இருப்பதை கண்டு எல்லோரும் வியந்தோம். நைஸ் பாய்.

நான் முதல் நாள் அரங்கினில் நுழையும் போதே ஈரோடு கதிரும், தாமோதரன் சந்துருவும் வரவேற்கும் போது தாமோதர் சந்துரு "நான் உங்களை ஃபாலோ பண்றேன்" என சொன்ன போது "வாழ்வியலிலா" என மனதில் நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன். என்னவோ மனசைப்படிச்ச மாதிரி அவசரமாக "ஃபேஸ்புக்கிலேங்க" என சொன்னார்.

"நீங்க தான் வானம்பாடிகள் வாசு சாரா" என கேட்டு தன் அருகில் வரும் பதிவர்களுக்கு அவர்களின் அடுத்த கேள்வியாக தன் பதிவுகளை பத்தி தான் கேட்பாங்க என நினைத்து பதில் சொல்ல எத்தனிக்க " சார் ஈரோட்டிலே இருந்து சென்னை போக எத்தனை மணிக்கு நல்ல ரயில் இருக்கு" என்ற வகையிலான கேள்விகளை கேட்க மனுஷன் முதன் முதலாக இரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தது பற்றி வருத்தப்பட்டார். அதில் ஹைலைட் என்னான்னா ஒருத்தர் வந்து "நான் இதே ஈரோடு தான். இந்த பழைய பாளையத்தில் இருந்து பஸ்டாண்டு போக எதுனா ரயில் இருக்கா" என கேட்டது தான்.

யாரோ ஒருவர் கேபிள் சங்கருக்கு போன் போட்டு "யோவ் எதுக்கிட்டே இருக்க? நீ பங்கஷனுக்கு வர்ர தானே?" என கேட்டார். கொழுப்பு... தட்ஸ் ஆல்... அனேகமாக ஈரோடு கதிருக்கும் இதே போல சென்னையில் இருந்து போன் வந்திருக்கலாம். யார் கண்டது?

விருது பெற்றவர்கள் நன்றி சொல்லும் போது தல பாலபாரதி சொன்ன டீச்சர் கதை, ஊக்குவித்தல் பற்றிய கதைக்கு எல்லோரும் கைதட்டும் போது மலர்வனம் லெஷ்மி கண்ணிலே மட்டும் கண்ணீர். ஆமாம் அப்போது தான் கனிவமுதன் லெஷ்மி காதை கடித்துவிட்டிருந்தான்.

சாப்பாடு: பொதுவாக நான்- வெஜ் சாப்பாடுன்னா ஒரு பிரியானி, சிக்கன், மட்டன் இப்படி தான் இருக்கும். ஆனா இந்த சாப்பாடு வீட்டில் சமைப்பது போல நீர்த்த மட்டன் எலும்பு குழம்பு என ஆரம்பித்து நீண்ட பட்டியலாக இருந்தது. நான் கொஞ்சமும் கூச்சப்படாமல் வீட்டில் சாப்பிடுவது போல அனைத்து விரல் கொண்டும் பிசைந்து உருட்டி அடித்தேன். பாவம் எதிரே ஒரு பெண்... சபை மரியாதை நிமித்தமாக மூன்று விரல் கொண்டு நாசுக்காக சிரமப்பட்டது. அந்த புள்ளய்க்கு ஒரு எடுப்பு சாப்பாடு கேரியர்ல கட்டி கொடுத்தா நடு ஹால்ல சம்மனம் போட்டு உட்காந்து ஈரோடு சங்கமம் நீடூடி வாழ்கன்னு சொல்லிகிட்டு முழங்கை வரை நக்கி அருமையா சாப்பிட்டு இருக்கும்:-)

சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டு இருந்த போது ஒரு ஆகிருதியான நண்பர் வந்து மணிஜியிடம் "நீங்க தானே மணிஜி" என கேட்ட போது தாடியை தாண்டி மணிஜிக்கு வெட்கம் வழிந்தது. இருங்க வாசகர்களே, இந்த கூட்டம் முடிந்து நான் வீட்டுக்கு போய் சேரும் முன்னே யாராவது "நீங்க தானே அபிஅப்பா" என கேட்பாங்க. நானும் எழுதி பெருமைப்படத்தான் போறேன்.

வால்பையன்... ஒரு வெளிப்படையான மனுஷன். ஐ லைக் ஹிம். படபடன்னு பேச்சு. மனதில் நினைப்பதை படார்ன்னு பேசும் ஒரு குணம். ஐ லைக் ஹிம். மழைக்குழந்தைகள் நலமான்னு கேட்டேன். ரொம்ப நலம். நல்லா வாயாடுறாங்க பசங்கன்னு சொன்னார்.

சங்கவி: ஈரோட்டில் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நன்றாக கவனித்து கொண்டார் என கிட்ட தட்ட 250 பதிவர்களும் எழுதும் படியாக எல்லா இடத்திலும் வியாபித்து இருந்தார். என்ன ஒரு கனிவான கவனிப்பு. அருள்பாலிக்கும் முகம். பல பேர் வீட்டுக்கு வந்து ASL டைப் அடித்த காரணத்தால் விரலை நசுக்கியிருப்பர்:-) அதே போல பாலாசி... ஒரு கூட்ட ஒருங்கிணைப்புன்னா அதை ஈரோடு சங்கமம் குழுவினர் கிட்டே தான் கத்துக்கனும்யா...

தருமி சார்.... ஜிப்பா, கண்ணாடி எல்லாம் போட்டுகிட்டு ஜம்முன்னு வந்திருந்தார். பக்கத்தில் இருந்த பிரபல பதிவர் ஒருத்தர் கிட்டே "இது யார் தெரியுதா" என கேட்டேன். "ம்.. தெரியுமே சிங்கை மணற்கேணி விருது வாங்க போன போது என்னவோ குனிஞ்சு பார்த்து கிட்டு இருந்தாதே... தெரியாதா பின்ன"ன்னு சொன்னாரு. அட மகாபாவிங்களா, அவரு எத்தனை நல்ல பதிவு எழுதியிருக்காரு. அது எல்லாம் ஞாபகம் இல்லையாம். இது மாத்திரம் ஞாபகம் இருக்குதான். கெட்ட உலகமடா சாமீ:-)

மிகுந்த நன்றியோடு இரவு ஒரு மணி மைசூர் எக்ஸ்பிரஸ் பிடிச்சு மாயவரம் பயணமானோம். விந்தையும் அவர் தம்பியும் ஜங்சனில் இருந்து திருத்துரைப்பூண்டி நோக்கி பயணமாக நான் வீட்டுக்கு காலை 7 மணிக்கு வந்தேன். வாசலில் ஒரு பெண் நின்று கொண்டு காலிங் பெல் அடித்து கொண்டிருந்தாங்க. என்னைப்பார்த்ததும் "அடடே, நீங்க தான அபிஅப்பா" என கேட்டாங்க. ஜென்மசாபல்யம் ஆச்சுது. ஈரோட்டில் இருந்து துரத்தி வந்த ரசிகை போலிருக்கு!

"ஆமாங்க நான் தான். என் பதிவு எல்லாம் படிச்சு இருக்கீங்களா? ரொம்ப நன்றிங்க" என சொன்ன போது அவங்க "ங்ஏ" ஆகி "என் பொண்ணு அபிகூட படிக்கிறா. அவ நோட்ஸ் காணாம போயிடுச்சு. அதான் அபிகிட்டே வாங்கிட்டு போகலாம்ன்னு வந்தேங்க"

நான் இன்னும் வளரனும் தம்பி!!!!December 1, 2011

கனிமொழி விடுதலையை நாங்கள் பார்த்து கொண்டோம்! மூவரின் விடுதலை என்ன ஆனது ச்ச்சீ'மானே?

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குதண்டனை எதிர்நோக்கியிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் கண்டிப்பாக தூக்கில் தொங்க வேண்டும் என்பதில் சீமான் ஆசைப்படுவதாகவே நம்புகிறேன். ஏனனில் அந்த மூவருக்கும் 3 மாதம் முன்னதாக துக்கிலிட செய்யப்பட்ட முஸ்தீபுகளின் போது இலங்கையை சேர்ந்த முருகன் தன் உடலை சீமானிடம் கொடுக்க வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து இருந்தார். அப்படி ஒரு நிகழ்வு நடக்குமேயானால் சீமான் இன்னும் கொஞ்ச காலம் அந்த பிணத்தின் மீது நின்று "தமிழ், தமிழன் " என கூப்பாடு போட்டு அடிமட்ட அரசியல் செய்திருக்க முடியும்.

அந்த நேரத்தில் திமுகழகம் "அதிமுக அரசு இந்த மூவரின் விடுதலைக்காக அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்து ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும். அப்படித்தான் நாங்கள் தியாகு, புலவர் கலியபெருமாள் ஆகியோரை காப்பாற்றினோம்" என சொன்னபோதும், திமுக தொண்டர்கள் கூட மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுத்த போதும் எங்கே தன் பிண அரசியல் இவர்களால் செல்லாக்காசாகிவிடுமோ என்று நினைத்த சீமான் "கருணாநிதியே கனிமொழியின் ஜாமீனை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள், மூவரின் விடுதலையை நாங்கள் பார்த்து கொள்கிறோம்" என கொக்கரித்தார். திமுகவின் தொண்டர்களும் "போடா வெண்ணை" என போய்விட்டனர். இதோ கனிமொழி ஜாமீனில் வெளியே கொண்டு வந்தாகிவிட்டது. நீங்கள் திமுக தொண்டர்கள் வாயை அடைக்க அப்போது போட்ட கொக்கரிப்பு என்ன ஆயிற்று? மூவரின் விடுதலைக்காக துறும்பையாவது கிள்ளிப்போட்டீங்களா? இல்லை... ஏன்? உங்கள் பிண அரசியல் அஸ்தமித்துவிடும் என்கிற மனோபாவம் தானே?

தமிழக அரசு மூவரின் விடுதலை சம்மந்தமாக தீர்மானம் போட்ட போது அந்த தீர்மானம் ஒன்றும் அவர்களை காப்பாற்றிவிட முடியாது என தெரிந்து "ஆகா ஓகோ" என சீமான் வகையறாக்கள் கூப்பாடு போட்டு பாராட்டு விழாவும் நடத்தின. ஆனால் அதே வழக்கு உயர்நீதிமன்றத்தில் வந்த போது தமிழக அரசு "அந்த மூவரையும் தூக்கிலிட எந்த வித ஆட்சேபனையும் இல்லை, தீர்மானம் போட்டதெல்லாம் ஊலூலூலாய்க்கு" என சொல்லிவிட சீமான் கோஷ்டியினர் சீமான் வாயில் இருந்து உதிரும் முத்துகளுக்காக ஏங்கிய போது வாய்திறந்தார். என்னவென்று... தமிழகம் தழுவிய ......தமிழகம் தழுவிய ......தமிழகம் தழுவிய......... கோலப்போட்டி நடத்தப்படும் " என்று. இதை படிக்கும் நண்பர்கள் உடனே ஆவலாய் கேட்க இருக்கும் கேள்வி... ஏன் கலைஞர் அதை செய்து அந்த மூவரையும் விடுதலை செய்திருக்க கூடாது என்பதற்கு சக வலைப்பதிவர் நண்பர் யுவகிருஷ்ணா அழகான பதில் சொன்ன பின்னர் நான் அதை தாண்டி அழகாய் சொல்லிவிட ஏதும் இல்லை என்கிற காரணத்தால் அதையே கொடுக்கின்றேன் பதிலாக. \\ சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகிய நான்கு பேர் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டதோ, அதே குற்றம்தான் கலைஞர் மீதும் ஜெயின் கமிஷனால் சாட்டப்பட்டது. என்ன சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட முடியவில்லை என்பதுதான் வித்தியாசம். 91, மே 21 சம்பவத்தால் அதிகம் இழந்த இயக்கம் திமுகவே. இது வரலாறு. எவனாலும் மாற்றி எழுதிவிட முடியாது. “இதில் எங்களுக்கு சம்பந்தமில்லை. விடுதலைப்புலிகளே காரணம்” என்று எந்த இக்கட்டான சூழலிலும் காட்டிக் கொடுக்காத நேர்மை கலைஞருக்கு இருந்தது.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு ஆயுள்தண்டனையாக தண்டனையை குறைத்தவர் கலைஞர். அவரே ஏற்கனவே சொன்னபடி, அவரால் எந்த நேரத்துக்கு எது முடியுமோ, அதை மட்டும்தான் செய்யமுடியும். கலைஞர் சூப்பர்மேனோ, கடவுளோ அல்ல. அவ்வாறு இருந்திருந்தால் அவரது மகள் 192 நாட்கள் திகார் சிறையில் வாட விட்டிருக்க மாட்டார் \\ இதுதான் உங்கள் ஆர்வ கேள்விக்கு பதில்.

அய்யோ தவறான வழிகாட்டுதலில் நாம் நம் சக்தியை விரயமாக்கிவிட்டோமோ என நினைத்த நாம்தமிழர் இயக்க தொண்டர்கள் மெல்ல மெல்ல விலக தொடங்க ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் சீமானோ இண்ஸ்டண்ட் ஈழத்தாய் ஜெயாவின் அடாவடித்தனத்தை பற்றியோ, ஈழம் பற்றி பேசினால் நடத்தப்படும் அடக்குமுறை பற்றியோ வாயை மட்டும் அல்ல எந்த துவாரத்தையும் திறக்கவில்லை. திறந்தால் நாடுதழுவிய கோலப்போட்டி நடத்திய அவரின் நாடா தழுவிய கேஸ் தூசி தட்டப்படும் என தெரியும் அவருக்கு.

நவம்பர் மாதம் பிரபாகரன் பிறந்தநாள் "மாவீரர் தினமாக" அனுஷ்டிக்கப்படும் என சினிமா வாய்பில்லாதபோது முழங்கிய சீமான் வகையறாக்கள் இப்போது அதிமுக அரசால் அந்த விழா தடை செய்யப்பட்ட போது "நாங்கள் ஒரு கதவடைத்த திருமண மண்டபத்திலாவது நடத்தி கொள்கிறோம்" என கெஞ்ச தான் முடிந்ததே தவிர வேறு என்ன செய்ய முடிந்தது உங்களால்?இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் ஈழப்போர்வை போர்த்திக்கொண்டு அரசியல் செய்ய உத்தேசம்? அவர்கள் ஏமாறும் வரையிலா? அல்லது உங்களை நம்பி ஏமாந்த மிச்ச சொச்ச தமிழ் இளைஞர்கள் உங்கள் கூட ஒட்டிக்கொண்டு இருக்கும் வரையிலா?

ச்சீ தூ வெட்கம்! இனி உங்களை சீமான் என்பதற்கு பதில் ச்சீமான் என்றே அழைத்து கொள்ளுங்கள்!