

நான் எத்தனை கவிதையிலே போய் 'ஹச், ஹச்"ன்னு தும்மி கிட்டு வந்தேன்! ஆண்டவன் வச்சுட்டாண்டா ஆப்பு!
***********************************
நான் கடந்த நவம்பர் 10ம் தேதி இந்தியா போன உடனேயே கும்பகோணத்தில் டெஸ்ட் அது இதுன்னு ஆகி போச்சு.12ம் தேதி அபிபாப்பா திரும்ப திரும்ப போன் பண்ணி மாயவரம் வர சொன்னாள். சரின்னு 12ம் தேதி இரவு 11 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை போனேன். அப்போ அதிசயமா பாப்பாவும் தம்பியும் முழிச்சுகிட்டு இருந்தாங்க. ரெண்டு பேருமே புதுசா சட்டை போட்டிருந்தாங்க. எனக்கோ ரொம்ப டயர்டு. பாப்பா ஏதோ ஒரு வித ஜாலி படபடபோடும் தம்பி என்னன்னு தெரியாமையே புது சட்டை போட்டு கொண்டும் என்னை பார்த்ததும் ரொம்ப குஷியாகிட்டாங்க.
தம்பி தான் நான் எப்போ வெளியே போனாலும் கீழே விழுந்து புரண்டு அழுவதும் திரும்பி வரும் போதும் அதே மாதிரி சந்தோஷத்திலே புரண்டு சிரிப்பதும் வாடிக்கைதான். நான் வந்த அசதியிலே அப்படியே தூங்கிட்டேன். 12 மணி ஆகும் போது பசங்க 2 பேரும் என் மேலே ஏறி குதித்த போது எனக்கு ஒரு வித எரிச்சலாகவும்(நெசமாவே அப்படி இருந்தது) "கிருஷ்ணா பசங்களை பிடிக்க கூடாதா ராத்திரி 12 க்கு என்ன விளையாட்டு" என கத்திய போது தம்பி தன் சந்தோஷத்தை மறந்து அப்படியே விக்கித்து நிற்க கிருஷ்ணா "ஹேப்பி பர்த்த் டே"ன்னு சொல்ல என் கோவம் முழுவது போய் விட்டது.
நான் அப்படியே சமாளித்து தம்பியை சமாதானமாக்க அவன் "சரி இது அப்பா ச்சும்மா ஊலுலூவாக்கும்''ன்னு கத்தினாங்க போல இருக்குன்னு நெனச்சு கிட்டு பாப்பா சொல்வது மாதிரியே அவன் பாஷையில் ஹேப்பி பர்த் டே சொல்ல பாப்பா ஓடி போய் மறைத்து வைத்த எனக்கான கிஃப்ட்டை எடுத்து வந்து ரெண்டு பேரும் சேர்ந்து கொடுக்க பிரித்து பார்த்தால் ஒரு அழகிய செடி!
நான் நிஜமாகவே சொர்கத்தை உணர்ந்த தருணம் அது என கூட சொல்லலாம். பின்பு பாப்பா ஏதோ கவிதை ஒன்றை எழுதி அதை வரி வரியாக பிய்த்து என் தலையில் போட தம்பியும் அது ஏதோ சடங்கு மாதிரி நினைத்து அவனும் போட அது தீர்ந்து போனதும் ஓடி போய் ஒரு ஆனந்த விகடனை அவசர அவசரமாக பிய்த்து என் தலைவில் போட அது அவனுக்கு திருப்தியளிக்காத காரணத்தால் பக்கத்தில் இருந்த டம்ளரில் இருந்து தண்ணீரையும் எடுத்து கொட்ட அந்த கவிதையோடு சேர்ந்து என் தலையும் நனைந்தது.
நான் ஊருக்கு வரும் போது பாப்பா அவசர அவசர மாக அதே கவிதையை ஏதோ ஒரு நோட்டு பேப்பரில் எழுதி கிழித்து அதை என் பாக்கெட்டில் வைக்க நான் அத்தோடு அதை மறந்து விட்டேன். ஆனால் இன்று அந்த சட்டையை எடுக்கும் போது அந்த கவிதை கிடைத்தது, அந்த கவிதையை நான் அங்கே ரசித்ததை விட இங்கு ஆயிரம் மடங்கு இங்கே ரசிக்கிறேன். ஸ்பெல்லிங் மிஸ்டேக்(என்னை விடவா) என்பதை எல்லாம் தாண்டி அந்த பாசம் மனதை நிறைத்து விடுகின்றது.ஐந்து நட்சத்திர மங்கிய விளக்கில், முகம் தெரியாமல், ஏதோ தின்று கொண்டாடுவதை விட இது தான் மிக அழியா நினைவாக இருக்கும் என்பதில் உங்களுக்கு எதுனா சந்தேகமிருக்கா?