பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 15, 2012

அறிஞர் அண்ணாவும் சிவசேனை பால்தாக்ரேவும்!



அண்ணா அவர்கள் 1968ல்  அமேரிக்க பயணத்தின் போது "யேல்" பல்கலைகழகத்தில் பிரமாதமாக பேசினார், அவரது ஆங்கில புலமை கேட்டு அங்கே வியந்தனர். "Because என்ற சொல்லை ஒரு வாக்கியத்தில் மூன்று முறை தொடர்சியாக வர வழைக்க இயலுமா என கேட்டமைக்கு அண்ணா அவர்கள் ' No sentence begins with because, because, because is a conjuction"  என சொன்னார், என்றெல்லாம் இங்கே சரித்திரம் உள்ளது. ஆனால் அவர் "யேல்" பல்கலை கழகம் போவதற்கு முன்பாகவே ஹவாய் தீவில் கலந்து கொண்ட ஒரு பல்கலைகழகத்தில் அவரை நோண்டி நொங்கு எடுத்து விட்ட விஷயம் உங்களுக்கு தெரியுமா?

அறிஞர் அண்ணா அவர்கள் அமேரிக்கா சென்ற போது ஹவாய் பல்கலைகழக கிழக்கு மேற்கு அமைப்பின் சார்பில் ( east west center) அளிக்கப்பட்ட வரவேற்பின் போது இந்திய மாணவர்களின் (கவனிக்க தமிழக மாணவர்கள் இல்லை இந்திய மாணவர்கள்) கேள்விக்கு அளித்த பதிள்களின் தமிழாக்கம் இவைகள்!

கேள்வி: அமேரிக்காவை சுற்றி ப்பார்த்த போது உங்கள் மனதில் தோன்றும் முதல் எண்ணம் என்ன?

அண்ணா: இந்த நாட்டில் இயற்கை தந்திருக்கும் செல்வம் மட்டும் அல்ல, மனிதர்கள் தங்கள் முயற்சியினால் பல்வேறுவிதமான ஆற்றல்களினால் அடைந்த முன்னேற்றமும் அவர்களுடைய வெற்றியும் என் உள்ளத்தை தொடும் முதல் எண்ணம் ஆகும்.

கேள்வி: இந்திய ஜனநாயகத்தின் தலைவிதி என்ன?

அண்ணா: இந்தியர்கள் எப்போதும் தலைவிதியையே சரணடைகின்றனர். ஆனால் இந்திய ஜனநாயகம் பற்றி பேசுகையில் தலைவிதி என்னும் சொல்லை நீங்கள் பயன் படுத்துவது சரியில்லை என நான் கருதுகிறேன். இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஒரு விதமான அபாயமும் கிடையாது. ஏனனில் நம்முடைய பண்பாடு ஜனநாயக பண்பாடு ஆகும். இப்பண்பாட்டால் நம் அன்றாட வாழக்கையில் கூட ஜனநாயகம் இருக்கின்றது என சொல்லலாம். இந்தியா தான் உலகிலேயே மிகப்பெரிய, புதிய மற்றும் ஏழ்மையான ஜனநாயக நாடு. இருந்த போதிலும் நான்கு பெரிய தேர்தல்களை வெற்றிக்கரமாக நடத்தி இருக்கிறோம். இந்தியாவை பற்றி அறிந்துள்ள பல மேநாட்டார்  தேர்தல் சமயத்தில் பயங்கர போராட்டங்களும் புரட்சிகளும், ரத்தம் சிந்துதலும் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் ஆங்காங்கே சில மோதல்கள் இருந்த போதிலும் நான்கு தேர்தலில்களிலும் ஏற்பட்ட எல்லா சேதங்களையும் கூட்டிப்பார்த்தால் அமேரிக்காவில் ஒரு வருடத்தில் உண்டாகும் விடுமுறை விபத்துகளை விட மிகக்குறைவாக உள்ளன. ஜன நாயகத்தை கையாள்வதில் நமக்குள்ள ஆற்றல் பற்றி தவறான அபிப்ராயம் கொண்டு விடவும் வேணடாம். ஜனநாயம் பற்றி மெத்தனமாகவும் இருந்து விட வேண்டாம்.

கேள்வி: நீங்கள் இது வரை நடந்த 4 தேர்தல்களும் வெற்றியாக முடிந்ததாக சொன்னீர்கள், அது வெற்றிகரமாகவும் திட்டமிடப்பட்டும் முன் யோசனையோடும், ஒழுங்காக நடந்ததாக எண்ணுகிறீர்களா? முக்கியமாக காஷ்மீரில் நடந்த தேர்தலை பற்றி பல்தரப்பட்ட பேச்சுகள் இருந்தன. மேலும் 1967க்கு முன் நடந்த  3 தேர்தல்களும் ஒழுங்காக நடக்கவில்லை என்று நாம் எண்ண எல்லா காரணங்களும் இருக்கே அய்யா?

அண்ணா: தேர்தல்கள் நாணயம் இல்லாமல் இருக்கின்றன என்னும் குற்றச்சாட்டு எல்லா நாடுகளிலும் எல்லா பகுதிகளிலும் இருக்க கூடிய குற்றச்சாட்டு தான். முதல் 2 தேர்தல்களிலும் நாணயம் சற்று குறைவாக இருந்தது உண்மையாக இருக்கலாம். ஆனாலும் நாணயமற்ற முறைகள் அல்லது வேறு விதமான குறைகளை பார்த்த வரையில் மனிதர் குணம் இருக்கிற நிலையில் நிச்சயமாக எல்லா நாட்டிலும் எல்லா தேர்தல்களிலும் ஏதோ ஒரு நாணயமின்மை இருக்கத்தான் செய்யும்.இந்த பயங்கரத்தை பொறுத்த வரையில் நம் நாட்டு தேர்தலில் ஆங்காங்கே நாணயம் அற்ற நடப்புகள் இருப்பினும் பொதுத்தேர்தல் என்னும் கண்டத்தின் வழியே நான்கு முறை வெற்றிகரமாக வெளி வந்து விட்டோம். அதே சமயம் பல நாடுகளில் தேர்தல் நடுவில் நிறுத்தப்பட்டும் , முழுவதுமாக கைவிடப்பட்டும் , தடைபடுத்தப்பட்டும் போயுள்ளன. மேலும் நம்மோடுஜனநாயக ஆட்சியை தொடங்கிய பல நாடுகள் கடைசியில் ராணுவ ஆட்சியிலோ, அடிப்படை ஜனநாயகத்திலோ, அல்லது வழி நடத்தி செல்லும் ஜனநாயகம் என்னும் ஜனநாயகத்திலோ வந்து சரணடைந்து விட்டன.

கேள்வி: சென்னை மாநிலம் ,மும்மொழி திட்டத்தை விட்டு விட்டு இரு மொழி திட்டத்துக்கு போய்விட்டது அல்லவா? வருகின்ற வருடங்களில் இதே கொள்கையை கடைபிடுப்பீர்களா? அல்லது மும்மொழி திட்டம் ஏற்க்கப்படுமா?

அண்ணா: நீங்கள் , மும்மொழியை விரும்புகிறீர்களா அல்லது இரு மொழியை விரும்புகிறீர்களா என்று விவரித்த பின்னர் இந்த கேள்வியை கேளுங்கள் என நான் கூறுவேன். (சிரிப்பு) மும்மொழி திட்டத்தின் பின்னால் ஒரு சரித்திரமே இருக்கின்றது. மும்மொழி திட்டம் பல மாவட்டங்களிலேயே சமரச திட்டங்களாக பல வருடங்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இந்திய நாட்டை ஒற்றுமையாக நிலைக்கச்செய்ய எல்லா மாநிலங்களும் மூன்று மொழிகள் கொண்டு இருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அவற்றில் ஒன்று மாநில மொழியாகவும், இரண்டு ஆங்கிலம், மூன்று அவர்கள் தேசிய மொழி என கருதிய அவர்கள் சொன்ன ஒரு மொழி. நான் அச்சமயம் எதிர்கட்சியில் இருந்தேன். அதை நான் எதிர்த்தேன். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி  மும்மொழி திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. அந்த திட்டம் எல்லா மாநிலத்துக்கும் செய்யப்பட்டது. நல்ல ஜனநாயக பிரதிநிதியாக நான் முதலில் அதை எதிர்த்த போதிலும் அது அமலுக்கு வந்த பின் இடையில் நுழைத்து தொல்லை தவில்லை. திட்டம் நடக்க ஆரம்பித்து விட்டது. அதை நான் கெடுக்க விரும்ப வில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னும் ஆறு மாதம் அது இருந்தது. சென்னை மாநிலம் மும்மொழி திட்டத்தில் மிகவும் உண்மையாக ஊக்கமாக இருந்தது. ஆனால் மற்ற மாநிலங்களுக்கும் இந்த சமரச திட்டத்தை ஒத்துக்கொண்டு ஒரு தரப்பாக இருந்த வட மாநிலங்கள் இந்த திட்டத்தை அமல் செய்வதில் உண்மையாக இல்லை. சிலர் அவர்கள் தென்னிந்திய மொழிகள் எதையும் படிக்க அவசியம் இல்லை என கூறிவிட்டனர்.

ஒரு மாநிலம், ஆங்கில கூட தேவை இல்லை என கூறிவிட்டது. அவர்கள் மாநில மொழியே போதும் என சொன்னார்கள். ஆகவே மும்மொழி திட்டம் பல மாநில ஊக்கத்தோடும் நம்பிக்கையோடும் அமல்படுத்தவில்லை. பாராளுமன்றத்தில் புது மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் வட இந்திய மாநிலங்கள் மும்மொழி திட்டத்தை அவமதிப்பதை உணந்தாலும் என் மாநிலத்தில் தமிழும் ஆங்கிலமும் இரு மொழி திட்டத்தை கொண்டு வந்தேன். இரு மொழி திட்டத்தை மாற்ற வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள் என்றால் ஆட்சியையும் மக்கள் மாற்றுவார்கள். ஆனால் நான் ஆட்சியில் இருக்கும் வரை இரு மொழி திட்டத்தை மாற்றுவதாக இல்லை, மும்மொழிக்கு போவதாகவும் இல்லை (செம கைதட்டல்)

கேள்வி: கல்லூரிகளில் கூட மாநில மொழியை பாட மொழியாக மாற்றுவதாக கேள்விப்படும் போது சில சமயங்களில் அது நல்லதாக படுகின்றது. பொதுவாக நம் மொழியில் நாம் படிப்பது நல்லது தான். ஆனால் எல்லா விஞ்ஞான படிப்புகளையும் அப்படி செய்ய முடியுமா? ஜப்பானில் அது நடந்துள்ளது. அப்படியாக தமிழில் விஞ்ஞானத்தை மொழி பெயர்த்து "தொழில் நுட்ப கல்விகளை: செய்யும் உத்தேசம் உள்ளதா?

அண்ணா: நீங்கள் ஜப்பானை பற்றி சொல்லும் போதே அதில் பாதி பதில் அடங்கி விட்டது. ஆனால் நான் அதில் இருந்து பதில் உண்டாக்க போவதில்லை. தமிழ்நாடு பொறுத்த வரை தொழில்கல்விகளாகிய மருத்துவம், பொறியியல், இயந்திர நுணுக்கவியல் ஆகியவற்றில் இன்னும் தமிழை பாட மொழி ஆக்கப்படவில்லை. கலைக்கல்வியில் மட்டுமே இதுவரை ஆக்கியுள்ளோம். விரைவில் எல்லாமும் வரும். மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் அவை பயிற்றுவிக்கப்படும். ஜப்பானில் உள்ளது போல எல்லாமே மொழியாக்கம் செய்விக்கப்பட்டு பொறியியல் முதல் எல்லாம் தமிழில் வரும். ஆனால் ஆங்கில இரண்டாம் மொழியாக இருக்கும். திமுக ஆட்சி இதைநீண்ட கால திட்டமாக செய்யும்.

கேள்வி: இந்தியாவில் இப்போது இருக்கும் பல முக்கிய பிரச்சனைகளை விட தேசிய மொழி பிரச்சனை முக்கியமானது என்று நீங்கள் நினைக்கிற்களா?

அண்ணா: என் நல்ல காலம் உங்கள் கேவியிலேயே பதிலும் உள்ளது. நீங்கள் கேட்பது போல பல மிக முக்கிய பிரச்சனைகள் இருக்கையில் நாம் முதலில் அவற்றை முடித்து விட்டு பின்னர் மொழியை பற்றி சிந்திக்கலாம்.

கேள்வி: சென்னையில் உங்கள் திமுக அடைந்த வெற்றி போல மற்ற மாநிலங்களில் வேறு கட்சிகள் வலிமை அடைய வாய்ப்பு உள்ளதா? பஞ்சாப், மகாராஷ்ட்டிரா ஆகிய இடங்களில் "சிவசேனை" என்னும் கட்சி வெற்றி அடையுமா?

அண்ணா: திமுகவின் வெற்றியைப்பற்றி எண்ணும் போது அதன் சரித்திரமும் சேர்த்து பார்க்க வேண்டும். நாங்க 1949ல் கட்சி ஆரம்பிச்சோம். அதன் பின்னர் பல தேர்தல்ல நிக்கவே இல்லை. மிகுந்த யோசனைக்கு பின்ன கட்சிக்குள்ள கேட்டுகிட்டு ஆலோசிச்சுகிட்டு பின்ன 1957ல் நின்னோம். முதல்ல 15 சட்டப்பேரவை இடம் மட்டுமே கிடைச்சுது. நாடாளுமன்றத்துக்கு இரண்டு இடம் மட்டுமே கிடைச்சுது. அடுத்த தடவை 50 சட்ட மன்ற உறுப்பினர்களும், எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கொடுத்தாங்க மக்கள். பின்ன நாங்க 1967ல் நின்ன போது நாங்க 134 சட்ட மன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்துக்கு 25 உறுப்பினர்களும் பெற்றோம் என்றால் ஒரே இரவில் நிகழ்ந்த சாதனை இல்லை இது. ஏதோ ஒரு தலைவன் ஒரே இரவில் தன் மனமாச்சர்யங்களுகாக கட்சி ஆரம்பிச்சா ஆரம்பத்தில் பிரகாசமா இருப்பது போல தெரிந்தாலும் நாளடைவில் நிற்காது. இதை சிவசேனை போன்ற கட்சிகளுக்கு சொல்கிறேன். அவங்க நல்லது செஞ்சா நல்லது நடக்கும். அத்தனையே! ஆனால் சிவசேனை வளர்கிறது. அதற்கு காங்கிரசும் அதன் ஆட்சி செயல்பாடுகளும் கூட காரணமாக இருக்கலாம்.

கேள்வி: இளைஞர் பலருக்கு நீங்கள் முதன் முதலில் திமுகவில் இளமை நாட்களில் கொண்டிருந்த பல கொள்கைகளை கைவிட்டு விட்டதாகவும் இப்போது நீங்கள் கொண்டுள்ள கருத்துகள் புரியாத புதிராகவும் காணல் நீராகவும் தோன்றுகின்றன. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

அண்ணா: உங்களை ஒன்று கேட்கிறேன்! நான் பிரிவினை பற்றி பேசியபோது 50 இடங்கள் மட்டுமே தந்து விட்டு நான் பிரிவினை கொள்கையை விட்ட பின்னர் 134 இடங்கள் தருகின்றனர் மக்கள். இதை எண்ணும் போது அவர்கள் என் மீது கோவம் கொண்டது போல் தெரிகின்றதா? நிச்சயம் இல்லை. நீங்கள் அதற்கு என்ன விளக்கம் தர முடியும்?

கேள்வி: தேசிய நிலையில் வட இந்திய , தென்னிந்தியா பற்றி உங்கள் கருத்துகளையும் மாநில அளவில் சென்னையில் பிரமண அல்லாதோர் பற்றி உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன் அய்யா?

அண்ணா: சென்னையை பொறுத்த வரை பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் பிரச்சனை இறந்தொழிந்து விட்டது. நீங்கள் இங்கே எத்தனை ஆண்டுகளாக இருக்கின்றீர்?

கேள்வி: திமுக தேசிய பிரபல்யம் அடைந்து நீங்கள் பிரதம மந்திரி ஆனால் நீங்கள் என்னன்ன முயற்சிகள் எடுத்து கொல்வீர்கள்?

அண்ணா: உங்கள் கேள்வி எனக்கு ஒரு மயக்குறு கேள்வியாக உள்ளது. இப்படி மனதை மயக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை விட அவற்றை பற்றி சிந்திப்பதில் நேரம் செல்விடுவது நேர விரயத்தை தடுக்கும் செயலாகும்.

கேள்வி: மொழிப்பிரச்சனை  பற்றி இன்னும் ஒரு கேள்வி, போன வருடம் எழுந்த மொழிக்கலவரங்கள் மக்களிம் மொழி பற்றிய உள்ளார்ந்த உணர்வால் எழுந்ததா? அல்லது வெறும் சாக்கா? அவர்கள் பட்டினியின் கோவத்தை வெளிப்படுத்த எழுந்ததா?

அண்ணா: 1965 ல் உண்டான மொழிக்கலவரம் பற்றிய கேள்வியாகும் இது என நினைக்கிறேன்.

கேள்வி: ஆமாம்!

அண்ணா: அது நிச்சயமாக மொழி தீர்மானத்தை எதிர்த்து மாணவர்களால் தொடங்கப்பட்டதாகும். பிறகு அந்த கிளர்சியில் மற்ற வெளியாட்கள் சேர்ந்து பழைய கோவங்களுக்கு பழி தீர்த்து கொண்டனர். ஆனால் அதை ஆரம்பித்த மாணவர்கள் உண்மையாகவே நாடாளுமன்றத்து மொழி தீர்மானம் தம்முடைய எதிர்காலத்தை கெடுக்க கூடியதாக இருப்பதை உணர்ந்து கிளர்ந்து எழுத்தனர். எந்த கட்சியும் அவர்களை தூண்டி விடவில்லை. ஆனால் அதில் பெரும்பான்மையான மாணவர்கள் "மாணவர் திமுக" அணியினர் "என்பதால் இப்படி ஒரு பெயராகி போனது.

கேள்வி: சிறிது நேரத்துக்கு முன் கருத்துகளை கூறுவதை விட செயல்முறையில் காட்டுவது அதிக நம்பிக்கை என கூறினீர்கள். ஆட்சிக்கு வரும் முன் கொண்டிருந்த கருத்துகளில் மறைவாக கொண்டிருந்த கொள்கைகளில் எவற்றை எல்லாம் செய்து காட்டினீர்கள்?

அண்ணா: முதலிலே கருத்துகளை கூறுவதாக இல்லை என்று நான் சொன்னால் "மறைவு" என்ற வார்த்தையை நீங்கள் உபயோகிக்க அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன்.

கேள்வி: மன்னிக்கவும், திருத்தத்தை ஒப்புக்கொள்கிறேன்!

அண்ணா:நான் உங்களை ஒன்று கேட்கிறேன். என் கருத்துகளை எல்லாம் செயல் படுத்த ஓர் ஆண்டு போதுமா?

கேள்வி: போதாது. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் சிறிதளவவது செயல்பட்டுள்ளீர்களா?

அண்ணா: உங்களுக்கும் அது பற்றி தெரிவிக்க வேண்டுமே! விளைச்சலை அதிகம் ஆக்கியுள்ளோம், காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி கைவிடப்பட்ட ரேசன் முறையை மீண்டும் ஆரம்பித்து உள்ளோம், விலவாசியை குறைத்து இருக்கின்றோம். ஒரே ஆண்டில் இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்க இயலும்?

கேள்வி: நான் கேட்பது அமேரிக்க நண்பர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்கு தான். இங்கு வரும் செய்திகள் அதிகள் இல்லை.

அண்ணா: கேள்வியாக நான் கேட்பது உங்களுக்கு சவால் விட அல்ல. ஆங்கில மொழி வாங்கியங்கள் கேள்வியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது அல்லவா..

கேள்வி: நீங்கள் இங்கே வந்திருப்பது அரசியல்  காரணம் மட்டும் அல்லாது சென்னையில் ஏதோ தொழிற்சாலை தொடங்க பேச்சுகள் நடத்த வந்திருப்பதாக இங்கே பத்திரிக்கையில் பார்த்தோம்.

அண்ணா: ஆமாம் , ஜெனரல் மோட்டார் கம்பெனியுடன் இந்திய கம்பெனி ஒன்று கூட்டு சேர்ந்து சென்னையில் விவசாய கருவிகள் செய்யும் தொழிற்சாலை உணடாக்க எண்ணி இருந்தனர். இங்கே வரும் போது ஜெனரல் மோட்டார் கம்பனியின் நிர்வாகிகளை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கூட்டு சேர இருந்த இந்திய கம்பனி மோசடி முத்திரையை வாங்கி விட்டதால் வேறு ஒரு கம்பனி முன்வரும் வரை இங்குள்ள கம்பனியாரை சந்திப்பதில் பொருத்தம் இல்லை. அதனால் நான் அவர்களை சந்திக்கவில்லை.

*******************

அண்ணா! எம் தீர்க்கதரிசி அண்ணா! உனக்கு இன்று வயது 104! உன் புகழ் இன்னும் பல நூறு ஆண்டுகள் கடந்தும் நிற்கும் அண்ணா! எம் அண்ணா!


குறிப்பு: "அறிஞர் அண்ணாவும் அமேரிக்க பேட்டியும்" என தலைப்பு வச்சா எவன் வருவான் கட்சிகாரனை  தவிர! ஒரு பேமஸ் கூட நொட்டோரியசை சேர்த்து கொண்டால் ஆஹ்ஃகா... கூட்டு பிரமாதமா இருக்கும் என்பதால் மட்டுமே இந்த தலைப்பு!


September 14, 2012

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களே! கொஞ்சம் இதை படித்து பாருங்கள்!



கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே என நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு என்னை வசை பாடி மகிழ்ந்தீர்களே, இதோ 19.9.2012 தேதியிட்டு இன்று வந்த "சோ" வை ஆசிரியராக கொண்ட "துக்ளக்" பத்திரிக்கையில் "இலங்கை பிரச்சனை" என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சில பகுதிகளை பாருங்கள்.  "சோ" அவர்கள் "ஜெ" அவர்களின் ஆஸ்தான குருநாதர் ஆவார் என்பதும் உங்களுக்கு தெரியும்.

ஆனாலும் உங்களுக்கு வசைபாட வசதியாக "கலைஞர்"தான் கிடைப்பார். இதற்கு மேலும் நீங்கள் கலைஞரை மட்டுமே வசை பாடினால் இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் தான் உண்மை என்ற நிலைக்கு தமிழக "பொதுமக்கள்"  வர வேண்டி இருக்கும் என்பதை உணருங்கள். இதற்கு மேல் உங்கள் விருப்பம்.


இதோ அந்த "துக்ளக்" கட்டுரையின் சில ... மிகச்சில குறிப்புகள்.



**************************


1. விடுதலைப்புலிகளின் தூண்டுதலினால் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகளை சுமர்த்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நின்று, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச தமிழ் மக்கள் அமைதி முயற்சியை முறியடித்தனர்.

2. இந்திராகாந்தியால் ஆயுத உதவியும் ராணுவ பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கை தமிழர்களுக்கு நல்ல தீர்வை தடுத்தது மட்டும் இன்றி இந்திராவின் மகனை கொன்றனர்.

3. இந்திய உதவி இல்லாமல் வளந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து சிங்களர்களை சகோதரர்களாக கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெளியேற சொல்லியது. அந்த கூட்டம் இலங்கையில் இருந்த தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்றது. அப்பாவி தமிழர்களை எல்லாம் கொன்றது. இறுதியில் தானும் அழிந்தது. அழிந்த அந்த கூட்டத்துக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் நடக்கின்றன.

4.பல வருடங்களாக நடந்து வந்த புலி- அரசு மோதல்கள் போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறி விட்ட இலங்கை தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்வதை விரும்பவில்லை.

5.நம் நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற பின் அங்கிருந்து இங்கு வந்த அகதிகள் திரும்பி செல்ல வேண்டும் என்று கோருவது போல சில நாடுகளில் குரல்கள் எழலாம். உங்கள் நாட்டில் நீங்கள் பட்ட அவதியின் காரணமாக இங்கு வந்தீர்கள். இப்போது உங்கள் நாட்டில் தான் அமைதி திரும்பி விட்டதே. ஆகையால் நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்று சில நாடுகளில் சில அமைப்புகள் கூற தொடங்கலாம்.

6.இதை விட முக்கியமாக இப்போது ஈழம் பெற வேண்டிய போர்.. அதற்கான ஆயுதம் செய்ய நிதி தேவை என்று இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால் அவர்களுக்கு நிதி தேவை என்று, அல்லது இது மாதிரி வேறு காரணங்கள் கூறி அயல் நாடுகள் சிலவற்றில் இலங்கை தமிழ் முக்கியஸ்தர்கள் பண வேட்டை நடத்துகின்றனர். இது மிரட்டல் மூலமாகவும் நடக்கின்றது. பணத்துக்கு பணம். ஆதிக்கத்துக்கு ஆதிக்கம்.இது தொடர வேண்டும் எனில் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக யாரும் ஒப்புக்கொள்ள கூடாது. ஆகையினால் இலங்கையில் இன்றும் தமிழர்கள் வேட்டையாடப்படுகின்றார்கள் என்று அயல் நாட்டு அமைப்புகள் முன் காட்ட அயல்நாடுகளுக்கு சென்று ஆதிக்கம் புரிந்து வசதியாக வாழகின்ற இலங்கை தமிழர்கள் முயல்கிறார்கள்.

7. இந்த ஈழ பிசினஸ் தொடங்குவதற்காக அவர்கள் வசூல் செய்யும் நிதியில் ஒரு பங்கு இதற்கான பிரச்சாரத்துக்காக செலவிடப்படுகின்றது. அந்த நிதி எங்கெங்கோ செலவிடப்படுகின்றது. யார் யாருக்கோ பிரச்சார சம்பளம் தரப்படுகின்றது என்பது எல்லாம் இலங்கை அரசு ஆராய வேண்டிய விஷயங்கள். இப்படி நடக்கிற பிரச்சாரத்தின் காரணமாக இன்றும் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை நாம் நம்பி விடக்கூடாது.

8. உலகத்திலேயே சப்மரைன் முதல் விமானம் வரை சேர்த்து வைத்து இருந்த, தன் மக்களையே கேடையமாக வைத்து இருந்த, சிறுவர்களை முன்னிருத்தி பலிகடா ஆக்கிய , தமிழ் தலைவர்களை கொன்று போட்ட ஒரு கொலைகார கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது இலங்கை அரசுக்கு.அதை எதிர்கொண்டு அந்த கும்பலை அரசு ஒடுக்கியது என்பது பாராட்டத்தக்க ஒரு சாதனையாகும். அந்த மாதிரி ஒரு வெறிச்செயலை இலங்கை அரசு எதிர்கொண்ட போது பல சிவிலியன்கள் உயிர் இழக்க நேரிட்டது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் தான் எனினும் சிவிலியன்களை கேடயமாக புலிகள் பயன் படுத்திய போது, ஆஸ்பத்திரிகளில் புலிகள் பதுங்கி தங்கள் தாக்குதலை நடத்திய போது ராணுவத்தின் எதிர் தாக்குதலில் சிவிலியன்கள் உயிரிழப்பு என்பது சகஜம் தானே! இதற்கு எல்லாம் புலிகள் தானே காரணம்!

9. தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அல்ல.. பல்லாயிரக்கணக்கான அளவு கன்னி வெடிகள் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை நீக்கி விட்டு தான் குடியேற்றம் நடத்த வேண்டும். இதனால் ஏற்படும் தாமதத்துக்கு இலங்கை அரசா பொறுப்பு???

10. ஐ நா சபையில் இலங்கைக்கு எதிராக வந்த ஒரு தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்தது ஒரு மாபெரும் தவறு. அந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இருந்தால் இரு நாடுகளின் உறவு வலுப்பெற அது உதவி இருக்கும்.


****************

இதன் பின்னரும் நீங்கள் கலைஞரை மட்டுமே வசை பாடுவேன், திமுகவினரை தான் குறி வைத்து தாக்குவேன் என்று கூறினால்... உங்கள் தலையெழுத்து யாராலும் மாற்ற இயலாத நிலை தான் என்பதை உணருங்கள்!



September 7, 2012

அய்யா ஒரு பீஃப் பிரியாணி ப்ளீஸ்....

"அய்யா ஒரு முரசொலி கொடுங்க" என ஆரம்பித்தது என் இன்றைய பொழுது!
திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் அதிஷ்டானம் வரை வாக்கிங் போய் திரும்பி
வந்தால் அந்த கடை திறந்து இருக்கும். ஒரு கிழவன் , கிழவி... கடையின் மீது
"எம் ஜி ஆர் அவர்கள் கொடுத்த நன்கொடை இந்த கடை" என போட்டிருக்கும்.
முரசொலியை வாங்கி முதுகில் பனியனுக்குள் வைத்து கொண்டேன். (கிட்ட தட்ட
எங்க ஊர்ல அரிவாள் ஸ்டாண்ட் போல)

என்னவோ நியாபகம் வர "அய்யா ஒரு 'அவள் விகடன்' கொடுங்க என கேட்க அதே
நேரத்தில் ஒருவர் அதே போல கேட்க ... கடைக்கார அய்யா குழம்பி விட்டார்.
"இங்க ஒரு அவள் விகடன் ஒன்னு தான் சார் இருக்கு" என சொல்ல நான் "அவர்
கிட்டயே கொடுங்க" என விலகினேன்.

"மருந்தீஸ்வரர் கோவில் கிட்டே கூப்பிடு தூரம் சார், அருமையான பிளாட்
சார்.. பக்கத்தில் டி பி ஆஸ்பத்திரி இருக்கு சார் ( அட பாவமே என்னய
பார்த்து ஏண்டா இது போல சொல்ற) வெயில்னா அங்க இருப்பவங்க "இன்னா"ன்னு
கேட்பாங்க சார், சும்மா பதினேழு லட்சம் தான்  சார்) . அந்த மருந்தீஸ்வரரை
பார்த்திடலாம் இன்னிக்கு என நினைத்துக்கொண்டேன்.

எல்லா நியாபகங்களும் வர நடந்தேன். சரி இரண்டு நாளா இருமல் அதிகமா இருக்கே
என கோவில் பக்கம் போக நினைத்த போது அந்த "அவள் விகடன்" தோளை தொட்டார்.

"சார் ரொம்ப தேங்ஸ். என் ஆத்துக்காரி அவள் விகடன் இல்லைன்னா செத்துடுவா.
காப்பாத்திட்டிங்க"

"எங்க சார், கோவிலுக்கா? நானும் அங்க தான் இருங்க செருப்பு போட்டுட்டு வர்ரேன்"

"சார் இதான் வன்னி மரம். என் பொண்ணுக்கு கடி ஜோக் போட்டி வச்சா சங்கரா
ஸ்கூல்ல . அவ தான் பஷ்ட். என்னா கடின்னா "ராமதாஸ்க்கு பிடிச்ச மரம் எது?
ஹி ஹி ஹி அதான் வன்னி மரம்"ன்னு சொன்னேன். அவ தான் சார் பஷ்ட் வந்தா கடி
ஜோக்ல. அப்படின்னா இந்த கோவில் என்ன ஒரு கிரியேட்டிவிட்டி கொடுக்கும்
கோவில்னு பார்த்துகுங்க"

"சார் , இங்க கோவில்ல ரொம்ப அநியாயம் சார். தக்கினூண்டு புளியோதரை 5
ரூவா. கொஞ்சம் வெயிட் பண்ணினா அவாளே கோவில்ல கொடுப்பா. ரொம்ப பிராமாதமா
இருக்கும்"

"சார், முதல்ல கணபதி கிட்டே வேண்டிகுங்க. இந்த கணபதி கடன் தீர்க்கும்
கணபதி. நான் பிளாட் வாங்கின போது லோன் கிடைக்கனும்னு இந்த கணபதிட்ட
வேண்டிகிட்டே இருந்தப்ப எல் ஐ சில இருந்து போன். லோன் சாங்கஷன்"

"சார் இந்த திரிபுரசுந்தரி இருக்காளே, பவர் புல்... இவ கிட்ட
வேண்டிகிட்டா நடக்காததும் நடக்கும்" அப்போது ஒரு மாற்று திறனாளி தவழ்ந்து
வந்து வேண்டிகிட்டாரு. அவருக்கு வழி விட்டோம்.

பின்ன மருந்தீஸ்வரர் சன்னதிக்கு வந்த போது அவர் 'சார் இவர் சுயம்பு. இவர்
கிட்டே வேண்டிகிட்டவன் எவனும் கெட்டு போனதா சரித்திரம் இல்லை.." என
சொல்லி கிட்டே அய்யருக்கு ஒரு இருபது ரூபாய் போட்டார். அவரும் இவருக்கு
சின்ன பூ மாலை போட்டு பதில் மரியாதை செய்தார். என் கிட்டே சில்லரை இல்லை
இரு 100 ரூபாய் நோட்டும் இரண்டு ரூபாய் காசும், ஒரு ரூபாய் காசும்
இருந்துச்சு. அனேகமாக செருப்பு கடைக்கு சில்லரை காசு தேவைப்படும். பாவம்
அவங்க கிட்டே 100 ரூபாய் நோட்டுக்கு மீதி இருக்காது என நினைத்தேன்.
ஆனாலும் சில்லரை காசு எடுத்து போடும் போது அவர் தடுத்தார். "சார் மானம்
போகுது. நோட்டா இருந்தா  தட்சனை கொடுக்கலாம். சில்லரை எல்லாம் தப்பு
சார். அவர் என்னமா மந்தரம் சொல்றார். அவருக்கு தட்சனை கொடுக்காட்டி கூட
பரவாயில்லை. ஆனா அவமானப்படுத்தக்கூடாது சார்.இவருக்கு கொடுத்தா டைரக்டா
ஈஸ்வரனுக்கு கொடுத்தது போல. ஈஸ்வரனுக்கு கொடுத்தா அவர் மக்களுக்கு
திருப்பி கொடுப்பார்" என்றார். எனக்கு மனதில் வேற கணக்கு ஓடியது. அவர்
சொல்வது சரிதான். இருக்கும் 100 ரூபாயை டாஸ்மாக் என்னும் குருக்கள்
கிட்டே கொடுத்தா அது அரசாங்கம் என்னும் ஈஸ்வரன் கிட்டே போகும். அதை வச்சு
அரசாங்கம் மக்களுக்கு நன்மை செய்யும். அடடே... ஆரம்ப காலம் முதலே
இருக்கும் கணக்கு தானா இது நினைத்து டாஸ்மாக் குருக்கள் கிட்டே சாயரட்சை
பூசைல கொடுக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.

பின்னர் அப்படியே வெளியே வரும் போது பசு மாட்டு தொழுவம் இருந்தது. இவர்
போய் கும்பிட்டார். கும்பிட்டார். கும்பிட்டு கிட்டே இருந்தார். ஓடி
என்னிடம் வந்து "சார் பசுவுக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுத்தா நாம இது வரை
செஞ்ச பாவம் எல்லாம் போய்டும் சார். கொஞ்சம் இருங்க, நான் போய்  வெளியே
புல் விற்கும், வாங்கிட்டு வர்ரேன், உங்களுக்காகவும் ஒரு கட்டு வாங்கி
வர்றேன். காசெல்லாம் கொடுக்க வேண்டாம்" என சொன்ன போது நான் "இல்லீங்க..
எனக்கு வேண்டாம். நான் இதுவரை பாவம் எதும் செய்யலிங்க" என சொன்ன போது...
"சார் செம காமடியா பேசுறீங்க கொஞ்சம் இருங்க" என சொல்லி விட்டு வெளியே
போய் பின்னர் வந்தார்.

ஜெயிலில் இருந்த பசுக்களுக்கு புல் கொடுத்தார். வெளியே வந்தோம். நான்
போய் செருப்பு கடை காண்டிராக்ட் எடுத்த கடையில் மூச்சு வாங்கி
கொண்டிருந்த ஒரு பெண் கிட்டே மூன்று ரூபாய் கொடுத்தேன். "அண்ணே, ரெண்டு
ரூவா தான் அண்ணே" என சொன்னது. அது கர்பஸ்த்ரீ. "என்னிக்கும்மா டெலிவரி
டேட் சொல்லியிருக்காங்க"ன்னு கேட்டேன். "இன்னும் ரெண்டு நாள்
இருக்குண்ணே" என சொன்னது.

அதற்குள் என் நண்பர் கோபுரத்தின் இரண்டு பக்கமும் ஓடி ஓடி ரன் எடுப்பது
போல தன் செருப்புகளை "கலெக்ட்" செஞ்சுட்டு வந்தார். என்னிடம் சொன்னார் "
சார்... ஊதாரித்தனமா செலவு செஞ்சா எனக்கு பிடிக்காது சார். ஜோடியா போட்டா
தான செருப்பை திருடுவானுங்க. ஜோடிய பிரிச்சு போட்டு ஏமாத்தனும் சார்.
இந்த செருப்பு திருட்டு எப்ப தான் ஒழியுமோ இந்த நாட்டுல அப்ப தான் சார்
நம்ம நாட்டிலே ஒரிஜினலா சுதந்திரம் கிடைச்ச மாதிரி. சரி சார் அப்ப நான்
விடை பெறுகிறேன் நமஸ்காரம்"

எனக்கு பசி வயிற்றை கிள்ளியது. பக்கத்தில் தான் வீடு. ஆனாலும் ஹோட்டல்
பிரியாணி மீது ஒரு ஆவல் வந்தது. ஒரு 15 நாட்கள் முன்னதாக சென்னை சி ஐ டி
நகரில் ஒரு ஹோட்டலில் என் நண்பர்களுடன் சாப்பிட போன போது "தோழர் பீஃப்
சாப்பிடுங்க, என சொன்னார் ஒரு தோழர். எனக்கு  பீஃப் சாப்பிட்டு பழக்கம்
இல்லை. இருந்தாலும் அவர் மனம் கோணக்கூடாதே என சகித்து கொண்டு
சாப்பிட்டேன்.அதை நோக்கி என் மனம் சென்றது. ஹோட்டலில் அமர்ந்த பின்
சர்வரிடம் "ஒரு பிரியாணி கொடுப்பா. பீஃப் பிரியானியா இருந்தா உத்தமம்" என
சொன்னேன்!

September 4, 2012

பேராசிரியர் க. அன்பழகனார் - ஒரு வியத்தகு அரசியல் பழம்!


அது 1957, நம் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்து 8 ஆண்டுகள் ஆன நிலை. தேர்தலில் நாம் முதன் முதலாக போட்டியிடுகின்றோம். மொத்தம் உள்ள சட்ட மன்ற இடங்களில் நம் கட்சி போட்டியிட்டது 124, அது போல பாராளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிட்ட இடங்கள் 11. நமக்கு முதன் முதலாக கிடைத்த வெற்றிகள் என்பது சட்டமன்றத்தில் 15 இடங்கள். பாராளுமன்றத்தில் இரண்டு இடங்கள். சட்ட மன்றத்தில் வெற்றி வாகை சூடியவர்கள் அண்ணா, கலைஞர், பேராசிரியர், ப.உ  ச, ஆசைத்தம்பி, சத்தியவாணி முத்து, களம்பூரார்(அண்ணாமலை), சந்தானம், நடராசன், இருசப்பன், ஆனந்தன், கோவிந்தசாமி, சாரதி, சுப்ரமணியம், செல்வராஜ் ஆகியோர். அது போல பாராளுமன்றத்துக்கு ஈ வி கே சம்பத், தருமலிங்கம் ஆகிய இருவர். செமத்தையான வெற்றி தான்! ஏனனில் அப்போது மக்கள் மத்தியில் காங்கிரஸ் மட்டுமே கட்சியாக இருந்து தொலைத்தது. ஆக நாம் காங்கிரஸ் என்னும் மரத்தின் வேருக்கு ஊற்றிய முதல் ஆசிட் பாட்டிள்கள் அந்த 15 சட்டமன்ற உறுப்பினர்களும். போகட்டும்..... இதல்லாம் எனக்கு இப்போ தேவை இல்லை. நேற்று என் வாழ்நாள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடந்தது.

நான் நேற்று ( 03.09.2012) இரவு சென்னை வர வேண்டி இரவு 11.30க்கு மயிலாடுதுறை வரும் கம்பன் விரைவு ரயில் வண்டிக்காக கொஞ்சம் மு கூட்டியே இரவு பத்து மணிக்கு இரயில்வே நிலையம் போனேன். போகும் போது வழக்கம் போல நக்கீரன், ஜூவி, (ரிப்போர்டர் வாங்குவதில்லை) ஆகியன வாங்கி போனேன். முதல் பிளாட்பாரம்ல  புகைவண்டி வரும் என்பதால் அமைதியாக அமர்ந்து வாசிக்க ஆரம்பிக்கும் போது என் முதுகின் பின்னால் யாரோ "டொக். டொக்" என நடந்து போவது உணந்தேன். யாராக இருக்கும் என திரும்பி பார்க்கும் போது தான் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் செயலற்றவனாக ஆகிப்போனேன்.

ஆமாம்! வந்தது அந்த தள்ளாத வயதில் "ஓய்வறை" நோக்கி செல்லும் அந்த மா மனிதன் நம் கழக பேராசிரியர் அன்பழகனார் அவர்கள் தான். எனக்கு முதலில் என்ன செய்வது என தெரியவில்லை. இந்த விஷயம் கலைஞர் காதுக்கு போனால் தளபதி கதி என்ன? தளபதி காதுக்கு போனால் மயிலாடுதுறை திமுக நிர்வாகிகள் அதாவது நகரம், ஒன்றியம், இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி என எல்லார் நிலையும் என்ன? சும்மா விடுவாரா தளபதி? ஒரு பழுத்த திராவிட கிழவன் தடியூன்றி தானாக நடந்து வருவதை பார்த்தால் மயிலாடுதுறை திமுகவினர் கண்ணீர் விட்டே செத்துப்போவர்:-(

நான் ஓடிப்போய் அதை ஒரு புகைப்படமாக எடுப்போம் என நினைத்தது என் மகா முட்டாள் தனம். கற்பழிக்கப்படும் பெண்ணை  காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்த கயவர்கள் போல் ஆவேன் நான். எனினும் அதை செய்தேன். பின் பக்கம் பார்த்தேன். அண்ணன் குத்தாலம் கல்யாணம் அண்ணன் ஓடி வந்து கொண்டு இருந்தார். நான் போய் பேராசிரியரிடம் "அய்யா... கட்சியின் ப்ரோட்டோகால் சொல்லி கொடுக்கும் நீங்களே இப்படி எங்க மாவட்டம் ஏ  கே எஸ் அண்ணன் அனுமதி இல்லாமலோ அல்லது எங்கள் நகரம் குண்டாமணி அண்ணன் இல்லாமலோ தனியாக வரலாமா?" என நேரிடையாக கேட்டேன்.

அதற்கு அவர் "இல்லையப்பா, நான் சொந்த காரணமாக வந்தேன். இது கட்சி விசயம் இல்லை. ஆனா கோவக்கார தம்பி குத்தாலம் கல்யாணத்துக்கு நாளை பின்ன அவருக்கு சேதி தெரிஞ்சா கோவிப்பாரேன்னு அவரு கிட்ட மட்டும் சொன்னேன். தப்பா நினைக்காதீங்க" என சொன்ன போது எனக்கு  என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அய்யாவை  முதல் வகுப்பு இடத்தில் அமர வைத்து விட்ட நேரத்தில் குத்தாலம் அண்ணன் மனைவியார் அவர்கள் அய்யாவுக்கு இரவு சப்பாடை கொண்டு வர நான் அதற்குள் "அய்யா, வீட்டு இட்லியும் பூண்டு மிளகாய் பொடியும், வத்த குழம்பும் இருக்கு" என சொல்ல குத்தாலம் அண்ணன் "இல்லடா தம்பி இதை எல்லாம் அய்யா நல்லா சாப்பிட்டாலே போதும்" என சொல்லி தடுத்தார். பின்னர் அய்யா பேராசிரியரும், குத்தாலம் அன்பழகன் அண்ணனும் சாப்பிட அந்த சோபாவில் அமர, நானும் அண்ணியாரும் வைக்க அய்யா சாப்பிட ஆரம்பித்தார். நான் பின்னர் வெளியே வந்து எங்கள் நகரம் குண்டாமணி அண்ணனுக்கு போன் செய்தேன். கவனிக்க.. அப்போது மணி 10.50.

அதற்குள் அய்யா மூத்த வக்கீல் முருகு. மாணிக்கம் அவர்களும், பின்னர் எங்கள் மயிலாடுதுறை ஒன்றிய செயலர் அண்ணன் மூவலூர் மூர்த்தி அண்ணனும் வந்தனர். நான் மூர்த்தி அண்ணன் கிட்டே "சீக்கிரம் உள்ள போங்க அண்ணே, பேராசிரியர் தனியா உட்காந்து இருக்கார்" என சொன்னேன். அவர் அரக்க பரக்க ஓட அடுத்த நிமிடம் எங்கள் நகரம் குண்டாமணி அவர்கள் ஒரு சுமாராக 50 நகர பொறுப்பில் இருப்பவர்கள் புடை சூழ ஓடி வர எங்கிருந்தோ தொண்டர்கள் ஓடி வந்து "தலைவர் கலைஞர் வாழ்க! அய்யா பேராசிரியர் வாழ்க! அண்ணன் தளபதி வாழ்க! " என வாழ்த்து முழக்கமிட நாங்கள் அய்யாவின் ஓய்வறைக்கு போன போது அய்யா பேராசிரியர் "இல்லைப்பா, இது என் அஃபீசியல் விசிட் அல்ல. நான் திருவாரூர் வந்த வரை மட்டுமே அஃபீசியல். இது என் சொந்த விஷயமாக நான் படித்த பள்ளி, நான் பிறந்த இடம் பார்க்க வந்த சொந்த விஷயமப்பா, இதை பெரிசு பண்ணாதீங்க, எல்லாரும் எங்க பிள்ளைங்க தானே, நான் சொன்னா கேட்பீங்க தானே, அமைதியா இருங்க. இப்போ மணி இரவு 11 ஆச்சுது. நாம மத்த பயணிகளுக்கு தொல்லை கொடுக்கலாமா?"ன்னு கேட்க எங்கள் நகர செயலர், ஒன்றிய செயலர் எல்லாம் அழுதே விட்டனர்.

இவர்கள் எல்லாம் வரும் முன்னர் "தம்பி எனக்கு கால் மரத்து போகுது, நான் கொஞ்சம் இந்த டீப்பாயில் காலை எடுத்து வச்சுக்கவா" என நான் மட்டுமே இருக்கும் போது எனக்கு நெஞ்சே வெடித்து விடும் நிலை. " அய்யா, நானே எடுத்து காலை வச்சிவிடும் பாக்கியம் எனக்கு கிடைக்கட்டுமே" என்றேன்.

ஆனால் எல்லா கட்சி நிர்வாகிகளும் வந்து விட்ட நிலையில் அய்யா அவர்கள் தன் காலை இறக்கி கீழே வைக்க எங்கள் நகர செயலர் குண்டாமணி அவர்கள் "அய்யா மன்னிக்கனும்" என சொல்லி விட்டு மீண்டும் காலை எடுத்து டீப்பாயில் வைத்தார். ஒரே அமைதி அந்த இடத்தில். பேராசிரியரின் பக்கத்தில் எங்க எம் எல் சி  சோழமண்டல தளபதி கோ சி மணி அய்யாவின் பால்ய நண்பர் கட்சியின் மூத்த வழக்கறிஞர் திரு முருகு. மாணிக்கம் அவர்கள் அமர்ந்திருக்க அந்த இடம் ஒரு திராவிட மூத்த பழுத்த கிழ சிங்கம் முன்னாள் நிற்கும் சிங்க குட்டிகளாய் அமைதி காத்தது.

அய்யாவே அமைதி கலைத்தார். " ம் ... சொல்லுங்க யார் யார் என்ன பண்றீங்க? உங்க கூட நன் புகைப்படம் எடுத்துப்பேன். (வார்த்தையை கவனிக்கவும்... என் கூட நீங்க புகைப்படம் எடுத்துக்கலாம் என சொல்லாமல்... வந்திருக்கும் எல்லார் செல் போனிலும் தயாராக இருக்கும் கேமிராவை பார்த்து எப்படி சொல்கிறார் பாருங்கள்) வாங்க எல்லாரும் வாங்க"

"அய்யா நான் சீர்காழி, தென்பாதி முத்துராக்க மாரப்பன் பேரன் அய்யா"

"ஒ அப்படியா, அவரு இருக்காரா" என கேட்டுவிட்டு டக் என சுதாரித்து கொண்டு "நல்லா இருக்காரான்னு கேட்டேன்ப்பா" என சொன்னார். இதில் விஷயம் என்னவெனில் அந்த மேற்படி முத்துராக்க மாரப்பன் அவர்கள் இன்று உயிரோடு இருந்தா கிட்ட தட்ட 112 வயது ஆகியிருக்குமாம். அதை "கணக்கு" செய்து தான் பேராசிரியர் அப்படி கேட்டார் போல முதலில். ஆனாலும் ஒரு கண்ணியம் குறைவான வார்த்தை தன் வாயில் இருந்து வெளிப்பட்டு விட்டதோ என அஞ்சியே அதாவது தன் மனதுக்கு அஞ்சியே அவர் தன்னை திருத்திக்கொண்டார். பின்னர் அந்த நபர் "இல்லீங்கய்யா அவர் இறந்து ரொம்ப வருஷம் ஆச்சுய்யா" என சொல்ல பேராசிரியர் அவரை பற்றி சில வார்த்தைகள் பெருமையாக அவாரின் வாரிசுகிட்டே சொல்லிட்டு "ஒரு தபா தன் பேரனுக்கு ஒரு ஸ்டுடியோ வச்சு தரனும்"ன்னு சொன்னாருப்பா அவரு"ன்னு சொல்ல வந்தவர் அழுதே விட்டார். ஏனனில் அந்த ஸ்டுடியோ பேரன் அவர் தான் போல.

அடுத்து ஒருவரிடம் "தம்பி நீங்க என்ன தொழில் பண்றீங்க?"ன்னு கேட்க அதற்கு அவர் "அய்யா எனக்கு முழு நேர தொழில் அரசியல் தான் அய்யா"ன்னு சொல்ல அதற்கு பேராசிரியர் " நோ நோ தி எக்ஸ்ட்ரா டெசிமல் ஆக்டிவிட்டீஸ் ஷுட் பீ எக்ஸ்ட்ரா டெசிமல். பட் தெ ப்ரொப்பஷனல் ஷுட் பீ அனதர்" என சொல்ல நாங்க எல்லாரும் கை தட்டினோம். "மன்னன்" படத்தில் ரஜினி ஆங்கிலம் பேசிய அந்த இரண்டு நிமிடத்துக்காக இரு நூறு தடவை படம் பார்த்தவங்களாசே நாங்க:-))

மீண்டும் பேரசிரியர் "இல்லைப்பா தொழில்னா நீயும் உன் மனைவி மற்றும் குழந்தைகள் உன்னுடைய எந்த வருமானத்தில் சாப்பிடுறாங்க"ன்னு அர்த்தம். அரசியல் என்பது நம் ஆர்வம். சமூக ஆர்வம். சமூக ஆர்வம் மட்டும் இருக்கு எனக்கு. ஆனா பொண்டாட்டி பிள்ளையை சாப்பாடுக்கு கஷ்டப்படுத்துவேன் என்றோ அல்லது சமூக ஆர்வத்தினால் "கிடைக்கும்" வருவாய் கொண்டு பொண்டாட்டி பிள்ளையை சாப்பாடு கொடுப்பதோ தப்பு.இன்னும் புரியும் படி சொல்லவா? எனக்கு ஒரு திராட்சை தோட்டம் இருக்கு. நான் ஒரு விவசாயி'ன்னு சொல்லும் இந்த உலகில் நான் சைக்கிள் பஞ்சர் ஒட்டி தொழில் நடத்துறேன்"ன்னு சொல்லு. அது தான் திமிர். அந்த திமிர் தான் வேணும். எனக்கு எம் எல் ஏ பென்ஷன் வருதுப்பா... ஹா ஹா ஹா" என சிரிக்க அங்க இருந்த எல்லாரும் அமைதியை கிழித்து விட்டு சிரித்தோம்.

உடனே ஒருவர் "அய்யா நீங்க எங்க தெய்வம் அய்யா"ன்னு உணர்சி மேலிட கூட அவரை கிட்டே அழைத்து " ஊகூம்... எனக்கு மனிதனாக இருக்கவே ஆசை. சரி உனக்கு நான் தெய்வமாகவே இருந்தா கூட உன் மணிகட்டில் இத்தனை கயிறு கட்டிக்க சொல்ல மாட்டேன். உன்னையே நம்பு. உன் மூளையை நம்புன்னு தான் சொல்லியிருப்பேன். அது என்ன கயிறு? ஆங் "முடி கயிறு" தானே. ஆத்திகன் அதை முடி கயிறுன்னு சொல்றான். அதையே தான் பகுத்தறிவாளனும் சொல்றான்.. பாமரனுக்கும் புரியும் மொழியில் சொல்றான், ஆனா பகுத்தறிவாளன் சொல்லும் போது கோவம் வருது எல்லாருக்கும்"( may be மயிறு கயிறு???? :-)) ) என சொன்ன போது  பத்து வருடம் முன்னமேயே ஆயிரம் பிறை கண்டு முடித்த இவர்,  இன்றும் பெரியார் கருத்துகளை போதிக்கும் ஒரு பெரியார் சீடனாக அய்யா பேராசிரியரை கண்ட போது உடம்பு சிலிர்த்து அடங்கியது!

எங்கள் ஒன்றியம் மூவலூர் மூர்த்தி அவர்கள் தன்னை அறிமுகம் செய்து கொண்ட போது அவரின் தந்தையார் பற்றி சிலாகித்து பேசினார். எங்கள் நகரம்  திரு. குண்டாமணி அவர்கள் தன்னை அறிமுகம் செய்து கொண்ட போதும், எங்கள் நகராட்சி தலைவர் அவர்களின் கணவர் வக்கீல் சீனிவாசன் தன்னை அறிமுகம் செய்து கொண்ட போதும் "இது நம்ம ஊர் கோட்டைப்பா. தக்க வச்சுகுங்க" என சொன்னார்.

என்னை "கிட்ட வாங்க அபிஅப்பா, நீங்க மட்டும் ஏன் போட்டோவுக்கு வரலை" என சொன்ன போது... "இல்லீங்க அய்யா... எங்க நகரம், ஒன்றியம் போட்டோ எடுத்து காலைல நெட்ல போடனும் என்பதை தவிர எனக்குன்னு தனிப்பட்ட ஆர்வம் எதும் இல்லீங்கய்யா" என சொன்னேன். "பரவாயில்லை வாங்க தோழரே" என சொன்ன போது அந்த மனிதன் கிட்டே இருக்கும் கம்யூனிச பாசம் (அடிக்கடி கலைஞர் சொல்லுவாரே தான் ஒரு கன்யூனிஸ்ட் என்று அது போல) தெரிந்தது. ஓடிப்போய் அவர் சோபாவின் பக்கத்தில் ஒரு குழந்தையாய் அமர்ந்து கொண்டேன்.

புகைவண்டி வந்தது. எல்லோரும் நடந்து போனோம் பேராசிரியரை பின் பற்றி. அவரின் உதவியாளர்கள் இருவர் அவரின் படுக்கை, மற்றும் ஒரு பெட்டி எடுத்து வந்தனர். குத்தாலம் கல்யாணம் அண்ணன் "அண்ணே உங்களை தனியா அனுப்ப மனசு இல்லை அண்ணே" என கண் கலங்கினார். திடீரென ஒரு மாற்றுக்கட்சி முக்கிய புள்ளி ஒருவர் அந்த கூப்பேயில் இருந்து வெளிப்பட்டு பேராசிரியரை பார்த்து திடுக்கிட்டு அவர் பாதம் தொட்டு வணங்கி "அய்யா நான் இருக்கேன் இந்த பெட்டியில். நான் உங்களை சென்னையில் இறக்கி விடும் வரை தூங்க மாட்டேன் அய்யா" என சொல்லி விட்டு  பிளாட்பாரத்தில் நின்ற எங்களை பார்த்து "கவலை வேண்டாம். அவர் எல்லாருக்கும் பேராசிரியர் தான். நான் பார்த்துக்குறேன். காலை அவரை அழைக்க வருபவர்கள் கிட்டே ஒப்படைச்சுட்டு உங்களுக்கு போன் செய்கிறேன்" என குத்தாலம் அண்ணனிடம் சொன்னார்.

நான் பேராசிரியரிடம் சொன்னேன். "அய்யா நான் நான்கு பெட்டி தள்ளி தான் இருக்கேன். நான் வேண்டுமானா எல்லா ஸ்டேஷனிலும் வந்து பார்த்துக்குறேன்" அதற்கு அவர் " நான் என்ன பெரியாரா? இங்க படுத்தா சென்னைல தான் எழுந்திருப்பேன்" என சொல்ல அங்கே வந்திருந்த பெரியாரிஸ்ட் தோழர்கள் வாய் விட்டு சிரித்தனர். அதே நேரம் மனம் குளிர அழுதனர். "இவர் ஒரு வாழும் பெரியார்" என சொல்லி!!!!


குறிப்பு: நான் பார்த்ததை கேட்டதை எப்போதும் போல எழுதிய பின்னர் தோழர் திராவிடப்புரட்சி அவர்களுக்கு அனுப்பி அவர் சில விஷயங்கள் "எடிட்" செய்து அனுப்பிய பின் இட்ட பதிவு இது! நன்றி தோழர் திராவிடப்புரட்சி அவர்களுக்கு!

திராவிட சிங்கத்தின் பக்கத்தில் நான் - மிக பெருமையாக!
அண்ணன் மூவலூர் மூர்த்தி அவர்கள் பேராசிரியருடன்...
தனியே நடந்து வரும் திராவிட சிங்கம் பேராசிரியர் அவர்கள்



என் கேமிரா வழி எடுத்த சில புகைப்படங்கள் மட்டுமே இவைகள். இன்னும் எங்கள் நகரம் திரு.குண்டாமணி அண்ணன் எல்லாம் இருக்கும் புகைப்படங்கள் பின்னர் அப்டேட் செய்யப்படும்!