பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 25, 2010

அய்யோ ப்ராம்பூஊஊஊஊஊஊஊ!!!!!
காலை நட்ராஜை பள்ளியில் விட்டு விட்டு என் மனைவியை கோவிலில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து ஹாயாக வீட்டின் கேட் உடபட வாசல் கதவு எல்லாம் பப்பரக்கான்னு திறந்து வச்சுகிட்டு நாற்காலியில் லேப்டாப் ஓப்பன் செஞ்சுட்டு அதன் மேலே பேப்பர் வச்சு படிச்சுகிட்டு இருக்கும் போது தான் சம்பவம் நடந்தது. இல்லை ஊர்ந்ததுன்னு சொல்லலாம்.

நல்ல இம்மாம் பெரிய பாம்பு. (ரெண்டு கையையும் விரிச்சு வச்சிருக்கேன்) பொதுவா பாம்பை பார்த்தவன் எல்லாரும் "சும்மா இத்தா மொத்தம்ன்னு தன் முழங்கையை காட்டுவான். ஒரு ஆள் உசரத்துக்குன்னு சொல்லுவான். எவனுமே குட்டி பாம்பை பார்த்ததா சொல்லவே மாட்டான். அப்படி சொன்னா அவனுக்கு இழுக்கு என்பது போல் நினைத்து கொள்வான். நீங்க தயவு செய்து நம்புங்க. அது அத்தாதண்டி பாம்பு. இத்தனைக்கும் வாசலில் நந்தி மாதிரி என் வண்டி சாய்ஞ்சுகிட்டு நிக்குது. எப்படி வந்ததுன்னு தெரியலை. நிலைப்படி தாண்டி முக்கால்வாசி உள்ளே வந்துடுச்சு. மீதி வால் மாத்திரம் நிலைப்படிக்கு வெளியே இருக்கு. ஏதோ பெரியதாய் ஊர்வதை போல உள்ளுணர்வு சொன்னதால் திரும்பி பார்த்தேன்.

அது பாம்பு தான் என என் மூளைக்கு செய்தி போவதற்கு முன்பாக மீதியும் உள்ளே வந்துவிட்டது. அடுத்து என் கால் தான். கிட்ட தட்ட அதன் வாய்ப்பக்கம் என் கால் இருக்கு. அது இடது பக்கம் திரும்பினால் பூஜை ரூம். ஒரு வேளை சாமிகும்பிட வந்திருக்குமோ? இல்லை இன்றைக்கு என்ன கிழமை? அய்யோ அவசரத்துல கிழமை எல்லாம் மறந்து போச்சு. எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.

பாம்புகடித்தால் வாயில் நுரை வருமே. அடடா வாயில் வெற்றிலை வேற போட்டிருக்கேன். நுரை வர அது இடைஞ்சலா இருக்குமே...ச்சே மனசு என்னவெல்லாம் நினைத்து தொலைக்கிறது. பூஜை அறையில் ஓம் நமச்சிவாய ஓடிகிட்டு இருக்கு. பேசாம எதுனா எல் ஆர் ஈஸ்வரியின் பாம்பு பாட்டு ஓடினா கூட அது கேட்டுகிட்டு சமத்தா கொத்தாம போயிடும் என நினைத்து கொண்டேன்.

அடுத்து அடுத்து என்ன நடந்தது என்பதெல்லாம் சரியா நியாபகம் வரவில்லை இப்போது. ஆனா கத்தினேன். டீசண்ட்டா கத்தலை என்பது மாத்திரம் நல்லா தெரியுது. பக்கத்துல கட்டுமான பணியில் இருக்கும் கொத்தனார், மேஸ்திரி எல்லாம் வந்தாச்சு. அப்ப தான் கிட்ட தட்ட என் சுயநினைவுக்கு வர்ரேன். லேப்டாப் கீழே கிடக்கு. நான் சோபா மேலே நிற்கிறேன். வந்தவங்க எல்லாம் கையில் கம்பு, செங்கல் சகிதம் நிற்க அது "ஆகா தப்பான இடத்துக்கு வந்துட்டமோ"ன்னு திரும்பி படியிறங்கி சாவகாசமா ஜல்லிமேல் ஊர்ந்து காம்பவுண்ட் சுவர் ஏறுது.

பயந்துடுச்சு. ஆமாம் நான் அத்தனை ஒரு கத்தல். முன்னமே சொன்ன மாதிரி டீசண்டா கத்தலை. அதிலே ஒரு சித்தாள் சொன்னான் "யாரோ ஆடு அறுக்குறாங்கன்னு நினைச்சு வந்தேன்" ங்கொய்யால என் சத்தம் அப்படியா இருந்துச்சு. எங்க போச்சு அதுன்னு பாருங்கன்னு சொன்னதுக்கு ஒருத்தன் "அது சந்து வழியா கொல்லை பக்கம் போயிடுச்சுங்க"ன்னு சொன்னதும் எனக்கு இன்னும் பயம்.

"யோவ் யாராவது வந்து கொல்லை கதவு திறந்து பாருங்கய்யா"ன்னு கத்த ஒரு மாவீரன் போய் திறந்தான். 'அய்யய்யோ'ன்னு அலறி கதவை சாத்தினான். "மேஸ்திரி மேஸ்திரி இங்க வாசல்ல கெடக்கு மேஸ்திரி"ன்னு கத்த எனக்கு வெள்ளிகிழமை விரதம் சிவகுமாரெல்லாம் நியாபகம் வந்து போனாங்க. ஆகா பாம்பே, நான் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை. சும்மா பகுத்தறிவுன்னு பீலா தான் வுடுவேன். நீ இப்ப சொல்லு இப்பவே வேண்டிக்கறேன். அலகு குத்தி தீமிதிக்கனுமா செய்ய சொல்றேன். இதுக்காகவே தான் என் அப்பா அம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க என வேண்டிகிட்டேன்.

பின்னே ஒரு வழியா அதை விரட்டிட்டு எல்லாரும் தன் வேலையை பார்க்க போயாச்சு. மெதுவா லேப்டாப்பை எடுத்து வச்சுட்டு என் மனைவிக்கு போன் செஞ்சா என் மாமனார் தான் எடுத்தாங்க. "மாமா பாம்பு பாம்பு"ன்னு சொல்ல ஆரம்பிக்கும் போதே "சரி மாப்ள அனுப்பி வைக்கிறேன்"ன்னு சொல்லி வச்சுட்டாங்க. அட தேவுடா திரும்பவும் பாம்பை அனுப்பி வைக்க போறாங்களான்னு நினைச்சு கிட்டே என் பெரிய அக்காவுக்கு போன் செய்தேன்.

"டேய் நீ ராத்திரி ஒழுங்கா தூங்காம கம்பியூட்டரை கட்டிகிட்டு அழற. அதான் தூக்க கலக்கம். நல்லா படுத்து தூங்கு"

"அக்கா இல்லைக்கா எல்லாரும் பார்த்தாங்க"

"எல்லாரும் நின்னு பார்க்கும் போது உனக்கு மட்டும் என்ன பயம் வேண்டி கிடக்கு"

"அய்யோ எல்லாரும் அது போன பின்னேதான் பார்த்தாங்க"

"போன பின்னே என்னாத்தை பார்த்தாங்க?"

"அய்யோ அக்கா இதுக்கு பாம்பே தேவலை. நீ போனை வச்சிடு. எனக்கு போன்ல ஆஃப் பட்டன் எங்க இருக்குன்னு கூட தெரியலை. கை நடுங்குது"

"சரி நீ எதுக்கும் 2 முட்டை வாங்கி மாரியம்மன் கோவில்ல வச்சுடு சாயந்திரம்"

"நாட்டுகோழி முட்டையா ஒயிட்லகானா"

"பாம்புக்கு என்னடா தெரிய போவுது. அது போய் செட்டியார் கடையிலே கேட்கபோவுதா அவன் நாட்டுகோழிமுட்டை வாங்கினானா, சத்துணவு திருட்டு முட்டை வாங்கினானான்னு"

அதுவும் சரிதான். எனக்கு தான் பயத்திலே ஒன்னும் புரியமாட்டேங்குது.பெரிய அக்கா எப்பவும் இப்படித்தான். சின்ன அக்கா தான் சரின்னு அதுக்கு போன் பண்ணினேன். விஷயத்தை சொன்னேன்.

"டேய் நீ இந்த கதை சொன்னதும் நம்ம சின்ன வயசுல மங்களத்தக்கா நியாபகம் தான் வருது. அது நுரை தள்ளி செத்து போச்சு தெரியுமா? உனக்கு நியாபகம் இருக்கோ"

"யக்கா, உனக்கு வெவஸ்தையே கிடையாது. நானே பாம்பை பார்த்துட்டு பயந்து கிடக்கேன். நீ வேற இதல்லாம் நியாபகபடுத்திகிட்டு"

"ஓக்கேடா. நான் ஒன்னு சொல்றேன் கோவிக்காத கேளு"

"சீக்கிரம் சொல்லு. நானே கதவை எல்லாம் பூட்டிகிட்டு இருக்கேன்"

"அடப்போடா பயந்தாகுளி பயலே. இப்படித்தான் ராஜா ஒருத்தர் பாம்புக்கு பயந்துகிட்டு பூட்டிகிட்டாராம். கடைசியா எலுமிச்சம் பழத்திலே இருந்து புடுங்குச்சாம்"

"அய்யோ அக்கா அது புடுங்குனது இருக்கட்டும். நீ என்னவோ பரிகாரம் சொல்ல போறதா நினச்சு கேட்டுகிட்டு இருக்கேன்"

"ஆமாடா பரிகாரம் தான். உனக்கு இல்லை. கிருஷ்ணாவுக்கும் குழந்தைகளுக்கும் தான். நீ இன்னிக்கே நல்ல நாள். அத்தானுக்கு சொந்தம் ஒருத்தர் L.I.C ல ஏஜண்ட். நல்ல கைராசிக்காரர். கையோட பணம் வாங்கி கொடுத்துடுவாரு குடும்பத்துக்கு. பாலிசி போட்டோமா, அத்தோட அதை மறந்தோமான்னு இருக்க மாட்டாரு"

"ஆமா இருக்கியா செத்துட்டியான்னு தினம் தினம் வந்து பார்ப்பாரா?"ன்னு கத்திகிட்டே போனை வைக்கவும் கத்வு தட்டும் சத்தம் கேட்டது. ஒரு பயத்துக்காக டிவி வேற சத்தமா வச்சிருந்தேன். என் நேரம் ஸ்ரீபிரியாவும் கமலும் "ஓரிடத்தில் இல்லாது நான் தவிக்க"ன்னு நீயா பாட்டை பாடிகிட்டு இருந்தாங்க.

ஆகா வந்துட்டான்யா வந்துட்டான்யா...சுத்தி சுத்தி வருதே இப்படி. ஆமா பாம்பு கதவை எல்லாம் தட்டிகிட்டு மே ஐ கம் இன்னு சொல்லிகிட்டா வரும். அய்யோ என் நேரம் அப்படி டெவலப் ஆனாலும் ஆகியிருக்கும் பாம்பெல்லாம் என நினைத்து கொண்டே மெதுவா பீப்பிங் ஹோல் வழியா பாம்பை பார்த்தேன். யாரோ வந்திருந்தாங்க. எதுக்கும் கண்ணாடி வழியா பார்த்தா அதன் பிம்பம் பாம்பு மாதிரி தெரியுதான்னு பார்த்தேன். (அந்த பாட்டில் கமல் அப்படித்தான் கண்டுபுடிச்சாரு) மனுசன் தான். கதவை திறந்து "யாருய்யா" என கேட்டேன்.

"பம்பு பிட்டருங்க, உங்க மாமா தான் அனுப்பினாங்க"

"ஓ நான் பாம்புன்னு சொன்னேன் அவங்க கிட்ட"

கதவை சாத்தினேன். வியர்த்து விட்டிருந்தது. அடுத்து ஒரேஜீவன் ஒன்றே தெய்வம் வாராய் கண்ணான்னு ஏதோ பாடிகிட்டு இருந்தது. ஒரு படப்பாடலாம். டிவியை நிறுத்தினேன். திரும்பவும் கதவு தட்டும் சத்தம். திறந்தேன். என் சகதர்மினி.

தாலி நிலைக்க கோவிலுக்கு போயிட்டு வந்திருக்காங்க.

"என்னங்க பேய் அடிச்ச மாதிரி இருக்கீங்க?"

விஷயத்தை எல்லாம் சொன்னேன்.

"இதுக்கு தான் சொன்னேன். காலையிலே சப்பாத்தி வச்சா சண்டை போடாம சாப்பிடனும். இப்படில்லாம் சண்டை போட்டா இப்படித்தான்"

அட ராமா சப்பாத்தி சண்டைக்கு எல்லாமா பாம்பு வரும்? என்ன லாஜிக் இல்லாம ஒரு பேச்சு. என் பாம்பு பிரச்சனை எல்லாருக்கும் காமடியா போச்சு. சரி நமக்கு வலையுலகம் தான் பிரச்சனையை கொட்டி தீர்க்க ஒரே வழின்னு நடந்ததை எழுத ஆரம்பிச்சேன். ஒரு நல்ல படமா பாம்பு படம் போட்டா நல்லா இருக்குமேன்னு நினைச்சு ஜீவ்ஸ் கிட்டே "ஒரு நல்ல பாம்பு படமா குடுப்பா"ன்னு கேட்டேன். அதுக்கு அவரு "நல்லபாம்பு படம் வேண்டுமா அல்லது நல்ல பாம்புபடமா வேண்டுமா?"ன்னு கேட்க எதுனா ஒரு பாம்புன்னு சொல்ல அவரு என்ன கலர் வேண்டும் என புடவைக்கு ஜாக்கெட் மேட்சிங் கேட்பது போல கேட்டாரு.

"அய்யோ ஜீவ்ஸ் நான் அவசரத்திலே சரியா கவனிக்கலை. கருப்பு...இல்லை இல்லை பிரவுன் கலர்தான். ஆனா கார்த்தால குளிக்காம வந்துடுச்சு போலிருக்கு வந்து போன இடம் கோடா இருக்கு"ன்னு சொல்லி வைக்க அவர்கிட்ட இருந்ததிலே கொஞ்சம் எடுத்து போட்டு எந்த டிசைன் பிடிக்குதோ அதை எடுத்துகுங்கன்னு சொன்னாரு. அதான் மேலே இருக்கும் பாம்பு.

சரின்னு நட்ராஜை அழைக்க ஸ்கூல் போனேன். நட்ராஜிடம் சொன்னேன். ஒரே அழுகை அவனுக்கு காட்டலைன்னு. ஹும் என்னையே நொந்துகிட்டேன். அபி வந்தா. அவளிடம் பள்ளியில் சொன்னேன். அவளுக்கு ஒரு சந்தேகம்.

"அப்பா பாம்புக்கு மாடி ஏற தெரியுமா?"

அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு!!!!

August 23, 2010

காவிரி அம்மா வந்தா மயிலாடுதுறைக்கு!!!!

சின்ன சின்ன படித்துரைகள். தண்ணீரில் காலை ஆட்டிகிட்டே சூடா பஜ்ஜி சாப்பிடலாம்.(ஒரே ஜம்ப் பண்ணி சாதாரண காவிரியை ஆடுதாண்டும் காவிரியா ஆக்கிடலாமா...ஒரு வெள்ளை ஆடு பாலத்தில் இருக்கு பாருங்க)


தெளிந்த நீரும் உடைந்த படித்துரையும்.


நந்தி இன்னும் மூழ்கலை. அதனால பாதுகாப்பான ஆழம் தான்.இன்று 23ம் தேதி ஆகஸ்ட் 2010. ஆவணி 7ம் தேதி. எங்க காவிரி வருவாளா இல்லியா என ஆடி 18ல் நாங்க நினைத்து நினைத்து ஏங்கிய காவிரி வரண்டு போய் கிடந்தது. காலை தம்பி நட்ராஜை அந்த பாலம் வழி அழைத்து போன போது பாலத்தில் நின்னு கொஞ்சம் கண்ணீர் வர ஏங்கியது நியாபகம் வந்தது.

பின்னர் காலை 11 மணிக்கு அபியிடம் இருந்து பள்ளி தொலைபேசியில் இருந்து போன்.

"அப்பா! காவிரியில் தண்ணீர் வந்துடுச்சாம். அனேகமா எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குமாம்"

"ஹேய் எனக்கு தெரியும். நீ காவிரில இறங்க கூடாது. இன்னிக்கு சுழல் ஜாஸ்தியா இருக்கும் அம்மா கிட்டே. நாம ஞாயிறு போகலாம்"

"ஒ நோ அப்பா எனக்கு நெசமாவே ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு"

"ப்ளீஸ் அபி இன்னிக்கு அம்மா ரொம்ப கோவமா வரும். ஆக்ரோஷமா இருக்கும். புது சுழல் கண்டுபிடிக்கும். எதுடா சாக்குன்னு எல்லாத்தையும் இழுத்து போட்டுகிட்டு போகும். அது ஒரு லூசு. அப்பத்திலே இருந்து அப்படித்தான். எப்ப கோவம் வரும்ன்னு எங்களுக்கே தெரியாது. இப்படித்தான் என் பிரண்ட்..."

"நோ அப்பா , நான் காவிரிக்கு போகலை போதுமா?"

எனக்கும் ஒரு ஆர்வ மின்சாரம் தொத்தி கொண்டது.பண்ணிரண்டுக்கு ஓடிப்போனேன்.

அம்மா வந்தாள். அதே அம்மாவை நான் ஆடி ஆடி ஒய்யாரமாக வந்ததையும் பார்த்திருக்கேன். கொஞ்சம் கோவமாக வந்ததையும் பார்த்திருக்கேன். பெரிய அகங்காரியாக "ஹேய் என்னை விட எவள் இங்க அழகு" என்கிற மாதிரியும் பார்த்திருக்கேன்.

"அய்யோ அய்யோ வீட்டுக்கு ஒரு மண் மூட்டை கட்டியாங்க கரையிலே போடுவோம். பச்ச குழந்தை வச்சிருக்குறவங்க ஓடிப்போய் பெரியகோவில்ல உட்காந்துகுங்க. வூட்டுக்கு ஒருத்தங்க ஓடியாங்க" என்னும் நடு இரவு பறை சத்தம் கேட்டு வாரி சுருட்டி எழுந்த அப்பாவை பார்த்திருக்கேன்.

அதை கேட்டு "போங்கடா போக்கத்த பயலுக! அவளுக்கு கோவம் வருது. பதிலுக்கு இவனுக பயந்து கெடக்கானுக, அவ திங்க வேண்டிய தின்னுட்டு உங்க வேண்டியத உண்டுட்டு போப்போறா" என ராமேச்வரம் மாயவரம் கலந்து என் பாட்டி பேசினதும் காதில் இருக்கு. அப்போ வார் வச்ச டவுசரோடு கூட்டத்தோடு கூட்டமாக போய் பார்த்த போது பத்ரகாளி உருவத்தில் தலையில் குடிசை கிரீடமாக அதன் மேல் கோழி இறகுக்கு பதிலாக கோழியையே வைத்திருந்த காளி ரூபத்திலும் அந்த காவிரியை பார்த்திருக்கிறேன்.

இதோ இப்போது இந்த வருஷம் பார்க்க போகும் காவிரி "இது என் வீடு நான் வருவேன். எவனும் கேட்க கூடாது. நான் வர மாட்டேன், ஆனா எல்லாரும் கேட்கனும்"என்கிற பன்ச் டயலாக் பேசி வருவது போல அப்படி ஒரு நுரை ததும்பும் காவிரி. என்னை பார்த்து சிரித்தது."என்னடி நீ சின்ன வயசுக்கு வராத பிள்ளைக்கு தாவணி போட்ட மாதிரி காலோடு காலாக போகிறாய்" என நினைத்து கொண்டேன். கொஞ்சமாக கரை பக்கம் தண்ணிர் வந்து வந்து மோதி போவது அந்த கால தாவணிப்பெண் மாராக்கை இழுத்து விட்டு இழுத்துவிட்டு நழுவுவதை போல இருந்தது.

எனக்கே நான் நினைத்தது தவறு என்பது தெரியும். என் அவயாம்பிகை தாய் ஒரு நேரத்தில் தாய், ஒரு நேரத்தில் பருவ மங்கை, ஒரு நேரத்தில் வயதான அம்மா என மாறி மாறி எங்களுக்கு காட்சி தருவது போல நொடிக்கு ஒரு தடவை வித்தை காட்டுவாள் என் அம்மா என தெரியும்.

ஓடிப்போய் நட்ராஜை அழைத்து வரும் போது சொன்னான். " அப்பா காவிரில தண்ணி வந்துடுச்சாம். இன்னிக்கு பாடம் எதும் இல்லை" ... எனக்கும் தான் தெரியுமே. அம்மா வந்தா அதான் பேச்சு மாயவரத்துக்கு. அது தவிர என்ன பாடம் உனக்கு?

காவிரியை தாண்டவில்லை. "அப்பா குளிப்போமா?"

இரண்டு நாட்களாக ஜுரம் தம்பிக்கு. அம்மா நீயா இவனை கஷ்ட்டப்படுத்த போகிறாய். கரையில் அவனை இறக்கி படியில் உட்கார வைத்து அவன் கையை வைத்தேன். "அப்பா நம்ம லேப்டாப் மௌஸ் மாதிரி இருக்கு"

வாவ்! என் அம்மாவின் மின்சாரம் அவனுக்கும் அடித்தது. இது உனக்கும் அம்மா, உனக்கும் அக்கா, உனக்கும் தங்கச்சி, உனக்கும் பாட்டி உனக்கும் அவயாம்பிகா அம்மா......

இடுப்பில் கட்டிக்கொண்டு பாலத்தில் இருந்து குதிக்கும் முன்னே இராகவன் நைஜீரியா அண்ணன் மனதில் வந்தார். சீமாச்சு அண்ணன் மனதில் வந்தார்.

"தம்பி இது நம்ம அம்மா! இப்ப போயிட்டு நாளை வந்து ஆட்டம் போடுவோம்"

"ஊகூம் மாட்டேன்"

அம்மா! நாங்க உன் குழந்தைகள். வருஷா வருஷம் வருவியே ஆடி 18 இப்போ ஆவணி வந்தாச்சு. என்னாச்சு உனக்கு?

சில பெண் குழந்தைகள் சில ஆண் குழந்தைகள் யூனிஃபார்ம் சகிதமாக வந்து அம்மா மடியில் ஆடின. "இந்த பாருங்க பசங்களா. ஓடி போயிடுங்க. இல்லாட்டி வீட்டிலே வந்து சொல்லுவேன்" என் பேச்சை யாரும் கேட்கவில்லை.

அதோ ஒரு வயோதிகர் அய்யர் மாதிரி இருக்கு... வந்து குளித்து ஏதோ கரையில் மந்திரம் சொல்கிரார். அதோ ஒரு உழவர் கிழவர் கோவண கிழவர் முங்கி முங்கி எழுகிறார்.

இதோ ஒரு கிழவியின் பிணம் மிதந்து போகுது. யார் பெத்த பிள்ளையோ அல்ல. யாரை பிள்ளையா பெத்த கிழவியோ என் அம்மா காவிரி எடுத்து போகிறாள். அவளுக்கு தீட்டு இல்லை.

இரவு நட்ராஜை நெஞ்சில் காசிதுண்டு போட்டு கட்டி கொண்டு .... "டேய் ... நான் கெட்ட தனமா திட்டுவேன். இனி பிள்ளையை கட்டிகிட்டு பாலத்தில் இருந்து குதிப்பதை விட்டுடு" ....தூரத்தில் நைஜீரியாவில் இருந்து குரல் கேட்க கேட்க நான் "தம்பி ராத்திரி வந்து நாம் குதிப்போம்" என சொல்லி கிட்டே நடந்தேன்!


குறிப்பு: போட்டோ இப்ப போய் எடுத்தேன். ஆனா அப்லோட் ஆகலை! பின்னே போடுவேன்!

August 21, 2010

இன்று பார்த்த அபியும் நானும் திரைப்படம்!!!

நல்ல மழை! சுற்றியும் நல்ல குளிர் காத்து. ஊரே அமைதியா இருக்கு. எல்லோரும் காலி பன்ணிட்டு எங்கயோ போயிட்டாங்க மாதிரி அப்படி ஒரு அமைதி. ஒரு சோபா இழுத்து டிவி கிட்டே போட்டு கிட்டு காலை டிவி இருக்கும் மேசையில் உதைந்து கொண்டு அபி.

"என்னம்மா படிக்கலையா?"

"இல்லை"

"நான் படிக்கும் காலத்திலே எங்க அப்பா இப்படி கேட்டா நாங்க பயந்து போய் படிக்க ஆரம்பிப்போம். ஈவன் கணிதம் போட்டு பார்க்கனும்னா கூட பார்முலாவை சத்தம் போட்டு படிப்போம்"

"ரொம்ப போலியா இருந்திருக்கீங்க. அஃப்கோர்ஸ் தாத்தாவும் அதை எதிர்பார்த்திருக்காங்க"

"ம் இருக்கலாம். ஆனா உனக்கு படிக்கலையான்னு கேட்டப்ப பயமா இல்லியா?"

"ஒய் எதுக்கு பயம். நான் தான் படிச்சுட்டனே படிக்க வேண்டியதை. தவிர ஹோம் ஒர்க் கூட முடிச்சுட்டேனே"

"ஒரு வேளை படிச்சிருக்காம இருந்தா அப்ப இப்படி டிவி பார்க்க உட்காரும் போது நான் அப்படி கேட்டிருந்தா நீ பயப்பட்டு இருப்பியா?"

"நோ நோ மாட்டேன். எனக்கு இன்னிக்கு இந்த படம் இப்படி பார்க்க ஆசையா இருந்துச்சு. மழை, குளிர், சோபா, கிட்டக்க டிவி, பக்கத்திலே அப்பா, போத்திக்க போர்வை, திங்க சீடை எல்லாத்துக்கும் மேல கலைஞர் டிவில "அபியும் நானும்'படம்"

"ஓ காட். இன்னிக்கு அபியும் நானும் படமா? நான் கூட அந்த படம் உன்னோட பார்க்க ஆசைப்பட்டேன். தேங் காட்"

இப்படியாக நாங்க பார்க்க ஆரம்பிச்ச படம்....இதோ மழை கொட்டி தீர்க்குது. ஒரே போர்வையில் நாங்க குடும்பத்தோட (அதிலே மடியிலே நட்டுவின் தூக்கம்)....ரொம்ப நல்லா இருக்கு படம்....

இதோ அபி தேயிலை தோட்டத்திலே விழுந்துட்டா. ஜோகிகிட்ட(யோகி இல்லை ஜோகி ஜோகி) பிரகாஷ்ராஜ் கோவிச்சுக்கறார்......

இதோ விளம்பரம் ஓடுது. எங்க கிட்ட ஒருவித அமைதி.....

படம் நல்லா இருக்குதேன்னு நினைச்சுகிட்டே விளம்பரம் பார்க்க அதில் மனது ஒட்டவேயில்லை. படத்தின் ஆரம்பம் முதலே நினைத்து பார்த்து கொண்டேன்.

அதில் வருவது போல நான் அபி பள்ளி செல்ல அத்தனை பிரயத்தனப்பட்டேனா என்றால் இல்லை தான். ஆனா அபிஅம்மா பட்டது ரொம்ப கஷ்டம். சிதம்பரம் அண்ணாமலை நகரில் பஸ் பிடிச்சு அபியை தூக்கிகிட்டே பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து நிர்மலா பள்ளிக்கு விட்டு விட்டு அங்கிருந்து நடந்து நடராஜர் கோவில், பின்ன அங்க இருந்து நடந்து நிர்மலா பள்ளி சர்ச் வாசலில் பின்னர் அபியை தூக்கிகிட்டு பேருந்துநிலையம் பின்னர் அண்ணாமலைநகர்...இப்படியாக ஒரு நாள் என்னை செய்ய சொல்லியிருந்தா அதல்லாம் முடியாது அபியை பத்தி பத்து பதிவு எழுத சொன்னால் ஜஸ்ட் லைக் தட் பாசம் சொட்ட சொட்ட எழுதி "சபாஷ்" வேண்டுமானா வாங்குவேன் ஆனா இப்படி கஷ்ட்டபட மாட்டேன் என சொல்லியிருப்பேனோ என்னவோ.

குழந்தை கையிலே வென்னீர் ஊத்திப்பது....அதல்லாம் நடந்தது. அது போல பலவிஷயங்கள் நடந்தது. ஆனால் என்னை அந்த படத்தின் அபிஅப்பாவை ஒப்பிட்டு பார்த்த போது தான் கிட்ட தட்ட அந்த அபிஅப்பாவும் ஒருவிதமான அதாவது தான் பாசமாக இருப்பதை விட "இவன் எத்தனை பாசம் வைத்திருக்கான் பாருன்னு இந்த உலகம் தன்னை பார்த்து சொல்ல வேண்டும் அல்லது அபி தன்னை தவிர யாரிடமும் பாசம் காட்டிவிட கூடாது என்கிற ஒரு மாதிரியான பொசசிவ்நெஸ்தனம் தான் புரிந்தது.இது ஒரு வித மனோவியாதியோ எனக்கூட நினைத்து கொண்டேன்.

மழை இன்னும் பெய்கிறது. மெல்ல அபி என்னிடம் திரும்பி "அப்பா இந்த விளம்பர நேரத்தில் சாப்பிட்டுறீங்களா? என கேட்டாள்.

"ஆக்சுவலி அபி இந்த படம் பார்க்கும் போதாவது நான் உன்னை பார்த்து சாப்பிடுறியாப்பான்னு கேட்டிருக்கனும் இல்லம்மா. உனக்கு தான் என் மேல இத்தனை பாசம் எனக்கு அத்தனை இல்லியோ"

"அதான் சொன்னனப்பா நீங்க ஆரம்பத்திலே இருந்தே ஒரு வித போலியாவே வாழ பழகிட்டீங்க இல்லாட்டி தாத்தா, பாட்டிகிட்ட பயந்த மாதிரி நடிச்சு நடிச்சே இருந்துட்டீங்க.அதுவே உங்க குணமாகிடுச்சு. இப்ப கூட உங்களை சாப்பிட சொன்னது பின்னே படம் போட்டவுடன் நீங்க சாப்பாடு கொடுன்னு டிஸ்டர்ப் செய்ய கூடாதுன்னு தான்"


எனது மனைவியிடம் இருந்து மெல்லிய புன்னகை வந்தது. அத்தனை குளிரிலும் எனக்கு நெற்றி வியர்த்தது. என் மனைவி பக்கம் திரும்பி "இவ என் சின்ன அக்கா மாதிரி. மனசிலே வச்சுக்க தெரியாது. பட்டு பட்டுன்னு உடைச்சிடுவா" என ஏதோ உளறி வைத்தேன்.

கொஞ்ச நேரம் படம் ஓடிய போது அபியை திரும்பி பார்த்தேன்.பிரதமரிடம் போனில் பேசும் காட்சி. அபி ஏதோ சிந்தனை. 'என்னப்பா சிந்தனை?"ன்னு கேட்டப்ப "அப்பா சிவில் சர்வீஸஸ் பிரில்லிமினரி ரிசல்ட் வந்தாச்சு. அக்டோபர் மெயின் எக்ஸாம்.ஆண்டி இப்ப பிரில்லிமினரி மாதிரி அதிலயும் பாஸ் பண்ணனும். அதுக்கு ரொம்ப ஹார்ட் வர்க் பண்ணனும்"....

"ஓ அபி, படம் பிடிக்கலையா?"

"நோ நோ படம் பிடிச்சு இருக்கு.ஐ ஏ எஸ் ஆகிட்டா இது மாதிரி ப்ரைமினிஸ்டர் கிட்ட எல்லாம் பேசலாம்"

அவள் மனசு படத்தில் அத்தனை ஒட்டலை என புரிந்தது. ஏதோ ஒரு போலித்தனம் படத்தில் இருப்பதை நானும் உணர்ந்தேன். ஆனா எடுக்கப்பட்ட விதம் நல்லா இருந்துச்சு.

படம் கிட்டதட்ட முடியும் தருவாய். ஏர்போர்டில் தன் மகளை பிரியும் அந்த காட்சியில் ஒரு மாதிரி எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தது. என் மனைவி எழுந்து ரூம் பக்கம் போய்விட அந்த காட்சி நன்றாக இருந்தது. பக்கத்தில் பார்த்தேன். அபி என் மடியில் தூங்கிவிட்டிருந்தாள். தலையை நகர்த்தி விட்டு ரூம் பக்கம் போனேன். என் மனைவி கண்ணில் ஈரம். எனக்கு தான் எந்த வித உணர்வும் இல்லை. கொஞ்சம் புரிந்தது. உண்மையான பாசம் என்றால் அந்த படத்தில் வரும் அபிஅம்மா மாதிரி பெண்ணின் மனசு புரிஞ்சுக்கனும், பிரியும் போது அப்போது தான் கண்ணில் தண்ணீர் வரும். இன்னும் என்னென்னவோ புரிந்து தொலைத்தது.

மழை விட்டிருந்தது. படத்தின் பெயரை "அபியும் அபிஅம்மாவும்"ன்னு வச்சிருக்கலாமோன்னு நினைச்சுகிட்டேன்.

August 18, 2010

அன்பு தருமி அய்யாவுக்கு,திரு. உமாசங்கர் I.A.S., விஷயமாக ஒரு கடிதம்!!!

ன்புள்ள தருமி அய்யா!

"உமாசங்கருக்காக ஒரு விண்ணப்பம்" பதிவு பார்த்தேன். அதை போல எல்லா வலைப்பதிவரும் உமாசங்கருக்காக ஆதரவு தெரிவித்து தங்கள் தங்கள் பதிவில் அந்த டிராஃப்டை போட்டு அவருக்கு மனரீதியாக பலம் உண்டாக்கும் பொருட்டு ஆதரவு தர சொல்லி சொல்லியிருக்கின்றீர்கள்.

முதலில் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். உமாசங்கர் என்கிற ..எஸ் அதிகாரியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய தொலைநோக்கு பார்வையும் செயல் திட்டங்களும் பிடிக்கும். முதன் முதலாக அனைத்து துறையும் கணினி மயமாக்க வேண்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அவர் உழைத்ததும், (முதல் போஸ்டிங் 1990ல் மயிலாடுதுறை சப் கலக்டர் தான்), எல்லா தரப்பு மக்களையும் அவர் அனுசரித்து போனதும், மழை வெள்ள காலத்தில் சாலையில் கிடந்த மரங்களை தானே முன்னின்று வெட்டி அப்புறப்படுத்தியதும் நேரில் கண்டவன்.

அதனால் மக்களிடம் அவர் தனி பெரும் செல்வாக்கோடு இருந்தார் என்பதும் அப்போதே ஆளும் கட்சியான அதிமுக (1991- 96) 1995ம் ஆண்டு அவரது காரில் குளிர்சாதன வசதி செய்து கொடுத்த நிறுவனத்துக்கு சலுகை செய்தார் எனவும், அரசின் அனுமதி இன்றி வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக இல்லாமல், தனி ஒருவரை பணியமர்தினார் என்றும், 20 கோடி அரசு நிதியை தன் சகோதரர் பணிபுரிந்த வங்கி கிளையிலே டெபாசிட் செய்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்டு மெமோ கொடுக்கப்பட்டது. இது தான் உமாசங்கர் அரசின் மூலமாக சுமந்த முதல் சிலுவை. இது ஜெயலலிதா ஆட்சியில் அவரது தலைமையில் அமைந்த ஆட்சியில்.

பின்னர் 2001- 2006 திரும்பவும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா ஆட்சியில் அதாவது 2005ல் கர்நாடக அரசின் கொள்கை முடிவுகளை உமாசங்கர் விமர்சித்து அது பற்றி கர்நாடக அரசு தமிழக அரசில் புகார் செய்து இவர் மீது மீண்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இது இவர் சுமந்த இரண்டாவது சிலுவை.

1995ல் சுமத்திய குற்றச்சாட்டை 1996ல் அமைந்த கலைஞர் தலைமையிலான அரசு விசாரித்து ஒழுங்கு நடவடிக்கையை களைந்தது. பின்னர் இரண்டாவது முறை 2006ல் திமுக ஆட்சி அமைந்த போது இரண்டாவது குற்றச்சாட்டை விசாரித்து அந்த குற்றச்சாட்டையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.

1996, 2006 ஆகிய வருடங்களில் அப்படி விசாரிப்புக்கு பின்னர் ஒழுங்கு நடவடிக்கையை டிஸ்மிஸ் செய்த திமுக அரசு இப்போது ஒரு புகாரின் பெயரில் கொடுத்த மெமோவை விசாரிப்புக்கு பின்னர் அவர் பக்கம் நியாயம் இருப்பின் தள்ளுபடி செய்யாதா?

இது ஒரு அரசின் சாதாரண நடவடிக்கை. ஒரு நாளைக்கு எத்தனை போக்குவரத்து பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு அதிகாரிகள் போன்ற பலர் மெமோ கொடுக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் குற்றம் இல்லையெனில் விடுவிக்கப்படுகின்றனர் என்பது உங்களுக்கு தெரியாதா?

ஏன் இதற்கு முன்னர் எஸ் அதிகாரிகள் மெமோ கொடுக்கப்பட்டது இல்லையா? ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இந்த பதிவின் காரணமாக உமாசங்கர் மீது பாசம் மற்றும் அன்பு காட்டுபவர்களை விட அரசியல் ரீதியாக திமுக அரசு மீது அவதூறு நோக்கில் மட்டுமே உமாசங்கருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது தான் மேலோங்கி இருப்பதாகவே எனக்கு படுகின்றது. ஏனனில் அந்த பதிவில் நீங்கள் கொடுத்திருக்கும் கையெழுத்து போடும் சுட்டியில் இருக்கும் கருத்து பகுதியில் "கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்" மற்றும் வழக்கமான குடும்ப வசவு வாசகங்களே பிரதானப்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும் அந்த பதிவில் இருக்கும் பின்னூடங்களும் அதே வாசகங்கள் கொண்டவையாகவே இருக்கின்றது..

இதே உமாசங்கர் அதே குற்றச்சாட்டை முன்பு எதிர்கொண்டது போல எதிர் கொண்டு நிரூபித்து வெளியே வருவதில் என்ன சிக்கல் இருகின்றது என்பதே என் கேள்வி. நீங்கள் சொல்வதை பார்த்தால் என்னவோ திமுக அரசு இந்திய குடியரசில் முதன் முதலாக ஒரு எஸ் அதிகாரியை அதுவும் தலித் என்பதால் பழிவாங்கி விட்டது போல ஒரு தோற்றத்தை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், திமுக அரசுக்கு எதிரலையை உண்டு செய்யும் அரசியல் பிரச்சாரம் போல மட்டுமே தோற்றம் அளிக்கின்றது. உணர்சி வசப்படும் பல பதிவர்கள் உமாசங்கருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டி தனக்கு அறியாமலே கூட தங்கள் அரசியல் விளையாட்டுக்கு பலியாக நேரிடுகின்றது என்றே நான் நினைகின்றேன்.

அப்படி பார்த்தால் அதிமுக அரசு முத்துகருப்பன் என்கிற தலித் பி எஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? ரவீந்திரநாத் பி எஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? உஜாகர் சிங், கே.என்.சுப்ரமணியம் போன்ற எஸ் அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகினரே? அத்தனை ஏன்? சந்திரலேகா என்னும் பெண் எஸ் அதிகாரி முகத்தில் ஆசிட் வீசப்பட்டதே . இதல்லாம் செய்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை விட மெமோ கொடுத்த திமுக அரசு அராஜகத்தின் உச்சமா? அதை எல்லாம் சரி என சொல்ல போகின்றனரா இப்போது இந்த உங்கள் பதிவை போடும் வலைப்பதிவர்கள்? இந்த மெமோ கொடுத்த விஷயம் விசாரணை முடிந்து முன்பு எப்படி தான்னை நிரூபித்து வெளியே வந்தாரோ அப்படியே வரப்போகின்றார்.

இப்போதும் சொல்கிறேன் எனக்கு உமாசங்கர் என்கிற ஆட்சியரின் ஆளுமை பிடிக்கும், அவரது ஆட்சி திறன் பிடிக்கும். அவரது திறமை பிடிக்கும். ஆனால் அவருக்கு ஆதரவு என்கிற போர்வைக்குள் புகுந்து கொண்டு திமுக எதிர்பு பிரச்சாரம் தான் பிடிக்கவில்லை என்கிறேன் என்பதை தயவு செய்து புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்

அபிஅப்பா