பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 26, 2011

"வங்கிக்கு போன மங்கி" அல்லது "பேங்க்குக்கு போன பேக்கு" என எது வேண்டுமானாலும் தலைப்பா வச்சுக்குங்க!!!

பேங்ல போய் இந்த பணத்தை போட்டு வா என என்னிடம் சொல்லி பணத்தை கொடுத்தால் அந்த மஞ்சள் பையை கக்கத்தில் வைத்துக்கொண்டு போய் பேங் உள்ளே எதுனா நல்ல இடமா பார்த்து டபார்ன்னு போட்டுவிட்டு திரும்பும் அள்வுக்கான மினி சைஸ் மூளைக்கு புரொப்பரைட்டனான என்னிடம் போய் இந்த ஐம்பதாயிரத்தை கொடுத்து போட சொன்னா பேங்கு ஸ்டாப் எல்லாருக்கும் எத்தனை கஷ்டம் வரும் தெரியுமா?

ஒரு பேங் (வங்கி) செட் போடனும்னா ரொம்ப சுலபம். ஒரு பெரிய ஸ்டூடியோ பிளாட். மேலே எங்க திரும்பினாலும் சின்ன பிலாஸ்டிக் குழாய்க்குள் ஒயர்கள். அது கண்டிப்பா ஒட்டடை பின்னி பினைந்து இருக்க வேண்டும். ஓரிரண்டு இடத்தில் சின்ன சின்ன ஸ்பீக்கர்கள். தேவையே இல்லாமல் செக்யூரிட்டியின் தொப்பையையோ அல்லது அடுத்த டோக்கன் டொட்டடொய்ங் பெல்லையோ குறிபார்த்து கொண்டிருக்கும் மூவி கேமிரா, நடுவே யானைக்கு கோமணம் கட்டிய மாதிரி நீட்டு கவுண்ட்டர். அது முடியும் இடத்தில் ஒரு நாய்க்கூண்டு அதிலே 25000 ரூபாய்க்கு மேல் ஸ்பெஷல் நாய்கூண்டும், சின்ன பண பரிமாற்றத்துக்கு சின்ன சைஸ் கூண்டும், இந்த விளையாட்டுக்கும் எனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என சொல்வது போல ஒரு மேனேஜர் ரூம். காதில் கடுக்கன் மற்றும் பன்னீர் புகையிலை போட்டு வேஷ்டி கட்டிய நகைக்கடனுக்கான அப்ரைசர், அவருக்கு மட்டும் சின்னதா ஒரு ஸ்டூலும் ஒரு தராசும் போதும், நீண்ட ரெட்டை குழல் துப்பாக்கி மற்றும் அதை பிடித்து கொண்டு நிற்க ஒரு வெளக்குமாறு மீசை, அந்த மீசை ஒட்டிக்கொண்டு இருக்க ஒரு சின்ன சைஸ் உடம்பு, குறுந்தாடி பெர்னாண்டஸ் அல்லது செபஸ்டியன் சீனியர் மேனேஜராக, பச்சையாக மழித்த பார்த்தசாரதி ஆப்பீசர், கல்யாணவீட்டில் மாக்கோலம் போடும் மாமியை அவசரத்துக்கு கூட்டி வந்த மாதிரி ஒரு மாமி வித் கஞ்சி போட்ட காட்டன் புடவை அதோடு கூடவே ஆறு தங்க வளையல் அதிலே இரண்டு சிகப்பு கல் இழைத்த ஜோடி, ஒரு நெளி மோதிரம், ஒரு யானைமுடி மோதிரம், ஒரு பவழ மோதிரம் ஓவல் சைஸ்ல இப்படி ஒரு மாமி, இத்தனை இருந்தும் அவங்க வச்சிருக்கும் பேனா இங் ஒழுகி விரலிலே நீலமும் சிகப்பும் படிந்து இருக்க வேண்டும், கம்பேஷன் கிரவுண்டிலே வேலைக்கு வந்த சின்னதாக ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிய ஒரு இளம் விதவை பெண், ஒரு பைல்ஸ் வந்த முற்றிய நிலையில் இருக்கும் ஒரு 56 வயது சீவிய மீசை வைத்து சந்தனத்தை பட்டை கோடாக போட்டு அதன் மீது சாந்து பொட்டு வைத்த முகம் முழுக்க மூல வியாதியின் கடுப்பு வியாபித்து இருக்கும் ஒரு ஜன்மம்,அவர் அந்த பெரிய நாய் கூண்டில், இவர்களின் ஊடே கருப்பு முகம், அதிலே பொங்கலுக்கு சுண்ணாம்பு அடித்த மாதிரி கோகுல் சாண்டல் பூசி அதன் நடுவே சிவபெருமான் மாதிரி நெற்றியில் முப்பட்டை பெரிதாக அதன் நடுவே நெற்றிக்கண் மாதிரி செந்தூரம், இரு புருவத்துக்கு நடுவே கருப்பு மை மாதிரி சிலையில் இருந்து வழித்து பூசிய எண்ணெய் ஆக எல்லா கலரும் கலந்து கட்டி ஒரு நெற்றியுடன், மொசுக்கட்டான் மாதிரி "டை" அடித்த மீசை ,வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டையுடன் "சார் இன்னிக்கு மாத்திரம் செக்கை நிப்பாடி வைச்சிடுங்க சார், சாயந்திரம் பதிமூவாயிரம் வந்துடும் சார், நாளைக்கு கட்டிடுறேன்" என கெஞ்சி குறுந்தாடி ஒத்துக்காததால் சோகமாக வெளியே வரும் பாவப்பட்ட வியாபாரியை தனியே தள்ளிகிட்டு போய் "தம்பி ஆயர்ரூவாய்க்கு ஒரு நாளைக்கு ரெண்டு ரூவா இன்டுரச்டு. இப்ப உம்னு சொல்லுங்க பணத்தை கட்டி இந்த செக்கை பாஸ் பண்ணிடலாம். எனக்கு நாளக்கி கார்த்தால இருபத்தாற்வா சேத்து குடுத்தா போதும்" என அன்றாட குவாட்டருக்கு பணம் தேர்திக்கும் , கை நிறைய லட்ஜர்களோடு அலையும் ஒரு அட்டண்டர். "குளிர்ந்த குடிநீர்" என போடப்பட்ட குழாயில் கொதிக்க கொதிக்க நீர் வரனும் அப்படி ஒரு கூலர் இருக்க வேண்டும். ஆக ஒரு பேங் ரெடி. இப்படிப்பட்ட ஒரு வங்கியில் தான் நான் இன்றைக்கு வந்து மாட்டிகிட்டேன்.

சம்பவம் இது தான் ரொம்ப சிம்பிள். "A " ன்னு ஒருத்தருடைய பணம் 50000ஐ "B" என்கிற ஒருத்தருக்கு "C" ஆகிய நான் பேங்கு வழியாக சேர்ப்பிக்க வேண்டும்.இதுவரை புரிஞ்சுதா. சிம்பிள்.ரைட் மேலே படிக்கலாம். நான் நேராக அந்த பணத்தை எடுத்து கொண்டு அங்கே முகத்தில் வீரப்பன் மீசையும் கையில் தேவாரம் துப்பாக்கியையும் வைத்திருக்கும் செக்யூரிட்டியிடமா கேட்க முடியும். நான் துபாய்ல இருந்து பிளைட்லயே வித்தவுட்ல வந்தவன். அந்த திமிர் நேரே சீனியர் மேனேஜர் என்கிற போர்டு போட்ட கண்ணாடி ரூம்குள்ளே போய் "சார் சார் என்கிட்டே ஒரு கதை இருக்கு கேளுங்களேன்" ஆரம்பிக்க அவருக்கு ஏன் தான் இத்தனை கோவம் வருதோ தெரியலை. "சாரி சார் இத்தனை பணமும் இதோ வாசலில் இருக்கும் ஏடி எம்ல சொருகி விடத்தானே தவிர இது நீங்க நினைப்பது போல சினிமா புரக்ஷன் கம்பனி இல்லை" என முகத்தில் அடிக்காத குறையாக சொன்னார். நானும் இது சினிமா படம் எடுக்க சொல்லவந்த கதை இல்லை என்றும் என் சொந்த கதை என்பதையும் சொல்ல முயன்றும் அவர் என் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வேற ஒரு ஆப்பீசரிடம் அனுப்பி வைத்தார். இந்த ஆப்பீசரிடம் என் பிரச்சனை என்ன என்பதை தெளிவாக சொல்லிவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.

என்னை விட ஒல்லியான ஒருத்தர் கிட்ட தட்ட எனக்கு காலரா வந்த மாதிரி இருந்தாரு. அவருக்கு பேர் ஆப்பீசராம். அந்த பேண்ட்க்கு பெல்ட் போடாம எப்படித்தான் நிக்குதோ? இதிலே "இன்" வேற ஒரு கேடு. என்னை பாகற்காயை பார்ப்பது போலவே பார்த்தது அந்த முருங்கைக்காய். என்ன விஷயம் என கம்பீரமாக அந்த ஒல்லிக்குச்சி உடலில் வந்த வேகம் இருக்குதே... எனக்கு மனோபாலா தான் ஞாபகத்துக்கு வந்தார். சொன்னேன். "சார் "A" ன்னு ஒருத்தரின் பணம். அதை "B" க்கு அனுப்பனும். அதை இந்த "C" வழியா தான் அனுப்பனும்..." என சொல்லிகொண்டு இருந்த போதே "இது ஏற்கனவே மும்பை எக்ஸ்பிரஸ்ல வந்த கதை" தான் என நம்ம வலைப்பதிவர்கள் போல ஆதிமூலத்தை அசைக்க நான் "சார் இல்ல சார் அதாவது ராமசாமி என்பவர் ஒரு 50000 பணத்தை குப்புசாமிக்கு அனுப்பனும். ஆனா அதை கோவிந்தசாமி வழியா அனுப்பனும்" என சொல்லி முடிக்கும் முன்னே அந்த ஆப்பீசர் " செம த்ரில்லிங்கா இருக்கே, இதிலே வில்லன் யாரு" என சப்புகொட்டி கேட்க எனக்கு மெல்ல குருதி அழுத்தம் அதிகரிக்க தொடங்கியது. அவருக்கு அந்த கதை போரடிக்கவே ஒருவர் மாற்றி ஒருவராக நான் அனுப்பப்பட்டு என் கதை ரிஜக்ட் செய்யப்பட்டு நான் வந்து நின்ன இடம் இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் உள்ளே நுழைந்த இடம். அதாவது பேங் வாசல்.

என் நிலைமை அறிந்து பரிதாபப்பட்ட ஒரு வெள்ளை வேட்டி என்னிடம் வந்து " உங்க கதையை என்கிட்டே சொல்லுங்க" என சொன்ன போது திரும்பவும் ஆரம்பித்தேன்.

"அதாவது சார் இதான் கதை"

"சரி "C" க்கு அக்கவுண்ட் இருக்குதா?"

" சார் "C" ன்னா யாரு சார்?"

"அய்யோ அதான்ப்பா கோவிந்தசாமி"

"அது யாரு சார்?"- கிட்டத்தட்ட என் கதையே எனக்கு மறந்து
போயிருந்தது.

பின்னர் எனக்கு அவர் தெளிவு படுத்தி திரும்பவும் கேட்டார்.

" இப்ப சொல்லுங்க அந்த "C" கோவிந்தசாமிக்கு அக்கவுண்ட் இருக்குதா?"

"ம் பாய் கடையிலே இருக்கு சார்" என சொன்ன போது கூட அவர் அமைதியாக எனக்கு ஏதோ நல்லது செய்யனும்னு ஆர்வமா இருக்க அந்த ஒரு காரணத்துக்காகவே அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரலாம் அல்லது அட்லீஸ்ட் அடுத்த ஜென்மதிலாவது அவருக்கு நல்ல மருமகன் கிடைக்கலாம். அத்தனை ஒரு புண்ணியாத்மா.

"இந்த பேங்ல சேவிங்ஸ் அக்கவுண்ட் வச்சிருக்கும் ஒருத்தரை கூட்டிகிட்டு வாங்க.அதாவது "D" என்கிற புது கேரக்டரை அறிமுகப்படுத்துறோம். அவருக்கு கிருஷ்ணசாமின்னு பேர் வச்சுப்போம். அதோ இருக்கும் அந்த வெள்ளை சல்லான்ல பில்லப் பண்ணி 50028 ரூபாய் அந்த பைல்ஸ் ஆளுகிட்டே போய் "D" யின் அக்கவுண்ட்ல கட்டுங்க. நீங்க கூட்டி வந்த ஆள் "D" கிட்டே இப்போ ஒரு வித்ட்ராயல் பாஃம்ல 50000க்கு பில் பண்ணி ஒரு கையெழுத்து வாங்கி வச்சுகிட்டு பின்னே இந்த் சிகப்பு செல்லானை எடுத்து அதிலே அந்த யாருக்கு அனுப்பனுமோ அவரு அக்கவுண்ட் நம்பரை அந்த பேங் எஃப் ஓ சி கோட் நம்பரையும் போட்டு பின்னே 50000 ஃபில் பண்ணி அந்த வித்ட்ராயல் ஸ்லிப்போட சேர்த்து அந்த மாமி கிட்டே குடுங்க"

உங்க யாருக்காவது புரிஞ்சுதா. புரியலை தானே. அனேகமாக இந்த பதிவை படிக்கும் சீனா சார் தவிர யாருக்கும் புரியாது. நான் அப்படியே தாரேஜமீன்பர் பையன் மாதிரி தலையிலே கைவைத்து உட்காந்து கொண்டேன். தலை கிர்ன்னு சுத்துச்சு. "குளிர்ந்த குடிநீர்" என எழுதியிருந்த பைப்பை திறந்து கொதிக்கும் நீரை குடிக்காமல் கீழே ஊத்தினேன்.

என் நிலமையை உணர்ந்த அந்த மனிதர் தானே "D" கேரக்டரா மாறி கிட்ட தட்ட என் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைத்தார். கிட்ட தட்ட பாதி கிணறு தாண்டியாகிவிட்டது.

"இப்ப போய் இந்த வெள்ளை செல்லானையும் இந்த 50028 ரூபாயையும் அந்த கவுண்டர் ஆள் கிட்டே போய் கட்டிட்டு வாங்க" என அவர் சொன்னபடி செய்ய அந்த பெரிய நாய் கூண்டில் இருந்த பைல்ஸை நெருங்கினேன். என்னை கிட்டத்தில் பார்த்ததுமே அவர் எரிஞ்சு விழுந்து "அங்க அங்க அங்க போங்க" என சின்ன நாய்கூண்டை காட்டியதும் அங்கே போனேன். பின்னர் சின்ன நாய்கூண்டு "நீங்க படிச்சவங்க தானே? 25000க்கு மேலே அந்த கவுண்டர்னு தெளிவா எழுதி போட்டிருக்கே" என சொல்ல திரும்பவும் பைல்ஸ் கிட்டே போனேன். ஒரு வழியாக பைல்ஸ் வேலையை முடித்தது.

இப்படியாக அந்த வேலை கிட்ட தட்ட முடியும் தருவாயில் கடைசியாக அந்த ஆப்பீசர் கிட்டே போனேன். அவர் தலையில் அடித்து கொண்டு "தேதிய போடுங்க சார்" என சொன்ன போது அவருடைய டேபிளில் வைத்து தேதியை போட போனேன். பதறிப்போன அவர் "அய்யோ அங்க கஸ்டமர் டேபிள்ல வச்சுதான் தேதி போடனும். இங்க வச்சு போட கூடாது" என அதட்டிய போது நான் அப்பாவியாய் கேட்டேன் "ஏன் சார்?" அதற்கு அவர் சொன்ன பதில் தான் கிட்ட தட்ட இந்த
பதிவுக்கே காரணம். "இங்க வச்சு போட்டா கம்பியூட்டர் கராப் ஆகிடும் சார். சும்மா நொய்யி நொய்யின்னு சந்தேகம் கேட்காம அங்க போங்க சார்"

அடப்பாவமே! என் பையன் இது வரை குழந்தையிலே இருந்து கிட்டத்தட்ட முப்பத்தி ஏழுதடவை என் லேப்டாப்பிலே உச்சா அடிச்சிருக்கான். ஆனா கராப் ஆனதில்லையே ஆனா இங்க வச்சு தேதி போட்டா கராப் ஆகிடுமாம். "அதல்லாம் ஆகாது சார்" என நான் சொல்ல அவர் கோவத்திலே உச்சஸ்தாயில் கத்த அங்கே அவசரப்பட்டு ஓடி வந்த நம்ம "D" ஆப்பீசர் கிட்டே போய் "சார் இவரு இத்தனை நாள் துபாய்ல இருந்துட்டாரு. அதனால இங்க வச்சு தேதி போட்டா கம்பியூட்டர் கராப் ஆகிடும்னு தெரியாது" என சமாதானப்படுத்த ஒட்டு மொத்த பேங்கும் என்னை நோக்கி திரும்பியது. "சார்க்கு சேர் போடு, சாருக்கு சூடா மோரு குடு, சார் இங்க குடுங்க நான் தேதி போடுறேன், சார் ஒரு செம பிளான் இருக்கு. இப்ப மாசா மாசம் ஆயிரம் ரூவா போட்டா காங்கிரஸ் தமிழ்நாட்டுல தனித்து ஆட்சி அமைக்கும் போது 25 கோடி ரூவாய் தருவோம் சார்" "சார் உங்க பேங் எது சார், எது வழியா பணம் அனுப்புவீங்க?"............ நான் உதுமான்அலி காக்கா பேங் வழியா பணம் அனுப்பினதை கடைசி வரை சொல்லவேயில்லை.

கிட்ட தட்ட உலகக்கோப்பையை ஜெயித்த டோனி மாதிரி திரும்பி வரும் முன்னர் அந்த ஆப்பீசரை பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். "ஏன் சார் ஒரே எஸ் எம் எஸ் வழியா நம்பரை மாத்தாம போன் புரொவைடரை மாத்தும் வசதி போல பேங்கை மாத்தும் வசதி எப்ப சார் வரும்?"

இத்தனைக்கும் என் கூடவே இருந்து எனக்கு உதவி செய்த அந்த "D" அடுத்த ஜென்மத்திலும் எனக்கு மாமனாராக கடவ்து!

தற்போதைய செய்தி: அந்த பணம் சுவற்றில் அடித்த பந்து மாதிரி திரும்பி வந்து விட்டதாம். என்ன காரணம் என நாளை போய் கேட்க வேண்டும்.

January 21, 2011

அழகாய் ஒரு கௌரவக்கொலை:-(

பொதுவாகவே நான் "இளம் பெண் மர்ம சாவு" "பரிட்சையில் தோல்வி மாணவன் தற்கொலை" போன்ற செய்திகளில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் என்னையும் மீறி அந்த செய்தி கண்ணில் பட்ட போது ஒரு வித அதிர்ச்சி. "பூட்டிய வீட்டுக்குள் பெண் மர்ம சாவு. கொலையா என போலீஸ் விசாரனை" என்ற செய்தி என்னை அறியாமல் அங்கே இழுத்து சென்ற காரணம் தலைப்பில் "மாயிலாடுதுறை" என எழுதியிருந்ததே.

"மயிலாடுதுறை வடக்கு வீதியில் வசித்து வந்தவர் கலா என்கிற மேகலா.(வயது 59) இவர் தமிழக பள்ளி கல்வித்துறையில் கடந்த 37 வருடமாக வேலை செய்து சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார். திருமணம் ஆகவில்லை. தனியாகவே தனது வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக இவரது வீடு பூட்டியே கிடந்ததாலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாலும் தெருவாசிகள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசார் முன்னிலையில் வீட்டின் கதவு திறக்கப்பட்டு பார்த்த போது அவரது உடல் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தது. பின்னர் நகராட்சி பணியாளர்கள் கொண்டு பிணத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் அது கொலையாக இருக்குமோ என்கிற ரீதியில் போலீசார் தீவிர விசாரனை செய்து.... " படித்து கொண்டிருந்த நான் பேப்பரை மடக்கி வைத்து விட்டு எதிர் வீட்டை பார்த்தேன். பூட்டி இருந்தது.

நான் அந்த செய்தியை படித்து கொண்டிருந்த இடம் சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட வீட்டின் எதிரே இருக்கும் பொது நூலகம். சம்பவம் நடந்த வீடு நான் சின்ன வயதில் இருந்தே பிறந்து வளர்ந்த வீட்டின் நான்காம் வீடு. அந்த அக்காவிடம் ஏதோ ஒரு காலகட்டத்தில் டியூஷன் கூட படித்து இருக்கின்றேன். அந்த அக்கா எங்கள் ஊரில் பெண்கள் கல்லூரி வந்த ஆண்டு முதல் முதலாக டிகிரி படித்த புரட்சி பெண். படித்த உடனேயே பள்ளி கல்வித்துறையில் எழுத்தராக வேலை கிடைத்து அந்த காலத்திலேயே வேலைக்கு போன புரட்சி பெண். இப்படி ஏகப்பட்ட புரட்சிகளை கொண்ட அந்த அக்கா அப்போதே ஒரு பையனை காதலித்தும் புரட்சி செய்தது தான் அவங்க வீட்டுக்கு பிடிக்காமல் போனது. அந்த அக்காவுக்கு குடும்பம் என பார்த்தால் ஒரு அம்மா, ஒரு நடக்க முடியாத பாட்டி, ஒரு தம்பி, ஒரு அண்ணன். அண்ணன் என்பவர் அப்போதே குடும்பம் விட்டு பிரிந்து சென்னையில் போய் செட்டில் ஆகிவிட்டதாகவும் அவர் யாரோ ஒரு பெண்ணை காதலித்ததல் அவங்க அம்மா வீட்டை விட்டு துரத்திவிட்டதாகவும் தெருவில் பேசிக்கொள்வர். தம்பிக்காரன் பெயர் நெப்போலியன். பெய்ருக்கு ஏற்ற மாதிரி நெப்போலியன் மீது மிகுந்த பிரியம் கொண்டவன். அதல்லாம் கூட சகிச்சுப்பாங்க. ஆனா அவன் காதலிக்க மட்டும் கூடாது தான் பார்த்து வைக்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அவன் அம்மா பிடிவாதமாக இருந்த காரணத்தாலும், நெப்போலியன் மீது நாட்டம் அதிகம் இருந்த நெப்போலியனை எந்த பெண்ணும் விரும்பாததாலும் அவன் அம்மா பார்த்த பெண்ணையே கட்டிகிட்டு அதன் வாழ்கையை சீரழித்தான்.

ஆனாலும் அந்த அம்மாவுக்கும் அந்த வீட்டை புட்டத்தாலேயே நகர்ந்து பரிபாலனம் செய்த அந்த பாட்டிக்கும் பையன் சொன்ன பேச்சை கேட்டு குடும்ப கௌரவத்தை காப்பாற்றியது பற்றி ரொம்ப பெருமை. அவன் குடித்து விட்டு வந்து அந்த இரண்டு கிழவியையும் தன் மனைவியையும் அடித்தாலும் கூட "அவன் காதலிக்காமல் குடும்ப கௌரவம் காப்பாத்தினவன்" என்கிற குடும்ப பெருமை முகம் முழுவதும் இருக்கும் அந்த இரண்டு கிழவிகளுக்கும்.

வேலைக்கு போன அந்த அக்காவின் சம்பாதியத்தில் தான் அந்த குடும்பம் சாப்பிட்டது என்றாலும் அந்த அக்காவின் காதல் திருமணத்துக்கு அந்த குடும்பம் கடைசி வரை அனுமதி கொடுக்காமலே இருந்து தொலைக்க அந்த பெரிய கிழவி செத்து போன போது அந்த அக்காவுக்கு நாற்பது வயதும் ஆகிவிட்டது. காதலித்தவன் கூட வேறு பெண்ணை கட்டிகிட்டு குழந்தைகளை கூப்பிட்டு வந்து ஆசிவாங்கி போய்விட்டான்.

அம்மா கிழவி சாகும் முன்னமே தம்பிகாரன் மனைவியும் தான் பெற்ற மூன்று பெண் குழந்தைகளுடன் இனி இவன் கூட குடும்பம் நடத்த முடியாது என தன் தகப்பன் வீட்டுக்கு போய் விட அப்போது கூட தன் குடும்ப கௌரவம் போகவில்லை ஆனால் காதலித்தால் மட்டும் தான் குடும்ப கௌரவம் போய்விடும் என அந்த கிழவி பிடிவாதமாக இருக்க அந்த அக்காவும் "அனுமதி கொடுத்தால் மட்டுமே திருமணம்" என வீராப்பாக இருந்து தொலைக்க தம்பிகாரனும் நெப்போலியன் ஓவர் டோஸ் ஆகிப்போக பரலோகம் போய் சேர்ந்தான்.

அத்தோடு அந்த அக்காவும் அந்த அம்மா கிழவியும் தான் வீட்டில். சொந்த வீடு. செலவுகளும் அத்தனை இல்லை. வேலையோ பக்கத்த்திலே கிளியனூர் என்கிற கிராமம். எட்டாம் நம்பர் பஸ்ஸில் போய்விட்டு வந்து விடலாம். நகைகள், முக்கியமான வீதியில் சொந்த வீடு, அரசாங்க சம்பளம், கௌரவமான குடும்பம் என அந்த அம்மாவுக்கு ஏகப்பட்ட பெருமைகள். யாராவது காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த கிழவிக்கு வாய்கிழியும். "பொண்ணு வளர்க்க தெரியாம வளர்த்தா இப்படித்தான். இதோ நானும் தான் வளர்த்திருக்கேன் பாரு. நான் கோடு போட்டா தாண்ட மாட்டா" என வந்து மெனக்கெட்டு தன் பெருமையை பீற்றிக்கொண்டு போகும். இதிலே பெண் பெற்றவர்களை கண்டால் பெண்ணை எப்படி வளர்க்க வேண்டும் என இலவச கோச்சிங் கிளாஸ் கூட நடக்கும் தன் வீட்டு வாசல்படியில் உட்காந்து கொண்டு.

அந்த கிழவியும் ஒருநாள் செத்து போச்சு. இந்த அக்கா தெருகாரங்க, சொந்தபந்தங்கள் எல்லாரையும் கூப்பிட்டு சொல்லி பெரிய பாடை எல்லாம் கட்டி அதோடு அந்த அக்காவே சுடுகாட்டுக்கு போய் கொள்ளியும் வைத்து புரட்சி செய்தது. ஆக அந்த அக்கா செய்த புரட்சி எண்ணிக்கை மேலும் ஒன்று கூடியது.பாவம் அப்போது அந்த அக்காவுக்கு வயது ஐம்பதை தொட்டுவிட்டது.

பின்னர் வயது ஆக ஆக வழக்கமாக எல்லோருக்கும் வரும் பிரஷர், சுகர் என எல்லாவித நோயும் வந்து தாக்க அந்த அக்கா கோவில் குளம் என போய் வந்தது. சென்ற தீபாவளி அன்று கூட கேதாரகௌரி நோம்பு சாமான் வாங்க நானும் என் மனைவியும் கடைத்தெருவுக்கு போன போது அதும் வாங்கி கொண்டிருந்தது. பேசிக்கொண்டு இருந்தது. அது தான் நான் கடைசியாக பார்த்தது பேசியது.

நான் இதே நினைவுகளுடன் பேப்பரை மூடிவிட்டு அந்த வீட்டு வாசலுக்கு வந்தேன். பக்கத்து வீட்டு பையனை கூப்பிட்டு என்ன நடந்தது என கேட்டேன். "ரெண்டு மாசமா கலாக்கா எங்க போனாங்கன்னு தெரியலைண்ணே. வீட்டுக்குள்ள ஏதோ பூனை செத்து போச்சுன்னு நினைச்சோம். ஒரே நாத்தம் தாங்கலை. அதான் அந்த அக்கா எங்க போயிருக்காங்கன்னு தெரியாம சென்னைல அவங்க அண்ணன் வீட்டுக்கு போன் போட்டு உள்ளே பூனையோ எலியோ செத்து போச்சு போல. அக்கா எங்க இருக்காங்க"ன்னு கேட்டோம். அவங்க "அது சரஸ்வதி பூஜை முடிஞ்ச பின்னே காசிக்கு போவதா போன்ல சொன்னுச்சு. ஒரு வேளை காசிக்கு போயிருக்கும்"ன்னு சொன்னாங்க. பின்ன நாங்க விட்டுட்டோம். அதுக்கு பின்னே ஒரு மாசம் கழிச்சு சென்னையிலே இருந்து போன் வந்துச்சு. 'கலா காசியிலே இருந்து வந்துடுச்சா"ன்னு பாருன்னு சொன்னாங்க. போய் பார்த்தா கதவு பூட்டியே இருந்துச்சு. அதை சொன்னோம். அப்பவும் நாத்தம் போகலை. உடனே அவரு மொவன் வந்தாரு. பின்னே அவரு தான் போலீஸ்ல சொன்னாரு.பின்னே எல்லாரும் உள்ளே போய் பார்த்தோம். உள்ளே போகவே முடியாம அத்தனை நாத்தம். உடனே இன்ஸ்பெக்டரு முனிசிபாலிட்டி ஆளுங்களுக்கு சொல்லிட்டு மெதுவா உள்ள போய் பார்த்தா அந்த அக்கா கூடத்துல படுத்த படுக்கையா எலும்புகூடா கிடந்துச்சு. அங்க ஒரே எலியும் பூனையும் கரையானும் தின்னது போல போத்தியிருந்த போர்வை அதுக்குள்ள எலும்புகூடு. கண்ணு எல்லாம் தின்னுடுச்சு பெருச்சாளி கூட்டம். சட்டை, புடவை எல்லாம் கரையான் அரிச்சு வச்சிடுச்சு. ....

அவன் சொல்லிகொண்டே போகப்போக எனக்கு மயக்கமே வந்துவிட்டது. ச்சே என்ன வாழ்க்கை...

"அண்ணே பேங்ல மத்திரம் இருவது லட்சம் இருக்குதாம். இந்த ஓட்டு வீடு ஒரு 30 லட்சம் போவும். நகைநட்டு எல்லாம் பேங்குல தனியாவும் இருக்குதாம். ஆனா அக்கா கழுத்துல போட்டிருந்த ரெட்டை வட சங்கிலி, கையிலே போட்டிருந்த வளையல் மோதிரம் எதையும் கரையான் திங்கலை....

பையன் மேலும் மேலும் தொடர எனக்கு மனதிலே ஏதோ ஏதோ தத்துவம் தான் பொங்கி பொங்கி வந்தது. கரையான் தங்கம் விலை உயர்வதை சன்நியூஸ்லயா கேட்க போவுது. அதுக்கு தேவையானதை தின்னு தொலைச்சுது. இதே அக்கா தன் அம்மா கிழவி செத்து போன போது அவங்க சிரித்து கொண்டிருப்பதை போல ஒரு பெரிய போட்டோ எடுத்து கூடத்தில் மாட்டி 15ம் நாள் காரியம் செய்தது. அந்த போட்டோவுக்கு கீழே தான் இது செத்து போனது. பெருச்சாளியும், பூனையும் தின்ன தன் மகள் உடலை அந்த கிழவியின் ஆத்மா பார்த்து கொண்டு தானே இருந்திருக்கும்.காதலித்தவனுக்கே கட்டி கொடுத்து தொலைத்து இருக்கலாமோ என நினைத்து இருக்குமா? பாவம் சாகும் போது தண்ணீர் தாகம் எடுத்திருக்குமோ? எடுத்து கொடுக்க ஆள் இல்லாமல் அதனால செத்து போயிருக்குமோ? பாடை எடுக்க சொந்த பந்தம் இல்லாமல் நகராட்சி வந்து எடுக்க என்னாத்துக்கு இத்தனை நாள் சம்பாதிச்சு லட்சம் லட்சமா சேர்த்து வைக்க வேண்டும்? இது மாத்திரம் தன் பாட்டி, அம்மா, தம்பி எல்லாரையும் நல்லபடியாக அடக்கம் செய்ததே, இதுக்கு ஏன் அந்த நிலை வர வேண்டும்?


ஏகப்பட்ட கேள்விகளோடு அமைதியாக நடந்து வந்தேன்.அப்படி என்ன காதலை கொன்று குடும்ப கௌரவத்தை காப்பாற்றி வேண்டி தொலைக்க வேண்டிகிடக்கு???இதுவும் கௌரவக்கொலை பட்டியலில் தானே வரும்?

குறிப்பு: பதிவில் வந்த பெயர்களும் சம்பவங்களும்..... உண்மையே...

January 17, 2011

அபிஅப்பா - வினவு - அரசியல் - சீமான் - டண்டனக்கா A டணக்கனக்கா!!!

இரண்டு நாட்கள் முன்னதாக நான் இட்ட சீமான் பற்றிய இடுகைக்கு வினவு குழுமத்தில் இருந்து முதன் முறையாக ஒரு பின்னூட்டம் வந்தது. அதை உடனே வெளியிட்டுவிட்டு பொங்கல் வேலையில் கொஞ்சம் வலைப்பக்கம் வர இயலாமல் ஆகிவிட்டேன். அதற்கு உடனே பதில் சொல்லியிருந்தால் உடனே மற்றவர்களும் பார்த்து இருப்பர். ஆனால் இப்போது அங்கே போய் பதில் சொல்லி கொண்டு இருந்தால் யாருக்கும் தெரியாமலே போய்விடும் என்பதால் அதை தனிப்பதிவாக இட வேண்டி ஆகிவிட்டது. மற்றபடி சிறப்பு காரணங்கள் என எதுவும் இல்லை. இதோ அந்த பதிவையும் அதில் வினவு இட்ட பின்னூட்டத்தையும் இங்கே படித்து விடவும்.

ஒரு ஆரோக்கியமான விஷயத்தை தொடங்கி இருக்கும் வினவுக்கு என் பாராட்டுகள். (அதாவது தன் கருத்தை தன் மனதில் பட்டதை தன் வலைப்பூவைத்தவிர மற்ற இடத்திலும் வந்து சகஜமாக விவாதிப்பதை தான் சொன்னேன்) இனி உங்களுக்கான எனது விளக்கங்கள். இதை படிப்பவர்களே!இது முழுக்க முழுக்க ஒரு ஆரோக்கியமான அரசியல் அலசல் மட்டுமே. இதில் தங்களுக்கு ஒவ்வாத கருத்து இருப்பின் வெளிப்படையாக நாகரீகமாக தெரிவிக்கவும்.எனக்கு நேரம் இருப்பின் கண்டிப்பாக பதில் சொல்லுவேன்.

+++++++++++++++++++++++


\\சாமர்த்தியமான ஆய்வு,கீழிருந்து ஒரு கட்சியை கட்டுவதன் சிரமம், யதார்த்தம் குறித்த பார்வையில் அது பூத் கமிட்டிகளாக மட்டும் வெளிப்படுகிறது என்றால் ....\\

அரசியல் என்று இனிஷியல் இல்லாமல் சொன்னால் அந்த அரசியலிலே நான் ஏன் பூத்கமிட்டி, கட்சியின் உட்கட்டமைப்பு இதை பற்றி எல்லாம் சொல்ல போகிறேன்???. சீமான் பேராவூரணியில் "என்னை ஒரு நாள் முதல்வராக ஆக்குங்கள், நான் ஈழம் வாக்கி தருகின்றேன்" என்கிற பேத்தல் பேச்சு பேசியதால் தான் அப்படி பூத்கமிட்டியில் இருந்து கட்சி உட்கட்டமைப்பு முதல் பேச வேண்டி இருந்தது. இங்கு முதல்வர் என்பவர் நியமிக்கப்படும் நிலை இல்லை. தேர்தலில் நிற்க வேண்டும். அதிலே வெற்றி பெற்ற ச.ம.உ வில் பெரும்பான்மையினர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை எல்லாம் சீமான் அவர்களின் விசுவாசிகளுக்கு உணர்த்தவே இதை எல்லாம் தெளிவு படுத்த வேண்டியதாக போனது எனக்கு. தவிர தமிழ்நாட்டில் எல்லாரும் தேர்ந்தெடுத்து இவரை முதல்வராக ஆக்கினால் இவர் ஈழம் வாங்கி யாருக்கு கொடுக்க போகிறார்? தமிழக மக்களிடமா? யாரிடமிருந்து வாங்குவார்? ராஜபக்ஷேவிடம் இருந்தா? எப்படி வாங்குவார்? முதல்வரான பின்னர் அவரிடம் இருக்கும் தமிழக போலீஸ் வைத்து வாங்குவாரா? என்றெல்லாம் யோசிக்காமல் பேசிய பேத்தல் எல்லாம் கூட விட்டு விடுங்கள். ஆனால் முதல்வராக வர அவர் ஆசைப்பட்டு பேசியதற்கு அவர் முதலில் "தேர்தல் அரசியலுக்கு" வரவேண்டும். வந்தால் இத்தனை விஷயம் இருக்குன்னு தான் சொல்ல வந்தேன்.


+++++++++++++++++++++++++++++++++++++++

\\இப்போது கட்சி நிகழ்வுகள் கார்ப்பரேட் ஈவன்ட் மேனேஜ்மெண் போல மாறிவிட்டன. கொடி கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, ஆள் சேகரிப்பது எல்லாம் காசு கொடுத்தால் பெறும் சேவைகளாக மாறிவிட்டன.\\

ஓக்கே ஒத்துக்கொள்கின்றேன். அங்க தான் நீங்கள் நன்றாக கவனித்து பார்க்க வேண்டும். இதை கொஞ்சம் பின்னோக்கியில இருந்து வருவோம். நேத்து கூட வீட்டில் ஒரு பழைய டைரி எடுத்து படித்து கொண்டு இருந்தேன். ஒரு சின்ன வரவு செலவு கணக்கு. ஒன்றும் இல்லை. தெருவில் கழக கொடி ஏற்றும் வகையில் வரவு-செலவு தான்.

கொடி துணி (கறார் ஜவுளிக்கடை பாய் ) = இலவசம்(நன்கொடை)

கொடி கயிறு 40 முழம் = 9 ரூபாய்

கொடி தைக்க புருஷோத்தமன் டைலருக்கு = 2 ரூபாய்

தரவுகார காசிநாதனுக்கு மூங்கில் கழி = 3 ரூபாய்

சலாமத் பாய் கடைக்கு கருப்பு, சிவப்பு பேப்பர் வாங்க = 3 ரூபாய்

சணல்,( மைதா பசைக்கு ) = 1.50 ரூபாய்

கொடியில் சுற்றி வைக்க உதிரி பூ = 10 பைசா

ஆக மொத்தம் தன் ஏரியாவில் தன் கழக கொடி ஏற்ற ஒரு தொண்டன் செய்த செலவு இருபது ரூபாய் என்றாலும் அப்போது மூங்கில் கணு அடிப்பது முதல் கலர் பேப்பர் கொடி கட்ட மின்கம்பத்தில் உயிரை பணயம் வைத்தது முதல், கொடி ஏற்ற வந்த யாரோ வுக்கு கலர் வாங்கி கொடுத்தது வரை ஒரு தொண்டன் நீங்க சொன்னது போல ரத்தமும், சதையும்,உணர்வும், மின்கம்பத்தில் உயிரை பணயம் வைக்கும் வெறியும் கொண்டவனாகவே இருந்திருக்கின்றான் திமுகவில். இது 1970ம் ஆண்டு டைரி. அப்போது திமுக ஆட்சிக்கு வந்து 3 வருடம் ஆகிவிட்ட நிலை.

அந்த கால கட்டங்களில் வீட்டுக்கு வீடு ஒரு மர பென்ச் அல்லது இரட்டை பென்ச் தான் இருக்கும். யார் வீட்டிலாவது எழவு விழுந்தால் அல்லது கட்சி கூட்டம் போட்டால் மேடை போட இவை இரண்டுக்கும் மட்டுமே கிராக்கி வரும். பத்து வீட்டில் இருந்து பென்ச் சேகரிப்பர். பத்து பென்ச் போட்டு ஒரு மேடை. அதிலே சில வீடுகளில் இருந்து எடுத்து வரப்பட்ட மர நாற்காலிகள்.(எதுவுமே சீராக இருக்காது) ஒரே ஒரு ஸ்டேண்டிங் மைக். 3 கூம்பு ஸ்பீக்கர் இது போதும்.


ஆனால் இப்போதைய நிலை என்ன? நீங்க சொன்னது போல காசு கொடுத்தால் பெறும் சேவையாகிப்போனது இதல்லாம். போர்ட்டபிள் மேடை மீடியம் சைஸ் போட 5000 (அதிலே மேடைக்கு பின்பக்க டிஜிட்டல் பிளக்ஸ் பேனர், வலது இடது மேல் பக்க பிளக்ஸ் ஆர்ச் உட்பட) மைக் வகையறா ( இரண்டு மைக் செட், 20 ஸ்பீக்கர் உட்பட) அது 5000 ரூபாய், 9 அடி இரும்பு பைப்ல கொடி மொத்தம் வலது பக்கம் 50 இடது பக்கம் 50 க்கு வாடகை 2000 ரூபாய், மேலே 100 அடி தூரத்துக்கு பிலாஸ்டிக்கால் கொடிகள் 1000 ரூபாய், 200 பிலாஸ்டிக் நாற்காலிகள் 600 ரூபாய், ட்யூப்லைட் 100 க்கு 500 ரூபாய், ஆட்டோ அறிவிப்பு 2000 ரூபாய், போஸ்ட்டர் (சுமாராக) 2000 ரூபாய், வரும் பேச்சாளர்க்கு தங்கும் உண்ணும் செலவு போக கச்சேரி காசு ஐந்தாயிரம் (சுமாரான பேச்சாளர்) இப்படியாக ஒரு சுமாரான கூட்டத்துக்கு இருபத்தி ஐந்தாயிரம் முதல் முப்பதாயிரம் வரை ஆகின்றது. இதிலே இப்போது முன்பு போல கடை வசூல் என்பதும் நடக்காது. சின்ன, பெரிய நிறுவனங்கள் (அவைகள் எப்போதாவது கட்சி உதவி வேண்டி வந்திருக்கும்) அவைகள் கொடுக்கும் ஆயிரம் இரண்டாயிரம் கொண்டு செய்ய வேண்டி இருக்கு இதை எல்லாம். ஆனால் இதிலே ஒரு சின்ன விஷயம் என்னான்னா இந்த மேடை, ட்யூப்லைட், ஸ்பீக்கர், பிலாஸ்டிக் கொடி, இதல்லாம் வாடகைக்கு கொடுக்கும் ஆள் கட்சிகாரனா இருப்பான். திமுக கூட்டம்ன்னா திமுககாரனிடமும், அதிமுக என்றால் அதிமுககாரனிடம் காண்டிராக்ட் போகும். அப்படி போனால் தான் கொடி கட்டி விட்டு அதை ஆசையோடு வாஞ்சையோடு தடவிப்பார்ப்பான் அவன் என்றே அப்படி செய்வர். தவிர பிரஸ் கூட கலைஞர் அச்சகத்திலே அண்ணா அச்சகத்திலோ தான் அடிப்பர். ரேட்டும் சல்லிசா இருக்கும். கட்சிகாரன் பிழைத்தது போல இருக்கும் என்கிற கட்சி உணர்வு.


ஆக உணர்வுகள் செத்து போய்விடவில்லை. ஆனால் கால மாற்றத்துக்கு ஏற்ப நாங்கள் மாறிப்போய்விட்டோம். இன்னும் மூங்கில் மரத்திலே கொடி கட்டிகிட்டு இருக்க முடியுமா சொல்லுங்க? பனைமரத்திலே மின்சார ஒயர் இழுத்து அதிலே குண்டு பல்பு போட்ட அரசாங்கமே இப்போ கான்கிரீட் கம்பம் வைத்தும் அண்டர்கிரவுண்டு கேபிள் சிஸ்டத்துக்கும் போன பின்னே நாங்களும் கொடி ஏற்ற அந்த அளவு முன்னேறிகிட்டு தான் இருக்க வேண்டும்.


ஆனாலும் நீங்கள் சொல்வது போல பெரிய மாநாட்டுக்கு எல்லாம் கட்டு சோறு கட்டிகிட்டு போய் பார்த்த தொண்டன் இப்போது இல்லை. மாநாட்டை தன் வீட்டில் உட்காந்து லைவ் ரிலே பார்க்கிறான். ஆனால் அவன் கட்சி உணர்வு இன்னும் கொஞ்சம் உயிரோடு தான் இருக்கின்றது. பிற்காலத்தில் எப்படி என கணிக்க இயலவில்லை.

“தேர்தல் அரசியல்” என்று வந்து விட்டால் "காம்ப்ரமைஸ்" என்னும் "தழைந்து போவது" என்னும் இந்த மாற்றம் தவிர்க முடியாதது. ஆனாலும் உங்கள் கூற்றில் உண்மை இல்லாமலும் இல்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++


\\அதன்படி இதற்கு ஒரு பெரிய ஸ்பான்சர் கிடைத்தால் சீமானாலும் முடியும், இல்லை அபி அப்பா திமுகவிலிருந்து பிரிந்து சென்று ஆரம்பித்தாலும் முடியும்.\\

ஸ்பான்சர் என்றாலே பணம் படைத்தவன்.அப்படி ஸ்பான்சர் செய்வதால் பலனை எதிர்பார்ப்பவன் தானே. அவன் ஏன் சீமானை பிடித்து தொங்கி கிட்டு இருக்க போகிறான். எப்படியாக இருந்தாலும் அந்த பணம் படைத்த ஸ்பான்சர் தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவின் பிற பகுதியையோ சேர்ந்தவனாக தான் இருக்க போகின்றான். சீமான் ஜெயித்து வந்தால் அவனுக்கு என்ன பிரயோசனம் இருக்க போகுது. அவர் தான் ஈழம் வாங்கி தர வேண்டி அதற்காக தமிழக போலீசை வைத்து ராஜபக்ஷே கூட சண்டை போட போயிடுவாரே? ஸ்பான்சர் செய்தவன் வாயிலே விரலை வைத்து கொண்டு போவானா? போயும் போயும் சீமானை கட்டிகிட்டு அழுவதை விட காசு குடுத்தா எல்லாம் கிடைக்கும் என்கிற போது அவனே நின்னுட்டு போயிடுவானே? ஓட்டும் அப்படி காசு கொடுத்து வாங்கிவிட மாட்டானா? ஒருவேளை சீமானுக்கு இந்தியாவை தவிர வெளிநாட்டு ஸ்பான்சர் கிடைத்தல் கூட இது சாத்தியம் இல்லவே இல்லை. அந்த பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டு கொண்டு சீமானை தூக்கி குப்பை பக்கெட்டில் போட்டு விட்டு தான் போவார்கள் மக்கள். இது தான் நிதர்சனம்.


\\பெரிய ஸ்பான்சர்\\ வி என் சுதகரன் மற்றும் பாரிவள்ளல் என்கிற பச்சமுத்துக்கு போன்றவர்களுக்கு கூடத்தான் பணமும் இருக்கு. ஆசையும் இருக்கு முதல்வர் நாற்காலி மாதிரி கனவெல்லாம் இருக்கு அவர்களுக்கும். அதுக்கு பக்க பலமா எதுக்கும் இருக்கட்டுமேன்னு தன் ஜாதியையும் தான் தூக்கி கிட்டு நிக்கிறாரு பச்சமுத்து. நடக்குதான்னு பாருங்க.நடக்காது. அதல்லாம் காசு கொடுத்து எல்லாத்தையும் வாங்கிட முடியாதுங்க. உணர்வு என்பது தானா ஊறனும்.அதையும் மீறி அந்த உணர்வை சரியான பாதைக்கு அழைத்து சென்று இலக்கை எட்ட வைக்க சரியான தலைமையும் வேண்டும்.


\\ அபி அப்பா திமுகவிலிருந்து பிரிந்து சென்று ஆரம்பித்தாலும் முடியும்\\

அபிஅப்பா மாதிரி ஆயிரம் அபிஅப்பா திமுகவில் இருந்து மதிமுக பிரிந்து போன போது வைக்கோ கூட போனாங்க. உணர்வும் இருந்துச்சு. ஆனா அதை சரியா பயன்படுத்த ஒரு சரியான தலைமை இல்லாம போச்சே அவங்களுக்கு:-(( அதனாலத்தான் சொல்கிறேன்… சும்மா காசு பணம் வச்சுகிட்டு கார்பரேட் கம்பனி மாதிரி கட்சி நடத்தவும் முடியாது. அது போல வெறும் உணர்வு, ரத்தம், சதை, கருத்து மோதல், விவாதம், இதையெல்லாம் வச்சுகிட்டும் எதும் "தேர்தல் அரசியல்" செய்யவும் முடியாதுங்க. இரண்டும் இருக்க வேண்டும் இப்போதைய தமிழக சூழலில்!


++++++++++++++++++++++++++++++

\\அடுத்து பூத் கமிட்டிக்கு 3000 ஆட்களை திரட்டுவதெல்லாம் பெரிய கட்சிகளுக்கே சாத்தியம் என்பதெல்லாம் தற்கால வணிக மேலாண்மையில் பெரிய விசயமே இல்லை. மேலதிகமாக பூத் கமிட்டியில் விலை போகாதவர் எவரும் இல்லை, இந்த சீரழிந்த நிலை தமிழக அரசியலில் நிலை கொண்டு நாளாகிறது. விலை அதிகம் கொடுப்பவனே அங்கு ராஜா. தி.மு.கவைக் கண்டு அம்மா அச்சப்படுவது இந்த விசயத்தில்தான்.\\

மேலே நீங்க சொன்ன மாதிரி "3000 ஆட்களை "திரட்டும்" ஆட்களை வைத்து கொண்டு பூத் கமிட்டி எல்லாம் போட்டா வேலைக்கு ஆகாது. விலைக்கு தான் போவார்கள். அதற்கு தான் மேலேயே சொல்லியிருக்கேன். உணர்வோடு கூடிய காசு இருந்தால் மட்டுமே இப்போதைய சூழலில் தேர்தல் அரசியல் சாத்தியம்.

+++++++++++++++++++++++++++++++

\\எனவே உங்கள் 'யதார்த்தமான' அரசியல் குறித்த ஆய்வு சில தொழில் நுட்பங்கள் பற்றிய அனுபவப் பார்வையாக இருக்கிறது. அரசியல் என்பது தொழில்நுட்பம் மட்டுமல்ல, அது மக்களுடன் இரத்தமும், சதையுமான கருத்துப்போராட்டம். அது குறித்த யதார்த்தத்தை அறிவதற்கு தி.மு.க அனுபவம் போதாது. ஏனெனில் தி.மு.க என்பது வசதி படைத்த தமிழர்கள் தமது சொத்துக்களை பெருக்குவதற்கும், காப்பாற்றுவதற்குமான செக்யூரிட்டி நிறுவனம்.\\


மக்களுடன் சேர்ந்த கருத்து போராட்டத்துக்கு எங்களுக்கு கிடைத்த வெற்றி தானே அய்யா 1967 முதல் மக்கள் எங்களுக்கு கொடுத்த ஆட்சி என்கிற அங்கீகாரம். அதை வைத்து தானே நாங்கள் எது எதுக்கு போராடினோமோ அதை எல்லாம் ஒன்னு ஒன்னா செஞ்சுகிட்டும் இருக்கோம். திமுக போராடிய விஷயம் எல்லாவற்றையும் பெற வேண்டுமானால் "தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும்" என்கிற நிலைப்பாடு எடுத்து தானே "சமூக அரசியல்" பாதையில் இருந்து விலகி பெரியாருடன் இருந்து விலகி திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம் கண்டோம். போராடிய அத்தனையும் "ஏன் கேட்டு பெற வேண்டும்? நாமே ஆட்சியில் இருந்தால் நாமே அதை செயல்படுத்தலாமே" என்பதால் தானே "தேர்தல் அரசியலை" தேர்ந்தெடுத்து அதிலெ வெற்றியும் கண்டோம். இருபத்தி ஒரு லட்சம் பேருக்கு குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடு என்பது வரை கொண்டு வந்து இருக்கின்றோம். மக்களுடன் இரத்தமும் சதையுமாக நாங்கள் இல்லாமல் போயிருந்தால் மேட்டுக்குடி அரசியல் அதாவது மக்களோடு ஒட்டாமல் இருந்திருந்தால் குடிசைகள் கண்ணில் பட்டிருக்குமா? ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்க வேண்டி மனதில் பட்டிருக்குமா? குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச படிப்பு கொடுக்கப்பட்டிருக்குமா? 108 ஆம்புலன்ஸ் திட்டம் கிடைத்து இருக்குமா? மருத்துவ காப்பீடு திட்டம் கிடைத்து இருக்குமா? இத்தனை தொழிற்சாலை கிடைத்து இருக்குமா? இடஒதுக்கீடு செய்து அடிமட்ட மக்கள் தொழில்நுட்ப படிப்பு படிக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்குமா? கலப்பு திருமணம் ஊக்குவித்து இருக்கப்படுமா?மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு ஆகியிருக்குமா? சுயமரியாதை திருமணம் சட்ட ரீதியாக ஆகியிருக்குமா? பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டிருக்குமா? பெண்களுக்கு கர்ப்ப கால சலுகைகள் கிடைத்து இருக்குமா? முதியவர்களுக்கு பென்ஷன், ஏழ்மையில் வாடும் கலைஞர்களுக்கு பென்ஷன் கிடைத்து இருக்குமா? என எத்தனையோ "மா" சொல்லிகொண்டே போயிருக்கலாம். தேர்தல் பாதை திருடர் பாதை என நாங்கள் சொல்லிக்கொண்டு இருந்திருந்தால் இப்போது அதே 1967க்கு முந்தைய ஒரு நிலையில் என்ன பெரிய முன்னேற்றம் தமிழகத்துக்கு வந்திருக்க போவுது. நேரு காலத்தில் நெய்வேலியில் நிலக்கரி கிடைத்த பின்னர் கூட அதை எல்லாம் சுரண்டி வடமாநிலங்களுக்கு தானே கொண்டு போகப்பட்டது. ராயல்டி என்கிற தொகை கூட தமிழகத்துக்கு திமுக ஆட்சியில் தானே பெறப்பட்டது. அதே போல இங்கு விளையும் நெல் கூட FCI க்கு மாத்திரம் தானே போயிருக்கும். TNCSC க்கு வந்திருக்குமா? அல்லது TNCSC என்பதே வந்திருக்குமா தமிழகத்துக்கு?. தேர்தல் அரசியல் நிலைப்பாட்டினால் மாத்திரமே இதல்லாம் சாத்தியப்பட்டது திமுகவுக்கு. அரசியலில் ஆட்சி அமைக்க அதிகாரத்தை கையில் எடுக்க "தேர்தல் அரசியலே" சரி என நினைத்து அந்த வழியில் மக்களோடு மக்களாக அது குறித்த யதார்த்தத்தை அறிந்த காரணத்தால் மட்டுமே நாங்கள் ஜெயிக்கிறோம். ஆகவே எங்களுக்கு அந்த அனுபவம் போதாது என்று நீங்கள் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சரி அப்படி அப்படி சொல்லும் நிலையில் நீங்கள் இருப்பதாக அதாவது \\மக்களுடன் இரத்தமும், சதையுமான கருத்துப்போராட்டம்\\ இப்படியான போராட்டத்தை கையில் எடுத்ததாக நினைக்கும் நீங்கள் பெற்ற வெற்றி என்ன என்பதை பட்டியலிட முடியுமா? நான் மேலே பட்டியலிட்டது போல! (நான் பட்டியலிட்டது ஒரு சதம் தான். மீதி 99 சதம் சொல்ல இந்த பதிவு போதாது) சரி நீங்கள் எந்த விதத்திலாவது சமரசம் செய்து கொண்டு இருக்கின்றீகளா? வினவு தளம் மற்ற தளங்களில் வந்து தன் வாத பிரதிவாத்தை வைத்து இருக்கின்றதா? மற்ற வலைப்பதிவாளர்கள் கூட நீங்கள் ஒரு சக பதிவராக இருப்பதாக சஜமான பதிவராக இருப்பதாக உணர்கின்றீரா? இல்லை. கவிதை உங்களுக்கு இஷ்டம் இல்லை. கதை உங்களுக்கு இஷ்டம் இல்லை. சினிமா மீது வெறுப்பு. பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ 5000 பேர் இருக்கும் சக வலைப்பதிவர்களிடம் கூட சகஜமான ஒரு மனோபாவத்தில் பழக இயலாத நிலையில் இருக்கும் நீங்கள் உங்கள் கட்சியான மக்கள் கலை இலக்கிய கழகத்தை எப்படி மக்களோடு மக்களாக இருக்க வைக்க போகின்றீர்கள்? ஆனால் \\அது மக்களுடன் இரத்தமும், சதையுமான கருத்துப்போராட்டம்.அது குறித்த யதார்த்தத்தை அறிவதற்கு தி.மு.க அனுபவம் போதாது. \\ இப்படி திமுகவை விமர்சிக்கின்றீர்களே அதற்கு முன்னர் நீங்கள் ஏன் சகஜமாக மற்றவர்கள் கூட பழக கூடாது? நீங்கள் ஏன் "என் முகவரி இது தான். என் பெயர் இது தான் என வெளிப்படை அரசியல் செய்ய கூடாது? அப்படி என்ன மூடுமந்திர அரசியல்? அதற்கான தேவை என்ன?நீங்கள் சொல்வது எல்லாமே நல்ல விஷயம் தான் என நீங்கள் நினைக்கும் பட்சத்தில் நீங்கள் ஏன் முகமூடி அரசியல் நடத்த வேண்டும்? சரி அதல்லாம் உங்கள் அரசியல் பாலிசி என்று வைத்து கொள்வோம். ஆனால் நீங்கள் ஏன் திமுகவை அரசியல் என்பது மக்களுடன் இரத்தமும் சதையுமான கருத்து போராட்டம் அது குறித்த யதார்த்தத்தை அறிவதற்கு திமுகவுக்கு அனுபவம் போதாது என சொல்ல வெண்டும்?

ஆக மேலே நீங்கள் சொன்ன மாதிரி நாங்கள் தான் மக்களோடு பழகி பழகி அவர்களின் நாடி பிடித்து பார்த்த நாங்கள் தான் "மக்களுக்கான" அரசியலுக்கு தகுதி படைத்தவர்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++++

\\ஏனெனில் தி.மு.க என்பது வசதி படைத்த தமிழர்கள் தமது சொத்துக்களை பெருக்குவதற்கும், காப்பாற்றுவதற்குமான செக்யூரிட்டி நிறுவனம்\\

திமுகவில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருக்கின்றனர். அனேகமாக அதிமுகவிலும் அப்படியே நீங்கள் சொல்வது போலத்தான் என்று வைத்துக்கொள்வோம்.காங்கிரஸ் ஒரு மேட்டிமை கட்சி என்றே வைத்துக்கொள்வோம். ஆக 60 சதத்துக்கும் மேலான மக்கள் தமிழகத்தில் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்து சுபிட்சமாக இருப்பதாக அர்த்தம் ஆகிப்போகின்றது. நீங்கள் சொல்வது போல இல்லை. நீங்கள் சொல்லும் சில அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் இப்படி பெரும் பணக்காரர்கள் ஆக இருக்கலாம், ஆனால் தொண்டன் தன் ஆட்சியினால் தனக்கு கிடைத்த தன் குடும்பத்துக்கு கிடைத்த தன் மகனுக்கு இடஒதுக்கிட்டால் கிடைத்த கல்வியால் பெற்ற வருமானத்தில் மட்டுமே சுபிட்சமாக இருக்கின்றான்.தன் ஆட்சியால் கிடைத்த விவசாய சலுகைகளால் சுபிட்சமாக இருக்கின்றான்.இன்னும் பல சலுகைகளால் சுபிட்சமாக இருக்கின்றான். ஒன்னரை கோடி உறுப்பினர்களும் நூறு சதம் உத்தமர்கள் என்று சான்றளிக்கவோ அல்லது உத்தமர்களாக மாற்றுவோம் என்று உறுதி கொடுக்கவோ ஒரு கட்சிக்கு இயலாத காரியம் என்கிற யதார்த்தத்தை உணருங்கள்.

+++++++++++++++++++++++++++++++++++

\\அரசியல் என்றாலே தேர்தல், தேர்தல் வெற்றிகளின் கணக்குகள், என்று பார்ப்பது கூட அந்த செக்யூரிட்டி பிசினஸ் மனநிலைதான் என்று தோன்றுகிறது. தேர்தல் வரும் போது இதை விரிவாக வினவில் எழுதுகிறோம்.\\

இல்லை. தேர்தல் அரசியல் என்பது மட்டுமே அப்படி. மற்றபடி திமுகவின் தாய் கழகம் திராவிடர் கழகம் "சமூக அரசியல்"மட்டுமே செய்து தன் நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாமல் தான் இருக்கின்றது. \\தேர்தல் வரும் போது இதை விரிவாக வினவில் எழுதுகிறோம்\\ வந்தாச்சு தேர்தல். எழுத ஆரம்பிச்சுடலாம். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். கொஞ்ச நாள் காஷ்மீர் பிரச்சனை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு தமிழகம் பக்கம் பார்வையை திருப்புங்க சாரே!

++++++++++++++++++++++++++++++++

\\அந்த வகையில் எமது அரசியலுக்கு உங்களது ஆய்வுகள் நிச்சியம் பயன்படும். நன்றி.\\

மிக்க நன்றி. ஆமாம், இதிலே எதும் உள்குத்து இருக்குதா:-))

January 15, 2011

நானும் ஆடுகளம் பார்த்தாச்சு! பிடிங்க பொங்கல் பரிசாக இந்த விமர்சனத்தை!!!

இந்த கைலி கட்டும் வித்தை இருக்கின்றதே அது பெண்கள் "V" தாவணி கட்டுவதைப்போல ஒரு அழகான கவிதை. கைலியை கட்டி சுருட்டி விட்டு அதன் சுருட்டலில் நீராராடியா கார்பரேட் லாபிக்கு வாங்கின அறுபது கோடியை வைத்து ஒரு சுருட்டு சுருட்டினாலும் வருமான வரித்துறை என்ன அந்த ஆண்டவனே வந்தாலும் ஒன்னும் பிடுங்க முடியாது. அத்தனை ஒரு லாவகம் இருக்கும் அந்த சுருட்டலில். அதன் பின்னர் இரண்டு கையையும் தொடை வரை தொங்கவிட்டு வலது பக்க தொடையை வலது பக்க விரல்களாமும் அது போல இடது பக்க தொடையை இடது கைவிரல்கலாலும் அப்படியே ஒரு கொத்தா பிடித்து முழங்கையை முட்டியை அசார் ஃபோர் அடிக்கும் போது கை மணிக்கட்டை திருப்பும் அதே 45 டிகிரிக்கு தூக்கி பின்பக்க புட்டத்தில் ஒரு எக்ஸ்ட்ரா தூக்கு தூக்கு அபடியே முன்பக்கமாக பிடித்த அந்த இரண்டு கொத்து கைலிதுணியை குஞ்சாக்காகோபனுக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு மாதிரி ஒரு முடிச்சு போட்டா விஷயம் முடிஞ்சுது. பார்த்தா ராஜராஜசோழன் படத்திலே குந்தவைக்கு டிரஸ் போட்ட மாதிரி முன் கொசுவம் வைத்த ஒரு அழகிய தோற்றம் வந்துவிடும். அப்படி வந்தடுச்சுன்னா அப்படி கைலி கட்டிய அந்த விடலை பையனுக்கு ஒரு தன்னம்பிக்கை வரும் பாருங்க" இந்த பூமியை ஜெயிச்சுட்டேன். வேற என்ன கிரகம் இருக்கு பாக்கி?"ன்னு இந்த உலகத்தை பார்த்து கேட்பது போல ஒரு அசால்ட்டான திமிர் வரும். அதுவும் அவன் சிவகங்கை மாவட்டம் வெள்ளளூர், உறங்கான்பட்டி, கூட்டுறவுப்பட்டி ஏரியா என்றால் இன்னும் கொஞ்சம் அசால்டான திமிர் வரும்.

காசு பணம் அவனுக்கு முக்கியமில்லை. இன்னும் சொல்ல போனா "கம்முனாட்டி வளர்த்த பிள்ளை கழிசடை"ன்னு சொல்லுவாங்களே அது போல தட்டி வளர்க்க அப்பன் இல்லாத தன் ஆசைப்பட்ட மாதிரி விட்டேர்த்தியாக "சேவக்கட்டு" மேல ஆசை இருந்தால்... அதை செயல்படுத்த ஒரு நல்ல வாத்தியார், வீட்டுக்கு வந்தா படுக்க ஒரு காரைவீடு, பொங்கி போட ஒரு அம்மா... இது தான் களம் என முடிவாகிப்போனது. களம் இது தான் என்கிற போது ஆடித்தீர்க்க வேண்டியது தானே. இயக்குனர் வெற்றிமாறன் ஆடித்தீர்த்து விட்டார். அவர் ஆட்டத்துக்கு முழு காரணம் அவருக்கு கிடைத்த அந்த பொருத்தமான "இயக்குனர்களின் நடிகன்" தனுஷ். தனுஷ் சொன்ன மாதிரி பார்க்க பார்க்க பிடித்து தான் போனது அவரை.

நன்கு தெரிந்த ஒரு பொருளை விளம்பரம் செய்து வியாபாரத்தை பெருக்குவது ஒரு காசு பணம் வசதி இருக்கும் எவனும் செய்து விடலாம். அதாவது "பிராண்டு" மாத்திரம் விளம்பரம் செய்தால் போதுமானது. ஆனால் "புதிய கமாடிட்டியை" யும் விளம்பரம் செய்து அதன் கூடவே "பிராண்டை"யும் விளம்பரப்படுத்தி வெற்றி இலக்கை எட்டுவது சாதாரண விஷயம் இல்லை. இங்கே "சேவக்கட்டு" என்கிற புதிய கமாடிட்டியையும் சேர்த்து அந்த சேவல் கோட்டை தொடுகின்றதா, மூக்கு 120 செகண்டுக்குள் தரையை தொடுகின்றதா என்பது போன்ற "புதிய கமாடிட்டி"யை அறிமுகம் செய்த இயக்குனர் மணிமாறன், தியேட்டரில் நான் சீட் முனைக்கு வந்து கைதட்டிய போது தன் முயற்சியில் முழு வெற்றி பெற்றுவிட்டதாகவே உணர்ந்தேன். இது தமிழ் சினிமாவுக்கு புதிதான ஒரு விஷயம். கிழக்கு சீமையில் சேவல்கட்டு தான் திருப்புமுனை காட்சியாக இருந்தாலும் இத்தனை விலாவாரியாக அதில் சொல்லப்படவில்லை.

அது போல அந்த சேவலுக்கு ஜாக்கியாக வரும் கருப்பு என்கிற பாத்திரத்தில் வரும் தனுஷ் பற்றி இந்த பதிவு முழுமைக்கும் சொல்லிகொண்டே போகலாம். நான் துபாய் குதிரை பந்தயம் பற்றிய ஒரு பதிவே போட்டிருக்கேன். அரை டன், ஏழு அடி குதிரைக்கு மேலே 45 கிலோ ஜாக்கி. அவன் உருவத்துக்கு அந்த ஜெயண்ட் மேலே ஏற்றி விட்டால் தான் உட்காரவே முடியும். அதிலே அந்த நாட்டு அரசரின் சொந்த குதிரையாக இருந்தாலும் அந்த குதிரை ஓனர் தான் அதாவது அரசர் தான் தன் இரு கைகளால் ஏந்தி கொள்ள ஜாக்கி அந்த உள்ளங்கையின் மீது தன் உள்ளங்கால் பாதம் வைத்து ஒரு ஜம்ப் செய்து ஏறி குதிரையில் உட்காருவார். அது தான் அந்த (அரசரானாலும் சரி) அந்த ஜாக்கிக்கு கொடுக்கும் உச்ச பட்ச மரியாதை. அது போல இயக்குனர் மணிமாறன் இந்த சேவல் ஜாக்கிக்கு தனுஷுக்கு கொடுக்கும் மரியாதை பல நல்ல காட்சிகளை "நடிப்பை" காட்டவே கொடுத்து இருப்பது தான். அதை திறம்பட செய்திருக்கின்றார் தனுஷ். வெல்டன் தனுஷ். இன்னும் இருபது வருஷம் பின்னர் தனுஷ் தன் பேரப்பிள்ளைகள் கிட்டே "ஆடுகளம்" பற்றி பெருமையாக கூட சொல்லிக்கொள்ள ஒரு படம் இது தனுஷுக்கு.

கதை என்று பார்த்தால் இரண்டு விஷயம் தான்.1. அத்தனை ஒரு பிரமாதமான கதை இல்லை.அல்லது 2. மணிமாறனுக்கு அந்த கதையை அழகாக சொல்ல தெரியவில்லை. வசனம் என்று பார்த்தால் மதுரை சிவகங்கை மாவட்ட அழகிய ஸ்லேங். "கொண்டேடேடே புடுவேன்" "சங்க அறுத்துடேன்" என வழமையான மதுரை ஸ்லேங் என எழுதிவிட்டு போகலாம். ஆனால் அதை அந்த மாடுலேஷனோடு சரியான இடத்தில் வைத்து அழகுபடுத்திய விதத்தில் தான் அந்த வசனங்கள் உயிர் பெற்றன. ஆகையால் இதற்கும் இயக்குனருக்கே ஷொட்டு.

கதாநாயகி! ஒரு அழகிய பதுமை. ஆங்கிலோ இந்திய பெண் கதாபாத்திரம். அந்த பெண்ணை விடுங்க. அந்த பெண் குடியிருக்கும் அந்த ஆங்கிலோ இந்திய குடியிருப்பு...அங்கே என் கண்ணுக்கு தெரிவது படத்தின் ஆர்ட் டைரக்டர் தான். ஒரு அழகிய பதுமை இருக்கும் போது அவள் குடியிருப்பு அப்படியே திருச்சி பொன்மலைப்பட்டி ஆங்கிலோ இந்திய வீடு மாதிரி ஒரு சர்வ சுத்தமாக ஆங்கிலேய வாசனையுடன் வீட்டில் ஒரு கிருஸ்மஸ் ஸ்டார் கூட விட்டு விடாமல் அங்கே தெரியும் ஆர்ட் டைரக்டருக்கு ஒரு சபாஷ்.

ஆடுகளம்! அதாங்க டோர்ணமண்ட் நடக்கும் இடம் மற்றும் சூழல். ஒரு ஒரு பெரிய குடும்பங்கள் மோதும் சென்சிட்டிவான ஒரு போட்டிக்கு நடுவர் ஒரு ஸ்டாப் வாட்ச் கூட இல்லாமல் சர்வ சாதாரணமாக தென்னந்தோப்பு, 3 லட்ச ரூபாய் பந்தயம் எல்லாம் "பெட்" கட்டும் ஒரு போட்டிக்கு ஒரு ஸ்டாப் வாட்ச் கூட இல்லாமல் தன் கைக்கடிகாரத்தை பார்த்து தீர்ப்பு சொல்லும் இடமாகட்டும், வர்ணனை செய்பவர் இடையிடையே அதே டேபிளில் ஒரு குவாட்டை உடைத்து ஊத்தி கொண்டு வர்ணிப்பதாகட்டும், சேவல் சண்டை ஒரு ரவுண்டு முடிந்ததும் சேவலுக்கு தண்ணீர் காட்ட விடப்படும் 5 நிமிட கேப்பில் அதை எடுத்து கொண்டு ஓடும் ஜாக்கிகள், அதன் பின்னர் ஓடும் கூட்டம் அங்கே சேவல் கழுத்து ரத்தைத்தை தன் வாயால் உறிஞ்சி எடுத்து துப்பி, கிழிந்த இடத்தை நரம்பு, ஊசி கொண்டு தைத்து அடுத்த ரவுண்டுக்கு தயார்படுத்தலாகட்டும், புதிதாய் முளைத்த டிஜிட்டல் பேனர்களாகட்டும் எல்லாமே ஒரு சேவல்கட்டுக்கு போய் வந்த திருப்தி. இந்த காட்சி அமைப்புகளுக்கு நான் யாருக்கு பாராட்டு தெரிவிப்பது. தான் அவதானித்ததை அழகாய் சொல்ல தெரிந்த இயக்குனருக்கு மீண்டும் பாராட்டுகள்.

இதை எல்லாம் விடுங்கள். ஒரு சாதாரணமான, நான் மேலே முதல் பத்தியில் சொன்ன மாதிரியான கைலி கட்டி ஒரு மடக்கிவிடப்பட்ட சட்டை போட்ட ஒருவனுக்கு லட்டு மாதிரி ஒரு பெண் அவனை நோக்கி ஒரு எஸ்கேப்பிசத்துக்காக காதலிக்கிறேன் என சொல்லும் போது ஒரு உணர்ச்சி வருமே அதை எப்படி சொல்வது? கிட்ட தட்ட ரஜினிகாந்தின் பெண் தனுஷ் கிட்டே காதலை சொன்ன போது ஒரிஜினலாக இப்படித்தான் ஒரு உணர்வும் வந்திருக்கும் தனுஷுக்கு. அதைத்தான் இப்படி அழகியல் கவிதையாக வடித்து கொடுத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அப்போது அந்த கைலி கட்டும் அழகு மாறும் பாருங்க. பார்க்க கண் கோடி வேண்டும். "இனி என்ன வேண்டும் இந்த உலகத்தில்" என கைலியை இரு கைகளாலும் தூக்கி தன் முக வெட்கத்தை தலை மூடி மறைத்தும், தன் தோள்பட்டைக்கு மேலாக தூக்கியும் தன் அந்தரங்க பாகம் எல்லாம் திறந்து கிடந்தாலும் "அவளுக்கே என்னை பிடித்து விட்டது. உங்களுக்கு என்னடா லுச்சா பசங்களா" என உலகத்தை பார்த்து ஒரு அலட்சிய நிகழ்வை நடத்தி காண்பித்த தனுஷ் உங்களுக்கு இந்த வருடம் தேசிய விருது கொடுத்தாலும் தகும். அந்த செயலுக்கு ஜி வி பிரகாஷ் அமைத்த இசையும், அந்த"ஆத்தே ஆத்தே உன்னை வெள்ளாவி வச்சு வெளுத்தாங்களா, வெயிலே படாம வளர்த்தாங்களா" என்கிற வரிகளை எழுதிய விரல்களாகட்டும் பாராட்டுக்கு முழுமையானவை தான்.

ஈழக்கவிஞர் ஜெயபாலன் ஆகட்டும் அவரது மனைவியாக வரும் 'மீனாள்" ஆகட்டும், நல்லவரா கெட்டவரா என சொல்ல முடியாத கிஷோர் ஆகட்டும் அந்த சேவக்கட்டு போட்டியாளர் இண்ஸ்பெக்டர் ஆகட்டும் எல்லாருமே நடிப்பு புலிகள். படத்திலே வரும் போலீஸ்ஸ்டேஷன் ஒரு ரியல் போலீஸ்ஸ்டேஷன் மாதிரி ஒரு ரியாலிட்டி.

பந்தயத்தில் ஜெயித்து கிடைத்த 3 லட்சம் பணத்தை கொண்டு வந்து ஒரு கைலி விரித்து அதில் கொட்டி அம்மாவிடம் காட்டும் போது ஒரு விதமான எக்ஸ்பிரஷன் அதே அம்மா பின்னர் ஒரு சூழலில் 'இனி சேவல்கட்டு பக்கம் போகாதே" என சொல்லும் போது காரை பெயர்ந்து போகும் படியாக சுவற்றை அடித்து விட்டு கோபப்படும் போதும் அம்மா இறந்த பின்னர் நார்மலான சோக முகமும், கடைசி கட்டத்தில் தன் குருநாதரின் சந்தர்ப்ப வச சூழ்ச்சி தெரிந்த பின்னர் "ச்சே போங்கண்ணே" என அலுத்து ஒரு இயல்பான நடிப்பை காட்டுவாரே தனுஷ்.. உங்களுக்கு மீண்டும் மீண்டும் சபாஷ்.

ஆங்கிலோ இந்திய கூட்டத்தில் ஒரு பார்ட்டியில் கதாநாயகியின் பாட்டி என்ன தொழில் செய்கிறாய் என கேட்ட போது "காக் காக் போட்டிங். மை காக் வெரி பிக்" என சொல்லி எல்லோரும் ஒரு வித அர்த்த புஷ்ட்டியோடு சிரிக்கும் போது அசடு வழியும் கதாநாயகி நடிப்பு ரியல் அசடு வழிதல். இது போல படம் நெடுக சொல்லிக்கொண்டே போனாலும்.....

போனாலும்.... போனாலும்... முடிச்சு போடுவது என்பது ஒரு கதை எழுதிகிட்டே வரும் போது முடிச்சுகள் விழுந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் அதை கதை முடியும் தருவாயில் அதை அவிழ்த்துகொண்டே வருவது தான் கதையின் வெற்றி இருக்கின்றது. பாக்யராஜ் படம் "ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி" படம் ஏகப்பட்ட முடிச்சுகளோடு வந்து கொண்டே இருக்கும். கடைசி அரை மணி நேரத்தில் ஒன்னு ஒன்னாக அதை எல்லாம் சரிசெய்து கொண்டே வருவார். எல்லாம் முடிந்து கிட்ட தட்ட கதாநாயகனும் நாயகியும் சேர்ந்து முடித்த பின்னும் ஒரு சின்ன நெருடல் இருக்கும் படம் பார்ப்பவர்களுக்கு. அதாவது ஒரு டுபாக்கூர் குடும்பத்துக்கு ஒரு செக் கொடுத்து இருப்பாங்க. அதை அப்படியே விட்டுருந்தால் கூட குடிமுழுகிப்போய்விடாது. ஆனாலும் படம் முடியும் கடைசி ஒரு நிமிடத்தில் அதையும் சரி செய்வார் பாக்யராஜ். அப்படிப்பட்ட பாக்யராஜிடம் வெற்றிமாறன் சென்று ஈகோ பார்க்காமல் "சார் இது வரை எடுத்த படம் இது தான். இதை எப்படி முடிப்பது?" என கேட்டு செய்திருந்தால் கண்டிப்பாக இது ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.

இது தான் படத்தை பற்றிய என்பார்வை. குறை இருப்பின் மன்னிக்கவும். கோர்வையாக சொல்லியிருக்க கூட மாட்டேன். நான் படம் பார்ப்பது மிகவும் அரிது. அதிலும் முதல் நாள் பார்ப்பது என்பது அரிதான விஷயம்.

January 14, 2011

சீமான் நூற்றுக்கு பூஜ்ஜியம் டுட்டோரியல் காலேஜ்!!!

இத்தனைக்கும் பின்னர் சீமானை பற்றி எழுதாவிட்டால் ஜென்ம சாபல்யம் கிடைக்காது. ஈழத்தமிழர்கள், இந்திய மீனவர்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்க எங்கோ ஒரு மூலையில் இருந்து ஒரு குரல் கேட்கின்றதே என ஆர்வமாய் திரும்பிப்பார்த்த ஏராளமானவர்கள் இப்போது தேவையில்லாமல் ஒரு திருப்பலை வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு ஏமாந்து போய்விட்டனர். மீனவர்களை அடித்தால் மாணவர்களை அடிப்போம் என ரைமிங் டயலாக் எல்லாம் பின்னர், தான் எடுக்கப்போகும் படங்களுக்கு வசனம் எழுதிப்பழகவே எழுதிப்பார்த்தவை என்பது இப்போது புரிந்து போய்விட்டது. பேரன்பும் பெரும்கோபமும் கொண்டவன் "தம்பி" சீமான் என நினைத்திருந்தவர்கள் ஆசையில் மண். கொள்கை என்று பார்த்தால் தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும் கொள்கைகள் எதாவது இருக்கும் என நினைத்தவர்கள் இனி தன் கண்களுக்கு நிழலாக நெற்றியில் கைவைத்து வேறு திசையை பார்க்க தொடங்கும் அளவு சீமானின் கொள்கை கொடிகட்டி பறக்க தொடங்கிவிட்டது. ஏதோ புதிதாக சொல்ல வருகின்றார் என நினைத்தவர்கள் "சீ சீ இந்த பழம் அத்திப்பழம். புட்டு பார்த்தால் சொத்தை பழம்" என நினைக்கும் அளவுக்கு ஆன காரணம் என பார்த்தால் பெரும்கோபம் கொண்டவன் ஜெயாடிவியில் தன்னை அர்ப்பணித்து கொண்ட போது பெருங்காய டப்பா என ஆகிவிட்டது தெள்ளத்தெளிவாக தெரிந்து போனது.

1993ல் வைகோ திமுகவை விட்டு பிரிந்து போன போது, எட்டு மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒட்டு மொத்த திமுகவே அவர் பின்னால் அணி திரண்டது. எப்போதும் போல இது போல எதாவது நடந்து திமுகவை அழித்து விடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த பத்திரிக்கைகள வைகோவை இதற்காக தன் அட்டைப்படங்களின் கதாநாயகனாக வரிந்து கட்டி போட்டு மதிமுக உதயமாவதற்கு ஆசி புரிந்தன. திமுகவில் ஒரு வார்டு செயயலர் ஆவது என்பதே குதிரைக்கொம்பான விஷயம். பின்னர் மாவட்ட பிரதிநிதி, நகர\ஒன்றிய கழக பொறுப்புகள், பின்னர் மாவட்ட கழக பொறுப்புகள் பின்னர் மாவட்ட செயலர், தலமைக்கழக பொதுக்குழு, செயற்குழு, உயர்மட்ட செயற்குழு என போவதுற்குள் வாய்லே நுரை தள்ளி விடும். இப்படிப்பட்ட எட்டு மாவட்ட செயலர்கள், பல நகர\ஒன்றிய செயலர்கள், பல பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக தொண்டர்கள் இப்படி வைக்கோ கூட்டிய முதல் மேடை குடவாசலுக்கு வந்து திரண்ட போது வைகோவுக்கு மதிமுக எனும் கட்சிக்கு திமுக போலவே அடிப்படை கட்டமைப்புடன் கூடிய ஒரு கட்சியை தோற்றுவிக்க மிகவும் சுலபமாக இருந்தது. கூட்டப்பட்ட கூட்டம் இல்லாமல் ஒரு வித எழுச்சியோடு தொண்டர்கள் கூட்டம் கூடியது. அப்படிப்பட்ட வைக்கோவை திமுகமற்றும் அதிமுகவுக்கு ஒரு மாற்று சக்தியாக மக்கள் நினைக்க தொடங்கிய காரணத்தால் தான் சந்தித்த முதல் தேர்தலில் மாக்சிஸ்டு கம்யூனிஸ்ட் தோழர்களோடு சேர்ந்து 13 சதம் வாக்குகள் அள்ளியது. அதே போலவே தொடர்ந்து அதிமுக, திமுகவுடன் கூட்டனி சேராமல் தனித்தன்மை காத்திருந்தால் அதன் வாக்கு விகிதம் தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து ஒரு 18 சதம் நிரந்தர வாக்குகள் என்றாகி ஒரு 4 எம்பி, 15 எம் எல் ஏ என் தன் சொந்த காலில் தன் செல்வாக்குடன் இருந்து இன்றைக்கு மதிமுக ஒரு மாபெரும் சக்தியாக கூட இருந்து தொலைத்திருக்கும். ஆனால் அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து தன் கட்சியை ஒன்பது சத வாக்குகளுக்கான கட்சியாக தேய்த்து கரைத்து பின்னர் எந்த கட்சியுடன் சண்டை இட்டு பிரிந்தாரோ அதே கட்சி கூட கூட்டு சேர்ந்து ஆறு சதமாக குறைந்து பின்னர் அதிமுகவுடன் சேர்ந்து இன்று மூன்று சதத்துக்கும் குறைந்து தன் கட்சி அங்கீகாரம் இழந்து இன்று பரிதாப வைக்கோவாகிப்போனார்.

இதே நிலை தான் இன்று விசயகாந்துக்கும். வைக்கோவிடம் என்ன எதிர்பார்த்து மக்கள் முதலில் சென்றனரோ அதே போலத்தான் விசயகாந்திடமும் சென்றனர். நேற்று வரை மக்களோடும் ஆண்டவனோடும் கூட்டு என முழங்கி இப்போது ஒரு ஒன்பது சதம் வாக்குகள் பரவலாக வைத்திருக்கும் அவர் தன் கொள்கை முடிவிலிருந்து மாறி இப்போது கூட்டனி குட்டைக்குள் வந்து விழுந்தாகிவிட்டது. இனி அதன் வளர்ச்சி என்பது ரிவர்ஸ் கீர் போட்டு வளர்ந்த வேகத்துக்கு சரியப்போகும் காட்சி கண் எதிரே தெரிகின்றது. விசயகாந்து தனித்து நின்றால் அந்த ஒன்பது சதம் என்பது 13 ஆகும். அடுத்த தேர்தல் வரை தாக்குபிடித்து நின்றால் அது இன்னும் ஒரு ஐந்து சதம் கூடும். ஆனால் கட்சியில் சேர்ந்து பலன் அறுவடை செய்ய துடிக்கும் அங்கிருக்கும் பழம்பெருச்சாளிகள் அவரை அந்த அளவு வைத்திருக்க மாட்டனர். அதனால் அந்த குடிவெள்ளியும் சாரி விடிவெள்ளியும் அம்பேல் தான்.

அந்த நேரத்தில் தான் "தம்பி" சீமான் வானத்தில் இருந்து குதித்து "நானே உங்களுக்காக ஆசீர்வாதிக்கப்பட்டு இறக்கிவிடப்பட்டிருக்கும் தேவ தூதுவன்" என குதித்த போது அனைவரும் ஒரு வித ஆர்வமுடன் அந்த பக்கம் பார்க்க தொடங்கினர். காங்கிரஸ் என்னும் கம்சனை ஒழிக்க வந்த கிருஷ்ண பரமாத்மா என அவரும் மேடை மீது உருமி அடிக்க அடிக்க வழக்கம் போல நம் வலைப்பதிவர்கள் தான் முதலில் அந்த உருமிக்கு ஆட ஆரம்பித்தனர். நம் சக வலைப்பதிவர்கள் ஏன் காங்கிரசை எதிர்க்க வேண்டும் என எதிர்கேள்வி எல்லாம் கேட்க மாட்டார்கள். ஏன் கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என கேள்வி கேட்க மாட்டார்கள். உன் கொள்கை என்ன என கேட்க மாட்டார்கள். "மாத்தி யோசி" என்கிற பார்முலாவுக்குள் தொபக்கடீர்ன்னு குதிப்பார்கள். மீனவ்ன் மாணவன் என வசனம் பேசிய சீமான் சிறைக்கு போகும் போது போது உருமியை வலைப்பதிவர்கள் கிட்டே கொடுத்து விட்டு போக சிறையில் இருந்து திரும்பிய சீமான் நேரே வீட்டுக்கு கூட போகாமல் ஜெயா டிவியில் போய் உட்கார அழுக்குப்படாத சட்டைக்கு சொந்தக்காரர் ரவிபெர்னார்டு "ஈழம் பற்றியது மட்டுமே தான் உங்கள் அரசியல் நிலைப்பாடு இருக்குமா அல்லது தமிழ்நாடு பற்றியும் யோசிப்பீர்களா" என கேட்டதற்கு "ஒரு ரூபாய் அரிசி நல்லா இல்ல. காங்கிரீட் வீடு எதற்கு இப்போது" என கூவ அதுவரை சீமான் கமான் கமான் என குதிரையை கூப்பிடுவது போல கூச்சலிட்டவர்கள் "ஆகா நாம் இது வரை கூப்பிட்டது குதிரையை அல்ல அது முகத்தில் இருக்கும் வெள்ளையை முகப்படாம் போட்டு மறைத்த கழுதை" என புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்க அதுவரை "ஈழத்தமிழர் மேல் கருணையோடு பேசுகின்றார். பேசட்டும் இதும் இளங்கோவன் என்னும் அலப்பரை கொடுக்கும் குழந்தைக்கு பயம் காட்டும் பூச்சாண்டியாக பயன்படும்" என நினைத்தவர்கள் அவர் போய் சரணாகதி அடைந்த இடம் பார்த்து செய்வதறியாது போயினர். அதுவரை பூச்சாண்டியாக இருந்த சீமான் இளங்கோவன் போன்றவர்களுக்கு கிலுகிலுப்பையாகிப்போனார்.

ஒரு வடிவேலு நகைச்சுவை காட்சியில் ஒரு டீக்கடை வாசலில் பெரிய மீசை வைத்த வெள்ளை வேட்டி சட்டை நபரை ஒரு சின்ன பையன் மரியாதை இல்லாமல் பேசுவான். அங்கே இருக்கும் வடிவேலு அவனை துரத்தி போக காத்திருந்த ஆம்புலன்சில் வைத்து வடிவேலுவின் கிட்னி எடுக்கப்படும். திரும்ப வந்த வடிவேலு அந்த மீசை வைத்த பெரிய மனிதனுக்கும் அந்த கும்பல் ஏற்கனவே கிட்னி எடுத்த விஷயம் அறிந்து "ஏன்யா அதை அப்பவே சொல்ல கூடாதா" என கேட்க அவரோ "அவன் தான் என்னை கண்டபடி திட்டும் போதும் நானே பேசாம இருக்கன்ல. உனக்கு மட்டும் என்ன ரோசம் வேண்டி கிடக்கு. பேசாம இருக்க வேண்டியது தானே" என சொல்லுவார். ஆக சீமான் இப்போது மீசை வைத்த வைக்கோவுக்கு மானம் என்னும் கிட்னியை அதிமுக எடுத்து விட்ட நிலையில் அது தெரியாத வடிவேலு மாதிரி இப்போது அதிமுக ஆம்புலன்சில் கிட்னி ஆபரேஷனுக்காக மாட்டி இருக்கார் என்றே அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர். இங்கே உறுமி அடிக்கும் ஆட்கள் நாளை வேறு மாதிரி பேசுவாங்க என்பது சீமானுக்கு தெரியவில்லை. பாவம் தன் பலம் என்னவென்று தெரியாமல் ஆடிக்கொண்டு இருக்கின்றார். இதுதான் இந்த சினிமாகாரர்கள் பலரின் வீக் பாயிண்ட். தன்னை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டத்தினர் சொல்வது மாத்திரம் கேட்டு கேட்டு யதார்த்தத்தை அப்டேட் செய்து கொள்ளாமை. சீமானும் விதிவிலக்கு இல்லை இந்த விஷயத்தில். பேராவூரணியில் ஒரு கூட்டத்தில் "என்னை ஒரு நாள் முதல்வர் போல ஆக்கி காட்டுங்கள். நான் தமிழீழம் வாங்கி தருகின்றேன்" என முழங்குகின்றார். பாவம் அதன் பின்னர் தான் அதிமுகவை ஆதரிப்பதாக சொன்னார். இதுவே இப்போது சொல்லட்டும் அந்த வார்த்தையை... முடியாது. சொன்னால் அதிமுகவினர் காதை அறுத்து காக்காய்க்கு காலை டிபனாக போட்டுவிடுவர் என்பது சீமானுக்கு தெரியும்.

சீமானுக்கு 25000 பேர் சென்னை எம்ஜிஆர் நகரில் கூடினர் என்றெல்லாம் ஒரே பேச்சு. யாருக்கு கூட்டம் கூடாது? சீரணி அரங்கில் இதோ இன்று மாலை ஏசு வருகின்றார் என சொல்லும் அல்லேலுயா கும்பல் முதல் நித்யானந்தா வரை கூட்டம் தான் கூடும். அந்த புகழ் போதையில் மயங்கி முதல்வர் கனவு தேவையா? அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எவனாவது சீமான் கட்சி ஆரம்பித்தால் பூத் கமிட்டிக்கு வருவானா? பிரச்சாரத்துக்கு போவானா? தன் கட்சியின் கொள்கை(?)யை விளக்கி தெருமுனை பிரச்சாரம் செய்வானா?

மொத்தம் 234 தொகுதி இருக்கின்றது. ஒரு தொகுதிக்கு 150 முதல் 175 பூத் வரை உண்டு. ஒரு ஒரு பூத்திலும் ஆண்கள் , பெண்கள் இருவருக்கும் தனி பூத் உண்டு. பூத்துக்கு வலது பக்கம் இடது பக்கம் என இரு இடங்கள் உண்டு. தன் கட்சியின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் போட வைப்பது மட்டும் அல்ல எதிர்கட்சி கள்ள ஓட்டு போடாமல் இருக்கவும் அந்த ஏரியா ஆட்கள் பூத் கமிட்டியாக இருந்து செயல்பட வேண்டும். சும்மா நான் பாட்டுக்கு போய் ஓட்டு போடுவது அத்தனை சுலபம் இல்லை. என் வீட்டு விலாசம், அப்பா பெயர், என் வார்டு, என் வார்டுக்கு எந்த பூத், என் ஓட்டு வரிசை எண் என்ன இன்ன பிற செய்திகளை அடக்கிய ஒரு துண்டு பேப்பரை முதல் நாள் மாலை அந்த பகுதி பூத்கமிட்டி ஆட்கள் போய் வாக்காளரிடம் கொடுக்க வேண்டும். அந்த துண்டு சீட்டை பார்த்து தான் அந்த போலிங் ஆபீசர் உடனே வரிசை எண் பார்த்து "இதோ இவர் பெயர் ராமசாமி, அப்பா பெயர் குப்புசாமி, இவர் வீட்டு எண் 12, தெரு வாத்துகார தெரு, வார்டு எண் 32.. இதிலே ஆட்சேபனை இல்லை தானே" என அங்கு வரிசையாக இருக்கும் கட்சிகார பூத் கமிட்டி ஆட்களிடம் கேட்க இதிலே ஒரு கட்சிக்காரருக்கு சந்தேகம் வந்தாலும் "இல்லை இது ராமசாமி இல்லை. அவன் துபாய் போய் இருக்கான். அவன் வச்சிருக்கும் ஆவணம் பொய்" என ஆட்சேபனை செய்தால் பின்னர் அவனிடம் ஆபீசர் அவன் பக்கத்து வீட்டு பெயர் எல்லாம் கேட்பார். விசாரனை நடக்கும். ஆக கள்ள ஓட்டு தவிர்க்கப்படும். அந்த இடத்தில் உட்காந்து இருக்கும் பூத் கமிட்டிக்கு அந்த ஏரியா கட்சிகரர் ஆண், பெண் பூத்துக்கு இருவர், அந்த பூத்துக்கு வெளியே அதை ஒருங்கினைத்து உள்ளே அனுப்ப இருபக்கமும் குறைந்தது எட்டு பேர் ஆக ஒரு பூத்துக்கு பத்து முதல் பதினைந்து பேர். இதிலே உள்ளே இருப்பவன் டீ குடிக்க தம் அடிக்க வெளியே வரும் போது மாற்று ஆட்கள் இருவர் இதல்லாம் 200 பூத்துக்கும் சேர்த்து ஒரு தொகுதிக்கு 3000 பேர் வேண்டும். அதும் காசுக்கு விலை போகாத ஆட்கள். சம்பளத்துக்கு இதுக்கு எல்லாம் ஆள் வைக்க முடியாது. சீமானே, இதல்லாம் இருந்த வைக்கோவால் மூட எதும் முடியலை. அவர் கூட "நான் தான் அடுத்த முதல்வர்" என சொன்னதில்லை. சொல்லும் போதே அவருக்கு கூட சிரிப்பு வரும். ஆனால் இதை எல்லாம் கூச்சமில்லாமல் சொல்லும் விசயகாந்துக்கும் உங்களுக்கும் சினிமா என்கிற மோகத்தால் யதார்த்தம் கண்ணை மறைக்கின்றது என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

பொதுவாகவே மார்கழி மாதம் டல் பிஸினஸ்.அதை நன்றாக பயன்படுத்திக்கொண்டது சீமானை வைத்து நம் ஜுனியர் விகடனும் இன்ன பிறவும். இதோ அடுத்த அடுத்த மாதம் தமிழக தேர்தல் வரப்போகின்றது. இனி சீமான் "திருப்பி அடிப்பேன்" கட்டுரைக்கு பின்னர் காலை உடைப்பேன் என கட்டுரை எழுதிக்கொண்டு எந்த பத்திரிக்கை வாசலுக்கு போனாலும் தேவர்மகன் சிவாஜி நாசரைசொன்னது போல "நீ சின்ன பய.. பேயாம இருக்கனும். பெரியவங்க பேசிகிட்டு இருக்கோம்ல" என தேர்தல் கட்டுரை எழுத போய்விடுவார்கள்.1993ல் வைக்கோவை தூக்காத தூக்கா இந்த ஜூவி எல்லாம்? ஆகவே சீமான் அவர்களே இனியாவது உங்க திரையுலக பணி பார்க்க போங்க. எதாவது சிங்கள நடிகைக்கு சான்ஸ் கொடுத்து கிட்டு இருங்க. நீங்க எதிர்க்கும் காங்கிரஸ்ல சேர வேண்டி ராகுல் கிட்டே போன விஜயை வைத்து படம் எடுத்து பிழைக்கும் வழியை பாருங்க. இதோ நீங்க அதிமுக பக்கம் நீங்க போகாத வரை உங்கள் குரலை வெறுத்து ஒதுக்காத மக்கள் இப்போது உங்களை காமடியன் ஆக்கிவிட்டதை உணருங்கள். பெஸ்ட் ஆஃப் லக்!!!

சீமான் ஒரு நடமாடும் பலகலைகழகம் என நினைத்தவர்கள் "சீமான் தோல்வியுற்றவர்கள் கூடும் ஒரு டுட்டோரியல் காலேஜ்" என்பதை புரிந்து கொண்டனர். சீமான் நூற்றுக்கு பூஜ்ஜியம் டுட்டோரியல் காலேஜ்!!!

January 1, 2011

1.1.11 - நானும் ராதாவும் புத்தாண்டு சபதமும்!!!

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2011 நமக்கு நல்லவிதமாக மனநிம்மதியை கொடுக்கட்டும்.

அது 1986ம் ஆண்டு. ஜனவரி முதல் தேதி. அரக்க பரக்க ராதா ஓடி வந்து "ஹேப்பி நியூ இயர்"ன்னு சொல்லிட்டு என்னை தனியா தள்ளிகிட்டு போய் "டேய் நாம புது வருஷத்துக்கு எதுனா ரெசல்யூஷன் எடுத்துக்கனுமே. அது பத்தி பேசிகிட்டு இருந்தோமே. அது என்னன்னு யோசிச்சு வச்சியா?"ன்னு கேட்க நான் அதை மறந்தே போனது பற்றி அப்போது தான் ஞாபகம் வந்து தொலைத்தது.

"பேசாம படிப்பை விடுடலாமாடா" என என் ஆசையை சொல்ல பதறிப்போன அவன் "சே சே நமக்காகவாடா படிக்கிறோம்.எல்லாம் அப்பா அம்மாவுக்காகத்தானே.இந்த வயசிலியேயே அப்பா அம்மா ஆசையை பூர்த்தி செய்யும் தியாகத்தை நாம செஞ்சுகிட்டு இருக்கோம். அதனால அதை விட்டுட வேண்டாம். அது பாட்டுக்கு அது இருக்கட்டும். நாம பேசாம டாக்டராகி கிராமத்திலே போய் ஏழகளுக்கு சேவை செய்வோமா?" என கேட்க கொஞ்சம் பதறித்தான் போனேன்.

ஏன்னா நாங்க அப்ப கிட்ட தட்ட டிகிரியையே முடிச்சுட்ட நிலையில் இருந்தோம். டாக்டருக்கு ஸ்னானப்பிராப்தி இல்லாத ஒரு சப்ஜக்ட் எடுத்து படிச்சுகிட்டு இருந்த நேரம். அதும் எந்த யுனிவர்சிட்டில இன்ஸ்டண்ட் டாக்டர் பட்டம் கொடுத்து எந்த கிராமத்துல எங்களை சேவையை தொடங்குவது என ஏகப்பட்ட குழப்பம் இருந்தபடியால் அதை உடனடியா நிராகரித்தேன். தவிர எனகு ரத்தம்னா கொஞ்சம் அலர்ஜியும் கூட.

எல்லாரும் கும்பல் கும்பலாக வந்து ஹேப்பி நியூ இயர் சொல்ல சொல்ல எங்களுக்கு முகத்தில் வாட்டம். ரெசல்யூஷன் கிடைக்காத கவலை முகம் எங்கும் பரவி கிடந்தது.

புத்தாண்டை நல்ல விதமா கொண்டாடவேண்டும் என்கிற அதீத ஆசையில் முதல் நாள் மாலை முதலே குடிக்க ஆரம்பித்த குடிமகன்கள் பத்து மணிக்கு எல்லாம் மட்டையாகி அவர்களை கிராஸ் செய்து புத்தாண்டு போய்விட்ட நிலையிலும் தெளியாமல் ரோட்டோரம் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து கொண்டே நாங்கள் இருவரும் நடந்து ஊரை வலம் வந்தாலும் அந்த பாழாய் போன ரெசல்யூஷன் மாத்திரம் எங்களுக்கு சிக்கவில்லை.

இப்படியாக இரவும் வந்து இன்னும் ஒரு நான்கு மணி நேரத்தில் எங்களை விட்டு புத்தாண்டும் போய் விட இருந்த நிலையில் ராதா "டேய் நமக்குன்னு எதுனா கெட்ட பழக்கம் இருந்தாலாவது அதை விட்டுவிடுவதா ரெசல்யூஷன் எடுத்துக்கலாம். நாம தான் அனியாயத்துக்கு ரொம்ப நல்ல பசங்கலா இருந்து தொலைச்சுட்டோமே. ஆண்டவா எங்களை ஏன் நல்லவங்களா படைச்சு தொலைஞ்சுட்டே" என அலுத்துக்கவும் நான் தான் மெல்ல ராதாவிடம் "டேய் இதுக்கு எல்லாம் போய் ஆண்டவனை திட்ட கூடாது. நாம ஏன் ஒரு கெட்ட பழக்கம் ஏற்படுத்திக்க கூடாது? உடனே எதுனா கத்துகிட்டு அதை விட்டுடுவோம்" என சொல்ல அது ராதாவுக்கும் சரியென படவே அந்த கெட்ட பழக்கம் என்ன பழக்கம் என தீமானிப்பது அடுத்த கவலையாக வந்து தொத்தி கொண்டது.

ராதாதான் சொன்னான். அப்போதைய காலகட்டத்தில் "சைட்" அடிப்பது தான் கிட்ட தட்ட கற்பழிப்புக்கு சமமான கெட்டப்பழகம் என அதீதமாக நம்பினோம். அதனால அந்த கெட்ட பழக்கத்தையே ஆரம்பிச்சு அதையே விட்டுவிடுவதாக ரெசல்யூஷன் எடுத்துகிட்டோம். சரி யாரை சைட் அடிப்பது என முடிவெடுத்து கலா தான் இதுக்கு சரியான ஆள் என அப்பாவியாக நம்பி ... நம்பி கலா வீட்டு வாசலுக்கு போய் ரோமியோ மாதிரி சைக்கிளை நிப்பாட்டி காலை ஒரு மாதிரியா மடிச்சு வச்சு கீழே ஊன்றிகிட்டு கலாவை சைட் அடிக்க ஆரம்பித்தோம். கலா வீட்டு வாசலில் இல்லாமையால் கலா வீட்டை சைட் அடிக்க ஆரம்பித்தோம்.

ரொம்ப நேரம் கலா கண்ணில் தென்படாததால் கண் வலி வந்தது தான் மிச்சம். பின்னே ஆண்டவன் கொஞ்சம் இரக்கம் காட்டி கலாவை வெளியே வரவழைக்க வலிக்கும் கண்ணை இன்னும் கொஞ்சம் அகலமாக்கி தீவிரமாக சைட் அடிக்க கலா நேரா கிட்ட வந்து " என்னடா ரொம்ப நேரமா நிக்கிறேள் போலிருக்கு. ஞானவினாயகர் கோவில் டொனேஷனா? அப்பா வெளியே போயிருக்கர். பின்னே வாங்கோ" என சொல்ல அவமானமா போச்சு. எங்களை பார்த்தா கோவில் டொனேஷன் வாங்க மாதிரியா இருக்குது.கலா அப்படி சொன்ன பின்னும் கூட நாங்க ஒரு மாதிரியாக சைட் அடிப்பதை தொடர "என்னடா எதுனா திருடிட்டீங்களா? பேந்த பேந்த முழிச்சுகிட்டு இருக்கீங்க" என கேட்ட போது இனி அவமானப்பட எதும் இல்லை என முடிவெடுத்து சைக்கிளை திருப்பி கொண்டு கச்சேரி பிள்ளையார் வாசலில் வந்து குமுறி குமுறி அழத்தொடங்கினோம். ஒரு ரொமான்ஸ் சைட் அடிக்க கூட லாகக்கில்லாத இந்த கண் இருந்தா என்ன இல்லாம இருந்தா என்ன என்பது போல பிள்ளையாரை முறைத்து கொண்டு நின்றோம். பக்கத்திலே நின்ன ஒரு மாமா "டேய் கொழந்த பிள்ளையாரை என்னவோ லவ் பண்ணுவது போல பார்த்துண்டு இருக்கேளே" என கேட்ட போது அதிர்ந்து தான் போனோம்.

"என்னடா இது, ரொமாண்டிக்கா பார்த்தா திருட்டு முழின்னு சொல்றா ஒருத்தி. கோவமா பார்த்தா அதை சைட் அடிப்பதா சொல்றார் ஒரு மாமா. நாம அனியாயத்துக்கு யோக்கியனா இருந்துட்டோம். அதனால நாம சிகரட் குடிக்க ஆரம்பிசு அதை விட்டுடலாமே?" என ராதா கேட்க எனக்கும் உசிதமாக இருந்தமையால் தலையாட்டினேன்.

அந்த சிகரட்டை எங்க வாங்குவது என திண்டாடி ஒரு வழியா எங்களை தெரியாத ஏரியாவான மேம்பாலம் அடில ஒரு கடையிலே ஏதோ கஞ்சா வாங்குவது போல தலைக்கு காசிதுண்டை போத்திகிட்டு போய் வாங்கி வ்ந்து அதை இறுமிகிட்டே அடிச்சு முடிக்க ஏந்தான் இந்த புத்தாண்டு வந்து தொலைத்தது என்கிற மனநிலைக்கு வந்து பின்னர் அந்த பழக்கத்தை விட்டுவிடலாம் என்கிற எண்ணம் மறைந்து போய் அதிலே ஒரு ஈர்ப்பும் வந்தது. பின்னர் ராதா தான் மெல்ல சொன்னான். "டேய் ரொம்ப நன்னா இருக்குடா. இந்த சிகரட் இருக்குதே சிகரட்..." என வலம்புரி ஜான் மாதிரி எதுவோ சொல்ல சொல்ல எனக்கு ஜிவ்வுன்னு இருந்துச்சு.


கிட்ட தட்ட சிகரட் கையில் இருக்கும் போது எங்களை பார்த்தா எங்களுக்கே ஒரு ரவுடி கெட்டப் வந்த மாதிரி ஒரே பெருமை. அதும் ராதா அதை விரல் இடுக்கில் வைத்து கொண்டு என்னை பார்த்து அவனை சிவாஜியாகவும் என்னை சரோஜாதேவியாகவும் நினைத்து கொண்டு " அப்ப நீ என்கிட்ட பழகினது எல்லாம் பொய்யா" என அஷ்ட்டகோணலாக முகத்தை வைத்து கொண்டு (சிவாஜியை இமிடேட் செய்கிறானாமாம்..) கேட்க நானும் தேமேன்னு முகத்தை வச்சுகிட்டு "இல்லை கோபால் இல்லை" என சரோஜாதேவி மாதிரி சொல்லி தொலைத்தேன். அது சரோஜாதேவி போல இல்லை என்றும் கசாப்புகடை பாய் சொல்வது மாதிரியே இருக்குன்னு சொன்னதும் ராதாமேல் லைட்டா கோவம் வந்து தொலைச்சாலும் உண்மை அது தானே:-(

ஒரே நாளில் எங்களுக்கு மாயவரமே வசப்பட்டுவிட்டது போல ஒரு நம்பிக்கை கொடுத்தது அந்த ஆறாவது விரல். திரும்ப வரும் போது ரோட்டில் சும்மா கிடந்த நாயை ஒரு உதை விட சொன்னது மனது. ராதா கையிடுக்கில் சிகரட்டை வைத்து கொண்டு "டேய் நம்ம ஆளுங்களை வச்சு அந்த பொண்ணை தூக்கிட்டு போய் நம்ம குடோன்ல போடுங்கடா நான் ராத்திரி வர்ரேன்" என காற்றில் கை ஆட்டி பேசி பார்த்த போது நான் கொஞ்சம் மிரண்டு தான் போனேன்.

திரும்ப வரும் போது ராதா சொன்னான்" டேய் நாம சிகரட் வாங்க காசில்லைன்னு எல்லாம் கவலைப்படக்கூடாது. மணிக்கூண்டை வித்தாவது தம் அடிப்போம். பத்தலைன்னா ஏ.ஆர். சியை (ஜுவல்லரி) வித்துடுவோம். இல்லாட்டி இருக்கவே இருக்கு விஜயா தியேட்டர். இப்பல்லாம் சரியாவே படம் போடுவதில்லை. சவுண்ட் சிஸ்டமும் சரியில்லை.குருநாதன் செட்டி சொத்தை வித்து தம் அடிப்போம்" என தன்னம்பிக்கையின் உச்சமாக பேசிகொண்டே வர நாங்கள் ரெசல்யூஷனில் பாதிதானே நிறைவேற்றினோம் மீதி அதாவது சிகரட் விடும் சபதத்தை காற்றில் புகை மாதிரி விட்டுட்டோமே என்பது ஞாபகம் வரவே இல்லை.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தது ராதா " டேய் பிறந்த குழந்தை மாதிரி நமக்கு இப்ப தான் ஒரு நல்ல கெட்ட பழக்கம் வந்திருக்கு. இன்னிக்கே அதை கொல்லனுமா?" என கேட்க நான் அதுக்கும் தலையாட்டி தொலைச்சேன்.

இப்படியாக ஆரம்பித்த பழக்கம்... இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வெற்றிலை பாக்கு என டெவலப் ஆகி நிக்குது. இந்த புது வருஷத்தில் அதை விட்டுவிடுவதாக ஒரு ரெசல்யூஷன் எடுக்க வேண்டும். இருங்க ஒரு தபா வெத்தலை போட்டுகிட்டு வர்ரேன்......