பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 31, 2009

ஷானாவின் டெலிவரியும் 2010 க்கு வரவேற்பும்!!!

வர வர நான் இந்தியன் பேக்கு கோபாலகிருஷ்ணன் மாதிரி ஆகிட்டேன்.எந்த பங்ஷனும் ஐயா இல்லாமல் இல்லைன்னு ஆகி போச்சு. கடந்த பதினெட்டு வருஷமா நான் மறந்து போன எல்லா விழாவுக்கும் போய் வந்தாகிவிட்டது.குழந்தைக்கு பெயர் வைக்கும் பதினாறு, வளைகாப்பு, சடங்கு, பரிசம்,நிச்சயம்,ஆரம்பிச்சு கல்யாணம்,காதுகுத்தல் வரை இந்த பதினெட்டு வருஷமா எனக்காகவே காத்திருந்தது மாதிரி இப்போ நாளொரு மேனியும் பொழுதொரு பாயசமுமாக போகுது. கடந்த வாரம் கூட திண்டுக்கல் வரை கூட குடும்ப சகிதமாக போனேன். மாயவரத்தில் இருந்து நேரடி ரயில்.சுகமான பயணம்.

வாசலில் என் உயரத்துக்கு ஒரு கன்னுகுட்டி ரெண்டு காலையும் தூக்கி கேட் மேல் வைத்து கொண்டு வாங்க வாங்கன்னு சொல்வது போல நாக்கை கேட் வெளிப்பக்கமாக தரை வரை தொங்க போட்டுகிட்டு இருந்ததை பார்த்ததுமே எனக்கு உதரல் ஆரம்பமாகிடுச்சு. அதன் ஓனர் "வாங்க வாங்க"ன்னு சொல்லிட்டு "அது கிரெடேன்ங்க. நாய் தான்.ஆனா பார்க்க பசுக்குட்டி மாதிரி இருக்கும். குணம் கூட பசு தான்.பயமில்லாமவாங்க அது எதும் செய்யாது"ன்னு வழக்கமான நாய் ஓனர் டயலாக்கை சொல்ல நான் அதுக்கு "அட போங்க சார்,நான் இது போல பல நாய் மற்றும் நாய் ஓனரை எல்லாம் பார்த்திருக்கேன். அது பேர் என்ன கிரேடேனா அதை முதல்ல கட்டி போடுங்க, அப்ப தான் வருவேன்"ன்னு அடம் பிடிக்க அவரோ "அய்யோ அது பேர் ஷானு அது ஜாதி தான் கிரேடேன். யூ நோ அவ அம்மா டெலிவரியப்போ நான் ஊட்டிக்கு போயிட்டேன். இல்லாட்டி இவளை வேற யாரோ தட்டிகிட்டு போயிருப்பான். என் பிரண்ட் கிட்ட சண்டை போட்டு தூக்கி வந்தேன். அஃப்கோர்ஸ் இவளுக்காகவே தான் அந்த ஏ.சி காரை வாங்கினேன். தூக்கிட்டு வர்ரத்துக்காக"ன்னு நாய் புராணம் படிக்க எனக்கு எரிச்சல் அதிகமாகி கொண்டே போனது.அவரோ "சார் அவ உங்களை எதுனா டிஸ்டர்ப் செஞ்சா நான் மொட்டை போட்டுக்கறேன்"ன்னு சொல்லிட்டு "ஷானா ஹீ ஈஸ் ஆல்சோ யுவர் அங்கிள்"ன்னு சொன்னார்.

நான் "சார் '24 மணி நேரத்தில் என்னை நாய் கடிக்க போகுது"ன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில பாருங்க"ன்னு தொடர என் தங்கமணி முறைக்க அப்போ தான் அந்த பந்தயம் நியாபகம் வந்தது.நான் ஒரு மண்டலம் தமிழ்மணம், பதிவு, பிளாக், மெயில் ஆரியம், திராவிடம்,இஸ்லாம், பெண்ணீயம் புடலங்காய் எல்லாம் விட்டு விட்டால் நான் ஜெயிச்சேன். அப்படி நான் ஜெயிச்சா ஒரு சாமுத்திரிகா, ஒரு வேளை நான் தோத்து போயிட்டா ரெண்டு பரம்பரா வாங்கிதரனும். அப்படி ஒரு இக்கட்டான பந்தயத்தில் மாட்டிகிட்டேன். என் பரம்பரை சொத்து வித்து ரெண்டு பரம்பரா வாங்குவதை விட இந்த சானா வாயால் கடிபட்டு சாகலாம் என நட்டுவை திரிசூலம் ஜிவாஜி மாதிரி ஒரு லுக் விட்டுட்டு கேட்டை திறந்தேன்.அடுத்த ஐந்து நிமிடம் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. நானும் ஷானாவும் கட்டி புரண்டு அந்த காட்சியை கார்த்திக் ராஜா பார்த்திருந்தால் செமத்தியா BGM கிடைச்சிருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு. ஆனா பாருங்க நான் தான் ஜெயிச்சேன். என் கிட்ட இருந்து சதை என்னும் கந்தாயத்தை அந்த நாயால் தேடி கண்டுபிடிக்கவே முடியலை. சீ தூ ன்னு விட்டுட்டு கோவிச்சுகிட்டு போய் கோவமா படுத்து கிட்டது.

நடந்த களேபரத்தை ரொம்ப ரசிச்ச நட்டு அது ஏதோ அவனை குஷி படுத்த நான் செய்த விளையாட்டுன்னு நெனச்சு "அப்பா அப்பா இன்னூர்வாட்டி இன்னூர்வாட்டி"ன்னு அழ ஆரம்பிச்சான். "போடா இன்னும் ஆறு மாசம் கழிச்சு தான் எதுனாவது ஒரு நாய் வந்து அப்பாவை கடிக்கும். அப்ப பார்த்துக்கலாம்"ன்னு என் தங்கமணி சந்தோஷமாக சொன்னாங்க. நான் இருந்த படபடப்பிலும் பந்தயத்தை மறக்காமல் "மொட்டை எப்போ போட்டுப்பதா உத்தேசம்"ன்னு கேட்க அவர் "சார் இது வரை இப்படி செஞ்சதில்லை. இது தான் முதல் தடவை. பயப்படாதீங்க ஷானுக்கு ஊசி எல்லாம் ரெகுலரா போட்டாச்சு"ன்னு கூலா சொல்லிட்டு போனார்.

வீட்டுக்குள்ளே போன பின்னே சன் டிவி பார்த்துகிட்டு ஒரு பாட்டி. தொன்னூறு வயசு இருக்கும். காலை ஆறு மணிக்கு வணக்கம் தமிழகம் ஆரம்பிச்சு இரவு பதினோறு மணி வரை சன் டிவி தான். நடுவே டி வி சூடாக கூடாதுன்னு மூணு வேளை சாப்பாடு நேரத்திலே ஆஃப் செய்யுது. சன் டிவி தவிர ஏதும் பார்க்க விடாதாம். நான் அது தெரியாம பங்கு வர்த்தகம் போட்டுட்டேன். அந்த பாட்டி கதறிடுச்சு. நம்ம ஷானு ஒனர் ஓடி வந்து பங்கு வர்த்தகம் எல்லாம் அவங்க பார்க்க மாட்டாங்க. கலாநிதி மாறன் தன் வர்த்தகத்தில் பங்கு தரேன்ன்னு சொன்னா கூட சன் டி வி தவிர ஏதும் பார்க்க மாட்டாங்க. இத்தனைக்கும் நாம பேசினா காது சரியா கேட்காது.ஆனா சன் டிவி மாத்திரம் மெதுவா வச்சா கூட கேட்கும்"ன்னு சொன்னார். நான் பாட்டி கிட்ட போய் "பாட்டி 2012 டிசம்பர் 21ம் தேதி உலகம் அழிய போகுதாம்ன்னு ஒரு குண்டு போட்டேன். அதுக்கு அந்த பாட்டி "நீங்க வேணா பாருங்க தம்பி அப்ப கூட கலெக்டருக்கும் ரம்யாகிருஷ்ணனுக்கும் கல்யாணம் ஆகாது"ன்னு சொன்னாங்க. நான் சரியா தானே பேசினேன்.பாட்டி ஏன் எடக்கு முடக்கா பேசுதுன்னு நெனச்சுகிட்டேன்.பின்னே தான் தெரியுது "தங்கம்"ன்னு ஒரு சீரியல்.12 வருஷ பிராஜக்ட்டாம்.அதிலே ரம்யாகிருஷ்ணனுக்கு சீரியல் முடியும் வரை ஒரு கலக்டரோட கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு அது தினமும் எப்படி எதிராளியின் சதியால்நின்னு போகுதுன்னு கதையாம். ஒரு எபிசோட்ல ஒரு அணில்குட்டி(கவிதாவின் அணில் குட்டி அல்ல.அது சமத்து)வந்து "நிறுத்துங்க கல்யாணத்தை"ன்னு சொல்லி அசத்துதாம்.அதை ஜேம்ஸ்காமரோன் கிட்ட ஒர்க் பண்ணும் கிராபிக்ஸ் ஆளை கூட்டி வந்து களேபரம் நடத்த போறாராம் டைரக்டர். அட ராமா! ராமர்பாலம் எல்லாம் கட்டின அணிலை எதுக்கு எல்லாம் யூஸ் பண்றாங்கப்பா.இராம கோபாலன் கவனிக்க. இப்பவே ரம்யாகிருஷ்ணனுக்கு 48 வயசு.இன்னும் 12 வருஷம் கழிச்சு கல்யாணமா? ஒரு வேளை நேரிடையா ஷஷ்டியப்த பூர்த்தி தான் போல. இப்படி எல்லாம் சீரியல் எடுத்தா உலகம் ஏன் அழியாது?

அடுத்த நாள் காலை தான் பங்ஷன். இரவு எல்லாருக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியானி வந்தது. நாய் கடிச்சா ஆறு மாதம் சிக்கன் சாப்பிட கூடாதுன்னு எவன் கண்டு பிடிச்சானோ அட ஆண்டவா! எல்லாரும் இலையில் பிரியானி மேய்ந்து கொண்டிருக்க நான் மட்டும் ஷானு நல்லா இருக்கான்னு போய் பார்த்து வந்தேன். அதுக்கு தலப்பாகட்டி பிடிக்காதாம்.திண்டுக்கல் வேணு கடை பிரியானி தான் பிடிக்குமாம். அது தான் ஆயில் கம்மியா இருக்குமாம்.என்ன கொடுமைடா சாமீ. தயிர் சாதமும் சுட்ட அப்பளமும் அழுது கொண்டே சாப்பிட்டு படுக்க போனோம். வந்த விருந்தாளிக்கு எல்லாம் புது பெட் எல்லாம் கொடுத்தாங்க. அவர் என் கிட்ட வந்து "நட்டு பெட்ல உச்சா போவானா?"ன்னு கேட்டார். நான் சொன்னேன்"ச்சே ச்சே அவன் அதல்லாம் செய்ய மாட்டான்.அப்படியே ராத்திரிலவந்தா கூட நம்மை எழுப்பி டாய்லெட் அரை கிலோமீட்டர்க்கு பின்னாலைருந்தாலும் அங்க தான் போவான்.அப்படி போனா நான் நட்டுக்கு மொட்டை போடுறேன்"ன்னு சொல்லிட்டு படுத்தாச்சு.

விடிகாலை நல்ல குளிர்.நட்டு என்னிக்கும் இல்லாத திருநாளா பெட்,போர்வை,தலயனை எல்லாத்தையும் நல்லா குளிப்பாட்டி இருந்தான். எல்லாத்தையும் செஞ்சுட்டு Airtel விளம்பர பையன்
மாதிரி ரூம்லஒரு மூலையிலே போய் உட்காந்து இருந்தான். அவர் வந்து "என்னங்க பையன் போக மாட்டான்னு சொன்னீங்க. இப்ப போயிட்டானே?"ன்னு கேட்க "எப்பவும் இப்படி இல்லை. இதான் முதல் தடவை"ன்னு அவர் எனக்கு சொன்ன அதே டயலாக் சொன்னேன். நான் பெத்த மொவனே எஸ்கியூஸ்மீ வெரிகுட்டுடான்னு நினைச்சுகிட்டேன். "மொட்டைக்கும் மொட்டைக்கும் சரியா போச்சு"ன்னு அவர் சொல்லிட்டு போனார்.

காலை 10 மணிக்கு பங்ஷன் ஆரம்பிக்கும் முன்னே மருந்து பிழிவது எந்த மாதம், வளைகாப்பு 7ம் மாதம்வச்சிகலாமா,9ம் மாதம் வச்சிக்கலாமா என பெரியங்க பேசி கொண்டிருக்கும் போது நான் இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலைன்னு வாசலில் பம்பரம் விட போயிட்டேன். என் தங்கமணி வந்து "என்னங்க நீங்க வந்து உங்க கருத்தை பெரிய மனுஷனா வந்து சபையிலே சொல்லுங்கன்னு எனக்கு ஜிப்பா எல்லாம் போட்டு பெரிய மனுஷன் வேஷம் கட்டி சபையிலே உட்கார வைக்க நானும் ஜீப்பில் ஏறிக்க ஆசைப்பட்டு அவங்க பேச்சை கவனிக்க ஆரம்பித்தேன். எது யார் சொன்னாலும் எதாவது ஒருவர் அதை ஒத்துக்காமல் அடம். ஒரு பெருசு "தம்பி உங்க கருத்து என்ன?"ன்னு கேட்க எனக்கு சந்தோஷம் தாங்கலை. என்னையும்மதிச்சு கேட்குறாங்களேன்னு. "இல்லீங்க நான் எதுனா மாதம் சொல்ல யாராவது அதை ஒத்துக்கலைன்னா நல்லா இருக்காது" அப்படின்னு சொல்ல அதுக்கு அவர் "ஒத்துக்கும் மாதிரி சொல்லுங்க"ன்னு சொல்ல நான் "அப்படின்னா டெலிவரிய பத்தாவது மாசம் வச்சிக்கலாம்"ன்னு சொல்ல கூட்டம் கப்சிப். மெதுவா என் காதருகே என் தங்கமணி "நீங்க பம்பரமே விட்டுகிட்டு இருந்திருக்கலாம்"ன்னு சொன்னாங்க. இப்படித்தான் நான் எது பேசினாலும் எதுனா வில்லங்கம் வருது. இந்த 2009 எனக்கு சரியே இல்லை. வருது பாருங்க 2010. அதிலே வச்சிக்கறேன் என் கச்சேரியை திரும்பவும் செமத்தியா.

ஒரு வழியா ஊர் வந்து சேர்ந்து 20 நாள் ஆச்சு. காலை திண்டுக்கல் போன். தங்கமணி தான் எடுத்தாங்க. வாசலில் பக்கத்து வீட்டு ராமநாதனிடம் பேசிகிட்டு இருந்தேன். "என்னங்க போன்.ஷானுக்கு டெலிவரியாகிடுச்சாம். ட்வின்ஸாம்"ன்னு சொல்ல,நான் "எந்த ஷானு?"ன்னு கேட்க "நீங்க கட்டி புடிச்சு புரண்டீங்களே அந்த ஷானு"ன்னு எதார்த்தமாக சொல்ல ராமனாதன் "உம் உம் நடத்துமய்யா.கங்கிராட்ஸ்"ன்னு சொல்லிட்டு போனார்.

இந்த மாயவரம் சிட்டிசன்ஸ் கிட்ட பேசும் போது கொஞ்சம் ஜாக்கிரதையா தான் பேசனும். "சாப்பிட்டு வரேன்"ன்னு சொன்னா கூட 108 அர்த்தம் கண்டுபிடிப்பானுங்க. "யோவ் யோவ் அது நாய்"ன்னு நான் கத்த கத்த அதை காதில் போட்டுக்காம ராமநாதன் இந்த சரித்திர முக்கிய விஷயத்தை அவர் மனைவி கிட்ட சொல்ல ஓடிகிட்டு இருந்தார். என்ன என்ன ஆகப்போகுதோ?

அதல்லாம் கிடக்கட்டும்.டபில்யூ டபில்யூ டபில்யூ டாட் அபிஅப்பா டாட் பிளாக் ஸ்பாட் டாட் காம் நாலாவது வருஷத்துக்கு வந்து நான்கு நாட்கள் ஆச்சு.அப்போ ஒரு மண்டல பந்தய விரதம் நடைமுறையில் இருந்ததால் சொல்ல முடியலை. இப்போ சொல்லியாச்சு.வந்து திட்டுபவர்கள் வரிசையில் வரவும்.நான் முந்தி நீ முந்தி என ரேஷன் கடை மாதிரி அடிச்சுக்காம வந்து திட்டவும்.

ஏவிஎம்மின் மங்கையர் உலகம் ரேவதி சங்கரன் மாதிரி எனக்கு வாழ்த்த தெரியாட்டியும் ஏதோ என்னால் ஆன வாழ்த்து. வரும் 2010 நம்ம எல்லாருக்கும் எல்லா வளமும், செல்வமும் கொடுக்கட்டும் !!!

November 29, 2009

நாகை சிவா கல்யாண வைபோகமே!!!!!

நாகை சிவா கல்யாணத்துக்கு குடும்பத்தோட போகனும்னு ஏகப்பட்ட பிளான் எல்லாம் செஞ்சு 28ம் தேதி மதியம் வரை வீட்டு வேலைகள் (கொஞ்சம் கொத்தனார் வேலை) இழுத்து கொண்டே வந்ததால் அபிஅம்மாவும் நட்டுவும் வராமல் நானும் அபியும் மட்டும் செல்வதென முடிவு செய்யப்பட்டு அப்புடி இப்புடின்னு மாயவரத்தை விட்டு கிளம்பவே மாலை ஆறு ஆயிடுச்சு. ஆனால் மாநக்கல் சிபி, திருமதி சிபி, கவிதா, அணில் குட்டி எல்லாரும் நல்ல பிள்ளையாக 28ம் தேதி காலையிலேயே நாகை வந்துவிட்டாங்க.
நான் காரைக்கால் நெருங்கிய போதே நல்ல மழை ஆரம்பித்து விட்டது. அப்போது அபிஅம்மாவிடம் இருந்து போன் வந்தது. மழைன்னு சொன்னேன். "பின்னே இருக்காதா அரிசி மண்டி ஓனர் பையன் கல்யாணம். ஸ்கூல்க்கு லீவ் போட்டுட்டு மூட்டை மூட்டையா அரிசி தின்னுருப்பாரு. பாருங்க நாளை வரை கொட்டி தீர்க்க போவுது"ன்னு வாழ்த்து சொன்னாங்க. அதுக்கு நான் "ச்சே ச்சே "புலி" பசிச்சாலும் அரிசி திங்காது"ன்னு பழமொழி சொல்லிட்டு ஒரு வழியா மண்டபத்துக்கு போய்சேரும் போது இரவு 9 ஆச்சு.
மண்டபத்திலே நுழைஞ்ச உடனே எனக்கு பக்குன்னு ஆச்சு. பொதுவா தமிழ் சினிமாவிலே தான் வெளிநாட்டுக்கு போனா வரும் போது ஒரு வெள்ளைகார அம்மணியை கண்ணாலம் கட்டி கூட்டிகிட்டு வருவாங்க. சிவா வேலை பார்ப்பது சூடான். எனக்கு பக்குன்னு ஆன காரணம் சிவாவை மண்டபத்திலே சுத்தி சுத்தி வந்தது ஒரு சூடானி பெண். போட்டோவை பாருங்க மக்கா.
உடனே இந்த ரகசியத்தை சிபிகிட்ட சொல்ல போன் செஞ்சு விஷயத்தை ஒரு அரை மணி நேரம் சுருக்கமா சொன்னேன். (அப்போ சிபி & குரூப் கர்ம சிரத்தையா நவகிரகம் சுத்த போயிருந்தாங்க) அபிதான் அந்த அம்மணியை சுத்தி சுத்தி வந்து போட்டோ எடுத்துகிட்டு இருந்தா. ஏன்னா அவங்க ஹேர் ஸ்டைல் அத்தனை ஒரு நேர்த்தி.

பின்ன தான் மேடையிலே பார்த்தா சிவா கருப்பு கோட் சூட் போட்டுகிட்டு பக்கத்திலே பார்த்தா பச்சைகிளி மாதிரி மணப்பெண். அப்படின்னா அந்த சூடானி பொண்ணு இல்லியா???அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

பின்னே நானும் அபியும் மேடைக்கு ஏறினோம் வாழ்த்து சொல்ல. ஒரே கைத்தட்டல். அமைதி அமைதின்னு எல்லாரையும் அமைதி படுத்திட்டு மாப்பிள்ளை கிட்ட போனா சிவா மெதுவா என் காதிலே "தொல்ஸ் இந்த கைத்தட்டல் ரஜினி பாட்டு பாடின மியூசிக் ட்ரூப்புக்கு"ன்னு சொல்ல சரி அரசியல்ல இதல்லாம் சகஜமப்பான்னு வந்த வேலையை கவனிக்க ஆரம்பிச்சேன்.

(இந்த படத்தில் இருப்பது 29 காலை . இது வேற மெனு)
சூப்பர் மெனு. கல்கத்தா ரசகுல்லா, கேரட் அல்வா, மினி இட்லி ஒரு பவுல்ல வித் சூப்பர் சாம்பார், பரோட்டா வித் சென்னா குருமா, இடியாப்பம் வித் கடப்பா, கொத்தமல்லி ஊத்தப்பம் அதுக்கு வெங்காய சட்னி(காவிகலர்) தேங்காய் சட்னி(வெள்ளை கலர்), பொதினா சட்னி(பச்சை கலர்) இப்படி காங்கிரஸ் கலராக சட்னிகள், பகாலா பாத்(தயிர் சாதம் தாங்க) வித் கடாரங்காய் ஊறுகாய் மற்றும் மோர் மிளகாய், அக்குவா ஃபீனா வாட்டர் பாட்டில், அருண் ஐஸ்கிரீம். (உங்களுக்கே சாப்பிட்ட மாதிரி இருக்குதா) நல்லா ஒரு வெட்டு வெட்டினோம்.

திரும்ப 10 மணிக்கு தங்குவதுக்கு அரேன்ஞ் செய்யப்பட்ட ஹோட்டல் வந்து தங்கினோம். பேசி கிட்டே இருக்கும் போது மாப்பிள்ளையும் வந்து விட்டார். அவரை திருமதி சிபி "என்ன பொண்ணூ கூட கடலை போடாம இங்க வந்துடீங்கன்னு கலாய்க்க (குடும்பமே கலாய்த்தல் குடும்பமா இருக்குப்பா) சிவா முகமே கோவைப்பழமாக சிவந்தது.( குடுத்த காசுக்கு மேலயே கூவுறனோ)

பின்னே நானும் சிபியும் அமரிக்க, பாகிஸ்தான், சீனா(சீனாசார் இல்லை ஒரிஜினல் அக்மார்க் சீனா) பிரச்சனை எல்லாம் பேசி முடிக்க இரவு 2 ஆச்சு. காலை எழுந்து கல்யாணத்துக்கு போனோம். மாப்பிள்ளையை அய்யர் செமயா ட்ரில் வாங்கி கொண்டிருக்க நாங்க வந்த வேலையை ஆரம்பித்தோம். இப்பவும் மெனுவை சொல்லி பாவம் உங்க ஆவலை தூண்ட விருப்பம் இல்லை. சொன்னா எங்களுக்கு வயித்தை வலிக்கும்.

அப்போதும் அந்த சூடான் பொண்ணு தான் அட்ராக்ட் செஞ்சு கிட்டு இருந்துச்சு. பின்னே தான் தெரிஞ்சுது. ஐநா செயலர்(முன்னால்) கோபிஅன்னானின் சூடான் நாட்டு செயலராம் அந்த பெண். சிவா மீது கொள்ளை பிரியமாம். தவிர கீதாம்மா ஏற்கனவே அந்த பெண்ணின் போட்டோ போட்டு பதிவு கூட போட்டிருந்தாங்கலாம். ஓட்டை வாயிடா முதலின்னு என்னை நானே திட்டிகிட்டு சிவா- உமா தம்பதியினர் (பெயர் பொருத்தம் பாருங்க சூப்பர்)சந்தோஷமாக எல்லா செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். உங்க வாழ்த்தையும் சொல்லிடுங்க.
நடுவே கவிதா அவங்க அயித்தான் மும்பைல இருந்து சென்னை வருவதால் சென்னை சென்றுவிட சிபியும் திருமதி சிபியும் மாயவரம் நம்ம வீட்டுக்கு வந்து விட்டு போனாங்க.
ஒரு மன நிறைவான ட்ரிப் இது.

November 26, 2009

சூடான இட்லி+நெய்+ ஜீனி (26/11/2009)

அப்பாடா! நாலு வருஷமா பலரை பாடா படுத்திய "கோலங்கள்" கிட்ட தட்ட முடியும் தருவாய்க்கு வந்து விட்டது. நான் சில வருஷங்கலாகவே "கோலங்கள்" பார்ப்பதில்லை. எனக்கு தெரிஞ்சு கோலங்கள் பார்க்கும் ஒரே பதிவர் நம்ம கைப்புள்ள தான். ஆனா இங்க மாயவரம் வந்த பின்னே பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். பக்கத்து வீட்டு பாடாவதி பாட்டிக்கு இன்னமும் இலவச தொலைக்காட்சி கொடுக்கப்படாத காரணத்தாலும், கோலங்கள் பார்க்காவிட்டா பாட்டி பரலோகம் போய்விடக்கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாலும் கோலங்கள் நம்ம வீட்டிலே ஓடித்தொலையும்.


அதும் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க அந்த ஆதி பையன் சகட்டு மேனிக்கு பக்கத்தில் கிடைப்பவன் எவனா இருந்தாலும் டுப்பாக்கி எடுத்து நெத்தி பொட்டில் வைத்து தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரி நாபிக்கமலத்தில் இருந்து கத்துறான். அது என்ன கூத்து நெத்தி பொட்டில் வைத்து சுடும் கெட்ட பழக்கம். நெஞ்சிலே சுட்டா கதைக்கு ஆகாதா. வேற எங்கயும் சுட்டா செத்து தொலைய மாட்டாங்கலா? அதுவும் என்னை போன்ற ஆட்களுக்கு துப்பாக்கின்னு பேப்பர்ல எழுதி எச்சில் தொட்டு மேலே ஒட்டினா கூட யதேட்ஷம்.

இந்த கூத்திலே கோலங்கள் கிளைமாக்ஸ் எழுதி அனுப்பும் போட்டி "அவள் விகடன்"ல நடக்குதாம். அபியும் அபிஅம்மாவும் ஆளுக்கு ஒரு பக்கமா இது பத்தி சிந்திச்சுகிட்டு இருப்பதோட இல்லாம என்னையும் அபிப்ராயம் கேட்க நான் "தொல்காப்பியனுக்கும் தீபாவெங்கட்க்கும் கல்யாணம் இது தான் கிளைமாக்ஸ்"ன்னு பொதுவா தான் சொன்னேன்.இப்படி இரண்டு பக்கமும் அடி விழும்னு நினைக்கவில்லை. மக்கா நான் சொன்ன கிளைமாக்ஸ் பத்தி உங்க அபிப்ராயம் என்னன்னு சொல்லிடுங்க.

நட்ராஜ் அளும்புக்கு அளவே இல்லாம போச்சு. தன் தீவாளி டுப்பாக்கியை எடுத்து வந்து ஒரு பேப்பரை நீட்டி என் நெத்தி பொட்டில் வைத்து "கையேத்து போது கையேத்து போது"ன்னு சொன்ன போது பெருமையாக இருந்தது. என்னையும் மதித்து துப்பாக்கி காட்டி கையெழுத்து கேட்க கூட ஆள் இருக்குதேன்னு. "தம்பி நான் அத்தனைக்கு ஒர்த் இல்லை. வேணுமின்னா அம்மா நெத்தில துப்பாக்கிய வைடா, நான் வெளியில் இருந்தென்ன உள்ளுகுள்ள இருந்தே என் ஆதரவை தர்ரேன். ஆனா டெக்கான் கிரானிக்கல்ல வேண்டாம், கொஞ்சம் இரு செக் புக் எடுத்து வாரேன் அதிலே வாங்கினா எனக்கும் பிரயோசனமா இருக்கும் என சமாதான படுத்தினேன்.

தம்பி இப்படி கையெழுத்துக்கு மிரட்டின போது தான் அபிக்கு பிராக்ரஸ் ரிப்போர்ட்டிலே கையெழுத்து வாங்க நியாபகம் வந்தது. நேரே எடுத்து வந்து என்னை தாண்டி அவ அவங்க அம்மா கிட்ட கையெழுத்து வாங்க போகும் போது எனக்கு பொசுக்குன்னு போச்சு. பின்னே கெஞ்சி கூத்தாடி நான் கையெழுத்து போட்டேன். என்ன கொடுமை ஆண்டவா இதல்லாம். நானெல்லாம் கெஞ்சி கூத்தாடி என் பிராக்ரஸ் ரிப்போர்ட்க்கு கையெழுத்து வாங்கியது போக இப்போ இப்படி ஆச்சு. இதிலே கூத்து என்னான்னா பேரண்ட்ஸ்க்கு டீச்சர் அதிலே நோட் எழுதி விட்டிருக்காங்க. அடுத்த முறை இன்னும் முயற்சி செஞ்சு முதல் ரேங் வாங்கனும்னு. நானும் அதுக்கு பக்கத்திலே எழுதி வச்சேன் "அடுத்த முறை அவ முதல் ரேங் வாங்கும் அளவு சொல்லி தரனும்ன்னு.

அந்த எபிசோட் பார்த்ததில் இருந்து நட்ராஜ் வீட்டில் ஒரே துப்பாக்கி பிரயோகம் தான். துப்பாக்கியை நீட்டி "ஹேண்ட்ஸ் அப்"ன்னு சொன்னா இரண்டு கையையும் மேலே தூக்கிடனும், அது தான் அந்த விளையாட்டின் முக்கியமான ரூல்ஸ்ன்னு ஐநா சபை அங்கீகரிச்சு இருக்குன்னு நட்ராஜ் திடகாத்திரமாய் நம்புகிறான். இப்படித்தான் அவனை பார்த்து நான் சொல்ல கூடாத வார்த்தை சொல்லிவிட்டேன். பயங்கர கோவத்தோட என்னை கடிக்க வந்த போது நான் இரண்டு கையால் தடுத்து கொண்டே இருக்க அவன் ஓடிப்போய் துப்பாக்கி எடுத்து வந்து ஹேண்ட்ஸ் அப் சொல்லி நான் கை தூக்கின பின்னே நிதானமாக கடித்து வைத்தான். இதுக்கு நெஜ துப்பாக்கியால் சுட்டிருக்கலாம். அப்படி என்ன சொல்ல கூடாத வார்த்தையா? "ஸ்கூலுக்கு போறியா"ன்னு கேட்டு விட்டேன். அதான் அத்தனை கோவம் வந்துடுச்சு. இருக்காதே பின்னே. "எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்"ன்னு வள்ளுவர் சொன்னது பொய்க்குமா என்ன?

திடீர்ன்னு என் சின்ன அக்கா நேத்து போன் செஞ்சு "என்னடா உன் பையன் உன்னை மரியாதை இல்லாமல் பேசுறானாமே"ன்னு கேட்டாங்க. தவறு! நட்ராஜின் காம்பிளான் வளர்ச்சியை காண சகிக்காத பூஸ்ட் கம்பனி பரப்பும் வதந்தி இது. அய்யர் ஆத்து குழந்தை 'அபிவாதே' சொல்வது போல பவ்யமாக நின்று கொண்டு தான் நேத்து கூட என்னை திட்டினான் என்பதை நானும் மரியாதையாக அக்காவிடம் சொன்னேன்.

கடந்த நவம்பர் 13 ம் தேதி சந்தோஷமாக தூங்கி கொண்டிருக்க "என்னங்க சீக்கிரம் எழுந்து ரெடியாகுங்க, இன்னிக்கு கல்யாணம்"ன்னு சொல்ல எனக்கு பேரதிர்ச்சி. இல்லை ஒரு தடவை ஆனதே போதும் என சொல்லி புரண்டு படுத்து கொண்ட போது "அய்யோ சாமீ இது வேற ஆசை இருக்கா கல்யாணம் உங்களுக்கு இல்லை மாயவரத்தானுக்கு"ன்னு சொன்னாங்க தங்கமணி. "அப்படியா நேரா சுவரொட்டிக்கு போ, அங்க வாழ்த்து போட்டிருப்பாங்க. அங்க துளசி டீச்சர் "வாழ்த்து(க்)கள்"ன்னு போட்டிருப்பாங்க. அதிலே கோபி "ரிப்பீட்டேய்"ன்னு போட்டிருப்பான். அதை காபி பேஸ்ட் செஞ்சு "டபுள் ரிப்பீட்டேய்"ன்னு போடு. நான் தூங்கி எழுந்து வந்து போன் செஞ்சுடறன்"ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க "அய்யோ இன்னிக்கு என்ன நாள் ஐப்பசி 27, நவம்பர் 13 , மாயூரநாதருக்கு திருக்கல்யாணம், இது மூணுமே 43 வருஷத்துக்கு பின்னே ஒரே நாள்ல வந்திருக்கு"ன்னு சொன்ன போது கூட எனக்கு அந்த சரித்திர பூகோள முக்கியத்துவம் வாய்ந்த நாளின் மகிமை புரியவில்லை. பின்னே எழுந்து வந்து மெயில் பார்த்த போது ஷைலஜா அக்காவின் வாழ்த்து பார்த்த போது தான் "இன்று புதிதாய் பிறந்த உணர்வு" வந்தது.எனக்கு இப்போதைக்கு தேவையான "அன்னை"யின் அருளுரை அனுப்பியிருந்தாங்க. இந்த வருஷம் புதிதாக தேர்முட்டிலிருக்கும் வல்லப கணபதி கோவிலில் இருந்து மாயூரநாதர் திருகல்யாணத்துக்கு "மாப்பிள்ளை அழைப்பும்" வைத்திருந்தனர். கொடுத்து வைத்த மாப்பி!


அடுத்த நாள் தேர். அமோகமா இருந்தது புது தேர். புது வட கயிறு. அமர்களமாக இருந்தது. தேர்காசு கிடைக்குமா என நினைத்து போன எனக்கு ஏமாற்றம். நான் தான் கொடுக்கனுமாம். நட்ராஜ் தான் கலக்ஷன் குவித்து கொண்டிருந்தான். சட்டையை கழட்டி "ரைட் ரைட் போலாம்"என கங்குலி மாதிரி சுழட்டி சுழட்டி தேர் ஓட்டினான். அவன் 4 வீதியும் தேர் இழுத்தான் என சொல்வதை விட தேர் வடத்தை தொங்கி கொண்டு வந்தான் என்பதே சரி.


அடுத்த நாள் மயிலாடுதுறையின் மகத்தான கடைமுழுக்கு." போன வருஷத்தை விட இந்த வருஷம் கூட்டம் அதிகம்" "நாங்க அந்த காலத்திலே கட்டு சோறு கட்டிகிட்டு வண்டி கட்டிகிட்டு வருவோம்" போன்ற டெம்பிளேட் வசனங்கள் "மஞ்ச சட்டை போட்ட ஒரு பிக்பாக்கெட் லாகடத்து உள்ளே வந்துகிட்டு இருக்கான், முந்தானையை இழுத்து போத்திகங்கம்மா" என ஸ்பீக்கரில் அலறும் போலீஸ்காரர், அதை தொடர்ந்து மஞ்ச சட்டை போட்ட அத்தனை பேரும் கழட்டி கக்கத்தில் வைத்து கொள்ளுதல், முழங்கால் வரை சேறு அப்பிய சோர்ந்து போய் கைகோர்த்து நிற்கும் ஸ்கவுட் பசங்க, இதுக்கு மத்தியில் சீமாச்சு அண்ணா போட்ட 2000 ஃபுல் மீல்ஸ்க்குகூட்டம், (தவிர காலல குளிர் நேரத்தில் 2000 கப் சூடான பில்ட்டர் காபியும் கூட) "இந்த மாயூரநாதர் எப்பவும் இப்படித்தான் மாமி ஆடிக்கு வான்னு சொன்னா அமாவாசைக்கு தான் வருவார், அய்யாரப்பர் பாருங்கோ பஞ்சகஜம் கட்டினோமா, மாமிய கூட்டிண்டோமான்னு விருட்ன்னு வந்துட்டார்"ன்னு அலுத்துக்கும் மகாதான தெரு மாமியும், உங்க அவயாம்பாவுக்கு குஞ்சம் வச்ச ஜடை போடவே சுந்தரம் குருக்களுக்கு சாயரட்சை ஆகிடும் மாமி"ன்னு முகவாய் கட்டையில் இடிச்சுக்கும் ரெட்டை தெரு மாமியும் காவிரியில் இடுப்பளவு தண்ணீரில் தீர்த்தவாரிக்காக காத்து கொண்டிருக்க பழைய மூங்கில் பாலத்தில்(இப்போது கான்கிரீட்பாலம்) இருந்து தொபக்கடீர்ன்னு குதித்து கொண்டிருக்கும் வானரங்கள் ஒரு பக்கமுமாக அல்லாகலப்பட்ட்து இந்த வருஷ கடை முழுக்கு.

இப்படியாக ஐப்பசி மாதம் நல்ல படியாக முடிந்தது மாயவரத்தில்.

November 17, 2009

கோவை பயணம் # 1


என்ன எழுதலாம்னு யோசிச்சு யோசிச்சு நாலு தலைமுடி போனது தான் மிச்சம். பேசாம கோவை பயண கட்டுரை எழுதிடலாம்ன்னு முடிவு செஞ்சாச்சு.


நான் அம்பிஜா கல்யாணத்துக்கு போறேன். யார் யாரெல்லாம் என் கூட வரீங்கன்னு கேட்டதுதான் தாமதம். ஒட்டுமொத்த குடும்பமும் கையை பூமிக்கு கீழே புதைத்துக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை. "சரி நான் வரலை இப்ப யார் யார் வரீங்கன்னு" கேட்டதும் நட்டு வாட்டர் டேங் மேலே நின்னு ரெண்டு கையும் தூக்கியது உட்சபட்சம்.


ஒரு வழியாக பிளைட், கார், வேன், ஆம்னி எல்லாம் தேய்ஞ்சு போய் கடைசியாக அரசு பேருந்து பயணம் முடிவாகி தஞ்சை வரை நட்டு துங்கியதால் எல்லாம் நல்லபடியா தான் போச்சு. வல்லம் வந்தபோது என் சீட்டுக்கு எதிரே இருந்த பட்டாச்சாரியார் பட்டாசு வெடிச்ச மாதிரி கத்தியதால் டிரைவர் பிரேக் போட்டு கத்தியதால் பஸ்ஸில் பலபேர் பிரேக் போடாமலே கத்தினோம். அடுத்த வினாடியே எனக்கு தெரிந்து விட்டது. புள்ளாண்டான் விளையாடிட்டான்ன்னு. அவர் வந்து உட்காந்ததுமே எனக்கே கடிக்க தோணித்து. பின்னால திரும்பி அவர் "மாமி கொழந்தைக்கு பல்லு கொழுக்கட்டை செஞ்சு படைப்பதா சக்கரத்தாழ்வாருக்கு வேண்டிக்கோங்கோ எல்லாம் சரியாகிடும்"னு சொல்ல நானும் ஆட்டையில் கலந்து கொள்ள "மாமா பூர்ணம் வச்சதா ப்ளைனாவா"ன்னு கேட்டு இடுப்பில் ஒரு இடி வாங்கியது தான் நான் கண்ட பலன்.


இதற்கிடையில் பதிவர் நண்பர் வெயிலான் "எப்ப வந்து கோவை சேர்வீங்கன்னு கேட்டு குளிரில் காய்ஞ்சு போய் அப்துவை அழைக்க ஏர்போட் போயிட்டார்.நான் இரவு வந்து சேர்ந்து காலை கல்யாணம் முடிச்சு மயிலக்காவுக்கு போன் செஞ்சேன். "ஆட்டோவிலே ஏறி உட்காந்து ஆட்டோ டிரைவர் கண்ணை மூடினா நம்ம வீடு தான்"ன்னு சொல்ல எனக்கு லேசா பயம் வந்துச்சு. ஆட்டோ டிரைவர் கண்ணை திறந்து வச்சிருந்தாலே சொர்கம் கன்பர்ம்டு. இதுலே கண்ணை மூடி கிட்டா ஒரு வேளை பர்த் கோச் கிடைக்குமோ என நினைத்து கண்ணை மூடி கொண்டேன்.


போகும் வழியில் "ஐய்யோ நாம போக போவது பெரிய ஃபேஷன் டிசைனர் வீட்டுக்கு. இப்படி 16 முழம் கட்டிகிட்டு வந்தா நீ யாரோ நான் யாரோ என சொல்லி ஆட்டோவில் தள்ளி உட்காந்து கொள்ள "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"ன்னு படிக்கொண்டே அபிஅம்மாவும் சந்தோஷமாக தள்ளி உட்கார மயிலக்கா வீடு வந்தாச்சு.


"என்னங்க பொண்ணு "ராசாத்தி"யாட்டம் இருக்குங்க"ன்னு சொல்லி கொண்டே உள்ளே போக உள்ளே ஒரு பெண் உட்காந்து இருந்தது.
"இது யாருன்னு நான் அபிஅம்மாவிடம் கேட்க "இது தான் பாட்டியாலா"ன்னு சொன்னாங்க. அதே நேரத்தில் மயிலக்கா வந்து இது தான் சந்தனமுல்லைன்னு சொல்ல அபிஅம்மா "அபி கூட இதை தான் தைக்கனும்னு சொல்ல எனக்கு ஒரே குழப்பம்.அதற்குள்ளாக தாரணிபிரியாவின் "நான் வாசலுக்கு வந்துவிட்டேன்" என போன் வர "உள்ளே வந்தே சொல்லியிருக்கலாமே" என்கிற என் குழப்பம் தீரும் முன்பாகவே முல்லை ஓடிப்போய் கதவின் பின்னே மறைந்து நின்று "பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ"ன்னு பயம் காட்ட நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஆனா கள்ளுளி மங்கி தாரணிபிரியா அப்படி ஒரு நிகழ்வு நடந்ததையே காட்டிக்கொள்ளாததால் முல்லை 72 மணி நேரம் பதிவு போடாமல் பந்த் அறிவித்தது இந்த பதிவுக்கு சம்மந்தம் இல்லா விஷயம்.

தாரணி பிரியா கலகலபிரியாவாக அந்த இடத்தை கலகலப்பாக, சஞ்சய் வராத குறையை சஞ்சய் கேமிரா போக்கி கொண்டிருந்தது. "இந்த இடத்தில் இல்லாதங்க பத்தி கமெண்ட் அடிக்காதீங்கப்பா" என மயிலக்கா சொன்ன போது சின்ன ஷாக் எல்லாருக்கும். பின்னெ "சஞ்சய் பத்தி பேச இதற்கு விதி விலக்கு"ன்னு சொன்ன பின்னே தான் எல்லாருக்கும் மூச்சு வந்தது. பின்னே தமண்ணா சஞ்சய் அப்படின்னு ஏதோ பேசி கொண்டிருந்தார்கள். எனக்கு ஏன் வம்பு.நான் வாயை மூடி கொண்டு இருந்தேனாக்கும்.


அப்போது தான் தமிழரசி வந்தாங்க. பார்த்ததும் ஏதோ எங்க வீட்டு பொண்ணை பார்த்த மாதிரி இருந்துச்சு. டபார் டபார்ன்னு மனதில் பட்டதை கேட்பதும், கலகல சிரிப்பும், மயிலக்காவிடம் பல்பு வாங்குவதும் அப்படியே டிபிகல் தஞ்சை குணம் இருந்துச்சு.


என்னை பார்த்து "நீங்க சிவிலா?"ன்னு கேட்ட போது "நான் தான் சிவில் அவர் கிரிமினல்"ன்னு அபிஅம்மா என்னை கை நீட்டி சொன்ன மாதிரி என் காதுக்கு பட்டது.
தொடரும்....
செல்வா, சஞ்சய், மஞ்சூர் ராஜா குடும்ப சந்திப்பு அடுத்து வரும்....

October 25, 2009

காபி & பேஸ்ட்ன்னா இதுதானா??? தலைப்புக்கு நன்றி துளசி டீச்சருக்கு!!!!


அப்பாடா! இந்தியா வந்து நல்லா ரெஸ்ட் எடுத்து குறைந்தபட்சமாக கூட தமிழ்மணம் பக்கம் வராமல் ரொம்ப சமர்த்தாக நடந்து கொண்டேன். ஒரு முக்கிய கல்யாணத்துக்காக கோவை குடும்ப சகிதம் போய் வந்தேன். அருமையான சந்திப்புகள். பல பதிவர்களை என் குடும்ப சகிதமாக சந்தித்தேன். அதை எல்லாம் விரிவாக யாராவது எழுதுங்கப்பா. (முல்லை இன்னுமா எழுதலை? அப்படி எழுதியிருந்தா லிங் கொடுங்கப்பா..)
அந்த சந்திப்பை பத்தி பயண கட்டுரை எழுதலாம். அப்படி எழுதி முடிச்சு பார்த்தா நட்டுதான் பதிவை டாமினேட் பண்ணிட்டு காமடி பண்ணிட்டு இருக்கான் மூனு பக்கத்திலும். சரின்னு அதை அப்படியே விட்டுட்டேன்.
இந்த பதிவு ஏன்னு கேட்டால்.... நத்திங் பெசல்... ஒரு வழியா வீட்டில் டாட்டா இண்டிகாம்க்கு டாட்டா காமிச்சிட்டு ஆ.ராசா இணைப்பு வாங்கிட்டேன். அதுக்கு தான் இந்த பதிவு. தவிர மேலே உள்ள போட்டோவை பார்த்துவிட்டு துளசி டீச்சர் அடிச்ச டைமிங் கமெண்ட் "இது தான் காபி&பேஸ்ட் என்பதா" .(நல்ல வேளை கட் & பேஸ்ட் ஆகும் முன்ன இந்தியா வந்து 100 சதம் நன்றாக ஆகிவிட்டேன்)
அதுதான் அந்த போட்டோ போட்டு அதையே தலைப்பா வச்சாச்சு. இந்த பதிவு ச்சும்மா சோம்பல் முறிச்சுக்கத்தான். இனி அடுத்தடுத்து நல்ல பதிவா போட முயற்சிக்கிறேன். நம்ம கையில என்ன இருக்கு. எல்லாத்தையும் மேல உள்ளவன் பார்த்துப்பான்.

October 10, 2009

"உடையார்” - பாலகுமாரன் காவியத்தின் விமர்சனம் பாகம் # 1

பொன்னியின் செல்வன் நான் பல முறை படித்து படித்து திகட்டாமல் திரும்பவும் படித்து கொண்டிருக்கும் ஒரு சரித்திர நாவல். அதன் தொடர்ச்சி தான் இந்த உடையார் என்கிற நாவல், எழுதியது எழுத்து சித்தர் பாலகுமாரன் என்று எனக்கு சொல்லப்பட்ட போது அய்யோ சரித்திர நாவலா என அலுத்து கொண்டேன். பிறகு எதிர்பாராத விதமாக எனக்கு உடையாரின் 6 பாகங்களும் கிடைத்த போது அதன் புது வாசனை மட்டுமே பிடித்து இருந்தது. பின்பு வாழ்க்கையே ஒரு மாதிரி தொய்வு ஏற்பட்ட போது ஏன் இதை படித்து தொலைத்தால் தான் என்ன என்கிற எண்ணம் வந்தது. முதலில் அதன் முன்னுரைகள் படித்தேன். எல்லோருமே ஆஹா ஓஹோ என புகழ்ந்து இருந்தது கண்டு கொஞ்சம் எரிச்சல் வந்தது. இப்போது புரிகின்றது அவர்கள் மிகவும் குறைவாகத்தான் புகழ்ந்திருக்கின்றனர் என்று

.

முதல் பாகத்தில் கிருஷ்ணன் தேவன் பிரம்மராயர் என்கிற மந்திரி(பொன்னியின் செல்வனில் தலைமை அமைச்சர் - இதிலே சேனாதிபதி, போருக்கு எல்லாம் போகின்றார். அவரை வைத்து தான் கதை தொடங்குகின்றது. அதன் பிறகு அந்த முதல் பாகத்தை மின்னல் வேகத்தில் செலுத்துவது ராஜராஜி என்கிற ஒரு தேவரடியார் பெண். இந்த உடையார் நாவல் முழுமையுமே நன்றாக உற்று நோக்கினால் மூன்று தேவரடியார் பெண்கள் தான் பிரதான கதை சொல்லிகள். முதல் பெண்- இராஜராஜர் உடையாரின் நான்காம் மனைவி பஞ்சமான் தேவி! இவர் ஒரு தேவரடியார் வகுப்பை சேர்ந்தவர். பொன்னியின் செலவன் கடைசி பாகத்தில் உத்தமசோழருக்கு முடிசூட்டி விட்ட இராஜராஜர் ஒரு பதினேழு வருடங்கள் எந்த ஒரு இராஜ்ஜிய மதிப்பும் அற்று சோழதேசம் முழுமையும் சுற்றி வருகின்றார். மக்கள் மதிப்பை கூட்டி கொள்கின்றார். அந்த கால கட்டத்தில் சிதம்பரம் நடராஜர் சன்னிதியில் திருஞானசம்மந்தரின் பதிகம் படிய பெண் பஞ்மான் தேவியை பார்த்து அந்த பதிகத்தில், தேவியின் குரலில், அவள் புத்திசாலித்தனத்தில் ஆசைப்பட்டு (மயங்கி என சொல்ல முடியாது) அவளை தன்னுடனேயே தஞ்சை அழைத்து சென்று சென்ற பின் ஆட்சியை பிடித்து சக்கரவர்த்தியாக்கி இவளை நான்காம் மனைவியாக ஆக்கி கொள்கின்றார். இவரை இந்த பஞ்சமான் தேவியை சுற்றித்தான் கதை சொல்லப்படுகின்றது.


அடுத்து முதல் பாகம் முழுக்க கோலேச்சுவது இராஜராஜி என்னும் காஞ்சீபுரத்தை சேர்ந்த தேவரடியார் தலைக்கோலி பெண். தலைக்கோலி பட்டம் என்றால் பரதம் சொல்லி கொடுக்கவும் தகுதி படைத்தவள் என அர்த்தம் ( B.Ed.,????)


அடுத்து திருவாரூர் தியாகராஜருக்கு பொட்டு கட்டி தன்னை அர்பணித்து கொண்ட தேவரடியார் 16 வயதினெலேயே தலைக்கோலி பட்டம் வாங்கியவள். இவள் அந்த சிற்பங்களுக்கு மாதிரியாக இருப்பவள்.


காஞ்சியில் இருந்து இராஜராஜரால் கட்ட பட இருக்கும் தஞ்சை பெரிய கோவிலின் வரை படங்கள் வண்டி கட்டி கொண்டு எடுத்து வருகின்றாள்.வண்டி ஆற்றோடு காவிரி வெள்ளத்தோடு போகின்றது. அப்போது பிரம்மராயர் தன் சீடன் மற்றும் அந்த கிராம மக்கள் உதவியோடு காப்பாற்றப்படுகின்றாள். அந்த இடத்துக்கு இராஜராஜரும் வந்து சேர கதை சூடு பிடித்தாலும் நாமும் அந்த வெள்ளத்தில் சிக்கி சுழன்று உயிருக்கு அல்லாடியது போல ஒரு சோர்வு. சரித்திர நாவல்களில் இது தவிர்க்க முடியாத ஒரு சோகம். நாம் ஒன்றி போவதும் அதறுகு ஒரு காரணம்.


அந்த நேரத்தில் எதேற்சையாக சீமாச்சு அண்ணா தொலை பேசினார். நான் சொன்னேன். உடையார் படிக்க ஆரம்பித்து இருக்கின்றேன் என்று. அப்போது அவர் " முழுவதும் படி. ஒரு M.B.A கோர்ஸ் படித்து முடித்ததுக்கு சமம். னேஜ்மெண்ட் விஷயங்கள் அதில் இருக்கும். இதை நீ படித்து முடித்த பின் உன் பார்வையில் விமர்சனம் எழுது" என்றார். எனக்கு அப்போது கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. என்னா இது பாலகுமாரன் தேவரடியார், பால்கிண்னம், வாசனை தைலம் என்று தானே இது வரை போய் கொண்டிருக்கிறார் என்கிற எண்ணமே மேலோக்கி இருந்தது. பின்னே படிக்க படிக்க கதை வெறி பிடித்த ஆண் குதிரை மாதிரி பறக்க ஆரம்பித்தது. பின்பு என்ன நான் போகும் இடமெல்லாம் நீயும் வருவாய் என உடையார் புத்தகம் என் கூடவே ஒட்டி கொண்டது. என்ன ஒரு வருத்தம் என் ஆதர்ஷன புருஷர்கள் எல்லோருக்கும் வயதாகி விட்டது. ஐம்பது பிளஸ் ஆகிவிட்டனர். பொன்னியின் செல்வன் நான் 6 வகுப்பு படிக்கும் போது முதன் முறையாக படித்தேன். புரிந்தது. ஆனால் இதே உடையார் அதே கால கட்டத்தில் வந்திருந்தால் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தான் புரிந்திருக்கும். சுற்றுளி என்றால் கருங்கல் கோவில் என தாமதமாகத்தான் புரிகின்றது. ஆனால் சிற்றன்னை என்பதற்கு பதில் சித்தி என சொல்கின்றார் ஆசிரியர்.


விடுங்க அதை எல்லாம் ஒரு பெரிய குறையாக பார்க்க முடியாது. கதை என்ன? இராஜராஜர் தஞ்சையிலே ஒரு மிக பிரம்மாண்டமான கோவில் கட்டுகின்றார். பல்வேறு தடங்கள், மனஸ்தாபங்கள் இடையே அவர் அந்த கோவில் கட்ட காரணம் அத்தனை தெளிவாக சொல்லப்படவில்லை. இராஜராஜர் குழம்பிய மனநிலையில் இருந்தாரா அல்லது ஆசிரியர் அப்படி இருந்தாரா என தெரியவில்லை. காந்தளூர் கடிகை போரில் அந்தணர்களை கொன்ற பாவம் கழுவ என ஒரு இடத்தில் சொல்கின்றார். ஆனால் வேறு ஒரு இடத்தில் "நான் உத்தமசோழர் ஆட்சிகாலத்தில் 17 வருடங்கள் எந்த விதமான ராஜ்ஜிய உரிமையும் இல்லாமல் வெறும் இளவரசு பட்டம் மாத்திரம் சூட்டி கொண்டு சோழ தேசத்தை சுற்றி வந்த போது உத்தம சோழர் என்னை அழைத்து 'இராஜராஜா நான் ஒரு பிரம்மாண்டமான கோய்வில் எழுப்பி இருக்கின்றேன். அது தான் மகாலிங்கம். அதை விட பெரிய லிங்கம் என்பது தென்னாட்டில் இல்லை வந்து பார்' என சொல்ல இவர் திருவிடைமருதூர் சென்று பார்த்து 'ஹே இதுவா மகாலிங்கம் நான் கட்டுகிறேன் பார் இதை விட மகாலிங்கமாக பெரிய விமானமாக' என மனதில் நினைத்து கொள்கின்றார். அந்த ஈகோ தான் அந்த கோவில் எழும்ப காரணமா? எது எப்படியா இருந்தால் என்ன நம் தமிழர்களின் கட்டட கலைக்கு ஒரு மாபெரும் மதிப்பு அந்த கோவிலால் என்பதால் மனம் மகிழ்கின்றது.


வருகின்ற பத்தி நிறைய ஆங்கில வார்த்தைகள் இருக்கும் மன்னிக்கவும்.


என் அனுபவத்தில் ஒரு என்பது அடுக்கு மாடி கட்டிடம் கட்டுவது என்றால் யார் முடிவு செய்வார்கள். காசு உள்ளவன், அப்படி ஒரு கட்டிடம் கட்ட மனதில் வெறியுடன் கூடிய ஆசை உடையவன். அவன் தான் client. அவ் அவனுக்கு ஆசையும் பணமும் மட்டுமே இருக்கின்றது. ஆனால் அதை இருந்து கட்ட நேரம் இல்லை அல்லது அதற்கான அடிப்படை அறிவு இல்லை என வைத்துக்குக்கொண்டால் அந்த கிளையண்ட் அந்த பொறுப்பை வேறு ஒரு நிறுவனத்துக்கு கொடுத்து விடும். அவங்க consultant. அதாவது மேஸ்த்திரி மாதிரி. ஆனால் கையில் சாட்டை வைத்து கொண்டிருக்கும் பெரிய அளவினால மேஸ்த்திரி. அவன் வைப்பது தான் சட்டம். பின்பு இருவரும் சேர்ந்து யார் கட்ட போகின்றார்கள் என்பதை டெண்டர் விட்டு முடிவு செய்வார்கள். ஒரே கம்பெனிக்கும் கொடுக்கலாம் அல்லது இரண்டு மூன்று கம்பனிக்கு சேர்த்தும் கொடுக்கலாம். அடுத்து Drawing அதாவது வரைபடம். அதற்கு ஒரு செக்ஷன் அது Document control secton அது அந்த வரை படத்தை கிளையண்ட் கிட்டே காட்டி சம்மதம் வாங்குவது முதல் அரசாங்க சம்மதம் வாங்குவது முதல் கன்சல்டண்ட் சம்மதம் வரை பின்பு அதை பாதுகாப்பது பிரதி எடுத்து பொறியாளர்களுக்கு, பிராஜக்ட் மேனேஜர், கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜர் என கேட்ட போது எந்த பகுதி எப்போ வேண்டுமோ அப்போ தருவது அப்படியாக . இந்த நாவலில் அது யார்?


அடுத்து soil test மண் பரிசோதனை. பாறை எத்தனை அடியில் வரும். எத்தனை அடிக்கு அஸ்த்திவாரம் போடனும், நடுவே வரும் தன்ணீர் ஊற்று எப்படி சமாளிப்பது. அதற்கு dewatering section அது தனி பிரிவு. அடுத்து survey. இப்போது auto level machine, lazer point machine எல்லாம் வந்தாச்சு ஆனால் அப்போது தூக்கு குண்டு தான். அந்த சர்வே டிபார்ட்மெண்ட் தனி பிரிவு. அடுத்து man power. பாடாவதி வேலை. HR department தலையை பிச்சுப்பாங்க. இன்றைக்கு 10000 பேர் வேண்டும் என்றால் வேண்டும். தரவில்லை என்றால் HR மேனேஜரின் டவுசர் உருவப்படும். கம்பனியிலோ அத்தனை ஆட்கள் இருக்காது. என்ன செய்வது Man power Supply companyயில் இருந்து தருவிக்க வேண்டும். அது இந்த நாவலில் யார் வேலை???


வந்தாச்சு ஆட்கள். அவர்களுக்கு திங்க, தூங்க வசதிகள் யார் செய்வார்கள்? அது Administration Department. அது இந்த கதையில் யார்??? அடுத்து தொழிலாளர் பாதுகாப்பு அதாவது safety department. அது இந்த நாவலில் யார்? அடுத்து procurement அதாவது மூல பொருட்கள் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதிலே Local purchase இருக்கு abrod purchase இருக்கு. அது யார் இங்கே இந்த நாவலில். அடுத்து Storekeeper, Accountant அடேங்கப்பா இந்த நாவலில் முக்கிய பிரச்சனையே இது தான். இந்த இரண்டு வேலைக்கும் தஞ்சை அந்தனர்களை கூப்பிட போய் அவர்கள் மறுத்துவிட பின்பு தொண்டை மண்டலத்தில் இருந்து 500 அந்தனர்களை கொண்டு வந்து இறக்கி பெரிய பிரச்சனையாகி அடேங்கப்பா. பிரம்மிக்க வைக்கின்றது.


அடுத்து planing depart ment. அடுத்து என்ன வேலை செய்வது எப்படி செய்வது எத்தனை ஆட்கள் அதற்கு தேவை என திட்டம் வகுக்கும் துறை. அதை யார் செய்வது. அடுத்து logistic department. மூலப்பொருட்களை கொண்டு வந்து சேர்ப்பது. அதற்கான சாலை வழிகள், வாகன வசதிகள் அது ஒரு பாடாவதி துறை. அதை இங்கே யார் செய்வது???


நடுவே நீ பெரியவனா நான் பெரியவனா என்கிற சண்டை வரும். சர்வேகாரன் "நான் பாயிண்ட் கொடுக்காவிட்டால் நீ எப்படி வேலை செய்வாய்?" என கேட்டு விட்டு போய் விடுவான். இங்கே அடித்து கொள்வார்கள். வேலை நின்று போய் விடும். அதை சமாளிக்கனும். மழை பெய்து தோண்டிய பள்ளத்தில் குளம் மாதிரி நீர் சேர்ந்து விடும். 10 நாட்கள் வேலை நிற்க்கும். அதை எப்படி சரி கட்டுவது? அதை இந்த நாவலில் செய்பவர் யார்?


அடுத்து Plant Division தேவையான உபகரணம் வாங்கி கொடுப்பது முதல் ரிப்பேர் வரை அனைத்தும். இந்த நாவலில் கருமார்கள் என்கிற பிரிவினர் அந்த plant division. அவர்களுக்கு என்ன பிரச்சனை. அதை எப்படி இராஜராஜர் சமாளிப்பார்.


அடுத்து ஒற்றர் படை. கிட்ட தட்ட Time Office இந்த வேலை தான் செய்யும். அதாவது போட்டு கொடுக்கும் வேலை. எவன் யாருக்கு கையாள் என்பதே தெரியாது. அடுத்து Entertainment section. பார்ட்டி பார்ட்டி பார்ட்டி தான். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மானாட மயிலாட தான் மதுவுடன். அது இந்த நாவலில் உண்டா என்றால் ஆம் அதுவே பிரதானமாக இருக்கின்றது.


மிக மிக முக்கியமாக Scaffolding Division தான் அதாவது சாரம் போடுவது. இப்போது Steel tubes, props எல்லாம் வந்து விட்டது. Full Safety Harness போட்டு கொண்டு அருமையாக போடலாம். 400 டன் எடையுள்ள cooling chiller 500 டன் கெப்பாசிட்டி கிரேன் வைத்து அரை நாளில் 80 வது மாடிக்கு ஏற்றலாம். ஆனால் அப்போது எப்படி அது சாத்தியமாகிற்று. அதுவும் 2400 டன் எடையுள்ள ஒற்றை கல் மேலே ஆசிரியர் மொழியில் சொல்ல வேண்டுமானால் 7 பனை உயரம் ஏற்ற வேண்டும். அதற்கு சாரம் போடுவது எப்படி? ஒரு சிறிய கல் அத்தனை உயரத்தில் இருந்து விழுந்தால் கீழே நிற்கும் யானை இறந்து விடும். அப்படி இருக்கையில் 2400 டன் எடையுள்ள கல் மேலே போக வேண்டும். யார் அதற்கு பொறியாளர். யார் டெக்னிக்கல் மேனேஜர்? யார் commissioning department?


படிக்க படிக்க பிரம்மிப்பு தான் எஞ்சுகின்றது. ஒரு பிரச்சனை வந்தால் எப்படி சமாளிப்பது? பிரச்சனை வராமல் முன்னேற்பாடாக இருப்பது எப்படி? திட்டமிடுதல் எப்படி? அதை செயல்படுத்துதல் எப்படி? பலி விழும். விழுந்தால் மற்றவர்களை எப்படி தேற்றுவது. பலி எண்ணிக்கையை குறைக்க என்ன வழி? ஒரு பிராஜட் என்றால் 3 கல்யாணம், 8 காதல் அதிலே 2 ஓக்கே 6 முறிவு, கள்ள காதல், நல்ல காதல், காமக்காதல், எல்லாம் சர்வ நிச்சயம். இந்த நாவலில் அது உண்டா? ஆம் பிராஜக்ட் மேனேஜர் பெண்ணே ஓடி போகின்றது. அப்போது அவர் மனநிலையை எப்படி ஒரு கிளையண்ட் வந்து சரி செய்ய வேண்டும்? அடேயப்பா. ஆசிரியர் ஒரு விஷயத்தையும் தொடாமல் விடவில்லை. தற்போதைய முதல்வர், துனைமுதல்வர் பிரச்சனை வரை அவர் தொடாமல் விடவில்லை.


நாவலை படித்து முடித்த பின் நிச்சயம் தஞ்சை போக ஆசை வருவது இயல்பு. இது வரை பிரகதீஸ்வரரை தரிசித்ததற்கும் இனி இந்த நாவலுக்கு பிறகு தரிசிப்பதற்கும் ஆயிரம் வேறுபாடுகள் நிச்சயம்.


இனி அடுத்த பாகத்தில் இருந்து இன்னும் விரிவான விமர்சனம் செய்கின்றேன். இதை முன்னோட்டமாக வைத்து கொள்ளுங்கள். என் வழக்கமான பதிவுகள் மாதிரி உடையார் விமர்சனம் இருக்க மாட்டாது. அதனால் பின்னூட்டம் வராது என்பதும் தெரியும். குறைந்த பட்சம் வடுவூர் குமார் அண்ணா ரசிக்க 25 சத வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.


சோழம்! சோழம்!! சோழம்!!!\