பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 26, 2009

மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வலைப்பூ!

நம் மத்திய கேபினட் அமைச்சர் ஆ.ராசா அவர்கள் ஒரு வலைப்பூ ஆரம்பித்து இருக்கின்றார்.

a.raasaa@gmail.com இது அவரின் மெயில் ஐடி.

http://rajadmk.blogspot.com இது அவர் பிளாக் ஐடி! வலைபதிவர் கள் அவரிடம் கும்மி அடிக்காமல் கேட்கும் அவர் பதிவில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார்.

அவரை சேட்ல சேர்த்துக்கலாம். ஆனா "என்ன சார் அதிஷாவுக்கும் லக்கிலுக்கும் தோஸ்தாமே"ன்னு கேள்வியை தவிர்க்கவும்!

June 21, 2009

உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்துச்சு?

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் பெயர் தொல்காப்பியன். பெயரின் காரணம் பல பதிவர்களுக்கு தெரியும். இதை இப்ப இங்க சொன்னா அரசியல் பதிவா ஆகிவிடும். "அபிஅப்பா" என்கிற என் பெயர் எனக்கு வந்த காரணம் அபியால் தான். "ஏங்க, இந்தாங்க" இப்படியே கூப்ப்பிட்டுகிட்டு இருந்த என் மனைவி தான் முதல்ல "அபிஅப்பா இங்க பாருங்க"ன்னு ஆரம்பிச்சு வச்சாங்க.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இன்று காலை. அபியிடம் இருந்து வந்த ஒரு மெயில். தந்தையர் தின பரிசு எனக்கு. இருங்க காபி பேஸ்ட் செய்றேன்.

\\
அப்பா உன்னை ஏன் பிடிக்க வில்லை?
1.அப்பா ஒரு மே மாதம் 3ம் தேதி இரவு 11.30க்கு என்னை ஏன் கையில் ஏந்தினாய்? அப்போது முதலே என் தனி தண்மையும் உன் தனி தண்மையும் போயிடுச்சே? அபிஅப்பாவின் பொண்ணா நீ என என்னையும் அபிஅப்பாவா நீங்கன்னு உன்னையும் உலகம் கேட்குதே?


2. நான் ராக்கெட்டில் பறக்க ஆசை! நீ என்னை சைக்கிள் ல போனா கூட பின்னாடி வண்டி எடுத்துகிட்டு வந்து டார்ச்சர் பண்றே. நம்மை பார்த்து தான் "அபியும் நானும்" எடுத்த மாதிரி இருக்கே.


3. ஆட்டோகாரர் கூடத்தான் நான் ஸ்கூல்கு போறேன். செங்கனிசெல்வி தினமும் அவ அப்பா கூட சைக்கிள்ல வரா. எனக்கு அவளை பார்க்க பொறாமையா இருக்கு. ஒரே ஒரு தடவை என்னை நடந்தாவது ஸ்கூல்க்கு அழைச்சிட்டு வந்து விடுப்பா


4. அப்பா நீ ஒரு சுயநலக்காரன் அப்பா. பாசம் வைத்து மோசம் செய்பவன்.


5.உன்னை ஆசை ஆசையா திட்ட மனசிலே இருக்கு. வார்த்தை தான் காணும். மீதியை நீயே திட்டிக்கோ.
மறந்துடேனே. இன்றைக்கு தந்தையர் தினமாமே. பிடிச்சுக்கோ என் வாழ்த்தை.\\

இதை படித்த எந்த அப்பனும் அழுவான். அதை தான் நானும் செஞ்சேன்.

3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்காது. ஆனா ரொம்ப அழகா முத்து முத்தா இருக்கும். நான் எழுதி பலவருஷம் ஆச்சு. இப்போது தினமும் 200 கையெழுத்து போடுவது தான் நான் பேனா பிடிக்கும் தருணம்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

இதிலே 3 வகை இருக்கு.

1. நல்ல பொன்னி பச்சரிசி குழைய வடித்து அதிலே எறுமை கெட்டி தயிர் போட்டு (நல்லா கவனிக்கவும் மிக்சி இல்லை) அம்மியில் அரைத்து பின்னே அதுலே கறிவேப்பிலை கடுகு வெள்ளை ஊசி மிளகாய் தாளிச்சு(ரொம்ப எண்ணெய் விட கூடாது) அதை சரியான அளவு உப்பு போட்டு அழகா ஒரு பீங்கான் தட்டிலே வச்சு அதன் தலையில் இரண்டு பெரு நெள்ளிகாய் ஊருகாய் வச்சு அதிலே ஒரு ஸ்பூன் குத்தி குளித்து முடித்து மடியாக அபிராமி அந்தாதி சொல்லிகிட்டே ஒற்றை நாணய பொட்டும், காட்டன் புடவையும்,காதில் ஆடும் ஜிமிக்கியும், வைர மூக்குத்தியும்,மெல்லிசா சத்தம் போடும் கொலுசுவும், கிச்சன்ல இருந்து வரும் போது தரையும் கால் விரலும் மெதுவா சண்டை போடுவதால் வரும் மெட்டி சத்தமும், கிட்டே வரும் போது நேற்று இரவு போட்ட மருதாணியால் சிவந்த கையும் சகிதமாக வரும் அந்த சாப்பாடு எனக்கு பிடிக்கும்.

2. சின்ன சின்ன செங்கால மீன் வாங்கி அழகா சுத்தம் செஞ்சு அழகாக மீன் குழம்பு(கொஞ்சம் புளி அதிகம் விட்டு) அதிலே மாங்காய் 2 துண்டு விட்டு சுட சுட பொன்னி சாதம் கூட கெட்டி தயிர் எடுத்துட்டு வரும் நைட்டி பொண்டாட்டி உணவும் பிடிக்கும்.

3. "எனக்கு முடியலே இன்னிக்கு. ஹோட்டல்ல சாப்பிடுவோமே"ன்னு சொன்ன பின்னே அதுவும் பிடிக்கும்.

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

பாஸ்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி என்னவோ தலையிலே குட்டுவது போல என்னை இம்சிப்பது போல இருக்கும். கடல் அதுவும் துபாய் கடல் ஆர்பரிக்காம ராமேஸ்வரம் கடல் மாதிரி நம்ம வீட்டு படுமாடு மாதிரி அத்தனை ஒரு சுகம். இங்க ஜுமைரா பெய்டு பீச்சிலே வெள்ளி காலை மெல்லிசா ரொம்ப மெல்லிசா ஒரு பெக் அடிச்சிட்டு போகனும். காரை மெதுவா ஓட்டனும். ஏசி பேட கூடாது. "நீ காற்று நான் மரம் என்ன சொன்னாஅலும் தலையாட்டுவேன்"ன்னு ஒரு கேசட் போடனும். 3 அல்லகை கூட்டிக்கனும். கார் பார்க்கில் அடுத்த பெக் அடிக்கனும்.

ஒரு படுக்கை குடை வாங்கிகனும். பின்ன என்ன போட்டோ பாருங்க!

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?.

உடல் மொழி! எனக்கு 3 நிமிடம் போதும். மொத்த ஜாதகம் கணிக்க. முதலில் உட்கார சொல்லுவேன். அட்டாணிகால் போடும் வலமா இடமான்னு பார்ப்பேன். அப்பவே கிட்ட தட்ட அவங்க கிட்ட பேச போவது பற்றி முடிவெடுத்து விடுவேன். நான் கணிக்க முடியாத ஒருத்தர் ஆசீப் மீரான். அடுத்து இதை தான் சொல்லுவார்ன்னு நினைப்பேன். ஆனா சரியா 100 சதம் மாற்றி பேசுவார்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?.

என் கீழ் வேலை செய்பவர்களை திட்டுவது எனக்கே பிடிக்காது. "சார் திட்டினா என்ன இந்த மாசமும் காலீத் பிரியாணி உண்டு"ன்னு என் காதுபடவே அவங்க பேசிகிட்டு போவதும் நானும் அது போல செய்வதும் பிடிக்கும்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

அட! நான் இதுக்கு தனி பதிவே போடலாம். கோபத்தை மௌன மொழியில் சொல்வது பிடிக்காது.ஏதாவது கத்தி திட்டு என்பேன். அதுக்கும் மௌனமா இருக்கும்.

அது போல பிடித்ததுன்னு சொன்னா எதை சொல்வது. கிட்ட தட்ட எல்லா பதிவர்களுக்கும் தெரியும். நான் கொடுத்து வச்சவன்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

உலகம் அறிந்த விஷயம்

14.பிடித்த மணம்?

வயலில் நாத்து நடும் போது வருமே ஒரு சேத்து வாசனை அது பிடிக்கும். அது போல கரும்பு வெட்டின பின்னே இரவு போய் அந்த கழிவுகள் கொளுத்துவோம். அடுத்த நாள் காலை அங்கேகிடைக்கும் வாசம் பிடிக்கும்.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

நான் அழைக்கபோவது முதலில் என் நண்பி என் கூட படிச்ச குறத்தி மாலா, அடுத்து ராமலெஷ்மி என்னும் என் பிரண்ட், அடுத்து என் மகள் அபி.

16.பிடித்த விளையாட்டு?

எனக்கு அப்பப்ப எதுனா பிடிக்கும். சமீபத்துல பிடிச்சது "வாந்திய தேவன் " படிங்க புரியும். வாந்தி முடுஞ்ச பின்னே அடுத்த விளையாட்டுக்கு ஆரம்பிச்சுட்டேன். என் தங்கமணி "நீங்க கால்ல மாட்டிகிட்டு பங்கி ஜம்ப் செஞ்சா நான் ஆணில மாட்ட வேண்டி இருக்கும் தாலியை"

இதுக்கு என் பிரண்டு வேற சப்போட்டு சப்போட்டு சப்போட்டு

சரி போ உன் கழுத்திலே மாட்டிகிட்டு இருன்னு விட்டுட்டேன்

17.கண்ணாடி அணிபவரா?

பாஸ்

24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா

இருக்கு! ஒரு சிகரட்ல 300 ரவுண்டு விடும் கின்னஸ் சாதனை மிறியடிக்கும் திறமை இருக்கே. கின்னஸ் சாதனை 249 ரவுண்டு!(கேவலம் தான் சொல்லி தானே ஆகனும்)

அய்யோ போதுமே வல்லிம்மா, சூரிசார், ஷை எல்லாரும் மன்னிகனும்.போட்டோ எல்லாம் கூட போடலை.


June 18, 2009

நட்ராஜ் பிறந்த நாள்!

கிருஷ்ணா எப்படி இருக்க?

நான் நல்லா இருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சு போன்பண்ணுங்க நான் அவயாம்பா சந்நிதில அர்ச்சனைல இருக்கேன்"

ஓக்கே

கொஞ்ச நேரம் கழித்து ஒரு போன். நான் கட் பண்ணிட்டு போன் செஞ்சேன்.

"அல்லோ தம்பி கிட்ட கொடு. அவனுக்கு வாழ்த்து சொல்லனும்"

"அப்ங்லககிங்ககலிய"

"என்னடா தம்பி சொல்ற புரியலையே"

"அப்ங்லககிங்ககலிய"

\"அய்யோ கிருஷ்ணா அவன் என்ன சொல்றான்?"

"அவன் தான் தெளிவா நீங்க எப்படி இருக்கீங்க அபியும் நானும் நல்லா இருக்கோம்ன்னு சொல்றானே"

"அப்படியா சரி அவன் கிட்ட கொடு"

லிக மாலிநானு சாப் ல்ய்ச்""ங்மலிங்க


"அய்யோ கிருஷ்ணா இப்ப என்ன சொல்றான்"

"சந்தான குருக்கள் சர்க்கரை பொங்கல் கொடுத்தாராம்"

"அவன் தமிழே பேச மாட்டானா?"

"பேசுவானே தமிழ் படம் பார்க்கும் போது எல்லாம் தமிழ் பேசுவான்"

"'எங்க பேச சொல்லு"

"இருங்க ஸ்பீக்கர்ல போடுறேன்"

"தம்பி "பசங்க படம் பார்த்தியா அது மாரி பேசு"

"அம்மா அம்மா"(இது நட்டு)

"என்னாடி செல்லம்"(இது என் மனைவி)

"என் குஞ்சுமணி வெளியே வந்து விழுந்துடுச்சும்மா"

"ஊக்கூம் அது எப்ப உள்ள இருந்துச்சு. அப்படியே கிடக்கட்டும்" இது கிருஷ்ணா!

அய்யோ என் மகன் அழகா சினிமாவின் காரணமாக தமிழ் பேசுறான் என சந்தோஷ படுவதா? என் மனைவியின் பதிலுக்காக சிரிப்பதா?

June 17, 2009

நட்டுமுட்டு!!!

எங்க ஊர் மயிலாடுதுறையிலே மாயூரநாதர் கோவில்ல இரவு பூஜை முடிந்ததும் மாயூரநாதரை கொண்டுபோய் அவயாம்பா அம்மா கிட்ட பள்ளியறையிலே விடும் நிகழ்ச்சிக்கு நாதஸ்வரம் தவில் எல்லாம் கிடையாது. ஆனா ஒரு மிருதங்கம் தான் அதுக்கு வாத்தியம். அதுக்கு தனி வித்வான் கிடையாது.

அதுக்காகவே ஒருத்தன் இருக்கான்.அவன் பேர் என்னன்னு யாருக்கும் தெரியாது. சும்மா நான் சின்ன பையனா இருந்த போது அவன் நாராசமான வாத்தியத்தை கேட்டு "அய்யோ என்ன பார்வதி குருக்களே என்ன அவன் தத் தித்தும் நம் நொம்னு கூட அடிக்காம நட்டு முட்டுன்னு அடிக்கிறானே"ன்னு கேட்க அவரோ " விடுடா கொழந்த இவன் இங்க தாளம் போடுறவன். உன் கவர்மெண்ட் மிருதங்க வித்வானா கொடுத்து இருக்கு கோவிலுக்கு, அவேம்பா கொடுத்து வைச்சது அத்தினியே, அவளுக்கு நட்டுமுட்டு போதும்"

அன்றைக்கு முதல் அவன் பெயர் "நட்டுமுட்டு" ஆகி போச்சு. காலை 5.30க்கு ஓதுவார் அய்யா சுப்ரமணிய தேசிகர் எங்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிக்கும் போது "குழந்தைகாளா முதல்ல சாப்பிடிடுங்க"ன்னு தான் சொல்லுவார். நட்டுமுட்டுதான் எடுத்து வருவான். பொதுவா சிவன் கோவிலில் உப்புமா செய்து பார்த்தது உண்டா நீங்க? ஆனா எங்களுக்காக(எப்படியாவது நாங்க ஒரு 30 பேராவது காலை 5.30க்கு வந்து தேவாரம் திருவாசகம் ஆண்டாள் பாசுரம் படிச்சா போதும் என்றே) அவர் உப்புமா, பொங்கல், அப்படின்னு வித்யாசமா போடுவார்.

எல்லாரும் முதலில் பந்தி. பின்ன ஆரம்பிச்சிடுவார்.
"சூடிக் கொடுத்தச் சுடர்கொடியே தொல்பாவைபாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீவேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்நாங்கடவா வண்ணமே நல்கு."
பின்னே அதல்லாம் முடிஞ்ச பின்னே அந்த கோவில்ல நட்டுமுட்டு ராஜ்யம் தான்.

நான் வளர வளர அவனும் வளர்ந்தான். ஆனா கூட அவன் தான் அர்தசாம பூசை மிருதங்கம். "டேய் உனக்கு என்ன தான் பிரச்சனை? எப்பதான் அவேம்பாவை நிம்மதியா தூங்க வைப்பே?"ன்னு கேட்டேன். அதுக்கு அவன் "எலேய் நான் பல வருஷம் அவேம்பாவை தூங்க வைக்க நட்டுமுட்டு அடிச்சுட்டேன். நான் சாவருத்துக்குள்ளே ஏ.கே. பி கூட சரிசமமா உட்காந்து தவில் வாசிக்கனும்"

எனக்கு சொரேர்ன்னு ஆகிடுச்சு. எங்க கோவில்ல அப்பதான் நவராத்திரி நடந்துகிட்டு இருந்துச்சு. 10 நாளும் செம கச்சேரி இருக்கும். அன்னிக்கு திருமிச்சூர் பசங்க நாதஸ்வரம், ஏ கே பி தவில், அவருக்கு இனையா டி ஏ கே . இது முடிவாகி பத்திரிக்கை எல்லாம் அடிச்ச பின்ன டி ஏ கே லண்டன் போயிட்டார் காரைக்குடி மணி குரூப் கூட.

ஏ கே பிக்கோ செம கோவம் வரும். உடனே கோவிலில் இருந்தே ஏ கே பி க்கு வலங்கைமானுக்கு போன் செஞ்சேன்.

"அண்ணே"

"சொல்லு தம்பி, கார் சொல்லிட்டேன் வந்துடுவேன்"

"அது இல்லைன்ணே"
"வேற என்ன"
"கலியமூர்த்தி அண்ணன் காரைகுடி மணி அய்யா கூட லண்டன் போயிட்டாரு"

"தெரியுமே"

"அதனால நான் வேற ஏற்பாடு பண்ணிட்டேன். உங்களை மாதிரி தாள கணக்கு வழக்குல 64, 74 ன்னு பின்னுவாரு. அவரை ஏற்பாடு பண்ணிட்டேன்"

"அப்ப சரி வந்துடறேன்"

உடனே நான் "அடேய் பல்லு வேலு நட்டுமுட்டை தூக்குடா ஆறுமுகம் சலூனுக்கு"ன்னு குரல் வீடும் போது பார்வதி குருக்கள் "டே கொழந்தே உன் விளையாட்டை ஏ கே பி கிட்ட வச்சிக்காத. உன் தோப்பனாருக்கு தெரிஞ்சா என்னை கடிச்சிடுவார்"ன்னு சொல்ல நான் "அய்யா எல்லாம் நான் பார்த்துக்கிறேன்"ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டோம்.

வீரசேகரவிலாஸ்க்கு எதிரே இருந்த ஆறுமுகம் சலூன்ல நாங்க 6 பேர். அவனுக்கு முடி வெட்டி (போண்டா மணி மாதிரி இருப்பான்) சிகப்பாக்கி உச்சிகால வேளைக்கு முன்ன கோவில் கொண்டு வந்து திருகுளத்தில் குளிக்க வச்சி பட்டை சோறு கொண்டு வந்து குடுத்து தூங்குடான்னு சொல்லிட்டு வீட்டுக்கு ஓடிட்டேன்.

வேற எதுக்கு பட்டு வேட்டி வேணுமே. நல்லா நாலு இஞ்சி கரை உள்ள மயில்கண் பட்டு வேட்டி எடுத்துகிட்டு பார்வதி குருக்கள் வீட்டுக்கு வந்து "அய்யா அப்பா கிட்ட துண்டு இல்லை, நல்ல மயில் கண் துண்டு தாங்க அப்படியே உங்க அத்தர் பாட்டிலயும் தாங்க"ன்னு கேட்டு வாங்கிட்டு ஓடி வந்து கோவில்ல குடுத்துட்டு என் மத்த பொறுப்பை மத்த அல்லகைல விட்டுட்டு ஏ கே பி யை கூட்டிகிட்டு வர போயிட்டேன்.

வீட்டுக்கு போனா ஏ கே பி பஜ்ஜியும் தேங்கா சட்னியும் சாப்பிட்டுகிட்டு இருக்காரு."தம்பி வா! நான் ஒரு மணி நேரம் தூங்கிட்டு வரேன் கோவிலுக்கு "அப்படின்னு சொல்லிட்டு தூங்கிட்டார்.

ஆச்சு இரவு 7 மணி. சியாமளாதேவி கோவில்ல செம கூட்டம். ஏன்னா திருமிச்சூர் பசங்க நாதஸ்வரம், ஏ கே பி, டி ஏ கே தவில்ன்னு. டி ஏ கே லண்டன் போயாச்சாம் லண்டண் போயாச்சாம்ன்னு ஒரே கிசு கிசுன்னு பேச்சு.

எப்போதும் ஏ கே பி உட்காரும் போது ஒரே அப்ளாஸ் தான். ஆனா எங்க குரூப் சொன்ன மாதிரி யாரும் கை தட்டலை. வந்தாரு நம்ம நட்டுமுட்டு. வரும் போதே ஒரே அப்ளாஸ். எங்க அப்பாவின் மயில்கண் வேட்டியும், பார்வதி குருக்களின் துண்டும் ஆறுமுகம் முடிவெட்டும் நட்டுமுட்டுவை பெரிய ரேஞ்சுக்கு மாத்தியிருந்துச்சு.அப்ப கூட பார்வதி குருக்கள் "அம்பி வேண்டாம், கண்ணன் கொஞ்சமாவது ஒப்பேத்துவான் அவனை வாசிக்க சொல்லு"ன்னு சொன்னதுக்கு நான் ஒத்துக்கலை.

நம்ம நட்டுமுட்டு வந்து உட்காந்ததும் செம கைதட்டல். ஏ.கே. பழனிவேல் அசந்து போயிட்டார். வாய் குழைய வெத்தலை வேற. முதலில் சும்மா தட்டிகிட்டு இருந்தான். ராகம் கீர்தனைக்கு சமாளிக்க முடியாதா என்ன?

பின்ன தனி ஆவர்த்தனம் வந்துச்சு. எப்பவும் பழனிவேல் தான் ஆரம்பிப்பார். அவர் வாசிப்பதை தான் மத்தவங்க வாசிக்கனும். ஆனா நாங்க சொன்ன மாதிரி நம்ம நட்டுமுட்டு ஆரம்பிச்சிடுச்சு.

பழனிவேலுக்கோ கோவம்+ ஆச்சர்யம். ஒருவேளை தன்னை விட பெரிய ஆளா இருப்பாரோன்னு.

நட் முட் நட் முட்

நட் முட் நட் முட்

ஐந்து நிமிஷம் இதே தான் ஓடிகிட்டு இருக்கு. பழனிவேல் கூட "இவரு பெரிய ஆள் போல இருக்கு. நம்மையே சுத்தி விடுராறே"ன்னு ஆச்சர்யம். அப்ப் தான் நட்டுமுட்டு கவுத்துட்டான். டபார்ன்னு எழுந்து பழனிவேல் கால்ல சாஷ்டாங்கமா விழுந்துட்டான்.

அத்தோட நான் ஓடிட்டேன். கம்மினாட்டி அந்த மயில்கண் வேட்டிய கொடுக்கவே இல்லை.

பின்னே என் கல்யாணத்துக்கு கத்ரிகோபால்நாத் கூட வாசிக்க வரும் போது ஏ.கே பழனிவேல் இந்த நிகழ்சியை மைக்கில் சொல்லி மகிழ்ந்தார்!

June 9, 2009

சூடான இட்லி + நெய் + ஜீனி 8.06.09

ஆச்சு என் புரஃபைல் வியூவர் 10000 ஆச்சு. தவிர நான் தமிழ்மணம் மட்டுமே லிங். அதை தவிர தமிலீஷ், தமிழ்திரட்டி, தமிஷ்வெளி, எதுவும் நான் இல்லை. அதையும் தவிர நான் பதிவு ஆரம்பிச்சு ஒன்னரை வருஷம் கழிச்சு தான் கவுண்டரே போட்டேன்.
இல்லாட்டி ( 200 ஆயிரம் போயிருக்கும் என பீத்திக்கலை)

நேற்று நான் தமிலிஷ்லயும் இனைஞ்சாச்சு! சராசரியா தமிழ்மணம் வழியா வந்த வாசகர்கள் 800 பேர்.ஆனா தமிலிஷ்ல வந்தவுடம் அது 1200 ஆகி போச்சு.வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என் 200ம் பதிவு முதலே தமிழ்மணத்தில் எனக்கு ஓட்டு போட முடியலை எல்லாருக்கும். ஆனா நேத்து முதல் ஓக்கே ஆகிடுச்சு. இனி தமிழ்மணத்திலும் ஓட்டு போடலாம்.
முடியலை. நாளை பார்க்கலாம்@
தவிர அண்ணன் இராகவன் நைஜீரியா அவர்கள் உதவியால் தமிலீஷிலும் இடம் பெற்று விட்டேன். ஆக நீங்க எனக்கு எப்போதும் போல இரண்டு இடத்திலும்ம் ஓட்டு போட்டு என் பிளாக்கை வாழ வைக்க வேண்டிக்கிறேன்!

***********************

June 7, 2009

32 கேள்விகள் - ஒரு ஆராய்சி பார்வை!!!


சிலர் மனதை புண்படுத்தி ஒரு காமடியா என எனக்கு விடப்பட்ட கேள்வியின் காரணமாக இந்த பதிவை எடுத்துவிட்டேன். மன்னிக்கவும்!

June 6, 2009

சின்ன வயது பள்ளி மிட்டாய்கள்!!


சின்ன வயதில் பள்ளி செல்லும் போது என் காலத்தில் கிடைத்த "வாங்கி திங்க" கிடைத்த காசு என்று பாத்தால் ஐந்து பைசா. அத ஐந்து பைசாவுக்கு என்ன என்ன கிடைக்கும் என பார்த்தால் சின்ன கடை தெரு சலாமத் பாய் கடையிலே பொம்மை ரொட்டி மூன்று கிடைக்கும். வாங்கி வாங்கி முதலில் அந்த குருவி மூக்கில் இருந்து ஆரம்பித்து பள்ளி வரும் போடு முழுசா மூன்று ரொட்டியும் முடித்து விடலாம்.

இல்லாவிடில் ஒத்த பைசா சாக்லெட் ஐந்து கிடைக்கும். (பல்லிலே நல்லா ஒட்டிக்கும்.) டீச்சர் பாடம் நடத்தும் போது நாக்கால் பூச்சி பல்லை துழாவினா அருமையா ருசியா இருக்கும். இல்லாவிடில் ஓம மிட்டாய் 2 ஸ்பூன் மடித்து தருவார் பாய். தவிர இரண்டு மிட்டாய் கொசுறும் கிடைக்கும். அந்த சலாமத் பாய் தூய வெள்ளை கைலியும், வெள்ளை ஜிப்பாவும் கருப்பு கலர் கூத்தாநல்லூர் தொப்பியும் ஷேவ் செய்த முகமுமான கட்டையான உருவம். பாய் கடை "ஷாப்பு கடை" அதற்கே உரிய வாசனை அங்கே நிற்கும் கொஞ்ச நேரம் நம்மை மயக்கும். சலாமத் பாய் கடையின் பையன் பேர் கமல் பாய். ஏன்னா அவர் அப்பவே எங்க ஊர்ல ஹிப்பி வச்ச முதல் ஆளாக இருக்கும் என நினைக்கிறேன்.


அப்படியே சலாமத் பாய் கடை பர்ச்சேஸ் முடிச்சுகிட்டு எதிரே இருந்த வண்டிபேட்டை வாதாமரம் வாசலில் ஒரு நாலு பொறுக்கி எடுத்து பையிலே போட்டுகிட்டா அது மாலை திண்பண்டத்துக்கு உதவும். எல்லா நாலும் சலாமத் பாய் கடையில் மட்டும் வாங்குவதில்லை.

அடுத்த நாள் பள்ளி வாசலில் 3'x1' சைஸ்ல ஒரு மர பெட்டி, மேல் மூடி கண்ணாடி. பச்சை கலர் பெயிண்ட் (எப்பவோ அடிச்சது அழுக்கேறி இருக்கும்). பெட்டியை பார்த்தா மேசை மாதிரி இருக்கும். அதிலே அந்த கண்ணாடிக்கு கீழே பார்த்தா உருண்டை உருண்டையா எதோ ஒரு மாவிலே போட்டு புரட்டப்பட்டு முழிச்சு முழிச்சு பார்க்கும் நம்மை. இடது பக்கம் ஐந்து பைசா பெரிய உருண்டையும் வலது பக்கம் ஒரு பைசா சின்ன உருண்டையும் இருக்கும். அதிலே பெரிய உருண்டை வாங்கினா வகுப்பில் மதியம் நெருங்கும் வரை வாயில் வச்சு ஓட்டலாம். ஆனா என்ன எச்சில் ஒழுகும். தவிர டீச்சர் எதுனா கேள்வி கேட்டா நம்மாள சொல்ல முடியாது. உடனே அதை எடுத்து புத்தக மூட்டைக்குள் வத்து விட்டு பதில் சொல்லிட்டு திரும்ப எடுக்கும் போது புத்தக பையின் தூசுகளும் சேர்ந்து வரும். அதை எல்லாம் கண்டுக்காம சாப்பிடனும்.

இதே அந்த ஒத்தை பைசா உருண்டை வாங்கினா கொஞ்சம் சுலபம் திங்க. ஆனா அதிலே ஒரு கஷ்ட்டம் ராதா அவசரமா தின்னு முடிச்சிட்டா காக்காய் கடி கடித்து தந்து தொலைக்கனும். மத்தபடி அந்த சவ்வு மிட்டாய் ஓக்கே தான். அதை தூக்கி வந்து விற்கும் தாத்தாவுக்கு அப்பவே எழுவது வயசு இருக்கும். வாயெல்லாம் பொக்கை, கூன்விழுந்த உடம்பு. இப்ப அவர் உயிரோடு இருந்தா 108 வயசு ஆகியிருக்கும். இடுப்பில் ஒரு அழுக்கு வேஷ்டி. தலையில் ஒரு முண்டாசு. அதே முண்டாசு அந்த பெட்டியை தூக்கும் போது சும்மாடா ஆகிடும். சட்டை எல்லாம் போட்டதில்லை அவரு. ஒரு வேளை தீபாவளிக்கு மாத்திரம் போட்டுப்பாரோ என்னவோ!


அடுத்த நாள் பள்ளிக்கு எதிரே இருக்கும் சாமி கடை. சாமி கடையில் அவருடைய குடும்பமே வேலை பார்க்கும். சாமி கடை ஸ்பெஷல் என்னன்னா கமர்கட்டு மிட்டாய், கடலை உருண்டை, பொறி உருண்டை தான். கமர்கட்டு மிட்டாய் பெரிய சைஸ் மோத்தி பளிங்கு மாதிரி இருக்கும். வாங்கி வாயிலே போட்டா அது போகும் இரு மணி நேரம். அது நம்ம தாமிரா சைஸ்ல வாயிலே போடும் போது இருக்கும். நாம ஒரு மணி நேரம் போட்டு சுழட்டுவதால் என் சைஸ்க்கு ஆகிவிடும். உடனே ஒரு கருக் முருக் போட்டு காலி பண்ணிடலாம்.


அடுத்த நாள் அதே சாமி கடை வாசலில் இருக்கும் ஐஸ் ஸ்டால். இது பத்தி தனி பதிவே போடலாம். ஒரு ஸ்டாண்டிலே ஒரு இழப்புளி. (கார்பெண்ட்டர் வச்சிருப்பாங்களே அதிலே கொஞ்சம் மாற்றம் செய்து) போல்ட் போட்டு வச்சிருப்பாங்க ஆடாம இருக்க. முதலில் ஒரு சாக்கு பையில் பெரிய பெரிய ஐஸ் கட்டி வரும். அது கரையாமல் இருக்க மரத்தூள் அதன் மேலே தூவப்பட்டு இருக்கும்


அதை எடுத்து மண் தரையிலே போட்டு சாமியின் மகன் ஒரு பாயிண்டர் சிசல் வச்சி கோடு போட்டு அதிலே கீறி கீறி அந்த இழைப்புளி மேல் உட்காரும் சைஸ்க்கு உடைத்து சாமியிடம் கொடுக்க சாமி அதை கழுவி அதன் மேல் வைத்து கை விரைக்காம இருக்க மொத்தமான துனியால் அதனை போர்த்தி அதன் மேல் கை வச்சு இழக்க ஆரம்பித்தால் ஐந்து இழைப்பில் அந்த இழைப்புளியின் கீழே வைக்கப்பட்ட அந்த சின்ன கிளாஸ் நிரம்பி விடும். பின்னே அதை எடுத்து அதிலே சிவப்பா ஒரு கொழ கொழ திரவத்தை ஊற்றி அதன் தலையில் ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் போட்டு கொடுத்தா ஆஹா அதை குத்தி குத்தி அந்த திரவத்தை அடிமட்ட ஐஸ் துருவல் கூட அடையும் படி குத்தி சாப்பிட்டா சொர்க்கம் தான் போங்க.

நாம சாப்பிட்டு முடித்தவுடன் அந்த கிளாஸ், ஸ்பூன் ஒரு வாளி தண்ணீரில் கழுவப்படும். அந்த ஒரு வாளி தண்ணீர் அன்றைக்கு முழுக்க மாற்றப்படாது. (கொடுமை) சாப்பிட்டு வகுப்புக்கு வரும் போது வாயெல்லாம் லிப்ஸ்டிக் போட்ட மாதிரி ஒரு சிவப்பா இருக்கும். ரொம்ப பெருமையா இருக்கும்.சாமியை பார்த்தால் குண்டு கட்டையா, சிவப்பா சைக்கிளை எட்டி எட்டி மிதித்து கிட்டு போவது கொஞ்சம் வேடிக்கையாவே இருக்கும். இப்ப வயசாகி போச்சு.

அடுத்து "கனி" என்பவன் விற்க்கும் ஐஸ் பெட்டி கடை. ஐந்து பைசாவுக்கு சாதா உருண்டை ஐஸ். பத்து பைசாவுக்கு பால் ஐஸ். பல பசங்களை கெடுத்தவன். அவன் அப்பவே அக்கவுண்ட் வச்சி ஐஸ் கொடுத்துவிட்டு அநியாய காசுவாங்குவான். அதுக்கு வட்டி எல்லாம் போட்டு. எங்க ஊரின் இப்போதைய தொழில் அதிபர் எல்லாம் கனிக்கு தீவிர ரசிகர்கள். கருப்பா உயரமா. சீவாத பரட்டை தலையோடு, பிளாக் டிக்கெட் விற்பவன் மாதிரியே இருப்பான். இப்போது அந்த தொழில் செய்வதில்லை. போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கம் கஞ்சா விற்கிறான். தொழிலில் அடுத்த கட்ட நகர்வு நிகழந்துவிட்டது அவனுக்கு.


இப்படியாக முதல் ஐந்து வருடம் என் "வாங்கி திங்க" காசு ஐந்து பைசாவிலிருந்து பத்து பைசாவாக ஒரு 2 வது சம்பளகுழுவின் பரிந்துரையால் உயர்த்தப்பட்டது. இப்ப உள்ள அரசாங்கம் "நான் சம்பளம் ஏத்துவேன். ஆனா அந்த பாண்டு வாங்கனும், இந்த பாண்டு வாங்கனும்" என்றெல்லாம் டகால்டி விட்டு அதிகமா கொடுத்த சம்பளத்தையும் அரசாங்கத்திடமே அடகு வக்கிறதே. அந்த ஐடியாவை பெத்ததே எங்க அம்மா தான்.


"நீயும் ஆறாவது வந்துட்ட. அதனால இன்னிக்கு முதல் பத்து பைசா"இது அம்மா!


"ஹய் ஜாலி"


"ஆனா ஒரு கண்டிஷன். அதிலே நீ ஐந்து காசுக்கு தான் வாங்கி திங்கனும். மீதி ஐந்து காசை அய்யம்பேட்டை சரோஜா கடையிலே சீட்டு கட்டனும்"


சரி ஏதோ கிடைத்தவரை லாபம் அப்படின்னு ஒத்து கொண்டேன். அது என்ன சீட்டு?


சரோஜா பொட்டி கடையில் ஒரு பிரிண்டட் அட்டை கொடுக்கும். அது தனியா பத்து பைசா. அதிலே 100 கட்டம் இருக்கும். அதாவது மொத்தம் ஐந்து ரூபாய் மதிப்பு. முதல் ஐந்து கட்டம் அதாவது 25 காசு சரோஜாவின் கும்பனிக்கு. தினமும் ஐந்து பைசா கொடுத்தா ஒரு கட்டத்தில் அது கையெழுத்து குறித்து கொடுக்கும். பாதியிலே கூட நாம கழட்டிகிட்டா முதல் ஐந்து கட்டத்தின் காசு போக மீதியை கொடுக்கும். முழுசா கட்டினா 4.75 கொடுக்கும். (கிழிஞ்சுது போ)
நான் முதல் ஒரு பத்து நாள் கட்டுவேன். உடனே கும்பனியில் இருந்து நீங்கி விடுவேன். 25 காசு எனக்கு. 25 காசு சரோஜாவின் கும்பனிக்கு!


இதல்லாம் இப்ப இருக்கான்னு தெரியலை! நினைத்து பார்ப்பதே ஒரு சுகம் தான் எல்லாமே!

June 3, 2009

ஆச்சி அத்தை செத்து போச்சு!!!
ஆச்சி அத்தை எப்போ எங்க வீட்டுக்கு வேலைக்கு வந்துச்சுன்னு தெரியாது. ஆனா நான் சின்ன குழந்தையா இருக்கும் போதே வந்துடுச்சு. அத்தை எங்க வீட்டிலே மட்டும் வேலை செய்யலை. பல பேர் வீட்டிலே. பாவம் அத்தை கையை பார்த்தா அத்தனை ஒரு சொர சொரப்பு. அத்தையை பற்றி எழுதும் போதே அழுகையா வருது.

என் பெரியக்கா, சின்னக்கா, நான், என் தம்பி எல்லார் வாழ்க்கையிலும் அத்தை கலந்துவிட்டது. அக்காக்கள் பெரிய மனுஷியா ஆனது முதல் பெரியக்காவின் 3 பசங்க பிறக்கும் போதும், சின்ன அக்காவின் 1 பையன் பிறக்கும் போதும், என் அபி, நட்டு பிறக்கும் போதும், என் தம்பி பையன் பிறக்கும் போதும் ஆச்சி அத்தை தான் பிரதான ஹீரோயின்.

எங்க வீட்டு பெண்கள் பிரசவத்துக்கு ரெடியான பின்னே " அண்ணி, உன் பழைய புடவை கொடு, நான் ரெடியாகனும்" அப்படின்னு ஆரம்பிச்சிடும் அத்தை. ஒரு நாலு புடவை பின்னே கஷாயத்துக்கு தேவையான மஞ்சள், மல்லி விதை அப்படின்னு அத்தை ரெடியாகும் அழகே தனி.

வலி எடுத்த வுடன் நான் முதலில் போய் (எல்லாம் ராத்திரி தான் ) அத்தை வீட்டு வாசலில் வண்டியை நிப்பாட்டின பின்ன "தம்பி வந்துட்டேன்! நெனச்சுகிட்டே படுத்தேன் பாவம் புள்ளைக்கு சாயந்திரமே முகம் மாறி போச்சு, நீ ஓடி ராஜேந்திரன் ஆட்டோ கிட்ட சொல்லிடு"

"இல்லை அத்தை அத்தை ஆட்டோ வந்தாச்சு! நீதான் அத்தே வரனும்"

"அண்ணி பயப்படும் தம்பி! நீ வண்டி எடு நான் வரேன்! இந்த மஞ்ச பைய முன்னாடி மாட்டிக்க"

"என்ன அத்தை அதிலே இருக்கு"

"பழைய புடவை இருக்கு அதல்லாம் உனக்கு எதுக்கு நான் முதல்ல அண்ணிய பார்க்கனும், ஓட்டு"

"அத்தை பாலுத்தேவன் கிட்ட சொல்லலையா"

"அவன் கிடக்கான் காலை சாப்பாடு அவனுக்கு அண்ணி அனுப்பிடும் பாரு நீ வண்டி ஓட்டு"

வண்டி ஓடிகிட்டெ இருக்கு!

"அத்தே பாலு அவரு பேரு தேவர் அவர் படிச்சு வாங்கின பட்டமா"

"அய்யோ உனக்கு சிரிப்புக்கு இதான் நேரமா? வண்டிய ஓட்டு"

"சரி அத்தே"

"தம்பி உனக்கு பயமே இல்லியா அங்க கிருஷ்ணா கத்திகிட்டு இருக்குமே!"

"அத்தே நீ இருக்கும் போது எனக்கு என்ன பயம்"

""அதல்லாம் சரி! சில்லர காசு இருக்கா?"

"இல்லியேத்தே"

"இந்த பாரு என் கிட்ட ஒன்னேகாருவா இருக்கு வீரன் கிட்ட விட்டரிஞ்சுகிட்டு வா"
\
"சரித்தே"

அத்தே கண்கலங்கி இருந்துச்சு!

"ஏன் அத்தே"

"இல்ல தம்பி! என்னவோ அழுவ வருது! அநேகமா உன் மொவன் தான் நான் பிரசவம் பார்க்கும் கடேசி புள்ளயா?"

"அட என்ன அத்தை! கண்ணை தொடச்சிக்கோ!நான் பத்து புள்ளை பெக்குறேன்! ஏன் அழுவற?"'குழந்தை பிறந்தது! சில பல காரணத்தால் என் அம்மாவும் நானும் பேச்சு வார்த்தை இல்லாமல் போச்சு!

ஆனால் ஆச்சி அத்தை தான் நட்டுவை குளிப்பாட்டும் முக்கிய வேலை.

அம்மாவுக்கு அதிலே உடன்பாடு இல்லை.

ஆச்சி அத்தை அம்மாவின் கட்டுபாடுக்கு மட்டுமே இருக்க வேண்டும். என் அம்மாவின் பேத்தியாச்சே அபி! "அத்தை பாட்டி நீங்க நட்டுவை குளிப்பாட்ட வேண்டும்" அப்படின்னு சொல்லிட்டா!

அம்மாவுக்கும் அத்தைக்கும் இடைவெளி அதிகமாச்சு.

முடிவுக்கு வரேன்.

அத்தை நேத்து செத்து போச்சு. காலை தம்பி நட்டுவை குளிப்பாட்ட்டுசாம். அவன் அவன் "ஆச்சி"னு கூப்பிட்டப்ப "எலேய் உன் அப்பன் கூட ஆச்சின்னு கூப்பிட்டது இல்ல" அப்படின்னு சொன்னுச்சாம்.
போய் தூங்குச்சு. நிம்மதியா செத்து போச்சுங்க!

அம்மா வந்து அழுதுதுச்சுங்க! அம்மாவை நான் எப்படி சமாதானப்படுத்துவேன்!

இதுக்குமேல என்னால எழுத முடியலை!