பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 26, 2010

முக்கி முக்கி முன்னூறு பதிவும், ஐந்தாம் ஆண்டு ஆரம்ப விழாவும்!!!

இதோ இப்போ ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. என் வலைப்பூவுக்கு ஐந்தாம் ஆண்டு ஆரம்பம் இன்று. மிக்க சந்தோஷம். ஏதோ முக்கி முக்கி முன்னூறு பதிவிட்டாகி விட்டது. இதோ நீங்கள் படித்து கொண்டிருப்பது முன்னூறாவது பதிவு. ஐந்தாம் ஆண்டு விழா என்பதால் கூட்டிப்பார்த்தேன். அட! ஆச்சரியம் சரியாக 300! உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்!

*************

இன்று நான் ஈரோடு சங்கமம் நிகழ்சிக்கு போயிருக்க வேண்டியவன். வேறு ஒரு அவசர வேலை வந்துவிட்டமையால் போக முடியவில்லை. என் நினைப்பு முழுவதும் அங்கயே இருந்தது. இருபது நாட்கள் முன்னதாகவே அபிஅம்மாவிடம் நான் ஈரோடு போக வேண்டி பர்மிஷன் கேட்டபோது "ஏன்?, என்றைக்கு?"ன்னு கேட்டாங்க. டிசம்பர் 26ம் தேதி என சொன்ன போது "அடடே அன்னைக்கு தானே உங்க பிளாக் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்"ன்னு சொன்னாங்க. எனக்கு எதிரிகள் வெளியில் இல்லை. ஐந்தாம் ஆண்டு ஆரம்பநாள் கொண்டாட்டம்னு அழகா சொன்னா என்னா குறைந்தா போயிடும். விட்டா என் பிளாக்குக்கு காரியம் செஞ்சிடுவாங்க போலிருக்கு.

"இப்போ எதுக்கு அதுக்கு எல்லாம் போகனும்?"ன்னு சொன்ன போது வழக்கம் போல பொய் வரிசையா சொல்லிகிட்டே இருந்தேன். யோசிச்சு சொன்னா தான் எனக்கு பொய் உடான்ஸ் ஆகிடும். யோசிக்காம சொன்னா சும்மா டான்ஸ் ஆடும்.

"அதாவது நான் ஒரு மூத்த பதிவர் இல்லியா, எனக்கு பாராட்டு விழா நடத்த தான் எல்லா பதிவர்களும் வர்ராங்க. அதான் கதிர் என்னை அங்க ஒரு உதாரணபுருஷனா.. சாரி உதாரண பதிவரா நிக்க வச்சு புது பதிவர்களுக்கு பாடம் எடுக்க போராரு"

எனக்கு தானே தெரியும். நிக்க வச்சு "இந்த பாருங்க மக்கா, அஞ்சு வருஷம் ஆகியும் பெரிசா எதும் முன்னேற்றம் இல்லை. இவரு போல இல்லாம நல்லா எழுதனும்"ன்னு உதாரணம் காமிச்சு பேசுவார்ன்னு:-(

"சரி உங்களை கூப்பிட்டு பாராட்டு விழா நடத்தினா என்ன குடுப்பாங்க?"

கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னேன். "பொற் கிழிதான்", வர்ரேன்னு சொல்லிட்டு வராம போனா கிழி கிழின்னு கிழிப்பாருன்னு உங்களுக்கே தெரியும். கல்யாண பரிசு பைரவன் மாதிரி ஈரோட்டில் இருந்து வரும் போது ஒரு மாலை வாங்கிகிட்டு வரவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன்.

இயற்கை ராஜிகிட்டே கேட்டுகிட்டேன். வந்தா சோறு போடுவீங்களா?ன்னு. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமைன்னு பதில் வந்தது. ச்சே மத்திய அரசு ரொம்ப கெடுத்து வச்சிருக்கு எல்லாரையும்.

இத்தனை முஸ்தீபுகள் நான் செஞ்சாலே அதுக்கு போக முடியாம போயிடும் என்பதுக்கு இதும் ஒரு உதாரணம். ஒரு நல்ல நிகழ்சியை மிஸ் பண்ணிட்டேன்.அடுத்த தடவை.. ம் சொல்ல மாட்டேன்.

****************

வழக்கம் போல மயிலாடுதுறையில் அரசாங்க பொது மருத்துவமனை இரண்டாம் முறையாக , "முறையாக" அமைச்சர் பெருமக்களால் திறந்து வைக்கப்பட்டது.அமைச்சர்களே உங்களுக்கு தான் தெரியுமே எங்களை பற்றி, இனிமேலாவது அடிக்கல் நாட்டும் போதே திறப்புவிழா கல்வெட்டையும் திறந்து விடுங்கள். மயிலாடுதுறை ரயிலாக இருந்தாலும் சரி, பாலமாக இருந்தாலும் சரி, மருத்துவமனையாக இருந்தாலும் சரி, கட்டி முடித்த பின் உடனே திறக்காமல் அமைச்சருக்காக வெயிட்டிங் என்கிற சாக்கு போக்கு எல்லாம் எங்க கிட்டே வேண்டாம். அப்படி இல்லாவிட்டால் 29.12.2010 ஜூவியில் 29ம் பக்கத்தில் வந்த மாதிரி செய்தி போடுவாங்க.ஜாக்கிரதை ஆமாம்.

****************


எங்கள் பள்ளி தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளி 55000 சதுர அடியில் சுமார் ஆறு கோடி மதிப்பீட்டில் இப்போது இருப்பதை இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட இருக்கின்றது. அது பற்றிய மேலதிக விபரங்கள் எங்க பள்ளியின் "தாயின் புன்னகை" வலைப்பூவில் பார்க்கவும். அதன் முன்னர் அபிஅப்பாவின் வலைப்பூவில் கட்டி முடிக்க இருக்கும் பள்ளிக்கூடத்தின் படம் வெளியிடுவதில் எல்லையில்லா மகிழ்சி!

***************

கடந்த ஒரு வாரமாக எனக்கு தமிழ்மணம் திறக்கவேயில்லை. இது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு தெரியலை. ஆனாலும் தமிழ்மணம் இல்லைன்னா கைநடுக்கம் அதிகம் ஆகுது என்பதும் உண்மை தான்.

************

வலைப்பூ ஆரம்பித்ததில் இருந்து இந்த வருசம் மிகக்குறைந்த அளவிலேயே பதிவுகள் இட்டுள்ளேன். என் அலுவலகத்தில் என் மேசையில் என் நாற்காலியில் அடக்கமா உட்காந்துகிட்டு வஞ்சனையில்லாம பதிவு போடும் சுகம் ஆஹா ஓஹோ தான். "என்னங்க பசங்க ஸ்கூல் பீஸ் கட்டிட்டு வாங்க, என்னங்க ஈ பி பணம் கட்டிட்டு வாங்க, என்னங்க பாலு வீட்டு கல்யாணம் விசாரிச்சுட்டு வாங்க தொல்லைகளுக்கு நடுவே என் எழுத்துப்பணி(????) தடை பட்டுப்போவது உண்மையோ உண்மை. எதிர்வரும் 2011 (கூட்டு எண் 4, என் பிறந்த தேதி கூட்டு எண் 4 ஆகா சூப்பர்.. பகுத்து அறிந்த விசயம் ) எனக்கு பிரைட்டா இருக்கும் என நாழியூர் காராயணன் மீது சத்தியமாக நம்புகிறேன்.அடிக்கடி இனிமேல் எழுத முயற்சிப்பேன். இது எச்சரிக்கை:-)


****************

December 13, 2010

ஆன் I.G.S ஒன்லி!!!!

"சார் போஸ்ட், உங்க பேர்ல ஒரு தபால் வந்திருக்கு"ன்னு சொன்னாலே ஒரு சின்ன மின்சாரம் அடிக்கும் உடம்பிலே. அதிலே ஒரு சின்ன ஈர்ப்பு. தன் பெயரில் ஒரு தபால், தன் பெயருக்கு ஒரு அழைப்பிதழ், தன் பெயரில் ஒரு கல்வெட்டு( அட கடைசி கல்லரை கல்வெட்டு இல்லீங்க) இப்படியாக தன் பெயருக்கு என்றாலே ஒரு அதீத ஆசை எல்லோருக்குமே இருக்கும். ஆனா எனக்குன்னு எப்போதும் கடிதம் என் பெயருக்கு என வந்ததே இல்லை.ஒரு குடும்ப தலைவனாகிவிட்ட இப்போது கூட எனக்கு வருவதில்லை. எப்பவாவது திருமண பத்திரிக்கை வந்தாலொழிய தபால்காரர் எனக்காக எதும் கொடுப்பதில்லை. அது கூட எனக்கு பொறாமை இல்லை. ஆனா அபிக்காக அதிகம் வரும். எதுனா பத்திரிக்கைக்கு எழுதிபோடுவா. "எங்கள் ஆபீசில் குப்பை தொட்டி இல்லையாதலால் நீங்களே இதை குப்பையில் போடலாமே"ன்னு சொல்லி திரும்ப வரும். தவிர இந்தி தேர்வு மார்க் ஷீட் வரும், சிலபஸ் வரும், ஹால்டிக்கெட் வரும், க்விஸ் புத்தகங்கள் வாங்க சொல்லி கடிதம் வரும், இத்தனை ஏன் தம்பி நட்ராஜ் பெயரில் கூட சுட்டி டிவியில் இருந்து கடிதம் வரும். இன்றைக்கு கூட நட்ராஜ்க்கு வந்தது. பிரித்து பார்த்தேன். " எங்கள் கிருஸ்மஸ் நிகழ்ச்சி பற்றிய உங்கள் மேலான அபிப்ராயம் அறிந்தோம். இத்துடன் உங்களுக்கு ஒரு சாந்தாகிளாஸ் வித் கிஃப்ட் அனுப்பியுள்ளோம்" என எழுதி ஒரு கிருஸ்மஸ் தாத்தா அவர் கையில் ஒரு பொட்டலம் அதை பிரித்து பார்த்தா அதிலே ஒரு அழிரப்பர்.


நட்ரஜுக்கு என்ன அபிப்ராயம் இருக்கப்போவுது. அவனுக்கு அபி என்ற வார்த்தை தான் தெரியும். அபிப்ராயத்துக்கு அர்த்தம் கூட தெரியாது. அனேகமாக இது அபி அவன் பெயரில் எதுனா எழுதிய கடிதத்துக்கான பரிசா இருக்கும் என பொறாமைப்பட்டுக்கொண்டேன்.இந்த பொறாமை எனக்கு இன்று நேற்றல்ல நான் ஆறாம் ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே இருந்து கொண்டு தான் இருக்கின்றது.


ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்த எனக்கு என் பெயரில் கடிதம் வராதது எல்லாம் கொஞ்சம் அதிகம் தான். ஆனால் அதே அளவு நம்ம ராதாவுக்கும் இருக்கு என்றதும் தான் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாக இருந்தது. இதை இப்படியே விட்டுவிடுவதை விட அடுத்து என்ன செய்யலாம் என ஒரு நேர் அமர்வில் ஆழ்ந்த ஆலோசனையில் அதாங்க டீப் டிஸ்கசன்ல இருந்த போது நமக்கு நாமே திட்டத்தின் படி செயல் பட முடிவெடுத்தோம். நீ எனக்கு கடிதம் போடு. நான் உனக்கு கடிதம் போடுகிறேன் என முடிவெல்லாம் எடுத்த பின்னே அதில் என்ன விஷயம் எழுதுவது என்கிற மகா குழப்பம் வந்தது. கடைசியாக "நாளைக்கு என்ன வீட்டுப்பாடம்?, பரிட்டை எப்போது வரும் என தெரியுமா? முதல் பென்ச் கனேஷ்ராம்க்கு வயித்தால போகனும், ராமூர்த்தி சார் நேத்து முத்தத்தில் வழுக்கி விழுந்துட்டார், எங்க வீட்டிலே அக்கார வடிசல், அங்க உங்க வீட்டிலே பழைய சாதமா? என்கிற மாதிரியான அதிமுக்கிய விஷயங்களை கடித பரிமாற்றம் செய்து கொள்வது என ஒத்த மனதுடன் தீர்மானித்த போது தான் "ஸ்டாம்ப்" என்கிற வஸ்து இல்லாமல் கடிதம் நகராது என புரிந்து மிகவும் கலங்கடித்த செய்தது. சும்மா ஒரு பேப்பரை கிழித்து அவன் வீட்டு வாசலில் தூக்கி போட்டால் கூட அடுத்த பத்தாவது நிமிஷத்தில் காற்றில் பறந்து வந்து என் வீட்டு முற்றத்தில் கிடக்கும். அதுக்கு போய் காசு கேட்கிறாங்களே என்கிற ரீதியில் எங்களுக்கு அரசாங்கத்தின் மீது கோபம் வந்தாலும் எதும் செய்ய இயலாத கையறு நிலை. (ஹய்யோ கையறு நிலை என்கிற மகா பெரிய வார்த்தை எல்லாம் காமடி பதிவுக்கு பயன் படுத்த கூடாது என சட்டம் எதும் இல்லியே மக்கா?)



அப்படியாக நாங்கள் கலக்கத்தில் இருந்த போது தான் ராதா கைநிறைய அசோக சிங்க ஸ்டாம்பும், காக்கி கவருமாக வந்தான். அவன் அப்பாகிட்டே இந்தியா மேப் வாங்க காசுவாங்க அவர் வேலை செய்யும் தாலுக்காபீஸ் போன போது அவர் அக்கம் பக்கம் திரும்பிய நேரத்தில் அவர் டேபிளில் இருந்து அடிச்சுட்டு வந்ததை பெருமையாக சொன்ன போது ஏதோ குவாட்டருக்கு வடிவேல் சைட் டிஷ்க்கு பதிலா செய்வது போல கட்டிபிடித்து உச்சி முகர்ந்தேன்.(புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் போலிருக்கு) ஆளுக்கு கொஞ்சமா அரசாங்க சொத்தை பாகம் பிரிச்சுகிட்டு இருக்கும் போது தான் ராதா சொன்னான். " இந்த காக்கி கவர்ல கோழிகிறுக்கினது போல எழுதனும். மறக்காம நம்மோட பெயருக்கு கீழே /பெ ன்னு போட்டு அப்பா பெயரை எழுதனும். கவர்மெண்டு கடுதாசின்னா எம்ப்ளது வயசானாலும் அப்பா பேரை போடுவானுங்க அப்ப தான் போஸ்டுமேனுக்கு சந்தேகம் வராது" என சொன்னான். நான் அதற்குஎன் பங்காக "அப்படியே உன் பேனாவிலே இங்கிலே பாதி தண்ணி ஊத்தி எழுதனும்"என்றேன். ஏன் என அவன் கேட்டதுக்கு "எங்க அப்பா ஆபீஸ்ல டெஸ்பாட்ச் கிளார்கு ஒரு இங்க் பாட்டில்ல பாதிய வூட்டுக்கு எடுத்துட்டு போயிட்டு மீதி பாதில தண்ணிய ஊத்தி அதை தான் ஆபீஸ் முழுக்க குடுப்பாரு. அதான் எல்லா அரசாங்க கடிதாசும் நமக்கு வரும் போது சோகையா இருக்கும்.எல்லா டெஸ்பாட்சு கிளார்க்கும் அப்புடித்தானே இருப்பாங்க. அதான் சொன்னேன்" என்றேன். அவனோட நான் கூட்டு களவானித்தனம் செஞ்சாலும் மாட்டிக்காம விஞ்ஞானப்பூர்வமா சித்திப்பேன்ல:-))


எல்லாம் நல்ல படியாக முடிந்து நானும் அவனும் அவங்க அவங்க வீட்டுக்கு போனதும் நேரு இந்திராவுக்கு கடிதம் எழுதிய ரேஞ்சில் அவனும் அண்ணா தம்பிக்கு எழுதிய மாதிரி நானும் எழுத ஆரம்பித்தோம்.எழுத பேப்பர் கிடைக்காமல் அவசரமாக பள்ளிகூட ரஃப் நோட் கிழித்து எழுத ஆரம்பித்தேன். "அன்புள்ள ராதா, நாளைக்கு என்ன வீட்டுப்பாடம்?" இப்படிக்கு உன்னை என்றும் மறக்காத, நீ செய்த இந்த ஸ்டாம்பு திருடின உதவியை என்றும் மறக்காத தொல்காப்பியன்" என கடிதம் எழுதி ஒட்டி கொண்டிருக்கும் போதே ராதா அவசர அவசரமாக ஓடிவந்தான். "என்னடா சி டி போலீஸ் வச்சு நம்மை கண்டுபிடிச்சுட்டாங்களா?" என கேட்டேன்.நாங்க சி டி லெவலுக்கு ஒர்த் இல்லை எனினும் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கிற கோட்பாடு தான்.


அதற்கு அவன் "அதல்லாம் இல்லைடா. சொல்ல மறந்துட்டேனே. இந்த ஸ்டாம்ப் ஒன்லி ஃபார் கவர்மெண்டு சர்வீஸ்க்கு தானே. அதனால அந்த ஸ்டாம்பு ஓட்டிட்டு கவர்ல 'ஆன் I.G.S" ன்னு எழுதனும். பக்கத்திலே "அவசரம், மிக அவசரம், தேர்தல் பணி, இரகசியம் இதிலே எதுனா ஒன்னு எழுதனும் ஓக்கேவா"ன்னு சொன்னான். இதிலே எனக்கு இரகசியம் என்கிற வார்த்தை மிகவும் பிடித்து போனது. அதனால் அந்த வீட்டுப்பாடம் என்ன என்கிற கடிதத்துக்கு "இரகசியம்" என்கிற லேபிள் கொடுத்தேன்.

எல்லாம் நல்லபடியா போனது. முதல் நாள் எனக்கு அவன் எழுதிய கடிதத்தில் அனுப்புனர் அட்ரசில் "செங்கோட்டை - புதுடெல்லி" என எழுதி அவனது காங்கிரஸ்பேரியக்க புத்திய காமிச்சதால் நான் செயிண்ட் ர்சு கோட்டை - மெட்ராசு என எழுதி போட்டேன். ஜா என்று எழுதாமல் நான் தமிழ் வளர்க்க காரணம் எனக்கு அப்போது "ஜா" எழுத வராது என்பது பரம ரகசியம். அதற்கு சார்சு கோட்டை என போட்டிருக்கலாமே என நீங்கள் கேட்பது புரிகின்றது. ஜா வும் ஐம் பக்கத்து பக்க்கத்து வீடு என நான் நினைத்து கொண்டதே காரணம்.


இப்படியாக தபால்காரர் வாசலில் வந்து "தொல்காப்பியன்" என அழைப்பதும் நான் வேண்டுமென்றே அவர் இன்னும் கொஞ்சம் சத்தமா பக்கத்து வீடுகளில் கேட்கட்டும் என நினைத்து ஒளிந்து நிற்பதும் பின்னே அம்மா "டேய் அப்பாவுக்கு வந்த கடுதாசிய கொடுக்க உன்னை கூப்பிடுறாரு பாரு" என சொன்ன போது நான் கடுப்பாகி அம்மாவிடம் "ஏன் எங்களுக்கு லெட்டர் வராதா? என்னவோ கவர்மெண்டுக்கு என் கிட்டே தேவை போலிருக்கு அதான் லெட்டர் போட்டு கூப்பிட்டு இருக்காங்க" என (கவனிக்க அப்போது ஏழாம் வகுப்பு) பீலாவிட்டுகொண்டே போய் வாங்கி வருவதும், அம்மா குழம்பியதும் இதே கதை ராதா வீட்டிலும் நடந்து வருவதும் , ஆனால் நாங்கள் இருவரும் மட்டும் கர்ம சிரத்தையாய் எல்லா கடிதத்திலும் "நாளைக்கு வீட்டுப்பாடம் என்ன?" என்கிற கேள்வியை கேட்டுக்கொள்ளாமல் இருந்ததில்லை.

ஒரு நாள் ராதா வீட்டில் வேலை செய்யும் ஒரு அம்மையார் போகும் வழியில் "அந்த வீட்டு அயிரு உன்னை வர சொன்னாங்க தம்பி" என சொல்லி போன போது எனக்கு லைட்டா உதறல் வந்தது. தீர்க்கமாக சி டி போலீஸ் கிட்டே மாட்டிவிட்டோம் என நினைத்தேன். அங்க போனா வீட்டு வாசலில் ராதா முட்டிகால் போட்டு இருக்க அவன் அப்பா கையில் பிரம்புடன் என்னை ஆக்ரோஷமாக வரவேற்றார். " வாடா வா நோக்கு சுழி சரியில்லை. இவனுக்கு புத்தி சரியில்லை" என ஆரம்பித்து சரவெடி வெடித்து கொண்டிருக்க ராதாவுக்கு சிரிப்பு போலீஸ் கிட்டே நிற்பது போலவே ஒரு நினைப்பு.


என்னை பார்த்ததும் "வாடா வா நாம மாட்டிட்டோம். வந்து நீயும் முட்டிகால் போடு. அப்பா இப்ப போயிடுவார். சித்த நேரம் தான் வந்து முட்டிகால் போடு"ன்னு சொல்ல அவன் அப்பாவோ "அரசாங்க சொத்தை அபஷ்கரிச்சிருக்கேள். இது என்ன செக்ஷன் தெரியுமோ?"ன்னு கேட்க ராதாவும் நானும் கோரசாக சவன்த் சி செக்ஷன் என சொன்னோம். எங்களுக்கு என்ன தெரியும் அப்போது. செக்ஷன்னா கோர்ட் சம்மந்தப்பட்ட வார்த்தைன்னு. அரசாங்க சொத்தை அபகரிச்சா என்ன செக்ஷன்னு ராஜாவை கேட்டாதானே தெரியும். (ராஜா பாஸ்கர் வக்கில் பையன் என்பது உபரி செய்தி)


அந்த நேரம் பார்த்து ராதாவின் வீட்டு தெருவிலே இருக்கும் எங்க வாத்தியார் M.R 2 போனவர் நாங்க முட்டிகால் போட்டு நிற்பதை பார்த்து திரும்பி வந்தார். ராதா என் காதில் "குரு வக்கிரம் ஆகிடுச்சு"ன்னு சொன்னான். வாத்தியார் திரும்ப வந்து "பசங்க ரெண்டு பேரும் வீட்டுப்பாடம் எழுதிட்டு வர்ரதேயில்லை சார். கொஞ்சம் கண்டிச்சு வையுங்க" என வக்கிர வேலையை காட்டிவிட்டு போனார். பின்னர் கொஞ்ச நேரத்திலே எங்க அனைத்து கடிதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு ராதாவின் அப்பாவால் பில்டர் காபி உறுஞ்சப்பட்டு கொண்டே படிக்கப்பட்டது. அதிலே ராதாவின் கடிதம் ஒன்றில் "சாந்தியின் பாவாடை கலர் இன்னிக்கு நல்லா இருந்தது" என்கிற அதி பயங்கர செக்ஸ் கடிதத்தை ராதா அப்பா படிக்க ராதாவின் அம்மா முந்தானையால் வாயை பொத்தி அழுது கொண்டே அடுக்களைக்கு போனாங்க.


ராதாவின் அப்பா கேட்டார் "ஏண்டா பசங்களா, எல்லா கடிதத்திலும் நாளைக்கு வீட்டுப்பாடம் என்னன்னு மாத்திரம் கேட்டிருக்கேள் ஆனா வாத்தியார் எழுதரதே இல்லைன்னுட்டு போராரே"என கேட்க அப்போது தான் புரிந்தது நாங்க அந்த வீட்டு பாடம் எழுதும் நேரத்தில் தான் கடிதம் எழுதிகொண்டு இருந்துவிட்டு வீட்டுப்பாடத்தை கோட்டை விட்டுவிட்டோம் என.



இருந்தும் ராதாவுக்கு ஒரே க்யூரியாசிட்டி. நாங்கள் எப்படி மாட்டியிருப்போம்னு. தன் அப்பாவிடம் "அப்பா நீ எப்படிப்பா கண்டுபிடிச்சே"ன்னு கேட்க அவர் "போஸ்ட் மேன் தான் கண்டுபிடிச்சார். என்னாண்ட வந்து சொன்னார்"ன்னு சொன்னார். போஸ்ட்மேன் எப்படி கண்டுபிடித்தார் என்பது பின்னர் தான் தெரியவந்தது. ஒரு ஆர்வத்தில் ராதா, அனுப்புனர் விலாசத்தில் "ஜனாதிபதி, செங்கோட்டை, புது டெல்லி" என தமிழில் எழுதி எழுதி அனுப்பியிருக்கான். டெல்லில இருந்து தமிழில் ஜனாதிபதிகிட்ட இருந்து இவனுங்களுக்கு லெட்டர் வருமான்னு தபால்காரருக்கு சந்தேகம் வரவே நாங்க மாட்டிட்டோம்.அந்த காலத்தில் விசயகாந்து படம் எதும் நடிக்கவில்லை. நடித்திருந்தா ஸ்காட்லாந்து போலீஸ்கிட்டே தமிழ்ல பேசுவது, பாகிஸ்தானிகிட்டே பத்து பக்க தமிழ் வசனம் பேசுவது எல்லாம் பார்த்து தபால்காரரும் ஜனாதிபதி ஆபீஸ்ல இருந்து தமிழ்ல கடிதம் வந்ததை பெரிய விஷயமா நினைச்சு இருக்க மாட்டாரு.



அதன் பின்னர் அர்ச்சனைகள், மண்டகப்படிகள் எல்லாம் முடிந்து "இனி இப்படி தப்பு செய்ய மாட்டோம்" என நூறு தடவை தாலுகாபீஸ் கட்டம் போட்ட சாணி பேப்பரில் எழுதி அவர் கிட்டே கொடுத்துவிட்டு ஒரு வழியா தப்பிச்சோம்.

அப்பவும் அவரு உனக்கு சுழி சரியில்லை, இவனுக்கு புத்தி சரியில்லை என்கிற பல்லவியை திரும்பவும் மங்களம் பாடி கச்சேரியை முடிக்க நான் ராதாவிடம் "என்னடா உங்க அப்பா திரும்ப திரும்ப உனக்கு சுழி சரியில்லைன்னு சொல்றாங்கன்னு கேட்டேன். அதுக்கு ராதா "அது வேற ஒன்னுமில்லைடா நீ ஜார்ஜ் கோட்டைன்னு போடும் போது ரெட்டை சுழி கொம்பு போடுவதுக்கு பதிலா ஒத்தை சுழி போட்டுட்ட"ன்னு சொன்னான்.


அடச்சே... அசிங்கமா போயிடுச்சே இந்த பாழாய் போன எழுத்துப்பிழையால...

அதன் பின்னர் எனக்கு லெட்டர் வருவதை பத்தி எல்லாம் அவ்வளவாக கவலைப்படுவதில்லை...சீ சீ இந்த பழம் புளிக்கும்...