பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label அனுபவம்/ நகைச்சுவை மாதிரி. Show all posts
Showing posts with label அனுபவம்/ நகைச்சுவை மாதிரி. Show all posts

December 30, 2019

சிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்!




ஒரு சினிமா பார்க்க போனது குத்தமாய்யா என நினைக்கும் அளவு ஆனது சிவகார்த்திகேயனின் “ஹீரோ” பட அனுபவம். அதுவும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க நினைத்தது தான் என் மாகுற்றம். காலையில் தியேட்டரில் நுழையும் போதே அத்தனை கூட்டம். கியூவில் நின்று டிக்கெட் எடுக்கவும் வெட்கம். “சபரிமலைக்கு மாலை போட்டவர்களுக்கு ஆச்சாரமான தனி கியூ”வெல்லாம் கொடுக்காத தியேட்டரின் அராஜகம்... அதை விடுங்கள். தனிப்பதிவாக போடும் அளவு பக்தாள்ஸ்க்கு கொடுமை நடக்கின்றது இந்த பெரியார் பூமியில்!

யாராவது சிரித்த மூஞ்சியான் வருவான், டிக்கெட் எடுத்து தருவான் அல்லது தியேட்டர் ஓனரோ, அவ்வளவு ஏன் சிவகார்த்திகேயனோ கூட வந்து “அடடே அபிஅப்பாவா இது? நீங்கல்லாம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா தியேட்டரை பசு மாதிரி கயித்தை கட்டி உங்க வீட்டுக்கு ஓட்டி வந்து படத்தை போட்டு காமிக்க மாட்டேனா? சரி சரி உள்ளே வாங்க” என அழைத்துப்போவார்கள் என்றெல்லாம் அதீத கற்பனை செய்து கொண்டே அங்கிருந்த ஒரு பூச்செடி நிழலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது தான் இந்த பதிவின் “ஹீரோ” வந்தான். கவனித்து படிக்கவும். படத்தின் ஹீரோ அல்ல! பதிவின் ஹீரோ!

பார்க்க ரொம்ப சுமாராக செம்பட்டை தலையுடன், கசங்கிய பேண்ட், அதற்கு சம்பந்தமில்லா ஒரு முழுக்கை சட்டை அதில் ஒரு கை மட்டும் மடித்து விட்டு வாயில் பான்பராக் குதப்பலோடு அருகே வந்தான். “சார்... நிங்க தானே தொல்காப்பியன்?”

ரொம்ப அசிரத்தையாக “ஆமாம்” என்றேன்!

“சித்தப்பா உங்களை எனக்கு தெரியும். என்னை தான் உங்களுக்கு தெரியாது” என்றான்.

எனக்கு குழப்பம். இந்த மாதிரி எனக்கு யாரையும் தெரியாதே என நினைத்துக் கொண்டு... “நீங்க?” என எழுத்தேன். சித்தப்பா என்று உரிமையாக வேற சொல்றான்!

“சித்தப்பா, சுத்தரமூர்த்தி ஃப்ரண்டு நான்”

“எந்த சுந்தரமூர்த்தி?” என்றேன்.

“கொரநாடு... ஆட்டோ கூட ஓட்டுவானே. அதான் அடிக்கடி ஜெயிலுக்கு எல்லாம் போவானே அந்த சுந்தரமூர்த்தி தான்”

எனக்கு ஞாபகம் வந்து விட்டது. பதிமூன்று ஆண்டுகள் முன்பாக ஒரு மண்டலத்துக்கு நான் ஒரு நாய் வளர்த்தேன்.  என்னை ஆறுமாதத்துக்கு ஒரு தபா என நாய் கடித்து வைப்பதை ஏற்கனவே பக்கம் பக்கமாக நான் எழுதி தொலைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். அந்த நாய்கடி சாபத்தை போக்க ஒருத்தன் குடுத்த ஐடியா அது. “டேய் மச்சி, நீயே ஏன் ஒரு நாய் வளர்க்க கூடாது? நீ ஒரு நாய்க்கு ஓனரா ஆகிட்டா மத்த நாயெல்லாம் “ஒரு நாயோனரை நாம கடிக்கக்கூடாது” என அதுங்க சங்கத்திலே முடிவெடுத்து உனக்கு போட்ட “ரெட்கார்டை” வாபஸ் வாங்கிடலாம்ல. அதனால நீ இன்ன்னிக்கே ஒரு நாய் வாங்குற. நாயோனர் ஆகுற” என அருள்வாக்கு கொடுத்து விட்டு மறைந்து விட்டான். நானும் நாய்படாத பாடு பட்டு ஒரு கருப்பு கலர் பொமரேனியன் 1000 ரூபாய் கொடுத்து  வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்தேன். வந்ததுமே சண்டை வீட்டிலே.

“நம்ம வீட்டிலே இதல்லாம் பழக்கமில்லை. தவிர அதை என்னால மெயிண்டெய்ன் பண்ணல்லாம் முடியாது. வேண்டுமானா உங்களுக்கு சோறு வைக்கும் போது அதுக்கும் ஒரு தட்டு வைக்கிறேன். ஆனா அது கக்கா போவதை எல்லாம் என்னால சுத்தம் பண்ண முடியாது. எங்கப்பா என்னை ராணி மாதிரி வளர்த்தாங்க” என பிலுபிலுவென பிடித்துக் கொண்டார் என் சகதர்மினி. ராணியே நாய் வளர்க்கும் போது ராணி மாதிரி வளர்க்கப்பட்டவங்க நாய் ஆய் போனா சகிச்சுக்க மாட்டாங்களா என நினைத்துக் கொண்டு நாய் மெய்ண்டெய்னர் ஒருத்தனை தேடி மீண்டும் நாய் போல அலைந்த போது தான் இந்த சுத்தரமூர்த்தி ஆபத்பாந்தவனாக வந்தான். தூரத்து உறவு தான். படிக்க போகலையாம். தினமும் ரெண்டு வேளை வந்து நாயை கக்கா அழைத்துப்போய் வந்து குளிக்க வைத்து விட்டு போகனும் என்னும் ஒப்பந்த அடிப்படையில் வந்தவன். சுத்தி வளைத்து நான் அவனுக்கு சித்தப்பா முறை என்பதை என் அம்மா அரைமணி நேரம் விளக்கியதால் அவன் அன்று முதல் சித்தப்பா என அழைக்க தொடங்கினான்.

ஒரு நாள் அவன் ட்யூட்டியில் இல்லாத நேரம் என் நாய்க்கு அவசரம்... கக்கா போய்விட்டது. என் வீட்டம்மணி வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து “இனி இந்த வீட்டில் நாய் இருக்கனும் இல்லாட்டி நீங்க இருக்கனும். நீங்களே முடிவெடுத்துக்குங்க” என கறாராக சொல்லிவிட வீட்டுக்கு ஒரு நாய் போதுமென்கிற மனோநிலையில் 48 நாள் நாயோனராக இருந்த நான் அதை விற்க முடிவெடுத்து விட்டேன். நாயின் ஆரம்பவிலை.... நமக்கு லாபம் எதுவும் வேண்டாம் என முடிவெடுத்து அதே 1000 என நிர்ணயித்து விலை பேசி, அதை யாரும் வாங்க முன்வராததால் அதை 800 ஆக குறைத்து பின்னர் நான் தான் விலையை ”குரைத்து குரைத்து” 100 ரூபாய்க்கு ”இங்கே அழகிய பமரேனியன் கிடைக்கும்” என என் கழுத்தில் போர்டு மாட்டிக்காத குறை தான். அப்பவும் யாரும் முன்வராத காரணத்தால் “இங்கே கருப்பு பமரேனியன் குட்டியும் கூடவே அசோசரீஸ் (கட்டும் சங்கிலி, சாப்பிடும் தட்டு) இலவசம் என சொல்லியும் .... பின்னர் நாயும், அசோசரீஸ் மற்றும் 200 ரூவாய் தரப்படும் என்னும் நிலைக்கு நான் வந்தேன். போணியாகவில்லை. நாயும் நானும் அலையாத தெரு இல்லை. “சார்... நாய் வாங்கலையோ நாய்” என்று கூவாத குறை தான். சில உறவினர்கள் என்னை பார்த்ததும் கதவை மூடும் நிலைக்கு வந்து விட்டார்கள் என்பதை உணர்ந்தேன். அப்போது தான் சுந்தரமூர்த்தி மீண்டும்  வந்தான். நானோ லீவ் முடிந்து துபாய் திரும்பும் நாளும் வந்தது. குடும்பத்துடன் சினிமா, கோவில் என அலைய வேண்டிய நான் நாயோடு அலைந்தேன்.

“சித்தப்பா, சூப்பர் பார்ட்டி கொண்டு வந்திருக்கேன். நீங்க படும் கஷ்டத்தை சொன்னேன். அவனுக்கு அழுகையே வந்துடுச்சு. நாயையும் கொடுத்து மேலே 1000 ரூபாயும் கொடுத்தா அவன் போனா போவுதுன்ன்னு அதை வாங்கிப்பதாக சொல்றான்” என்றான். எல்லாம் என் நேரம். ஒரு வழியாக டீலை முடித்து விட்டு துபாய்க்கு போய் விட்டேன். பின்னர்  சின்னவனாக இருந்த சுந்தரமூர்த்தி வளர்ந்து சாராய வியாபாரம், அடிதடி, ஜெயிலுக்கு போதல் என அபரிமிதமான வளர்ச்சியாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.

இப்போ வாங்க விஷயத்துக்கு!

“ஓ...ஞாபகம் வருதுப்பா. சுந்தரமூர்த்தி ஃப்ரண்டா நீனு? என்ன பண்ணிகிட்டு இருக்கே. அவனை எப்படி தெரியும்?”

“சித்தப்பா, நான் திருடரா இருக்கேன். அவனை நம்ம மாயவரம் சப்ஜெயில்ல தான் வச்சி பார்த்தேன். அதிலிருந்து நல்ல பழக்கம். உங்களைப்பத்தி சொல்லியிருக்கான். அதான் பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டேன். உங்க வீடு கூட எனக்கு தெரியும் ” ....(திருடர்ர்ர்ர்ர் மரியாதையா சொல்லிக்கிறானாமாம்... தொழில் பக்தி?!)

எனக்கு பகீரென்றது.  “என்னது திருடரா? என்னப்பா சொல்ற. நீ எந்த ஏரியா?” கொஞ்சம் நகர்ந்து கொண்டே கேட்டேன்.

”எல்லா ஏரியாவும் நம்ம ஏரியா தான். எங்க கிடைக்குதோ அங்க திருடுவேன்” என்றான்.

“அட அதை கேட்கலை. எந்த ஏரியா பையன் நீனு?”

“எல்லாம் என் ஊர் தான்னு வள்ளுவரே சொல்லியிருக்காருல்ல”

“எந்த வள்ளுவர்? சமீபத்திலே பி.ஜே.பி ல சேர்ந்தாரே அவரா?’

“பி.ஜே.பி ந்னா? என்றான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  ஒரு அயோக்கியனா இருந்து கொண்டு பி.ஜே.பியை தெரியலையே இவனுக்கு. பின்ன எப்படி தாமரை தமிழ்நாட்டில் மலரும் என நினைத்துக் கொண்டேன்.  பின்னர் அவனே

“ஆமா, ஒரு சுருட்டை தலை அக்கா தாமரை மலரும் தாமரை மலரும்னு சொல்லுமே. அதைக்கூட கட்சில இருந்து நீக்கிட்டாங்களே அந்த கட்சியா?” என்றான்.

“டேய் அதை நீக்கலை. அதை பாட்டில்ல அடைச்சி 5 வருஷத்துக்கு ஆந்திராவிலே ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்காங்க. 5 வருஷம் ஆனதும் திறந்து விட்ட பின்ன நீ இப்படி பாஜகவை தெரியாதுன்னு சொன்னது தெரிஞ்சா உன் காதை கடிச்சு வச்சிடும். ஆமா வள்ளுவர் எப்ப எல்லாம் என் ஊர் தான்னு சொன்னாரு” எனகேட்டேன்.

“அவரு தான் நிறைய சொல்லியிருக்காரே பக்கம் பக்கமா. இந்த சப்ஜக்டும் சொல்லியிருப்பாருதானே” என்றான்.

தியேட்டரில் கூட்டம் மேலும் மேலும் அதிகமாகிகொண்டே வந்தது. ஒரு ப்ரவுன் கலர் ஷூ போட்ட மப்டி போலீஸ் மீசையை நீவிக்கொண்டே என்னை பார்த்துக்கொண்டே போனார். நான் கொஞ்சம் அவனிடமிருந்து பூச்செடி நிழலில் இருந்து நகர்ந்து வெயிலில் நின்றேன்.

“அட என்ன சித்தப்பா... எதுக்கு என்னை பார்த்து ஒதுங்குறீங்க. ஒரு திருடர் கூட நிக்கிறது அசிங்கமா இருக்குதா? இதுக்கெல்லாம் அசிங்கம்  பார்த்தா முடியுமா? இதோ நீங்க கூடத்தான் காவி வேட்டி கட்டிகிட்டு மீசையும் தாடியுமா அசிங்கமா இருக்கீங்க. நான் வெட்கப்படாம பக்கத்தில் நிக்கலையா?”

ஆஹா.... இவன் நம்மை அசிங்கப்படுத்தாம விட மாட்டான் போலிருக்கு. நமக்கே எப்பவாவது தான் சினிமா பார்க்க மூட் வரும். இப்போ சுத்தமா போச்சுது இவனால. இவன் கூட பேசிகிட்டு இருப்பதை ஏற்கனவே ஒரு போலீஸ்கார் பார்த்துட்டார். சரி இன்னிக்கு சந்திராஷ்டமம் வேலையை ஆரம்பிச்சிடுச்சு என நினைத்துக் கொண்டு வண்டி வச்சிருந்த இடத்துக்கு நகர்ந்தேன்.  வண்டிசாவியை சட்டைப்பையில் இருந்து எடுக்கும் போது டிக்கெட் எடுக்க வைத்திருந்த 200 ரூபாய் நோட்டும் உடன்பிறவா சகோதரி போல கூடவே வந்தது.

“அட என்ன சித்தப்பா... டிக்கெட் வாங்கனுமா? இருங்க... நான் ஒரு நிமிஷத்துல வாங்கி வரேன்” என சொல்லிக்கொண்டே சடக்கென அந்த 200 ரூபாய் நோட்டை பிடுங்கிக்கொண்டு கூட்டத்தில் புகுந்து விட்டான்.  எனக்கு பதக் பதக் ஆனது இதயம். சரி வந்துடுவான் என நினைத்துக் கொண்டேன். கூட்டம் எல்லாம் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போகப்போக நான் நிற்கும் இடம் காலியாகிக்கொண்டே வந்தது. எனக்கு பயம் வந்தது லைட்டா. 200 ரூவா இன்னிக்கு எள்ளு தான் போல என மனசு சொன்னது. ஆளைக்காணும். அவன் பேர் கூட எனக்கு தெரியாதே...

இனி அவன் வரமாட்டான் என்னும் முடிவுக்கு வந்தேன்.சுந்தரமூர்த்திக்கு நெருக்கமான வேறு ஒரு சொந்தக்காரருக்கு போன் செய்து சுந்தரமூர்த்தி நம்பர் வாங்கி சுந்தரமூர்த்திக்கு போன் செய்தேன். யாரோ பெண் குரல் கேட்டது.

“சொல்லுங்க மாமா?”

“என்னது மாமாவா?”

அது என் பெயரை சொல்லி நீங்க தானே பேசுறது என்றது. ஆமாம் என்றேன். “உங்க பெயரை தான் அவங்க போன்ல போட்டு வச்சிருக்காங்கலே... அவங்க பொண்டாட்டி தான் நான் என்றது.

“சரிம்மா... அவன் எங்கே?” என்றேன்.

“அவங்க திருச்சிக்கு போயிருக்காங்க மாமா ஒரு வேலையா. வர இன்னும் 15 நாளாவது ஆகும்”

“சரி, அவன் போன் நம்பர் கொடு”

“இருங்க. அவங்களே உங்ககிட்ட பேச சொல்றேன். உங்க நம்பரை அனுப்பறேன் அவங்களுக்கு” என சொல்லி வைத்து விட்டது.

அந்த மீசைநீவி மீண்டும் என்னை உற்றுப்பார்த்துக் கொண்டு நடையை கட்டினார். நான் அந்த அளவு ஒர்த் இல்லை என போய் அவரிடம் சொல்லலாமா என அபத்தமாக நினைத்துக் கொண்டேன். வீட்டில் என் மனைவி பர்சில் இருந்து 150 ரூபாய் எடுத்தால் கூட வியர்த்து விடும். அவங்க தேடும் முன்னமே “அதுல எதுனா 150 குறைஞ்சா நான் தான் எடுத்தேன்னு நீ தப்பா சந்தேகப்படக்கூடாது” என உளறியே மாட்டிக்குவேன். அத்தனை ஒரு பூஞ்சை நான். எனக்கெல்லாம் மீசை நீவுதல் ரொம்ப அதிகம். இந்த திருடன் கூட எனக்கு பத்து நிமிஷ சகவாசம் தான். அய்யோ புலம்ப வச்சுட்டானே....

போன் ரிங் டோன் ஒலித்தது... “மாட்டிக்கிச்சு...மாட்டிக்கிச்சு... மாட்டிக்கிச்சு” ஹிப்பாப் ஆதி நேரம் காலம் தெரியாமல் ரிங் டோனில்...

“அல்லோ நான் தான் சுந்தரமூர்த்தி பேசுறேன் சித்தப்பா. திருச்சி ஜெயில்ல இருக்கேன்”

அப்பாடா... என் 200 எப்படியும் கிடைச்சிடும்...

“நல்லா இருக்கியாடா? அங்க வசதியெல்லாம் எப்படி? சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குதா?”

அய்யோ... என்னவோ அவன் துபாய்ல இருந்து போன் பேசுவது போல “அங்க ரோடு நல்லா இருக்கா? அரிசி சோறு கிடைக்குதா? மழை பெய்யுதா?”ன்னு குசலம் விசாரிச்சு கிட்டு இருக்கேன். “சரி நீ ஜெயில்ல இருந்து எப்படி போன் பண்ற?” என்றேன்.

“இப்பதான் வீட்டுல இருந்து எனக்கு போன் பண்ணி உங்க நம்பர் கொடுத்து பேச சொன்னுச்சு. இங்க ஒரு நம்பர் இருக்கு. அவசர ஆத்திரத்துக்கு கொடுத்து வச்சிருக்கேன் அதுகிட்ட. சரி விஷயத்தை சொல்லுங்க” என்றான்.

அங்க ரொம்ப பிசி போலிருக்கு அவன். நாலு வரியில் ப்ளாஷ்பேக்கினேன்.

“சரி அவன் பேர் என்ன?’

“தெரியாது”

“பேர் கூட தெரிஞ்சுக்காம 200 ரூவா குடுத்தீங்களே.. நீங்க....”

“இருடா இருடா... கெட்ட வார்த்தை எல்லாம் பேசக்கூடாது. அசிங்கமா இருக்குல்ல”

“சரி அங்க அடையாளம் சொல்லுங்க”

நான் என்ன ஜெயில் வார்டனா? அங்க அடையாளம் பார்த்து வைக்க. அவனுங்க தொழில் ரீதியாவே என்கிட்ட பேசினா நான் என்ன செய்யட்டும்? ஆங்... அந்த முழுக்கை சட்டையில் ஒரு கை மடிச்சு விட்டிருந்தான்னு சொன்னேன்ல... அதிலே முழங்கைக்கு கீழே ஒரு பெரிய வெட்டு தழும்பு. அதை சொன்னேன்.... உடனே சுதாரித்துக் கொண்டான்.

 “வேற எதாவது? வலது தொடைக்கு மேலே இடுப்புக்கு கீழே மச்சம் இருந்துச்சா?”

“டேய் அந்த அளவுக்கு எல்லாம் அவன் தூக்கி காமிக்கலை. அவன் சுன்னத் பண்ணியிருப்பானா இல்லியான்னு எல்லாம் எனக்கு எப்படி தெரியும்?”

‘அட அவன் பாவாடை சித்தப்பா” என்றான்.

“கிருஸ்டியனா?” என்றேன்..

“இல்லை... இந்து தான். அவன் பேரு பாவாடைசாமி. நல்ல பயலாச்சே... ஆனா சரியான திருட்டுப்பய. அவன் கிட்ட போய் யாராவது பணம் குடுப்பாங்கலா? சரி வீட்டுக்கு போங்க. நான் 15 நாளில் வந்துடுவேன். வந்து ரெக்கவர் பண்ணிடலாம். ஆனா அதுக்குள்ள அவன் உள்ள வராம இருக்கனும். எதுக்கும் சாமிய வேண்டிகிட்டு போங்க வீட்டுக்கு” என்றான்.

“என்னடா திருட்டுப்பயல் கிட்டே போனது எப்படி திரும்பி வரும்?” என்றேன்.

“அட சும்மா இருங்க. திருடன்னா எப்போதுமா திருடிகிட்டே இருப்பான். அவனுக்கும் ஆஃப் ட்யூட்டி டைம்னு இருக்கும்ல. அவன் திருடன் தான். ஆனா ரொம்ப  நல்லவன்” 

எனக்கு குழப்பம். ஒரு திருடன் எப்படி நல்லவனா இருக்க முடியும்? 

வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

வீட்டம்மணி “ஏங்க...தியேட்டருக்கு போய் ஒருத்தன் கிட்டே காசு கொடுத்து டிக்கெட் வாங்க சொன்னா ஒரு இடத்திலே நிக்க மாட்டீங்கலா? ஒரு பையன் வந்து ஒரு டிக்கெட்டும் மீதி 50 ரூவாயும் கொடுத்துட்டு போனான். அவன் நிக்க சொன்ன இடத்திலே நிக்க மாட்டீங்கலா?” என்றார்.

அப்பாடா.... கும்பிட்ட தெய்வம் நம்ம காசை காப்பாதிடுச்சு...

“சரி... சரி அவனை உள்ளே விடலையே?”

“அதப்படி? அவன் தான் வெயில்ல வந்திருக்கான். உபகாரம் செஞ்சவனுக்கு ஒரு வாய் மோர் குடுக்க கூடாதா. அவனை உட்கார சொல்லி மோர் குடுத்தேன். டிக்கெட்டும் மீதி காசும் குடுத்துட்டு கால்ல வென்னீர் ஊத்தினது போல கெளம்பிட்டான்”

“சரி டிக்கெட்டை குடு” என சொல்லி வாங்கிக்கொண்டு தியேட்டர் வந்து விட்டேன்.

படம் பார்த்து முடித்தேன். படம் எனக்கு பிடித்து இருந்தது. (அப்பாடா சினிமா விமர்சனம் செஞ்சாச்சு)

படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்த திருப்தியில் வீடு வந்து சேர்ந்த போது என் மனைவி ரொம்ப பிசியாக இருந்தாங்க.

“பசிக்குது. சாப்பாடு எடுத்து வை” என்றேன்.

“இருங்க. டேபிள் மேலே டிவி பக்கத்தில் தான் என் வாட்ச் வச்சிருந்தேன். காணும். கொஞ்சம் தேடிப்பாருங்க. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”

எனக்கு பகீர் என ஆனது. வீட்டு மாடிக்கு ஓடி சுந்தரமூர்த்தியிடம் இருந்து வந்த நம்பருக்கு கால் செய்தேன். யாரோ எடுத்தார்கள். “சுந்தரமூர்த்தி கிட்டே பேசனும்” என்றேன். “உங்க பேர் சொல்லுங்க” என்றார். சொன்னேன். சுந்தரமூர்த்தி லைனுக்கு வந்தான்.

“டேய் வீட்டுக்கு வந்து அவன் டிக்கெட் குடுத்துட்டு வாட்சை திருடிகிட்டு போயிட்டாண்டா?” என்றேன். உடனே அவன் ..

“அவன் தான் திருட்டுப்பயல் என சொன்னேனே?” என்றான்.

“அவன் நல்லவன்னும் சொன்னியே?”

“ஒரு திருடன் எப்படி நல்லவனா இருக்க முடியும் சித்தப்பா? நீங்க என்ன லூசா?” 

கீழே வந்தேன். என் மனைவியிடம்.....

“சரி... இன்னிக்கு எத்தனை மணி வரைக்கும் எனக்கு சந்திராஷ்டமம் இருக்கு?”

“நாளை வரை இருக்கு உங்களுக்கு. நான் வாட்சை தானே தேட சொன்னேன்.  அதுக்குள்ள எதுக்கு மாடிக்கு ஓடினீங்க? இறங்கி வந்து  சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுறீங்க? நீங்க என்ன லூசா?”

“ஆமாம்! நான் லூசு தான்” என்றேன்!

March 9, 2014

சில்வேனியா குண்டலகேசி என்னும் அழகி!



அவள் பெயர் சில்வேனியா குண்டலகேசி! என் வீட்டுக்கு பின்பக்கம் தான் எங்கியோ அவள் இருப்பிடம். என் வீட்டு வழியே தான் காலை ஐந்து மணி முதல் ஆறுக்குள் போவாள். பின்னர் மாலை அதே போல ஐந்துக்கு மேல்  ஆறுக்குள் திரும்புவா. சரி வீட்டு வாசல் வழி போவான்னா... அதுவும் இல்லை. என் வீட்டில் கொல்லை பக்க மதில் வழியே நுழைந்து பின்னர் முன் வாசல் கேட் வழியே சாலையை தொட்டு கடந்து தான் போவாள்.ஷார்ட் கட்?? அவள் அழகுன்னா அழகு அத்தனை ஒரு அழகு. கருப்பும், ப்ரவுனும் சேர்ந்த இந்திய அழகிகள் கலர். சும்மா வழ வழன்னு வாழைத்தண்டு.....  வெயிட்.. வெயிட்... ஜொள்ளர்ஸ் அஸோசியேஷன் தோழர்ஸ்... இது வேற கதை.


அந்த சில்வேனியா குண்டலகேசி என்பது ஒரு பாம்பு தான்.(அந்த பெயரை நாங்கள் வைத்தமைக்கு விருமாண்டி என்ன கேஸ் போடாபோகிறாரா என்ன? அவர் மீது யாரும் கேஸ் போடாமல் இருந்தா சரி தான்) சுமார் ஒரு ட்யூப்லைட்டை விட கொஞ்சம நீளம் அதிகம். அதே போல மொத்தம் எனில் நல்ல முத்தின புடலங்காய் சைஸ்.  லேடி பாம்பு. (யார்ரா அது லேடின்னாலே பாம்பு தானேன்னு கொரல் கொடுக்குறது.... அதும் நேத்தி தான் வுமன்ஸ்டே வேற..கீப் கொய்ட்).. சரி விஷயத்துக்கு வருவோம். அந்த சில்வேனியா அப்படியாக என் வீட்டு வழியே காலை போய் மாலை திரும்புவதை என் வீட்டில் ஆரம்பத்தில் ஒரு வித அதிசயமாகவும், அவள் சின்சியாரிட்டி கண்டு ஆச்சர்யமாகவும், நிரம்ப பீதியுடனும் சிலாகித்து கொண்டிருந்தது போக இப்போதேல்லாம் ஒரு நாள் வரவில்லை எனில் “என்னாச்சி சில்வேனியாவுக்கு?” என்று ஒருவரை ஒருவர் “ நீ பாத்தியா அவளை” “ நீ பாத்தியா அவளை”ன்னு கேட்டுக்கொண்டும்... “ என்னங்க! இது ஆடிமாசம்ல... ஒரு வேளை அவள் ஆஃபீசில் ஆடி’ட்டிங் எதுனா இருக்கும்.இருட்டுக்கு மின்னாடியே போயிட்டு இருட்டினதும் வர்ரா” போலிருக்கு என சுயவிளக்கம் சொல்லிக்கொண்டும்... ஆக சில்வேனியா இல்லாத நாட்கள் எங்களுக்கு வெறுமை சூழ்ந்த நாட்கள் ஆகிவிடும் நிலைக்கு ஆகிவிட்டிருந்தோம்.


இப்படி சுமூகமாக போய்க்கொண்டு இருந்த போது தான் ஒரு நாள் மாலை கவனித்தேன். சில்வேனியாவுக்கு முகம் வாடிப்போய் மெதுவாய் களைப்பாய் ஊர்ந்து வந்தது.வயிற்று பக்கம் கொஞ்சம் பெரிதாய் இருந்தது.  அடடே என்னாச்சின்னு தெரியலையே என என் மனைவியை அழைத்து “ நாடி” பார்த்து எதுனா “விஷேஷமாக” இருக்குமோ என பார்க்க சொல்லலாம் என நினைத்த போதே என் மனைவியும் வர “அடடே சில்வேனியா மாசமா இருக்குது போலிருக்குங்க. கொஞ்சம் பால் எடுத்து வந்து ஊத்துங்க” என்றார் என் மனைவி. “ஏன் எதுக்கு? அது கிட்டத்துல போய் அதுக்கு பால் ஊத்தினா, அடுத்த நாள் எனக்கு பால் ஊத்திடலாம்னு ஆசையா? என்றேன். என் பயம் எனக்கு!


அய்யய்யோ! சின்னமாரியம்மன் கோவில் பக்கம் தான் அது ஆஃபீஸ் போகும். அங்க நிறைய நல்ல பாம்பு (ஆண்) கிடக்கு. ஒன்னு கெடக்கு ஒன்னு ஆகியிருக்குமோ? அடடே விஷயம் வெளியே தெரிஞ்சா நாலு பாம்பு நாலு விதமா பேசுமே என்னும் கவலை எனக்கு. இதை பத்தி எல்லாம் சில்வேனியா கவலைப்படவில்லை. அடுத்த அடுத்த நாளும் சின்ன மாரியம்மன் கோவில் பக்கம் ஆஃபீஸ் போவதை தவிர்க்கவில்லை. சரி எதுனா “லிவிங் டு கெதர்”ஆக இருக்கும்... நமக்கென்ன என விட்டு விட்டேன்.


ஒரு வாரம் முன்பாக மிகவும் மெதுவாக ஆஃபீஸில் இருந்து மிகவும் களைத்துப்போய் வந்தது. இப்போது கழுத்து முதல் கிட்ட தட்ட வால் வரையிலும் பருத்து போய் இருந்தது. அடடே... ஸ்கேன் எதும் எடுத்துச்சா? தெரியலையே? என்னிக்கு டேட் இருக்கும்? அந்த பாழாய் போன ஆஃபீஸில் மெட்டர்னிட்டி லீவ் எதும் கிடையாதா? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். இந்த நேரத்திலும் சில்வேனியாவை வேலைக்கு அனுப்பும் அதன் குடும்பத்தின் மீது கடுப்பாய் வந்தது. ஒருவேளை சில்வேனியா வீட்டில் ஒரு கிழவி மட்டும் தான் துணைக்கு இருக்கனும். அப்பா அம்மா இல்லாத பெண் போலிருக்கு. இவள் சம்பாதிச்சு தான் கிழவிக்கும் பால், முட்டை ஊத்தனும் போல. இப்படித்தான் ஒரு பாலகுமாரன் கதையில் ஒரு பொண்ணு. சிவில் இஞினியரிங் படிச்சு வேலைக்கு போவா. அவ வீட்டில் ஒரு கிழவி. அந்த பெண் ஆஃபீசில் ஒரு கிழவனோடு லவ்ஸ் ஆகிடும். ஒரு நாள் வேலைக்கு போகும் போது அந்த கிழவி இவளை பார்த்து “ஆண்டவன் உன் பக்கம் எப்பதான் கண் திறப்பானோ?” என்று சொல்லும் போது அந்த பெண் நினைத்துக்கொள்வாள்...”ஏற்கனவே நாலைஞ்சு தடவை தொறந்துட்டார்”ன்னு. அது போல சில்வேனியா வீட்டிலும் நடக்குமோ? என்றேல்லாம் மனதில் கற்பனை செய்து கொண்டேன்.


பின்னர் ஒரு வாரம் சில்வேனியாவை என் வீட்டு பக்கம் காணவில்லை. மனசு கிடந்து அடித்துக்கொண்டது. என்ன ஆச்சுதோ தெரியலையே! வாயும் வயிறுமா இருந்த புள்ளயாச்சேன்னு கவலையோடு இருந்தேன். இன்று காலை விடிந்தும் விடியாத நேரம்.வாசல் பக்கம் வந்தேன். அடடே... மிக வேகமாக சில்வேனியா மீண்டும் தன் சிம்ரன் உடலோடு வந்தது. எப்போதும் ஒரே நீளமாக செல்லும் அது இன்று என்னை பார்த்ததும் ஒரு வித வெட்கத்துடன zig zag ஆக ஒரு நெளி நெளிந்து போனது. ஆகா டெலிவரி ஆகிடுச்சி போலிருக்கு. ஓடிப்போய் காலண்டரில் என்ன நட்சத்திரம் என பார்க்க தோனுச்சு. அப்படி தோணும் போதே ஆச்சர்யம். சில்வேனியா வந்த வழியில் ஒரு முழத்துக்கு ஒரு குட்டி சில்வேனியா. தன் அம்மா வழியில் போனது. அடடே அடுத்து ஒன்னு.... அடடே... இன்னும் ஒன்னு. மொத்தம் மூன்று குழந்தைகள். எல்லாம் அம்மா வழியில் போனது. அனேகமாக சில்வேனியா தன் ஆஃபீஸ்க்கு அழைத்துப்போய் தன் வீட்டுக்காரர் கிட்டே காமிக்கும் போலிருக்கு. “என்னங்க, பையன் என்னை போல இருக்கான். பொண்ணு உங்களைப்போல இருக்கால்ல”  என கேட்கலாம். அப்பாடி... எது எப்படியோ சிசேரியன் இல்லாம சுக பிரசவம் ஆனது வரை எனக்கு சந்தோஷம். புள்ள பெத்த பச்ச மண்ணு சில்வேனியா இத்தனை வெரசாவா ஆஃபீஸ் வரனும் என மனசு தவித்தது!


ஆச்சு! மாலை சில்வேனியா இப்போது தான் வீடு திரும்பியது. அதன் பின்னால் மூத்த மகள், அடுத்து ரெண்டாவது மகள். அடுத்து கடைக்குட்டி பயல். அவனுக்கு தான் கொஞ்சம் வால் ஜாஸ்தி. (வால் கொஞ்சம் நீளமாக இருந்ததால் நானே அதை ஆண் குழந்தை என முடிவு செய்து கொண்டேன்). இன்றைக்கு அது தான் பிரச்சனையே. பெண் குழந்தைகள் அழகாய் சில்வேனியா போல என் வாசல் கேட்டில் புகுந்து மண் வழியே சந்தில் புகுந்து கொள்ளைப்பக்கம் வழியே மதிலில் கீழே சில்வேனியா போட்டு வச்சிருந்த ஓட்டை வழியே போல இந்த வால்பையன் மாத்திரம் என் வீட்டு சிமெண்ட் போட்ட இடம் வழியே வந்து என் வண்டி மேல் ஏறி சந்து பக்கம் இறங்கி சில்வேனியாவுக்கு முன்னாடி போய் அந்த மதில் ஓட்டைக்கு ஓடினான். இதை சில்வேனியாவும் கண்டிப்பது போல தெரியவில்லை. மாறாக வீட்டுக்குப்போய் “அப்பனைப்போலவே ரொம்ப சுட்டி” என சொல்லி திருஷ்டி கழிப்பாள் போலிருக்கு! எனக்கு தான் அல்லுவிட்டு போச்சுது. கேட் வழி போவது எல்லாம் ஓக்கே தான். என் வண்டி நிறுத்தும் இடம் வழியே வந்தால்....?


{ இது போலத்தான் மூன்று வருடம முன்பாக என் வீட்டுக்குள் வந்த ஒரு பாம்பு பற்றி நான் எழுதி நீங்கள் படித்திருப்பீர்கள். (அப்படி படிக்காதவர்கள் இந்த சுட்டிக்கு போய் படிக்கவும் http://abiappa.blogspot.com/2010/08/blog-post_25.html ) }

இந்த வால்பையன் அது போல எதுனா துடுக்குத்தனமா இருந்தா என்ன செய்வது? இதுக்காகவே எங்கள் நகரில் இருக்கும் “ நாகம்மா” கிழவி கிட்டே போய் கன்சல்ட் செய்ய போனேன்!


“ஆத்தா, வீட்டுல வண்டி வைக்கும் இடம் வழியே பாம்பு குட்டி ஒன்னு வருது”


“ஒரு மூணு வருசம் மின்னாடி கூட வந்துச்சுல்லா.. அப்ப நான் சொன்ன மேரி நீனு பெரியமாரியம்மன் கோவில் பின்னாக்க இருக்கும் புத்துல முட்டை வச்சியா?”


“ம்.. வச்சனே, நாட்டு கோழி முட்டை வைக்கனுமா, ஒயிட்லகான் வைக்கலாமா? பால்வாடி டீச்சர் கிட்டே கம்மி காசுக்கு வாங்கின தானா அனா முட்டை போதுமான்னு கூட நான் கேட்டேன். நீ தான் எதுனா வையி. பாம்பு என்ன ஏ வி சிலயா போய் படிச்சுட்டு வந்திருக்கு கேட்டியே”

“இது நடந்து மூணு வருஷம் இருக்கும்லா... ஒன் வூட்டு பாலு கூப்பன் கூட மாசா மாசம் மாத்துறீல்ல. (ரினீவல்). இது சாமி விசயம். மூணு வருசத்துக்கு ஒரு முட்டைன்னா கட்டுபடியாவுமா? எப்பாவோ ஒன் இக்கிரிமெண்டு காலாவதியாயிருக்கும்.  மாசா மாசம் வக்கினும். அதான் ஒனக்கு காட்டாப்பு காட்டிருக்கு நாவம்மா... இன்னிக்கே அங்கிட்டு போயி ஒரு முட்டை வச்சிட்டு வா”


வீட்டுக்கு வந்தேன்.... ஃப்ரிட்ஜ் திறந்து பார்த்தேன். முட்டை எதும் இல்லை. ஆனால் சாப்பாட்டுக்கு தொட்டுக்க முட்டை மசாலா கறி இருந்தது. அதை ஒரு சின்ன டப்பாவில் கொட்டிக்கொண்டு புத்து பக்கம் போக வெளியே வந்தேன்.


என் மனைவியும் மகளும், மகனும் என்னிடம் “ ‘சினேக்’ கா,அமலா ‘பால்”, இதல்லாம் பெண் குட்டிகளுக்கு, ஆண் குட்டிக்கு நட்ராஜ் ஆசைப்படி சோட்டா பீம்  ... உங்களுக்கு ஆட்சேபனை இல்லியே”


“ஊகூம் இல்லை” என சொல்லிவிட்டு முட்டை மசாலாவுடன் வெளியே நடந்தேன். அவரவர் கவலை அவரவர்களுக்கு! ஆனால் ஒன்னு மட்டும் நிச்சயம்! உலகத்திலேயே பாம்பு புத்துக்கு மசாலா முட்டை வைக்கப்போகும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்பது மட்டும் உண்மை!

August 17, 2013

பார்திபனை பழிவாங்கனும்... ஹெல்ப் மீ ப்ளீஸ்...!!!



எனக்கு எப்போதுமே ஒரு கெட்ட பழக்கம். "அந்த குளம் எத்தனை ஆழம் இருக்கும்?"னு கேட்டா ஒரு தென்ன மர ஆழம் இருக்கும் என்பேன். அந்த பூதம் ரொம்ப பெரிசு என சொல்லனும்னா அது ரெண்டு தென்ன மர உசரத்துக்கு இருக்கும் என்பேன். அது போல "இது எந்த வருஷத்து சம்பவம்?" என எதையாவது கேட்டா ரஜினியின் "ஆறு புஷ்பங்கள்" படத்துக்கும் சிவாஜியின் 200 வது படம் "திரிசூல"த்துக்கும் நடுப்புற நடந்துச்சு என்பேன்.


அது போல இந்த பதிவில் வரும் சம்பவம் எம் ஜி ஆரின் "நீதிக்கு தலைவணங்கு"படம் வந்ததுக்கும் காமராஜர் இறந்த போது பக்கத்து வீட்டு தந்தி ஆபீசர் அழுதாரே அதுக்கும் இடையே நடந்த சம்பவம். அப்போ நான் அஞ்சாப்பு படிச்சேன். மகாலெஷ்மி டீச்சர். அப்போது ரெட்டை கிளி தீப்பெட்டி காலி பெட்டி இருபது பெட்டி கொண்டு போய் கொடுத்தா சலாமத் பாய் கடையில் ஐந்து பால்குச்சி - சிலேட்டு குச்சி  ஃப்ரீ ன்னு ஒரு ப்ரமோ போட்டிருந்தாங்க.


நான் படிப்பில் ஜெயிப்பதை விட பால்குச்சியில் ஜெயிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டினேன். ரோட்டில் நடந்து போகும் போது சமைஞ்ச பொண்ணு மாதிரி தரையை பார்த்து கிட்டே நடப்பேன். எதுனா ரெட்டை கிளி டப்பா கிடைக்குமான்னு மண்ணை செருப்பு போடாத காலால் நோண்டிகிட்டே நடப்பேன். பீடி குடிக்கும் பொர்கீஸ் கிட்டே எல்லாம் "அண்ணே  தீப்பெட்டி இருக்கா?"ன்னு கேட்டு முறைப்பு வாங்கினேன். குச்சி இல்லாட்டி தோஷமில்லைண்ணே, பொட்டியாவது குடுங்கன்னு அவன் குருதி அழுத்தத்தை எகிற வைத்தேன். அப்படி பரிதாபப்பட்டவன் கொடுத்த காலி பொட்டி 'சீட்டா ஃபைட் 'பொட்டியா இருந்து தொலைச்சது. "எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது ஆண்டவா" என கச்சேரிகொடி பிள்ளையாரிடம் கேட்டு இருக்கேன். அந்த பிள்ளையாரை பழிவாங்குவதாக நினைத்து ஐந்து பைசா சவ்வு மிட்டாயை அவர் எதிரில் நக்கினேன். எனக்கு காலி தீப்பெட்டி கூட கிடைக்க செய்யாத உன்னை பார்க்க வச்சுகிட்டே இந்த சவ்வு மிட்டாயை திங்கிறேன் பார் என நக்கி நக்கி அவரை பழி தீர்த்தேன்.


வீட்டில் அம்மா விறகு அடுப்பு கொண்டையின் பக்கத்தில் நமத்து போகாமல் இருக்க வேண்டி வைத்த தீப்பெட்டியில் குச்சியை எடுத்து போட்டு விட்டு பொட்டியை சேர்த்தேன். அம்மா வந்து "இது என்ன கூத்து ... பொட்டிய காணும், குச்சில்லாம் கெடக்கு" என புலம்பிய போது "பூனை எடுத்திருக்கும்மா" என வலிய வந்து சம்மன் இல்லாம ஆஜராகினேன். அடுத்த முறை, பூனை  குச்சியை எடுத்து கீழே போட்டு விட்டு பொட்டியை மட்டும் கவ்விகிட்டு போனது போல திரைக்கதை அமைத்து, டைரக்டர் ஆக ஆசைப்படுபவர் தயாரிப்பாளரிடம் சொல்வது போல பூனை போல நடித்தும் காட்டி அடிவங்கினேன்.


சேர்ந்த பெட்டிகளை தினமும் எண்ணி எண்ணி பார்த்து அதை மாட்டு கொட்டகையில் எரவானத்தில் ஒழித்து வைத்தேன். தூங்கும் போதும், விழிக்கும் போதும் அந்த ரெட்டைகிளி டப்பியே என் கனவில் வந்து தொலைத்தது. பால்குச்சி வாங்கி பதவிசா குச்சி டப்பாவில் போட்டுகிட்டு ஸ்ரீதர் கிட்டே காட்டனும் என்கிற ஆவல் தான் இருந்ததே தவிர அந்த குச்சியால் சிலேட்டில் கணக்கு போட்டு ஸ்ரீதரை விடா அதிகமாக மார்க்கு வாங்க வேண்டும் என்கிற பேராசை எல்லாம் இல்லை எனக்கு.


ஒரு நாள் கௌபாய் வேஷத்தில் குதிரையில், வேட்டைநாய்கள் பின் தொடர  வந்த கொள்ளையர்கள் டக்குடி டக்குடி டக்குடின்னு என் வீட்டு மாட்டு கொட்டகையை முற்றுகையிட்டு நான் சேர்த்து வைத்த அத்தனை காலி டப்பாவையும் கொள்ளை அடித்து சென்று விட்டதாக கனவு கண்டு மிரண்டு போனேன். காலை எழுந்ததும் போய் பார்த்து அவைகள் இருப்பதை கண்டு துள்ளு பாச்சை போல துள்ளினேன்.


ஆக அந்த நாளும் வந்தது. ஆமாம் இருபது பெட்டிகள் சேர்ந்தாகிவிட்டது. காலை குளித்து முடித்து சாமி எல்லாம் கும்பிட்டு அந்த இருபது பொக்கிஷங்களையும் எடுத்து கொண்டு புத்தக மூட்டையில் அழகாய் அடுக்கி வைத்து கொண்டு நேரே கச்சேரிகொடி பிள்ளையாரிடம் போய் இனி உன்னை பார்க்க வைத்துகொண்டு சவ்வு மிட்டாய் நக்க மாட்டேன் என மன்னிப்பு எல்லாம் கேட்டுவிட்டு சலாமத் பாய் கடைக்கு போனால் ....பாய் அன்னிக்குன்னு பார்த்து கடை திறக்கலை. சரி பள்ளி விட்டு வரும் போது பால்குச்சி வாங்கிடலாம் என்ற நினைப்போடு பள்ளி வந்தாச்சு.


வந்து வாயையும் அதையும் மூடிகிட்டு பேசாம இருந்திருக்கலாம். சனி என் நாக்கிலே டிரான்சிட் பேசஞ்சர் ஆக அன்று வந்து அமர்ந்தமையால் பக்கத்தில் இருந்த பார்திபன் கிட்டே நைசாக என் புத்தக மூட்டையை திறந்து தீப்பெட்டியை காமிக்க அவன் "டீச்சர்... இவன் நெறேய நெருப்புட்டி வச்சிருக்கான்" என அலற டீச்சர் வந்து ... பின்ன என்ன மண்டகப்படி தான். டீச்சர் கையில் என் காது. என் கையில் என் பையின் காது. அழைத்து செல்லப்பட்டேன். மன்னிக்கவும் இழுத்து செல்லப்பட்டேன் டீச்சர் டேபிள் அருகே. டீச்சர் பையை திறந்து கொட்ட என் ரெட்டைகிளி எல்லாம் பொலபொலவென கொட்டியது. அதை எல்லாம் எடுத்து டீச்சரின் மேசை ட்ராயரில் வைத்து விட்டு எனக்கு அடி போட்டு விட்டு என் இடத்துக்கு அனுப்பிட்டாங்க.


சரி... அடி எல்லாம் போகட்டும். என் சொத்து எனக்கு மீண்டும் கிடைக்குமா கிடைக்காதா, அல்லது சைக்கிள் கடை காசிநாதன் கிட்டே சொல்லி டீச்சரை போட்டு தள்ளிட்டு அந்த பொட்டியை எடுத்துடலாமான்னு எனக்கோ ஏகப்பட்ட குழப்பங்கள். என்னை மாட்டி விட்ட பார்த்திபனுக்கோ வாயெல்லாம் பல். எத்தனை சிரமம் அந்த இருபது பெட்டிகளை சேர்க்க.... எல்லாம் பாழாக்கிட்டானே இவன் என அவன் மீது கோவம்.


மாலை பள்ளி விட்டதும் கூட டீச்சர் அதை கொடுக்கவில்லை. எனக்கு வாழ்க்கையே பிடிக்கவில்லை. மீண்டும் "எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது" என நொந்து கொண்டே தளர்ந்த நடையுடன் பிள்ளையாரை முறைத்து விட்டு வீட்டுக்கு வந்தேன். ஆச்சு... ரெண்டு நாள்... எனக்கு வாழவே பிடிக்கவில்லை. சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் ஏதேதோ மனதில் வந்து போனது. "நீதிக்கு தலைவணங்கு படத்தில் எம் ஜி ஆர் பைக் ரேஸ் ஓட்டுவார். அவர் நம்பர் "5". இந்த பெட்டி எல்லாம் நான் சலாமத் பாய் கிட்டே கொண்டு கொடுத்தா எனக்கு கிடைக்க போகும் பால் குச்சியோ "5". ஆகா என்ன ஒற்றுமை. நிச்சயம் எனக்கு அந்த பொட்டிகள் திரும்ப கிடைக்கும்" என்றெல்லாம் லூசுத்தனமாக மனதில் நினைத்து கொண்டேன். மாலை பள்ளி முடிந்ததும் டீச்சர் என்னை கூப்பிட்டு "இனிமேல் இது போல எல்லாம் செய்யக்கூடாது" என சொல்லி என் ரெட்டைகிளிகளை தூக்கி வெளியே போட நான் ஆனந்த கண்ணீருடன் அதை பொறுக்கி எடுத்து என் பையில் திணித்து கொண்டு ஓட்டமும் நடையுமாக சலாமத் பாய் கடைக்கு வந்தேன்.


உஷ்... அப்பாடா... நாம் உழைச்ச உழைப்பு வீண் போகலை என மனதில் நினைத்து கொண்டு சலாமத் பாய் கடையில் இருந்த கூட்டம் போகட்டும் என நினைத்து கொண்டு அமைதியாய் நின்றேன். எல்லோரும் போனதும்....என் ரெட்டைகிளிகளை எடுத்து மேலே வைத்தேன். அதற்கு பாய்...."எலே பயலே... அந்த ஸ்கீம் நேத்தியோட முடிஞ்சு போச்சுடா, அடுத்த தபா அது போல போட்டாங்கன்னா இதல்லாம் எடுத்து வா"ன்னு சொல்லி கன்னத்தை லேசாக கிள்ளி விட்டு ஒத்தை பைசா ஆரஞ்ச் மிட்டாய் ஒன்னு என் உழைப்பிற்காக கொடுத்தார். வாங்கி நக்கிகிட்டே சோகமாக வீடு வந்தேன். எனக்கு அந்த பார்த்திபன் மேலே மட்டும் கோவம் போகவே இல்லை. தேவையில்லாமல் ரெண்டு நாள் டீச்சர் என் கிளிகளை சிறை வைக்காவிட்டால் இன்னேரம் நான் அஞ்சு பால் குச்சிக்கு ஓனராகியிருப்பேன். அவனை என் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் பழிவாங்கியே தீரவேண்டும் என நினைத்து கொண்டேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அந்த பார்த்திபன் என் கண்ணில் பட்டு கொண்டுதான் இருந்தேன். ஆனால் பழிவாங்க சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. அதன் பின்னர் நான் இன்று வரை அவனை பார்க்கவில்லை.




இதல்லாம் ஏன் இப்போ சொல்கிறாய்... என நீங்கள் கேட்பது புரியுது. சொல்கிறேன். கடந்த ஒருவாரமாகவே நான் குளித்து முடித்து ட்ரஸ் எல்லாம் செய்து விட்டு வெளியே வந்து யாரிடமாவது முக்கியமாக பேசும் போது நறுக்னு ஒரு எறும்பு கடிக்கும் ஜட்டிக்குள், பனியன்க்குள் இருந்து. ரொம்ப தர்மசங்கடமாக ஆகும் எனக்கு. என்ன காரணம் என தெரியவில்லை. இன்று விடாப்பிடியாக என் ட்ரஸ் வைக்கும் அலமாரியை சுத்தம் செய்தேன். அட... இதான் காரணமா? ஒரு ஆறு பிங்கோ காலி பாக்கெட் அடுக்கி வைக்கப்பட்டு அதன் மேல் எறும்புகள்.


"இதை யார் இங்க வச்சது? அதும் காலி பாக்கெட்டை" என நான் கத்திய போது என் மகன் ஓடிவந்து "அப்பா, உன்னை யார் அதை எடுக்க சொன்னாங்க. நான் தான் ஜாக்கிரதையா ஒழிச்சு வச்சேன். பத்து பாக்கெட் குடுத்தா தாத்தா கடைல ஒரு மிஸ்டர் பீம் ஸ்டிக்கர் தருவாரு. இன்னும் நாலு வேணும். அப்பா ஒரு ட்வண்டி ரூபீஸ் குடேன். தின்னுட்டு அந்த காலி பாக்கெட்டையும் கொடுத்துட்டு ஸ்டிக்கர் வாங்கிக்கறேன்" என்றான்.


எனக்கு சிரிப்பு வந்தது. அதை விடுங்கள்.... அந்த பார்த்திபனை பழிவாங்க வேண்டும் என சொன்னேன்ல.... ஹூம்... அவனை நான் பத்தாம் வகுப்புக்கு பின்னர் பார்க்கவேயில்லை. அவன் மாநிறம். தொள தொள சட்டை போட்டிருப்பான்.  பி ஜே பி இல. கணேசன் மாதிரி பட்டையா ஒரு நாள் விபூதி பூசுவான். அடுத்த நாள்..... விக்ரம் லூசா நடிச்சு இருப்பாரே என்ன படம்... தெய்ய திருமகள்... ம்... அதிலே அனுஷ்கா கூட வக்கீலா நடிச்சிருப்பாங்க. அந்த அனுஷ்கா மாதிரி சின்னதா விபூதி வச்சிருப்பான், சட்டையின் காலரில் பின் பக்கம் "ஸ்டைலோ டைலர்ஸ்"ன்னு ஸ்டிக்கர் இருக்கும். விரலில் நகம் வெட்டி இருக்காம நீட்டு நீட்டு நகமா இருக்கும். ரெமி பவுடர் வாசம் வரும் அவன் மேல். இதான் அவன் அடையாளம். எங்கயாவது பார்த்தா ஒடனே டபில்யூ டபில்யூ டபில்யூ அபிஅப்பா டாம் கொம் க்கு தகவல் கொடுங்க. அந்த பால்குச்சிக்காக பழி வாங்கனும். கொஞ்சம் அர்ஜண்ட் ப்ளீஸ்...

March 10, 2013

அபிஅப்பாவும், ஆரூர் மூனா செந்திலும்! கொஞ்சம் டோண்டு சாரும் உண்டு!

ஆகா! எனக்கு இந்த தமிழ்மணம் அதிலே ஓட்டு, சூடான இடுகை, வாசகர் பரிந்துரை எதிலும் நம்பிக்கை போயே போச்சு. எப்போ டாட்காமா இருந்த என்னை டாட் இன்னா "பேண்ட்" போடவிட்டாங்களோ அன்னிக்கு நளதமயந்தி மாதவன் மாதிரி விசுக்கு விசுக்குன்னு வலது காலை தூக்கி இல்லாத வேட்டியை அனிச்சையா மடக்கி கட்டினவன் தான். நேத்து வரை கட்டி கிட்டு கிடந்தவனை ஆரூர் மூனா செந்தில்தான் கூட்டிட்டு போய் உனக்கு பேண்டு சட்டை வாங்கியாறேன்னு சொல்லி அழகு பார்த்தாரு. சரி ஒரு நன்றி சொல்லுவோமேன்னு ஒரு ட்ராஃப்ட் அடிச்சு அதை "சேவ்" செய்கிறேன் பேர்வழின்னு  சேவ் செய்ய போனா "ஆரூர் மூனா செந்தில் already exists''...சரின்னு செந்தில் திருவாரூர், செந்தில்,எல்லாம் அடிச்சு பார்த்தா அதே போல வருது. சரின்னு ஒரு முடிவோட அதை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு ஆரூர் மூனா பூனா செந்தில்னு கூட அடிச்சு பார்த்தேன்... அட தக்காளி ... அதும் அல்ரெடி எக்சிஸ்ட்... ஆக இந்த செந்திலை நான் இரவு முழுக்க கடிச்சு கடிச்சு தின்னுருக்கேன்.அந்த மகாபாவிக்கு தான் இப்ப நன்றி சொல்லனும். என் சைஸ்க்கு இருந்தா சாதா  பாவி. கொஞ்சம் நார்மலா இருந்தா கூட ஸ்பெஷல் சாதா பாவின்னு வச்சுக்கலாம். ஆனா இவரு என் தம்பிக்கு போட்டியா இருப்பாரே... அதனால மகாபாவி... (அய்யோ ..முடியல..என்னால சப்ப கட்டு கட்ட முடியல...)

அந்த மகாபாவி என்னான்னா என்னை ஆகாஓகோங்குது.என்னை இதுவரை எழுத்துக்காக புகழ்ந்தது ரெண்டு பேர் தான். ஒரு நாள் காலைல ஆரூர் மூனா செந்தில். அவர் தான் இரவும் புகழ்ந்தார். ஆக ரெண்டு பேர். சமீபமா நான்  மதுவும் அருந்துவதில்லையா... உடனே ஓடிப்போய் அந்த ட்ராஃப்டை எல்லாம் படிச்சு செத்துட்டேன். அட, என்ன ஒரு கேவலமான விஷயத்துக்கு எல்லாம் ஆரூர் மூனா செந்திலை திட்டி இருக்கேன்...  அப்படின்னு நினைச்சு கிட்டு இருக்கும் போதே திடீர்ன்னு செந்தில் கிட்ட இருந்து ஒரு பின்னூட்டம் வருது. நீங்க உங்க பதிவை டாட் காம்ல மாத்தினா நீங்க தான் மகுடம்... இப்படியாக... மேலும்  ஒரு கோப்பையில் காசி ஆறுமுகம்,பில்கேட்ஸ், குழலி, பொன்ஸ்,  மயிலாடுதுறை சிவா, பெயரிலி எல்லாரையும் சம அளவில் போட்டு கலக்கவும் என செய்முறை வேறு....

செஞ்சேன்... அட ஆமாம் டபார்ன்னு டெஸ்ட் ட்யுப்ல அடில இருந்து ஒரு இண்ச் மேல கரு வளையம். சுரேகா ,ஷ்ரேயா ன்னு கத்திகிட்டேன் .நானும் நளதமயந்தி கிளைமாக்ஸ் மாதவன் மாதிரி கோட்டு சூட்டு ஆளாகிட்டேன். இன்னிக்கு நானும் மகுடமாம். இதல்லாம் எனக்கு அதிகம் கேட்டோ.....

ஆனா ஒன்னு என் அன்பான செல்ல எதிரி என் அன்பான ஆரூர் மூனா செந்திலுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

இதையே சொல்லிகிட்டு இருந்தா... அனேகமா செந்திலே கடுப்பாகிடலாம்...  நெக்ஸ்ட்....

இந்த செந்தில் இருக்காரே செந்தில்... (அய்யோ... இன்னிக்கு செந்தில் ப்ராணமாவே ஆகிடுச்சு. (அட தேவுடா ..அந்த ஆளு ஒரு 'ஆம்பளை ஆளு பிரா போட்ட' படத்தின் விளைவு...புராணம் 'ப்ரா'னம் ஆகிடுச்சு)..இந்த ஆள் குடிச்சா நல்லா எழுதுவாரு. ஆனா சிலர் குடிச்சா குழப்பம் ஆகிடுவாங்க.

இப்படித்தான்... ஒரு நாள் டோண்டு சார் இறந்துட்டாரு. உடனே ஒரு பதிவு போட்டேன் பேஸ்புக்ல. இதான் என்னால் செய்ய முடிஞ்ச அஞ்சலி. அதை விடுங்க. பகல்ல பதிவு போட்டாச்சு. சும்மா இருக்குமா மனசு, அதும் ராத்திரில.... போனை போட்டேன் டோண்டு சாருக்கு.

"சார்"
"நான் சார் இல்லை சாரி"

"அதன்ன சார் செத்து போனா பெண்பாலா ஆகிடுவாங்கலா. சாரின்னு சொல்றீங்க"

"அந்த சாரி இல்லை, இது இங்கிலீஷ் சாரி அதாவது sorry"

"மன்னிக்கனும்... ஐ நீட் டு ஸ்பீக் வித் டோண்டு சார்"


அடுத்து ஆம்பளை குரல்.... டோண்டுவே தான்...

சித்தப்பா என்னா எப்டி இருக்கீங்க?

"அட போங்க டோண்டு சார்... மொதல்ல பொம்பளை கொரல் இப்ப ஆம்பளை கொரலா"

"சரி சித்தப்பா, உங்களுக்கு ஓவர் ஆகிடுச்சு"

"யோவ் அது இல்லய்யா. நீர் செத்ததுக்கு அஞ்சலி சொல்ல வந்தேன்"

"ரைட்டோ... நடத்துங்க"

"யோவ் நான் என்ன உன் வூட்டு வாத்தியாரா? உம்ம காரியம் நடத்துவதுக்கு?... நான் ஒரு ஓரமா ஒக்காந்துட்டு போய்டுவேன்"

"சரி போங்க"

"ஆனா ஒன்னுய்யா ... செத்த பின்னயும் பேசுற பாரு... நீர் மனுசன்"

"ஆமாம்... "

"என்ன ஓமாம்"

"நான் இன்னும் சாகலை'

"இந்த உம்ம ...பீக் .....தன்னம்பிக்கை...பீக்... தான்யா ...பீக் பீக்...எனக்கு புடிச்சது.....க்"

"ங்கொய்யால வச்சுட்டியா... ஆனா காலைல திரும்பவும் பேசுவேன்"

குப்புற அடிச்சு படுத்துட்டேன்.

காலைல என் மனைவி எழுப்பினாங்க. பார்த்தா பத்ரகாளி மாதிரி நிக்கிறாங்க.

"என்னாங்க"

"சொல்லுங்க"

"ஏன் தண்டபாணிக்கு போன் செஞ்சீங்க? என்ன பேசுனீங்க? அவன் எங்க அக்காவுக்கு ஒத்தை பையன். அவன் செத்துட்டதா அவனையே கேட்டிருக்கீங்க... இதல்லாம் நல்லா இருக்கா? "

"இல்லையே, என் போன் காணாம போச்சு நேத்திக்கு கடைத்தெரு போகும் போது" என சொல்லிக்கொண்டே எடுத்து அடியில் வச்சுகிட்டேன். அந்த நேரம் எவனோ போன் செய்ய அது கிர்ர்ர்ர்ர் என நான் உடம்பை தூக்கி தூக்கி போட்டேன்.

பின்ன தான் தெரிஞ்சுது அந்த தண்டபாணியை "dandu" எனவும் நம்ம டோண்டு சாரை "dondu" எனவும் வச்சி தொலைஞ்சி இருக்கேன்.. நல்ல வேளை தண்டபாணி வீட்டுக்கு எழவு கேட்க போகலை!

இந்த குடியால் வரும் குழப்பங்கள் பத்தி இன்னும் ஒரு நாள் விலாவாரியா பேசுவோம்! இன்னும் ஒரு நாள் ......என்ன நாளையே கூட பேசலாம்! நீங்க எல்லாம் விரும்பினாக்க....

குறிப்பு: இது டோண்டு சாரை அவமதிக்கும் பதிவு இல்லை. இறந்தாலும் நம்ம கூட இருக்கார் என சொல்லும் ஒரு சின்ன நினைவூட்டல். அத்தனையே!

March 9, 2013

எம்பியே படிக்கலாமா அல்லது குந்திகிட்டு அருமையா படிக்கலாமா?

நேத்து ஒரு பதிவு எழுதினேன். அட, ஆச்சர்யம்...என் பழைய நண்பர்கள் எல்லாரும் வந்து தொலைபேசியிலும், பின்னர் தனி மடலாகவும் "ஹாய் அபிஅப்பா ஹவ் ஆர் யூ" என கேட்க எனக்கே ஒரு ஜில்லாகிப்போச்சு. பொடி விஷயம் பத்தி சிலர் சிலாகிச்சு சொன்னாங்க. அந்த பொடி மேட்டர் பதிவிலே இன்னும் ஏகப்பட்டது பாக்கி பொடி இருக்கு. பொடி வச்சுல்லாம் பேசலை. நெசமாவே பாக்கி பொடி இருக்கு. அதை இன்னிக்கு என்னோட "இட்லி நெய் ஜீனி" வரிசை பதிவிலே போட்டுடலாம் என ஆசை! ஆனா போடலை. ஏன்னா தினம் தினம் இனி காமடி பதிவு மொக்கை போட இருக்கேன். இன்னிக்கு பொடி பார்ட் டூ....

பொடி சமாச்சாரம்:

அனேகமா இதை எழுதி இருக்கலாம் நான். நான் நாய் வாய் வச்ச மாதிரி இணையத்தில் எல்லா இடத்திலும் இருப்பதால் எங்க எழுதினேன் எந்த சூழலில் எழுதினேன் என தெரியலை... அனேகமாக எழுதாமலும் இருக்கலாம்.

அதாவதுங்க பொடி இருக்கே பொடி... அந்த மனிதர்கள்... ஒரு தனி ஜாதி. அந்த ஜாதில ஆரியர், திராவிடர், ஆதி திராவிடர், கலப்பினர், இந்து, முஸ்லீம், கிருத்துவ என எந்த பிரிவும் கிடையாது. ஒரே சமத்துவம் தான்.அவசரத்துக்கு  ஒரு பாதிரி ஒரு குருக்கள் கிட்டே ஒரு சிட்டிகை கொடுன்னு மூக்கை நீட்டி கேட்டா போதும் கிடைச்சிடும். அது போல நேத்து பதிவிலே ஒரு பின்னூட்டம் "எல்லாருக்கும் பொடி கடைல ஃப்ரீயா பொடி கொடுப்பாங்கலாமே"ன்னு . இல்லை. கண்டவனுக்கும் கொடுக்க மாட்டாங்க. அவங்க ஜாதிக்காரனுக்கு கொடுப்பாங்க. அது பொடி ஜாதி.

12 இஞ்சிக்கு ஒரு தராசு பார்த்து இருக்கீங்களா? ...யெஸ்.. அதே தான்.. நகைக்கடையில் இருக்கும். 5 கிராம் படிக்கல் பார்த்தது உண்டா? நீங்க தினம் போகும் கத்திரிக்காய் கடையில்... இருக்காது... ஆனா ஜுவல்லரில இருக்கும். ஆக பொடியும், தங்கமும் ஒன்னு. ஆமாம் இங்க மட்டும் தான் 5 கிராம் படிக்கல் இருக்கும். ரொம்ப குழியா இருக்கும் அந்த ஒரு தட்டில் (தட்டில்னு சொல்லக்கூடாது... குழியில் 5 கிராம் பொடியை ஒரு நீண்ட சில்வர் கரண்டி... கரண்டின்னா குழம்பு கரண்டி இல்லை... அதோட மினியேச்சரின் மினியேச்சர்... அதை அந்த வடலூர் வெள்ளைக்களிமண் ஜாடில இருந்து (அந்த காலத்திலே நாம ஊறுகாய் வைப்போமே...அது போல ஜாடி) டிங் டிங் னு எடுத்து போடுவார். 5 கிராம் படிக்கல் அவசரத்துக்கு கிடைக்கலைன்னா தன் மோதிரத்தை எடுத்து போடுவார் அந்த கடைக்காரர். கவனிக்க...எத்தனை ஒரு துள்ளிய வியாபாரம்....

ஆக பொடி போட்டாச்சு...."விஸ்க்...".. நோ நோ.. தராசிலே போட்டாச்சு... இத்தனை துள்ளியமா கொஞ்சம் கூட கூடாம குறையாம போடும் அந்த ஆளுங்க பொடியை "ஃப்ரீயா"வா கொடுப்பாங்க. மாட்டாங்க. ஆனா கொடுப்பாங்க. ஏன்னா.... இருங்க பதிவை படிச்சு முடிங்க..... பின்ன தெரியும்..

சரி பொடியை எடை போட்டாச்சு. அதை எப்படி டப்பாவிலே மாற்ற வேண்டும்? .... கால் கிராம் அல்லது குண்டுமணி அளவு கூட வெளியே போகக்கூடாது. என்ன செய்யலாம்? அங்க தன் இருக்கு லாவகமே! வந்தவர் கிட்டே இருக்கும் வெள்ளி பொடி டப்பா அல்லது தகர டப்பா வை வாங்கி அதை மூடி கழட்டி அதை அப்படியே தராசு தட்டில் (குழி கிண்ணத்தில்) கவிழ்ப்பாரு. அந்த ஒன்னரை செண்டி மீட்டர்  டயா உள்ள வட்டமும் , ஒன்னரை இன்ச் நீளமுமான உருளை டப்பா வின் உள்ளே அந்த பொடி போய்டும். பின்ன அடுத்த அடுத்த இடத்தில் அந்த குழி கிண்ணத்தில் அமுக்கினா சபாஷ்....எல்லா பொடியும் 5 கிராம் பொடியும் உள்ளே போய்டும்!

கடைக்காரர், கஸ்டமர் இருவரும் ஹேப்பி.... உடனே அதை மூடி வேட்டில சுருட்டிப்பாங்க. ஆனா ஒன்னு மட்டும் முக்கியம். அந்த உருளை டப்பாவில் கீழே காத்து தான இருக்கும். (அதன் கொள் அளவு 23 கிராம்) அதனால மூடியை தட்டிட்டு தான் பொடி போடனும். இப்ப தெரியுதா? ஏன் பொடி போடும் பழைய நடிகர்கள் சாரங்கபாணி பிள்ளை, டி ஆர் ராமச்சந்திரன், எஸ் வி சுப்பையா என எல்லாரும்  டப்பிய தட்டிட்டு போடுறாங்கன்னு....

இந்த மாயவரம் மக்கள் மாத்திரம் ஒரு விஷயத்தில் ரொம்ப உறுதியா இருப்பாங்க. காபி பொடி வாங்கினா 50 கிராம். பொடி வாங்கினா 5 கிராம். ஏன்னா "அன்னின்னிக்கு யூஸ் பண்ணா தான் ஃப்ரஷா இருக்கும்டா" . அடிங்கொய்யால..

இன்றைக்கு மணிவண்ணன் என்னவோ துள்ளாதமனமும் துள்ளும் படத்திலே குவாட்டர் பாட்டிலை கீழே தட்டி மேலே ஓப்பன் செய்வதை அதிசயமாக பார்க்கும் வாசகர்களே, நான் சொன்ன இந்த அறிவியல்பூர்வ காரணம் இப்போது புரிகின்றதா?

இதிலே ஒரு கணக்கு பாடம் கூட சொல்லி இருக்கேன். ஒரு உருளை, அதன் விட்டம் ஒன்னரை செண்டி, உயரம் ஒன்னரை இண்ச், கொள்ளளவு எத்தினின்னு இன்னிக்கு என் பொண்ணு அபிகிட்ட கேட்டா படார்ன்னு சொல்லுவா இத்தினி கிராம் மூக்கு பொடின்னு. அவ அதுக்கும் மேலயும் சொல்லுவா... "ஒரு அன் சைஸ் மூக்குக்கு இத்தினி கிராம் தேவைப்படும். அதிலே இத்தனை நாத்தம் வரும், இத்தனை தும்மல் வரும், இத்தனை கைக்குட்டை துவைக்கனும்" என்கிற சரியான கணக்கு சொல்லுவா. அதை விடுங்க....

இதை எல்லாம் விடவும்... நான் விட்ட இடத்துக்கு வர்ரேன். ஒரு நண்பர் போட்ட பின்னூட்டத்துக்கு வரேன். பொடி ஒரு சிட்டிகை "ஃப்ரீயா" தருவாங்கலாமே??

நோ நோ... அதன் பின்னால் ஒரு பெரிய தாத்பர்யம் இருக்கு. இன்றைக்கு எம்பியே படிக்கும் மாணவர்கள் கூட அன்றைக்கு பொடிக்கடையில் உட்காந்தே படிச்ச விஷயம் அது!

ஆமாம்... இங்க தான் என் அப்பா கிட்டே வரேன். என் அப்பா படிக்கும் காலத்தில்... அட .. படிச்சாங்கப்பா..நம்புங்க.. டி பி டி ஆர் நேஷனல் ஸ்கூல்ல அது ஒரு பெரிய செட்டு. சேவிங் செட்டுல்லாம் இல்லை. நிஜமாகவே பெரிய செட்டு. எங்க பள்ளியில் நான் ஆசிரியராக இருக்கும் போது படிச்சவங்க. (அய்யோ... குழப்பிட்டேன்) நான் படிக்கும் போது ஆசிரியரா இருந்தவங்க. என். வி சார், எம் ஆர் சார், என் அப்பா வைத்தியநாதன் என்னும் வைத்தா , என் பெரியப்பா செல்வரத்தினம் என்னும் செல்வராஜ்ன்னு... ஒரு பெரிய கூட்டம்...இதிலே பெரிய கூத்து என்னான்னா  பி ஆர் சார் என் அப்பாவுக்கு வாத்தியார், எனக்கும் வாத்தியார்!

(அந்த பி ஆர் சார் தான் நாங்க படிக்கும் போது ஹெட்மாஸ்டர்! எல்லாரையும் அவங்க அப்பா பேரை சொல்லி தான் கூப்பிடுவாரு. டேய் வைத்திநாதான்னா நான் எந்திருக்கனும் என நான் பின்னர்  ஃபாரின் போவதுக்கு பாடம் எடுத்தவர் அவர். இமிக்ரேஷன்ல அப்படித்தான் கூப்பிட்டு தொலைப்பானுங்க, அது போல நடராஜான்னா பாலுவும்... டேய் உப்பிலின்னா நம்ம நம்ம பிரண்டும்... இப்படியாக... உப்பிலியை நான் இப்பவும் உப்பிலின்னு தான் கூப்பிடு தொலைக்கிறேன்... மாத்திக்கனும்டா தோழா)


டபார்ன்னு சில பாரா மாறிடுங்கப்பா... நான் கொஞ்சம் ஸ்கூல் விஷயம் அனத்திக்கனும்...


{பி ஆர் சார் இருக்காரே ... எங்க இருக்காரு அவரு போயாச்சு.... அவரு ஒரு காங்கிரஸ் ஆள். ஒரு நாள் "டேய் வைத்தி ...எந்திரிடா ..நான் நல்ல மூட்ல இருக்கேன்... நான் ஒரு பாட்டு பாடுறேன்... அது யார் கீர்தனைன்னு சொல்லு....நீதான் பெரிய இசைக்குடும்பம் ஆச்சே"

பாடினார். பாடினார்... பிட் அடிக்க வழி இல்லை. என்ன செய்யலாம். பக்கத்திலே இன்றைக்கு நன்னிலம் ஊராட்சி மன்ற பெருந்தலைவராகவும் இருக்கும் அதை விட பெரிய பதவி ஒன்றிய செயலர் வரத.கோ. ஆனந்த் சொன்னான்..."மாப்ள எப்டியும் அந்தாளு காங்கிரஸ்... அடிச்சு விடுடா காமராசர் பேரை"...

நான் சொன்னேன்... சார் காமராஜர்!

அவர் கொஞ்சமும் கோவமாகலை! "நான் இன்னிக்கு ரிட்டையட் ஆகிறேன்"

நான் சொன்ன பதிலாலயான்னு இது வரைலை!  எனக்கு தெரியலை. அதை விடுங்க!}

இதிலே அதிஷ்டவசமா என்.வி சார் என்னும் என். வெங்கட்ராமய்யர் (என் பள்ளி ஆசிரியர்) அவருக்கு கிட்ட தட்ட செகண்டு ஃபாரம் படிக்கும் போது அவரோட வீட்டுக்கு வேதம் படிக்கும் வரும் வாத்தியார் கிட்ட இருந்து லைட்டா பத்திகிச்சு பொடி.

ஆனா அவங்க அப்பாவோ ரொம்ப பெரிய வைதீகர். ரொம்ப கட்டுப்பெட்டியான ஆள். தன் பொடி டப்பாவை தன் மகன் கண்ணுக்கு காட்டவே மாட்டாரு. விடுவாரா என்.வி. உடனே காசு கொடுத்து காலணா கொடுத்து ஒரு டப்பா வாங்கினாரு நம்ம டி ஏ எஸ். ரத்தினம் பட்டணம் பொடிக்கடையிலே. இருங்க.... அங்க தான் நிக்கிறாரு நம்ம என். வி. சார்.... தான் அதை போடலை. தன் சக நண்பர்களுக்கு "ஃப்ரீ டிஸ்ட்ரிபூஷன்" . ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை. கிட்ட தட்ட 4 நாள். 5 வது நாள் இவரு வாங்கலை. பசங்க , அதாவது அவரோட நண்பர்கள் என் அப்பா, பெரியப்பா, எம்.ராமச்சந்திரன் சார் உள்ளிட்ட எல்லோரும் வந்து கேட்க அவரு "இல்லைடா மோனே... அவ்விட டுனீஷியா வெற்றி சின்னம் மணிக்கூண்டு கிட்டே போனா டி ஏ எஸ் ரத்தினம் பட்டிணம் பொடிக்கடை இருக்குமோல்யோ...."ன்னு சொல்ல.. இவா எல்லாம் அங்க ஓடினா ஓடினா... செம ஓட்டம்...

ஆளுக்கு ஒரு டப்பா... பி ஆர் சார் கணக்கு பாடம் எடுக்கும் போதெல்லாம் ஒரே சர் சர் சர் சத்தம் தான். அவருக்கு சர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு கோவம் வந்துடுச்சு. "டேய் கம்மனாட்டிகளா! எவனோ மூக்கு பொடி போடுறான். அவனா எந்திரிச்சு வந்தா உத்தமம். இல்லே நானா கண்டு பிடிச்சா அந்த பொடி டப்பாவை அபஷ்கரிச்சுடுவேன்" என மிரட்ட ஒட்டு மொத்த வகுப்பும் எழுந்து நிக்குது.

பி.ஆர் சார் கண்ணுல ஜலம். இத்தனை பேர் கெட்டு போனாலும் என். வெங்கட்ராமன் மாத்திரம் ஸ்பஷ்டமா அவா தோப்பனார் மாரி இருக்கானே"ன்னு கண்ணுல ஜலம். அவரை கூப்பிட்டு கட்டிண்டார்"

எல்லாம் முடிஞ்சுது. அரைவெட்டு அடிச்ச அத்தனை பார்ட்டியும் (எல்லாரும் அப்போ அரைவெட்டு குடுமி தான்) என். வியை சுத்தி கிட்டு "அது எப்டிடா நீ மட்டும் பொடி டப்பா வைச்சுக்கலை" என கேட்க அவரு....

"டேஸ் ஃபூல்ஸ்... நேக்கு ஒரு நாளைக்கு எட்டு தரம் இழுத்தா போதும். அதுக்கு காலணா ஆகும். அதை எட்டு பேருக்கு பழப்படுத்திட்டா அவா நேக்கு ஒரு இழுப்பு தர மாட்டாளா... ஆனா இத்தனை பேர் இழுப்பேள்னு நேக்கு தெரியலைடா.... அதனால நான் டப்பா வாங்கலை"ன்னு சொன்னாராம்.

இப்ப புரியுதா? ஏன் அந்த பொடிக்கடையிலே பொடி ஃப்ரீயா தந்தாங்கன்னு? அடுத்து இப்ப தெரியுதா ஏன் டி பி டி ஆர்ல படிச்சவன் எல்லாம் இப்படி இருக்கான்னு? M.B.A க்கு பால பாடம் கத்து கொடுத்ததே இந்த சின்ன பொடி விஷயம் என்பதை நீங்க மறுக்க இயலுமா?

(பை தி பை... என் மகள் அபி இப்போ பத்தாவது பரிட்சை போகிறா, என் தம்பி பையன் சர்வோவும் தான் ... இருவருக்கும் உங்கள் ஆசிகள் வேண்டும்... இனி ஒரு 20 நாள் நான் இது போல காமடின்னு பேர்ல அனுபவ மொக்கை மட்டுமே போடுவேன். நோ அரசியல்... வாங்க ப்ளீஸ்)



September 22, 2011

அய்யோ பேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!

இந்த பதிவு அடிக்க என்னவோ பத்து நிமிஷம் தான் ஆச்சு. ஆனால் தலைப்பு வைக்க தான் நீண்ட நேரம் ஆனது. "நானும் பேயும்" என முதலில் தலைப்பு வைத்தேன். அப்படி வைத்தால் "இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்" என பின்னூட்டம் போடுவாங்க. சரின்னு "நான் பேயை பார்த்தேன்" என தலைப்பு வைக்கலாம் என நினைத்தேன். "பெல்ஜியம் மிரர் வாங்கினதுக்கு எல்லாம் பதிவா?" என பின்னூட்டம் வரும். எது வந்தாலும் சரின்னு தான் என் அமானுஷ்ய அனுபவத்தை பதிவிட்டு உங்களை பயம் காட்டலாம் என முடிவுக்கே வந்துவிட்டேன்.

மாயவரத்தில் இருந்து கிழக்கே பூம்புகார் போவதற்கு இரு வழிகள் உண்டு, பூம்புகார் சாலை, அடுத்து செம்பனார்கோவில் சாலை. இரண்டுமே ஒரே முக்கூட்டில் சந்தித்து பின்னர் திருவெண்காடு அருகே சந்தித்து ஒரே சாலையாக ஆகும் பூம்புகார் செல்ல.அந்த இரு சாலைகளுக்கும் நடுவே தான் காவிரி ஓடும். அதன் இரு கரைகளும் பச்சை பசேல் என இருக்கும். கரையோர கிராமங்களின் எல்லையில் காவிரிகரையில் இடுகாடுகள் இருக்கும். இரு பக்க கிராமங்களை இணைக்கும் வகையில் சின்ன சின்ன ஒரு மீட்டர் அகலத்தில் மூங்கில் பாலங்களோ கான்கிரீட் பாலங்களோ இருக்கும்.

நான் அப்போது படித்து முடித்து விட்டு தற்காலிகமாக வி கே ஆர் பப்ளிகேஷன் என்னும் கம்பனியில் விற்பனை வேலை. உயிரியல் பாடத்துக்கு செய்முறை புத்தகங்களை இரு கட்டை பையில் எடுத்து கொண்டு திருவெண்காடு சீனிவாசா பள்ளிக்கு சென்றிருந்தேன். மதியம் 12 மணிக்கு எல்லாம் வேலை முடிந்தது. திரும்ப மாயவரம் வரும் போது கொஞ்ச தூரத்திலேயே பஸ் டயர் வெடித்து நின்று விட்டது. பேருந்தில் வந்தவர்கள் வேறு வேறு பேருந்தில் ஏறிவிட நான் மட்டும் கொஞ்சம் நடந்து காவிரிக்கரையை அடைந்து அக்கரையில் இருக்கும் திருச்சம்பள்ளி என்னும் கிராமம் வழியே செம்பனார்கோவில் போகலாம் என நினைத்து புத்தக பைகளை (இரு கையிலும் இரு பைகள், ஒவ்வொன்றும் இருபது கிலோ எடை இருக்கும்) எடுத்து கொண்டு நடக்க தொடங்கினேன். காரணம் என் நண்பன் அப்சராகார்த்தி அப்போது திருச்சம்பள்ளியில் இருக்கும் இந்திய உணவு கழகத்தின் (FCI) நெல் அரைவை நிலையமும் அதன் இணைப்பாக தவிட்டில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலையும் இருந்தது ..அதிலே தற்காலிகமாக "கெமிஸ்ட்" வேலை செய்து கொண்டிருந்தான். அவனையும் பார்த்து விட்டு செம்பனார்கோவில் "சம்மந்தம் மேல் நிலைபள்ளி"க்கு போகலாம் என நினைத்து நடக்க தொடங்கினேன்.

கிட்ட தட்ட காவிரி கரையை அடையும் போதே அந்த கிராமத்தின் இடுகாட்டில் இரு பிணங்கள் எரிந்து கொண்டு இருந்தது. அதே போல பாலத்துக்கு அந்த பக்கம் ஒரு பிணம் எரிந்து கொண்டு இருந்தது. அப்போது மதியம் ஒரு மணி ஆகியது. பொதுவாக சின்ன வயதில் விடுமுறை நாட்களில் அது போல மதியம் விளையாட கிளம்பினால் பாட்டி "டேய் இது உருமநேரம் பேய் நடமாடும் நேரம். போகாதீங்க" என மிரட்டுவது ஏனோ ஞாபகம் வந்து தொலைந்தது. ஆனாலும் தைரியம் வரவழைத்து கொண்டு நடக்க தொடங்கினேன். வெள்ளை உடையில் யாராவது கண்ணில் தென்படுகின்றனரா என பார்த்தால் அங்கே பிணங்களை தவிர யாரும் இல்லை. அது கொஞ்சம் பயமாக இருந்தாலும், யாருமே இல்லை என்கிற போது பேயும் இல்லைதானே என ஆசுவாசப்படுத்தி கொண்டு நடந்தேன்.

கொஞ்ச தூரம் நடந்ததும் ஒரு வயதான ஒருவர் , காஸ்ட்யூம்னு பார்த்தா ஒரு கோவணம். கோவணம் மட்டுமே தான். ஆனால் அந்த கோவணத்தை விட பெரியதாக ஒரு வேட்டியை தலையில் முண்டாசாக கட்டியிருந்தார். காதில் ஒரு பீடி. பற்கள் வெற்றிலை காவி. "எழவு அந்த தலையில் கட்டியிருப்பதை எடுத்து இடுப்பில் கட்டிகிட்டா என்ன?" என கேட்க நினைத்து கேட்கவில்லை. ஏனனில் கிராமத்து குசும்பு எதுனா எடக்கு மடக்கா பதில் வரும். அவர் நேரே என்னை நோக்கி தான் வந்தார். கொஞ்சம் பயம் அதிகமாகியது. மிக அருகே வந்து "தம்பி பீடிக்கு நெருப்பு இருக்குமா?" என கேட்டார்.

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏனனில் இதே போல சமிஞ்கைகள் தான் எல்லா சினிமாவிலும் அமானுஷ்ய சீன்களில் வரும். "அது என்ன, யாராவாது செத்துட்டா டாக்டர் கண்ணாடி கழட்டிட்டு 'சாரி'ன்னு சுரத்தே இல்லாமல் சொல்லுவாரு, போலீஸ் அசூசையாக தொப்பியை கழட்டுவார், அதே போல சுடுகாடு காமிச்சா பீடிக்கு நெருப்பு கேட்டு ஒருவர் வருவாரு. பின்னே பார்த்தா அவருக்கு வேட்டிக்கு கீழே காலே இருக்காது. "நான் செத்து ரெண்டு வருஷம் ஆச்சேன்னு கத்திகிட்டே மறைந்து விடுவார். ச்சே இந்த தமிழ்படங்களே இப்படித்தான். இனி நான் ஈரான் படம் மட்டுமே பார்க்க போறேன்" என நெஞ்சு நிமிர்த்தி வசனம் பேசிக்கொண்டு திரிந்த காலம் அது. என்கிட்டயே சுடுகாட்டில் இப்படி ஒரு பேய் நெருப்பு கேட்கும் என நான் நினைத்துகூட பார்க்கவில்லை.

மெதுவா வேட்டிக்கு கீழே கால் இருக்கான்னு பார்த்தேன். அவரு மூஞ்சி தான் இருந்தது. ஏன்னா அவரு தான் வேட்டிய தலையிலே கட்டியிருந்தாரே! கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை இறக்கி கீழே பார்த்தேன். கால் இருந்தது. கொஞ்சம் நிம்மதி ஆகியது. கோவமும் வந்தது. என்னை பார்த்து பீடிக்கு நெருப்பு கேட்டாரேன்னு. நானே அப்போது பீடி மாதிரி தான் இருப்பேன். தவிர அப்போதெல்லாம் எனக்கு லாகிரிவஸ்துக்கள் அத்தனை ஒரு பரிட்சயம் ஆகாத நேரம். அதிகபட்சமாக புளிப்பு மிட்டாய் வாங்கி வாயில் போட்டுப்பேன். (ஆமாம் புளிப்பு மிட்டாயே லாகிரிவஸ்துவாக நான் நினைத்து கொண்டிருந்த காலம். எத்தனை ஒரு நல்ல பையன் நான் என்பதை வாசகர்களின் யூகத்துகே விடுகின்றேன்)

அவரிடம் "இல்லை" என சொன்னபோது அவரும் "சரி தம்பி பார்த்து போங்க" என சொல்லிவிட்டு கடந்து போனார். அவர் சும்மா போயிருக்கலாம். பார்த்து போங்க என சொன்னது தான் பயமாக இருந்தது. "அப்படின்னா இங்க பேய்கள் நடமாட்டம் கொஞ்சம் அதிகம் தான் போலிருக்கு" என நினைத்து கொண்டேன். எரியும் சிதையை பார்த்தேன். பிணம் எரியும் போது எழுந்து டான்ஸ் ஆடும் என சின்ன வயசில் பெருஞ்சேரி நடராசன் கதை விடுவான். அப்போது வெட்டியான் அதை அடிப்பான் எனவும் சொல்லியிருக்கான். ஆமாவா என நினைத்து சிதையை பார்த்தேன். மூன்று பிணங்களும் சமர்தாக எரிந்து கொண்டிருந்தது. 'அடக்கமான' பெண்கள் போலிருக்கு என நினைத்து கொண்டேன். எங்கேயோ ஒரு பறவை கத்தி பீதியை கிளப்பியது. ஆந்தை போலிருக்கு. ஆந்தை இரவில் தானே வரும். ஓவர்டைம் பார்க்குது போலிருக்கு. பொன்னியின் செல்வன் கோடியக்கரை காடு, கொள்ளிவாய் பிசாசு எல்லாம் ஞாபகம் வந்தது. பூங்குழலி ரொம்ப அழகு தான் என மனசில் ஓடியது. ச்சே அவளுக்கு இருக்கும் வீரம் எனக்கு இல்லையே. மெதுவாக பாலத்தின் அருகே வந்தேன். இந்த பயத்தின் காரணமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றியது. முட்டிக்கொண்டு வந்தது. சரி பாலத்தை கடந்து அந்த பக்கம் போய் அங்கே எரியும் அந்த பிணத்தையும் தாண்டி விட்டு திருச்சம்பள்ளி ஒத்தை அடி பாதையில் சுத்தமான இடம் பார்த்து அசுத்தம் செய்யலாம் என நடக்க தொடங்கினேன்.

கை இரண்டும் குடைந்தது. பாலத்தின் மீது அதை வைத்து விட்டு சிம்ரன் போல சோம்பல் முறித்தேன். பின்னர் திரும்பி பார்த்தேன். என்னை கடந்து போன தாத்தா தூரத்தில் போவது தெரிந்தது. கால் இருந்தது. நிச்சயமாய் அவர் பேய் இல்லை என நிம்மதியாக இருந்தது. பின்னர் பையை தூக்கிக்கொண்டு பாலத்தில் ஒரு பாதி தூரம் வந்து விட்டேன். இன்னும் பாதி பாலம் தான் பாக்கி இருக்கு. ஒரு வழியாக இரு பிணங்களின் கிட்டே இருந்தும் தப்பித்து விட்டேன். மீதி பாதி பாலம் கடந்தால் அந்த மீதி ஒரு பிணத்தையும் தாண்டி விடலாம். பின்னர் ஒத்தையடி பாதையில் ஒரே ஓட்டம் ஓடிடலாம். எங்கே இருந்து ஓடுவது.நானே நாற்பது கிலோ இருப்பேன். தனியா ஓடினா ஓடிடலாம். கையில் வேறு 40 கிலோ இருக்கு. ஓடல்லாம் முடியாது. காக்க காக்க கனகவேல் காக்கன்னு ஷஷ்டி கவசம் சொல்லிகிட்டே நடக்க வேண்டியது தான்.

அப்போது தான் நான் பேயை பார்த்தேன். இந்த பதிவின் கதாநாயகியாகிய பேயை பார்த்தேன். (மனம் இளகியவர்களும், கர்ப்பினி பெண்களும், என் பழைய பதிவுகளை எல்லாம் ஏற்கனவே படித்து தைரியமானவர்களும் மேலே தைரியமா படிங்க.. ஒன்னும் ஆகாது. ஏதாவது ஆனா எனக்கு மெயில் செய்யவும். நானும் தெரிஞ்சுக்கறேன்).

பேய்னா அப்படி ஒரு பேய். அது ஒரு பெண் பேய். (பெண்ணை பேய் என சொல்கிறேன் என சமூகநீதிகாத்த சங்கிலிக்கருப்பன்கள் கோவப்படவேண்டாம்) நெசமாகவே அது ஒரு பெண். வெறும் எலும்பு மட்டுமே. எலும்புக்கூடு மட்டுமே. தலை முடி எல்லாம் எரிந்து போய் அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. உடலில் ஒட்டு துணி இல்லை. தொடைப்பகுதிகளில் கொஞ்சம் சதைகள் கூழாக இருந்தது. பற்கள் இருந்தது. எனக்கு உதறல் அதிகம் ஆகிவிட்டது. திரும்பவும் ஓடிவிடலாமா என நினைத்த போது வந்த பக்கம் இரண்டு பிணங்களும் ஆக்ரோஷமாக எரிந்து கொண்டு இருக்கின்றது. தவிர நான் முக்கால்வாசி இந்த பாலத்தில் வந்துவிட்டேன். திரும்பவும் தைரியம் கூட்டிக்கொண்டு அதை பார்த்தேன். சிரித்தது. இரு கையையும் நீட்டி என்னை அழைத்தது. எனக்கு முதுகுதண்டு ஜில்லிட்டது.

வாய்விட்டு கத்தி யாரையாவது உதவிக்கு கூப்பிடலாம் என நினைத்த போது யாருமே இல்லை அந்த பகுதிகளில். என்னை கடந்து போன அந்த தாத்தாவும் மறைந்து விட்டார். அனிச்சையாக நான் ரம் குடித்த குதிரை போல முன்னால் போகின்றேன். கிட்ட தட்ட அதன் அருகே வந்து விட்டேன். அந்த ஒரு மீட்டர் அகல பாலத்தின் ஒரு முனையில் அந்த கைப்பிடியில் உட்காந்து இருந்த அது கீழே குதித்தது. நான் இரு கையிலும் பை வைத்து கொண்டு அதை கடந்து அந்த பக்கம் போவது என்பது அதை உரசாமல் இயலாது. கந்தசஷ்டியும் ஞாபகம் வரலை எந்த ஷஷ்டியும் உதவவில்லை. சரி என் வாழ்க்கை அவ்வளவு தான். அது என்னை அடித்து விடும். நானும் மரித்துப்போய் பேயாக ஆகிவிடுவேன். அப்படியே ஆனாலும் நம்ம ஏரியா சுடுகாட்டுக்கு போய்டனும். இங்க எல்லா பேயும் புதுசு. பழக நாளெடுக்கும். அங்கன்னா நமக்கு தெரிந்த பேயா இருக்கும். பின்னே வரக்கூடிய பேய்களும் நமக்கு தெரிஞ்ச பேயாகத்தான் இருக்கும். மியூச்சுவல் ட்ரான்ஸ்பர் எதுனா நம்ம ஏரியா சுடுகாட்டுக்கு கிடைச்சா நல்லா இருக்கும். இந்த சுடுகாட்டிலே நமக்கு தெரிஞ்ச பேய் யாராவது இருக்காங்களா என நினைத்த போது தான் திமுக எக்ஸ் எம் எல் ஏ விளநகர் கனேசன் அந்த ஏரியா என்பது நியாபகம் வந்தது.ஒரு வருஷம் முன்ன தான் அவர் இறந்து போயிருந்தார். நம்ம கட்சிகாரர், எப்படியும் ட்ரான்ஸ்பர் வாங்கி அனுப்பிடுவார். அய்யோ உறுப்பினர் கார்டு நம்பர் கூட மறந்து போச்சே.. எனக்கு தலையே சுற்றியது.

எப்படி அதை கடந்து இந்த பக்கம் வந்தேன் என எனக்கு இப்போதும் ஞாபகம் வரவில்லை. ஆனால் அந்த ஒத்தையடி பாதைக்கு வந்துவிட்டேன். அது என்னை நோக்கி மெல்ல மெல்ல நடந்து வந்தது. நான் சுத்தமான இடம் பார்த்து உச்சா போகவேண்டும் என எண்ணிக்கொண்டு இருந்ததெல்லாம் வேஸ்ட். என் பேண்ட் தான் அதை விட சுத்தமான இடம் என அதுவே தீர்மானித்து விட்டது. எல்லாம் தானாக நடந்து விட்டது. என் இஷ்டத்துக்கா எல்லாம் நடக்குது. அந்த ஒத்தையடி பாதையை தாண்டி அந்த இந்திய உணவு கழகம் வந்து சேர்ந்து கார்தியிடம் விஷயம் எதும் சொல்லும் முன்னே "என்னடா பேயடிச்ச மாதிரி இருக்கே" என கேட்டான். அவன் சுத்த நாத்திகம். (இப்பவும் தான்) விஷயம் சொன்னேன். சிரித்தான். அப்பவும் அவன் நம்பவில்லை. என் பைகளை அவன் லேப்ல வச்சுட்டு என்னை ஒரு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பாலம் நோக்கி மிதித்தான்.

அவன் இருக்கும் தைரியம் எனக்கு. இருந்தாலும் பயம் இன்னும் போகலை. அங்கே போனால் அந்து பாலத்தின் மீது உட்காந்து இருந்தது. "ஒ இதுவா, நமக்கு தெரிஞ்சது தான். இரு நான் போய் பேசிட்டு வர்ரேன்" என சொன்ன போது எனக்கு அழுகையும் பெருமையும் ஒரு சேர வந்தது. ஒரு சாதாரன மாயவரம் டவுன்ல நம்ம கூட ஒன்னடி மன்னடியா பழகிய கார்த்தி இன்னிக்கு ஒரு பெரிய குக்கிராமத்துல ஒரு மாபெரும் சுடுகாட்டிலே பேய்கிட்டே எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தும் அளவு பெரியாளா ஆகிட்டானே என்கிற பெருமையும் கூடவே அதுகிட்டே இவனுக்கு என்ன பேச்சு வேண்டிகிடக்கு என்று அழுகையும் வந்தது.

அது கிட்டே பேசினான். திரும்ப வந்தான். "டேய் பாவம்டா அது பேர் சுந்தரி. இந்த கிராமத்து பொண்ணு தான். கட்டி கொடுத்து புருசன் சரியில்லைன்னு முதல் நாளே மண்ணெண்ணய் ஊத்தி கொளுத்திகிச்சு. அத்தோட மனநிலையும் சரியில்லாம போச்சு. ஆஸ்பத்திரிலயும் வச்சுக்கலை. ஓடி வந்துடுச்து. அத்தோட இங்க சுடுகாட்டுக்கு பக்கத்திலே வந்து உட்காந்துக்குது.பாவம் டா.. " என சொன்ன போது எனக்கு அதன் மீது பயம் போய் இரக்கம் வந்தது. அத்தோடு கூடவே ஜுரமும் வந்தது. பின்னர் ஒருவாரம் எனக்கு செம ஜுரம்.

இதாங்க என் பேய்கதை. அதன் பிறகும் கொஞ்ச காலம் எனக்கு பேய் பற்றிய பயம் இருந்துச்சு. பின்னே கடந்த பதினாறு வருஷமா பயம் விட்டுப்போச்சு:-)) இப்பல்லாம் நான் பயப்படுவது இல்லை:-))

June 6, 2011

சப் காண்டிராக்டர் சல்மான்கான்!!!

ஒரு எட்டு வருஷம் அபுதாபி - ஷார்ஜா என ஆட்சி செய்து விட்டு துபாய் நகரை கைப்பற்றும் நோக்கோடு துபாய் வந்த புதிது. என் நண்பன் அதிரை தாஜுதீனின் தம்பி ஜமீல், எனக்கும் தம்பி தான். துபாய் வரணும் சொல்லி போன் செய்தால்" ய்" சொல்லி முடிக்கும் போதே விசிட் விசாவை வீட்டு கதவை தட்ட வைக்கும் வித்தகன். ஒரு மஞ்ச பையிலே மாத்து துணியும் அடுத்த வேளை பல் விளக்க கொஞ்சம் பயோரியா 1431 ஒரு தரத்துக்கு தேவையானது ஒரு தின காலண்டர்ல கிழிச்ச பேப்பரில் மடித்து கொண்டும் துபாய் போய் இறங்கி விட்டால் ஜமீல் பிளாட் ரெண்டு கையையும் அகலமா நீட்டிகிட்டு வா வான்னு கூப்பிட்டுக்கும். ஜமீல் பிளாட் இருந்த இடம் இருக்கே அது துபாய்ல ஒரு முக்கியமான இடம். அந்த இடத்தை பத்தி அழகா தெரிஞ்சுக்கனும்னா என்னோட இந்த பதிவிலே போய் பாருங்க.

அங்கே போய் இறங்கிய பின்னே தான் ரெஸ்யூம் எல்லாம் அப்டேட் செய்தேன். பின்னே அதை வசதியாக ஜமீல் கிட்டே கொடுத்து விட்டால் போதும். நான் சொல்லும் நம்பருக்கு பேக்ஸ், மெயில்ன்னு மீதி எல்லாம் ஜமீல் பொறுப்பு தான். காலை 5.30க்கு எழுந்து குளித்து விட்டு பொடி நடையாக பின்னால் இருக்கும் சப்கா ரோட்டில் நடந்தால் முடிவினில் அப்ரா (படகு துறை ) வரும். ஒரு 50 பைசா கொடுத்து படகில் டேராதுபாயில் இருந்து பர்துபாய் கரையில் இறங்கினால் உடனே சிவன்கோவில் வந்துவிடும். காலை ஆறு மணிக்கு ஆராதனை. எவனோ வாங்கி அண்டாவில் ஊத்தி வச்ச பாலை எடுத்து "இதை நான் வாங்கினதா நினைச்சுக்கோ" என சொல்லி சிவனுக்கு அபிஷேகம் செஞ்சுட்டு வந்தால் கைமேல் பலன் சுட சுட இருக்கும். ஆமாம் 4 பிரட் ஸ்லைஸ்ம் போதுமான அளவுக்கு சென்னாவும் ஒரு துப்பட்டா போடாத சுடிதார் அணிந்த பஞ்சாப் பாட்டி கையிலே வைக்கும். பின்னே குருத்வாராவுக்கும் நாலு படி ஏறி அங்க கொடுக்கும் திருவாதிரை களி பின்னே சூடான டீ, அதன் மேலேயே எவனோ கொடுக்கும் கொஞ்சம் பெப்சி பிரசாதம், எல்லாம் கலந்து கட்டி அடிச்சுட்டு கிருஷ்ணன் கோவில் வந்தா லஜ்ஜையே இல்லாம அந்த காலை நேரத்திலும் சேட்டு மாமிகள் ஸ்வீட் கொடுப்பாங்க. அதையும் வாங்கி தின்னுட்டு எவனோ அங்கே வாங்கி போட்ட கல்ஃப் நியூஸ், கலீஸ் டைம்ஸ் எல்லாம் பார்த்து ஜமீலுக்கு இந்த இந்த நம்பருக்கு பேக்ஸ் அனுப்புன்னு போன்ல சொல்லிட்டு அதே பேப்பரை விரித்து கிருஷ்ணன் சன்னதியிலேயே தியானம்னு பேர்ல ஒரு தூக்கம் போட்டா வரிசையா பேக்ஸ் பார்த்துட்டு போன் பண்ணுவனுங்க கம்பனிகாரனுங்க

பின்னே அந்த கம்பனியின் சொத்து மதிப்பு இன்ன பிற ஜாதகம் எல்லாம் பார்த்து கேட்டு தெரிஞ்சுகிட்டு இஷ்டம் இருந்தா அங்க இருந்து கோல்டு சூக் பஸ்டாண்டு போய் 3 திர்காம் கொடுத்து அல்கூஸ் ஏரியா பக்கம் இண்டர்வியூ போவேன். நான் கேட்கும் சம்பளம் கொடுத்தா ஓக்கே. இல்லாட்டி உன் சகவாசம் வேண்டாம் போ என திரும்பவும் பிளாட் பக்கம் வந்து விடுவேன். ஒரு கோடி சம்பளம் கொடுக்குறேன்னு சொன்னாலும் அதன் பின்னே பிளாட் விட்டு நகர மாட்டேன்.

அந்த பிளாட் என்னவோ சிங்கிள் பெட் ரூம் பிளாட் தான். எட்டு பேர் அதிலே நிரந்தர மெம்பர்ஸ். ஆனா புளோட்டிங் பாப்புலேஷன் அதிகம். கிச்சன்ல எப்போதும் எதுவாவது தயாராகும். யாராவது ஹால்ல உட்காந்து சாப்பிடுவாங்க, புத்தம் புதிய படம் எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும். இப்போ நீங்க அங்க போனா கூட "ராணா"படம் எடுத்த வரை பார்ப்போம் என யாராவது பார்த்து கொண்டிருப்பாங்க. அங்கே இருக்கும் கம்பியூட்டர் உபரி பாகங்கள் ஹாலில் இருக்குமே அதை தோண்டி தூர் வாறி போட்டால் அதன் உள்ளே ஜமீலை பார்க்கலாம். ஜமீலுக்கு ஒரு நல்ல பழக்கம். 24 மணி நேரமும் போன் ஆஃப் பண்ணாத பழக்கம். காலை 7 மணிக்கு ஆபீஸ். மேனேஜர் (கம்) ஓனர் ஒரு பத்து மணிக்கு போன் செய்யும் போது அந்த கம்பியூட்டர் குவியலில் இருந்து போன், கை, வாய் மட்டும் வெளியே வரும். "எஸ் சார் எஸ் சார் நியூட்ரலைசேஷன் ஆபீல்ல இருக்கேன். செம கூட்டம். எஸ் எஸ் வர்ரதுக்கு ஒரு மணியாகிடும்" என சொல்லிவிட்டு தலை, கை, போன் மீண்டும் உள்ளே கம்பியூட்டர் குவியல் உள்ளே போய்விடும்.

அது ஜமீல் பிளாட் என்பதால் நான் அதிலே ஒரு நிரந்தர மெம்பர். ஜமீல் மூலமாக விசிட்ல வந்து வேலை தேடும் அதிரை மக்கள் எல்லாம் பகல் நேரத்தில் அங்கே தான் கூடும். சில நாள் வேலை தேட அலுப்பாக இருந்தால் காலை நிரந்தர மெம்பர்ஸ் எல்லாம் காலை 7 மணிக்கு வேலைக்கு போன பின்னே அரட்டை கச்சேரி ஆரம்பம் ஆகிவிடும். அருமையான சமையல் எல்லாம் செஞ்சு அசத்துவோம்.

அப்படித்தான் ஒரு நாள் காலையில் வேலைக்கு போன மஜீது திரும்பி ஓடி வந்தான். மஜீது வேலை பார்ப்பது பக்கத்து சப்கா ரோட்டில் தான். சப்கா ரோடு என்பது நம்ம சென்னை ரங்கநாதன் தெரு மாதிரி. அத்தனை ஒரு ஜன நெரிசல். எங்க திரும்பினாலும் "என்ன காகா எப்ப வந்தீய"ன்னு அதிரை, முத்துப்பேட்டை குரல் மட்டுமே கேட்கும். அதிலே ஒரு சைனா காரியின் கடையிலே தான் மஜீது தற்காலிக வேலை பார்த்து கொண்டிருந்தான். வேலை பிரமாதம் இல்லை. அந்த சைனாக்காரி சைனாவிலிருந்து லேடீஸ் ஹேண்ட் பேக், கூலிங் கண்ணாடிகள் போன்ற பொருட்களை மலிவு விலைக்கு வரவழைத்து மொத்த வியாபாரம் செய்து வந்தாள். கடை பத்துக்கு பத்து அளவு தான். அதன் உள்ளேயே ஒரு சுழல் மாடிப்படி சின்னதாக மிக சின்னதாக இருக்கும். அதன் வழியே போனால் மாடியில் ஒரு 30க்கு பத்து சைஸ்ல குடோன்.

மஜீது வந்ததும் "சைனாகாரிக்கு கொஞ்சம் ஹேண்ட் பேக் லோடு வருது. அதை மாடில குடோன்ல ஏத்தனும். 100 திர்காம் தருவா. என்னை தனியா அண்லோட் பண்ண சொன்னா. நான் தான் நீங்க சும்மா தானே இருக்கீங்க. வந்து லைட்டா ஹெல்ப் பண்ணினா ஒரு பத்து நிமிஷம் 100 திர்காம்.. எனக்கு கூட எதும் வேண்டாம், நீங்களே பிரிச்சு எடுத்துகுங்க" என சொன்னான். அட பத்து நிமிஷத்துல 100 திர்காம். அப்படின்னா ஒரு மணி நேரத்துல 600 திர்காம். அப்படின்னா ஒரு நாளைக்கு 4800. அதை 13 ஆல பெறுக்கினா? அய்யோ சொக்கா ..ஷேக் முகமதுக்கு கூட இத்தன சம்பளம் வராதே.. எவன் மூட்டை தூக்குவதை பார்த்துட போறான். சரி போய் அதை எடுத்து வச்சுட்டு வந்துடுவோம் என கேணத்தனமா நான் தான் முதலில் நினைத்தேன்.

முனாஃப் காகா தலைமையில் நாங்க ஒரு 3 பேர் போனோம். முதலில் நான் போனதும் ஒரு ஹேண்ட் பேக்கை தூக்கி பார்த்தேன். "முனாஃப் காகா, இது சப்ப மேட்டரு. சட்டுபுட்டுன்னு தூக்கி கெடாசிட்டு "அப்பா கடை"யிலே லெக் பீஸ் வச்சு ஒரு பிரியானி அடிச்சுட்டு போவும்" என சொன்ன போது அவரும் சரின்னு சொன்னார். பின்னர் தான் தெரிந்தது. அந்த கடைக்கு பக்கத்தில் ஒரு பூட்டிய கடையின் வாசலில் ஒரு 20 ஃபீட் கண்டய்னர் நின்னுச்சு. அதிலே இருக்கும் சரக்கு எல்லாம் தான் மேலே அந்த சுழல் படி வழியா நாங்க தூக்கிட்டு போகனும்னு.

அந்த சைனாகாரி கிட்டே முனாஃப் காகா தான் பேரம் பேசினார். பேரம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சு 100 திர்காம்க்கு காண்டிராக்ட் ஓக்கே ஆச்சு. "அப்பா கடை"யிலே போய் ஒரு டீ குடித்து விட்டு வந்து கண்டெய்னர் ஒப்பன் செய்யும் போது அந்த சைனாகாரி கிட்டே ஒரு 3 பட்டான் வந்து நின்னான். அது வரை அந்த கண்டெய்னர் யாருதுன்னு தெரியாம அதன் எதிர்பக்க சாலையில் குரங்காட்டி மாதிரி குத்துகாலிட்டு உட்காந்து இருந்த அந்த 3 பேரும் அங்க வந்தானுங்க. பட்டான்னா எப்படிப்பட்ட பட்டான். நம்ம ஊர்ல தெருவிலே ஒரு கோவிலுக்கு நேர்ந்துவிட்ட ஆடு போச்சுன்னா வருமே ஒரு மொச்சை வாடை அது போல வாடையுடன் அழுக்கு பட்டானின் அக்மார்க் (உள்ளாடை போடாத) குர்த்தா ஜிப்பாவிலே, பல் விளக்காத வாயிலே பச்சையான ஹெர்பல் உருண்டை நஸ்வாக் போட்டு அடக்கிகிட்டு சுத்தமான தார் ரோட்டிலே "புளிச்"ன்னு துப்பிகிட்டு இருக்கும் அக் மார்க் பட்டான். பாகிஸ்தான்லயே இவனுங்க கராச்சி, இஸ்லாமாபாத், பஞ்சாப், ஹைதராபாத் எல்லாம் இல்லை. சுத்தமான பெஷாவர். நஸ்வாக் போட்ட எச்சிலை இவன் வீட்டில் இருந்து டைட்டானிக் கேம் ஆடினா ஆப்கானிஸ்தான்ல இருக்கும் ஹமீத்கர்சாய் வீட்டு கக்கூஸ்ல விழும் அளவுக்கு பார்டர் பட்டான். உருது கூட ரொம்ப பேச தெரியாத புஷ்டாக் மட்டுமே பேசும் பட்டான். ஆறு அடிக்கு மேலே உயரம். முகத்திலே சுருள் சுருளான தாடிக்கு நடுவே தெரியும் ரோஸ்கலர் கன்ன மேடு, புறங்கையிலே கூட புசு புசுன்னு முடின்னு அந்த காலத்திலே இந்தியா மேல படை எடுத்த ஷெர்ஷாவுக்கு பேரன் மாதிரியான ஒரு தோற்றமுள்ள பட்டான்.

நம்ம ஆளுங்க அவன் ஆகிருதியை பார்த்து மனசுக்குள்ள பயந்தாலும் பயப்படாத மாதிரியே திட்டுவாங்க. யானைக்கு அதன் பலம் எப்படி தெரியாதோ அது போல அவனுங்களும் பயப்படுவானுங்க. அவனுங்க வந்ததும் "நாங்க இறக்கி தர்ரேம் 500 திர்காம் போதும். எங்களுக்கு இதை விட்டா பிழைப்பு எதும் இல்லை" என எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அந்த சைனாக்காரி 100 திர்காமுக்கு நாங்க ஒத்துகிட்ட காரணத்தால் அவனுங்களை உதாசீனப்படுத்தி அனுப்பி விட்டாள். அவனுங்க எங்களை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்து விட்டு திரும்பவும் பழைய படி எதிரே போய் குத்துகாலிட்டு பாம்பாட்டி மாதிரி உட்காந்து உருட்டிகிட்டு இருந்தானுங்க.
சரின்னு வேலையை ஆரம்பிக்கவேண்டி கண்டெய்னரை திறந்தா எல்லாம் கார்ட்டூன்ல இருந்துச்சு. முதல் காட்டூன் எடுக்கும் போதே நகர்த்த முடியலை. அத்தனை ஒரு கனம். நான் பொதுவாக செல் போனை கூட வெயிட் அதிகம்னு நினைப்பவன். மெதுவா இழுத்து தலையிலே வச்சா எங்க ஊர்ப்பக்கம் கரகம் (ஆடும் கரகம் இல்லை, அம்பாள் கரகம் செம வெயிட்டா இருக்கும்) தூக்கி தலையிலே வச்ச மாதிரி கழுத் து நரம்பு எல்லாம் புடைச்சுகிட்டு கண்ணு சிவந்து போயிடுச்சு. அந்த நேரம் பார்த்து எவனோ தெரிந்தவன் வந்ததால் மானமே போச்சேன்னு நினைச்சுகிட்டு அதை கடை வாசலில் தொப்புன்னு கீழே போட்டேன். அவன் கிட்டக்க வந்து "என்ன அண்ணே இதல்லாம்"ன்னு கேட்க "இந்த ஹோல்சேல் பிசினஸ்" ஆரம்பிச்சு இருக்கேன்"னு சொல்லவும் நான் கைகாட்டின இடத்திலே சீனாக்காரி வந்து நிற்கவும் சரியாக இருந்து தொலைத்தது. அவன் ஒரு மாதிரி பார்த்து கிட்டே போனான். என்ன என்ன புரளி கிளப்பி விடப்போறானோ என நினைத்து கொண்டே நிற்கையில் அடுத்த தெரிஞ்சவன் வந்தான்.

அடப்பாவிகளா எல்லா தெரிஞ்சவனும் இன்னிக்குன்னு பார்த்து இந்த பக்கம் தானா வரனும்? அவன் கிட்டே வந்ததும் நான் ரொம்ப ஜாக்கிரதையாக என் கையை காட்டும் திசையில் அந்த சீனாக்காரி இல்லாம பார்த்து " ஹோல் சேல் கடை ஆரம்பிச்சு இருக்கேன்" என சொல்ல அவன் "அப்படின்னா இந்த சீனாக்காரி யாரு?"ன்னு ரொம்ப ஆர்வமா கேட்க " சீனாக்காரியை வேலைக்கு வச்சிருக்கேன்" என சொன்னேன். சப்கா ரோட்டின் இந்த முனையில் " சீனாக்காரியை வேலைக்கு வச்சிருக்கீங்களா?" என சரியாக கேட்டவன் ரோட்டின் அந்த முனைக்கு போகும் போது கொஞ்சம் வார்த்தைகளை சிக்கனமாக்கி "அபிஅப்பா ஒரு சீனாக்கரிய வச்சிருக்காராம்"ன்னு சொல்லிகிட்டு போனான். அட தேவுடா! எல்லாம் என் நேரம்!

ஆச்சு ஒரு மணி நேரம். நாங்க 3 பேர் மற்றும் கடையிலே வேலை செய்யும் மஜீத் எல்லாம் சேர்த்து முக்கி முக்கி ஒரு 5 சதம் கூட அந்த கண்டய்னரில் காலி பண்ணவில்லை. அதுக்குள்ள எங்களுக்கு மயக்கம் கண்ணை இருட்டிகிட்டு வந்துச்சு. அப்பவும் எதிரே அந்த பட்டான்கள் குத்துகாலிட்டு எங்களையே பார்த்து கொண்டே இருக்க கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. நடு நடுவே டீ வேறு குடித்து பார்த்தோம். நான் மெதுவாக முனாஃப் காகாவிடம் போய் " காண்டிராக்ட் கட்டுபடி ஆகாது போலிருக்கு காகா, கொஞ்சம் ரைஸ் பண்ணுங்க" என சொன்னதும் சீனாக்காரியிடம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடந்துச்சு. அவ கன்னா பின்னான்னு சீன மொழியிலே திட்ட ஆரம்பிச்சா. அனேகமா எங்க அப்பத்தாவிலே ஆரம்பிச்சி எங்க வருங்கால பேத்தி பேரன் வரை திட்டியிருப்பா போலிருக்கு. ஒரு கட்டத்திலே அவ பேச்சின் அசிங்கம் அவ காதுக்கே பொறுக்காம தன் காதையே பொத்திகிட்டு திட்ட ஆரம்பிச்சான்னா பார்த்துகுங்க. ஆனா அவ குரல் வளம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அவ மட்டும் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாட்டை பாடினா வாணி ஜெயராம் தோத்தாங்க போங்க.

திரும்பவும் தூக்க ஆரம்பிச்சோம். முடியலை. சரி இனி கார்டூன் சரியா வராது. அதை ரோட்டிலேயே பிரிச்சு ஒரு பத்து பத்து பீஸாக கையிலே எடுத்து போவும்னு முடிவு பண்ணி அப்படி செஞ்சா அந்த சின்ன சுழல் மாடிப்படியிலே ஒரு 100 தடவை ஏறி இறங்கியதும் குருதி அழுத்தம் சும்மா கிர்ர்ர்ர்ன்னு ஏறுது. முனாஃப் காகா என்னிடம் கவலைப்படாதே. ஹேப்பி அவர்ஸ்ல ஆளுக்கு ரெண்டு பீர் வுட்டுகிட்டு போனா உடம்பு வலிக்காது என சொன்னார். அதாவது அங்க சுத்தி சுத்தி பார்கள் தான். பார் அழகிகள் இரவு 8 மணிக்கு வந்து ஆடும் முன்னதாக இருக்கும் நேரம் தான் ஹேப்பி அவர்ஸ். அப்ப போனா ஒரு பீர் அப்போ 8 திர்காம் தான். ஒரு கட்டத்தில் அந்த சுழல் மாடிப்படியில் வரிசையாக நாங்க நால்வரும் எஸ் வடிவில் மயங்கி விழ அந்த சீனாக்காரி வண்டி மாட்டுக்கு பின்னால நெருப்பு வைக்காத குறை தான். ஒரு வழியா மயக்கம் தீர்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம். "சப் காண்டிராக்ட்" அதான் ஒரே வழி. எதிரே உட்காந்து இருக்கும் பட்டானிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். அது வரை ஒரு கால்வாசிகூட காலியாகவில்லை. பட்டான்கள் வந்து ஒரு முறை பார்த்து விட்டு "ஓக்கே ஒரு 475 திர்காம் கொடுங்க" என கேட்ட போது அடப்பாவிங்களா 100 திர்காமுக்கு காண்டிராக்ட் எடுத்து 3 மணி நேரம் உழைத்து முடித்து 475க்கு சப்காண்டிராக்ட் தேவையா என நினைத்து மீண்டும் மயக்கம் ஆனோம்.

இனி சீனாக்காரி கால்ல விழ வேண்டியது தான் பாக்கி. விழுந்தோம். எங்களால முடியலை என கதறாத குறை தான். "வேலை செஞ்ச வரை காசு கொடு" என கேட்க அவ கொடுத்த அமவுண்ட் என்ன என்பதை இங்கே சொன்னா என்னை அடிங்க வருவீங்க. அதை வேண்டாம் என சொல்லிவிட்டு அங்கயே நின்னோம். அப்போது அந்த பட்டான்கள் மீண்டும் வந்தாங்க. சீனாக்காரி பேரம் பேசினா அவங்க கிட்டே. அவங்க இந்த தடவை 600 திர்காம் கேட்டாங்க. அவளுக்கு அவங்க மேல ஒரே கோவம். காச்சு மூச்சுன்னு கத்தினா. பின்னே ஒத்துகிட்டா. அவங்க முதல்ல கையிலே காசு குடுத்தா தான் ஏத்துவோம்ன்னு சொல்ல அதையும் குடுத்தா. நாங்க இப்ப ரோட்டுக்கு அந்த பக்கம் போய் பட்டான்கள் உட்காந்து வேடிக்கை பார்த்த இடத்தில் குத்துகாலிட்டு உட்காந்தோம். உலகம் உருண்டைன்னு அப்ப தான் புரிஞ்சுது.

ஒரு அரை மணி நேரம் தான். அந்த 3 பேரும் சும்மா பம்பரமா தலையிலே ஒரு கார்டூன், கையிலே ஒரு கார்டூன்னு குழந்தைகள் பொம்மையை தூக்கிகிட்டு போவது போல போய் எடுத்து வச்சாங்க. வேலை முடிஞ்சுது. எங்க கிட்டே வந்தாங்க. முனாஃப் காகா கையிலே 100 திர்காம் திணிச்சானுங்க. என்னவோ புஷ்டோ பாஷையிலே சொன்னாங்க. சிரிச்சுகிட்டே போயிட்டாங்க. அவங்க பேர் என்னன்னு கூட கேட்க தோன்றவில்லை. அனேகமா எதுனா பேருக்கு பின்னால கான் என்று முடியலாம். வாழ்க கான்! நாங்க ரொம்ப நேரம் அந்த பணத்தை பார்த்துகிட்டே நின்னோம். பக்கத்திலே ஒரு கடைக்கு அழைச்சுட்டு போனாரு முனாஃப் காகா. "சார் ஒரு அட்டை புரூபின் 400 பவர் குடுங்க" என கேட்டாரு!


May 25, 2011

பீஸ் சால் க்கே பைலே!!!


இந்த முதல் காதல் முதல் முத்தம் எல்லாம் கவிதை எழுதுபவர்களுக்கு எப்படி ஒரு கருப்பொருளோ அதே போல எனக்கு அந்த முதல் விமானப்பயணமும் அப்படியே. அது ஆச்சு இருபது வருஷம். மும்பை - செம்பூர் கமலா லாட்ஜில் கூட்டத்தோடு கூட்டமாக படுத்திருந்த என்னை உசுப்பி விட்டு "அனேகமா காலை 4 மணிக்கு ஏர்போர்ட் போகனும். ரெடியா இருங்க" என சொன்னபோது இரவு 11 இருக்கும். நான் அது முதலே தூங்கவில்லை. ஏரோப்பிளேன் கனவு என்ன ஒரு வருஷ இரு வருஷ கனவா . எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலான கனவு. அதில் பறக்க வேண்டும் என்று பேராசை எல்லாம் கூட இல்லை. அதை கிட்டத்தில் பார்க்க வேண்டும். இன்னும் கொஞ்சம் அதிஷ்டம் இருந்தால் அந்த படிகளில் ஏறி மேலே இருந்து அன்பேவா எம் ஜி ஆர் போல ஒரு கூலிங் கண்ணாடி போட்டுகிட்டு மத்தவங்களுக்கு டாடா காட்டிவிட்டு இறங்கி விட்டால் கூட போதுமான அளவிலேயே இருந்தன என் கனவுகள்.

இதோ காலை 4 மணிக்கு ஏஜண்ட் வந்து விடுவார். விமானத்தை அருகே பார்ப்பது என்ன, அதன் படியில் ஏறி கூட்டத்தினரை பார்த்து டாடா காட்டுவது என்ன, பறக்கவே செய்ய போகிறேன் என்ற அந்த நினைப்பே தூக்கத்தை விரட்டி விட்டது. இதோ என் கூட வரும் முபாரக், இன்னும் ஒரு பையன் இப்ராகிம் அவனை வழியனுப்ப வந்த அவனது அண்ணன் இப்படியாக நாங்கள் எல்லோருமே விடியல் காலை ஒரு 3 மணிக்கு எல்லாம் மும்பை சாந்தாகுரூஸ் விமானநிலையம் போயாகிவிட்டது. அந்த இப்ராகிமின் அண்ணன் "பசங்கலா அரபில 'தாள்'ன்னு சொன்னா உடனே ஒரு பேப்பரை எடுக்க கூடாது. 'தாள்'ன்னா இங்க வான்னு அர்த்தம் என சொல்லிக்கொடுக்க நான் கர்மசிரத்தையாக அதை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டேன். அரபியில் என் முதல் வார்த்தை பரிட்சியம் அப்போது தான். வாழ்க அந்த வாத்தியார். கடைசி வரை தாள் என்றால் இங்க வா என்பதை தவிர என் அரபிக் புலமை எகிறவே இல்லை. அந்த முதல் வார்தையே எனக்கு அரபிக்ல தெரிஞ்ச கடைசி வார்தையாகவும் ஆகிப்போனது.

ஏஜண்ட் வருவார் வருவார் என நினைத்து மணி நான்கு, ஐந்து என ஓடிக்கொண்டு இருந்ததே தவிர ஆளைக்காணவில்லை. ஒரு வழியாக என் விமான கனவு தகர்ந்து போன நேரத்தில் சாவகாசமாக ஒரு ஆறு மணிக்கு வந்தார். வந்ததுமே "என்னப்பா உங்க பிளைட் 9 மணிக்கு தான். ஆறு மணிக்கு உள்ளே போனா போதும். சிரியன் ஏர்வேஸ், காலை 9 மணிக்கு இங்க எடுத்தா நேரா அபுதாபி தான். நடுப்புற நிக்காது எங்கியும். இங்க பாருப்பா உனக்கு இமிக்ரேஷன் கிளியரன்ஸ் நாட் ரெக்கொயர்டு. ஆனா முபாரக்கும், இப்புராகிமுக்கும் அங்க ஆள் சொல்லிட்டேன். புஷ்ஷிங்ல உள்ள போகனும். சூதனமா நடந்துகுங்க. சரி சரி உள்ள போங்க" என சொல்லி விட்டு டிக்கெட் எங்க பாஸ்போட், விசா காப்பி எல்லாம் கையிலே கொடுத்து விட்டு போயே போயிட்டாரு.

என் கவலை எல்லாம், அடடே ஏர்போர்ட் கிட்டக்க வந்தும் ஒரு ஏரோப்ளேன் கூட கண்ணுல படலையே என்பதிலேயே இருந்தது. இமிக்ரேஷன் எல்லாம் முடிந்தது. பின்னே கஸ்டம்ஸ் செக்கிங். எல்லாம் முடிந்து ஒரு இடத்தில் உட்கார வச்சு பூட்டியவுடன் தான் கண்ணாடிக்கு அந்த பக்கமா ஏரோப்பிளேன் கிட்டக்க பார்த்தேன். பார்த்தேன் என்றால் அப்படி ஒரு பரவசமாக பார்த்தேன். பக்கத்திலே இருந்த ஒருவரிடம் "சிரியன் ஏர்வேஸ்" என்ன கலர்ன்னு கேட்டேன். அவர் தமிழ் தான் என எழுதி ஓட்டியிருந்ததுமுகத்திலேயே. "ஏன் வாங்க போறியா அதை?" என பதில் வந்த போது தமிழன் தான் என கன்பர்ம் ஆனது. இனி அவனிடம் பேசுவதாக உத்தேசம் இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து வேறு இடத்தில் போய் உட்காந்து கண்டிப்பாக அவன் தமிழனாக இருக்க கூடாது என நினைத்து கொண்டே " சார் திஸ் சிரியன் ஏர்வேஸ் இன்ஜின் குட் கண்டிசன், குட் ரன்னிங்" என "தேர்ந்தெடுத்த நேர்தியான" ஆங்கில வார்த்தைகள் போட்டு பேச்சு கொடுத்தேன். இந்த முறை "இனி இவனிடம் பேசுவதாக உத்தேசம் இல்லை" என இந்தியில் மனதில் நினைத்து கொண்டு அவன் வேறு இடம் பார்த்து போய்விட்டான்.

முபாரக், இப்ராகிம் ஆகியோர் என் சந்தேகம் தெளிவிக்க போதும் என நினைத்து அவர்களிடம் திரும்ப வந்து "சிரியன் பிளைட் இன்ஜின் எல்லாம் நல்லா தானே இருக்கும்? என கேட்டேன். அதற்கு இப்ராகிம் "ஆமாண்ணே கண்டிப்பா நல்லா இருக்கும். ஏன்னா அதான் பாரின் பிளைட் ஆச்சே". எனக்கும் அந்த பதில் திருப்தியாக இருந்து தொலைத்தது. பாரின் மோகம்!

8.30க்கு எல்லாம் அந்த அடைக்கப்பட்ட கதவை திறந்த போது "ஒய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்க்க்க்க்க்க்"ன்னு ஏதோ ஒரு விமானம் மூச்சு வாங்கி கொண்டு நின்றது. சுத்தமாக சத்தமே இல்லாத இடத்தில் கண்ணாடி சிறையில் இருந்து வெளி வந்ததும் அந்த வெட்ட வெளியில் அத்தனை ஒரு சத்தம். ஆனால் காதில் ஹார்லிக்ஸ் ஊற்றியது போல இருந்தது.(எனக்கு தேன் பிடிக்காது) ஏனனில் நான் இத்தனை நள் கண்ட கனவு தேவதைகள் அங்கே ரீங்காரமிட்டு கொண்டு ஒன்று வாலை காட்டியும், ஒன்று வயிற்றை காட்டியும், சிலது வயிற்றின் வழியே மனிதர்களை பிரசவித்து கொண்டும், சில விமான பறவைகள் தன் அடி வயிறு வழியே மூட்டை மூட்டையாக எதையோ ஏற்றிக்கொண்டு வயிற்றை நிரப்பிக்கொண்டும் இருந்தன. அழகாய் சத்தமே இல்லாமல் ஒரு நீண்ண்ண்ட பஸ் வந்து நிற்க நான், முபாரக், இப்ராகிம் ஆகியோர் ஓடி ஏறிக்கொண்டோம். உட்கார சீட் எல்லாம் இல்லை. எல்லாமே ஸ்டாண்டிங் தான். அது என் கனவு தேவதை அருகே கொண்டு செல்லும் வாகனம். மெதுவாக ஊர்ந்து போய் அந்த சிரியன் ஏர்வேஸ் வயிற்று பகுதியின் அருகே நிற்க நான் இறங்கி கூட்டத்தோடு கூட்டமாக பிரம்மித்து போய் அருகே பார்த்தேன். அப்ப்ப்ப்ப்பாடாஆஆ எம்மாம் பெருசு. அதன் இறக்கை அடியில் ஒரு ராட்சத இன் ஜினின் ஃபேன் சுற்றி கொண்டு சத்தம் போட்டுக்கொண்டு இருக்க எல்லோரும் அந்த படி வழியே ஏற நான் மட்டும் அதன் அருகே நின்று கொண்டு பார்த்து கொண்டே அசையாமல் நின்றேன். விமானம் அருகே கீழே தொப்பி போட்ட பைலட்டுகள், விமான பணிப்பெண்கள் சிலர் ஒரு தள்ளு வண்டி போல தன் லக்கேஜ் வைத்து கொண்டு ஏதோ பேசிக்கொண்டு நிற்க ஒரு ஏ கே 47 வைத்திருந்த ஒரு பாதுகாப்பு போலீசின் அந்த துப்பாக்கியை கூட ஆர்வமாக விழுங்குவது போல பார்த்து கொண்டு நின்றேன். அய்யோ இங்கயே ஒரு கூட்டுற வேலை கிடைச்சா கூட போதும். வாழ்நாள் முழுக்க விமானம் பார்த்து கொண்டே இருந்து விடலாம் என நினைத்து கொண்டேன்.

ஏரோப்பிளேன் ஏற படி ஏறும் போது துபாய் பார்ல பெண்கள் ஆட வரும் முன்னே மேடையை தொட்டு கும்பிடுவது போல தொட்டு கும்பிட்டேன் . மேலே உள்ளே நுழையும் முன்னர் திரும்பி அன்பே வா எம் ஜி ஆரை போல கைகாட்ட வேண்டும் பின்னர் பிள்ளையார் மந்திரம் சொல்லனும் என நினைத்து கொண்டேன். அந்த தகர படிகள் என் கால் பதிய பதிய எங்கள் வீட்டு தகர மாட்டு கொட்டகையின் மேலே நின்று ஆணி அடிக்கும் போது சத்தம் வருமே அப்படி வந்தது. மேல் படி வந்ததும் ஒரு அழகான பெண் அத்தனை ஒரு அழகில்லை என்றாலும் விமானப்பணிப்பெண் என்றாலே உலக அழகியாக நான் கற்பனை செய்து கொண்டிருந்த படியால் அந்த பெண் மிகவும் அழகாய் தெரிந்தாள். இருகரம் கூப்பி செயற்கையாக வணக்கம் சொன்ன போது அவள் எனக்கே எனக்காக பிரத்யோகமாக சொல்வதாய் நினைத்து கொண்டு அன்பேவா எம் ஜி ஆர், பிள்ளையார் மந்திரம் போன்றவைகளை மறந்து போனேன். பதிலுக்கு நானும் என் பெட்டியை கீழே வைத்து விட்டு இருகரம் கூப்பி வணக்கம் சொன்ன போது அசூசையாக அவள் பார்த்த பார்வை கூட அப்போது எனக்கு புரியவில்லை. ஒரு வித மோன நிலையில் இருந்தேன். பின்னர் அவள் என்னை தவிர்த்து என் பின்னே வந்த ஒரு அழகில்லா கிழவனுக்கு அதே போல வணக்கம் வந்த போது அந்த கிழவன் மேல் ஆத்திரம் வந்தது.இவனெல்லாம் எதுக்கு பிளைட்ல வர்ரானுங்க என மனதின் உள்ளே மிகவும் கடிந்து கொண்டேன்.

உள்ளே போனதும் அடுத்த அப்சரஸ் என்னை நோக்கி "போர்டிங் கார்ட் ப்ளீஸ்" என கேட்ட போது "அய்யோ இப்பவே சாப்பாடு கொடுத்துடுவாங்க போலிருக்கே" என நினைத்து நீட்டினேன். அவள் " 45 ஏ... கோ டு தட் சீட்" என சொல்லி விமானத்தின் நடுப்பாகம் கிட்ட தட்ட இறக்கைக்கு மேலே நான் உட்காந்து இருப்பது போல ஜன்னல் ஓர சீட் காண்பித்தாள். பின்னர் ஒரு தலைப்பா கட்டின பஞ்சாபி தாத்தா, அடுத்து முபாரக், அடுத்து இப்ராகிம் என நால்வரும் அமர எனக்கு ஏக சந்தோஷம். ஜன்னல் ஓட சீட். எல்லாவற்றையும் கவனிக்கலாம். அப்போது மணி கிட்ட தட்ட 9 நெருங்கியது. சீட் எல்லாம் தடவி பார்த்தேன். ஏதோ என் சொந்த விமானம் போல ஜன்னல் எல்லாம் ஆசையாக தடவிக்கொடுத்தேன். தேவையே இல்லாமல் எங்க வீட்டில் பாத்திரம் தேய்க்கும் இருளாயி கிழவி ஞாபகம் வந்தது. இருளாயி எல்லாம் பிளைட்டில் போகவே முடியாது. நான் தானே பிளைட்டிலே எல்லாம் போனேன் என அதுகிட்டே போய் சொல்லனும் என நினைத்து கொண்டேன். (கருமம்) அப்போது தான் ஞாபகம் வந்தது. ஆகா பிள்ளையார் மந்திரம் சொல்லவே இல்லியே என.

கஷ்ட்கர்த்தே திவ்தேஹாய பக்தேஷ்ட ஜெயதர்மனே .... அட அந்த பொண்ணு ஏன் இத்தனை குட்டை பாவாடை போட்டிருக்கு... ஹய்யோ அந்த சமஸ்க்ரதம் இப்படித்தான் ஸ்டார்டிங் ட்ரபிள் இருககாது, ஆனா பாதில வண்டி நின்னுடும்... அய்யய்யோ இந்த் பிளைட்டுக்கு பெட்ரோல் எல்லாம் போட்டுருப்பாங்க தானே... சமஸ்க்ரதம் வேண்டாம்.. தமிழ்ல முருகன் ஸ்லோகம் இருக்கே... அப்பாடா என்னா ஒரு வாசனை இந்த ஏர்ஹோஸ்டஸ் கிட்டே.. சிலோன் லக்ஸ் போட்டு குளிப்பாளோ?... வால வேல விகாரவா.. என்னது தட்டிலே என்னவோ எடுத்து கிட்டு வர்ரா.. ஒ சாக்லெட்... (பிரித்து வாயில் போட்டேன்) அட புளிப்பு மிட்டாய்.. ஒரு காட்பரீஸ் தரக்கூடாதா... வாரகாமனை நாடிவா... ஹய்யோ ஏன் என் இடுப்புகிட்டே கையை கொண்டு வர்ரா ஆண்டாவா ஆண்டவா... வாடி நாடிடுமோ சிவா... ஓ பெல்ட் போட சொல்றா, ஓக்கே ஓக்கே... எங்கவுட்டேன்...ம் வாடிநாடிடுமோ சிவா... என்னவோ சொல்றாங்க. ம் வாடிநாடிடுமோ சிவா.. வாசிமோகன வேலவா...

பக்கத்தில் பார்த்தேன். இப்ராகிம் என்னவோ முணு முணுத்து கொண்டு இருந்தான். என்னன்னு கேட்டேன். யாசின் ஓதுவதா சொன்னான். அவனும் குட்டை பாவாடை பார்த்திருப்பான் என நினைத்து கொண்டேன். மெல்ல விமானம் ஓடத்துவங்கியது. மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம் வேகம் எடுத்து அது அதிகமான போது விமானமே குலுங்கியது மெல்ல பயம் வந்தது எனக்கு. ஷஷ்டி கவசம் சொல்லலாமா என நினைத்த போது குபீரென மேலே எழும்பியது. பக்கத்தில் இருந்த பாஜி வலது உள்ளங்கையை நெஞ்சில் வைத்து கொண்டார். ஏற்கனவே அவர் காது டர்பனால் மூடி இருந்தது. மும்பையின் கட்டிடங்கள் எல்லாம் கோணலாக தெரிந்தது எனக்கு. கொஞ்சம் கொஞ்சமாக சின்னதாகி எறும்பாக ஆனது. பின்னர் பச்சையாக கடல் தெரிந்தது. விமானம் இப்போது சமநிலைக்கு வந்து விட்டது. இதற்காகவே காத்திருந்தது போல சீட் பெல்ட் கழட்டும் சத்தம் சிலம்பொலி போல கேட்டது. நான் முடிச்சு போட்டிருந்த படியால அழகாக சத்தமில்லாமல் அவிழ்து வைத்தேன். அந்த விமான பணிப்பெண் தேவதைஸ் எல்லாரும் குறுக்கும் நெடுக்குமாக எதற்கோ அலைந்தனர்.

எனக்கு மேலே இருந்த பட்டனை தொட்டு பார்க்க ஆசையாக இருந்தமையால் தொட்டேன். ஒரு பெண் வந்தது." ஆர் யூ கால் மீ" என கேட்க நான் "இல்லியே" என தமிழில் செப்பினேன். அவசரத்துக்கு ஆங்கிலம் அடம் பிடிக்கும் எனக்கு. உடனே மேலே இருந்த பட்டனை ஒரு முறை அந்த பெண் அமுக்கி விட்டு என்னவோ சொல்லி விட்டு போனது. நான் பாஜியிடம் " மீ டென் டைம்ஸ் பிளைட். யூ? " என கேட்க அவரு "க்யா"ன்னு கத்த நான் சர்வமும் அடங்கி போனேன். சத்தியமா அவனுக்கு பஞ்சாபி மொழியில் கூட நான் பத்து முறை விமானத்திலே பறந்தேன் என சொன்னால் நம்பவே போவதில்லை. நான் சீட் பெல்ட் முடிச்சி போட்ட அழகை தான் பார்த்து தொலைந்துவிட்டானே!

இப்ராகிம் என்னிடம் "தண்ணி எப்போ தருவாங்க?" என கேட்க மேலே இருக்கும் பட்டனை அமுக்கு. வருவாங்க. அப்ப கேளு அப்படியே பக்கத்து இலைக்கும் பாயாசம் கேளு" என சொன்னேன். ஒருவழியா வந்தது. டின் பீர் ஒன்னே ஒன்னு தான் குடுப்பாங்களாம். பின்னே சாப்பாடுன்னு ஒன்னு கொடுத்தாங்க. எனக்கு பிடிக்காத வஸ்துகளாக இருந்தும் என் கனவு விமானமாச்சே. தேவாமிர்தமா இருந்தது. ஜன்னல் பக்கம் பார்த்தேன். இறக்கையில் சில பிளேட்டுகள் விமானம் திரும்பும் போதெல்லாம் வாய் பிளந்தது. அய்யய்யோ நான் மட்டுமே தான் அதை கவனிக்கிறேன். போய் பைலட் கிட்டே சொல்லலாமா என நினைத்து சொல்லாமல் விட்டுட்டேன்.

சில சமயம் "டும் டும் டுட் டுர்ர்ர்ர்ர்" என காற்று வெற்றிடத்தில் போகும் போது பயங்கர சப்தம் கேட்ட போதெல்லாம் கடலில் குதிக்க தயார் நிலையில் இருக்க வேண்டி காலுக்கடியில் இருந்த உபகரணங்கள் சரியாக உள்ளதா என தொட்டு பார்த்துக்கொண்டேன். ஏனோ தெரியவில்லை. நான் வாடகை சைக்கிள் எடுத்தால் கூட கொஞ்ச நேரத்தில் காற்று இறங்கி விடும் வீக்கான ராசி என் ராசி. என் சீட் முன்பாக இருந்த "வாந்தி எடுக்கும்" பையை கையிலே எடுத்து வாந்திக்கு முயன்றேன். பயத்தில் எச்சில் கூட வரவில்லை. ஒயின் ஷாப்பில் பீரை கொடுக்கும் காதித பை மாதிரியே இருக்குதே என நினைத்து கொண்டேன். கக்கூஸ் எங்கே இருக்கின்றது என தேடிப்பிடித்து போனேன். உபயோகப்படுத்த இல்லை. அதன் "உள்கட்டமைப்பு"கள் எப்படி என பார்க்கவே. கெமிக்கல் டாய்லட் அனியாயத்துக்கு சத்தம் போட்டு உள்ளிழுத்தது. மூல வியாதிக்காரர்கள் ஜாக்கிரதை என போர்டு வைக்க வேண்டும். அந்த நேரத்தில் விமானம் வெடிக்க கூடாது என சாமியை வேண்டிக்கொண்டேன். அப்படி நேரிடின் நான் ஆபாசமாக போட்டோப்படுத்தப்பட்டு எதாவது அரபிக் பேப்பரில் வந்து விடுவேனோ என்கிற அச்சம். உள்ளே இருந்த ஏதேதோ வாசனை ஆஃப்டர் ஷேவிங் திரவியத்தை எல்லாம் கையில் காலில் பூசிக்கொண்டு நாறிப்போய் வெளியே வந்தேன்.

என் பக்கத்து சீட் பாஜி போல கண்ணுக்கு கருப்பு துணி கேட்க வேண்டி மேலே பொத்தானை அமுக்கினேன். வந்த பணிப்பெண்ணிடம் "இங்கிலீஸ் மேகசீன் பிளீஸ். அப்படியே வரும் போது ஒரு பிளாக் துணியும் ப்ளீஸ் ப்ளீஸ்" என சொன்னேன். அந்தம்மாவுக்கு என் ஆங்கிலம் சென்றடைய வில்லை போலிருக்கிறது. ஒரு படமே இல்லாத அரபிக் புத்தகம் கொடுத்த போது அதிலிருந்ததை இடமிருந்து வலமாக முழுவதும் படித்து முடித்தேன்:-) எனக்கு கொடுக்கப்பட்ட புத்தகம் அரபிக் மொழி என புரிய சிலகாலம் ஆனாது என்பது தனி விஷயம்.

விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு என தனி மதம் தனி ஜாதி உண்டாக்க வேண்டிடும் என நினைத்து கொண்டேன். இனி நானும் அந்த உயர்சாதியில் ஒருவனாக ஆனதால் பக்கிங்காம் அரண்மனையில் அம்மாவை விட்டு பெண் பார்க்க சொல்லலாம், ஆனால் அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அலகாபாத் ஆனந்தபவன்ல பொண்ணு எடுக்கலாம் என்றால் அம்மாவுக்கு அந்த குடும்பமே பிடிக்காது. தினமும் சம்மந்தி சண்டை வரும். அதையும் நிராகரித்தேன். சரி ஒரு செட்டிநாட்டு அரச குடும்பமோ, ஒரு ஊத்துக்குளி ஜமீனோ பார்த்துக்க வேண்டியது தான். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை.

கீழே சின்னதாக கப்பல் எல்லாம் போனது. உவ்வே.. போயும் போயும் கப்பலில் போகிறானே.. பரம ஏழை போலிருக்கு என முகத்தை திருப்பிக்கொண்டேன். எம்பர்கேஷன் கார்டு கொடுத்து நிரப்ப சொன்ன போது பக்கத்தில் எட்டிப்பார்தேன். முபாரக் ஆக்குபேஷன் இடத்தில் டாக்டர் என எழுதினான். திட்டினேன். ஏன் அப்படி எழுதினாய் என கேட்டேன். இதை பார்த்து விட்டு இன்னும் ஒரு பீர் கொடுத்தாலும் கொடுக்கும் என சொன்னான். அதிர்ந்து விட்டேன். "சரி யாருக்காவது உடம்பு சரியில்லைன்னு சொல்லி உன்னை கூப்பிட்டு வைத்தியம் பார்க்க சொன்னா என்ன செய்வாய்? அந்த ஒரு உயிரே போய்விடுமே" என கேட்ட போது அவன் " அது பரவாயில்லை. ஆனா நீ பைலட்ன்னு எழுதினியே. ஒருவேளை இந்த பைலட்டுக்கு நெஞ்சுவலி வந்து உன்னை கூப்பிட்டி ஓட்ட சொன்னா என்ன ஆகும்.ஒட்டுமொத்தமா எல்லா உயிரும் போய்விடுமே" என சொன்னான். அகராதி பிடித்த தமிழன். அடுத்தவன் வீட்டை எட்டிப்பார்பதை எப்போது விட்டொழிக்க போறார்களோ?

ஒரு வழியாக கீழே இறங்கும் நேரம் வந்தது. சீட் பெல்ட் முடிச்சு போட்டுக்கொண்டேன். "மீண்டும் வருகிறேன் என் காதலியே. இனி அடிக்கடி வருகிறேன்" என மனதில் நினைத்து கொண்டே என் இருக்கையில் சாய்ந்து படுத்துக்கொண்டேன். நின்றதும் கீழே இறங்கி ஒரு வாஞ்சையுடன் அதை பார்த்து கொண்டே ஏர்போர்ட் விட்டு வெளியே வந்தேன். அபுதாபி என்னை அன்புடன் அரபி மொழியில் வரவேற்றது. ஆச்சு அதல்லாம் இருபது வருஷம். இன்றைக்கு நடந்தது போல இருக்கின்றது!


September 18, 2010

இட்லி+நெய்+ஜீனி (18.09.2010)

ஒரு வழியா எந்திரன் ரிலீஸ் ஆக போவுதாம். எனக்கு ரஜினி படம் முதல் காட்சி பார்க்கும் "பயங்கரமான" ஆசை எல்லாம் ராகவேந்திரா, மன்னன் ஆகிய பட்ங்களோட சுத்தமா போயிடுச்சு. ராகவேந்திரா படம் ரஜினிக்கு 100 வது படம்.நம்ம ராதாவுக்கு ரஜினி படம் ரிலீஸ்ன்னா ரஜினி உயிர். கமல் படம் வந்தா உடல் மண்ணுக்கு உயிர் கமலுக்கு என்று வாழ்து கொண்டிருந்த நேரம். "வாடா போகலாம் மன்ற டிக்கெட் எடுத்து விட்டேன், பியர்லெஸ்ல பால்கனில டிக்கெட்" என்றதும் அவன் கையில் இருந்த "ராகவேந்திரா நமக" என பிரிண்ட் செய்த ரிப்பனை பிடுங்கி தலையில் கட்டிகொண்டு கிளம்பி விட்டேன்.

படம் ஆரம்பித்ததும் எங்க பக்கத்தில் இருந்த ஒரு உணர்சிவசப்பட்ட ரசிகர் ஒரு தேங்காயின் தலையில் சூடம் கொளுத்தி காண்பித்து விட்டு எங்க தலையை சுத்தி டமார்ன்னு கீழே உடைக்க..தேங்காய் உடைந்ததோ இல்லியோ கீழே வேற தேங்காய் சூடம் சுத்திகிட்டு இருந்த ஒருத்தன் மண்டை உடைந்த சத்தம் "அய்யோ தலைவா"ன்னு கேட்டுச்சு.

"டேய் எவனோ கமல் ரசிகன் உள்ளே புகுந்திட்டான். எங்க தர்மயுத்தம் மன்ற தலைவர் மண்டைய உடைச்சுட்டான்"ன்னு கத்த ஒட்டு மொத்த ரஜினி ரசிகர்களும் மேலே தபதபன்னு ஓடி வர எங்களுக்கு என்ன நடந்தது என சரியா தெரியலை. சில்லித்தனமா அடிச்சதிலே சில்லி மூக்கு உடைந்து சில பல மில்லி ரத்தம் வீணாகியது. கொஞ்ச நாள் நான் தெலுகுதேசம் சந்திரசேகரராவ் மாதிரி திரிஞ்சேன். கழுத்தில் ஒரு பிங்க் நிற துண்டு இல்லாதது தான் ஒரே குறை.இனி ரஜினி படத்தை புறக்கணிப்போம் என்கிற வைராக்கியம் பிரசவ வைராக்கியம் போல ஆனது.

"டேய் சுந்தரம் தியேட்டரில் மன்னன் படம் ரிலீஸ். முதன் முதலா இளையராஜா மியூசிக்ல தலைவர் ஒரு பாட்டு பாடியிருக்காரு. முதல் காட்சி மன்ற டிக்கெட் வாங்கிட்டேன். வா போகலாம்" என அதே ராதா சொல்ல நான் மறுப்பேதும் சொல்லாமல் போனேன். வாசலில் தலைமை மன்றத்தில் இருந்து புகுந்த வீட்டுக்கு சீர் கொடுப்பது போல கை நிறைய கொடுத்தாங்க. என்னாது.. கிழிஞ்ச லாட்டரி டிக்கெட். தலைவர் வரும் போது போடனும். வாங்கி பை நிறைய வச்சுகிட்டு போய் உட்காந்தா... அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாட்டு வந்தது. "அய்யய்யோ தலைவர் பாடுறார்டாஆஆஆஆஆ"ன்னு எவனோ கத்த ஒரே லாட்டரி மழை தான் தியேட்டரில்.

எனக்கோ பயங்கர ஆச்சர்யம். மெதுவா ராதா கிட்ட "டேய் இது ஜேசுதாஸ் குரல் மாதிரி இருக்கேடா'ன்னு கேட்டப்ப அவன் "போடா லூசு, இவர் பாட வந்துட்டா ஒரு பயலுக்கும் சான்ஸ் இல்லாம போயிடும்ன்னு இது வரை பாடாம இருந்துட்டாரு. பின்ன ஒரு நாள் இளையராஜா இவர் கிட்ட அழு அழுன்னு அழுது பாட வச்சாரு... பாரேன் நீயே ஜேசுதாஸ் பாடுவது மாதிரி இருக்குன்னு சொல்லிட்ட... ஆக்சுவலி இந்த ரெக்கார்டிங் போது தலைவர் ஜலதோஷத்துல இருந்தாரு. அதனால தான் இப்படி இருக்கு. இல்லாட்டி இன்னும் பிரமாதமா வந்திருக்கும். போடுடா கையில இருக்கும் லாட்டரி சீட்டை"ன்னு சொல்ல நான் தேமேன்னு போட்டேன்.

பின்ன ஒரு விஜயசாந்திகூட ரொமான்ஸ் பாட்டில் ரஜினி "உம் அப்புடி போடு" "அது சரி"ன்னு ஏதோ எசப்பாட்டு பாட ராதா என் பக்கம் திரும்பினேன். அவன் என் கிட்ட "பாரேன் ஜேசுதாஸ் குரல் கன்றாவியா இருக்கு நம்ம தலைவர் குரலுக்கு இந்த குரல் கிட்டத்திலேயே வர முடியாது"ன்னு சொல்ல என் ரெண்டு கண்ணிலும் தாரை தாரையா தண்ணி வந்திதுச்சு. அப்போ முடிவு செஞ்சது தான் இனி ரஜினி படம் ரஜினி ரசிகர்கள் கூட உட்காந்து பார்க்க கூடாதுன்னு. இப்ப சொல்லுங்க நான் எந்திரனை பார்கவா? புறக்கணிக்கவா?

@@@@@@@@@@@@@@@@

ஒரு பத்து நாள் முன்ன திடீர்ன்னு பசங்களுக்கு லீவ் கிடைச்சது. அன்னை வேளாங்கன்னி தேர் திருவிழான்னு லோக்கல் ஹாலிடே. சரின்னு காவிரில குடும்பத்தோட குளிக்கலாம்ன்னு முடிவாகி கட்டுசாதம் கட்ட அபிஅம்மா ஜரூரா வேலை பார்க்க தம்பி ஓடிப்போய் அவன் சைக்கிள் துடைக்க ஒரு ஹாட்பேக், ஜமுக்காளம், துண்டு எல்லாம் அபி ரெடி பண்ண ஜகஜோதியா கிளம்பிட்டோம். எங்க ஊர்ல இருந்து 6 கிமீல் எங்க குலதெய்வம் காத்தாயி அம்மன் கோவில். அதை பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சுக்க இங்க கிளிக் பண்ணுங்க. அங்க இருந்து கூப்பிடு தூரத்தில் காவிரி. கரையில் முந்திரி காடு. அந்த பக்கம் திருவெண்காடு வயல் எல்லாம் வந்துடும். இந்த இடத்தில் காவிரியில் நடுவே ஒரு கிணறு இருக்கும். ஆழம் அத்தனை இருக்காது. சுழல் இருக்காது. ஊர்க்காரன் ஒருத்தன் இருக்க மாட்டான். எந்த பயமும் இல்லாமல் கும்மாளம் போடலாம்.

ஒரு ரெண்டு மணி நேரம் குதியாட்டம் போட்டோம். வந்து ஜமுக்காளத்தில் உட்காந்து ஹாட்பேக் திறந்தா அது காலியா இருந்துச்சு. வழக்கம் போல சொதப்பினது நான் தான். எல்லாம் செய்து வைத்து விட்டு எடுத்து வைக்கும் என் கடமையில் சிறிது தவறி விட்டேன். கழுவ போட இருந்த காலி ஹாட்பேக் எடுத்து வந்து விட்டேன். சரி போட்டோ எடுக்கலாம் என்றால் பேட்டரியை சார்ஜ்ல போட்ட நான் திரும்ப அதை எடுத்து போடாமல் கேமிராவை மாத்திரம் எடுத்து வந்திருந்தேன். பெண்கள் வீக்கர் செக்ஸ்ன்னு எவன் சொன்னது. செம குத்து. முதுகு வலி தான் மிச்சம்.

திரும்ப போய் காவிரியில் குதியாட்டம் போட்டோம். சும்மா ஜாலியா நான் "இப்போ என் கிட்ட 100 கோடி ரூபாய் இருக்குன்னு வச்சுகுங்க, என்ன பண்ணலாம்னு கேட்க அபிஅம்மா "இங்க இருந்து டாக்சி ஆட்டோ பிடிச்சு போய் அந்த ஹாட்பேக்கை எடுத்து வந்துடலாம்"ன்னு அபத்தமாக சொல்ல நான் "இல்ல சன் பிக்சர்ஸ் மாதிரி பன் பிக்சர்ஸ்ன்னு ஆரம்பிச்சு 100 நாள் ஓடுவது போல படம் எடுக்கலாம்"ன்னு சொன்னேன். அதுக்கு அபி, "அதுக்கு எதுக்கு 100 கோடி? கேபிள் அங்கிள் புத்தகம் 30000 ரூபாயில் படம் எடுப்பது வாங்கி படிச்சுட்டு படம் எடுத்துட்டா போச்சு"ன்னு சொன்னா. நான் அதுக்கு "அய்யோ படம் 100 நாள் ஓடுவது மாதிரி இருக்கனும்"ன்னு சொல்ல அதுக்கும் அபி "நோ பிராப்ளம், உண்மை தமிழன் அங்கிள் கிட்ட சொன்னா அவரு 100 நாள் ஓடுவது மாதிரி எடுத்து தரப்போறார்"ன்னு சொல்ல எனக்கு அப்போ ஒன்னும் புரியலை. ஆனா தம்பி தான் இல்லாத 100 கோடிக்கு அழகா பட்ஜட் போட்டான். பஞ்சு மிட்டாய் வாங்கலாம் என அவன் கருத்தை பறக்கவிட்டான்:-)

திரும்ப வீட்டுக்கு வந்த பின்னர் தான் புரிந்தது. யோவ் உண்மை தமிழா உன் புகழ் ரெக்கை கட்டி பறக்குதுய்யா... கொஞ்ச நேரம் மனம் விட்டு சிரித்தேன்.ஆமாம் உனாதானா படம் எடுத்தா இன்னிக்கு ஆரம்பிக்கும் படம் 100 நாள் ஓடி பின்ன தான் அடுத்த காட்சி ஆரம்பிக்கும் என்பது புரிந்து ரொம்ப நேரம் சிரிச்சேன்.

@@@@@@@@@@@@@@@@

என் நண்பர் ஒருத்தர் கடைத்தெருவில் போகும் போது வண்டியை நிப்பாட்டி 'நான் பஸ் விட்டிருக்கேன்" என சொல்ல "ஓக்கே நோ பிராப்ளம்.லைக்கிட்டா போச்சு. நல்லா இருந்தா ரீஷேர் பண்ணிடலாம்"ன்னு சொல்ல அவரு "அட அதல்லாம் வேண்டாம். நானே முழு பணமும் போட்டாச்சு" என என்னவோ சொல்ல பின்னர் தான் புரிந்தது. அவரு கோடங்குடி- மாயவரம் மினி பஸ் ரூட் வாங்கி பஸ் விட்டது. என்ன கொடுமை இதல்லாம். இதுக்கு தான் சொல்றது. ரொம்ப நேரம் Buzz ல உட்காராதீங்கன்னு.

இந்த Buzzல பசங்க செய்யும் அட்டகாசம் தாங்கலை. அதிலயும் மீனாட்சிசுந்தரம்னு ஒரு பையன். ரொம்ப அடாவடி தான். அவரு பஸ்ல ரெண்டு எடுத்து விடுறேன் பாருங்க.

=============
விஜய்: ஆஞ்சனேயா! என அடுத்த படம் மாத்திரம் 100 காட்சி ஓடட்டும். நான் உனக்கு வடை மாலை சாத்துறேன்.

ஆஞ்சனேயர்: ஆகா வட போச்சே!
=================

எந்திரனுக்கும் இந்தியனுக்கும் என்ன வித்யாசம்?

இந்தியன்ல யூத்து தாத்தா வேஷம் போட்டாரு, எந்திரன்ல தாத்தா யூத்து வேஷம் போட்டாரு.

===========================

இந்த கொடுமை எல்லாம் எங்க போய் சொல்ல பிளாக்கை விட்டா?



@@@@@@@@@@@@@


எங்க வீட்டிலே அபிக்கும் மூத்த ஒரு குழந்தை இருக்கு. பெயர் T.N.எழில். இதோ போட்டோவிலே இருக்கே அதான். அதுக்கு இன்னிக்கு தான் பர்த்டே. அபி பிறக்கும் முன்னமே இதை வாங்கி வந்தேன். அபி பிறந்த பின்னே அபி கூட வளர்ந்து பின்னே தம்பி நட்ராஜ் கூட வளர்ந்து இப்பவும் இப்படியே குழந்தையா இருக்கு. அதுக்கு முன்னே பெயர் எல்லாம் கிடையாது. சமீபமா அதுக்கு எழில்னு பேர் வச்சுட்டா அபி. எங்கள் படுக்கையில் அதுக்கும் ஒரு இடம் உண்டு.குழந்தைகளுக்கு போர்வை போத்தினா அதுக்கும் கால் தெரியாம போத்தனும். பாதி இரவில் அது அபி, நட்ராஜ் கிட்டே உதை வாங்கி கால்பக்கம் போனா கூட எங்களுக்கு மனசு தாங்காது. எடுத்து பக்கத்தில் போட்டு போர்வை போர்த்தி விடும் வழக்கம் ஆகிடுச்சு. அதன் பக்கத்தில் இருக்கும் பொம்மை T.N. புஜ்ஜியாம். நட்ராஜ் குழந்தையா இருக்கும் போது பெட்ல உச்சா போனா கூட அந்த பழியை பாவம் எழில் தான் ஏத்துக்கும். கோல மாவு டப்பாவை தம்பி கீழே கொட்டினா கூட எழில் தான் கொட்டியதா அர்த்தம். அப்படி ஒரு அன்னியோன்யமாகி விட்டது அந்த அஃறினை குழந்தை. வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் எழிலை விசாரிக்காமல் இருந்ததில்லை.

டெடிபீர் பொம்மை வத்து கொஞ்சும் கல்லூரி பெண்களை பல தடவை நானே கிண்டல் செய்திருக்கேன். ஆனால் நானே இன்னிக்கு அதுக்கு பர்த்டே கேக் வாங்கி வந்தேன். எல்லாம் குழந்தைகளுக்காக:-))

@@@@@@@@@@@@@@@@@@@@@@

August 25, 2010

அய்யோ ப்ராம்பூஊஊஊஊஊஊஊ!!!!!




காலை நட்ராஜை பள்ளியில் விட்டு விட்டு என் மனைவியை கோவிலில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து ஹாயாக வீட்டின் கேட் உடபட வாசல் கதவு எல்லாம் பப்பரக்கான்னு திறந்து வச்சுகிட்டு நாற்காலியில் லேப்டாப் ஓப்பன் செஞ்சுட்டு அதன் மேலே பேப்பர் வச்சு படிச்சுகிட்டு இருக்கும் போது தான் சம்பவம் நடந்தது. இல்லை ஊர்ந்ததுன்னு சொல்லலாம்.

நல்ல இம்மாம் பெரிய பாம்பு. (ரெண்டு கையையும் விரிச்சு வச்சிருக்கேன்) பொதுவா பாம்பை பார்த்தவன் எல்லாரும் "சும்மா இத்தா மொத்தம்ன்னு தன் முழங்கையை காட்டுவான். ஒரு ஆள் உசரத்துக்குன்னு சொல்லுவான். எவனுமே குட்டி பாம்பை பார்த்ததா சொல்லவே மாட்டான். அப்படி சொன்னா அவனுக்கு இழுக்கு என்பது போல் நினைத்து கொள்வான். நீங்க தயவு செய்து நம்புங்க. அது அத்தாதண்டி பாம்பு. இத்தனைக்கும் வாசலில் நந்தி மாதிரி என் வண்டி சாய்ஞ்சுகிட்டு நிக்குது. எப்படி வந்ததுன்னு தெரியலை. நிலைப்படி தாண்டி முக்கால்வாசி உள்ளே வந்துடுச்சு. மீதி வால் மாத்திரம் நிலைப்படிக்கு வெளியே இருக்கு. ஏதோ பெரியதாய் ஊர்வதை போல உள்ளுணர்வு சொன்னதால் திரும்பி பார்த்தேன்.

அது பாம்பு தான் என என் மூளைக்கு செய்தி போவதற்கு முன்பாக மீதியும் உள்ளே வந்துவிட்டது. அடுத்து என் கால் தான். கிட்ட தட்ட அதன் வாய்ப்பக்கம் என் கால் இருக்கு. அது இடது பக்கம் திரும்பினால் பூஜை ரூம். ஒரு வேளை சாமிகும்பிட வந்திருக்குமோ? இல்லை இன்றைக்கு என்ன கிழமை? அய்யோ அவசரத்துல கிழமை எல்லாம் மறந்து போச்சு. எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.

பாம்புகடித்தால் வாயில் நுரை வருமே. அடடா வாயில் வெற்றிலை வேற போட்டிருக்கேன். நுரை வர அது இடைஞ்சலா இருக்குமே...ச்சே மனசு என்னவெல்லாம் நினைத்து தொலைக்கிறது. பூஜை அறையில் ஓம் நமச்சிவாய ஓடிகிட்டு இருக்கு. பேசாம எதுனா எல் ஆர் ஈஸ்வரியின் பாம்பு பாட்டு ஓடினா கூட அது கேட்டுகிட்டு சமத்தா கொத்தாம போயிடும் என நினைத்து கொண்டேன்.

அடுத்து அடுத்து என்ன நடந்தது என்பதெல்லாம் சரியா நியாபகம் வரவில்லை இப்போது. ஆனா கத்தினேன். டீசண்ட்டா கத்தலை என்பது மாத்திரம் நல்லா தெரியுது. பக்கத்துல கட்டுமான பணியில் இருக்கும் கொத்தனார், மேஸ்திரி எல்லாம் வந்தாச்சு. அப்ப தான் கிட்ட தட்ட என் சுயநினைவுக்கு வர்ரேன். லேப்டாப் கீழே கிடக்கு. நான் சோபா மேலே நிற்கிறேன். வந்தவங்க எல்லாம் கையில் கம்பு, செங்கல் சகிதம் நிற்க அது "ஆகா தப்பான இடத்துக்கு வந்துட்டமோ"ன்னு திரும்பி படியிறங்கி சாவகாசமா ஜல்லிமேல் ஊர்ந்து காம்பவுண்ட் சுவர் ஏறுது.

பயந்துடுச்சு. ஆமாம் நான் அத்தனை ஒரு கத்தல். முன்னமே சொன்ன மாதிரி டீசண்டா கத்தலை. அதிலே ஒரு சித்தாள் சொன்னான் "யாரோ ஆடு அறுக்குறாங்கன்னு நினைச்சு வந்தேன்" ங்கொய்யால என் சத்தம் அப்படியா இருந்துச்சு. எங்க போச்சு அதுன்னு பாருங்கன்னு சொன்னதுக்கு ஒருத்தன் "அது சந்து வழியா கொல்லை பக்கம் போயிடுச்சுங்க"ன்னு சொன்னதும் எனக்கு இன்னும் பயம்.

"யோவ் யாராவது வந்து கொல்லை கதவு திறந்து பாருங்கய்யா"ன்னு கத்த ஒரு மாவீரன் போய் திறந்தான். 'அய்யய்யோ'ன்னு அலறி கதவை சாத்தினான். "மேஸ்திரி மேஸ்திரி இங்க வாசல்ல கெடக்கு மேஸ்திரி"ன்னு கத்த எனக்கு வெள்ளிகிழமை விரதம் சிவகுமாரெல்லாம் நியாபகம் வந்து போனாங்க. ஆகா பாம்பே, நான் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை. சும்மா பகுத்தறிவுன்னு பீலா தான் வுடுவேன். நீ இப்ப சொல்லு இப்பவே வேண்டிக்கறேன். அலகு குத்தி தீமிதிக்கனுமா செய்ய சொல்றேன். இதுக்காகவே தான் என் அப்பா அம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க என வேண்டிகிட்டேன்.

பின்னே ஒரு வழியா அதை விரட்டிட்டு எல்லாரும் தன் வேலையை பார்க்க போயாச்சு. மெதுவா லேப்டாப்பை எடுத்து வச்சுட்டு என் மனைவிக்கு போன் செஞ்சா என் மாமனார் தான் எடுத்தாங்க. "மாமா பாம்பு பாம்பு"ன்னு சொல்ல ஆரம்பிக்கும் போதே "சரி மாப்ள அனுப்பி வைக்கிறேன்"ன்னு சொல்லி வச்சுட்டாங்க. அட தேவுடா திரும்பவும் பாம்பை அனுப்பி வைக்க போறாங்களான்னு நினைச்சு கிட்டே என் பெரிய அக்காவுக்கு போன் செய்தேன்.

"டேய் நீ ராத்திரி ஒழுங்கா தூங்காம கம்பியூட்டரை கட்டிகிட்டு அழற. அதான் தூக்க கலக்கம். நல்லா படுத்து தூங்கு"

"அக்கா இல்லைக்கா எல்லாரும் பார்த்தாங்க"

"எல்லாரும் நின்னு பார்க்கும் போது உனக்கு மட்டும் என்ன பயம் வேண்டி கிடக்கு"

"அய்யோ எல்லாரும் அது போன பின்னேதான் பார்த்தாங்க"

"போன பின்னே என்னாத்தை பார்த்தாங்க?"

"அய்யோ அக்கா இதுக்கு பாம்பே தேவலை. நீ போனை வச்சிடு. எனக்கு போன்ல ஆஃப் பட்டன் எங்க இருக்குன்னு கூட தெரியலை. கை நடுங்குது"

"சரி நீ எதுக்கும் 2 முட்டை வாங்கி மாரியம்மன் கோவில்ல வச்சுடு சாயந்திரம்"

"நாட்டுகோழி முட்டையா ஒயிட்லகானா"

"பாம்புக்கு என்னடா தெரிய போவுது. அது போய் செட்டியார் கடையிலே கேட்கபோவுதா அவன் நாட்டுகோழிமுட்டை வாங்கினானா, சத்துணவு திருட்டு முட்டை வாங்கினானான்னு"

அதுவும் சரிதான். எனக்கு தான் பயத்திலே ஒன்னும் புரியமாட்டேங்குது.பெரிய அக்கா எப்பவும் இப்படித்தான். சின்ன அக்கா தான் சரின்னு அதுக்கு போன் பண்ணினேன். விஷயத்தை சொன்னேன்.

"டேய் நீ இந்த கதை சொன்னதும் நம்ம சின்ன வயசுல மங்களத்தக்கா நியாபகம் தான் வருது. அது நுரை தள்ளி செத்து போச்சு தெரியுமா? உனக்கு நியாபகம் இருக்கோ"

"யக்கா, உனக்கு வெவஸ்தையே கிடையாது. நானே பாம்பை பார்த்துட்டு பயந்து கிடக்கேன். நீ வேற இதல்லாம் நியாபகபடுத்திகிட்டு"

"ஓக்கேடா. நான் ஒன்னு சொல்றேன் கோவிக்காத கேளு"

"சீக்கிரம் சொல்லு. நானே கதவை எல்லாம் பூட்டிகிட்டு இருக்கேன்"

"அடப்போடா பயந்தாகுளி பயலே. இப்படித்தான் ராஜா ஒருத்தர் பாம்புக்கு பயந்துகிட்டு பூட்டிகிட்டாராம். கடைசியா எலுமிச்சம் பழத்திலே இருந்து புடுங்குச்சாம்"

"அய்யோ அக்கா அது புடுங்குனது இருக்கட்டும். நீ என்னவோ பரிகாரம் சொல்ல போறதா நினச்சு கேட்டுகிட்டு இருக்கேன்"

"ஆமாடா பரிகாரம் தான். உனக்கு இல்லை. கிருஷ்ணாவுக்கும் குழந்தைகளுக்கும் தான். நீ இன்னிக்கே நல்ல நாள். அத்தானுக்கு சொந்தம் ஒருத்தர் L.I.C ல ஏஜண்ட். நல்ல கைராசிக்காரர். கையோட பணம் வாங்கி கொடுத்துடுவாரு குடும்பத்துக்கு. பாலிசி போட்டோமா, அத்தோட அதை மறந்தோமான்னு இருக்க மாட்டாரு"

"ஆமா இருக்கியா செத்துட்டியான்னு தினம் தினம் வந்து பார்ப்பாரா?"ன்னு கத்திகிட்டே போனை வைக்கவும் கத்வு தட்டும் சத்தம் கேட்டது. ஒரு பயத்துக்காக டிவி வேற சத்தமா வச்சிருந்தேன். என் நேரம் ஸ்ரீபிரியாவும் கமலும் "ஓரிடத்தில் இல்லாது நான் தவிக்க"ன்னு நீயா பாட்டை பாடிகிட்டு இருந்தாங்க.

ஆகா வந்துட்டான்யா வந்துட்டான்யா...சுத்தி சுத்தி வருதே இப்படி. ஆமா பாம்பு கதவை எல்லாம் தட்டிகிட்டு மே ஐ கம் இன்னு சொல்லிகிட்டா வரும். அய்யோ என் நேரம் அப்படி டெவலப் ஆனாலும் ஆகியிருக்கும் பாம்பெல்லாம் என நினைத்து கொண்டே மெதுவா பீப்பிங் ஹோல் வழியா பாம்பை பார்த்தேன். யாரோ வந்திருந்தாங்க. எதுக்கும் கண்ணாடி வழியா பார்த்தா அதன் பிம்பம் பாம்பு மாதிரி தெரியுதான்னு பார்த்தேன். (அந்த பாட்டில் கமல் அப்படித்தான் கண்டுபுடிச்சாரு) மனுசன் தான். கதவை திறந்து "யாருய்யா" என கேட்டேன்.

"பம்பு பிட்டருங்க, உங்க மாமா தான் அனுப்பினாங்க"

"ஓ நான் பாம்புன்னு சொன்னேன் அவங்க கிட்ட"

கதவை சாத்தினேன். வியர்த்து விட்டிருந்தது. அடுத்து ஒரேஜீவன் ஒன்றே தெய்வம் வாராய் கண்ணான்னு ஏதோ பாடிகிட்டு இருந்தது. ஒரு படப்பாடலாம். டிவியை நிறுத்தினேன். திரும்பவும் கதவு தட்டும் சத்தம். திறந்தேன். என் சகதர்மினி.

தாலி நிலைக்க கோவிலுக்கு போயிட்டு வந்திருக்காங்க.

"என்னங்க பேய் அடிச்ச மாதிரி இருக்கீங்க?"

விஷயத்தை எல்லாம் சொன்னேன்.

"இதுக்கு தான் சொன்னேன். காலையிலே சப்பாத்தி வச்சா சண்டை போடாம சாப்பிடனும். இப்படில்லாம் சண்டை போட்டா இப்படித்தான்"

அட ராமா சப்பாத்தி சண்டைக்கு எல்லாமா பாம்பு வரும்? என்ன லாஜிக் இல்லாம ஒரு பேச்சு. என் பாம்பு பிரச்சனை எல்லாருக்கும் காமடியா போச்சு. சரி நமக்கு வலையுலகம் தான் பிரச்சனையை கொட்டி தீர்க்க ஒரே வழின்னு நடந்ததை எழுத ஆரம்பிச்சேன். ஒரு நல்ல படமா பாம்பு படம் போட்டா நல்லா இருக்குமேன்னு நினைச்சு ஜீவ்ஸ் கிட்டே "ஒரு நல்ல பாம்பு படமா குடுப்பா"ன்னு கேட்டேன். அதுக்கு அவரு "நல்லபாம்பு படம் வேண்டுமா அல்லது நல்ல பாம்புபடமா வேண்டுமா?"ன்னு கேட்க எதுனா ஒரு பாம்புன்னு சொல்ல அவரு என்ன கலர் வேண்டும் என புடவைக்கு ஜாக்கெட் மேட்சிங் கேட்பது போல கேட்டாரு.

"அய்யோ ஜீவ்ஸ் நான் அவசரத்திலே சரியா கவனிக்கலை. கருப்பு...இல்லை இல்லை பிரவுன் கலர்தான். ஆனா கார்த்தால குளிக்காம வந்துடுச்சு போலிருக்கு வந்து போன இடம் கோடா இருக்கு"ன்னு சொல்லி வைக்க அவர்கிட்ட இருந்ததிலே கொஞ்சம் எடுத்து போட்டு எந்த டிசைன் பிடிக்குதோ அதை எடுத்துகுங்கன்னு சொன்னாரு. அதான் மேலே இருக்கும் பாம்பு.

சரின்னு நட்ராஜை அழைக்க ஸ்கூல் போனேன். நட்ராஜிடம் சொன்னேன். ஒரே அழுகை அவனுக்கு காட்டலைன்னு. ஹும் என்னையே நொந்துகிட்டேன். அபி வந்தா. அவளிடம் பள்ளியில் சொன்னேன். அவளுக்கு ஒரு சந்தேகம்.

"அப்பா பாம்புக்கு மாடி ஏற தெரியுமா?"

அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு!!!!

February 18, 2010

புத்தக ஆசையும் புரட்டி எடுத்த சம்பவங்களும்!!!

எனக்கு புத்தகங்களோடு பரிட்சியம் என பார்த்தால் என் மூன்றாவதுவயதில் இருந்தே என சொல்லலாம். என் சின்ன அக்கா படிக்கும் ஒன்றாம் வகுப்பு புத்தகத்தை அவங்க படிக்க நான் கிழிக்க என தொடங்கியது புத்தகங்களோடு என் பழக்கம். ஐந்து வயதிலேயே பெரிய மகப்பேறு மருத்துவர் என்கிற நினைப்பு அக்காவுக்கு. புத்தகத்தை படிக்க பயன்படுத்துவதை விட மயிலிறகு டெலிவரிக்கான லேபர் ரூமாகத்தான் அந்த புத்தகத்தை பயன்படுத்துவாங்க. எனக்கு ஆயா வேலை கிடைத்தது அந்த (புத்தக)ஆஸ்பத்திரியில். அதாவது புதிதாய் பிறந்த மயிலிறகுக்கு அரிசி போடுவது, அதை கழுவி குளிப்பாட்டுவது இப்படியாக. ஆக என் முதல் வேலை ஆயா வேலை தான்:-))

பின்னே எனக்கும் டாக்டராக ஆசை வந்து அக்காவின் புத்தகத்தை பாகப்பிரிவினை செய்து இருந்த பதினைந்து மயிலிறகை ஏழரையாக பிரித்து தனி ஆஸ்பத்திரி தொடங்கியது தான் எனக்கு அன்றைக்கு ஏழரை ஆகியது. அக்காவின் புத்தகத்தை பாதியாக கிழித்த எனக்கு அப்பாவினால் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. அதாவது வீட்டில் இருக்கும் எல்லா கேமிராவும் என் பக்கம் திருப்பப்பட்டது. தப்பி தவறி எதுனா புத்தகத்தை தொட்டால் சின்ன அக்கா வீல் வீல்ன்னு அலாரம் அடிக்க அம்மா வந்து என்னை அடிக்க மேலும் மேலும் எனக்கு புத்தக ஆசை பீறிட்டு கிளம்பியது.

கிட்ட தட்ட எழுத்து கூட்டி படிக்கும் காலத்தில் தான் புத்தகம் படிப்பதற்கு என்பதும் அது ஒரு விளையாட்டு பொருள் இல்லைன்னும் தெரிஞ்சுது. அம்புலிமாமாவிலிருந்து மான்ரெக், லொதர்ன்னு காமிக்ஸ் என்னை முழுவதுமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. எதிரே இருந்த ரைஸ்மில்லில் தினதந்தி படிக்க ஆரம்பித்து ரோட்டில் போஸ்ட்டர், சினிமா பிட் நோட்டீஸ், கட்சி நோட்டீஸ் என எதையும் விட்டு வைக்காமல் படித்தேன். பின்னே மெல்ல மெல்ல பரண் மீதிருந்த பொன்னியின் செல்வனில் ஆரம்பித்து தேவன், கல்கி, சாவி என மேய்ந்து கொண்டிருந்தேன். கிட்ட தட்ட படித்த புத்தகம் எல்லாத்தையும் சேர்த்து வைக்க ஆரம்பித்து வைக்கும் பழக்கமும் வந்து விட்டது. இது வரை எல்லாம் நல்லா தான் போய் கிட்டு இருந்துச்சு.

ஒரு நாள் காலை ராதா வந்து திடீர்னு "உனக்கு இட்ச் காக் தெரியுமா?ன்னு கேட்க நான் அதுக்கு "எதுனா சைபால் மாதிரி கக்கூஸ்படை களிம்பாடான்னு தத்தக்கா பித்தக்கான்னு கேட்டு தொலைக்க வில்லன் வீரப்பா ரேஞ்சுல சிரிக்க ஆரம்பிச்சான். ராதா திடீர்ன்னு இப்படி பீட்டர் விட்டா பம்பாய்ல இருந்து அவன் சொந்த பந்தம் ரயிலை புடிச்சு என் வயித்தெரிச்சலை கொட்டிக்க வந்து இறங்கியிருக்குன்னு அர்த்தம். அதுக்கு பின்னே அவன் "டேய் பங்கஜம் மாமி வந்திருக்காடா ஜெய்பூரிலெ இருந்து. அவ பொண்ணு நம்ம செட்டு தான். ஆனா செம வளர்த்தி தெரியுமோ? நம்ம ஊர் மாதிரி இல்லை. பழைய சோத்துக்கு மாவடு காம்பினேஷன்ல தின்னுட்டு இல்லாம நல்ல கோதுமை சாப்பிட்டு அதே கலர்ல நல்ல குதிரை மாதிரி இருக்கா. அவ உத்தமன் படத்தில வர்ர மஞ்சுளா மாதிரி நைட் டிரஸ் போட்டுண்டு அந்த புத்தகத்தை படிச்சுண்டு இருந்தா. என்னையும் படிக்க சொன்னா. ரெண்டு பக்கம் தான் படிச்சேன். அத்தனை ஒரு இருட்டு அத்தனை ஒரு பயங்கரம்.வெதறி போயிட்டேன். உனக்கும் இது மாதிரி புத்தகம் பிடிக்குமான்னு கேட்டு ஸோ நைஸ் ஆஃப் யூன்னு என் நெஞ்சுல கை வச்சு சொன்னா.."

"ஏன் இருட்டுன்னா என்ன பயங்கரம். எங்க வீட்டு புழக்கடை எப்பவும் இருட்டு தான். எனக்கு பயமே இல்லியே"என பொறாமை பிடித்த அப்பாவியாய் கேட்க அவன் "அய்யோ உனக்கு இதல்லாம் புரியாது. அத்தனை ஒரு பயங்கரம் ஒன்லி டூ பேஜஸ் தான் ரீட் பண்ணினேன். ஸோ ஸ்வீட் ஸோ நைஸ்" என அவனுக்கு தெரிந்த அத்தனை ஆங்கில வார்த்தையையும் அந்த வாக்கியத்தில் நுழைத்தான்.

அவன் அதுக்கு மேல் விட்ட புரூடா எல்லாம் மனசில் ஏறலை. நான் அத்தனை ஆங்கில பயங்கரத்தையும் படிச்சுட்டு பங்கஜம் மாமியின் பொண்ணு கிட்டே பீட்டர் விடுவது போலவும் அவ என் ஆறு இன்ச் அகலமே இருந்த என் நெஞ்சாங்கூட்டில் கை வைத்து "ஸோ நைஸ் ஆஃப் யூ" என சொல்வது போலவும் ராதா காதில் புகை வருவது போலவும் மனதில் கற்பனை குதிரை தட்டிவிட்டு எழுந்து டவுசரை பின்பக்கம் தட்டி விட்டு போய் விட்டேன். கல்கி, தேவனை எல்லாம் மூட்டை கட்டி பரண் ஏத்திவிட்டேன். ஒன்லி இங்கிலீஷ் புக் தான் என முடிவு செய்தேன். தமிழ் மனப்பாட செய்யுளை கூட "ulagam yaavaiyum thaamula vakkalum" என படித்தேன். துரத்தி துரத்தி ஆங்கில நாவல் வாங்கி அட்டையை தனியே ரசித்து கிழித்து போட்டு விட்டு (ச்சே என்ன எல்லா பொண்ணுமே ஒரே மாதிரி அவசர ஆடையோட நிக்குது அட்டையிலே) வீட்டில் அடுக்கி வைத்தேன். ஆனால் படிக்க படிக்க ஒரு எழவும் புரியலை. ஆனாலும் நான் எல்லாத்தையும் படிச்சு முடிச்ச மாதிரி எதுனா ஒரு பக்கத்தை எடுத்து இரண்டு லைன் பென்சிலாம் அடிக்கோடிட்டு பக்கவாட்டில் சூப்பர் என என்னன்னவோ கமெண்ட் எழுதி வைத்தேன். அடுத்த லீவ்க்கு பங்கஜம் மாமி பொண்ணு வரும் போது என் அலமாரியில் 100 புத்தகமாவது இருக்க வேண்டும் என இலட்சியம் வைத்து கொண்டேன்.

எந்த புத்தகத்தை எடுத்தாலும் பென்சில் அடிக்கோடு இட்டு காக்கா கக்கா போன தலைவர் சிலை மாதிரி இருந்துச்சு. மாண்ரெக் காமிக்ஸ் இருக்கா என கேட்டு வந்த ராதாவிடம் "what???" என 220 வாட் கரண்ட் பாய கத்தினேன். ''I only english"ன்னு எல்லா புத்தகத்தையும் பாயில் பரப்பி அதன் மேல் படுத்து கொண்டு பந்தா காட்டினேன். சென்னை போகும் எல்லோரிடமும் எதாவது ஒரு ஆங்கில புத்தகம் பெயர் சொல்லி மூர் மார்கெட்ல வாங்கி வர சொன்னேன். "பம்பிலிக்கா, டும்பாடோலா" என வாய்க்கு வந்த பெயர் எல்லாம் சொல்லி இல்லாத புத்தகம் எல்லாம் வாங்கி வர சொல்லி சில பேக்குகள் அதையும் தேடி மூர் மார்கெட்ல அலைஞ்சு "அய்யோ அந்த புக் இப்ப தான் வித்துது சார். அதே ஆத்தர் எழுதியது தான் இந்த புக். அதை விட த்ரில்லா இருக்கும். கலைமாமணி அவார்டு எல்லாம் இந்த இங்கிலீஷ் புக் வாங்கியிருக்கு சார்" என மூர் மார்கெட் தலையில் கட்டிய புத்தகத்தோடு என் எதிரே நின்ற தூரத்து சொந்தகார மாமாவை வாஞ்சையுடன் பார்த்தேன்.என் தொல்லை தாங்காமல் மூர் மார்கேட்டே தனக்கு தானே கொள்ளி வைத்து கொண்டது. எரிந்து சாம்பலாகியது.

ஒரு நாள் மாட்டு பொங்கல் நேரத்தில் மாட்டுக்கு மாட்டியிருந்த நெட்டி மாலையை கையில் சுத்தி கிட்டு பெரிய கோவிலில் சுற்றி கொண்டிருந்த என்னிடம் ஒரு வெள்ளைகார தம்பதி அதை கேட்க பதிலுக்கு அவங்க கையிலே வச்சிருந்த புத்தகத்தை நான் கேட்க பண்ட மாற்றம் ஆகியது.மாடு மாதிரி அவங்க அதை கழுத்தில் மாட்டி கொண்டு போட்டோ எடுத்து கிட்டாங்க. அவசர அவசரமாக அந்த புத்தகத்தில் அடிக்கோடு எல்லாம் போட்டு அலமாரியில் அடுக்கினேன். அப்போது ராதா ஒரு நைனிட்டால் மாமா பையனோடு வீட்டுக்கு வந்தான். வரும் போதே அவனிடம் ராதா "டேய் ரகு நான் படிக்கும் இங்கிலீஷ் புக் எல்லாம் படிச்சுட்டு இவனண்ட தான் கொடுப்பேன்" என சொல்லி என் புத்தக அலமாரியை காட்டினான். கோபத்தை அடக்கி கொண்டேன். போனா போகுது ரகு ஆம்பளை பையன் தானே என்று.

"நீங்க லேட்டஸ்ட்டா என்ன புக் படிச்சேள்"ன்னு அவன் கேட்க நான் அந்த நெட்டிமாலை புக்கை எடுத்து கொடுத்தேன். படித்துவிட்டு தரேன்ன்னு சொல்லி வாங்கி போனான். ரெண்டு மணி நேரத்திலே ராதா அரக்க பரக்க வந்தான். "டேய் அந்த புக் பலான பிரஞ்ச் புத்தகமாம்டா. அவனுக்கு பிரஞ்ச் தெரியுமாம். அதிலும் நீ அடிக்கோடு போட்டு வச்சிருக்கும் வார்த்தை எல்லாம் ரொம்ப ரொம்ப மோசமான ...சொல்லவே நா கூசிடுச்சு அவனுக்கு" என்றான். "பின்ன என்ன ஆச்சு?"என நான் பதற்றமாக கேட்க ராதா "பின்ன என்ன அவனை பூம்புகார் கூட்டி போறேன்ன்னு தாஜா பண்ணி அதை எல்லாம் சப்ஜாடா தெரிஞ்சுகிட்டேன்"

அய்யோ அந்த வெள்ளைகாரன் கோவில்ல வச்சுதானே அந்த புக் கொடுத்தான். அதிலே எப்படி கெட்ட வார்த்தை வரும். ஓ அது தான் பிரஞ்ச்சா?எனக்கு பிரஞ்ச் தெரியாது என்பது விஷயமே இல்லை. அது பிரஞ்ச் என்பதே தெரியாது என்பது தான் சோகம். அதான் சில எழுத்துக்கு கொம்பு வச்சி சில எழுத்துக்கு பொட்டு வச்சு....அட தேவுடா ... சரி போகட்டும் பங்கஜம் மாமி பொண்ணுக்கு நாம பிரஞ்ச் படிப்பதும் தெரியட்டும்... ஸோ நைஸ் ஆஃப் யூ...என மனதை தேற்றி கொண்டேன். ஒரு வருஷம் அப்படியே போனது.

ஒரு நாள் ராதா வந்து "டேய் பங்கஜம் மாமி குடும்பத்தோட அடுத்த வாரம் வரா"ன்னு சொன்ன உடனே அந்த புத்தக அலமாரி எல்லாம் விஜயதசமி ரேஞ்ச்க்கு துடைச்சு வச்சு "அனுமதி பெற்று உள்ளே வரவும்" என சாக்பீசால் எழுதி வைத்து அனுமதி பெறாமல் வந்த சின்ன அக்காவிடம் கைகலப்பாகி அம்மா பஞ்சாயத்து நடத்தி இரண்டு பேரும் சேர்ந்து வீடு ஒட்டடை அடித்து வீடு கழுவி விட வேண்டும் என தீர்ப்பு சொல்லப்பட்டு(அம்மா பாரபட்சம் இல்லாம இப்படித்தான் சின்னதனமான கவுண்டராகிடுவாங்க) நான் விளக்குமாறும் கையுமா இருக்கும் போது ராதா அந்த அம்புஜாவோடு ஆஜர் ஆனான்.

என் புத்தகம் எல்லாம் பார்த்து விட்டு அம்புஜம் என்னை ஒரு புழு மாதிரி பார்த்து விட்டு 'ஹய்யோ நான் இதல்லாம் படிச்சுட்டேன். குப்பை. பொன்னியின் செல்வனில் இல்லாத த்ரில்லா? தேவன் கிட்ட இல்லாத சிரிப்பா? என சொல்ல கிட்ட தட்ட எனக்கு மயக்கமே வந்துடுச்சு. என் கிட்ட பிரன்ச் புக் எல்லாம் கூட இருக்குன்னு சொல்ல வந்ததை என் சோகத்தோட சேர்த்து முழுங்கினேன். அம்புஜா மேலும் "இப்போ நான் படிக்கிறது எல்லாம் சித்தர் புக்ஸ்தான். அதும் மெடிக்கல் சம்மந்தமா என்னமா எழுதியிருக்கா தெரியுமா?"ன்னு புதுசா கிளப்பி விட்டு ஜெய்ப்பூர் போய் விட நான் சித்தர் புத்தகம் தேடி அலைய தொடங்கினேன்.

இப்போது புத்தகங்களோடு கண்டங்கத்திரி, கடுக்காய் என அடிஷனலாவும் அலைந்தேன். நான் செய்த சூரணங்களை ராதாவின் பாட்டிக்கு முதலில் பரிசோதிக்க பின்னர் தான் தெரிந்தது, என்னால் வியாதியை ஒழிக்க முடியலை. ஜலதோஷத்துக்கு மருந்து கொடுக்க அது சரியாகிவிட்டது ஆனால் அதுக்கு பதிலா மலதோஷம் வந்துடுச்சு. பாட்டிக்கு பேதி நான் ஸ்டாப் கொண்டாட்டமாகிடுச்சு. ஆக ஒரு வியாதியின் ஸ்தலத்தை மாற்றும் சூட்சுமத்தை கத்துகிட்டேன். பின்னே ராதா வீட்டு தெருபக்கம் போனா கூட அந்த பாட்டி வடாம் காக்கை விரட்டும் குச்சியை வாசல் பக்கமா வச்சுகிட்டு என்னை எதிர் பார்த்து காத்து இருந்தது. விடுவனா நான். என் பாட்டிக்கு மருந்து கொடுக்க ஆரம்பித்தேன். நான் கொடுத்த லேகியம் அம்மா வைக்கும் கொத்தமல்லி துவையலை விட நல்லா இருப்பதாக சொல்லி இட்லிக்கு தொட்டுக்க ஆராம்பிச்சாங்க. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிச்சாங்க பாட்டி. மருமகள் வைத்த துவையல் சரியில்லை என அம்மா ஒரு மாங்காய். என் வைத்திய லேகியம் இட்லிக்கு தொட்டுக்க தான் லாயக்கு என நான் ஒரு மாங்காய்.பாட்டி வைத்தியம் செய்யலாம்.பாட்டிக்கே வைத்தியம் பார்த்தா இப்படித்தான் ஆகும்.

இனி என் வைத்தியத்துக்கு நானே எலி என முடிவெடுத்தேன். துரதிஷ்டவசமாக எனக்கு எந்த வியாதியும் இல்லை. தம்பி தான் சொன்னான் "எதுக்கும் மூளை வளர்ச்சிக்கு எதுனா லேகியம் கிண்டி பாரேன்". வீணாக சண்டை போட்டு அம்மாவின் பஞ்சாயத்தால் ஒரு வருஷத்துக்கு ரேஷன் கடைக்கு போகும் தண்டனை கிடைத்து விடுமோன்னு சும்மா இருந்து விட்டேன்.

எனக்கு பொதுவாகவே நான் ஒல்லியாக இருப்பது பத்தி ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. எல்லா சித்தரும் ஒன்னா உட்காந்து எழுதினது போல வேர்கடலை சாப்பிட்டால் உடனடி பலன் தரும் என இருந்ததால் அன்று முதல் வேர்கடலை சாப்பிட ஆரம்பித்தேன். அம்புஜாவுக்கு பிடிக்காத புத்தகம் எனக்கும் வேண்டாம் என்கிற ரீதியில் சின்னகடை தெரு கடலை கடையில் ஒரு புத்தகத்துக்கு ஒரு பொட்டலம் என புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு காலையும் மாலையும் சாப்பிட்டேன். நாற்பது கிலோ இருந்த நான் நூறு புத்தக முடிவில் நாற்பது கிலோவும் நாற்பது கிராமும் என எடை கூடினேன். எனக்கு கடலை வியாபாரம் ஆரம்பித்த பின்னே நோஞ்சானாக இருந்த கடைகாரர் கொஞ்சம் பூசினார் போல ஆகிவிட்டார். ஒரு கட்டத்தில் புத்தகம் எல்லாம் தீர்ந்து விட ராதாவின் ஐடியா படி பெந்தகொஸ்தே சபை, சைவசித்தாந்த மடங்கள், மாக்ஸ்முல்லர் பவன், இந்தி பிரசார சபா, பெரியார் கட்சி எல்லா இடத்துக்கும் பதினைந்து பைசா கார்டு போட்டோம். "ஐயா நான் உங்கள் மதத்தின்/இயக்கத்தின்/ மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம். உடனடியாக உங்கள் பிரச்சார கொள்கை விளக்க புத்தகங்கள் அனுப்பி வைக்கவும் - குறிப்பு பெரிய மொத்த புத்தகமாக இருந்தால் உத்தமம்- இப்படிக்கு "உண்மையுள்ள" என கார்டு போட்டோம்.

மாக்ஸ்முல்லர் பவனில் இருந்து முதலில் ஐந்து மொத்த மொத்த புத்தகம் வந்தது. பத்து நாள் கடலைக்கு ஆனது. அது முடியும் தருவாயில் இந்தி பிரச்சார சபா, பெந்தகொஸ்தே புத்தகங்கள் வர வர ஒரு மாதம் கடலை போட்டாச்சு. பின்னே பெரியார் ட்ரஸ்டில் இருந்தும், தருமை ஆதீனத்தில் இருந்தும் கடிதம் வந்தது. என் (கடலை தின்னும்??) ஆர்வத்தை பாராட்டுவதாகவும் உடன் 100 ரூபாய் மணிஆர்டர் அனுப்பினால் புத்தகம் அனுப்பி வைக்க படும் எனவும் இருந்தது. பெரியார் ரொம்ப வெவரம் தான். ஒரு நாள் ராதா என்னிடம் வந்து "டேய் மதத்தை, மொழியை வித்து கடலை சாப்பிட்டா ரொம்ப தப்புடா. போப் ஆண்டவருக்கு இதல்லாம் தெரிய வந்தா அடியாள் வச்சு நம்மை அடிச்சா என்னடா பண்றது"ன்னு பெரிய குண்டை போட்டான். நான் குண்டாவதுக்காக இதல்லாம் தேவையா என திடீர்ன்னு நல்லவனாகி கடலை சாப்பிடுவதை விட்டேன்.நான் போப் ஆண்டவர் அளவு ஒர்த் இல்லை என்பது அப்போது தெரியலை.

இப்படியாக என் புத்தக ஆர்வம் பலராலும் தூண்டி விடப்பட்டும், அமுக்கி விடப்பட்டும் ஃஜிக் ஃசாக்காக போய் கொண்டிருக்கின்றது. உங்க கொள்கை விளக்க புத்தகம் இருந்தா என் பெயர் போட்டு c/o கடலை கடை, சின்ன கடை தெரு வுக்கு நேரிடையாக அனுப்பி வைக்கவும். திரும்பவும் கடலை ஆசை வந்தாலும் வரும்.