பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 21, 2010

மனைவியை குத்த ஆயிரத்தில் சில காரணம் மட்டும் இங்கே!!!!

 முதல்ல இதை படிங்க மக்கா! http://ultoo.com/login.php?refererCode=2892467E&flag=hide 

எல்லோரும் எல்லோரையும் குத்தியாச்சு. ஆனா மனைவியை குத்த எழுதியவர்கள் மட்டும் கொஞ்சம் பயந்த சுபாவமா காமிச்சுகிட்டு எழுதிட்டதால வேற வழி எனக்கு தெரியவில்லை. நெஞ்சுல தைரியத்தையும், கண்ணுல பீதியையும் வச்சுகிட்டு மீதிய இங்க கொட்டுறேன். இது என் தனிப்பட்ட குத்து மட்டுமே. இதே காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவங்க அவங்க வீட்டுல கச்சேரி வச்சுகுங்க.

1. என்னங்க மணி 5 ஆச்சு, என்னங்க மணி 5.10 ஆச்சு எழுந்திருக்கலையா? என ஸ்நூஸ் வச்ச அலாரம் மாதிரி காலை முதல் பிடுங்கல் வருமே அப்ப தான் அந்த நாளின் முதல் பன்ச் ஆரம்பிக்க தோன்றும்.

பின்ன என்ன ராத்திரி படுக்கும் போது 5 மணிக்கு எழுப்பி விடு. விளையாட போகனும்னு சொல்லி படுத்தி எடுத்துட்டு ...என் தூக்கமும் போனது தான் மிச்சம்.

2. குளியல் அறையில் நுழைந்து கண்ணாடி பார்க்கும் போது வருமே ஒரு எரிச்சல். என் முகத்தை பார்த்து இல்லை. ஏதோ ஏக் துஜே கேலியே படத்து மாதவி மாதிரி என் முகத்தில் வட்டமா ஒரு பொட்டு இருக்கும். அப்ப வரும் ஒரு எரிச்சல். 'எத்தனை தரம் சொல்லியிருக்கேன்,அசிங்கமா கண்ணாடில ஸ்டிக்கர் பொட்டு வைக்காதேன்னு" என ஒரு சத்தம் போட்டுட்டு ஒரு குத்து விட தோன்றும்.

பொட்டு ஒரு கெட்ட விஷயமா? நான் என்ன உங்க பைக்லயா வச்சேன்? பாத்ரூம் கண்ணாடில தான வச்சேன்.

3. குளித்து முடித்து தலை சீவ கண்ணாடி முன்னே நிற்கும் போது அந்த சீப்பிலே இருக்கும் கொத்து தலை முடி தான் என்னை அதிகமாக டென்ஷன் ஆக்கும் விஷயம். "தலை சீவினா அந்த முடியை சுருட்டி துக்கி போட மாட்டியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ"ன்னு அலறி கிட்டே ஒரு குத்து விட தோன்றும்.

இந்த வீட்டிலே நான் மட்டும் தான் பொம்பளையா? உங்க பொண்ணு இத செஞ்சிருக்க கூடாதா? புடிக்கலைன்னா எடுத்து போட்டுட்டு சீவிக்க வேண்டியது தானே!

4. அடுத்து சாப்பிட ஆரம்பித்தவுடன் எனக்கு பெரிய பிரச்சனையே விக்கல் தான். சாப்பிடுவது போல நினைத்து கொண்டாலே விக்கல் வரும் பார்ட்டி நான். அத்தனை ஏன் தண்ணீர் குடித்தாலே விக்கல் வரும்னா பார்த்துகுங்க. அப்படிப்பட்ட எனக்கு சாப்பாடு வைத்து விட்டு " இன்னிக்கு ஒரு புது மெத்தேட்ல இட்லி சுட்டேன்"அப்படீன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே விக்கல் வந்து "அய்யோ தண்ணி அய்யோ தண்ணி"ன்னு கத்த ஆரம்பிச்சு .....சாப்பாடு வைக்கும் முன்னே தண்ணி வைக்க தெரியாதா"ன்னு சண்டை முடியுமே அப்ப அந்த சண்டைக்கு முடிவுரையா ஒரு குத்து விட தோன்றும்.

வித விதமா சட்னி, இட்லி, பொங்கல் இதல்லாம் கண்ணுக்கு தெரியலை. தண்ணி தான் தெரியுது. நான் தான் கேக்குறேன். தண்ணியாவது எடுத்துகிட்டு உட்காந்தா என்ன சாப்பிடும் போது.

5. கிளம்பலையா இன்னும் கிளம்பலையா இன்னும் 7.30க்கு ராகுகாலத்துக்கு முன்ன படி இறங்கனும் என 6 மணி முதல் அனத்தி எடுத்துட்டு நான் 7.28க்கு வண்டி எடுத்த பின் வீட்டை பூட்டி விட்டு வரும் மனைவி என்னங்க செல் போனை மறந்து விட்டேன் கொஞ்சம் இருங்க என கேட் முதல் எல்லா கதவையும் திறந்து உள்ளே போய் அதை தேடி கடைசியில் பிரிட்ஜ் உள்ளே இருந்து அதை எடுத்து(வரும் முன் அவசரத்திலே தண்ணீர் குடிக்கும் போது போனை உள்ளே வச்சிருப்பாங்க) வண்டி ஏறும் போது கொழுத்த ராகுகாலமாகியிருக்குமே அப்ப ஒரு குத்து விட தோன்றும்.

பண்ற தப்பு எல்லாம் நீங்க. நீங்க படுத்தின பாடுல எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. ராகுகாலமா இருந்தா என்ன? அதான் சனிய கூட கூட்டிகிட்டு போறனே. சனிய விட ராகு அத்தனை மோசம் இல்லை.

6. அடுத்து வண்டி ஏறும் போது அந்த ஃபுட் ஸ்டெப்பில் காலை வைத்து ஏதோ மாடி படி ஏறுவது போல ஏறி என்னை நிலைகுலைய வைக்கும் போது என் பிரஷர் எல்லாம் எகிறி ஒரு குத்து விட தோன்றும்.

இதுக்கு நீங்க கார் வாங்கி கூட்டிகிட்டு போகனும். சும்மா பேசக்கூடாது.

7. நீங்க ரோட்டை பார்த்து ஓட்டுங்க நான் ஹேண்ட் சிக்னல் எல்லாம் பண்ணிக்கிறேன் என சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஆனால் வலது பக்கம் கை காமின்னு சொல்லும் போது மிகச்சரியாக இடது பக்கம் காண்பித்து விட்டு என்னை எவனாவது "வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?"ன்னு கேட்கும் போது "வீடே பின்னாடிதான் உட்காந்திருக்கு. தேவைப்பட்டா உடனே சொல்லிக்கலாம்" என பதில் சொல்லிட்டு பின்னால் இருக்கும் வீட்டுக்கு ஒரு குத்து விட தோன்றும்.

அய்யோ நான் வலது கை தான் காமிச்சேன். ஆனா இடது பக்கமா காமிச்சுட்டேன். அந்த சண்டாளன் தான் சரியா வரலை. நீங்க மெதுவா போவ கூடாதா?

8. இந்த பதிவை படி. செம காமடியா இருக்குன்னு சொல்லும் போது "இன்னிக்கு கரண்ட் பில் கட்டனும்"ன்னு சம்மந்தம் சம்மந்தமில்லாம பேசுவது போல அவமானப்படுத்துவது என்னை மட்டுமில்லை தமிழை வளர்க்கும் வலையுலகமே உங்களையும் சேர்த்து அவமானப்படுத்தும் போது ஒரு குத்து விட தோன்றும்.

இந்த நெட்ட முதல்ல புடுங்கினா இந்த வீடும் உறுப்படும் நீங்களும் முக்கியமா நானும் நிம்மதியா இருப்பேன்.

9. இங்க பாரேன் கவிதா ஒரு பதிவு போட்டிருக்காங்க. விவாகரத்து பத்தின்னு சொல்லும் போது "ஹூம் நான் மட்டும் விவாகரத்து செஞ்சிருந்தா உங்களை இருபத்தி ஏழாவது தடவையா கட்டின புருஷனை விவாகரத்து செஞ்சவன்னு கின்னஸ்ல வந்திருக்கும்' என அங்கலாய்க்கும் போது ஒரு செம குத்து விட தோன்றும்.

ஏன் நான் சொல்றது என்னா தப்பு. நீங்களே சொல்லுங்க.

10. இப்படி நான் சொல்வதுக்கு எல்லாம் சிவப்பு???மஞ்சள்!!!! எழுத்தில் பதிலுக்கு பதில் சொல்லிகிட்டே வந்தா பத்தாவது குத்து விட தோன்றும்.

குறிப்பு: எல்லாம் தோன்றும் தோன்றும் தான். இது வரை குத்து விட்டதில்லை என்பதை என் அன்பான பெண்ணீயவாதிகளுக்கு தெரிவித்து கொள்கின்றேன்.

July 6, 2010

நட்ராஜ் டான்ஸ் களேபரம்!! சிம்பு கலவரம்!!!நட்ராஜுக்கு சிம்பு டான்ஸ் மேல அத்தனை ஒரு கிரேசி. வேற வழியே இல்லாம நாங்களும் பார்த்தே ஆகவேண்டிய நிலை. நல்ல நேரம் எங்க டி.ஆர் டான்ஸ் போட்டு காமிக்கலை இன்னும்.

@@@@@@@@@@@@@@

இப்ப தான் ஸ்கூல் சேர்த்த மாதிரி இருக்கு அதுக்குள்ள டெஸ்ட் வருதாம். அவங்க மிஸ் சிலபஸ் கொடுத்துட்டாங்க. அ முதல் ஃ வரை ஓரல், அ முதல் ஈ வரை எழுதனும், 1 முதல் 10 வரை ஓரல், 1 முதல் 5 வரை எழுதனும், ஆங்கிலத்தில் ஜானி ஜானி எஸ் பாபா, தமிழில் பள்ளி செல்ல விரும்பு ரைம்ஸ்...இப்படியாக.

அவன் அம்மாவுக்கும், அக்காவுக்கும் இது ரொம்ப ஹெவியாக இருக்கின்றதாம். எனக்கும் நட்ராஜுக்கும் அப்படி தோன்றவில்லை.ஏனனில் நட்ராஜ் இதை எல்லாம் படிக்க போவதில்லை என நினைக்கின்றேன். என்னை விட்டா ஜஸ்ட் லைக் தட் ஊதி தள்ளி விடுவேன். இதே சிலபஸ் நான் காலேஜ் படிக்கும் போது இருந்திருந்தா நான் யுனிவர்சிட்டி பர்ஸ்ட் வாங்கியிருப்பேன் என்பது வலையுலகம் அறிந்ததே.

எதுக்கும் இருக்கட்டும் என நினைத்து அ முதல் ஃ வரை எழுதி பார்த்தேன். "ஔ" மட்டும் கடைசி வரை வரவில்லை. அதுக்கு பதில் "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"ன்னு டெம்பிளேட் பின்னூட்ட அவ்வ்வ்வ்வ்வ்வ் தான் வருகின்றது. அமைதியாக, எழுதி பார்த்த சிலேட்டை எச்சில் துப்பி அழித்து விட்டேன்.

@@@@@@@@@@@@@@@

சமீபமாக நட்ராஜ் கையை தொங்க போட்டு கொண்டு தோள் இரண்டையும் குலுக்குகினான். அதாவது "எனக்கு தெரியாது", "யார் எக்கேடு கெட்டா எனக்கு என்ன", "நான் அவனில்லை", "வேற வேலை இருந்தா போய் பாரு, என்னை டிஸ்டர்ப் செய்யாதே" என்பன போன்ற அர்த்தமாம். எல்லாம் சீமாச்சு அண்ணாவின் ரெண்டாவது பெண் சூர்யாவின் பாதிப்பாம். சூர்யா பரவாயில்லை. பெரியவள் ஷண்முகா கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். டென்னிஸ் விளையாட கிளப்க்கு போன போது ஷண்முகா ஃப்ரம் அமரிக்கா என தெரிந்த ஒரு நண்பர் தொண்டையை எல்லாம் நல்லா கனைத்து கொண்டு 'வாட் ஈஸ் யுவர் நேம்?" என கேட்ட போது அது ஷண்முகாவுக்கு புரியாமல் போக பின்னே நாள் விம் போட்டு விளக்க அவரிடம் "இன்னும் வைக்கலை"ன்னு கூலாக சொன்ன போது நான் அதிர்ந்தேன்(லைட்டா) ஆனா கேட்ட நண்பருக்கு சரியாக அந்த ஆங்கிலம் மட்டுபடாமையால் விட்டு விட்டார்.

@@@@@@@@@@@@@@@@

நட்ராஜ் பள்ளிக்கு அழைக்க போன போது ரொம்ப ஆர்வமாக அவன் அம்மா 'பையன் எப்படி?' என கேட்க அதற்கு அவங்க மிஸ் "ரொம்ப கோவம் வருது. எல்லார் கையிலயும் பேப்பர் கொடுத்து உங்களுக்கு என்ன தெரியுமோ அதை வரைந்து கொடுங்க என சொல்லி கொடுத்த போது இவன் வாங்கிய உடனேயே ரொம்ப கோவமா கிறுக்கி குடுத்தான். இப்படி செய்யலாமா நான் படம் தானே போட்டு குடுக்க சொன்னேன் என சொன்னதுக்கு 'மிஸ் இது நூடுல்ஸ் படம் மிஸ்'ன்னு சொல்றான்.

முதல் நாள் மிஸ் எல்லாரிடமும் "அ" எப்படி போடுவது தெரியுமா?ன்னு கேட்க இவன் தெரியும் என சொல்லியிருக்கான். சொல்லு என சொன்ன போது இவன் சொன்ன பதில் "ஆல்ட் 2 அடிச்சு A அடிக்கனும் மிஸ்"

என் மனைவி கிட்டே சொன்னேன். "இனி பையன் எப்படின்னு கேப்பியா கேப்பியா கேப்பியா?"


@@@@@@@@@@@@@@@

நம்ம இயற்கை மகள் ராஜி பொண்ணுக்கு(அதாவது ராஜி பொண்ணு அப்படின்னா ராஜின்னு தான் அர்த்தம், எங்க பக்கத்துல எல்லாம் அபிபொண்ணு, சங்கி பொண்ணு இப்படித்தான் கூப்பிடுவோமாக்கும்) இன்றைக்கு பிறந்தநாள். எத்தனையாவது என கேட்கும் அன்பர்கள் ஒரு நல்ல பரிசாக எனக்கு பார்சல் செய்து விட்டு தனி மடலிட்டால் சொல்லப்படும். இரவு 12 மணிக்கு பதிவு போட்டு தாக்கலாம் என நினைத்தேன். நேற்று மட்டும் முப்பது தடவை மின்சாரம் போனது.அதில் ராத்திரி 12 மணிக்கு போனதும் அடக்கம். காலை எழுந்து பார்த்தா ஜோசப் குழுமத்துல கும்மி ஆரம்பிச்சு வச்சுட்டாரு. அதனால என்ன இங்கிட்டும் ஒரு வாழ்த்து சொன்னீங்கன்னா சந்தோஷப்படுவேன்.வாழ்க ராஜி பொண்ணு.

@@@@@@@@@@@@@@@@@100 சதம் நம்புகிறேன். வீடியோ வேலை செய்யாது என்று. பார்ப்போம் செய்யுதா இல்லியான்னு:-)

July 3, 2010

மயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும்...

இரவு ஒன்பது மணிக்கு ஒரு அண்ணன் பையன் வந்து "சித்தப்பா சென்னைல மோக்கு சித்தப்பாவின் மனைவி அந்த சித்தி செத்து போயிட்டாங்களாம்"ன்னு சொன்ன போது எனக்கு அதை புரிந்து கொள்ள எனக்கு சிறிது நேரம் பிடித்தது. அடுக்களையில் இருந்து ஓடிவந்த என் மனைவி "அய்யய்யோ என்னப்பா சொல்ற, அது சின்ன பொண்ணு ஆச்சே. இப்பதான ரெண்டு வருஷம் முன்ன கூட ரெண்டாவதா ஒரு பொண்ணு பொறந்துச்சு. அய்யோ எதுனா சண்டையிலே எதுனா செஞ்சுகிடுச்சா?" என அடுக்கடுக்காய் கேட்க எனக்கு அடுத்து என்ன செய்வது என எதும் தெரியவில்லை. என் குடும்பம் கிட்டதட்ட நாற்பது குடும்பத்தில் மாயவரத்தில் ஒரு பத்து குடும்பம் மட்டுமே தற்போது இருக்க மீதி அனைவருமே சென்னை மயிலாப்பூர் பகுதியில் தொழில், அலுவலகம் காரணமாக குடிபெயர்ந்து விட்டு பல காலம் ஆகிவிட்டது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை செல்லவேண்டி பேருந்தில் இருந்தேன். அப்போது தான் நினைத்தேன். என் மனைவி எப்படி வருவாங்க? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப என்ன ஏற்பாடு செய்வது என எதை பற்றியும் நான் சிந்திக்காமலே வந்துவிட்டேன். இன்னும் சொல்ல போனால் அங்கே இறங்கினால் எப்படி அந்த மயிலாப்பூர் வீட்டுக்கு போவது என்பது கூட எனக்கு தெரியாது. சரி இந்த பேருந்து எங்கே கடைசியாக நிற்குமோ அங்கே இறங்கி அடுத்ததை சிந்திப்போம் என நினைத்து கண்மூடி அமர்ந்துவிட்டேன்.

அந்த மோக்கு என்னும் என் பெரியப்பா மகன் எனக்கு மூன்று மாதம் சின்னவன். பெரியதாக சகோதரபாசம் என்பதை விட என் பால்யகாலம் முதல் எனக்கு ஒரு நண்பனாக பழகிவிட்டவன். ஒட்டுமொத்த அவனின் குடும்பபாரத்தையும் அவனுக்கு மூத்த சகோதரர்கள் இருந்தும் இவனே பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவன்.குடும்பத்தில் எந்த நல்ல காரியமோ கெட்ட காரியமோ அவன் இன்றி ஒன்றும் நடக்காது. மிகப்பெரிய கல்யாணம் ஆனாலும் சரி, எழவாக இருந்தாலும் சரி இவன் ஒத்தை ஆள் கையமத்துவான். இவனின் குடும்ப சூழ்நிலை காரணமாகவே இவனுக்கும் கல்யாணம் ஆன போது வயது முப்பத்தி மூன்று ஆகிவிட்டது. சொல்ல போனால் மிகச்சரியாக பத்து வருடம் முன்னே தான் ஆனது. அப்போது எல்லாம் நான் வெளிநாட்டில் இருந்தமையால் அவன் திருமணத்தை பார்த்தவன் இல்லை. அதன் பின்பு நான்கு வருடம் கழித்து எங்கள் வீட்டு குலதெய்வ கோவிலில் அவனை அவன் மனைவியோடு பார்த்தேன். கையில் ஒரு ஆண் குழந்தையை வைத்து சோறு ஊட்டிகொண்டிருந்தது. மோக்கு வந்து "இது யாரு கண்டுபிடி சௌம்யா" என சொல்ல என் பெயரை அவன் காதில் சொன்னது. நான் சிரித்து கொண்டேன். "உங்களை பத்தி இவங்க பேசாத நாள் இல்லைங்க அத்தான்" என்றது. சிரித்து கொண்டேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் நான் கிளம்பிவிட்டேன். கிட்ட தட்ட என் வீட்டு மருமகளுக்கான எல்லாவித லட்சனங்களோடும் ஒன்றி இருந்தது அந்த பெண். நான் அந்த பெண்ணை பார்த்தது பேசியது அத்தனையே. அதன் பிறகு பார்க்க சந்தர்பம் வாய்க்கவில்லை. ஆனால் ஒரு மாதம் முன்னே ஒரு திருமணத்தில் கூட மோக்கு மட்டுமே வந்தான். அடுத்து ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் அப்படியே அவன் மனைவியை கொண்டிருப்பதாகவும் இரண்டு வயது ஆகின்றது என்றும் சொன்னான். வீட்டுக்கு வா என சொன்ன போது வருகின்றேன் என சொன்னேன். இப்படி அந்த பெண் சாவுக்கு போவேன் என நினைத்து பார்க்கவில்லை.

பேருந்து ஓட்டுனர் "விக்கிரவாண்டி வந்தாச்சு பத்து நிமிஷம் நிற்கும்" என கத்திய கத்தலில் தான் விழித்தேன். இரவும் சாப்பிடவில்லை. ஆனால் அப்பவும் பசிக்கவில்லை. மனம் பாரமாக இருந்தது. அதையும் மீறி ஆகா நம் சொந்தகாரங்க எல்லாரையும் ஒரே இடத்தில் பார்த்து விடலாம் என மனக்குரங்கு சொன்னது. பாழாய் போன மனது. எதற்கு ஆசைப்படுகின்றது என் சுயநல மனது. இந்த மனசுக்கு மோக்கு நிலை பற்றி என்ன தெரியும். தூக்கம் வர மறுத்தது. ஆனாலும் சிரமப்பட்டு தூங்க ஆரம்பித்தேன். கோயம்பேடு வந்ததும் ஒரு அண்ணனுக்கு போன் செய்தேன். அந்த மயிலாப்பூர் வீட்டுக்கு போய் சேர்ந்த போது காலை நான்கு முப்பது. வாசலில் ஒரு ஷாமியானா, அதன் கீழ் பிலாஸ்டிக் நாற்காலிகள், அதன் மேல் பிரித்து போடப்பட்ட தினந்தந்திகள், "மயிலாப்பூரில் அனேகமா இந்த தடவை எஸ்.வி.சேகருக்கு தான் சீட்டு குடுப்பாரு. ஆனா உதயசூரியன் சின்னத்திலே தான் நிற்கனும்னு சொல்லிடுவாரு. நான் சொல்றேன் நீ வேணா எழுதி வச்சுக்க" என லஜ்ஜையே இல்லாம பேசி கொண்டிருந்த ஒரு மாமா, அதை ஆமோதிக்கும் யாரோ ஒருவர், "காபிகடை எப்ப திறக்கும்" என கேட்டு கொண்டே முந்தானை போர்த்திய பெரியம்மா, பெரியம்மா தலைமையில் காபிகுடிக்க ரெடியாக நிற்கும் பெண்டுகள், "அந்தகாலம் மாதிரி இல்லை, வெட்டியானுக்கு கவனிச்சு ரெண்டு ராட்டி கூட வச்சு எரிக்க சொல்லி தாவுதீர வேண்டாம், உள்ளே விட்டா அடுத்த செகண்டு கையில சாம்பல் குடுத்துடுவான் இங்க" என சென்னை பெருமை பேசும் ஒரு பெருசு, "இந்த கம்முணாட்டி ஒரு வார்த்தை எனக்கு போன் அடிச்சிருந்தா போதும் என் கொழுந்தியா பையன் டாக்டரா இருக்கான் ஸ்டான்லில போன வருஷம் தான் படிப்ப முடிச்சு சேர்ந்தான், மகா கெட்டிகாரன், +2 விலே பிரமாதமான மார்க்கு, கூப்பிட்டு சீட்டு குடுத்தான் தஞ்சாவூருல அவன் கிட்ட நான் ஒரு வார்த்தை சொன்னா போதும் புள்ளய காப்பாத்தி கையில குடுத்திருப்பான்" என குடும்ப பெருமை பேசின ஒரு அத்தான் என அந்த இடமே எனக்கு குமட்டி கொண்டு வந்தது.

என் அப்பா தனியாக உட்காந்து இருந்தாங்க. ஓ எனக்கு முன்னமே வந்தாச்சு அனேகமா எல்லாருமே மாயவரத்திலே இருந்து. அது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. சில பேர் மாடிபக்கம் கைகாட்ட நான் மெதுவாக மாடி ஏறினேன். மாடிப்படியில் தன் இரண்டு வயது பெண்ணை மடியில் வைத்து கொண்டு மோக்கு ஒரு வார தாடியுடன் சுவற்றில் தலை சாய்த்து தூங்கி கொண்டிருந்தான். தூங்கிகொண்டிருந்தானோ இல்லை சும்மா சாய்ந்திருந்தானோ தெரியவில்லை. நான் உள்ளே நுழைந்ததும் கண்ணாடி பெட்டியில் அந்த பெண். முகம் முழுக்க மஞ்சள் தடவி பெரிய பொட்டு வைத்து, பட்டு புடவை போர்த்தி அதன் மேலாக தாலி சரடை நன்றாக தெரியும் படியாக "இவள் சுமங்கலியா செத்து போனா" என சொல்லாமல் சொல்வது போல காட்டி அந்த பெண்ணை கோரப்படுத்தி வைத்திருந்தனர். தலைப்பக்கமாக ஒரு பித்தளை காபி சட்டியில் பச்சரிசி மேல் வெற்றிலை பாக்கு, பழம், உடைத்த தேங்காய், ஊது பத்தி என என்னவோ இருந்தது. கண்ணாடி பெட்டியின் மீது பூ மாலைகள். பெரியப்பாவுக்கு தொண்ணூறு தாண்டி ஆகுது வயது. அவரை ஒரு நாற்காலி போட்டு உட்காத்தி வைக்க, என் அக்காக்கள், பெரியம்மாக்கள், சித்திகள், அக்கா, தங்கைகள் எல்லாம் ஒரு ஒப்பாரி வைக்க எனக்கு கொஞ்சம் கிலி பிடித்தது. யாருமே நாளை காரியம் முடிந்து மோக்குவின் துணைக்கு இருக்க போவதில்லை. அவனுக்கு தாராளமாக அறிவுரை சொல்லி விட்டு இடத்தை காலி செய்ய போகின்றவர்கள்.சிலர் ஒரு படி மேலே போய் " ராமசுந்தரத்துக்கு ஒரு பொண்ணு முப்பத்தி மூணு வயசாச்சு. இன்னும் கல்யாணம் தெகயலை. அவனுக்கு கட்டி கொடுக்க தோது படலை. உனக்காக இல்லைன்னாலும் இந்த பச்ச மண்ணுக்காகவாவது கட்டிகிட்டு வாழனும்"என்று எதாவது ராமசுந்தரம் சோமசுந்தரம் வைத்து வியாபாரம் பேசுவர். இதில் அந்த ராமசுந்தரத்தின் மகள் அபிராயம், மோக்கு அபிப்ராயம், மோக்கு மகள், மகன் அபிப்ராயம் எல்லாம் செத்து போகும்.

சிவப்பு விளக்கு வைத்த காரில் வந்த வி.வி.ஐ.பி யை எழவு வீடு எனக்கூட பார்க்காமல் "வாங்க வாங்க" என கூப்பிட அவரும் வந்து ஒரு மாலையை போட்டுவிட்டு சம்பிரதாயமாக பெரியப்பா கையை பிடித்து கொண்டார். பெரியப்பா "அய்யோ எனக்கு தொண்ணூத்து நாலு வயசுல இப்புடி ஒரு கஷ்டத்தை பார்க்கனுமா?" என சொல்லி அழுதார். ஆக அவருக்கு மோக்கு பற்றின கவலை இல்லை. தனக்கு இந்த வயதில் இப்படி ஒரு மனசு கஷ்ட்டம் வர வேண்டுமா என்பதே அவருடைய நிலைப்பாடு. எல்லோரும் அந்த வி.வி.ஐ.பி வருகையை சிலாகித்து பேசி கொண்டிருக்க கீழே சிதறி கிடந்த அந்த தெரு முனைக்கு காபி குடிக்க போன கூட்டம் ஓடி வந்து அந்த சின்ன மாடியில் ஏற பாவம் படியின் மூலையில் உட்காந்திருந்த மோக்கும் அவன் குழந்தையும் அநியாயத்துக்கு மிதிபட்டனர்.

வந்த பெரியவர் சம்பிரதாயமாக "எப்படி நடந்துச்சு?" என கேட்ட போது அந்த வித்தையில் தேர்ந்த நடந்ததை எதையும் நேரில் பார்க்காத வாய்வழி செய்தியாக மட்டுமே கேட்டறிந்த அந்த கிருஷ்ணசாமி விளக்கினார். சாவு வீட்டில் "எப்படி நடந்துச்சு?" என்ற கேள்விக்கு பதில் சொல்வதும் ஒரு கலை தான் என அப்போது தான் தெரிந்து கொண்டேன்.

"ஒரு வாரம் முன்ன பாப்பா தஞ்சாவூருக்கு தன் அக்காவூட்டுக்கு போக ஆசைப்பட்டிருக்கு. அதான் மாநாடு லீவு வந்துச்சே பசங்களுக்கு. இவனும் சரி போயிட்டு வான்னு ரயில்ல டிக்கெட்டு போட்டு அனுப்பியிருக்கான். அங்க போன எடத்துல கொசுக்கடில ஒரு நா ராத்திரி முச்சூடும் கெடந்து அவஸ்தை பட்டிருக்கு. காலைல பார்த்தா ஒரே ஜொரம். சும்மா சொல்ல கூடாது. காச காசுன்னு பார்க்காம வினோதகன்ல சேர்த்துட்டு இவனுக்கு தகவல் சொல்லியிருக்காங்க. இவனும் அடிச்சு புடிச்சு அங்க போனா புள்ளக்கி நெகா தப்பிடுச்சு. இவன் ஒரு பிளசர் புடிச்சு இங்க எம்ஜியார வச்சிருந்த ஆசுபத்திரில சேர்த்துட்டு எல்லாருக்கும் தகவல் சொல்ரான். சரியா எட்டோட எட்டு நேத்திக்கு கார்த்தால வர நெகா வரலை. இவனும் தகுதிக்கு மீறி செலவ பத்தி கவல படாம செஞ்சு பார்த்துட்டான். பின்ன ஒரு நாலு மணி சாயரச்சை அது கண்ண தொரந்து பார்த்திருக்கு. கவல படாதீங்க நான் பொழச்சுடுவேன்க்குற மாதிரி பார்த்திருக்கு. அதான் கடேசியா பார்த்தது. பின்ன கண்ண மூடிடுச்சு"

அந்த பெரியமனிதருக்கு அந்த கிருஷ்ணசாமியின் கதை ஒட்டுதலாக இல்லை போலிருக்கு. "என்னய்யா கொசு, ஜொரம்னுகிட்டு, மோக்கை கூப்பிடு". மோக்கு மாடிபடியிலே இருந்து வந்தான். சொன்னான். "இல்லை வினோதகன்ல சொல்லிட்டாங்க. பிரைன் பீவர். அப்பல்லோவிலே சேர்த்து பாருங்கன்னு. நானும் சேர்த்துட்டேன். அது கண்ணையும் திறக்கலை. வாயையும் திறக்கலை.இறந்துடுச்சு சௌம்மியா."

"சரி வரவேண்டியவங்க எல்லாம் வந்தாசுன்னா எடுக்க ஏற்பாடு செய்யலாமே. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. துக்கத்துக்கு வந்துட்டு வர்ரேன்னு சொல்லிக்க கூடாது" என சொல்லி அவர் கிளம்ப நான் நினைத்து கொண்டேன் "இதுக்கு வர்ரேன்னு சொல்லிகிட்டே போயிருக்கலாம்"

நான் கீழே வந்தேன். இன்னும் ஒரு அண்ணன் வீடு பக்கத்து தெரு தான். போனேன். அங்க போனா கிட்ட தட்ட எல்லா அண்ணன், தம்பிகளும் கூடியிருந்தனர். எல்லார் முகத்திலும் ஒரு வித துக்கம். எப்போதும் கூடினால் பேச்சும் அரட்டையுமாக இருக்குமே அதல்லாம் இல்லை. எல்லோரும் மோக்கு, அவன் மனைவி பற்றி பேசிக்கொண்டிருக்க நான் அமைதியாக அந்த ஹாலில் படுத்து கண்ணை மூடிகொண்டேன்.

யாரோ வந்து செய்தி சொன்னார்கள். குளிப்பாட்ட போறாங்க. இப்ப எடுத்துடுவாங்க. அந்த மாருதி சவ வண்டி வந்தாச்சுன்னு. அந்த தெருவில் இருந்து ஹாமில்டன் பாலம் ஏறி இறங்கினா மயிலாப்பூர் இடுகாடு. எல்லா சடங்கும் முடிந்து அந்த சவ வண்டி கிளம்பும் போதும் அந்த பெண் குழந்தை மோக்கு தவிர்த்து யாரிடமும் போகவில்லை. பையன் ஏழு வயது. அவனுக்கு நிலமையின் விபரீதம் அத்தனை சரியாக புரியவில்லை. ஆனால் தன் அம்மாவின் சடலத்துக்கு அருகே வர பயப்படுகின்றான்.

எல்லோரும் சுடுகாடு போயாகிவிட்டது. நான் மாயவரம் தவிர எந்த சுடுகாட்டுக்கும் போய் பழக்கம் இல்லை. எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. அது சுடுகாடுன்னா எப்படி இருக்கும், மாயவரம் சுடுகாடு மாதிரி தான் இருக்கும் என நினைத்த எனக்கு இது ஒரு ஆச்சர்யமான அதிசயம். ஒரு வேப்ப மர காடு. அழகிய பூங்கா மாதிரியான காடு. மிக சுத்தமாக நடுவே தார்ச்சாலை அமைத்து இரு பக்கமும் மிக நேர்த்தியாக வளர்க்கப்பட்ட மரங்கள். ஒரு அரை கிலோமீட்டர் தாண்டிய பின்னே வலது பக்கம் விறகுவைத்து எரியூட்டும் இடங்கள். அழகிய மேற்கூறையிட்டு கீழே மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. இடது பக்கம் சமாதிகள். மிக அழகான சமாதிகள். பிறப்பு-இறப்பு தேதிகள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு சிலரது உருவமே கூட தத்ரூபமாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது.

பலபேர் தங்கள் கட்சி வர்ணத்தில் புதைந்து போயிருந்தனர். சில குழந்தைகள் சமாதிகள் மனதை அழ வைத்தது. பணக்காரன், ஏழை வித்யாசம் இல்லாமல் வரிசையாக உறங்கினர். இரவினில் ஒரு வேளை சண்டை வருமோ என நினைத்து கொண்டேன். அமைதி என்றாள் அப்படி ஒரு அமைதி. நாங்கள் ஒரு இருநூறு பேருக்கு மேல் நடந்து போகிறோம். அந்த காலடி சப்தம் தவிர எதுவுமில்லை. அப்போது தான் அதை கவனித்தேன். மூன்று அருமையான இரண்டு சர்க்கர புது வாகனங்கள் அந்த நடை பாதையின் ஓரத்தில் நிற்கின்றது. அதன் இருபதடி உள்ளே நல்ல வேப்பமர நிழலில் நால்வர் ஒரு அழகிய சமாதியின் மேல் (கிரானைட் கல் பதித்து அழகிய வேலைப்படுடன் கூடிய சமாதி. எந்த ஒரு கணவரோ அவர் மனைவிக்காக கட்டிய சிறிய அளவினாலான தாஜ்மஹால். அதன் மேல் அழகாக வட்ட வடிவில் உட்காந்து நடுவே இரண்டு முழு அளவிலான மது பாட்டில்கள். பெப்சி வகையறாக்கள், கூடவே நல்ல பிராண்டட் பிரியாணி வகைகள். அழகாய் உட்கார்ந்து ஆனால் இது கவலைக்காக குடிக்கும் கூட்டம் இல்லை என்பது நன்றாக புரிந்தது. உலக சத்தங்களில் இருந்து விட்டு விடுதலையாகி அமைதியான இடம் தேடி சந்தோஷம் அனுபவிக்கும் கூட்டம். எவன் மனைவி செத்தால் இவனுங்களுக்கு என்ன கவலை. இதோ மோக்கு நாளை எப்படி வாழ்க்கையை பயனிப்பான் என இவர்களுக்கு என்ன கவலை? எவனுடைய மனைவியின் சமாதி இவர்களுக்கு ஷாந்தி கொடுக்கும் இடமாகி போனது. கிட்ட தட்ட இந்த சவ ஊர்வலத்தில் பாதிக்கப்பட்ட மோக்கு தவிர எல்லாரும் அதே நிலைகாரர்கள் தான் நான் உட்பட. ஏனனில் எனக்கு அந்த நேரத்தில் என் குழந்தைகள் பள்ளி விட்டு வந்திருப்பார்களா? மகன் சாப்பிட்டிருப்பானா? போகும் போது பேருந்தில் கூட்டம் இருக்குமா? என்பன போன்ற நினைவுகளே எச்சமிருந்தன. எனக்கும் அதோ அங்கே குடித்து கொண்டிருப்பவர்களுக்கும் அதிக பட்ச வித்யாசமில்லை என்றே நினைத்து கொண்டேன்.

ஆயிற்று எல்லாம் ஆயிற்று. தகன மேடை ஒரு தனியறை. அதன் முன்பாக ஒரு பெரிய ஹால். அதில் ஒரு மேடை. அதில் அந்த பெண்ணை இறக்கி வைத்தனர். எல்லோரும் சுற்றி நிற்க அங்கே சில சடங்குகள் அரங்கேற்றம். யார் பேச்சை கேட்பது என மோக்கு திண்டாடி எல்லோர் பேச்சையும் கேட்டான். வலது பக்கமாக பொட்டு வை. இடது பக்கமாக வை என சொல்லப்பட்ட எல்லா பக்கமும் காது கொடுத்து கேட்டான். எனகு பக்கத்தில் இருந்த ஏதோ ஒரு நபர் என்னை பார்த்து "எப்ப வந்த நீ வெளிநாட்டில் இருந்து. என் தங்கச்சி மக கல்யாணத்துக்கு கூட வரலியே. தோ நிக்கிறாரு பாரு மோக்கு பக்கத்துல, அந்த பக்கம் இல்லை வலது பக்கம் பாரு. கழுத்துல டாலர் வச்ச செயின் போட்டவரு. அவரு தான் மாப்பிள்ள" எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. என்ன மனிதர்கள். பின்பு எல்லாரும் சுத்தி வர பணிக்கப்பட்ட போது சுத்தி வரும் போது "கோடாலி தைலம் எடுத்து வந்திருக்கியா?"என கேட்ட எவனையோ கோவத்தோட திரும்பி பார்க்க நினைத்து மூன்று சுற்று சுற்றுவதற்கு பதில் ஒரே சுற்றில் ஒதுங்கி கொண்டேன்.

அதல்லாம் முடிந்த பின் அந்த கருப்பு தகன அறை திறந்து விடப்பட்டது. மிக பெரிய உயரமாக முழுவதும் கருப்பு வர்ணம் என் வயிற்றை பிசைய தொடங்கியது. கால்கள் மெல்ல நடுங்கியது. அங்கே ஒரு தண்டவாளத்தில் அந்த கைப்பாடையுடன் அந்த பெண் இறக்கி வைக்கப்பட்டாள். சிலர் விசும்ப தொடங்க மோக்கு அசைவற்று நின்றான். கழுத்தில் இருந்து மாலை கழட்டப்பட்டது. கால்விரல், கை விரல் கட்டுகள் அறுத்து எடுக்கப்பட்டது. சிலர் வாய்விட்டு அழுதனர். கழுத்து மாலை அகற்றப்பட்ட போது நெற்றியில் ஒரு கீற்று தலைமுடி வந்து விழுந்து இருந்தது.

"கடைசியா முகம் பார்த்துகுங்க மூட போகிறோம்"

மெதுவாக மோக்கு கிட்டே போய் அந்த முடிகற்றையை எடுத்து தலைமுடியோடு சேர்த்து வைத்து கன்னத்தை தடவி கொடுத்தான். உள்ளே தள்ளி மூடினர். அந்த ஒரு நொடியில் அடித்த வெப்பம் அனைவரையும் தாக்கியது. மோக்கு முதன் முறையாக வெடித்து அழுதான்.

எல்லாம் முடிந்தது. வீட்டுக்கு வந்தாகிவிட்டது. அதிசயமாக கேட்டேன் என் வீட்டிலே "சினிமாவுக்கு போவோமா?" என் மனைவிக்கு இந்த பதினைந்து வருஷத்தில் கிடைக்காத ஒரு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம். சினிமா போனோம். திரும்பி வரும் போது ஒரு ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்டோம். திரும்பி வரும் போது ஹோட்டல் வாசலில் என் உறவினர் ஒருவர் "என்னடா தம்பி நமக்கு இன்னும் பதினைந்து நாள் பங்காளி சூதகமே இன்னும் முடியலை.அதுக்குள்ள சினிமா, ஹோட்டல்னு கிளம்பிட்டீங்க??

போய்யா உன் வேலையை பார்த்துகிட்டு என மனதில் நினைத்து கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.