பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 22, 2008

கலக்கிட்ட சந்துரூஊஊஊஊ!!!!!!

நான் ஒரு 5 வருஷம் முன்ன ஒரு உப்புமா கம்பனியிலே ஒரு 2 மாதம் வேலை பார்த்தேன். உப்புமான்னா சாதாரண உப்புமா இல்லை. கிட்ட தட்ட நம்ம பெனாத்தலார் பாணியிலே ஸ்ட்ராங்கான உப்புமா. நான் ஏமாந்ததே அந்த கம்பனியின் சைன் போர்டை பார்த்து தான். அத்தன பெரிய போர்டு.அந்த கம்பனியிலேயே அதான் பெரிய விஷயம்ன்னு எனக்கு பின்ன தான் தெரிஞ்சுது. சரி இது தான் துபாய்லயே பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி போல இருக்குன்னு நெனச்சு தான் இண்டர்வியூவுக்கு போனேன். நான் கேட்ட சம்பளத்தை கேட்டதும் அந்த மேனேஜர் மட்டும் இல்லை அந்த கம்பனியே ஆடி போச்சு. மேனேஜர் சொன்னார்" எங்க கம்பனியின் மொத்த லேபர்ஸும் சேர்ந்து வாங்கும் சம்பளம் இது"ன்னு. நானும் சரி தற்காலிகமா இருப்போம்ன்னு சேர்ந்துட்டேன்.கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனின்னா பெரிசா புது பில்டிங் எல்லாம் எடுத்து செய்ய மாட்டாங்க. சும்மா ஓட்டை உடைசல் அடைக்கும் கம்பனி.


ஒரு நாள் மேனேஜர் கூப்பிட்டு ஒரு செல் நம்பர் கொடுத்து "இவர் பேர் சந்திரசேகர். இவரு கம்பனியிலே ஏதோ தண்ணி ஒழுகுதாம். அபுதாபியிலே இருக்கு. நீ போய் பார்த்துட்டுவா. பின்னே இங்க வந்து எத்தனை லேபர், எதுனா பிலாஸ்டிக் ரோல், சிலிகான் சீலண்ட் எடுத்துட்டு போய் ஓட்டையை அடச்சிடு"ன்னு சொன்னார். எனக்கு தான் அபுதாபி போறதுன்னா அத்தன ஒரு குஷி வந்துடுமா. சரி அப்படியே போய் நண்பர்களையும் பார்த்துட்டு வந்துடுவோம்ன்னு சும்மா ஒரு ஜீன்ஸ், டி ஷர்ட், சாதாரன செருப்புன்னு கிளம்பிட்டேன். அபுதாபி போய் ஒரு கூட்டமே இல்லாத ஹோட்டலா பார்த்து உக்காந்து ரிலாக்சா ஒரு டீயை குடிச்சுகிட்டே அந்த சந்திரசேகருக்கு போன் பண்ணினேன்.

நம்ம கிட்ட ஒரு பொருப்புன்னு குடுத்துட்டாதான் பிரிச்சு மேஞ்சிடுவோம்ல. எப்படியாவது அந்த கம்பனியிலே நல்ல பேர் வாங்கி ஒட்டு மொத்த ஓட்டை அடைக்கும் காண்டிராக்டயும் வாங்கி நம்ம கம்பனிய ரித்தீஷ் மாதிரி ஒலக தரத்துக்கு கொண்டு வந்துடனுங்குற ஆசையிலே அப்படியே நுனி நாக்கு இங்லிபீசுல "ஹாய் மிஸ்டர் சந்துரு ஹவ்வார்யூ"ன்னு ஆரம்பிச்சு சும்மா பொளந்து கட்டிகிட்டு இருந்தேன். உங்களுக்கு எங்கயோ ஒழுகுதாமேன்னு கடைசியா வந்த விஷயத்துக்கு வந்தேன். வெள்ளை மாளிகையிலே ஒழுகினா கூட ஹிலாரி வூட்டுகாரர் எங்களைத்தான் கூப்பிடுவாராக்கும் என்கிற அளவு பீலா விட்டேன்.

மனுஷனுக்கு உதரல் எடுத்துடுச்சு. சந்துரு சந்துருன்னு ரொம்ப நாள் பழகின மாதிரி பொங்கிகிட்டே இருக்கேன். அவரும் என்கிட்ட சார் சார்ன்னு பம்மிகிட்டே இருக்கார். நான் ஹோட்டல்ல இருப்பதாகவும் அன்றைக்கே வந்து பார்க்க முடியாது, பர்சனல் வேலை இருப்பதாகவும் சொன்னேன். அதுக்கு அவரும் சரி சார் சரி சார்ன்னு ஏக பவ்யம் காட்டினாரு. நீங்க தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு கார் அனுப்பறேன்னு சொன்னார். நான் என்னவோ ஹில்ட்டன்ல தங்கியிருப்பது போல நெனச்சுகிட்டர். ஆக நான் டீ குடிக்க ஹோட்டலுக்கு வந்த விஷயத்தை அப்புடியே கோழி அமுக்குவது போல அமுக்கிவிட்டு "வேண்டாம் வேண்டாம் நான் என் காரிலேயா வந்துடுறேன் சந்துரு"ன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டு நண்பர்கள் வீட்டுக்கு போயிட்டு அதிலே ஒருத்தர் அடுத்த நாள் காலையிலே வந்து அந்த கம்பனி வாசல்ல விட்டுட்டு போனார்.

கம்பனின்னா அது 10 மாடி இண்டலிஜண்ட் பில்டிங். மிக பெரிய ஆயில் கம்பனி. வாசல்ல செக்யூரிட்டி எல்லாம் மிலிட்டரி. எல்லார் கையிலயும் மிஷின் கன். நான் அந்த செக்யூரிட்டிகிட்ட வந்து "ஐ நீட் டு மீட் மிஸ்டர் சந்துரு"ன்னு சொன்னேன். அவன் என்னை ஏற இறங்க பார்த்துட்டு கிட்ட தட்ட என்னை புழு மாதிரி பார்த்துட்டு எந்த சந்துருன்னு கேட்டான். நான் சொன்னேன் "மிஸ்டர் சந்திரசேகர், அவரோட போன் நம்பர் இது தான்"ன்னு சொன்னேன். அவ்வளவு தான் அவனுக்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. பட படன்னு யார் யாருக்கோ உள்ளே போன் பண்ணினான். முதல்ல தலைமை செக்யூரிட்டிக்கு போன். அவர் சர்ன்னு ஒரு சைரன் வச்ச ஜீப்பிலே வந்துட்டார். என்னை ஒரு குற்றவாளி ரேஞ்சுக்கு சுத்தி நின்னு விசாரிக்கிறாங்க. எனக்கோ பயம் நம்ம சந்துரு எதுனா திருடிகிட்டு மாட்டிகிச்சு போல இருக்கு அதான் அதை தேடி வந்த நம்மை இப்படி டார்ச்சர் பண்றாங்க போல இருக்குன்னு நெனச்சுகிட்டேன்.ரொம்ப நேர விசாரனைக்கு பின்னே ஸ்பீக்கர்ல ஒரு லேடியை கூப்பிட்டாங்க. அவ என்னவோ அரபில அவங்க கிட்ட பேசினா. நான் உடனே போனை எடுத்து நம்ம சந்துருக்கு போன் பண்ணினேன்.

"என்ன சந்துரூ இப்படி கொடையிரானுங்க"ன்னு கேட்டதுக்கு "சார் வந்துட்டீங்களா கொஞ்சம் இருங்க"ன்னு சொன்னார். பின்ன அந்த செக்யூரிட்டி ரூம்ல இருந்த ஸ்பீக்கர்ல நம்ம சந்துரு குரல். உக்காந்து இருந்தவன் எல்லாம் எழுந்து அட்டென்ஷன்ல நிக்கிறான். "செண்ட் மை கெஸ்ட் டு மை ரூம் இம்மீடியட்லி"ன்னு சொல்லிட்டு என் போன்ல கூப்பிட்டு "வெரி சாரி சார், உங்களோட மீட்டிங்கால மத்த மீட்டிங் எல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்"ன்னு சொன்னார். எனக்கு மெதுவா ஒரு பயம் வந்துச்சு. ரொம்ப பீலா விட்டிருக்க படாதோன்னு தோணுச்சு. செக்யூரிட்டி எல்லாம் என்னை ஒரு வித பயம் கலந்த மரியாதையோட பார்கிறானுங்க. என்னை சந்துரு சார் ரூமுக்கு கூட்டிகிட்டு போக செக்யூரிட்டி எல்லாம் போட்டி போடுறானுங்க. அவங்க தலைவர் தானே அழைச்சுகிட்டு போவதா சொல்லி அழைச்சுகிட்டு போறார். நானும் சப்பக்கு சப்பக்குன்னு செருப்பு சத்தத்தோட போறேன். எல்லாரும் என்னையே பார்க்கிறாங்க.

என்னவோ ஏழுமலையான் தரிசனம் மாதிரி கதவு திறந்துகிட்டே போறான் அந்த செக்யூரிட்டி. ஒவ்வொறு கதவுக்கு முன்பும் ஏகப்பட்ட சோதனை. எங்க பார்த்தாலும் கேமிரா கண்கானிப்பு.கடைசியா நம்ம சந்துரு ரூம் வாசலுக்கு வந்தாச்சு. கதவை திறந்து அந்த செக்யூரிட்டி என்னை உள்ளே அனுப்பிட்டு வாசல்லயே நின்னுகிட்டான். நம்ம சந்துருவை பார்த்ததுமே எனக்கு குலை நடுங்கி போயிடுச்சு. சினிமாவிலே ஒரு பணக்கார அப்பாவா ஒருத்தர் வருவாரே வயசானவர், வெள்ளை தாடி வச்சுகிட்டு, நல்ல வெயில்லயும் கோட், சூட் மாட்டிகிட்டு இருப்பாரே அவரை போல இருக்கார் சந்துரு.எனக்கு அப்பவே லைட்டா நடுக்கம் வந்துடுச்சு. சந்துரு அந்த செக்யூரிட்டிய பாத்து ஒரு கத்து கத்தினார் பாருங்க எனக்கு அப்பவே ப்டம் விட்டு போச்சு. கண்ணிலே பட்டாம் பூச்சி பறக்குது. "செக்யூரிட்டி ஹூ இஸ் திஸ், நானே ஒரு முக்கிய கெஸ்ட்டுக்காக வெயிட் பண்ணிகிட்டு இருகேன், இவனை யார் இங்கே விட்டது. மேன் அப்பாய்ன்மெண்ட் இருக்கா மேன்?" அப்படீன்னு கத்துறார். அந்த கெஸ்ட்டே நான் தான்னு சொல்லிடலாமா இல்லாட்டி அப்படியே ஓடி போயிடலாமான்னு நெனச்சுகிட்டே இருக்கும் போதே அந்த செக்யூரிட்டி நான் தான் அந்த கெஸ்ட்ன்னு சொல்ல அவர் முகம் போன போக்கை பார்க்கனுமே....அப்படியே கல்கத்தா காளி மாதிரி ஆயிட்டார்.

"நீயா நீயா மேன் அது உன்னால முடியுமா அந்த தண்ணியை அடைக்க, சொல்லு சொல்லு எந்த மெத்தேடுல சரி பண்ணுவ சொல்லு, உனக்கு இந்த பிரச்சனையோட வீரியம் என்னான்னு தெரியுமா?"அப்படி இப்படீன்னு கத்திகிட்டே இருக்கார். நான் சொன்னேன் "சார் பிலாஸ்டிக் பேப்பர் வச்சு, சிலிகான் சீலண்ட் போட்டு..."ன்னு ஏதோ உளறிகிட்டே இருக்கேன். உடனே தன் கையிலே இருந்த ரிமோட் வச்சு அந்த ரூம்ல இருந்த எல்.சி.டி மானிட்டர்ல பிரச்சனைக்கு உரிய இடத்தை நேரா சூம் பண்ணி காமிச்சார். அப்பவும் கத்துவதை நிப்பாட்டலை. அது என்னா பிரச்சனைன்னா அந்த பில்டிங் கிரவுண்ட் புளோருக்கு கீழே 4 ப்ளோர் கார் பார்க்கிங். பக்கத்திலே கடல் இருக்கு. புட்டிங் சரியா போடாமையோ என்ன பிரச்சனையோ தெரியல கடல் தண்ணி ஊற ஆரம்பிச்சு ஒரு மோட்டார் போட்டு தண்ணிய வெளியே எடுக்கிறாங்க. பெரிய லெவல் பிரச்சனை. கிட்ட தட்ட அந்த பில்டிங்ககே இடிக்க வேண்டிய நிலமை. உலக லெவல்ல கன்சல்ட் பண்ணிகிட்டு இருக்காங்க அந்த் பிரச்சனைய சரி பண்ண. நான் என்னவோ சர்வ சாதாரணமா பிலாஸ்டிக், சிலிகான் சீலண்ட்ன்னு சின்ன பிள்ளை தனமா சொல்லி அவர் குருதி அழுத்தத்தை எகிற செஞ்சுட்டேன். மனுஷன் என்னை குத்தி கொதறி தொண்டை வரண்டு போய் தண்ணிய குடிச்சுட்டு குடிச்சுட்டு திட்டுறார். எனக்கோ ஒரு வழியா வெளியே விட்டா தேவலை போல இருக்கு. அவருக்கு இருந்த கொலவெறியிலே அந்த செக்யூரிட்டிய விட்டு சுட சொல்லிடுவாரோன்னு பயமா போச்சு.

நடு நடுவே அவருக்கு வந்த போன்ல "நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன், இன்னும் அரை மணி நேரத்துக்கு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு வேற சொல்லிகிறார். ஆக நமக்கு இன்னும் அரை மணி நேரத்துக்கு குமுறி எடுக்க போறான்னு தெரிஞ்சுது. அந்த அரை மணி நேரமும் சும்மா வானத்துக்கும் பூமிக்குமா பறந்து பறந்து திட்டி தீர்த்தார். திட்டு எல்லாம் ஸ்டாக் தீர்ந்து போச்சுன்னா யோசிச்சு யோசிச்சு திட்டுறார். கடைசியா கெட் அவுட்ன்னு கத்தின போது தான் எனக்கு கொஞ்சம் பயம் போச்சு. சரின்னு வெளியே வந்தேன். அவருக்கு என்னை திட்டினது பத்தலை போல இருக்கு. திரும்பவம் கூப்பிட்டார். கூப்பிட்டு "டேய் என் அப்பா அம்மா கூட இப்படி சந்துரு சந்துருன்னு தலையிலே அடிச்ச மாதிரி கூப்பிட்டதில்லை... இந்த கம்பனியே என்னை பார்த்து பயப்படுது..என்னை சந்துரு சந்துருன்னு உன் வேலைக்காரனை கூப்பிடுவது போல கூப்பிட்டியே மகாபாவி....உன்னை நான் இந்த ஜென்மத்துல எங்கயும் பார்க்க கூடாது...கெட் அவுட்..........."ன்னு கத்த நான் ஓடியே வந்துட்டேன். உள்ளே போகும் போது அந்த செக்யூரிட்டிகிட்டே இருந்த மரியாதை திரும்பி வரும் போது தலை கீழா மறி போயிருந்துச்சு. கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறை தான்.

மெதுவா வெளியே வந்து என்னை ஆசுவாச படுத்திக்க ஒரு டீக்கடையிலே உக்காந்தேன். அப்போ என் மேனேஜர் கிட்ட இருந்து போன். "என்ன ஆச்சு எத்தன ரோல் பிலாஸ்டிக் தேவைப்படும், எத்தன லேபர் தேவைப்படும்ன்னு பார்த்தியா? அந்த சந்துரு ஆள் எப்படி, காண்டிராக்ட் நமக்கு தானே"ன்னு கேட்டார். நான் அதுக்கு "சார் சந்துரு நல்ல பையன் சார். பசு மாதிரி குணம். ஆனா பாருங்க அவன் ரேன்சுக்கு ஒரு மேனேஜர் லெவல்ல தான் பேசுவானாம். அதனால நீங்க கிளம்பி இங்க வாங்க. நான் கிளம்பி அங்க வர்ரேன். இங்க வந்துட்டுசந்துருக்கு போன் பண்ணி பேசுங்க. சும்மா தைரியமா பேசுங்க. எத்தன பிளாஸ்டிக் ரோல் தேவைன்னு சந்துருகிட்டயே கேளுங்க.சந்துரு பையன் நல்ல குணமான பையன். கிளம்பி உடனே வாங்க"ன்னு சொல்லிட்டு மெதுவா கிளம்பி துபாய் வந்து சேர்ந்தேன்.

35 comments:

 1. நாந்தான் முதலா?


  நல்லா இருக்கு உங்க அனுபவங்கள் எல்லாம்.

  அதெப்படி இப்படித் தேடிப்பிடிச்சு கிடைக்குது உங்களுக்கு மாத்திரம் ?

  ReplyDelete
 2. ரொம்ப நல்லா இருந்தது சார், நினைத்து நினத்து சிரித்து கொண்டே இருக்கிறேன் ...

  ReplyDelete
 3. சரி உங்க மேனேஜர் ஓட்டைகளை அடைக்க போனாரா இல்லையா ?

  அவருடைய டவுஸரை செக் பண்ணீங்களா - சந்துருக்கிட்ட இருந்து திரும்ப வரும்போது ?

  ReplyDelete
 4. சிரியோ சிரின்னு சிரிச்சேன் அபி அப்பா. ரொம்ப நல்ல நகைச்சுவை.

  இத எதுக்கு நகைச்சுவை மாதிரின்னு நம்பிக்கையில்லாம லேபிள் குடுத்தீங்க? நகைச்சுவைன்னே போடலாமே.

  ReplyDelete
 5. அய்யோ அய்யோ ! பாவம்ங்க ஊரூவிட்டு ஊரு போய் எவ்வளவு கஷ்டம்.. :))

  ReplyDelete
 6. சந்துரு தொ.பே.எண்ண கொடுங்க. நானும் அழைச்சு ஒழுகுறது நிறுத்தி காட்டுறேன்னு மொக்கை போடுறேன்.

  பொழுது போக மாட்டேங்குது. எனக்கு அலுத்துப் போச்சுன்னா நம் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் மொக்கைச்சாமி இவங்கள்ட்டல்லாம் கொடுத்து அடைக்க வழி சொல்ல சொல்றேன்.

  -------------------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

  ReplyDelete
 7. கலக்கல் அபி அப்பா! அமீரகம் வந்த புதுசிலேயே ஆரம்பிச்சிருக்கீங்க போல

  ReplyDelete
 8. அதற்குப் பிறகு உங்க பாஸ் என்ன ஆனார்? வந்து உங்களை மறுபடி உப்புமா கிண்டியிருப்பாரே..

  ReplyDelete
 9. ;-))))...

  ஹாஹாஹாஹா!!!

  அய்யய்யோ முடியல...சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதே!!!

  ReplyDelete
 10. சான்ஸே இல்லை. மத்தியானம் படிச்சது. இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன்.. கலக்கல். :))))

  ReplyDelete
 11. பாவங்க அந்த சந்துரு.

  ReplyDelete
 12. ஹா ஹா ஹா
  அப்போ அன்னிக்கு என்கிட்ட திட்டு வாங்கின ஆள் நீங்கதானா ? :P

  ReplyDelete
 13. ரொம்ப நல்லா இருந்தது.

  ReplyDelete
 14. //
  "சார் சந்துரு நல்ல பையன் சார். பசு மாதிரி குணம். ஆனா பாருங்க அவன் ரேன்சுக்கு ஒரு மேனேஜர் லெவல்ல தான் பேசுவானாம். அதனால நீங்க கிளம்பி இங்க வாங்க. நான் கிளம்பி அங்க வர்ரேன். இங்க வந்துட்டுசந்துருக்கு போன் பண்ணி பேசுங்க. சும்மா தைரியமா பேசுங்க. எத்தன பிளாஸ்டிக் ரோல் தேவைன்னு சந்துருகிட்டயே கேளுங்க.சந்துரு பையன் நல்ல குணமான பையன். கிளம்பி உடனே வாங்க"
  //

  :))))))))))))))))))

  ReplyDelete
 15. நல்லா இருந்தது உங்க அனுபவம்.........

  :)))

  Kathir

  ReplyDelete
 16. Dear Abiappa,

  Fantastic.

  Cheers
  Christo

  ReplyDelete
 17. உங்க மேல ரொம்ப மரியாதை வெச்சிருக்கறதால திட்ட முடியலங்க. அப்ப்பப்பா! சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி நிக்குது. அரைமணி நேரம் முன்னாடி படிச்சு, சிரிச்சுட்டே இருக்கறதால பின்னூட்டம் போடக்கூட முடியல.

  தலைவா... பின்னி எடுத்துடீங்க. எனக்குத் தெரிஞ்சு சமீபத்துல இப்படி நான் சிரிச்சதே இல்லை. ரெண்டு தடவை மேலதிகாரிக எட்டிப் பார்த்துட்டு ஆம்புலன்ஸ் கூப்பிடப் போய்ட்டாங்கன்னு நெனைக்கறேன்!

  க்ரேட்!

  ReplyDelete
 18. Ultimate one... Laugh a lot.. thanks..

  ReplyDelete
 19. அதற்குப் பிறகு உங்க பாஸ் என்ன ஆனார்?
  :)))

  ReplyDelete
 20. நினைத்து நினைத்து சிரித்தேன்,அதுவும் ஆபீஸ் ல தனியா உட்கார்ந்து கொண்டு

  கொன்னுட்டீங்க

  ReplyDelete
 21. பின்றீங்க தல.

  கலக்கல் காமடி!

  ஆமா,,,உண்மைக் கதையா? இல்ல உடான்ஸா?

  ReplyDelete
 22. :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

  ReplyDelete
 23. ஹ ஹ ஹ ஹ ......என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை ..ஐயா சாமி கலக்கறிங்க போங்க .... .. நீங்க எங்க இருக்கறிங்க அபு தபியா , துபாயா இல்லை ஷார்ஜாவா ..

  ReplyDelete
 24. அலுவலகத்துல ஆணி புடுங்கிக்கிட்டு இருக்கிறபோது இந்த பதிவை படிச்சேன். ரொம்ப நேரம் நான் மட்டும் சிரிச்சுக்கிட்டே இருந்ததுல பக்கத்து சீட்ல இருக்கறவன் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டான். சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சு சார்.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))