பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 30, 2019

சிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்!




ஒரு சினிமா பார்க்க போனது குத்தமாய்யா என நினைக்கும் அளவு ஆனது சிவகார்த்திகேயனின் “ஹீரோ” பட அனுபவம். அதுவும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க நினைத்தது தான் என் மாகுற்றம். காலையில் தியேட்டரில் நுழையும் போதே அத்தனை கூட்டம். கியூவில் நின்று டிக்கெட் எடுக்கவும் வெட்கம். “சபரிமலைக்கு மாலை போட்டவர்களுக்கு ஆச்சாரமான தனி கியூ”வெல்லாம் கொடுக்காத தியேட்டரின் அராஜகம்... அதை விடுங்கள். தனிப்பதிவாக போடும் அளவு பக்தாள்ஸ்க்கு கொடுமை நடக்கின்றது இந்த பெரியார் பூமியில்!

யாராவது சிரித்த மூஞ்சியான் வருவான், டிக்கெட் எடுத்து தருவான் அல்லது தியேட்டர் ஓனரோ, அவ்வளவு ஏன் சிவகார்த்திகேயனோ கூட வந்து “அடடே அபிஅப்பாவா இது? நீங்கல்லாம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா தியேட்டரை பசு மாதிரி கயித்தை கட்டி உங்க வீட்டுக்கு ஓட்டி வந்து படத்தை போட்டு காமிக்க மாட்டேனா? சரி சரி உள்ளே வாங்க” என அழைத்துப்போவார்கள் என்றெல்லாம் அதீத கற்பனை செய்து கொண்டே அங்கிருந்த ஒரு பூச்செடி நிழலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது தான் இந்த பதிவின் “ஹீரோ” வந்தான். கவனித்து படிக்கவும். படத்தின் ஹீரோ அல்ல! பதிவின் ஹீரோ!

பார்க்க ரொம்ப சுமாராக செம்பட்டை தலையுடன், கசங்கிய பேண்ட், அதற்கு சம்பந்தமில்லா ஒரு முழுக்கை சட்டை அதில் ஒரு கை மட்டும் மடித்து விட்டு வாயில் பான்பராக் குதப்பலோடு அருகே வந்தான். “சார்... நிங்க தானே தொல்காப்பியன்?”

ரொம்ப அசிரத்தையாக “ஆமாம்” என்றேன்!

“சித்தப்பா உங்களை எனக்கு தெரியும். என்னை தான் உங்களுக்கு தெரியாது” என்றான்.

எனக்கு குழப்பம். இந்த மாதிரி எனக்கு யாரையும் தெரியாதே என நினைத்துக் கொண்டு... “நீங்க?” என எழுத்தேன். சித்தப்பா என்று உரிமையாக வேற சொல்றான்!

“சித்தப்பா, சுத்தரமூர்த்தி ஃப்ரண்டு நான்”

“எந்த சுந்தரமூர்த்தி?” என்றேன்.

“கொரநாடு... ஆட்டோ கூட ஓட்டுவானே. அதான் அடிக்கடி ஜெயிலுக்கு எல்லாம் போவானே அந்த சுந்தரமூர்த்தி தான்”

எனக்கு ஞாபகம் வந்து விட்டது. பதிமூன்று ஆண்டுகள் முன்பாக ஒரு மண்டலத்துக்கு நான் ஒரு நாய் வளர்த்தேன்.  என்னை ஆறுமாதத்துக்கு ஒரு தபா என நாய் கடித்து வைப்பதை ஏற்கனவே பக்கம் பக்கமாக நான் எழுதி தொலைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். அந்த நாய்கடி சாபத்தை போக்க ஒருத்தன் குடுத்த ஐடியா அது. “டேய் மச்சி, நீயே ஏன் ஒரு நாய் வளர்க்க கூடாது? நீ ஒரு நாய்க்கு ஓனரா ஆகிட்டா மத்த நாயெல்லாம் “ஒரு நாயோனரை நாம கடிக்கக்கூடாது” என அதுங்க சங்கத்திலே முடிவெடுத்து உனக்கு போட்ட “ரெட்கார்டை” வாபஸ் வாங்கிடலாம்ல. அதனால நீ இன்ன்னிக்கே ஒரு நாய் வாங்குற. நாயோனர் ஆகுற” என அருள்வாக்கு கொடுத்து விட்டு மறைந்து விட்டான். நானும் நாய்படாத பாடு பட்டு ஒரு கருப்பு கலர் பொமரேனியன் 1000 ரூபாய் கொடுத்து  வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்தேன். வந்ததுமே சண்டை வீட்டிலே.

“நம்ம வீட்டிலே இதல்லாம் பழக்கமில்லை. தவிர அதை என்னால மெயிண்டெய்ன் பண்ணல்லாம் முடியாது. வேண்டுமானா உங்களுக்கு சோறு வைக்கும் போது அதுக்கும் ஒரு தட்டு வைக்கிறேன். ஆனா அது கக்கா போவதை எல்லாம் என்னால சுத்தம் பண்ண முடியாது. எங்கப்பா என்னை ராணி மாதிரி வளர்த்தாங்க” என பிலுபிலுவென பிடித்துக் கொண்டார் என் சகதர்மினி. ராணியே நாய் வளர்க்கும் போது ராணி மாதிரி வளர்க்கப்பட்டவங்க நாய் ஆய் போனா சகிச்சுக்க மாட்டாங்களா என நினைத்துக் கொண்டு நாய் மெய்ண்டெய்னர் ஒருத்தனை தேடி மீண்டும் நாய் போல அலைந்த போது தான் இந்த சுத்தரமூர்த்தி ஆபத்பாந்தவனாக வந்தான். தூரத்து உறவு தான். படிக்க போகலையாம். தினமும் ரெண்டு வேளை வந்து நாயை கக்கா அழைத்துப்போய் வந்து குளிக்க வைத்து விட்டு போகனும் என்னும் ஒப்பந்த அடிப்படையில் வந்தவன். சுத்தி வளைத்து நான் அவனுக்கு சித்தப்பா முறை என்பதை என் அம்மா அரைமணி நேரம் விளக்கியதால் அவன் அன்று முதல் சித்தப்பா என அழைக்க தொடங்கினான்.

ஒரு நாள் அவன் ட்யூட்டியில் இல்லாத நேரம் என் நாய்க்கு அவசரம்... கக்கா போய்விட்டது. என் வீட்டம்மணி வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து “இனி இந்த வீட்டில் நாய் இருக்கனும் இல்லாட்டி நீங்க இருக்கனும். நீங்களே முடிவெடுத்துக்குங்க” என கறாராக சொல்லிவிட வீட்டுக்கு ஒரு நாய் போதுமென்கிற மனோநிலையில் 48 நாள் நாயோனராக இருந்த நான் அதை விற்க முடிவெடுத்து விட்டேன். நாயின் ஆரம்பவிலை.... நமக்கு லாபம் எதுவும் வேண்டாம் என முடிவெடுத்து அதே 1000 என நிர்ணயித்து விலை பேசி, அதை யாரும் வாங்க முன்வராததால் அதை 800 ஆக குறைத்து பின்னர் நான் தான் விலையை ”குரைத்து குரைத்து” 100 ரூபாய்க்கு ”இங்கே அழகிய பமரேனியன் கிடைக்கும்” என என் கழுத்தில் போர்டு மாட்டிக்காத குறை தான். அப்பவும் யாரும் முன்வராத காரணத்தால் “இங்கே கருப்பு பமரேனியன் குட்டியும் கூடவே அசோசரீஸ் (கட்டும் சங்கிலி, சாப்பிடும் தட்டு) இலவசம் என சொல்லியும் .... பின்னர் நாயும், அசோசரீஸ் மற்றும் 200 ரூவாய் தரப்படும் என்னும் நிலைக்கு நான் வந்தேன். போணியாகவில்லை. நாயும் நானும் அலையாத தெரு இல்லை. “சார்... நாய் வாங்கலையோ நாய்” என்று கூவாத குறை தான். சில உறவினர்கள் என்னை பார்த்ததும் கதவை மூடும் நிலைக்கு வந்து விட்டார்கள் என்பதை உணர்ந்தேன். அப்போது தான் சுந்தரமூர்த்தி மீண்டும்  வந்தான். நானோ லீவ் முடிந்து துபாய் திரும்பும் நாளும் வந்தது. குடும்பத்துடன் சினிமா, கோவில் என அலைய வேண்டிய நான் நாயோடு அலைந்தேன்.

“சித்தப்பா, சூப்பர் பார்ட்டி கொண்டு வந்திருக்கேன். நீங்க படும் கஷ்டத்தை சொன்னேன். அவனுக்கு அழுகையே வந்துடுச்சு. நாயையும் கொடுத்து மேலே 1000 ரூபாயும் கொடுத்தா அவன் போனா போவுதுன்ன்னு அதை வாங்கிப்பதாக சொல்றான்” என்றான். எல்லாம் என் நேரம். ஒரு வழியாக டீலை முடித்து விட்டு துபாய்க்கு போய் விட்டேன். பின்னர்  சின்னவனாக இருந்த சுந்தரமூர்த்தி வளர்ந்து சாராய வியாபாரம், அடிதடி, ஜெயிலுக்கு போதல் என அபரிமிதமான வளர்ச்சியாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.

இப்போ வாங்க விஷயத்துக்கு!

“ஓ...ஞாபகம் வருதுப்பா. சுந்தரமூர்த்தி ஃப்ரண்டா நீனு? என்ன பண்ணிகிட்டு இருக்கே. அவனை எப்படி தெரியும்?”

“சித்தப்பா, நான் திருடரா இருக்கேன். அவனை நம்ம மாயவரம் சப்ஜெயில்ல தான் வச்சி பார்த்தேன். அதிலிருந்து நல்ல பழக்கம். உங்களைப்பத்தி சொல்லியிருக்கான். அதான் பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டேன். உங்க வீடு கூட எனக்கு தெரியும் ” ....(திருடர்ர்ர்ர்ர் மரியாதையா சொல்லிக்கிறானாமாம்... தொழில் பக்தி?!)

எனக்கு பகீரென்றது.  “என்னது திருடரா? என்னப்பா சொல்ற. நீ எந்த ஏரியா?” கொஞ்சம் நகர்ந்து கொண்டே கேட்டேன்.

”எல்லா ஏரியாவும் நம்ம ஏரியா தான். எங்க கிடைக்குதோ அங்க திருடுவேன்” என்றான்.

“அட அதை கேட்கலை. எந்த ஏரியா பையன் நீனு?”

“எல்லாம் என் ஊர் தான்னு வள்ளுவரே சொல்லியிருக்காருல்ல”

“எந்த வள்ளுவர்? சமீபத்திலே பி.ஜே.பி ல சேர்ந்தாரே அவரா?’

“பி.ஜே.பி ந்னா? என்றான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  ஒரு அயோக்கியனா இருந்து கொண்டு பி.ஜே.பியை தெரியலையே இவனுக்கு. பின்ன எப்படி தாமரை தமிழ்நாட்டில் மலரும் என நினைத்துக் கொண்டேன்.  பின்னர் அவனே

“ஆமா, ஒரு சுருட்டை தலை அக்கா தாமரை மலரும் தாமரை மலரும்னு சொல்லுமே. அதைக்கூட கட்சில இருந்து நீக்கிட்டாங்களே அந்த கட்சியா?” என்றான்.

“டேய் அதை நீக்கலை. அதை பாட்டில்ல அடைச்சி 5 வருஷத்துக்கு ஆந்திராவிலே ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்காங்க. 5 வருஷம் ஆனதும் திறந்து விட்ட பின்ன நீ இப்படி பாஜகவை தெரியாதுன்னு சொன்னது தெரிஞ்சா உன் காதை கடிச்சு வச்சிடும். ஆமா வள்ளுவர் எப்ப எல்லாம் என் ஊர் தான்னு சொன்னாரு” எனகேட்டேன்.

“அவரு தான் நிறைய சொல்லியிருக்காரே பக்கம் பக்கமா. இந்த சப்ஜக்டும் சொல்லியிருப்பாருதானே” என்றான்.

தியேட்டரில் கூட்டம் மேலும் மேலும் அதிகமாகிகொண்டே வந்தது. ஒரு ப்ரவுன் கலர் ஷூ போட்ட மப்டி போலீஸ் மீசையை நீவிக்கொண்டே என்னை பார்த்துக்கொண்டே போனார். நான் கொஞ்சம் அவனிடமிருந்து பூச்செடி நிழலில் இருந்து நகர்ந்து வெயிலில் நின்றேன்.

“அட என்ன சித்தப்பா... எதுக்கு என்னை பார்த்து ஒதுங்குறீங்க. ஒரு திருடர் கூட நிக்கிறது அசிங்கமா இருக்குதா? இதுக்கெல்லாம் அசிங்கம்  பார்த்தா முடியுமா? இதோ நீங்க கூடத்தான் காவி வேட்டி கட்டிகிட்டு மீசையும் தாடியுமா அசிங்கமா இருக்கீங்க. நான் வெட்கப்படாம பக்கத்தில் நிக்கலையா?”

ஆஹா.... இவன் நம்மை அசிங்கப்படுத்தாம விட மாட்டான் போலிருக்கு. நமக்கே எப்பவாவது தான் சினிமா பார்க்க மூட் வரும். இப்போ சுத்தமா போச்சுது இவனால. இவன் கூட பேசிகிட்டு இருப்பதை ஏற்கனவே ஒரு போலீஸ்கார் பார்த்துட்டார். சரி இன்னிக்கு சந்திராஷ்டமம் வேலையை ஆரம்பிச்சிடுச்சு என நினைத்துக் கொண்டு வண்டி வச்சிருந்த இடத்துக்கு நகர்ந்தேன்.  வண்டிசாவியை சட்டைப்பையில் இருந்து எடுக்கும் போது டிக்கெட் எடுக்க வைத்திருந்த 200 ரூபாய் நோட்டும் உடன்பிறவா சகோதரி போல கூடவே வந்தது.

“அட என்ன சித்தப்பா... டிக்கெட் வாங்கனுமா? இருங்க... நான் ஒரு நிமிஷத்துல வாங்கி வரேன்” என சொல்லிக்கொண்டே சடக்கென அந்த 200 ரூபாய் நோட்டை பிடுங்கிக்கொண்டு கூட்டத்தில் புகுந்து விட்டான்.  எனக்கு பதக் பதக் ஆனது இதயம். சரி வந்துடுவான் என நினைத்துக் கொண்டேன். கூட்டம் எல்லாம் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போகப்போக நான் நிற்கும் இடம் காலியாகிக்கொண்டே வந்தது. எனக்கு பயம் வந்தது லைட்டா. 200 ரூவா இன்னிக்கு எள்ளு தான் போல என மனசு சொன்னது. ஆளைக்காணும். அவன் பேர் கூட எனக்கு தெரியாதே...

இனி அவன் வரமாட்டான் என்னும் முடிவுக்கு வந்தேன்.சுந்தரமூர்த்திக்கு நெருக்கமான வேறு ஒரு சொந்தக்காரருக்கு போன் செய்து சுந்தரமூர்த்தி நம்பர் வாங்கி சுந்தரமூர்த்திக்கு போன் செய்தேன். யாரோ பெண் குரல் கேட்டது.

“சொல்லுங்க மாமா?”

“என்னது மாமாவா?”

அது என் பெயரை சொல்லி நீங்க தானே பேசுறது என்றது. ஆமாம் என்றேன். “உங்க பெயரை தான் அவங்க போன்ல போட்டு வச்சிருக்காங்கலே... அவங்க பொண்டாட்டி தான் நான் என்றது.

“சரிம்மா... அவன் எங்கே?” என்றேன்.

“அவங்க திருச்சிக்கு போயிருக்காங்க மாமா ஒரு வேலையா. வர இன்னும் 15 நாளாவது ஆகும்”

“சரி, அவன் போன் நம்பர் கொடு”

“இருங்க. அவங்களே உங்ககிட்ட பேச சொல்றேன். உங்க நம்பரை அனுப்பறேன் அவங்களுக்கு” என சொல்லி வைத்து விட்டது.

அந்த மீசைநீவி மீண்டும் என்னை உற்றுப்பார்த்துக் கொண்டு நடையை கட்டினார். நான் அந்த அளவு ஒர்த் இல்லை என போய் அவரிடம் சொல்லலாமா என அபத்தமாக நினைத்துக் கொண்டேன். வீட்டில் என் மனைவி பர்சில் இருந்து 150 ரூபாய் எடுத்தால் கூட வியர்த்து விடும். அவங்க தேடும் முன்னமே “அதுல எதுனா 150 குறைஞ்சா நான் தான் எடுத்தேன்னு நீ தப்பா சந்தேகப்படக்கூடாது” என உளறியே மாட்டிக்குவேன். அத்தனை ஒரு பூஞ்சை நான். எனக்கெல்லாம் மீசை நீவுதல் ரொம்ப அதிகம். இந்த திருடன் கூட எனக்கு பத்து நிமிஷ சகவாசம் தான். அய்யோ புலம்ப வச்சுட்டானே....

போன் ரிங் டோன் ஒலித்தது... “மாட்டிக்கிச்சு...மாட்டிக்கிச்சு... மாட்டிக்கிச்சு” ஹிப்பாப் ஆதி நேரம் காலம் தெரியாமல் ரிங் டோனில்...

“அல்லோ நான் தான் சுந்தரமூர்த்தி பேசுறேன் சித்தப்பா. திருச்சி ஜெயில்ல இருக்கேன்”

அப்பாடா... என் 200 எப்படியும் கிடைச்சிடும்...

“நல்லா இருக்கியாடா? அங்க வசதியெல்லாம் எப்படி? சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குதா?”

அய்யோ... என்னவோ அவன் துபாய்ல இருந்து போன் பேசுவது போல “அங்க ரோடு நல்லா இருக்கா? அரிசி சோறு கிடைக்குதா? மழை பெய்யுதா?”ன்னு குசலம் விசாரிச்சு கிட்டு இருக்கேன். “சரி நீ ஜெயில்ல இருந்து எப்படி போன் பண்ற?” என்றேன்.

“இப்பதான் வீட்டுல இருந்து எனக்கு போன் பண்ணி உங்க நம்பர் கொடுத்து பேச சொன்னுச்சு. இங்க ஒரு நம்பர் இருக்கு. அவசர ஆத்திரத்துக்கு கொடுத்து வச்சிருக்கேன் அதுகிட்ட. சரி விஷயத்தை சொல்லுங்க” என்றான்.

அங்க ரொம்ப பிசி போலிருக்கு அவன். நாலு வரியில் ப்ளாஷ்பேக்கினேன்.

“சரி அவன் பேர் என்ன?’

“தெரியாது”

“பேர் கூட தெரிஞ்சுக்காம 200 ரூவா குடுத்தீங்களே.. நீங்க....”

“இருடா இருடா... கெட்ட வார்த்தை எல்லாம் பேசக்கூடாது. அசிங்கமா இருக்குல்ல”

“சரி அங்க அடையாளம் சொல்லுங்க”

நான் என்ன ஜெயில் வார்டனா? அங்க அடையாளம் பார்த்து வைக்க. அவனுங்க தொழில் ரீதியாவே என்கிட்ட பேசினா நான் என்ன செய்யட்டும்? ஆங்... அந்த முழுக்கை சட்டையில் ஒரு கை மடிச்சு விட்டிருந்தான்னு சொன்னேன்ல... அதிலே முழங்கைக்கு கீழே ஒரு பெரிய வெட்டு தழும்பு. அதை சொன்னேன்.... உடனே சுதாரித்துக் கொண்டான்.

 “வேற எதாவது? வலது தொடைக்கு மேலே இடுப்புக்கு கீழே மச்சம் இருந்துச்சா?”

“டேய் அந்த அளவுக்கு எல்லாம் அவன் தூக்கி காமிக்கலை. அவன் சுன்னத் பண்ணியிருப்பானா இல்லியான்னு எல்லாம் எனக்கு எப்படி தெரியும்?”

‘அட அவன் பாவாடை சித்தப்பா” என்றான்.

“கிருஸ்டியனா?” என்றேன்..

“இல்லை... இந்து தான். அவன் பேரு பாவாடைசாமி. நல்ல பயலாச்சே... ஆனா சரியான திருட்டுப்பய. அவன் கிட்ட போய் யாராவது பணம் குடுப்பாங்கலா? சரி வீட்டுக்கு போங்க. நான் 15 நாளில் வந்துடுவேன். வந்து ரெக்கவர் பண்ணிடலாம். ஆனா அதுக்குள்ள அவன் உள்ள வராம இருக்கனும். எதுக்கும் சாமிய வேண்டிகிட்டு போங்க வீட்டுக்கு” என்றான்.

“என்னடா திருட்டுப்பயல் கிட்டே போனது எப்படி திரும்பி வரும்?” என்றேன்.

“அட சும்மா இருங்க. திருடன்னா எப்போதுமா திருடிகிட்டே இருப்பான். அவனுக்கும் ஆஃப் ட்யூட்டி டைம்னு இருக்கும்ல. அவன் திருடன் தான். ஆனா ரொம்ப  நல்லவன்” 

எனக்கு குழப்பம். ஒரு திருடன் எப்படி நல்லவனா இருக்க முடியும்? 

வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

வீட்டம்மணி “ஏங்க...தியேட்டருக்கு போய் ஒருத்தன் கிட்டே காசு கொடுத்து டிக்கெட் வாங்க சொன்னா ஒரு இடத்திலே நிக்க மாட்டீங்கலா? ஒரு பையன் வந்து ஒரு டிக்கெட்டும் மீதி 50 ரூவாயும் கொடுத்துட்டு போனான். அவன் நிக்க சொன்ன இடத்திலே நிக்க மாட்டீங்கலா?” என்றார்.

அப்பாடா.... கும்பிட்ட தெய்வம் நம்ம காசை காப்பாதிடுச்சு...

“சரி... சரி அவனை உள்ளே விடலையே?”

“அதப்படி? அவன் தான் வெயில்ல வந்திருக்கான். உபகாரம் செஞ்சவனுக்கு ஒரு வாய் மோர் குடுக்க கூடாதா. அவனை உட்கார சொல்லி மோர் குடுத்தேன். டிக்கெட்டும் மீதி காசும் குடுத்துட்டு கால்ல வென்னீர் ஊத்தினது போல கெளம்பிட்டான்”

“சரி டிக்கெட்டை குடு” என சொல்லி வாங்கிக்கொண்டு தியேட்டர் வந்து விட்டேன்.

படம் பார்த்து முடித்தேன். படம் எனக்கு பிடித்து இருந்தது. (அப்பாடா சினிமா விமர்சனம் செஞ்சாச்சு)

படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்த திருப்தியில் வீடு வந்து சேர்ந்த போது என் மனைவி ரொம்ப பிசியாக இருந்தாங்க.

“பசிக்குது. சாப்பாடு எடுத்து வை” என்றேன்.

“இருங்க. டேபிள் மேலே டிவி பக்கத்தில் தான் என் வாட்ச் வச்சிருந்தேன். காணும். கொஞ்சம் தேடிப்பாருங்க. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”

எனக்கு பகீர் என ஆனது. வீட்டு மாடிக்கு ஓடி சுந்தரமூர்த்தியிடம் இருந்து வந்த நம்பருக்கு கால் செய்தேன். யாரோ எடுத்தார்கள். “சுந்தரமூர்த்தி கிட்டே பேசனும்” என்றேன். “உங்க பேர் சொல்லுங்க” என்றார். சொன்னேன். சுந்தரமூர்த்தி லைனுக்கு வந்தான்.

“டேய் வீட்டுக்கு வந்து அவன் டிக்கெட் குடுத்துட்டு வாட்சை திருடிகிட்டு போயிட்டாண்டா?” என்றேன். உடனே அவன் ..

“அவன் தான் திருட்டுப்பயல் என சொன்னேனே?” என்றான்.

“அவன் நல்லவன்னும் சொன்னியே?”

“ஒரு திருடன் எப்படி நல்லவனா இருக்க முடியும் சித்தப்பா? நீங்க என்ன லூசா?” 

கீழே வந்தேன். என் மனைவியிடம்.....

“சரி... இன்னிக்கு எத்தனை மணி வரைக்கும் எனக்கு சந்திராஷ்டமம் இருக்கு?”

“நாளை வரை இருக்கு உங்களுக்கு. நான் வாட்சை தானே தேட சொன்னேன்.  அதுக்குள்ள எதுக்கு மாடிக்கு ஓடினீங்க? இறங்கி வந்து  சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுறீங்க? நீங்க என்ன லூசா?”

ஆமாம்! நான் லூசு தான்” என்றேன்!

December 15, 2019

“தோழர் சோழன்” மீதான என் பார்வை! - அபி அப்பா என்கிற தொல்காப்பியன்.





அது ஒரு அழகிய மழைக்காலம். ஆண்டு 2011, நவம்பர் 5ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகம் “அன்பகத்தில்” அந்த கூடுகை நிகழ்வு. அய்யா சுப.வீரபாண்டியன், டி.கே.எஸ். இளங்கோவன், அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.எஸ், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு, மன்னார்குடியின் புதிய எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா, அசன் முகமது ஜின்னா  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இணையத்தில் செயல்படுபவர்களின் கூட்டம் அது. பார்வையாளர்களும் பேசலாம். தங்கள் கருத்துகளை பரிமாற்றம் செய்து கொள்ள ஒரு வாய்ப்பு அது. அப்போது ஞானமணி என்னும் பையன். பெரம்பலூர் மாவட்டம் சார்ந்த பையன். முதுகலை படிப்பு முடித்து விட்டு அப்போது சென்னையில் முனைவர் பட்டத்துக்கு படித்துக் கொண்டிருக்கின்றார் ஒரு பல்கலைகழகத்தில். பேச ஆரம்பிக்கின்றார்.

சிறிது நேரத்தில் மேடையில் அழ ஆரம்பிக்கின்றார்.  அழுகையினூடே விஷயத்தை சொல்கின்றார். “சார், நான் பெரம்பலூர் மாவட்டம்  சார்ந்தவன். இங்கு நான் படிக்கும் பல்கலைகழக விடுதியில் பெரம்பலூர் காரனா நீ? 2ஜி பணம் எல்லாம் எங்க வச்சிருக்கே? ஒன்னே முக்கால் லட்சம் கோடியை அப்படி எங்கடா பதுக்கி வச்சிருக்கீங்க?” என கேட்கிறாங்க சார். பெரம்பலூர்காரன் என்பதால் ஏன் சார் அவமானம் செய்றாங்க? எங்க ராசா அண்ணன் ஊருக்கே நல்லது செஞ்சவரு சார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பெரம்பலூர்ல நல்லது தான் சார் செஞ்சாரு. எங்களுக்கு ஏன் சார் இந்த கஷ்டம்?” பேசிவிட்டு மீண்டும் அழுகை. கூட்டம் நிசப்தம் ஆனது. அடுத்தடுத்து பலரும் பேசினார்கள். அரியலூர் மாவட்ட செயலாளர் திரு. எஸ். எஸ்.சிவசங்கர் அவர்கள் எழுந்தார். பேசினார். “நான் இங்கே இணையத்தில் நீங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நேரிடையாக சொல்லப்போவது கிடையாது. ஆனால் நீங்கள் எப்படி செயல்பட்டால் வெற்றி என்பதை சொல்கிறேன். இதோ இங்கே பேசிய தம்பி ஞானமணி அவர்கள் 2 ஜி விஷயம் பற்றி பேசி அதனால் அவரை அவமானம் செய்வதாக வருத்தமாக பேசினார். இது 2011ம் ஆண்டு நவம்பர் மாதம். நான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து 6 மாதங்கள் தான் ஆகின்றது. பலருடைய பேச்சுகளும் அத்தனை ஏன்? திமுகவினர் கூட சிலர் “நாம் 2 ஜி விவகாரத்தால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம்” என வெளிப்படையாகவே பேசுவதையும் நாம் காண்கின்றோம். இல்லை. இதே அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் அண்ணன் ஆ.ராசாவின் பாராளுமன்ற தொகுதி இருக்கும் நீலகிரி ஆகிய இந்த மூன்று மாவட்டங்களிலும் நம் திமுக பெற்ற வெற்றி என்பது மூன்றில் இரண்டு பங்கு வெற்றியாகும். இந்த மூன்று மாவட்டங்களில் நாங்கள் வெளிப்படையாக 2 ஜி விஷயத்தையே பரப்புரையாக கொண்டு செயல்பட்டோம். மற்றவர்கள் பேச தயங்கிய போது நாங்கள் பேசினோம். தைரியமாக மக்களை அதே 2 ஜி விஷயத்தை சொல்லி எங்கள் மீது எந்த தவறும் இல்லை என பரப்புரை செய்தோம். தமிழ்நாடு முழுவதும் இதோ மேடையில் இருக்கும் அய்யா சுபவீரபாண்டியன், ஆசிரியர் வீரமணி, அண்ணன் திருச்சி சிவா ஆகியோர் 2 ஜி பற்றிய பரப்புரை செய்தனர். ஆனால் இணையம் வழியாக அப்போது மிகக்கடுமையான பொய்ப்பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்தன. அங்கே இணையத்தில் அப்போது இதோ எதிரே அமர்ந்துள்ள அபிஅப்பா என்கிற தொல்காப்பியன், யுவகிருஷ்னா போன்ற வெகுசிலரே 2 ஜி பற்றி பெரிய பெரிய கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களால் இணையத்தில் அத்தனை பெரிய ஆரிய கூட்டத்தின் பொய்ப்பிரச்சாரத்தை சமாளிக்க இயலவில்லை. இதோ இப்போது எதிரே சுமார் 150 பேர் இருக்கின்றீர்கள். அதில் பாதி அளவு அவர்களுக்கு அப்போது கிடைத்திருந்தாலும் பெரிய மாற்றமே நடந்திருக்கும்.  நான் இதை குறிப்பாக தம்பி ஞானமணிக்கு தான் சொல்கிறேன். நம் மடியில் கனம் இல்லை எனும் போது வழியில் பயம் எதற்கு? அண்ணன் ஆ.ராசா அவர்கள் சிவசங்கரிடம் 500 கோடி கொடுத்து வைத்துள்ளார் என்று கூடத்தான் நான் போட்டியிட்ட அதே குன்னம் தொகுதியில் பொய்ப்பிரச்சாரம் செய்தனர். நான் அங்கு விளக்கம் சொன்னேன். வென்றேன். பயந்து போய் முடங்கினால் மேலும் மேலும் அடி விழும். திமிறி எழு தம்பி ஞானமணி. ஆமாம். நான் ஸ்பெக்ட்ரம் புரட்சியாளர் அண்ணன் ஆ.ராசாவின் மண்ணுக்கு சொந்தக்காரன் தான் என சொல். யாராவது உன்னை கேலி செய்யும் முன்னர் உன்னை அறிமுகம் செய்து கொள்ளும் போதே நான் “ஸ்பெக்ட்ரம் புரட்சி மண் சார்ந்தவன்” என சொல். கேட்பவர்களுக்கு அது ஆச்சர்யம் கொடுக்கும். அப்போது தான் விளக்கம் கேட்பார்கள். அவர்களுக்கு புரியவை. இதோ குன்னம் தொகுதியில் புரிந்து கொண்ட மக்கள் போட்ட ஓட்டுகளால் நான் இன்று எம்.எல்.ஏ ஆனதுபோல நீயும் அவர்களை வெல்வது சுலபம்” 

இது தான் அன்று திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களின் பேச்சு. இதோ “தோழர் சோழன்” நாவலின் கதாசிரியர்  அதே எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் தான். என்னடா இது! இது ஒரு நூல் விமர்சனம் என நினைத்து கச்சேரி பத்து நிமிடத்தில் முடிந்து கார பஜ்ஜி சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என நினைத்து ஏமாந்து போன வாசகர்களே... இது ஒரு ஃபுல் மீல்ஸ் மாநாடு. வந்தது வந்து விட்டீர்கள். தயவு செய்து வாருங்கள் அந்த சோழனோடு பயணிப்போம்.

இதோ அந்த நாவலின் கதாநாயகன் இராஜேந்திர சோழன் என்னும் “சோழன்” . கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன். இசை ஆர்வம் கொண்டவன். இளையராஜா எனில் சுவாசம் அவனுக்கு. பகுதி நேரமாக மேடைகளில் பாடுவான். அன்றும் அப்படித்தான் குருவாலப்பர் கோவிலிலிருந்து  கும்பகோணம் போக வேண்டும்.  மாலையில் குடந்தையில் ஒரு கச்சேரி. அது முடிந்து அடுத்த நாள் காலையில் அங்கேயே கல்லூரிக்கு போக வேண்டும். பேருந்துகள் வரவில்லை. ஏதாவது ஸ்ட்ரைக் ஆக இருக்குமோ என நினைக்கும் போது அரியலூர் அருகே மருதையாறு பாலம் வெடித்து பலர் இறந்து விட்ட செய்தி தெரிகின்றது. குறுக்கு சாலை வழியே போய் சிதம்பரம் - கும்பகோணம் பேருந்தை  பிடித்து கச்சேரி போகின்றான். ”வாய்யா குண்டு வச்ச ஊர்க்காரரே” என வரவேற்பு. அவமானமாக இருந்தது சோழனுக்கு. அடுத்த நாள் கல்லூரி செல்லும் போது சக மாணவர்கள் மத்தியில் அதே போன்ற பரிகாசங்கள். நொந்து போகின்றான். அதே கல்லூரியில் ஜெயம்கொண்டான் பகுதியில் இருந்து ஒரு விரிவுரையாளர் இருக்கின்றார். அவரிடம் செல்கின்றான். “வாங்க தோழர்” என அழைக்கின்றார். வாங்க தோழர் எனும் அந்த வார்த்தை பிரயோகமே அவனை கொல்கின்றது. ”என்ன சார், நீங்களுமா?” என்கிறான் சோழன். பின்னர் அந்த விரிவுரையாளர் ஒரு அழகான சமாதானம் சொல்கின்றார் அந்த மாணவன் சோழனுக்கு.

இதோ பசுமாட்டை கொண்டு வந்து தென்னை மரத்தில் கட்டி விட்டேன் வாசகர்களே! ஞானமணி தான் அந்த சோழன். ஜெயம்கொண்டான் விரிவுரையாளர் தான் எஸ்.எஸ் சிவசங்கர். 2 ஜி விவகாரம் தான் மருதையாறு பாலம் குண்டு வெடிப்பு. கச்சேரி தோழர்களும், கல்லூரி மாணவர்களும் தான் சமூகம். இன்னும் சொல்லப்போகின் சிவசங்கர் சாரின் சொந்த ஊர் ஜெயம்கொண்டான் தான் மற்றும் ஞானமணியின் சொந்த ஊர் தான் பெரம்பலூர் மாவட்டம். என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். ஆக பத்து பொருத்தம் பக்காவாக இருக்கும் போது நான் ஏன் அந்த பசுவை தென்னை மரத்தில் கட்டக்கூடாதுங்குறேன்.




விஷயத்துக்கு வருவோம். கதையின் களம் என்பது பெரம்பலூர், அரியலூர் மாவட்ட கிராமங்கள் மற்றும் அந்த முந்திரிக்காடு பகுதிகள். கதையின் களம் என்பது தான் மிக முக்கியம். நான் சில காலம் முன்பாக ஒரு கதை படித்தேன். என் நண்பர் ஒருவர் எழுதி அனுப்பியிருந்தார். கிருஷ்ணகிரி சார்ந்தவர். தான் கதை நன்றாக எழுதுவதாக அவரே பலமுறை சொல்லியிருக்கின்றார். அவர் ஒரு கதை எழுதி எனக்கு அனுப்பி பல ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எப்போதாவது போன் செய்யும் போது “ஏங்க, நான் அனுப்பிய கதையை பத்தி இன்னனும் ஒன்னும் சொல்லலையே?” என வருந்துவார். நான் அதை இன்னமும் படித்து முடித்தபாடில்லை. காரணம் கதையின் ஆரம்பம் தான். ஆரம்பத்திலேயே கதை கந்தல் ஆகிவிட்டது. அவர் காவிரி டெல்டா பகுதி பற்றிய கதை எழுத ஆரம்பித்துள்ளார். அதாவது கதாநாயகன் மயிலாடுதுறை பக்கமாக செம்பனார்கோவில். நாயகன் தன் ஆட்டை மேய்க்க செல்கின்றான். “நம் குப்புசாமி செம்பனார்கோவிலில் இருந்து கிழக்காக 25 கிமீ தொலைவில் இருக்கும் மலையில் தன் ஆடுகளை மேய்த்து விட்டு வீடு திரும்பினான். திரும்பும் போது இருட்டி விட்டது. அவன் கண்கள் சுழண்டு மயக்க நிலைக்கு வந்து விட்டான்” இப்படியாக ஆரம்பிக்கின்றது கதை. அத்தோடு என் கண்கள் சுழன்று விட்டது. அப்போது மூடி வைத்தது தான் அந்த கதையை. ஆக ஒரு கதைக்கு களம் என்பது அத்தனை முக்கியம். அது போல கதையின் காலம் அதை விட முக்கியம்.இங்கே  கதையின் காலம் என்பது 1985 முதல் சுமார் 1989 வரையிலான காலங்கள். கதை நடக்கும் காலங்களில் எம்ஜிஆர் உயிருடன் இருந்தார். மரித்தும் போகப்போகின்றார். இந்திரா அம்மையார் இறந்து விட்ட காலத்தின் அருகேயான காலம். ராஜீவ் பிரதமர். அண்ணா அறிவாலயம் திறக்கும் நேரம். வன்னியர் சங்கம் உச்சகட்டமாக மரங்களை வெட்டி இட ஒதுக்கீட்டு போராட்டம் நடத்திய காலம். இன்னும் சொல்லப்போனால் பாமக என்னும் கட்சி தோன்றவே இல்லாத காலம்.

ஆக நாவலாசிரியருக்கு கதையின் களமும், காலமும் அழகாய் கைகூடி வந்து விட்டது. இனி கதை என்பது அவருக்கு சுலபமான விஷயமாகிவிட்டது. தன் பதின்ம வயதுகளில் பார்த்த, கேட்ட கதைகளை ஒரு பார்வையாளராக தூர நின்றும், அந்த கதையின் போக்கில் சென்று பார்த்தும் எழுத ஆரம்பிக்க வேண்டிய வேலை மட்டுமே அவருக்கு மீதமிருந்தது. அவதானித்ததை அழகிய விறுவிறுப்பான எழுத்து நடையில் கொண்டு வருவது ஒரு சவால். ஆனால் நூலாசிரியருக்கு அது பெரிய விஷயமில்லை. ஏனனில் எழுத்து அவருக்கு வசியப்பட்ட விஷயம். சரி கதை என்பது உண்மை கதையா? புனைவா? அல்லது கற்பனையா (புனைவு வேறு கற்பனை வேறா என்ன?)  ... இது அக்மார்க் உண்மை கதை தான். கதாபாத்திரங்கள் சிலரது பெயர் மாற்றப்பட்டிருக்கலாம். சில கதாபாத்திரங்கள் கற்பனையாக உள்ளே வந்திருக்கலாம். அது போல ஒரு +2 படிக்கும் அல்லது கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு இளைஞனின் பார்வையாகத்தான் கதை இருக்கின்றது என்றே அவதானிக்கின்றேன். இன்னும் சொல்லப்போனால் தன்னை தான் சார்ந்த பூமிப்பகுதியை 1000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட இராஜேந்திர சோழனாக கற்பிதம் செய்து கொண்டும், அது போல இளையராஜாவை தன் மூச்சாய் சுவாசிக்கும், மேலும் தன்னை ஒரு பாடகனாக நினைத்துக் கொண்டு இசையை இரண்டற காதலிக்கும் ஒரு பையனின் பார்வை, அந்த வயதுக்கே உரிய புரட்சிகளின் மீதான ஈர்ப்பு கொண்ட, ஒரு சிறுவனுக்கும் இளைஞனுக்கும் இடைப்பட்ட  பருவம் கொண்ட ஒரு பார்வையாளன் “சோழன்” தான் நூலாசிரியர் என்றே கடுமையாக அவதானிக்கின்றேன்.  என் அவதானிப்பு தவறாகக்கூட இருக்கலாம். வெட்டுப்புலி நாவல் போன்றோ அல்லது இருவர் திரைப்படம் போன்றோ பம்மாத்துகள் செய்யாமல் எம்.ஜி.ஆர், ஈழத்தின் கேனல் குணேந்திரன், பிரபாகரன், தழித்தமிழ்நாடு கோரும் விடுதலைப்படை இயக்கத்தின் தலைவர் தமிழரசன், டி ஜி பி ஸ்ரீபால்,  வன்னியர் சங்கம், மருதையாறு பாலம் குண்டு வெடிப்பு, வெடிப்பு நடந்த தேதி, பொன்பரப்பி ஸ்டேட் வங்கி கொள்ளை என அப்பட்டமாக உண்மை கதையாக எழுதப்பட்டுள்ளது.

விஷயம் இது தான். “சோழன்” அந்த முத்திரிக்காட்டு பகுதியில் வாழும் ஒரு கல்லூரி மாணவன். விவசாயக்குடும்பம் சார்ந்தவன். கிராமிய மேடை நாடகம், இசைக்கச்சேரி (ஆர்கெஸ்ட்ரா) போன்றவைகளில் ஆர்வம் கொண்டவன். ஒரு நாள்பாடும் போது ஒரு பெரியவர் ..பெயர் பிச்சைபிள்ளை என்பவர் விருப்பப்பாடலாக எழுதிக்கொடுத்த துண்டு சீட்டில் இருக்கும் கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தின் புரட்சிகர பாடலை பாடுகின்றான். பின்னர் அந்த பெரியவர் அழைப்பின் பேரில் புரட்சிகர அமைப்புக்காக பாடுகின்றான்.அமைப்பின் மீது ஏதோ ஒரு நியாயம் இருப்பதாக உனர்கின்றான். அதை செயல்படுத்தவும் ஆசைப்படுகின்றான். எப்படி? டியூஷனுக்கு மாணவர்களை கட்டாயமாக வரச்சொன்ன ஒரு வாத்தியாரை தலையில் துண்டு போட்டு மூடி அடித்து திருத்தும் அளவுக்கு அந்த இயக்கத்தின் மீது அவனை அறியாமல் ஒரு ஈர்ப்பு வருகின்றது. மீன்சுருட்டிக்கு உரம் வாங்க போகும் போது ஒரு செங்கொடி போராட்டத்தை பார்க்கின்றான். ஒரு ஆதிதிராவிட சமூக பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர்களை கைது செய்ய சொல்லி நடக்கும் போராட்டம். அங்கே காவல்துறையின் தடியடி.  அடிக்கும் கம்பு ஒன்று தான். அடிவாங்கும் சதையும் ஒன்று தான். ஆனால் அதை காவலர்கள் செய்தால் அது தடியடி. மற்றவர்கள் செய்தால் அடிதடி. ஆஹா தமிழ் எப்படி பிரித்து மேய்கின்றது பாருங்கள். ஆக அந்த தடியடி நம் சோழனை வெகுவாக பாதிக்கின்றது.

சோழனை பாட அழைத்த பிச்சைபிள்ளை வாயிலாக பெரியவர் என்னும் இயக்க தலைவர் தமிழரசன் பற்றி அறிகின்றான். மேலும் ஈர்ப்பு வருகின்றது. இயக்கம் செய்வது எல்லாம் மக்கள் நலனுக்கே என்னும் கருத்து விதை அவனுள் ஆழமாக பதியம் ஆகின்றது.

இயக்கம் ஈழத்தில் இருக்கும் பிரபாகரனுக்கு ஆதரவாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் அமரிக்கா போன பின்னர் ஆதரவு இழந்த நிலையில், இந்திராவும் மறைந்து விட்ட நிலையில், ராஜீவ் அத்தனை ஆதரவாக புலிகளுக்கு இல்லாத காலத்தில் தமிழக மக்கள் ஆதரவை நாடுகின்றனர். அதற்கு தமிழரசன் போன்றவர்கள் உதவுகின்றார்கள். இப்படியான நிலையில் தான் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி மருதையாறு பாலத்தை தகர்க திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் நோக்கம் மக்கள் இழப்பு அல்ல. பாலத்தை மட்டும் தகர்க்க வேண்டுமென்பதே என நாவல் சொல்கின்றது. நம்புவதும் நம்பாததும் வாசகர்கள் முடிவு. ஆனால் திட்டம் திசைமாறி சுமார் 30 பேர் உயிரிழப்பு ஆகின்றது. சோழன் அப்போது தான் குடந்தை கல்லூரியில் “குண்டு வைத்த ஊர்க்காரன்” என அவமானப்படுத்தப்படுகின்றான்.  இதோ இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோமே அந்த நிகழ்வு தான் அது!

ஒரு கட்டத்தில் இயக்கம் நடத்த பணம் தேவைப்படும் போது பொதுமக்களிடம் இருந்து பணம் பெறுவது அவர்கள் இயக்க கொள்கைக்கு விரோதமானது என்பதால் எந்த அரசாங்கத்தை எதிர்த்து போராடுகின்றார்களோ அதே அரசாங்கத்திடம் இருந்து பணத்தை அடிக்கும் விதமாக பொன்பரப்பி ஸ்டேட் வங்கியை கொள்ளை அடிக்க இயக்கம் முடிவெடுக்கின்றது. எல்லோரும் மறந்து விட்ட அந்த செப்டம்பர் முதல் தேதி 1987 பொன்பரப்பி ஸ்டேப் வங்கி கொள்ளை சம்பவம் நடக்கின்றது. ஒரு மிகத்தேர்ந்த எழுத்தாளர்கள் மட்டுமே இப்படி ஒரு நிகழ்வை இயக்கம் திட்டம் தீட்டியது முதல் அப்போது யார் யார் எந்த பகுதிகளில் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதும், பயன்படுத்தப்போகும் வாகனம் எது? எந்த வழியே தப்பிப்பது? என்ன விதமான ஆயுதங்கள் என்பதையும், அதே போல போலீஸ் தரப்பில் டி.எஸ்.பி முதல் ஆர்ம்டு போர்ஸ் வரை எங்கே எங்கே எப்படி நிற்க போகின்றார்கள் என்பதையும், கடைசி நேரத்தில் வந்து இணைந்து கொண்ட எஸ்.பி ஒரு வாடிக்கையாளர் போல ஒரு கைத்தறி சொசைட்டியில் போய் அமர்ந்து கொள்வதும் என மிக நேர்த்தியாக எழுதியுள்ளார் நூலாசிரியர். சீட் முனைக்கு ... சீட் முனைக்கு என்பார்களே.... இந்த அத்தியாயங்கள் எல்லாம் அது போல அதிரிபுதிரி வகை எழுத்துக்கள்.

இந்த பதிவை எழுதும் நான் பொன்பரப்பி சம்பவம் நடந்த போது டிகிரி முடித்துவிட்டு சென்னையில் வேலையில் இருந்த நேரம். அப்போது ஒரு நாள் மாலை முரசில் “பொன்பரப்பி வங்கி கொலையில் தீவிரவாதி தமிழரசனை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்” என தலைப்பிட்டு வந்த போது “நல்லா வேணும் ராஸ்கல்ஸ்” என என் மனது குதூகலித்தது. ஆனால் காலம் பல கடந்து இந்த நாவல் வழியே தான் தெரிகின்றது அதனுல் இருந்த அரசியல் புதிர்கள்! இதோ இன்று கூட பொன்பரப்பியில் ஸ்டேட் பேங் அதே இடத்தில் இருக்கின்றது. அருகில் “பொதுமக்கள் செய்த வீர தீர செயலுக்காக” ஒரு சமுதாயக்கூடத்தை கட்சி அன்பளிப்பாக ஸ்டேட் வங்கி கொடுத்துள்ளதையும் பார்க்கலாம். சரித்திரம் எப்படியெல்லாம் மாற்றி எழுதப்படுகின்றது என்பதை இந்த நாவல் படித்து முடித்த பின்னர் நீங்கள் அறிவீர்கள். யார் கண்டது... நாளையே வீரப்பன் உயிரை குடித்த ரிவால்வர் இது தான் என ஒரு துப்பாக்கி அருங்காட்சியகத்தில் “மோர் குவளை”க்கு பதிலாக வைக்கப்படக்கூடும்... 

இந்த அத்தியாயத்தின் போதே சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலைய கதை ஒன்றை   உள்ளே நுழைக்கின்றார் நூலாசிரியர். கதையின் ஆரம்பத்திலிருந்து கதாநாயகனாக இருந்த நம் சோழன் இயக்கத்தின் தலைவர் கதையின் உள்ளே நேரிடையாக உள்ளே நுழைந்ததும் “பெரியவர்” தான் நாயகன் என ஆகும் அளவு ஆகிவிட்டது. அது அப்படித்தான் ஆகும் என நினைத்து நூலாசிரியர் கனகத்தின் கதையை உள்ளே கொண்டு வந்து மீண்டும் “சோழனுக்கு” பட்டாபிஷேகம் செய்து வைக்கின்றாரோ என சந்தேகம் எழுகின்றது. ஆனால் “முந்திரிக்காட்டின் புரட்சி” என்னும் கதையும் “கனகத்தின் கண்ணீர் காவியம்” என்னும் நாவலும் “சோழன்” என்னும் கயிறு கொண்டு அழுத்தமாய் கட்டி “இந்த காரணத்துக்காகத்தான் கனகத்தை உள்ளே கொண்டு வந்தேன் என அழகாய் நூலாசிரியர் வாசகர்களை நம்ப வைப்பது அபாரம். வில்லனை துரத்திக் கொண்டு பாலக்கோடு செல்வதும், மலையுச்சி,  மலையூர், புலிரசம் என அசத்தலாகப்போகின்றது. இந்த கதையில் போலீசாரே வில்லன்கள். நல்ல போலீஸ்களான கணபதி ஏட்டு, அப்துல்லா எஸ்.ஐ, மற்றும் மந்திரி அழுத்தத்தால் மாற்றலாகிப்போகும் எஸ்.பி என ஒரு நல்ல போலீஸ் குழுவும் இருக்கின்றது. அவர்களோடு சேர்ந்து சோழனும் ஓடுகின்றான். கடைசியில் வில்லன் போலீஸ் ராமசுந்தரமும், குத்தாலம் சம்பந்தம் பி.சியும் என்ன ஆனார்கள்? சோழன் சம்ஹாரம் செய்தானா? அல்லது பாதிக்கப்பட்ட வேறு யாராவது சம்பவம் செய்தார்கலா? அல்லது இதையெல்லாம் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையின் எஸ்.ஐ அப்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தினாரா? எல்லாமே அருமையாக கோர்வையாக தந்துள்ளர் நூலாசிரியர்.

சின்ன வயதில் 45 காசு டிக்கெட் எடுத்து விட்டு மணலை குவித்து சாய்மானத்துக்கு பெண்கள் பகுதியையும் ஆண்கள் பகுதியையும் பிரிக்கும் சின்ன கட்டை சுவற்றில் சாய்ந்து கொண்டு ரீல் எத்தனை என பார்க்கும் போது  24 ரீல்கள் என காட்டினால் ஒருவித சந்தோஷம் வருமே... அது போல 49 ரூபாய்க்கு இரண்டு நாவல்கள் படித்த திருப்தி... அதே நேரம் இரண்டுமே விறு விறு ரகம்... அருமை சிவசங்கர் சார். 

நாவலின் பல பகுதிகள் குறிப்பாக அந்த முந்திரிக்காட்டின் முழு வரைபடத்தையும் எழுத்தால் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அழகு, மருதையாறு பாலம் குண்டு வைக்கும் முன்பாக போராளிகள் போடும் ஸ்கெட்ச், அது போல பொன்பரப்பி வங்கி கொள்ளைக்கு போகும் போது போடும் திட்டம், அதே நேரம் போலீசார் போடும் திட்டம், மலையூர் கிராமம், பாலக்கோடு பகுதிகள், இயக்க பாடல் பாடிவிட்டு கு.வல்லம் கிராமத்தில் ஒரு ஆதிதிராவிடர் வீட்டில் சாப்பிடும் முந்திரிக்காய் சாம்பார், கனகத்தின் கண்ணீர் கதை, நதியா என்னும் பிஞ்சு கருகி சாவது, கணபதி ஏட்டின் இரக்க சுபாவம், எஸ்.பியின் நேர்மை... இப்படியாக பல கதாபாத்திரங்களும் நம்மோடு வாழ்கின்றன.

குறிப்பாக செயராஜ் மற்றும் அப்துல்லா பாத்திரங்கள். நாவலைப்படித்தவர்கள் அடடே அது என்ன செயராஜ் கூட அப்துல்லாவை ஒப்பிடலாம் என கேட்கலாம். இந்த நாவலில் இந்த இருவர் மட்டும் தான் தென்னை மரத்துக்கு ஒரு குத்து, பனை மரத்துக்கு ஒரு குத்து என இரண்டு குத்து குத்தும் ஆசாமிகள். செயராஜ் என்பவன் இயக்கத்தின் பெரியவர் கூடவே இருந்து தொன்னை மரத்துக்கு ஒரு குத்தும் பின்னர் தனியாக டி எஸ் பி வீட்டுக்கு சென்று பனை மரத்துக்கு ஒரு குத்தும் போடும் துரோகி. கிட்டத்தட்ச அந்த இயக்கம் வேரோடு சாய்ந்தமைக்கு அவனும் ஒரு காரணம். 87களில் அவன் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு இயக்கத்தை காட்டிக்கொடுத்து தமிழரசன் மரணத்துக்கு காரணமாகின்றான். அனேகமாக இன்று அவன் ஒரு அரசு அதிகாரியாக இருக்கலாம். தமிழரசனை கொல்ல உதவியதுக்காக அவனுக்கு வேலை கிடைத்து இன்றைக்கு 34 ஆண்டு சர்வீசில் சுத்து வட்டாரத்தில் எங்காவது தாசில்தாராக இருந்து பாக்கெட் நிரப்பிக் கொண்டிருக்கலாம்.  கிட்டத்தட்ட அப்துல்லா பாத்திரமும் அப்படித்தானே. என்ன ஒன்று அப்துல்லா இருப்பது அரசாங்க உத்யோகம். ஆனால் மலையூர் மலையில் அப்துல்லா “சோழனை” வழிகாட்டும் விதம் பேச்சளவில் நன்றாக இருக்குமே தவிர “குச்சி இருக்குதா (ஜெலட்டின்) கையிலே... அவனுங்க மூஞ்சில போடு” என சொல்வது, தான் இருக்கும் அரசாங்க உத்யோகத்துக்கு ஏற்ற செயலாக எனக்கு தெரியவில்லை. அதனால் தான் செயபால் கூட ஒப்பிடுகின்றேன். படிக்கும் போது மேலும் அதை உணர்வீர்கள்!

இந்த நாவல் வந்ததும் உளவுத்துறை எல்லாம் அமேசான் கிண்டில் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து 49 ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கி கசக்கி கசக்கி கண்களை கூர்தீட்டியது என தினசரிகளில் வந்த செய்தியை படித்தேன். சாராயம் காய்ச்சுவது எப்படி என விலாவாரியாக நம் தோழன் கிழுமாத்தூர் மகி ஒரு பதிவு போட்டால் அது சட்டப்படி குற்றம் தான். ஆனால் முடிவில் இரண்டு வரிகள் “இப்படிப்பட்ட சாராயம் உடலுக்கு தீங்கு. ஆகவே இப்படியெல்லாம் காய்ச்சி குடிக்காதீர்கள்” என எழுதிவிட்டால் அது நீதிபோதனை பதிவாகிவிடும். பல வன்முறை சினிமாக்கள் அதைத்தான் செய்கின்றன. ஆனால் இந்த நாவல் அது போன்ற பூசிமெழுகும் வேலை எல்லாம் செய்யவில்லை. தீவிரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை. அதை வளர்க்கும் விதத்தில் மூளைச்சலவை செய்யவும் இல்லை. நடந்த சம்பவத்தை ஒரு கதைசொல்லியின் பார்வையிலிருந்து சொல்கின்றது. அப்படியும் நாவலாசிரியர் ஒரு கட்டத்தில் அப்துல்லாவை வைத்து கால் பக்கம் நீதிபோதனையும் செய்வார் நம் சோழனுக்கு. ஆகவே உளவுத்துறை அந்த கால் பக்கத்தை கிழித்து கக்கத்தில் வைத்துக் கொண்டு மேலிடத்தில் சென்று “நத்தின் சார் நத்திங்... எவ்வரிதிங் ஓக்கே சார்” என போகவேண்டியது தான்.

இந்த நாவலில் குறைகள் இல்லையா எனில்... உண்டு... ஒரு சில இருக்கத்தான் செய்கின்றது. அதல்லாம் நெக்லிஜிபிள். எழுத்தாளர் சுஜாதா சொல்வார்... ஒரு அறையின் உள்ளே நுழையும் போது சுவற்றில் ஒரு கடிகாரம் மாட்டியுள்ளதை எழுதினால் பிற்பாடு கதை நகரும் போது அந்த கடிகாரம் ஏதாவது வேலை செய்ய வேண்டும். ஏன் அதை எழுதினோம் என்பதற்காக அது மணி காட்ட வேண்டும். அல்லது கீழே விழுந்து உடையவாவது செய்யனும் என்பார். அது போல மருதையாறு பாலத்தகர்ப்பு விபத்தில் மாட்டப்போகும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் சென்னை எக்மோரில் கிளம்ப தயாராக இருக்கின்றது.  திருச்சி சங்கம் ஓட்டல் உரிமையாளர் சின்னபாபு ஏ.சி கோச்சில் ஏறுகின்றார். காங்கிரஸ் மாநில தலைவர் பழனியாண்டி மற்றும் அப்போது புதிதாக ராஜீவ் அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்த ப.சிதம்ப்ரம் ஆகியோர் பெயர்கள் ஏ.சி கோச் பட்டியலில் இருக்கு, ஆனால் அவர்கள் ஏறவில்லை. பின்னர் விபத்து நடந்து முடிந்ததும் திருச்சிக்கு விமானத்தில் வந்து இறங்கிய விமானத்தில் இருந்து சிதம்பரம் அதன் பின்னர் மாதவராவ் சிந்தியா ஆகியோர் வருகின்றார்கள். ஆக சிதம்பரம் அந்த ரயிலை தவற விட்டு விட்டார் என கொள்வோம் போகட்டும். ஆனால் சங்கம் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் வைர வியாபாரி அசோக் கோபால்  ஆகியோர் பற்றி ரயில் ஏறும் போது சிரத்தையாய் எழுதிய நூலாசிரியர் விபத்து நடந்ததை விளக்கி எழுதும் போது அவர்கள் மாண்டார்களா அல்லது மீண்டார்களா என்பது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்பது சின்ன குறை.

இரண்டு விஷயங்கள்....

1. கலைஞர் அடிக்கடி சொல்வார்... அய்யா பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவை பார்த்திராவிட்டால் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று. நல்லது தலைவர் கலைஞர் அவர்கள் பெரியார், அண்ணாவை பார்த்தது பல நன்மைகளை தமிழகத்துக்கு கொடுத்தது. பார்த்திராவிடில் கலைஞரும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகி யாருக்கும் பயன்படாமல் போயிருப்பார். 

2. இந்த நாவலில் சோழனின் வாக்குமூலம் ... “நான் மட்டும் பெரியவரை (அதாவது தமிழரசனை) பார்த்து இருந்தால் இந்த வர்க்கப்போராட்டத்தின் வழியே   “நியாயங்களை” வழங்கியிருப்பேன்” என்பான். அதாவது நம் “சோழன்” தீவிரவாத நக்சல் இயக்கத்தின் வழி சென்றிருப்பான். ஆனால் வென்றிருப்பானா என்பது விடை தெரியா விஷயம். ஆனால் நல்லவேளை தமிழரசனை பார்க்கவில்லை. அனேகமாக அதன் காரணமாக இப்போது அதே பகுதியில் ஜனநாயக வழிப்படி மக்களை சந்தித்து வாக்குகள் பெற்று ... யார் கண்டது அந்த பகுதி எம்.எல்.ஏ கூட ஆகியிருக்கலாம்! 



நூலின் ஆரம்பத்தில் மறைந்த பெரியவர் எஸ்.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு நூலாசிரியர் நன்றி தெரிவித்து ஒரு பக்கம் இருக்கின்றது. அய்யா அவர்கள் ஆண்டிமடம் ஒன்றிய பெருந்தலைவர் பின்னர் ஆண்டிமடம் சட்டமன்ர உறுப்பினர் ஆக இருந்த காலத்தில் இயக்க தோழர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில்  அரசியல் பொதுநீரோட்டத்தில் இணைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு பெரம்பலூர், அரியலூர் பகுதிகள் அமைதியாக இருக்க இதுவும் ஒரு காரணம் என்றே கருதுகின்றேன். அவர்கள் திமுகவோ, அதிமுகவோ, அவ்வளவு ஏன் பாமக மற்றும் விசி போன்ற சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளில் கூட இருக்கட்டும். ஆனால் அவர்கள் வீடுகளில் நிம்மதியான உறக்கம் இப்போது இருக்கின்றதே... அந்த முயற்சியை எடுத்த அய்யா எஸ். சிவசுப்ரமணியன்  அவர்களுக்கு நூலை சமர்ப்பணம் செய்தமையே அருமையான செயல்!


மொத்தத்தில்  ”தோழர் சோழன்” அவசியம் படிக்க வேண்டிய நாவல்! கரும்புரவியில் சோழன் ராஜபாட்டையில் வாயுவேகம், மனோவேகத்தில் பறக்கின்றான்!

- அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்