பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 30, 2007

மிக்க ஆனந்தமாக ஒரு நன்றி பதிவு!!!!

வணக்கம் என் அன்பு வாசகர்களே! தமிழ்மணத்தில் இருந்து நட்சத்திர அழைப்பு வந்த போது முதலே எனக்குள் ஒரு பரபரப்பு ஏறி பாக்கெட் உள்ளே உக்காந்துகிச்சு. செப்24-30 தேதி என அவர்கள் சொன்ன போது எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. காரணம் அந்த வாரம் முழுக்க எனக்கு பொறி பறக்க ஆணி இருக்கும் என தெரியும். ஆனாலும் ஒரு குருட்டு தைரியத்தில் ஒத்துக்கொண்டேன். அதன் பின்புதான் எனக்கு ஒன்னு பின்ன ஒன்னா பிரச்சனைகள் வர ஆரம்பிச்சுது.

சரி என்ன எழுதலாம்..... நல்ல காமடி எழுதுவாங்க, மொக்கை போடுறவங்க கூட ஸ்டார்ன்னு சொன்ன பின்ன பார்த்தா சூப்பர் பதிவா போட்டு தாக்கிடுவாங்க. அய்யனார், வரவனை, ஆழியூரான், கோவி.கண்ணன், முத்து லெஷ்மி, மங்கை, ஜஸீலா,காயத்ரி எல்லார் ஸ்டார் வீக்கையும் பார்த்தா அடிச்சு தூள்கிளப்பி இருக்காங்க. சரி காமடியா எழுதும் கண்மணி டீச்சர் ஸ்டார் வீக்ல பார்த்தா பிரம்மாண்டமா இருக்கு.சரி பேசாம பின்னவீவத்துவம் எழுதிடலாம்ன்னு தம்பி கதிர் கிட்ட எப்படிய்யா பீனாநானா எழுதுவதுன்னு கேட்டா அதை அவர் பதிவா போட்டுட்டாரு, மகி அதை வச்சு ஒரு பினாநானா எழுதி பாஸ் பண்ணிட்டாரு. எப்படியாவது லக்கி டவுசரை கிழிக்கலாம்ன்னு பார்த்தா அவருக்கு நாளை முதல் திருவிழாவாம் அதுக்காக தார்பாயிலே டவுசர் தைச்சு மாட்டிகிட்டாராம், ஸ்டீல்ல கூட ஃபேப்ரிகேட் பண்ண ஆர்டர் குடுத்து இருக்காருன்னு காத்து வாக்கிலே செய்தி வந்துச்சு. சரின்னு அந்த முடிவை மாத்தி கிட்டேன். (தப்பிச்சீங்க)

ஓக்கே அரசியல் தான் சரின்னு அவசர அவசரமா சென்ஷி கிட்ட "இப்ப யாரு சென்ஷி முதல்வர், அவரை திட்டி ஒரு பதிவு போடனும்"ன்னு கேட்டா அவன் "அண்ணே நல்ல டாக்டரா பாருங்க, அவசரமா அவசர சிகிச்சையா எலுமிச்சம் பழத்தை தலைல தேச்சுப்பதை விட ஒரு அண்டாவிலே ஜூஸ் பிழிஞ்சு அது உள்ள உக்காந்துப்பது உத்தமம்"ன்னு அடவைஸ் மழை!

ஆணீயம் பத்தி எழுதலாம்ன்னு நெனச்சு கிட்டு இருக்கும் போதே ஆன்லைன்ல ஜஸீலா, முத்துலெஷ்மி,லெஷ்மி எல்லாம் இருந்தாங்க. டக்குன்னு முடிவை மாத்திகிட்டு பெண்ணீயம் எழுதலாம்ன்னு பார்த்தா அண்ணாச்சி மோகன்தாசை தலை மறவா வச்சு ரகசிய பயிச்சி குடுத்துகிட்டு இருக்கார்ன்னு தகவல் வந்து அதையும் விட்டாச்சு.

சூடான இடுகைல வரனும்ன்னா பெரியார் தான் தெய்வம் அவரை விட்டா வழி இல்லை, அவருக்கு நேர்ந்துகிட்டு எழுத ஆரம்பிச்சா, கோபி போன் பண்ணி "அபிஅப்பா உங்களுக்கு கராத்தே தெரியுமா"ன்னு கேக்க எனக்கு குலை நடுங்கி போச்சு. ரைட்டு ஆன்மீகம் எழுதிடலாம் அதான் ஒரே வழின்னு பிள்ளயார் சுழி போட்டுட்டு 4 நாள் யோசிச்ச பின்னும் ஒன்னும் தேறலை.

ஓக்கே கவிதை எழுதிடலாம்ன்னு "அன்பே ஆருயிரே" ன்னு ரெண்டு வரி எழுதங்காட்டிலும் கண்மணி டீச்சர் தலைமையிலே ஒரு படை திரட்டி கிட்டு காயத்ரி கிளம்பி வர்ரதா குருவி கத்துச்சு. போனா போவுது கதை எழுதிடலாமேன்னு இம்சை அரசி ஜெயந்திகிட்ட போன் பண்ணி டிப்ஸ் கேட்டா ஒரு நாவல் எழுதும் அளவுக்கு பதில் வருது. கொட்டாவி விடாமயே தூங்கிட்டேன்.

சரி சரியா மாட்டிகிட்டோம்னு கொத்தனார் கிட்ட ஐடியா கேட்டா "ஆமா அபிஅப்பா தமிழ்மணம் இடைக்கு இடைக்கு தனக்கு தானே திருஷ்டி சுத்தி போட்டுக்க இப்படில்லாம் செய்யும், நீங்க போட்டு குழப்பிக்காம எப்போதும் போல உளருங்க உங்களுக்கு தெரிஞ்சதை"ன்னு சொன்னாரு.

பின்ன எழுத ஆரம்பிச்சு ஏதோ ஒப்பேத்தியாச்சு. அதிலும் பாருங்க ரொமான்ஸ் எழுதறேன்ன்னு வாங்கி கட்டிகிட்டேன். பிரிச்சு மேஞ்சுட்டாங்க மக்கள்ஸ். சரி உட்ரா உட்ரா கைப்புள்ளன்னு சட்டை பட்டனை பொறுக்கி பாக்கெட்ல போட்டுகிட்டு கலைந்த தலைய சீவிகிட்டு வந்துட்டேன்.

சரி இது நன்றி சொல்லும் நேரம், முதல்ல தமிழ்மணத்துக்கு. ஆயிரம் ஆயிரம் நன்றி தமிழ்மணத்துக்கு. நானல்லாம் ஏதோ எழுதிகிட்டு சும்மா ஊலுலூலா காட்டி கிட்டு இருந்தேன். என்னய புடிச்சு ஸ்டார் ஆக்கி கண்ணகி, கிராமத்து நினைவுகள்ன்னு எழுத வச்சு "சரி இவனும் ஏதோ எழுதுவான் போல சில நேரம்"ன்னு எனக்கு ஒரு பேர் வாங்கி குடுத்ததுக்கு மிக்க நன்றி.

அது போல என் பதிவுகளுக்கு(நீங்க பதிவெல்லாம் போடுவீங்களா- இது பொட்டீ கடை சத்யா) வருகை தந்து சிறப்பித்த டெல்பினம்மா, வல்லிம்மா, கீதாம்மா, கோபி, தம்பி,மின்னல்,பினாத்தலார், ஜஸீலா,அய்யனார்,குசும்பன்,மகி, சென்ஷி,முத்துகுமரன்,லொடுக்கர்,பாஸ்ட் பவுலர், லியோ சுரேஷ், சுல்தான் பாய்,நாமக்கல் சிபி, தேவ், விவசாயி இளா,வெட்டி பாலாஜி, ராயல் ராம், கைப்ஸ்,நாகை சிவா,பாலரஜன் கீதா சார்,தருமி சார், லெஷ்மி,இம்சைஅரசி ஜெயந்தி, காயத்ரி, மைபிரண்ட், துர்கா,கண்மணி டீச்சர், சுப்பையா சார், வேதா, இம்சை, நிலா, மங்களூர் சிவா, ஆயில்யன், மயிலாடுதுறை சிவா, சீமாச்சு அண்ணன்,ரமணி, பூக்குட்டி, லக்கி, பொட்டீகடை சத்யா, கொத்தனார், சேதுக்கரசி, காட்டாறு,சின்ன அம்மனி,அரவிந்தன்(பெங்களூரு),மங்கை, முத்துலெஷ்மி, துளசி டீச்சர்,வினையூக்கி,உண்மை தமிழன் ,வித்யா கலைவாணி,INDAR,நிலவு நண்பன்,ஓசை செல்லா,தாமோதர் சந்துரு,டிசிபிடி,பாரிஅரசு,உமையாணன்,பெங்களூரு தீபா,வீரசுந்தர்,மதுமிதா, ஜேக்கே,ரத்னீஷ்,வடுவூர் குமார்,அனுசுயா,வெங்கட்ராமன்,பு பட்டியான்,கெக்கேபிக்குனி,நலாயினி,ஜிதீன்,கப்பி, துரியோதணன், ராமசந்திரன் உஷா............இந்த பட்டியலை கொஞ்சம் கொஞ்சமா தொடர்கிறேன் (ஆனால் முதல் பதிவில் யார் யார் வந்தார்கள் என தெரிய வில்லை காரணம் என்னால் அந்த பதிவை ஓப்பன் செய்ய முடியவில்லை)

இன்னும் பல பதிவுகளில் பின்னூட்டமிட்டவர்களுக்கு நேரமின்மையால் பதில் சொல்ல வில்லை. ஆனால் கண்டிப்பாக இன்று சொல்லிவிடுவேன்.இந்த வாரம் சரியான நேரத்தில் பதிவுகள் பப்ளிஷ் பண்ண, தவிர பல வித ஆலோசனைகள் தந்து மிகுந்த உதவியாக இருந்த அன்பு சகோதரி கண்மணி டீச்சருக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். இந்த அருமையான வாய்ப்பை கொடுத்த தமிழ்மணத்துக்கும் மீண்டும் நன்றி!

அய்யனார் இன் அரட்டை அரங்கம் - பாகம் # 1

வர வர ரொம்ப போரடிச்சு போச்சுப்பா, யார் மூச்சிய பார்த்தாலும் தென்கச்சி பூமிநாதன் முகம் மாதிரியே இருக்கு!(பின்ன எத்தன நாளைக்கு தான் வெளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி இருக்குன்னு சொல்றது), சரி நம்ம அரட்டை அரங்கம் விசு அழும் போது செம டமாஷா இருக்கும் அதனால அவரை கூப்பிட்டு அமீரகத்தையே சிரிக்க வச்சுடலாம்ன்னு முடிவு பண்ணி அண்ணாச்சி கிட்ட சொல்லி அரேஞ்ச் பண்ணியாச்சு. அவரும் ஒத்துகிட்டு மூட்டை முடிச்சு, அவரோட சீனிவாசன், ராம் ன்னு படை பலத்தோட வந்து துபாய்ல இறங்கியாச்சு. வசந்த பவன் ஹோட்டல்ல செலக்ஷன் ஆகுது. தலைப்பே யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதே. சரி நாம அரேஞ் பண்ணிட்டு நாம கலந்துகாட்டி கவுரவ குறைச்சலா போயிடுமேன்னு அய்யனார், குசும்பன், ஜஸீலா, அபிஅப்பா(பருப்பு இல்லாத கல்யாணமா), எல்லாம் போய் செலக்ஷ்ன் கூட்டத்துக்கு போனோம். அய்யனாரை தவிர அத்தினெ பேரும் செலக்ஷன்ல அவுட்டு. அது எப்படி அய்யனார் மாத்திரம் செலக்ட் ஆனார் என்பதே தனி கதை.

கருத்து என்ன என்பது எல்லாம் முக்கியமில்லையாம், வித விதமா அய்ய்ய்ய்ய்ய்யா, அய்யாஆஆஆஆ, ஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ இப்படி பிச்சை காரன் கூப்பிடுவது போல கெஞ்சனும் விசுவை பார்த்து. அவரின் சிஷ்ய கோடிகளுக்கு தெரியும் எந்த அய்யா ராகம் விசுவுக்கு பிடிக்கும்ன்னு. அத வச்சி செலக்ட் பண்ணிடுவாங்க. இதுல அய்யனார் எப்படின்னு கேக்குறீங்களா? நம்ம குசும்பன் அவுட் ஆன பின்ன பக்கத்தில் இருந்த அய்யனார் எழுந்தாரு. செலக்ஷன் கமிட்டி "உங்க பேர் என்ன?"ன்னு கேக்க அதுக்கு அய்யனார் "அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய"ன்னு சொல்லும் முன்னமே எல்லா செலக்டர்சும் கோரசாக "யூ ஆர் செலக்டட்"ன்னு கத்த சரின்னு உக்காந்த அய்யனார் குசும்பனை பார்த்து "ஏண்டா நான் பேரை சொல்லிகிட்டு இருக்கும் போது காலை மிதிச்சன்னு கேக்க "நீ செலக்ட் ஆக கூடாதுன்னு தான் மிதிச்சேன் ஆனா அதுவே உனக்கு பாஸிடிவ் ரிசல்ட் குடுக்கும்ன்னு நான் எதிர் பார்க்கலையே, ஆனா பாரு நான் அந்த மேடையிலே வந்து எல்லாரையும் கவர்ந்து டிவில என் போட்டோவுக்கு ரவுண்ட் கட்டி தாய் மண்ணே வணக்கம் பாட வைக்கல என் பேரை மாத்திக்க"ன்னு வீர சபதம் போட்டுட்டு வெளியே வந்துட்டார். இனி நேரா அரங்கத்துக்கு போவோம் வாங்க!

நார்மல் பேண்ட், ஷர்ட், மூஞ்சிய பொத்தி அழ தோதா ஒரு துண்டு தோளில் போட்டு கிட்டு உள்ளே வரும் போதே "த்த்த்தாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் மண்ணேஏஏஏஏ"ன்னு ஒலிப்பதிவாளர் பாட்டை போட்டு விட பாதி வழியிலேயே நின்னு கிட்டு விசு அழுவ ஆரம்பிச்சுட்டார். பின்ன அவர் சிஷ்ய கோடிங்க சமாதான படுத்தி பாட்டை நிறுத்தி ஒரு வழியா மேடக்கு அழைச்சுட்டு வந்தா வேர்த்து வேர்த்து கொட்டுது அவருக்கு. அவரை சுத்தி ரவுண்டு கட்டி எல்லாம் உக்காந்திருக்க ஒரு சேர் மாத்திரம் காலியா இருக்கு. பின்ன "ஏம்ப்பா சீனிவாசா 18 பேர் செலக்ட் ஆகலையா, ஒரு சீட்டு காலியா இருக்கே"ன்னு கேக்க "இல்ல சார் டேபிள் கிட்ட போய் எட்டி பாருங்க சார் ஒரு 2 1/2 வயசு குழந்தை இருக்கும் பாருங்க, என்ன்மா அய்ய்ய்யா சொல்லுது நாங்க கூட அத்தன ராகமா சொல்ல முடியலை"ன்னு சொல்ல அரட்டை அரங்கம் ஆரம்ப மாகியது.

விசு: இந்த துபாய்க்கு வந்து அரட்டை அரங்கம் நடத்தும் நான் ஒரு விஷயத்தில் மிகவும் கடமை பட்டுள்ளேன். இதோ என் கண் எதிரே இருக்கும் குறுக்கு சந்தில் தன் ரத்தம் சிந்தி தமிழர்களின் வாழ்வை சிறக்க வைத்த விவேகானந்தர் அவர்களை மனதால் நினைத்து கொண்டே இந்த அரட்டை அரங்கத்தை நடத்த ஆரம்பிக்கிறேன். நான் பேசும் வார்த்தகள் இனி விவேகானந்தர் என் உள்ளே இருந்து பேசும் வார்த்தைகள்.(அது நெப்போலியன் இல்லியா???) "

டக்குன்னு கீழே விழுந்து மேடையை நக்கி பின் எழுந்து "நான் செய்வது உங்களுக்கு பைத்தியகாரதனமாக இருக்கலாம் அது பற்றி நான் கவலை படவில்லை ஏன்னா இந்த இடத்தில் கூட விவேகானந்தை பாதம் பட்டிருக்கலாம், இங்கே தலைப்பே குடுக்க வில்லை ஏன்னா எந்த தலைப்பு கொடுப்பது என தோற்றவில்லை. அதனால் யார் வேண்டுமானாலும் எது பற்றி வேண்டுமானாலும் பேசலாம். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லுவார்கள், அதனால் இந்த குழந்தையை அழைக்கிறேன். வாம்மா அந்த டேபிள்ள மேல ஏறி உன் கருத்துக்களை சொல்லும்மா உன் பேர் என்ன?"

குழந்தை: அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா

விசு: சந்தோஷம்மா பேர் என்ன?

குழந்தை:அய்யய்யாஆஆஆஆஆஆஆஆ


விசு: சூப்பர் சபாஷ்டா கண்ணா சரி பேர் சொல்லு

குழந்தை: அய் அய் அய் அய்த்தலக்கா அய்ய்ய்ய்ய்ய்ய்யாஆஆஆஆஆஆஆஅ

விசு: அருமைடா கண்ணா உன்னை பெத்தவங்க புண்ணியம் செஞ்சவங்க, மீதி கருத்த அடுத்த சுத்துல சொல்லனும் ஓக்கேவா

அடுத்து மெதுவா அய்யனார் பக்கத்துல வந்து

விசு: தம்பி, உங்க பேர் என்ன?

அய்யனார்: அய்யனாருங்க

விசு: சபாஷ், நீங்க சொல்லவந்த் கருத்து என்ன?

அய்யனார்: அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா நான் முழு நேர பொறியாளர் இல்லை, பகுதி நேரம் தள்ளு வண்டி தள்ளுவேன் அய்ய்ய்ய்ய்ய்யாஆஆ

விசு: அப்படியாப்பா சபாஷ், அப்படி என்னா வச்சி தள்ளுவ அந்த வண்டில

அய்யனார்: தமிழை வச்சு தள்ளுவேன் அய்ய்ய்ய்யா இப்படியே ஒரு நாளைக்கு ஒரு ஒரு கட்டமா தள்ளிகிட்டே போவேன் அய்ய்ய்யா

விசு: சரி உங்க கருத்தை சொல்லுங்க

அய்யனார்: எனக்கான ப்ரத்யேகமான புன்னகைகளை கொண்ட
அல்லது அப்படி நினைத்துக்கொண்ட பெண் மட்டும்
வெகு சிரத்தையாய் நடனமாடுவாள்.
பாடல்வரிகளை பாவனைகள் மூலமும்
இசையதிர்வை உடலின் மூலமுமாய்
வெகு நேர்த்தியாய வெளிப்படுத்துவாள்.
குறிப்பிட்ட பாடலுக்கு மட்டும் என்றில்லாமல்
அவளுக்கு பிடித்தமான ஒன்றின் துவக்கம் கேட்டவுடன்
எழுந்து ஆட ஆரம்பிப்பாள்.
சுழன்றும் லயித்தும் துள்ளியும் தன்னை மறந்து ஆட ஆரம்பிக்கும்போது போதை கொஞ்சம் வெளிறிப்போகும்.

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
பொங்குகிறது அவள் முகம்
வரவை மறந்து செலவு செய்து
விரல்கள் விழிகளை சுட்டுகிறது
உயரப் பறந்து கொண்டாட்டுவோம்
விரல்கள் பறக்க ஆரம்பிக்கின்றன.
மாலை நியூயார்க்கில் கேபரே
இரு கைகளும் எல்லா விரல்களும் தன்னையே மீட்டியபடி
இரவில் தாய்லாந்தில் ஜாலி
வெட்கத்தால் ஒரு கையால் முகம் மறைக்கிறாள்
தம்மர தம்மர மஸ்த் மஸ்த்
தன தம்தன தம்தன மஸ்த மஸ்த்
தனதம்தன தம் தம்
என்னாசை தாவுது உன்மேலே
சுழலும் ஒரு ஓவியத்தின் சாயல்களை முன்நிறுத்தியபடி
வெள்ளைப்புறா ஒன்று போனது கையில் வராமலே
துயரத்தில் தாழ்கிறது விழிகள்
பாத சுவடு தேடி தேடி
அடியெடுத்து நடந்தபடி துயரத்தில் மருகுகிறாள்
ஆசைய காத்துல தூதுவிட்டு
முகம் உடல் எல்லாம் சட்டென மாறுகிறது
உற்சாகமும் துள்ளலும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
மாசம் தை மாசம் வாலிபக் காலத்து நேசம்
கிறக்கமும் தவிப்புமாய் தொடர்கிறது நடனம்

காலியான மதுக்கோப்பைகளை நிறைக்கும் துப்பட்டா அணிந்திராத செழித்த சேச்சிகள் மதுவோடு கிறக்கத்தையும் சேர்த்துக் கலப்பர்
பெண், ஈயம், பித்தளை, கட்டுக்களுடைத்து வெளிவரல், விளிம்பின் மொழி, சம உரிமை, இட ஒதுக்கு எல்லாவற்றின் மீதும்
மது நுரைபொங்க படர்கிறது
உடல் மட்டும் தனக்கான கட்டுக்களுடைத்து
நடனமிடத் துவங்குகிறது.

விசு: சபாஷ் சபாஷ்( துண்டால் கண்ணை தொடச்சிக்கறார்) உங்களை போல 100 இளைஞர்கள் விவேகானந்தருக்கு கிடைச்சிருந்தா அவர் துபாய் வந்து பார்த்திபன் வடிவேலு வாய்ல சிக்கி சின்னா பின்னமா ஆகியிருக்க மாட்டார். என்ன ஒரு ஆன்மீகம், நீங்க உங்க கருத்தை சொல்ல வரும் முன்ன இப்ப சொன்னீங்களே ஒரு ஸ்லோஹம் வாவ் நான் பிரம்மிச்சு போய்ட்டம்பா கந்த சஷ்டி கவசம் மாதிரி இது எந்த சஷ்டி கவசம்ப்பா

அய்யனார்: இன்னது ஸ்லேகமா இதுதான் என் கருத்து ன்ன்ன்ன்கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா

டக் என்று திரை விழுந்து பின்ன அய்யனாரின் இரண்டு கையையும் பிடிச்சு ரெண்டு பேர் தூக்கிட்டு வந்து எங்க கிட்ட விட்டுட்டாங்க......

மீதி அடுத்த பாகம்......

September 29, 2007

நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க!!!!!

"நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்க்கிறாய், எந்தன் நெத்தி பொட்டில் தீயாய்" தடக்குன்னு தூக்கி வாரி போட்டு எழுந்தாள் தீபா, ரிங் டோனாக செட் செய்யப்பட்ட தம் கணவனின் ஆசைப்பாட்டை கேட்டுக்கொண்டே செல்ல போனை எடுத்து "என்னங்க திடீர்ன்னு இப்ப போன்"

"அடி கழுத எப்பவும் கேட்டுகிட்டே இருக்கத்தானா போனெல்லாம் வாங்கி குடுத்தேன் குட்டிம்மா, நெம்பத்தான் அலுத்துக்கற"

"அட அதுக்கு இல்லைங்க, அரக்க பறக்க உங்களை ஆபீஸ் போக வச்சுட்டு செத்த கண்ண மூடிட்டு எழுந்து குளிச்சுட்டு உங்களுக்கு மதியம் சாப்பாடுக்கு தயார் பண்னலாம்ன்னு இருந்தேன், ஆனா அசதியா இருந்துச்சு படுத்துட்டேன் நல்ல வேளை போன் பண்ணி எழுப்பிட்டீங்க"

"என்னாது அசதியா இருந்துச்சா ஏண்டா செல்லம்"

"மொகர கட்டை, சரி என்னது மொபைல்ல இருந்து பேசரீங்க, ஆபீஸ்ல இல்லையா, சைட்டுக்கி போயிருக்கீங்களா"

"ஊகூம் சைட் அடிக்க போய் கிட்டு இருக்கேன்..."

அப்போ காலிங் பெல் சத்தம் கேட்க "கொஞ்சம் இருங்க எந்த கரடியோ வந்திருக்கு பார்த்துட்டு வாரேன்"

கதவை திறந்தா மூர்த்தி காலையில் ஆபீஸ் போன தோற்றம் கொஞ்சமும் கலையாமல் நிற்க தீபா கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள்.அவன் கையிலிருந்த லேப்டாப்பை அவசரமா வாங்கிகிட்டு பதறி போய் "என்னங்க உடம்புக்கு முடியலையா என்னாச்சி காலையில நல்லா தானே போனீங்க" என்று பட படத்தாள்!

"இல்ல பசிக்குது அதான் வந்துட்டேன்"

கொஞ்சம் வெட்கத்துடனே செல்ல கோபமாக "அட பாவி மனுஷா காலையில கூட டிசைன் டிசைனா கொட்டிகிட்டு போனியே அதுக்குள்ள பசியா, ஆபீஸ்லயே கேண்டீன்ல கொட்டிகிட்டா என்ன?"

"நானும் அதான் நெனச்சேன் தமிழரசி ஒத்துக்கலை"

"என்னாது, தமிழரசி ஒத்துக்கலையா?''

"ஆமாம் ரெண்டு சமோசா வாங்கி வான்னு சொன்னா என்னமா கோவிச்சுக்கறா, "போங்க சார் 12 லெட்டர் டிராஃப்ட் பன்ன குடுத்துட்டு சமோசா வடைன்னு கிட்டு"ன்னு சலிச்சுகறா சர்தான் போடின்னு இங்க வந்துட்டேன்"

அவன் பேசிகிட்டு இருக்கும் போதே அவன் மேல் வேஷ்டியை தூக்கி போட்டுட்டு சிரித்த்து கொண்டே "பேண்டை கழட்டிட்டு வேஷ்டி மாத்திகோங்க நான் குளிச்சுட்டு வந்து வித்யாசமான சாப்பாடு சமைக்கிறேன் சாப்பிடுவோம்" என்றாள்.

"சரி அதுக்கு என்ன கெக்க பிக்கேன்னு சிரிப்பு வேண்டி கிடக்கு"

"இல்ல உங்க மேல வேஷ்டி கிடக்கா, சாதாரண மூர்த்திய வெண்ணிர ஆடை மூர்த்தியா ஆக்கிட்டனேன்னு சிரிப்பு வந்துச்சு!"

இருவருமே சிரித்தனர்.

"சரி எனக்கு வித்யாசமான சாப்பாடுன்னு வேற சொல்லிட்ட ஒரு கை ஓசை நல்லா இருக்காது, என்ன செய்யனும் சொல்லு நான் ஹெல்ப் பண்ரேன் நீ குளிச்சுட்டு வரும் முன்ன செஞ்சு வைக்கிறேன்."

"என் தங்கம் அது போதும்டா ராசா, தோ பாருங்க விதை மல்லி ஒரு 100 கிராம் எடுத்துகோங்க,கடலை பருப்பு 2 ஸ்பூன், வெந்தயம் 1 ஸ்பூன், பட்ட மிளகாய் 6 எடுத்துகோங்க"
சொல்லி கொண்டே மள மளன்னு அழுக்கு துணிகளை எடுத்து ஒரு பக்கெட்டில் போட்டு கொண்டாள். மூர்த்தியும் தீபா சொன்ன எல்லாம் எடுத்துவிட்டு கிச்சன்னிலிருந்து "எடுத்தாச்சு இப்ப என்ன செய்யனும்மா" என்று குரல் விட

"நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் நான் வந்து சமைச்சுகறேன், எடுத்து கையில வச்சிருப்பதை வானலில கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுத்துடுங்கப்பா பொன் முருகலா இருக்கனும்"
எடுத்த துணிகளில் நீர் பிடித்து ஸர்ஃப் போட்டு முடிக்கும் போது அவளுக்கு வந்த வாசனை வைத்தே "என்னங்க போதும் வற்த்தது இதுக்கு மேல வருத்தா கருகிடும் இப்போ அதை மிக்சில போட்டு பொடியாக்கிடுங்க நான் பாத்ரூம் உள்ல போரேன் சந்தேகம்ன்னா கேளுங்க"

"மே ஐ ஹெல்ப் யூ"

"அடி படுவீங்க சமையல்ல ஹெல்ப் பண்ணா போதும்"

உள்ளே போன தீபா "ஹல்லோ புருஷா ஒரு உதவி வேனுமே?"

"அதான் கேட்டேன் முதல்லயே சரி கதவை திற"

"யோவ் நல்லா வருது வாயில"

"அப்பூடியா சொல்லவே இல்லியே கள்ளி..."

"அலுக்கு பையா இது அது இல்ல, நான் சொல்றத கேளுங்க ரெண்டு பிஞ்சு கத்தரிக்காய் பெருசா வச்சிருக்கேன் பாருங்க பிரிட்ஜ்ல அதை எடுத்து கழுவிட்டு நம்ம குமட்டி அடுப்பிலே கரி போட்டு நெருப்பாக்கி அதிலே சுடுங்க பின்ன மேல் தோல் கருகி உரிஞ்சு வரும் அதை எடுத்துட்டு பின்ன மிக்ஸில போட்டு அதை கீரை மாதிரி கடைஞ்சு எடுத்து தனியா வச்சுடுங்க, அப்படியே குக்கர்ல 1 டம்ளர் அரிசி போடுங்க"
"சரி, கத்திரிக்கா பிஞ்சுன்னு சொன்ன முத்தலா இருக்கும் போல இருக்கே"

'அது பிரிஜ்ல இருந்துச்சுல்ல அதான் கொஞ்சம் வெத வெதன்னு தண்ணில போடுங்க சரியாகிடும்" பாத்ரூம் உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்!

"சரி செஞ்சாச்சு வேற என்ன செய்யனும் சீக்கிரம் குளிச்சுட்டு வாடா"

"சரி வர்ரேன், தோ பாருங்க ரெண்டு தக்காளி பொடியா அரிஞ்சு வைங்க இதோ வர்ரேன், வேற ஒன்னும் செய்ய வேண்டாம் நான் வந்து மீதியை பார்த்துக்கறேன். ஒரு பெரிய நெல்லிக்கா அளவு புளி மாத்திரம் ஊற வைச்சுடுங்க""சரிப்பா சீக்கிரம் வா"

"ஏங்க சொல்ல மறந்த கதை ஒன்னு இருக்குங்க"

"என்னாது சொல்லி தொலை"

"கோவத்த பாரு...அப்படியே அடுப்பு மேல இருக்கும் வானலில கொஞ்சம் எண்ணெய் ஊத்தி லைட்டா கடுகு உளுத்தம் பருப்பு தாளிங்க ப்ளீஸ், நான் வந்து மீதியை பார்த்துக்கரேன்"

"சரி குக்கர் 2 விசில் வந்துடுச்சே இப்ப என்னா பண்ணும்"

"அதை நல்லா ஊக்குவிக்கிற மாதிரி பதிலுக்கு நீங்களும் விசில் அடிங்க"

"டேய் கதவ உடச்சிகிட்டு வந்தன்னா தெரியும் அடி கொன்றுவேன்"

" அது கிடக்கட்டும் தாளிச்சாச்சா, இந்த கேப்புல 1\4 கிலோ சின்ன வெங்காயத்தை உரிச்சுடுங்க பின்ன மூணாவது விசில் வந்துடுச்சு அதை இரக்கிடுங்க"

"சரி, டண்,"

" அடுத்து தாளிச்சது தலையில அந்த உரிச்சு வச்ச வெங்காயத்தை அதிலே போட்டு வதக்கனும் பின்ன அதுக்கு மேல வெட்டி வச்ச தக்காளிய கொட்டுங்க""சரி செஞ்சாச்சு, நீ சீக்கிரம் வா, என் பசியே போயிடும் போல இருக்கு, பின்ன தமிழரசிய விட்டு சமோசா வாங்கி தின்ன போயிடுவேன்"

"இருங்க வந்துட்டேன், என்ன பறக்குரீங்க நான் வந்து மீதிய பார்த்துகறேன், நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம், இப்ப லைட்டா தண்ணி ஊத்தி கொதிக்க விடுங்க, என்னாது ஊத்தி அது கொதிக்குதா அப்ப சரி என் செல்லம் இப்ப கடஞ்சு வச்ச அந்த கத்தரிக்காயை அது தலையில கொட்டுங்க"
"தீபா இப்பவே லைட்டா ஏதோ நல்ல சமையல் மாதிரி வாசனை வருதுடா" அடுத்து என்ன செய்யட்டும்"

"இப்ப லைட்டா கொதி வந்த பின்ன முதல்ல மிக்ஸில போட்டு அடிச்ச்ச பொடி அந்த மசாலா பொடியை அதுல போடுங்க பின்ன தண்ணியாவும் இல்லாம கெட்டியாவும் இல்லாம இருக்குர மாதிரி பாத்துகோங்க"
"சரி உப்பு போட வேண்டாமா"

"குட் கொஸ்டின், இப்ப தேவையான அளவு போடுங்க, உப்பு
சுகர் பார்ட்டி எல்லாம் தான் ஷேத்ராடணம் போயிடுச்சே ஷேத்ராடணம்"

"ஏய் எங்க அம்மா அப்பா கால்ல விழலைன்னா உனக்கு தூக்கமே வராதே, சரி இப்ப என்ன செய்யனும்"

"நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் நான் வந்து பார்த்துகரேன், இப்ப புளி கரைசலை அதிலே ஊத்துங்க, சரியா இப்ப உப்பு காரம் பாருங்க"
"உப்பு சரியா இருக்கு, காரம் கொஞ்சம் பத்தலை"

"சரி கொஞ்சமா மிளகாய் பொடி போட்டு கொதிக்க விடுங்க அடுப்பை சிம்ல வச்சு மூடி போட்டு மூடி வச்சுடுங்க நான் வந்து மீதிய பார்த்துக்கரேன்"
"சரி என்ன சோப்பு அது இத்தன வாசனையா இருக்கு"

"லூசு பையா நான் குளிச்சு முடிச்சு டிரஸ் மாத்திகரேன், இன்னிக்கு உங்க கைலி சட்டை போட்டுக்க ஆசை போட்டுக்கவா"

"அடிப்பாவி எதையாவது பன்ணு சீக்கிரம் வா, வேற என்ன செய்யனும் அடுத்து"

"ஏங்க சொல்ல மரந்துட்டனே கொஞ்சம் மிளகு, சீரகம், முந்திரி எடுங்க அதை நெய்யில வறுங்க பின்ன 1,2ந்தா மிக்சில உடைங்க ஒரு விஷயம் இருக்கு சொல்றேன்"

"ஏங்க என்ன சத்தத்தையே காணும், அதிலேயே கொஞ்சம் நெய் கூட போட்டு குக்கர் திறந்து சாதத்தை அதிலே கொட்டி கிளருங்க, வேற ஒன்னும் செய்ய வேணாம் அப்படியே ரெண்டு தட்டு எடுத்து கழுவி ஊஞ்சல் மேல வச்சிடுங்க தோ வந்துடறேன், மறக்காம பார்த்த முதல் நாளே பாட்டு போடுங்க ஹோம் தியேட்டர்ல மெல்லீசா"

"வச்சாச்சு வா சீக்கிரம்"

"வந்துட்டேன், என்னங்க உங்க கைலி எப்படி இருக்கு"

"கிட்ட வா நாயே முழு சமையலும் என்னயே செய்ய வச்சுட்டு நொடிக்கு ஒரு தடவ "நீங்க ஒன்னும் செய்ய வேந்தாம் நான் வந்து மீதிய பார்த்துக்கரேன்னு டயலாக் வேர அடி ராஸ்கல்"

"ஏங்க இதுக்கு என்ன பேர் தெரியுமா கொத்ஸூ சிதம்பரம் கொத்ஸு, அந்த சாதம் பேர் சம்பா சாதம் ரெண்டு பேருக்கும் செம பொருத்தம் நம்ம மாதிரி"

"கொத்சுன்னா பிளாக் எல்லாம் எழுதுவாரே அவரா"

"யோவ் நக்கலா இத்தன கஷ்டப்பட்டு சமைச்சா கிண்டல் கேக்குதா மரியாதையா கிளம்பி ஆபீச்க்கு போங்க எனக்கு இப்படி லீவெல்லாம் போட்டா பிடிக்காது"

அப்போ போன் அடிக்க தீபா எழுந்து போனை எடுத்து"ம் தமிழரசியா, இல்லப்பா சாருக்கு நெருப்பா கொதிக்குது...ஊகூஉம் வர்ரத்துக்கு ச்சான்ஸே இல்ல கொஞ்சம் பாத்துக்கப்பா ஆபீசை".......................

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கதை முடிஞ்சுது, அவ்ளவ் தான் அடுத்த வீட்டை எட்டி பார்க்க எத்தன ஆசை, போங்க போய் சிதம்பரம் கொத்ஸும், சம்பா சாதமும் செய்யுங்க!!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

\\அபிஅப்பா நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர் பார்க்கலை நீங்களா இப்படி\\

\\யூ டோ அபிஅப்பா:-((\\

\\அழ.வள்ளியப்பா said அபிஅப்பா எனக்கு அவமானமா இருக்கு கண்றாவி, இங்க பாருங்க உங்க ஊர் சாண்டில்யன் என் பக்கத்துல குதிச்சு குதிச்சு சிரிக்கிரார்:-((\\

போதும் போதும் விட்டுடுங்க.....................

September 28, 2007

வாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம்!!!

பரிட்சைன்னைவந்துட்டா பொதுவா எல்லாருக்கும் ஜுரம் தான் வரும் பயம் தான் வரும். ஆனா எங்க பசங்க ஒரு ஏழு பேர் ஒரு மார்க்கமா தான் திரிவோம் மாயவரத்துல, எங்களுக்கு மாத்திரம் ரொம்ப குஷி வந்துடும். பரிட்சை டைம்டேபிள் கொடுத்த உடனே என்னவோ யுத்தத்துக்கு திட்டம் போடுற மாதிரி போடுவோம். டைம் டேபிள் குடுத்த நாள் முதல் முதல் பரிட்சை நாள் வரை இடை பட்ட நாளை கணக்கில் வச்சு நாங்க ஒரு திட்டம் போடுவோம் . ஒரு நாளுக்கு எத்தனை பாடம் படிப்பது முதல் அந்த டைம் டேபிளை பார்த்தாலே கண்ணுல ஒத்திக்கும் மாதிரி இருக்கும். அதன் படி படிச்சா நிச்சயமா ஸ்டேட் பஸ்ட் தான் . அந்த டைம் டேபிளை வச்சு நாங்க பாடம் படிச்ச லெட்சனம் தான் இந்த பதிவே!
சங்கர்

தான் முதல்ல ஆரம்பிப்பான் " டேய் மாப்ள இந்த பரிட்சைல செமத்தியா மார்க் வாங்கனும்டா அதுக்கு ரெண்டு விஷயம் முக்கியம் ஒன்னு பிளானிங் அடுத்து இம்பிளிமெண்டேஷன் இப்ப நாம எப்படி படிக்கறதுன்னு பிளான் பண்ணியாச்சு அடுத்து இம்பிளிமெண்டேஷன் தான்"ன்னு சொல்லுவான். உடனே குரங்கு ராதா " டேய் எந்த விஷயமா இருந்தாலும் முதல்ல நல்ல நாள் பார்த்து ஆரம்பிக்கனும் இன்னிக்கு பாட்டி முகம் அதனால நாளை முதல் வச்சுக்கலாம்"ன்னு முதல் குண்டை போடுவான். நானே நல்ல அறிவு பசில இருக்கும் போது ராதா இப்படி சொன்ன உடனே மனசுகுள்ள வந்த சந்தோஷத்தை முகத்துல காட்டிக்காம "என்னடா இப்ப வந்து சொல்லுற பாட்டி முகம் தாத்தா முதுகுன்னு இப்ப பாரு நம்ம டைம் டேபிள் படி இப்ப முதல் நாள் பாடம் அவுட் ஆகிடுச்சு"ன்னு கோவிச்சுப்பேன்.
அதுக்கு

ராதா "சரி வுடுடா அநேகமா அந்த பாடத்தில இருந்தெல்லாம் கேக்க மாட்டானுங்கன்னு நெனைக்குறேன்"ன்னு சொல்லுவான். பின்ன எங்க உக்காந்து படிக்கனும்ன்னு முடிவாகும் . அப்ப கார்த்தி "டேய் நாம எல்லாம் தனி தனியா உக்காந்து படிச்சு ஏதாவது ஒரு டவுட் வந்தா அந்த ஒரு நாள் வேஸ்ட் ஆகிடும் அதனால கம்பைன் ஸ்டடி தான் பெஸ்ட் அதுக்கு ஏத்த இடம் எங்க வீடு தான், அப்பா அம்மா ரெண்டு பேரும் ஆபீஸ் போன பின்ன நாம காலைல 9.00க்கு ஆரம்பிச்சுடுவோம், கரெக்டா வந்துடனும் சரியா"ன்னு பிளான் தயாராகிடும். பின்ன எல்லாரும் சேர்ந்து இத பத்தியெல்லாம் டீப்பா டிஸ்கஸ் பண்ண வைத்தா டீ ஸ்டால் போய் நெய்வறுக்கியும் டீயும் குடிசுட்டு அங்கயே ஒரு ஒரு மணி நேரம் பேசிகிட்டு இருந்துட்டு இருக்கும் போது சிவா சூப்பர் ஐடியா சொல்லுவான்."டேய் இனி பரிட்சைன்னு வந்துட்டா சினிமா போரது எல்லாம் கஷ்டம் அதனால இன்னிக்கு ராத்திரி செகண்ட் ஷோ போயிட்டு நாளை முதல் பிரஷ்ஷா படிப்போம்"ன்னு சொன்னது தான் தாமதம் அவனவனுக்கு குஷி ஆகிடும் . அது போலவே ராத்திரி படம் பார்த்துட்டு முனிசிபாலிட்டி வாசல்லயோ எங்கயோ கூட்டமா சைக்கிளை நிறுத்திகிட்டு எப்படியெல்லாம் படிக்க போறோம்ன்னு பேச்சை ஆரம்பிச்சு கடேசியா மாலா,தனம் அப்டீன்னு பேசி அந்த சிட்டிங் முடிய ராத்திரி 3.30 ஆகிடும். பின்ன அவனவன் போய் கவுந்தடிச்சு தூங்கி காலைல எழுந்திருக்க 11.00 ஆகிடும். பின்ன மெதுவா எழுந்து அவனவன் கார்த்தி வீட்டுல கூட மதியம் 12.00 ஆகிடும். புஸ்தகத்தை எல்லாம் தூக்கிட்டு வந்து படிக்க ஆரம்பிக்காம வேற எது எதுவோ பேசிகிட்டு யார் யார் எந்த எந்த இடத்துல உக்காந்து படிகிறதுன்னு இடம் பிடிப்போம் . இடம் பிடிக்கும் போது அந்த இடத்திலே 2 நிமிஷம் உட்கார்வது தான் அதுக்கு பின்ன அந்த இடத்துக்கே போறதில்லை. அப்பன்னு பார்த்து குரங்கு ராதா ஓடி வந்து "டேய் என்ன அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா ஏதாவது கோவிலுக்கு போயிட்டு வந்து ஆரம்பிக்கலாமேன்னு பார்த்தேன்"ன்னு சொல்ல இதுக்காகவே காத்து கிட்டு இருந்த மாதிரி பாய்ங்சு போய் சைக்கிள்ல தொத்திப்போம். அப்ப தான் நான் சொல்லுவேன்" டேய் உள்ளூர் சாமி எல்லாம் நமக்கு எப்பவுமே துணை இருக்கும்டா அதனால கொஞ்சம் சைக்கிளை மிதிச்சுகிட்டு பக்கத்துல எங்கயாவது போய் சாமி கிட்ட வரம் வாங்கியாறலாம் டா"ன்னு சொன்ன உடனே சிவா" டேய் ஒத்தை கல்லுல ரெட்டை மாங்கா அடிக்கனும்டா அதனால பேசாம பூம்புகார் போய் அங்க கண்ணகியை கும்பிட்டு வரலாம்டா, கண்ணகியும் கும்பிட்ட மாதிரி ஆச்சு கடல்ல குளிச்ச மாதிரியும் ஆச்சு உடம்பும் மனசும் சுத்தமா இருந்தாதான் பாடம் மண்டையில ஏறும்"ன்னு தத்துவமா பொழிவான். அதுலயும் ஒரு ஞாயம் இருப்பதாக படுவதால் ஏழு சைக்கிளும் (27 கி.மீ தூரம்) பூம்புகார் பறக்கும்.பாட புத்தகம் எல்லாம் எங்களை ஏக்கத்தோட பார்க்கும். போய் சேரவே 4.00 ஆகிடுமா பின்ன கடல்ல குதியாட்டம் போட்டுட்டு நிலவு வெளிச்சத்துல அலைல படுத்துகிட்டு எப்படி படிக்கலாம் போட்ட டைம் டேபிளை எப்படி இம்ப்ளிமெட்டேஷன் பண்ணலாம்ன்னு டீப்பா டிஸ்கஷன் பண்ணுவோம் . எல்லாம் முடிச்சுட்டு ஞாபகமா கண்ணகியை கும்பிட மறந்துட்டு டயர்டா திரும்ப சைக்கிளை மிதிச்சு கிட்டு வீடு வந்து சேர ராத்திரி 3.30 ஆகிடுமா. ஆக 2ம் நாள் பாடமும் அவுட் .
அடுத்த

நாள் வழக்கம் போல காலை 11.30க்கு கூடி முக்கிய முடிவு எடுத்துடுவோம். இனி நைட் ஸ்டடி தான் சரின்னு. சரின்னு ராத்திரி 9.00 க்கு கார்த்தி வீடு இருக்கும் தெருவிலே ஆளுக்கு ஒரு தந்தி மரம் என்னவோ அதை பெரிய போதி மரம் மாதிரி நெனச்சுகிட்டு அதுக்கு கீழே ஒரு ஒரு ஸ்டூல் போட்டு விட்டு திரும்பவும் கார்த்தி வீட்டு வாசல்லயே பேசிகிட்டு நிப்போம். அப்ப எவனாவது ஒருத்தன் "டேய் வைத்தா கடைக்கு போயிட்டு வந்து பிரஷ்ஷா படிப்போம்"ன்னு சொல்ல ஜூட். பின்ன அங்க எங்க மாதிரி குருப் குரூப்பா நிறைய பசங்க வந்திருப்பானுங்க நாங்க இதுவரை என்னன்ன படிச்சு முடிச்சிருக்கோம்(????)ன்னு டிஸ்கஷன் ஓடும் செகண்ட் ஷோ விட்டு எல்லாரும் போயிடுவாங்க ஆனா எங்க டிஸ்கஷன் மாத்திரம் முடியாது. பின்ன 2.30 க்கு பதனீர் இறக்கி வரும் உடம்பு ஹீட் ஆச்சுன்னா படிக்க முடியாதுன்னு அதை வாங்கி குடிச்சுட்டு ஒரு 3.00 மணி வாக்கில போனா தந்தி கம்பத்துக்கு கீழே ஸ்டூலில் எங்க புத்தகம் அனாதையா இருக்கும். எடுத்து படிக்கலாம்ன்னு பார்த்தா அப்ப தான் அந்த தெருவிலே விடிகாலைல வந்து கூட்டில் அடையும் அராத்து எல்லாம் வரும். அதுங்க கிட்ட மொக்கைய போட்டுட்டு அம்மா கோலம் போடும் நேரத்துல வீட்டுக்கு வந்து கவுந்தடிச்சு தூங்கிடுவோம்.
இப்படியாக

மிகுந்த கஷ்டப்பட்டு படிச்சு பரிட்சைக்கு போனா நான் அருமையா எழுதுவேன். சங்கர் சூப்பரா படம் போடுவான் ஆன்சர் பேப்பர்ல. நின்று கொண்டிருக்கும் ஒரு வாத்தியாரின் காலை இரண்டு கைகள் பிடித்து கொண்டிருப்பது போலவும், பின்ன இரண்டு கண்கள் மாத்திரம் வரைந்து அதிலிருந்து தாரை தாரையா கண்ணீர் வருவது போலவும் டிசைன் டிசைனா போடுவான். அதிலே வேற குரங்கு ராதா சூப்பரா தமிழ்ல " ஆசிரியருக்கு ஒரு கடிதம்" ன்னு தலைப்பு வச்சு நாம பதிவு போடுவது போல பதிவு போடுவான். தனக்கு 6 சகோதரிகள் எனவும் அதில் 3 பேர் குருடு 3 பேர் டிபி பேஷண்ட் என்றும் இவன் தான் போஸ்டர் ஒட்டி குடும்பத்தை காப்பாத்துவது போலவும். அது அவன் ஸ்டைல். நான் தான் என் ஸ்டைல் சொன்னேனே அப்படியே அட்சரம் பிசகாமல் கொஸ்டின் பேப்பரை எழுதிடுவேன். ஒரு தடவை எக்கு தப்பா எங்க காலேஜ் லெக்சரரே திருத்த போய் அதிலே நான் மாட்டி கிட்டேன். கிளாஸ்ல வந்து கேட்டார்" ஏன்யா எங்க கிட்ட தான் மீந்து போன நிறைய கொஸ்டின் பேப்பர் இருக்கே நீ வேற எதுக்கு கஷ்டப்பட்டு காப்பி எடுத்து தாரன்னு மானத்தை வாங்கிபுட்டார். எக்கு தப்பா ஒரு தடவை அதிஷ்டமும் அடிச்சுது. அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.

ஒரு கிராமத்து நினைவுகள்!!!

அந்த கிராமத்தில் ஜாதி மத பேதம் எதுவும் கிடையாது அவ்வளவாக. மதம்ன்னு பார்த்தா முஸ்லீம் குடும்பம் ஒன்னு தான். ராஜமுது பாய் வீடு(ராஜா முகமது போலிருக்கு அதான் ராஜமுது ஆகிடுச்சு) கசாப்பு அவர் மாத்திரம் தான் அந்த ஊரிலே. ஆனா தலகறி எடுத்தா மூளை இருக்காது ராஜமுது கறிகடையில. இம்பாலாவுக்கு போயிடும் எட்டாம் நம்பர் பஸ் ஏறி. கிரிஸ்டியன்ன்னு பார்த்தா ஆரோக்கியம் சாரும் அவர் பொண்டாட்டி மேரியம்மாவும். மேரியம்மா ஊர்ல யாருக்காவது ரெண்டு புள்ளைக்கு மேல பொறந்தா ஆப்ரேசன் பண்ணி வைக்க வந்துடும்ன்னு ஊர் முழுக்க அது கிட்ட பயம். பெரிய கோவில் இருக்கே தவிர அக்ரஹாரம் இல்லை.பெரிய குருக்களும் சின்ன குருக்களும் பத்னைஞ்சு நாள் முறை வச்சு வீர சோழன் ஆத்தை தாண்டி இருக்கும் மலைக்குடி அக்ரஹாரத்தில இருந்து வந்துட்டு போவாங்க. காலையில சைக்கிள்ள வந்தாங்கன்னா ராத்திரி அர்த்த சாம பூசை முடிஞ்ச பின்ன அரிக்கன் எடுத்துட்டு போகும் வரை கோவிலே கதி.மடபள்ளி வெங்குடு அய்யரும் ராயர் சாரும் மட்டுமே அந்த சன்னதிதெருவில் வீடு. அதை தவிர கோவில் அறங்காவல் துறை அலுவலகமும் அதை ஒட்டி கோவில் மேனேஜர் வீடும் இருக்கும்.

விடிகாலை நாலு மணிக்கு விழித்து கொள்ளும் அந்த கிராமம் காலை ஒன்பது மணிக்கு எட்டாம் நம்பர் பஸ் மூணாவது ட்ரிப் போன பின்ன அமைதியாகி விடும். பின்பு எண்ணெய் செட்டியார் வீட்டு செக்கு சத்தம் கிரீச் கொய்ங்ங்ங்ங் ம், ராவுத்தரின் சைக்கிளாடும் காய்கறி கடையின் முள்ளங்கி,பீட்ரூட்டு, பெங்களூரு கத்தரிக்காய்(அப்பவே ராவுத்தர் பெங்களூருன்னு பேரை மாத்திட்டார்)சத்தமும், ஈரு,பேனு,பொடுவுக்கு சம்மங்கி வெதய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு சைக்கிள் வியாபாரியின் குரலும், சாண புடிக்கலையோ சாணய்ய்ய்ய்ய் குரலும்,சரஸ்வதி பாடசாலையின் ஓரோன் ஒன்னு கோரஸ் குரல்களும் நடுநடுவே எட்டாம் நம்பர் பஸ் சத்தமும். அது சரஸ்வதி பாடசாலையை கிராஸ் பண்ணும் போது கூடி நிற்கும் பசங்களின் "டைவர் வணக்கம்" குரலும் பதிலுக்கு என்னைக்காவது அவரும் வணக்கம் வைத்தால் உலக அழகியான பின்ன உதட்டை குவித்து அழும் அழகிகள் போல பசங்க போடும் பதில் கூச்சலும் தவிர்த்து பார்த்தால் பகலில் ரொம்ப அமைதியான கிராமம் அது.

மத்தபடி ஊரில் வன்னியர்களும், தலித்துகளும், தேவர்களும், முதலியார்,பிள்ளைமார்களுன்னு எல்லாரும் ஒன்னடி மண்ணடியா மாமா,மச்சான்,தங்கச்சி,அத்தாச்சி,பெரியம்மா அப்படின்னு சொந்தம் கொண்டாடிகிட்டு சந்தோஷமா இருக்கும் கிராமம் அது.

என் அம்மா பிறந்த கிராமம். அப்பாவுக்கு நல்ல மதிப்பு அந்த ஊரிலே மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு. அப்பா எப்பவாவது வருவாங்க நான் என் அம்மா கைபிடிச்சு கிட்டு எட்டாம் நம்பர் பஸ்ஸில் போய் இறங்கியதுமே அம்மா கையை உதறி விட்டு நடராசன்,பிரகாஸ் ன்னு ஓடிடுவேன். மஞ்சு கீத்து கொட்டாய் எங்களுக்கு சொர்க்கம்.குள்ள(ம்)மாவை தேடுவேன். அவர் வண்டி ஓட்டும் அழகு அப்படி. அம்மா போய் இறங்கின உடனே ஊர் முழுக்க கொஞ்சம் கொஞ்சமா சேதி போகும். அம்மாவுக்கு அடுத்த செட் பொம்பளை பசங்க எல்லாம் வந்துடும். என் பாட்டியை ஊரே அக்கம்மான்னு தான்சொல்லும். பாட்டிக்கு அத்தனை ஒரு மதிப்பு ஊரிலே. அந்த தெருவை தவிர எங்கயும் போக மாட்டாங்க, அதிக பட்சமா புடவை இழுத்து போத்திகிட்டு கர்ணம் பிள்ளை வீட்டுக்கு போய் அந்த வீட்டு பாட்டிகிட்ட பேசிட்டு வருவாங்க. மத்தபடி நாத்து நடும் போது ஒரு தடவையும் அறுப்புக்கு ஒரு தடவையும் வயல் பக்கம் போவாங்க. ஆனா உக்காந்த இடத்துல இருந்தே ஊர் சேதி அத்தனையும் தெரிஞ்சுப்பாங்க.

அம்மா போய் இறங்கிவ உடனே அத்தனை தோழிகளும் வந்துடுவாங்க!

"யக்கா, அங்க ராசராச சோழம்பாத்தியாக்கா, என்னவோ போ நீயாவது டவுனுக்கு வாக்க பட்டு போன நல்ல நாலு படம் பாக்கலாம், இங்க பாரு பருத்திகொட்ட அரச்சே தேஞ்சு போறன், உம் மாமியார்காரி என்னா சொல்லுது வரனுமான்னு கேளு லெப்டு ரைட்டு வாங்கிடுவோம்! அத்தான் எப்டி இருக்காங்கக்கா? "- இது அந்த இளசுகளின் கல கல பேச்சு. அம்மாவுக்கு ஒரு பொய்யான கோவம் வரும். ஆனாலும் தனக்காக தன் தோழிகள் தரும் ஆதரவு மனசுக்கு இதமாக இருக்கும்.

"அடி செருப்பால, யேம்மா இவளுங்க கிட்ட ஏதும் சொன்னியா, மாமிய திட்டுராளுங்க காத்துல இந்த சேதி போவுட்டும் பின்ன நான் இங்கயேதான் இருக்கனும் ராட்டி தட்டிகிட்டு, நல்லா குடுத்தாங்க கண் கானா தூரத்துல...."மூக்கை முந்தானையால் சிந்தி கொண்டே அம்மா.....(அந்த கிராமத்துக்கும் மயிலாடுதுறைக்கும் எட்டு கிலோமீட்டர், என்னவோ அம்மா அமரிக்காவிலே வாக்கபட்ட மாதிரி என்ன ஒரு பில்டப்பு) உடனே பாட்டி..

"அட நா இல்லந்த அவள்வோளுக்கு தெரியாத ஊரு சேதியா அதான் கமலா இருக்காளே பத்தாது, ஒரு தடவ மாயவரம் போயிட்டு வந்தான்னா ஒரு மாசத்துக்கு சேதி அச போடுவாளுங்க, மாப்ள நல்ல படியா வச்சிருக்காரா ஒன்ன? நீதானந்த கேட்ட கா காசா இருந்தாலும் கவருமெண்டு காசா இருக்கனுன்னு இப்ப இப்புடி தப்புளி தனமா பேசுற"ன்னு சொன்ன வுடனே அம்மா

"அத விடும்மா, அவுங்களுக்கு என்ன கேப்பார் பேச்ச கேக்கறதுல மன்னனாச்சே, அத விடு இந்த பத்து நாள்ல வருஷ புளி, வருஷ உளுந்து எல்லத்தையும் சரி பண்ணனும் ஆமா குள்ளன்ன எங்க?'' அதுக்கு பாட்டி ..

"காலைல 'அக்கம்மா அண்ட வெட்ட போரன் மம்புட்டி குடு'ன்னு வாங்கிட்டு போனவன் தான் மங்கநல்லூர் பசார்ல பாத்ததா நாக்கீரு சொல்லிட்டு போனாரு, எங்க சுத்துதோ என்ன பண்ணுதோ"

முதல்ல குள்ள(ம்)மாமாவை பத்தி பார்த்தோமானால் அவர் அத்தனை குள்ளம் இல்லை. அவருக்கு ஏன் அப்படி ஒரு பெயர் வந்தது என்று அவருக்கே தெரியாதாம். எங்களுக்கு சின்ன வயசிலே அவர் கிட்டதட்ட ஒரு அர்னால்டு கணக்கா ஒரு ஹீரோ வாக இருந்தார். மபோசி மாதிரியான மீசை அதை அவர் புறங்கையால் நீவிவிடும் அழகை இன்னைக்கும் பார்த்து கொண்டு இருக்கலாம். தினவெஉத்த தோள்கள்ன்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு தோள்பட்டை. மார்பு விரிந்து விரைப்பான முலைகள் கட்டுமஸ்தாக. அவர் சட்டை போட்டு பார்த்ததில்லை. ஆனால் எப்போ அப்பாவை பார்த்தாலும் "அத்தான் இந்த டெரிகாட்டன் சட்டை கிழிஞ்சுதுன்னா எனக்கு தான் அது"ன்னு புக் பண்ணிப்பார். ஆனால் எனக்கு தெரிஞ்சு அப்பாவுக்கு சட்டை கிழிஞ்சதா தெரியலை. நான்கு முழ வேஷ்டி கட்டி பச்சை கலரில் பாம்பே டையிங் மொத்த துணியில் பெல்ட் அதிலே பை வச்சு அதுக்கு மூடி போட்டு பட்டன் போட்டு கிட்டதட்ட சிங்கப்பூர் முதலை மார்க் பச்சை பெல்ட் மாதிரியே கேசவன் டைலர் கிட்டே உக்காந்து தச்சு வாங்கி அதை கட்டியிருப்பார். பின்பு அந்த வேஷ்டியை பட்டாபட்டி டிராயர் தெரியும் படி மடக்கி கட்டி தலையில் ஒரு காசிதுண்டை ஒரு ரவுண்டு முண்டாசு கட்டி காதில் தரையில் நெருப்போடு தேய்க்கப்பட்ட பாதி சுருட்டு சொருகி வைத்து ஒரு கலக்கலாகத்தான் இருப்பார். இதோ அவரே வந்துட்டாரு பாருங்க

"வா வா தங்கச்சி, செல்ராசு சொன்னான் 'யக்காவ எட்டுல பாத்தேன்ன்னு' அதான் ஓடியாந்தேன். நல்லாருக்கியா, அத்தான் எப்டி இருக்குது? பெரியவ எப்டி இருக்கா,எலே மாப்ள அம்மாள எனக்கு ஒரு பொண்ணு பாக்க சொல்லுடா உனக்கு பொண்ணு பெத்து தாறேன்!"

"யம்மா இது பேசுற பேச்ச பாரு, ஆமா காலைல அண்ட வெட்ட போறேன்ன்னு போனியாம் பின்ன மங்கநல்லூருல சுத்திகிட்டு இருந்தியே என்னா நெனப்பு மனசுல?"

"ஆமா ஒனக்கு எப்டி தெரியும் நான் பஜார் போனது, அக்கம்மா, உனக்கு கூட தெரியாத நா பஜார் போனது..கல்யாணம் புள்ள ஒடயார் கடைல ஒரம் எடுத்தார சொன்னாரு அதான் போனேன்".

"சேரின்னே எனக்கு வருஷ புளி வேணும். போயி புளியங்கெள உலுக்கு, டேய் போங்கடி ஆளுக்கு ஒரு கொட்டாபுட்டி எடுத்துகிட்டு, யம்மா தொலசிம்மாக்கா இருக்கா வூட்டுல?"

"தங்கச்சி, புளிய உலுக்குறேன் ஆனா உளுந்து,பயரு பறிக்க ஒரு வாரம் ஆகும் நான் பறிச்சு தட்டி கொட்டி இவளுங்கள வச்சு தீட்டி எட்டுல போட்டு பாஞ்சி நாளுக்கு அப்றம் எடுத்தாரேன் அத்தான டெரிகாட்டன் சட்டை கேட்டிருந்தேன் அத சரி பண்ணி வையி, எத்தன நாளைக்கு ஒங் கொட்டம் தம்பிக்கு கல்யாணம் ஆன பின்ன வர்ரவ கிட்ட கேட்டு தான் எடுத்துட்டு போவனும் அதுக்குள்ள அனுபவிச்சுக்க"ன்னு கலாய்ப்பாரு. அதுக்கு அம்மா "எவ என்னாத்த சொல்றது இது என் வூடு நா வருவேன் வேனுங்கறத எடுத்துட்டு போவேன்"ன்னு தன் உரிமையை நிலை நாட்டிட்டு எழுந்து போகும்.

"அய்யோ அக்கம்மா அங்க பாரு பெருசு போவுது..." இது குள்ள(ம்)மாமா, அதுக்கு பாட்டி

"எலேய் நாகராசு என்ன ரொம்ப கொழுப்பு அதிகமாச்சோ அதான் பாப்பா வந்திருக்குல்ல நாள மெக்காநாளு புத்துக்கு படைக்க சொல்றேன் போ சின்ன பசங்க வந்திருக்கு கண்ணுல பட்டுகிட்டு, குள்ளா அவன போ சொல்லுடா...''

''இல்ல அக்கம்மா இவன ஒரு நாள் இல்ல ஒரு நாளு அறுப்பறுவாளேலயே போட்டு தள்ள போறன் அப்ப நீ குத்திப்ப பாரு நேத்து வக்க புடுங்குற போது ஐஸ் கட்டி மாரி சர்ருன்னு கையோட வாரான்..''.

''எலே வாய கழுவுடா ஒரு மாசம் முன்னாலயே புத்துக்கு படைச்சு இருக்கனும் பாப்பா வரட்டுமே நாட்டு கோழி ஆசையா திங்குமேன்னு நானும் தள்ளி போட்டுகிட்டே வந்தேன் சரி நாளைக்கு படையலுக்கு வேலைய பாரு இப்ப போயி பழம் உலுக்கு போங்கடி கொட்டாபுட்டி எடுத்துகிட்டு, இந்தா(அம்மாவை பார்த்து) தோ பாரு துளசிம்மா வூட்டுல தான் இருக்கா, சின்னசாமி தம்பியும் ஆட்ட திருப்பிகிட்டு போயிடுச வெயிலு கொளுத்துதுல்ல திண்ணைல தான் இருக்கும் போ போயி விசாரிச்சுட்டு வா...''

அம்மா கிளம்பி நாலு வீடு தள்ளியிருக்கும் சின்னசாமி மாமா (எனக்கு தாத்தா) வீட்டுக்கு போய்....

"மாமா என்ன காத்தாட கெடக்குற?" இது அம்மா!

"அட வாடா ராசாத்தி" - அவசர அவசரமா கோவணத்தை மறைச்சு துண்டை கட்டிகிட்டு, "எப்படா வந்த மாப்ள எப்புடி இருக்காரு இந்த பக்கம் வந்தா டெரிகாட்டன் சட்டையில மண்ணு ஒட்டிகுமாமா?"

"அத நீயே கேட்டுக்க மாமா ஒம் மாள்ள வந்த பின்ன, நா வாரத்துக்கு உட்ட ஆடு என்னாச்சு?"

"அது ஒன்னுக்கு நாலா ஆச்சு, நாலுத்தயும் ராவுத்தன்கிட்ட வித்துபுட்டு ஒன் சின்ன மவனுக்கு தம்பி தோழன் செஞ்சி போடனும்ன்னு அக்கம்மா சொன்னுச்சு.. எலேய் தொலசிம்மா தொலசிம்மா குச்சிகார செறுக்கி பாப்பா வந்திருக்கு பாரு காப்பி தண்ணி கொண்டா...அடுப்புகுள்ள தலைய வுட்டா ஒலகத்துல என்னா நடக்குது ஏது நடக்குதுன்னு தெரியாது அவளுக்கு..."

"ந்தா வுடு மாமா, வண்ட வண்டயா திட்டிகிட்டு, புழுத்த நா குறுக்க போவாது உம் ஏச்சுல அதுவும் ஒத்த மனுசி எத்தன பாடு படுது, என்னா சொன்ன எங்காச எடுத்தே எம்புள்ளக்கி தம்பி தோழன் கேக்குதோ தோ பார் மாமா அதுக்கு ஆச இருந்தா அது வாரத்துக்கு உட்ட ஆட்டுல இருந்து பண்ணி போட சொல்லு, என்னுத தொடுற வேல வச்சிகாத சொல்லிட்டேன் அப்புறம் நா பத்ரகாளியா ஆயிபுடுவேன் சொல்லிட்டன்".

"ந்தா கழுத என்ன பேச்சி பேசுற அக்கம்மா ஆட்ட தொட வேண்டாம் ராசாத்தி எலே தொலசி ராவுத்தன வர சொல்லு அந்த என் கடா பெருச வெல பேசு நானும் சின்ன பய பொறந்ததுல இருந்து ஒன்னும் செய்யல...காப்பி குடிடா ராசாத்தி"

அப்போ ராஜ்தூத் வண்டில வந்து சர்க்குன்னு பிரேக் போட்டு நிக்கும் சம்முகம் மாமா,

"வாக்கா எப்ப வந்த போன தடவ வந்தப்ப சொன்னன சீட்டு போட சொல்லி என்னா சொல்ற இந்த தடவ சீட்டுல சேந்தாலே பிளாஸ்டிக் வாலிக்கா..நம்ம காம்ராவூட்டுல தான் அடுக்கி இருக்கு பாத்தியா.."

"இல்லடா சம்முகம் இன்னும் வூட்டயே சுத்தி பாக்கலை. மாமா இருக்குன்னு அம்மா சொல்லுச்சு அதான் சுருக்குன்னு இங்க வந்துட்டேன். பொருவா பொடி மீனு வாசம் வேற வந்துச்சா தொலசிம்மக்கா கை ருசி பாத்து நாளாச்சா அதான் வந்துட்டேன், எலே சம்முகம் அந்த பஸ்ஸ நிப்பாட்டி கண்டக்டருகிட்ட அத்தான நாளக்கி இங்க புத்துக்கு படக்க போவுது சாப்புட வந்துடுங்கன்னு சேதி சொல்லி வுடுடா அவரு கேஸ் கட்டும் போது அத்தான் கிட்ட சொல்லிடுவாரு...."

அப்போ துளசியம்மாக்கா ஒரு தட்டிலே சூடான சாதம் மீன் குழம்பு போட்டு எடுத்துகிட்டு "வா பாப்பா இந்தா சூடா இருக்கச்சே சாப்புடு ஒனக்கு சூடா சாப்டாதான புடிக்கும்"

அம்மா கண்ணுல தண்ணி. அது சூடு,காரத்தாலயா அல்லது மாமியார், புருஷன், கொழுந்தன் எல்லாம் சாப்பிட்டு பின்ன நாத்தனார்கள் கூட உக்காந்து ஆறி போனதை வேண்டா வெருப்பாக சாப்பிடுவதை நெனச்சான்னு தெரியல...

"எலே தொலசிம்மா புள்ளக்கி கண்ணுல தண்ணி வருது பாரு அந்த விசிறி எடு வசிறி உடுறேன்....."

இதுல யார் யார் எந்த எந்த ஜாதியோ! அதான் தஞ்சை கிராமம்!! அப்போ!!!

*******************************************************************

இப்போ அம்மா ஹோண்டாய் அக்செண்ட்ல போனா கூட அந்த கிராமத்திலே அம்மாவின் வருகை அத்தனை முக்கியமா படவில்லை யாருக்கும். நாலு முட்டை பல்பு எரிஞ்ச தெருவிலே சோடியம் கண்னை கூசுது. குள்ள(ம்)மாமா செத்து போயிட்டாரு. சின்ன சாமி தாத்தா போயி சேர்ந்துட்டாரு. பாட்டி இல்ல, துளசியம்மாக்கா எலும்பும் தோலுமா அதே திண்ணையிலே கிடக்கு. அம்மா குரல் கேட்டா பூஞ்சையா மருமகள் கிட்ட "அடியே லதா, பாப்பா வந்திருக்கு பாரு செங்காலா மீனு வாங்கி கொழம்பு வையி"ன்னு சொல்லுது. ஆனா அம்மாவுக்கு தான் நேரமில்லை. அந்த புளிய மரம் வெட்டியாச்சு. பாம்பு புத்து இருந்த இடம் கட்டடமா இருக்கு. சம்முகம் மாமா ஊராட்சி மன்ற தலைவர், சரஸ்வதி பாட சாலை எதிரே உள்ள கொய்யா தோப்பு இப்போ கர்ணம் பிள்ளையின் பெரிய மகன் வீடா ஆகி போச்சு. எட்டாம் நம்பர் பஸ் டிரைவருக்கு மட்டும் அதே கிராக்கி அந்த பள்ளிகூட பசங்க கிட்ட. தெருவுக்கு பத்து பைக். ஒரு கார். ராஜமுது போயாச்சு அவர் பையன் சவுதி போயிட்டதால கறி வாங்க பஜார் தான் போறாங்க. நாட்டு கோழி முட்டை வாங்கிட்டு பெங்களூரு கத்திரிக்காய் வித்த ராவுத்தரை பத்தி யாருக்கும் தெரியலை. செக்கு இருந்த இடம் மைதானமா கிடக்கு. ஆரோகியம் சார் ஆரோகியம் கெட்டு கிடக்காரு.மலைகுடியில் இருந்து சின்ன வயசு குருக்கல் பையன் ஹீரோ ஹோண்டாவிலே வர்ரார். சாந்த நாயகியும்,வாகீஸ்வரரும் மாத்திரம் அதே வவ்வால் புழுக்கை வாசனையில் அப்படியே அன்றைக்கு பார்த்த மாதிரியே இருக்காங்க !!!

September 27, 2007

நாமக்கல் சிபியின் "மாதங்களிள் அவள் மார்கழி" - விமர்சனம்!!!

சமீபத்தில் பதிவர் தெக்கிகாட்டானை நம்ம நாமக்கல் சிபி கலாய்ச்சி ஒரு பதிவு போட்டிருந்தார். அந்த பதிவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். எப்போதும் போல ஒரு நாள் ஓவர் டைம் போட்டு தமிழ்மணத்தில் இரவு 12 மணிக்கு வேலை பார்த்து கொண்டிருந்த போது டொங்க்ன்னு நம்ம சிபி ஜி சேட்டுல வந்து "ஹாய்"ன்னு சொன்னாரு. அந்த சேட்டிங்க் தான் இந்த பதிவு!.

"ஹாய் அபிஅப்பா"

"ஹாய் சிபி, என்ன நடுராத்திரில"

"மா.அ.மா எழுதிக்கிட்டு இருக்கேன் 7ம் பாகம்"

ஆஹா, மா.அ.மா ன்னா என்னன்னு தெரியலையேன்னு நெனச்சு கிட்டு அவசர அவசரமா அவர் லிங்க்கு ஓடிப்போய் (மனுசன் எத்தனை பிளாக்குப்பா வச்சிருக்காரு) மாங்கு மாங்குன்னு தேடி ஒரு வழியா பிடிச்சுட்டேன். மா.அ.மா ன்னா மாதங்களிள் அவள் மார்கழின்னு பின்ன சேட்டுல வந்து...

"அப்படியா சிபி, சூப்பர் மாதங்களிள் அவள் மார்கழி தலைப்பே கவிதைங்க சிபி"

"அப்படியா, நீங்க அதை படிக்கிறீங்களா?" இது சிபி!

"என்னய அவமான படுத்தாதீங்க சிபி, நான் எத்தன பேருக்கு அந்த லிங் குடுத்து படிக்க வச்சேன் தெரியுமா, இப்ப எல்லாரும் சிபி எப்ப அடுத்த பாகம் போடுவாருன்னு என்னய போட்டு புடுங்குறாங்க தெரியுமா"

"அப்படியா ரொம்ப சந்தோஷமா இருக்குங்க அபிஅப்பா, சரி உங்க விமர்சனம் என்னா அந்த கதை பத்தி"

"அருமையான எழுத்து நடை" இது நான்!

"ரொம்ப நன்றி அபிஅப்பா, வேற?"

"எதிர் பாராத முடிவுகள் ஒவ்வொறு பாகத்திலும்"

"ஆமா அபிஅப்பா, அப்படி ட்விஸ்ட் குடுத்தாதான் அடுத்த பாகம் எப்ப வரும்ன்னு எதி பார்ப்பாங்க ம் வேற"

ஆஹா அடுத்து அடுத்து கதை உள்ள போயிடுவாரோன்னு பயந்து போய் அவசர அவசரமா அந்த கதைக்குள்ள கண்ணை ஓட்டினேன். நந்தினின்னு ஒரு பேர் தென்பட்டுச்சு. திரும்ப சேட்டுக்கு வந்து...

"ஹீரோ டயலாக் எல்லாம் சூப்பர்" ஆண்டவா கண்டிப்பா ஹீரோ இருக்கனும். இவர் பாட்டுக்கு புதுமை செய்கிறேன் பேர் வழின்னு ஹீரோவே இல்லாம எழுதியிருந்தார்ன்னா, அப்படித்தான் அவந்தி ஒரு கதை எழுத நான் போய் "ஹீரோயின் டயலாக் சூப்பர்"ன்னு சொல்ல போக "அண்ணாஆஆஆ....இது ரெண்டு சின்ன பசங்க கதை இதிலே ஹீரோயினே இல்லை"ன்னு திட்ட அது போல இப்பவும் ஆகிட கூடாதேன்ன்னு ஆண்டவனை வேண்டிக்கிட்டேன்.

"அப்படியா, நான் கதை எழுதும் போது அது உள்ளயே போயிடுவேன். ஹீரோ டயலாக் எல்லாம் நானே என்னை ஹீரோவா ஆக்கி அனுபவிச்சு எழுதுவேன், அது சரி ஹீரோயின் பத்தி ஒன்னும் சொல்லலையே அந்த கேரக்டர் எப்படி?"

ஆஹா இவர் நம்மை இன்னிக்கு மாட்டாம விட மாட்டாருன்னு நெனச்சு கிட்டு சரி நந்தினி பேரை யூஸ் பண்ணுவோம், ஆனா அது கதாநாயகியா இல்லாம விசிறி வீசும் பொண்னா இருந்தா என்னா பண்றது, சரி கல்ல விட்டு பார்ப்போம்ன்னு நெனச்சுகிட்டு...

"சிபி, எனக்கு ஒரு சந்தேகம், அந்த பேரை ஏன் கதாநாயகிக்கு வச்சீங்க, பொன்னியின் செல்வன் படிச்ச பாதிப்பா இல்ல தாகூர் கவிதை பாதிப்பா, சூப்பர் பேர் நந்தினி, எனக்கு அடுத்து பொண்ணு பொறந்தா உங்க கதாநாயகி நந்தினி பேர் தான் வைப்பேன்"

சிபி உணர்ச்சி வசப்பட்டு தாரை தாரையா ஆணந்த கண்ணீர் வடிச்சு மூக்கு சிந்துவது என் மானிட்டரில் தெரிஞ்சுது.

"வாவ் அபிஅப்பா எனக்கு இப்ப எப்படி தெரியுமா இருக்கு இப்படி ஒரு ரசிகரா நீங்க, சும்மா வரிக்கு வரி ரசிச்சு படிச்சு இருக்கீங்களே, என் தங்கமணியும் தான் இருக்காங்களே, எத்தனை தடவை சொன்னாலும் படிக்க மாட்டங்குறாங்க"

"அட போங்க சிபி என் தங்கமணி என் பதிவை கூட அவ்வள்வா படிக்க மாட்டாங்க ஆனா மா.அ.மா படிச்சுட்டு அழுவாங்கன்னா பார்த்துகோங்க சிபி"

"எதுக்கு அழனும், ஸ்மூத்தா தான போகுது"

ஆஹா மாட்டிகிட்டனே...சரி சமாளிப்போம்....

"அட நீங்க வேற சிபி அது ஆனந்த கண்ணீர்ங்க"

"ஓ , தெரியுமா சேதி நந்தினி இந்த பாகத்துல பொக்கே குடுக்க போறா?"

"அடங்கொக்க மக்கா, என்னா சிபி நான் இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கலை, இது தான் சிபி உங்க கிட்ட எனக்கு பிடிச்சது, வாவ்"

"அபிஅப்பா, என் அருமையான ரசிகருக்காக இப்போ இந்த பாகத்தை இப்போ பப்ளிஷ் பண்ன போறேன், ஆனா தமிழ்மணத்துல இணைக்க மாட்டேன், முதல்ல நீங்க படிங்க பின்ன தமிழ் மணத்துல இணைச்சு கறேன், இது நான் என் ரசிகருக்கு தரும் அன்பு பரிசு"

"ரொம்ப தேங்ஸ் சிபி, நானே கேக்கனும்ன்னு இருந்தேன், இது என் பாக்கியம், பப்ளிஷ் பண்ணுங்க"

அப்படியே 3 நிமிஷம் போச்சு....

"அபி அப்பா படிச்சுட்டீங்களா"

"இருங்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க, மா அ மா படிக்கும் போது அபிபாப்பா டிஸ்டர்ப் பண்ணாவே கடந்து கத்துவேன், ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப்"

"ஸாரி ஸாரி ஸாரி...படிங்க்"

பத்து நிமிஷம் கழிச்சு திரும்பவும் சேட்ல.....

"அபி அப்பா "

"ம்"

"இன்னுமா படிக்கறீங்க"

"படிச்சுட்டேன்"

"எப்படி"

"ஒன்னும் சொல்றத்துக்கு இல்ல சிபி, என்னை 1 மணி நேரம் தனியா விடுங்க.....நான் அந்த பாதிப்புல கொஞ்சம் சந்தோஷமா இருக்கறேன்"

"ஓக்கே ஓக்கே நாளை பார்ப்போம் பை டேக் கேர், குட் நைட்"

"குட் நைட் சிபி"

அடுத்த நாள் கதையின் கிளைமாக்ஸ் கூட சொன்னார், தகுந்த சம்மானம் அனுப்பினா தனி மடலில் முடிவு சொல்லப்படும் "யாரிடமும் சொல்லாதீங்கன்னு சத்தியம் வாங்கி கிட்டு.......

தேவ்! உங்களோட தொடர் "சின்ன குளம்" விமர்சனம் அடுத்ததா போடவா?

September 26, 2007

கல்யாண்வீட்டுக்கு சமைக்க போன கதை பாகம் #2

அந்த தேக்சாவின் சைஸ் பார்த்ததுமே பசங்க மெர்ஸ் ஆகிட்டானுங்க. கண்டிப்பா பஸ் உள்ள ஏத்த மாட்டாங்க , பஸ் மேல வச்சுக் கட்டிக் கிட்டி இதல்லாம் சரியா வராதுன்னு முடிவு பண்ணி "மாமா கிடக்காருடா நாம ஒரு ஆட்டோ வச்சுகிட்டு போய் கல்யாண வீட்டிலே வண்டி சத்தம் வாங்கிப்போம் "ன்னு ராதா சொன்னதை ஒத்துக்கிட்டு ஆட்டோ பிடிச்சு போய் சேர்ந்துட்டோம் .


நாங்க இருந்த கெட்டப்புல ஒரிஜினல் சமையல் காரங்க தோத்துடுவாங்க . போய் இறங்கின உடனே கக்கத்துல பேக் வச்சிருந்த கடாமீசை ஆள்கிட்ட " நாங்க மணி அய்யர் ஆளுங்க சமையலுக்கு வந்துருக்கோம் , வண்டி சத்தம் குடுங்க" ன்னு கேட்டதுக்கு அவரு " அப்புடியா வாங்க தம்பி அய்யரு எங்க" ன்னு கேட்டார். ராதாவுக்கு அவர் மீசை பார்த்ததுமே லைட்டா உதறுது, இருந்தும் சமாளிச்சுக் கிட்டு "மாமாக்கு பேதியாகறது அவா அம்மா பாலாஜி டாக்டர்ட கூட்டிண்டு போயிருக்கா "ன்னு கரெக்டா உளறினான். அதுக்கு அவர் " என்னாது அய்யருக்கு பேதியா அப்ப அவர் வரமாட்டாரா அவர் வரலைன்னா ஒத்த பைசா தரமாட்டேன் "ன்னு கடுப்பாக, பின்ன நான் சமாளிச்சுகிட்டு " அய்யய்யோ இல்லீங்க அவர் சம்சாரத்துக்கு பேதி இவர் கூட்டிட்டு போயிருக்கார்" ன்னு பெனாத்த தாஸ் உடனே " இவனும் தப்பா சொல்றாங்க அவரு அம்மாவுக்கு பேதி அவரு வந்துடுவாரு" ன்னு சரி பண்ண கடாமீசை " டேய் பசங்களா யாருக்கு பேதி கரெக்டா சொல்லணும் இப்ப "ன்னு மிரட்டும் தொனியில சொல்ல அதுக்கு ராதா " சார், இப்படி வரிசையா கேள்வி கேட்டா எங்களுக்கு பேதியாகிடும் எங்களைச் சமைக்க விடுங்க சார்" ன்னு கெஞ்ச " சரி சரி நீங்க சமைச்சு எங்களுக்கு பேதியாகாம இருந்தா சரி இந்தாங்க வண்டி சத்தம் "ன்னு கொடுத்தார் .


கல்யாண வீட்டுக்கு பின் பக்கம் மாட்டு தொழுவத்தை சுத்தம் பண்ணி எட்டு அடி நீளத்துக்கு ஒரு அடி அகலத்துக்கு ஆழமா குழி வெட்டி வச்சிருந்தாங்க அது தான் அடுப்பாம் .(கோட்டை அடுப்பு) பார்த்த உடனே பக்குன்னு இருந்துச்சு . ஆஹா நமக்காகவே வெட்டி வச்ச மாதிரி இருக்கேடான்னு நெனச்சுகிட்டு நான் ராதாவை பார்த்து "டேய் உக்கிராண அறையிலே ஒரு இன்சார்ஜ் இருப்பார் அவர்கிட்ட சமையல் பாத்திரம் எல்லாத்தையும் வாங்கிட்டு சாமானையும் வாங்கிட்டு வாடான்னு சொன்னேன் . சரின்னு போனான் ஆனா கொஞ்ச நேரத்துல அந்த இன்சார்ஜ் சின்ன கடாமீசை ராதா கையை பிடிச்சுகிட்டு வந்துச்சு வந்து " டேய் பசங்களா எந்த சமையல்காரன் முதல்ல முந்திரி திராச்சை குடுன்னு கேப்பான்"ன்னு சத்தம் போட்டுச்சு . பின்ன கணேசன் சமாளிச்சு " இல்ல சார் முதல்ல அடுப்பு பத்த வைக்கும் முன்ன ஒரு நைவேத்தியம் பண்ணி சூடம் பத்த வச்சு அடுப்பிலே போட்டு ஆரம்பிக்கனும் நீங்க எல்லா முந்திரி திராட்சையும் தர வேண்டாம் ஒரு நாலு பேருக்கு வர்ர மாதிரி தாங்க"ன்னு சமாளிச்சு பின்ன வந்த திராட்சை முந்திரி தின்னுட்டு உக்காந்திட்டோம். அந்த பக்கம் வந்த பெரிய கடா மீசை "என்னங்கடா உக்காந்துட்டீங்க, சமைக்கலையா " ன்னு உறும ராதா அதுக்கு " என்ன சார் விவரமில்லாம இருக்கீங்க ஞாயித்து கிழமை நாலரை ஆறு ராகுகாலம் இல்லியோ அடுப்பை அக்னி பகவானை தொடலாமோ உங்காத்து கல்யாணம் நல்லா நடக்க உங்காத்துகாரங்களை விட கை நீட்டி அட்வான்ஸ் வாங்கின எங்களுக்கு அக்கறை ஜாஸ்தி"ன்னு அவரு நெஞ்சை நக்கி நீட்டு டயலாக் விட்டுட்டு அடுப்பிலே காபி போட பால் வார்க்காம எங்க நெஞ்சிலே பாலை வார்த்தான்.



அப்பாடா 6.00 மணி வரை ராகு பகவான் காப்பாத்திட்டார் . பின்ன மெதுவா ஒண்ணரை மணி நேரம் ஓட்டினா மாமா வந்துடுவார்ன்னு நிம்மதியா உக்காந்தா நேரம் அன்னைக்குன்னு பார்த்து சர்ருன்னு பறக்குது .கரக்டா ஆறு மணி ஆன பின்ன ஒரு அம்மா கையில குழந்தையோட வந்து "என்னாங்க இன்னும் அடுப்பு பத்த வைக்கலை குழந்தை அழுவுது காபி போடுங்க "ன்னு கத்திட்டு போச்சு . சரிவேற வழியே இல்ல மாமா கவுத்துட்டார் குஞ்சு குளுவான் கூட அப்டி இப்டின்னு சொல்லி கவுத்துட்டாரானு அடுப்பை பத்த வைக்க ஏற்பாடு பண்ண ரெடியாகும் போது அதே பெரிய கடாமீசை வந்துச்சு. "இன்னும் ஆரமிக்கலையா"ன்னு ஒரு அதட்டல் . ராதா இப்பவும் அதே ஆயுதம் எடுத்தான் " சார் குரு ஹோரைல ஆரம்பிச்சா நள பாகமா இருக்கும் செவன் தர்டிக்கு குரு ஹோரை ஸ்டார்டிங்"ன்னு சொல்ல கடாமீசை "ஒரு மயிரு ஹோரையும் வேணாம் வேலைய பாருங்க "ன்னு சொல்லிட்டு போச்சு.


சரி முதல்ல அடுப்பை பத்த வைக்க என்ன செய்யலாம்ன்னு யோசிச்சு விறகு கட்டை எல்லாம் சுத்தியும் வச்சு சூடத்தை கொளுத்தி அதன் உள்ள போட்டு மண்ணெண்ணை ஊத்தி தக தகன்னு மாட்டு தொழுவம் கீத்து கொட்டாய் உச்சி வரை தொடுவது மாதிரி எரியுது பின்ன பெரிய பெரிய பாத்திரம் பெரிய இட்லி பானை எல்லாம் அது மேல வச்சு தண்ணிய புடிச்சு அதுல ஊத்தி கிட்ட தட்ட 5 பெரிய பானைல தண்ணி கொதிக்குது தள தளன்னு . அதுக்குள்ள கல்யாண வீட்டுல இருந்த பொம்பளைங்க எல்லாம் வேடிக்கை பார்க்க வந்துட்டாங்க சுத்தியும் நின்னு அதுல ஒண்ணு " இங்க பாரு சரோசா சின்ன பசங்க நாலும் என்னமா சமைக்குதுங்க வர்ர பொண்ணு வூட்டு காரங்க குளிக்கிறத்துக்காக வெந்நீர் போடுதுங்கன்னு கமெண்ட் வேற . அட பாவி அய்யரே எங்களை சர்க்கஸ் கோமாளி மாதிரி ஆக்கிட்டீங்களேன்னு நெனச்சுகிட்டு நான் கடுப்பாகி "டேய் ராதா , கணேசா , தாஸு எல்லா இட்லி தட்டுலயும் மாவை ஊத்துங்கடா " ன்னு சவுண்ட் விட்டு தலைமை குக் ஆகிட்டேன் . வேற வழி சமாளிச்சாகணுமே ! ஒரு வழியா இட்லி வேக ஆரம்பிச்சுது . அதுக்குள்ள நாங்க படும் பாட்டை பார்த்துட்டு ஒரு அம்மா "தம்பிகளா நான் வேணா காப்பி போட்டு தாரேன் உள்ள கொண்டு போய் குடுங்க "ன்னு சொல்லி காப்பி போட போனாங்க . மணி ஏழரை ஆச்சு , அய்யர் வரலை எங்களுக்கு ஏழரை ஸ்டார்ட் ஆச்சு .



காபி ரெடி ஆச்சு, நாங்க வரிசையா பத்து பத்து காப்பியா தட்டுல வச்சி உள்ள எடுத்துட்டு போயி எடுத்துட்டு போய் முதல்ல பெரிய கடாமீசைக்கு குடுத்தோம். அப்ப அது " இன்னுமா அய்யரு வரலை "ன்னு கேட்டுச்சு . ராதா உடனே " பீஸ் கட்ட பணம் பத்தலையாம் உங்க கிட்ட இன்னும் கொஞ்சம் அடவான்ஸ் கேட்டு வாங்கி குடுத்து விட சொல்லி ஆள் அனுப்பியிருக்கார் அப்ப தான் அவர் வர முடியும்" ன்னு சொல்லி டபார்ன்னு 200 கறந்துட்டான். ஆஹா இவன் மேல மேல ஏழரைய கூட்டுறானேன்னு நெனச்சுகிட்டு திரும்பவும் அடுப்பு கிட்ட வந்தா ஏதோ ஒரு நாத்தம் . என்னான்னு பார்த்தா ஒரு சின்ன பாத்திரம் உருகி உள்ள போயிடுச்சு . அதுக்குள்ள இட்லி நல்லா வெந்து போச்சு சரி முதல்ல இட்லியை காப்பாத்துவோம்ன்னு மூடியை திறந்தா ஆவி அடிக்குது மூஞ்சில . அதை பொறுத்துகிட்டு முதல் தட்டு எடுத்தா அது ஒட்டிகிட்டு வரலை . பின்ன உருண்டை ச்வுக்கு விறகு எடுத்து தட்டின் வளையத்துக்குள்ள அத விட்டு தூக்கினேன் . வெளியே வந்துடுச்சு ஆனா என்னால அந்த வெயிட்டை பேலன்ஸ் பண்ண முடியலை மெதுவா சூட்டை பொறுத்துகிட்டு தூக்கினேன் , அது உருண்டை சவுக்கு விறகாச்சா டொய்ங்ன்னு ஒரு அந்தர் பல்டி அடிச்சு பக்கத்து பாத்திரத்துல கொதிக்கும் தண்ணில தட்டு விழுந்துடுச்சு . சூடு தண்ணிக்கும் அதுவுமா கரைய ஆரம்பிச்சுது . பின்ன ராதாவும் தாஸும் சேர்ந்து ஜாரணிகரண்டி வச்சு இட்லியை வாற ஆரம்பிச்சானுங்க பின்னஅதை ஒரு தட்டிலே கொட்டினா ஒரு குவியலா பொல பொலன்னு நிக்குது . இதை இட்லின்னு சொன்னா யார் நம்ப போறாங்க ! அய்யோ அய்யரே மணி 9.00 ஆச்சே இன்னும் வராம போயிட்டியே பாவி மனுஷா மீசைக் காரனை நெனச்சாவே பயமா இருக்கு .


சரி இது எல்லாத்துக்கும் காரணம் தீ அதிகமா இருந்தது தான்ன்னு நெனச்சுகிட்டு ஒரு அண்டாவில இருந்த தண்ணியை எடுத்து மெதுவா அடுப்புக்குள்ள ஊத்தினேன் கொஞ்சம் தீ குறையட்டும்ன்னு அப்போ அடுத்த தட்டு இட்லி ஊத்த பெரிய மாவு இருந்த பாத்திரத்தை ராதா தூக்க முடியாம இழுத்துக்கிட்டே வர வர வர என்னோட டிக்கிலோனா விளையாடிட்டான், அவவளவு தான் அத்தனை தண்ணியும் அடுப்புகுள்ள ஊத்திடுச்சு. எல்லா நெருப்பும் அணைஞ்சு அடுப்பு கரி எல்லாம் தண்ணில மிதக்குது. இனி எல்லாம் மண்வெட்டி வச்சு வாரி வெளியே எடுத்து திரும்பவும் உஷ் அப்பாடா இப்பவே கண்ணை கட்டுதே .... ஒருத்தனுக்கு ஒருத்தன் பார்த்துகிட்டோம் அந்த கொல்லை பக்கம் ஒரே ஒரு வேலி தாண்டினா கடேசி பஸ் பிடிச்சிடலாம். ஒன் டூ த்ரீ எதுவும் சொல்லிக்கலை . அடுத்த 3 நிமிஷம் பஸ்ஸ்டாப் வந்தாச்சு . பஸ்ஸும் வந்துச்சு சரியா, அதில இருந்து மணி அய்யர் இறங்கினார் . கரியும் அழுக்குமா இருந்த எங்களை பார்த்து கேட்டார் "என்னடா எல்லாம் முடிஞ்சுதா" நான் சொன்னேன் "இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு நீங்க போங்க நாங்க வர்ரோம் " விதி வலியது ...


பின்ன கொஞ்ச நாள் நாங்க மணி அய்யர் தெரு பக்கம் போகலை , அவர் வந்து வீட்டுல தேடினாலும் அகப்படுவதில்லை ! என்ன நடந்துச்சு அன்னிக்குன்னு அவரை இந்த தடவை ஊருக்கு போகும் போது கேக்கணும் !

நான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை!!!! பாகம் 1

முதல்ல மணி அய்யரை பத்தி சொல்லியாகனும் . அவர் கல்யாண வீட்டில் சமையல் செய்யும் ஒரு சமையல்காரர் . அவர் தான் சீஃப் குக் . அவர் கிட்ட ஒரு பத்து பசங்க வேலை செஞ்சாங்க . ரொம்ப பெரிய பேமஸ் குக்ன்னு சொல்ல முடியாது . ஆனா எல்லா கல்யாண தேதியிலயும் புக் ஆகிடுவார் . அவருக்கு அவர் வயசுக்கு இணையான நண்பர்கள் அவ்வளவா இல்லை . எல்லா நேரமும் எங்க கூட தான் வெட்டி அரட்டைல இருப்பார் . ARC ஜூவல்லரியின் ரிக்ஸின் பேக்ல தேர்ந்தெடுத்த கும்பகோணம் கொழுந்து வெத்தலை வச்சிருப்பார் . பிலிம் ரோல் டப்பாவிலே மஞ்சள் கலந்த சும்மா வெண்ணெய் போல சுண்ணாம்பு இருக்கும் . ராஜேந்திரன் கடையில் 2 ரூபாய்க்கு பன்னீர் புகையிலையும் ,2 ரூபாய் மைதீன் புகையிலையும் வாங்கி கசடு எடுத்து கலந்து ஜிமிக்கி டப்பாவில் வச்சிருப்பார் . அது போல வறுத்த நெய் சீவல் ஒரு பால் கவரில் இருக்கும் . இது தான் அவர் செல்லப் பெட்டி ஸாரி செல்ல பேக் . இது தவிர அவருக்கு கோமதின்னு ஒரு பொண்ணு இருப்பது அவரை பத்தின உபரிச் செய்தி.



நாங்க வெட்டியா நடத்தும் அரட்டைக் கச்சேரியில் அவருக்குப் பிரதான இடமுண்டு . சியாமளா கோவில்ல அப்படித்தான் அன்னிக்கு ஒரு நாள் நான்,குரங்கு ராதா, தாஸ் , கணேசன் எல்லாம் கோமதிக்கு ஆண்டாள் கொண்டை போட்டா எப்படி இருக்கும்ன்னு சிலாகிச்சு பேசிகிட்டு இருந்தப்ப திடீர்ன்னு வந்துட்டார். "என்னடா குழந்தகளா, நானெல்லாம் அந்த காலத்துல படிச்சுண்டே வேலைக்கு போய் சம்பாதிச்சவனாக்கும் , இந்த கால குழந்தைகள் ஏன் தான் இப்படி வீணா போறதுகளோ " ன்னு அலுத்துகிட்டார் . உடனே ராதா " மாமா மகாதான தெருவிலே நேஷனல் இருக்குன்றதால அந்த மகாபாவி மணி சண்டாளன் காவிரிக்கு கூட போகமாட்டான் அதான் இன்னிக்கு ஜாரணி கரண்டி வச்சுண்டு அலையரதுன்னு உங்காத்து மொட்ட பாட்டி சொன்னாளே " ன்னு சொன்னான் . அதுக்கு அவர் " அவ கெடக்காடா ராதா எண்பாதாகறது , காது கேக்கலை ஆனா வாய் மட்டும் மாயுரநாதருக்கும் ரங்கநாதருக்குமா இருக்கு , அத விடுங்கடா நேக்கு உங்களால ஒரு உபகாரம் வேணுமே"ன்னார் .



நான் " பீடிகை பலமா இருக்கச்சயே நெனச்சென் என்னா வேணும் அந்த வெத்தல பேக்கை தாங்க " ன்னு சொன்னேன் . அதுக்கு அவர் " கொழந்தே ரெண்டு மாசம் முன்ன ஆனைதாண்டவபுரத்துல அப்பசி இருவத்து நாலு இருவத்து அஞ்சுல ஒரு கல்யாணம் ஒத்துண்டேன். 450 ரூவாய்க்கு பிசிறி பிசிறி ஒத்துண்டான். சுமாரான கல்யாணம் தான். இப்ப நேக்கு பரசலூர்ல இருந்து ஒரு அம்சமான பார்ட்டி மாட்டினான். 650 ரூவா . ஆனா சமையல் டேஸ்ட் தெரிஞ்சவன் . அதையும் ஒத்துண்டேன் நோட் த பாயிண்ட் உங்கள நம்பி ஒத்துண்டேன் . ஹெல்ப் பண்ணு வேளா" ன்னு சொன்னார். " நாங்க என்ன செய்யனும் மாமா இதுல " இது ராதா . அதுக்கு மணிஅய்யர் "கொழந்தே மொதோ பார்ட்டி பொண் ஆத்துல சண்டை எல்லாம் முடிஞ்சு பரிசம் போட வர்ரதுக்கு ராத்திரி 10 ஆகும். அவா வந்த பின்ன தான் சாப்பாடு எல்லாத்துக்கும். அது வரைக்கும் ஒரு குஞ்சு குளுவானுக்கும் பச்சத் தண்ணி கூட கிடையாது. ரெண்டாவது பார்ட்டி வீட்ல டாண்ணு வெள்ளகாரனாட்டம் ராத்திரி 7.00க்கு சாப்பாடு முடிஞ்சுடும். வண்டி சத்தம் தரேன்னு சொல்லிருக்கான். நான் ஏழரைக்கு ஆனைதண்டாவரம் வந்துடறேன். நீங்க அது வரை சித்த சமாளிச்சுண்டு இருந்தா போதும் மொதோ பார்ட்டி வீட்டுல, நா உங்களுக்கு தலைக்கு 10 ரூவா தந்துடறேன்"



அதுக்கு தாஸ் " தலைக்கு எதுக்கு பணம் கைக்கு இருவத்தியஞ்சா குடுத்தா நான் ரெடி இவனுங்களைப் பத்தி தெரியாது "ன்னு பட்டுன்னு ஒத்துகிட்டான் . உடனே ராதா டக்குன்னு சட்டையை கழட்டி பூணூலால சர் புர்ன்னு முதுகை சொறிஞ்சுகிட்டு பரக் பரக்குன்னு கஷ்கத்தை சொறிஞ்சகிட்டு "மாமா உம்ம மேனரிசம் அப்படியே இருக்கா "ன்னு கேட்டான் . அதுக்கு அவர் "கண்ணே பட்டுடும் போலருக்குடா குழந்த தாசில்தார் ஆத்து குழந்த போல இல்லடா எங்காத்து பையனாட்டம் இருக்கே "ன்னு பூரிச்சு போனார் . அதுக்கு ராதா "நேக்கு அப்பன்னா நாப்பதா வெட்டுங்கோ "ன்னு சொன்னான் . எனக்கு தான் யோசனையா இருந்துச்சு நம்ம கிளாஸ்ல படிக்கிறவன் எவனாவது அந்த கல்யாணத்துக்கு வந்துட்டா ஸ்கூல் முழுக்க தண்டோரா போட்டுடுவானுங்களேன்னு ஒரு யோசனை . ஆனா ஆட்டோமேட்டிக்கா வாய்ல இருந்து வார்த்தை வருது "அறுவது குடுத்தா ஐயா ஆட்டைக்கு ரெடி "ன்னு .



உடனே அய்யரு " நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் அங்க போயி சும்மா பாவலா காமிச்சா போதும் , நாலு மொழம் வேஷ்டி காசி துண்டுன்னு போகணும் யார் கேட்டாலும் மாமா இப்ப வந்துடுவார், அவா ஆத்து மொட்டபாட்டிக்கு பேதியாயிண்டு இருந்துச்சி அதனால பாலாஜி டாக்டராண்ட அழச்சிண்டு போயிருக்கார் இப்ப வந்துடுவார்ன்னு சொல்லிகிட்டு இருந்தா போதும் "ன்னு சொல்லிகிட்டே இருக்கும் போது அந்த வழியா போன அவர் அம்மா " கட்டேல போறவனே நேக்கேண்டா போகணும் உன் ஆத்துகாரிக்குன்னு சொல்ல வேண்டியது தானே "ன்னு வெடிச்சுட்டு போனாங்க. அப்ப அய்யரு " அவேம்பா இவளுக்கு சீக்கிரம் மோட்சம் கொடுத்து கூட்டிக்க கூடாதா , சரி கொழந்தங்களா நாளைக்கு சாயரச்சை நாலு மணிக்கெல்லாம் அங்க ஆஜராகிடனும் , அவா ஆத்துல சொல்லிருக்கேன் என்னன்ன பாத்திரம் வாடகைக்கு எடுத்து வைக்கனும் எது எதை ஊற வைக்கணும்னு , போகும்போது ஆத்துல மாமிட்ட சொல்லி பெரிய ஜல்லி கரண்டியும் செப்பு தேக்சாவையும் தூக்கிண்டு போங்கோ பஸ்ல போயி இறங்கின பின்ன அவா ஆத்துல வண்டி சத்தம் வாங்கிடுங்கோ நா சுருக்க வந்திடறேன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டார்.


இந்த நாலு பேர்ல ராதாகிட்ட மட்டும் தான் பூணூல் இருக்கு மத்தவங்க என்னா பண்றதுன்னு யோசிக்கும் போதே ராதா கவலைய விடுங்கடா எங்காத்து சோப்பு டப்பாவிலே ரெண்டு மூணு இருக்கு எடுத்துண்டு வார்ரேன்ன்னு சொல்லிட்டு கிளம்பினான் . அடுத்த நாள் நாலுமுழம் வேஷ்டி , கைவச்ச பனியன் , கதர் சட்டை , காசித்துண்டு கையிலே மஞ்ச பையோட கோமதி வீட்டுல மூணு மணிக்கு ஆஜர் ஆகியாச்சு ! கோமதி எங்களை பார்த்து களுக்குன்னு சிரிச்சுகிட்டே உள்ளே ஓடி " அம்மா இங்க பாரேன் அப்பா ஆபீஸ்ல சேந்திருக்கும் நாலு அப்ரண்டீஸ் வந்திருக்கா "ன்னு சொல்லிக்கிட்டு காது ஜிமிக்கி ஆட பாவாடை தூக்கி பிடிச்சு கிட்டே துளசி மாடம் தாண்டி முற்றத்துல ஓடினா எங்க மனசையும் சேர்த்து எடுத்துக்கிட்டு . பின்ன மாமி பெரிய தேக்சாவையும் ஜல்லி கரண்டியையும் எங்க முன்னாடி கொண்டு வந்து வச்சாங்க. சரின்னு அதை தூக்கிட்டு வெளிய வந்தாச்சு . தேக்சாவை தூக்க 3 பேர் வேணும் அவ்வளவு பெருசு . என்னையே உள்ள வச்சு தூக்கிட்டு போகலாம் . என்னைய தூக்க விட்டுட்டா என்ன பண்றதுன்னு நான் டக்குன்னு மாமா வேட்டிய உருவி ஜல்லி கரண்டில சுத்தி சும்மா போருக்கு ஏக்கே 47 தூக்கிட்டு போற மாதிரி கிளம்பிட்டேன் . மாமா வேஷ்டி திண்ணை கொடியிலே காய்ஞ்சுதுன்னு இந்த இடத்துல சொல்லிக்கிறேன் .



இனி நாங்க எப்படி சமையல்ல தூள் கிளப்பினோம்ன்னு 2ம் பாகத்திலே சொல்றேன் ( பதிவு பெருசா ஆகிடுச்சு அதனால)

சின்ன சின்னதாய் சில கலாய்த்தல்கள்!!!



என் அலுவலகத்தில் ஒரு மலையால தம்பதி வேலை பார்கிறாங்க. ரெண்டு பேரும் ஒரே டிபார்ட்மெண்ட் தான். அந்த டிபார்ட்மெண்ட் முதல் மாடியிலும் என் அலுவலகம் கீழ் தளத்திலும் இருக்கும். வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் அந்த நண்பர்.
அவர் தண்ணியடிப்பதோ சிகரட் பிடிப்பதோ எதுவுமே அவர் தங்கமணிக்கு தெரியாம பார்த்துப்பார். தம் அடிக்கனும்ன்னு நெனச்சார்ன்னா நேரா கீழே இறங்கி வந்து வேற டிபார்ட்மெண்ட்ல யார்கிட்டயாவது வாங்கி பக் பக்ன்னு இழுத்துட்டு விக்ஸ் மாத்திரை சப்பிட்டு மேல போவார்.

அன்றைக்கும் அப்படித்தான் கீழே மெதுவா வந்து என் கேபினை திறந்து என்னை பார்த்தார். எனக்கு தெரிஞ்சு போச்சு அவர் சிகரட் கேக்க தான் வந்திருக்கார்ன்னு. நானே போரடிச்சுகிட்டு உக்காந்திருந்தேன்.

தமிழ் மணம் அன்றைக்கு "ஓசை செல்லாவுக்கு 'நச்'ன்னு ஒரு கேள்வி"

"ஓசை செல்லாவுக்கு தலைல குட்டு வச்சு ஒரு கேள்வி"

"ஓசை செல்லாவை கட்டி வச்சு ஒரு கேள்வி"ன்னு ஒரே எக்ஸாம் ஃபீவர்ல இருந்துச்சு.

ஒரு மனுஷன் எத்தனை கேள்விக்கு பதில் சொல்லுவார்.
அவரோ எல்லா கேள்வியையும் சாய்ஸ்ல விட்டுட்டு போறார்.

எனக்கோ பயம் குசும்பன் " ஓசை செல்லாவுக்கு 127 கேள்விகள்"ன்னு போட்டு

1. உயிர் எழுத்துகள் மாத்திரம் பேசும் மணியான பதிவர் யார்?

2.சமீபத்தில் கிழிந்த டவுசரோடு இருப்பவர் யார், அதை கிழித்தது யார்?

3. மு.கார்த்திகேயன் என்ற பதிவரின் இயற் பெயர் என்ன?

இப்படியாக கேட்டு மொக்கை போட்டுடுவாரோன்னு.

அந்த சமயம் பார்த்து நம் நண்பர் வந்தாரா சரி இன்னுக்கு இவர் தான் நமக்கு சரியான தீனின்னு நெனச்சுகிட்டு டக்குன்னு அவர் தங்கமணி எக்ஸ்டன்ஷனுக்கு ரிங் பண்ணினேன்.

அவங்க எடுத்து "என்ன சாரே எந்து விஷேஷம்"ன்னு சோதிச்சு. நான் "இவ்விட இனி தான் விஷேஷம், கொறச்சு கேள்கு"ன்னு சொல்லிட்டு போனை ஸ்பீக்கர்ல போட்டுட்டு வந்த நண்பரை பார்த்து '' வாய்யா என்ன விஷேஷம்"ன்னு கேட்டேன். பின்ன அவரும் நானும் பேசியது அப்படியே தாரேன் பாருங்க!

"வாய்யா ரெவி(தமிழ்ல ரவின்னா அவ்விட ரெவியாக்கும்) என்ன விஷேஷம்?"

"ஒன்னுமில்ல சாரே லைஃப் ரொம்ம போர் அடிக்குது, ஒரு தம் இருக்கா குடு!"

"யோவ் உன் ஓய்ஃப்க்கு தெரிஞ்சா என்னா ஆகும்?"

"அவ கிடக்கா தெண்டி, அவளோட வல்லிய புத்திமட்டு, நான் இங்கோட்டு அடிச்சுட்டு விக்ஸ் குளிகை அடிச்சுட்டு போவேன். ஆ தெண்டிக்கு ஒன்னும் அறியில்லா!"

"ரெவி கள்ளு எங்கன குடிக்கும், இதுக்கே இங்கன பயந்தா?"

"வளர ஈஸி, நான் நேரத்தே ஸ்டாக் பண்ணி வீட்டுல, சின்ன ஜூஸ் பாட்டில்ல பிரிச்சு வச்சு, தினக்கும் ஒரு பாட்டில் டாய்லெட் கொண்டு போய் பாத்டப்புல வெள்ளம் நெரப்பி அதுக்குள்ள காலை ஆட்டிகிட்டே " கடலினகரை போனோரே கானா பொண்ணின போனோரே போய் வரும் போ என்ன கொண்டு வரும்"ன்னு பாடிகிட்டே மூணொன்னும் வீசும் ஆ மண்டிக்கு கண்டுபிடிக்காம்பட்டில்லா"

"சரி ரெவி! நீ எங்கோட்டு வச்சிருக்கும் ஸ்டாக் வீட்டுல?"

"நான் என்ன வட்டோ எண்ட கப்போர்டில வைக்க அவ கப்போர்டுல தான் பட்டு புடவை அடில ஸ்டாக் வைக்கும். அவ ஆ ஸ்தலத்த ஓனம் சமயம் மாத்திரம் நோக்கும் ஸோ நோ ஒர்ரி"

"அது சரி, ரெவி நிங்களட ஏரியாவிலே ரஷ்ய பெண்குட்டி ஜாஸ்தியோ?"

"ஒ பின்னே, ஒரு பாடு உண்டு, எண்ட பிளாட்க்கு அடுத்த பிளாட்டே ரஷ்ய குட்டிகளோட பிளாட் தான். இன்னேல நான் ஈ விட்டி கிச்சன் போன பின்ன பால்கனிக்கு போனா... ஒ கலக்கி ...அது ஒரு அடிபுளி பிகராக்கும். நான் மோர் தேன் ஹண்ட்ரட் பறக்கும் உம்மா கொடுத்து, நீ நோக்கு ஜஸ்ட் ஒன் வீக், ஆ ரஷ்யாகாரியை ஈ சேட்டன் மடக்கும்!"

"இதுக்கு நீ பேசாம நிண்ட ஒய்ஃபை நாட்டுக்கு அனுப்பிட்டு இவ்விட ஜாலியாய்ட்டு இருக்கலாம் ரெவி!"

"நோ நோ எனக்கு வளர வளர பிரேமம்......... அவல் மேல இல்லடோ அவ சேலரி மேல!"

சரி, இதுக்கும் மேல இவனை பேச விட்டா இவன் உயிருக்கு ஆபத்துன்னு நெனச்சுகிட்டு ஒரு தம்மை கொடுத்து அனுப்பிட்டு போனை எடுத்து
" சேச்சி விஷேஷம் கேட்டோ"ன்னு கேட்டேன்.

ரெண்டு காதிலும் புகை சேச்சிக்கு! அடுத்த நாள் ரெவிக்கு ஃபீவர்ன்னு லீலெட்டர் குடுத்துச்சு சேச்சி! ஏன் ஜுரம் வந்திருக்கும்? தெரியலையே, தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!

September 25, 2007

திருநங்கை கண்ணகி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!!!

தமிழக அரசின் "வாழ்ந்து காட்டுவோம்"ன்னு ஒரு திட்டம். அதை பற்றிய விரிவான விபரங்கள் எனக்கு தெரியாது. ஆனால் அந்த திட்டம் மயிலாடுதுறை ஊராட்சியில் அமுல் படுத்த இருப்பதால் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சி தலைவரின் தலைமையில் நடை பெற இருந்தது நான் மயிலாடுதுறை சென்றிருந்த சமயத்தில். அதன் பொருட்டு ஒவ்வொறு கட்சியும் தன் தனது கட்சி தலைமை அலுவலகத்தில் தன் தனது கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களையும் கவுன்சிலர்களையும் கூட்டி எப்படி நிதியை பெறுவது எப்படி செலவழிப்பது( நல்ல வழியில்) என கலந்துரையாடி அதன் படி மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் எப்படி நடந்து கொள்வது என்பன பற்றி பேசி முடிவெடுக்க கூட்டம் கூட்டிக் கொண்டிருந்தன.


அன்று மயிலாடுதுறையில் ஒரு கட்சி அலுவலகத்திலும் அந்த கூட்டம் நடைபெற்றது. நானும் அதிலே கலந்து கொண்டேன். இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்று கேட்பவர்களுக்கு... அது மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெறும் கூட்டம் இல்லை. ஒரு கட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டம் மட்டுமே. நான் உள்ளே நுழைந்ததும் ஒரு இருநூறு ஆண்களும் ஒரு பத்து பதினைந்து பெண்களும் இருந்தனர். ஆண்கள் முன் வரிசையிலும் , சொற்பமாக இருந்த பெண்கள் கடைசியில் ஒரு கூட்டமாகவும் அமர்ந்திருக்க முன் வரிசையில் ஒரு ஓரத்தில் தனியாக ஒரு வயதான பெண், அவருக்கு இரண்டு பக்கமும் இருக்கைகள் வெற்றாக இருந்தன. எனக்கு சந்தேகம் முப்பத்து மூன்று சதவிகிதம் அரசு பெண்களுக்கு ஒதுக்கியும் பத்துபேர் தான் வரமுடிந்து இருக்கிறதே என ஆதங்கமாக இருந்தது.

அப்போது தான் என் நண்பன் ஒருவனை பார்த்தேன். தான் கவுன்சிலராகி விட்ட கதையையும் இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருபத்தி நான்கு ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றமை குறித்தும் சிலாகித்து பேசினான். நான் கடைசியில் அவனுடைய ஊரில் எந்த வார்டு கவுன்சிலர் என கேட்ட போது அதையும் சொல்லி அந்த வார்டு மகளிர் வார்டாகி போனது பற்றியும் பின் இவனுடைய அரசியல் எதிரிகளால் இவன் அவமானப்படுத்தப்பட்டு பின்பு மிகுந்த பாடுபட்டு தான் கவுன்சிலராக ஆகி தன் எதிரியின் முகத்தில் கரி பூசியது பற்றி சொல்லி முடித்தபின்னும் எனக்கு குழப்பமே மிஞ்சியது. பின்பு தான் புரிந்தது, அது மகளிருக்கான வார்டு ஆன பின் இவனோ திருமணமாகாதவன், ஆனால் இவன் அரசியல் எதிரியோ திருமனமானவன் ஆனவன். நம்ம ஆள் அதன் காரணமாகவே அவசர அவசரமாக கிடைத்த பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்ணை களத்தில் இறக்கி ஜெயித்து இப்போது தான் தான் கவுன்சிலர் என பீற்றி கொண்டிருக்கிறான். நான் அவனிடம் சரி நீ இந்த ஆலோசனை கூட்டத்துக்கு உன் மணைவிக்கு துணக்கு வந்தாயா என கேட்டதற்கு அவன் அதிர்ந்து போய் "என்ன பேச்சு இது, நான் தானே அவள் கணவன் நான் கூட்டத்து வராமல் யார் வருவது, அதுக்கு என்ன தெரியும் எவ்வளவு நிதி பெறுவது என, போட சொன்ன இடத்தில் கையெழுத்து போட வேண்டியது தானே" ....வாழ்க ஜனநாயகம் வாழ்க வாழ்க மகளிர் இட ஒதுக்கீடு...


நான் நேராக சென்று அந்த அம்மா பக்கத்திலே உட்கார்ந்தேன். அப்போதே உணந்தேன் அவர்கள் ஒரு திருநங்கை என. இத்தனை நாள் நானும் மற்றவர்கள் போல திருநங்கைகளை ஒதுக்கியே ஒதுங்கியே இருந்த என்னை அந்த அம்மாவிடம் "அவர்களும் நம்மை போலத்தான் மனித உயிர் தான்" என நினைக்க வைத்த சகோதரி வித்யாவுக்கு மனதால் நன்றி சொல்லி " அம்மா உங்க பேர் என்ன?'' என்று கேட்டேன். அவர்களும் "என் பேர் கண்ணகிங்க" என்று கூறினார்கள். திரும்பவும் நான் ஏதோ கேட்க முனைந்த போது "இருங்க கூட்டம் முடியட்டும், இப்ப வந்த வேலையை பார்ப்போம்" என சொல்லவும் எனக்கு ஆச்சர்யம் மற்றும் சிறிது அவமானமாகவும் கூட இருந்தது. சரி திமிர் பிடிச்சவங்க போலயிருக்கு என நினைத்து கொண்டேன்.


கூட்டம் அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. பின் கருத்து கேட்கப்பட்டது சிலரிடம். அப்போது இந்த அம்மா எழுந்து ஏதோ சொல்ல முற்பட "ந்தா நீ வேற உக்காரு, எல்லாத்துலயும் முந்திரி கொட்ட மாதிரி"ன்னு பின்பக்கமிருந்து குரல் வரவும் கிட்டதட்ட இருநூத்து பத்து கேலி சிரிப்புகள் என் ஈரகுலையே நடுங்குச்சு. என்ன உலகமடா இது என நினைக்க தோன்றியது. அந்த அம்மாவும் அமைதியா உக்கார்ந்து விட கூட்டம் ஏதேதோ முடிவெடுத்தது. ஆனால் என் மனம் அங்கே இல்லை.அந்த அம்மா மாத்திரம் கூர்ந்து கவனித்து வந்தார்கள். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் காக்கை கூட்டம் போல் கலைந்து விட எதிர் பக்க டாஸ்மாக்கும், பக்கத்து டாஸ்மாக்கும் களை கட்டியது.


நான் மட்டும் ஒரு வித மனசு கஷ்டத்துடன் அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தேன். அந்த அம்மாவும் அங்கே இங்கே போய் யார் கிட்டயோ பேசிவிட்டு எதேர்ச்சையா என்னை பார்த்துவிட்டு என்னருகே வந்து "என்னங்க இன்னும் இங்க உக்காந்து இருக்கீங்க, நீங்க எந்த ஊராட்சி, ஏதோ கேட்டீங்களே கூட்டம் நடக்கும் போது, அப்போ நாம பேசிகிட்டு இருந்தா மத்தவங்களுக்கு கூட்டத்தை கேக்க கஷ்டமா இருக்கும்ல, பாவம் தொலவுல இருந்து வந்திருப்பாங்க,தவுர எனக்கும் கொஞ்சம் கூட்டம் கேக்க ஆவலா இருந்துச்சு அதனாலதான் அப்புடி சொன்னேன் கோவிச்சுகாதீங்க" என்னு சொல்லவும் எனக்கு அவர்களிடம் மேலும் பேச ஆர்வம் அதிகமாகியது.

"உங்க பேர் என்னங்க?"

"என் பேர் பி.கண்ணகிங்க.நான் ஒரு அரவாணி கவுன்சிலர்ங்க" - கரகரப்பான குரல்.

"வாங்க போங்க வேணாம். நான் உங்களை விட சின்ன வயசுதான். தம்பின்னு கூப்பிடுங்க, சரி எந்த ஊராட்சி?"

"திருகுவளை தெரியுமா தம்பி?அந்த ஊர்லதான் கவுன்சிலர் நானு"

"என்ன இப்புடி கேட்டுட்டீங்க, எப்டி தெரியாம போகும், சொல்லுங்க ஏதாவது டீ சொல்லவா?"

"இல்ல வேணாம் தம்பி, பக்கத்து சந்துல எளநி சொல்லிருக்கேன் வரும், தோ வந்துடுச்சே ஆஹா ஒன்னு தான் வருது தம்பி இன்னும்மொன்னு கொண்டுவாய்யா சாருக்கும்"

"சொல்லுங்க எல்லாரும் பக்கத்துல கூட உக்காராம கேவலபடுத்திய பின்னும் ஏங்க எழுந்து போகாம பின்ன நீங்க பேச எழுந்ததும் எல்லாரும் சிரிச்ச பின்னும் கூட இவ்வளவு பொருமையா எப்டிங்க இப்படி?"

"அதுவா தம்பி, நீங்க அந்த இடத்துல இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?"

"போங்கடா நாய்ங்களான்னு எழுந்து போயிருப்பேன்."

"சரி இந்த கூட்டமே உங்க குடும்ப நண்மைக்குன்னு வச்சுகுங்க அப்ப அவமானம் வருது அப்ப என்ன செய்வீங்க?"

நான் - "எதுவா இருந்தா என்ன போங்கடான்னு போயிருப்பேன்!"

"ஆனா நான் அப்படி உணர்ச்சிபூர்வமா முடிவெடுத்தா என்னை நம்பி இருக்கும் திருகுவளை கிராமத்துக்கு யார் நிதி உதவி செய்வாங்க, இவ திமிர் புடிச்சவன்னு ஒதுக்கி வச்சு ஒரு வழி பண்ணிடுவாங்க, நான் அவமானப்பட்டாலும் கிராமத்துக்கு நல்லது நடந்தா சரிதானே என்ன சொல்றீங்க தம்பி!"

"என்னத்த சொல்றது, சரி இந்த"வாழ்ந்து காட்டுவோம் திட்டம்னா என்னங்க"

"தம்பி முதல்ல எளநி சாப்பிடுங்க, நீங்க யாரு எந்த ஊராட்சி, கவுன்சிலரா, தலைவரா, பேர் என்ன?"

"நான் மாயவரம் நகராட்சிங்க, வெளிநாட்டுல இருக்கேன், பேர் தொல்காப்பியன்ங்க சும்மா கூட்டத்துக்கு வந்தேன் இந்த திட்டம் பத்தி தெரிஞ்சுக்க"

"ஆக உள்ளூர்ல வெல போகாத மாடுன்னு சொல்லுங்க தம்பி"
(தஞ்சை குசும்பு இது தான்)

"என்னங்க இது என்னய வார்ரீங்க, அந்த திட்டம் பத்தி ஏதாவது தெரிஞ்சுகலாம்ன்னா இப்புடி வார்ரீங்களே!"

"பராவாயில்லையே தம்பி, வந்திருந்த கவுன்சிலர் எத்தனை பேருக்கு தெரியும்ன்னு எனக்கு தெரியல, ஆனா பலபேரு படிச்ச பசங்க, எனக்கு அம்பத்துஏழு வயசாச்சு, எழுத படிக்க தெரியாது பண்ணண்டு வயசுல பம்பாய்க்கு போனேன் எல்லா மொழியும்பேசுவேன், இது தான் வாழ்க்கைன்னு ஆகிபோச்சு, பின்ன எதுக்கு பம்பாய்ன்னு இருவத்து ஏழு வயசுல சொந்த ஊருக்கு ஓடியாந்துட்டேன். எனக்கு அவமானங்கறது பழகி போச்சு, இன்னிக்கு நடந்தது எல்லாம் எனக்கு பழகினது உங்களுக்கு புதுசா இருக்கலாம். ஒரு ஆம்பள பையனா ஓடி போன நான் அரவாணியா ஆன பின்னும் ஒரு கட்டத்துல என்னா அவமானபட்டாலும் பொறந்த மண்ணுக்கு ஏதாவது செய்யனும்ன்னு ஓடி வந்துட்டேன். ஆனா காசு காசு மேல மேல காசுன்னு எத்தன நாள் பொறந்த மண்ண வுட்டுட்டு இருக்க போறீங்க? எளநி குடிங்க என்னா வெய்யிலு கொளுத்துது!"

அவங்க சொன்னது சரிதான் என எனக்கும் பட்டது ஆனாலும் அதுக்கு தன்னிலை விளக்கம் இந்த பதிவெலே வேண்டாம் என்பதால் விட்டு விடுகிறேன்.

"தம்பி! ஊரக வளர்ச்சி துறை மூலமாதான் இந்த திட்டம் ஒலக பேங்கு மூலமா உதவிவாங்கி நடக்குது. தமிழ்நாடு முழுக்க பதினஞ்சு மாவட்டத்துல எழுவது பேக்குவேடு வட்டாரத்துல இருக்குற ரெண்டாயிரத்து நானூத்து சொச்ச ஊராட்சில இருக்குற பண்னந்தாயிரத்துஅறனூத்து சொச்ச குக்கிராமத்துல இருக்குற மூணுலெச்சத்து அம்பதாயிரம் குடும்பத்துக்கு நல்லது செய்ய இந்த திட்டம்"வாழ்ந்து காட்டுவோம்" திட்டம் புரியுதா தல சுத்துதா, எளநி இன்னுமொன்னு சொல்லவா?"

இருங்க இருங்க குறிச்சுகறேன் என்று சொன்னதும் இடி இடியென சிரித்தார்.

"தம்பி! நாகை மாவட்டத்துல மாத்திரம் கீழ்வேளூர்,மயிலாடுதுறை,திருமருகல் ன்னு மூணு ஒன்றியத்துல நடக்க இருக்கு. முதல் கட்டமா எங்க கீழ்வேளூர் ஒன்றியத்துல முப்பத்தெட்டு ஊராட்சி அதுல என் ஊராட்சியும் ஒன்னு. நாங்க நல்ல விதமா செயல் படுறேன்ன்னு கலெக்டரு அடுத்து மயிலாடுதுறைல அம்பத்து நாலு ஊராட்சில ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கோம், கண்ணகி நீயும் வா அந்த கூட்டத்துக்கு ன்னு சொன்னரு. அந்த கூட்டம் நாளக்கி நடக்குது தோ எதித்தாபோல இருக்குற ஊராட்சி மன்ற கட்டடத்துல, சரி ஒரு நாள் முன்ன வருவோம் நம்ம கட்சி புள்ளைங்களுக்கு நம்மாள ஏதாவது சொல்லி தருவோம்ன்னு நெனச்சு வந்தேன், பசங்க காது கொடுத்து கேக்க மாட்டங்குது ஹும்..."

அடப்பாவிங்களா உங்களுக்கு உதவி செய்ய வந்தவங்களுக்கு நீங்க செஞ்ச நக்கல் நையாண்டி பேஷ் பேஷ்ன்னு நெனச்சுகிட்டேன்.

"சரிம்மா யாருக்காக இந்த திட்டம் அதோட எய்ம் தான் என்ன, இது பத்தி ஏதாவது சொல்லுங்களேன், சரி அய்யப்பன்ல ரவா தோசை சொல்லவா இல்ல அங்க போவுமா?"

"தம்பி! இங்கயே சாப்புடலாம், அங்க போவேணாம் உங்களுக்கு தெரிஞ்சவங்க இருப்பாங்க யாராவது தப்பா நெனச்சுப்பாங்க உங்களை!"

எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு. "இல்லம்மா நான் யாரை பத்தியும் கவலை பட்டதில்லை, எனக்கு சரின்னு பட்டதை செய்வேன் வாங்க போகலாம்"

"இல்லப்பா வெய்யில் சாஸ்தியா இருக்கு நான் இங்கயே சாப்பிட்டு கொஞ்சம் தல சாஞ்சுட்டு வெயிலு சாஞ்ச பின்ன கிளம்பனும், நாளைக்கு ஒரு கல்யாண சாவு விழுமோன்னு மனசு கடந்து அடிச்சுகிது தொண்ணூறு வயசு வாழ்ந்த கட்டை ஊருக்குள்ள அது பாக்காத நல்லது கெட்டது இல்ல, இப்ப அதுக்கு ஒன்னுன்னா நாமதான செய்யினும்!"

நான் மன்றத்து பையனை கூப்பிட்டு இரண்டு ரவாதோசை வாங்கிவர சொல்லிவிட்டு அவர்களை பார்த்தேன்.

"தம்பி! இந்த திட்டம் ஏழ பாழங்க,ஊணமுத்தவங்க,அறுவத்தஞ்சி வயசுக்கு மேல போன ரொம்ப கஷ்டசீவனம், ஆண்டவன் புள்ளய்ங்க,(அனாதை) ஓடுகாலி புருஷனுக்கு முந்தானி விரிச்சவ(கணவனால் கைவிடபட்டவர்கள்),நாடோடி,பழங்குடி,கழகூத்தாடி,நரிகொற மக்க, எய்ட்ஸ் தாக்குனவுங்க அதுக்கும் மேல ஒன்னு சொல்லவா அரவாணிங்க இவங்க தான் பயனாளிங்க. இதுல பாருங்க தம்பி, அரவாணிங்க சேர்த்திருக்காங்க அப்படின்னா படிப்படியா எங்க செனங்களுக்கு ரேசன் கார்டுல இருந்து எல்லாம் கெடக்க போதுதுன்னு அர்த்தம்!
அதென்ன கேட்டீங்க எம்ன்னு?"

"எம் இல்லம்மா எய்ம் அதான் நோக்கம்?"

"மேல சொன்ன அத்தன பேரையும் நல்லா பழக்கி நம்ம இந்தியா கிரிகெட்டுல சேத்து மெடலு வாங்க போறோம் போவியா தம்பி... இவங்களுக்கு என்ன தேவையோ அதை செய்யனும் அதுக்கு சுயமா நாங்களே உதவி குழு அமைச்சு முக்கியமா கைசுத்தத்தோட காச செலவழிக்கனும், கலக்டரு கவனிச்சுகிட்டே இருப்பாரு, அவருக்கு ஏகப்பட்ட ஆள் அம்பு சேன எல்லாம் இருக்கு யார் தப்பு செஞ்சாலும் அடுத்த தபா உதவி கெடக்காது. அட பையன் சுருக்கா வந்துடுச்சே தம்பி நீ கொஞ்சம் தோச சாப்புடுய்யா!"

அவன் வேண்டாம் காசு குடுன்னு வாங்கிட்டு பிளாஸ்டிக் குவளையில் தண்ணீர் வச்சுட்டு போனபின் சாப்பிட்டு கிட்டே பேசினோம்.

"இது எல்லாம் கண்ட்ரோல் நேரா கலக்டர் தானா?"

"ஆமா, ஆனா அவர்ருக்கு கீழ ஒருத்தர் இருக்காரு, இருங்க அட்டஸ் தாரேன்.."

இடது கையால பையில் இருந்த நோட் புக்கில் ஒரு பக்கத்தில் இருந்த விலாசத்தை காட்டினாங்க அதிலே " மாவட்ட திட்ட மேளாளர், வாழந்து காட்டுவோம் திட்டம், பூமாலை வணிக வளாகம், முதல் தளம், அண்னா சிலை அருகில், நாகப்பட்டிணம் - 611 001 போன்: 04365-242241" என இருந்தது.

"உங்க ஊர்ல எல்லாரும் உங்களை எப்படி நடத்துறாங்க?"

"அத ஏன் கேக்குறீங்க தம்பி, தோ இப்பவோ நாளைக்கோன்னு இருக்கே பெருசு அதுல இருந்து பொறந்து பேச்சு வந்த குழந்தங்க வரை எல்லாம் கண்ணகி கண்ணகின்னு உசுரா இருக்குங்க, நா தூக்கி வளக்காத புள்ளங்க அந்த ஊர்ல இல்ல, எனக்கு ஒன்னுன்னா அந்த ஊரே நிக்கும் அந்த ஊருக்கு ஒன்னுன்னா நான் ஒத்த மனுஷியா நின்னு உயிர கொடுப்பேன்!!!"


எனக்கு சிலிர்த்தது. இந்த கூட்டம் எதுக்குன்னே தெரியாம ஏதோ நிதி தர்ர கூட்டம்ன்னு வந்த கவுன்சிலர்(புருஷன்) ஆணீய வெங்காயங்களுக்கும், முப்பத்து மூணு சதவீதம் வேண்டும் வேண்டும் என அழுது புரளும் ,உள்ளாட்சியில் கிடைத்த முப்பத்துமூணு சதவீதத்தை கணவன் காலில் வைத்து வணங்கிய ஜான்சிராணிகளை அடையாளம் கண்டு ஒரு குழு அமைத்து அவர்களை நீக்கி கிடைத்த சதவீதத்தை தக்க வைத்து கொள்ள தெரியாத பெண்ணீய பச்சை மிளகாய்களுக்கும் மத்தியில் திருநங்கை கண்ணகி போன்றவர்களின் குடத்தினுள் இருக்கும் விளக்கு போன்ற தியாகத்துக்கும் உழைப்புக்கும் ஒரு ராயல் சல்யூட்!!!

மயிலாடுதுறையும் மணிசங்கர் அய்யரும் பின்ன மாதவராவ் சிந்தியாவும்!!!!!..

மயிலாடுதுறை

பக்கமா எந்த வித விமான ஏர் ரூட்டும் கிடையாது. எப்பவாவது ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வழி தவறி ஏதுனா வந்தாதான் உண்டு.

ஆனா வருஷா வருஷம் நாகைக்கு புயல் வரும் நேரத்துல ஹெலிகாப்டர் வரும் அதுவும் நாகையிலே தாழ பறந்துட்டு மாயவரம் பக்கம் வந்தா உயரமா போயிடுவாங்க.

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு அந்த சத்தமே செம ஜாலியான அனுபவம் எங்க ஊர் பசங்களுக்கு.
தொறத்திகிட்டே ஓடுவானுங்க. வயல் வரப்புன்னு கண்ணு மண்ணு தெரியாம ஓடுவானுங்க.

ரொம்ப வெள்ளேந்தியான பசங்களா தான் வளருவானுங்க ஆனா வளர்ந்த பின்ன குசும்பனா ஆகிடுவானுங்க. இருங்க விஷயத்துக்கு வாரேன்.

ராஜீவ் காந்தி இறந்த பின்ன பாவம் மணிசங்கர் அய்யருக்கு நரசிம்மராவ் மினிஸ்ட்ர் போஸ்ட் குடுக்காம ஆப்பு வச்சுட்டாரா, இவருக்கு என்ன பண்றதுன்னே தெரியாம அல்லாடிட்டார் .

தன்னுடைய பவரை மாயவரம் மக்களுக்கு காமிச்சாகனுமே அதுக்காக டெல்லியில இருந்து மாயவரம் வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு மினிஸ்டரை கூட்டிகிட்டு வந்து ஒரு மீட்டிங்க் போட்டுட்டு "பாத்தீங்களா மக்களே இவரு வடநாட்டிலே பெரிய ஆளு , விரலை அசைச்சா போதும் அப்படியே விரல் அசையும், அதாக்கும் இதாக்கும் என் மீதும் உங்க மீதும் இருக்கும் பாசத்துல உங்களை பார்க்க வந்திருக்கார் "ன்னு ராக்கெட் விடுவாரு.

அப்படித்தான் ஒரு தடவை அப்போ கேபினெட் மினிஸ்டரா இருந்த மாதவராவ் சிந்தியாவை கெஞ்சி கூத்தாடி கூட்டிகிட்டு வந்துட்டார். அவர் கிட்ட பர்மிஷன் வாங்கியதும் நேரா அவருக்கு முன்னமே மாயவரம் வந்து அவரை வரவேற்க ஏற்பாடு செஞ்சார்.

அப்ப காமராஜ் மாளிகையில நடந்த காங்கிரஸ் செயல் வீரர் கூட்டத்துலே "அவர் கேபினட் மினிஸ்டர் என்பதால் ஹெலிகாப்டரில் வர்ரார் ஹெலிகாப்டர் பெரிய ராஜன் தோட்டத்தில் இறங்கும் பின்ன அங்கிருந்து காரில் காமராஜ் மாளிகையிலே மீட்டிங்"ன்னு அஜண்டாவை சொன்னாரு.

அவ்வளவுதான் மாயவரமே பத்திகிச்சு . பசங்க ரெடியாகிட்டாங்க வரவேற்பு குடுக்க. சரபுரன்னு முனிசிபாலிட்டி ஹெலி பேட் போடுறாங்க ராஜன் தோட்டத்திலே.

ரோடுக்கு எல்லாம் குளோரின் பவுடர், அதுக்கு முன்னால கலெக்டர் விசிட், தாசில்தார் ஹோட்டல்ல தயிர் சாத பொட்டலம் வாங்கி கிரவுண்டுலயே கொட்டிகிறார்.
ரெண்டு தொப்பை போலீஸ் ஹெலிபேட்க்கு காவல். தீயணைப்பு வண்டி மணியாட்டிகிட்டு அங்கயே பழி கிடக்குது. கதர் சட்டை கூட்டம் கூட்டமா நிக்குது.

அதை விட பெரிய கூத்து ஸ்கூல் லீவ் விடலாமா லோக்கல் ஹாலிடேன்னு ஹெட்மாஸ்டர் மீட்டிங் நடக்குது. மொத்தத்துல மயிலாடுதுறை கல்யாண பொண்ணு மாதிரி அல்ங்கரிச்சுகிட்டு நிக்குது.
எங்க எம்பிக்கோ பெருமை தாங்கலை. வந்து கிரவுண்டை பார்த்தார் அசந்து போயிட்டார்.

பொதுமக்கள் கூட்டம் அலை மோதுது. சாதாரணமா இத்தனை கூட்டம் வராதே அதனால தான வெறும் 75 பேர் உட்காரும் சின்ன காமராஜ் மாளிகையிலேயே கூட்டம் போடுறோம். சரி இந்த கூட்டத்தை விட கூடாது நாமளும் பார்க்கிலே கூட்டம் போட்டுட வேண்டியது தான் திமுக /அதிமுக மாதிரின்னு அய்யர் நெனச்சுகிட்டு அவசர அவசரமா பார்க்கிலே கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டார் மேடை எல்லாம் ரெடி ஆகிடுச்சு. காலையில 7 மணி முதல் நேரம் அதிகமாக அதிகமாக கூட்டம் அதிகமாகுது .


கிரவுண்டில் அவசர டீ கடை , ஐஸ் வண்டி, மிளகாய் பஜ்ஜி கடை, கடலை வண்டி ன்னு ஜே ஜேன்னு திருவிழா மாதிரி இருக்கு.

வந்தாருய்யா சிந்தியா ஒரு வழியா, மேலே இருந்து பார்க்கிறார். அப்படியே மாயவரமே ஒரு இடத்துல கூடி நிக்குது. அவருக்கு புல்லரிச்சு போச்சு. அவரு கைய காமிக்கிறார் . நம்ம ஜனங்க அப்படியே பாச மழையிலே குதிச்சு குதிச்சு கை காட்டுறானுங்க. பசங்க ஆர்வத்தை பார்த்துட்டு அவரு பைலட் கிட்ட சொல்லி மூணு ரவுண்ட் அடிக்கிறாரு.

ஒரே ஆரவாரம் , அய்யர் கண்ணுல ஆனந்த கண்ணீர் மாயவரம் பாசக்கார பசங்களோட ஆதரவ நெனைச்சு.

மெதுவா கீழ இறங்குது ஹெலிகாப்டர், ஒரு 30 அடி உயர்த்துல வரும் போது அதன் ஃபேன் சுத்தின வேகத்துல கீழே கிடந்த காஞ்சு போன புழுதி பறந்து அந்த ஹெலிகாப்டரே மறைஞ்சு போச்சு ஓரு வழியா கீழே லேண்ட் ஆகிடுச்சு.

ஆனா எந்த இடத்துல இருக்குன்னு தெரியல . அமைதி நிசப்தம்.... கலெக்டர் தவிக்கிறார்.

மெதுவா புழுதி அடங்கி பார்த்தா எங்க பாசகார பய புள்ளைங்க அப்சரா அஜீஸ்ல இருந்து ஒரு ஏழெட்டு பேர் ஹெலிகாப்டர் உள்ள குந்திகிட்டு இருக்கு.

சிந்தியா, அவரோட பிஏ,பின்ன செக்யூரிட்டி ஆபீசர் , பைலட் எல்லாம் பாவமா கீழே நிக்கிறாங்க.

அதுல கொடுமை என்னான்னா பைலட் கழுத்துல மாலை தவிர ஹெலிகாப்டர் ஃபேன்ல ஒரு மாலை மாட்டியிருக்கு.

என்னா நடந்துச்சுன்னா புழுதி பறந்த உடனே நம்ம பசங்க அய்யரு கையில இருந்த மாலையையும் கலெக்டர் கையில இருந்த மாலையையும் புடுங்கிகிட்டு ஓடி அவசர அவசரமா மயிலாடுதுறைக்கு ஹெலிகாப்டர் ஓட்டி வந்த பைலட்டை கவுரவிக்கும் பொருட்டு அவருக்கு ஒரு மாலை,செல்ல குட்டி ஹெலிகாப்டர்க்கு ஒரு மாலையும் போட்டுட்டானுங்க.

பின்ன என்ன போலீஸ் தடியடி அது இதுன்னு ஆகி மணிசங்கர் அய்யர் மெகா போன் வச்சு பேசுறார்

"மக்களே நேக்கு ந்ன்னா புரியர்து புழுதி கண்ணை மறைசிடுத்து அதனால பைலட்டுக்கு போட்டுட்டேள். இவர் நேக்கு பிரண்டுன்னா அவர்ட்ட நான் எக்ஸ்பிளைன் பண்ணிடறேன், நா அவா கூட மீட்டிங் முன்னால போறேன் சமத்தா பின்னாடியே வாங்கோ மீட்டிங் அசத்தலா இருக்கனும் என்ன"ன்னு பேசிட்டு கிளம்பி போயிட்டார்.

அங்க பார்க்கிலே பார்த்தா ஈ அடிக்குது. ஒருத்தனும் காணும். போலீஸ் கூட இல்லை . எல்லா போலீஸும் தான் இங்க ஹெலிகாப்டர் பாதுகாப்பிலே இருக்குதே, அந்த பைலட்டுக்கு இளநீர் அது இதுன்னு புடிவாதமா குடுக்கிறானுங்க .

"பெட்ரோல்லாம் இருக்குதா சார்ன்னு அக்கறையா கேக்குறானுங்க. அங்க என்னான்னா வெயில்ல சிந்தியாவும் அய்யரும் தாயம் வெளையாடலாமான்னு யோசிச்சு கிட்டு இருந்தாங்க.

அய்யர் நெனச்சு கிட்டார் "பேசாம காமராஜ் மாளிகையிலே கதவை மூடிகிட்டு கமுக்கமா நடத்தியிருக்கலாமோன்னு.
சிந்தியா நெனச்சுகிட்டார் " இனி அய்யருக்கு அமைச்சர் பதவி கிடைக்காம நரசிம்மராவ் கால்ல விழுந்தாவது கேட்டுக்கனும்"ன்னு!!!

September 24, 2007

கனவு மெய்பட வேண்டும் -வல்லியம்மாவுக்காக ஒரு பதிவு!

திஸ்கி: வல்லிம்மா ஒரு கனவு பதிவு போட்டு என்னையும் கூப்பிட்டு இருந்தாங்க தொடர் எழுத அதனால இந்த பதிவு!


கிட்ட தட்ட 27 வருஷமா இந்த கனவுகளோட நான் பட்ட கஷ்டம் அந்த கலாமுக்கு தான் வெளிச்சம்(கலாம் மாமா தாங்க கனவுகளின் காப்பி ரைட்டர்) .

பின்ன ஒரு வழியா என் கல்யாணத்துக்கு பின்ன தான் என் கனவுகள் பலிக்க ஆரம்பிச்சது.

சின்ன வயசுலே தெரு பசங்களோட விளையாடும் எல்லா விளையாட்டிலும் நானே ஜெயிக்க வேணும்ன்னு பெரிய கனவு, ஆனா பாருங்க பந்து பொறுக்கிப் போடும் கட்டத்தை கடைசி வரை தாண்டவே இல்லை.

பின்ன கொஞ்சம் கொஞ்சமா என் கனவை ஆல்டர் பண்ணி பெஸ்ட் பந்து பொறுக்கர் அவார்டு வாங்குவதே என்னுடைய கனவுன்னு மாத்திகிட்டு ஒரு வழியா என் கனவை பலிக்க வச்சேன்.

சரி விளையாட்டு தான் இப்படி போச்சு, படிப்பிலயாவது பஃஸ்ட் ரேங் வாங்கி பெரிய படிப்பாளி ஆகி மெட்ராஸ் போயி பொட்டி பொட்டியா சம்பாதிச்சு கிலோ கிலோவா அல்வா வாங்கி ரூம் போட்டு சாப்பிடனும்,
ஆனா அதுல ஒரு சின்ன துண்டு கூட சின்ன அக்காவுக்கு தரகூடாதுன்னு பெரிய கனவா கண்டு அந்த கனவு எப்படியோ
கனேஷ்ராம் / ஸ்ரீதர்/ விஸ்வநாதன்/ கணேஷ்குமார் கோஷ்டிக்கு தெரியவந்து அவனுங்க மாங்கு மாங்குன்னு படிச்சு கடேசி வரைக்கும் என்னை 5வது ரேங்குல இருந்து தாண்ட வுடலையே, பின்ன என்ன வழக்கம் போல கனவு ஆல்ட்ரேஷன் தான்.

சரி அதுதான் போகட்டும் மெட்ராஸை பார்த்துடனும்ன்னு ஒரு லார்ஜ் சைஸ் கனவு இருந்துச்சு.
ஒவ்வொறு வருஷ முழு பரிச்சை லீவுக்கு பின்னயும் புது கிளாசில் டீச்சர் கேப்பாங்க "பசங்கலா லீவுக்கு எங்க போனீங்க"ன்னு.

அவனவன் மெட்ராஸ், ஊட்டி, டெல்லின்னு பீலா விடுவான். என் முறை வரும் போது நானும் "மெட்ராஸ்"ன்னு சொல்லி வைப்பேன்.

சொல்லிட்டு உக்காந்த பின்ன ஸ்ரீதர் மெதுவா "டேய் மெட்ராஸ் உள்ள நுழைஞ்சதும் என்னா வரும்"ன்னு கேக்க நானோ செம கடுப்பிலே இருந்தேனா"உம் ஆய் வரும் போடாங்க, கேள்வி கேக்க வந்துட்டான்"ன்னு கடுப்பாகி பின்ன
குரங்கு ராதா "மீனம்பாக்கம் வரும்ன்னு சொல்லுடான்னு சொல்லி குடுத்து ஒரு வழியா காப்பாத்தினான்.
பின்ன என்ன என் கனவு ஆல்ட்டர் பண்ணபட்டது
சுத்தி பார்க்க உகந்த ஊர் மங்கைநல்லூரோ, வத்தீஸ்வரன் கோவிலோ தான்"ன்னு!
இதுல என்ன விஷேஷம்ன்னா நான் அப்ப வரைக்கும் மெட்ராசை தான் பாரிஸ்ன்னு நெனச்சு கிட்டு இருந்தேன்!


11,12 படிக்கும் போது சரி டாக்டரா ஆகிடுவோம் பேசாமன்னு சர சரன்னு கையெழுத்து போட்டு பழகினேன். சீரியஸா கெமிஸ்ட்ரி எடுத்து கிட்டு இருந்த KP சார் கிட்ட வந்து பார்த்துட்டு "என்னா இது"ன்னு கேக்க

"கையெழுத்து சார், டாக்டராகி பிரிஸ்கிரிப்ஷன்ல போட வேண்டாமா அதுக்கு தான் சார்"ன்னு நான் சொல்ல

அதுக்கு அவரு"பாடம் நடத்தும் போது அதை கவனிக்காம இதை பண்ணிகிட்டு இருந்தா டாக்டராக முடியாது கம்பவுண்டரா தான் ஆக முடியும்"ன்னு சொல்லி
என் கனவிலே மண்ணை கொட்டி சமாதியாக்கிட்டாரு.

சரி டாக்டரை விட இஞ்ஜினீயர் தான் உசத்தின்னு என் கனவை மாத்திகிட்டு அப்படியே கிளாஸ்ல கண் அசந்து கலாம் மாமா போல கனவு காண ஆரம்பிச்சேன்.

தலைல ஹெல்மெட் மாட்டிகிட்டு பெரிய கிரேன்க்கு கீழ நின்னுகிட்டு வெயில்ல சட்ட நனைஞ்சு பின்ன வீட்டுக்கு வந்து லைப்பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம்ன்னு பாடிக்கிட்டு இருக்கும் போது
லொட்டுன்னு சாக்பீஸ் அடி, முழிச்சு பார்த்தா SK நிக்கிறார் பத்ரகாளி மாதிரி அவர் முகம் கிராபிக்ஸ்ல மாறி மாறி தெரியுது எனக்கு.

அதோட அந்த கனவு டமால்.

சரி காலேஜ் படிக்கும் போது பெரிய பாடகரா ஆகிடுவும்னு கொல வெறில சாதகம் பண்றேன்னு பல பேரை கொலை பண்ணி அந்த பாட்டுகளையும் கொலை பண்ணி உலக நன்மை கருதி [4,5 கழுதைங்க குட்டிச் சுவத்துல முட்டிக்கிட்டதால்] அந்த கனவும் போயே போச்சு!

சரி நடிகராவதே லட்சியம்னு புது கனவோட புறப்பட்டேன். அதுக்கு முன்ன தெருவிலே மாட்டு பொங்கல் வீதி நாடகத்துல நடிச்சு பழகிக்கலாமேன்னு "டேய் எனக்கு ஒரு ரோல் குடுங்கடா"ன்னு கேட்டேன் தெரு பசங்க கிட்ட.

"ஒரு ரவுடி கேரக்டர் இருக்கு பண்ணுடா"ன்னு சொன்னாங்க.
சரின்னு ஒத்து கிட்டு கைலிய தூக்கி கட்டிகிட்டு கழுத்துல கர்சீப் கட்டி கிட்டு வீரமா டயலாக் விட்டேன்.
அப்பன்னு பார்த்து மேடைக்கு கீழ உக்காந்து இருந்த ஒரு பயபுள்ள
"டேய் இந்த மாமா வெள்ளை ஜட்டி போட்டிருக்காருடா"ன்னு குரல் விட எனக்கு சப்த நாடியும் அடங்கி போச்சு. வாயில இருந்து டயலாக் வரலை பதிலா புஸ்ஸு புஸ்ஸுன்னு காத்து வருது! அதோட அந்த கனவு போச்சு!

பின்ன நாயகன் படம் வந்த பின்ன பெரிய தாதாவா ஆகனும்னு கனவு, அந்த கனவுக்கு முன்ன என் பாடி சைஸ் பத்தி கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம். யோசிக்கலை.[தனுஷ்மட்டும் யோசிச்சிட்டா ஃபீல்டுக்கு வந்தாரு]

சரின்னு தாதாவின் டயலாக் எல்ல்லாம் பேசி பழகினேன். குரங்கு ராதாவை பார்த்து "அய்யரே 5 ஆம்புலன்ஸ் வாங்கி நிறுத்தறோம்"ன்னு டயலாக் விட்டா பதிலுக்கு அவன் "மொதல்ல ரெண்டு சிகரட்டுக்கு வழி பண்னுடா என் வெள்ரு"ன்னு என் கனவை கலலச்சுட்டான்!

கிளைமாக்ஸ்க்கு வருவுமா, கல்யாண கனவு. ஆஹா என்னை ஒரு கமல் மாதிரி நெனைச்சுகிட்டு ஸ்ரெய்ட்டா ஆசைப்பட்டது ஐஸ்வர்யா ராய் மேல தான்.

கட்டினா ஐஸ் தான். எங்க அம்மாவுக்கு மருமகள்னா ஐஸ் தான்னு லெட்சியத்தை பெருசா வளர்த்துகிட்டு....................பிறகு அந்த கனவு என்னாலும், இந்த பாழாய் போன சமுதாயத்தாலும் கொஞ்ச கொஞ்சமா செதுக்கப்பட்டு.....அட போங்கப்பா பதிவு பெருசா ஆகுது இதுக்கு மேல என்னால டைப்ப முடியல இன்னிக்கு......

சரி கல்யாணத்துக்கு பின்ன எப்படி கனவு பலிச்சுதுன்னு கேக்கறீங்களா, தங்கமணி அட்வைஸ் படி என்னால என்ன முடியுமோ அதை மட்டும் தான் கனவா காண்பேன்.

வர்ர வெள்ளி கீரை கூட்டு சாப்பிடனும், திங்கள் கிழமை மஞ்ச கல்ர் சட்டை போட்டுக்கனும் இப்படியான பெரிய பெரிய கனவெல்லாம் கண்டு எல்லாமே பலிக்குதுன்னா பார்த்துகோங்களேன்!

******* அபி அப்பாவாகிய நான்!!!!! *******

வந்தனம்!!!!!...வந்தனம்!!!!

சபைக்கு வந்தனம் வந்தனம்!!!!!!!

வந்த சனம் குத்தனும் குத்தனும்

பின்னூட்டமா குத்தோனும் குத்தோனும்!!!!!



அன்பான தமிழ்மண ரசிகர்களே! வேற வழியே இல்ல நீங்க இந்த கொடுமையை தாங்கிக்க தான் வேண்டும். :(

அவ்வ்வ்வ்வ் அபிஅப்பா ஸ்டாராகிட்டேன் இந்த வாரம். :)

உங்களோட இந்த கஷ்டத்துக்கு மூல காரணம்ன்னு பார்த்தா முதல்ல வெட்டி பாலாஜி.

நான் சும்மா ஆ.வி, குமுதம்,தினமணின்னு மேஞ்சுகிட்டு இருந்தப்ப
ஆ.வில வெட்டி பாலாஜியின் லிங் பார்த்து அதுக்குள்ள வந்து படிச்சு அதன் வழியா

சங்கம், கொத்ஸ்,லக்கி ன்னு போய் பின்ன தமிழ்மணம் வந்து அப்போ பரபரப்பா இருந்த மாயவரத்தான் பதிவிலே போய் அதிலே இருந்த லிங் வழியா எல்லே ராம், மூக்கு சுந்தர், சீமாச்சு அண்ணன், சிவா, ராம்கி, மதி ன்னு எங்க ஊர் பதிவர்களை முழுசா படிச்சு எனக்கும் ஆசை தீ பத்திகிச்சு.

சரின்னு மெதுவா எல்லா பதிவிலேயும் போய் அனானியா ஸ்டேண்டர்டு கமெண்ட்
அதாங்க :-)), கலக்கல், சூப்பர் பதிவு, நச் பதிவு, ரிப்பீட்டேய்,
படிச்சுட்டு வாரேன், மீ த ஃபஸ்ட் எல்லாம் போட்டு கிட்டு இருந்தேன்.

பின்ன நாம ஏன் தனியா ஆரம்பிக்க கூடாதுன்னு யோசிச்சு கிரியேட் பண்ணி என்ன பேர் குடுக்கலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போது

எதேச்சையா தோணியது தான் "அபிஅப்பா" என்கிற பெயர்.

பிளாக் கிரியேட் பண்ணியாச்சு அதிலே "வணக்கம் - இப்படிக்கு அபிஅப்பா"ன்னு போட்டுட்டு வந்துட்டேன்.

பின்ன அந்த பக்கமே போகலை. அனானியா கமெண்ட் போட்டுகிட்டு இருந்த நான் "அபிஅப்பா" ன்னு இம்புரூவ் ஆகிட்டேன்.
தம்பி உமா கதிர் மூலமா பிளாக் டெம்பிளேட் மாத்தி கமெண்ட் மட்டுறுத்தி எல்லாம் பண்ணி ஒரு வழியா உங்களை ஒரு வழி பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

முதல் வணக்கம் பதிவிலே 13 பின்னூட்டமா இருந்த நான் 13 வது பதிவிலே 130 பின்னூட்டமா உங்க புண்ணியத்துல வளர்ந்துட்டேன்.

அதன் பின் புதிது புதிதா நண்பர்கள், உறவுகள்னு கிளை விட்டு வளர்ந்தாச்சு.
நுனிப்புல் உஷா சொன்ன மாதிரி இப்ப பிளாக்கோ போபியா வந்து காலை எழுந்த உடன் முதல் வேலையா தமிழ்மணம் திறக்கலைன்னா கை நடுக்கம் வர ஆரம்பிச்சுடுச்சு. [கமெண்ட் வரலை ன்னாலும்தான் :( ]

இது தான் மக்கா நான் பிளாக்குல பிறந்து வளர்ந்த கதை!

பொண்னை பெத்த ரெண்டு பெரியவங்க பேசிகிட்டு இருந்தாங்களாம்!
"என் மாப்பிள்ளைக்கு சீட்டு விளையாட்டு, குதிரை ரேஸ் இதல்லாம் சுத்தமா தெரியாது"ன்னு முதலாமவர் சொன்னாராம்.

அதுக்கு அடுத்தவர் "நல்ல விஷயம் தானே சந்தோஷ படுவதை விட்டுட்டு சலிச்சுகுறீங்களே"ன்னு கேட்டாரம்,

அதுக்கு முதல் பெரியவர் "தெரியாதுன்னு தானே சொன்னேன் அதல்லாம் செய்ய மாட்டருன்னு சொன்னேனா?"ன்னு சொன்னாராம்.

அது போல தான் நானும். நகைச்சுவை பதிவு எல்லாம் எதுவும் எழுத தெரியாது, அதுக்காக அப்படியே விட்டுட மாட்டோம்ல! ஏதோ தோணியதை எழுதி தள்ளிடுவோம்ல!

[இப்பல்லாம் கல்யாணம் பேசப் போனா 'பிளாக் கு' வச்சிருக்கியளா?எத்தனை ன்னு கேக்கறதா நம்ம ஓட்டைவாய் உலகநாதன் சொன்னாருங்க]

சரி இந்த வாரம் என்ன எழுத போறன்னு கேட்டீங்கன்னா.......................................நத்திங் ஸ்பெஷல்.

பின் நவீனத்துவம், கவிதை, கதை, கம்யூனிசம், பெரியாரிசம், ஆணீயம், பெண்ணீயம், மாங்கொட்டை...புளியங்கொட்டைனு பேசலாம்தான்.

ஆனாப் பாருங்க பேசி வாயைக் குடுத்து மாட்டிக்க வேணாம்னு தங்கமணி கனவுல வந்து சொல்லி விட்டுட்டாங்க சோ இதல்லாம் எதுவும் கிடையாது.

எப்போதும் என்ன எழுதுவனோ அதே தான். பதிவு படிக்க சந்தோஷமா வாங்க ரொம்ப :)) சந்தோஷமா திரும்பி போங்க.

September 22, 2007

சத்தியமா இது சோதனை பதிவுங்க!!!

பாடல்: ஒரு முத்தாரத்தில்
திரைப்படம்: சொர்க்கம்
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
நடிகை: கே.ஆர்.விஜயா
நடிகர்:சிவாஜி கணேசன்


ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள்
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்க கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்
என் கண்கள் அதன் காவல்
என் நெஞ்சம் அதன் மஞ்சம்

ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள்
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்க கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்

அந்த மாலை இந்த பெண்ணின் சொந்தமானதே
அந்தி மாலை நேரம் பார்த்து ஆடுகின்றதே
பொன்னரங்கம் தன்னில் வந்து
என்னை மட்டும் பாட சொன்னதென்ன
கண்னரங்கம் மின்ன மின்ன காதல் கொண்டதோ
அந்தரங்கம் கண்டு கொள்ள அழைப்பு வந்ததோ
அந்த கிண்ணம் சொந்தம் இல்லை
என்று இன்று கண்டு கொண்டதென்ன

ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள்
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்க கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்

நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே
காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே
நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே
காவல் கொண்ட மாலை இன்று சிவந்து போனதே
பாடல் ஒன்று....ராகம் ஒன்று
தாளம் கொஞ்சம் மறிவிட்டதென்ன
கால்ம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான்
கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்
இன்று மட்டும் நாளை இல்லை
என்ற சொல்லில் உண்மை இனி இல்லை

ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள்
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்க கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்
என் கண்கள் அதன் காவல்
என் நெஞ்சம் அதன் மஞ்சம்................


திஸ்கி: மக்கா ரொம்ப நாளா எழுத விட்டு போச்சு. எப்படி எழுதுவதுன்னே தெரியலை. சரின்னு தகிரியமா எழுத கிளம்பிட்டேன். சரி நம்ப அபிஅப்பாதானேன்னு பதிவு படிக்க ஜாலியா ஜிவாஜி கணக்கா கோட்டு சூட்டு எல்லாம் போட்டுகிட்டு வந்து, பாதில தண்ணிய போட்டுட்டு ரகளை பண்ணாம ஆதரவு கொடுங்க மக்கா! பப்ளிஷ் பண்ணா ஒழுங்கா பப்ளிஷ் ஆகுதான்னு பார்க்க இது ஒரு சத்திய சோதனை பதிவுதாங்க இது!!!!

September 9, 2007

பின்ன எப்படிதான் ரீ எண்ட்ரி கொடுப்பதாம்? வந்துட்டேன் நானும் ஆட்டைக்கு!!!

ரொம்ப உயரத்துல தூக்காதீங்கப்பா!



கீழே விழுந்தா அடி பலமா பட்டுடும்!!!