பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 29, 2009

தாத்தாக்கு 100 வயசு! வந்து ஆசீர்வாதம் வாங்குங்க!!!


இது சம்மந்தமாக சஞ்சய், பரிசில்காரன், அனு எல்லாம் பதிவு போடுட்டாங்க! இருந்தாலும் சமீபத்துல ஒரு 60 வருஷம் முன்ன பிறந்த என் பிரண்டுக்கு ஒரு பதிவுன்னு வச்சுகோங்க!


தாத்தாவுக்கு முன்ன கொள்ளு பேத்தி! முத்துலெஷ்மி! என் சின்ன அக்கா மாதிரி! எப்பவும் ஒரு கோவம் கலந்த கண்டிப்பு இருக்கும் பேச்சினிலே! என் கல்லூரி ஜூனியர்(பல வருஷம் பின்னப்பா), என் பெரிய அக்காவுக்கு பிடித்தபெண்! நல்ல பேச்சாளி! ஆனா அலுக்கவே அலுக்காது! நான் என் வீட்டில் கண்மணி டீச்சர், முத்து, ராம், இம்சை அரசிஜெயந்தி, காயத்ரி, காயத்ரி அம்மா, சென்ஷி, கோபி, ஜி(யாவுதீன்) எல்லோரும் வந்த போது ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தேன்!


அட இந்த பொண்ணு என்னமா பேசுதுன்னு கொஞ்சம் ஆச்சர்யம். ஆனா அப்ப முத்துக்கு கொஞ்சம் ஈடு கொடுத்து கலாய்ச்சது டீச்சர் மட்டுமே!


நான் அப்ப அபிஅம்மா டெலிவரிக்காக 15 நாள் லீவில் போனேன். நான் போன அடுத்த நாள் தம்பி பிறந்தான். ஆனால் நான் போன அன்றைக்கே முத்து வீட்டுக்கு வந்தாச்சு! அவங்க அப்பா, அம்மா, மாதினி, சபரி கூட!


அடுத்து தம்பி பிறந்த போதும் சென்ஷி, சென்ஷி அம்மா, முத்து, அவங்கம்மா எல்லாரும் ஹாஸ்பிட்டல் வந்தாங்க. அப்ப முத்து கொடுத்த ஒரு தஞ்சை தலையாட்டி பொம்மையை பாப்பா இது வரை தம்பிகிட்ட கொடுக்கலை! ஏன்னு கேட்டதுக்கு "அப்பா தம்பிக்கு வந்த முதல் கிஃப்ட் இது! முத்து ஆண்டி கொடுத்தது, இப்ப கொடுத்தா உடைசிடுவான், அவன் பெரிய பெரிய பரிசெல்லாம் வாங்கும்போது இதை நான் கொடுப்பேன்,அப்ப சொல்லுவேன் 'இதாண்டா உனக்கு கிடைத்த முதல் பரிசு'ன்னு"


முத்துவின் அப்பா, அம்மா பத்தி சொல்லியே ஆகனும்! அம்மான்னா அம்மாதான்! சொல்வதுக்கு வார்த்தை இல்லை! அப்பா! அவர் ஒரு முனைவர் பட்டம் வாங்கிய பேராசிரியர்! மிகுந்த பண்பாளர்! இதுக்கு மேல என்னத்த சொல்ல!இப்போ ஜனவரி 11ல் முத்துவின் தாத்தா நம்ம தாத்தாவுக்கு 100 வயசாச்சு! அதுக்கு கோவைல விழா! நம்ம சஞ்சய், வடகரைவேலன் அண்ணாச்சி போயிருந்தாங்க!(பரிசில் போகலை என்பதை இங்கே கண்டிக்கறேன், ஏன்னா அதை விடுங்க தனியா பேசிப்போம்)


நாம அங்க போகாட்டியும் நமக்கு தாத்தா ஆசீர்வாதம் உண்டு! தினதந்தியிலே தாத்தா பத்தின சேதி வந்த போட்டோ போட்டிருக்கேன்! பாருங்க ஆசீர்வாதம் வாங்கிகுங்க!

January 28, 2009

வீரசேகர விலாஸ் - பாகம் 8


ரொம்ப நாள் டச் விட்டு போச்சா! சரி இதன் 7ம் பாகத்தை இங்க போய் படிச்சுட்டு வந்து இதை படிங்க
***************************
இப்போ காலை ஆறு மணி! மாமா எங்கயோ போய் காலை கடன் எல்லாம் முடிச்சு வந்தாச்சு! முகத்தில் அத்தனை ஒரு விபூதி! மாமாவின் அத்தை இருக்காங்களே(அதாவது எனக்கு அத்தை) அவங்க அத்தனை ஒரு அழகு! நிறம் வெள்ளையோ வெள்ளை! என் தாத்தா தன் குழந்தைகளை தூக்கி கொஞ்சியது இல்லையாம். ஆனா தன் தம்பியின் குழந்தை இந்த அத்தை மாத்திரம் அதுக்கு ஒரு விதிவிலக்கு!


அத்தை சத்திரத்தின் உள்ளே நுழையும் போதே அத்தனை ஒரு கடுகடுப்பு! "என்னங்க நீங்க நேத்து 2 மணிக்கே வந்துட்டிங்கலாமே" என கேட்டதுக்கு மாமா "டிக்கு"ன்னு சொல்லி சீட்டை கவுத்த போது எனக்கு சிரிப்பாய் வந்தது! அத்தை உள்ளே போயாச்சு!


மணி இப்போ காலை 8.00 ஆச்சு! இதோ இப்ப வருவது திருவிழந்தூர் மாமா!! மாமாவின் காஸ்டியூம் ஒரு வெள்ளை டெரிகாட்டன் பாம்பே டையிங் வேஷ்டி, நல்ல தும்பை பூ டெரிகாட்டன் சட்டை, அதுக்கு மேட்ச்சா தும்பை பூ வெள்ளை தலை! ஆனா முடி அத்தனை கொட்டி இருக்காது!மம்மூட்டி மாதிரி பீடி தான். ஆனா பீடிக்கு லைட்டர் வச்சிருந்தது அவங்க மட்டுமேன்னு நினைக்கிறேன்.


மாமாவுக்கு ஒரு உபரி கதை எல்லாம் சொல்லுவாங்க! மாமா தவழ்ந்து நடந்தா கால் முட்டி எல்லாம் தேஞ்சு போயிடும்ன்னு அவங்க அக்கா அதாவது நாங்க "அத்தம்மா" என்னும் சொல்லும் அத்தம்மா (மாமாவின் அக்கா, அவங்க தான் மாமாவை வளர்தாங்களாம்)வீடு முழுக்க மெத்தை போட்டாங்களாம்! அந்த ஒரு சரித்திர காரணத்துக்கவே எங்க தாத்தா அவங்க பொண்ணை கொடுத்தாங்கலாம்!(என்ன கொடுமை சரவணா)


மாமா ஒரு இடத்துக்கு வந்தா என் அப்பாவுக்கும் ஒரு பெருமை! அது போல மாமாவுக்கும் ஒரு பெருமை! மாமா இருக்கும் இடத்தில் அப்பா இருக்க மாட்டாங்க! ஆனா மாமா" என் மச்சான் நான் வந்துட்டேன்னு தெரிஞ்சா இந்த பக்கம் வர மாட்டான் அப்புடி ஒரு மரியாதை"ன்னு சொல்லுவாங்க! ஆனா அப்பா பெரிய அத்தை கிட்ட போய் என்னவாவது சண்டை போட்டுகிட்டு இருப்பாங்க!


அதை எல்லாம் விடுங்க! இதோ மாமா வந்தாச்சு! வந்த வுடன் திருவீழிமிழலை மாமா கிட்டே "வா தம்பி! வா! நாம செம்மனார்கோவில் குடும்பத்திலே வாக்க பட்டதுக்கு பதிலா பேசாம நேரு குடும்பத்திலே வாக்க பட்டிருக்கலாம், பெரோஸ் கான் , பெரோஸ் காந்தியான மாதிரி நேரு மடி நாய்குட்டியா போயிருகலாம்"ன்னு சொன்னார்!


எனக்கு அப்ப ஒண்ணும் புரியலை! அப்ப மாமா அந்த இடத்திலெ உட்காந்து தனது ராஜ்ஜியம் ஆரம்பித்தார்! அப்போ அங்க வந்த பெரிய கோவில் மேஸ்திரி யை பார்த்து என்ன "என்ன மயிலு எப்படி இருக்க" என ஆரம்பிக்க (இந்த இடத்தில் ஒரு சின்ன விஷயம், அந்த மயிலு பேர் என்னன்னு தெரியலை ஆனா ஒரு ஆளை அடிச்சுட்டு மெயில் மாதிரி பறந்துடுவாராம், பின்னே அது மெயில் மயிலு ஆகிடுச்சு) ஆகா அண்ணே! எனக்கு நல்லா தெரியும் இப்ப நீங்க சொல்ல போற விஷயம்! இந்த செவுறு எப்புடி இத்தன வழ வழன்னு இருக்குன்னு தானே! அதாவதுண்ணே, ஒரு இருப்பு சட்டியிலே ஒரு பெரிய கரண செமெண்ட் எடுத்து அதுல 40 முட்டை கலந்து"…… அதுக்குள்ள மாமா சரி சரி விடுன்னு சொல்ல அந்த இடத்தை விட்டு வந்தேன்!

ஆனா திருவிழந்தூர் மாமா தன் தனி ஆவர்தனத்தை விடவில்லை! அவருக்கு ஒரு பழக்கம். தன்னை சுத்து 5 பேர் இருந்தா தான் சொல்லுவதை சொல்லிவிட்டு தனக்கு சுத்தியும் உள்ள ஆளுங்க கிட்ட தனக்கு "தமிழ்மணத்திலே ஓட்டு போடுங்க, தங்கிலீஷ்ல ஓட்டு போடுங்க"ரேஞ்சிலே "ஆமாவா" என்பது போல தன் தலையை மேலும் கீழுமாக தனி தனியாக ஆட்டி ஓட்டு கேட்பார்!


ஆனா மாமாவின் நக்கல் உலக பிரசித்தம்! தவிர நாஸ்டர்டோம் மாதிரி எதுனா சொல்லுவார். எனக்கு அப்போதே அவர் மீது ஒரு அலாதி பிரியம். அவர் சொல்வது எல்லாம் நடக்கும் மாதிரி ஒரு பிரம்மை! நம்ம KRS மாதிரி எது எதை நாம சம்மந்த படுத்த முடியாதோ அதை எல்லாம் சம்மந்த படுத்துவார்!


அப்போ அம்மா சத்திரதுக்கு வெளியே வரும் போது திருவிழந்தூர் மாமா"இந்த சுலோச்சனா இருக்கே சுலோச்சனா, அதுக்கு ஒரு பிள்ளை ,அதுக்கு சுத்த தமிழ் பெயர் வச்சுச்சு, ஆனா பாரேன் அதோட வீட்டு பெரியவர் கூட சண்டையாம், அவரு சபிச்சுட்டாரு என் கிட்ட, அதுவும் மகனும் பின்னால வேர வேர இடத்திலே இருந்து நிர்பந்தினால "சண்டை" மாதிரி போட்டுக்க போறாங்க பாரு ரங்கா"

அம்மாவுக்கு செம கோவம் வந்துடுச்சு! "அண்ணே நீங்க என்னை தானே சொல்றீங்க, பெரியவரு செஞ்சது சரியா அவங்க இத்தன வயசிலே இத்தன சின்ன பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டது சரியா?" என் கேட்க " அட அது இல்லம்மா நான் சொன்னது "EVKசம்பத், சுலோச்சனா சம்பத், இளங்கோவன் பத்தி, ஆனா அந்த சுலோச்சனா சம்பத் வீட்டு பெரியவர் கல்யாணம் பத்தி எனக்கு தெரியாது"ன்னு சொன்னார்! அடடே எனக்கு அப்ப அதல்லாம் புரியாம போச்சே!


இந்த பரபரப்பிலே அத்தை மட்டும் கல்யாண வேலையிலே மும்மரமாக இருந்தாங்க. பாலய்யர் மஞ்சள் கயித்துல தாலியை கோர்த்து அத்தை கிட்டே கொடுக்க, பண்டரிநாதன் ரெடியா காரை ஸ்டார்ட் பண்ண அத்தை தாலியை எடுத்துகிட்டு சியாமளா கோவில் போய் கந்தன் தாத்தா பூசாரிகிட்டே சொல்லி அம்பாள் மடியிலே வச்சு எடுத்துகிட்டு வந்துட்டாங்க. இன்னும் கல்யாணத்துக்கு நேரம் இருந்துச்சு. அதுக்குள்ள டிபன் சாப்பிட பந்தி நடந்துகிட்டு இருந்துச்சு. அது வரை தாலியை ஜாக்கிரதையா வச்சுக்க ஒரு ஆளை தேடி கடைசியா "டேய் வழுவூர் சம்முகம் இங்க வாடா, நீ தான் கக்கத்த விட்டு மஞ்ச பைய எறக்க மாட்ட, இந்தா இந்த தாலிய புடி, அந்த பையிலே வைய்யி"ன்னு சொல்லி சம்முகத்து பையை இழுக்க அவர் "அய்யோ அத்த அதிலே முக்கியமான சமாச்சாரம் இருக்கு, நா சட்ட பைல வச்சுக்கறேன்"ன்னு முரண்டு பிடிக்க நம்ம திருவீழிமிழலை மாமாவுக்கு குபீர்ன்னு சிரிப்பு வந்து ஜிப்பா கொஞ்சம் சிகப்பா ஆகிடுச்சு!
தொடரும்.............

January 27, 2009

சூடான இட்லியும் அதுக்கு தொட்டுக்க ஜீனியோட கலந்த நெய்யும்

கேட்கவே உவ்வேன்னு இருக்கா! நான் அப்படித்தான் சாப்பிட்டேன் குழந்தையாய் இருந்தபோது! எல்லாரும் "விடுபட்டவை"வெங்காய தோசை" "அவியல்" என எல்லா கூட்டாஞ்சோறும் ஆக்கி விட்ட பின்னே எனக்கு எப்போதும் போல தலைப்புக்கு பஞ்சம்! சரி வாங்க இட்லி சாப்பிடுவோம்!


**************************************************

புதுகை அப்துல்லா போன் என்பது எனக்கு உடனே தெரிந்த காரணம் மோகன்கந்தசாமியின் பதிவுதான்! "அண்ணே நல்லா இருக்கீங்களா" என்றதும் புல் அரித்து போய் மோகன் கந்தசாமி பதிவிலே போய் உரசிகிட்டேன்! தம்பி நல்லாதான் பேசுது!அவரு ராப் தங்கச்சியையே அண்ணான்னு கூப்பிட்டவராச்சே!ராப்பும் பதிலுக்கு "அப்து தங்கச்சீ'ன்னு கூப்பிட்ட கதை எல்லாம் இருக்கே:-)) அமரிக்க பொருளாதாரம் முதல் அமிஞ்சிகரை பொட்டிகடை வரை அழகா பேசுச்சு அப்து தம்பி! நானும் எனக்கும் அதல்லாம் தெரியும் ரேஞ்சுல ஏதேதோ பேசினேன்! என் தம்பி அப்துவை நான் இந்த தடவை பார்க்க முடியாமல் ஏதோ சதி நடந்து விட்டது! ஆனாலும் ஆசீப் அண்ணாச்சி ஏன் பதிவு போடவில்லை என அவர் கேட்ட கேள்வியை அவர் கேட்ட போது அவருக்கு மலசிக்கல் என சிக்கலில்லாமல் ஒரு பதிலை சொன்னேன்!ஏன்னா அவர் தான் ஒரு தடவை சொன்னார் "அண்ணாச்சி காலைகடன் கழிப்பது போல பதிவிடுவது" என! போகட்டும் அட்லீஸ்ட் ஆயில்யனுக்கு அந்த சிக்கல் வராம இருக்க வண்டிகார தெரு மாரியம்மனுக்கு வேண்டிக்கறேன்!

********************************************

சொந்தழல் ரவியின் "தொங்கபாலு" பதிவு நல்லா இருந்துச்சு!ஆனா டோண்டு -ரவி சண்டை இந்த வாரம் அத்தனை சூடு இல்லை! கொஞ்சம் கூட ரத்தம் இல்லா சண்டை ஒரு சண்டையா:-))

*******************************************
\
மிஸஸ். டவுட் இப்போ நல்ல நல்ல பதிவா போட்டு தாக்கிட்டு இருக்காங்க! ஒரு ரவுண்டு வருவாங்கன்னு நெனைக்கிறேன்! புது ஆளுங்களுக்கு பின்னூட்டம் போட்டு ஆதரவு தரும் துளசி ரீச்சர் வாழ்க! ரீச்சரின் கேக் பதிவுக்கு நான் பின்னூட்டம் போட போகும் போது ஒரே கூட்டம்!புது படம் எதுவுமே சரியில்லைன்னா மாயவரம் விஜயாவில் வசந்த மாளிகை போடுவாங்க. அப்ப ஒரு கூட்டம் இருக்குமே தியேட்டர் வாசல்ல அது மாதிரி ஒரு கூட்டம். அதான் ஓடியாந்துட்டேன். சிடி யிலே பார்த்துகலாம்ன்னு(அதான் ரீடர்ல படிச்சுக்கலாம்ன்னு) ஆனா ரீச்சர் நமக்கு வாழைப்ப்பழம்னா கொஞ்சம் அலர்ஜி!

*****************************************

வலைச்சரம் பத்தி சொல்லியே ஆகனும்! அதிரை ஜமால்! முதல் பதிவிலேயே நூத்துக்கும் மேல பின்னூட்டம்!நாங்கல்லாம் அந்த காலத்துல 100 பின்னூட்டம் வாங்க பழனிக்கு மொட்டை போடுவோம்ன்னு சொன்னா "ஏன்யா ரகசியத்தை சொல்றே"ன்னு கொத்தனார் திட்டி பின்னூட்டம் போட்டாலும் போடுவார் என்பதால் இந்த விஷயம் பத்தி சொல்லலை!விடுங்க அதல்லாம் அந்த காலம்:-))


\*************************************************

கோவியார் இப்போ சென்னையிலே! எனக்கு பயமே அதான்! "நீங்க தான் என் போட்டோவிலே என் முன்னாடி இருக்கீங்க"ன்னு அவர் போய் அந்தம்மாகிட்ட ஜொள் வடிக்க கூடாது என் அப்பன் முருகா!

********************************************
முருகனை அப்பன்னு சொன்னா உடனே உண்மை தமிழன் மனசிலே வர்ராரு!
உண்மை தமிழா! உனக்கு ஒரு சேதி!நீ என்ன தான் சின்ன புள்ளியா ஒரு பதிவா இன்னும் 100 வாரம் போட்டாலும் பெரிய பதிவர்ன்னு(பெரிய பதிவா போடுவதால்) உன் பேர் ரிஜிஸ்டர் ஆகிடுச்சுப்பா! நீ பெரிய பதிவா தான் போடுவேன்னு!!ஒரு விஷயம் சொல்லவா! நீ எனக்கு கொடுத்த 10 பாகம் "அர்த்தமுள்ள இந்துமதம்" படிக்கும் முன்னமே அதுக்கு அடுத்த நாள் ஒரு பிரபல பதிவர் வீட்டுக்கு சென்றேன்! மஞ்சை வசந்தன் எழுதிய "அர்த்தமற்ற இந்துமதம்" என்னும் புத்தகம் அதாவது அதுக்கு எதிர்வினை பதிவு புத்தகம் பரிசாக கிடைத்தது! என்னே அப்பன் முருகன் திருவிளையாடல்! ஆனால் இரண்டும் படித்தேன்! இப்போ போன போது!நானும் அபியும் குத்துகால் இட்டு அபிஅம்மாவின் பில்டர் காபி குடித்து கொண்டே படித்தோம்!புத்தகம் படிக்கும் பழக்கம் அபிக்கு வந்துவிட்டது! அண்ணா நூற்றாண்டு விழா சலுகை விலை 500 ரூபாய் க்கு அத்தனை புத்தகத்தையும் வாங்கி கொடுத்தாகி விட்டது! அடுத்த அடுத்ததை என் தம்பி முத்துகுமார் வாங்கி அனுப்ப சொல்லியாகிவிட்டது! அனேகமாக அடுத்த வருடம் முதல் அவள் தானாக டைப்பி பதிவு போடுவாள் என நினைக்கிறேன்! மயிலாடுதுறை சென்று நம் வீட்டில் தங்கி நவகிரகத்தையும் பார்த்து ஒரு அக்ரிமெண்ட் போட்டு விட்டு குறும்படமா இல்லாம பெரும் படமா எடுத்து நாங்க எல்லாரும் ஓசி டிக்கெட் எடுத்து கடைசி வரிசையிலே உக்காந்து பார்க்கனும் என அம்மா பச்ச காத்தாயியை வேண்டிகறேன்! ஆனா அது பழைய பாகவதர் படம் மாதிரி 30 ரீலா இருக்க கூடாதுன்னும் பச்சகாத்தாயி கோவிலில் இருக்கும் வாழ்முனீஸ் அய்யாகிட்டேயும் ஒரு தனி வேண்டுதல்!


*******************************************

January 22, 2009

அம்மாவின் கால் அசைப்பு!!!

இதுக்கும் அதுக்கு எந்த சம்பந்தமும் இருக்கா?

அம்மா என்னும் அழகி!!!
அம்மா!!! என் அம்மாவை பற்றிய கர்வம் எனக்கு கொஞ்சம் அதிகம் தான். நான் அழகின் மதிப்பீட்டாய் அம்மாவைதான் வைத்திருக்கிறேன். இவங்க அம்மாவை விட அழகா என்ன? ச்சே அப்படி எல்லாம் இல்லை. என் அம்மா தான் அழகு என்றே யாரையும் பற்றி நினைத்து கொள்வேன். அது போல அம்மாவின் ஆளுமைதன்மையும் என்னை பிரமிக்க வைக்கும். தான் நினைத்ததை சாதிக்கும் அம்மாவின் குணம் எனக்கு வியப்பை தரும்.அம்மாவின் உடை உடுத்தும் நேர்த்தியும் என்னை கவரும்.

அம்மாவின் அறிவு என்னை ஆச்சர்யத்தை கொடுக்கும். அம்மாவின் கண்டிப்பு எனக்கு ஆத்திரம் கொடுக்கும். ஆனாலும் அது பிடிக்கும். அம்மா என் தொடையை திருகிய போதெல்லாம் 'கொடூரி' என நினைத்து கொள்வேன். அப்படி அப்போது செய்திருக்காவிடில் நான் இப்போது கொடூரனாய் ஆகியிருப்பேன். அம்மாவின் பிடிவாதம் எனக்கு பிடிக்கும். அது போல விட்டுகொடுத்தலும் பிடிக்கும்.பெரிய ஒரு ரூபாய் நாணய பொட்டும், கத்தரிப்பூ வண்ண பட்டு புடவையும், காதில் ஆடும் ஜிமிக்கியும்,முத்து வைத்த கொலுசும், சடை பின்னியிருந்தால் அதில் குஞ்சமும், பின்னியிருக்காவிடில் பன் கொண்டையும், முழங்கை வரையிலான ஜாக்கெட்டும், மஞ்சள் பூசிய முகமும், ரெமி பவுடர் வாசனையும், அக்குள் வியர்வையில் நனைந்த ஜாக்கெட்டும், அழுத்தி நடந்தால் கேட்கும் மெட்டிஒலியும், இடுப்பிலே குண்டாக என் தம்பியும்,தலையில் தொங்கவிட்ட சந்தனமுல்லையும், பன் கொண்டை போட்டால் அதை சுற்றி கனகாம்பரமும்....அப்படியே அம்மா கையை பிடித்து கொண்டு உலகையே சுற்றி வரலாம் என நினைக்கும் மனது.

அம்மாவின் ஞாபக சக்தி அம்மாவிம் வரம். அம்மா படித்தது என்னவோ ஐந்தாம் வகுப்பு வரைதான். ஆனால் லெஷ்மிமுதல், சிவசங்கரி வரை அத்துப்படி. ஐந்து மணிக்கு என்னை எழுப்பி படிக்க சொன்ன போது ஆனந்து மாதிரி எனக்கும் அம்மா இல்லையெனில் நன்றாக இருந்திருக்குமே என அசிங்கமாக நினைத்ததுண்டு. போர்வையை போர்த்தி உட்காந்து கொண்டு ஏதோ அய்யர் மந்திரம் ஓதுவது போல் தூக்கத்தில் படித்தால் வார்த்தை தனக்கும் புரியவேண்டும் என தலயில் அம்மா தண்ணி ஊத்திய போது தாயின் காலடியே நரகம் என நான் தவறாய் நினைத்ததுண்டு. முதல் நாள் படித்து மனப்பாடம் செய்ததை அடுத்த நாளும் படித்தால் தூங்கி கொண்டிருக்கும் அம்மாவுக்கு தெரிந்துவிடும். ஐந்தாம் வகுப்பு படித்த அம்மாவுக்கும் குவாண்டம் தியரிக்கும் போன ஜென்ம உறவு போலிருக்கு என நினைத்து கொள்வேன்.

அம்மாவின் சமையல் போல இனி இந்த ஜென்மத்தில் எங்கும் நான் சாப்பிடபோவதில்லை. அப்பா சாப்பிடும் போது மட்டும் பக்கத்தில் இருந்து பரிமாறும் அம்மா பார்க்கவே அழகாய் இருக்கும். அப்பா மோர் சாதம் சாப்பிடும் போது கையில் உருண்டையில் கட்டை விரலால் சின்ன குழி செய்து அதில் அம்மா கொஞ்சமாய் குழம்பு ஊத்தும் போது எனக்கும் அப்படி அம்மா செய்யாதா என ஏங்கியது உண்டு. அம்மா என்னை கொஞ்சியதாக ஞாபகம் இல்லை. அம்மாவின் கண்டிப்புகளே ஞாபகத்தில் இருக்கின்றன.

முதன் முதலாக அம்மா அப்பாவிடம் "விகடன் படிக்க முடியவில்லை. கண்ணாடி போடனும் போல இருக்கு" என சொல்லிய போது நான் கொஞ்சம் ப்யத்துடன் வெட்கப்பட்டேன். ஓ அம்மாவுக்கும் வயசாகுமோ? அப்போதும் அம்மா அழகாய் தான் இருந்தது. பின்பு நெற்றி ஓர நரை விழுந்தது அம்மாவுக்கு. அப்பாவின் மீசைக்கான கருப்பு மை பென்சிலால் அல்லது கண்மையினால் அம்மா அதை மறைத்து கொண்ட போது கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.பெரியக்கா வயதுக்கு வந்த போது அம்மா அழுதது ஞாபகம் இருக்கு. ஆனால் அப்போது காரணம் தெரியவில்லை. எதற்குமே நீ கவலைப்பட மாட்டாயே அப்போது ஏன் அழுதாய் என இப்போது புரிகின்றது. பொறுப்பு சுமை அதிகமான கவலை போலிருக்கு அப்போது உனக்கு. கொஞ்ச நேரம் தான் பின்னே அதன் பின்னே அம்மா எப்போதுமே எதற்குமே கலங்கியது இல்லை.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே அம்மாவிடம் சண்டையிட்டு 27 பக்க கடிதம் எழுதி வீட்டின் வாசலில் தபால் பெட்டியில் போட்டு அடுத்த நாள் "சார் போஸ்ட்" என கூவிய தபால்காரரிடம் இருந்து நான் வாங்காமல் "மேடம் உங்களுக்கு தான்"" என உன்னிடம் சொல்லி அடுக்களை வேலையாக இருந்த அம்மாவை விட்டு வாங்க சொல்லி அதை வாங்கிய அம்மா 1 வாரம் அதை பிரிக்காமல் என்னை சித்ரவதை செய்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அதன் பிறகு நானும் அதை மறந்து விட்டேன். அதன் பின் பல வருஷம் கழித்து எனக்கு திருமணம் எல்லாம் ஆன பின்பு ஒரு நாள் அம்மாவின் பெட்டியை குடைந்த போது அந்த கடிதம் கண்டேன். அப்போது அம்மா சொன்னது "உன் கடிதத்தை படித்து பார்" என்று. படித்த எனக்கு சிரிப்பையும் கண்னீரையும் அடக்க முடியவில்லை. "இன்னுமா இதை வைத்திருக்கிறாய்" என கேட்ட போது சொன்னது"எனக்குன்னு தனியா ஏது சொத்து. இதல்லாம் தான்"என்றது. அதிலே நான் எழுதி இருந்தது எல்லாமே வாழ்த்துப்பா இல்லை. என் அதிக பட்ச கோவத்தை காட்ட எண்ணி "**" என என் தேள் கொடுக்கால் கொட்டியிருந்தேன். அது அம்மாவுக்கு சொத்தாம். நான் என்ன சொல்ல இதற்கு மேல்!

அம்மா கூடவே இருந்த போது அதன் அருமை தெரியாமலே போய் விட்டது. ஆனால் முதன் முதலாய் அம்மாவை விட்டு அபுதாபி வந்த போது வந்த முதல் நாள் போன் செய்த போது அம்மா "எப்புடுடீ இருக்க??" என கேட்ட போது உடைந்து அழுதேன். இத்தனை வருஷம் கூடவே இருந்தேனே அப்போது ஒரே ஒரு தடவை இப்படி கொஞ்சலாக கேட்டிருந்தால் நான் உன் காலையே சுற்றி வந்திருப்பேனே என தோன்றியது. அம்மாவை நான் அப்போது தான் முதன் முதலாக நேசிக்க தொடங்கினேன் என நினைக்கிறேன்.

அப்போது தான் அம்மாவின் உருவத்தை மனதில் நினைத்து பார்த்து கொண்டேன். நான் நினைவு தெரிந்து பார்த்த அம்மாவுக்கும் அப்போது இருந்த அம்மாவுக்கும் நிறைய வித்யாசம் இருந்தது. ஆனால் அம்மாவை நினைத்தாலே வருமே ஒரு அம்மா வாசனை அது மட்டும் மாறவேயில்லை. அந்த வாசனையை எப்படி சொல்வது, ஒரு மாதிரியாக மஞ்சள் வாசனை மாதிரி, ஒரு வித குங்கும வாசனை மாதிரி அதை வர்ணிக்க முடியவில்லை எனக்கு. நான் அபுதாபி வரும் முன் என் கையை பிடித்து கொண்டது அம்மா. அது என்ன அந்த கைக்கு மட்டும் அப்படி ஒரு பொச பொசப்பு. அப்படியே ஃபிரிட்ஜில் வைத்த வாழை தண்டு மாதிரி ஒரு ஜில் அம்மா கையிலே இருந்தது.அதுவரை அம்மாவின் ஸ்பரிசம் என்னை அடிக்க மட்டுமேயாக இருந்தமையால் அப்போது அந்த மென்மை புரியவில்லை எனக்கு. ஆனால் "என்னை விட்டு வெகுதூரம் போகிறாயா"என அம்மா மனதில் நினைத்து கொண்டே என்னை ஸ்பரிசித்தது அம்மாவின் மென்மையை உணர வைத்தது. புகைவண்டி நிலையத்தில் அம்மா பேசவேயில்லை. இலவச அறிவுரை ஏதும் சொல்லவில்லை. மெதுவாக கேட்டது, "தம்பி ரொம்ப தூரம் போற .....அப்பாவுக்கு எதுவும்ன்னா ஒடனே வருவியா?"...எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது அம்மா அப்படி கேட்ட போது.அப்பா அப்போது ((இப்போதும் தான்) ஒன்றும் சுகவீனமாக இல்லை. நன்றாகவே இருந்தார்கள்.

நான் கேட்டேன் அம்மாவிடம் "ஏம்மா உனக்கு எதுனா ஆச்சுன்னா வர வேண்டாமா?"அம்மாவின் பதில் என் மனதை பிழிந்தது. "ப்ச் எங்கடா, நான் உன்னை ரொம்ப அடிச்சுட்டேன் சின்ன பிள்ளையிலே இருந்து, தவிர உனக்கு எப்பவும் ஒரு கோவம் என்கிட்டே இருக்கும் உன்னைவிட நான் தம்பி மேல பாசமா இருப்பதா நீயே ஒரு கற்பனை பண்ணிகிட்டே...எனக்கு எல்லாரும் ஒன்னுதான்....நான் செத்தா ஒழிஞ்சாடா ராட்சசின்னு நெனச்சிப்பியோ என்னவோ...தவிர தனியா சம்பாதிச்சு பெரிய மனுஷனா ஆக போற...இந்த அம்மால்லாம் கண்ண்ணுக்கு தெரியுமோ என்னவோ" அம்மா பேசியதை நினைத்து அபுதாபிக்கு வந்து அம்மாவிடம் பேசி உடைந்த பின் தனியாக உட்காந்து இதையெல்லாம் யோசித்து மீண்டும் உடைந்தேன்.

என் வெளிநாட்டு வாழ்க்கையில் அந்த முதல் ஒரு வருடத்தில் அம்மா ஏக்கம் எனக்கு நாளுக்கு நாள் அதிகமானது என்றே சொல்ல வேண்டும். முதன் முறை லீவுக்கு வந்த போது விமான நிலையத்தில் அம்மாவை தேடினேன். காரணம் வர சொல்லியிருந்தேன். அப்பா மட்டுமே வந்திருந்தார்கள். அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்று காரணம் கூறப்பட்டது. சென்னையிலிருந்து என் ஊருக்கு 7 மனி நேர பஸ் பயணம். எனக்கு அந்த 7 மணி நேரமும் நரகமாக இருந்தது. என் ஊரை நெருங்க நெருங்க இறங்கி பேருந்தை முந்தி கொண்டு ஓடலாமா என்றிருந்தது.முடிவாய் வந்து சேர்ந்த போது அம்மா திண்ணையிலேயே படுத்து இருந்தது. என்னை கூப்பிட அப்பா சென்னைக்கு வரும் போதிலிருந்து அம்மா திண்னையிலேயே தான் இருந்திருக்கிறது.

எனக்கு முதன் முதலாக அம்மாவை பார்த்து வெட்கம் வந்தது. இது எனக்கு முதல் அனுபவம். ஏன் அப்படி வெட்கம் வந்தது என எனக்கு அப்போது புரியாவிடினும் பின்னர் புரிந்தது. நான் இப்போதும் ஊருக்கு போகும் போதெல்லாம் என் மகள் என்னிடம் வர 1 மணி நேரமாவது ஆகும். நான் கொண்டு செல்லும் அவளுக்கான பொருட்களை வேறு யாருக்காவது கொடுத்துவிடுவேன் என்ற்றெல்லாம் சொல்லி பின்னரே என்னிடம் வருவாள். இதே நிகழ்வுதான் எனக்கு அப்போது நடந்தது. என்ன தான் வயதானாலும் தாய்க்கு மகன் குழந்தை தானே!அம்மா நான் ஊருக்கு போகும் போது இருந்த மாதிரி இல்லை. மிகவும் வயதான தோற்றத்துடன் எண்ணெய் இல்லா நரை முடியோடும், கடைவாய் பல் விழுந்தும், தோல் சுருங்கியும் இருந்தது.ஒரு வருட இடைவெளி இப்படியா புரட்டி போடும். ராகுகாலம் முடியும் வரை வீட்டின் உள்ளே போகவேண்ண்டாம் திண்ணையிலேயே இருப்போம் என்றது. அதன் குரலும் முன்பு போல இல்லை. படுத்துக்கோ என்றது. தலையை தூக்கி மடியில் வைத்து கொண்டது. தலைமுடி கோதிவிட்டது. எதுனா சாப்பிடுறியா என்றது. அம்மா உடலளவில் மாறி போயிருந்தாலும் அம்மாவின் வாசனை அப்படியே இருந்தது. அதன் சுங்கடி புடவை வழ வழவென இருந்தது. தைல பாட்டில் எடுத்து வந்தியா என கேட்டது. எனக்கு பெண் பார்க்க வேண்டும் என்றது. எனக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தது!!அதன் பொக்கை வாய் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது!!! அம்மா நீ எப்பவும் அழகும்மா!!! அடிக்கடி சீமாச்சு அண்ணன் சொல்லுவார் "அம்மான்னா அழகுடா"ன்னு அது சரி தான் அம்மா!!!

January 21, 2009

மாநக்கல் சிபிக்கு கண்டனம் செய்த தம்பி சென்ஷிக்கு ஒரு ஷொட்டு!!!

டிசம்பர் வந்தா சென்னையிலே மாத்திரம் தான் எப்பவும் கர்நாடக காய்சல் அடிக்கும். ஆனா ஜனவரி வந்தா உலகம் முழுக்க எங்க தல "பாலபாரதி" பிறந்த நாள் சூராவளி அடிக்க ஆரம்பித்து விடும். அதுவும் இந்த தடவை தலயின் தல பிறந்த நாள் வேற. சும்மா விட்டுடுவோமா!

ஒபாமாவின் பதவியேற்புக்கு கவுண்டவுன் செஞ்ச பாசிச கூட்டத்தை எல்லாம் பின்னுக்கு தள்ளி எங்கள் பாகச கூட்டம் தல பாலபாரதி பிறந்த நாள் கவுண்டவுன் செஞ்சுகிட்டு இருப்பதை பார்த்து ஒமாமாவே நெம்ப வருத்தப்பட்டு பாகச அகில உலக மகளிர் அணி தலைவி பொன்ஸ்க்கு போன் போட்டு அழுததாக பீப்பீசி செய்தி பிலாச் நியூச் சொல்லிகிட்டு இருக்குதாம்.

அதுவும் இந்த தடவை தலயின் செய்தி தொடர்பாளர் நாமக்கல் சிபியின் அறிவிப்பு எங்களுக்கு புது உற்சாகத்தையும் எங்கள் தல க்கு புது ரத்தம் பாய்ச்சுவதாகவும்ம் அமைந்தது.(பின்னே, இந்த தடவை தல மரம் செடி கொடி முதல் துளசி ரீச்சரின் பூனை முதல் பொன்ஸின் யானை வரை ரத்த தானம் செய்ய போகிறார்ல்ல)

சிபியின் அறிக்கை: தல பாலாபாரதி அவர்களின் ஜனவரி 24 பிறந்த நாளை முன்னிட்டு ஆங்காங்கே உலகம் முழுமையும் பாகச கிளை கழகங்கள் புது உறுப்பினர்சேர்க்க வேண்டும் எனவும், புதிதாய் சேர்ந்த உறுப்பினர்கள் அணைவருக்கும் தல ஆளுக்கு 5 பவுன் தங்க சங்கிலி பரிசாக கொடுத்து, வழக்கம் போல உறுப்பினர் அட்டையில் தன் ரத்த கையெழுத்தை ஒரு தடவைக்கு இருபத்திஏழு தடவையாக போட்டு தருவார் எனவும், தவிர ஒரு வருடத்துக்கான சந்தா தொகையான 500 ரூபாயை பின் தேதியிட்ட காசோலையாக அடுத்த பிறந்த நாள் வரை 12 மாதங்களுக்கு புது உறுப்பினர்களுக்கு வழங்குவார் எனவும் கேட்டு கொள்ள படுகின்றது!

சிபியின் இந்த அறிக்கைக்கு பின்னே உலக பாகச கிளை கழக தலைவர்கள் பலரும் பலவித ஆலோசனை அதாவது "பாலபாரதி விருது" உட்பட சொல்ல எல்லாம் எல்லோராலும் ஒரு மனதாக ஒத்து கொள்ளப்பட்டது.

அது சம்மந்தமாக நடந்த கிடேசன் பார்க் கூட்டத்தில் அபிஅப்பா "தல பாலபாரதியின் சொந்த செலவிலே கிடேசன் பார்க் கொண்டு வருவது எனவும் அமரிக்க பொருளாதார வீழ்ச்சியால் வாடி போன கிடேசன் பார்க் மரம் செடி கொடி உட்பட போனது வந்ததூக்கு எல்லாம் தலயை விட்டு ரத்த தானம் செய்வது என்றும் அதிகமாக ரத்தம் குடிக்கும் ஜீவனுக்கு தல தலைகீழாக நின்னு "பாலபாரதி விருது" வழங்குவார்" எனவும் தீர்மானம் நிறை வேற்ற அதன் தொடர்சியாக பா.க.ச உலக கிளை கழகங்களின் அறிக்கை போர் பின்னே காங்கிரஸ் கட்சி கூட்டம் மாதிரி ஆகி போய் சென்ஷி டவுசரை கிழிக்கும் அளவு போனது ஒரு தனிகதை. அதை கீழே பார்க்கவும்!

\\அண்ணன் மாநக்கல் சிபிக்கு கடும் எச்சரிக்கை!சங்கத்தில் புது ரத்தம் பாய்ச்சப்பட்டதாக மூத்த உறுப்பினர்கள் அறிக்கை கொடுத்தும் இதுவரை ஷார்ஜாவிற்கு 10 லிட்டர் ரத்தம் கூட அனுப்ப முடியாததன் மர்மம் என்ன.. சங்கத்திலும் ஊழலா... இந்த கண்டனம் படித்த உடனே அமீரக பாகச தொண்டர்களுக்கு ரத்தம் கிடைக்கவில்லை என்றால் கடத்துவோம். தலயை ஆசிப் அண்ணாச்சியை வைத்தே கடத்துவோம்.

இப்படிக்கு
சென்ஷி
பா.க.ச ஷார்ஜா கிளை கழகம்\\

சென்ஷியின் இந்த கடும் கோவத்துக்கு பின் நந்து பாதர் ஆப் நிலாவின் அறிக்கை கீழே!

\\ரத்தம் குடிப்பது எப்படின்னு இந்த படத்தில் இருப்பது மாதிரி பாலா செஞ்சு காட்டுவார்.
http://www.flickr.com/photos/mkguru123/510785325/
சரிதானே அபிஅப்பா?
(படம்-நன்றி திரு.ஒப்பாரி)
நந்து \\

இது போதாதுன்னு சும்மா இருக்குமா கோவை கிளை கழகம், கிளம்பிட்டாரு வடகரை வேலன் அண்ணாச்சி!

\\இதை நான் கடுமையாக, உரக்க ஆட்சேபிக்கிறேன்.
கோவைக் கிளைக்கே இன்னும் ரத்தம் வரவில்லை. ஞாயிற்றுகிழமை ரத்தப் பொறியல் கூட காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம்.
எனவே உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்தபின்பே வெளிநாடு வாழ் உறுப்பினர்களைக் கணக்கில் எடுக்கவேண்டும் என்று முன்மொழிகிறேன்.
மறுத்தால். ரத்தப் பொறியல் அணைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டு செலவுகள் சென்ஷியின் கணக்கில் ஏற்றப்படும் என்பதை ஆணித்தரமாக அறைகூவல் விடுக்கிறோம்.
வடகரை வேலன்\\
இப்படியாக தல பாலபாரதியின் பிறந்த நாள் கொண்டாட்ட கவுண்டவுன் ராக்கெட் வேகத்தில் போய் கொண்டிருக்கு மக்கா!

உபரி செய்தி!

ஒபாமாவின் பதவி ஏற்பு விழா ஏரோப்பிளேன் வேகத்திலும், தல பிறந்த நாள் கவுண்டவுன் ராக்கெட் வேகத்திலும் செல்வது அறிந்த ஒபாமா தலயிடம் கேட்ட கேள்வி!

"தல என் கவுண்டவுன் மாத்திரம் ஏரோப்பிளேன் வேகத்திலே மணிக்கு 300 கி.மீ வேகத்துல போகுது, ஆனா உங்க கவுண்டவுன் மாத்திரம் எப்படி தல ராக்கெட் மாதிரி மணிக்கு 1000 கி.மீ வேகத்துல போகுது"

அதுக்கு தல ஒபாமாவிடம் " நல்லா வருதுய்யா வாயில ராக்கெட்டுக்கு "அந்த" இடத்தில நெருப்பு வைப்பாங்க தெரியுமா? அது போல உனக்கும் வச்சா நீயும் 1000 கிமீஇ வேகத்துல போவய்யா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

பா.க.ச ஆளுங்க நல்லா வச்சாங்கய்யா நெருப்ப!!!

January 18, 2009

அபியும் நானும்!!!

நேத்து ஒரு கிளிப்பிங்ஸ் பார்த்தேன் 'அபியும் நானும்" படத்தில் இருந்து! உடனே கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சுட்டேன்!


அப்போ நான் ஒரு அபார்ட்மெண்ட்ல இருந்தேன் மாயவரத்திலே! அந்த இரண்டாவது மாடியில் 12 பிளாட். கிட்ட தட்ட 8 வீடுகள் எல்லாம் டாக்டர்கள். அபிக்கு அப்ப்போ 2 வயது. ஒரு நல்ல ஞாயிறு கால 8 மணிக்கு நான் ஜாலியா தூங்கிகிட்டு இருந்த போது தான் அபி அழும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் பார்த்த போது என் மனைவி விக்கித்து போய் நிற்க அபி அழுது கொண்டே "அப்பா வென்னீர் ஊத்திடுச்சு"ன்னு சொன்ன போது அதிர்ந்து போய்விட்டேன்.

அப்படியே என் மனைவியை அடிக்கலாமா என தோன்றியது. வந்த கோபத்தை அடக்கி கொண்டு பாப்பாவை தூக்கிகிட்டு பிளாட்க்கு வெளியே ஓடி வந்தேன். பக்கத்து வீட்டு பெண், பெயர் சித்ரா! காலேஜ்ல படித்து கொண்டிருந்தா அப்போ!

"அண்ணா என்னாச்சி?"

"உன் அண்ணி நல்லா வென்னீர் கொதிக்க வச்சு அபி மேல ஊத்திட்டா"(பாருங்க என் கற்பனையை)

அதுக்குள்ள டாக்டர் ரமா வந்தாச்சு வெளியே! அபியை தூக்கிட்டு வீட்டுக்கு போய் என்ன என்னவோ செஞ்சாங்க! ஆனா அதுவரை அந்த "அரக்கி" வெளியே வரலைன்னு எனக்கு கோவம்!

டாக்டர் ரமா பாப்பாவை தூக்கிகிட்டு அடுத்த பிளாட்ல இருந்த டாக்டர் செல்வம் கிட்ட தூக்கிட்டு போக அவங்க மிசஸ் "டாக்டர் இப்பதான் வந்து ஒரு ஆபரேஷன் முடிச்சுட்டு தூங்குறாங்க" என சொல்வதை பொருட்படுத்தாம அவங்களை தள்ளிட்டு உள்ளே போக என் குருதி அழுத்தம் இன்னும் அதிகமாச்சு!

ஏன்னா செல்வம் டாக்டர் வீட்டிலே மட்டும் தான் ஏசி இருந்துச்சு அப்போ!

மெதுவா அப்போ வந்து அந்த சித்ரா சொன்னா என் காதிலே "அண்ணா சீன் கிரியேட் பண்ணாத! வென்னீர் கொட்டினது அண்ணிக்குதான்"

அப்படியே உறைந்து போனேன்!

அந்த பெண், இப்போது ஒரு பிரபல ஒளிப்பதிவர் R.D.ராஜசேகர் அவர்களின் மனைவி!

January 14, 2009

கேட்டாளே ஒரு கேள்வி நம்ம அபிபாப்பா!!!


எப்போதும் போல இந்த புது வருஷத்திலே ச்சேட்டிகிட்டு இருந்தேன்! அப்போ தேவ் வந்தார்! என்னங்க இப்ப போட்ட பதிவு எப்படி இருக்குன்னு கேட்டேன். அதுக்கு அவரு "யோவ்! வாழ்த்துக்கள்! ஆனந்த விகடனில் வந்துட்ட"ன்னு சொன்ன போது கொஞ்சம் கிரக்கமாகவும் அதை வெளியே அவர்கிட்ட காமிச்சிகிட்டா அசிங்கமோன்னு நெனச்சுகிட்டே வேற விஷயம் எல்லாம் பேசிகிட்டே "ஆமா ஆ.வி ல என்னா வந்துச்து"ன்னு கேட்டு கிட்டே ஊருக்கு போன் பண்ணினேன்.


எடுத்தது அபி தான்! "ஒண்ணும் இல்லைடா எப்போதும் போல (!) என்னை பத்தி ஆ.வி ல போட்டிருக்காங்கலாம்"ன்னு சொல்லி முடிக்கலை! அவ ஓடிட்டா!


பின்ன என் தங்கமணிகிட்ட பேசிட்டு வச்சுட்டேன். பின்ன தேவ் கிட்ட கேட்டேன், அது உண்மையான்னு! பொதுவா வ.வா.சங்கத்துல இருக்கும் சிங்கம் எதுவுமே பொய் சொல்லாது(ஆஹா இது என்ன புதுமையா இருக்கு)ன்னு நெனச்சு கிட்டே ஆன்லைன்ல இருந்த ஆயில்யன் கிட்டே கேக்கலாம்னு இருந்தேன்.


அதுக்குள்ளே வடகரை வேலன் அண்ணாச்சி "நீங்க ஆ.வி யிலே வந்திருக்கீங்க"ன்னு ஒரு பின்னூட்டம் போட நான் அப்படியே மிதந்தேன்.
ஆயில்யனும் அதை உருதி படுத்த அப்போது ஒரு போன். என் வீட்டில் இருந்து தான்!


அபிபாப்பா தான்.


"அப்பா"


"என்னடா"


"ஆமப்பா! நீங்க ஆனந்த விகடன்ல வந்துட்டீங்க"


"அட நீ பாத்தியாடா"


'ஆமாப்பா! நீங்க சொன்னவுடனே வாசலுக்கு வந்தேன், என் ஸ்க்குல் ஆட்டோ வந்துச்சு, ஓடிப்போய் என் உண்டியலை உடைச்சேன், எத்தன காசு இருந்துச்சோ அத்தனையும் எடுத்துகிட்டேன்! போய் ஆட்டோவிலே ஏறி ஆ.வி வாங்கினேன். அங்கயே படிச்சேன்"


"ஏண்டா நாளைக்கு படிக்கலாமே"


"இல்லப்பா எனக்கு இப்பவே படிக்கனும், என் பிரண்ட்ஸ் யாருக்கும் வராத ஒரு பெருமைப்பா இது, ஆமா பத்து லெட்சம் பிரிண்ட் ஆகுமா இது"


"இருக்கும்டா"


"அப்பா ஒரு கேள்விப்பா! அந்த அபிஅப்பாவிலே அந்த அபி நான் தானேப்பா"


போனை வைத்து விட்டு அழுதேன்!!

January 13, 2009

வீர சேகர விலாஸ் - பாகம் # 7

தயவு செஞ்சு இந்த பாகம் # 6 படிச்சுடுங்க!
அப்போது காலை மூன்று முப்பது ஆகியது. சத்திரமே அமைதியாக இருக்க மணமேடை அமைக்கும் சியாமளா கோவில் சவுந்தரமும் சவுந்தரத்தின் ஓடும்பிள்ளைகள் நான்கு பேரும் மணபந்தலில் "வருக வருக" என ஏதோ மணியை வைத்து தைத்து கொண்டிருந்தனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மணபந்தலில் உட்கார போவது பொண்ணும், மாப்பிள்ளையும் தான். அவங்க அந்த இடத்தில் உட்காந்து வருக வருகன்னு கூப்பிட்டா வந்தவங்க அவங்க மடியிலயா குந்திக்க முடியும் என நினைத்து கொண்டேன்.

மணிஅய்யர் ஆட்கள் ஒரு காடா துணையிலே இட்லியை வார்த்து மலை மாதிரி கொட்டி கொண்டிருந்தனர். அது காலை எட்டு மணிக்கு ஆறிப்போய்விடுமே என்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லை. கொடுத்த மெனுவை சமைச்சு கொட்டனும்,அத்தனையே.

அப்போது நாலு கிமீ தள்ளி இருக்கும் ஜங்சனில் அன்றைக்கு லேட்டாக வந்த கம்பன் "பாங்ங்ங்"ன்னு சத்தம் எழுப்பி கொண்டே போக அந்த சத்தம் சத்திரம் வரை கேட்டது. சீட்டு கச்சேரியில் உட்காந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மணி அய்யர் உள்ளே போய் பந்தல் சவுந்தரத்திடம் பத்து ரூபாய் வாங்கி வந்து அதையும் பறி கொடுத்து விட்டு 'ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் ' என துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு இட்லி வார்க்கும் இடத்துக்கு வந்து ஆறு பெரிய செப்பு தேக்சாவை வைத்து தண்ணீர் கொதிக்க விட சொல்லி விட்டு உக்கிரான அறைக்கு சென்று கொஞ்சம் கண்ணு அசந்தார்.

அவர் படுத்ததும் மணி அண்ணன் எழுந்து "என்ன தவசுபுள்ள சுடு தண்ணி போட்டாசா, அத்தை தான் முதலில் குளிக்கனும் அய்யரே! சொற்தெர்தா, ந்தா நா ராஜன் தோட்டம் போயிட்டு வர்ரேன், ஆமா திருவமழ தம்பி இருக்கா” என கேட்டுகிட்டே “தந்நானாஆஆஆ”ன்னு தனக்கு வராத அந்த ரகத்தை முயற்சி பண்ணிகிட்டே போக, மாமா & குரூப் தன் தனது பணத்தை சுருட்டி கொண்டே எழ அப்போது மணி காலை 4.30


என் அருமை பெண்டிர் எல்லாம் வாயில் தன் ஆட்காட்டி விரலை வைத்து தேய்த்து கொண்டிருந்தனர், சிலர் கோபால் பல்பொடியால் சிகப்பு வாயாகவும், சிலர் காலிகட் பல்பொடியால் வெந்தவாய் வெள்ளை வாயாகவும் இருக்க அந்த பெங்களூர் ரமணியம்மா மாத்திரம் பிரஷ் கொண்டு ஏதோ கோல்கேட்டாம் அந்த பிசினால் தானும் தன் நைட்டி (கன்றாவின்னு சபிக்கப்ப்ட்ட) குழந்தைகளும், பல் விளக்க மணி அய்யர் குஞ்சுகள் அவங்களுக்கு மட்டும் வென்னீர் முதலில் தர, எங்க வீட்டு பெண்டிரால் மணி அய்யர் எழுப்பப்பட்டு அவர் வந்து “விடுங்கம்மா அது எல்லாம் கோல்கேட் பார்ட்டி, என் மச்சினன் கூட அவா மாதிரி பாம்பே தான், அங்கல்லாம் லெஷ்மி தாண்டமாடுறாளாம்! விடுங்கோ, அவா மொதால்ல குளிக்கட்டும், நா உங்களுக்கு பேஷா கொதிக்க கொதிக்க போட்டு தாறேன்:ன்னு சமாளிக்க ஒரு வழியா வசந்தி சித்தி தன்னிடமும் பிரஷ் இருப்பதை காமிக்க 27 முறை தன் பல்லை நல்லா தேய்க்க எல்லா பெரியம்மாவும் சித்திக்கு நெட்டி முறித்தார்கள்.

காலை 6.30,

யடீ, நான் இன்னிக்கு மூனாவது நாளு, உன்ன போல இல்ல தெரியுமா, நாட்டு முட்டையும், உளுத்தம் களியும் உவ்வே உவ்வேன்னு வாயில திணிச்சுது அந்த கெழவி”

“ஆகா, நான் ஆயிட்டேண்டி யார்டயும் சொல்லாத”

“எந்த சிறுக்கிடீ என் மஞ்சல எடுத்தது”

“அய்யோ அக்கா அந்த ரெக்சோனா என்னோடது!”

“அய்யோ பாருடீ இவ லிரில் மாதிரி குளிச்சா, ஏதுடீ அது” (கெக்கே பிக்கே சிரிப்பு)

“பாத்தியா அவன் பேரு பாலாசியாம் பிகாம் படிச்சுட்டானாம் அத்த அவன விக்க ரெடியா இருக்குடீ, டீ நீ பாப்பாத்தி மாதிரி இருக்க செக்க செவேல்ன்னு, அது கன்ணுல படாத”
\
“அய்யோ அக்கா நா மக்குட்டு கட்டிகிட்டு வரப்போ அத்த தான “வாடி வாழதண்டு யார் கண்ணுலயும் படாத:ன்னு கூட்டிகிட்டு போச்சு”

“ஆகா மீனாச்சி மருமவளே! நீ பட போறடீ”

,அதுக்குள்ள அத்தனை பேரும் சூப்பரா பட்டு புடவைல ஜெகஜோதியாய் இருக்க அத்தை புது பட்டு புடவையிலே வந்து “எலேய் பசங்களா (அத்தை அப்படித்தான் பொண்ணுங்களை பசங்கன்னு சொல்லுவங்க) வாங்க பொண்ணுக்கு வந்து மஞ்ச தேய்க்கனும்”ன்னு சொல்ல அந்த பொண்ணு எங்க வீட்டு வசம் வந்தாச்சு!

பாவம் அந்த பொண்ணு!

“டேய் நீ ஊட்டி வரை உற்வு” பாத்தியா”

“இல்லீங்கக்கா”

“டேய் நா என்ன உனக்கு அக்காவா?”

“இலீங்க அத்தாச்சி”

“நா உனக்கு அத்தாச்சியா, போவுட்டும், ஆமா நீ நாட்டு பாடியா, இல்ல அதுவா?”

“புரியல அத்தாச்சி”

"டேய் யாருடீ! அவள ஒழுங்கா இருக்க வுடுங்கடீ! ஒங்கல மாரி காலேசு படிச்சவ இல்ல அவ" என சொல்ல்லிகிட்டே அந்தை வந்தாங்க அங்க!

அத்தைக்கு ஆயிரம் வேலை! போயாச்சு!

“டேய்! கேட்டனே ! நீ சொல்லவேயில்ல!

"என் மனக்கதவ தட்டி நா தொட்டதெல்லாம் வெற்றி"ன்னு ஒரு சித்தி ஆட பாவம் பொண்ணுக்கு உடம்பே சிவந்து போச்சு!

அதுக்குள்ள அந்த பெங்களூர் ரமணியம்மா வர

“ஆமா நீங்க எல்லாம் காலேஜ் படிக்கிறவங்க போலருக்கு”

“ஆமாம்” கோர்ஸ்

“அப்ப சொல்லுங்க, என்ன குரூப்பு”
\
“ந்தா பாருங்க நீங்களெ ஒங்க பொண்ணுக்கு பாடிய மாட்டுங்க! அத்த கூப்பிடுறாங்க நாங்க வாரோம்”

இப்ப்டியாக எல்லாரும் ஒதுங்கிகொள்ள கல்யாணம் தொடர்ந்தது!

குறிப்பு!

எனக்கே இது பிடிக்கலைங்க! பெருசா எழுதாதீங்கன்னு சொன்னா நான் என்ன பண்ண முடியும்.
நான் சொல்ல வந்ததை முழுசா சொல்ல முடியலை! அடுத்த பாகம் பார்ப்போம்!

January 9, 2009

ரவாதோசைக்காக பிள்ளையாரை கழட்டி விட்டா தப்பா?

அப்போது சின்ன கடைத்தெருவில் அப்படி ஒரு சூப்பர் ஹோட்டல் இருந்தது இப்ப இருக்கும் பசங்க யாருக்கும் தெரியாது. சின்ன கடைத்தெரு வண்டிப்பேட்டையில் வாதா மரம் மிக பெரியதாக இருக்கும். அந்த பகுதி முழுமைக்கும் நல்ல நிழல் தரும். அந்த நிழலின் அடியிலே தான் ஒத்தை மாட்டு வண்டி பத்தும், ஒரு குதிரை வண்டியும் இருக்கும். அந்த மரத்து அடியிலே ஒரு பெட்டி கடை. எங்க தெரு பசங்க ஸ்கூல் போகும் போதும் வரும் போதும் வாதா மரத்து காயை எல்லாம் எடுத்து பையில் போட்டு கொள்ளாமல் போனதே கிடையாது. எடுத்து வந்த காயை அம்மிகல்லில் வைத்து மிக சின்ன ஒரு குழவியை வைத்து அதை உடைத்து அந்த பருப்பை எடுத்து திண்பதிலே ஒரு வித ஆசை.

அந்த வாதம் மரத்துக்கு பின் பக்கம் உயரமான படிக்கட்டுகளுடன் இருப்பதுதான் "சுந்தரம் பிள்ளை சைவ ஓட்டல்". நாங்க வாதம்காய் பொறுக்கிகிட்டு இருக்கும் போதே அந்த ஹோட்டலின் ரவாதோசை வாசனை மூக்கை துளைக்கும்.

நம்ம ராதாவுக்கு திடீர்னு அப்படி ஒரு ஆசை வந்திருக்க கூடாது. பாருங்க மக்கா என் சின்ன வயசு அயோக்கியதனம் அத்தனைக்கும் அவந்தான் காரணம் என்பது உங்களுக்கே நல்ல தெரியும்.

"டேய் நாம இப்போ 6ம் கிளாஸ் வந்தாச்சு. பெரிய ஆளா ஆயாச்சு. நாம எப்ப ஹோட்டல்க்கு போய் தனியா சாப்பிட்டு பழக கூடாது, அப்பதான் நம்மை கண்டா தெருவிலே ஒரு பயம் வரும், நீ என்னா சொல்ற"

"நான் என்ன சொல்றது. அதான் முடிவு பண்ணிட்டியே, வா இன்னிக்கு போய் ரவா தோசையை நொங்கு எடுத்துடலாம்"

ஆனா என்னையும், அவனையும் தலைகீழா கட்டி தொங்கவிட்டா கூட பையில இருந்து 5 பைசா கூட கீழே கொட்டாது. அப்படி ஒரு சுத்தம் நாங்க.
உள்ளே போன பின்னாடி அந்த டேபிள் (நல்ல கருப்பு கலர் கடப்பாகல்) நாங்க நின்று கொண்டு சாப்பிட்டாதான் சரியா வரும் போல இருந்துச்சு. ஆனாலும் ஒரு கெத்தா புஸ்தக மூட்டையை பெஞ்சில் போட்டு அதன் மேல குந்திகிட்டோம்.

சுந்தரம் பிள்ளை கருப்பா திறந்த உடம்போட குண்டாக உட்காந்து இருந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் எல்லாருமே தமிழ் பண்டிட்க்கு தருமபுரம் மடத்து காலேஜ்ல படிச்சிகிட்டு இருந்தாங்க. சுவற்றில் எல்லாம் புத்தர், பெரியார், மாசேதுங், அப்படீன்னு படங்கள். அப்போ மாசேதுங் யாருன்னு எங்களுக்கு தெரியலை. ஆனா அவர் சுந்தரம்பிள்ளையின் அப்பா பெரிய பிள்ளைனு ராதா சொன்னதை கூட அப்பாவியாய் நம்பினேன்ன்னா பார்த்துகுங்க. அவரின் மகன்கள் காலேஜ்ல படிச்சாகூட அவங்க தான் சப்ளை பண்னுவாங்க. அவரின் மனைவியும், மகளும் தான் சமையல் எல்லாம். அன்றைக்கு பார்த்து யாரும் சப்ளை செய்ய வரலை.

சரி கல்லாவிலே இருக்கும் சுந்தரம்பிள்ளையை எப்படி கூப்பிடுவது என யோசித்து "இந்தாங்க இந்தாங்க"ன்னு ரெண்டு பேரும் கோரஸ் பாட அவர் எழுந்து வந்து என்னடா பசங்களான்னு கேட்க "நல்ல பதமா ரெண்டு ரவா, ஆனா கெட்டி சட்னியா இருக்கட்டும், சாம்பார் வாளிய இங்கயே வச்சிடுங்க நாங்க ஊத்திக்கிறோம்"

ரொம்ப ஹோட்டல் பத்தி தெரிஞ்சவங்க மாதிரி ராதா ஏதேதோ சொல்ல அவரும் முதல்ல ஒரு டம்ளர் தண்னி வச்சுட்டு ஒரு தாமரை இலையை வைக்க பின்னாடியே சுட சுட தோசை வந்துச்சு.

பக்கத்திலே வந்து உக்காந்து சாப்பிட வந்தவர்களை நாங்க ஏதோ புழு மாதிரி பார்க்க அவர்கள் "ஏதோ பெரிய வீட்டு பிள்ளைங்க போலருக்கு"ன்னு நெனச்சுகிட்டு விலகி போனாங்க.

எல்லாம் முடிஞ்சுது. கல்லாகிட்டே போனோம். பிள்ளை கேட்டாரு "தம்பிகளா! இப்புடி புஸ்தக மூட்டை மேல உக்காந்து சாப்பிடுறீங்களே, அது சரஸ்வதி இல்லியா"
"அட ரவாதோசன்னு வந்துட்டா சரஸ்வதியாவது, மஞ்சுளாவாவது" இது ராதா.
பிள்ளை முகத்திலே 1000 வாட்ஸ் பல்பு போட்ட மாதிரி ஒரு பிரகாசம். அவரு ஒரு தி.க ஆள். சரஸ்வதியை போய் நடிகை மஞ்சுளா ரேஞ்சுக்கு நெத்தி நிறைய விபூதி போட்ட பசங்க சொல்ராங்களேன்னு.

"புள்ள எங்க கையில காசு இல்லை, தோசை மேல ஆசை. அதான் தின்னுட்டோம். வேணும்ன்னா எங்க அப்பாகிட்டே மாட்டிவிடுங்க" என்றான் ராதா. அப்போ ராதாவின் அப்பா R.I யா இருந்தார். வேற ஊர்ல வேலை. அதனால இவனை இவன் பாட்டிகிட்ட விட்டுட்டு அவனும் அவங்க அப்பா, அம்மா, தங்கை எல்லாம் அந்த ஊர்ல இருந்தாங்க. ஆனா என் நிலைமை அப்படியா. அப்பா காலை 7.55க்கு அந்த ஹோட்டலை தாண்டும் போது தான் பிள்ளை கடிகாரத்தை சரி செஞ்சு வச்சுப்பார்.

பிள்ளைக்கு ரொம்ப சந்தோஷமாக போயிடுச்சு. பசங்க இப்படி வெளிப்படையா இருக்காங்களேன்னு. "டேய் பசங்களா உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு. இந்த ரவாதோசை ஃப்ரீ, நாளைக்கும் ரவா தோசை வேணுமா?"
ஆகா, புள்ள எதுக்கோ கொக்கி போடுறாரேன்னு எனக்கு பயம். அதுக்குள்ள ராதா "ஆமாம் புள்ள"ன்னு சொல்ல அதுக்கு புள்ள "அப்ப சரி உங்க வீட்டுல இருக்குற சாமி படம் எடுத்துகிட்டு வந்து என் கிட்ட்ட கொடுக்கனும், ஒரு படத்துக்கு ஒரு ரவா தோசை, சரியா?"

நானும் ராதாவும் அன்னிக்கு ஸ்கூல்ல முழுக்க யோசிச்சோம். என் வீட்டில் எல்லாமே பெரிய பரிய படம், தூக்கிட்டு வருவது கஷ்டம் என சொன்ன போது ராதா "எதுனா சின்ன சின்ன சிலை இருக்காடா"ன்னு கேட்டான். அதுக்கு நான் "ஆமாடா சித்தப்பா எங்க பார்த்தாலும் சின்ன சின்ன மண்ணால செஞ்சு சுட்டு பெயிண்ட் அடிச்ச புள்ளையார் வாங்கிட்டு வந்து அது இருக்கு ஒரு பத்து"ன்னு சொன்னேன். சரிடா பத்துல ஒண்ணு குறைஞ்சா தெரியாது. நாலைக்கு நீ அதை எடுத்து வா, நான் எதுனா எடுத்து வாரேன்"ன்னு தீர்ப்பை சொல்லிட்டான்.

அடுத்த நாள் காலையிலே குளித்து முடித்து சாமிகும்பிடும் போது "புள்ளையாரே நீயும் எத்தனை நாள் தான் அப்பா வைக்கும் காய்ந்த திராட்சைக்கே அடிமையா இருப்பே, உனக்கு நான் சுந்தரம்புள்ள மூலமா ஒரு வழி பண்றேன். இனி அவரு சுந்தரம்புள்ள இல்ல உனக்கு சுதந்தரம் கொடுக்க போகும் புள்ள"ன்னு சொல்லிகிட்டே அதை தூக்கி ட்வுசர் உள்ளே தள்ளிகிட்டேன்.

அப்பா சாமி கும்பிடும் போது நான் கிளம்பிகிட்டு இருந்தேன். "இங்க இருந்த புள்ளையார் எங்க"ன்னு அப்பா கத்துவதை நான் கவனிக்காத மாதிரி வந்துட்டேன்.

ராதா அவசரத்துக்கு பிடுங்கின ஒரு போட்டோவை கொண்டு வந்தான். அது ஒரு ஆஞ்சநேயர் படம். வால் வரை பொட்டு வச்சிருந்தது. சுந்தரம் பிள்ளைக்கோ ரொம்ப சந்தோஷம். ஆகா ஆஞ்சநேயரை கொண்டு வந்தவனுக்கு அடையும் அவியலும். புள்ளையார் சிலைக்கு புட்டும் ஜீனியும்ன்னு சொல்ல "அட புள்ளையாரப்பா உன் ரேஞ்சு இவ்வளவுதானான்னு நெனச்சிகிட்டே,சாப்பிட்டு கிள்ம்பினோம்.

அடுத்த அடுத்த நாள் பிள்ளையார் காணாமல் போன விஷயம் எங்க வீட்டிலே ஒரு வித பிரளயத்தை உண்டு பண்ணி கொண்டிருந்தது. அப்பா என் பாட்டியிடம் "ஒரு வேளை உன் சின்ன பையன் எடுத்திருப்பானோ" என்ற போது பாட்டிக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்தது. அம்மாவை பார்த்து "உன் தம்பி எடுத்திருப்பானோ" என்றபோது அம்மாவுக்கு அப்பாவுக்கும் சண்டை வந்தது.நம்ம பிள்ளையார் நாரதரா அவதாரம் எடுத்து வீட்டையே ஆட்டி படைச்சுகிட்டு இருந்த போது எனக்கு நாளை சுந்தரம் பிள்ளை கடையின் மெனு என்ன என்பதே அப்போது முக்கிய விஷயமாக இருந்தது.
ஆனால் ராதாவோ டிசைன் டிசைனாக காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சின்னு போட்டு தாக்க நானோ பிள்ளையார் சிலையாகவே கொண்டு வந்து கொண்டிருந்தேன். ராதாவுக்கு கவலை இல்லை. அவன் வீட்டிலே அப்பா, அம்மா யாரும் இல்லை. கண் சரியா தெரியாத பாட்டி மாத்திரம் தான். அவங்க வீட்டுல சாமி அலமாரியிலே ஒரு பல்பு எரியும் அதை ஒரு குன்சாக வச்சிகிட்டு அவன் பாட்டி சாமி கும்பிட்டுவாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல அவன் அந்த பல்பை மட்டும் வச்சிட்டு அந்த அலமாரியையே கொண்டு வரலாம். ஆனால் என் நிலமை அப்படியா.

சாயந்திரம் வீட்டுக்கு போன போது வீடே அல்லோகலகல்லோகல பட்டுகிட்டு இருந்துச்சு. சின்ன தாத்தா, சில பெரியப்பா எல்லாரும் ஒரே கூட்டம். "ரொம்ப ஆச்சர்யமா இருக்கு புள்ளையாரு செலை மாத்திரம் கானாம போவுது, மத்தபடி வூட்டுல ஒரு பொருளும் காணாம போவலை, அப்பன்னா இது ஏதோ தெய்வ குத்தமா இருக்குமோ!வீட்டுல பொம்பளைங்க சுத்த பத்தமா இல்லாம தீட்டு தொடக்கு பட்டிருக்கும், சரி எதுக்கும் பயலுக்கு மொட்ட போட்டுடலாம் நம்ம கச்சேரிகொடி புள்ளயாருக்கு"ன்னு தீர்மானம் இயற்றப்பட எனக்கு பக்குன்னு ஆகி போச்சு. ஆகா 4 தோசைக்காக என் முடியா? என்னை ஆம்பள புள்ளையா பெத்துகிட்டதே எங்க வீட்டில எந்த சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் என் முடிதான் பலிகடா.மாடுசரியா கரவை இல்லைன்னா கூட நான் முடிதுரக்க வேண்டியிருந்த காலம் அது. எப்பவுமே நானேபடேகர் அளவு தான் முடியிருந்தது எனக்கு அந்த காலங்களில்:-((
ஆனா ராதா வீட்டு சாமி அலமாரி சுத்தமாக சுரண்டப்பட்டு இப்போது அந்த அலமாரியில் ஒரு பல்பு மட்டுமே இருந்து பார்ப்பதற்கு மீ.கி.வீரமணிஅய்யா வீட்டு சாமி அலமாரி மாதிரி சுத்தமா இருந்துச்சு. ஆனா அவன் பாட்டி ஏதோ சாமி படம் இருப்பதாக நினைத்து கொண்டு செவுத்துல பொட்டு வச்சிகிட்டு இருந்தாங்க.

இப்போ வீட்டிலே அப்பா சாமிஅலமாரிக்கு கீழேயே படுக்க ஆரம்பிச்சாச்சு. அவங்களுக்கு தெரியுமா அது காலை நான் சாமி கும்பிடும் நேரத்திலே தான் கானாம போவுதுன்னு. அப்போ ராதா அவன் வீட்டு அலமாரி காலியான விரக்தியிலே நம்ம வீட்டுக்கு வந்தானா. அவன் கிட்ட அம்மா "டேய் ராதா நம்ம வீட்டுல புள்ளையார் காணாம போரார்டா தினமும்"ன்னு சொல்ல அதுக்கு "அப்படியாம்மா, இப்புடித்தான் கோணார் வீட்டுல மாடு காணாம போச்சு. அவரு வண்டிகார தெரு மந்திர மூர்த்தி அய்யர் கிட்ட போய் வெத்தலையிலே மை போட்டு பார்த்தாங்க, அவரு யாரு திருடிகிட்டு போனதுன்னு கரெக்டா சொல்லிட்டாரு"ன்னு கொளுத்தி போட்டுட்டுபோக அதான் சரின்னு என் பாட்டி "நான் தோ போறேன் அய்யருகிட்ட இன்னிக்கு ஒண்ணுல ரெண்டு கேட்டுட்டு வாரேன்"ன்னு கிளம்ப, அம்மா "சரி அப்படியே போற வழியில இந்த ஒன்னேகால் ரூவாய வீரனுக்கு படி கட்டிட்டு போங்க, அவன் கை கால் வெளங்காம போவுட்டும்"ன்னு சொன்ன போது "அய்யய்யோ வேனாம், பின்ன எப்புடி அவன் வீட்டு பாடம் எழுதுவான், அந்த விசாலம் டீச்சர் எழுதலைன்னா போட்டு புரோட்டா மாவு தட்டிடுவாங்களே"ன்னு வாய் வரை வந்ததை ரவா தோசையை முழுங்குவது போல முழுங்கிகிட்டு இருந்துட்டேன்.

பாட்டிக்கு ஒரு பழக்கம் எங்க வெளியே போனாலும் என்னை கையிலே பிடிச்சுகிட்டு போறது தான்.நான் எவ்வளவோ கெஞ்சியும் நான் அழைத்து போக படவில்லை. கிட்ட தட்ட இழுத்து போகப்பட்டேன். மந்திர மூர்த்தி அய்யருக்கு இது ஒரு பெக்க்யூலியர் கேஸ். உடம்பை குலுக்கி குலுக்கி வெத்தலையிலே மையை தடவி "வருது, தோ வருது ராத்திரி ஒரு மணிக்கு வருது. நல்ல குண்டா இருக்குது. சலக்கு சலக்குன்னு கொலுசு சத்தத்தோட வருது. குள்ள உருவமா இருக்குது"ன்னு சொல்ல சொல்ல எனக்கு சந்தோஷமா போச்சு. அப்பாடா தப்பிச்சோம்டா சாமீன்னு.

இதிலே ரெட்டை சந்தோஷம் வேற. ஏன்னா நான் ஒல்லிபிச்சான். தம்பி நல்ல குண்டு. கால்ல வேற சலங்கை கொலுசு எல்லாம் போட்டிருப்பான். 4 வது படிக்கிறவன் குள்ளமாத்தானே இருப்பான். சரி அவனை போட்டுடலாம் வீட்டுலன்னி நெனச்சுகிட்டு வீட்டுக்கு வந்த உடனே "அம்மா வேற யாரும் இல்லியாம் தம்பிதான்னு அய்யரு சொல்லிட்டாரு.இவன் தான் வெளையாட எடுத்துகிட்டு போயிருப்பான்"ன்னு சொல்ல அம்மா அன்ரைக்கு ராத்திரி அவன் இடுப்பிலே முந்தானையை கட்டிகிட்டு படுக்க வச்ச போது நான் நம்பியார் மாதிரி சிரிச்சுகிட்டு படுத்தேன்.

அடுத்த நாள் சுந்தரம் பிள்லை கடைக்கு போகும் போது அவர் இல்லை. அவர் பையன் தான் இருந்தார். அவருக்கு இதல்லாம் சுத்தமாக பிடிக்காது போலருக்கு.ரவா தோசை முடியும் வரை காத்திருந்து "டேய் பசங்களா இந்தாங்க உங்க சாமியெல்லாம், என் அப்பாவுக்கு தான் தன் சாமி இல்லை கொள்கையை எப்படி உங்க கிட்ட திணிப்பதுன்னு தெரியலை. அதனால நீங்க திருடலாமா, எனக்கும் சாமி இல்லை கொள்கைதான். ஆனா உங்களை இந்த வழிக்கு கொண்டு வர திருட சொல்றது தப்பு. இந்தாங்க இந்த புத்தகத்தை எல்லாம் படிங்க, ஆனா இன்னிக்கு தோசை ஃப்ரீ இல்லை வாசல்ல நின்னு பத்து தடவை "தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க"ன்னு கத்திட்டு போகனும்"ன்னு சொல்ல நாங்களும் "அப்பாடா இத்தோட விட்டாரே"ன்னு வாசல்ல நின்னு "தமிழ் வாழ்க தமிழ் வாழ்க"ன்னு கத்தினோம்.

வெளியே வந்த நான் "டேய் இந்த பிள்ளையாரை எப்படிடா கொண்டு போறது"ன்னு ராதா கிட்ட கேட்க 'டேய் அம்மா தான் வீரனுக்கு படி கட்ட்டி இருக்காங்களே அதனால வீரன் கிட்ட கொண்டு போய் வச்சிடு, அது தானா வீட்டுக்கு போயிடும்"ன்னு சொல்ல அது எனக்கும் சரியா பட்டுச்சு. சரி இந்த புத்தகத்தை என்னடா பண்ணுறதுன்னு யோசிச்சு அதை எதிரே இருந்த கடலை கடையிலே போட்டு கடலை வாங்கி தின்னுகிட்டே ஸ்கூலுக்கு போனோம்.

அம்மா வழக்கம் போல சியாமளா கோவிலுக்கு போக அங்கே வீரன்கிட்டே அந்த பஞ்ச பிள்லையாரும் "வாம்மா மின்னல் வந்து என்னை வீட்டுக்கு கொண்டு போ"ன்னு சொல்ல "ஆகா வீரனுக்கு படிகட்டினா இன்ஸ்டண்ட் பலன்"இருக்கேன்னு அம்மா ஆச்சர்ய பட எல்லாம் சுபமா முடிஞ்சுது.

January 5, 2009

வீரசேகர விலாஸ்!!! பாகம் # 6

"வீரசேகரவிலாஸும், மாமாவ்வும், சீட்டு கச்சேஎரியும் கூடவே ஒரு கல்யாணமும்" பாகம் # 5 ஐ இங்க போய் படிச்சா இப்ப படிக்க போகும் பாகம் # 6 புரியும்!

**********************************


இப்படி ஒரு வழியாக பக்கிரியின் கச்சேரி முடிந்து களைந்த பின் மாமாவின் கச்சேரி திரும்பவும் களை கட்ட தொடங்கியது. அந்த இரவு பண்ணிரண்டு மணிக்கு வீரசேகர விலாஸ் மாத்திரம் தூங்காமல் தன் அடுத்த நாள் வைபோகத்துக்காக தயாராகி கொண்டிருந்தது.

அந்த சத்திரத்தின் நாலாம் கட்டில் தான் கோட்டு அடுப்பு நீளமாக இருக்கும் மேற்கு பக்கமாக. ஆனால் கிழக்கு பக்கமாக எட்டு ஆட்டுகல்லும், எட்டு அம்மி கல்லும் வரிசையாக இருக்கும். அடுத்த நாள் இட்லிக்காக எட்டு ஆட்டுகல்லிலும் மணி அய்யர் அழைத்து வந்திருந்த பெண்கள் சிலரும், அவரிடம் அப்போது இருந்த சில புதிதாய் சேர்ந்த சப்ளை பாலகர்களும் மாவாட்டி கொண்டிருந்தனர். அரிசி மாவு ஆட்டும் ஆட்டு கல்லில் சத்தம் இல்லாமலும், உளுந்து மாவு ஆட்டும் ஆட்டு கல் பொலக் பொலக் என சலம்பிகிட்டும் இருந்தது. திண்ணை வரை அந்த சத்தம் கேட்டது. கச்சேரியில் இருந்த மணி அய்யர் "டேய் உளுந்து பூத்துடுச்சு போலருக்கு" என அதன் சத்தத்தை வைத்தே கத்தி கொண்டிருந்தார்.

சில வயசானவங்க ஆண்கள் ஹாலிலும், பெண்கள் அந்த கல்யாண முற்றத்தின் சுற்றியும் இருந்த கூடம், தாழ்வாரத்திலும் படுத்து உறங்கினர்.
அதல்லாம் போகட்டும். சினிமாவுக்கு போனாங்களே பெண்கள் எல்லோரும். அவங்க என்ன ஆனாங்கன்னு பார்ப்போம்.பிரிந்து பிரிந்து சத்திரத்தை விட்டு வந்தவர்கள் எல்லோரும் அத்தை சொன்ன மாதிரியே கச்சேரி பிள்ளையார் கோவிலில் சேர்ந்து புடவை முந்தியை எடுத்து கழுத்தை சுற்றி கொண்டு ஏதோ ஒரு பெரியம்மா கதை முழுக்க சொல்லி கொண்டே வர சில இள வட்ட சித்திகள் "அய்யோ வாங்கடி முன்னால போவோம், அக்கா வுட்டா வணக்கம் போட்ட பின்ன தான் கதையை நிப்பாட்டும்" என சொல்லி நடையை எட்டி போட இதோ கேர்ள்ஸ் ஹை ஸ்கூல் பிள்ளையார் வந்தாச்சு. மீனாட்சி அத்தை ஓடிப்போய் பத்து பைசா உண்டியலில் போட்டு விட்டு"எப்புடியாவது டிக்கெட் கடக்கினும் புள்ளயாரே"ன்னு வேண்டிகிட்டு வர மற்றவர்கள் சிரித்து கொண்டே பியர்லெஸ் தியேட்டரை அடைந்தனர்.
இரண்டாம் கிளாஸ் டிக்கெட் வாங்க பூபதியை (பியர்லெஸ் தியேட்டர் ஊழியர்) காக்கா பிடிக்க அனுப்பப்பட்ட சிவாஜி அண்ணன் எங்கும் தென்படவில்லையாதலால் நம் பெண்கள் கியூவில் நிற்க வேண்டியதா போச்சு. அங்கே போய் பார்த்தால் தான் தெரியுது கல்யாண மண்டபமே அங்கே தான் நிற்கின்றது. அதிலே ஒரு பெரியம்மா "அட நாம ஜம்முன்னு சத்தரத்துல இருந்தே தைரியமா வந்துருக்கலாம். இங்க பாரு பொண்ணு வீட்டுகாரிங்க எல்லாம் இங்க தான் நிக்கிறாங்க"ன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே ஒரு அத்தை "அய்யய்யோ அந்த வெளிநாட்டுகாரி மாடி டிக்கெட்டுக்கு நிக்கிறா பாரு, எனக்கு மானமே போவுது அத்தாச்சி, பேசாம நா எங்க அத்தான் அங்க நிக்கிறாங்க பாருங்க அவங்க கூட போயி மாடி டிக்கெட் எடுத்து சோபாவுல குந்திகிட்டு படம் பாத்துட்டு வாரேன். போம்போது என்னையும் கூட்டிகிட்டு போங்க" என சொன்னதும் மத்த எல்லாரும் அந்த அத்தையை பிடித்து கொள்ள ஒரு வழியாக தோளில் போத்திகிட்டு இருந்த முந்தானை இப்போ தலைக்கும் சேர்த்து போடப்பட்டது. அந்த மாடிடிக்கெட் கியூவிலே நின்ன பெங்களூர்காரம்மா அங்கிருந்து இவர்களையே பார்த்து கொண்டிருந்தது.

"ந்தா அவ இங்கயே பாக்குறா பாரு, நீ இந்த பக்கம் திரும்பு" என பெரிய பெரியம்மாவால் ஒரு அத்தை அதட்டப்பட கடைசி நேரத்தில் தியேட்டரின் உள்ளே இருந்து அந்த பெரிய இரும்பு கேட் உள்ளே இடுக்கில் இருந்து சிவாஜி அண்ணன் குரல் கேட்டது. "பெரீம்மாமாமா, சித்தீஈஈஈ," "ஆஹா நம்ம பய கொரல் கேக்குதுடீ"ன்னு பெரியம்மா ஓடி போய் அந்த இடுக்கில் இருந்து டிக்கெட்டை வாங்கி திரும்பும் போது அந்த பெங்களூர்காரம்மா மாடி டிக்கெட் எடுத்து கொண்டு திரும்ப இரண்டு பேரும் இடித்து கொள்ள "ஆஹா அந்த பெங்களூர் ரமணியம்மா இடிச்சுட்டாடீ நம்ம அக்காவ" என ஒரு சித்தி நக்கல் விட எல்லோரும் உள்ளே போயாச்சு.

நாம இப்போ சத்திரத்துக்கு போவோம். மாமா, மொதலியார், தெட்ஷா, கும்மோணம் ஜெயராமன், திருக்கடையூர் முரளி, சுப்புனி எல்லோரும் ஜெக ஜோதியாக ஆட்டத்தில் இருக்க சுத்தமாக கோவணத்தை உருவிவிடப்பட்ட மணிஅய்யர் பாவமாக உட்கார்ந்து இருந்தார்.

இப்படியாக படம் விடும் நேரம் ஆச்சு. அப்போது ஒரு குதிரை வண்டி வந்து நிற்க அதிலிருந்து மெத்தை, தலையனை சகிதமாக மூன்று பெண்களும், ஒரு ஆணும்,(ஒரு பெண் இடுப்பில் வாயில் விரல் வைத்த ஒரு குழந்தையும்) வந்து இறங்கி யார் கண்ணும் படாமல் மெத்தையை உள்ளே போனார்கள். கொஞ்ச நேரத்திலேயே கதிராமங்கலத்தில் இருந்து கட்டை வண்டியில் பூவம் வாழைத்தாரும், ஆள் உயர இலைக்கட்டும் வந்தது. அப்போது மணி இரவு 12.30 ஆகியிருந்தது.

அப்போது மஞ்சள் பையை கக்கத்தில் வைத்த திருப்புங்கூர் முத்தையா வர மாமா "அடடே முத்தையாபுள்ள எப்புடி இருக்கீங்க, ஒடம்புக்கு சரியில்லன்னு சொன்னாங்களே, ஆமா சாணிய்யா மிறிச்சுட்டீங்களா?" என கேட்டது முத்தையாவுக்கு மாமாவின் அந்த தொணி கொஞ்சம் நக்கலாக பட்டிருக்கும் என நினைக்கிறேன். பதிலுக்கு அவர் "ஆமா புள்ள நடந்தா கூட கூட வருது, ஆனா நல்ல வேள எனக்கு ஒங்கள மாதிரி மூலம் தள்ளல, அங்க மட்டும் என்ன வாழுதாம் புதுசா பெரிய கோவிலுக்கு வந்த குட்டி யான லத்தி போடுற மாதிரி தானே நடையழகு இருக்கு" என கூற சீட்டு கோஷ்டியில் மொதலியார் வாய் விட்டு சிரிக்க தெட்ஷா தன் துண்டால் வாயை மூடிகிட்டு சிரிப்பை அடக்கி கொண்டு அதுவும் முடியாமல் எச்சில் துப்பும் சாக்கில் வாசல் படிக்கு போய் தனியா சிரிச்சு கிட்டு இருக்கும் போது சினிமாவுக்கு போன பெண்கள் வந்து கொண்டிருந்தனர். அதிலே ஒரு சித்தி "அந்த பெங்களூர் ரமணியம்மா பத்தியாக்கா கேயார்விஜயா மாதிரியே கோண வாக்கு எடுத்துருக்கா" என சொல்ல அதுக்கு ஒரு பெரியம்மா " போடீ நம்ம பிரேமா டெல்லியிலே இருந்து வந்தான்னா அவ கால்ல கட்டி இவளை அடிக்கனும், அவ கூடத்தான் அவ அத்தாங்கிட்ட இங்கிலீஸ்லயே பேசுறா" என சொல்ல அதுக்கு ஒரு அத்தை "அய்யோ அது இந்திக்கா" என்றார்கள். இவர்கள் நடந்து வரும் போதே ஒத்தை மாட்டு வண்டியிலே அந்த பெங்களூர் ரமணியம்மாவும் வர (அட நன் கூட ரமணியம்மான்னு சொல்ல ஆரம்பிச்சுட்டனே) எல்லாருக்கும் காதிலே புகை.

"பத்தியா இங்க கிட்டத்துல இருக்குற சத்தரத்துக்கு வண்டி கேக்குது" என சொல்லியது அந்த பிளசர் காரில் ஏத்திக்காம போனதால் கோவிச்சுகிட்ட விளநகர் பெரியம்மா. என்னவோ தெரியலை அந்த பெங்களூர் பார்ட்டிய யாருக்குமே பிடிக்கலை. இத்தனைக்கும் அவங்க யார்கிட்டயும் எந்த வம்பும் பண்ணலை.

இங்கே திண்ணையில் மாமாவை பார்த்து முதலியார் "என்ன புள்ள ஒங்க வாயையே அடச்சுட்டாரே அந்த ஆளு" என கூற மாமா அதற்கு "ஆமா மொதலியாரே எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன் பார்த்துகிட்டு இருக்கான். கூடிய சீக்கிரம் திருப்பி கொடுப்பான், ஆனா பாருங்க எனக்கு நீங்க சிரிச்சது கூட பெருசா தோனல, இந்த தெட்ஷா பய எச்சி துப்புற மாதிரி போய் சிரிச்சான் பாருங்க அதான் பிரசரு ஏறுது" என சொல்லிகிட்டே அந்த ஆட்டத்தில் டிக் அடிச்சார்.

ஆனா அந்த திருப்புங்கூர் முத்தையா மாத்திரம் ஏதோ குட்டி போட்ட பூனை மாதிரி படுக்க இடம் தேடி அலைந்தார். பின்னே ஒரு இடமும் தோதுபடாமல் மாமா கச்சேரி நடத்தும் திண்ணைக்கு எதிர் திண்ணையில் கடைசியாக பத்தோடு பதினொண்றாக கடைசியாக போய் மஞ்சள் பையை தலைக்கு வைத்து படுத்து தூங்கி போனார்.

அங்கே உள்ளே எம்குல பெண்டிர் எல்லாம் ஊட்டிவரை உறவு படத்தை பிரித்து மேய்ந்து கொண்டே என்ன இருந்தாலும் அண்ணன், தங்கச்சின்னு ஆகி எம்மார்ராதா பாடு திண்டாட்டத்துல உட்டாங்க பாரு, ஆனா எனக்கு மட்டும் அப்பவே தெரியும் அப்புடி இருக்காதுன்னு" என ஏதேதோ சொல்லிக்கொண்டே "எங்க சுத்தியும் ரங்கனை சேவி" என்பது போல பெங்களூர் ரமணியம்மா கிட்டயே வந்து முடித்தார்கள்.

"சரி தூங்கலாம், டேய் சிவாஜிப்பையா யார் யாரல்லாம் தூங்கிட்டாங்களோ அவங்க தலையிலே இருந்து தலவானிய உருவிகிட்டு வாடா"ன்னு அம்புஜா சித்தி சொல்ல தலையணை வேட்டைக்கு சிவாஜி அண்ணன் கோஷ்டி புறப்பட்டது.

அப்படியாக ஒரு ஏழு தலையணை தேறியும் பத்தாமல் திரும்ப திரும்ப பெண்கள் கோஷ்டி அண்ணனை தொல்லை கொடுக்க இப்போ அண்ணன் வந்த இடம் திண்ணை.

மாமா சிவாஜி அண்ணன் வந்த நோக்கத்தை புரிந்து கொண்டு "என்னடா தலவானி புடுங்கிட்டு வர சொல்லி அனுப்பிசாலுங்களா?" என கேட்க "ஆமாம் மாமா, எல்லத்தையும் புடுங்கிட்டேன். செல பேரு தலைய தலவானியோட துண்டை வச்சி கட்டியிருக்காங்க"ன்னு சொன்னது.

அதற்கு மாமா " டேய் மாப்ள இந்த கல்யாண வீட்டிலே அவனவன் தலைக்கே இல்லாம தூங்குறான், அந்தா கடேசில ஒருத்தரு கால் இடுக்கிலே தலவானி வச்சுகிட்டு தூங்குறாரு"

"அட ஆமா மாமா, நா போய் அதை புடுங்கவா"

"சரிடா மாப்ள, ஆனா அந்த ஆளு ரொம்ப குசும்பு புடிச்சவன், அழுத்தகாரன் அதனால வெடுக்குன்னு புடுங்கு"

மாமா இருக்கும் தைரியத்தில் சிவாஜி அண்ணன் மெதுவா போய் அவர் கால் இடுக்கில் இருக்கும் தலையனையை வெடுக்குன்னு புடுங்க........
"அய்யய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ டாக்டரு எனக்கு ஆபரேசனுக்கு தேதி வச்சாரு, பாவிப்பய நீ எனக்கே தேதி வச்சுட்டியே"ன்னு அலறி எழுந்திருக்க, சத்தரத்தில் தூங்கின மொத்த கூட்டமும் திண்ணைக்கு ஓடி வந்தது.

மாமா மாத்திரம் மெதுவாக "இனி நடந்தா கூட கூட வராது"ன்னு முதலியார்கிட்டே சொல்ல தன் வாய் வெற்றிலை எச்சில் முழுக்க எதிரே இருந்த தூணில் ஸ்ப்ரே பண்ணினார் முதலியார்.

"யோவ், புள்ள முடியலைய்யா, எனக்கு இதுக்கு மேல உம்ம அழிச்சாட்டியம் தாங்க முடியாதுய்யா, ஆண்டவன் பார்த்துகிட்டு இருக்கான்ன்னு நீ சொன்ன போதே நான் நெனச்சேன் இப்புடி ஏடாகூடமா செய்வேன்னு, நான் கிளம்பறேன்"ன்னு சொல்லிட்டு கிளம்பி போனார்.

எல்லாரும் சுத்தி நின்னுகிட்டு சிவாஜி அண்ணனை கேள்வி கேட்க "நான் அவரு தலவானி தான் கால் இடுக்கிலே வச்சிருக்கார்ன்னு நெனச்சேன்"ன்னு அப்பாவியா சொல்லிட்டு பத்து விரலையும் பிரிச்சு வச்சுகிட்டு அச்சூசையா நிற்க, பெண்கள் வெட்கப்பட்டு உள்ளே போக முத்தையாபிள்ளை"ஏன்டா கல்யாண வீட்டுல தலைக்கே தவானி கிடைக்காத போது எவனாவது கால் இடுக்கிலே வச்சு கிட்டு படுப்பானா, எவனும் இடிக்காம இருக்கத்தானே ஓரத்திலே வந்து படுத்தேன்.........." என புலம்பிகிட்டே இருக்கும் போது ராத்திரி மணி ரெண்டு.

தொடரும்...........
இனி, காலை நிகழ்சிகள், கல்யாணம் எல்லாம் அடுத்த பாகத்தில்..............

January 3, 2009

வீரசேகர விலாஸ்!!! பாகம் # 5

இதன் நாலாம் பாகத்தை இங்கே போய் படிக்கலாம்!

*************************************
ஆரத்தி எடுத்து உள்ளே போகும் முன்னமே சத்திரத்தின் வாசல் வந்தவுடனேயே நாயனக்காரர் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சேதுரமன் - பொன்னுசாமி பிள்ளை வாசிப்பாரே அந்த நோட்டு ஸ்வரம் என்னும் மேற்கத்திய இசையை வாசித்து விட்டு சுற்றியும் பார்க்க "அய்யே படத்திலே கேட்ட அளவு இல்லியே" என கூட்டம் உதட்டை பிதுக்க, "அப்ப நீங்க ஆயிரம் ரூவா கொடுத்து அவங்களை தான் வைக்கனும்" என நாதஸ்வர கோஷ்டி சொல்வதாகவே பட்டது எனக்கு. உள்ளே வந்த பின்னே ஹாலின் மேல பகுதியில் கிழக்கு பார்த்து தனி மேடை மாதிரி உட்காந்து நாயனக்காரர் முன்னே சொன்ன மாதிரியே "குறை ஒன்றும் இல்லை"யை லயிச்சு வாசிக்க மாமா "அப்ப இந்த கச்சேரி தேங்காமூடி கச்சேரியாயிடும்னு சொல்லு" என தன் கச்சேரியில் திருவாய் மலர இரண்டு திண்ணையும் ரெண்டு பட்டது.

பந்திக்கு முந்துபவர்கள் முந்த, சினிமா கோஷ்டி பெண்கள் மிகவும் உற்சாகத்துடன் டிக்கெட் காசை எடுத்து கொண்டு சிவாஜி அண்ணன் & கோஷ்டியை தேடியது. கடைசியில் பந்தியில் "இந்த இலைக்கு பாயசம் போடுங்க"ன்னு சொல்லிக்கொண்டு இருந்த அந்த இள வட்டத்தை தாவங்கட்டையை பிடித்து "தம்பி, பாயசம் நான் எடுத்து வைக்க சொல்றண்டா மணிஅய்யர் கிட்ட, நீ ஓடி போயி பேர்லஸ்ல பூபதி கிட்டே சொல்லி டிக்கெட் வாங்குடா, இன்னிக்குன்னு பார்த்து நல்ல முகூர்த்த நாள்டா, எல்லா கல்யாண கூட்டமும் அங்க தாண்டா வந்திருக்கும்" என கெஞ்சி அனுப்பி வைத்தது. ஐந்து பேராக இருந்த அந்த சினிமா கோஷ்டி கொஞ்சம் கொஞ்சமாக பெரியதாகி வண்டு, சிண்டு என பத்து வயது பச்ங்க கூட டிக்கெட் காசு மிச்சம் செய்ய இடுப்பில் ஏறி கொள்ள நான் மட்டும் அந்த பிசாத்து ஒன்னரை ரூபாய்க்காக இடுப்பில் ஏற வெட்கப்பட்டு சீட்டு கச்சேரி பக்கம் வேடிக்கை பார்க்க ஒதுங்க அத்தை மட்டும் "யேய் ஒவ்வொருத்தியா தனி தனியா போங்க மண்டபத்தை விட்டு, இல்லாட்டி பொண்ணு வீட்டுல தப்பா நெனச்சுக்க போறாங்க, பின்ன தெரு மொனையிலே போய் ஒண்ணா சேர்ந்துகுங்க, எல்லாரும் கழுத்த இழுத்தி போத்திக்கனும்" என சொல்லிவிட்டு பொண்ணோட திரட்டி பால் அத்தையையும், மாப்பிளை பக்கம் இரண்டு அத்தையையும் கூட்டி ஏதோ மந்திராலோசனை செய்ய நான் என்னவாயிருக்கும் என யோசனை செய்து அந்த கூட்டத்தில் உள்ளே நுழைய "டேய் இவன் வேற முந்திரி கொட்டை மாதிரி, போடா அந்தண்ட"ன்னு விரட்டப்பட்டேன்.

"இந்தா பாருங்கப்பா, கும்மோணம் பெரிய தெரு பஞ்சு செட்டியார் கடையிலே தான் வாங்கனும், போன வாட்டி மாதிரி அஞ்சடிக்கு வாங்கிடாதீங்க, இவன் வாடஒசந்த பய, உங்க பொண்ணு மாதிரி மரப்பாச்சி இல்ல, அங்க தான் ஒரிசினலா கெடக்கும் எலவம்பஞ்சு, உள்ள கொட்டையும் இருக்காது, அப்புடித்தான் பெரியவன் கல்யாணத்துல மெத்த உள்ள எலவங்கொட்ட இருந்து அத எலி கடிச்சு நாசமாக்கிடுச்சு,அது பத்தாதுன்னு காஞ்சனா கால வேற கடிச்சுடுத்து. "ஏண்டி இத்தன ஆழமா கடிக்கிற அளவு என்னடீ பண்ணிகிட்டு இருந்த"ன்னு கேட்டதுக்கு "நான் அவருன்னு நெனச்சேன்னு சொன்னா பாரு"ன்னு சொல்லிட்டு இடி இடியென் சிரிச்சாங்க. "அதனாலத்தான் சொல்றேன் கும்மோணம் தாஞ் சரி, இப்ப பஸ்ஸ புடிச்சா பதினோரு மணிக்கு அங்க போலாம். செட்டியாரு முகூர்த்த நாள்ன்னா ஒரு மணிக்கு தான் அடப்பாரு. திண்ணையிலே பஞ்சாமய்யரு வூட்டு செயராமந்தம்பி இருக்கு, ஒரு கைலெட்டரு வாங்கி தாரேன், நூரு ரூவாய்க்கு ரெண்டு தலவாணியோட தருவாரு, மறந்து போயி ஒரை வாங்கிடாதீங்க அது சாத்திரம் இல்ல, திரும்ப ராத்திரி ஒண்ணரை ஆகிடும். கண்ணு படாம கொண்ணாந்து காம்ராவூட்டுல (சந்திரத்தின் ஒரு அறை) வச்சுடுங்க"

கிட்ட தட்ட சாப்பிட்டவர்கள் களைய, சினிமா கூட்டம் நைசா வெளியேற, நாதஸ்வர கோஷ்டி நாயனத்தை நாயன பையில் போட, தவில் சின்ராசு காவி துணி போட்டு தவிலை மூடிகிட்டு இருக்கும் போதே மணிஅய்யர் மாமாவின் கச்சேரியில் ஐக்கியமானார். அப்போ ஒழுகும் வெற்றிலை எச்சிலை தன் துண்டில் அவசரமாக துடைத்து கொண்டே அம்மாபாய் சத்திரத்தில் இருந்து தெட்ஷா ஓடிவர மாமா "வாடா தெட்ஷா ஆச்சாள்பொரம் பெரிய தம்பி இத்தன தம்மு க்ட்டி வாசிச்சா என்னை மாதிரி மூல களிம்பு வச்சிகிட்டு அலையனும்னு சொல்லி சுருக்க முடிச்சுகிட்டு வரவேண்டியது தான" என சொல்லி கொண்டே சீட்டை களைத்து போட்டார்.

"அண்ணே அம்பாபாய்க்கு நன்னிலம் எக்ஸ் சேர்மென் பேரளம் மொதலி வந்திருந்தாருண்ணே, நீ போடா முன்னாடி நான் கார்ல வந்துடறேன்னு சொன்னாரு,இன்னுமா வரல"

"எங்க, அவரு வடக்குவீதி பக்கமா போயி பல்லு வெளக்கிட்டு வருவாரு, (இதன் உள் அர்த்தம் எனக்கு ரொம்ப நாள் விளங்கவே இல்லை)எலேய் பெட்ரூமாஸ் பக்கிரிசாமி எங்கடா"

"அவனா ஏம்மாமா கேக்குறீங்க"

"இப்ப கரண்டு போயிடும்டா" மாமா சொல்லி முடிக்கும் போது சரியாக கரண்ட் போயிடுச்சு. எனக்கு அவரின் இந்த தீர்க்கதரிசன பேச்சு ஆச்சர்யத்தை கொடுத்தாலும் பின்னே தான் தெரிந்தது அது இரவு பத்து மணிக்கு இரண்டு பேஸ் மின்சாரட்தை மூன்று பேசாக மாற்றும் நேரம் என்று.

பக்கிரி சாமி பெட்ரோமாஸ் வெளிச்சத்தை கொடுக்க மாமாவும் களைத்து போட்ட சீட்டு கட்டை ஒன்றாக்கி "இருங்கடா, மொதலியார் வந்துடுவார், ரொம்ப நேரம் ஆகாது வயசாகிடுச்சுல்ல வந்த பின்னே வச்சுக்கலாம்" என சொல்ல திண்ணை குபீர்ன்னு சிரிக்க எனக்கோ மண்டையை பிச்சுக்கலாம் போல இருந்தது.

அப்போது எல்லார் கவனமும் பக்கிரிசாமி பக்கம் திரும்ப மாமா " பக்கிரிசாமி! இங்க வாடா"

"என்ன சாமீ கரண்டு போனா தான் பக்கிரி கண்ணுக்கு தெரியுறானா, சாயந்திரம் மொதல பச்ச தண்ணி பல்லுல படல சாமீ"

"இருடா,மொதலியாரும் வரட்டும், உங்கச்சேரிய வச்சுப்போம், ந்தா கரண்டு வந்துடுச்சு பாரு, அட மொதலியாரும் வந்துட்டாரு பாரு, வாங்க மொதலியாரே, மந்தியானம் கண்டக்டரு கிட்ட சொல்லிவுட்டேனே சொன்னானா"

"ஆமாபுள்ள, வந்து சொன்னான்"

"ஒரு மணி நேரமாச்சாமே அம்பாபாய விட்டு கெளம்பி"

"ஆமா காரு கெளம்பல"

"காருமா?"

திரும்பவும் சிரிப்பு! இந்த பெரிய மனுஷன்களே இப்படித்தான், புரியும் படி பேசிக்கவே மாட்டானுங்கன்னு நெனச்சுகிட்டேன்.

மாமா மாலை ஐந்து முதல் ஒரே இடத்திலே உட்காந்து முதுகு வலித்ததாலும், களிம்பு போட வேண்டிய நேரம் வந்துவிட்டதாலும் அவருக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் தேவைப்பட "பக்கிரி இங்க வா, இந்தா ரெண்டு ரூவா போயிட்டு வா, மணிஅய்யரே, மொதலியாரு வந்திருக்காருல்ல ஒங்க சிஷ்யகேடி எதுனா இருந்தா பில்டர் காபிய கொண்டு வர சொல்லு" என வரிசையா கட்டளை போட்டு கொண்டே திண்ணை முனையில் நிலைப்படி அருகே வந்து உட்காந்து "சொல்லுங்க மொதலியாரே, நான் சொன்னா சொன்னது தான் அடுத்த தபா நீங்க திரும்பவும் தோக்க போறீங்க பாருங்க"

"அட போமய்யா, தம்பண்ணா இந்த தபா ஒரு ஓட்டுலயாவது ஜெயிக்கலைன்னா பாரு, காங்கிரஸ் கட்சிய பத்தி தெரியலைய்யா ஒமக்கு"

"அதான் தெரியுதே அம்பத்து ஒம்போதுல இருந்து கழுதை தேஞ்சுகிட்டே இருக்குதே, ஒரு ஓட்டுலயாவது நீங்க தோக்குறீங்க, கொல்லுமாங்குடி வரதன்ன மொவன் கோபாலுகிட்டே "

"யோவ் புள்ள வரதம்புள்ளயே காங்கிரஸ் தான்யா, அத மனசுல வச்சுக்க"

"சரி சரி அரசியலு வேண்டாம், இந்தா பக்கிரி வந்துட்டான், ஒரு கச்சேரிய கேட்டுட்டு ஆரம்பிப்போம், எலேய் பக்கிரி என்ன பழரசம் வாசன பிச்சுகிட்டு போவுது இத்தன ஜல்தி வந்துட்ட"

ஒரு வித போலி மரியாதை காமிச்சுகிட்டு "ஆமாங்கய்யா" என சொல்ல மாமா "பக்கிரி டி.என்.ஆர் தோடி வாசிக்கிற மாதிரி இதோ இந்த திருகோடிகாவலும் வாசிச்சுதுடா புள்ளையார் வாசல்ட, ஆஹா என்னா ஒரு சுருள் பிரமாதம் போ, நீயும் கேட்டுகிட்டு இருந்தியா அத" மாமாவின் குரலில் ஒரு நக்கல் இருந்தது. திருக்கோடிகாவல் ஒதுங்கி போனது.

"ஆமாங்கய்யா, ஆனா அதுக்கு ஏங்கய்யா பெரியவரு பேர சொல்லுறீங்க" இப்போது பக்கிரியின் குரலில் மிதமிஞ்சிய நக்கலும், கண்ணில் மித மிஞ்சிய ஆனவமும் தெரிந்தது.

"சரி நீதான் நல்லா விசில் அடிப்பியே, கொஞ்சம் வாசிச்சு காமி"

இதுக்காகவே காத்திருந்த பக்கிரிசாமி அந்த தொட்டி முற்றத்துக்கு போய்(அங்கே தான் பெட்ரோமாஸ் இடிக்காது ஏனனில் அது திறந்த முற்றம்) தன் இடுப்பில் இருந்த காசி துண்டை சும்மாடு சுத்தி பெட்ரோமாசை தலையில் சும்மாட்டின் மேல உட்கார வச்சு வலது கால் முழங்காலை கொஞ்சம் முன்னுக்கு தள்ளி ஒரு மாதிரி நொடிச்சுகிட்டு நின்ன வாக்கில் தன் இரண்டு கைகளையும் புற முதுகு கட்டி கொண்டு பின்னால் திரும்பி வெற்றிலையை துப்பிவிட்டு தன் தோள் பட்டையில் துடைத்து கொண்ட போது லைட் ஆடிய போது மாமாவை தவிர அத்தனை பேரும் விளக்கு விழுந்துடுமோன்னு பயந்து போனார்கள்.

"அட பயப்படாதீங்க சாமீ,நேரு இந்த ஊருக்கு வந்த காலத்திலேயே நான் இத தூக்க பழகிட்டேன்" என தன் புகழை தானே பாட மாமா "சரிடா தோடிய இழுத்து வுடு, மொதலியாருக்கு புடிச்சு இருந்தா இன்னும் ரெண்டு ரூவா"

தன் உதட்டை குவிக்காமலே தட்டையாக ஆனால் கொஞ்சம் கோணலாக வைத்து கொண்டு மெல்லியதாக தோடியை இழுக்க முதல் ஒரு அரை நிமிடம் உதடு பிடிபடும் வரை கொஞ்சம் பிசிறு தட்டி பின் மெதுவாக தோடி ராகம் அப்படியே ராஜரத்தினம் பிள்ளை சாயலில் இழைந்து ஓட தெருவில் போகும் சிலரும், உள்ளே சமையல் கட்டு ஆட்களும் கூட்டமாக சேற, அந்த இடம் சொர்கலோகமாக மாறியது. பின்னே ராகத்தை ஆலாபனை செய்து பின் தோடியில் அமைந்த சீர்காழி மாரிமுத்தாபிள்ளை கீர்த்தனைக்கு வந்து சுருள் விட ஆரம்பித்த போது அப்படியே டி,என்,ஆர் வந்து நிற்பது போல இருந்தது. திருக்கோடிகாவலுக்கு வியர்த்து போனது. நடுவே கண்ணை முழித்து பார்த்த போது மாமாவின் சைகை பக்கிரிக்கு புரிந்தது. திருக்கோடிகாவல் தப்பு செய்த இடத்தில் அதே பிசிறு அடிச்சு அவரை பார்த்து சிரித்தது பக்கிரி!

கூட்டம் அப்படியே பிரம்மிச்சு போய் நின்ன போது மாமா படபடவென கைத்தட்ட கூட்டம் மொத்தமும் தட்டியது. பக்கிரி கச்சேரியை ஆரம்பித்த உடனேயே பாலய்யர் மகாதானத்தெரு முனையில் தான் வீடாகயாலும் விசில் சத்தம் அந்தமட்டும் கேட்டதாலும் தாலிக்கான மஞ்சள், நூல் எல்லாம் எடுத்து வந்து தம்பண்ணா முதலியார் பக்கத்தில் மனைகட்டை போட்டு உட்காந்து கொண்டு நூலில் மஞ்சள் தடவி தன் காலை வேலைகளை இரவே ஆரம்பித்துவிட்டார். மாமா கைதட்டி முடிந்து வலதுகையின் மூன்று விரலை மடக்கி ஆட்காட்டி விரலை கட்டை விரலால் சுண்டிய போது கம்பீரமாக ஆரம்பித்தது "ஆயிரம் கண் போதாது வண்ண நிலவே" சிதம்பரம் ஜெயராமன் பாட்டு.

எனக்கு அந்த பிராயத்திலே தோடியோ, மாரிமுத்தாபிள்ளையோ அத்தனை பரிட்சயம் இல்லாவிடினும் அந்த ஆயிரம் கண் போதாது வண்ண நிலவே ஒரு அசத்து அசத்தத்தான் செய்தது. ஒரு வழியாக கச்சேரி முடிந்து பக்கிரி பெட்ரோமாசை கீழே வைத்த போது பக்கிரிக்கு நாலு நாளுக்கு தேவையான பழரச காசு தேறியது.

"ஆமா புள்ள, இவனுக்கு எப்படி இத்தன ஒரு ஞானம்" இது முதலியார்.

"ஆமா மொதலியாரே, இவனுக்கு இருக்குறது கேள்வி ஞானம். இவனுக்கு சின்ன வயசுல இருந்தே வெளக்கு தூக்குறது தான் வேலையே. தருமோரம் (தர்மபுரம் மடம்) மடத்துல பண்டாரசன்னதிக்கு வருஷா வருஷம் பட்டனபிரவேசம் வருமே அப்ப பெரிய பெரிய செட்டு எல்லாம் வரும் மொதலியாரே. செம்னார்கோவில், திருவமழ,திருவாடுதொர எல்லா செட்டும் போட்டி போட்டுகிட்டு விடிய விடிய வாசிச்சுகிட்டு இருக்கும் போது இவன் பழரசத்த குடிச்சுட்டு தலையிலே வெளக்க வச்சுகிட்டு நின்னுகிட்டே தூங்கிடுவானா, அப்போ இவன் காதுல வந்து விழுந்து கிட்டே இருக்கும் செம்னார்கோவில் பெரிய செட்டோட பல்லவியும், திருவமழ பைரவியும், ராஜரத்தினம்புள்ள தோடியும். அது சின்ன வயசுல இருந்தே இவனுக்கு ஊறி போச்சு, அதான் இத்தன ஒரு கேள்வி ஞானம் மொதலியாரே அத விட இது வரை யாரும் செய்யாத செம்னார்கோவில் பல்லவில தாள கணக்கு வழக்கு இவனுக்கு நல்லா வரும். வலது கால்ல ஒரு தாளம், இடது கால்ல ஒரு தாளம்ன்னு இவனும் செய்வான், ஆனா கேட்டா ஒண்ணும் தெரியாது "

"அது சரி புள்ள, விசில் அடிக்க சொன்னா இவன் ஏந் தலையிலே லைட்ட வச்சுகிட்டு வாசிக்கிறான்?"

"அதுவா அவன் வித்தை கத்துகிட்டதே அப்புடித்தானே, இப்ப ஒங்கள செருப்பு போட்டுகிட்டு கார ஓட்ட சொன்ன முடியுமா, அப்புடித்தான்"

மாமாவின் விளக்கம் எனக்கும் திருப்தியாகவே இருந்தது. ஆச்சு மணி பதினொன்று. திரும்பவும் மாமாவின் கச்சேரி களை கட்ட தொடங்கியது.

தொடரும்..............