பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 17, 2009

நட்டுமுட்டு!!!

எங்க ஊர் மயிலாடுதுறையிலே மாயூரநாதர் கோவில்ல இரவு பூஜை முடிந்ததும் மாயூரநாதரை கொண்டுபோய் அவயாம்பா அம்மா கிட்ட பள்ளியறையிலே விடும் நிகழ்ச்சிக்கு நாதஸ்வரம் தவில் எல்லாம் கிடையாது. ஆனா ஒரு மிருதங்கம் தான் அதுக்கு வாத்தியம். அதுக்கு தனி வித்வான் கிடையாது.

அதுக்காகவே ஒருத்தன் இருக்கான்.அவன் பேர் என்னன்னு யாருக்கும் தெரியாது. சும்மா நான் சின்ன பையனா இருந்த போது அவன் நாராசமான வாத்தியத்தை கேட்டு "அய்யோ என்ன பார்வதி குருக்களே என்ன அவன் தத் தித்தும் நம் நொம்னு கூட அடிக்காம நட்டு முட்டுன்னு அடிக்கிறானே"ன்னு கேட்க அவரோ " விடுடா கொழந்த இவன் இங்க தாளம் போடுறவன். உன் கவர்மெண்ட் மிருதங்க வித்வானா கொடுத்து இருக்கு கோவிலுக்கு, அவேம்பா கொடுத்து வைச்சது அத்தினியே, அவளுக்கு நட்டுமுட்டு போதும்"

அன்றைக்கு முதல் அவன் பெயர் "நட்டுமுட்டு" ஆகி போச்சு. காலை 5.30க்கு ஓதுவார் அய்யா சுப்ரமணிய தேசிகர் எங்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிக்கும் போது "குழந்தைகாளா முதல்ல சாப்பிடிடுங்க"ன்னு தான் சொல்லுவார். நட்டுமுட்டுதான் எடுத்து வருவான். பொதுவா சிவன் கோவிலில் உப்புமா செய்து பார்த்தது உண்டா நீங்க? ஆனா எங்களுக்காக(எப்படியாவது நாங்க ஒரு 30 பேராவது காலை 5.30க்கு வந்து தேவாரம் திருவாசகம் ஆண்டாள் பாசுரம் படிச்சா போதும் என்றே) அவர் உப்புமா, பொங்கல், அப்படின்னு வித்யாசமா போடுவார்.

எல்லாரும் முதலில் பந்தி. பின்ன ஆரம்பிச்சிடுவார்.
"சூடிக் கொடுத்தச் சுடர்கொடியே தொல்பாவைபாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீவேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்நாங்கடவா வண்ணமே நல்கு."
பின்னே அதல்லாம் முடிஞ்ச பின்னே அந்த கோவில்ல நட்டுமுட்டு ராஜ்யம் தான்.

நான் வளர வளர அவனும் வளர்ந்தான். ஆனா கூட அவன் தான் அர்தசாம பூசை மிருதங்கம். "டேய் உனக்கு என்ன தான் பிரச்சனை? எப்பதான் அவேம்பாவை நிம்மதியா தூங்க வைப்பே?"ன்னு கேட்டேன். அதுக்கு அவன் "எலேய் நான் பல வருஷம் அவேம்பாவை தூங்க வைக்க நட்டுமுட்டு அடிச்சுட்டேன். நான் சாவருத்துக்குள்ளே ஏ.கே. பி கூட சரிசமமா உட்காந்து தவில் வாசிக்கனும்"

எனக்கு சொரேர்ன்னு ஆகிடுச்சு. எங்க கோவில்ல அப்பதான் நவராத்திரி நடந்துகிட்டு இருந்துச்சு. 10 நாளும் செம கச்சேரி இருக்கும். அன்னிக்கு திருமிச்சூர் பசங்க நாதஸ்வரம், ஏ கே பி தவில், அவருக்கு இனையா டி ஏ கே . இது முடிவாகி பத்திரிக்கை எல்லாம் அடிச்ச பின்ன டி ஏ கே லண்டன் போயிட்டார் காரைக்குடி மணி குரூப் கூட.

ஏ கே பிக்கோ செம கோவம் வரும். உடனே கோவிலில் இருந்தே ஏ கே பி க்கு வலங்கைமானுக்கு போன் செஞ்சேன்.

"அண்ணே"

"சொல்லு தம்பி, கார் சொல்லிட்டேன் வந்துடுவேன்"

"அது இல்லைன்ணே"
"வேற என்ன"
"கலியமூர்த்தி அண்ணன் காரைகுடி மணி அய்யா கூட லண்டன் போயிட்டாரு"

"தெரியுமே"

"அதனால நான் வேற ஏற்பாடு பண்ணிட்டேன். உங்களை மாதிரி தாள கணக்கு வழக்குல 64, 74 ன்னு பின்னுவாரு. அவரை ஏற்பாடு பண்ணிட்டேன்"

"அப்ப சரி வந்துடறேன்"

உடனே நான் "அடேய் பல்லு வேலு நட்டுமுட்டை தூக்குடா ஆறுமுகம் சலூனுக்கு"ன்னு குரல் வீடும் போது பார்வதி குருக்கள் "டே கொழந்தே உன் விளையாட்டை ஏ கே பி கிட்ட வச்சிக்காத. உன் தோப்பனாருக்கு தெரிஞ்சா என்னை கடிச்சிடுவார்"ன்னு சொல்ல நான் "அய்யா எல்லாம் நான் பார்த்துக்கிறேன்"ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டோம்.

வீரசேகரவிலாஸ்க்கு எதிரே இருந்த ஆறுமுகம் சலூன்ல நாங்க 6 பேர். அவனுக்கு முடி வெட்டி (போண்டா மணி மாதிரி இருப்பான்) சிகப்பாக்கி உச்சிகால வேளைக்கு முன்ன கோவில் கொண்டு வந்து திருகுளத்தில் குளிக்க வச்சி பட்டை சோறு கொண்டு வந்து குடுத்து தூங்குடான்னு சொல்லிட்டு வீட்டுக்கு ஓடிட்டேன்.

வேற எதுக்கு பட்டு வேட்டி வேணுமே. நல்லா நாலு இஞ்சி கரை உள்ள மயில்கண் பட்டு வேட்டி எடுத்துகிட்டு பார்வதி குருக்கள் வீட்டுக்கு வந்து "அய்யா அப்பா கிட்ட துண்டு இல்லை, நல்ல மயில் கண் துண்டு தாங்க அப்படியே உங்க அத்தர் பாட்டிலயும் தாங்க"ன்னு கேட்டு வாங்கிட்டு ஓடி வந்து கோவில்ல குடுத்துட்டு என் மத்த பொறுப்பை மத்த அல்லகைல விட்டுட்டு ஏ கே பி யை கூட்டிகிட்டு வர போயிட்டேன்.

வீட்டுக்கு போனா ஏ கே பி பஜ்ஜியும் தேங்கா சட்னியும் சாப்பிட்டுகிட்டு இருக்காரு."தம்பி வா! நான் ஒரு மணி நேரம் தூங்கிட்டு வரேன் கோவிலுக்கு "அப்படின்னு சொல்லிட்டு தூங்கிட்டார்.

ஆச்சு இரவு 7 மணி. சியாமளாதேவி கோவில்ல செம கூட்டம். ஏன்னா திருமிச்சூர் பசங்க நாதஸ்வரம், ஏ கே பி, டி ஏ கே தவில்ன்னு. டி ஏ கே லண்டன் போயாச்சாம் லண்டண் போயாச்சாம்ன்னு ஒரே கிசு கிசுன்னு பேச்சு.

எப்போதும் ஏ கே பி உட்காரும் போது ஒரே அப்ளாஸ் தான். ஆனா எங்க குரூப் சொன்ன மாதிரி யாரும் கை தட்டலை. வந்தாரு நம்ம நட்டுமுட்டு. வரும் போதே ஒரே அப்ளாஸ். எங்க அப்பாவின் மயில்கண் வேட்டியும், பார்வதி குருக்களின் துண்டும் ஆறுமுகம் முடிவெட்டும் நட்டுமுட்டுவை பெரிய ரேஞ்சுக்கு மாத்தியிருந்துச்சு.அப்ப கூட பார்வதி குருக்கள் "அம்பி வேண்டாம், கண்ணன் கொஞ்சமாவது ஒப்பேத்துவான் அவனை வாசிக்க சொல்லு"ன்னு சொன்னதுக்கு நான் ஒத்துக்கலை.

நம்ம நட்டுமுட்டு வந்து உட்காந்ததும் செம கைதட்டல். ஏ.கே. பழனிவேல் அசந்து போயிட்டார். வாய் குழைய வெத்தலை வேற. முதலில் சும்மா தட்டிகிட்டு இருந்தான். ராகம் கீர்தனைக்கு சமாளிக்க முடியாதா என்ன?

பின்ன தனி ஆவர்த்தனம் வந்துச்சு. எப்பவும் பழனிவேல் தான் ஆரம்பிப்பார். அவர் வாசிப்பதை தான் மத்தவங்க வாசிக்கனும். ஆனா நாங்க சொன்ன மாதிரி நம்ம நட்டுமுட்டு ஆரம்பிச்சிடுச்சு.

பழனிவேலுக்கோ கோவம்+ ஆச்சர்யம். ஒருவேளை தன்னை விட பெரிய ஆளா இருப்பாரோன்னு.

நட் முட் நட் முட்

நட் முட் நட் முட்

ஐந்து நிமிஷம் இதே தான் ஓடிகிட்டு இருக்கு. பழனிவேல் கூட "இவரு பெரிய ஆள் போல இருக்கு. நம்மையே சுத்தி விடுராறே"ன்னு ஆச்சர்யம். அப்ப் தான் நட்டுமுட்டு கவுத்துட்டான். டபார்ன்னு எழுந்து பழனிவேல் கால்ல சாஷ்டாங்கமா விழுந்துட்டான்.

அத்தோட நான் ஓடிட்டேன். கம்மினாட்டி அந்த மயில்கண் வேட்டிய கொடுக்கவே இல்லை.

பின்னே என் கல்யாணத்துக்கு கத்ரிகோபால்நாத் கூட வாசிக்க வரும் போது ஏ.கே பழனிவேல் இந்த நிகழ்சியை மைக்கில் சொல்லி மகிழ்ந்தார்!

19 comments:

 1. மீ த பர்ஸ்டேய்ய்ய் !


  நட்டுவுக்கு பர்த்டே வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 2. :) அண்ணாச்சி... ரெஸ்ட் எடுத்துக்கோங்க. படிக்கறதோட நிறுத்திக்கோங்க. எழுதறதெல்லாம் அப்புறம். உடம்பு சரியாகட்டுமே ப்ளீஸ்

  ReplyDelete
 3. நல்ல அருமையான நினைவுகள் .... உடம்பு சுகமாயிடுச்ச்சா ?...

  ReplyDelete
 4. உடம்பை பார்த்துக்குங்க அபி அப்பா.

  ரெஸ்ட் எடுக்கறப்ப அருமையான நினைவுகளைத்தான் அசை போட்டிருக்கீங்க...

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  ReplyDelete
 5. இந்த நேரத்துலேயும் இவ்ளோ கஷ்டப்பட்டு இப்படி பதிவு போடணுமா..?

  கம்முன்னு அடங்கியிருக்க மாட்டீங்க..!

  ReplyDelete
 6. நட்டுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  விரைவில் பூரண நலம் பெற்றிட my prayers.

  ரொம்ப நல்லா அபி அப்பா டச்சோட இருக்கு.

  அன்புடன்
  மாசற்ற கொடி

  ReplyDelete
 7. உடம்பு எப்படி இருக்கு அண்ணே

  இப்ப பரவாயில்லையா

  ReplyDelete
 8. ஆஹா...

  என்னே ஒரு புனைவு...

  கலக்கீட்டீங்க தம்பி...

  ReplyDelete
 9. நினைவுகளின் அழகான பதிவு அருமை
  நட்டு முட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

  உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

  அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

  ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

  ReplyDelete
 11. நட்டுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. என்ற தம்பி நட்டுக்கு பிறந்தநாள் பதிவப் போடுங்கன்னா, இப்டியா பதிவு போடுவீங்க நீங்க?

  இருந்தாலும் நட்டு முட்டு கதை சூப்பரா இருந்துச்சு சித்தப்பா.

  ReplyDelete
 13. உடம்பு பரவாயில்லையா அண்ணா  நட்டுவுக்கு பர்த்டே வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. எனது அண்ணனுக்கு உடல் நலமடைய நட்டுமுட்டுடன் அன்னை அவயாம்பா கிட்ட வேண்டிக்கிறேன்......!!!!

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 16. நட்டுவுக்கு வாழ்த்துக்கள்.

  உடம்பு நல்லாயிருக்கா அபிஅப்பா?
  போன் செஞ்சேன், எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். ஊருக்கு கிளம்பிட்டதால சேரல போல.

  ReplyDelete
 17. அருமையான நினைவுகளை அழகாகக் கொடுத்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 18. அபி அப்பா. உடல் நலம் எப்படி இருக்கு. நட்ராஜுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
  ஊருக்கு வந்திட்டீங்களா.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))