பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 12, 2013

செயலாளர் 3 ரூபாய்! பொருளாளர் 2 ரூபாய்!! வாழ்க ரஜினி!!!



அவன் பெயர் மோகன் தாஸ். அதை காயவைத்து சின்னதாக "மோக்கு" என கூப்பிடுவோம். அவனுக்கு ரஜினி என்றால் அத்தனை ஒரு வெறி! முள்ளும் மலரும் நேரத்தில் இல்லாத மீசையை நீவிக்கொள்வான். ஆறு புஷ்பங்கள் படம் வந்த போது 70 MM பிரேம் போட்ட கண்ணாடி போட ஆசைப்பட்டு பிரேம் மட்டும் மாட்டிக்கொண்டான். ஆறிலிருந்து அறுபது வரை நேரத்தில் விட்டத்தை அடிக்கடி வெறித்துப்பார்த்து கொண்டிருந்தான். ப்ரியா வந்த போது கணேஷ் ஆகி வீட்டில் ஹார்லிக்ஸ் பாட்டில் அவன் அம்மா எங்கே வைக்கிறார்கள் என 'துப்பறிய" ஆரம்பித்துவிட்டான். ரஜினிக்கு நெற்றி முடிகள் குறைந்து ஏர் நெற்றி ஆனதும் ஓடிப்போய் "மாரிமுத்து, எனக்கும் இந்த முன்பக்கம் ரெண்டு சைடும் சரைச்சு விடு" என கேட்டு பார்பரை மயக்கமடைய வைத்தான். சோகமாய் இருக்கும் போது வீட்டு எரவானத்தில் தொங்கும் அரிகேன் லைட்டை ஆட்டியபடி 'ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை எனக்கு"ன்னு பாடினான். சந்தோஷமாக இருக்கும் போது 'பொதுவாக என் மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்' என கர்ஜித்தான். தெய்வம் எனில் அவனுக்கு ரஜினியும், ராகவேந்திரரும் மட்டுமே.


இப்படியாக நாளுரு ரஜினியும் பொழுதொறு சினிமாவுமாக அவன் இருந்த போது தான் ரஜினியின் 100 வது படம் வந்தது. அப்போது நாங்கள் சிறு வயதில் இருந்து  டீன் ஏஜ் பருவம் வந்தாகிவிட்டது. அப்போது தான் அவனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் ஆசை வந்தது. அவனுக்கு நான் தான் எப்போதுமே ஆஸ்தான ஆலோசகர் இது போன்ற விஷயங்களுக்கு.


"மொதல்ல நாம "ரஜினியின் ராகவேந்திரா ரசிகர் மன்றம்" ஆரம்பிக்கனும். போஸ்டர் அடிக்கனும். முதல் நாள் பியர்லெஸ் தியேட்டரில் எல்லோருக்கும் சாக்லெட் தரனும்...." என நீண்ட பட்ஜட்க்கு சொல்லி கொண்டே போனான். நான் சொன்னேன்..."மன்றம் ஆரம்பிச்சா பலபேரை சேர்த்துகிட்டு போஸ்டரில் பெயர் போட்டுகிட்டு அவங்க கிட்டயும் காசு வாங்கிகிட்டா பட்ஜட் ஒத்து வரும்" என சொல்ல மோக்கு உடனே அதை செயல்படுத்த தொடங்கிவிட்டான். "இங்கு தலைவர் பதவி தவிர எல்லா பதவியும் தரப்படும்"ன்னு போர்டு போடாத குறை தான். செயலாளர் 3 ரூபாய், பொருளாளர் 2 ரூபாய், பொது ஆலோசகர், சட்ட ஆலோசகர், ஆடிட்டர், மக்கள் தொடர்பு அதிகாரி என (ஒரு கார்பரேட் கம்பனிக்கு இருக்கும் எல்லா அம்சங்களுடன்) பதவிகள் அமோக விற்பனை ஆனது. உறுப்பினர் பதவிக்கு 25 பைசா மட்டுமே என டிஸ்கவுண்ட் கொடுத்தும் அதை வாங்க ஆள் இல்லை. அதனால் செயலாளர் 5 பேர், பொருளாளர் 8 பேர் (இது உலகத்தில் அடுக்குமா?), சட்ட ஆலோசகர் மட்டுமே கிட்ட தட்ட 13 பேர். இப்படியாக மன்றத்தில் பலர் இருந்தும் போஸ்டர் அடிக்க காசு தேறவில்லை. போஸ்டர் என்பது கொஞ்சம் கொஞ்சமாக சைஸ் சுறுங்கி உள்ளங்கை அளவு போஸ்டர் ஆகிவிட்டது. (அதற்கு பெயர் நோட்டீஸ் என சொல்ல மனசு வரலை).


இன்னும் சொல்லப்போனால் அந்த சின்ன சைஸ் போஸ்டரை(?) வாங்கக்கூட காசு போதவில்லை. அப்பவும் மோக்கு சளைக்கவில்லை. அதுக்கும் ஒரு ஆளைப்பிடித்து விட்டான். ஆனால் அந்த ஆள் போட்ட கண்டிஷன் தான் ரொம்ப பெரிசு. மோக்கு தனக்காக வைத்திருந்த அந்த "விற்பனை" செய்யாத தலைவர் பதவியை கேட்டாரு. மோக்கு அடித்து பிடித்து என்னிடம் ஆலோசனைக்கு வந்த போது நான் கோவமாக அவனிடம் "பொது ஆலோசகர், சட்ட ஆலோசகர்"ன்னு ஏகப்பட்ட பேரை போட்டிருக்கியே அங்க போய் கேளு" என்றேன். அப்போது அவன் சொன்ன பதில் ....ஊஃப் இப்போது நினைத்து பார்த்தாலும் என்னால் சிரிப்பை அடக்க முடியலை.


"டேய் அவ்ங்களுக்கெல்லாம் பேச வராதுடா" என்றான். நான் பதறிப்போனேன். "என்னடா? அவங்கள்ளாம் ஊமையா? வாய் பேச வராதா?" என பாவமாக கேட்ட போது அவன் அவசரமாக குறுக்கிட்டு "வாயை கழுவுடா, இன்னும் பேச்சு வரலை. எல்லாரும் 2 நாள், 3 நாள் குழந்தைகள் தான்" என சொன்ன போது எனக்கு மூச்சே நின்றுவிட்டது.


விஷயம் இது தான். எங்கள் வீட்டுக்கு எதிரே முனிசிபாலிட்டியின் பிரசவ ஆஸ்பத்திரி. நாங்கள் எப்போதுமே அதன் வாசலில் இருக்கும் மாமரத்தில் தான் வாசம். அங்கே அப்போது ஒரு நாளைக்கு 3 பிரசவமாவது நடக்கும். எல்லாரும் கிட்ட தட்ட தெரிஞ்சவங்க தான். இவன் அங்கே குழந்தை பெத்து சாக்லெட் கொடுக்கும் அப்பன் காரன்க கிட்டே "உங்க பிள்ளைக்கு பதவி தரேன்"ன்னு சொல்லி வித்திருக்கான். இருப்பதிலேயே "சட்ட ஆலோசகர்" பதவி தான் ஒரு ரூபாய் என்பதாலும், பிறந்த உடனே தன் குழந்தைக்கு பதவி தேடி வருதேன்னு ஆசையிலும் ஒரு ரூபாய் கொடுத்து பதவி வாங்கி இருக்காங்க அந்த பெற்றோர்கள். அட தேவுடா....


ஒரு வழியாக "கௌரவ தலைவர்" என்னும் பதவியை அந்த ஆளுக்கு கொடுத்து போஸ்டர் அடிக்க கிளம்பினோம். "ட்ராப்ட்" செஞ்சது எல்லாம் நான் தான். அவன் கொடுத்த லிஸ்டில் இருக்கும் பெயர்களில் ஏகப்பட்ட பெண்கள் பெயர்கள் இருந்தன. கேட்ட போது மகளிர் அணி என்றான். ஒரு ஒரு பதவிக்கும் ஒரு ஒரு கேப்ஷன் இருக்க வேண்டும் என்று வேறு எனக்கு கண்டிஷன் போட்டான். அப்படியே எழுதியும் கொடுத்தேன்.


நோட்டீஸ் அடித்தும் வந்து விட்டது. முதல் நாள் பியர்லெஸ் சென்று சூடம் காண்பித்து தேங்காய் உடைத்து எல்லாம் முடிந்து படமும் பார்த்து விட்டு வந்தோம். தவிர அந்த நோட்டீஸ்ல் ஒரு சாக்லெட் பின் அடித்து காசு கொடுத்து பதவி வாங்கின எல்லாருக்கும் அவன் கொடுத்து வந்தான். அப்போதெல்லாம் நான் இல்லை.

அடுத்த நாள் அரக்க பரக்க ஓடிவந்தான் மோக்கு என்னிடம்.

"டேய் நீ அந்த மகளிர் அணிக்கு எழுதின கேப்ஷன்ல ஏதோ தப்பு இருக்குதாம். எல்லாரும் திட்டிகிட்டே காசை திருப்பி கேக்குறாங்கடா. நீ தான் எழுதினேன்னு சொன்னேன். உன் மேல செம கொல வெறில இருக்காங்கடா. உன்னை அழைச்சுட்டு வர சொன்னாங்க" என்றான்.


எதுனா எழுத்துப்பிழையா இருக்கும் என நினைத்து அந்த நோட்டீஸ் வாங்கி பார்த்தேன். பகீர் என ஆகிப்போச்சு எனக்கு. அதிலே "உடல் ரஜினிக்கு - உயிர் மண்ணுக்கு" என போட்டு அதன் கீழ் மகளிர் அணியினர் பெயர் இருந்தது. நான் போய் உதை வாங்க இளிச்சவாயனா என்ன?


இன்று அதல்லாம் நினைத்து பார்த்து கொண்டேன். ஏனனில் இன்று ரஜினிக்கு பிறந்த நாள்! மோக்குவிற்கு போன் செய்து வாழ்த்தினேன். டி வி டி யில் ஐந்து ரஜினி படம் பார்த்தானாம். இப்போது சென்னையில் இருக்கிறான்.



நாங்கள் சிறுவராக இருந்த போது ரஜினி ரசிகராக இருந்தோம். பின்னர் வாலிப வயசில், பின்னர் இப்போது நடுத்தர வயதில்.... அது போலவே இன்றும் ரஜினிக்கு குழந்தைகள் கூட ரசிகர்களாக ...... அவர்கள் நடுத்தர வயது ஆகும் போதும் ரசிகராக இருப்பார்கள். தலைமுறை தாண்டிய ரசிகர் கூட்டம். இது ரஜினிக்கு மட்டுமே சாத்தியம்! என் அன்பான வாழ்த்துக்கள் ரஜினிசார்!