பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 3, 2009

வீரசேகர விலாஸ்!!! பாகம் # 5

இதன் நாலாம் பாகத்தை இங்கே போய் படிக்கலாம்!

*************************************
ஆரத்தி எடுத்து உள்ளே போகும் முன்னமே சத்திரத்தின் வாசல் வந்தவுடனேயே நாயனக்காரர் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சேதுரமன் - பொன்னுசாமி பிள்ளை வாசிப்பாரே அந்த நோட்டு ஸ்வரம் என்னும் மேற்கத்திய இசையை வாசித்து விட்டு சுற்றியும் பார்க்க "அய்யே படத்திலே கேட்ட அளவு இல்லியே" என கூட்டம் உதட்டை பிதுக்க, "அப்ப நீங்க ஆயிரம் ரூவா கொடுத்து அவங்களை தான் வைக்கனும்" என நாதஸ்வர கோஷ்டி சொல்வதாகவே பட்டது எனக்கு. உள்ளே வந்த பின்னே ஹாலின் மேல பகுதியில் கிழக்கு பார்த்து தனி மேடை மாதிரி உட்காந்து நாயனக்காரர் முன்னே சொன்ன மாதிரியே "குறை ஒன்றும் இல்லை"யை லயிச்சு வாசிக்க மாமா "அப்ப இந்த கச்சேரி தேங்காமூடி கச்சேரியாயிடும்னு சொல்லு" என தன் கச்சேரியில் திருவாய் மலர இரண்டு திண்ணையும் ரெண்டு பட்டது.

பந்திக்கு முந்துபவர்கள் முந்த, சினிமா கோஷ்டி பெண்கள் மிகவும் உற்சாகத்துடன் டிக்கெட் காசை எடுத்து கொண்டு சிவாஜி அண்ணன் & கோஷ்டியை தேடியது. கடைசியில் பந்தியில் "இந்த இலைக்கு பாயசம் போடுங்க"ன்னு சொல்லிக்கொண்டு இருந்த அந்த இள வட்டத்தை தாவங்கட்டையை பிடித்து "தம்பி, பாயசம் நான் எடுத்து வைக்க சொல்றண்டா மணிஅய்யர் கிட்ட, நீ ஓடி போயி பேர்லஸ்ல பூபதி கிட்டே சொல்லி டிக்கெட் வாங்குடா, இன்னிக்குன்னு பார்த்து நல்ல முகூர்த்த நாள்டா, எல்லா கல்யாண கூட்டமும் அங்க தாண்டா வந்திருக்கும்" என கெஞ்சி அனுப்பி வைத்தது. ஐந்து பேராக இருந்த அந்த சினிமா கோஷ்டி கொஞ்சம் கொஞ்சமாக பெரியதாகி வண்டு, சிண்டு என பத்து வயது பச்ங்க கூட டிக்கெட் காசு மிச்சம் செய்ய இடுப்பில் ஏறி கொள்ள நான் மட்டும் அந்த பிசாத்து ஒன்னரை ரூபாய்க்காக இடுப்பில் ஏற வெட்கப்பட்டு சீட்டு கச்சேரி பக்கம் வேடிக்கை பார்க்க ஒதுங்க அத்தை மட்டும் "யேய் ஒவ்வொருத்தியா தனி தனியா போங்க மண்டபத்தை விட்டு, இல்லாட்டி பொண்ணு வீட்டுல தப்பா நெனச்சுக்க போறாங்க, பின்ன தெரு மொனையிலே போய் ஒண்ணா சேர்ந்துகுங்க, எல்லாரும் கழுத்த இழுத்தி போத்திக்கனும்" என சொல்லிவிட்டு பொண்ணோட திரட்டி பால் அத்தையையும், மாப்பிளை பக்கம் இரண்டு அத்தையையும் கூட்டி ஏதோ மந்திராலோசனை செய்ய நான் என்னவாயிருக்கும் என யோசனை செய்து அந்த கூட்டத்தில் உள்ளே நுழைய "டேய் இவன் வேற முந்திரி கொட்டை மாதிரி, போடா அந்தண்ட"ன்னு விரட்டப்பட்டேன்.

"இந்தா பாருங்கப்பா, கும்மோணம் பெரிய தெரு பஞ்சு செட்டியார் கடையிலே தான் வாங்கனும், போன வாட்டி மாதிரி அஞ்சடிக்கு வாங்கிடாதீங்க, இவன் வாடஒசந்த பய, உங்க பொண்ணு மாதிரி மரப்பாச்சி இல்ல, அங்க தான் ஒரிசினலா கெடக்கும் எலவம்பஞ்சு, உள்ள கொட்டையும் இருக்காது, அப்புடித்தான் பெரியவன் கல்யாணத்துல மெத்த உள்ள எலவங்கொட்ட இருந்து அத எலி கடிச்சு நாசமாக்கிடுச்சு,அது பத்தாதுன்னு காஞ்சனா கால வேற கடிச்சுடுத்து. "ஏண்டி இத்தன ஆழமா கடிக்கிற அளவு என்னடீ பண்ணிகிட்டு இருந்த"ன்னு கேட்டதுக்கு "நான் அவருன்னு நெனச்சேன்னு சொன்னா பாரு"ன்னு சொல்லிட்டு இடி இடியென் சிரிச்சாங்க. "அதனாலத்தான் சொல்றேன் கும்மோணம் தாஞ் சரி, இப்ப பஸ்ஸ புடிச்சா பதினோரு மணிக்கு அங்க போலாம். செட்டியாரு முகூர்த்த நாள்ன்னா ஒரு மணிக்கு தான் அடப்பாரு. திண்ணையிலே பஞ்சாமய்யரு வூட்டு செயராமந்தம்பி இருக்கு, ஒரு கைலெட்டரு வாங்கி தாரேன், நூரு ரூவாய்க்கு ரெண்டு தலவாணியோட தருவாரு, மறந்து போயி ஒரை வாங்கிடாதீங்க அது சாத்திரம் இல்ல, திரும்ப ராத்திரி ஒண்ணரை ஆகிடும். கண்ணு படாம கொண்ணாந்து காம்ராவூட்டுல (சந்திரத்தின் ஒரு அறை) வச்சுடுங்க"

கிட்ட தட்ட சாப்பிட்டவர்கள் களைய, சினிமா கூட்டம் நைசா வெளியேற, நாதஸ்வர கோஷ்டி நாயனத்தை நாயன பையில் போட, தவில் சின்ராசு காவி துணி போட்டு தவிலை மூடிகிட்டு இருக்கும் போதே மணிஅய்யர் மாமாவின் கச்சேரியில் ஐக்கியமானார். அப்போ ஒழுகும் வெற்றிலை எச்சிலை தன் துண்டில் அவசரமாக துடைத்து கொண்டே அம்மாபாய் சத்திரத்தில் இருந்து தெட்ஷா ஓடிவர மாமா "வாடா தெட்ஷா ஆச்சாள்பொரம் பெரிய தம்பி இத்தன தம்மு க்ட்டி வாசிச்சா என்னை மாதிரி மூல களிம்பு வச்சிகிட்டு அலையனும்னு சொல்லி சுருக்க முடிச்சுகிட்டு வரவேண்டியது தான" என சொல்லி கொண்டே சீட்டை களைத்து போட்டார்.

"அண்ணே அம்பாபாய்க்கு நன்னிலம் எக்ஸ் சேர்மென் பேரளம் மொதலி வந்திருந்தாருண்ணே, நீ போடா முன்னாடி நான் கார்ல வந்துடறேன்னு சொன்னாரு,இன்னுமா வரல"

"எங்க, அவரு வடக்குவீதி பக்கமா போயி பல்லு வெளக்கிட்டு வருவாரு, (இதன் உள் அர்த்தம் எனக்கு ரொம்ப நாள் விளங்கவே இல்லை)எலேய் பெட்ரூமாஸ் பக்கிரிசாமி எங்கடா"

"அவனா ஏம்மாமா கேக்குறீங்க"

"இப்ப கரண்டு போயிடும்டா" மாமா சொல்லி முடிக்கும் போது சரியாக கரண்ட் போயிடுச்சு. எனக்கு அவரின் இந்த தீர்க்கதரிசன பேச்சு ஆச்சர்யத்தை கொடுத்தாலும் பின்னே தான் தெரிந்தது அது இரவு பத்து மணிக்கு இரண்டு பேஸ் மின்சாரட்தை மூன்று பேசாக மாற்றும் நேரம் என்று.

பக்கிரி சாமி பெட்ரோமாஸ் வெளிச்சத்தை கொடுக்க மாமாவும் களைத்து போட்ட சீட்டு கட்டை ஒன்றாக்கி "இருங்கடா, மொதலியார் வந்துடுவார், ரொம்ப நேரம் ஆகாது வயசாகிடுச்சுல்ல வந்த பின்னே வச்சுக்கலாம்" என சொல்ல திண்ணை குபீர்ன்னு சிரிக்க எனக்கோ மண்டையை பிச்சுக்கலாம் போல இருந்தது.

அப்போது எல்லார் கவனமும் பக்கிரிசாமி பக்கம் திரும்ப மாமா " பக்கிரிசாமி! இங்க வாடா"

"என்ன சாமீ கரண்டு போனா தான் பக்கிரி கண்ணுக்கு தெரியுறானா, சாயந்திரம் மொதல பச்ச தண்ணி பல்லுல படல சாமீ"

"இருடா,மொதலியாரும் வரட்டும், உங்கச்சேரிய வச்சுப்போம், ந்தா கரண்டு வந்துடுச்சு பாரு, அட மொதலியாரும் வந்துட்டாரு பாரு, வாங்க மொதலியாரே, மந்தியானம் கண்டக்டரு கிட்ட சொல்லிவுட்டேனே சொன்னானா"

"ஆமாபுள்ள, வந்து சொன்னான்"

"ஒரு மணி நேரமாச்சாமே அம்பாபாய விட்டு கெளம்பி"

"ஆமா காரு கெளம்பல"

"காருமா?"

திரும்பவும் சிரிப்பு! இந்த பெரிய மனுஷன்களே இப்படித்தான், புரியும் படி பேசிக்கவே மாட்டானுங்கன்னு நெனச்சுகிட்டேன்.

மாமா மாலை ஐந்து முதல் ஒரே இடத்திலே உட்காந்து முதுகு வலித்ததாலும், களிம்பு போட வேண்டிய நேரம் வந்துவிட்டதாலும் அவருக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் தேவைப்பட "பக்கிரி இங்க வா, இந்தா ரெண்டு ரூவா போயிட்டு வா, மணிஅய்யரே, மொதலியாரு வந்திருக்காருல்ல ஒங்க சிஷ்யகேடி எதுனா இருந்தா பில்டர் காபிய கொண்டு வர சொல்லு" என வரிசையா கட்டளை போட்டு கொண்டே திண்ணை முனையில் நிலைப்படி அருகே வந்து உட்காந்து "சொல்லுங்க மொதலியாரே, நான் சொன்னா சொன்னது தான் அடுத்த தபா நீங்க திரும்பவும் தோக்க போறீங்க பாருங்க"

"அட போமய்யா, தம்பண்ணா இந்த தபா ஒரு ஓட்டுலயாவது ஜெயிக்கலைன்னா பாரு, காங்கிரஸ் கட்சிய பத்தி தெரியலைய்யா ஒமக்கு"

"அதான் தெரியுதே அம்பத்து ஒம்போதுல இருந்து கழுதை தேஞ்சுகிட்டே இருக்குதே, ஒரு ஓட்டுலயாவது நீங்க தோக்குறீங்க, கொல்லுமாங்குடி வரதன்ன மொவன் கோபாலுகிட்டே "

"யோவ் புள்ள வரதம்புள்ளயே காங்கிரஸ் தான்யா, அத மனசுல வச்சுக்க"

"சரி சரி அரசியலு வேண்டாம், இந்தா பக்கிரி வந்துட்டான், ஒரு கச்சேரிய கேட்டுட்டு ஆரம்பிப்போம், எலேய் பக்கிரி என்ன பழரசம் வாசன பிச்சுகிட்டு போவுது இத்தன ஜல்தி வந்துட்ட"

ஒரு வித போலி மரியாதை காமிச்சுகிட்டு "ஆமாங்கய்யா" என சொல்ல மாமா "பக்கிரி டி.என்.ஆர் தோடி வாசிக்கிற மாதிரி இதோ இந்த திருகோடிகாவலும் வாசிச்சுதுடா புள்ளையார் வாசல்ட, ஆஹா என்னா ஒரு சுருள் பிரமாதம் போ, நீயும் கேட்டுகிட்டு இருந்தியா அத" மாமாவின் குரலில் ஒரு நக்கல் இருந்தது. திருக்கோடிகாவல் ஒதுங்கி போனது.

"ஆமாங்கய்யா, ஆனா அதுக்கு ஏங்கய்யா பெரியவரு பேர சொல்லுறீங்க" இப்போது பக்கிரியின் குரலில் மிதமிஞ்சிய நக்கலும், கண்ணில் மித மிஞ்சிய ஆனவமும் தெரிந்தது.

"சரி நீதான் நல்லா விசில் அடிப்பியே, கொஞ்சம் வாசிச்சு காமி"

இதுக்காகவே காத்திருந்த பக்கிரிசாமி அந்த தொட்டி முற்றத்துக்கு போய்(அங்கே தான் பெட்ரோமாஸ் இடிக்காது ஏனனில் அது திறந்த முற்றம்) தன் இடுப்பில் இருந்த காசி துண்டை சும்மாடு சுத்தி பெட்ரோமாசை தலையில் சும்மாட்டின் மேல உட்கார வச்சு வலது கால் முழங்காலை கொஞ்சம் முன்னுக்கு தள்ளி ஒரு மாதிரி நொடிச்சுகிட்டு நின்ன வாக்கில் தன் இரண்டு கைகளையும் புற முதுகு கட்டி கொண்டு பின்னால் திரும்பி வெற்றிலையை துப்பிவிட்டு தன் தோள் பட்டையில் துடைத்து கொண்ட போது லைட் ஆடிய போது மாமாவை தவிர அத்தனை பேரும் விளக்கு விழுந்துடுமோன்னு பயந்து போனார்கள்.

"அட பயப்படாதீங்க சாமீ,நேரு இந்த ஊருக்கு வந்த காலத்திலேயே நான் இத தூக்க பழகிட்டேன்" என தன் புகழை தானே பாட மாமா "சரிடா தோடிய இழுத்து வுடு, மொதலியாருக்கு புடிச்சு இருந்தா இன்னும் ரெண்டு ரூவா"

தன் உதட்டை குவிக்காமலே தட்டையாக ஆனால் கொஞ்சம் கோணலாக வைத்து கொண்டு மெல்லியதாக தோடியை இழுக்க முதல் ஒரு அரை நிமிடம் உதடு பிடிபடும் வரை கொஞ்சம் பிசிறு தட்டி பின் மெதுவாக தோடி ராகம் அப்படியே ராஜரத்தினம் பிள்ளை சாயலில் இழைந்து ஓட தெருவில் போகும் சிலரும், உள்ளே சமையல் கட்டு ஆட்களும் கூட்டமாக சேற, அந்த இடம் சொர்கலோகமாக மாறியது. பின்னே ராகத்தை ஆலாபனை செய்து பின் தோடியில் அமைந்த சீர்காழி மாரிமுத்தாபிள்ளை கீர்த்தனைக்கு வந்து சுருள் விட ஆரம்பித்த போது அப்படியே டி,என்,ஆர் வந்து நிற்பது போல இருந்தது. திருக்கோடிகாவலுக்கு வியர்த்து போனது. நடுவே கண்ணை முழித்து பார்த்த போது மாமாவின் சைகை பக்கிரிக்கு புரிந்தது. திருக்கோடிகாவல் தப்பு செய்த இடத்தில் அதே பிசிறு அடிச்சு அவரை பார்த்து சிரித்தது பக்கிரி!

கூட்டம் அப்படியே பிரம்மிச்சு போய் நின்ன போது மாமா படபடவென கைத்தட்ட கூட்டம் மொத்தமும் தட்டியது. பக்கிரி கச்சேரியை ஆரம்பித்த உடனேயே பாலய்யர் மகாதானத்தெரு முனையில் தான் வீடாகயாலும் விசில் சத்தம் அந்தமட்டும் கேட்டதாலும் தாலிக்கான மஞ்சள், நூல் எல்லாம் எடுத்து வந்து தம்பண்ணா முதலியார் பக்கத்தில் மனைகட்டை போட்டு உட்காந்து கொண்டு நூலில் மஞ்சள் தடவி தன் காலை வேலைகளை இரவே ஆரம்பித்துவிட்டார். மாமா கைதட்டி முடிந்து வலதுகையின் மூன்று விரலை மடக்கி ஆட்காட்டி விரலை கட்டை விரலால் சுண்டிய போது கம்பீரமாக ஆரம்பித்தது "ஆயிரம் கண் போதாது வண்ண நிலவே" சிதம்பரம் ஜெயராமன் பாட்டு.

எனக்கு அந்த பிராயத்திலே தோடியோ, மாரிமுத்தாபிள்ளையோ அத்தனை பரிட்சயம் இல்லாவிடினும் அந்த ஆயிரம் கண் போதாது வண்ண நிலவே ஒரு அசத்து அசத்தத்தான் செய்தது. ஒரு வழியாக கச்சேரி முடிந்து பக்கிரி பெட்ரோமாசை கீழே வைத்த போது பக்கிரிக்கு நாலு நாளுக்கு தேவையான பழரச காசு தேறியது.

"ஆமா புள்ள, இவனுக்கு எப்படி இத்தன ஒரு ஞானம்" இது முதலியார்.

"ஆமா மொதலியாரே, இவனுக்கு இருக்குறது கேள்வி ஞானம். இவனுக்கு சின்ன வயசுல இருந்தே வெளக்கு தூக்குறது தான் வேலையே. தருமோரம் (தர்மபுரம் மடம்) மடத்துல பண்டாரசன்னதிக்கு வருஷா வருஷம் பட்டனபிரவேசம் வருமே அப்ப பெரிய பெரிய செட்டு எல்லாம் வரும் மொதலியாரே. செம்னார்கோவில், திருவமழ,திருவாடுதொர எல்லா செட்டும் போட்டி போட்டுகிட்டு விடிய விடிய வாசிச்சுகிட்டு இருக்கும் போது இவன் பழரசத்த குடிச்சுட்டு தலையிலே வெளக்க வச்சுகிட்டு நின்னுகிட்டே தூங்கிடுவானா, அப்போ இவன் காதுல வந்து விழுந்து கிட்டே இருக்கும் செம்னார்கோவில் பெரிய செட்டோட பல்லவியும், திருவமழ பைரவியும், ராஜரத்தினம்புள்ள தோடியும். அது சின்ன வயசுல இருந்தே இவனுக்கு ஊறி போச்சு, அதான் இத்தன ஒரு கேள்வி ஞானம் மொதலியாரே அத விட இது வரை யாரும் செய்யாத செம்னார்கோவில் பல்லவில தாள கணக்கு வழக்கு இவனுக்கு நல்லா வரும். வலது கால்ல ஒரு தாளம், இடது கால்ல ஒரு தாளம்ன்னு இவனும் செய்வான், ஆனா கேட்டா ஒண்ணும் தெரியாது "

"அது சரி புள்ள, விசில் அடிக்க சொன்னா இவன் ஏந் தலையிலே லைட்ட வச்சுகிட்டு வாசிக்கிறான்?"

"அதுவா அவன் வித்தை கத்துகிட்டதே அப்புடித்தானே, இப்ப ஒங்கள செருப்பு போட்டுகிட்டு கார ஓட்ட சொன்ன முடியுமா, அப்புடித்தான்"

மாமாவின் விளக்கம் எனக்கும் திருப்தியாகவே இருந்தது. ஆச்சு மணி பதினொன்று. திரும்பவும் மாமாவின் கச்சேரி களை கட்ட தொடங்கியது.

தொடரும்..............

14 comments:

 1. //ஒரு வித போலி மரியாதை காமிச்சுகிட்டு "ஆமாங்கய்யா" என சொல்ல மாமா "பக்கிரி டி.என்.ஆர் தோடி வாசிக்கிற மாதிரி இதோ இந்த திருகோடிகாவலும் வாசிச்சுதுடா புள்ளையார் வாசல்ட, ஆஹா என்னா ஒரு சுருள் பிரமாதம் போ, நீயும் கேட்டுகிட்டு இருந்தியா அத" மாமாவின் குரலில் ஒரு நக்கல் இருந்தது. திருக்கோடிகாவல் ஒதுங்கி போனது.//

  ஊருக்கு ஒரு ஆளு இப்படி நக்கல் அடிக்கவே மாமா உறவுல இருக்கும்போல :))

  எங்க மாமாவும் இதே மாதிரிதான் கல்யாண சீட்டுகட்டு பந்தியிலதான் ஊருல உள்ள பிரச்சனையெல்லாம் கிளப்பிவிட்டுட்டு சந்தோஷப்படுவாரு!:))

  ReplyDelete
 2. //தன் உதட்டை குவிக்காமலே தட்டையாக ஆனால் கொஞ்சம் கோணலாக வைத்து கொண்டு மெல்லியதாக தோடியை இழுக்க முதல் ஒரு அரை நிமிடம் உதடு பிடிபடும் வரை கொஞ்சம் பிசிறு தட்டி பின் மெதுவாக தோடி ராகம் அப்படியே ராஜரத்தினம் பிள்ளை சாயலில் இழைந்து ஓட தெருவில் போகும் சிலரும், உள்ளே சமையல் கட்டு ஆட்களும் கூட்டமாக சேற, அந்த இடம் சொர்கலோகமாக மாறியது. பின்னே ராகத்தை ஆலாபனை செய்து பின் தோடியில் அமைந்த சீர்காழி மாரிமுத்தாபிள்ளை கீர்த்தனைக்கு வந்து சுருள் விட ஆரம்பித்த போது அப்படியே டி,என்,ஆர் வந்து நிற்பது போல இருந்தது. திருக்கோடிகாவலுக்கு வியர்த்து போனது. நடுவே கண்ணை முழித்து பார்த்த போது மாமாவின் சைகை பக்கிரிக்கு புரிந்தது. திருக்கோடிகாவல் தப்பு செய்த இடத்தில் அதே பிசிறு அடிச்சு அவரை பார்த்து சிரித்தது பக்கிரி!///


  சான்ஸே இல்லண்ணே !

  அருமையான வர்ணிப்பு !

  இன்னுமா அந்த குட்டி மூளையில இம்புட்டு ஞாபகம் :)))

  ReplyDelete
 3. சில சப்ஜெக்ட்ஸ் அவுட் ஆப் சிலபஸ்ல இருக்கே அதெல்லாம் தனி தனி பதிவா கிளைவிட்டு வரணும் சரியா?

  :))))

  உதா:-

  பியர்லெஸ் தியேட்டரூ

  தருமபுரம் பட்டினபிரவேசம்

  ம்ம்

  அம்புட்டுதான் :)

  ReplyDelete
 4. வந்துட்டோமில்ல!!!!

  ReplyDelete
 5. மொத்தமும் முடிங்க வாரேன் :-)

  ReplyDelete
 6. வாய்யா நி. நல்லவரே நீயும் மூத்த பதிவரா ஆயிட்டியா? ஒரு சின்ன ஸ்மைலி போட்டுட்டு போற:-))))))))))))))))))))))))))

  ReplyDelete
 7. வாங்க இளவரசன் உங்க புரபைலை பார்த்த முதல் ஆளா நான் தான் போல இருக்கே! அது போல எனக்கு தான் முதல் பின்னூட்டம் போட்டு இருக்கீங்க போல இருக்கு! வாழ்த்துக்கள்! வந்து ஜோதியிலே ஐக்கியமாகுங்க:-))

  ReplyDelete
 8. வாப்பா ஆயில்யா! உன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! நீ கேட்ட சில சந்தேகத்துக்கு ச்சேட்ல பதில் சொல்லிட்டதால இப்ப நான் எஸ்கேப்:-)))

  நல்லா அனுபவிச்சதுக்கு நன்றிப்பா!

  ReplyDelete
 9. வாங்க கீதாம்மா! வந்தீங்க சரி! படிச்சீங்களா?:-)) வருகைக்கு நன்னி:-))

  ReplyDelete
 10. வாங்க அண்ணியாரே! உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! மாயவரம் மருமகள்ன்னா சும்மாவா:-))

  ReplyDelete
 11. அபி அப்பா. கொத்தமங்கலமே தான்.
  கொஞ்சமும் சோடை போகலை. என்ன வம்பு, எனன்ன குதர்க்கம், குசும்பு. அப்பாடி. கல்யாணத்துக்கு எப்பத்தான் வரப் போறீங்க.

  ஆயில்யனுக்குப் பொறந்த நாளாமே.
  ஏதாவது அனுப்பறாருன்னு கேளுங்க.:)

  ReplyDelete
 12. //தொடரும்..............//

  இந்த பதிவிலேயே எனக்கு மிகவும் வரிகள்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))