பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 27, 2007

அபிஅப்பாவும் அபுதாபியும்!!! பாகம் # 2

இப்படியாக...... அபிஅப்பாவின் இரண்டாம் ஆண்டு இந்த வலைப்பூவில் ஆ"ரம்'பிக்கிறது இன்று முதல்! இந்த பதிவின் முதல் பாகத்தை இங்கே பாருங்க!

அப்படியாக நாங்க நடுங்கி கொண்டிருந்த போது முதல் சீன்ல வந்து ஒன்பது வார்த்தை டயலாக் பேசும் ஆடிட்டர் நண்பர் மாத்திரம் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கவே எங்க டைரக்டர் அவரிடம் போய் "என்ன ஓய் எப்படி டயலாக் டெலிவரி எல்லாம் ஒழுங்கா இருக்குமா தொல்ஸ் எழுதி கொடுத்த டயலாக் எல்லாம் படிச்சாச்சா?"ன்னு கேக்க அவரோ "சி ஏ சிங்கிள் அட்டெம்ட்... "ன்னு சொல்லி மணி ஆட்டி காமிக்க அவர் மேல் நம்பிக்கை வந்துடுச்சு எல்லாருக்கும்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அறிவிப்பு எங்க நாடகத்துக்கு! ஏகப்பட்ட கைத்தட்டல், எனக்கு அந்த நிகழ்ச்சிக்கு பின்ன கிட்டதட்ட கைதட்டல்ன்னாவே 1 வருடத்துக்குஅலர்ஜி ஆகியதுன்னா பார்த்து கோங்க எந்த அளவு நடுங்கியிருப்பேன்ன்னு. முதல் காட்சி திரை விலகியது. நம்ம ஆடிட்டர் மணியை தூக்கிட்டு கிளம்பிட்டார் குருக்கள் வேஷத்துல. நான் எட்டிகூட பார்க்கலை பயத்துல! அப்படியே கண்ணை மூடிகிட்டேன். விசில் சத்தமும், சிரிப்பும் என் காதை கிழித்து குடையவே "ஆஹா நம்ம ஆடிட்டர் அசத்திட்டார்"ன்னு நெனச்சுகிட்டேன். பின்ன நானே "அப்படி ஒன்னும் இல்லியே அந்த சீன்ல கைதட்டி விசில் அடிக்கும் அளவு என நினைப்பு வரவே கொஞ்சம் பயம் வந்தது.

பாரத போரில் திருதிராஷ்டிரனுக்கு லைவ் ரிலே கொடுக்கப்பட்டது போல எனக்கு பிளேடு பக்கிரி "ஆடிட்டர் மணி அடிக்கிறார், வசனம் பேச போரார்"ன்னு லைவ் ரிலே வேற இந்த லெட்சனத்துல. விசில் சத்தம் முடிந்ததும் பிளேடு பக்கிரி வந்தார். முகமே பேயடிச்ச மாதிரி இருக்கு. என்னன்னு கேட்டேன் "ஆடிட்டர் ஆடிட்டார்"ன்னு சிம்ப்பிளா சொன்னார். என்னதான் நடந்தது சொல்லுய்யான்னு சொன்னதுக்கு அவர் பேசின வசனத்தை அப்படியே சொன்னார் பிளேடு பக்கிரி!

//''(மணியடிச்சுகிட்டே வந்து) நன்னா இருங்கோ,
ஷேமமா இருங்கோ,
இந்த உலகமே சுபிட்ஷமா வையிடா ஆண்டவா
(அப்போது மணியடிப்பதை நிறுத்தி விடனும்) ....'' //

நான் எழுதி கொடுத்ததை எல்லாத்தையும் எல்லாத்தையுமே மணல்கயிறு செவிட்டு அப்பா கேரக்டர் மாதிரி கொஞ்சம் கூட ஏத்தம் இறக்கம் இல்லாம சொல்லி நாங்கள் போட இருந்த சமூக நாடகத்தை காமடி நாடகமாக ஆக்க விதை போட்டுட்டார் ஆடிட்டர்.மனப்பாடம் செய்யலாம் தப்பில்லை அதுக்காக இப்படியா?

நாடகத்தின் கதை என்னவோ இது தான். அதாவது ஒரு சேட்டுகிட்ட ஒருத்தன் வட்டிக்கு பணம் வாங்கி அவஸ்தை படுவது போலவும், சேட்டு ஒரு தமிழனை மிரட்ட இன்னுமொரு தமிழனான பிளேடு பக்கிரியை வைத்து மிரட்டுவதாகவும் இப்படியாக போகும் கதை!

ஆடிட்டர் பண்ணின காரியத்துக்கு டைரக்டர் கிட்ட எனக்கும் பக்கிரிக்கும் திட்டு விழுகுது. அடுத்தது என் சீன். எப்படி ஒன்னாம் வகுப்பு போக மாட்டேன்னு அடம் பிடிச்சனோ அப்படி கெஞ்ச ஆரம்பிச்சுட்டேன். அடுத்த சீனுக்கு வாரேன்ன்னு. ஒரு வழியா மேடைக்கு அழைத்து வரப்பட்டேன்ன்னு சொல்லுவதை விட மனோகரா மாதிரி இழுத்து வரப்பட்டேன். இப்போ உதறல் இன்னும் ஜாஸ்தியா போச்சு. என்னிடம் கடன் வாங்கியவராக நடிப்பவர் டைரக்டர் தான். சீன் படி நான் கோவமா இருக்கனும், என்னை பார்த்து கடன் வாங்கிய கேரக்டர் நடுங்கனும். ஆனா நடந்தது வேற!

நான் கட கடன்னு நடுங்கிகிட்டு இருக்கேன். முதம் முதலா பைக் ஓட்டிட்டு கீழே இறங்கியதும் கால் ரெண்டும் நடுங்குமே அது மாதிரி நடுங்க டைரக்டர் கடுப்பாகிட்டார். என்ன நெனச்சாரோ தெரியலை மேடைன்னு பார்க்காம திட்ட ஆரம்பிச்சுட்டார்!

கடன் வாங்கிய கேரக்டரில் இருந்த டைரக்டர்: "என்னய்யா எத்தனை தடவ சொன்னேன் நடுங்காதே நடுங்காதே, அதுவும் என்னை பார்த்தா ஏன் இப்படி நடுங்கி சாகறே"

சேட்டாகிய நான்: "நானாவா நடுங்கறேன், உங்களை பார்த்தவுடன் தானா உதறல் எடுக்குது"

நாங்கள் இருவரும் நாடக மேடை என்பதை மறந்து (நாடகம் தான் ஊத்திகிச்சேன்ற நினைப்பிலே) தனிப்பட்ட முறையில் பேசிகிட்டோம் மைக்கில்:-))

அப்போது ஒரு பார்வையாளர் பகுதியில் இருந்து ஒரு கிரீன் தமிழன் எழுந்து " சபாஷ், முதன் முறையா ஒரு சேட்டு தமிழன் கிட்ட கடன் வாங்கிட்டு பயப்படராண்டா"ன்னு குரல் கொடுக்க டைரக்டர் தலையிலே பல்பு எரிய, நான் அப்பவும் டியூப் லைட்டாகவே இருக்க டயலாக் எல்லாம் மாறிடுச்சு!

டைரக்டர்: யோவ் சேட்டு என் கிட்ட வாங்கின பணத்துக்கு வட்டியும் கட்டலை அசலும் தரலை, ஆனா என்ன பார்த்தா மட்டும் கை கால் உதறுதா நடிக்கிறயா?

அப்பவும் எனக்கு கதை மாறியது எல்லாம் தெரியாது!

நான்: இல்ல ஜி, நெசமாவே கை கால் நடுங்குது நடிக்கலை!

டைரக்டர்: ஒரு சேட்டு தமிழனை பார்த்து ஜி ன்னு சொல்ல வச்சேன் பாருய்யா அதான் தமிழன், சரி நீ வாங்கின பணம் எப்ப தருவ!

நான்: என்ன (வசனத்தை) மாத்தி மாத்தி பேசறீங்க ஜி! (மனசுகுள்ள அய்யய்ய டைரக்டரும் உளற ஆரம்பிச்சுட்டார், என் வசனத்தை பேசறார்ன்னு நெனச்சு கிட்டேன்.

டைரக்டர்: நானா சேட்டு மாத்தி மாத்தி பேசறேன், நீ தான்யா, இப்ப தாரேன் அப்ப தாரேன்ன்னு மாத்தி மாத்தி பேசற, இரு உன்னை நல்லா கவனிக்க ஒரு பார்ட்டி வருது.

ஆக்சுவலி அந்த வசனம் நான் பேசனும், அப்போ பிளேடு பக்கிரி வந்து குதிக்கனும், ஆனா பிளேடு பக்கிரி வந்து குதிக்காமல் யாரோ தள்ளி விட வந்து விழுந்தார். கூட்டத்தில் ஒரே சிரிப்பு, செம காமடி டிராமாவா ஆகிடுச்சு! அப்போ பக்கிரிக்கு எழுதி கொடுத்த வசனம் "பேமானி, கய்த" இப்படியாக போகும்.

ஆனா வந்து விழுந்த பக்கிரிய பார்த்தா ரவுடி மாதிரி இல்ல முகம் முழுக்க ஒழுகிய அத்தரை துடைத்து துடைத்து பேய் மாதிரி இருந்தார்.

எனக்கு அப்பவும் நடுக்கம் நிற்கலை. டைரக்டர் பக்கிரிகிட்ட முனு முனுன்னு "வசனம் பேசுங்க" ன்னு சொல்ல பக்கிரி "பே பே பே"ன்னு சொல்றாரெ தவிர "பேமானி"ன்னு முழுசா சொல்ல மாட்டேன்ன்னு அடம் பிடிக்கிறார்.

இப்பவும் கூட்டத்தில் சிரிப்பு. எனக்கு பயத்திலும் மானம் போகுது. அப்பவும் டைரக்டர் சமாளிச்சு கிட்டே "பத்தியா சேட்டு உன்னை மனுஷலால பயமுறுத்த முடியாதுன்னு தெரியும் அதான் புளிய மரத்துல இருந்து பேயை கூட்டி கிட்டு வந்துட்டேன்"ன்னு என்னன்னவோ சொல்ரார். எனக்கும் பக்கிரிக்கும் என்ன நடக்குதுன்னே புரியலை.

அப்போ டைரக்டர் "சரிய்யா சேட்டு நீ ரொம்ப நாளா தமிழ் நாட்டுல இருந்து ஹிந்திய மறந்து போயிருப்பே, அதனால "மேரா நாம் ரங்லால்"ன்னு சரியா சொல்லு, பின்ன நான் வட்டியும் அசலும் தள்ளுபடி செஞ்சுடறேன்"ன்னு சொல்ல நான் கடுப்பாகிட்டேன். என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல கூட்டமோ சிரிச்சு கிட்டே இருக்கு...நடுக்கமோ இன்னும் நிக்கலை.. கடுப்பாகி சொன்னேன் " மேரா நாமம் ரங்கநாதரோடது" .. கூட்டம் இப்படியா சிரிக்க பின்ன என் சீன் முடிஞ்சு உள்ளே போன பின்ன தான் கதை மாறிய விஷயம் தெரியும்.

ஒரு வழியா நாடகம் முடிஞ்சு, தலைவர் ரொம்ப பாராட்டினார் மைக்கிலே!

".... நாடகத்தில் "கோபுரங்கள் சாய்வதில்லை" படத்தின் வினு சக்கரவர்த்தியின் நகைச்சுவை சாயல் தெரிஞ்சாலும் இது நல்ல காமடியா இருந்துச்சு, அதிலும் அந்த படத்தில் வரும் ஈட்டிகாரனை விட தொல்ஸின் நடுக்கம் அதிகமா "நேச்சுரலா" இருந்துச்சு!(அடபாவமே நேச்சுரல் தானே) ...." இப்படியாக பேசி கிட்டு இருந்தார்.

நான் மட்டும் பேட்டி கொடுத்து கொண்டிருந்தேன்)

எப்படிங்க தொல்ஸ் இப்படியெல்லாம், சரி அடுத்த நிகழ்ச்சியில என்ன கேரக்டர்ல நடிக்க போறீங்கன்னு கேட்டவங்களுக்கு “இமயமலை சாமியார் குளிரில் நடுங்கும் கேரக்டர் பண்றேன்”ன்னு சொல்லிகிட்டு இருந்தேன். எங்க டைரக்டர் என்னை சுடுவது போல பார்த்து கொண்டிருந்தார்!

இப்படியாக ஜாலியா இருந்த அபுதாபி தமிழ் சங்கத்தின் எல்லா உருப்பினர்களுக்குமே தலைவர் ஆகிடனும்னு ஆசை வந்து பின்ன “ஆனைக்கு அல்வா வாங்கிய வகையில்” செலவு கணக்கு எல்லாம் ஆகி ஒரு வழியா முடிஞ்சு போச்சு எல்லாம். பின்ன எல்லாரும் 1 வருஷத்துக்கு அமைதியா அவங்க அவங்க வேலையை பார்க்க ஆரம்பிச்சுட்டோம். நானும் அதன் பின் 2000 வாக்கிலே துபாய் வந்துட்டேன்.

December 26, 2007

பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா!!!!நான் அயல் நாட்டில் என் தாய் வீடாக நினைத்த அபுதாபியை விட்டு துபாய் வந்து 7 வருடம் ஆனாலும் என் நண்பர்கள் அங்கே அதிகம். இப்பவும் நான் அங்கே ஒரு தமிழ் நிகழ்ச்சியெனில் ஓடிவிடுவேன். நான் போன பதிவில் போட்ட சங்கம் இது இல்லை! அது போன கதை! இது என் நண்பர்களால் 5 வருடம் முன் ஆரம்பிக்கப்பட்ட புது சங்கம்!! பாரதி-நட்புக்காக!!! இதுதான் அந்த சங்கத்தின் பெயர்!! இதன் முழு விபரங்களும் அடுத்த அடுத்த பதிவுகளிள்!

ஆஹா நாம் வெள்ளிகிழமை அபுதாபி போகிறோம்! சரியா!!!!

அபிஅப்பாவும் அபுதாபியும்!!!

அபுதாபி எனக்கு கிட்டதட்ட தாய் வீடு மாதிரி. துபாய் எனக்கு புகுந்த வீடு மாதிரி. துபாயில் இருந்து எப்பவாவது அபுதாபி செல்லும் போது ஜெபல்அலி தாண்டியதுமே எனக்குள் ஒரு மின்சாரம் வந்துவிடும். சாலையின் நடுவே உயர்ந்து நிற்கும் விளக்கு கம்பங்கள் அபுதாபி எல்லை ஆரம்பித்ததை சொல்லிவிடும். அதிலிருந்தே பசுமை ஆரம்பமாகிவிடும்.நான் வரும் வெள்ளி கிழமை அபுதாபி செல்ல இருப்பதால் அந்த சில நினைவுகள் இங்கே!

அபுதாமி தமிழ் சங்கம் இருக்கின்றதே தப்பு தப்பு... இருந்ததே ....ஆகா என் வாழ்க்கையின் சந்தோஷ நாட்கள் அவை. கண்டிப்பாய் 15 நாட்களுக்கு ஒரு முறை ஏதாவது நிகழ்ச்சி, ஈத், பொங்கல், தீபாவளி, சுதந்திர தினம் என எதையும் விட்டு வைக்க மாட்டோம்.

அதிலும் குறிப்பாக சங்கத்துக்கு உள்ளேயே பல குழுவாக இருப்போம் கிட்டதட்ட தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி. ஆனாலும் தேர்தல் என வந்துவிட்டால் ஸாரி நிகழ்சி என வந்து விட்டால் ஒத்துமையா நின்னு நிகழ்ச்சியை ஜெயித்து விட்டு பின்ன சண்டை போட்டுப்போம். நாங்க ஒரு எட்டு பேர் அதிலே தனியாக "மன மகிழ் மன்றம்" என சொல்லி கொண்டு அடித்த லூட்டி அந்த தமிழ் சங்கத்திலே பிரமாதம். ஒருமுறை அப்படித்தான் மனமகிழ் மன்றம் தனியாக ஒரு நாடகம் போட்டுவிடுவது என தமிழ் சங்கத்திலே சொல்லி எங்களுக்கு தனியாக நேரம் வாங்கி விட்டோம். ஹில்டன் ஹோட்டல் மேல் மாடியில் நிகழ்ச்சி. சரி யார் கதை, யார் டைரக்ஷன், டயலாக் யார் என முடிவாகும் முன்னமே, எது எப்படியாகினும் நாம எல்லோருமே ஒரு ஒரு கேரக்டரில் நடித்து விட வேண்டும் என முடிவாகியது. எங்க அந்த குழுவிலே ஒரு நண்பர் சி.ஏ. சிங்கிள் அட்டெம்ப்டில் பாஸ் பண்ணினவர். அவர் மாத்திரம் ஒத்துக்க மாட்டேன்ன்னு சொல்றார் நடிக்க. எங்க கதைப்படி ஆரம்ப சீன் அவர் தான். கோவில் குருக்களாக வந்து (மணியடிச்சுகிட்டே வந்து) நன்னா இருங்கோ, ஷேமமா இருங்கோ, இந்த உலகமே சுபிட்ஷமா வையிடா ஆண்டவா(அப்போது மணியடிப்பதை நிறுத்தி விடனும்) .... இது தான் முதல் சீன். பின்ன அவர் வர வேண்டாம். இப்படி எல்லாம் அவருக்காக ஒன்பதே வார்த்தைகளிள் டயலாக் எழுதினேன். கதை வேற ஒரு நண்பர். நான் வசனம்.

எனக்கு என்னா கேரக்டர் தெரியுமா. சேட்ஜி! இன்னும் ஒரு நண்பருக்கு பிளேடு பக்கிரி கேரக்டர். காஸ்ட்டியூம்ஸ் எல்லாம் மனமகிழ் மன்ற மகளிர் அணி தயார் பண்ணியாச்சு. எனக்கு தான் சேட்டு குல்லாய் கிடைக்காமல் காயல்பட்டிணம் பாய் ஒருத்தவரின் ஜரிகை தொப்பி வாங்கி அட்ஜெஸ்ட் பண்ணியாச்சு.

நிகழ்ச்சி நாளும் வந்தது.மத்த மத்த குழுவிலும் சின்னதா ஸ்கிட், பாட்டு, வீணை வாசிப்பு, இப்படியாக நடந்து கொண்டிருந்தது. எங்க குழுவின் நாடகம் கடைசி நிகழ்ச்சி. பலத்த எதிர்பார்ப்பு எல்லோரிடமும். பிளேடு பக்கிரிக்கு முகத்திலே கருப்பு பரு இருக்கனும் என்கிற சர்வதேச விதியின் படி ஒரு அத்தர் உருண்டை வாங்கி கன்னத்துக்கு மேலே ஒட்டியாச்சு. அப்பல்லாம் பக்கிரி தைரியமாதான் இருந்தார். எனக்கு அது வரை மேக்கப் போடலை. நானும் தைரியமா இருப்பது போல "நடித்து" கொண்டிருந்தேன். தைரியமா இருப்பது போல நடிக்கிறோமே மேடையிலா நடிக்க தெரியாம போய்டும்ன்னு என்னை நானே தேத்திகிட்டேன். நாங்களாவது பரவாயில்லை, முதல் சீன்ல வரும் ஆடிட்டர் நண்பர் ரிகர்சலுக்கு கூட வரலை. ஏதோ கம்பெனில ஆடிட்டிங்ன்னு சொல்லிட்டு வரமா டிமிக்கி கொடுத்துட்டார். கதவை திறந்து பார்த்தா ஒரே விசில் சத்தம் மத்த நிகழ்ச்சிகளுக்கு. எங்கள் நாடகத்தின் டைரக்டரும்(கதை எழுதியவர்) முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடிக்க இருந்தவருமான நண்பர் எங்களுக்கு கடைசி நேர டிப்ஸ் எடுத்து கிட்டு இருந்தார்.

"தொல்ஸ் நீங்க சேட்ஜி இல்லியா அதனால தமிழ் தப்பு தப்பா பேசனும்"

"ஜி, நான் தமிழ் எழுதும் போது தான் தப்பா எழுதுவேன், பேசும் போது அட்சர சுத்தமா பேசுவேனே, வேணும்ன்னா ஹிந்தி தப்பு தப்பா பேசவா, கதையையை கொஞ்சம் மாத்திப்போமா"

"யோவ், சேட்டு ஹிந்தி தப்பா பேசுவானா, கதைய காமடியா மாத்தாதே"ன்னு எரிஞ்சு விழுந்தார்.

சரின்னு பிளேடு பக்கிரி பக்கமா திரும்பினார். பக்கிரியின் பயத்தின் காரணமாக முகத்தில் வியர்வை கொட்டுது அதிலே அத்தர் உருகி மூஞ்சில கோடா வழியுது. ரூம் முழுக்க அத்தர் வாசனை.

"யோவ் யோவ் என்னய்யா, உன் கேரக்டர் என்ன, பிளேடு போட்டு ரத்த வாடையா இருக்கனும்யா, இப்படி நாகூர் கந்தூரிக்கு போய் வந்த மாதிரி இருக்கியே வாசமா? சரி கருப்பு பரு எங்கே?"

"ஜி, அதான் இப்படி வழியுது"

"ஆஹா, அதை தொடைங்க"

சர்ன்னு தொடைச்சா முகமே கருப்பா விகாரமா போய் பிளேடு பக்கிரி அரிவாள் பக்கிரியா மாறிட்டார்.

எனக்கு மேக்கப் ஆரம்பிச்சாச்சு, அட்டகாசமா ஜிப்பா, குர்தா மேல் கோட், ஜரிகை தொப்பி எல்லாம் போட்டு, எல்லாத்தையு பார்த்துட்டு மகளிர் அணியினர் என்னவோ குறையுதேன்னு சொல்லி அதையும் கண்டு பிடிச்சு என் சின்ன நெத்தியிலே தெலுகு பட வில்லன் மாதிரி பெரிய நீட்டு பொட்டா சிகப்பு கலர் ஆஷா சாந்து வச்சி அழகு பார்த்துட்டு சிரிச்சு கிட்டே போயிட்டாங்க. எனக்கோ நேரம் ஆக ஆக லைட்டா கை உதறல் ஆரம்பிச்சாச்சு. அப்ப பார்த்து தமிழ் சங்க தலைவர் உள்ளே வந்து பார்த்துட்டு "ஹய், சஸ்பென்ஸா வச்சிருக்கீங்களா கதையை நான் கண்டு பிடிச்சுட்டேனே, காமடி டிராமாவா?"ன்னு கேட்டார்.

நான் "அய்யோ, எதை வச்சு காமடின்னு முடிவு பண்ணீங்க?"ன்னு கேட்டேன். அதுக்கு அவர் "நீங்க இன்னும் உங்க மேக்கப்பை கண்ணாடில பார்க்கலையா?"ன்னு கேட்டுட்டு போயிட்டார். எனக்கு உதறல் அதிகமாயிடுச்சு. ஓடிப்போய் கண்ணாடியிலே பார்த்தேன்!

இதை படித்து கொண்டிருப்பவர்களே. நீங்க வாழ்க்கையிலே அப்படி ஒரு சேட்டை பார்த்திருக்கவே முடியாது. எனக்கு சேட்ஜி வேஷம் கொடுத்த டைரக்டரின் குற்றமா, கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம ஒத்துகிட்ட என் மீது குற்றமான்னு தெரியலை. சும்மா டைபாய்டு வந்த சேட்டு மாதிரி ஒரு தோற்றம். எந்த சேட்டை பார்த்தாலும் குலோப்ஜாமூன் மாதிரி இருப்பான். என்னைய பார்த்தா எனக்கு ஜிப்பா போட்ட மாதிரி இல்ல ஜிப்பாவுக்கு என்னை போட்ட மாதிரி இருக்கு. நாமம் பார்த்தா சேட்டு போடுவது போல இல்லை ரங்கநாதர் மாதிரி இருக்கு. ஆக ஒல்லியிலே(ஆக மொத்தத்திலே இல்லை) பாம்பு புத்துக்கு படைக்க இருக்கும் சேவல் கோழிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி கதம்ப பூவை கழுத்திலே சுத்தின மாதிரி இருக்கு.

என் உதறல் என் கண்ட்ரோலை தாண்டி போக ஆரம்பிச்சுது. சீக்கிரம் நாடகம் ஆரம்பிக்க போகுது.மீதி நாளைக்கு!!!

திஸ்கி: பதிவு பெருசா ஆகிடுச்சு ஒரு காரணம்,அடுத்து முதுகுவலி திரும்பவும் ஸ்டார்ட் மீசிக்....இப்போ இன்னிக்கு முதல்....

திஸ்கி 2: பிரகாஷ்ராஜ் மட்டும் தான் எடுக்கனுமா "அபியும் அபிஅப்பாவும்"ன்னு படம் நாங்க போட மாட்டோமா "அபிஅப்பாவும் அபுதாபியும்"ன்னு:-))

December 25, 2007

துபாயில் இளையராஜா!!!

அண்ணாச்சி இரு வாரம் முன்ன ஒரு பதிவு போட்டிருந்தாரு இளையராசாவின் துபாய் நிகழ்ச்சி பத்தி. இதுக்கும் மேல விரலை வச்சிகிட்டு சும்மா இருந்தா எனக்கு ஒரு பதிவு நஷ்டமாகிவிடும். இது சம்மந்தமா யாராவது என்னை திட்டனும்ன்னு நெனச்சா குனியமுத்தூர் கோபால்சாமி என்பவரை திட்டவும். அவரை தான் எனக்கு பதிலா திட்டு வாங்க நியமிச்சு இருக்கேன் புதுசா.

நான்கு வருடம் முன்ன நடந்த A R ரஹ்மான் நிகழ்ச்சியோட இதை ஒப்பிட்டு பார்த்தா இது ஊத்திகிச்சுன்னு தான் சொல்வேன். லொடுக்குக்கு கிடைச்ச மாதிரி 1000 திர்காம் டிக்கெட்டை என் சட்டை பையில் எந்த ஒரு ஸ்பான்சரும் திணிக்காத காரணத்தால் போக வேண்டாம் என முடிவெடுத்து படுத்து தூங்கிட்டேன். பின்ன மாலை 5.30க்கு திடீர்ன்னு நன்பர்கள் 10 பேர் சேர்ந்து "போனாத்தான் என்ன?, நம்ம ராசா நிகழ்சியாச்சே"ன்னு சப்போர்ட் பண்ணவே திடுதிப்புன்னு அங்க போய் டிக்கெட் வாங்கிக்கலாம் என கிளம்பியாச்சு. எங்கே டிக்கெட் விற்பனை என தெரியவில்லை. 10 அடி உயர கேட்டுக்கு முன்னே கையிலே டிக்கெட் வச்சிருந்தவங்களை கூட உள்ளே விடாமல் ரப்சர் பண்ணிகிட்டு இருந்தாங்க. உள் பக்கம் இருந்த செக்யூரிட்டிகள் " தயவு செய்து கேட்டின் மேலே ஏறி குதிச்சிடாதீங்க, சீக்கிரம் திறந்து விடுவோம்"ன்னு நல்ல ஐடியா கொடுக்கவே மொத்தம் 5 நிமிடத்தில் 500 பேரும் உள்ளே குதிச்சாச்சு. மும்பை எலக்ட்ரிக் ரயிலில் கூட்டத்தோடு கூட்டமா ரயில் உள்ளே நுழைந்து வெளியே வருவது போல நானும் ஆட்டோமேட்டிக்கா உள்ள வந்தாச்சு. என் காலில் ஒரு செக்கியூரிட்டி தொப்பி தென்பட்டது. சும்மா டிக்கெட் வாங்காம உள்ளே வந்த கூட்டம் 50 திர்காம் வரிசையில் உட்காராமல் 6 அடி வேல் கம்பு தடுப்பு எல்லாம் அஞ்சு ஜார்ஜ் மாதிரி அனாயசமாக தாண்டி மெல்ல நகர்ந்து ஏற்கனவே காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களை புழு மாதிரி பார்த்து விட்டு 200 திர்காம் இடத்துக்கு முன்னேறி சென்றது.

அப்படியாக நான் போய் உட்கார்ந்த இடம் சரித்திரம் முக்கியம் வாய்ந்த இடம். பல ஜாம்பவான்களை விருமாண்டி மாதிரி ஒத்தை விரலால் அவுட் ஆக்கிய அம்பயர்கள் நிற்கும் இடம். பக்கத்தில் உட்காந்திருந்த ஒரு குடும்பஸ்தனிடம் மெதுவாக பேச்சு கொடுத்தேன்.."பாருங்க சார் அநியாயத்தை, டிக்கெட் வாங்காதவன் எல்லாம் முன்ன போய் கிட்டு இருக்கான், நாம தான் சிரிச்ச மூஞ்சா இருக்கோம்"ன்னு சொன்னதுதுக்கு என்னை மேலும் கீழுமா பார்த்து விட்டு "கலி காலம் சார்"ன்னு சொன்னார். மேடையின் நடுவே ஆண்மை குறைவு டாக்டர் மாதிரி கோட்டு போட்ட ஆசாமி யாருன்னு பார்த்தா அட வசந்தகுமார். இளையராசா சொதப்பினதுக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

குஸுப்புவும் அவங்க தம்பி ஜெயராமனும் நிகழ்சி தொகுப்பாளர்கள். இளைய ராஜா மேடைக்கு வரும் முன்ன ரொம்ப அலப்பரை பண்ணினாங்க. வந்தாரு ராசா, எல்லாரும் எதிபார்த்த மாதிரியே ஜனனி ஜனனி பாடினார். சும்மா சொல்ல கூடாது. ரகளை தான் அவர் குரல். அடுத்து அடுத்து பாடும் நிலா பாலு நல்லா பாடினார். அது போலவே நல்லா பேசினார். அசத்தினார். இத்தன வயசிலும் குரலில் இருந்த அதே பழைய கம்பீரம் குறையவேயில்லை.

ச்சீனி கம் பாட ஆரம்பிச்சார் பாலு சார். ஏகப்பட்ட கைதட்டல் பாலுசாருக்கு. கூட ஒரு பொண்ணு பாடிச்சுப்பா, ஸ்ரேயா கோஷல்ன்னு ஆஹா தலையை ஒரு சொடுக்கு சொடுக்கிகிட்டு, முகத்திலே வந்து விழும் முடியை தள்ளி தள்ளி விட்டுக்கிட்டு, அந்த தலைமுடி ரொம்பத்தான் டிஸ்ட்டர்ப் பண்ணிடுச்சு அந்த பொண்ணை! எண்ணை தடவி சீவி பின்னி பூவச்சிகிட்டு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். கேட்டா ஃபேஷனாமாம். அந்த பொண்ணு தலையை சொடுக்கி சொடுக்கி பாட ஆரம்பிக்கும் ஸ்டைல் எனக்கு மட்டுமல்ல இளையராசாவுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சுன்னு நெனைக்கிறேன். அதனால நான்கு தடவை திரும்ப திரும்ப பாட விட்டார். அப்ப பாலு சார் பிள்ளையாருக்கு வேண்டிகிட்டது போல 108 தடவை கொட்டாவி விட்டார். நானும் கூடவே விட்டேன். ஸ்ரேயா கோஷல் பாடும் போதல்லாம் ஒரு மூலையில் இருந்து மட்டும் காது கிழியும் அளவு விசில் சத்தம். அநேகமாக குசும்பனா இருக்கனுன்னு நெனைக்கிறேன்.

"சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா" பாடல் சிம்ப்ளி சூப்பர் ராஜா சாரே! மத்தபடி ஒரு கட்டத்துல "நான் ஆட போகிறேன்" என குஷுப்பு சொன்ன போது இளையராஜா மட்டுமல்ல மொத்த கூட்டமும் கொஞ்சம் ஆடித்தான் போனோம்.

எனக்கு பக்கத்திலே உட்காந்திருந்த குடும்பத்தில் மதியம் சுரைக்காய் கூட்டுன்னு நெனக்கிறேன். அந்த 5 வயசு பையனுக்கு ஒவ்வொறு பாட்டுக்கும் "இண்டர்வெல்" தேவைப்பட்டது. டாய்லெட் கூட்டி போய் போய் சலிச்சு போன அவங்க அப்பா "அதோ அந்த இடத்திலே போ இனிமே"ன்னு சொல்லி அவர் காண்பித்த இடம் நம்ம ரவி சாஸ்திரி குரளி வித்தை காட்டுபவன் போல குத்து கால் இட்டு குந்திகிட்டு ஒரு கையில் மைக்கையும் அடுத்த கையால மண்ணை தடவி தடவி ஜோசியம் சொல்லுவாரே அந்த இடம். அநேகமாக அடுத்த தடவை மண்ணை தடவி பார்த்து "மண்ணு ஈரப்பதமா, ஆனா கொஞ்சம் உப்பு ஜாஸ்தியா இருப்பதால் பந்து நல்லா சுழலும்"ன்னு எதுவாவது சொல்லுவார்.

கூட்டத்தில் தேமுதிக கொடிகள் பேனர்கள் அதிகமாகவும் திமுக கொடி பேனர் கொஞ்சமாகவும் இருந்தன. திமுக கொடிகளை கலைஞர் டிவி படம் எடுக்க லைட் போட்டா தேமுதிக பசங்க அங்க ஓடி வந்து போஸ் கொடுப்பதும் அந்த கொடியை பார்த்தது கலைஞர் டிவி காரங்க போகஸ் லைட்டை ஆஃப் செய்வதுமான கண்ணா மூச்சி விளையாட்டு நல்லா இருந்தது. இருந்தாலும் தேமுதிகவுக்கு பேராசை இத்தன கூடாது அவங்க தலைவரை போலவே.

என் பக்கத்துல இருந்த குடும்பத்தின் தலைவி தலைவனை பார்த்து "என்னங்க நிகழ்ச்சி அன்னிக்கு வந்திருக்கலாமே ரிகர்சலுக்கு கூட்டி கிட்டு வந்துட்டீங்களே நிகழ்ச்சி நாளைக்கா?ன்னு அப்பாவியா கேட்டாங்க! கிட்டதட்ட நிகழ்ச்சி பத்தின என் கருத்தும் இதுதான்.

சரின்னு கிளம்பி வந்துட்டேன். அடுத்த நாள் கோபியின் விரிவான பதிவு வந்திருந்தது. நான் முதன் முதலாக மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு ரயிலில் போகும் போது ஒரு பேப்பர் பேனா வச்சிகிட்டு நீடூர், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருபாதிரிபுலியூர் என ஸ்டேஷன் பெயரை எழுதி கொண்டே போனது ஞாபகம் வந்தது கோபியின் பதிவை பார்த்த பின்!

December 16, 2007

எனக்கும் 100 சாத்தியமா?????

இதுவரை எனக்கு சாத்தியப்படாத விஷயம் இந்த 100 என்பது. அனேகமாக என் வாழ்க்கையின் முதல் 100 இதுவே. கணிதத்தில் கூட இதுவரை நான் 100 எடுத்தது கிடையாது. நான் சென்ற வருடம் டிசம்பர் 26 அன்று முதன் முதலில் "வணக்கம்" என டெஸ்ட் பதிவு போட்ட போது கூட நூறு பதிவெல்லாம் நமக்கு எங்கே என்று தான் நினைத்தேன். அதன் பிறகு யாராவது நூறாவது பதிவு என்று பதிவிட்டிருந்தால் உடனே ஓடிப்போய் என் பதிவை பார்ப்பேன். 28, 32 என்று தான் இருக்கும். திடீரென ஒரு நாள் பார்த்தா 50 பதிவு ஆகியிருந்தது. அட நாம கூட அரை சதம் வந்தாச்சேன்னு ஆச்சர்யம். அதன் பின்ன நூறு என்பதை பத்தியெல்லாம் கவலை படுவது எல்லாம் இல்லை.

20 நாள் முன்ன எதேர்ச்சையா பார்த்த போது 99 பதிவு ஆகியிருந்தது. மனசு ரெக்கை கட்டி பறக்க ஆரப்பிச்சுடுச்சு. எதுக்கும் இருக்கட்டும் என்று எண்ணி பார்த்த போது டிடாப்டில் இருந்தது எல்லாம் கணக்கில் வந்து 99 ஆகியிருந்தது. எல்லாத்தையும் கழிச்சுட்டு பார்த்தா 90 தான் வந்துச்சு. அப்ப ஆரம்பிச்ச ஸ்ட்ரெஸ் எனக்கு இந்த நிமிடம் வரை இருக்குது. நகரவே மாட்டங்குது. சரி எப்போதும் போல நமக்கு 100 என்பது எட்டாமலே போய்விடுமோன்னு ஆகிப்போச்சு.

எப்பவும் எனக்கு ஒரு கெட்ட பழக்கம். திடீர்ன்னு படம் வரைய ஆரம்பிப்பேன். ஜெக ஜோதியா ஓவியக்கலையில் பீக் வரை போயிட்டு திடீர்ன்னு டாட்டா காட்டிட்டு போட்டோ கிராபி பக்கம் போயிடுவேன். அதிலே ஒரு ஸ்டேஜ்க்கு வரும் முன்னமே மிருதங்கத்துக்கு தாவிடுவேன். சரி அதயாவது முழுசா முடிக்கலாம்ன்னு பார்த்தா அங்கிருந்து ஷெட்டில் விளையாட்டுக்கு ஓடிடுவேன். திடீர்ன்னு ஜேஸீஸ், ரோட்டரின்னு பிஸியாகிடுவேன். பின்ன கிளப் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்.

அது போலத்தான் பிளாக்குவதும் ஆகும் என நினைத்தேன். ஆனா முழுசா செஞ்சுரி அடிச்சது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. இந்த ஒரு வருடத்தில் என் நண்பர்கள் எண்ணிக்கை சர்ன்னு உசந்துச்சு. ஏகப்பட்ட சகோதர, சகோதரிகள், அம்மாக்கள், நண்பர்கள் என என்னை அவங்க வீட்டு நபராகவே கருதும் அளவு நான் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு பெருமையா இருக்கின்றது.

அது போல என எழுத்து பிழைகளையும் பொருத்து செல்லமா திட்டி, கோவமா திட்டி என்னை சரி பண்ண முயற்ச்சி பண்ணி தோத்து போன எல்லாருக்கும் சொல்லிக்கறேன் "மாப்பு மாப்பு மாப்பு". கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிகறேன். தப்பை சரி செய்யவே "வடிவேல்"ன்னு ஒரு பையன் வச்சிருந்தேன். மன்மதலீலை படத்திலே மழுங்க மழுங்க சேவ் செஞ்சுகிட்டு முதல் காட்சியில் வரும் கமலின் குமாஸ்தா படத்தின் கடைசி காட்சியில் பெரிய தாடியோட ஆவது மாதிரி ஆயிட்டான் நம்ம வடிவேல் பையன். ஒரு கட்டத்துல அவனால முடியாம "சார் நான் வெக்கேஷன் போறேன்"ன்னு போனவன் திரும்ப வந்தவுடன் பெரிய இடத்து ரெக்கமண்டேஷனோட எனக்கு கண்காணாத தூரத்துக்கு வேற பிராஜக்டுக்கு போயிட்டான். என் சாயலில் யாரையாவது பார்த்தா கூட அவனுக்கு மனசு பட படங்குதாம். கேள்வி பட்டேன். கூடிய சீக்கிரம் எழுத்து பிழை சரியாகிடும், முயற்சி பண்றேன். அதுவும் பாருங்க 90-99 பதிவு வரை ரொம்ப கொடுமை என் பதிவுகளிள் வந்த எழுத்து பிழை.

சாதாரனமாகவே எனக்கு சிரிக்க பேசித்தான், எழுதித்தான் பழக்கம். என்னையும் அறியாமல் யார் மனசாவது நோகும் படி நான் எழுதியிருந்தால் சத்தியமாக மன்னிக்க வேண்டுகிறேன். இந்த 90 முதல் 100 வது பதிவு வரைக்கும் இருந்த அந்த ஸ்ட்ரெஸ் இனி இருக்காது என நினைக்கிறேன். அதனால இனி பழைய அபிஅப்பாவை பார்க்கலாம் என சொல்லிக்கறேன்.

மேலும் ஒரு விஷயம்! நான் சமீப காலமாக சரி வர பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதில்லை என்னும் மனக்குறை எனக்கு ஏகப்பட்டது இருக்கு எனக்கு. காரணம் என் வேலை பளுதான். இரவு மட்டும் தான் தமிழ்மணம் பக்கம் வர முடிகிறது. ஆனால் இனி அந்த குறையும் இல்லாத அளவு நடந்து கொள்கிறேன்.

எனக்கு இந்த அளவுக்கு ஆதரவு தெரிவித்த தெரிவித்து கொண்டிருக்கிற என் தமிழ் மண சொந்தங்களுக்கும், தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள்!

December 12, 2007

பொங்கலுக்கு பின்னே காபி சாப்பிடுவது இப்படித்தான்!!!

பொங்கல் சாப்பிடுவது எப்படின்னா இங்க போய் பாருங்க, பின்ன இத படிக்கலாம்!!

ரெண்டு கவளம் உள்ளே இறக்கியதுமே சொர்கத்திலே இருக்கும் உணர்வு வந்துவிடும். அப்படியே ரிலாக்ஸ்டா தினமணியை புரட்டினால் "பாக். பற்றி லோக்.கில் விவாதம்" "ஆ.பி முதல்வர் ம.பி சென்றார்" "த.நா வில் மி.வா இருளிள் மூழ்கியது"ன்னு பழக்க பட்டவங்களுக்கு மட்டுமே புரியும் படியாக இருக்கும் செய்திகளை படிச்சு கிட்டே குறுக்கும் நெடுக்குமா போய் வந்து கிட்டு இருக்கும் ச்சீனாவை பார்க்காமலே பேப்பரில் கண்ணை ஓட்டிகிட்டே "ச்சீனா ரமாவுக்கு கல்யாணமாமே?"ன்னு கேட்டா அவன் "ஒத்த தெரு ரமாவா, ரெட்ட தெரு ரமாவா?"ன்னு பதிலுக்கு கேப்பான். அதுக்கு நாம் அவனுக்கே குழம்பும் விதத்தில் "ஒத்த தெருவுல ரெட்ட ஜடை போட்டு கிட்டு ஒத்த ரோஜா வச்சுகிட்டு முட்ட கண்ணா இருப்பாளே அவளை கேட்டேன்"ன்னு சொன்னா கடுப்பாகிடுவான். "உனக்கு வேற வேலையே இல்லியா வந்தா வந்த வேலைய பாரு"ன்னு சொல்லிட்டு போவான்.

அப்போ பொங்கல் கிட்டத்தட்ட கடைசி கவளம் வந்திருக்கும். ஆனா அந்த கடைசி கவளத்தை சாப்பிட கூடாது. காரணம் இருக்கு. பின்ன சொல்றேன். "ச்சீனா ஒரு பாத்திரத்துல கொஞ்சம் தண்ணி கொண்டா வெரலை கழுவிக்கிறேன், அப்படியே நம்ம ஹீரோயின கூட்டிகிட்டு வாடா"ன்னு சொல்லிட்டு சுற்றிலும் யாரும் இல்லாமையை உருதி செய்து கொண்டு விரலை சூப்பிட வேண்டியது தான்.

இப்ப தான் நம்ம ஹீரோயின் விஜயம். அதாங்க காளியாகுடி ஸ்பெஷல் ஃபில்டர் காபி!! முதல்ல இந்த தஞ்சாவூர் ஆளுங்களை பார்த்து மத்தவங்க பொறாமை படும் விஷயுமே பில்டர் காபில தான். அவங்க எல்லாம் நெனச்சு கிட்டு இருப்பாங்க தஞ்சாவூர் ஆளுங்க எல்லாம் பில்டர் காபி விஷயம் முத கொண்டு என்னா ஒத்துமைன்னு. ஆனா உள்ளுகுள்ள நடக்குற வெட்டு குத்து எங்களுக்கு தான் தெரியும். தஞ்சாவூர்ல இருந்து மாமா யாராவது வந்துட்டா போதும். பசங்க அவர் காது பட "டேய் தஞ்சாவூர்ல கோமள விலாஸ் காபிதான் நெம்ம பேமஸாம்டா, அந்த கன்றாவிய ஒரு தடவ குடிச்சேன். கழுத மூத்திரம் போல இருந்துச்சுடா பேசாம கோமண விலாஸ்ன்னு பேர் வச்சிருக்கலாம்"ன்னு வாருவானுங்க. அவரும் தஞ்சை குசும்புதானே! பதிலுக்கு "என்ன மாப்ள கழுத மூத்திர டேஸ்ட்டில QA/QC போல இருக்கே"ன்னு பதிலடி கொடுப்பாரு.இதே கும்பகோணம் ஆளுங்க வந்துட்டா “லெஷ்மி விலாஸ் பசும் பால் காபி கிளப்பாம்டா, அதுக்கு ஓனர் பஞ்சாமி அய்யராம்டா, ஹய்யோ ஹய்யோ அது பஞ்சாமி அய்யர் கடை காபி மாதிரியா இருக்கு பஞ்சாபி அய்யர் காபி மாதிரில்ல இருக்கு”ன்னு ரப்சர் பண்ணுவாங்க. அதவிடுங்க, நம்ம காளியாகுடி பில்டர் காபி பத்தி பார்ப்போம்.சாதாரனமா நீங்க பில்ட்டர் எந்த சைஸ்ல பார்த்திருபீங்க...ஒரு சான் அளவிலே தானே.

நம்ம காளியாகுடி பில்டர் எந்த சைஸ்ன்னு சரியா சொல்லனும்ன்னா, கல்யாண வீட்டுல் கல்யாண பொண்ணு கொஞ்சம் குள்ளமா இருந்தா மாப்பிள்ளைகிட்ட போய் பசங்க"என்னடா உனக்கு காளியாகுடி காபி பிடிக்கும் ஒத்துகறோம் அதுக்காக அந்த பில்டரையேவா கட்டிக்கனும்"ன்னு கிண்டலடிப்பாங்க. இப்ப புரிஞ்சுதா பில்டரின் சைஸ். ராத்திரி 9 மணிக்கு 3 கிலோ பீபரி (ஆக்சுவலி அது pure berry)ல கொஞ்சமா சிக்கரி கலந்து பில்டரின் மேல் அடுக்கில் கொட்டி லைட்டா அமுக்கி அதன் மேல் கொதிக்க கொதிக்க தண்ணீர் விட்டு காலையில் பார்த்தா கீழ் அடுக்கில் சூப்பரான டிக்காஷன் ரெடி! சுத்தமான பசும் பால் கொதிக்க வைத்து ஜீனி கம்மியா போட்டு இந்த டிக்காஷனை கலந்து ச்சீனா இதோ கொண்டு வர்ரான்னு நினைக்கிறேன். அவன் வரும் முன்னமே வாசனை வந்துடுச்சு. டபரா செட்ல தான் அதுவும் பித்தளை ஈயம் பூசினது தான். 4 இன்ச் தான் டம்ப்ளர் சைஸ். 4 மொடக்குக்கு தான் வரும் காபி. மேலே கொஞ்சம் நுரை அதை டபராவில் இருக்கும் சொச்ச காபியோடு கலந்து சூடா வாய் கிட்ட கொண்டு போய் வாயால உறுஞ்சும் முன்ன வாசனையை மூக்கால உறுஞ்சி அந்த தம்மாத்தூண்டு டம்ப்ளரை ரெண்டு கையாலும் பிடிச்சுகிட்டு முடிஞ்சா பாம்பாட்டி மாதிரி உக்காந்து கிட்டு ஒரு இழுப்பு இழுத்து பாருங்க "சொர்க்கம் மதுவிலே"ன்னு எழுதின கவிஞர் இப்படி செஞ்சிருந்தா மாத்தி எழுதியிருப்பார்.

இதுல நாம முக்கியமா கவனிக்க வேண்டியது சிலது இருக்கு. பொங்கல் நல்லா இருக்கேன்னு இன்னுமொரு பொங்கல் சாப்பிடக்கூடாது. 9 மணிக்கு மேல நெஞ்சை கரிக்கும். காபி நல்லா இருக்க்கேன்னு இன்னும் ஒன்னு வாங்கி சாப்பிட கூடாது செமத்தையா தூக்கம் வரும்.

இப்போ நாம சாப்பிட்ட பொங்கல்/காபி இது ரெண்டிலும் எது அதிக சுவைன்னு பாலமன் ஆப்பையாவை மனசுக்குள்ள இருத்தி பட்டிமன்றம் நடத்தனும். "நல்லா சொன்னாங்கய்யா ராசா தரப்புல காபி நல்லா இருந்துச்சுன்னு பாரதி சப்புகொட்டி சொன்னாலும் ராஜா புடிச்ச பாயிண்டே தனிதான்யா…ஆஹ இன்னிக்கு விஞ்சி நிற்பது பொங்கல்தான்யா”ன்னு தீர்ப்பு வந்துச்சுன்னா மனசுல டக்குன்னு அந்த கடைசி கவளம் பொங்கலை வாயில போட்டுகிட்டு வேட்டில விரலை தொடச்சிகிட்டு கிளம்பிடனும். தீர்ப்பு காபிக்கு வந்தா “ச்சீனா கொஞ்சம் டிக்காஷனை கொண்டா”’ன்னு கேட்டு வாங்கி வாயில ஊத்திகிட்டு கிளம்பிடனும். அதுக்கு பின்ன 2 மணி நேரத்துக்கு புகையிலை,வெத்தலை,சிகரட் போன்ற லாகிரி வஸ்துகளுக்கு நிச்சயம் விடுமுறை என்பது நிச்சயம்!!!

December 11, 2007

பொங்கல் சாப்பிடுவது எப்படி???

காலை நான்கு மணிக்கே பிரம்ம நேரத்தில் பொங்கல் சாப்பிட ஆயத்தமாகிவிட வேண்டும். ஐந்தேகால் வரை புரண்டு புரண்டு படுத்துகொண்டே சாப்பிட போகும் பொங்கலை பற்றிய நினைவில் சின்னதாய் கனவு காண வேண்டும். ஐந்தேகால் மணிக்கு எழுந்து முகம் மாத்திரம் கழுவி கொண்டு ..கவனிக்கவும் பல் விளக்க கூடாது, வாசலுக்கு வந்து கையை ரெண்டையும் மேலே தூக்கி சிம்ரன் மாதிரி நெட்டி முறித்து விட்டு நடையை கட்ட வேண்டியதுதான் காளியாகுடி ஹோட்டலை நோக்கி. நம்மோடு ரோட்டிலே வரும் நமக்கு தெரிந்த ஆசாமிகளிடம் "என்ன பொங்கலா?"ன்னு கேக்க கூடாது. விவகாரமா பதில் சொல்லுவானுங்க. எதுக்கு காலையிலேயே வாங்கி கட்டிக்கனும். விடிந்தும் விடியாத அந்த காலை நேரத்தில் சின்ன கடைத்தெரு வாழைப்பழ கடையில் ஒரு தினமணி வாங்கி, கும்பகோணம் வெத்தலை சுண்ணாம்பு வச்சி, பன்னீர் புகையிலை, நெய் சீவல் கொண்ட நேர்த்தியாக மடிக்கப்பட்ட பொட்டலத்தை தினமணியின் உள்ளே வைத்து மடக்கி கக்கத்தில் வைத்துக் கொண்டு "இன்னிக்கு என்ன புக் வந்திருக்கு?"ன்னு கேட்டு கடைக்காரன் "குங்குமம்"ன்னு சொன்னா "ஆனந்த விகடனை" வாங்கி சர்ன்னு மூக்கால ஒரு உருஞ்சு அந்த புது வாசனையை(நடுப்பக்கம் தவிர எந்த பக்கத்தை வேண்டுமானாலும் முகர்ந்து பார்க்கவும், இல்லாவிடில் பொங்கல் சாப்பிட போகும் மூட் போய் விட வாய்ப்பு இருக்கிறது) திரும்பவும் இப்போ காளியாகுடி நோக்கி பயணம்.

ரோட்டில் நடக்கும் நேரத்தைகூட வீணடிக்க கூடாது ஆமா அப்படியே ஆ.வியை பிரித்து சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போமை" மெதுவா படிச்சு கிட்டே நடக்கும் போது கால் எதேற்ச்சையா செருப்பை கழட்டும், விரல் தாவங்கட்டையில் டான்ஸ் ஆடும். அப்படின்னா நேஷனல் ஸ்கூல் சரஸ்வதி சிலை வந்தாச்சுன்னு அர்த்தம். அப்படியே கதை சுவாரஸ்யமா படிச்சு கிட்டு வரும் போது நாம் நம்மை அறியாமலே ரோட்டின் நடுவே வந்து கொண்டிருப்போம். அப்போது எவனாவது "வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா"ன்னு கேப்பான். அப்பதான் வாசல் கதவை திறந்து போட்டது ஞாபகம் வரும். அப்படியே நடந்தா இதோ வந்துடுச்சே காளியாகுடி!

அப்போ மணி ஐந்தரை ஆகியிருக்கும், அங்க பார்த்தா காளியாகுடி வாசலில் சென்னையில் இருந்து நாலரை மணிக்கு பஸ்டாண்டு வந்து சேர்ந்த திருவள்ளுவரில் வந்த ஏழரை ராமமூர்த்தியும், கோவை திருவள்ளுவர் கொண்டு வந்து விட்ட கமலா மாமியும் இன்ன பலரும், கொழுப்பு குறைய வாக்கிங் துரத்தி விடப்பட்ட ரிட்டையர்டு தாசில்தார் சுப்புரமணியன் சாரும் நெய் பொங்கலுக்காக விளக்காத பல்லோடு காத்து கிட்டு இருப்பாங்க. இந்த கும்பல் இருப்பதை எதிர்பார்த்தே முனுசிபல் ஸ்கூல் வாசல்லயே தினமணியை கொத்த தெரு அருவாளை பின் இடுப்பில் சொருகி இருப்பது போல சொருகி டி ஷர்ட்டால் மூடிவிடனும். ஆ.வியில் தலையை விட்டு கொண்டு எடுக்க கூடாது.

காளியாகுடியின் கொலாப்ஸ் கேட்டின் உள்ளே பூட்டிகிட்டு ச்சீனா பண்ணும் அலப்பறை தாங்கமுடியாது. மாஞ்சு மாஞ்சு சாம்பிராணி போடுவான். ஒரு வழியா கதவு திறக்கப்பட்ட உடனே "எங்கே நமக்கு பொங்கல் கிடைக்காதோ"ன்னு பாய்ந்து உள்ளே போகும் நபர்கள் கண்டிப்பாக பொண்டாட்டியை சரோஜினி ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு விட்டு விட்டு ராத்திரி தூக்கம் போன பசியில் இருப்பவர்கள் என சுலபமாக புரிஞ்சுக்கனும்.

உள்ளே போன பின் நேரா வாஷ் பேசின்(செராமிக் அல்ல சிமெண்ட்டால் கட்டப்பட்டது) பித்தளை பம்ப்பை திருகிகிட்டே முன்னே போய் ரசம் போன கண்ணாடியில் கீழே ARC விஸ்வநாதன் & கோ ன்னு கோணலா எழுதியிருப்பதை படித்து கொண்டே "ச்சீனா பல்பொடி எங்கே"ன்னு கேட்டு கொண்டே "ஞாயிறு ஷோ ரூம் உண்டு"ன்னு படிச்சு முடிக்கும் போது "காலிகட்" பல் பொடியை கையிலே திணிப்பான் ச்சீனா. வெத்தலை போட்டு வெந்த வாயிலே காலிகட் பல்பொடி பட்டவுடன் எரியுமே அதை ஆராய கூடாது அனுபவிக்கனும்.’’ஏண்டா ஆண்டவா என்னை இத்தன அழகா படச்சே”ன்னு  பின்ன வேஷ்டியால முகத்தை துடைத்து கொண்டே வந்து "இந்த தபாவும் பொம்பள புள்ளயா போச்சு, காப்பி சுமாராவே இருக்கட்டும்"ன்னு சொல்லிகிட்டு பிளாஸ்க்கை நீட்டும் கோயிஞ்சாமியை "கொஞ்சம் தள்ளுப்பா"ன்னு சொல்லிகிட்டே நாம அடுக்களை உள்ளே போயிடனும்.

கரி படிந்த சுவத்துல மஞ்சள் கலந்த சுண்ணாம்பு காளியாகுடியின் ஸ்தாபித வருஷம் 1938 அப்போ அடிச்சது. "தடுக்கு எங்கடா ச்சீனா"ன்னு கேட்டா "நீ நிக்கிறதே தடுக்கு மேல தான்னு எரிஞ்சு விழுவான். அத எல்லாம் கண்டுக்க பிடாது. நம்ம லட்சியம் பொங்கல் மட்டுமே. சம்மணம் போட்டு உக்காருவதை விட "ஃப்ரீயா விடு மாமே"ன்ற ஸ்டைலில் "தைலா"விலே பட்டு புடவை எடுக்க உக்காந்திருக்கும் பெண்களை போல ரிலாக்ஸ்டா உக்காந்து "ச்சீனா, நுனி இலை வேணாம், ஏடு எடுத்து போடுடா"ன்னு குரல் விட்டுகிட்டே "தினமணியை பிரிச்சு நம்ம வீட்டுல சோபாவுக்கு கீழே உக்காந்து கிட்டு படிப்பதை போல படிக்க தொடங்கும் போது " பத்தாள் இடம் உன் ஒருத்தனுக்கேவா"ன்னு ச்சீனா சொறிஞ்சுகிட்டே கொழுந்து வாழை இலை ஏடு போடுவான்.(மீல்ஸ் சாப்பிடதான் நுனி இலை வசதி. பொங்கலுக்கு ஏடு இலை தான் பெஸ்ட். நடுவே எந்த தடங்களும் இல்லாமல் பொங்கல் ஸ்கேட்டிங் விடும் நெய்யில்). ஈயம் பூசின பித்தளை டம்ளரில் தண்ணியோடு அதன் தலையில் நக்குன்னு வைப்பான். இலை ஏற்கனவே கழுவி இருக்கும் அதனால நாம கழுவ வேண்டாம்.

அடுத்து ச்சீனா கொண்டு வருவது கெட்டி சட்னி, கரண்டில அதை அவன் எடுக்கும் அழகே தனி, எடுத்து இலையில் ஓரத்தில் நச்சுன்னு ஒரு தட்டு. அரை உருண்டையா வந்து விழும். பின்ன போயிடுவான். நைசா அந்த சட்னியை எடுத்து நாக்கில் வைக்கும் போதே "காலிகட் பல்பொடியின் எரிச்சலுக்கு தேவாமிர்தமா இருக்கும். அப்போ நம்ம ஹீரோ "பொங்கல்" பற்றிய ஆவல் நம் வேஷ்டியில் ஜொல்லா வழியும். இதோ வந்தாச்சு பொங்கல். வெங்கல குண்டானில் கொட்டாங்குச்சி அகப்பை அது கைப்பிடி மூங்கி சிம்பு. பல வருஷமா அதே அகப்பை போல இருக்கு மோர்காரி அகப்பை மாதிரி அந்த கொட்டாங்குச்சி அப்படி ஒரு வழவழப்பாக இருக்கும். நெய்யோடு பொங்கலை அதில் அள்ளுவதும் தெரியாது அது இலையில் வந்து விழுவதும் தெரியாது. அப்படி ஒரு வாசம் நம்மை சுத்தியும் பரவும்.

பட்டிகாட்டான் முட்டாய் கடை பார்த்த மாதிரி இல்லாம புது பொண்டாட்டிய தொடுவது போல "ஐ லவ் யூ டா செல்லம்"ன்னு மெதுவா பொங்கல் குவியலின் பக்க வாட்டில் விரல் வைத்து கொஞ்சூண்டு இழுத்து, நெய்யிலே அது வழுக்கி கிட்டே வரும் அதை விரலால் எடுக்காமல் கெட்டி சட்னி பக்கமா "தள்ளி"கிட்டு போய் நடு விரலால கொஞ்சம் சட்னியை அதுக்கு ஜோடி சேர்த்து இப்போ மூணே விரல்களை பயன் படுத்தி நாக்கின் மேல் வைத்து ஆஹா ஆஹா ...எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ன்னு பாடிகிட்டே "ச்சீனா வர வர காளியாகுடி பொங்கல் முன்ன மாதிரி இல்லைடா"ன்னு சொல்லனும். அதுக்கு அவன் ஆமா 50 வருஷம் முன்னகூட உங்க தாத்தா இதே இடத்துல உக்காந்து கிட்டு எங்க தாத்தாகிட்ட இதையே தான் சொல்லியிருப்பார்ன்னு சொல்லுவான்.

பின்ன தங்கமணியை வசியம் செய்ய நினைப்பவர்கள் "ச்சீனா ஒரு பார்சேல்ல்ல்ல்"ன்னு குரல் விடலாம்.

குறிப்பு: சென்னையில் உள்ளவர்கள் இந்த பொங்கல் ருசி பார்க்க ஒரு நபருக்கு ஆகும் செலவு ரூபாய் 300!!

திஸ்கி: பதிவின் சைஸ் அதிகமா போனதால் அடுத்து குடிக்க இருக்கும் காபி நேயர்களின் விருப்பத்தை பொருத்து அடுத்த பதிவாக போடப்படும்.

December 6, 2007

டாக்டரம்மாவின் அமரிக்க விஜயம்!!!

எங்கள் பேமிலி டாக்டர்(பாசக்கார குடும்பத்தின்) திருமதி.டெல்ஃபின் விக்டோரியா அவர்கள், நமது இந்திய நடுவன் அரசின் பிரதிநிதியாக நாளை முதல் ஒருமாதகாலம் அமரிக்க விஜயம் செய்கிறார்.

அனேகமாக அணு ஆயுத ஒப்பந்தம் சம்மந்தமாக செல்வார் என நினைத்து நான் தொலை பேசிய போது "அதல்லாம் இல்லப்பா, வர வர நீ தெண்டுல்கர் மாதிரி ஆகிட்ட! அந்த கால கவாஸ்கர் மாதிரி 90 வந்த பின்னே 100 அடிக்க பயந்து கிட்டே பிட்ச்சிலே மாசக்கணக்கிலே பாய் போட்டு படுத்து கிடக்கே! மேட்டர் பஞ்சம்ன்னு பதிவு போடறே, அந்த ஒரே விஷயத்துக்காகவே நான் அமரிக்கா போறேன். வாழ்த்தி எப்படியும் ஒரு பதிவு போடுவ, பின்ன டாக்டரமா போன பிளைட்டிலே தமிழ் படம் போட்டாங்களாம்ன்னு ஒரு பதிவு போடுவே, நடு நடுவே கதிர் தம்பி பொறந்த நாள் வரும் 07/12/07 அன்று. அதுக்கு ஒரு பதிவு போடுவே! இப்படியா 100 வந்தாதான் நீ 101 வது பதிவிலிருந்து பழையபடி பதிவு போடுவ அதனாலத்தான் அமரிக்கா போகிறேன் ஒரு மாதத்துக்கு"ன்னு சொன்னாங்க!

அப்படில்லாம் இல்லிங்க மக்கா! நமக்கா மேட்டர் பஞ்சம்! வாரேன் வாரேன்! ஃப்ரஷ்ஷா! நேரம் இல்லீங்க! டிசம்பர் 2, அமீரக தேசிய தினம் கூட வேலைன்னா பார்த்துகோங்கப்பா!

ஆக, இது நெசமான வாழ்த்து பதிவுன்னு சபைல சொல்லிக்கறேன்! நல்ல படியா போயிட்டு துபாய் வழியா வாங்க டாக்டரம்மா!! வாழ்த்துக்கள்!

திஸ்கி: டாக்டரம்மாவின் அமரிக்க தொலைபேசி எண்,மற்றும் இடம் எல்லாம் "ரகசியம்"ன்னு சொல்லி என் கிட்ட சொல்லியிருக்காங்க என்பது உபரி செய்தி!!