பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 7, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - ஒரு சின்ன பார்வை!!!

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் - ஒது திமுகவுக்கு ஒரு சவாலா இல்லியா, நம்ம வெற்றி நிலவரம் என்ன? அங்க ஆளும்கட்சி அராஜக வெற்றி பெறுமா?..... இது பற்றி எல்லாம் எந்த திமுகவினரும் கவலைப்படவில்லை. வழக்கம் போல தேர்தல் கணக்குகள் கூட திமுகவினர் போட்டு பார்த்து, கூட்டி கழித்து பெருக்கி வகுத்து எல்லாம் சிரமப்படவில்லை. மாறாக இதற்கெல்லாம் மாறாக கர்ம சிரத்தையாக தத்தமது வேலையை செய்து கொண்டு இருக்கின்றனர். அங்கே திமுகவினர் பார்க்கும் தேர்தல் வேலை கொஞ்சம் வித்யாசமாய் இருக்கின்றது இந்த முறை..


அங்கே முக்குலத்தோர் ஓட்டுகள் 45 ஆயிரம் இருக்கு, அதற்கு அடுத்து தலித் மக்கள் ஓட்டுகள் ஒரு 35 ஆயிரம் இருக்கு, நாயக்கர் ஓட்டு 35 ஆயிரம் இருக்கு, நாடார் ஓட்டு 12 ஆயிரம் இருக்கு, முதலியார் ஓட்டுகள் 17 ஆயிரம் இருக்கு, இஸ்லாமியர் ஓட்டுகள் 5 ஆயிரம் இருக்கு, ஆனா முக்குலத்தோர் சசிகலா பிரிவால் ஒரு 20 ஆயிரம் பேர் அதிமுகவுக்கு போடமாட்டாங்க, பரமக்குடி துப்பாக்கி சூட்டால் அதிலே முக்கால்வாசி பேர் அதிமுகவுக்கு போட மாட்டாங்க, முதலியாரில் எல்லாரும் விசைத்தறிகாரங்க. இப்ப மின்சாரம் இல்லை அதனால் அதிமுகவுக்கு போடமாட்டாங்க, இஸ்லாமியர் எப்போதும் அதிமுகவுக்கு போடமாட்டாங்க. நாயக்கர் ஓட்டை மதிமுகவுக்கு போகாம பாதி விசயகாந்து கட்சி பிரிச்சிடும்..... இப்படியாக இப்படியாக இப்போது எந்த திமுகவினரும் வெட்டிக்கணக்கு போடவில்லை.


மாறாக அங்கே தொகுதியில் தமிழகம் முழுமைக்கும் இருக்கும் திமுகவினர், நகரகழகம், ஒன்றிய கழகம், பேரூர் கழகம் சார்பாக சாரை சாரையாக சங்கரங்கோவில் நோக்கி பயணப்பட்டு உள்ளனர். யாரும் யாரையும் துணைக்கு அழைத்துக்கொள்ளவில்லை. கும்பல் சேர்த்துக்கவில்லை. அது கேளிக்கைக்கு போய்வர கொடைக்கானல் இல்லை. வானம் பார்த்த பூமி, அங்கே பகல், இரவு என பார்க்காமல் கடும் மின்வெட்டு. பொட்டல் வெய்யில். அங்கே என்ன பொழுது போக்க இயலும். அங்கே போகும் திமுகவினர் உணர்வு பூர்வமாக போய் தனக்கான தெரு, தனக்கான வார்டு, தனக்கான பிரச்சாரக்களம் என தேர்ந்தெடுத்தோ அல்லது அவர்களின் நகர, ஒன்றிய, மாவட்ட கழகம் ஒதுக்கும் இடத்திலோ வீடா வீட்டுக்கு செல்கின்றனர்.தமிழக இன்றைய நிலையை அந்த பகுதி மக்களுக்கு ஞாபகப்படுத்துகின்றனர். தமிழக இன்றைய நிலையை விளக்கி சொல்கின்றனர்.


இத்தனைக்கும் அங்கே அதிமுகவால் தமிழக அரசின் இலவசப்பொருட்கள் (ஒ அது இப்போது "விலையில்லாப்பொருட்கள்" என ஆகிவிட்டது. அதே போல திமுக ஆட்சியில் இருந்த இரண்டு மணி நேர மின்வெட்டு என்னும் வார்தை கூட "மின்விடுமுறை" ஆகிவிட்டது... எல்லாம் புரட்சி மயம்)எல்லாம் வினியோகம் ஆகிவிட்டன. ரோடுகள் பளபளா ஆகிவிட்டது. எல்லாம் சரியான பின்னே தான் தமிழக அரசு "ரைட் ரைட்" விசில் கொடுத்து பிரவீணாபோன குமார் தேர்தல் வண்டியை எடுத்தார்.
நிலைமை இப்படி இருக்க.... இருங்க ...


இப்ப வேற ஒரு விஷயத்தையும் பார்ப்போம். உத்தரப்பிரதேசம். காங்கிரசை பொருத்தவரை உத்தரப்பிரதேசம் என்பது உத்தர சிரச்சேதம் ஆகிவிட்டது! காரணம் ராகுல் காந்தியா? இல்லை. சர்வ நிச்சயமாக ராகுல் காரணம் இல்லை. அவருடைய உழைப்பு நல்ல உழைப்பு. யாரும் மறுப்பதற்கில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அவர் டெல்லியில் இருந்த நாட்களை விட உத்தரப்பிரதேசத்தில் உழைத்த நாட்களே அதிகம் என்று கூட சொல்லலாம். மாயாவதியின் ஆட்சியின் அவலங்களை கடைக்கோடி உத்தரப்பிரதேசவாதிகள் காதில் கொண்டு சேர்த்த பெருமை ராகுல்காந்திக்கு மட்டுமே சொந்தம். மாயாவதி தனக்கு சிலை வைத்தார். மக்கள் அவர் ஆட்சிக்கு உலை வைத்து விட்டனர். ராகுல் மாயாவதிக்கு எதிராக அடித்த சிக்சர் எல்லாம் சமாஜ்வாடிப்பக்கம் திசை திரும்பி அவங்க கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்றே சொல்லலாம். ஆக அங்கே மக்கள் மாயாவதி ஆட்சியின் அவலங்களை எதிர்த்து ஓட்டளிக்க முடிவு செய்து விட்ட நிலையில், அப்படி எதிர்த்து ஓட்டு போட்டால் அதை தனக்கு சாதகமாக ஆக்க என்னவெல்லாம் செய்ய இயலுமோ அதை சமாஜ்வாடி, முலாயம்சிங் மகன் அகிலேஷ் சிங் யாதவ் என்னும் இளைஞரை வைத்து அழகாய் வாக்குகளை தள்ளிக்கொண்டு போனது. அங்கே சமாஜ்வாடிக்கு மாபெரும் வெற்றி கிட்டியது. ராகுலும், காங்கிரசும் எங்கே தப்பு நடந்தது என்ற ஆராய்சியில் இறங்கி விட்டனர். அது அவர்கள் கவலை. அது நமக்கு தேவையில்லை. அதை விடுங்கள்.


நாம் மீண்டும் இங்கே வருவோம். இங்கே தமிழகத்தில் கடந்த பத்து மாதமாக ஒரு கேடுகெட்ட ஆட்சி நடந்து வருகின்றது. சமச்சீர் கல்வி குழப்பத்தில் ஆரம்பித்து, தன் சொந்த ஈகோ காரணமாக புதிய தலைமைச்செயலகம் அலைக்கழிப்பு, அண்ணா நூலகத்தை அழித்தொழிக்க எடுத்த முயற்சி, செம்மொழி நூலகம் தரைமட்டமாக்குதல், பட்ஜெட்க்கு முன்னராக 4000 கோடிக்கு வாட் வரி விதிப்பு, அதனால் ஏறிய விலைவாசிகள், மத்திய அரசோடு இனக்க நிலையின்மை, தொடரும் மீனவர் படுகொலைகள், பால்விலை ஏற்றம் இரண்டு மடங்காக, பேருந்து கட்டணம் உயர்வு இரண்டு மடங்காக, இப்போது இந்த இடைத்தேர்தல் முடிந்தவுடன் ஏற இருக்கும் மின்சார கட்டணம்(அது அனேகமாக நான்கு மடங்கு இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாம்) மிக மிகக்கடுமையான மின்வெட்டு, தமிழகம் முழுமைக்கும் 8 முதல் 13 மணி நேர மின்வெட்டு, அதை தீர்க்க நடவடிக்கை எடுக்காமை, தொழிற்சாலைக்கு வாரம் இருநாட்கள் மின்விடுமுறை ( ஒரு நாள் அறிவிக்கப்பட்ட இன்னும் ஒரு நாள் அறிவிக்கப்படாத மின்விடுமுறை) அதனால் தொழிலாளிகள் வேலை இழப்பு, தொழில் முடக்கம், சிறு மற்றும் குறுந்தொழிலதிபர்கள் வங்கிகளுக்கு மாதத்தவணை செலுத்த இயலாத நிலை, கோவையில் அதை கண்டித்து கூடிய கூட்டம் மீது போலீஸ் தடியடி, இன்று திருப்பூர் பகுதிகளில் ஆயிரம் தொழிற்சாலைகளை பூட்டி சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க இருத்தல், தலித்துகளை சுடுதல், இருளர் இனப்பெண்கள் கற்பழிக்கப்பட்டாலும் நீதிமன்றத்தில் அவர்கள் கற்பழிக்கப்படவில்லை என அரசே பொய்சாட்சி கூறுதல், தினம் தினம் நடக்கும் வங்கிக்கொள்ளைகள், தினசரி திருட்டுகள், நூலகங்களுக்கு பல மாதங்களாக புத்தகங்கள் வாங்காமல் இருந்தல் (இது இன அழிப்புக்கான முக்கிய ஆயுதம்), இப்படி இப்படி சங்கரன் கோவில் மக்களிடம் திமுகவினர் நேரடி பிரச்சாரம் செய்து வரும் இந்த நேரத்தில்......

இங்கே ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகளை நன்றாக கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். நன்றாக கூர்ந்து கவனியுங்கள் மதிமுகவையும், அதன் வைக்கோவையும் ஓரளவுக்கு மேலாக தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டு இருப்பர். தினமலர் என்னும் பத்திரிக்கையும் ஓரளவுக்கு மேலாகவே இந்த காரியத்தை செய்து வருகின்றது.

அதாவது மாயாவதி அரசுக்கு எதிராக ராகுல் செய்த பிரச்சாரத்தின் பலனை எப்படி ராகுல்காந்திக்கு செல்ல விடாமல் மக்களிடம் "பகுஜன் சமாஜ் சரியில்லைன்னா, அடுத்து ஜெயிக்கிற கட்சி சமாஜ்வாடி தான்" என்று மக்களிடம் மனதில் பதிய வைத்த ஊடகங்கள், அதை நம்பிய மக்கள் "சரி ஜெயிக்கிற கட்சிக்கே ஓட்டுப்போட்டு இந்த மாயாவதி அரசின் மீதான வெறுப்பை காட்டலாம்" என முடிவெடுத்தது போல..... அதே போல இங்கே இப்போது நம் ஊடகங்கள் மூலமாக மதிமுக என்னும் இறந்துவிட்ட கட்சிக்கு உயிர்கொடுக்கும் வேலைகள் கனகச்சிதமாக ஆரம்பித்து செயல்பட ஆரம்பித்து விட்டன. நடுநிலைவாதிகள் தான் இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவை கையில் வைத்து இருக்கின்றனர் என்பதால் ஊடகங்கள் அவர்களை மட்டும் மதிமுக பக்கம் திசைதிருப்பி விட்டால் போதும் அதிமுகவை வெற்றிபெற வைத்துவிடலாம் என்னும் முடிவை எடுத்துவிட்டதாகவே இன்றைய ஜூவி, ரிப்போர்டர், தினமலம் வகையறாக்களை பார்த்தால் தெரிகின்றது.


ஆனால் இதை எல்லாம் அங்கே சங்கரன்கோவில் பகுதியில் பிரச்சாரம் செய்து வரும் திமுகவினர் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். அதற்கேற்ப தன் பிரச்சார வியூகங்களை அங்கே செயல்படுத்தி வருகின்றனர் என்றே அங்கிருந்து செய்திகள் வருகின்றன. மக்கள் மௌனப்புரட்சிக்கு தயாராகிவிட்டனர். நேற்று முதல் சங்கரன்கோவில் பகுதிகளில் திமுகவினரின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் அணியினரின் வேலைகள் பிரம்மிக்க வைப்பதாக அங்கிருக்கும் நமது தோழர்கள் கூறுகின்றனர். நம் கடமையை சரியாக செய்வோம். பலனையும் எதிர்பார்ப்போம்.


இன்றைய தமிழக கேடுகெட்ட அரசின் பால் விலை உயர்வு,பேருந்து, மின்கட்டண உயர்வுகள்,கடுமையான மின்வெட்டு, தொழில் முடக்கம், அதனால் தொழிலாளிகளின் வேலை முடக்கம் இவைகளுக்கு முன்னர் முக்குலத்தோர், தலித்துகள், நாயக்கர்,முதலியார், நாடார், இஸ்லாமியர், கிருத்தவர் என்னும் கணக்குவழக்குகள் காணாமல் போவது மட்டும் நிச்சயம். நிச்சயம் நல்லது நடக்கும். நடந்தால் நாட்டுக்கு நல்லது. நடக்கின்றதா என பார்ப்போம்.