பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 30, 2008

வீரசேகரவிலாஸும், மாமாவும், சீட்டு கச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்!!! பாகம் # 4

இந்த பதிவின் 3ம் பாகத்தை இங்க போய் படிச்சுட்டு பின்ன இங்க வாங்க!
இதோ எல்லோரும் பெருமாள் கோவில் போயாச்சு. சமையல் ஆட்களும், சில்லரை சில்லரையாக சில ஆட்களும் மண்டபத்தில் ஆங்காங்கே இருக்க எல்லார் சூட்கேசையும் பார்த்துக்கும் சித்தியும், சித்திக்கு துணையாக 3 பாட்டிகளும், பாட்டிக்கு துணையாக மணி அண்ணனும் சத்திரத்தின் மூன்றாம் கட்டில் இருக்க, முதல் கட்டில் அதாவது திண்ணையில் மாமாவின் கச்சேரி யார் தொல்லையும் இல்லாமல் களைகட்டியது. அத்தை மாத்திரம் பெருமாள் கோவில் போகாமல் அடுத்த நாள் இரவுக்கு மாப்பிள்ளைக்கு திரட்டிப்பால் எப்படி செய்வது என பெண்ணின் அத்தைக்கு டியூஷன் எடுத்துகிட்டு இருந்தாங்க.

"மூணு லிட்டர் நல்ல பசும்பாலா தண்ணி ஊத்தாம நல்லத்துகுடி கார்காத்தாரு புள்ள வீட்டுல இருந்து கொண்டு வர சொல்லியிருக்கேன். அதை நீ என்ன பண்ற சாயந்திரம் ஆறு மணிக்கு எல்லாம் குமட்டி அடுப்பிலே வெங்கல பால் சட்டியிலே வச்சிடனும்...."

அப்போது சத்திரத்து வாசல்ல சர்ர்ர்ர்ன்னு வந்து சைக்கிளை ஸ்டாண்டு கூட போடாமல் படியில் சாத்தி வச்சுட்டு ஓடி வந்து "அத்தே அத்தே"ன்னு கூவிகிட்டு மேலே வருவது ஒரு அண்ணன். பேர் சிவாஜி. மாமாவை தாண்டும் போதே மாமா "என்னடா மழை தூரல் போடுதா, அதுக்கு அத்தையை கூப்பிட வந்தியா? ஆகா ஜாம் பஜார் ஜக்கு நீ சைதாப்பேட்டை கொக்கு, எனக்கு ராணி இஸ்பேர்டு வேணும்ன்னு எப்புடிய்யா தெரியும், டேய் அத்தை மூணாம் கட்டிலே மாப்ளக்கி தெரட்டி பாலு செய்ய டிவிசன் எடுத்துகிட்டு இருக்கும் பாரு" மாமா இப்படித்தான் உக்காந்த இடத்திலே இருந்தே பெருமாள் கோவில் வாசல்ல என்ன நடக்கும், அத்தை இந்நேரம் என்ன செய்வாங்க, பரபரப்போடு வந்தவனின் செய்தி என்னவா இருக்கும் இத்தனைக்கும் நடுவே ராணி இஸ்பேர்டை போட்டுவிட்ட ஜக்கய்யருக்கு கவுண்ட்டர் கொடுத்துகிட்டு எனக்கு கொஞ்சம் பிரமிப்பா தான் இருக்கும் அது போன்ற நேரத்திலே எல்லாம்.

சிவாஜி அண்ணன் நேரே போய் "அத்தே, தூரல் போடுதாம், அம்மா உங்களை உடனே கூப்பிட்டு வர சொல்லுச்சு" என்றதும் அத்தை "அட அத்தை இருக்கும் போது பேய வுட்டுடுவனா களம்புடா ராசா நா இருக்கேன், மணி சீக்கிரம் ஓடியா அஞ்சு தேங்காய எடுத்துட்டு வா, அப்புடியே மஞ்ச தூளை எடுத்துட்டு வா, ஒரு பித்தளை தாம்பாளம் எடு, அந்த இட்லி துணியிலே கொஞ்சம் கிழிச்சு அதை மஞ்ச கரச்சு நனச்சு குடு. ஒரு ரெண்டு ரூவா துட்டும் ஒரு நாலணா துட்டும் குடு" பரபரன்னு அத்தையின் கட்டளைகள் நிறைவேற்றப்பட்டு விடும் மணி அண்ணனால்.

அத்தை தேங்காயில் மஞ்சள் தடவி தாம்பாளத்தில் வைத்து சாமி படத்துக்கு கீழே வைத்துவிட்டு, பின்னே மஞ்சள் துணியில் ஒண்ணேகால் ரூபாய் துட்டு வைத்து முடிச்சு போட்டு "டேய் தம்பி சைக்கிள்ல தான வந்த ஓடி போய் காளியம்மன் கோவில்ல வீரன் கிட்ட அத்தை படி கட்டினேன்னு சத்தமா சொல்லி அது கால்ல வச்சிட்டு ஓடியா, நான் அரக்காஸ் அம்மாவுக்கு ஒரு ரூவாயை போட்டுட்டு பெருமாள் கோவிலுக்கு போறேன்"ன்னு சொல்லிட்டு முதல் கட்டிலே இருக்கும் மாமா கோஷ்டியிடம் "தம்பி வசந்தி உள்ள தனியா இருக்கா, ஒரு கண்ணு வச்சுக்க, தோ வந்துட்டேன்"ன்னு சொல்லிட்டு முதல் படியிலே நின்னு கச்சேரி பிள்ளையாரை பார்த்து தன் வலது புறங்கையை அடிமுதுகிலும், இடது கை விரல்களை சோடாபுட்டி கண்ணாடிக்கு ஷேட்(shade) மாதிரி வைத்தும் மழை வருதா என பார்த்துவிட்டு கீழே இறங்கிய போது மழை நின்னு போயிருந்தது.

அத்தை போகும் போதே அருணாசல அய்யர் கடையிலே நின்னு ஒரு லுக் விட அய்யர் "வாங்க அத்தே பொண் அழப்புக்கா" என கூற
"ஆமா அய்யா, பூக்கடை வரதனுக்கு ஒரு போனை போட்டு ராத்திரி பத்துக்கு மேல முகூர்த்த மாலை அனுப்பினா போதும்னு சொல்லிடுங்க. மாலை கழுத்திலே மூங்கி சிம்பு கம்மியா வக்க சொல்லுங்க, செண்டு சுத்த எலுமிச்சங்காய் போதும், ஆப்பிளு கீப்பிளு வேணாம்ன்னு சொல்லுங்க, பொண்ணுக்கு சோத்தை போட்டு வளக்கல, காமிச்சு தான் வளத்துருக்காங்க, ஆப்பிள் செண்டு தூக்க ஆளு வைப்பா போல இருக்கு அவ அம்மாகாரி" என சொல்ல அதற்கு அய்யர்
"இருங்க அத்தே சுத்தி தாரேன் நீங்களே சொல்லிடுங்க என சொல்லி 0ஐ சுத்த (அப்போ 0 சுத்தனும்,எக்ஸ்சேஞ்சிலே இருந்து என்ன நம்பர் வேணும்ன்னு கேப்பாங்க, வெறும் 3 டிஜிட் தான் நம்பர் ) அத்தையோ
"அய்யோ எனக்கு காதுல வக்கிறது எதுன்னு நீங்க பாடம் படிக்கிறதுக்குள்ள மாலை வந்து சேந்துடும். நீங்களே சொல்லிடுங்க, மணி நாலனா கொண்டு வந்து குடுப்பான் போனுக்கு" என சொல்ல அதற்கு அய்யர்
"அத்தே மணி அஞ்சு கிலோ ரவை வாங்கிட்டு போனான்" என்றார். அதற்கு அத்தை
"சரிய்யா, ரோக்காவுல சேத்துடுங்க அதையும்"ன்னு சொல்லி அரக்காஸ் அம்மா தர்காவுக்கு நடையை கட்டினாங்க. அது யார் அரகாசுஅம்மா? "ஹஜ்ரத் கன்ஷா வாஈ வலியுல்லாஹ் " என அங்கே போட்டிருக்கும். அந்த தர்கா முனிசிபாலிட்டி வாசலில் இருக்கு. அங்கே அடக்கம் ஆகியிருப்பது ஆணா, பெண்ணா என யாருக்கும் சரியா தெரியாவிட்டாலும் அது என்னவோ இந்துக்களை பொருத்தவரை "அரகாசு அம்மா" தான். வியாழன் இரவு அந்த வழியா வந்தா வத்திசாய்பு சாம்பிரானி போட்டு கொஞ்சம் நாட்டு சர்கரை தருவார். (பத்தி வியாபாரம் செய்ததால் அவர் வத்திசாயுபு ஆகிட்டார்)
இங்கே பெருமாள் கோவில் வாசல்ல இதோ வந்து நிக்குதே சிகப்பு பிளைமுத் கார். அதன் ஓட்டுனர்(கம்)ஓனர் மணி முதலியார் ஏதோ போய் நாயனகாரர் கிட்டே என்னவோ பேசறார் பாருங்க. கிட்ட போய் என்னான்னு கேப்போம்.

"என்ன திருகோடிகாவலாரே, எனக்கு ஒரு உபகாரம் பண்ணனுமே"

"மொதலியாரே நீர் என்ன கேக்க போறன்னு தெரியும்ய்யா, நானு நேத்து சீனிவாசா சத்தரத்தில இருந்து லோல் படுறேன். சட்டுபுட்டுன்னு இழுத்துட்டு போய் சேர்க்க சொல்ல வர்ர அதானே"

"ஆமா புள்ள எனக்கு அடுத்து கொரநாட்டுல ஒரு அழைப்பு இருக்கு, எதுனா செய்யனுமே"

இப்படியாக அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே அத்தை அங்கு ஆஜர். ஒத்தபைசா சாக்லெட் தட்டை ஒரு சித்தி எடுத்துகொள்ள நான் எனக்கு கண்டிப்பாக ஜானவாச காரில் இடம் கிடைக்காது என பட்ஷி சொன்னதால் சாக்லெட் சித்தி கையை பிடித்து கொண்டேன். மெதுவா பொண்ணு காரில் ஏறியதும் நாதஸ்வரகாரர் தன்னை ராஜரத்தினம் பிள்ளை மாதிரி மனசிலே நினத்து கொண்டு தோடியை லயிச்சு வாசிச்சு, ராகத்தை ஆலாபனை செய்யும் போதல்லாம் தவில் "ஆமாம் ஆமாம்" என்பது போல ஒரு சின்ன சின்ன தட்டு கிட்டதட்ட அது ஷொட்டு மாதிரி, பின்னே ரெட்டை நாயனம் ஆலாபனை பண்ணி பின்பு கீர்த்தனைக்கு தாவி சுருள் விடும் போது விரலடி ஸ்பீடு பத்தாமல் பிசிறு தட்டியது. (பிருகா தான் தஞ்சை பாஷையில் சுருள்விடுவது என செல்லமாக அழைக்கப்படும்)

இப்போ தெர்மாஸ் விளக்கு குரூப் பத்தி சொல்ல வேண்டும். அதிலே ஒரு சின்ன பெண் என்றேனே அது வைத்திருந்த லைட் எறியவில்லை. ஒரு கணக்குக்காக அந்த பெண் போலிருக்கு. அத்தை அதை கவனிச்சாச்சு. கண்டிப்பா ஒன்பது லைட்டுக்கு தான் காசு தர போறாங்க.

அந்த பக்கிரிசாமி பக்கத்திலே ஒரே பழரச நாத்தம். அழுக்கு வேட்டியை மடிச்சு கட்டிகிட்டு, ஒரு துண்டை இடுப்பிலே கட்டிகிட்டு வெற்று உடம்போடு,வெற்றிலையை வாயில் அடக்கி கொண்டு ஒரு சும்மாடு தலையில் வைத்து அதன் மேல் அழகாக அந்த பெட்ரோமாஸ் "உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என ஒரு வித சுருதியோடு அந்த சுருதி நூறு சதம் நாதஸ்வர கோஷ்டியின் சுருதி பெட்டியின் சுருதியோடு ஒத்து போனது. கொஞ்சம் சுருதி பிசகினால் பக்கிரிசாமி தன் கையை உயர்தி அந்த விளக்கின் பித்தளை வயிற்றை தடவி காற்றை கொஞ்சமாக பிடுங்கி விட்டோ அல்லது கீழே இறக்கி காற்றை அடித்து கொண்டோ சுருதி சேர்த்து கொண்டிருந்தது எனக்கு ஆச்சர்யமாக பட்டது. அதற்கான விடை ராத்திரி 11 மணிக்கு எனக்கு தெரிந்தது. பக்கிரிசாமி தன் ஒரு காலை கொஞ்சமா மடக்கி கொண்டு இரண்டு கைகளையும் முதுகில் கட்டி கொண்டு தலை விளக்கை பிடிக்காமல் கண்ணை மூடி கொண்டு தோடியில் லயிச்சு போய் நிற்கிறாரா அல்லது பழரச போதையா என எனக்கு தெரியவில்லை. ஆனால் சுருள் விடும் போது பிசிறு தட்டும் போது கொஞ்சம் முகம் சுளித்தார். கொசு கடித்திருக்கும் என நினைத்து கொண்டேன்.

இப்போது வரிசை தட்டை தூக்கி கொண்டு வரும் பெண்கள் கூட்டத்துகுள் நுழைவோம்.

"சுலோச்சனா அங்க பாரு பொண்ணோட சித்தியாம் அது, பெங்களூருல கட்டி கொடுத்து இருக்காங்கலாம், வேற பாசையில பேசுறா அவ பசங்க கிட்ட"
"ஆமா அத்தான் கூட ஒரு தடவ அந்த ஊரு போயிருக்காங்க, அவ ஜரிகைய பாத்தியா குன்னக்குடி துன்னூரு மாதிரி"

"மீனாச்சியத்தே, நீங்க இந்த தட்டை தூக்கிகுங்க, அந்த நாலாம் நம்பர் பஸ்ல உக்காந்து இருக்கிறவன் எல்லாம் இங்கயே பாக்குறானுங்க, எனக்கு மானமே போவுது, என் காலேஜ்ல படிக்கிரவ எவலாவது பார்த்துட போறா" ஒரு பியூசி அக்கா இது!
"பஸ்ஸிலே உக்காந்திருக்கிறவன் பாக்குறது உனக்கு எப்படி தெரியும்"-இது ஒருஅத்தை!

"அக்கா மணி இப்பவே எட்டு ஆச்சு, சத்தரத்துக்கு போவ மணி ஒம்போது ஆவும். சீக்கிரமா ராஜேந்திரங்கிட்ட காச குடுத்து பேர்லஸ்ல ஊட்டி வர ஒரவுக்கு டிக்கெட் வாங்க சொல்லு, சும்மா கூட்டத்த சேக்காத நீ, நா, கல்லங்குடி, திருகண்டீஸ்வரம்,தொனைக்கு அய்யம்பேட்டை சரோஜா மட்டும் போதும்"

"நல்லா இருக்குமான்னு தெரியலையே"

"அட போக்கா கேயார்விசயா ஒரு பாட்டுக்கு சிவாஜிக்கு தெரியாம தகதகன்னு பொடவைல விலுக்கு விலுக்குன்னு ஆடுதாம். ஆனா சிவாஜி சிசர் குடிச்சிகிட்டு பாத்துகிட்டே இருப்பாராம்,தந்தியாபீசரு மருமவ சொன்னுச்சு"

"மாமி வழுக்கிவுழுந்தப்ப எனக்கு சிரிப்பு வந்துடுச்சு, அடக்கிகிட்டு நல்லா வேணும்னு நெனச்சுகிட்டேன்"-இது ஒரு மருமகள்.

"அங்க பாருடீ அந்த பிடி டீச்சர் போவுது, லீவு போட்டதுக்கு வேப்பல ஆட்ட போவுது நாலன்னக்கி"-இது ஒன்பதாவது படிக்கும் அத்தை பொண்ணு!

"அங்க பாரு கணவனே கண்கண்ட தெய்வம் வருது, இந்தா டக்குன்னு திரும்பாத மெதுவா திரும்பி பாரு"-கிண்டல் புடிச்ச மாமி!

"பாலகுரு புள்ள கடையில இன்னிக்கு பெசல் அடையும் அவியலுமாம், வாடி உள்ள போயி ஒரு கட்டு கட்டுவோம்"(சொல்லிட்டு கெக்கேபிக்கேன்னு ஒரு சிரிப்பு)-யாரோ தெரியலை!

"பொண்ணுக்கு இப்பவே வேர்க்குது நாளக்கி இந்நேரம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்"
"ந்தா ச்சீ வெவஸ்தயே இல்லாம பேசாத, நடுமாமி திரும்புது பாரு அதுக்கு எலி காது"-மருமகள்கள்
"நா அப்பவே சொன்னேங் கேட்டியா இந்த கும்மோணத்துகாரி மத்தவளையும் கெடுத்துபுடுவான்னு நீ தான் ஒலகத்துல இல்லாத அழகியா எம்புள்ளைக்கு வேணும்ன்னு கட்டிகிட்டு வந்த, குடும்பஸ்தி மாதிரியா பேசுறா, காதுகிட்ட மசுர சுருள் விட்டுருக்கா பாத்தியா, இழுத்து வச்சி அறுக்காம விட்டிருக்க நீ"-இது முன் வரிசை பாட்டி!"

"அத்தாச்சி இந்த தட்டையும் கொஞ்சம் பிடிச்சுகுங்க தோ கமலாகாபி வந்துடுச்சு, நா போயி நூறு பீபரி வாங்க்யாறேன், நாளக்கி கல்யாணம் முடிஞ்ச கையோட வீட்டுக்கு தான் வரும் கூட்டம் எல்லாமே"இது அம்மா!

இதோ சத்திரம் வந்தாச்சு! பெட்ரோமாஸ் விளக்கு எல்லாம் இறக்கி வச்சாச்சு. ஆரத்தி எடுக்கப்பட்டு எல்லாரும் வரிசையா உள்ளே போக எப்போதும் போல வழுவூர் சம்முகம் நியூ கொழும்பு பையை இடுப்பிலே இருந்து உருவுரார் செருப்பை அதில் போட்டுகிட்டு பந்திக்கு போக.
தொடரும்.....................

December 29, 2008

"வீரசேகரவிலாஸும், மாமாவும், சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்"- பாகம் # 3

"வீரசேகரவிலாஸும், மாமாவும், சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்"- பாகம் # 2 ஐ படித்துவிட்டு இந்த 3ம்பாகத்தை படிக்கவும்!

***********************************


மாமா சிதறு காய் விட்டுட்டு அந்த வீரசேகரவிலாஸ் கருங்கல் படி ஏறி மேல் படியில் நின்று கிழக்கே பார்த்து "காளியாயி"ன்னு கும்பிட்டு கிழக்கே பார்த்து கச்சேரி பிள்ளையாரை கும்பிட்டு உள்ளே போய் முதலில் இருக்கும் தொட்டி முற்றத்தில் இறங்கி தண்ணீர் குழாயில் காலை கழுவி கொண்டிருக்கும் போதே பெண்ணை அழைத்து கொண்டு எல்லோரும் உள்ளே போனார்கள். முதலில் அந்த திண்ணை வரை தானே சொல்லியிருந்தேன். இப்போது அந்த திண்ணையை தாண்டி அந்த மிக பெரிய படாக்கு மரத்தில் (ரோஸ் வுட்) செய்த வேலைப்பாடு அதிகம் கொண்ட நிலைப்படியை தாண்டி அத்தையின் தலைமையில் உள்ளே சென்றனர். நிலைப்படியை அடுத்து உள்ளே இருப்பது அந்த பெரிய சத்திரத்தின் ஹால். வலது திண்ணை இடது திண்ணை இரண்டின் நீளமும் சேர்த்த நீளம்தான். ஆனால் அகலம் திண்ணையின் அளவை விட கொஞ்சம் பெரியது. அதன் கிழக்கும் மேற்குமாக இரண்டு மர அலமாரிகள் சுவற்றில் புதைக்க பட்டிருக்கும். அலமாரியின் இரண்டு பக்கமும் தன் நீண்ட தோகையை கீழ் பக்கமாக தொங்கவிட்ட படியான, ஒன்றை ஒன்று பார்த்த மாதிரி சலவைக்கல்லால் செய்யப்பட்ட மயில் பதிக்கபட்டிருக்கும். அதை அந்த தோகையை தடவி பார்ப்பது என்னவோ எனக்கு அப்படி ஒரு சந்தோஷமாக இருக்கும். எனக்கு மட்டும் இல்லை கொஞ்சம் பிராயமானவர்களும் கூட தடவி பார்த்து விட்டு "என்ன ஒரு வேலைப்பாடு" என சொல்லிக்கொள்வர்.


அந்த ஹாலின் நடுநாயகமாக ஒரு செட்டியார்வீட்டு ஆச்சி ஒரு அழகிய வேலைப்பாடு அமைந்த நாற்காலியில் அட்டானிகால் போட்டு அமர்ந்து இருக்க ஆச்சியின் பின்னால் அவங்க வீட்டு செட்டியார் நாற்காலியில் கைவைத்து நின்று கொண்டிருக்கும் அழகிய கருப்பு வெள்ளை படம் வரைந்து படாக்கு மர பிரேம் போட்டு பிரம்மாண்டமாய் மாட்டப்பட்டிருக்கும். ஆச்சியின் கழுத்தில் குறைந்தது ஒரு கிலோ நகை இருக்கும். ஆச்சி அத்தனை ஒரு அழகுன்னு சொல்ல முடியாது. நிறமும் கருப்புதான். ஆனால் முகத்திலே லெஷ்மி குத்தவச்சி தாயம் ஆடி கொண்டிருக்கும். அந்த ஆச்சியின் நகையை பார்த்து கண்வைக்காத எம்குல பெண்டிரே இல்லை. ஆச்சியின் போட்டொவை பார்க்கும் என் பெரியம்மா, அத்தை வகையறாக்கள் அவங்க அவங்க வீட்டுகாரரை பார்க்கும் தொணி இருக்கே "என்னங்க நாம இப்படி ஒரு போட்டோ எடுத்துக்க கூடாதா" என கேட்பது போலவும், அதற்கு அந்த கனவன்மார்கள் "ஆச்சிக்கு ஆயிரம் சவரனும், ஆயிரம் ஜன்னல் வச்ச வீடும், சிவகங்கை சீமையிலே ஆயிரம் ஏக்கரா மல்லிகை தோட்டமும் சீதனமா எழுதி வச்சாரு அவங்க அப்பாரு அனா ரூனா லேனா செட்டியாரு. எனக்கும் அப்படி எழுதி வச்சா நான் காலடியில இல்ல குந்தி இருப்பேன்" என பதில் சொல்வது போலவுமே எனக்கு தோன்றும்.

அதே ஹாலில் ஒரு மரத்தால் ஆன மாடிப்படி,கைப்பிடியோடு இருக்கும். அதன் மேலே ஏறினால் அந்த ஹாலின் மேலே சுற்றியும் இருக்கும் கலர் கண்ணாடி பதிக்கப்பட்ட பதினாறு ஜன்னல்கள் இருக்கும். அதன் வழியே பார்த்தால் அந்த ஹாலில் நடைபெறும் விஷேஷத்தை பார்க்கலாம். ஆனால் கல்யாணம் அங்கே நடத்துவதுஇல்லை. கல்யாணம் அந்த ஹாலின் அடுத்து உள்ளே நுழைந்தால் வருமே ஒரு முற்றம்,அங்கே தான் நடக்கும்.
ஹாலை கடந்து போனால் நேரிடையாக வடக்கு தாழ்வாரம். அடுத்து முற்றம். அதிலே தான் கல்யாணம் நடக்கும். அந்த முற்றத்தை சுற்றியும் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு தாழ்வாரம். மேற்கு தாழ்வாரத்தை அடுத்து ஒரு கல்யாண கூடம் இருக்கும். மேற்கு கூடத்தின் ஒரு முனையில் மணமகன் அறை. அது கொஞ்சம் பெரியது. கிழக்கு தாழ்வாரத்தின் ஒரு முனையில் மணமகள் அறை. அது அதை விட கொஞ்சம் சிறியது. (இங்கயும் ஆணியம் பாருங்கள்)
இதோ மணி அண்ணன் விரித்து வைத்த ஜமுக்காளம் எல்லா இடத்தையும் நிரப்ப மணமகள் அதன் ரூமுக்கு வந்தாச்சு.


மாமாவின் சீட்டு கச்சேரி குரூப் இருக்கே ரொம்ப வித்யாசமானது. திருக்கடையூர் முரளி(அப்போது மாமாவின் சீட்டு கச்சேரியில் வயது குறைந்தவர்), திருநாகேஸ்வரம் சுப்புனி, கும்மோணம் பஞ்சாமய்யர் ரெண்டாவது பையன் மீசைகாரர் ஜெயராமன், பரசலூர் ஜக்கய்யர், திருபுங்கூர் ராமசுப்பு இவர்கள் நிரந்தர பக்க வாத்தியம். இடையிடையே சில ஊர் பெரிய மனுஷங்க, சமையல் மணிஅய்யர், நாதஸ்வரம் சிவபுரி பத்மநாபன், வாயில் எச்சில் ஒழுகும் சு(ரு)தி பெட்டி தெட்ஷா இவங்க எல்லாம் கௌரவ ஆர்டிஸ்ட் வகையறா. இதிலே டிரான்சிட் பிளேயர்ஸ்ம் உண்டு.


மாமாவின் சீட்டு கச்சேரி குரூப் இருக்கே அது சாதி, மதம் கடந்தது. ஆரிய திராவிடம் கடந்தது, ஏழை, பணக்காரன் கடந்தது, உயர்ந்த, தாழ்ந்த வித்யாசம் கடந்தது, உயர் பதவி, தாழ்ந்த பதவி கடந்தது. பெரிய வித்வானும், அவரின் வெற்றிலை எச்சில் படிகம் தூக்குபவனும் இங்கே சமம், பெரிய சமையல் காரரும், பந்தி பரிமாறும் அவரின் வேலைக்காரனும் சமம், ஊர் பெரிய மனுஷனும் அவர்களுக்கு சமம். உண்மையான சோஷலிஷத்தை அங்கே தான் காணலாம். இத்தனை மணிக்கு சீட்டு கச்சேரி ஆரம்பம், இத்தனை மணிக்கு பிரேக், இத்தனை மணிக்கு முடியும், அடுத்த கச்சேரி இந்த இடத்தில் என எந்த ஒரு அஜண்ட்டாவும் கிடையாது.புதிது புதிதாக ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எழுதி வைத்து பின்பற்றுவது கிடையாது. நோட்டு புத்தகத்தில் பாயிண்ட் குறித்து வைத்துகொள்வதோ எதுவும் கிடையாது. எல்லாம் ஒரு கார்ப்பரேட் கம்பனி நேர்த்தியுடன் தானாக நடக்கும்.
இதோ மாமா கிழக்கு பக்கமாக இருக்கும் திண்ணையை(ரவிசாஸ்திரி பிட்சை பார்ப்பது போல) ஒரு நோட்டம் விடுகிறார். அப்போதே திருக்கடையூர் முரளி, சுப்புனி இருவரும் ஆஜர். ஆனால் ஒருவருக்கு ஒருவர் வாங்க. எப்படி இருக்கீங்க என்பன போன்ற சம்பாஷனையில் தொடங்காமல் ஏதோ ஒரு மணி நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு விட்ட இடத்தில் தொடருவது போல பேச்சை தொடங்குவார்கள். ஆனால் அவர்கள் காரியம் சீட்டு கச்சேரியை தொடங்க ஆயத்தப்படுத்தும் மும்முரத்தில் இருக்கும்.
"தெட்ஷாவுக்கு அம்பாபாயிலே தானே இன்னிக்கு கச்சேரி, யாரு நாயனம் அவனுக்கு"
கவனிக்கவும் தெட்ஷா ஒரு சுருதிபெட்டி ஆள். எந்த நாயனத்துக்கு தெட்ஷா சுதிபெட்டின்னு கேக்கலை. தெட்ஷாவுக்கு யாரு நாயனம் என கேட்டால் என்ன அர்த்தம். மாமாவுக்கு அப்போது முக்கியம் தெட்ஷா தான்.
முரளி அதுக்கு "அதுவா மாமா, மாப்பிள்ளை அழைப்புக்கு மழை வரனும்னு வேண்டிப்பாரே ஆச்சாள்புரம் பெரியதம்பியண்ணே அவருதான். மழை வருதோ இல்லியோ தெட்ஷா பத்து மணிக்கு வந்துடுவாரு"


மாமாவுக்கு அந்த கீழாண்ட திண்ணையிலே கடைசி தூண் தான் சரி படும். காலை தொங்கவிட்டுக்கலாம். தூணில் சாஞ்சுக்கலாம். வெற்றிலையை குறி பார்த்து தொட்டி முற்றத்தில் துப்பலாம். எழுந்து ஒண்ணுக்கு போகனும்ன்னா மத்த பிளேயர்சை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். மேலும் மாமாவுக்கு உருவமும் கொஞ்சம் பெரிசு.


மாமா தன் இடத்துக்கு போய் உக்காந்த உடனே "டேய் பசங்களா புருஷோத்தம்மன் டைலர் கடைக்கு போயி திருவமழை மாமா வந்திருக்கேன்னு சொல்லுங்கடா" என்பார்.
நானோ யாரோ ஒரு பொடியனோ ஓடி போய் சொன்னவுடன் "திருவமழை தம்பி வந்தாச்சா, இந்தா இந்தா தலவாணி, ஆனா நீதான் நாளைக்கு ஞாபகமா திருப்பி தரனும்"ன்னு சொல்லி தன் அடியில் இருக்கும் தலையனையை எடுத்து தருவார்.


மாமா அதை அழகாக தூணில் சாய்த்து தான் அதன் மேல் சாய்ந்து கொண்டிருக்கும் போதே மணி அண்ணன் மாமாவிடம் வருவார்.
"வா மணியண்ணே! மணியய்யர் வந்துட்டாரா"
"இல்ல தம்பி இப்ப வந்துடுவாரு. அவரு அடிபொடி எல்லாம் அடுப்ப பத்தவச்சிட்டானுங்க. பாலு வந்துடுச்சு சொர்ர தெர்தா . டிக்காஷன் ரெடியாயிடுச்சு. வெத்தலைய போடாத தம்பி, இப்ப காபி அனுப்பறேன். மணியய்யர உச்சிகாலத்துக்கு வரசொன்னா சாயரட்ஷைக்கு தான வருவாரு, சொர்ர தெர்தா"
"நல்ல வேள சாயரஷைக்கு வர சொல்லாம இருந்தீங்களே, பின்ன அர்த்தசாமத்துக்கு தான வருவாரு சொர்ர தெர்தா...தோ வந்துட்டாரு, வாங்க அய்யரே"
"அட அட அட திருவமழ புள்ள வந்தா தான் கல்யாண களை கட்டுது, சித்த இருங்கோ, உளுத்த மாவு போண்டாவும், கெட்டி சட்னியும் அனுப்பறேன், ஆமா புள்ள கும்மோணம் யானையடியில..."


"சுப்புனி, ஆதிதாளம் இருக்கே அது தொடையில தட்டி போட சொகமா இருக்கும் சும்மா வாணிஸ்ரீ மாதிரி, ஆனா கண்டசாபு தாளம் இருக்கே டி.ஆர்.ராஜகுமாரி மாதிரி திமிர் புடிச்சது"மாமா சம்மந்தமே இல்லாமல் சுப்புனிகிட்டே பேசறார் பாருங்க.


"புரிஞ்சுடுத்தூ நேக்கு புரிஞ்சுடுத்தூ மணி போய் போண்டாவை பாரும்யான்னு சொல்ல வர்ரேள், இன்னிக்கு நேத்தா பழகிண்டு இருக்கேன்" மணி அய்யரும் தஞ்சை மாவட்டமாகியதால் சுலபமா புரிஞ்சுகிட்டார். ஆனா எனக்கு அந்த வயசிலே அதல்லாம் புரியலை. ஆனா அதற்குள்ளாக மாமா டிரையல் கேம் விளையாடி முடிச்சு இருந்தார்.


இப்போ மணி ஐந்து ஆகிவிட்டிருந்தது. காவிரிகரை சீனிவாசா சத்திரத்தில் இருந்து நேராக வந்துவிட்ட நாதஸ்வர கோஷ்டி சீனிவாசா சத்திர கல்யாண வீட்டிலும் வண்டி சத்தம் வாங்கிகிட்டு இதோ நம்ம செட்டியார் சத்திர வாசலில் இறங்கியும் வண்டி சத்தம் கேட்டு கொண்டிருக்கு. மணி அண்ணன் உக்கிரான அறை நோக்கி ஓடுறார். மணி அய்யர் குரூப் நெய், திராட்சை வகையறாக்களை அதிகம் பயன்படுத்திவிடாமல் எண்ணி எண்ணி கொடுக்க. அத்தை அதற்குள் சீர்வரிசை சாமான் எல்லாவற்றையும் பித்தளை தாம்பாளத்தில் எடுத்து வைத்து யார் யார் எந்த எந்த தட்டை எடுத்துப்பது என பிரித்து கொடுக்க, மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என எல்லோரும் முதல் தொட்டி முற்ற திண்ணைக்கும், மாமா கச்சேரி நடத்தும் திண்ணைக்கும் நடுவே செருப்பை கழட்டி போட்டு விட்டு உள்ளே போகும் போது வழுவூர் சம்முகம் மாத்திரம் நியூ கொழும்பு மஞ்சள் பையில் போட்டு அதை சுருட்டி கக்கத்தில் வைத்து கொண்டு உள்ளே போக, வாசலில் ஒரு டேபிள் போட்டு அதன் மேல் ஒரு விரிப்பு விரித்து அதன் மேல் ஒரு தாம்பாளத்தில் ஜீனியும், ஒரு சந்தன பேழாவிலே பூக்கடையில் உருட்டி வைத்து அதன் மேலே கனேஷ்தர்பார் பத்தி கொளுத்தி வைத்திருப்பார்களே அந்த சந்தனத்தை கரைத்தும், பன்னீர் சொம்பிலே கொஞ்சம் தண்ணீர் ஊத்தியும் மணி அண்ணன் கொண்டு வந்து வைக்க பெண் வீட்டு மூணு பியூசி படிக்கும் பெண்கள், இரண்டு எட்டாம் கிளாஸ் பெண்கள் ,இரண்டு என் வயதை ஒத்த பொடிசுகள் தேமேன்னு வர்ரவங்க தலையிலே பன்னீர் சொம்பிலே இருந்து குழாய் தண்ணீரை தெளிக்க அதிலே ஒரு பி.யூ.சி மாத்திரம் கவரிங் செயின் கழுத்தை அரிக்காமல் இருக்க அதை தோளில் படாமல் லாவகமாக ஜாக்கெட் மேலேயே படர விட்டு கொண்டிருப்பதில் தம் முழுகவனத்தையும் செலுத்தியது.


மாமாவுக்கு தன்னை தாண்டி போகிறவர்கள் "என்ன புள்ள சவுக்கியமா" என்கிற கேள்வி தேவையே இல்லாததாக பட்டது. கேட்டவன் உள்ளே போவதுக்குள் மாமா ஏதோ சொல்ல ஜக்கய்யர் வெற்றிலை எச்சிலோடு பக்குன்னு சிரிக்க, ராமசுப்புவும், சுப்புனியும் "ஆமா மாமா ஆமா மாமா" என தாளம் போட அந்த இடம் தனி ராஜாங்கமாக தெரிந்தது.


கொஞ்சம்பொழுது சாய்ந்து கொண்டிருக்கும் போதே தூக்குதூக்கி பக்கிரிசாமி என்னும் எண்பது வயது கிழவர் தலைமையில் பத்துபேர் பத்து பெட்ரோமாஸ் விளக்குகளை அந்த தொட்டி முற்றத்தில் வைத்து காற்று அடித்து அதன் பித்தளை உடம்பை துடைத்தும், மேண்டிலை மாட்டி கொண்டும், மண்ணெண்னை ஊற்றி கொண்டும் இருந்தனர். இந்த மாப்பிள்ளை அழைப்பு பெட்ரோமாஸ் லைட் இருக்கே அது ஒரு வித்யாசமாய் இருக்கும். அதை ஒரு பெரிய பலகையில் அடித்து அதை தலையில் சும்மாடு வைத்து தூக்கி வைத்தால் அப்படியே நிற்கும் அந்த பக்கிரிசாமி அன் கோ வுக்கு. வந்த பத்து பேரில் ஆறு பேர் ஆண்கள், மூணு பேர் பெண்கள், தவிர ஒரு சின்ன பெண் ஆக பக்கிரிசாமி அன் கோ அப்பவே முப்பத்து மூணு சதவீதம் பெண்களுக்கு கொடுத்துவிட்டது. இந்த பக்கிரிசாமிக்கு என்பது வயசாச்சே தூக்குவாரா என நான் நினைத்தது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு அன்றைக்கு ராத்திரி பத்துமணிக்கு தான் தெரிந்தது.


உள்ளே ஹாலில் வலப்பக்கமாக நாதஸ்வர கோஷ்டி கிழக்கு பார்த்து உட்காந்து ஆயத்தமானார்கள். திருக்கோடிகாவல் கோவிந்தராஜ பிள்ளை தன் காது கடுக்கனை கழட்டி தன் விபூதி டப்பாவில் போட்டு துடைத்து மாட்டி கொள்ள அவரின் ஜோடி நாயனம் சுப்ரமணிய பிள்ளை வினிபா பவுடரை ஒரு கோட் முடிந்து திருப்தி இல்லாமையால் அடுத்த கோட்டுக்கு தயாராக, தவில் சின்ராசுவோ மேக்கப் முடிந்து சின்ன சில்வர் டப்பாவில் இருந்து புனுகு எடுத்து கருப்பாக நெற்றியில் பூசிகொண்டு சின்ன பஞ்சில் அத்தர் நனைத்து காதின் மடலில் திணித்துவிட்டு மீதியை தன் உடம்பில் பூசிக்கொண்டார்.
.
இங்கே மாமாவின் சீட்டு கச்சேரியில் கும்பகோணத்தில் இருந்து வந்த பஞ்சாமய்யர் ஹோட்டல் மீசைக்காரர் ஜெயராமனும் கலந்து கொள்ள மாமா தன் பையை நிரப்பி கொண்டே இருந்தார். நட்ட நடுநாயகமாக இருந்த தாம்பாளத்தில் வெற்றிலை, சீவல், அசோகாபாக்கு, ஏஆர்ஆர் வாசனை சுண்ணாம்பு, மைதீன் புகையிலை, சிவபுரி ரெங்கவிலாஸ் புகையிலை (இப்போது போல் பிளாஸ்டிக் சாஷே டைப் கிடையாது எல்லாம் பொட்டலம் தான்) என இருக்க ரம்மி கிடைக்காதவர்கள் கவுத்தி போட்டு ஒரு தரத்துக்கு வெற்றிலை போட்டு கொண்டு, விளையாட்டை தொடரும் அடுத்த ஆள் சீட்டை பார்த்து ஆலோசனை சொல்ல மாமா மாத்திரம் ஒரு கண் இங்கேயும் அடுத்த கண் உள்ளே போகும் ஆட்கள், செருப்பு திருடும் ஆட்கள், பெர்டோமாஸ் கோஷ்டி, நாதஸ்வர பார்ட்டி, சண்டை போடவே வரும் வகையறா என நோட்டம் விட்டு கொண்டே கமெண்ட் அடிக்க மற்றவர்கள் வெற்றிலை எச்சில் சிதறாமல் சிரித்து கொண்டே கருமமே கண்ணாயிருந்தனர்.


மணி அய்யர் அதற்குள் டிபன் செய்து முடித்துவிட்டார். என்ன எப்போதும் போல ஒரு வாழை ஏட்டுக்கு 2 இட்லி, சாம்பார், உளுந்து போண்டா, (அந்த போண்டாவிலே மிளகு முழுதாகவும், தேங்காய் சில்லி சில்லாகவும் இருந்தன)அதற்கு தேங்காய் சட்னி, ஒரு கரண்டி கேசரி, ஈயம் பூசின பித்தளை டபரா செட்டிலே கழனி தண்ணி மாதிரி காபியை தயார் செய்துவிட்டு இரவு சாப்பாட்டுக்கு வெண்டைக்காய் நறுக்கியும், நூல் கோல் நறுக்கியும், ஒரு வயதான பாட்டி சர சரன்னு தேங்காய் துருவியும் "டேய் கிச்சா ஜாரணிய இந்த பக்கம் கொண்டா", "உப்பு போடாதடா கடன்காரா நான் வந்துட்டேன்" ,"இட்லி துணிய தண்ணில நனச்சு புழிஞ்சு ராமன்ட குடுடா" "பஜ்சிக்கு வாழைக்காய் சீவுடா" " பெல்லாரிய ரவுண்டா சீவுடா" "ஆத்துல மாமி வேற தேங்கா எண்ணெய் கேட்டாடா கணேசா, ஓர்மையில வச்சுக்கோ" இப்படியாக அந்த அடுக்களையே ரகளையாக இருந்தது.


கொஞ்ச நேரத்திலேயே டிபன் முடிந்தது. மாப்பிள்ளை வீடு, பெண்வீடு என தனி தனியாக அந்த கல்யாண முற்றம் தாண்டிய அடுத்த ஹால் உள்ளே நுழைய அது அப்படியே முதலில் பார்த்தோமே பெரிய ஹால் அதை போலவே இருக்கின்றது. அதிலே மணி அண்ணன் சுருட்டி இருந்த பந்தி பாயை ஒரு முனையில் இருந்து உருட்ட அது பந்தி ஹாலின் அடுத்த முனைக்கு உருண்டு ஓட எதிரும் புதிருமாக மணமகன், மணமகள் வீட்டார் உட்காந்து இருக்க அமைதியாக முடிந்தது டிபன்.


பெண் அழைப்புதான் இந்த கல்யாணத்திலே. பெண்ணை பண்டரிநாதன் வண்டியிலே ஏத்தி இந்த தடவை விளநகர் பெரியம்மா மின் ஜாக்கிரதை மினியம்மாவாக முதலில் காரில் ஏறி கொள்ள பெண் இப்போது பட்டமங்கல தெரு பெருமாள் கோவிலுக்கு போயாச்சு. (இந்த பெருமாள் கோவில் தாலுக்கா ஆபிஸ் பக்கத்தில் ரொம்ப உள்ளடக்கமாக இருக்கின்றது. ரொம்ப பேருக்கு தெரியாது. மேள காரர்களுக்கும் சந்தோஷம். "கிட்டக்க தான் சுப்புனி, இழுத்துகிட்டு வந்து சீக்கிரம் விட்டுட்டு ரெண்டு கீர்த்தனை,மாடுமேய்க்கும் கண்ணாவும், ராஜாஜி கீர்த்தனை குறையொன்றும் இல்லைன்னு சிம்பிளா முடிச்சுகிட்டு ரெண்டு சில்லறை வாசிச்சு முடிச்சுப்போம்" ன்னு கோவிந்தராஜ பிள்ளை முனுமுனுக்க சின்ராசு புன்முறுவல் பூக்க நாதஸ்வர கோஷ்டியும் பெருமாள் கோவில் புறப்பட்டது.


அதுவரை வீட்டிலிருந்து நைலக்ஸ் சேலையில் இருந்த பெரியம்மா, அத்தை, சித்தி கூட்டம் கையோடு கொண்டு வந்த பட்டுபுடவை எல்லாம் கட்டிகிட்டு ஆகா அதுக்குள்ள அந்த இடமே அல்லோகல பட்டு போச்சு. கொண்டை ஊசி எங்கே, அக்கா ஊக்கு இருக்கா, அய்யோ உள்பாவாடை உயரம் ஜாஸ்தியா இருக்கே புடவைக்கு கீழே வருமே, ஆகா மேட்சிங் பிளவுஸ் காணுமே நீ எடுத்து வச்சியா அம்மா, கொண்டை வலை யார் கிட்டயாவது எக்ஸ்ட்ரா இருக்கா, எதுக்கும் இருக்கட்டுமேன்னு இந்த சிதம்பரம் செயினை எடுத்து வந்தது நல்லதா போச்சு நீ போட்டுக்க இதை, அய்யோ என் திருகாணிய காணுமே, யாருது இந்த முத்து, எந்த கொலுசுல இருந்து விழுந்துச்சு, ஏண்டி திருகாணி காணுமா பவுனு என்ன விலை தெரியுமா ஒரு பவுன் 368 ரூபாயாயிடுச்சு, யேய் நீ ஏண்டி கிளம்பற, ரெண்டாம் நாள் தான இன்னிக்கு, நாங்க கோவிலுக்குள்ள போறோம், நீ இங்க இருந்து எல்லார் பேக்கையும் பார்த்துக்கோ, சரோஜா ராத்திரி ஆட்டத்துக்கு "ஊட்டிவரை உறவு" போவுமா?, நைசா அத்தைய விட்டு அத்தான் கிட்ட எனக்கும் கேக்க சொல்லு" "இன்னிக்கு நாயனகாரரை நலந்தானா சில்லரை வாசிக்க சொல்லனும்"
ஒரு வழியா எல்லோரும் கிளம்பி பெருமாள் கோவிலுக்கு போயாச்சு.

மீதி அடுத்த அடுத்த பாகத்தில்!
குறிப்பு: இந்த தடவையும் பதிவு பெருசா ஆகிடுச்சு! அடுத்த பாகம் இரவு நடக்கும் கூத்துகள், அதுக்கு அடுத்த பதிவு கல்யாணம்!December 26, 2008

அப்ப நானும் மூத்த பதிவரா? சொல்லுங்க!

தமிழ்மணத்துல ஒரே சண்டையா இருக்குதுப்பா. யாரு மூத்த பதிவர்? யாரு பிரபல பதிவர்? யாரு இளைய பதிவர்? யாரு குழந்தை பதிவர்? இதிலே நான் எந்த வகைன்னு சொல்லுங்கப்பா.

டிசம்பர் 26 - 2006 லே ச்சும்மா விளையாட்டுக்கு "அபிஅப்பா"ன்னு எழுத ஆரம்பிச்சது. இதோ இப்ப "அபிஅப்பா"ன்னா ஒரு நாலு பேருக்கு தெரியும் அளவுக்கு வந்தாச்சு. மூணாவது வருஷத்துக்கு வந்தாச்சு.

இப்ப சொல்லுங்க நான் எந்த வகை பதிவர். சட்டுன்னு சொன்னீங்கன்னா நான் ராத்திரி சாப்பாடு சாப்பிடுவேன். (இல்லாட்டியும் சாப்பிடுவேன்)

இப்படிக்கு

அன்பு அபிஅப்பா

December 25, 2008

வீரசேகரவிலாஸும், மாமாவும்,சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்!!! பாகம் # 2

"வீரசேகரவிலாஸும், மாமாவும், சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்" என்கிற இந்த பதிவின் முதல் பாகத்தை முதலில் படித்து விடவும். ஏனனில் அதை எழுதி இரண்டு மாதங்கள் ஆயாச்சு. எல்லோரும் மறந்து போயிருப்பீங்க. அதன் பிறகு இந்த இரண்டாம் பாகம் படிக்கலாம்.

************************************

அத்தைக்கு அத்தனை வித்தையும் தெரியும். அத்தை வீட்டை விட்டு நேராக எங்கள் தெருவுக்கு கிளம்பியாச்சு. கல்யாண சத்திரத்துகும் எங்கள் தெருவுக்கும் ஹெலிகாப்டரில் போனால் அரை மணி நேரம் ஆகும். நடந்து போனால் 5 நிமிடம் ஆகும். ஆனால் அத்தை "பண்டரிநாதன்" டாக்சியில் பொண்ணை அழைச்சுகிட்டு போனாத்தான் மதிப்புன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க.என்ன காரணமோ!

இதோ அத்தை வந்தாச்சு! அத்தை கேட்கும் கேள்விகளுக்கு அதன் அதன் பதிலுக்கு சொந்தமானவர்கள் பதில் சொல்ல போகிறார்கள்.

"தம்பிகளா! இங்க வாங்க"

"அத்தே நாங்க இங்க தான இருக்கோம்" இது அப்பா!

"சரி சிங்காரம் வந்துட்டானா! வண்டிய கட்டிகிட்டு திருவமழைலயிலருந்து, பெரிய தம்பி கிட்ட இருந்து சொன்னனே?"

"ஆமா அத்தே அவன் வந்துட்டான். நீ சொன்னாதான் வடக்கு மாடவிளாகம் வழியா விறகு கொண்டு போவானாம்"

அது சரி! ஏன் தம்பி விறகா மொதல்ல எடுத்துட்டு போவாங்க! அவனுக்கு தெரிஞ்சு இருக்கு, ஆண்டவா அண்ணன் புள்ளயபெல்லாம் காப்பாத்து! அடியே மீனாச்சி, ஒரு படியிலே உப்பு, ஒரு மொரத்துல கொஞ்சம் மஞ்சள் பொடி ஆங் அதை அப்புடியே புள்ளையாரா புடிச்சுடு, கொஞ்சம் சூடம், ஒரு தேங்கா எடுத்து வைய்யி, ஆரத்தி கரைக்க போறவ முதல்ல நடந்து போவுட்டும் சத்தரத்துக்கு"

"வச்சுட்டேன் அத்தே"

"சரி மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு பெட்ரோமாஸ் லைட் சொல்லியாச்சா"

"வெத்தல பாக்கு மணி அண்ணன் ஒரு வரிசைக்கு அஞ்சுன்னு மொத்தம் பத்து சொல்லிட்டாரு, அதிலே ஒரு லைட்டு மாத்திரம் முழு ராத்திரிக்கும்"

"பாலய்யருக்கு சொல்லியாச்சா, அவரு லிஸ்ட் படி வாங்குங்கப்பா, போன தடவை மாதிரி புழுங்க அரிசி வாங்கிடாதீங்க, எந்த அய்யரு வூட்டுல புழுங்க அரிசி சமப்பாங்க, சரி சமையல் மணிஅய்யரு இட்லிக்கும் வடைக்கு ஊற வைக்க சொன்ன அரிசி, உளுந்து எல்லாம் யாருடீ ஊற வச்சது"

"நாந்தான் அத்தே! அவரு குருப்பு தவசுபுள்ள வந்து எடுத்துகிட்டும் போயாச்சு"

"தம்பி, வண்டிபேட்டை ரத்தினத்தை நாளு வாடகைக்கு சத்தரத்து வாசல்ல நிப்பாட்டிடு, மோள செட்டு கூப்பிட போறதில இருந்து சப்ஜாடா தேவப்படும்"

"சரி அத்தே"

"கல்யாண முத்தத்துக்கு(முற்றத்துக்கு) ஒதியங் கெள வெட்டிகிட்டு வந்தாச்சா, அதுல கட்ட சேப்பு ஜாக்கெட் பிட்டு எடுத்து வச்சாச்சா"

"அய்யய்யோ அத்தே அத மறந்தாச்சு, இரு அத்தே சிங்காரம் வரட்டும் சொல்லிடலாம்"

"தம்பி! வெத்தல பாக்கு மணி வந்துட்டானா?"- இது அத்தை!

நான் இந்த இடத்திலே வெத்தலை பாக்கு மணி அண்ணனை பத்தி சொல்லியே தீரனும். மாயூரநாதர் கோவில் ஈசானிமூலை சியாமளா தேவி கோவில் மூணு கடையிலே அவரும் ஒரு கடை. கடையில் சரக்குன்னு பார்த்தா 12 சோடா அடுக்கும் ட்ரேயில் மூனு சோடா இருக்கும். 2 கவுலி வெத்தலை, 100 கிராம் பாக்கு, அடுத்து ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோவிலே கொழும்பு வர்த்தக நிலைய பாட்டு இத்தனையே அந்த கடையின் சரக்குகள்.

வெத்தலைபாக்கு மணி அண்ணன் ஊருக்கே அண்ணன் தான். வயசு அப்பவே 50 இருக்கும். ஆனால் அவருக்கு அப்போது 10 வயது உடம்புக்கு சரியில்லாத கடைகுட்டி பையன் இருந்தான் என்பதும், மீதி எல்லாம் பெண் குழந்தைகள் என்பதும் பதிவுக்கு சம்பந்தம் இல்லா விஷயம். யாரை பற்றியும் கவலைப்படாமல் ...தன்னன்ன தரதன்னாஆஆஆஆஆஆஆஆஅ...ன்னு ஏதோ ராகத்தை முயன்று கொண்டே போவார் ரோட்டிலும், அவ்வளவு ஏன் ராஜன் தோட்டத்தில் காலை கடன் கழிக்கும் போது கூட. விக்கிரமாதித்தன் மாதிரி இப்பவும் அந்த ராகத்தை முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்.

அவருடைய காஸ்ட்டியூம் காந்தி காஸ்ட்டியூம். ஆனா காந்தி துவைத்து கட்டியிருப்பார். இவர் கட்டியதை துவைத்தாலும் கூட மத்தவன் கட்ட முடியாது. அவருக்கு கெட்ட பழக்கம் என பார்த்தால் பொடி போடுவார். அதுவும் TAS ரத்தினம் பட்டினம் பொடி மட்டும் தான் போடுவார். அதற்காகவே மணிகூண்டுக்கு போவார். 10 பைசா பொடியை சின்ன எவர்சில்வர் தராசில் நிறுத்து அதை வாழைமட்டையில் கட்டி வாங்க மாட்டார். அவரின் பொடி டப்பாவை தராசுக்குள் தலி கீழாய் அவரே கவிழ்த்து அனு அளவு கூட தராசில் ஒட்டாமல் அவர் அதை டப்பியில் நிறப்பும் அழகு ரசிக்க வைக்கும். ஒரு தரத்துக்கு கொசுறு பொடி ஒரு சிட்டிகை வாங்கி கண் இமைக்கும் நேரத்தில் மூக்கில் நுழைத்து கண்கள் சிவக்கும் முன்னமே தன் காசி துண்டால் முகம் துடைத்து துண்டின் உள்ளேயே எச்சிலோடு ஒரு தும்மல் போடுவார்.

அவர் வரும் முன்னமே அவரின் பொடிவாசம்ன் அந்த இடத்துக்கு வந்துவிடும் . இரண்டு நிமிடம் தொடர்ந்து பேசினால் "சொற்த்தெர்தா" என்பார். அதற்கு என்ன அர்த்தம் என நான் ரொம்ப நாள் யோசித்து கண்டு பிடிக்க முடியாமல் என் சித்தப்பாவிடம் கேட்டபோது தான் தெரிந்தது "நான் சொல்வது என்னான்னு தெரியுதா" என்பதன் சுருக்கம் அந்த வார்த்தை.

சொந்த பந்தம் யார்வீட்டில் கல்யாணம் என்றாலும், சாவு என்றாலும், காரியம் என்றாலும் முதலில் மணி அண்ணனுக்கு தான் செய்தி போகும். இது போன்ற காரியங்களை தனி ஆளாக நின்று கையமத்திவிடுவார்.

இதோ அத்தை தேடும் மணி அண்ணன் இப்போது நிற்பது கச்சேரி ரோட்டில் உள்ள "மாயூரம் பைனான்சியல் கார்ப்பரேஷன் - ஸ்தாபிதம் 1947" என்னும் எனாமல் கரும் நீல கலர் சைன் போர்டை கொண்ட கட்டிடத்தின் கீழே.

மாமா உள்ளே போனதும் அங்கே வேலை பார்க்கும் 68 வயது ரிட்டையர்டு தாசில்தார் சண்முக சுந்தரம் (அது என்ன எங்க ஊர் தாசில்தார் எல்லோர் பெயருமே சண்முக சுந்தரமாகவோ, சுப்ரமணியனாகவோ தான் இருக்கின்றது!) "வாங்க மணி புள்ள, எத்தனை ஜமுக்காளம், பந்திப்பாய் வேணும்" என்கிறார்.

என்னடா இது பைனாஸ் கம்பனிக்கும் பந்திப்பாய்கும் என்ன சம்மந்தம் என கேட்பவர்களுக்காக இந்த பத்தி. 1947ல் ஆரம்பித்து இன்று வரை நாணயத்தோடு செயல் படும் அகில இந்திய அளவில் இந்திய ரிசர்வ் வங்கியால் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிற அந்த "மாயூரம் பைனான்ஸ் கம்பனி" தன் ஊழியர்களாக ஓய்வு பெற்ற தாசில்தார்களையும், வங்கி மேளாளர்களையும் மட்டுமே நியமிக்கின்றது. (அது போல இன்னும் ஒரு இடம் தருமபுரம் மடம் என்பது உபரி செய்தி) ஆனால் தன் ஊர் மக்கள் நன்மைக்காக பெரிய பெரிய ஜமுக்காளங்கள், பந்தி பாய்கள் ஆகியவற்றை இலவசமாக ஒரு சேவையாக தருகின்றது. எனவே தான் மணி அண்ணன் அங்கே போய் நிற்கிறார் இந்த மதிய 3.30க்கு.

"ஆமா தாசில்தாரய்யா, ரெண்டு திண்ணைக்கும் ரெண்டு ஜமுக்காளம், ஹாலுக்கு நாலு, கல்யாண கூட நாலு தாவாரத்துக்கும் நாலு, கூடத்துக்கு ஒன்னு, பின்ன பந்திபாய் பெருசு நாலு குடுங்க". இப்போது தெரியுதா மணி அண்ணனுக்கு அந்த வீரசேகர விலாஸ் எப்படி அத்துப்படின்னு. இதே "அம்பாபாய்" கல்யாண மண்டபம்னா அதுக்கு தகுந்த மாதிரி கேட்டிருப்பார்.

இதோ மணிஅண்ணன் கொண்டு வந்திருந்த சின்னகடை தெரு வண்டிப்பேட்டை ரத்தினத்தின் ஒத்தைமாட்டு வண்டியிலே அத்தனை சமாச்சாரங்களையும் ஏத்திவிட்டு பின்னாலேயே நடந்து கிளம்ப வண்டிகார ரத்தினம் " என்னா அண்ணே வண்டியிலே குந்திகிட்டா என்னா" என்பதை காதிலேயே போட்டுக்க மாட்டார். அவர் மெதுவா சத்திரம் வந்து சேரட்டும், நம்ம அத்தை என்ன செய்றாங்கன்னு பார்ப்போம்.

பண்டரிநாதன் பிளஷர் கார் வந்து நின்னதுமே பந்தல் வாழைமரத்தில் ஏறும் முயற்ச்சியில் இருந்த நானும், மாக்கோலத்தை டவுசரில் அப்பி கொண்டிருந்த என் பங்காளிகளும்,கழட்டிய டவுசரை முன்பக்கமாக மறைத்து கொண்டு பாதி மதிய கடன்(!) பொருப்பில் இருந்து தனக்கும் காரில் இடம் கிடைக்குமா என ஓடி வந்த மாமா பையன் சோனி என்கிற விவேகானந்தனும் இதையெல்லாம் பார்த்து பயந்து போன பண்டரிநாதனும் "அய்யோ அத்தே பண்டரி அண்ணன் வந்தாச்சு" என் கூவிய சித்தியும் அந்த இடத்தை கொஞ்சம் பரபரப்பாக்கினார்கள்.

ஏதோ ஒரு பெரியம்மா மாத்திரம் "என்ன அத்தே எப்பவும் பண்டரிநாதன் காரு தானா, அவரே பாதி இடத்தை அடைச்சுப்பாரு" என சொல்ல அத்தை "அட போடி அவரு கிட்ட மட்டும் தான் வெள்ளை பிளசரு காரு இருக்கு. மத்தவன் கிட்ட இல்லாம் கருப்பும், மஞ்சளும் கலந்து அடிச்ச கலருதான். ஒரு நல்ல காரியத்துக்கு கருப்பு தேவையா"ன்னு அடக்கி விட்டு "சரி சரி பொண்ணு வீட்டிலே இருந்து நான் பொண்ணை அழைச்சுகிட்டு வாரேன், அடியே பெரிய மீனாட்சி,சின்ன மீனாச்சி, காத்தியாயினி, மூணு பேருமா எதிர்க்க வாங்க... நான் பொண்ணு கூட காருல ஏறின பின்ன தான் மத்தவங்க ஏறனும் தெரியுதா" என சர சரன்னு தன் வெற்றிலை பெட்டியை எடுத்து கொண்டு நாலு வீடு தள்ளி இருக்கும் பொண்ணு வீட்டுக்கு போக காரை சுற்றி வியூகம் அமைத்த நாங்களும் "ஓஓஓஓஓ"ன்னு சத்தம் போட்டு கொண்டே பின்னால் துரத்த ஒரு வழியா அத்தையும் பொண்ணும் பின் சீட்டில் ஏறிக்கொள்ள பின்பு அத்தையின் பர்மிஷன் இல்லாமலே கிடைத்த கேப்பில் நாங்கள் காரை கைப்பற்ற நான் மட்டும் பண்டரிநாதன் பக்கத்தில் சேஃபாக உட்காந்து கொண்டேன். அதிலே ஒரு சூட்சுமம் இருக்கு. எப்படியும் ஆண்கள் உட்கார போவதில்லை. பண்டரி நாதன் பக்கத்திலே நெருக்கியடிச்சு எந்த லேடீசும் உட்கார போவதுஇல்லை. அதனால் எப்போதும் ஒரு சின்ன பயலை தான் டிரைவருக்கும் எதுனா ஒரு பெரியம்மாவுக்கும் நடுவே உட்கார வைக்க போகிறார்கள் அது நானாக இருக்கட்டுமே என்கிற ஒரு நப்பாசை.

இந்த கூத்திலே டவுசரை முன் பக்கமாக மறைத்து கொண்டிருந்த சோனியை பார்த்து அத்தை "டேய் போடா போய் அம்மாவை தண்னி ஊத்த சொல்லி கழுவிகிட்டு வாடா" என சொல்ல அதற்கு அவன் "இல்ல அத்தே இன்னும் வரவேயில்லை, அதுக்குள்ள கார் வந்துடுச்சு"ன்னு சொல்ல காரில் இருந்த நாங்கள் உட்பட அத்தையும் சிரித்தார்கள். அதற்குள் கிட்ட தட்ட இருபத்திமூனரை சித்தி, அத்தை, பெரியம்மாக்களும் காரை சூழ்ந்து கொள்ள (ஒரு பெரியம்மா காளியாகுடி காபி பில்ட்டராக்கும்!) ஒவ்வொரு சின்ன பயலும் இழுத்து கீழே போடப்பட கிட்ட தட்ட இருபத்தி நாலுபேரும் பின் சீட்டிலும் முன் சீட்டிலும் அடைந்துவிட கடைசியாய் எனக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு அத்தையின் சின்ன பொண்ணு வர நானும் கீழே தள்ளப்பட்டேன்.

சரி விடுடா விடுடா சைக்கிள் டயர் ஓட்டிகிட்டே காருக்கு முன்னால நாம போயிடலாம்ன்னு நான் மனசை தேற்றி கொள்ள அந்த டவுசர் பார்ட்டி மாத்திரம் ஆத்திரம் அடங்காமல் ரோட்டில் புரண்டு அழ அவன் அம்மா அவன் அழுகையை கொஞ்சம் கூட கண்டுக்காம "அத்தே வண்டிய விட சொல்லுங்க, அவன் அவனோட அப்பனை கொண்டிருக்கான், நமக்கு முன்னால வந்து நிப்பான் பாருங்க" என சொல்ல வண்டி கிளம்பியது. அப்போது அவசர அவசரமாக விளநகர் பஸ்ஸில் இருந்து இறங்கி ஓடி வந்த ஒரு பெரியம்மா கைகாட்டி நிறுத்த புளி மூட்டைக்குள் இருந்த ஒரு சித்தி "வண்டிய விடுங்கப்பா மூச்சு முட்டுது"ன்னு சொல்ல அத்தை "ஆமாம்டி நீ நடந்து பசங்களை அழைச்சுகிட்டு வந்துடு, இங்க இடமே இல்லை"ன்னு சொல்ல அந்த பெரியம்மா முகம் சிவந்தது.

நீங்க வேணா குறிச்சு வச்சுகோங்க அந்த பெரியம்மா அடுத்த கல்யாணத்துக்கு வர மாட்டாங்க.(ஆனா அதுக்கு அடுத்த கல்யாணத்துக்கு காலையிலேயே வந்துடுவாங்க காரில் இடம் பிடிக்க)

அம்மாவுக்கு இப்படி காரில் பிதுங்கி போய் வந்து இறங்குவது பிடிக்காது என்பதும், கூப்பிடு தூரத்தில் இருக்கும் இடத்துக்கு ஹாயாக வருவதும், தவிர ஆரத்தி எடுக்கும் ஜெண்டில்வுமன் வேலையே உத்தமம் என நினைப்பதாலும் அம்மா முன்கூட்டியே ஒரு தாம்பாளம், சுண்னாம்பு, மஞ்சள், சின்ன வெற்றிலை, சூடம், சிதறு தேங்காய் என போய் விட்டிருந்தார்கள்.

கார் ஊர்ந்து போய் சேர்வதற்க்கு முன்னமே நாங்கள் டயர் வண்டி ஓட்டு கொண்டு போயாச்சு. அதற்குள் சிங்காரம் வண்டி வடக்கு மடவிளாகம் பின் வாசல் வழியே விறகு கொட்டி விட்டு நிற்க நாங்க எல்லோரும் எங்கள் சைக்கிள்டயர் வண்டியை அதிலே போட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டு அம்மா ஆரத்தி எடுக்கும் இடத்துக்கு வந்துவிட்டோம். கார் வந்து நின்னதும் முதலில் இறங்கியது பண்டரிநாதன் தான். ஏனனில் அவர் இறங்கினாலே முன் சீட்டில் உள்ள மற்றவர்கள் சுலபமாக இறங்க முடியும். அப்பாடா ஒருவழியாக எல்லோரும் இறங்கி முடித்தவுடன், பார்த்தா பொண்ணு என்னவோ சினிமாவிலே வில்லனால் துரத்தப்பட்டதை போல இன்னும் சொல்ல போனால் சந்திரமுகி மாதிரி சீவிய தலை முடி எல்லாம் கொத்து கொத்தாய் முன் பக்கம் விழுந்து பொண்ணு கசங்கின பன்னு மாதிரி ஆகிடுச்சு. அம்மாவுக்கு மட்டும் ஒரு நமட்டு சிரிப்பு.


சரி இதையே சொல்லி கொண்டு இருந்தா எப்படி? திருவீழிமிழலை மாமா என்ன ஆனார்ன்னு சொல்லனுமே இப்போது. மாமா கன்னார தெருவிலேயே பஸ்ஸில் இருந்து இறங்கினா 5 நிமிடத்திலே மண்டபம் வந்துவிடும். ஆனா அவர் எப்போதுமே பஸ்டாண்டிலே இறங்கி அப்படியே மணிகூண்டை தாண்டி காளியாகுடி வந்து ஒரு பில்டர் காபி சாப்பிட்டுவிட்டு அம்பி அய்யர் கூட கொஞ்சம் பேசிட்டு, எதிரே ராமூர்த்தி டாக்டரிடம் நலம் (!) விசாரித்துவிட்டு ஆடி அசைந்து முனுசிபாலிட்டி கிட்ட இதோ வந்து கொண்டிருக்கார் பாருங்க.

ஆரத்தி எல்லாம் முடியும் போது மாமா வந்து சேரவும் அம்மா "ஆகா அண்ணன் சரியான நேரத்திலே வந்தாச்சு. வாங்க இந்த செதறு காயவுடுங்க"ன்னு சொல்ல கக்கத்தில் பையை இடுக்கி கொண்டு மாமா சிதறு காய் விட அந்த நிமிடமே கல்யாண வைபோகம் ஆரம்பிச்சாச்சு!

குறிப்பு:

ரொம்ப பெருசா போயிடுச்சு இந்த பதிவு. அதனால ஜமுக்காளம் கொண்டு வந்து போட்டுவிட்டு மணிஅண்ணன் எங்கே போனார், நாதஸ்வரம் யார், கல்யாணம் செய்து வைக்கும் பாலய்யர் வந்துட்டாரா, மாப்பிள்ளை ஊர்வலம் எங்கிருந்து, மாலை டிபன் என்ன, இரவு சாப்பாடு என்ன, மணிஅய்யர் சரியான சமையத்தில் சமையலுக்கு வந்தாரா,இல்லாவிடில் எப்போதும் போல அப்ரசண்டிகளை அனுப்பிவிட்டாரா, இரவு சினிமா போன கோஷ்டிகள் எவை, மாமா எப்போ சீட்டு கச்சேரி ஆரம்பித்தார், அவர் இரவு 11 மனிக்கு சீட்டு கச்செரிக்கு எப்படி பிரேக் விட்டார், இரவு தலையணை பற்றாகுறை சண்டை எல்லாம் அடுத்த பாகத்தில் போடுகிறேன். அதன் பின் அடுத்த நாள் கல்யாண வைபோகம் பார்க்கலாம் மூன்றாம் பாகத்தில்!

December 22, 2008

அபியும் நானும்!!!- ஒரு சுய விமர்சனம்

பதினைந்து நாள் மெடிக்கல் லீவிலே போய் விட்டு வந்துடலாம்னு போனா மழை அது இதுன்னு 45 நாள் முழுசா ஆகிடுச்சு. ஆனா இந்த விடுமுறை எனக்கு அத்தனை சுவாரஸ்யமா இல்லை என்றே சொல்ல வேண்டும். முதல் பத்து நாட்கள் ஹாஸ்பிட்டல் செக்கப் அப்டீன்னு செம போர். கடைசியா டாக்டர் "உங்களுக்கு ஒன்னுமே இல்லை" என சொல்லிய போது "மண்டையிலா டாக்டர்" என கேட்க நினைத்து "தேங்ஸ் டாக்டர்" என கூறி வந்து விட்டேன்.

பின்பு நான்கு நாட்கள் நல்ல படியாக போனது. பின்னே ஜாலியா அபி, நட்ராஜ் கூட விளையாடி கொண்டு இருக்கும் போது தம்பி அவன் தலையை சீவி முடிக்கும் வரை காத்திருந்து பின் முடியை இழுத்து முகத்தில் விட்டு ரஜினி ஸ்டைல் செய்யும் போது "அப்பா பொடியன் சஞ்சய் அங்கிள் கல்யாணம் இப்ப இருந்தா ஜாலியா நாம போயிட்டு வரலாம்ப்பா குசும்பன் அங்கிள் கல்யாணத்துக்கு போன மாதிரி" அப்படீன்னு சொன்ன போது ஏன் அபி சம்மந்தம் சம்மந்தமில்லால பேசறான்னு நினைச்சுகிட்டேன்.

அதன் பின் தம்பிக்கு குல தெய்வ கோவிலில் முடி இறக்கி, காது குத்தி ஜெக ஜோராய் வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்னே சுருட்டி வைத்த வாலை பிரிக்க தொடங்கியது "நிஷா" புயல். நவம்பர் 24 ம் தேதி மதியம் 3க்கு ஆரம்பித்த மழை டிசம்பர் 2 வரை தொடர்ந்து கொட்டியது. அன்று மாலை 5.30க்கு கரண்ட் போனது. பின்பு 6 நாள் கழித்தே வந்தது. முதல் நாள் மழை முடிந்த பின்னே தான் வெளியே வந்து பார்த்த போது அதன் உக்கிரம் புரிந்தது. வீட்டுக்கு பின் பக்கம் இருந்த கால்வாய் உடைத்து கொண்டு நகருக்குள் புகுந்து கொண்டிருந்தது. நகரில் என் வீடு கொஞ்சம் மேல் மட்டம் ஆகையால் வெளி கேட் வரை மட்டுமே தண்ணீர் இருந்தது. நகரின் உள்ளே இருந்த வீட்டின் உள்ளே எல்லாம் தண்ணீர் புகுந்து விட்டமைக்காக எல்லோரும் நீந்தாத குறையாக நகரை காலி செய்து கொண்டிருந்தனர்.

எனக்கும் கொஞ்சம் உதறல் எடுத்தது. ஆனால் என் “இதயம் தாங்கும் இதயத்து”க்கு வீடு நனைகிறதே, மோட்டார் மூழ்குகிறதே என்கிற கவலை ஒரு பக்கம் இருந்தாலும் “ என்னங்க கொஞ்சம் வெளியே நீந்தி போய் “பிரமிட்” எல்லாம் அழுக்கா இருந்துச்சே அந்த அழுக்கு எல்லாம் போய் பளிச்சுன்னு இருக்கான்னு பார்த்துட்டு வாங்களேன்” என்று சொன்ன போது பல்லை நற நறக்க தோன்றியது. ஆனால் பாப்பாவுக்கும் தம்பிக்கும் “ச்சோ”ன்னு கொட்டும் மழையும், மூட்டை முடிச்சுகளை தலையில் வைத்து கொண்டு போகும் மக்களையும், அந்த பரபரப்பான சூழ்நிலையும், விடிந்தும் விடியாதது போலவே இருக்கும் மேக மூட்டமும் ரொம்ப சந்தோஷ படித்தியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அத்தனை ஒரு குதூகலம். முதல் 8 மணி நேரம் இன்வர்ட்டர் இருந்ததால் ஒரு பிரச்சனையும் இல்லை. பின்புதான் எல்லா பிரச்சனையும் ஆரம்பித்தன. மாடி அந்தபுரத்தில் “நிஷா” தலைவிரித்து கோர தாண்டவம் ஆடியதால் 2ம் நாள் இரவுக்கு கீழே வந்துவிட்டோம் படுக்கைக்கு.

நகரில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வரும் தண்ணீர் அளவு அதிகமாகி போய் கொண்டே இருந்தது. 2ம் நாள் இரவுக்கு மட்டுமே தாங்கியது ஒரு எமர்ஜென்சி விளக்கு. அதிலும் பேட்டரி போய் விட்டது. காலை எழுந்து பார்க்கும் போது வீட்டின் வாசலில் கிரில் தாண்டி வாசம் மெயின் நிலை கதவுக்கும் 1 அடி கீழே வரை தண்ணீர் நின்று கொண்டிருந்தது. அபியின் சைக்கிள் “நான் எங்கே இருக்கேன் கண்டுபிடி” என சொல்லி கொண்டு சீட்டையும், பெல்லையும் மட்டும் காட்டி கொண்டு நின்றது. என் புதிய ஷூவில் ஒன்று மட்டும் மிதந்து கொண்டிருந்தது கிரில்லில் மாட்டி கொண்டு. மற்றைய எல்லா செறுப்பு வகையறாக்களும் பயணம் செய்து யார் வீட்டு கிச்சனுக்கோ போயிருக்கனும் என நினைக்கிறேன்.என் ஷூவுக்காகவே 2000 ரூபாய் தரனும் இந்த மைனாரிட்டி திமுக அரசு. நகரின் இளைஞர் அணி பசங்க எல்லோரும் ரொம்ப ஜாலியாக(!) நாகையில் இருந்து ஒரு ஃபைபர் போட் கொண்டு வந்து அதிலே பெண்கள், முதிய்வர்கள், குழந்தைகள் எல்லோரையும் ஏற்றி கொண்டிருந்தனர்.

"இந்தாங்க இந்தாங்க என் பிள்ளைகளையும் ஜாலியா போட்டிலே சுத்தி காமிங்க, நான் கேமிராவிலே புடிச்சுக்கறேன்"ன்னு சொல்லி அவங்க கிட்டே திட்டு வாங்குவதை விட பால்கனியில் இருந்து படம் பிடிப்பதே உத்தமம் என படம் பிடித்து கொண்டிருந்ததை பார்த்த, உயிரை படகில் பிடித்து கொண்டு உக்காந்திருந்த பாட்டி ரெட்டை விரலை காட்டிய போது எம்ஜியாரின் தாக்கத்தை நினைத்து அதிர்ந்தேன்.

வீட்டில் வாசலில் இத்தனை தண்ணீர் பார்த்த எனக்கு இந்தியன் கமல் போல என் பெண்ணுக்கும் 500 ரூபாய் நோட்டில் கப்பல் செய்து கொடுக்க ஆசை இருந்தாலும் இரண்டு காரணங்கலால் அதை தவிர்த்தேன். ஒன்று, ப.சிதம்பரம் கோவிச்சுப்பார், இரண்டு என்னிடம் 500 ரூபாய் நோட்டு இல்லை. ஆபத்பாந்தவனாக தம்பி நட்ராஜ் ஒரு நோட்டு புத்தகத்தை கொண்டு வந்து கொடுக்க நான் கப்பல் செஞ்சு கொடுக்க பாப்பாவும், தம்பியும் கப்பல் விட அந்த நோட் தீரும் போது தான் பாப்பாவுக்கு அது தன் நோட்டு என தெரிந்தது. அதற்கு அபராதமாக நான் 500 ரூபாய் கொடுக்க நேர்ந்தது பாப்பாவுக்கு.பாப்பாவின் ஹிஸ்டரி நோட்டை கிழித்ததுக்கு பதிலாக பேசாம ரூபாய் நோட்டிலே கப்பல் செஞ்சு விட்டிருந்தா ஹிஸ்டரியிலயாவது வந்திருக்கலாம் என நினைத்து கொண்டேன்.

நான்காம் நாள் ரொம்ப கொடுமைங்க. முதலில் இன்வர்ட்டர் போச்சா, அடுத்து எமர்ஜென்சி லைட் போச்சா, அடுத்து ஒரு சார்ஜர் லைட் போச்சு, அடுத்து என் செல் போன் பேட்டரி போச்சு, அடுத்து அபிஅம்மா செல் போன் போச்சு, மெழுகுவத்தி 1 பாக்கெட் அவுட், ரேடியோ இல்லை, கரண்ட் தான் 4 நாளா இல்லியே. 4ம் நாள் இரவு வரை சாமி விளக்கு எல்லாம் எண்ணெய் தீர்ந்து போச்சு. வந்திருப்பது புயலா? வந்திருந்தா கரையை கடந்துடுச்சா, இப்போ மணி என்ன, எப்போ விடியும், அல்லது உலகம் அழிய போகுதா, எதுவுமே தெரியாம இருட்டுக்குள் நானும் பசங்களும், அபிஅம்மாவும். பேசாம போட்டிலே போயிருக்கலாமோன்னு அப்ப தோனுச்சு. ஆனா நிலைமையின் விபரீதம் புரியாம பாப்பா தம்பிக்கு விளையாட்டு காமிக்கிறேன் பேர்வழின்னு "பூ" படத்தின் பாடலை "உச்சா உச்சா மாரி"ன்னு பாட அதுவரை சும்மா இருட்டுக்கு ப்யந்துகிட்டு என் மடியிலே உக்காந்து இருந்த தம்பி உச்சா போயி என் கைலிய நனைச்சுட்டான். ரொம்ப அவசியம் அப்போ அந்த பாட்டு. சரி டைம் பாசுக்கு அந்தாக்ஷரி பாடுவோம்ன்னு அபி சொல்ல நான் எப்போதும் போல பேமிலி பாட்டானா காக்கா பாட்டை பாட ஒரு மாதிரி நிசப்தம். ச்சே என்ன குடும்பம்டா சாமி பாட்டு நல்லா இருக்கு ,நல்லா இல்லை, சரி இந்த விளையாட்டு வேண்டாம், அல்லது யோவ் வாயை மூடுய்யா...இப்படி எதுனா சொல்லனுமா இல்லியா...என்கிட்ட சொல்லாமலேயே என்னை அந்த விளையாட்டில் இருந்து நீக்கிட்டாங்க.

இதல்லாம் போகட்டும். அப்போ இரவா, நடுஇரவா, விடியலா எதுவுமே தெரியாம இருந்த அந்த இரவில் "பாவி மனுசா, புதுவீட்டுக்கு வரும் போதே அம்மி, ஆட்டுக்கல், மண்ணென்னை விளக்கு, எதுவும் எடுத்துட்டு வரகூடாது, எல்லாமே கரண்ட் சமாச்சாரம் தான்னு சொல்லி தடுத்தப்ப எனக்கு எங்க போச்சு புத்தி, நானாவது எடுத்துகிட்டு வந்திருக்கலாமே......" இப்படியாக புலம்பி கொண்டிருந்தது எனக்கும், பசங்களுக்கும் அப்படி ஒரு சொர்க்கமாக தாலாட்டாக இருந்தது. தூங்கிவிட்டோம்.

அடுத்த நாள் கொஞ்சம் மழை நின்னு போயிருந்தது. தண்ணீர் குறைய வில்லை. அப்போதுதான் எங்களுக்கு உலகம் அழியவில்லை என்கிற உண்மை தெரிந்தது. ஆனால் பாவம் அபிக்குதான் ரொம்ப ஏமாற்றமாக இருந்துச்சு. "அப்பா அடுத்த புயல் எப்பப்பா வரும்?". ரமணனை கேட்டு சொல்றேன்ன்னு சொன்னேன்.

குறிப்பு: "நிஷாவும் நானும்"ன்னு தான் இந்த பதிவுக்கு பேர் வச்சிருக்கனும். ஆனா இப்போ டிரண்ட் "அபியும் நானும்"தான்னு தமிழ்மணத்தை பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.அதான் மக்கா. உண்மையான அபியும் நானும் பின்ன எழுதறேன்.

ரெண்டாவது குறிப்பு: வீரசேகர விலாஸ் சீக்கிரமா எழுதறேன். நேத்து தானே துபாய் வந்திருக்கேன். கொஞ்சம் வேலை பளு. அதான்.

November 15, 2008

வீரசேகர விலாஸும், மாமாவும், சீட்டு கச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்!!! பாகம் # 1

இங்கே நான் சொல்ல போவது ஒன்றுக்கொன்று தொடர்புடைய நான்கு விஷயங்கள் பற்றிய ஒரு கோர்வை நிகழ்வை. எங்கள் ஊரில் அப்படி ஒரு சத்திரம் இருப்பது அனேகமாக இந்த தலைமுறைக்கு தெரிய வாய்பில்லை. அந்த "வீரசேகர விலாஸ்" முக்கியமான வடக்கு வீதி, சின்ன கடை தெருவில் இருந்தும் அதன் வெளித்தோற்ற தன்னடக்கத்தின் காரணமாக அந்த வழியே போய் வருபவர்களை அத்தனை கவர்ந்தது இல்லை.

சாலையில் இருந்து திடீரன உயர்ந்து தோன்றும் அந்த 12கருங்கல் படிகள் வழியே மேலே ஏறினால் மேல் படியில் இருந்து பேருந்து ஓட்டுனரோடு ஒரு சின்ன கை குலுக்கல் நிகழ்த்திவிடலாம். அந்த சத்திரத்தின் மேல் படியில் ஏறி உள்ளே நுழைந்ததுமே வலதும் இடதுமாக மூன்று அடி ஆழ முற்றங்கள் இருக்கும். அதிலே இரு பக்கமும் தண்ணீர் குழாய்கள். அந்த முற்றங்களுக்கு மேல் கூறை ஏதும் கிடையாது. அந்த நடை பாதையை தாண்டினால் அந்த முற்றங்களுக்கு நேர் எதிர் பதமாக வலது இடது பக்கமாக உயர்ந்த திண்ணைகள். ஒவ்வொறு திண்ணையிலும் குறைந்தது ஐம்பது ஐம்பது பேர் படுத்து உறங்கலாம். அந்த திண்ணையை தாங்கும் 18 ரங்கூன் மத்தள தூண்களின் மேல் அந்த தாங்கு கட்டையில் கூட மர வேலைப்பாடு தொட்டு பார்க்க தூண்டும். திண்ணையில் சிமெண்ட் வண்ணம் வலது பக்கம் சிகப்பு, இடது பக்கம் நீலம் என சிமெண்ட் பாலில் மெழுகி குளுமையின் உச்சமாக இருக்கும். அதன் சுவர் அத்தனை வழவழப்பாக இருப்பதற்கு இதோ நாளை காலை நடை பெற போகும் கல்யாணத்திலே எத்தனை பேர் எத்தனை காரணங்கள் சொல்ல போகிறார்கள் என பார்ப்போம். தலை வைத்து படுக்க தலையனை மாதிரி கட்ட பட்டிருக்கும். இப்போது இந்த திண்ணை வரை போதும். ஒரேயடியாக வீர சேகர விலாஸ் பற்றி எழுதினால் இந்த தலைப்பு நம்மை பார்த்து சிரிக்கும்.

அந்த "வீரசேகர விலாஸ்" என்பது நாட்டுகோட்டை நகரத்தார் வீடு தான். ஆனால் அது கல்யாண சத்திரமாகி போனது தனி கதை. காரைக்குடி நகரத்தார், வைத்தீஸ்வரன் கோவில் தரிசனத்துக்கு போகும் போதும், தங்கள் மூதாதையரான பட்டினத்தார் வாழ்ந்த பூம்புகார் என்கிற காவிரி பூம் பட்டினத்துக்கும் போகிற வழியில் இளைப்பாற வேண்டி மயிலாடுதுறையில் கட்ட பட்ட வீடாகத்தான் இருக்க வேண்டும் அந்த சத்திரம்.

எங்கள் வீட்டு திருமணம் எல்லாமே அந்த சத்திரத்தில் தான் நடக்கும். கல்யாண பத்திரிக்கை தவிர வேறு எங்கும் "வீரசேகர விலாஸ்" என்னும் பெயரை நாங்கள் பயன் படுத்தியது கிடையாது. எங்களை பொறுத்த வரை அது செட்டியார் சத்திரம் தான். ஆடி, புரட்டாசி, மார்கழி தவிர எல்லா மாதத்திலும் எங்கள் வீட்டு திருமணம் அங்கே கண்டிப்பாக உண்டு. நாளை நடக்க போவது ஒரு அண்ணன் கல்யாணம்.

பெண் வீடு திருப்புகலூர் என்னும் சைவ ஸ்தலமாம். அந்த மணமகள் எங்களுக்கு மிகவும் நெருக்கமான் சொந்தம் தான் என இன்று மாலை வள்ளியம்மை அத்தை விலாவாரியாக "அரை மணி நேரம்' என் அம்மா, பெரியம்மா, சித்தி கூட்டத்துக்கு மத்தியில் உட்காந்து விளக்க போகிறார்கள். இருந்தும் அவர்களுக்கு அது புரிய போவதில்லை என்பது வேறு விஷயம்.

இங்கே வள்ளியம்மை அத்தையை பற்றி சொல்ல வேண்டியது கட்டாயமாக போய் விட்டது. அத்தை ரொம்ப ராசி என்று அத்தையே கூறி கொள்வதாலும் எங்கள் பெரிய தாத்தாவையே நேருக்கு நேர் நின்று "அண்ணா சாப்பிட வாங்க" என கேட்ட சரித்திரம்(?) அவர்களுக்கு இருந்ததாலும் வேறு வழியே இல்லாமல் எல்லோருமே மரியாதை கொடுப்பார்கள். அத்தை என்றால் எங்களுக்கு அத்தை இல்லை, எங்கள் அப்பா, பெரியப்பா, சித்தப்பாவுக்கு எல்லாம் தான் அத்தை. ஆனால் நாங்களும் அத்தை என்றே கூப்பிட்டு பழகி விட்டது.அதனால் கிட்ட தட்ட ஊருக்கே அத்தை. அத்தைக்கு அடையாளம் என பார்த்தால் சிகப்பு கல் 7 கல் வைத்த தோடு, வைர மூக்குத்தி, வெற்றிலை போட்டு சிவந்த உதடுகள், ராசிபுரம் பம்பர் பட்டு புடவை, காலில் முத்து வைத்த மெட்டி, ஆனால் செறுப்பு அணிவதில்லை. தலைமுடி தும்பை பூவாக அள்ளி செறுகப்பட்டு இருக்கும்.கோல்டு பிரேம் போட்ட கண்ணாடி, கிட்டே போனால் வெற்றிலை வாசனையை விட அதன் கூட சேர்த்து போட்ட கிராம்பும், கத்தைகாம்பும் ஒரு வித ரம்மிய வாசானையை கொடுக்கும். கையிலே ஒரு நெளி மோதிரம், சாதாரன வலையல், கழுத்திலே ஒரே ஒரு முறுக்கு சங்கிலி, இத்தனைக்கும் சிகரம் வைத்தது மாதிரி ஒரு சில்வர் வெற்றிலை பெட்டி. அதன் மூடியில் "M. வள்ளியம்மை" என பொறிக்க பட்டிருக்கும். அதன் மூடியை திறந்து பார்த்தால் அது இரண்டாக பிரிக்க பட்டு இருக்கும். அதன் உள்ளே வெள்ளியால் ஆன ஒரு சுண்னாம்பு கரண்டா, வெள்ளியால் ஆன பல்குத்தும் குச்சி, வெள்ளி காதுகுடைப்பான், சின்னதாக ஒரு சிக்கு எடுக்கும் ஒரு வெள்ளி குச்சி இருக்கும். அந்த செல்ல பெட்டியை அத்தையின் கையிலிருந்து பிடுங்கிவிட்டால் அத்தையை அடையாலம் காண்பது மிகவும் கடினம். அத்தைக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது காரனமாகத்தான். அத்தைக்கு என்ன தான் வேலை? ஒரு கல்யாணம் நடக்க போவது எனில் அ முதல் ஃ வரை அத்தையின் அதிகாரமே கொடிகட்டி பறக்கும். பெண்ணோ மாப்பிள்ளையோ சத்திரத்தின் உள்ளே நுழையும் முதல் சத்திரத்தை காலி செய்துவிட்டு வரும் போது வேலைக்காரி மடியை தடவி எவர்சிலவர் டம்ளரை வெளியே எடுத்து " என்கிட்ட யாரும் ஏமாத்த முடியாது" அப்படீன்னு சவடால் விட்டு விட்டு சத்திரத்தை காலி செய்யும் வரை அத்தையின் அட்டகாசங்கள் தான். ஆனால் அத்தையின் வெள்ளி சாமன்களிள் ஏதாவது ஒன்று வழக்கம் போல ஒவ்வொறு கல்யாணத்திலேயும் காணாமல் போவது தனி விஷயம்.

சத்திரத்தை பற்றி அறிமுகம் செய்தாகிவிட்டது. நாளை நடக்கும் திருமணம் பற்றியும், அத்தை பற்றியும் சொல்லியாகி விட்டது. மாமாவும் சீட்டு கச்சேரியும் பற்றி இப்போது பார்க்கலாம். இதோ திருவீழிமிழலை கிராமத்தில் இருந்து தென்பாதி மெயின் ரோட்டுக்கு ஆடி அசைந்து வருவது தான் மாமா. அவர் கையிலே பாருங்கள் ஒரு பை, அதிலே வெற்றிலை சமாச்சாரங்கள் அடங்கின ARC ஜுவல்லரியின் ரெக்சின் பேக், அதன் உள்ளே மூலவியாதிக்கான களிம்பு, வெள்ளி பொடிடப்பா, அதை தவிர குழந்தை மாதிரி சுற்றி வைத்திருக்கிறாரே அது நேற்று கும்பகோணத்தில் இருந்து "டவுன் கிளப்பில்" இருந்து வக்கீல் சோமசுந்தரத்திடம் சொல்லி வாங்கி வந்த சீட்டு கட்டு, சிங்கப்பூர் கட்டு. பிளாஸ்டிக் கட்டு. "சுத்து வட்டாரத்திலே ஒருத்தன்கிட்ட கிடயாதுல்ல" என மாமா சொடக்கு போட்டு சொலவது பார்க்க நன்றாக இருக்கும். மாமா ஆற்றை தாண்டி பாலத்தில் வரும் போதே "கோல்டன்" நின்று விடும். மாமாவின் தகவல் பரிமாற்றம் அத்தனை சுத்தம். நேற்று கும்மோணம் போய் வரும் போதே இன்று மதியம் 2 மணி வண்டிக்கு மாயவரம் வரும் விஷயத்தை சொல்லி விடுவார். ஓட்டுனரும் காத்திருப்பார். வந்து பேருந்தில் ஏறி உட்காந்ததுமே ஓட்டுனரிடம் கேட்பார் " ஒன் மொதலாளி ஊர்ல தானே இருக்காரு. சொல்லிடு நான் இன்னிக்கு செட்டியார் சத்திரத்திலே தான் இருப்பேன்ன்னு" இதோ இன்னும் 40 நிமிடத்தில் மாமாவும் வந்து நம் ஜோதியில் ஐக்கியமாக போகிறார்!

November 13, 2008

மீண்டும் "அபிஅப்பா" - புத்தம் புதிய காப்பி!!!வணக்கம் மக்கா! விட்டேனும் விட்டேன் ஒரு மாத லீவ் தமிழ்மணத்துக்கு! அப்படியே லீவ் எக்ஸ்டன் பண்னி பண்ணி நாள் ஓடி போயிடுச்சு. நடுவே காலை ஆட்டி கொண்டிருப்பதை காட்டி கொள்ள ஒரு பதிவு போட்டேன்.

ஒரு வழியா லீவ் கிடைத்து இந்தியா வந்து டிங்கரிங், புட்டி பார்த்து புது பெயிண்ட் அடிச்சு புத்தம் புதிய காப்பியா ஆகி இதோ இப்போது வெள்ளோட்டம் விட்டு கொண்டிருக்கிறேன். இன்று முதல் புதியதாக பிறந்து இருக்கிறேன் "அபிஅப்பா".

இந்த ஒரு மண்டல விடுப்பில் என்னை காணுமேன்னு சந்தோஷ பட்டவங்க எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லிக்கறேன். ‘என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது!”

மற்றபடி இந்த மயிலாடுதுறை காற்று இருக்கே அது எங்களுக்கு உயிர் மாதிரி! ஊர் போய் சேர்ந்த உடனேயே ஒரு வித புத்துணர்சி வந்துடுச்சு மனசுக்கும் உடம்புக்கும். ஊரில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. நகராட்சி காண்டிராக்ட்காரர்களுக்கு உடனடி பணம் பட்டுவாடா செய்ய படுகின்றது. காரணம் எங்கள் நகராட்சி தலைவர் ஏற்கனவே ஒரு கண்டிராக்ட்காரராக இருந்த காரணத்தால் என நினைக்கிறேன். பண பட்டுவாடா விஷயத்தில் அவர் ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டு இருந்திருப்பார் போல இருக்கு. அடுத்த தடவையாவது கொசுக்கடியில் கஷ்டப்படும் ஒருவரை தலைவர் ஆக்க வேண்டும்.

பஸ்ஸ்டாண்டு எங்கே அமைப்பது என்கிற பட்டிமன்றம் இன்னும் முடியவில்லை. பெரிய ராஜன் தோட்டம் தன் பழைய பொலிவை இழந்து விட்டது. முன்பெல்லாம் வெற்று கிரவுண்டாக இருந்து இரவில் கஞ்சா அடிக்கும் கனவான்களுக்கும், குடிகார குசும்பன்களுக்கும் பொக்கிஷமாகவும், காலையில் கார் ஓட்ட பழகும் பணக்கார அம்மனிகளுக்கும், திருட்டு தம் அடிக்கும் கத்துகுட்டிகளுக்கும், செட்டிதெருவில் இருந்து வழியும் சாக்கடையில் ஸ்னானம் செய்யவரும் நமீதாக்களுக்கும், ஞானாம்பிகை மகளிர் கல்லூரி மாணவிகளின் பாதுகாவலர்களுக்கும் அப்படி ஒரு வசதியாக இருந்தது. ஆனால் இப்போதோ அதிலே சுத்தியும் காம்ப்பவுண்ட் போட்டு வி.ஐ.பி கேட் போட்டு செக்யூரிட்டி போட்டு பெரிய பெரிய வாயில் நுழையாத பெயர் உள்ள விளையாட்டுகளுக்கான இண்டோர் ஸ்டேடியங்களும், உவ்வே அசிங்கமான அவுட்டோர் ஸ்டேரியங்களும் கேலரிகளும், காலை நேரத்தில் வாக்கிங் போகும் எல்லாவயது ஜோடிகளின் அலப்பரைகளும், சோடியும் பல்புகளும் பார்க்கவே கஷ்டமாக இருக்கின்றன. மணிசங்கர் அய்யர் டவுன் டவுன்.

வழக்கத்துக்கு மாறாக காவிரியில் தண்ணீர் பொங்கி வழிந்து போகின்றது. வழக்கம் போல 300 பொடியன்களை சர்வே செய்ததில் 299 பேருக்கு “அந்த” இடத்தில் மாத்திரம் டவுசர் ஓட்டையாக இருக்கின்றது. மீதி ஒருத்தனுக்கு டவுசரே இல்லை.சர்வேயில் நட்டுவும் உண்டு.

ஒரு அமதியான பெண், ஒரு துடிப்பான பெண், ஒரு கடலை போடும் பையன் ஆகியோர் பஸ்ஸ்டாண்டு கடைவாசலில் நின்று அந்த கடலை பையனுக்கு அந்த துடிப்பான பெண் பதில் சொல்லி கொண்டு இருந்தால் அந்த கடலைக்கும், அமைதிக்கும் இடையே தான் காதல் என்னும் காந்தி காலத்து பார்முலா இன்னும் மாறவே இல்லை.

சுந்தரம் தியேட்டர் இடிக்கப்பட்டு அந்த பக்கம் போகவே மனசு “வருஷம் 16” படத்தை ஞாபகப்”படுத்துகின்றது”. அந்த இடத்தில் சாரதாஸ் வர போகுதாம். கூறைநாட்டில் கே.எஸ் பட்டு செண்ட்டர் வந்துவிட்டது. சாரதாஸ் மட்டும் வரட்டும் சீமாட்டி அவுட்டுடான்னு ஜோசியம் சொல்லி கொண்டு போகிறார்கள் அந்த இடத்தை கடப்பவர்கள்.

தாசில்தார்கள் இன்னமும் பேண்ட்டை இன் செய்யாமல், செறுப்பு போட்டு கொண்டு அதிலும் சிலர் வெற்றிலை போட்டு கொண்டு “இதுக்கு ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ் இருக்குப்பா”ன்னு சொல்லி கொண்டுதான் இருக்கின்றனர். முனிசிபாலிட்டியில் நாமம் போட்ட நாராயனன் எல்லோரையும் “ந்தா ஓரமா நில்லு”ன்னு ஒருமையில் சொல்லி குலப்பெருமை காக்கின்றார்.

பி.எஸ்.என்.எல் கஸ்ட்டமர் சர்வீஸ் அருமையாக இருக்கின்றது. “சார் இந்த பேக்கேஜ் எடுத்தா உங்களுக்கு இத்தனை நஷ்ட்டம் வரும். நான் சொல்றதை சொல்லிட்டேன் அதுக்கு மேல உங்க இஷ்ட்டம்”

பஸ்ஸில் இருந்து பொலிச்சுன்னு வெற்றிலை துப்புபவர்களை யாரும் கண்டு கொள்வதே இல்லை. பேருந்து நிலைய கட்டண கழிப்பிடம் மற்ற எல்லா ஊர்களை காட்டிலும் அருமையோ அருமை.

எல்லா ஹாஸ்பிட்டல்களிளும் கூட்டம் வழிகின்றது. டாக்டர்கள் ஒரு ஹாஸ்பிட்டலில் இருந்து அடுத்த ஹாஸ்பிட்டலுக்கு அடுத்த அடுத்த ஆப்ரேஷன்களுக்கு ஜெட் வேகத்தில் பறக்கின்றனர்.

“அடுத்த கெட் டு கெதர் எங்க வச்சுக்கலாம்” என யூனியன் கிளப்பில் எல்லா ரோட்டரி, ஜேசீஸ், லைன்ஸ் என ஒத்துமையாக ஒரே டயலாக்கை பேசுகின்றனர்.

இது எதுக்குமே சம்மந்தம் இல்லாமல் மாயூரநாதரும், அவயாம்பிகையும் கோவிலுக்கும் லாகடம் காவிரிகரைக்கும் காலை போய் இரவு திரும்பி இந்த ஐப்பசி மாதத்தை சந்தோஷமாக கழிக்கின்றனர். நேற்று திருகல்யானம். நாளை அடுத்தநாள் தேர் திருவிழா. 14ம் தேதி கடை முழுக்கு திருவிழா! மகாதானதெருவில் இரு பக்கமும் கடைவிரித்தாகி விட்டது. நான் கூட ஒரு பலூன் வாங்கினேன். இன்னும் பஞ்சுமிட்டாய் வாங்கவில்லை.

அதல்லாம் போஒகட்டும் டோண்டு சார் பாணியில் சொல்ல போனால் சமீபத்தில் 39 வருஷத்துக்கு முன்பு இதே நாளில் எடுக்கப்பட்ட என் போட்டோ எதேர்சையாக இன்று பழைய குப்பையை கிளறும் போது கிடைத்தது. எப்படி களத்தூர் கண்ணம்மா கமல் மாதிரி இருக்கேனா?

நாளை முதல் வழ்க்கம் போல கிறுக்க போகிறேன்! முதல் கிறுக்கல் ஒரு சின்ன தொடர் எழுத உத்தேசம். பெயர் “வீரசேகரவிலாசும், மாமாவும்,சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்” பெயர் எப்படி இருக்கு?

நாளை சந்திப்போமா!

October 20, 2008

அரையாண்டு தேர்வுக்கு சில டிப்ஸ்!!! (பிட் அடிப்பது எப்படி?)

அது நான் பத்தாவது படித்து கொண்டிருந்த நேரம். அரையாண்டு பரிட்சை வந்து விட்டது. எனக்கும் ராதாவுக்கும் அதுக்கு படிக்கவெல்லாம் சுத்தமா நேரம் இல்லை. தினமும் சின்னகடை தெரு கங்காதரன் சைக்கிள் கம்பனியிலே ஒத்த வெடி, லெஷ்மி வெடி வாங்கி வந்து வெடித்து அது வெடிக்காட்டி அதை பிரித்து மருந்து எடுத்து புஸ் விடுவதிலேயே நாங்க ரொம்ப பிசியா இருந்தோம். அது தீபாவளி நெருக்கம். பரிட்சை முடிஞ்சு பேப்பர் திருத்தி கையிலே கொடுக்கும் நேரம் தீபாவளி டான்ன்னு வந்துடும். வரலாறு/புவியியல், தமிழ், டிராயிங் பேப்பரை மட்டும் வீட்டில் காட்டிவிட்டு மத்த பேப்பரை மாட்டு கொட்டகை கீத்திலே சொறுகி வச்சிட்டு திக்கு திக்குன்னு தீபாவளி கொண்டாடுவதா, இல்லை பேப்பரை காமிச்சுட்டு எங்க முதுகிலே ஒத்தவெடியை அப்பாவை விட்டு வெடிக்க சொல்லிவிட்டு ஒரு நிம்மதியோட தீபாவளியை கொண்டாடுவதா என மனசுக்குள் பட்டி மன்றமே நடக்கும். ராதா தான் சொன்னான்,"டேய் இந்த தடவ நாம கணக்கிலே 100 வாங்கிடுவோம் பேசாம" . அவன் சிரிக்காம பேசுவான். ஆனா எனக்கு தான் பத்திகிட்டு வரும். "எலேய் நாம என்ன ஆசைப்பட்டா 25 வாங்குறோம். பேசாம 100 வாங்குவோம், பேசிகிட்டே 100 வாங்குவோம்ன்னு பெனாத்திகிட்டு, சும்மா இருடா...வேற எதுனா ஐடியா இருந்தா சொல்லு" என்றேன். மாட்டு கொட்டகையிலே மார்க் பேப்பரை மறைத்து வைப்பது உசிதமான ஐடியா தான் எனினும் என் கூட பிறந்த சொக்க தங்கம் இருக்கே சக்கரை கட்டி நான் எங்க ஒளித்து வச்சாலும் கண்டுபிடிச்சுடும். கண்டுபிடிச்சு வீட்டிலே சொன்னா கூட பரவாயில்லை. அதை வைத்து என்னை மிரட்டியே தீபாவளி வரை எனக்கு கிடைக்கும் ஆசீர்வாத வருமானம் முதல் கொண்டு, வெடி பங்கு வரை 50% அக்ரிமெண்ட் போட்டுக்கும். அதுக்கு பேசாம அப்பாகிட்டே அடிவாங்கியே சாகலாம்.

அடுத்த நாள் ராதா சொன்னான்" மாப்ள நான் ராத்திரி முழுக்க மல்லாக்க படுத்து யோசனை பண்ணி பார்த்தேன். நாம பேசாம பிட் அடிச்சுடுவோம்". எனக்கு பக்குன்னு ஆகி போச்சு. மாட்டினா மானமே போகும். அதிலே எங்க ஸ்கூல் தண்டனை கொஞ்சம் வித்யாசமானது. பிட் அடிச்சவனை மனோகரா சிவாஜி ரேஞ்சுக்கு சங்கிலி மாட்டாத குறையா ஹெட்மாஸ்டர் ரூமுக்கு கொண்டு போவாங்க. அடுத்த பத்தாவது நிமிஷத்திலே வகுப்பில் இருக்கும் ஸ்பீக்கர்ல "புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"ன்னு ஊதும் சத்தம் கேட்கும். ஆஹா ஆரம்பிட்டாருய்யா எங்க ஹெட்மாஸ்டர் திரு.பி.ராமசாமி அய்யர்"ன்னு மனசு படபடக்கும். உதாரணத்துக்கு நானும் ராதாவும் மாட்டிகிட்டோம்ன்னு வச்சுகோங்க "புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எல்லாரும் நன்னா கேட்டுகோங்கோ, நம்ம வைத்தாவும், சித்துளி சுப்புவும் பிட் அடிச்சுண்டு இருக்கறச்சே நம்ம வெங்கட்ராமன் கையும் களவுமா பிடிச்சுட்டார். இவா ரெண்டு பேரும் ஆடு திருடின கள்வனாட்டமா ஆகிட்டா. இப்போ நேக்கு முன்னால நின்னு "விட்டுடுங்கோ சார்"ன்னு கெஞ்சறா. அழுதுண்டு இருக்கா. அழறத கேக்கறேளா, டேய் சித்த மைக்குண்ட வாடா ... வந்தாச்சா இப்ப சத்தமா அழனும்". மானமே போயிடும். அழுகையே வராட்டியும் அழுதாகனும். ராதா நல்லா அழுவான், அய்யோ எனக்கு நடிக்க வேற தெரியாதே....(வைத்தாவும், சுப்புவும் எங்க ரெண்டு பேர் அப்பா பெயர்.அவங்களும் அவர் கிட்ட தான் படிச்சாங்க அதனால அவர் எங்களை அப்படித்தான் கூப்பிடுவார்) டக்குன்னு கனவுலகிலே இருந்து மீண்டு வந்தேன். "டேய் ராதா எனக்கு என்னவோ பயமா இருக்குடா, நம்ம கணக்கு சார் தான் எப்படியும் சூப்பரவைசரா வர போரார். இதல்லாம் நடக்காதுடான்னு சொன்னேன்.

எங்க கணக்கு சார் மத்த சார் மாதிரி இல்லை. ஒரு வித்யாசமானவர். பசங்களை ஹால் உள்ளே விடும் போதே தரோவா செக் பண்ணிடுவார். பசங்க எங்க எங்க பிட் வச்சிருப்பாங்கன்னு அவருக்கு அத்துபடி. அப்படி செக் பண்னிட்டு உள்ளே அனுப்பின பின்னே கண்டுக்க மாட்டார். வாசல்ல நின்னு பக்கத்து வகுப்பு சூப்பர்வைசர் சார்கிட்டே பேசிகிட்டு இருப்பார். அப்பப்ப உள்ளே எட்டி பார்ப்பதோடு சரி. சரி பிட்டை உள்ளே கொண்டு போவது எப்படி என்பதே எனக்கும் ராதாவுக்குமான சவாலாக இருந்தது. ராதா பல ஐடியா சொல்லியும் எனக்கு அது ஒத்து வரலை. அவனும் மண்டையை பிச்சுகறான். சரி இன்னும் 1 வாரம் இருக்குதே பார்த்துப்போம் என நினைத்து பொறுமையா யோசிக்க ஆரம்பிச்சோம். அதிலே சார் வேற கடைசி நாள் வகுப்பிலே "நான் சூப்பர்வைசரா இருக்கும் போது என்னை மீரி யாராவது பிட் அடிச்சுட்டா 25 ரூவா பரிசு தர்றேண்டா"ன்னு சவால் வேற விடுறார்.

பரிட்சயும் வந்துச்சு. பரிட்சை அன்னிக்கு காலயிலே 6 மணிக்கு ராதா வந்தான். "என்னடா எதுனா ஐடியா தோணுச்சாடா"ன்னு கேட்டான். நான் ரொம்ப கூலாக சொன்னேன்"டேய் பிரைன ஃபிரிட்ஜ்க்கு உள்ளே வச்சுட்டு பிளேன் ஓட்ட ஆசைப்பட கூடாதுடா, போ போ உங்க அப்பாகிட்டே அடிவாங்க முதுகை தயார் பண்ணி வைடா"ன்னு சொன்னேன். ராதாவுக்கு பயமா போச்சு. அதுக்கு அவன் "டேய் அந்த அய்டியாவை எனக்கும் சொல்லுடா"ன்னு கேக்க நான் "டேய் நான் பண்ணின இந்த ஐடியாவுக்கு நம்ம சாரே 25 ரூவா குடுப்பார் பாருடா. ஆனா உலகத்திலேயே நான் தான் இந்த ஐடியாவை கண்டுபிடிச்ச முதல் ஆள். அத்தன ஏன் அதுக்கு காபிரைட் கூட வாங்க போறேன் பாரு"ன்னு சும்மா அளந்துகிட்டே போனேன். ராதாவுக்கு பொச பொசன்னு வந்துச்சு. அதானே வேணும் எனக்கு! கடைசியா ராதா "சரி எனக்கு தான் சொல்ல மாட்ட அப்படி என்ன ஐடியாவை சொல்லு, டேய் உனக்கு பயம்டா நானும் அதை செஞ்சுட்டா 25 ரூவாயிலே பாதி போயிடுமேன்னு"ன்னு என்னை உசுப்பேத்த நான் "டேய் நான் இப்ப அதை உனக்கு சொன்னாகூட உன்னால ஒன்னும் செய்ய முடியாதுடா ஏன்னா அய்யாவோட ஐடியா அப்பட்டி"ன்னு சொல்ல ராதா "சரி அப்ப சொல்லு முடிஞ்சா"ன்னு திரும்பவும் உசுப்பேத்த நான் மெதுவா சொல்ல ஆரம்பிச்சேன்.

அதுக்கு முன்ன ஒரு சின்ன பிர்ரேக்க்க்க்க்க்க்.....

(வலை மக்களே இப்பவும் சொல்றேன், இந்த பிட் ஐடியாவுக்கு நான் தான் காப்பிரைட் வச்சிருக்கேன்...ஒக்கேய்)

"ராதா நான் நேத்து ஒரு இன்லேண்டு லெட்டர் வாங்கி அதிலே டூ அட்ரசிலே எங்க அப்பா பெயரை போட்டு என் வீட்டு அட்ரஸ் எழுதினேன். பிரம் அட்ரசிலே அக்கா வீட்டு அட்ரசை எழுதினேன். (என் பெரியக்காவுக்கு அப்போது தான் கல்யாணம் ஆகி கும்பகோணத்தில் இருந்தாங்க) அக்கா அப்பாவுக்கு லெட்டர் போடுவது போல , ஆனா உள்ளே நம்ம கணக்கு பார்முலா எல்லாம் எழுதி வச்சுட்டேன். நேத்து அதை போய் போஸ்ட் பண்ணிட்டேன். அது இப்போ 9.30க்கு நம்ம ஸ்கூலை கிராஸ் பண்ணும் காமராஜ் அப்பா(போஸ்ட்மேன்) கையிலே இருக்கும். நான் ஸ்கூல் வாசல்லயே அதை வாங்கி ஆனா அதை பிரிக்காம என் சட்டை பாக்கெட்டிலே வச்சிப்பேன். சார் செக் பண்ணி உள்ளே அனுப்பும் போது இந்த லெட்டரை எடுத்து பார்ப்பார் அப்போ நான் சொல்லுவேன்"சார் அக்கா அப்பாவுக்கு லெட்டர் போட்டிருக்காங்க சாரி. இப்ப உள்ள வரும் போது போஸ்ட்மேன் கொடுத்தார் சார்"ன்னு சொல்லுவேன். அவரும் அதை என் பாக்கெட்டிலே வச்சிடுவார், பின்ன என்ன உள்ளே போய் பிரிச்சுக்க வேண்டியது தான்"

அசந்து போயிட்டான் ராதா. சார் கையாலயே பிட்டை பாக்கெட்டில் வச்சி அனுப்பும் படி செஞ்சுட்டானேன்னு. அப்ப அவன் "டேய் ஒரு வேளை நீ லெட்டரை பிரிச்சு வச்சு எழுதும் போது அதிலே நியூமெரிக்கல் லெட்டர்ஸ்ம், சைன்ஸ்ம் இருக்குமே அதை வச்சி கண்டு பிடிச்சா என்ன பண்ணுவே"ன்னு கேட்டான். அதுக்கு நான் "டேய் நான் என்ன உன்னைய மாதிரி கேனையனா, இதோ அந்த லெட்டரிலே என்ன எழுதினேன்ன்னு இருக்கு பார் இந்த பேப்பரிலே, இதிலே பிள்ளையார் சுழியை தவிர எங்கயாவது நியூமெரிகல் எழுத்து வந்திருக்கா, இல்லை சைன் வந்திருக்கா, டே எல்லாத்துக்கும் கிட்னி வேணும்டா" ராதா அந்த லெட்டரை பார்த்து பிரம்மிச்சு நின்னான்.இதோ அந்த லெட்டர்! படிங்க!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்புள்ள அப்பாவுக்கும் அம்மாவுக்கு உங்கள் மகள் வணக்கம் செய்து எழுதி கொண்டது. இங்கு நான், அத்தான் முதல் எல்லோரும் நலம். அது போல் அங்கு உங்கள் எல்லார் நலனையும் அறிய ஆவல்.

விரிவான சூத்திரம், அத்தை தலையிலே அடி மைனஸ் மாமா தலையிலேஅடி சமம் திற அத்தை மைனஸ் மாமாமூடு திற அத்தை தலையிலே குட்டு கூட்டுஅத்தைமாமா கூட்டு மாமா தலையிலே குட்டு மூடு .

குவாட்டர் அடித்தால் அத்தை சமம் மைனஸ் அப்பா சமமோ, சமம் இல்லியோ பெரிய தலையின் குட்டுக்கு உள்ளே, அப்பா தலையிலே குட்டு மைனஸ்நாலுஅம்மா அக்கா அதை வகுக்குவம் இரண்டு அம்மாவால்.
@@@@@@@@

@@@@@@

@@@@@

இப்படிக்கு உங்கள் மகள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

படிச்சுட்டு ராதா ஒன்னுமே புரியாம சொன்னான்"என்னடா இது ஏதோ குடும்ப சண்டை போல இருக்கு". அதுக்கு நான் சொன்னேன்"இல்லடா சில அருஞ்சொற்பொருள் மனப்பாடம் செஞ்சு வச்சிருக்கேன். அது புரிஞ்சா இது புரியும்"ன்னு சொன்னேன். அவன் கேட்டதுக்கு அந்த விஷயத்தையும் சொன்னேன். அது இது தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

1.a=அம்மா
2.b=அப்பா
3.c=அக்கா
4.ஸ்கொயர் = தலையிலே குட்டு
5.x=அத்தை
6.y=மாமா
7.cubic = அடி
8.bracket open = திற
9.bracket close = மூடு
10. விரிவான சூத்திரம் = expansion formula
11. குவாட்டர் அடித்தால் = quardratic equation

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@படிச்சு முடிச்ச ராதா தன் தோல்வியை ஒத்துகிட்டு போயிட்டான். நான் 9 மணிக்கு கிளம்பி சின்ன கடைதெரு பிள்ளையாருக்கு 10 பைசா சூடம் கொளுத்தி "என்னோட இந்த பிராஜட் நல்லா நடக்கனும்"ன்னு வேண்டிகிட்டு ஸ்கூல் வாசல்ல நின்னு காமராஜ் அப்பாவுக்காக வெயிட் பண்ணினேன். அப்போ ராதா வந்தான். நல்லா ரிலையன்ஸ் பிரஷ்ஷா வந்து "வாடா உள்ளே போகலாம்"ன்னு கூப்பிட்டான். எனக்கு சரியான கோவம். மணி 9.40 அப்போ. எப்போதும் 9.30க்கு அந்த இடத்துக்கு வரும் போஸ்ட்மேன் இன்னும் வரலியேன்னு."நீ போடா உன் வேலைய பார்த்துகிட்டு, நான் காமராஜ் அப்பா வந்தா தான் வருவேன்"ன்னு சொல்லி அவனை அனுப்பி விட்டு நகத்தை கடித்து துப்ப தொடங்கினேன். மணி 9.50,51,52 அவர் வரவில்லை. எனக்கு கண்ணு பூத்து போச்சு. பயம் மனசை நிரப்பிகிச்சு. மணி 10.10 ஆச்சு. 10 மணிக்கு பரிட்சை. சரி உள்ளே போவோம்ன்னு போனேன். எனக்கு பரி"சோதனை" எல்லாம் முடிஞ்சு 10.20க்கு கொஸ்ட்டின் பேப்பரை வாங்கிகிட்டு எழுத உக்காந்தேன். "சார் ஒரு பேப்பர்"ன்னு ராதா குரல் கொடுத்தான். ஆஹா 20 நிமிஷத்திலே அடிஷனல் பேப்பர் எல்லாம் வாங்குறானே, ஒரு வேளை பார்முலா எல்லாம் படிச்சு இருப்பானோன்னு எனக்கு ஒரு டவுட். பேப்பரை வாங்கி கிட்டு என்னை பார்த்து ஒரு மந்தகாச புன்னகையை வீசுறான். எனக்கு கொஸ்டின் பேப்பரை பார்த்ததும் அழுகையும் ஆத்திரமுமா வந்துச்சு. ஏன்னா நான் பிட்டிலே எழுதின அத்தனை பார்முலாக்கு உள்ள கேள்வியே வந்திருந்துச்சு. அது மட்டும் இருந்தா ஒரு 70 மார்க் எடுத்து இருப்பேன். சரின்னு மெதுவா எழுத ஆரம்பிச்ச போது ராதா அடுத்த பேப்பரை வாங்குறான். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.

இப்படியாக நான் ஒரு 25 மார்க்குக்கு தேத்திகிட்டு இருக்கும் போது வைத்தா (இது ஸ்கூல் பியூன் சமீபத்தில் சிதம்பரம் கோவிலில் பார்த்தேன், ரொம்ப வயசாகிடுச்சு) வந்து பேப்பர் கட்ட நூல் வச்சிட்டு போறார். 3 மணி நேரம் முடிஞ்சதும் டக்குன்னு சார் வந்து எல்லார் பேப்பரையும் அவசர அவசரமாக எடுத்துட்டு போனார். எல்லாரும் வெளியே போன பின்னவும் ராதா ஏதோ ஒரு படபடப்போட கிளாஸ் ரூம் உள்ளே நின்னு கிட்டு எதையோ தேடிகிட்டு இருந்தான். நான் போய் "என்னடா"ன்னு கேட்டேன். அப்பதான் மெதுவா சொன்னான். "டேய் நான் உனக்கு வழக்கம் போல துரோகம் பண்னிட்டண்டா, காலையிலே நான் போய் போஸ்ட் ஆபீஸ்ல காமராஜ் அப்பா லெட்டர் பிரிச்சுகிட்டு இருக்கும் போதே அக்கா லெட்டர் போட்டிருக்கும் விஷயத்தை சொல்லி உன் அம்மா அந்த லெட்டரை வாங்கி வர சொன்னதா சொல்லி நான் வாங்கி வந்துட்டேன். சார் செக் பண்ணும் போது இது என்னான்னு கேட்டார். உங்க வீட்டு லெட்டர் போஸ்ட் மேன் கொடுத்தார்ன்னு சொல்லி பின்ன உள்ளே போய் பிரிச்சு நல்லா எழுதினேன். ஆனா அவசரத்திலே அந்த லெட்டரையும் பேப்பர் உள்ளயே வச்சுட்டேன் போல இருக்கு நல்லா மாட்டிகிட்டேன்"ன்னு சொன்னான்.

எனக்கு ஒரு பக்கம் ஆத்திரம் வந்தாலும் ஒரு பக்கம் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஏன்னா வழக்கம் போல வரும் போஸ்ட் மேன் லேட்டா வந்ததினால நான் பரிட்சை ஹாலுக்கு வந்த பின்னே லெட்டர் நேரா அம்மா கைக்கு போயிருக்கும். அம்மா பிரிச்சு பார்த்து விட்டு அப்பா கிட்டே குடுத்து இருப்பாங்க. பின்ன என்ன வழக்கம் போல ஊருகாய் போட்டிருப்பாங்க. அதில இருந்து தப்பிச்சேனே ராதா போய் லெட்டரை வாங்கி வந்ததால. அடுத்த சந்தோஷம் ராதா அந்த லெட்டரை பேப்பர் உள்ளே வச்சு குடுத்ததினால சார் கிட்டே அடி வாங்க போவதை நினைத்து மகா சந்தோஷம். இதை ராதா கிட்டே சொன்ன போது அவன் சொன்னான்" டேய் நான் என்னிக்கு தனியா அடி வாங்கியிருக்கேன். சார் கிட்டே அந்த லெட்டர் மாட்டினா நீ தானடா முதல்ல அடி வாங்குவே, ஏன்னா அது உன் லெட்டர் தானடா".

தவிர 2 பேருக்கும் ஒரு சந்தோஷம் என்னான்னா சார் தான் சொல்லியிருக்காரே அவரை மீறி பிட் அடிச்சா 25 ரூபார் ரிவார்டு உண்டுன்னு. சரி அதை வச்சி தீபாவளியை சந்தோஷமா கொண்டாடிடலாம்.

September 25, 2008

உளுந்தூர்பேட்டை காத்தவராயனுக்கு போன் போடுங்கப்பா!!!
ஒரு 5 வருஷம் முன்ன விசா மாற்றும் விஷயமாக பக்கத்திலே ஒரு சின்ன தீவு "கிஷ் அய்லாண்டு"ன்னு, அங்க போயிட்டு வர வேண்டி இருந்துச்சு. ஒரு 50 பேர் உக்காந்து போகும் அளவு சின்ன விமானம். அதன் பேரு தான் விமானம். ஆனா அது ஒரு மானம் கெட்ட விமானம். உள்ளே அத்தனை கச்சடா. ஜன்னல் பக்கம் எல்லாம் துணி ஸ்கிரீன் அழுக்கா போட்டிருந்தாங்க. சீட் எல்லாம் வியர்வை சொட்ட சொட்ட பட்டான் உக்காந்த மாதிரி படை படையா இருந்துச்சு. சரின்னு சீட் மேலே ஒரு பேப்பரை போட்டு என் உடம்பின் எந்த பாகமும் சீட்டிலே படாத மாதிரி லாவகமா குந்திகிட்டு எதுனா விசில் வச்சிகிட்டு கண்டக்டர் இருக்காரான்னு சுத்திலும் பார்த்தேன். யாரும் இல்லை. பின்னே விரல் நுனியால அந்த ஸ்கிரீனை விலக்கினேன். அங்க தான் நம்ம இந்த பதிவோட ஹீரோ உளுந்தூர்பேட்டை காத்தவராயன் பெயர் எழுதி இருந்துச்சு. வஞ்சகமே இல்லாம எல்லா இந்திய மொழியிலும் தன் காதலிகள் பெயரையும் அந்த காதல கனவான்கள் எழுதி இருந்தனர். சில பேர் அனடாமி பாடம் நடத்தியிருந்தனர். கையிலே பேனா இல்லாதவர்கள் பைலட் கிட்டே வாங்கி எழுதியிருப்பானுங்க போல இருக்கு. சரி விஷயத்துக்கு வருவோம்.

" அன்புள்ள புனிதா நா ஒன்ன கதலிக்கிறேன்,
நீ என்னை கதலிக்கிறியா?
நா ஒன்ன பிளேன்ல கூட்டி பொவன்.
நா சன்ன பக்கம் நீ எனக்கு பக்கமா இருக்க
முத்தம் கொடு

இப்படிக்கு
காத்தவராயன்
3,வாத்துகார தெரு,
(டீ கடை எதுக்க)
உளுந்தூர்பேட்டை(போஸ்ட்)
த.நா-இந்தியா
என் துபாய் நம்பர்050 3803271
எனக்கு பொன் பன்னு''

இப்படித்தான் அந்த பிளைட் ஜன்னல் பக்கம் எழுதியிருந்துச்சு. அப்படியே குறிச்சுகிட்டேன். இது போதாதா நமக்கு. திரும்ப துபாய் வந்த பின்னே முதல் வேலையா நம்ம காத்தவராயனுக்கு போன் பண்ணினேன்.

"ஹலோ காத்தவராயனா"

"ஆமாங்க"

"நான் ரஷ்யா பிளைட் கம்பனியில இருந்து பேசறேன். நீங்க பிளைட்டிலே கன்னா பின்னான்னு எழுதி நாசம் பண்ணிட்டீங்க. அதுக்கு சுண்ணாம்பு அடிக்கும் காசை நீங்க தான் தரனும். இன்னும் 1 வாரத்துகுள்ள 3000 திர்காம் ரெடி பண்ணுங்க.நாங்க வந்து வாங்கிகறோம்"

"அய்யோ நான் எழுதலீங்க என் கூட வந்த மலையாளி தாங்க எழுதினாரு"

"அடங்கொய்யால மலையாளி எப்படி தமிழ்ல எழுதினாருய்யா"

"சார் சார் என் சம்பளமே 450 திருகாம் தானுங்க, அந்த இடத்துல மட்டும் பெயிண்டு அடிக்கும் காச குடுக்குறேன் சார்"

"சரி சரி பின்ன பேசறேன்"

ஆகா இதை வச்சி 1 வாரம் ஓட்டலாம் போல இருக்கேன்னு நெனச்சுகிட்டு ரூம்க்கு வந்து பசங்க கிட்டே விஷயத்தை சொன்னேன்.உடனே ஒருத்தன் நம்பரை குடுங்கன்னு வாங்கினான்.

"ஹல்லோ காத்தவராயனா, நாங்க துபாய் முனிசிபாலிட்டியில இருந்து பேசறோம். நீங்க துபாய் கக்கூஸ்ல எழுதி வச்சிருந்தீங்க இல்லியா உங்க அட்ரசை அதுக்கு வெள்ளை அடிக்கனும். அதுக்கான சார்ஜ் நீங்க முனிசிபாலிட்டியிலே வந்து கட்டிடுங்க - 3000 திர்காம்"

"அய்யா அது நான் எழுதலீங்க, ஆமா எந்த கக்கூஸ் பர்துபாய் பஸ்ட்டாண்டு கக்கூசா இல்லாட்டி டேரா அல் நாசர் ஸ்கொயர் கக்கூசாங்க"

போனை பொத்தி கொண்டு ரூம் மெட் எங்க கிட்ட சொல்றான் "இவன் வளச்சு வளச்சு துபாய்ல எழுதியிருக்கான் போல இருக்கு"ன்னு.

"ஹல்லோ மிஸ்டர் காத்து, நாங்க இது வரை ஒரு கக்கூஸ்ல தான் செக் பண்ணியிருக்கோம். ஒரு ஸ்பெஷல் டீம் போட்டு எல்லா கக்கூஸ்லயும் செக் பண்ண சொல்லியிருக்கோம். ஆக நீங்க எதுக்கும் ஒரு 10000 திர்காம் ரெடி பண்ணுங்க, நாங்க வந்து வாங்கிக்கறோம்"ன்னு சொல்லி போனை வச்சுட்டான்.

அப்போது அடுத்த ரூம் மெட் உள்ளே வரவும், அவனிடம் சொல்லி சிரிச்சோம். அவன் "அந்த போன் நம்பர் குடுங்கன்னு கேட்டு வாங்கிகிட்டு நம்ம காத்துக்கு போன் பண்ணினான்.

"ஹல்லோ மச்சான் எப்படி இருக்கிய"

""நீங்க யாருங்க"

"என்னை தெரியலையா புனிதாவோட அண்ணன். நானும் துபாய் வந்துட்டேன். இப்ப தான் உங்க போன் நம்பர் கிடைச்சுது"

"புனிதாவுக்கு அண்ணன் கிடையாதே, ஓ பெரீப்பா பையன் சோமுங்களா? என் நம்பர் எப்புடி கெடச்சுது"

"உங்க நம்பர் தான் ஒலகத்துக்கே தெரியுமே, நான் நைஃப் பார்க்கிலே பார்த்தேன் மச்சான். ஒங்களுக்கு புனிதாவை கட்டி வக்கிறதா முடிவு பண்ணிட்டோம். எப்ப போவலாம் ஊருக்கு, எத்தன பவுன் போடுவீங்க"

"ரொம்ப சந்தோஷமுங்க மச்சான். நா ஒரு 3 பவுன்ல சங்கிலி போடுறங்க, புனிதா எப்புடி இருக்குங்க, ஒங்க சித்தப்பாரு வெஷயம் தெரிஞ்ச பின்ன அதை போட்டு அடிச்சாருங்க, அதுல மனசு கேக்காம துபாய் வந்தவன் தான். அந்த சாமி தான் அவரு கண்ண தொறந்து மனச மாத்தியிருக்குங்க"

"என்ன மச்சான் ஒரு 10 பவுனாவது போடுவீங்கன்னு நெனச்சேன்"

"இல்லீங்க ஒரு பிளைட் கம்பனில ஒரு நண்பருக்கு 3000 தரனும், பல்தியா(முனிசிபாலிட்டி) நண்பருக்கு வேற தரனும். நா கல்யாணத்துக்காக சீட்டு போட்டிருந்தனா, அதை எடுத்து தான் தரணும். நேரமே சரியில்லைங்க"

"அப்புடியா சரி, நான் பின்ன பேசறேன், ஆனா ஒங்களுக்கு நல்ல சேதி சொன்னதுக்காக எனக்கு பேண்ட், சட்டை, வாட்ச், மோதரம் எல்லாம் போடனும் சரியா, ஆனா இனிமே இந்த கக்கூஸ், பார்க் இங்கல்லாம் எழுதறத விடுங்க"

"சரிங்க மச்சான், சத்தியமா இனிமே வூட்டுக்கு லெட்டர் கூட எழுத மாட்டேன் மச்சான்"

அப்போ வேற ஒரு நண்பர் வந்தார் ரூமுக்கு. அவர் ஒரு டிரான்ஸ்போர்ட் ஆபீசர். ஒரு நாளைக்கு 300 போன் வரும். சும்மா டிவில நியூஸ் கூட கேக்க விடாம போன்ல தொன தொனன்னு பேசிகிட்டே இருப்பார். அவரையும் கலாய்க்க வேண்டிய கட்டாயத்திலே இருந்தோமா, அப்ப அவரு தான் வாங்கின புது போனை குடுத்து பார்க்க சொன்னார். ஒருத்தன் மாத்தி ஒருத்தன் பார்த்துகிட்டே வந்தோம். அதிலே ஒருத்தன் நம்மா கத்தவராயன் நம்பர்க்கு அவர் போனை டைவர்ட் பண்ணி விட்டுட்டான்.

அப்படியாக ஒரு 2 நாள் காத்தவராயனை காத்துபோனராயனா மாத்தி பின்னே இனிமே பொது இடத்திலே இப்படி எல்லாம் எழுத கூடாதுன்னு சொல்லி அனுப்பினோம். அப்பவும் ஒரு ரூம் மெட் அவனோட கொடுங்கோல் மேனேஜர் நம்பரை மிஸ்டர் காத்துகிட்டே கொடுத்து " வெள்ளி கிழமை காலை 6.00 மணிக்கு போண் பண்ணி குட்மார்னிங் சொல்ல சொல்லி அனுப்பினான்.

இப்போ 2 நாள் முன்ன பெட்டிய நோண்டிகிட்டு இருந்தப்ப அந்த நம்பர் கிடைத்தது. சரி காத்து இப்ப எப்படி இருக்குன்னு பார்ப்போம்ன்னு போன் பண்ணினேன். வேற யாரோ எடுத்தாங்க.

"ஹல்லோ காத்தவராயனா?"

"இல்ல நான் முத்து"

"இதுக்கு முன்ன இந்த நம்பர் யார் கிட்டே இருந்துச்சு"

"ம் இதுக்கு முன்ன மைசூர் மகாராஜா வச்சிருந்தாரு, அதுக்கு முன்ன சொப்பன சுந்தரி வச்சிருந்தாங்க, ஆனா அவங்களை யார் வச்சிருக்காங்கன்னு தெரியாது. போனை வைய்யா"

ஒரு வேளை பிளாக் படிக்கிறவனா இருப்பானோ. இத்தன வெவரமா இருக்கான்!!!

முடிஞ்சா இந்த முத்துவை கலாய்ச்சி பாருங்கப்பா போன் பண்ணி!

September 22, 2008

கலக்கிட்ட சந்துரூஊஊஊஊ!!!!!!

நான் ஒரு 5 வருஷம் முன்ன ஒரு உப்புமா கம்பனியிலே ஒரு 2 மாதம் வேலை பார்த்தேன். உப்புமான்னா சாதாரண உப்புமா இல்லை. கிட்ட தட்ட நம்ம பெனாத்தலார் பாணியிலே ஸ்ட்ராங்கான உப்புமா. நான் ஏமாந்ததே அந்த கம்பனியின் சைன் போர்டை பார்த்து தான். அத்தன பெரிய போர்டு.அந்த கம்பனியிலேயே அதான் பெரிய விஷயம்ன்னு எனக்கு பின்ன தான் தெரிஞ்சுது. சரி இது தான் துபாய்லயே பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி போல இருக்குன்னு நெனச்சு தான் இண்டர்வியூவுக்கு போனேன். நான் கேட்ட சம்பளத்தை கேட்டதும் அந்த மேனேஜர் மட்டும் இல்லை அந்த கம்பனியே ஆடி போச்சு. மேனேஜர் சொன்னார்" எங்க கம்பனியின் மொத்த லேபர்ஸும் சேர்ந்து வாங்கும் சம்பளம் இது"ன்னு. நானும் சரி தற்காலிகமா இருப்போம்ன்னு சேர்ந்துட்டேன்.கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனின்னா பெரிசா புது பில்டிங் எல்லாம் எடுத்து செய்ய மாட்டாங்க. சும்மா ஓட்டை உடைசல் அடைக்கும் கம்பனி.


ஒரு நாள் மேனேஜர் கூப்பிட்டு ஒரு செல் நம்பர் கொடுத்து "இவர் பேர் சந்திரசேகர். இவரு கம்பனியிலே ஏதோ தண்ணி ஒழுகுதாம். அபுதாபியிலே இருக்கு. நீ போய் பார்த்துட்டுவா. பின்னே இங்க வந்து எத்தனை லேபர், எதுனா பிலாஸ்டிக் ரோல், சிலிகான் சீலண்ட் எடுத்துட்டு போய் ஓட்டையை அடச்சிடு"ன்னு சொன்னார். எனக்கு தான் அபுதாபி போறதுன்னா அத்தன ஒரு குஷி வந்துடுமா. சரி அப்படியே போய் நண்பர்களையும் பார்த்துட்டு வந்துடுவோம்ன்னு சும்மா ஒரு ஜீன்ஸ், டி ஷர்ட், சாதாரன செருப்புன்னு கிளம்பிட்டேன். அபுதாபி போய் ஒரு கூட்டமே இல்லாத ஹோட்டலா பார்த்து உக்காந்து ரிலாக்சா ஒரு டீயை குடிச்சுகிட்டே அந்த சந்திரசேகருக்கு போன் பண்ணினேன்.

நம்ம கிட்ட ஒரு பொருப்புன்னு குடுத்துட்டாதான் பிரிச்சு மேஞ்சிடுவோம்ல. எப்படியாவது அந்த கம்பனியிலே நல்ல பேர் வாங்கி ஒட்டு மொத்த ஓட்டை அடைக்கும் காண்டிராக்டயும் வாங்கி நம்ம கம்பனிய ரித்தீஷ் மாதிரி ஒலக தரத்துக்கு கொண்டு வந்துடனுங்குற ஆசையிலே அப்படியே நுனி நாக்கு இங்லிபீசுல "ஹாய் மிஸ்டர் சந்துரு ஹவ்வார்யூ"ன்னு ஆரம்பிச்சு சும்மா பொளந்து கட்டிகிட்டு இருந்தேன். உங்களுக்கு எங்கயோ ஒழுகுதாமேன்னு கடைசியா வந்த விஷயத்துக்கு வந்தேன். வெள்ளை மாளிகையிலே ஒழுகினா கூட ஹிலாரி வூட்டுகாரர் எங்களைத்தான் கூப்பிடுவாராக்கும் என்கிற அளவு பீலா விட்டேன்.

மனுஷனுக்கு உதரல் எடுத்துடுச்சு. சந்துரு சந்துருன்னு ரொம்ப நாள் பழகின மாதிரி பொங்கிகிட்டே இருக்கேன். அவரும் என்கிட்ட சார் சார்ன்னு பம்மிகிட்டே இருக்கார். நான் ஹோட்டல்ல இருப்பதாகவும் அன்றைக்கே வந்து பார்க்க முடியாது, பர்சனல் வேலை இருப்பதாகவும் சொன்னேன். அதுக்கு அவரும் சரி சார் சரி சார்ன்னு ஏக பவ்யம் காட்டினாரு. நீங்க தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு கார் அனுப்பறேன்னு சொன்னார். நான் என்னவோ ஹில்ட்டன்ல தங்கியிருப்பது போல நெனச்சுகிட்டர். ஆக நான் டீ குடிக்க ஹோட்டலுக்கு வந்த விஷயத்தை அப்புடியே கோழி அமுக்குவது போல அமுக்கிவிட்டு "வேண்டாம் வேண்டாம் நான் என் காரிலேயா வந்துடுறேன் சந்துரு"ன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டு நண்பர்கள் வீட்டுக்கு போயிட்டு அதிலே ஒருத்தர் அடுத்த நாள் காலையிலே வந்து அந்த கம்பனி வாசல்ல விட்டுட்டு போனார்.

கம்பனின்னா அது 10 மாடி இண்டலிஜண்ட் பில்டிங். மிக பெரிய ஆயில் கம்பனி. வாசல்ல செக்யூரிட்டி எல்லாம் மிலிட்டரி. எல்லார் கையிலயும் மிஷின் கன். நான் அந்த செக்யூரிட்டிகிட்ட வந்து "ஐ நீட் டு மீட் மிஸ்டர் சந்துரு"ன்னு சொன்னேன். அவன் என்னை ஏற இறங்க பார்த்துட்டு கிட்ட தட்ட என்னை புழு மாதிரி பார்த்துட்டு எந்த சந்துருன்னு கேட்டான். நான் சொன்னேன் "மிஸ்டர் சந்திரசேகர், அவரோட போன் நம்பர் இது தான்"ன்னு சொன்னேன். அவ்வளவு தான் அவனுக்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. பட படன்னு யார் யாருக்கோ உள்ளே போன் பண்ணினான். முதல்ல தலைமை செக்யூரிட்டிக்கு போன். அவர் சர்ன்னு ஒரு சைரன் வச்ச ஜீப்பிலே வந்துட்டார். என்னை ஒரு குற்றவாளி ரேஞ்சுக்கு சுத்தி நின்னு விசாரிக்கிறாங்க. எனக்கோ பயம் நம்ம சந்துரு எதுனா திருடிகிட்டு மாட்டிகிச்சு போல இருக்கு அதான் அதை தேடி வந்த நம்மை இப்படி டார்ச்சர் பண்றாங்க போல இருக்குன்னு நெனச்சுகிட்டேன்.ரொம்ப நேர விசாரனைக்கு பின்னே ஸ்பீக்கர்ல ஒரு லேடியை கூப்பிட்டாங்க. அவ என்னவோ அரபில அவங்க கிட்ட பேசினா. நான் உடனே போனை எடுத்து நம்ம சந்துருக்கு போன் பண்ணினேன்.

"என்ன சந்துரூ இப்படி கொடையிரானுங்க"ன்னு கேட்டதுக்கு "சார் வந்துட்டீங்களா கொஞ்சம் இருங்க"ன்னு சொன்னார். பின்ன அந்த செக்யூரிட்டி ரூம்ல இருந்த ஸ்பீக்கர்ல நம்ம சந்துரு குரல். உக்காந்து இருந்தவன் எல்லாம் எழுந்து அட்டென்ஷன்ல நிக்கிறான். "செண்ட் மை கெஸ்ட் டு மை ரூம் இம்மீடியட்லி"ன்னு சொல்லிட்டு என் போன்ல கூப்பிட்டு "வெரி சாரி சார், உங்களோட மீட்டிங்கால மத்த மீட்டிங் எல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்"ன்னு சொன்னார். எனக்கு மெதுவா ஒரு பயம் வந்துச்சு. ரொம்ப பீலா விட்டிருக்க படாதோன்னு தோணுச்சு. செக்யூரிட்டி எல்லாம் என்னை ஒரு வித பயம் கலந்த மரியாதையோட பார்கிறானுங்க. என்னை சந்துரு சார் ரூமுக்கு கூட்டிகிட்டு போக செக்யூரிட்டி எல்லாம் போட்டி போடுறானுங்க. அவங்க தலைவர் தானே அழைச்சுகிட்டு போவதா சொல்லி அழைச்சுகிட்டு போறார். நானும் சப்பக்கு சப்பக்குன்னு செருப்பு சத்தத்தோட போறேன். எல்லாரும் என்னையே பார்க்கிறாங்க.

என்னவோ ஏழுமலையான் தரிசனம் மாதிரி கதவு திறந்துகிட்டே போறான் அந்த செக்யூரிட்டி. ஒவ்வொறு கதவுக்கு முன்பும் ஏகப்பட்ட சோதனை. எங்க பார்த்தாலும் கேமிரா கண்கானிப்பு.கடைசியா நம்ம சந்துரு ரூம் வாசலுக்கு வந்தாச்சு. கதவை திறந்து அந்த செக்யூரிட்டி என்னை உள்ளே அனுப்பிட்டு வாசல்லயே நின்னுகிட்டான். நம்ம சந்துருவை பார்த்ததுமே எனக்கு குலை நடுங்கி போயிடுச்சு. சினிமாவிலே ஒரு பணக்கார அப்பாவா ஒருத்தர் வருவாரே வயசானவர், வெள்ளை தாடி வச்சுகிட்டு, நல்ல வெயில்லயும் கோட், சூட் மாட்டிகிட்டு இருப்பாரே அவரை போல இருக்கார் சந்துரு.எனக்கு அப்பவே லைட்டா நடுக்கம் வந்துடுச்சு. சந்துரு அந்த செக்யூரிட்டிய பாத்து ஒரு கத்து கத்தினார் பாருங்க எனக்கு அப்பவே ப்டம் விட்டு போச்சு. கண்ணிலே பட்டாம் பூச்சி பறக்குது. "செக்யூரிட்டி ஹூ இஸ் திஸ், நானே ஒரு முக்கிய கெஸ்ட்டுக்காக வெயிட் பண்ணிகிட்டு இருகேன், இவனை யார் இங்கே விட்டது. மேன் அப்பாய்ன்மெண்ட் இருக்கா மேன்?" அப்படீன்னு கத்துறார். அந்த கெஸ்ட்டே நான் தான்னு சொல்லிடலாமா இல்லாட்டி அப்படியே ஓடி போயிடலாமான்னு நெனச்சுகிட்டே இருக்கும் போதே அந்த செக்யூரிட்டி நான் தான் அந்த கெஸ்ட்ன்னு சொல்ல அவர் முகம் போன போக்கை பார்க்கனுமே....அப்படியே கல்கத்தா காளி மாதிரி ஆயிட்டார்.

"நீயா நீயா மேன் அது உன்னால முடியுமா அந்த தண்ணியை அடைக்க, சொல்லு சொல்லு எந்த மெத்தேடுல சரி பண்ணுவ சொல்லு, உனக்கு இந்த பிரச்சனையோட வீரியம் என்னான்னு தெரியுமா?"அப்படி இப்படீன்னு கத்திகிட்டே இருக்கார். நான் சொன்னேன் "சார் பிலாஸ்டிக் பேப்பர் வச்சு, சிலிகான் சீலண்ட் போட்டு..."ன்னு ஏதோ உளறிகிட்டே இருக்கேன். உடனே தன் கையிலே இருந்த ரிமோட் வச்சு அந்த ரூம்ல இருந்த எல்.சி.டி மானிட்டர்ல பிரச்சனைக்கு உரிய இடத்தை நேரா சூம் பண்ணி காமிச்சார். அப்பவும் கத்துவதை நிப்பாட்டலை. அது என்னா பிரச்சனைன்னா அந்த பில்டிங் கிரவுண்ட் புளோருக்கு கீழே 4 ப்ளோர் கார் பார்க்கிங். பக்கத்திலே கடல் இருக்கு. புட்டிங் சரியா போடாமையோ என்ன பிரச்சனையோ தெரியல கடல் தண்ணி ஊற ஆரம்பிச்சு ஒரு மோட்டார் போட்டு தண்ணிய வெளியே எடுக்கிறாங்க. பெரிய லெவல் பிரச்சனை. கிட்ட தட்ட அந்த பில்டிங்ககே இடிக்க வேண்டிய நிலமை. உலக லெவல்ல கன்சல்ட் பண்ணிகிட்டு இருக்காங்க அந்த் பிரச்சனைய சரி பண்ண. நான் என்னவோ சர்வ சாதாரணமா பிலாஸ்டிக், சிலிகான் சீலண்ட்ன்னு சின்ன பிள்ளை தனமா சொல்லி அவர் குருதி அழுத்தத்தை எகிற செஞ்சுட்டேன். மனுஷன் என்னை குத்தி கொதறி தொண்டை வரண்டு போய் தண்ணிய குடிச்சுட்டு குடிச்சுட்டு திட்டுறார். எனக்கோ ஒரு வழியா வெளியே விட்டா தேவலை போல இருக்கு. அவருக்கு இருந்த கொலவெறியிலே அந்த செக்யூரிட்டிய விட்டு சுட சொல்லிடுவாரோன்னு பயமா போச்சு.

நடு நடுவே அவருக்கு வந்த போன்ல "நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன், இன்னும் அரை மணி நேரத்துக்கு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு வேற சொல்லிகிறார். ஆக நமக்கு இன்னும் அரை மணி நேரத்துக்கு குமுறி எடுக்க போறான்னு தெரிஞ்சுது. அந்த அரை மணி நேரமும் சும்மா வானத்துக்கும் பூமிக்குமா பறந்து பறந்து திட்டி தீர்த்தார். திட்டு எல்லாம் ஸ்டாக் தீர்ந்து போச்சுன்னா யோசிச்சு யோசிச்சு திட்டுறார். கடைசியா கெட் அவுட்ன்னு கத்தின போது தான் எனக்கு கொஞ்சம் பயம் போச்சு. சரின்னு வெளியே வந்தேன். அவருக்கு என்னை திட்டினது பத்தலை போல இருக்கு. திரும்பவம் கூப்பிட்டார். கூப்பிட்டு "டேய் என் அப்பா அம்மா கூட இப்படி சந்துரு சந்துருன்னு தலையிலே அடிச்ச மாதிரி கூப்பிட்டதில்லை... இந்த கம்பனியே என்னை பார்த்து பயப்படுது..என்னை சந்துரு சந்துருன்னு உன் வேலைக்காரனை கூப்பிடுவது போல கூப்பிட்டியே மகாபாவி....உன்னை நான் இந்த ஜென்மத்துல எங்கயும் பார்க்க கூடாது...கெட் அவுட்..........."ன்னு கத்த நான் ஓடியே வந்துட்டேன். உள்ளே போகும் போது அந்த செக்யூரிட்டிகிட்டே இருந்த மரியாதை திரும்பி வரும் போது தலை கீழா மறி போயிருந்துச்சு. கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறை தான்.

மெதுவா வெளியே வந்து என்னை ஆசுவாச படுத்திக்க ஒரு டீக்கடையிலே உக்காந்தேன். அப்போ என் மேனேஜர் கிட்ட இருந்து போன். "என்ன ஆச்சு எத்தன ரோல் பிலாஸ்டிக் தேவைப்படும், எத்தன லேபர் தேவைப்படும்ன்னு பார்த்தியா? அந்த சந்துரு ஆள் எப்படி, காண்டிராக்ட் நமக்கு தானே"ன்னு கேட்டார். நான் அதுக்கு "சார் சந்துரு நல்ல பையன் சார். பசு மாதிரி குணம். ஆனா பாருங்க அவன் ரேன்சுக்கு ஒரு மேனேஜர் லெவல்ல தான் பேசுவானாம். அதனால நீங்க கிளம்பி இங்க வாங்க. நான் கிளம்பி அங்க வர்ரேன். இங்க வந்துட்டுசந்துருக்கு போன் பண்ணி பேசுங்க. சும்மா தைரியமா பேசுங்க. எத்தன பிளாஸ்டிக் ரோல் தேவைன்னு சந்துருகிட்டயே கேளுங்க.சந்துரு பையன் நல்ல குணமான பையன். கிளம்பி உடனே வாங்க"ன்னு சொல்லிட்டு மெதுவா கிளம்பி துபாய் வந்து சேர்ந்தேன்.

September 20, 2008

சிறிது நேரத்திற்கு முன் போன்!!!

அண்ணன் வடுவூர் குமார் போன் பண்ணியிருந்தாங்க. அமீரக ஜோதியிலே ஐக்கியமாயிட்டாங்க!! அண்ணனுக்கு நான் சொன்ன அறிவுரை நான்கு.
1.குசும்பனிடம் போன் பண்னி யார் நம்பரையும் கேட்க வேண்டாம்
2.குசும்பனிடம் போன் பண்னி யார் நம்பரையும் கேட்க வேண்டாம்
3.குசும்பனிடம் போன் பண்னி யார் நம்பரையும் கேட்க வேண்டாம்
4.குசும்பனிடம் போன் பண்னி யார் நம்பரையும் கேட்க வேண்டாம்

வாழ்க வளமுடன்!!!

September 8, 2008

அந்த தாவணி தேவதையின் பெயர்.............

அந்த தாவணி தேவதையின் பெயர் சூடிக்கொடுத்த சுடர் கொடி. அவளின் வசீகரமே அவள் தலைமுடிதான். மற்ற பெண்களின் சடையின் அடர்த்தி இவள் சடையின் ஒரு பிரிக்கு சமமாக இருக்கும். அத்தனை மொத்தமான சடை அவள் முட்டிகால வரை பிரண்டு ஆட்டம் போடும். அவள் கொஞ்சம் குள்ளமான உருவம். நிறம் என்று பார்த்தால் மாநிறம் தான். அவள் சிகப்பாக இருந்திருந்தால் கூட அத்தனை நன்றாக இருந்திருக்காது. நல்ல திருத்திய முகம். ஆனால் எப்போதுமே ஒரு மெல்லிய சோகம் இழந்து ஓடும் உதடுகள். கண்கள், அதன் உள்ளே ஓடி விளையாடும் அந்த கருப்பு திராட்சகள் கிட்ட தட்ட ஆண்கள் அத்தனை பேரையுமே "அட" போட வைக்கும்.

என் வீட்டுக்கு எதிர் வீடு அவளின் உறவினர் வீடு. அவள் வீடு எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ தள்ளி இருந்தது. +2 வரை அங்கே படித்துவிட்டு கல்லூரிக்காக உறவினர் வீட்டுக்கு வந்து விட்டாள். ஒரு காலை நேரத்தில் அவளின் உடமைகள் அடங்கிய ஒரு ஒயர் கூடையோடு அவளின் அப்பா அழைத்து வந்த போது தான் நான் முதன் முதலாக பார்த்தேன். அந்த வினாடியை இந்த நிமிடம் வரை என்னால் மறக்க முடியவில்லை. அவளுக்காகவே நான் தட்டச்சு பயிற்சிக்கு சென்றேன். அவளை கவர எத்தனை முயற்சிகள். ஆனால் அவள் எதற்கும் அசைந்து கொடுக்காதமையால் ஒரு நாள் தட்டச்சு பயிற்சி பள்ளியின் வாசலில் இருந்த அவள் சைக்கிளோடு என் சைக்கிளையும் இணைத்து பூட்டிவிட்டு காத்திருந்தேன். வந்து பார்த்த அவள் கொஞ்சமும் கோபிக்கவில்லை. "என்னங்க நம்ம சைக்கிளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்க" என சொல்லிவிட்டு மெல்லியதாக சிரித்தாள். எனக்கு ஆயிரம் வண்ணத்து பூச்சிகள் மனதில் பறக்க தொடங்கி விட்டது. என்னை இந்த உலகமே கவனீக்க தொடங்கியது போல ஒரு நினைவு. என்னை சுற்றி ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும். என் வேடிக்கை பேச்சுகளால் நான் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். என்னுடைய அந்த குணம் தான் அவளுக்கு பிடித்ததாம். குசூலோடித்கொதுடுங்த்கதன்.சுடர்கொடி என எல்லாம் கிருக்க தொடங்கினேன். எந்த மரத்தை பார்த்தாலும் இதயம் வரைய ஆரம்பித்தேன். ஒரு சீப்பும் கொஞ்சம் முக பவுடரும் நிரந்தரமாக என் சட்டை பையில் வந்து குடியிருக்க தொடங்கியது. எந்த காரை பார்த்தாலும் அந்த கார் கதவின் கண்ணாடியில் என்னை பார்க்க தொடங்கினேன். ஏனனில் அதில் மட்டுமே கொஞ்சம் குண்டாக தெரிந்தேன்.

அவள் கூந்தலுக்கு பூ வைக்க ஆசைப்பட்டேன். அவள் என் கூடவே இருக்க ஆசைப்பட்டேன். நண்பர்களை விட்டு தனியே வந்து சிந்திக்க தொடங்கினேன். அபத்த கவிதைகள் பொங்கி பொங்கி வந்தன. பொங்கியதை எல்லாம் பேப்பரில் வாந்தியாக எடுத்தேன். நானே படித்து மகிழ்ந்தேன். என்னை நம்பாமல் சலூன் கடைகாரரை நம்பினேன் மீசை திருத்த!அம்மாவின் சமையல் பிடிக்காமல் போனது. அப்பாவின் பேச்சுகள் அலுப்பாக இருந்தன. நான் என்ன வண்ணத்தில் உடை உடுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஆளாள் அவள். வித விதமாக என்னை போட்டோ எடுத்து கொள்ள ஆசையாக இருந்தது. அதை அவள் பார்க்க வேண்டும் என்பதில் அதீத ஆசையாக இருந்தது. அவள் போட்டோவை என் இதயத்துக்கு இணைப்பாக ஒட்டி கொள்ள ஆசையாக இருந்தது. ஒரு குச்சியில் அந்த போட்டோவை கட்டி எனக்கு 1 முழத்துக்கு முன்பாக ஆடிக்கொண்டிருக்க அபத்த யோசனை வந்து தனியே வீட்டின் அறையிலே செய்து பார்க்க தூண்டியது. "தென்றலே என்னை தொடு" படமும் "வருஷம் 16" படமும் எனக்கு ராமாயண மகாபாரதமாக ஆகியது. அவள் சடையை பிடித்து இழுக்க ஆசை வந்தது. எங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என எழுதி பார்க்க வைத்தது. யாருடைய கல்யாண பத்திரிக்கையிலோ அந்த மணமக்களுக்கு பதிலாக எங்கள் பெயரை எழுத வைத்தது மனது.

அவள் சாதாரண ஜுரத்துக்கு அவள் உறவினர் சைக்கிளில் டாக்டர் வீட்டுக்கு போய் திரும்பியவுடன் நான் போய் டாக்டரிடம் "டாக்டர் அபாய கட்டத்தில் இருந்து தாண்டிவிட்டாளா இல்லையெனில் அப்போலோ கொண்டு போகலாமா" என கேட்டு டாக்டரை மயக்கமடைய வைத்தேன். முப்பத்தி இரண்டு பக்கத்துக்கு எல்லாம் கடிதம் எழுதி அவளிடம் கொடுக்க வைத்தது மனது. பின் அவளிடமிருந்து 37 பக்க பதில் கடிதத்தை உடனே படிக்காமல் நடு மைதானத்துக்கு கொண்டு போய் உரக்க படிப்பது, பின்னே "சூடிகொடுத்த சுடர் கொடி குலோத்துங்கன்" என்கிற அவள் கையெழுத்தை மட்டும் கிழித்து வாயில் போட்டு விழுங்குவது, (அது போயிருக்கும் ஒரு 500 கையெழுத்து வயித்து குள்ளே)பிரசவத்துக்கு அவளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு வாசலில் நான் கையை பிசைந்து கொண்டிருப்பதாக நினைத்து கொண்ட்தெல்லாம் கொஞ்சம் அதிகபட்சம் தான்.

நான் அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு. அவளோ பெண்கள் கல்லூரியில் முதல் ஆண்டு. நான் இளமறிவியல் முடித்து அடுத்த கட்டத்துக்கு போகும் போது அவள் இன்னும் அதிகமாகவே என்னை விழுங்கிவிட்டிருந்தாள். காதலி உடையவன் என்கிற கர்வம் எனக்கு தனி அந்தஸ்தை கொடுத்திருந்தது. ஆனால் அந்த நேரத்தில் தான் அவள் வீட்டுக்கு விஷயம் தெரிய வர அவள் படிப்புக்கு பாடை கட்டப்பட்டு அவளின் சொந்த ஊருக்கும் அழைத்து போக பட்டாள். நானும் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. காதலிப்பது என்பது கற்பு இழப்புக்கு சமமாக அவள் வீட்டார் நினைத்தார்கள்.அவசர அவசரமாக அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க நாலு திக்கும் ஆட்கள் பறந்தார்கள்.

(ஆறு மாதங்களுக்கு பின்…………………)


அந்த சுடிதார் தேவதையின் பெயர் பிந்தியா. அவள் சேர நன்னாடு. விரித்து விட்ட ஈர தலைமுடியும், நெற்றி சந்தனமும், மயக்கும் கீரி விட்டது மாதிரியான கண்களும்,அவளின் நெடிய உருவமும், எலுமிச்சம் பழ வண்ணமும் ஆண்கள் அத்தனை பேரையும் நின்று பார்க்க வைக்கும். அந்த வண்ணமே அவளின் சிறப்பம்சம், அவள் கொஞ்சம் மாநிறமாக இருந்தால் கூட அத்தனை நன்றாக இருந்திருக்க மாட்டாள். எப்போதுமே அவள் உதடுகளில் ஒரு வித மின்னல் கீற்று மாதிரியான குறும்பு ஓடிக்கொண்டே இருக்கும்.…………………

போங்கப்பா பதிவு ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டது …மாற்றம் என்பது மட்டுமே மாறாதது இவ்வுலகில்!!!!!

August 21, 2008

குடி குடியை கெடுக்கும்!!! (பாகம் # 2)

இதன் முதல் பாகத்தை இங்கே பாருங்கப்பா!!

எல்லோரும் ரவுண்டு கட்டி உக்காந்து கிட்டை பிரித்து பாட்டிலை எடுத்தா அவனவன் "டேய் இங்க குடுடா இங்க குடுடா"ன்னு போட்டி போட்டுகிட்டு என்னவோ பிறந்த குழந்தையை கொஞ்சுவது போல கொஞ்சி முத்தம் எல்லாம் குடுத்துகிட்டு இருந்தானுங்க. அப்ப ராதா "டேய் இன்னும் 10 நிமிஷத்திலே புது வருஷம் பிறக்க போவுது அப்போ ச்சியர்ஸ் சொல்லனும் வருஷம் புதன் கிழமையிலே வேற பிறக்குது. பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுடா பாட்டிலை இங்க குடு நான் பல்லாலயே திறந்துடுவேன்"ன்னு சொல்லி வாங்கிகிட்டான். அவனவன் வீட்டிலிருந்து கொண்டு வந்த டம்ளரை ரெடியா வச்சுக்க தூக்கு சட்டி தண்ணீரும் ரெடியா இருக்க ராதா 20 சதவீத உதடு சேதாரத்தோட திறக்க சைக்கிளில் சில்க் சுமிதா மாதிரி வந்த காரணத்தாலும், பசங்க தூக்கி போட்டு விளையாடியதாலும் புஸ்ன்னு பொங்கி பாதி பீர் போச்சு. ராதா வாயெல்லம் நுரை. அவன் அத நக்கிகிட்டு அவன் முகம் போன போக்கு இருக்கே மீன் கழுவின தண்ணியை குடிச்ச பூனை மாதிரி..ஆனா அவன் சொல்றான் "பேஷ் பேஷ் தேவாமிர்தமா இருக்கு". "டேய் என்னடா பொங்குது"ன்னு கேட்டப்போ ராதா "டேய் நான் தான் சொன்னல்ல மஞ்சு ஒயின்ஸ்ல சரக்கு ஒருஜினலா இருக்கும்ன்னு, இப்பதான் காய்ச்சி இருப்பாங்க அதான் பொங்குது"ன்னு வியாக்யானம் குடுக்குறான். பாதி பீர் கீழே போனது எல்லாருக்குமே கொஞ்சம் சந்தோஷமாத்தான் இருந்துச்சு. ஏன்னா பயம். நாங்களோ பிகினர்ஸ் இதிலே போய் ஃபுல் அடுக்க முடியுமான்னு பயம்.


முதல்ல ராதா எனக்கு ஊத்த அது கால் டம்ளர் ஊத்தின பின்னே இன்னும் பொங்கி புல் டம்ளரா ஆச்சு. பின்னே எல்லாரும் நுரை அடங்கின பின்னே தூக்கு சட்டியிலே இருந்து அந்த கால் டம்ளர் பீரில் தண்ணிய ஊத்தி முழு டம்ளரா ஆக்கி புது வருஷத்தை எதிர்பார்த்து உக்காந்து இருந்தோம். எல்லார் மூச்சியும் பேஸ்த்தடிச்ச மாதிரி இருக்கு. ஆச்சு 12 மணி எல்லாரும் ச்சியர்ஸ் சொல்லி எடுத்து எல்லா துவாரத்தியும் அடச்சிகிட்டு ஒரே மொடக்கு. ராதா அந்த டம்ளரை கீழே வச்ச ஸ்டைல் பார்க்கனுமே. ஆஹா அப்படி ஒரு ஜிவாஜி ஸ்டைல். கீழே வச்ச உடனே அடுத்த வார்த்தை "டேய் எனக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா போயிடுச்சு டோஸ்". கொஞ்ச நேரம் ஆச்சு. எனக்கு எறும்பு கடிச்ச மாதிரி கூட இல்லை. எனக்கு பயம் வந்துடுச்சு. என் உடம்பிலே என்னவோ பிரச்சனை போல இருக்கு அதான் போதை ஏறலைன்னு. மத்தவனுகெல்லாம் எப்படி இருந்துச்சுன்னு தெரியலை. சரி போதை ஏறலைன்னு சொன்னா இத்தன கஷ்டப்பட்டு காசு செலவழிச்சு குடிச்சதுக்கு அர்த்தமே இல்லாம போயிடுமேன்னு கவலை வேற. சரி போதை வந்த மாதிரி நடிச்சிட வேண்டியது தான்ன்னு மெதுவா அந்த பிட்டை போட்டேன். "டேய் நான் ஜிவ்வுன்னு பறக்கிறேன். எனக்கு முன்னாடி இந்திராகாந்தியும் அவங்க கைய பிடிச்சுகிட்டு சஞ்சய்காந்தியும் பறக்கிறாங்கடா"


உடனே சங்கர் கேட்டான்"டேய் அவங்க தான் செத்து போயிட்டாங்களே" நான் சொன்னேன் அதுக்கு "டேய் நான் இப்போ சொர்கத்திலே இருக்கேந்தா". சங்கர் சுதாரிச்சுகிட்டான். உடனே அவன் "டேய் எனக்கு இப்பவே நம்ம மிலிட்டரியிலே சேர்ந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கனும் போல இருக்குடா. இப்ப விட்டா எல்லா வெள்ளைகாரனையும் பிச்சுபுடுவேன் பிச்சு"ன்னு சொல்ல அவனவன் தனக்கும் கிக் ஏறி போனது மாதிரி டயலாக் விட ஆரம்பிச்சுட்டான். எனக்கு தான் பயம். அவனுங்க எல்லாம் நெசமான போதை போல இருக்கு. நம்ம நாளைக்கே நம்ம ராமூர்த்தி டாக்டர்கிட்டே போகனும்ன்னு.சரி இப்ப ராதா பேச்சை வச்சு இதல்லாம் உண்மையான போதையா இல்லியான்னு கண்டுபிடிக்கனும்ன்னு அவன் என்ன பேசுகிறான்ன்னு கவனிச்சேன். அவன் கூலா "சரிடா இப்போ இந்த பாட்டிலை தூக்கி போடனும்டா எங்க போடுறது?"ன்னு தெளிவா கேட்டான். எனக்கு பயம் அதிகமா போச்சு. ஏன்னா ராதா எப்பவும் உளருவான். இப்ப அடுத்தகட்ட நடவடிக்கை பத்தி தெளிவா பேசறானே. அப்ப அவனுக்கும் போதை ஏறிடுச்சு. எனக்கு மட்டும் என்ன ஆச்சு ஏறவே இல்லியே.உடனே கந்தசாமி "ஆமாடா ராதா பாட்டிலை காவிரியிலே கொண்டு போய் போட்டுடுவோம். இல்லாட்டி 1 தென்னைமர அளவு ஆழமா தோண்டி புதைச்சிடுவோம். காலையிலே வந்து இந்த இடத்திலே மிளகாய் பொடி போட்டிடுவோம். அப்பதான் மோப்ப நாய் பிடிக்காது"ன்னு சொன்னான். நான் அதுக்கு "நாம என்ன கொலையா செஞ்சோம்"ன்னு கேட்டதுக்கு அவன் "இப்ப கொலை தான் செய்ய போறேன். இத்தன போதை ஏற வச்ச ராதாவை போட்டு தள்ள போறேன்"ன்னு சொன்னான். அதுக்கு ராதா "வேண்டாம்டா அப்படி எதுனா நீ என்னை கொலை செஞ்சிட்டா தினதந்தியிலே போதையில் இருந்த வாலிபர் கொலை செய்யப்பட்டார்ன்னு வரும் அதை படிச்சுட்டு அப்பா படவா ஏண்டா குடிச்சன்னு திட்டுவார். சொல்ல முடியாது அடிச்சாலும் அடிப்பார்"ன்னு சொன்னான். எனக்கு அப்பதான் ப்யம் தெளிஞ்சுது. ராதா எப்போதும் போல உளற ஆரம்பிச்சுட்டான். ஆக அவனுக்கு சத்தியமா போதை இல்லை. செத்து போன ராதாவை அவன் அப்பா அடிப்பாரம். ராதா செல்லம்னா செல்லம் தான்.


இதிலே நடிக்க தெரியாத 4 பேர்"டேய் எங்களுக்கு கிர்ருன்னு வருது மட்டையாக போறோம்"ன்னு சொல்லி அழகா படுத்துட்டானுங்க. அவனுங்களை எழுப்பி வாங்கடா சைக்கிள்ல கடைதெருவை ஒரு ரவுண்ட் அடிப்போம்ன்னு கூப்பிட்டா எழுந்து ஒருத்தன் "சொல்லுங்க யாரை போட்டு தள்ளனும் கொஞ்சம் இழுங்கடா"ன்னு சொல்றான். சரின்னு அவன் கைய புடிச்சு இழுத்தா "டேய் ஏண்டா இழுக்குறீங்க நான் கொஞ்சம் இருங்கடான்னு சொல்றதை தான் நாக்கு குழறி கொஞ்சம் இழுங்கடான்னு சொன்னேன் அப்படீன்னு சொன்னான். எனக்கு மைல்டா ஒரு டவுட் இப்ப மட்டும் இருங்கடான்னு தெளிவா சொல்றானேன்னு.


ஓக்கே குடிச்சு முடிச்சாச்சு. இப்ப கடைதெருவுக்கு போய் லந்து பண்ண வேண்டியது தான்னு வெளியே வந்தா வுமன்ஸ் காலேஜ் ஹாஸ்டல் வாசல்ல வாட்ச்மேன் ஓமகுச்சி நரசிம்மனுக்கு சிக்கன்குனியா வந்த மாதிரி உக்காந்து இருக்கார். சங்கர் உடனே எங்க கிட்ட "நா வேண்ணா இவரை போட்டு தள்ளிடவா"ன்னு கேக்க மத்தவன்க "வாடா கொலை எல்லாம் செய்ய கூடாது உன்க்கு அப்படி ரொம்ப ஆசையா இருந்தா ஒரு கைய வேண்ணா வெட்டிடு"ன்னு சொல்றாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவர்கிட்ட போய் கொஞ்சம் கைய குடுங்கன்னு கேட்டா அவரே கிள்ளி குடுத்துடுவார். அவரை போய் எதுக்கு வெட்டனும். சரி போதையிலே இதல்லாம் ஜகஜமப்பான்னு நெனச்சுகிட்டேன். எல்லாரும் தண்ணி வீரத்தை காமிச்சுகிட்டே காய்கறி மார்கெட் வழியா போயிகிட்டு இருந்தோம். நான் ரொம்ப கவலையா போதை ஏறலையே நாம யாரை வெட்டுறது?? சரி பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்கிறான், நாம பன்னாவது திம்போமேன்னு மெதுவா சைக்கிளை மிதித்தேன். அப்போ மார்கெட் எதிரே ஒரு பன்னி கூட்டம் குடும்ப சகிதமா ஃப்ரஷ்ஷா பியர்லெஸ் தியேட்டர் அருகே இருந்த பழங்காவிரியிலே குளிச்சு முடிஞ்சு விடிகாலை நாஷ்டா துன்ன மார்கெட் எதிரே இருந்த சாக்கடையில் புரண்டு கிட்டு இருந்தன. விடிகாலை 2 மணி வாக்கிலே முட்டை கோஸ் மேல் தோலும், அழுகிய தக்காளியும் அந்த குடும்பத்துக்கு தான்.


நானே எனக்கு மட்டும் போதை ஏறாத கடுப்பிலே வந்துகிட்டு இருக்கேன். அவனுங்க எல்லாம் போதையிலே மனுஷனை வெட்ட ரெடியா இருக்கானுங்க சரி நாம இந்த பன்னி கூட்டத்தை ஒரு கை பார்த்துடுவோம்ன்னு சைக்கிளை விட்டு இறங்கி ரோட்டிலே ரோடு போட கொட்டி கிடந்த கல்லை எடுத்து சரமாரியா அர்ஜுனன் அம்பு விட்ட மாதிரி விட்டேன். அந்த கூட்டம் சர புரன்னு சாக்கடையிலே இருந்து வெளியே வந்து நாலா பக்கமும் ஓட ஆரம்பிச்சுது. நான் விடுவேனா. நானும் நாலா பக்கமும் விட்டேன் கல்லை. ஆண்டவன் ஒரு கதவை மூடினா ஒரு கதவை திறப்பான்ன்னு சொல்லுவாங்க, பன்னி கூட்டத்துக்கு இருந்த ஒரே வழி மார்கெட் தான். எங்க ஊர்காரங்களுக்கு நல்லா தெரியும் அந்த பெரிய மார்கெட் எப்படின்னு. அதுக்குள்ளே பன்னிகுடும்ப தலைவர் ஓட பின்னாலயே மொத்த குடும்பமும் ஓட (எப்பவும் அந்த நேரம் கூட்டம் இருக்கும் மார்கெட்ல, சில்லரை வியாபாரிகள் வாங்கிகிட்டு இருப்பாங்க) மார்கெட் 3 அடி சந்து சந்தா இருக்கும்....எலேய் எவண்டா பன்னிய இங்க விரட்டுனதுன்னு மார்கெட்காரங்க வெளியே வர என்னை பார்த்துட்டாங்க கையிலே கல்லோடு. பின்னே என்ன எங்க பசங்க நேரா முன்னாடி போயிட்டாங்க கடைதெருவுக்கு. நான் அப்படியே சைக்கிளை திருப்பி செட்டி தெருவுக்கு உள்ளே புகுந்து அப்படி ஒரு மிதி சைக்கிளை. நேரா அம்பாபாய் கல்யாண மண்டபத்து பின் பக்கம் வந்து பரப்பிகிட்டு விழுந்தேன். அடி உடம்பெங்கும். அப்ப யாரும் துரத்தலை. சரின்னு மெதுவா எங்க ஸ்பாட் பிரசவ ஆஸ்பத்திரிக்கு வந்தா பசங்க அங்க நின்னுகிட்டு இருந்தாங்க.என்னை பார்த்து "என்னடா எங்க பின்னாடி தானே வந்த மார்கெட் வரைக்கும் அப்புறம் காணும். இப்ப என்னடான்னா இந்த செட்டி தெரு வழியா வர்ரியே உடம்பெல்லாம் காயமா இருக்கு"ன்னு கேட்டானுங்க.


விடுங்கடா நான் சொல்றதை கேட்டு சண்டைக்கு போக மாட்டேன்ன்னு சத்தியம் பண்ணுங்கடா. அப்பதான் சொல்லுவேன். நீங்க வேற போதையிலே இருக்கீங்க. எனக்கோ சரியான போதையா. ஏற்கனவே மார்கெட் குரூப்புக்கும் எனக்கும் ஒரு சின்ன பிரச்சனை. நான் இன்னிக்கு இருந்த நெலமை தான் தெரியுமே. அதான் எதிர்க்க ஒருத்தன் வந்தான். அவன் ஒதுங்கி தான் போனான். இந்த பாழா போன கிராதகன் ராதா பண்ணின வேலை புதுவருஷம் தண்ணி அடிப்போம்ன்னு சொல்லி நாமளும் அடிச்சு... நானும் கண்ணு மண்ணு தெரியாம சாத்திட்டேன். நல்ல வேளை பொருள் ஏதும் என் கையிலே இல்லை.....நான் பேச பேச பசங்க "அய்யய்யோ இவன் பொருள் கிருள்ன்னு எல்லாம் பேசறானே"ன்னு பயந்துட்டாங்க.


சரிடா நாம காலையிலே எப்போதும் போல பார்ப்போம்ன்னு எல்லாரும் பிரிஞ்சு அவனவன் வீட்டுக்கு போயாச்சு. காலையிலே 10 மணிக்கு ராதா வந்தான். "என்னடா போதை எப்படி இருக்கு"ன்னு கேட்டேன். அதுக்கு அவன் கொஞ்சம் கூட கூசாம "போடா இன்னும் இறங்கவே இல்லைடா இப்ப கூட பாரு நம்ம பெரிய கோவில் யானை வந்துச்சு. தம்மு தம்முன்னு வேகமா வேற நடந்து வந்தாக. எனக்கு கோவம் பின்னால வாலை பிடிச்சு திருகினேன். அப்படியே பின் பக்கத்தை ஜங்கு ஜங்குன்னு ஆட்டிகிட்டே ஓடிடுச்சு" டேய் ராதா இதல்லாம் அடுக்குமாடா? நானும் என் பங்குக்கு "நான் கூட ஒரு புலி வாலை...."என்னால அதுக்கு மேல முடியல. மெதுவா ராதாகிட்டே போனேன். "டேய் நாம கலைஞரும் எம்ஜியாரும் போல எத்தன வருஷம் பழகியிருக்கோம், சத்தியமா சொல்லு உனக்கு போதை இருந்துச்சா? என் தலையிலே அடிச்சு சொல்லு"ன்னு சொன்னேன். ஒத்துகிட்டான். "இல்லடா. அப்ப உனக்கும் ஏறலையா, அந்த மஞ்சு ஒயின்சே இப்படித்தாண்டா ஒரே டுபூப்ளிகேட் சரக்கா விப்பான்"ன்னு பல்டி அடிச்சான்.


சரின்னு காலேஜ் போன பின்னே தங்கதுரைன்னு நல்லா தண்ணி அடிக்கும் ஒருத்தனை பிடிச்சு கேட்டோம். அவன் இந்த விஷயத்திலே கில்லாடி. எல்லாம் ஒன்னுவிடாம சொன்னோம். அதன் பிறகு அவன் 4 மணி நேரம் 27 நிமிஷம் 11 செகண்டு சிரிச்சுட்டு "பீர்ல தண்ணி கலந்து குடிச்சது நீங்க தாண்டா இந்த உலகத்திலே. பீர் கம்பனிகாரனுக்கு இது தெரிஞ்சுது அவனை நீங்க அவமானபடுத்தியதா மான நஷ்ட கேஸ் போடுவான். அதுவும் அரை பீரிலே எட்டு பேர்...ஹய்யோ ஹய்யோ... நானெல்லாம் 4 பீரை முழுசா முழுங்கிட்டு பத்தலைன்னு கத்துவேன் தெரியுமா? போங்கடா போய் லாலிபாப் வாங்கி சப்புங்கடா"ன்னு சொன்னான். உடனே ராதா "சரிடா தங்கதுரை விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும்"ன்னு சொல்லிட்டு வந்தான். அடுத்த நாள் காலேஜ் சைக்கிள் ஸ்டாண்டில் "அரை பீரில் 8 பேர் தண்ணி கலந்து குடித்த வீரர்கள்" என எழுதி எங்க 8 பேர் பெயரும் எழுதியிருந்துச்சு. கீழே எங்க பிரின்சி கையெழுத்தை வேறு போட்டிருந்தானுங்க. (எங்க காலேஜ் சேர்ந்த உடனே பசங்க முதல்ல கத்துக்கும் விஷயம் அவரின் கையெழுத்து போட கத்துப்பது தான். அத்தனை ஈசியா கூட்டெழுத்தில் போட்டிருப்பார்)


அப்ப தான் ராதா சொன்னான் "குடி குடியை கெடுக்கும்"ன்னு. நான் சொன்னேன்"ஏண்டா நாதாறி இப்பதான் புத்தி வந்துச்சா" அதுக்கு அவன் சொன்னான்"இல்லடா தண்ணி ஒரு குடிபானம். அது போல பீர் ஒரு குடிபானம். பீரிலே தண்ணிய நாம ஊத்தினதால தண்ணி பீரை கெடுத்து போதை வராம செஞ்சுடுத்தா அதனாலத்தான் சொன்னேன் "குடி குடியை கெடுக்கும்"

ஜெய் ஜெய் ஜெயந்தி!!! பாகம் # 2 (ஒரு மீள் பதிவு)

நான் பிளாக் எழுத ஆசைப்பட்டு அவசர குடுக்கையா ஒரு பிளாக் கிரியேட் பண்ணி "வணக்கம் - அன்புடன் அபிஅப்பா"ன்னு ஒரு பதிவு போட்டுட்டு வந்துட்டேன். பின்ன அந்த பக்கமே எட்டி பார்க்கலை. வெறும் பின்னூட்டமே போட்டு தாக்கிகிட்டு இருந்தேன். திடீர்ன்னு ஒரு நாள் வந்து எட்டி பார்த்தா" என்ன அபிஅப்பா ஏதாவது எழுதியிருப்பீங்கன்னு வந்து எட்டி பார்த்தா வணக்கம் மட்டும் போட்டிருக்கீங்க! அபி செல்லம் அப்பாவை நாலு சாத்து சாத்துடா- இப்படிக்கு இம்சை அரசி"ன்னு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. எனக்கு முதல் பின்னூட்டமே அது தான்.

அதுல ஆரம்பிச்ச அந்த பழக்கம் இன்று இம்சை அரசி என்கிற ஜெயந்தி என் உடன் பிறவா தங்கச்சியாகி இனி அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நாங்கள் இது போலவே அண்ணன் தங்கையாக இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டும் அளவு பாசமாகியாச்சு!

இன்று அவளுக்கு என் தங்கைக்கு பிறந்த நாள்! அவள் நீடூடி வாழ எல்லா வளமும் பெற்று வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்! நல்லா இருடா செல்லம்!!

குறிப்பு: ஒரு சின்ன பெருமிதம்! என்னால் வாழ்த்தப்பட்ட எல்லோருமே நல்லா இருப்பாங்க என்பதுக்கு ஜெயந்தி ஒரு உதாரணம்! போன பிற்ந்த நாளுக்கு என் தங்கச்சியா இருந்த ஜெயந்தி இப்போ ஜெயந்திமோஹன்பிரபு! அடுத்த வருடம் என் குட்டிமருமகனுக்கோ மருமகளுக்கோ அம்மா!!!

குறிப்பு 2: ஆசீர்வாதமோ, வாழ்த்தோ பெற விழைபவர்கள் அனுகவேண்டிய முகவரி www.abiappa.blogspot.com பணத்தை கிரடிட் கார்டு மூலமாக கிழிக்கவும்! ரசீது தபால் மூலமாக அனுப்பப்படும்!!!

குறிப்பு: முதலில் வந்து ஆசீர்வாதம் வாங்கி போனவர் என் அடுத்த தங்கச்சி கவிதாயினி காயத்ரி! டிசம்பரில் கல்யாணமாக கடவது என ஆசீர்வதித்து அனுப்பியிருக்கிறேன்!!! ஜல்தி ஜல்தி, ஓடியாங்கப்பா!!!

August 20, 2008

குடி குடியை கெடுக்கும்!!!!! பாகம் # 1

குடி குடியை கெடுக்கும்!!!!!

நாங்க நண்பர்கள் எட்டு பேருமே கிட்டதட்ட போக்கிரி டாக்டர் விஜய் மாதிரி தான். ஒரு முடிவு எடுத்துட்டா பின்ன எங்க பேச்சை நாங்களே கேக்க மாட்டோம். 1985 டிசம்பர் 31 இரவு அப்படித்தான் அந்த முடிவை எடுத்தோம். காலேஜ் எல்லாம் வந்தாச்சு, இன்னும் குடிக்க கத்துகலைன்னா நாளைய சமுதாயம் நம்மை பார்த்து சிரிக்குமேன்னு தான் நாங்க அந்த முடிவை எடுத்தோம். வருஷம் பிறக்கும் போது சரியா ச்சீயர்ஸ்ன்னு சொல்லி ஆரம்பிக்கனும்ன்னு முடிவெடுத்தாச்சு. சரி எங்கே வாங்கலாம், என்ன வாங்கலாம் என்பன பற்றி மிகுந்த குழப்பம் ஆகிடுச்சு. ஏன்னா அதன் பெயர் எல்லாம் தெரியாது. ஒருத்தன் பீர்ன்னு சொல்றான், ஒருத்தன் விஸ்கி, ஒருத்தன் பிராந்தி என எல்லாம் சொல்ல நான் மட்டும் கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமே என ஷாம்பெய்ன் என சொன்னேன். அப்ப தான் ராதா "வேண்டாம்டா நாம முதன் முதலா அடிக்க போறோம். ரொம்ப கேரி ஆகிடுச்சுன்னா வம்பு. நீங்க சொன்னதிலே பீர்க்கு மட்டும் தான் இரண்டு எழுத்து இருக்கு மத்ததுக்கு எல்லாம் எழுத்து அதிகமா இருக்கு அதனால இதுக்கு தான் போதை கம்மியா இருக்கும் போல இருக்கு அதனால பீரே வாங்கிடலாம்டா"ன்னு சொன்னான். அவனுக்கு தான் இது போலெல்லாம் சிந்திக்க வரும்.

சரி அடுத்து யார் யார் போய் வாங்குவதுன்னு சாட் பூட் த்ரீன்னு போட்டு பார்த்தா கடைசியா மிஞ்சினது நானும் ராதாவும் தான். (பின்னே என்னங்க ஜெலீனியா மாதிரி ரிங்கா ரிங்கா ரோஸ் ரோஸ் பார்ட்டியெல்லாம் குடிக்க முடிவெடுத்தா இப்படித்தான் சாட் பூட் த்ரீ எல்லாம் போட்டு முடிவெடுக்கும்). எங்கே போய் வாங்குவது என்பதை நானும் அவனும் முடிவெடுத்துக்கலாம்ன்னு சொல்லிட்டானுங்க. அடுத்து கிளாஸ் யார் கொண்டு வருவது என பல வகையிலும் சிந்திச்சு பார்த்தா ஒன்னும் வெளங்க மாட்டங்குது. இப்பமாதிரி அப்ப எல்லாம் யூஸ் அண்ட் த்ரோ விஷயம் டம்ளர்ருக்கெல்லாம் கிடையாது ஒரு விஷயத்தை தவிர. சரி அவங்க அவங்க டம்ளரை அவனவன் வீட்டிலிருந்து தள்ளிகிட்டு வரனும்ன்னு முடிவாகிடுச்சு. அடுத்து இடம்.ராதா உடனே "டேய் நம்ம பெரிய கோவில் தேர்முட்டி மேல போயிடுவோம்டா"ன்னு சொல்ல எல்லோரும் கோரசாக நிராகரித்தோம். எதுக்கு ஊரே பார்க்க நம்ம மானம் போகனுமா என்ன? பின்னே ஒருமனதாக ராஜந்தோட்ட கிரவுண்டின் நடுப்பகுதி தான் சரியான இடம். ராத்திரி 12 மணிக்கு பேயை தவிர யாரும் இருக்க மாட்டாங்க நம்ம கிட்டதான் இரும்பு சைக்கிள் இருக்குதே பேய் பங்குக்கு வராதுன்னு முடிவு செஞ்சுட்டோம். அதிலே கலக்க தண்ணி யாரு கொண்டு வருவதுன்னு அடுத்த குழப்பம். அப்பதான் சங்கர் சொன்னான், "விடுங்கடா நான் சர்ச்ல ராத்திரி கஞ்சி காச்சி ஊத்துறாங்க புது வருஷத்துக்குனு சொல்லி நான் பெரிய தூக்கு சட்டி எடுத்துட்டு வர்ரேன்"ன்னு சொன்னான். விட்டா மாரியாத்தாவுக்கு கேக் வெட்டுவான் போலருக்கு.

நானும் ராதாவும் எங்கே வாங்குவது அதை எப்படி எடுத்துகிட்டு வருவது என்பது சம்மந்தமா மண்டைய குழப்பிகிட்டு கடைசியா முடிவு பண்ணிட்டோம். கிரிக்கெட் பேட், ஸ்டெம்ப்ஸ் வைக்கும் கிட்டை தூக்கிகிட்டு கிளம்பிட்டோம் என்னவோ டே அண்ட் நைட் மேட்ச் ஆட போவது போல! வாங்கும் இடம் நியூ போட்டோ ஸ்டுடியோ மாடியிலே மஞ்சு ஒயின்ஸ். ஏன்னா அந்த கடையில தான் நல்லா இருக்கும்ன்னு ராதா சொன்னான். அதுக்கு அவன் சொன்ன காரணம் அலாதியானது. அது எதுக்கு இப்ப. அந்த ரோட்டிலே ஜே ஜேன்னு கூட்டம் அந்த ராத்திரி பத்து மணிக்கும். ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு மங்கிகுல்லா மாட்டிகிட்டு அதேகண்கள் கொலைகாரன் மாதிரி கிரிக்கெட் கிட்டையும் தூக்கிகிட்டு மேலே போனோம். கடைகாரன் கிட்டே போகும் போதே எனக்கு தொடை எல்லாம் நடுங்குது. ராதா பயமே இல்லாத மாதிரி நடிக்கிறான். அவன் கைய ஆதரவா பிடிச்சா அது டைப்பிகிட்டு இருக்கு."இன்னிக்கு ரொம்ம குளிருதுல்லடான்னு சம்மந்தமே இல்லாம உளர்ரான் தண்ணி போடும் முன்னமே. கடை காரர் கேட்டார் என்ன வேண்டும்ன்னு. நான் அதுக்கு "ஒரு எட்டு பேர் சாப்பிடுற மாதிரி குடுங்க"ன்னு சொன்னேன். அதுக்கு அவர் "எலேய் இது என்ன அரிசி கடையா எட்டு பேர் பத்துபேர்ன்னுகிட்டு, வாங்கிட்டு போய் எட்டு பேருத்தான் குடிங்க ஒருத்தனே முழுங்குங்க எனக்கு என்ன? இப்ப என்ன சரக்கு வேணும்ன்னு சொல்லுங்க"ன்னு சொன்னார்.

ராதா என்னை பார்த்து சும்மா இருடான்னு சொல்லிட்டு "பீர் ஒரு குவாட்டர் குடுங்க"ன்னு கேட்டான். பீரை குவாட்டரை கேட்டதுமே கடைக்காரன் "எலேய் மூஞ்சிய காட்டுங்கடா, எந்த ஸ்கூல் நீங்க எந்த தெருவு குல்லாவை கழட்டு'ன்னு கொஞ்சம் அதிகாரமா சொன்னதும் எனக்கு வயித்த கலக்க ஆரம்பிச்சுடுச்சு. பிரசவ வைராக்கியம் மாதிரி அப்பவும் நினைச்சுகிட்டேன்"இனி இந்த ராதா நாதாறி சகவாசமே வச்சுக்க கூடாது"ன்னு. வாங்க வந்த ஒரு நல்ல(?) கஷ்ட்டமர் "தம்பிங்களா பீரு ஃபுல் பாட்டில் தான் குடுப்பாங்க"ன்னு சொன்னாரு. என்ன பீர் வேணும்ன்னு சொல்லுங்கன்னு கேட்ட போது அதான் பீர்ன்னு சொன்னோமேன்னு சொன்னோம். நாங்க பீர் என்பது தான் பிராண்ட்ன்னு நெனச்சுகிட்டு இருந்தோம். பின்ன தான் தெரிஞ்சுது பீர் என்பது ஒரு வகை. அதிலே பல பிராண்டு இப்பது. அதிலே கல்யாணி என்கிற பெயர் ராதாவுக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. ஏன்னு கேட்டா அதுக்கு வித்யாசமா ஒரு கதை விடுவான், அதனால நான் கேட்கலை. 21 ரூபாய்க்கு 25 ரூபாயா குடுத்துட்டு மீதி கூட வாங்காம கிட் உள்ளே போட்டுகிட்டு கீழே தாவி இறங்கி சைக்கிளை எடுக்கும் போது தெரிஞ்ச ஒருத்தர் "தம்பி என்ன இங்க நிக்கிறீங்க"ன்னு கேட்டதுக்கு ராதா அவசரமாக "போட்டோ எடுக்க வந்தோம்"ன்னு பூட்டியிருந்த போட்டோ கடையை பார்த்து சொன்னான்.

அடுத்த 5 வது நிமிஷம் பெரிய கிரவுண்டு நடுவே எங்க மீதி 6 பேரோடு ஐக்கியமாகிட்டோம். அதுக்குள்ள மீதி ஆறு பேரும் நாங்க சொதப்புவோமா மாட்டோமான்னு பந்தயம் எல்லாம் கட்டிகிட்டு இருந்திருக்கானுங்க. சினிமா பொட்டி வர்ர மாதிரி ரொம்ப எதிர்பார்ப்போட இருந்திருக்காங்க. நாங்க போன உடனே என்னவோ அபினவ்பிந்ரா ரேஞ்சுக்கு வரவேற்ப்பு. "டேய் பீர் வந்துடுச்சுடா கூடவே அவனுங்களும் வர்ராங்கடா"ன்னு ஒரே சத்தம்.

திஸ்கி: பதிவு ரொம்ப நீளமா ஆகிட்டா என்னை உண்மை தமிழன்னு சொல்லிடுவீங்க தானே அதேன் இப்படி!!!!